26 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன்

தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன்


       தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும், பண்பாடும் நிறைந்திருந்த காலம். கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் விழுந்து வணங்கத் தக்க ஸ்தானத்தில் இருந்த காலம். அப்பொழுது எழுதப்பட்ட இந்தக் கதை செவ்வியல் படைப்பு என்று இன்றும் விளங்குகிறது. அதாவது classic  வரிசை. அதாவது காலத்தால் அழியாதது.                             

       கதை ஒரு நல்லாசிரியரைப் பற்றியது. கல்வி கற்றுக் கொடுப்பதைத் தன் லட்சியமாக, கடவுள் தனக்களித்த வரமாகக் கொண்டவர். அது ஒரு சேவை என்கிற பெருமிதத்தில் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். சிறந்த மாணவர்களை உருவாக்குவதுதான் இந்த தேசத்திற்கான தன் கடமை என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்தவர். இதை அந்தக் கதாபாத்திரம் நமக்கு உணர்த்துகிறது.

       அவர் அனுகூலசாமி. அன்பே வடிவானவர். முப்பத்தாறு வருஷம் ஆசிரியப் பணியில் தொண்டாற்றியவர். மாணவர்களை அன்பினால் கட்டுப்படுத்தியவர். அதிர்ந்து ஒரு வார்த்தை கூட அவர்களைத் தன் வாழ்நாளில் சொல்லாதவர்.

       ஆசிரியர் என்கிற பிம்பமே கையில் ஒரு பிரம்போடு தோன்றும் உருவமாய் மனக் கண்ணில் நிற்க, அந்தப் பிரம்பை அது காலம் வரை மனத்தினால் நினையாத,  கையினால் தொடாத பெருந்தகை.

       தன் பணி ஓய்வைப் பெரிதாக நினையாத, சக ஆசிரியர்களில் சிலரைப் போல உண்டி வசூல்,  பண முடிப்பு, கொண்டாட்டம் என்று எதுவுமில்லாமல் எளிய ஒரு சிறு விடைபெறுதலோடு வீடு வந்து சேர்ந்தவர். அவரின் ஆசிரியத் தொண்டு போற்றப்படும் விதமாய், மாணவச் செல்வங்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசி பெறுகிறார்கள்...

       இதெல்லாம் எதுக்கு? வேண்டாமே...என்று கூசி காலைத் தொட்டு வணங்கி விழும் மாணவர்களைப் பார்த்து சற்றுப் பின்னொதுங்கித் தயங்கி நிற்கிறார். பண்புள்ள சீலர்களின் இயல்பு அப்படித்தான் என்பதற்கு உதாரணமாய் அனுகூலசாமி. கருணையே வடிவான ஏசுபிரானின் முள்முடி சுமந்த படம் அந்த சுவற்றில். குட்டி ஆடு ஒன்றை அரவணைத்து அன்பு செய்யும் அமைதி தவழும் இன்னொரு காட்சி. இலக்கணமாய் ஆசான் அனுகூலசாமி.

       எல்லோரும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். சூன்யம். தனிமை. இனி பள்ளி செல்ல வேண்டியதில்லை. அது நமக்குச் சொந்தமில்லை என்ற ஏக்கம். ஒரே மகளான லூயிசாவை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்து நின்ற போது வீட்டில் சூழ்ந்த தனிமை. அதே ஏக்கம்....அவரின் துக்கத்தைக் கண்ணுற்று அமைதியாக அருகில் நிற்கும் மனைவி மகிமை. அவரையே பார்த்துப் பருகிக்கொண்டு நிற்கிறாள்.

       என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லை. அதிர்ந்து எதுவும் சொன்னதில்லை. என்றவாறே ஆதுரத்துடன் அவர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்.

       உலகத்துல இருக்கிறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல...அந்தப் பொழுதை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்?

       மனிதன் தன் மனதுக்குள் எவ்வளவு பக்குவப்பட்டவனாய் இருந்தால் இந்த வார்த்தைகள் வந்து விழும்? ஆறு வயதில் லூயிசா ஏதோ விஷமம் பண்ண, வாத்தியார் அவரை அடிக்க, அடி விழுந்த இடம் சட்டைக்குள் பகுதியில் முளைத்திருந்த கோடைக் கட்டி உடைய, அப்பப்பா...! அவள் துடித்த துடி...அழுத அழுகை....எல்லோரும் செய்த பாவங்களுக்கு தன் உயிரை விலை கொடுத்தானே...அவன் எல்லாத் தலைமுறைக்கும் சேர்த்துத்தானே கொடுத்தான்...?

       இன்னும் யாரு வாசல்ல? என்ற பார்க்க...அவரது வகுப்பு மாணவர்கள்...பாராட்டுப் பத்திரம் வாசித்தல், மாலை போடுதல்...என்று மரியாதை செய்கிறார்கள். காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.

       உங்களுக்குச் செய்யாம வேறே யாருக்கு சார் நாங்க செய்றது?-நீங்கள் நிதி திரட்டச் சொன்னதில்லை. போலி நகையை அடகு வைத்து பணம் பெற்று ஏமாற்றியதில்லை....ஊரெல்லாம் கடன் வாங்கி பெயரைக் கெடுத்துக் கொண்டதில்லை...எந்த அவச் சொல்லுக்கும் ஆளாகியதில்லை..இப்டி வாத்தியார் பெயரைக் கெடுத்துட்டு ஊர்ல சில பேர். .உங்களின் பெருமை அறியலேன்னா எப்படி? - உங்களுக்கென்ன சார்....நீங்க தெய்வம்..இவங்களுக்கு நடுவுல பூரணமா மதிக்கப்பட வேண்டியவர் நீங்கதான்....உங்களை வணங்காமல் வேறு யார் காலில்தான் போய் விழுவது?

       பெருமைப் பட்டுக் கொள்ளலாம்தான். ஆசிரியப் பணியை, அதன் மேன்மையை உயர்த்தியிருக்கிறோம்தான். அனுகூலசாமியின் மனது கொஞ்சம் பூரித்துப் போகிறது. கதையின் மையமே இங்கேதான் ஸ்தம்பிக்கிறது.

       நல்லொழுக்கம் உள்ளவரின், மதிப்பு மிக்கவரின், தன்னலமில்லாதவரின், தியாக மனப்பான்மை கொண்டவரின் தற்செயலான ஒரு செயல்,  அறியாச் சில வார்த்தைகள் கூட தன்னையறியாத நிலையில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது? சொல்லும்போது இப்படி ஆகக்கூடும் என்பதை ஊகிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறதே...! சாதாரண மனித ஜென்மத்திற்கு அப்படி எல்லா நிலையிலுமான எதிர்வினைகளை ஊகித்து அறிய முடிந்து விடுகிறதா என்ன? பக்குவப்பட்டவனுக்கும் சமயங்களில் வழுக்கித்தான் விடும்போல....

       காயாரோகணத்தோட இங்கிலீஷ் புஸ்தகத்தைத் திருடி, வேறே பேர் ஒட்டி, பாதி விலைக்குக் கடைல வித்துப்புட்டான் சார்- என்று சொல்லி ஆறுமுகம் காட்டிய அந்தப் பையன். மனதில் அவன்பால் தோன்றிய கோபம்....

       அது என் மேல் எனக்கே ஏற்பட்ட பெருமிதமோ...?அதனால் நான் செய்த குற்றமோ...?

       நம்ப வகுப்புல இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லே...இனிமே யாரும் இவனோட பேசாதீங்கடா....

       நாங்க எல்லாரும் இவனை அன்னைலேர்ந்து ஒதுக்கிப்புட்டோம் சார்...யாரும் இவனோட பேசறதில்ல...எதுக்கும் கூப்பிட்டும் போறதில்ல.....

       தற்செயலாக என்னவோ சொன்னதற்கு, வாய் தவறிச் சொல்லி விட்டதற்கு இத்தனை பெரிய தண்டனையா...? நானா சொன்னேன் அப்படி? -மனதை வதைக்கிறதே!.

       நல்லோர் வாக்குக்கு அத்தனை சக்தி...அது நிற்கும். அவரே அறிந்தோ, அறியாமலோ...!

       இந்தப் பசங்களோட எம்பையனச் சேர்த்துக்கச் சொல்லுங்கய்யா....என்று வேண்டி கண்ணீர் மல்க நிற்கும் அந்தத் தாய். கையில் வாத்தியாருக்குக் கொடுக்க வந்த ருபாயை வாங்கிக்கொள்ள மறுத்த அந்தப் பையன்கள்.

        நீங்க வாங்கிக்குங்க ஐயா...கூட இருக்கிறதுக பேசாம இருந்தா...பிஞ்சு மனசு என்ன பாடுபடும்? சிறிசுதானுங்களே....

       சின்னையா...அழாதடா...ஏய்....அழாத.... - மனசு உருகி அவனைப் பார்த்துச் சொல்கிறார்.

       இந்தப் பசங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சே...-வேதனையுறுகிறார்.

        ஆற்றொணாத் துயரம். அத்தனை ஆண்டுகாலம் கையில் பிரம்பெடுக்காத, தடித்த வார்த்தை ஒன்று சொல்லாத, அன்பே பிரதானம் என்று பிரதிக்ஞையாய் வாழ்ந்து கழித்த....நான்

       இப்படி ஒரு தப்பு செய்திருக்கிறேனே....அறியாமல் சொல்லியிருந்தாலும், என் அறியாமையால் ஒரு குழந்தை, சிறுவன் எவ்வளவு மன பாதிப்புக்குள்ளாகியிருக்கிறான்?

       சின்னையன் நீட்டிய காசை பேசாமல் வாங்கிக் கொள்கிறார். அதுதான் நான் அவனுக்குச் சொல்லும் சமாதானம்....

       ரொம்ப நல்ல பையன் சார்...அன்னைக்கு என்னவோ புத்தி பெசகி. அப்டிச் செஞ்சுப்புட்டான்....அப்புறம் ஒரு புகார் கிடையாது....

       மனசு அழுகிறது அனுகூலசாமிக்கு. அறிந்து, அறியாமல் செய்த தவறு. ஒரு சிறுவன் மனதை எத்தனை பாதித்திருக்கிறது? அவனை எவ்வளவு ஒதுக்கியிருக்கிறது? அந்த மனது எவ்வளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது?

       நீங்க சொன்னதுதானே...- மகிமையின் வார்த்தைகள். சொல்லிக் காண்பிக்கிறாளோ?

       சிரிப்பதா, அழுவதா? அழுகைதான் சிரிப்பாக வெளிப்படுகிறதோ? தேவனின் தலையில் இருந்த முள்முடி இவர் தலையை  அழுத்துகிறது.

       நல்லவர்கள் தப்பித் தவறிக் கூட ஒரு தவறு செய்துவிடக் கூடாது. மனசாட்சியே அவர்களைக் கொன்று விடும். கதை முடிகையில் அந்த முள்முடி நம் தலையிலேயே இறங்கியது போலிருக்கிறது.

       நுணுக்கமான ஒரு சிந்தனை. ஒரு குழந்தையின் பிஞ்சு மனசு அந்த இளம் பிராயத்தில் எப்படித் தவிக்கும் என்பதை நுணுகி உணர்ந்து தோன்றிய படைப்பு. அதை எந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தி, எப்படிச் சொன்னால் அழுத்தம் பெறும் என்பதை ஆராய்ந்து வரி வரியாய் வடித்தெடுத்த சித்திரம்.

                                   -------------------------------------------------

      

      

 

      

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...