25 டிசம்பர் 2012

”அம்மாவின் கடைசிநாட்கள்…” சிறுகதை

கணையாழி இலக்கிய மாத இதழ் அக்டோபர் 2012 ல் வெளிவந்தது
ங்கு இருந்த நாட்களில் அம்மா சந்தோஷமாய்த்தான் இருந்தாள். மன நிறைவோடு என்று சொல்ல வேண்டும். இப்படிப் படுக்கையில் விழுந்து விட்டோமே என்கிற ஆதங்கம் பிடுங்கித் தின்றது. முகத்தில் நிரந்தரமாய்ப் படிந்துவிட்ட சோகம். அதே சமயம், மனம் கோணாமல், சுடு சொல் பேசாமல், முகம் சுளிக்காமல், செய்வதற்குத்தான் இவன் இருக்கிறானே என்கிற திருப்தி. நிறைவு.
அடுத்தவா மனசு சங்கடப்படுற மாதிரிதான் நீ என்னைக்கும் பேச மாட்டியே…யாரையும் எப்பவும் நீ அப்டிப் பேசினதில்லை…அதுதான் எனக்கு உங்கிட்டப் பிடிச்சது….அந்த நல்ல குணத்தை எத்தனை பேர் நினைச்சுப் பார்த்துப் புரிஞ்சிக்குவா…அதனால உங்கிட்ட இருக்கிறதுல எனக்கு எந்த மனக் குறையும் இல்லை…..
ஒவ்வொரு முறையும் அம்மா அழைக்கும்போதும், இதைச் செய், அதைச் செய் என்று சொல்லும்போதும், இவன் முகம் சுருங்குகிறதா என்று கவனிக்கிறாளோ என்று தோன்றியது. அம்மாவை வலது பக்கமாயும், பின் சற்று நேரம் கழித்து இடது பக்கமாயும் புரட்டி விடும்போதும், அவள் பார்வை இவன் முகத்தைப் பார்த்தே இருந்தது. ஏன் இந்தச் சந்தேகம் வந்தது என்று இவனுக்குத் தோன்றியது. எழுப்பி அமர வைக்க இவன்தான் வரவேண்டியிருந்தது. உட்கார்ந்ததும் சற்றுப் பொறுத்துத்தான் கைப்பிடியை விட வேண்டியிருந்தது. முதுகைத் தாங்கிக் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டிருந்தான். மூச்சு வாங்கியது அம்மாவுக்கு. வாயைத் திறந்து கொண்டு உற்உறா…உற்உறா….என்று திணறினாள். நெஞ்சு அடித்துக் கொண்டது. தலை நிற்க மாட்டாமல் ஆடியது. நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடித்தது.
ஆதரவுக்கு ஆள் இருக்கிறது எனும்போது ஆசுவாசத்தை, உடல் நோவை சற்று அதிகமாகவே வெளிப்படுத்தும் மனச் சமாதானம். அந்த வேதனையைப் பார்த்து இன்னும் இரண்டு வார்த்தை ஆறுதலாகக் கிடைத்தால் அதில் ஒரு நிறைவு.
இவ்வளவு பாடு தேவையா? கடவுள் என்னைக் கொண்டு போகப்படாதா? என்றாள்.
அது நம்ம கைலயா இருக்கு…அவராக் கூப்டும்போதுதானே போக முடியும்…நாம கூப்டா வருவாரா? அவர் எப்ப நினைச்சிருக்காரோ அப்பத்தான் கூப்டுவார்…
ஆனாலும் பகவானுக்கு எம்மேல கொஞ்சங்கூடக் கருணை இல்லை. எம்புட்டு ஸ்லோகம் படிச்சிருப்பேன். எத்தனை கோயில் போயிருப்பேன். எவ்வளவு வேண்டின்டிருப்பேன்…சதாசர்வகாலமும் அவன் நாமம்தான். ஜபம்தான்..எனக்கு இது வேணுமா? இன்னும் அவனுக்கு இரக்கம் வரலை போலிருக்கு…? எல்லாம் பட்டுத்தானே கழியணும்…மிச்சம் வைக்காமப் போகணுமே…அது என்னோட போறதா? உங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தறது …என்னால எல்லார்க்கும் கஷ்டம்…
அப்பா இவ்வாறு படுக்கையில் விழுந்தபோது அவரைக் கொண்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ததும், அதன் தொடர்ச்சியான பராமரிப்பையும் கவனிப்பும், கண்கூடாகப் பார்த்தவள்தானே! அதே அக்கறை தன்னிடம் இருக்காது என்பதாக நினைக்கிறாளோ? இருக்குமா என்கிற சந்தேகத்தில்தான் நோக்குகிறாளோ? எதற்காக இப்படியெல்லாம் நினைப்பு வர வேண்டும்? ஏன் இந்தத் தடுமாற்றம்? தன் வயிற்றில் பிறந்த பிள்ளையிடமே ஏன் இப்படிக் கேள்விகள் முளைக்கின்றன?
வயதான காலத்தில் இப்படிச் சிரமங்களைக் கொடுக்கிறோமே என்கிற மனத் தாங்கலா? அந்த வருத்தமா? அதனால் உண்டான நோவில் வரும் வார்த்தைகளா?
கடவுள் என்னைக் கொண்டு போக மாட்டேங்கிறாரே, இப்டிப் படுக்கைல வீழ்த்துவார்னு நினைக்கவேயில்லை. நா ரொம்பப் பாவம் பண்ணியிருக்கேன்…அது உங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தறது….அனுபவிங்கோ….என் வயித்துல பிறந்தவாதானே நீங்க…அனுபவிக்கத்தான் வேணும்….
அப்டியெல்லாம் ஒண்ணுமில்லை…நீயா ஏதாவது நினைச்சிக்காதே…எதையாவது கற்பனை பண்ணின்டே மனசைப் போட்டு உழட்டிக்காதே…கண்ணை மூடிண்டு ராம ராமா சொல்லு…அப்டியே தூங்கப் பாரு….
எங்க தூங்கறது…? அதான் ஒடம்பு ரணமா வலிக்கிறதே…நா வெறுமே படுத்திண்டிருக்கேன்னு நீ நினைக்கிறே…இந்த ரணத்தோட கொடுமையை அனுபவிச்சிண்டே கண்ணை மூடிக் கெடக்கேன். எவ்வளவுதான் பொறுத்துக்க முடியும்…எதுக்காக இத்தனை உடல் வேதனை? அதான் தாங்க முடியாத போது புலம்பறேன்…யார்ட்டப் புலம்புவேன் சொல்லு…உன்னண்டதான் முடியும்….
சொல்லு…சொல்லு…தாராளமாச் சொல்லு…அதை ஏன் புலம்பறதாச் சொல்றே…உன் பிள்ளைட்டச் சொல்லாம வேறே யார்ட்டச் சொல்லுவே…எங்க பிடிச்சி விடணும்னு சொல்லு…பிடிச்சி விடறேன்… என்று கொண்டே அம்மாவின் இடுப்பு எலும்புப் பகுதியில் அமுத்தி விட்டான் இவன்.
மெதுவா…மெதுவா….என்று அலறினாள் அம்மா. அந்த இடத்தில்தான் அடி பட்டிருக்கிறது என்றார் டாக்டர். வயது தொண்ணூற்றி மூன்று. எப்படிச் சேரும்? முயற்சி செய்து பார்ப்போம்…இந்த மருந்தை உறிஞ்சச் சொல்லுங்க…பதினாறு நாளைக்கு உறிஞ்சணும்…கால்சியம் டெஃபிஷியன்சி…சரியாகறதுக்குக் கொஞ்ச நாளாகும். வீட்டு அளவுல நடக்கிறமாதிரிப் பண்ணலாம். கூடவே இந்த மாத்திரைகளையும் சாப்பிடட்டும்.
நம்பிக்கையாகத்தான் சொல்லி விட்டுப் போனார். அவரைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்ததில் அத்தனை திருப்தி அம்மாவுக்கு.
என் பிள்ளையாட்டம் இருக்கேள். சித்த நன்னாப் பார்த்து, என்னை எழுப்பி உட்கார்த்திடுங்கோ…புண்ணியமாப் போகும்…. – டாக்டர் சிரித்துக் கொண்டார்.
இந்தக் காலத்துல வீட்டுக்கு யார் வருவா? கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கலாம்னாலும் முடியாதே…இப்டிப் படுத்த படுக்கையாயிட்டனே?
இதையெல்லாம் நினைச்சு நீ ஏன் கஷ்டப்படுறே….நானில்ல கூட்டிட்டு வர்றேன்… அந்த நம்பிக்கை வார்த்தைகளில் அம்மாவின் முகத்தில் அத்தனை திருப்தி. மனிதர்கள் வார்த்தைகளுக்காக எவ்வளவு ஏங்கிப் போகிறார்கள்? முதுமை பெருங் கொடுமை. அதில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இந்த ஆறுதலான வார்த்தைகள்தான். நாள் முழுதும் அருகிலேயே அமர்ந்திருப்பதும், அவர்கள் புலம்புவதைப் பொறுமையாகக் கேட்டு அதற்கு சமாதானமாக அரவணைத்துப் பேசுவதும் எவ்வளவு கவனமாய்ச் செய்ய வேண்டிய பணிகள்? வெறுமே வேளா வேளைக்குக் கொண்டு வந்து யந்திரம் போல் வைத்தல் ஆகுமா? ஒரு விடுதிக்கும் சொந்த வீட்டுக்கும் வித்தியாசம் வேண்டாமா?
எத்தனை பேர் இதைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்கள். பெற்ற பிள்ளைகளே வாயில் வந்ததைப் பேசி விடுகிறார்களே?
பேசாமக் கிடக்க மாட்டியா? மனசு அமைதியாவே இல்லையே உனக்கு? இந்த வயசுக்கு எவ்வளவு விலகல் இருக்கணும்? இருக்கா உனக்கு? இந்த வீடும் வாசலும்,உற்றாளும் மற்றாளும் எல்லாமும் வெறுத்துப் போயிருக்கணுமே? ஏன் இல்லை? இப்டிப் படுக்கைல கிடக்கிற போதும், பொண்ணையும், பிள்ளையையும்பத்தி நினைச்சிண்டு, கண்ணீர் விட்டிண்டு, என்ன பக்குவம் வந்திருக்கு உனக்கு? எல்லாரும் உன் கண் முன்னாடியே எப்பவும் நிற்க முடியுமா? வீடியோ கேமராதான் வைக்கணும்…எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, குழந்தை குட்டிகள்னு பெத்து, குடும்பமா இருக்கால்லியா? அதோட விடுவியா, இன்னும் அவாளைப்பத்தி நினைச்சிண்டிருக்கியே? இப்போ நீ படுக்கைல கிடக்கே…எல்லாராலேயும் வந்து பார்க்க முடிஞ்சிதா? ஆளுக்கு நாலு நாள், வேண்டாம் ரெண்டு நாள், அதுவும் வேண்டாம் ஒரு நாள், வந்து இருக்கலாம் இல்லியா? வந்தாளா? வரமுடியாது…அவாவாளுக்கு ஆயிரம் வேலை…உன்னையே நினைச்சிண்டிருக்க முடியுமா? அதான் ஃபோன்லயே விசாரிச்சிக்கிறா…! இப்போ நாந்தான் இருக்கேன் சதா உன்னைப் பத்தியே நினைச்சு உருகிண்டிருக்க முடியுமா? அதுதான் எல்லாம் பார்த்தாச்சே…இன்னும் எதுக்குத் தவதாயப்படறே…? பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகி, பெண்டுகளுக்கெல்லாம் கல்யாணமாகி, பேரன், பேத்திகளைப் பார்த்து, அதுகளுக்குக் கல்யாணமாகி அவாளோட குழந்தைகளைப் பார்த்து, இப்டியே போச்சுன்னா உன் பிள்ளைகளோட, பொண்களோட சாவையே நீ பார்க்க வேண்டி வந்துரும்…அத்தனை தலைமுறை தாண்டிடும் போலிருக்கு…நெடுங்காலம் உயிரோட இருக்கிறதோட கொடுமை இதுதான் பார்த்துக்கோ…
அப்பாடா, என்ன பேச்சு, என்ன பேச்சு…? எல்லாந்தான் தோணும்னாலும் அதை இப்டி வாய்விட்டுச் சொல்லணுமா? நல்லதாப் பேசப் படாதா? சுற்றிலும் துஷ்ட தேவதைகள் இருப்பா வீட்ல…? காதில கேட்டுண்டே இருக்குமாம்….நாம சொல்றதை திரும்பத் திரும்பச் சொல்லுமாம்…அப்டிச் சொன்னா அதுதான் நடக்கும்பா…ஆகையினால நல்லதே பேசுங்கோ….
அம்மாவின் புலம்பல்….
ஆமா, இதுலதான் வந்தது. பாரு, இந்த வயசுலயும் ஆசையை? யதார்த்தத்தைப் பார்ப்பியா…? என்னமோ துஷ்ட தேவதை அது இதுன்னுட்டு…? காலா காலத்துல போய்ச் சேர்ந்தோம்னா நிம்மதின்னு நினைக்கப் பாரு…அதுக்கு வேணா பிரார்த்தனை பண்ணு….யாருக்குத் தெம்பு இருக்கு இந்தக் காலத்துல? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து உழைக்கிற காலம் இது…ஆபீசிலயும், வீட்டுலயும்…எவனால முடியுது? உங்க காலத்துல நல்ல சாப்பாடு சாப்டேள்….தொண்ணூறு நூறுன்னு இருக்கேள்…இப்போ? எல்லாம் கலப்படம்? அறுபது தொட்டாலே இழுத்துக்கோ, பறிச்சிக்கோன்னு கிடக்கோம் நாங்க…எல்லாரும் வேலைக்குப் போறவா வேறே…எம்புட்டு வந்தாலும் பத்த மாட்டேங்கிறது….எல்லாத்துக்கும் ஆள் வச்சிக்க வேண்டிர்க்கு…அவாளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுக்க வேண்டிர்க்கு…அப்பிடியும் கிராக்கியா இருக்கு…யாருக்குத் தெம்பு இருக்கு உடம்புல…ஒடிஞ்சி விழுந்துடுவா போலிருக்கு…இதுல ராத்திரி முழிப்பு, பகல் முழிப்புன்னு வித்தியாசமில்லாம யாரால கிடக்க முடியும்? விடாம யாரால செய்ய முடியும்? ஆஸ்பத்திரில கூட நர்சுன்னு ஒருத்தி இருந்தா டே ஷிப்ட, நைட் ஷிப்ட்னு மாத்தி மாத்திப் பார்க்கிறா….ஒரே ஆள் தொடர்ந்து இருந்தா அப்புறம் அவாளும் படுக்கைல விழுந்தா யார் பார்க்கிறது? இதைச் சொன்னா குத்தம்…தான் பார்த்திண்டா எது நியாயமோ அதுவே மத்தவாளுக்கு ஆகாது…மத்தவாளுக்கும் வயசாகும், ஒவ்வொருத்தரோட உடம்பு ஸ்திதி வெவ்வேற மாதிரியிருக்கும்ங்கிற பக்குவமெல்லாம் கிடையாது…- பிள்ளைகளின் பேச்சில் எல்லாமும் ஒரே விகிதமாகவா இருக்கும். சற்று மாறுபடத்தானே செய்யும்…இன்றைய தலைமுறையின் யதார்த்த, நிதர்சனப் போக்கு மூத்த தலைமுறைக்குப் புரியுமா?
எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே படுக்கையில் சவமாய்க் கிடந்தாள் அம்மா. கண்களில் விடாமல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் நீர். கடந்து வந்த காலங்களின் அதீத நினைப்புகள்…சொல்லொணாத் துயரங்கள்…
அழாதே…உடம்பு அவாளுக்கும் முடியாதபோது, அலுத்துச் சலிச்சு வருமில்லியா…அப்போ ரெண்டு வார்த்தை வரத்தான் செய்யும்…உனக்குத் தெரியாதா, அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதே…நீ பார்க்காததா? பாட்டிக்கும், அப்பாவுக்கும் எவ்வளவு பார்த்திருக்கே…? உன் மனசு கஷ்டப்படக்கூடாதுதான்…நீ நொந்து ஏதாச்சும் நினைச்சுண்டா அது பலிச்சிடும்தான்…ஆனாலும் நீ அப்டி நினைக்க மாட்டே…உன் ஜனனமில்லையா எல்லாமும்,…எல்லாரையும் மன்னிச்சிடு…ஆசீர்வதி…அவ்வளவுதான்…
ஆனாலும் வார்த்தை பேசாதது நீதாண்டா….நான் நன்னாச் சொல்லுவேன்…அடுத்தவா மனசு புண்படுமேங்கிற எண்ணம் உனக்கு மட்டும்தான் உண்டு. அவாள்லாம் அப்டியில்லை…வாயில வந்ததைப் பேசிடுறா…எல்லாருக்கும் தோணறதுதான்…ஆனா இதையிதைப் பேசணும்னு ஒண்ணு இருக்கில்லியா…? மனசுல தோணறதையெல்லாம் அப்டிப் பேசிட முடியுமா? என்ன மனுஷா? எவ்வளவோ படிக்கிறா…அடுத்தவாளுக்கு உபதேசிக்கிறா…தனக்குங்கிறபோது மட்டும் இப்டி நடந்துக்கறா…எல்லாமும் ஏட்டுச் சுரைக்காய்…லோக அனுபவமங்கிறதே வேறே…இந்த உலகத்து மனுஷாளோட கலந்த அனுபவம் இருக்கே அதோட மகிமையே தனி…அப்பத்தான் பக்குவப்படும்…மனுஷாளுக்கு விவேகம்னு ஒண்ணு வேண்டாமா? பஞ்சு மனசுன்னு ஒண்ணு உண்டே… அந்த மென்மை உனக்கு மட்டும்தான் உண்டு. நீ வாய் திறந்து எதையும் சட்னு பேசிடமாட்டாய். அதுதான் சாட்சி…! ஏன்னா நீ என்னோட முழு ஆதங்கத்துல பிறந்தவன்…உங்கப்பா சின்னாளபட்டில கடை வச்சிருந்த போது ரெண்டு வருஷம் என்னைப் பிரிஞ்சிருந்தார். அங்க கடையை ஒரேயடியா இழுத்து மூடிட்டு உள்ளுரோட வந்து சேர்ந்தாரோல்லியோ அப்போதான் நீ பொறந்தே…ஆதங்கப்பட்டு, ஆதங்கப்பட்டு, என் மனசுல தேக்கி வச்சிருந்தனே நிறைய, துக்கத்தையும், கருணையையும், வேதனையையும்…அதோட மொத்த உரு நீதான்…எத்தனை பொறுமையும், நிதானமும் காத்திருப்பேன் தெரியுமா? அது பெரிய கதைடாப்பா…அதை இன்னைக்கு நினைச்சாலும் என் உடம்பு நடுங்குறது…அப்டி ஒரு மனுஷனை நான் இந்த ஜன்மத்துல பார்க்கலை…எவ்வளவு பெரிய மனசு அவுருக்கு….தெய்வமா வந்தார் நம்ம வீட்டுக்கு…
நீ என்னம்மா சொல்றே…? –
அம்மாவின் முகத்தில் புதிய ஒளி. பழைய நினைவோட்டங்களின் ஆதர்ஸம். கண்களில் சட்டென்று பெருக்கெடுக்கும் கண்ணீர்.
ஊரம்புட்டும் கடனாயிடுத்து…உங்கப்பாவால தீர்க்க முடியலை…என்னவோ பேருக்கு வியாபாரம் நடந்திண்டிருக்கு…கடையும் ஓடிண்டிருக்கு…ஆனா கடன் பெருகிண்டிருக்கு…உங்கப்பாவுக்கு என்ன செய்றதுன்னே தெரிலை…முழிச்சிண்டிருக்கார்…இந்தச் சமயத்துலதான் நா போய் அங்க உட்கார்ந்தேன்…
உன்னை யாரு இங்க வரச்சொன்னா…? யாரக் கேட்டு இங்க வந்தே?ன்னு சத்தம் போட்டார். சத்தம்னா அப்டியொரு பழி சத்தம்….உங்க பாட்டியானா முழிக்கிறா…அவாகிட்டே அழுது புரண்டுதான் என்னைக் கூட்டிண்டு போய் உங்கப்பா முன்னாடி நிப்பாட்டினா…ஏண்டா குழந்தே….உங்கப்பாவப் பாட்டி அப்டித்தான் கூப்பிடுவா…இப்டியா திரும்பிப் பார்க்காம இருப்பே..ஒரு பொம்மனாட்டி என்னதாண்டா பண்ணுவா…தனக்கு வாழ்வு இருக்குன்னு நினைப்பாளா, இல்லைன்னு அழுவாளா? நீ இல்லாம அவ படற துன்பம் என்னால சகிக்க முடிலப்பா…அதான் கொண்டாந்து விட்டுட்டேன்…இனிமே உன் பாடு அவ பாடு….
நாலுங்கெடக்க நடுவுல இப்டிக் கூட்டிக் கொண்டாந்து நிப்பாட்டினா நானும் என்னதான் செய்றது? நா என்ன செத்தா போயிட்டேன். இங்கதானே இருக்கேன்…
இங்கதான் இருக்கேங்கிறதே இங்க வந்தபின்னாடிதானே தெரியறது…மாசத்துக்கு ஒருதரமாவது ஊருக்கு எட்டிப் பார்க்க மாட்டியா? யார்ட்டச் சொல்லி எப்டித் தெரிஞ்சிக்கிறது? குடும்பம்னு ஒண்ணு இருக்குங்கிறதை நினைக்க மாட்டியா? இப்டியா குழந்தைகளை விட்டிட்டு கண்காணாம வந்து கிடக்கிறது? நாங்க என்ன நினைக்கிறது அப்புறம்?
படிக்கிற குழந்தைகளை இப்டி இழுத்திண்டு வந்து நின்னா என்ன அர்த்தம்…நாளைக்குப் பொழுது விடிஞ்சிதின்னா அதுகள் ஸ்கூலுக்குப் போக வேண்டாமா? இது நன்னாயிருக்கா?
ரெண்டு நாளைக்குப் போகாட்டா ஒண்ணும் குடி முழுகாது…நீ அங்க இருந்தாத்தான் எல்லாம் சரிப்படும்…இப்ப எங்களோட புறப்படு….போதும் நீ வியாபாரம் பார்த்ததெல்லாம்…
என்னது புறப்படறதா? நல்ல கதையா இருக்கே…இங்க கடன்காரால்லாம் கழுத்த நெரிச்சிண்டிருக்கா…அவாளையெல்லாம் விட்டிட்டு நா எப்டி வர்றது? என்னமாவது பண்ணி அத்தனையையும் செட்டில் பண்ணிட்டுதான் ஊர்ல காலடி வைப்பேன்….
அப்போ அதுவரை நாங்களும் இங்கதான் இருப்போம்….என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…இப்போ என் நாட்டுப்பொண்ணுக்கு ஒரு பதிலைச் சொல்லு….அவ அழுகையையும் கதறலையும் என்னால கண்கொண்டு பார்க்க முடியலை….இல்லைன்னா சா தற்கொலை பண்ணின்டு சாக வேண்டிதான்…
ப்பா தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். தாயாரின் வார்த்தைகள் அவரை ஆட்டியெடுத்து விட்டன. துக்கத்தில் சிலையாய் அமர்ந்து கிடந்தார். வாசலிலானால் கடன்காரர்கள் வந்தமணியமாய் இருக்கிறார்கள். ஆளுக்கொரு லிஸ்டைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கிடக்கிறார்கள். கடனைத் தீர்த்தால்தான் இடத்தை விட்டு நகருவோம் என்கிறார்கள். ஒரு குந்துமணித் தங்கமில்லை அம்மாவிடமும். கழுத்தில் மஞ்சளை முடிந்து கட்டியிருக்கும் தாலி. பொழுதோ இருட்டி விட்டது. வந்தவர்கள் நகரவில்லை. மேற்கொண்டுதான் ஆட்கள் வருகிறார்கள். ஆளாளுக்குக் கையில் கிடைத்ததைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாலும் பத்தாது..தேறாது…
அன்று அந்தத் தேவரய்யா மட்டும் இல்லையானால் என்னவாகியிருக்கும்? கையெடுத்துக் கும்பிட்டுக் குலதெய்வமாய் வைத்த தெய்வம் அவர்.
அம்மணீ…நீ ஒண்ணும் அழாண்டாம்….கண்ணத் துடைச்சிக்கோ….எல்லாம் நா பார்த்துக்கிறேன்….ஏ புள்ளே….அவுகள்லாம் பசியாக் கிடக்காக பாரு….முதல்ல அவுக வவுத்த நிரப்புற வழியப்பாரு….போங்க..போங்க…வீட்டுக் குள்ளாற போங்க…எல்லாம் நல்லபடியா நடக்கும்….பசியாறுங்க முதல்ல…..
அன்று அது நடக்கவில்லையானால் குடும்பமேயல்லவா தற்கொலை செய்து கொண்டு மாய்ந்திருக்கும்…!
என்னாய்யா…எல்லாரும் ஓரெயடியா வந்து கழுத்தப் பிடிக்கிறீங்க…அவரென்ன தர மாட்டேன்னா சொன்னாரு….அவரத்தான் இத்தன்நாளாப் பார்க்கிறீங்கள்ல…உங்க முன்னாடிதான இருக்காரு…ஓடியா போயிட்டாரு…கொஞ்சங் கொஞ்சமாத் தர்றேன்னுதானே சொல்றாரு…ஒரு மனுஷன ஒரே சமயத்துல எல்லாரும் நெருக்கினீங்கன்னா அவன் என்னதான்யா பண்ணுவான்.….நா சொல்றேன்…யாரும் அவர்ட்ட இனிமே பேசப்படாது…என்னைத் தாண்டி யாரும் அவர்ட்ட நெருங்கப்படாது…தெரிஞ்சிதா…அவுங்கவுங்களுக்கு எவ்வளவு எவ்வளவுன்னு சொல்லுங்க…நா செட்டில் பண்றேன்……என் பொறுப்பு…..
தேவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டது அந்தக் கூட்டம். , சமாதானமாகி தங்கள் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. அந்த இரவு….மறக்க முடியாத இரவு அம்மாவுக்கு…..
ஒரு வில்வண்டியைப் பூட்டி, கையில் கொஞ்சம் பணத்தையும் செலவுக்குக் கொடுத்து, அம்மா, பாட்டி, அப்பா மூவரையும் இரவோடு இரவாக இரண்டு ஆட்களைப் பாதுகாப்புக்குச் சேர்த்து ஊருக்கு அனுப்பி வைத்தார் தேவர்…அந்த மகானை மறக்க இயலுமா…தினமும் முதல் கவளம் கையில் எடுக்கையில் அவரையல்லவா நினைத்து வணங்கியது அந்தக் குடும்பம்.
உங்கப்பா வச்சிருந்த அந்த சோத்துக் கடைல என்ன பண்ட பாத்திரம் இருந்ததுன்னு நினைக்கிறே? அது அத்தனையையும் வித்திருந்தாலும் அவர் பட்ட கடனை அடச்சிருக்க முடியுமா? நிச்சயம் முடியாதுதான்…திவாலாத்தானே நின்னார்…? ஆனா தெய்வமா வந்த அந்த மனுஷன் அன்னைக்கு எங்களப் பாதுகாத்தார். எந்தக் கடவுள் அனுப்பி வச்சாரோ தெரியாது. அன்னைக்கும் இன்னைக்கும் அவர்தான் நமக்குக் கடவுள்…இன்னைக்கு நீங்களெல்லாம் இப்டி நிக்கறேள்னா அதுக்கு அவர்தான் காரணமாக்கும்….
ஏம்மா, இப்போ அவரை உன்னால அடையாளம் காட்ட முடியுமா? அவரில்லாட்டாலும், வாரிசுகள் இருப்பால்லியா….அந்த அம்மணியோட வயித்துல ஜனிச்ச பிள்ளைகள் இருப்பா இல்லியா…அவாளைப் பார்த்தாலே புண்ணியமுண்டே….
கண்ணா நீ சொன்னதே போரும் எனக்கு….ஏதோ ஒரு ஜன்மத்துல அவுருக்கு நா பொண்ணாப் பொறந்திருக்கணும்…அதுனாலதான் அவரை என் அழுகை அன்னைக்கு அப்டி ஆட்டித்து….அந்தம்மா மடில படுத்துண்டு நா அழுத அழுகை என்னைப் பெத்த தாயார்ட்டக் கூட எனக்கு அந்த ஆறுதல் கிடைக்கலைன்னுதான் சொல்லுவேன்…..எல்லாத்துக்கும் உங்கப்பாவோட நேர்மையும், ஒழுக்கமும்தான் காரணம்…அய்யர்சாமி, அய்யர்சாமின்னு உசிரை விடுவார் அந்த மனுஷன்…பின்னாடி வீடுள்ள அவர், உங்கப்பா கடைலதான் கிடையாக் கிடப்பார்…ஒரு வார்த்தை சொல்ல மாட்டார் உங்கப்பா….அத்தனை மரியாதையான மனுஷன்…பெரிய ஆகிருதி ….காவல் தெய்வம் மாதிரி உட்கார்ந்திருப்பார்….அதுபோலவே நம்ம குடும்பத்துக்கும் தெய்வமா நின்னார்…..
எல்லாம் உன்னோட தாலி பாக்கியம் அம்மணீ…கவலப்படாமப் போன்னார்…அவர்தான் உங்கப்பாவை மீட்டுக் கொடுத்தார். சத்தியமான வாக்கு அது… அப்டிப்பட்டவாளயெல்லாம் இன்னைக்கும் நினைக்கலேன்னா நாமள்ளாம் என்ன மனுஷா…? எல்லாம் நீ கேட்கிறயேன்னு சொல்றேன்….எவ்வளவோ கடந்து வந்தாச்சுடா கண்ணா….இந்த நெஞ்சு தாங்கினது எம்புட்டோ துக்கம்…அத்தனையும் சொல்லி மாளாது….இந்த ஊரோட ஊரா உங்கப்பா வந்த பின்னாடிதான் நீ பொறந்தே…உங்கப்பாவை உள்ளுரோட கொண்டுவந்து நிறுத்தின பெருமை உன்னைத்தான் சேருமாக்கும்….நீ வயித்துல இருக்கிறதுலேர்ந்து உங்கப்பா எங்கயும் நகரலை…அப்டியே உள்ளுரோட இருக்க ஆரம்பிச்சிட்டார்….இங்கயே வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டார்…உன்னை நினைச்சிண்டேதான் சடையுடையார் கடைலர்ந்து ஓடி ஓடி வருவார்…வத்தலக்குண்டிலயே நாம நிலைச்சது உன்னாலதான்….
நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் எத்தனையெத்தனை சோதனைகளையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் கடந்து வந்த அனுபவசாலி அவள்…? அவளின் அனுபவ சாரத்தின் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்? வெறும் துரும்பாயிற்றே…? சிலிர்த்துப்போய் அமர்ந்திருக்கிறேன் நான்.
தொலைபேசி எடுக்க ஆளின்றித் தொடர்ந்து அலறுகிறது. என்னாச்சு? யாராச்சும் கேட்க வேண்டிதானே…? சொல்லிக் கொண்டே போய் எடுக்கிறேன். அம்மாவுக்கான அந்தச் செய்தியைத் தாங்கி வருகிறது அது.
நாந்தான் சொன்னனே அவனுக்கு மனசாகாதுன்னு…என்னவோ நீ கூட்டிண்டு போன்னு உங்கிட்ட சொல்லிட்டானேயொழிய அவனால நா இல்லாம இருக்க முடியாதாக்கும்….அவன் மனசு கேட்காது….எனக்குத் தெரியாதா எம்பிள்ளையோட அடி மனசு….என்னை நீயும் அவளும் நன்னாப் பார்த்துண்டேள்…எனக்கு ரொம்பத் திருப்தி. நிறைஞ்ச சந்தோஷம்…நீங்க நன்னா இருப்பேள்…நல்லதாப் போச்சு, பேசாம என்னை அங்க கொண்டு விட்ரு…அங்க இருந்தாத்தான் எனக்கும் சரி வரும். ஆயிரந்தான் ஆனாலும் மூத்தவன்ட்ட இருக்கிற திருப்தி வருமா? அங்க பிராணன் போறதைத்தான் எல்லாரும் விரும்புவா…அதுதான் உலக நியதி…..வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டான்லயோ? படுத்துண்டமேனிக்குப் போறதுதானே…நிம்மதியாப் போச்சு…நாம்பாட்டுக்குத் தூங்கிண்டே வர்றேன்…பொழுது விடிஞ்சா மெட்ராஸ் ஆச்சு….
அம்மாவின் முகத்தில் எத்தனை உற்சாகம். அதுவரை இருந்த சோர்வும், களைப்பும், வலியும், வேதனையும் எங்கே போயிற்று? விட்டால், தானே எழுந்து நடந்து விடுவாள் போலிருக்கிறதே…?
பொறு…பொறு…ராத்திரி எட்டுக்குத்தான் ஆம்புலன்ஸ் வருதாக்கும்…எல்லா ஃபெசிலிட்டீசோட அரேஞ்ஜ் பண்ணியிருக்கான்….ஏ.ஸியோட….கூடவே ஒரு நர்சும் வர்றாங்க…ராத்திரிப் பூராம் உன்னைப் பார்த்துக்க….எதுக்கும் பயப்பட வேண்டாம்….ஆனாலும் உனக்குக் கவனிப்பு ஜாஸ்திதான்…நாளைக்கு எங்க பாடெல்லாம் எப்டியோ..? நாங்கள்லாம் எப்டி சீரழியப் போறோமோ?
எதுக்கு அப்டிச் சொல்லிக்கணும்…எல்லாம் நன்னா இருப்பேள். என்னோட பேரன் பேத்திகளெல்லாம் உங்களைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக் கவனிச்சிக்குவா…என் வாக்கு பலிக்கும்போதாவது என்னை நினைச்சிக்க மாட்டேளா..
எத்தனை பரந்த மனசு அம்மாவுக்கு. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே…..
அம்மாவின் முகத்தில்தான் என்னவொரு பெருமிதம்? தகவல் வந்ததும், என்னையே மறந்து விட்டாளே…?எப்படித் துள்ளுகிறாள்? எவ்வளவு மகிழ்ச்சி? என்னதான் ஆனாலும் மூத்தவன் இருக்க இளையவனுக்கு ஏது பெருமை? காலம் அப்படித்தானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது?
ஆனாலும் அம்மாவுடனான இந்த நாட்கள்…? அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை…! அம்மா இங்கே, என்னிடம் இருந்த அந்த சில நாட்களை என்னால் மறக்க முடியுமா? அவளின் ஆசிகள் இந்த வீடு பூராவும் பரவிக் கிடக்கிறது. மூலைக்கு மூலை நின்று ஒலிக்கிறது. அசரீரியாய் கனிந்த குரலோடு எங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. அடக்கவொண்ணாமல் கண்ணீர் துளிர்க்கிறது எனக்கு.

-----------------------------------------------------------------------
























































1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நெடுங்காலம் உயிரோட இருக்கிறதோட கொடுமை ...!

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...