06 மார்ச் 2025

 

சிறுகதை                     உயிர் எழுத்து மார்ச் 2025 இதழ் பிரசுரம்

“போட்டானே ஒரு போடு…!”






               என்னாச்சு, இன்னிக்குப் பேச்சையே காணலை….- அமைதியாக நடந்து கொண்டிருந்த ராகவானந்தனை உசுப்பி விட்டார் திருமேனி. அப்பொழுதும் மீளாமல் நடையை எட்டிப் போட்டார் ராகவம். மனதில் ஓடும் எண்ணங்களுக்கேற்ப அவரது முக பாவனைகள் சட்டுச் சட்டென்று மாறிக் கொண்டிருந்தன.

பாதையையும் கொஞ்சம் பார்க்க வேண்டுமே…தடுக்கிக்கொண்டால்? என்று இடை இடையே நடைபாதையிலும் கண் வைத்து கால்களை நகர்த்தினார் திருமேனி.

எதுவானா என்ன? விடுங்க…மனசுல போட்டு உழப்பிக்காதீங்க…என்று பொதுவாகச் சொன்னார்.

அப்டியில்லீங்க…செய்யுறது அத்தனையும் நானு…ஆனா பேச்சைப் பார்த்தீங்களா? – நன்றி கெட்ட பயலுங்க…..என்றார் ஆக்ரோஷத்துடன்.

அடிக்கடி, எனக்குத் தனியா இருக்கிறதுதான் பிடிக்கும்…பிடிக்கும் என்று அவர் சொல்வதின் அர்த்தம் இப்போதுதான்  கொஞ்சமாக விளங்கியது திருமேனிக்கு.  விட்டு விலகி, விட்டு விலகி…என்பதைத் தாரக மந்திரம் போல் சொல்வார்.

என்ன சொல்லிப்புட்டான் அப்டி? உங்க பையன்தானே….சொன்னா சொல்லிட்டுப் போறான்…விட்டுத் தள்ளுங்க…-இதெல்லாம் மேலே போட்டுக்க ஆரம்பிச்சீங்கன்னா அப்புறம் உங்க உடம்பைத்தான் பாதிக்கும். அப்புறம் அதுக்கு இதுக்குன்னு டெஸ்ட் எடுக்கப் போக வேண்டிதான்….எதுவானாலும் சட்டுன்னு ஒதுக்கித் தள்ளிட்டு ஃப்ரீயா இருக்கப் பாருங்க…வயசாயிடுச்சில்ல…

எப்டித் திருமேனி…? அத்தனை எளிசாத் தூக்கி எறிஞ்சிட முடியுமா? மனுஷனுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குல்ல…அதுல போய் எல்லாமும் பதிவாகிடுதுல்ல…மூளை அப்பப்போ அதை ஞாபகப்படுத்திட்டிருக்குதானே..நல்லது மட்டுமே பதிவாகியிருந்தா அது ஞாபகத்துக்கு வந்து நம்மை உற்சாகப்படுத்தும். வெறும் அவலமால்ல வந்து நெனப்புல நிக்குது….நன்றி கெட்ட பசங்க…..! நான் ரொம்ப சென்சிடிவானா ஆளுய்யா…தெரியாதா உமக்கு?

தெரியும்தான். ஆனாலும் …? குறைச்சிக்கத்தான் வேணும்.

பேச்சு முடியும்போது அந்த “நன்றி கெட்ட…“என்ற சொற் பிரயோகம் அவரே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்து விழும்போலிருந்தது.

காற்று விர்…விர்…ரென்று அடித்தது. ராகவானந்தத்தின் எண்ணங்களை மேலும் உசுப்பி விடுவது போலிருந்தது அந்த வீச்சு. ச்சே…! நடப்போம்னு வந்தா என்ன உபத்திரவம் பாருங்க…என்றவாறே டீ சர்ட்டின் மேல் முதல் பட்டனை இழுத்துப் போட்டுக் கொண்டார்.

இயற்கை மனிதனின் செயல்பாடுகளுக்கு  அவ்வப்போது முக்கிய காரணமாக அமைகிறது.  தவிர்க்க முடிவதில்லை.

என்னாச்சு…? உங்க பையன் ஏதாச்சும் எதிர்த்துப் பேசிட்டானா? அதுக்குத்தான் வருத்தப்பட்டுட்டு இப்படி அமைதியா வர்றீங்களா? உங்களப் பார்த்தா நிச்சலனமா வர்ற ஆள் மாதிரித் தெரிலயே? உள்ளுக்குள்ள தள தளன்னு கொதிச்சிக்கிட்டு்ல்ல இருக்கீங்க? இப்டிக் கண்டதையும் போட்டுக் குழப்பிக்கிட்டீங்கன்னா பிரஷர் ஏன் ஏறாது? ஷூகரும் எப்படிக் கன்ட்ரோல் ஆகும் ? எகிறத்தான் செய்யும்?

ஏறினா ஏறிட்டுப் போவுது…அப்டியாவது சட்டுன்னு போய்ச் சேருவோம்… கதை முடிஞ்சிதுன்னு இருக்கும் ….! எவனுக்கு இருக்கணும்னு ஆசை இருக்கு? – அலுத்துக் கொண்டார்.

அருகில் வந்து முதுகில் கை வைத்துத் தட்டிக்கொடுத்தார் திருமேனி. அந்த நெருக்கம் அவர்களிடம் பல வருஷங்களாக உண்டு. முதல் அப்பாய்ன்ட்மென்ட் ஆகி திருச்சியில் ஒர்க் ஷாப்பில் வந்து ஜாய்ன் பண்ணிய போதிலிருந்து தொடர்கிறது. இறுதி ஸ்டேஷனாக இருவருக்கும் அந்த நகரமே வாய்த்தது. சுப்ரமணியபுரத்தில் ராகவானந்தம் ஒரு பிளாட் வாங்கி வீடு கட்டினார். அருகிலேயே திருமேனியும் வந்து விட்டார்.

என்னையே குறி வச்சு வந்திர்றயேய்யா…? ரெண்டு பேரும் போன ஜென்மத்துல சேர்ந்து பிறந்திருப்பமோ? என்பார் ராகவம்.

இப்ப மட்டும் என்ன.?  இப்பயும் ரெண்டு பேரும் ஒண்ணுதான் என்று கட்டிக் கொள்வார் திருமேனி. வீடுதான் தனி. மனசெல்லாம் ஒண்ணுதான். வாழ்க்கையும் ஒண்ணாத்தானே கெடக்கு? உனக்கும் ஒரு பையன்…எனக்கும் ஒருத்தன். உனக்கும் ஒரு பொண்டாட்டி…எனக்கும் ஒரே பொண்டாட்டி…நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்…! ஆனா போதுமே…!

அட ஏண்டா…ஒண்ணக் கட்டிக்கிட்டே பெரும்பாடா இருக்கு? கடவுள் கிருபையால நல்லபடியா அமைஞ்சிதோ, நிம்மதியா இருக்கமோ? இல்லன்னா…என்னா பாடாப் போயிருக்கும்…? -சிரித்துக் கொள்வார்கள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ப்பா. நம்ம முன்னோர்கள்,பெற்றோர்கள் ஆசீர்வாதம்…அதான் நம்மளக் கட்டி ஆள நல்ல பெண்களாக் கிடைச்சிருக்காங்க…!

ராகவானந்தனின் முதல் நண்பர் திருமேனி. தனக்கு மனதிற்குகந்த நட்பு அவர்தான் என்று அந்த முதல் பார்வையிலேயே திருமேனியை உணர்ந்து கொண்டார் ராகவம்.

பொன்மலைப்பட்டி வளைவு நுனியில் இருந்தது அவர்கள் பணியாற்றிய பணிமனை.  வெறும் தகரக் கொட்டகை. அட…ஆபீசாவது காரைக் கட்டிடத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கொட்டகையின் ஒரு ஓரமாய்த் தடுப்பு எடுக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. வெந்து தணிந்தது காடு…வெப்பக் காற்று ஊ…ஊ…வென்று காதில் வந்து அறையும். ஊருக்கு ஒதுக்குப் புறம். உஷ்ணக் காற்றை ஒதுக்கி, கடமையாற்றுவது துரதிருஷ்டம்.

அநியாயச் சத்தம். காது கிழியும் இயந்திர ஒலிக்கு நடுவேதான் ஆபீஸ் வேலை செய்தாக வேண்டும். தலைக்கு மேலே ஓடும் காற்றாடி சூடான காற்றைத்தான் இறக்கும். நிரம்பியிருக்கும் ஆபீசில் அனைவரும் வேர்வையில் வியர்த்து வழிவர்.

 புஸ்ஸென்று பூதமாய் அமர்ந்து குட்டிப் பூதத்தை முன்னே அமர்த்தியிருப்பதுபோல் தட்டச்சுப் பொறியின் எதிரே அந்தக் காமாட்சி தட்டச்சர் இருந்து வேலை செய்யும் காட்சி…பார்ப்போரின் மனதைப் பதறடிக்கும்.  அவ்வப்போது புடவைத் தலைப்பை எடுத்து உஸ்ஸூ…உஸ்ஸூ என்று அந்தம்மா வீசிக்கொள்ளும் காட்சியும் இழுத்து இழுத்து மூச்சு வாங்கும் அவஸ்தையும்…சிரிக்கிறதா அழுகிறதா என்றே தெரியாது. பரிதாபம் தொனிக்கும்.

மாரீசன்னு ஒரு மானேஜர்.  எவன் ஸ்பெஷலாப் பேரு வச்சான் இந்தாளுக்கு. …இதமா ஒரு நாளைக்கு சிரிச்சிப் பேசியிருக்காரா? சரியான சிடுமூஞ்சி…-இப்படித்தான் திட்டுவார்கள் அவரை. ஆனால் அவர் அதிகமாய்த் திட்ட மாட்டார்.

பொம்பளைங்களை ரொம்ப அதிகமாச் சொல்ல முடியறதில்லை. எதுவும் கோபப்பட்டோம்னா லீவப் போட்டுட்டுப் போயிடுதுங்க…அப்புறம் இதுக்கும் சங்கடம் வந்திடும். முதலுக்கே மோசமாயிடும். போஸ்ட் காலியாக் கிடக்கும். எம்ப்ளாய்மென்ட்லர்ந்தும் எடுக்க மாட்டானுங்க…எங்கிருந்தானும் மாத்தியும் ஆள அனுப்ப மாட்டாங்க. எல்லாரும் நம்ப ராகவானந்தம் போலவா இருப்பாங்க…? இன்ன வேலைன்னு பார்க்காத ஒரே ஆளு இந்த ஆபீஸ்ல அவர் மட்டும்தான். ஆல் இன் ஆல். ஏதாச்சும் கௌரவம் பார்க்கிறாரா? ரெக்கார்டுல போய் குப்பையக் கூட்டணும்னாக்கூட அவரு தயங்கறதில்ல…தூசி மூக்குல ஏறி தும்மிக்கிட்டு அவஸ்தைப்படுறாரு…! அப்டியும் வேலையை நிப்பாட்டுறாரா? அப்டில்லய்யா ஆளுக இருக்கணும்…நாமெல்லாம் இங்க இருக்கம்னா ஒரே குடும்பம் போல…அத உணர வேண்டாமா? ஏதோ வந்தோம் போனோம்னு இருந்தா? ச்சே…நான் போகுற ஆபீஸ்லல்லாம் இப்டி ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு வந்து மாட்டிக்கிது….வண்டியத் தள்றது படு கஷ்டம் இதுகளெல்லாம் வச்சிக்கிட்டு…!

அந்த இளம் பிராயத்திலிருந்தே ராகவானந்தத்தைத் தெரியும் திருமேனிக்கு. அவர்கள் இருவரும்தான் ஒரே இடத்தில் அறையெடுத்துத் தங்கியிருந்தார்கள்.  .  கன்டோன்மென்டுக்கு எதிரே இருந்தது அவர்களின் தங்குமிடம். உள்ளூரிலேயே அலுவலகம் அலுவலகமாய் மாறினார்கள்.

இதுங்க ரெண்டுக்கும் வெளியூரே கிடையாதா? உள்ளூர் கழுதைங்க மாதிரி இங்ஙனவே சுத்துதுங்களே? என்று பொறாமைப் படுவார்கள். மானேஜர் பிரமோஷன் ஆகி, ஆளுக்கொரு ஆபீஸ் என்று அமர்ந்து கொடிகட்டிப் பறந்தார்கள். சில பேருக்கு அப்படி அமைந்து போனால் அது அவர்களின் அதிர்ஷ்டம்தான். பக்கத்து ஊர் கிளை ஆபீஸ்களுக்குக் கூட மாறுதல் என்று போனதில்லை. அதற்காக ஓய்வு பெறும் வரையா அப்படியே தொடரும்? தொடர்ந்ததே!

புதுப் புது அரசுத் திட்டங்கள் வந்து கொண்டேயிருந்தன. அதற்கு கட்டிக் காக்க அனுபவம் வாய்ந்த பெருமான்கள் வேண்டும் என்று முனைந்த போது அகப்பட்டவர்கள் ராகவானந்தமும், திருமேனியும்தான். டிபார்ட்மென்ட் ஜெம்ஸ். எல்லாம் முடித்து ரிடையர்டும் ஆயாச்சு. இப்போது அங்கே போய் நின்றால் எவன் மதிப்பான்?  திரும்பிக் கூடப் பார்த்ததில்லை இருவரும். என்னவோ ஒரு வெறுப்பு. இனி நமக்கிங்கு வேலையில்லை என்று தோன்றிய கணம் அந்த விலகல் வந்து விட்டது மனதில். முன்பு வேலை பார்த்த இடம் என்று எவரிடமும்  வாய் திறந்ததில்லை.

சரி, திரும்புவோம்…இப்டியே இன்னும் கொஞ்சம் போனோம்னா புதுக்கோட்டையே வந்திடும்….என்று சட்டென்று நின்றார் திருமேனி. இருவரும் காலை அந்த விமான நிலையச் சாலையில் ஓரமாய் ஒதுங்கி ஒதுங்கி நடைப் பயிற்சி செல்வது வழக்கம். அது புதுக்கோட்டை செல்லும் நீள் சாலை. குறைந்தது திருச்சி விமான நிலையம் வரையிலாவது நடக்காமல் திரும்புவதில்லை. அதற்கு மேலும் மூணு நாலு கி.மீ.கள் போனவர்கள்தான். இப்போதெல்லாம் முடிவதில்லை. வாழ்க்கையின் தூரம் தானே குறைந்து போனது.

திரும்பி நடந்து மறுபடியும் பொன்மலைப்பட்டி திருப்பம் வந்ததும் இருவரும் நின்றார்கள். எதிர் பணிமனைக் கொட்டகையில் வாட்ச்மேன் தென்படுகிறானா என்று பார்த்தார் ராகவானந்தம். அந்தச் சரவணன்தான் இருக்கிறானா அல்லது வேறு ஆளா என்று அறிவதில் ஒரு திருப்தி.

அவனுக்குக் குட்டு வைத்தது அவர்தானே? திருட்டு புத்தி.

மனதில் வைத்துக் கொண்டு பிறகு தன்னைப் பழி வாங்க அவன் என்னென்னமோ செய்து விட்டான். எழுதுபொருள் துறைக்கு மீள அனுப்ப என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய உபயோகப்படாத தட்டச்சு மெஷினைத் தூக்கி பணிமனைக் கோடவுனுக்குள் மறைத்து வைத்து விட்டு அலற விட்டானே? இவன்தான் செய்திருப்பான் என்று நிச்சயமாகத் தெரியும் ராகவானந்தத்திற்கு.  எப்படி மெய்ப்பிப்பது என்றுதான் புரியவில்லை. ஆயுத பூஜை அன்றுதான் அது சாத்தியமாகியது. ஓல்டு ஸ்டாக் எல்லாம் சரி பார்க்கப்பட்டு வெரிஃபிகேஷன் பண்ணிய போது ஒளிந்து கொண்டிருந்த டைப் மெஷின் வெளியே வந்தது.

அதுவா நடந்து வந்திருக்குமோ இங்கே? என்றார் ராகவானந்தம். கல்லுளிமங்கனாய் நின்றான் சரவணன். அவன் முகம் போன போக்கைப் பலரும் கண்டனர்.  இன்னியோட ஆறு மாசம் ஆகுது…இது காணாமப் போயி…இந்த ஸ்டோர் ரூமுக்குள்ள இவன யாரு விட்டா? வாட்ச்மேனுக்கு அங்கென்ன வேலை? என்று வெளிப்படையாகவே கேட்டார் ராகவானந்தம். தவறைச் செய்தது அவன்தான் என்கிற முடிவிலேயே பேசினார். அப்போதும் அவன் வாயைத் திறக்கவில்லை. அவனுக்காக வேறு எவரும் பேசவுமில்லை. பயந்தார்கள். நமக்கு ஏதும் செய்து விடுவானோ? என்று. துறையின் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிவடைந்தபோது நிறையப் பணியிடங்கள் முடிந்து போயின. அந்த நேரம் பார்த்து அம்பது மைல் தள்ளியிருந்த பண்ணைக்குத் தூக்கிப் போட ஏற்பாடு செய்தார். வாரத்தில் ஒரு நாள்தான் ஊர் வர முடியும். குடும்பத்தையே அங்கு மாற்றிக்கொண்டாலும், இவன் பண்ணைக் காவலில்தான் இருந்தாக வேண்டும்.

சரவணன் அலுவலரின் காலில் விழுந்து மன்றாடினான்.

வாட்ச்மேனாய் இருக்கிறவன்தான்யா திருட்டுப் புத்தி இல்லாம இருக்கணும்…நீ அப்படியில்லையே? எதுவானாலும் உன்னை இனிமே இங்க வைக்கிறதா இல்லை…ஸ்டோர்ல பேரிங்கு, போல்ட் நட்டு,  வெளில கண்டெம்டாக் கிடக்கிற இரும்பு ஐட்டங்கள்னு அடிக்கடி காணாமப் போகுது…உன்னை நம்புறாப்ல இல்லை. நிறையப் புகார் இருக்கு உம்மேல…-என்று சொல்லி ஆளைத் தள்ளியே விட்டார்கள். அதோடு போனவன்தான். இப்போது எங்கிருக்கிறான் என்பதே தெரியாது ராகவானந்தத்திற்கு.

எல்லாமும் பார்த்தாயிற்று. எத்தனையோ விதமான அனுபவங்கள். எத்தனையோ வகையான மனிதர்கள். எல்லாக் காலத்திலும் உற்ற நண்பனாய் இருந்தது திருமேனிதான்.

எவ்வளவோ சகித்தாயிற்று. ஆனால் இன்று பெற்ற மகன் சொல்லும் வார்த்தைகளைச் சிறிதும் சகிக்க முடியவில்லையே? பார்த்துப் பார்த்துச் செலவு செய்து, மாதத்தின் முதல் செலவு சேமிப்பு என்று கட்டன் ரைட்டாகக் கடைப்பிடித்து….குருவி சேர்ப்பதுபோல் பணத்தைச் சேர்த்து, தன் செலவுகளையெல்லாம் சுருக்கிச் சுருக்கி, இவ்வளவு தேவையில்லாதது என்று கருதியவற்றின் அளவைச் சுருக்கி, கண்ணும் கருத்துமாய் வங்கிக்கு அலைந்து அலைந்து….அத்தனை வருடங்களாய் செய்த ஃபினான்ஷியல்  மானேஜ்மென்ட்டிற்கே தனக்குத் தனிச் சம்பளம் தர வேண்டும். அவனவன் செய்து பார்த்தால்தானே கஷ்டம் புரியும்? சொல்லக் கேட்டால் அத்தனை உறைக்காது எவனுக்கும்…!

இப்போதும்தான் என்ன வாங்கும் ஓய்வூதியத்தில் ஏதாவது செலவு செய்கிறோமா என்ன? அதிகபட்சம் ஐயாயிரம் கூடச் செலவு செய்வதில்லை ஒரு மாதத்தில். இ.பி.பில் கட்டியாகிறது. காய்கறிகள் வாங்கியாகிறது. தண்ணீர்க் கேனிற்கு இவர்தான் பணம் கொடுக்கிறார். மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்கிறார். லாரித் தண்ணீருக்குப் பணம் கொடுக்கிறார். அவ்வப்போது வரும் ஏ.சி., ரிப்பேர், பராமரிப்பு, எலெக்ட்ரிகல் ரிப்பேர்ஸ்…வேலைக்காரி சம்பளம்…என்று எது எதற்குத்தான் நான் தயங்கியிருக்கிறேன்? பர்சை விரித்து விரித்துக் காண்பிக்கிறான் எங்கிட்டப் பணமில்லை என்று! எடுத்து வைத்தால்தானே இருக்கும்? அப்பன் மட்டும் வச்சிருப்பான்னு எப்படித் தெரியும்?

நான் கொடுக்கிறேன்…நான் கொடுக்கிறேன்…என்று முந்திக்கொண்டு எடுத்து நீட்டி விடுவார். அவன் என்ன சம்பளம் வாங்குகிறான்,  மாதா மாதம் ஏதேனும் சேமிப்பு செய்கிறானா? பணத்தை வெறும் சேவிங்கு பாங்குக் கணக்கில் வெறுமே போட்டு வைத்திருக்கிறானா அல்லது ஃபிக்சட் டெபாசிட் போட்டிருக்கிறானா? எதுவும் கேட்டதில்லையே? பாவி…அநியாயமாத் திருடுறாங்கப்பா…சைபர் கிரைம்ங்கிறான்…ஒரு நாளைக்கு பத்து பொய் ஃபோன் வருது…எதையும் ஆன் பண்றதில்ல நான்…வேணும்ங்கிறவன், கூட ரெண்டுதரம் பேசட்டுமே…உறலோ…நான்தான் பேசறேன்னு முந்திட்டு சொல்லட்டுமே…!

அவ அம்மாவுக்கு தீபாவளிக்கு நாலு புடவை எடுத்தானென்றால் தனக்கு ஒரு டீ சர்ட் வாங்குகிறான். வேட்டி? என்றால் அதான் போன வருஷம் வாங்கினதையே நீ இன்னும் ஒப்பன் பண்ணலையே? அப்புறம் எதுக்குப்பா இன்னொன்ணு? இதென்ன அநியாயம். பாதிக்குப் பாதி கூடவா மனசில்லை? ஏண்டா…வயசானா வெறும் உடம்போடதான் குந்திக் கிடக்கணுமா? நாங்கள்லாம் புதுசு புதுசாப் போட்டா ஆகாதா? நீங்க மட்டும்தான் மினுக்கிட்டுத் திரியணுமா? வெறும் பயலே…!!

அப்பா எங்கம்மா போடுறார்?…வீட்டுலயே வெறும் உடம்போடதான உட்கார்ந்திருக்காரு…? பனியனே போதுமே?  வெளிலயே போறதில்லையே? அவர்ட்ட இருக்கிறதையே எத்தனையோ துணிகளை அவர் போட்டதில்லை. மேலும் மேலும் புதுசு புதுசா வாங்கி என்ன செய்ய? ஆனாலும் அதைச்சொல்ல இவன் யார்? கேட்டால்தான் கிடைக்குமெனில் வேண்டாம்..! – தன் சார்பாக, தான் சொல்ல வேண்டியதையெல்லாம் அவனே சொல்லிக் கொண்டு கட்ஷார்ட் பண்ணி விடுகிறான்.  இப்டித்தான் பணத்த சேமிப்பாங்ஞ போல்ருக்கு!

தனக்குச் செலவழிக்கத் தெரியாதா என்ன? மனசு வரவில்லையே? காசை சேர்த்து வைத்துத்தான் பழக்கமேயொழிய செலவு செய்து பழக்கமில்லையே? கை வந்தால்தானே? எளிமையாய் இருப்பதுபோல் ஒரு நிம்மதி உண்டா? இருக்கும் துணிகளை நாமே பிளேடு போட்டுக் கிழித்தால்தான் உண்டு புதுசு வாங்க. பைத்தியமா பிடித்திருக்கிறது கிழித்தெறிய? மூவாயிரம், நாலாயிரம் கொடுத்து வாங்கிய துணிகளை ஆறுமாசம் கூடப் போடுவதில்லை இந்தக் காலத்துப் பசங்கள். ஃபேடாயிடுச்சாம்? நாம ஃபேடாகலையா? இல்ல ஆகமாட்டமா? ஃப்ரெஷ்ஷாவே இளமைத் துடிப்போடயே காலம் பூராவும் இருப்பமா? கிழியாத சட்டையைக் கொஞ்சம் ஃபேடாயிடுச்சின்னு தெரிஞ்சால் போடக் கூடாதா? கௌரவம் குறைஞ்சு போகுமா? அயர்ன் பண்ணிப் போட்டால் அப்படி ஒன்றும் பழசானமாதிரித் தெரியலையே? இத எவன் சொல்லிப் புரிய வைக்கிறது? ஏன் இப்படித் தூக்கி எறிகிறார்கள்? அநியாயத்துக்கு ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் பழைய துணி வாங்கும் ஆட்களிடம் தூக்கி வீசி விடுகிறார்கள்.. காசையே விட்டெறிவதுபோலிருக்கிறது இவர்கள் செய்யும் காரியம். காசைக் கரியாக்குவது என்று தீபாவளிப் பட்டாசுக்குத்தான் சொல்வார்கள். இவர்கள் அந்த விதியைப் பரவலாக்கி விட்டார்கள்.

எதுவுமே கண்ணில் படக்கூடாது என்று ஒதுங்கியேதான் கிடக்கிறார் ராகவானந்தம். சகிக்க முடியவில்லை அவரால். விரயம்…விரயம்…அநியாய விரயம்.. வயிறெரிகிறது இவருக்கு. ஒரு காலத்தில் ஒரு வேளைச் சோற்றுக்கே தாளம் போட்ட கதையெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. கோயிலுக்கு ஓடிப்போய் உண்டக்கட்டி வாங்கி வந்தது, பஜனை மடம் போய் பூஜை எப்போது முடியும் என்று காத்திருந்து வரிசையில் இடித்துப் பிடித்து பொங்கல் பிரசாதம் வாங்கி வந்தது, நவராத்திரியின் போது வீடு வீடாய் வலியப் போய் சுண்டல் சேகரித்து வந்து அம்மாவிடம் கொடுத்தது, காமாலைக்கு மந்திரிக்கிறேன் என்று பாட்டி அந்த வீடுகளுக்கெல்லாம் போய் மந்திரித்து இறக்கி, பாதிப்பைத் தன் உடம்பில் வாங்கிக்கொண்டு, அவர்கள் கொடுக்கும் தோசை மாவு, அரிசி, பழம், வாழைக்காய் என்று கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்து, ஆதங்கம் தீர குழந்தேளுக்கு சமைச்சுப்  போடு.. கொடு என்று தவதாயப்பட்டு நின்றது…படி முக்கால் ரூபாயாமே என்று சந்தையில் ஓலைப் பாய் விரித்து வைத்து மலையாய்க் கொட்டிக் கிடக்கும் அரிசியில் ஒரு படி அரிசி வாங்க நாள் பூராவும் வரிசையில் காத்துக் கிடந்தது… என்று எல்லாமும் நினைவுக்கு வருகின்றன இவருக்கு.

 செல்லம் சவுன்டு சர்வீசில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் மாயாண்டித் தேவரிடம் போய் நூறு ரூபாய் வட்டிக்கு வாங்கி வா என்று அப்பா சொல்ல, அந்தாள் போய் டீ வாங்கி வா என்று விரட்ட, அழுதுகொண்டே போய் டீ வாங்கி வந்து நீட்ட…ஏண்டா அம்பி அழுகுற…இந்தா பணம் என்று வட்டிக் காசு பத்து ரூபாயை அப்போதே எடுத்துக்கொண்டு மீதி தொண்ணூறு கொடுத்ததை அப்பாவிடம் சென்று கொடுக்க, அந்தாள் டீ வாங்கிட்டு வரச் சொல்றாருப்பா என்று அப்பாவிடம் சொல்ல..நீ சின்னப் பையன்னு சொல்லியிருப்பார்..அதனாலென்ன அவர் உனக்குப் பெரியவரில்லையா…வாங்கிக் கொடுத்தா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டே…சரியா…அந்தாள்னெல்லாம் மரியாதைக் குறைவாப் பேசக் கூடாது..சரியா…?  ஏதாச்சும் வேலை சொன்னா மாட்டேன்னெல்லாம் சொல்லிடப் படாது…தெரிஞ்சிதா? என்று அப்பா விளக்கியபோது மனம் ஒடுங்கிப் போனது….இன்னும் என்னவெல்லாம்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது? சாகும்வரை மறக்காது போலிருக்கிறதே? எதற்கு மறக்கணும்? அதுதானே இன்றுவரை தப்பு செய்யாமல், செய்து விட நினைக்காமல் கூடத் தடுத்து வைத்திருக்கிறது? அந்த நாளெல்லாம் அடியோடு மாறிப் போச்சே…! நல்லவங்களா இருந்த காலம் போயி…

வாங்க போவோம்…நேரமாகுதுல்ல…இப்டி ஒரேயடியா நின்னுட்டா எப்படி? வெயில் ஏறிடுச்சி பாருங்க… - அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தார் திருமேனி.

அப்டி என்னதான் சொன்னான் உங்க பையன்…அதை இன்னும் சொல்லலையே? மனசுல போட்டு இப்படிப் புழுங்கிட்டிருந்தீங்கன்னா? உடம்பப் பாதிக்குமாக்கும்…சொல்லித் தொலைங்க….!-சற்று வேகமாய்த்தான் கேட்டு வைத்தார் திருமேனி.

அதச் சொன்னா….ப்பூ…இதுக்குத்தானா…இம்புட்டு இறுக்கம்னு நீங்க சொன்னாலும் சொல்வீங்க…வேண்டாம்….! சிலது நாமளே அனுபவிச்சாத்தான் தெரியும் – மறுதலித்தார் ராகவானந்தம்.

வீட்டோட கிளம்பி உங்க ப்ரதர், சிஸ்டர்லாம் பார்த்திட்டு வந்தோம்னு சொன்னீங்களே……அப்போ நடந்ததா?

எப்படியாவது கிளறி வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயன்றார் திருமேனி.

அதான்…சென்னைக்குப் போயிட்டு வந்ததுலேர்ந்தே மனசு சரியில்லாமப் போச்சு….சொந்தங்களைப் பார்த்து வந்தா சந்தோஷம் இருக்கும்னு சொல்வாங்க…மனசு இலகுவாகும்னு கேள்விப்பட்டிருக்கோம்…இங்க என்னடான்னா தலைகீழா ஆயிப் போச்சு….அதுக்குக் காரணம் நம்ம பயபிள்ளதான்….

அவுங்க முன்னாடி வச்சு ஏதும் எதிர்த்துப் பேசிட்டானா?

அப்படின்னாலும் பரவாயில்லையே…? என்னடா அப்பாவையே எதிர்த்துப் பேசுற?ன்னு அவங்களே கேட்டுட மாட்டாங்களா? பதில் சொல்ல முடியாமே என் முகத்தைப் பார்த்து அவுங்களே கள்ளச் சிரிப்புச் சிரிக்கிற அளவுக்கு ஆயிப் போச்சு….ஒருவகைல பார்த்தா இவன் பேசினதுல அவுங்களுக்கும் ஒரு திருப்தி இருந்திருக்கும்.. அதான் உண்மை….

இதெல்லாம் மனுஷ இயற்கைய்யா…விட்டுத் தள்ளு…இப்படி எத்தனையோ நம்மளோட அன்றாட வாழ்க்கைல நடக்கும்….எல்லாம் கடந்தும் போகும்…நாளாக ஆக அத்தனையும் மறந்தும் போகும். ஒவ்வொருவரா மறைஞ்ச பின்னாடி எதுவுமே மிஞ்சாது கடைசில…அதுதான் யதார்த்தம்…வீட்டுலயும் சரி, வெளிலயும் சரி…ஒருத்தரோட மனசைப் புண்படுத்தாதவங்க யாருதான்னு நினைக்கிறீங்க….? அடுத்தவனச் சங்கடப்படுத்தாதவன்தான் யாரு இந்த உலகத்துல?  ஒரு பயலுமில்லே…எல்லா மனுஷனும் சராசரிதான். எல்லாமும் பேசினவன்தான் நல்லதும் கெட்டதுமா…! …ஆயிரம் புஸ்தகத்தப் படிச்சிருப்பான்…ஆனா சட்டுன்னு கோபப்பட்டுடுவான்…வார்த்தையை விட்ருவான்…அந்தப் படிப்பு அவனுக்குத் தந்த பக்குவம் அவ்வளவாத்தான் இருக்கும். தான்தான் பெரியவன்னும், கரெக்டானவன்னும், அறிவாளின்னும்  நினைச்சிப்பான்.  படிப்பு வேறே…உலக அனுபவங்கிறது வேறே…அதனாலதான் ஆயிரம் புஸ்தகத்தப் படிச்சவன விட, ஆயிரம் நிலத்தை உழுதவன் பெரியவன், அனுபவஸ்தன்னு மூத்தவங்க சொல்லி வச்சாங்க…! அவனோட அனுபவம்தான் மதிக்கத்தக்கதுன்னு சொல்வாங்க…! உங்க பையனுக்கு சின்ன வயசுதானே…ஏதோ சொல்லிட்டான்…அவ்வளவுதான்…! ஒன்றைச் சொன்னா அது இப்படியெல்லாமும், அர்த்தப்படும், பாதிக்கும்ங்கிறது அறியாத இள வயசு. நாமதான் ஒதுக்கித் தள்ளணும்…..! அதான் பெரியவங்களான நம்மளோட பரி பக்குவம்…!

என் முன்னாடியும் எம் பொண்டாட்டி முன்னாடியும் கூடச் சொல்லியிருந்தாப் பரவால்லியே…ஒரு மூணாமத்தவங்க முன்னாடில்ல சொல்லிட்டான்…அதுதான வயித்தெறிச்சலா இருக்கு.. ச்சே…இவனுங்களுக்காக இத்தனை வருஷம் பாடாப் பட்டு நாய்ப்பிழைப்புப் பிழைச்சு என்னடா புண்ணியம்னுல்ல மனசு புழுங்குது..! வெறுத்துப் போச்சுய்யா…! ஒரு தேர்டு பெர்சன் முன்னாடி அப்படி வார்த்தையை விடலாமா? மகாத் தப்பில்ல…அது தெரிய வேண்டாம்? இவிங்க என்ன படிச்சு என்ன செய்ய?

உங்க தங்கச்சி ஃபேமிலி தேர்டு பெர்சனா? உற்றார், உறவினர், சுற்றத்தார்னு சொல்லியிருக்காங்க…சுற்றத்தார் முன்னாடிச் சொல்லியிருந்தா நீ இவ்வளவு வருத்தப்படுறது நியாயம்…! உங்க தங்கச்சி முன்னாடிதான…விடுங்க…விட்டு ஒதுக்குங்க…எல்லாத்தையும் மேல போட்டுக்காதீங்க…அனுபவமில்லாத சின்னப் பையன் அவன்…சொல்றது ஒரு பொருட்டா? …அத்தோட விடுங்க…பிடிச்சுத் தொங்கிட்டே இருக்காதீங்க…!

கூட்டுக் குடும்பமாவா இருக்கோம்? வருஷக் கணக்கா தனிச்சிப் போனவங்க, தொடர்பே இல்லாம இருக்கிறவங்க… தேர்டு பெர்சன் மாதிரிதானே? மனசு கேட்கமாட்டேங்குதேய்யா…! எப்டி விடுறது? எனக்கு எல்லாமே எங்கம்மாதான்ங்கிறான்யா அவன்…! என்னையும் வச்சிக்கிட்டு?  என் தங்கச்சி முன்னாடி, மாப்பிள்ளை முன்னாடி வச்சு என் முகத்தைத் திரும்பிப் பார்க்காமே, என்னா தைரியமாச் சொல்றான்ங்கிறே? நொறுங்கிப் போய்ட்டன்யா நானு…! – திருமேனி அதிர்ந்து போய்ப் பார்த்தார் அவரை.

இந்த ஒத்த வார்த்தைல, மொத்தக் குடும்பத்துல என் மதிப்பையே சுக்கு நூறாக்கிட்டான்யா அவன்? அதுதான் தாள மாட்டேங்குது….எனக்கு…!! வாய்க்கு ருசியாச் சமைச்சுப் போட்டதைத் தவிர வேறென்ன செய்தா அவ?  பெத்துப் போட்டவளுக்குத்தான், தூக்கிச் சுமந்தவளுக்குத்தான் முதல் மரியாதையா? இத்தனை வருஷமா  அத்தனையும் பார்த்துப் பார்த்து  அலையா அலைஞ்சு, ஓடி ஓடிச் செஞ்சவன் நானில்ல? ஒரு நொடில கசக்கி எறிஞ்சிட்டானேய்யா…? என்னா அநியாயம்ங்கிறே? ச்சே…! நன்றி கெட்ட உலகம்யா இது…! கேட்டம்னு வையி…அம்மாதானப்பா தூக்கிச் சுமந்து பெத்தாங்க…நீயா பெத்தன்னுகூடக் கேட்பானுங்க…! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு தாயாரத்தான முதல்ல வச்சிருக்காங்க…! ரெண்டுமே தெய்வம்தான்ங்கிறது ரெண்டாம் பட்சம் போல்ருக்கு!!

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்…அவனை வெல்ல வைத்து என்னைக் கொன்று விட்டதோ? அவனுக்கு வெல்லும் சொல் எனக்குக் கொல்லும் சொல்லாகிப் போனதா?

அப்படியா சொன்னான்?  என்றார் திருமேனி. இப்போதுதான் அவரே அதிர்ந்ததுபோல் இருந்தது.  ராகவானந்தத்தின் முகத்தையே ஆதங்கத்தோடு பார்த்து  கண் கொட்டாமல் நின்றார். இதுக்கு பதில் இருக்கா என்ன? என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.

நட்ட நடு ரோட்டில் அவர்கள் அப்படி ஸ்தம்பித்து நின்றிருந்தது ரொம்பவும் வித்தியாசமாய் இருந்தது அவ்வேளையில். சூரியனின் உஷ்ணம் தகித்தது. சாலையோர மரங்களின் கிளைகள் காற்றினை மறந்து அசையாது நின்றன. அவைகளுக்கும் உணர்ச்சி உண்டே..!

அங்கே அந்தக் கணம் முதல் அவர்களுக்கிடையே அமைதி விழுந்து பரவிப் படர்ந்திருந்தது.

அவர்கள் இருவராய் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

                            ------------------------------------

 

27 பிப்ரவரி 2025

 

சிறுகதை             “இயல்பு”   குங்குமம்   02.03.2025   இதழ் பிரசுரம்




 ”உள்ளே வாங்க, சட்னு…” – பல்லைக் கடித்தவாறேதான் திண்ணை வாயிலில் நின்று கூப்பிட்டாள் மாலினி.

      கையில் எடுத்திருந்த உலர்ந்த துணிகளைப் பக்கத்து வீட்டு காம்பவுன்ட் உட்பகுதிக்குள் போட்டு விட்டு விருட்டென்று வீட்டுக்குள் நுழைந்தேன்.

      என்ன? என்ன? எதுக்கு இப்டி அவசரமாக் கூப்பிட்டே?

      ம்ம்ம்….பொங்கல் திங்கறதுக்கு…!

      போச்சு, அதுக்குள்ளே கோபம் வந்திருச்சா…? விஷயத்தைச் சொல்லு…

      நீங்க என்னா, பக்கத்து வீட்டுத் துணியையெல்லாம் தொட்டு எடுத்திட்டிருக்கீங்க…? அசடு மாதிரி…?

      எடுத்திட்டிருக்கீங்க…என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அசடு, சற்று அதிகம்தான்.  போகட்டும், கட்டின பெண்டாட்டிதானே…ஒரு வார்த்தை கூடச் சொல்ல உரிமையில்லையா? சொல்லப் போனால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமலேயே அசடான தருணங்கள் எத்தனையோ? இதிலென்ன பிரித்துப் பார்க்கக் கிடக்கிறது?

      மாடில உலர்த்தப் போட்டிருக்காங்க…அது பறந்து நம்ம வீட்டுப் பக்கம் விழுந்திருக்கு…எடுத்துப் போட்டேன்…இதிலென்ன தப்பு?

      மாடில அப்டி கல்லைப் பாரமா வச்சு உலர்த்தாதீங்க…இந்தப் பக்கம் பெருக்கி சுத்தம் செய்ய வர்றப்போ காத்தடிச்சு தலைல விழுந்திடுச்சின்னா சங்கடம்னு எத்தனையோவாட்டி அவுங்ககிட்டே சொல்லிட்டேன்… கேட்குறாப்புல இல்லை….கொடில உலர்த்துற துணிகளுக்குக் கிளிப்பும் போட மாட்டேங்குறாங்க…இதுல நீங்க வேறே வசதியா துணிகளை  எடுத்துப் போடுறீங்க…ரொம்ப நல்லதாப் போச்சுன்னு விட்ருவாங்க….வேணும்னா வந்து எடுத்துக்கட்டுமே…

      வந்து எடுக்கணும்னா, ரோட்டுப் பக்கமா வந்து, நம்ம வீட்டு கேட்டைத் திறந்து, பர்மிஷன் கேட்டு, உள்ளே வந்து எடுக்கணும்…எதுக்கு இவ்வளவு சிரமம்…போகுது விடு….

      அப்போ தினமும் எடுத்துப் போடறேங்கிறீங்களா?

      போட்டா போச்சு….ஒரு உதவிதானே…கல்லு வைக்காத துணிக காத்துல பறந்து விழுகுது…அப்டி விழுந்திருக்கோன்னு அவுங்க தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நாம எடுத்துப் போட்டுட்டா பிரச்னை முடிஞ்சிது பாரு…

      ரொம்ப சமத்து…உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்தையே கிடையாது…அவ்வளவுதான்…

      இதிலென்ன விவஸ்தை கெட்டுப் போச்சு…? உதவி செய்றது தப்பா?

      உதவிங்கிறது கேட்டு செய்றது…இது நல்லால்லியே….

      உனக்கு நல்லால்லே…எனக்கு அப்டி ஒண்ணும் தோணலை…அவுங்கவுங்க மனசைப் பொறுத்த விஷயம்…

      அந்தம்மா பாவாடை, ரவிக்கைன்னு வித்தியாசம் பார்க்காம எடுத்துப் போடுவீங்களாக்கும்….போதாக்குறைக்கு நம்ம வீட்டுக்கு வர்ற கேபிள் வயர்லயும் உலர்த்துறாங்க…மாடில கைக்கு வாகா எதெது தெரியுதோ அங்கெல்லாம் துணிகளைப் போட்டுடுவாங்க போலிருக்கு…உள்ளாடைகளெல்லாம் வீட்டுக்குள்ளே உலர்த்தணும்னு தெரிய வேண்டாம்? இப்டியா ஊர் பார்க்கிறமாதிரிப் போடுறது? அவுங்க மனசுக்கு அசிங்கமாத் தெரிலன்னு அர்த்தம்…

      நீயே நா சமீபத்துல சொன்ன பின்னாடிதானே அப்டிச் செய்ய ஆரம்பிச்சே…? ராத்திரி பாரா போகுற போலீஸ் லட்டியால கேட்டுக்கு மேலே  கொடியைத் தூக்கிப் பார்த்திட்டுப் போறான்னு அவன் சந்தேகத்தைச் சொன்ன பின்னாடிதானே உனக்கே பயம் வந்தது?

      அவன் செய்திட்டா? அது சரியா? வீட்டுக்குள்ளதானே காம்பவுன்ட் உட்பக்கமா உலர்த்தப் போட்டிருக்கோம்? தெருவுலயா துணி உலருது சந்தேகப்படுறதுக்கு?

      போலீஸ்காரங்களே அப்டித்தான். அவனுக்கு சந்தேகமாத் தோணினா நோண்டாம விடமாட்டான்….

      போதும் அபத்தப் பேச்சு…இனிமே துணி எடுத்துப் போடுறதெல்லாம் நீங்க செய்யாதீங்க…பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு பார்த்தாங்கன்னா அசிங்கம்…என்னமாவது தப்பா தோணும்…இந்தாளுக்கு வேறே வேலையே இல்லையான்னு நினைப்பாங்க…சிவனேன்னு வீட்டுக்குள்ள கிடக்க மாட்டீங்களா?

      சிவனேன்னு நான் எங்க கெடக்குறது…அந்த செவன்தான நம்மள இந்தப் பாடுபடுத்திறான்….

      போச்சு…சினிமா வசனம் பேச ஆரம்பிச்சாச்சா….அதான் உங்களுக்கு எதுக்கும் விவஸ்தையே கிடையாதுன்னு முதல்லவே சொன்னேன்…யாரு என்ன நினைச்சா உங்களுக்கென்ன? பொழுது போகணும் உங்களுக்கு…அதுக்கு எதையாச்சும் செய்திட்டே இருக்கணும்…அவ்வளவுதான்…எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாதுங்கிறதெல்லாம்தான் கிடையாதே….

      யாரு என்ன நினைச்சா என்ன? அடுத்தவன் இதை நினைப்பானோ, அதை நினைப்பானோன்னு எல்லாம் நாம தயங்கிட்டேயிருந்தா இந்த உலகத்துல எதையுமே செய்ய முடியாது…எதுத்தாப்ல அப்டி நினைக்கிறதா நீ சொல்றவங்களுக்குக் கூடத்தான் நான் உதவுறேன்…வித்தியாசமா பார்க்கிறேன்…எதோ என்னாலான உபகாரம்…அவ்வளவுதான்…

      உபகாரம் செய்றதையும் சந்தேகப்படுறமாதிரி செய்யக் கூடாது….தெளிவாச் செய்யணுமாக்கும்…

      நீ எதைச் சொல்றே? புரியல எனக்கு…

      எதிர் வீட்டுல அவர் ஊர்லர்ந்து வந்தவுடனே தபால்களைக் கொண்டு கொடுத்தீங்களே….அப்போ நா சொன்ன மாதிரிச் செய்தீங்களா? செய்யலியே?

      இதிலென்னடி இருக்கு…அவர் என்ன நம்மளைச் சந்தேகமா படப்போறார்? அதான் தபாலோட தபாலாக் கொடுத்திட்டு வந்திட்டனே…!

      கொடுத்திட்டீங்க சரி, அதுல அந்த ஒரு கவரை அட்ரசைப் பார்க்காமக் கட் பண்ணிட்டேன்னு சொல்லி ஸாரி கேட்டீங்களா? இல்லியே…? நான் சொல்லித் தந்தேன்ல…ஏன் கேட்கலை?

      ஸாரி சொல்லாட்டி என்ன? அவர்தான் ஒண்ணும் கேட்கலியே…அது சாதாத் தபால்தாண்டி….எங்கயோ ம்யூட்சுவல் ஃபன்ட் போட்டிருப்பார் போலிருக்கு…அதுக்கு அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வந்திருக்கு…அவ்வளவுதான்…நமக்கு வந்த தபால்களோட அது இருந்ததுனால வரிசையா நுனியைக் கட் பண்ணும்போது, அதையும் சேர்த்துக் கட் பண்ணிட்டேன்…இதிலென்ன தப்பிருக்கு…

      தப்புக்கு நா சொல்லலை…அந்த விபரத்தை அவர்ட்டச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே…வேணும்னே அவங்க தபாலைப் பிரிச்சுப் படிச்சதா ஆகாதா? தவறுதலா கட் ஆயிடுச்சு. ஸாரின்னு சொல்லியிருக்கலாமில்ல…?

      அம்மா தாயே…ஆள விடு….கொடுத்தாச்சு…முடிஞ்சு போச்சு….ஒரு மாசம் ஓடிப்போச்சு…இப்பப் போய் இத நீ நோண்டாத…அவரே ஒண்ணும் கேட்கலை…நீ இப்பப் பேசறதப் பார்த்தா, அவர் ஊர்லருந்து வந்தவுடனே போயி, அந்தப் பழைய விஷயத்தைச் சொல்லி ஸாரி கேட்டுட்டு  வாங்கன்னுவ போலிருக்கு…நல்லாருக்கு உன் கத…

      இதத்தான் நான் அப்பவே சொன்னேன்….எதுக்கும் உங்களுக்கு விவஸ்தையே கிடையாதுன்னு….விவஸ்தைன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சிக்குங்க…தோணினபடியெல்லாம் இருக்கிறதுங்கிறது அழகில்ல…நீங்க இருக்கிற பிரகாரம் எல்லாரும் உங்களை யதார்த்தமா ஏத்துக்கமாட்டாங்க…புரிஞ்சிக்குங்க…

      ஆரம்பிச்சிட்டியா பழையபடி….இல்லாட்டிப் போகட்டும்…நீ நிறைய விவஸ்தையோட இருக்கேல்ல…அது போதும்….

      சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார் நாராயணன்.

      என்ன வாங்கு வாங்குகிறாள்? ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கதையால்ல இருக்கு? அத்தனை நேரம் பேசியதில் ஏற்பட்ட அயர்ச்சி, கண்மூடி ஆசுவாசப்பட வைத்தது. கண்களை மூடினாரோ இல்லியோ அந்த இன்னொரு விஷயம் உடனே விழித்துக் கொண்டது. இப்படி தூபம் போட்டால்?

      அவர் பார்வை மேஜையின் மேல் சென்றது. எதிர்வீட்டுக்காரருக்கு என்று வந்த தபால்கள். வாங்கிச் சேர்த்து ஒரு ரப்பர் பேன்ட் போட்டு பத்திரமாய் வைத்திருந்தார்.

      ஸார்…நாராயணன் ஸார்….

      யாரு, ஓ…ராஜாராமா…வாங்க…வாங்க…..உள்ளே வாங்க….

      இல்ல இருக்கட்டும்…ஊருக்குப் போயிட்டிருக்கேன்…இப்ப ஆட்டோ வந்திடும்…கொஞ்சம் வீட்டைப் பார்த்துக்குங்க…சாயங்காலம் மட்டும் வாசல் லைட்டைப் போட்டு, பத்து மணிக்கு அணைச்சிடுங்க….

      ஓயெஸ்…வழக்கமாச் செய்றதுதானே…நான் பார்த்துக்கிறேன்…நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க….பாருங்க…இந்த டார்ச் லைட்டை…நாலு பேட்டரியாக்கும்…ராத்திரி உங்க வீட்டுப் பக்கம் மொட்டை மாடிக்குப் போயி ஒரு சுத்து சுத்திட்டுத்தான் வருவேன்…நீங்க கிளம்புங்க….

      அப்டியே தபாலும்….

      அதான் வாங்கி வச்சிடுவேனே…நா போஸ்ட்மேன்கிட்டயே சொல்லிடுவேன்….எதுத்த வீட்டுத் தபாலை எங்கிட்டக் கொடுத்திடுங்கன்னு…பத்திரமா வச்சிருக்கேன்….

      அதுக்கில்லைசார்…பையனோட பாஸ்போர்ட் வரும் ரிஜிஸ்டர்ல…அத உங்ககிட்டே தரமாட்டேன்னுவான்…அதுக்காகத்தான் இந்த ஆதரிசேஷன் லெட்டர்…என் கையெழுத்துக்கு மேலே உங்க கையெழுத்தைக் கொஞ்சம் போட்டுக்கிடுங்க…அப்பத்தான் அட்டெஸ்ட் பண்ணினதா ஆகும்…இதப் போஸ்ட்மேன்கிட்டக் கொடுத்தீங்கன்னா பாஸ்போர்ட் ரிஜிஸ்டர் தபாலை உங்ககிட்டேக் கொடுத்திடுவான்…ஆளில்லாம ரிடர்ன் ஆயிடுச்சின்னா அப்புறம் சங்கடம்… திரும்ப வாங்குறது கஷ்டம்…அதுக்காகத்தான்…

     

கொஞ்சம் சங்கடப்பட்டுக்கொண்டே போஸ்ட்மேன் சங்குமணி வாங்கிக் கொண்டதை நினைத்துக் கொண்டார்.

      போஸ்ட் மாஸ்டர் என்ன சொல்லுவாரோ, தெரிலயே ஸார்…கொடுத்துப் பார்க்கிறேன்…..நாங்க பாஸ்போர்ட்டையெல்லாம் வேறே யார்ட்டயும் கொடுக்கிறதில்லை…ஆதரிசேஷன் இருந்தாலும்….எங்களுக்கு உத்தரவு அப்டி…!

     

சொல்லிக் கொண்டே தயங்கியவாறே கொடுத்துப் போனார். நல்லவேளை…இன்றுவரை ஒன்றுமில்லை. ஏற்றுக்கொண்டது போல்தான் தோன்றுகிறது.

      வந்திருந்த தபால்களை மீண்டும் ஒரு முறை அடுக்கி சரி பார்த்துக் கொண்டார். மேலே ஒரு ஒன்சைடு பேப்பரைச் செருகி, ”டூ, மிஸ்டர் ராஜாராம்” என்று எழுதி வைத்து விடுவார். மேஜையில் குவிந்துள்ள தன் தபால்களோடு கலந்து தொலைந்து போய்விடக் கூடாது. பயம். நாராயணனுக்கு எதுவும் துல்லியமாகத் தெரிய வேண்டும். எதிலும் குழப்பம் என்பது கூடாது.

      உங்களை மாதிரி ஒருத்தர் அவருக்கு கிடைக்கணுமே? என்றாள் மாலினி.

      உதவி செய்றதுன்னு ஏத்துண்டுட்டோம்னா பர்ஃபெக்டா செய்துடணும்…இல்லன்னா ஏத்துக்கப்படாது….

 

      நல்லா செய்யுங்க…யார் வேண்டாம்னா? அகஸ்மாத்தா ஏற்பட்ட அந்தத் தவறைச் சொல்லிட்டுக் கொடுத்திருக்கலாமேன்னுதான் சொன்னேன்…

 

      மாலினி அன்று சொன்னது உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. இப்பொழுதும் அப்படியே ஒரு தவறு மீண்டும் நடந்து விட்டது. தபால்களைப் பிரிக்கும் பொழுதே எதிர் வீட்டுத் தபால்களையும் தன் தபால்களோடு சேர்த்து வைத்து விடுவான் போலிருக்கிறது. கத்தையாக அப்படியே நீட்டிவிட்டுப் போய்விடுகிறார் போஸ்ட்மேன். அதில் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்க, கத்தரி போடும் போது நுனி சேர்ந்து கட்டாக விட்டது. பிரிக்கும் போது இரண்டு தபால்கள் வாயைப் பிளக்கின்றன. என்னடாவென்று பார்த்தால் ஒன்று அவருடையது. என்ன செய்வார் நாராயணன்.  அடக் கடவுளே…! என்று அலுத்துக் கொள்ளத்தான் முடிந்தது. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார். அதை மனைவியிடம் சொல்வதில்லையென்று. சர்வ ஜாக்கிரதையான முடிவுதான். ஆனால் ராஜாராமிடம் சொல்லியே கொடுத்துவிடுவதென்று. நல்ல முடிவு என்றுதான் தோன்றியது. அதனால் மனதுக்கு நிம்மதியாகிப் போனது.

      குறிப்பாக அந்தத் தபாலை இப்போது கவனமாகப் பார்த்துக் கொண்டார். எதிர்வீட்டில் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். நல்ல இருட்டு. மணியைப் பார்த்தார். ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. வைகைல வந்திருப்பாரோ  என்று நினைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தார்.

      ராஜாராம்தான் கதவைத் திறந்து கொண்டிருந்தார். உடனேயே கொண்டு நீட்ட வேண்டாம். டூ மச் ஆஃப் சின்சியாரிட்டி லீட்ஸ் டு கேயாஸ்….தேவையில்லாமல் மனதில் இப்படித் தோன்றியது. மனிதனுக்கு சிந்தனையே கூடாது. சிந்திக்காத வாழ்க்கைதான் சுகம். எதையும் ஆராயாமல் மேம்போக்காக வாழ்ந்து கழித்துவிட்டால்தான் நிம்மதி. தூண்டித் துளைக்க ஆரம்பித்தால் துயரம்தான்.

      உள்ளே போய் சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டும். பிறகு போகலாம். பத்து மணி நேரப் பயண அசதி இருக்கும்…எண்ணிக் கொண்டே மீண்டும் அறைக்குள் வந்தார். பேசாமல் காலையில் கொடுத்தால் என்ன என்று ஒரு எண்ணமும் வந்தது.

      அவர் வந்துட்டார் போலிருக்கு. போங்கோ…போய் தபால்களைக் கொடுத்திட்டு வந்திடுங்கோ…. – மூக்கில் வியர்த்ததுபோல் வந்து நின்றாள் மாலினி.

      பொறுப்புக்களிலிருந்து விலகுவதற்கு, விஸ்ராந்தியாய் இருப்பதற்குத்தான் எத்தனை மனித யத்தனம். கொடுத்தால்தான் அவளுக்கு நிம்மதி. இல்லையென்றால் ராத்திரி தூங்க மாட்டாள் போலும். கிளம்பினார் நாராயணன்.

      கேட்டைத் திறக்கும்போதே தலையை நீட்டிவிட்டார் ராஜாராம். வாங்க…வாங்க….

      இப்பத்தான் வந்தீங்க போலிருக்கு…இருங்க…இருங்க…டயர்டா இருப்பீங்க….- சொல்லிக்கொண்டே கையிலிருந்த தபால்களை நீட்டினார்.

      அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஏ.ஸி.லதான் வந்தேன். இந்த வெயில்ல எங்க செகன்ட் ஸ்லீப்பர்ல வர்றது…? வெந்து போகும்…..வயசும் ஆயிப் போச்சே…தாங்க முடியாது….

      ஆமாமா…சரி…பாருங்க…நா வர்றேன்…. திரும்பினார் நாராயணன்.

      ஒண்ணுமில்ல, சும்மா வாங்க ஸார்…நீங்க என்ன…? வந்தவுடனே கிளம்புறீங்க?  உட்கார்ந்திட்டுப் போங்க…..

      தவிர்க்கமுடியாமல் உள்ளே நுழைந்து அமர்ந்தார் இவர்.

      என்ன, போன காரியமெல்லாம் முடிஞ்சிதா? ஏதாவது பேச வேண்டுமே என்று ஆரம்பித்தார்.

      முடிஞ்ச மாதிரித்தான். அஸ்தினாபுரத்துல ஒரு அபார்ட்மென்ட்….அட்வான்ஸ் பண்ணியிருக்கு…..அவ்வளவுதான்….

      அஸ்தினாபுரமா? பெயரே வித்தியாசமாயிருக்கு? புராணப் பெயர் போல… அது எங்க இருக்கு மெட்ராசுல?

      குரோம்பேட்டைக்குப் பின்னால வருது ஸார்…எனக்கே இப்பத்தான் தெரியும்….என் பையன் அங்கதான் வாங்கணும்னுட்டான்….நமக்கென்ன…அவன்தான இருக்கப்போறான்னுட்டு நானும் ஓ.கே. ன்னுட்டேன். ஆபீசுக்கு வசதியா, கிட்டக்க இருக்கட்டும்ங்கிறதாச் சொல்றான்…

      அது சரி….அவுனோட வசதிதானே முக்கியம். நாம இங்கே இருக்கப் போறோம். எப்பவாச்சும் போயிட்டு வரப் போறோம்…அவ்வளவுதானே…சரி…ரெஸ்ட் எடுங்க…நான் போயிட்டு வர்றேன்…. – கிளம்பினார் நாராயணன்.

      இருங்க ஸார்…பால் காயுது…ஒரு வாய் காபி சாப்டுட்டுப் போங்க….எனக்கு வந்தவுடனே ஒரு காபி சாப்பிடணும்…அப்பத்தான் மத்த காரியமே ஓடும்….என் ஒய்ஃப் இன்னும் பத்து நாள் கழிச்சிதான் வருவா…பாருங்க டிபன் வாங்கிட்டு வந்திட்டேன்….பத்து மணிக்கு மேலேதான் சாப்பிடுவேன்…..

      ஓ.கே…ஓ.கே….நா இப்பக் காபியெல்லாம் சாப்பிடுறதில்லே. சாயங்காலம் ஒரு காபி. அத்தோட சரி….ராத்திரி காப்பி சாப்பிடாதீங்க…தூக்கம் வராது…அவாய்ட் பண்ணுங்க…வரட்டா…பார்க்கலாம்…

      கொஞ்சம் கூடுதல் பேச்சோ என்று தோன்றிவிட்டது மனதுக்கு. வாசல் வரை வந்தவருக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது வந்த காரியம்.

      அடடே….எதுக்கு வந்தனோ அதைச் சொல்ல மறந்திட்டேன் பாருங்க…அந்தத் தபால்ல ஒண்ணை, தெரியாம என் தபால்களோட சேர்த்துக் கட் பண்ணிட்டேன்….பிறகுதான் தெரிஞ்சிது…ஒட்டிண்டிருந்திருக்கு…கட் ஆனவுடனே பிரிஞ்சி விழறது….ஸாரி…கொஞ்சம் பார்த்துக்குங்க….வெரி ஸாரி…

      சொன்னார். பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினார். அப்படிக் கிளம்பியதே என்னவோ தவறு போல் இருந்தது. பதில் இல்லையே? கொஞ்சம் வந்தவர், திரும்பி நோக்கினார்.  ராஜாராம் அந்தக் குறிப்பிட்ட தபாலை உருவி எடுத்திருந்தார்.

அதான்…அதேதான்…கவனிக்கலை….பார்த்துக்கறேளா…..இவரையறியாமல் வாய் குழறுவது போல் பிரமை.

      அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் திரும்பி நடந்தார். ஒன்றுமே சொல்லவில்லையே? தலை அவரையறியாமல் மீண்டும் திரும்பியது.

      போனவாட்டி கூட இதே போல ஒரு தபால் திறந்துதான் இருந்திச்சி…..

ராஜாராம் சொன்னார்.

      தலையைக் குனிந்தபடியே சொல்லிவிட்டார்.

      கவனித்த இவருக்குச் சுருக்கென்றது. யதார்த்தமாய், சகஜமாய் வந்த வார்த்தைகள்தானா?…இல்லை, எப்படி?

      வீட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார்.

      மாலினி சொல்லும் அந்த விவஸ்தை இருந்திருந்தால் ஒருவேளை புரிந்திருக்குமோ?அது அவள் இயல்பு. வலியச் சொல்வது இவர் இயல்பு. கேட்டு விடுவது  அவரின் இயல்பு போலும்? மனிதரில் எத்தனை நிறங்கள்?

ஆனாலும் நெஞ்சில் எதுவோ தைத்தது போலிருந்தது.  தன் மீதே கழிவிரக்கம் பிறந்தது நாராயணனுக்கு.  

 

                              ----------------------------------

     

                                         

 

உஷாதீபன், எஸ்2. ப்ளாட் 171,172                           ராம் நகர் தெற்கு 12வது தெரு, மேத்தாஸ் அக்சயம்,             மடிப்பாக்கம், சென்னை-600 091. (94426 84188)

13 பிப்ரவரி 2025

ஆவ நாழி 28 ம் இதழ் “காளான்கள்“ சிறுகதை குறித்து -



அரவிந்த் வடசேரி - 

 எழுத்தாளர்கள் உஷாதீபனும் பிரகாஷும் ஆவநாழி வாசகர்களுக்கு பரிச்சயமானவர்கள்தான். தற்பொழுது வெளியாகியிருக்கும் ஆவநாழி இதழ் 28இல் இருவரது சிறுகதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன.




03 பிப்ரவரி 2025

 

சிறுகதை          ஆவநாழி -ஜனவரி-பிப்ரவரி 2025 இதழ் பிரசுரம்


“காளான்கள்…!”





            ஆளாளுக்கு வந்து நின்றார்கள். எங்கிருந்துதான் ஃபோன் எண் கிடைக்குமோ? அதுவும் எட்டுப் பேரில் அவர்களுக்கு நான்தானா கிடைத்தேன்? ஒரு வேளை அந்தம்மா கொடுத்திருக்குமோ? வேறு யார்?

அவர கான்டாக்ட் பண்ணுங்க….! அதுதான் சொல்லியிருக்கும். வேறே வேலை?

            ஆளைத் திருப்பி விடுவதில் கில்லாடி. தன்னால் எதுவும் முடியாதெனில்  கம்முனு இருக்க வேண்டிதானே? அதென்ன எதுக்கெடுத்தாலும் என் ஃபோன் நம்பரக் கொடுத்து பேசுங்கங்கிறது? வேண்டாத வேலை…!.

            ஏம் மேடம்…என்னைக் கேட்காமயே என் ஃபோன் நம்பரை ஊருக்கெல்லாம் கொடுப்பீங்களா? எவனெவனோ வந்து நிக்கிறான்? வர்றவனுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்கிறதா என் வேல? நீங்க ரிடையர்ட ஆனவங்க…நான் சர்வீஸ்ல இருக்கிறவன்…தெரியும்ல…! எதுக்கு இப்டி இழுத்து விடுறீங்க? நான்தான் ஸோல் இன்சார்ஜா இந்த அபார்ட்மென்டுக்கு?

            நா என்ன பண்றது? எவன் சொன்னானோ? இந்த அபார்ட்மென்டுக்கு கழிவு நீர் கனெக் ஷன் கொடுக்கணும்னு? யாருக்குத் தெரியும்? வந்து நிக்கிறான். நான் உடம்பு முடியாதவ…அவனுங்ககிட்ட மணிக்கணக்காப் பேசிட்டிருக்க முடியுமா? நீங்கதான் பேசணும்…! அதான் தள்ளிவிட்டேன்…

            தள்ளி விட்டீங்களா…சர்தான்…? நான்தான் பேசணுமாம்…! எழுதி வச்ச விதியா இது? நானும் தள்ளி விடட்டுமா? எனக்குத் தெரியாது…என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

எனக்கு மட்டும்தான் இது பொறுப்பா…? உங்களுக்கில்லயா? மீதி ஆறு வீட்டுக்காரங்க இருக்காங்களே…அவங்கள்ல யாரயாச்சும் கைகாட்டி விடுறது…நானே கிடந்து மாயணுமா? இல்ல…நீங்கதான் பேசறது…வாயால நின்ன எடத்துல பேசறதுதானே…அதுகூட முடியாதா உங்களால?

உண்மையிலேயே மாய்ந்து கொண்டுதான் இருந்தேன். ஏண்டா இப்டி அபார்ட்மென்ட்ல வீடு வாங்கினோம் என்று, வந்த பின்னால்தான் தெரிகிறது. சொல்லாவொண்ணா சிரமங்கள். ஏதோ மாசா மாசம் மெயின்டனன்ஸ் காசை விட்டெறிந்தோம், அக்கடா என்று கிடந்தோம் என்றிருக்க முடிகிறதா? இருநூறு வீடு, முன்னூறு வீடு என்றிருக்கும் அபார்ட்மென்ட்களில் கூட கேள்விப்பட்டவகையில்  இப்படியெல்லாம் சிரமமில்லை. அங்கெல்லாம் மாதாந்திரப் பராமரிப்புச் செலவே அஞ்சாயிரம் ஏழாயிரம் என்றிருந்ததுதான். ஆனால் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ள ஆளிருந்தது. செக்யூரிட்டி என்று ஒருவன் வேறு இருக்கிறான். அவனை மீறி அங்கு எதுவும் நடந்து விட முடியாது. புது ஆள் ஒருத்தன்  கூட அவன் அனுமதியின்றி உள்ளே காலெடுத்து வைத்துவிட முடியாது. வாசலில் இருக்கும் ரிஜிஸ்டரில் எந்த ஃப்ளாட்டுக்குப் போகிறோம் என்று குறிப்பிட்டு கையொப்பமும் ஃபோன் எண்ணும் எழுதியாக வேண்டும்.  எல்லா கண்டிஷனும் உண்டுதான். ஆனால் காசைக் கொடுத்தால் காரியம் முடிந்தது. இம்மாதிரி நொச்சு இல்லை…!  எட்டு வீட்டுக்கும் குட்டு வாங்குறது நானா?

இங்கே தொட்டதுக்கெல்லாம் பிரச்னைதான். வந்த ஒரு வருடம் நன்றாயிருந்தது. அந்த முதல் வருடம் லாரித் தண்ணீர் ஃப்ரீ. சம்ப்ல தண்ணி இல்ல…என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்…அடுத்த ஒரு மணி நேரத்தில் நிரம்பிவிடும்.

சூப்பர்வைசரின் தீவிரக் கண்காணிப்பு. அவரென்ன நம் அபார்ட்மென்டின் சூபர்வைசரா? கிடையாது…அந்த பில்டரின் சூப்பர்வைசர். பில்டர் சம்பளத்திற்கு வைத்திருக்கும் ஆள்.  அடுத்த வேலை ஆரம்பித்தவுடன் ஆளைத் தேடணும்.

சார்…இனிமே நீங்கதான் லாரிக்கு புக் பண்ணிக்கிறணும். – முதல் முறையாக அவர் இப்படிச் சொன்ன போது டமால் என்று குண்டு போட்டது போல் இருந்தது. இதென்ன புதிய தலைவலி?

ஆமா சார்…ஒரு வருஷம் முடிஞ்சு போச்சில்ல…அக்ரிமென்ட் எடுத்துப் பாருங்க…!

ரொம்ப சந்தோஷம்….என்றேன்.  அது கிடக்கட்டும்…இதை ஏன் என்னிடம் சொல்கிறான்? அப்படி அவனுக்கு உணர்த்தியது யார்? எல்லாம் ரகசியமாக நடக்கிறதோ? சதி வேலை பண்ணுகிறார்களோ? ஆரம்பத்திலிருந்தே ஆளை டெசிக்னேட் பண்ணினது போல…! சர்வீஸ் சார்ஜ் போட வேண்டிதான் இனிமே…! மாசம் மூவாயிரம் வேணும் எனக்கு…ஓசில பார்க்க முடியாது….! சொன்னால் என்ன? இல்லன்னா ஆளாளுக்கு மூணு மாசம் பார்க்கட்டும்…அதானே பேச்சு?

எட்டு வீட்டில் ஆறு வீட்டு ஓனர்கள் வெளிநாட்டில். இருப்பது நானும் அந்த மேடமும்தான். அப்போ அதுதானே சொல்லியிருக்கணும்…மத்தவனெல்லாம்தான் முகம் கூடப் பார்த்ததில்லையே? எல்லாம் வாட்ஸப்பில் பேசிக் கொண்டதோடு சரி. எவன் மூஞ்சியும் தெரியாது. அப்பப்போ தோன்றி மறைவார்கள். அவ்வளவுதான்.

அது எப்படியோ தொலையட்டும். இப்போ மூஞ்சியைப் பார்த்து என்ன செய்யப் போறோம்? அவனவன் காசக் கொடுத்தாச் சரி. நமக்குத் தேவை அது ஒண்ணுதான். அதுக்கே பாடு என்றால்? எதைச் சொல்வது, எதை விடுவது? பொங்கிப் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறதுதான். செய்து மாளலையே…! தண்ணி இருக்கா…மோட்டார் ரிப்பேரா…ஏர் லாக்கா…லைட் எரியலையா…ஒட்டடை அடைஞ்சு போச்சா..செப்டிக் டாங்க் நிறைஞ்சு போச்சா…கூட்டுற பொண்ணு வரல்லியா…மொட்ட மாடி பெருக்கினாங்களா…கேட் திறந்து கிடக்கா…லிப்ட் ஒர்க் ஆகலையா….அன்யூவல் மெயின்டனன்ஸ் போட்டாச்சா…மாடிக் கதவு பூட்டியிருக்கா…எங்கயாச்சும் சாக்கடை லீக் ஆகுதா…? இப்படி எத்தனை அனர்த்தங்கள்? எவனாவது கண்டுக்கிறானா? ஒவ்வொருத்தனும் மும்மூணு மாசம் பார்க்கணும்ங்கிறதுதானே பேச்சு…? அதை ஸ்டிரிக்டா இம்ப்ளிமென்ட் பண்ணாததுதான் தப்பாப் போச்சு…!

…வாடகைக்கு வர்றபோதே எழுதி வாங்கியிருக்கணும்…இதுக்கெல்லாம் சம்மதிக்கிறேன்னு…அதச் செய்யாம விட்டதுதான் பெரிய தப்பு…எப்டியும் காரியம் ஆயிடுதுல்ல…அதான் அவனவன் கம்முனு கிடக்கான்…யாரோ செய்துக்கிறாங்க…நமக்கென்ன வந்தது? அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல போல இருக்கானுங்க…?

எவன் எப்ப வர்றான்…எப்பப் போறான்…எவனுக்கும் தெரியாது. எப்பப் பார்த்தாலும் வீடுகள் பூட்டினமேனிக்கே கிடந்தா? சரி…ஒழுங்கா காசையாவது கொடுக்கணும்ல? அதுவும் கிடையாது. ஆயிரத்தெட்டுக் கேள்வி மட்டும் நீட்டி முழக்கிக் கேட்கத் தெரியுது.

எப்டி கார் பார்க்கிங்குக்கு இவ்வளவு கரன்ட் சார்ஜ் வருது? ரெண்டு மாசத்துக்கொருதரம் இதுக்குன்னு ஐநூறு, அறுநூறுன்னு அழ முடியுமா? இத்தனைக்கும் என்கிட்டக் காரே கிடையாது. டூ வீலர்தான்…..நான் ஏன் கட்டணும்? அறுநூறு? ரெண்டே லைட் போட்டாப் போறாதா? எதுக்கு இந்தப் பக்கம் அஞ்சு அந்தப்பக்கம் அஞ்சுன்னு பத்து லைட்டு? பக பகன்னு எரியணுமா? இங்கென்ன விழாவா கொண்டாடுறோம்? -கேள்வி மட்டும் வாய் கிழியக் கேட்பானுங்க…! பாதுகாப்பப் பத்தி எவனுக்கும் அக்கறையில்ல…

அப்போ டூ வீலரக் கொண்டு ரோட்டுல நிறுத்து….சொல்ல முடியுமா? கார் பார்க்கிங்கிற்கு மேலேதானே வீடு…அது தெரிந்துதானே குடி வந்தது? கார் பார்க்கிங்கில் டூ வீலர் நிறுத்தி அது திருடு போகாமல் இருக்க வேண்டும்தானே? பாதுகாப்பாய் காருக்குப் பின்னால் மறைவில் இருப்பதுபோல் கொண்டு நிறுத்தத் தெரிகிறதே…காசு மட்டும் கொடுக்கக் கை நீளாதோ? எவனும் அத்துமீறி மேலே வந்து கதவத் தட்டக் கூடாதுன்னுதானே லைட் போட்டு வைக்கிறது? வெளிச்சம் இருந்தா ஒரு பயம், தயக்கம் எவனுக்கும் இருக்கும்தானே?

இவனுக்கு வேறொரு ஞாபகம் வந்தது. ஊரில் திருட வரும் முன் தெரு லைட்டை உடைப்பார்கள். இருட்டாக்குவார்கள். அது போல் எதுவும்……?

மாடில உன் வீட்டுக்குள்ள கொண்டு வண்டியை நிறுத்திக்கோ…!செய்தாலும் செய்வாங்க…லிஃப்ட் அந்த அளவுக்குப் பெரிசா இருந்தா…ஒரு அளவுக்கு மேலே லிஃப்டும் லோடு தாங்காதே…!  ஸ்டீல் பீரோவக் கொண்டு அதுல ஏத்தி, லிஃப்ட் நின்னு போகலையா? தண்டம் பொதுவாத்தானே அழுதது? கதைய எடுத்து விட்டா…எவனுக்கும் ஈயாடாது மூஞ்சில…!

இந்த எடத்துல மட்டும் லைட் போடாதீங்க சார்…பளீர்னு எரிஞ்சு இத்தன வண்டி நிக்குது இங்க…எதையாச்சும் ஒண்ணைத் தள்ளிட்டுப் போன்னு நாமளே சொல்ற மாதிரி இருக்கு…-நீட்டி முழக்கி இது மட்டும் அக்கறையாய்ச் சொல்லத் தெரிகிறது. இருட்டுல இருந்தா திருடு போகாதாம். அதுவும் கார் மறைத்து நிற்கிறதாம். காருக்கு அந்தப் பக்கம் வந்து திருட மாட்டானாம்…அட மட ஜென்மமே…! இருட்டுலதானடா ஈஸியாத் திருடுவான்…இது கூட உன் மண்டைல உறைக்காதா? ரெண்டு மாடி ஏறி, மொட்ட மாடி போய் லிப்ட் ரூம் கதவத் திறந்து பாட்டரியைத் திருடிட்டுப் போயிருக்கானே பக்கத்து அபார்ட்மென்ட்ல…! அவ்வளவு சாவகாசமாத் திருடினவன், இங்க தரைல நிக்கிற வண்டியைத் தள்ளிட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும்? வண்டி லாக்கெல்லாம் ஒரு பொருட்டா திருடுறவனுக்கு?

பெட்ரோல உறிஞ்சிட்டுப் போன கதை தெரியுமா உனக்கு? புத்தம் புது டயர மட்டும் கழட்டி எடுத்திட்டுப் போனத அறிவயா?  வாங்கிப் பத்து நாள் கூட ஆகல…என் வண்டிலதான்….கம்ப்ளெயின்டா கொடுக்க முடியும்…?

அதெல்லாம் இங்க சர்வ சாதாரணம் சார்…நீங்கதான் உங்க வண்டிய பத்திரமா பார்த்துக்கணும்…வாட்ச்மேன் போடுங்க…சிசிடிவி காமிரா வைங்க…ஆதாரம் கொண்டு வாங்க…முயற்சி பண்ணுவோம்….காரயே தள்ளிட்டுப் போயிடுறானுங்க…நீங்க டூ வீலரப்பத்திச் சொல்ல வந்திட்டீங்க…? இங்கருந்து கடத்திட்டுப் போன காருக…மண்டபம் மணல் வெளில இஞ்ஜினில்லாம வெறும் பாடியா அம்மணமாக் கிடந்த கதை எத்தனை தெரியுமா? நம்ம ஒடம்புக்கு நாம எவ்வளவு பாதுகாப்போ அதுபோலதான் நாம வச்சிருக்கிற சாமான்களுக்கும்…இன்னைக்கு ஒலகம் அதான் சார்…உபதேசம்தான்..

நல்ல போலீஸ்…..-ஒரு சல்யூட் போட்டு விட்டுத் திரும்பினேன். அதைக் கூட அவன் பதிலுக்குத் தரவில்லை. அம்புட் டு அலுப்பு…!

யாருங்க நீங்க…? – எதிரே நின்ற இளைஞனிடம் கேட்டேன். வயது இருபதிலிருந்து இருபத்தைந்திற்குள் இருக்கும். தலைமுடியை ஒரு சைஸாக வெட்டியிருந்தான். இத்தனூண்டு தலைக்குள் என்னவெல்லாம் ஜாலம்? எப்படி எப்படியோ முடி வெட்டிக் கொள்கிறார்கள் இப்போதெல்லாம்…பார்க்கவே நன்றாயில்லை. ஒரு பையன் அவனிஷ்டப்படி முடி வெட்டிக் கொண்டு அவன் அப்பன் முன்னால் போய் இன்று நிற்க முடியாது. அத்தனை கோரம்…! இடது புறம் ஒழுங்காக நேர் வரிசையில் வகிடெடுத்து ஒதுக்கி வலது புறத்தைச் சற்றே தூக்கிப் படிய வாரி விட்டுக் கொண்டு நெற்றியில் விபூதிக் கீற்றோடு லட்சணமாய் வலம் வந்த காலமெல்லாம் போயிற்று. இப்போதெல்லாம் முடியை எங்கே சீவுகிறார்கள்? கையால் விரல்களை உள்ளே செலுத்தி ஒரு கோது கோதுகிறார்கள்.  படிந்ததா, படியவில்லையா என்கிற கேள்வி எழவில்லை. அது படியாததுபோல் பம் பம்மென்று அவர்களும் படியாதவர்களாய்த்தான் இருக்கிறார்கள். அடியாத மாடு படியாது…!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பது முதுமொழி. இப்போது எள்ளும் வகையில் இருந்தாலும் எள்ளாமை வேண்டும். ஜாக்கிரதை..!

நான் இந்த ஏரியா நற்பணி மன்றத் தலைவர் சார்…..என் பேரு உபேந்திரன்.

சரி…உங்களுக்கு என்ன வேணும்…?

உங்க அபார்ட்மென்ட்ல கழிவுத் தண்ணி ரோட்டுல போகுது சார்…அது கூடாது….கவுன்சிலர் சொல்லச் சொன்னாங்க…

கவுன்சிலரா? யாரு அந்தம்மாவா? இந்தப் பக்கமே அவங்க வந்ததில்லையே. நாங்க பார்த்ததேயில்லையே?

ஆமா சார்….அவங்க சொல்லித்தான் நான் பார்த்துக்கிட்டிருக்கேன்…-இவன் சொல்வது உண்மையா? அல்லது புருடாவா?

மழை பேய்ஞ்சா இந்த அபார்ட்மென்ட் சுற்றிலும் டெயில் என்ட் மாதிரி மூணு பக்கத்துத் தண்ணியும் சேர்ந்து தேங்கிடுது…எங்க அபார்ட்மென்ட் தண்ணிலயே மிதக்குது…அதுக்கு ஆயிரம் தடவை சொல்லியாச்சு…ரோட்ட உசத்துங்கன்னு…செய்யல…இதச் சொல்ல வந்திட்டாங்களா…?

அதை பாதாளச் சாக்கடை, தண்ணிக் குழாய்…இதெல்லாம் எரெக்ட் பண்ணின பின்னாடி சரி பண்ணிடுவாங்க சார்…அதுவரைக்கும் பொறுத்துக்குங்க….

வந்ததுலர்ந்து பொறுத்துக்கிட்டுத்தானே இருக்கோம். பொறுத்திட்டிருக்கிறவங்களுக்கு அது மட்டும்தான் சொத்து…எல்லாத்துக்கும் பொறுமையா இருக்கிறது…சகிச்சிக்கிட்டுக் கிடக்கிறது. ஜனங்களே அதுக்குப் பழகித்தானே கிடக்காங்க…! எல்லாக் கஷ்டங்களும் அவங்களுக்குத்தான்…!

ஓகே சார்….இதுக்குச் சொல்லுங்க….என்ன செய்யலாம்னு….?

அது அப்பப்போ ஒவ்வொரு சதுரமாப் பார்த்து, சோக் பிட் அடைப்பு எடுத்து நாங்களே சரிபண்ணிக்குவோம்….காமன் சோக்பிட்ல இப்போத்தான் லேசாக் கசிய ஆரம்பிச்சிருக்கு…அந்தந்த வீட்டுக்குன்னு உள்ள சின்ன சைஸ் சோக் பிட்டுகளைச் சுத்தம் பண்ணினோம்னா அந்தப் பொது சோக்பிட் தானே சரியாயிடும். அத நாங்க பார்த்துக்கிடுறோம்…கவுன்சிலருக்குத் தெரியும்….எங்க தண்ணி எல்லாமே இந்தத் தரைக்கடிலயே லூஸ் டாங்க் இருக்கு…அதுல இறங்கி பூமி உறிஞ்சிடும்…

அதுக்கில்ல சார்…கார்ப்பரேஷன் ஆட்கள் வந்தா ஃபைன் பண்ணுவாங்க…இருபதாயிரம், இருபத்தஞ்சாயிரம்னு தண்டம் விதிச்சிடுவாங்க… நீங்க உடனடியா அதைச் சரிபண்ணிடணும்…தண்ணி தேங்கக் கூடாது. கொசு அடையுது…டெங்கு பரவுதுன்னு கார்ப்பரேஷன்ல ஸ்டிரிக்டா இருக்காங்க….தெனமும் ரௌன்ட்ஸ் வர ஆரம்பிச்சிருக்காங்க…பார்த்தாங்கன்னா ஆபத்து….ராத்திரி வேன்ல மருந்தடிச்சிட்டுப் போறாங்களே…பார்க்கிறீங்கல்ல…..?

சரிங்க…அதான் சொல்றேன்ல…நாங்களே சரி பண்ணுக்குவோம்னு…நீங்க கிளம்புங்க…

போறதுக்கு நான் வரல்ல சார்….சரி பண்றதுக்குத்தான் வந்திருக்கேன்….! எங்களக் கேள்வி கேட்பாங்க….! பதில் சொல்லியாகணும்….

நான் அவனை உற்றுப் பார்த்தேன். இவன் யார் இதைக் கேட்க….? நற்பணி மன்றம் என்றால் அது கார்ப்பரேஷன் சார்ந்ததா? அரசுத் தரப்பில் அப்படி ஒன்றுமில்லையே? கேள்வி கேட்பாங்கன்னு சொல்லி என்னை பயமுறுத்துறான்? கத்துக்கிட்டுத்தான் வர்றானுங்க…! அஃபிஷியல் இன்ஸ்பெக் ஷன் போல்ருக்கு? ஆளாளுக்குக் கிளம்பிட்டானுங்களா?

சரி பண்றதுன்னா…? நீங்களே பண்ணிக் கொடுக்கிறீங்களா….?  கார்ப்பரேஷன் கான்ட்ராக்டா…?

ஆமா சார்….கான்ட்ராக்டுன்னு இல்ல…ஆனா நாங்கதான் பண்ணுவோம்….நாங்க ரெண்டு மூணு க்ரூப் இருக்கோம் இந்த ஏரியாவுல…எங்ககிட்டத்தான் சொல்லியிருக்காங்க….எல்லாத்தையும் சரி பண்ணனும்னு…!  எங்க டார்கெட் அது…!

அடேங்கப்பா…? டார்கெட் வேறே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா? எல்லாம் ஸ்பீடுதான்.. யாரு…? கவுன்சிலரா? கார்ப்பரேஷன் ஆளுக வந்து செய்யமாட்டாங்களா? அங்கதான சொல்ல முடியும்….?எழுதிக் கொடுத்துக் கேட்க முடியும்…செய்து கொடுங்கன்னு….? அங்கதான பணம் கட்டவும் முடியும்?

அவங்க செய்ய டைம் எடுக்கும் சார்…ட்ரெயினேஜ் பைப் இறக்கி, அதுல வீட்டுக்கு வீடு கனெக் ஷன் கொடுத்து….அதுக்கு ரொம்ப நாளாகும்….அது தனி கான்ட்ராக்ட்…..

ஓ.கே…அப்போ நீங்க செய்றது? ஓப்பன் கான்ட்ராக்டா? -எனக்கே சிரிப்பு வந்தது என் கேள்விக்கு. அடக்கிக் கொண்டேன்.

இது தனி சார்….நாங்களே ஆள் வச்சிருக்கோம். சொன்னீங்கன்னா ஒரே நைட்ல செய்து முடிச்சிடுவோம்…உங்களுக்குப் பிரச்னை எதுவும் வராது…..

என்ன சொல்கிறான் இவன்? ஒரே நைட்லங்கிறான்…எதுக்கு நைட்ல செய்யணும், பகல்லயே செய்ய வேண்டிதானே? யாருக்கும் தெரியாமச் செய்யணுமா? அப்போ அது தப்பாச்சே?  பிரச்னை வராதா? காசு கொடுத்து செய்யப்போறோம்…என்ன பிரச்னை வரப்போகுது…? எதுக்குப் பயப்படணும்?  கையுல காசு…வாயில தோசை…செய்ற வேலைக்குத் துட்டு…அவ்வளவுதானே…?

ஒண்ணும் யோசிக்காதீங்க சார்…  பாத்ரூம் வாட்டரை அப்டியே இழுத்து, பொது சோக் பிட்லர்ந்து வடிகாலோட சேர்த்திடுவோம்…சேர்ந்து போயிடும்…வெளில எதுவும் தெரியாது. ஒண்ணும் பிரச்னையில்லை…! அப்புறம் கசிவுங்கிறதே இருக்காது…

பிரச்னையில்ல…பிரச்னையில்லை…இதென்ன வார்த்தை அடிக்கடி? அப்போ பிரச்னையான பிரச்னையா? என்னங்க சொல்றீங்க? மழை நீர் வடிகாலோடவா…? அதோட கொண்டு கழிவு தண்ணியச் சேர்ப்பீங்களா? கொஞ்சம் கொஞ்சமா கசடு சேர்ந்து ஒரு நாளைக்கு அடைச்சிக்கிறிச்சின்னா? அதுவுமில்ல அப்புறம் எதுக்களிக்கும்? அரசாங்கம் ரோட்டுல மழை நீர் தேங்கக் கூடாது…ஜனங்க கஷ்டப்படக்கூடாதுன்னு வடிகால் போட்டிருக்காங்க…நீங்க என்னடான்னா அதுல கொண்டு வீடுகளோட பாத்ரூம் வாட்டரச் சேர்க்கிறேன்ங்கிறீங்க…? இது தப்பில்ல….?

தப்பில்ல சார்…நீங்க புரியாமப் பேசுறீங்க…இந்த ஏரியா பூராவும் அப்படித்தான்.  இங்கன்னில்ல…எங்கன்னாலும்? எல்லாப் பக்கமும்  அப்படித்தான் செய்திருக்காங்க…இந்த ரோட்டுலயே நிறைய வீடுகளுக்குச் செய்தாச்சு…போய் ஒரு ரவுண்டு பார்த்திட்டு வாங்க…நீங்கதான் பாக்கி…..?

நான் அமைதி காத்தேன்…இவன் சொல்வது சரியா? உண்மையா? நிறைய வீடுகளுக்குச் செய்தாச்சு என்கிறானே? தினமும் போக வர என்றிருக்கிறேன் நான். ஒரு நாளும் எதுவும் கண்ணில் பட்டதில்லையே? என் கண் என்ன பொட்டையா?  இவனை நம்பிக் காசு கொடுக்கலாமா? காசு கொடுப்பது இருக்கட்டும். முதலில் இப்படிச் செய்யலாமா? வீட்டுக்கு வீடு பாத்ரூம் வாட்டரை அதுக்குள் விட்டால் மொத்த நீரோட்டமும் நிரம்பி வழியாதா? ஸ்டேக்நேட் ஆகி ஸ்தம்பித்து விடாதா? ஓட்டமில்லாமல் அங்கங்கே உடைப்பெடுக்காதா? பிறகு ஏரியாவே நாறிப் போகுமே? அரசாங்கம் இதற்காகவா மழை நீர் வடிகால் அமைத்திருக்கிறார்கள்? அங்கங்கே நிறையச் செய்தாயிற்று என்கிறானே இந்தப் பையன்…இதெல்லாம் கவர்ன்மென்டுக்குத் தெரியுமா, தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் கண்டுக்காமல் இருக்கிறார்களா? கவுன்சிலர் ஆட்கள் என்கிறானே? ஒரு குருப்பே இருக்கிறது என்று வேறு சொல்கிறான்? கவுன்சிலர் கார்ப்பரேஷனைச் சேர்ந்தவர். கார்ப்பரேஷன் அரசாங்கத்தைச் சேர்ந்தது. அப்போ அரசாங்கத்துக்குத் தெரிந்தும் தெரியாமலும்தான் இது நடக்கிறதா? இப்படியெல்லாமும் நடக்கிறது என்று தெரிய வந்தால்…இவர்களுக்கு பாதிக்காதா? இதென்ன உள்ளடி வேலை?

அப்பப்போ வந்து  மழைநீர் வடிகாலைச் சரி பண்ணுவாங்க சார்…அடைக்காம இருக்க… எல்லாத்துக்கும் ஆள் போட்டிருக்காங்க…ஜரூரா வேலை நடந்திட்டிருக்கு…மழை பெய்யும்போதெல்லாம் வருவாங்க…வந்து பார்ப்பாங்க…எங்கயாச்சும் அடைச்சிருந்திச்சின்னா உடனடியா சரி பண்ணிடுவாங்க…!

ஓகோ…அவுங்களே வந்து சரி பண்ணித் தர்றாங்களா? அப்ப அப்ரூவ்டுன்னு சொல்லுங்க…? என்னப்பா தம்பி…இப்டிச் சொல்றே…நாளைக்கு யாராச்சும் வந்து எப்டிங்க கழிவு தண்ணிய இந்த வடிகால்ல விட்டீங்கன்னு கேள்வி கேட்டா? கேசுப் போடுவோம்னு சொன்னா யாருப்பா பதில் சொல்றது? அப்போ உன்னையவா கூப்பிட முடியும்? நீ என்ன அஃபிஷியலான ஆளா? கவர்ன்மென்ட் சர்வென்டா?  நற்பணி மன்றம்ங்கிறே…இன்னிக்கு இருப்பே…நாளைக்குப் போயிடுவே…யாருக்குத் தெரியும்? நீங்கதான் செய்தீங்கன்னு நாங்கதான் கையைக் காண்பிக்க முடியுமா இல்ல ஒத்துக்கத்தான் செய்வாங்களா? அப்டியே அவங்க ஒத்துக்கிட்டாலும் எங்களுக்குத் தெரியாதுன்னு நீங்க கையை விரிச்சிட்டீங்கன்னா? நாங்க எங்க போய் நிற்கிறதாம்? நீங்க சொல்றது ஒண்ணும் சரியாத் தெரிலயே? யோசிக்கணும்…தம்பி…!. டைம் கொடுங்க…!

அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்த்தேன். அமைதியாய்ச் சற்று நேரம் நின்றவன் பிறகு சொன்னான். இப்போது அவன் முகம் முற்றிலுமாய் மாறியிருந்தது அந்நியன் போல….!

இந்தப் பகுதில…இந்த நகர்ல… பல எடங்கள்ல ட்ரெய்னேஜ்ஜையே இதுக்குள்ள விட்டுருக்காங்க சார்… …சைலன்டா எல்லாமும் போயிட்டுத்தான் இருக்கு…எல்லாருக்கும் இது தெரியத்தான் தெரியும். ஆனா யாரும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கிட மாட்டாங்க…வர்ற போற இன்ஸ்பெக் ஷன் ஆட்களும் கண்டுக்கிட மாட்டாங்க…அதுக்கும் காரணமிருக்கு…எதுக்கு அநாவசியமாப் பயப்படுறீங்க…? எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் சார்….துட்டை மட்டும் நீங்க கொடுங்க போதும்….

சம்பாதிப்பதற்கென்றே ஒரு கூட்டம் அங்கங்கே இப்படி அலைகிறது என்பதாய்ப் புரிந்தது . காசு எப்படா கைக்கு வரும் என்கிற நோக்கிலேயே பேசுகிறானே? யாரும் கண்டுக்க மாட்டாங்க என்பதிலேயே எவ்வளவு தப்பு அடங்கியிருக்கிறது?

யோசிச்சுச் சொல்றேம்பா…உங்க இன்ட்ரஸ்டுக்கு தேங்க்ஸ்….நீங்க இப்பப் போயிட்டு வாங்க…ரெண்டு நாள் கழிச்சி போன் பண்றேன்…எல்லார்ட்டயும் கேட்கணும்ல….இருக்கிறது பூராவும் வாடகைக்குக் குடியிருக்கிறவங்க..ஓனர்கள்லாம் வெளி நாட்டுல இருக்காங்க…அவுங்களுக்கு ஃபோன் பண்ணி நான் சம்மதம் வாங்கணும். அவுங்க வாடகைக்குக் குடியிருக்கிறவங்ககிட்டே தகவல் சொல்லணும்…எல்லாரும் வாட்ஸப்புல சம்மதிக்கணும். பணம் கை கூடணும்….இம்புட்டு வேலை இருக்கு. தனி வீடுன்னா பரவால்லே…உங்களுக்குத் தெரியும்தானே…..? என் கைக்குப் பணம் வராமே நான் எதுவும் செய்ய முடியாது….பார்த்துக்குங்க…என் கைக்காசு போட முடியாது. அந்தளவுக்கு வசதி எனக்கில்ல…வசூல் பண்ணிட்டுத்தான் சொல்ல முடியும்…இல்லையா…செய்து கொடுங்க…வசூலாக ஆக தந்திடுறேன்…முடியுமா? என் சக்தி அவ்வளவுதான்….-

அப்டியெல்லாம் அலைய முடியாது சார்….ஒன் டைம் பேமென்ட்தான்…இப்பக் கிளம்பறோம் ….வேறே யார்ட்டயும் சொல்லிடாதீங்க…ஏன்னா பல பேரு கேட்டுட்டு வருவாங்க…நாங்க செய்றோம்னு….கவுன்சிலர் சொன்னாங்கன்னு வந்து நிப்பாங்க…அந்தம்மா சொல்லியிருக்கிறது எங்ககிட்ட மட்டும்தான்….இந்தத் தெரு கடைசில ஒருத்தர் இருப்பாரு…ஒர்க் ஷாப் வச்சிருக்கிறவரு…அவுரு ஃபோன் பண்ணித் தகவல் கேட்பாரு….ஒத்துக்கிடாதீங்க…நான் செய்து தர்றேம்பாரு…இந்தத் தெருவுலயே இருந்திட்டு வேறே ஆள்ட்ட விடுவீங்களான்னு மிரட்டுவாரு…எனக்கு ஒரு அமௌன்ட் வரணும்ப்பாரு….கவுன்சிலர் பேரச் சொல்வாரு…மசிஞ்சிடாதீங்க…போயிட்டு வர்றோம்…காச ரெடி பண்ணிட்டுப் பேசுங்க..நாங்க தெனமும் வந்திட்டுத்தான் இருப்போம்…பார்த்திட்டேதான் போவோம்….ஆச்சுங்களா…?

படியிறங்கினான் அந்தப் பையன். கீழே முதல் மாடி ஏறும் இடத்தில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அதுவரை அவனை நான் பார்க்கவில்லை. அவனும் எந்தச் சத்தமும் கொடுக்கவில்லை. இருவரும் வெளியேறினர். கூட்டாகவே சேஃப்டியாகத்தான் அலைகிறார்கள் போலும்…! எத்தனை பேருக்கு என்னென்ன பங்கோ? எவன் கண்டான்? எதெதோ நடக்கிறது இங்கே…எதுவும் நேரடி வித்தை இல்லை….அது மட்டும் பளிச்சென்று தெரிகிறது. தினசரி வருவானாம்…பார்ப்பானாம்…வேறே யார்ட்டயும் விட்டு செஞ்சா, இவன் வந்து இடிப்பான் போல்ருக்கு…? இவன் செய்து அவன் இடிக்காம இருக்கணுமே?  அதுக்கு உத்தரவாதம் உண்டா?

எனக்குப் பெருத்த யோசனையாய்ப் போனது. இவர்களெல்லாம் யார்? எங்கிருந்து முளைத்தார்கள்? எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள்? கட்சியா அல்லது வெளியாட்களா?  நற்பணி மன்றம் என்கிறானே? அது எந்தக் கட்சியைச் சார்ந்தது? அப்படி ஒன்று உள்ளதா இல்லை வெறும் ஃப்ளக்ஸ் போர்டா?  இவனிடம் ஒப்படைத்தால் இன்னொரு கட்சிக்காரன் வந்து எனக்கும் காசு கொடு என்று மிரட்ட மாட்டான் என்பது என்ன நிச்சயம்? ஆளாளுக்குக் கிளம்பி வந்து நின்றால்? இதென்ன தொல்லை?  தேவையா எனக்கு? தனி வீடென்றாலும் பரவாயில்லை தொலைகிறது என்று விடலாம். பொது அபார்ட்மென்டில் கெட்ட பேராகாதா? காசைப் பிடுங்கி நான் தின்று விட்டேன் என்று பழி வருமே? இவர்களை நம்பி எப்படி இதைச் செய்வது? காசை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டி விட்டால்?

எரியாவில் தண்டல் வசூலிப்பதுபோல வெவ்வேறு ரூபங்களில் இப்படிக் கிளம்பி விட்டார்களா? குறிப்பிட்ட வேலையைச் செய்து தருகிறேன் என்று சொல்லும் இவர்கள் பணம் கை மாறியதும் வருவார்கள் என்பது என்ன நிச்சயம்?  கட்டாயம் செய்து தருவார்கள் என்பதற்கு என்ன உறுதி? ராத்திரி டியூட்டி என்கிறானே? அதுவே தப்பாய்த் தெரிகிறதே?  நன்றாய்த்தான் பேசுகிறார்கள். அதுதான் காரிய சித்திக்கான வழி என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். குடியிருப்போரிடம் நைச்சியமாய்ப் பேசித்தானே காரியம் சாதிக்க முடியும்?  அதையும் சிறப்பாய்ச் செய்து முடிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாளைக்கு இன்னொருவன் வந்து அல்லது கார்ப்பரேஷன் ஊழியர்களே வந்து செய்ததை இடித்துப் போட்டால்? தப்பு சார்…யாரக்கேட்டு இப்டியெல்லாம் செய்தீங்க? அவனிடம் எந்த ஆதாரத்தைக் காண்பிக்க முடியும் உங்கள் அனுமதியோடுதான் என்று? இதென்ன வம்பாப் போச்சு?

மனசு குழம்பித்தான் போனது எனக்கு. மொத்தம் உள்ள எட்டு வீட்டுக்கும் நான்தானா பொறுப்பு? எவனாவது காது கொடுக்கிறானா? அட…அந்த மேடமாவது என்ன, ஏது என்று கேட்கிறதா? எனக்கென்ன தலைவிதியா…இப்படி இல்லாததையும் பொல்லாததையும் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமென்று?

மண்டை குழம்பிப் போய் படுக்கையில் விழுந்தேன். பகலில் என்றுமே நான் தூங்கியதில்லை. அன்று என்னை அப்படி அசத்திவிட்டது. மாலையில் வழக்கம்போல் வாக்கிங் கிளம்பினேன். என் பார்வை ஒவ்வொரு வீடாக விழுந்தது. எதுவும் அடையாளம் தெரியவில்லை. பல இடங்களில் “அந்தத்“ தண்ணீரையும் கழிவுகளையும் இதற்குள்ளேதான் விட்டிருக்கிறார்கள் என்றானே அந்தப் பையன்…அது எங்கே? ஒரே மர்மமாயிருந்தது. என்னால் எதையும் துல்லியமாய்ப் பார்க்க முடியவில்லை. எளிய நடுத்தர மக்கள் தவறுக்கு அஞ்சியவர்கள். அப்படித்தான் என்னால் நினைக்க முடிந்தது.  ஒரு வேளை நான்தான் முதல் ஆளோ? தெருக்கோடிலர்ந்து ஆரம்பிப்போம் என்று வந்து நின்று விட்டார்களோ? சிலத ரிவர்ஸ்ல ஆரம்பிச்சாத்தான் பலிதமாகும்…

 மனசாட்சி இல்லா செயல்? நம் அபார்ட்மென்டில் கழிவு தண்ணீர் லாரி வந்து மாசா மாசம் அள்ளிச் செல்கிறதே…ஆயிரத்து அறுநூறு அழுதாகிறதே…? பாத்திரம் தேய்க்கும், குளிக்கும் தண்ணீரையே இதனுடன் கலப்பது தவறு என்றால்…இந்த அநியாயத்தை எங்கு போய்ச் சொல்வது? அரசுக்கு உதவியாய்த்தான் பிரஜைகள் இருக்க வேண்டும்…எதிராகவா செயல்படுவது? ஆகாது…ஆகாது…இந்த அபார்ட்மென்டில் தரைக்கு அடியே உள்ள லூஸ்பிட்டில்தானே இன்றுவரை கழிவுநீர் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பொட்டு ஜலம் வெளியேறியதேயில்லையே? எந்த அபார்ட்மென்டில் இவ்வளவு பெர்ஃபெக்டாக மெயின்டெயின் பண்ணுகிறார்கள்? அப்படியிருக்கையில் முதல் ஆளாக நம்மிடம் வந்து பிடியாய் நிற்கிறார்களே? ஒழுகும் இடம் வேறு எதுவும் கண்ணில் படவில்லையா? அல்லது அங்கெல்லாம் சம்மதம் பெற்று விட்டார்களா?

போகும் வழியில் அந்த ஃப்ளக்ஸ் போர்டு கண்ணில் பட்டது. நாலைந்து முகங்கள் பெரிசு பெரிசாகச் சிரித்துக் கொண்டிருந்தன. அதில் ஒன்றுதான் அந்தப் பையனோ? அவன்தானா? நற்பணி மன்றம் என்றால் என்ன வேலை செய்கிறார்களாம்? என்ன சேவையோ? போர்டு வைத்து நாங்கள்தான் என்கிறார்களே…அதுவே பெரிய விஷயம்!  இப்படிக் கொள்ளலாமா? அல்லது வேலை வெட்டி இல்லாதவர்களாய்ச் சேர்ந்து கொண்டு அதிகாரமுள்ள கட்சிகளின் பெயரில் அல்லது அடுத்த நிலைப் பின்னணியில் இப்படி அலைகிறார்களா? அடையாளம் எதுவுமில்லையே? வண்ணங்களும் எதையும் சுட்டவில்லையே?  அரட்டி உருட்டிச் சம்பாதிப்பதுதான் வேலையா? அல்லது நயந்து சொல்லிக் காரியமாற்றிக் கொள்வதா? பசங்க பவ்யமாத்தான் பேசறானுக…! உலகமெங்கள் கைகளிலே…உருளும் பணமும் பைகளிலே…யோசிச்சுப் பார்த்தா நான்னே ராஜா….!

அபார்ட்மென்டுகளாய் என் பார்வை போனது என்னவோ உண்மைதான். ..அக்கறையாய் விசாரிக்கவும் செய்தேன்தான். அவர்கள் சொன்னார்கள்.

அப்படித்தான் சார்….என்ன பண்ணச் சொல்றீங்க…? ஏரியாவுக்கு ஒண்ணுன்னு கோஷ்டி திரியுது…அபார்ட்மென்டுக்கு ஏத்த மாதிரி வசூல்…உங்க அபார்ட்மென்ட்டுல எட்டு வீடு இருக்குன்னா…நாப்பது கேட்பாங்க…பைசா குறைக்க மாட்டாங்க…எதுக்கு இவ்வளவுன்னு கேட்கப்படாது. சொன்னதைக் கொடுத்திரணும். யாரு வந்து பேசினாங்களோ அவன்ட்டத் தவிர வேறே ஆள்ட்ட நீங்க கொடுக்கவும் முடியாது. சின்ன வேலைதான்….அரை மூடைச் சிமிண்டு கூட ஆகாதுதான். நாலு தட்டு மணல்தான் ஆகும். கொஞ்சம் ஜல்லி…சட்டுச் சட்டுன்னு போட்டுப் பரப்பி, ஒரு இழுப்பு இழுத்து விட்டுட்டுப் போயிடுவாங்க…தண்ணி அதுபாட்டுக்கு உள்ளுக்குள்ளே போக ஆரம்பிச்சிடும்…வெளில தெரியாது எதுவும்…நாமளே ஒரு சித்தாள வச்சி செய்திட முடியும்தான். முடியும்…ஆனா முடியாது…அவுங்கள ஒதுக்கிட்டு வேறே எவனையும் நீங்க நெருங்கவே முடியாது. அப்டிச் செய்தீங்கன்னா…ராத்திரியோட ராத்திரியா வந்து இடிச்சிப் போட்டுட்டுப் போயிடுவாங்க…கடப்பாரையால நாலு குத்துக் குத்தினா முடிஞ்சு போச்சு…!.நடந்திருக்கு அப்படி…! மசியாதவங்களுக்கு அதுதான் பதில்…! ஆனா ஒண்ணு…கார்ப்பரேஷன்ல ஒரு வார்த்தை கேட்டுக்கிறது நல்லது…இப்ப இந்த ஏரியாவுல துவக்கியிருக்காங்கன்னு நினைக்கிறேன்…

பளிச்சின்னு சொல்லப்போனா இதுவும் ஒரு வகையான தண்டல் அராஜகம்தான். நாமதான் எல்லாத்துக்கும் பழகிட்டமே….எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க…பேசாமச் செய்யச் சொல்லிட்டு காச வசூல் பண்ணிக் கொடுத்தனுப்புங்க…அது ஒண்ணுதான் வழி….! ஆள் வந்து கேட்டாச்சுல்ல…இனி காரியம் முடிக்கிறவரைக்கும் உங்கள விட மாட்டாங்க… பொறில சிக்கின எலி மாதிரிதான்…..!

எனக்கென்னவோ சரியாய்த் தோன்றவில்லை. முடிந்தவரை இழுத்தடிப்பது என்று முடிவு செய்துகொண்டேன்…எதற்கும் கார்ப்பரேஷன் ஆபீஸ் போய் ஒரு வார்த்தை கேட்டு விடுவது, விண்ணப்பித்துக் கொள்வது என்றும் முடிவு செய்து கொண்டேன். இவன்தான் சரியான ஆளுன்னுதானே அபார்ட்மென்ட்ல எங்கிட்ட இந்த வேலயை ஒப்படைச்சிருக்காங்க…? அவுங்க எங்க ஒப்படைச்சாங்க…அதுவா என் தலைல விழுந்திருக்கு….! போகட்டும்…பத்தோட பதினொண்ணா இதையும் செய்து வைப்போம்…எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்!கொஞ்சம்அலையவேண்டியிருக்கும்…அவ்வளவுதானே… ஆனா சரியாச் செய்யணும்…தப்பு வந்திடக் கூடாது…தப்பான கைக்குப் போயிடக் கூடாது…! ஜாக்கிரதையா இருக்கணும்…! காசு பறிபோயிடக் கூடாது…!

அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். எதுக்கும் நல்லா விசாரிச்சிக்குங்க சார்…! –மறுபடியும் ஒரு எச்சரிக்கை. அவருக்கும் பயம் வந்திடுச்சு போல்ருக்கு…எதுக்குடா வம்புன்னு…? மனிதர்கள் ஜாக்கிரதையானவர்கள். நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன என்று? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி…அதானே?

வீதியெங்கும் அங்கங்கே இரும்புக் கம்பங்கள் உயர உயரமாய் நிறுத்தப்பட்டு வெவ்வெறு விதமான  வண்ணக் கொடிகள் விர் விர்ரென்று காற்றுக்கு ஈடு கொடுத்துப் பறந்து கொண்டிருந்தன. ஒன்றை இன்னொன்று பீட் பண்ணுவது போல் உயரங்கள் மேலெழுந்திருந்தன. சிறிசும் பொிசுமாய் உயரத்திற்கேற்றாற்போல் ஜிகு ஜிகுவென்று பறந்து அலைக்கழிந்தன. ஜிகு ஜிகு ஜிகு-ஜிகு ஜிகு ஜிகு.ஜியாலக்கடி ஜியாலோ…

 இடது ஓரத்திலும், வலது ஓரத்திலும் என்று எதிரும் புதிருமாக அந்தக் கம்பங்களின் கனமான சிமிண்ட் அடித்தள  மேடைகள்  எதிலும் இடித்து விடக் கூடாது என்று பயந்து வாகனங்கள் நின்று, நிதானித்து, ஒதுங்கி, ஒடுங்கி ஜாக்கிரதையாய் நகர்ந்து கொண்டிருந்தன.

                                    ------------------------------------------