03 பிப்ரவரி 2025

 

சிறுகதை          ஆவநாழி -ஜனவரி-பிப்ரவரி 2025 இதழ் பிரசுரம்


“காளான்கள்…!”





            ளாளுக்கு வந்து நின்றார்கள். எங்கிருந்துதான் ஃபோன் எண் கிடைக்குமோ? அதுவும் எட்டுப் பேரில் அவர்களுக்கு நான்தானா கிடைத்தேன்? ஒரு வேளை அந்தம்மா கொடுத்திருக்குமோ? வேறு யார்?

அவர கான்டாக்ட் பண்ணுங்க….! அதுதான் சொல்லியிருக்கும். வேறே வேலை?

            ஆளைத் திருப்பி விடுவதில் கில்லாடி. தன்னால் எதுவும் முடியாதெனில்  கம்முனு இருக்க வேண்டிதானே? அதென்ன எதுக்கெடுத்தாலும் என் ஃபோன் நம்பரக் கொடுத்து பேசுங்கங்கிறது? வேண்டாத வேலை…!.

            ஏம் மேடம்…என்னைக் கேட்காமயே என் ஃபோன் நம்பரை ஊருக்கெல்லாம் கொடுப்பீங்களா? எவனெவனோ வந்து நிக்கிறான்? வர்றவனுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்கிறதா என் வேல? நீங்க ரிடையர்ட ஆனவங்க…நான் சர்வீஸ்ல இருக்கிறவன்…தெரியும்ல…! எதுக்கு இப்டி இழுத்து விடுறீங்க? நான்தான் ஸோல் இன்சார்ஜா இந்த அபார்ட்மென்டுக்கு?

            நா என்ன பண்றது? எவன் சொன்னானோ? இந்த அபார்ட்மென்டுக்கு கழிவு நீர் கனெக் ஷன் கொடுக்கணும்னு? யாருக்குத் தெரியும்? வந்து நிக்கிறான். நான் உடம்பு முடியாதவ…அவனுங்ககிட்ட மணிக்கணக்காப் பேசிட்டிருக்க முடியுமா? நீங்கதான் பேசணும்…! அதான் தள்ளிவிட்டேன்…

            தள்ளி விட்டீங்களா…சர்தான்…? நான்தான் பேசணுமாம்…! எழுதி வச்ச விதியா இது? நானும் தள்ளி விடட்டுமா? எனக்குத் தெரியாது…என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

எனக்கு மட்டும்தான் இது பொறுப்பா…? உங்களுக்கில்லயா? மீதி ஆறு வீட்டுக்காரங்க இருக்காங்களே…அவங்கள்ல யாரயாச்சும் கைகாட்டி விடுறது…நானே கிடந்து மாயணுமா? இல்ல…நீங்கதான் பேசறது…வாயால நின்ன எடத்துல பேசறதுதானே…அதுகூட முடியாதா உங்களால?

உண்மையிலேயே மாய்ந்து கொண்டுதான் இருந்தேன். ஏண்டா இப்டி அபார்ட்மென்ட்ல வீடு வாங்கினோம் என்று, வந்த பின்னால்தான் தெரிகிறது. சொல்லாவொண்ணா சிரமங்கள். ஏதோ மாசா மாசம் மெயின்டனன்ஸ் காசை விட்டெறிந்தோம், அக்கடா என்று கிடந்தோம் என்றிருக்க முடிகிறதா? இருநூறு வீடு, முன்னூறு வீடு என்றிருக்கும் அபார்ட்மென்ட்களில் கூட கேள்விப்பட்டவகையில்  இப்படியெல்லாம் சிரமமில்லை. அங்கெல்லாம் மாதாந்திரப் பராமரிப்புச் செலவே அஞ்சாயிரம் ஏழாயிரம் என்றிருந்ததுதான். ஆனால் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ள ஆளிருந்தது. செக்யூரிட்டி என்று ஒருவன் வேறு இருக்கிறான். அவனை மீறி அங்கு எதுவும் நடந்து விட முடியாது. புது ஆள் ஒருத்தன்  கூட அவன் அனுமதியின்றி உள்ளே காலெடுத்து வைத்துவிட முடியாது. வாசலில் இருக்கும் ரிஜிஸ்டரில் எந்த ஃப்ளாட்டுக்குப் போகிறோம் என்று குறிப்பிட்டு கையொப்பமும் ஃபோன் எண்ணும் எழுதியாக வேண்டும்.  எல்லா கண்டிஷனும் உண்டுதான். ஆனால் காசைக் கொடுத்தால் காரியம் முடிந்தது. இம்மாதிரி நொச்சு இல்லை…!  எட்டு வீட்டுக்கும் குட்டு வாங்குறது நானா?

இங்கே தொட்டதுக்கெல்லாம் பிரச்னைதான். வந்த ஒரு வருடம் நன்றாயிருந்தது. அந்த முதல் வருடம் லாரித் தண்ணீர் ஃப்ரீ. சம்ப்ல தண்ணி இல்ல…என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்…அடுத்த ஒரு மணி நேரத்தில் நிரம்பிவிடும்.

சூப்பர்வைசரின் தீவிரக் கண்காணிப்பு. அவரென்ன நம் அபார்ட்மென்டின் சூபர்வைசரா? கிடையாது…அந்த பில்டரின் சூப்பர்வைசர். பில்டர் சம்பளத்திற்கு வைத்திருக்கும் ஆள்.  அடுத்த வேலை ஆரம்பித்தவுடன் ஆளைத் தேடணும்.

சார்…இனிமே நீங்கதான் லாரிக்கு புக் பண்ணிக்கிறணும். – முதல் முறையாக அவர் இப்படிச் சொன்ன போது டமால் என்று குண்டு போட்டது போல் இருந்தது. இதென்ன புதிய தலைவலி?

ஆமா சார்…ஒரு வருஷம் முடிஞ்சு போச்சில்ல…அக்ரிமென்ட் எடுத்துப் பாருங்க…!

ரொம்ப சந்தோஷம்….என்றேன்.  அது கிடக்கட்டும்…இதை ஏன் என்னிடம் சொல்கிறான்? அப்படி அவனுக்கு உணர்த்தியது யார்? எல்லாம் ரகசியமாக நடக்கிறதோ? சதி வேலை பண்ணுகிறார்களோ? ஆரம்பத்திலிருந்தே ஆளை டெசிக்னேட் பண்ணினது போல…! சர்வீஸ் சார்ஜ் போட வேண்டிதான் இனிமே…! மாசம் மூவாயிரம் வேணும் எனக்கு…ஓசில பார்க்க முடியாது….! சொன்னால் என்ன? இல்லன்னா ஆளாளுக்கு மூணு மாசம் பார்க்கட்டும்…அதானே பேச்சு?

எட்டு வீட்டில் ஆறு வீட்டு ஓனர்கள் வெளிநாட்டில். இருப்பது நானும் அந்த மேடமும்தான். அப்போ அதுதானே சொல்லியிருக்கணும்…மத்தவனெல்லாம்தான் முகம் கூடப் பார்த்ததில்லையே? எல்லாம் வாட்ஸப்பில் பேசிக் கொண்டதோடு சரி. எவன் மூஞ்சியும் தெரியாது. அப்பப்போ தோன்றி மறைவார்கள். அவ்வளவுதான்.

அது எப்படியோ தொலையட்டும். இப்போ மூஞ்சியைப் பார்த்து என்ன செய்யப் போறோம்? அவனவன் காசக் கொடுத்தாச் சரி. நமக்குத் தேவை அது ஒண்ணுதான். அதுக்கே பாடு என்றால்? எதைச் சொல்வது, எதை விடுவது? பொங்கிப் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறதுதான். செய்து மாளலையே…! தண்ணி இருக்கா…மோட்டார் ரிப்பேரா…ஏர் லாக்கா…லைட் எரியலையா…ஒட்டடை அடைஞ்சு போச்சா..செப்டிக் டாங்க் நிறைஞ்சு போச்சா…கூட்டுற பொண்ணு வரல்லியா…மொட்ட மாடி பெருக்கினாங்களா…கேட் திறந்து கிடக்கா…லிப்ட் ஒர்க் ஆகலையா….அன்யூவல் மெயின்டனன்ஸ் போட்டாச்சா…மாடிக் கதவு பூட்டியிருக்கா…எங்கயாச்சும் சாக்கடை லீக் ஆகுதா…? இப்படி எத்தனை அனர்த்தங்கள்? எவனாவது கண்டுக்கிறானா? ஒவ்வொருத்தனும் மும்மூணு மாசம் பார்க்கணும்ங்கிறதுதானே பேச்சு…? அதை ஸ்டிரிக்டா இம்ப்ளிமென்ட் பண்ணாததுதான் தப்பாப் போச்சு…!

…வாடகைக்கு வர்றபோதே எழுதி வாங்கியிருக்கணும்…இதுக்கெல்லாம் சம்மதிக்கிறேன்னு…அதச் செய்யாம விட்டதுதான் பெரிய தப்பு…எப்டியும் காரியம் ஆயிடுதுல்ல…அதான் அவனவன் கம்முனு கிடக்கான்…யாரோ செய்துக்கிறாங்க…நமக்கென்ன வந்தது? அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல போல இருக்கானுங்க…?

எவன் எப்ப வர்றான்…எப்பப் போறான்…எவனுக்கும் தெரியாது. எப்பப் பார்த்தாலும் வீடுகள் பூட்டினமேனிக்கே கிடந்தா? சரி…ஒழுங்கா காசையாவது கொடுக்கணும்ல? அதுவும் கிடையாது. ஆயிரத்தெட்டுக் கேள்வி மட்டும் நீட்டி முழக்கிக் கேட்கத் தெரியுது.

எப்டி கார் பார்க்கிங்குக்கு இவ்வளவு கரன்ட் சார்ஜ் வருது? ரெண்டு மாசத்துக்கொருதரம் இதுக்குன்னு ஐநூறு, அறுநூறுன்னு அழ முடியுமா? இத்தனைக்கும் என்கிட்டக் காரே கிடையாது. டூ வீலர்தான்…..நான் ஏன் கட்டணும்? அறுநூறு? ரெண்டே லைட் போட்டாப் போறாதா? எதுக்கு இந்தப் பக்கம் அஞ்சு அந்தப்பக்கம் அஞ்சுன்னு பத்து லைட்டு? பக பகன்னு எரியணுமா? இங்கென்ன விழாவா கொண்டாடுறோம்? -கேள்வி மட்டும் வாய் கிழியக் கேட்பானுங்க…! பாதுகாப்பப் பத்தி எவனுக்கும் அக்கறையில்ல…

அப்போ டூ வீலரக் கொண்டு ரோட்டுல நிறுத்து….சொல்ல முடியுமா? கார் பார்க்கிங்கிற்கு மேலேதானே வீடு…அது தெரிந்துதானே குடி வந்தது? கார் பார்க்கிங்கில் டூ வீலர் நிறுத்தி அது திருடு போகாமல் இருக்க வேண்டும்தானே? பாதுகாப்பாய் காருக்குப் பின்னால் மறைவில் இருப்பதுபோல் கொண்டு நிறுத்தத் தெரிகிறதே…காசு மட்டும் கொடுக்கக் கை நீளாதோ? எவனும் அத்துமீறி மேலே வந்து கதவத் தட்டக் கூடாதுன்னுதானே லைட் போட்டு வைக்கிறது? வெளிச்சம் இருந்தா ஒரு பயம், தயக்கம் எவனுக்கும் இருக்கும்தானே?

இவனுக்கு வேறொரு ஞாபகம் வந்தது. ஊரில் திருட வரும் முன் தெரு லைட்டை உடைப்பார்கள். இருட்டாக்குவார்கள். அது போல் எதுவும்……?

மாடில உன் வீட்டுக்குள்ள கொண்டு வண்டியை நிறுத்திக்கோ…!செய்தாலும் செய்வாங்க…லிஃப்ட் அந்த அளவுக்குப் பெரிசா இருந்தா…ஒரு அளவுக்கு மேலே லிஃப்டும் லோடு தாங்காதே…!  ஸ்டீல் பீரோவக் கொண்டு அதுல ஏத்தி, லிஃப்ட் நின்னு போகலையா? தண்டம் பொதுவாத்தானே அழுதது? கதைய எடுத்து விட்டா…எவனுக்கும் ஈயாடாது மூஞ்சில…!

இந்த எடத்துல மட்டும் லைட் போடாதீங்க சார்…பளீர்னு எரிஞ்சு இத்தன வண்டி நிக்குது இங்க…எதையாச்சும் ஒண்ணைத் தள்ளிட்டுப் போன்னு நாமளே சொல்ற மாதிரி இருக்கு…-நீட்டி முழக்கி இது மட்டும் அக்கறையாய்ச் சொல்லத் தெரிகிறது. இருட்டுல இருந்தா திருடு போகாதாம். அதுவும் கார் மறைத்து நிற்கிறதாம். காருக்கு அந்தப் பக்கம் வந்து திருட மாட்டானாம்…அட மட ஜென்மமே…! இருட்டுலதானடா ஈஸியாத் திருடுவான்…இது கூட உன் மண்டைல உறைக்காதா? ரெண்டு மாடி ஏறி, மொட்ட மாடி போய் லிப்ட் ரூம் கதவத் திறந்து பாட்டரியைத் திருடிட்டுப் போயிருக்கானே பக்கத்து அபார்ட்மென்ட்ல…! அவ்வளவு சாவகாசமாத் திருடினவன், இங்க தரைல நிக்கிற வண்டியைத் தள்ளிட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும்? வண்டி லாக்கெல்லாம் ஒரு பொருட்டா திருடுறவனுக்கு?

பெட்ரோல உறிஞ்சிட்டுப் போன கதை தெரியுமா உனக்கு? புத்தம் புது டயர மட்டும் கழட்டி எடுத்திட்டுப் போனத அறிவயா?  வாங்கிப் பத்து நாள் கூட ஆகல…என் வண்டிலதான்….கம்ப்ளெயின்டா கொடுக்க முடியும்…?

அதெல்லாம் இங்க சர்வ சாதாரணம் சார்…நீங்கதான் உங்க வண்டிய பத்திரமா பார்த்துக்கணும்…வாட்ச்மேன் போடுங்க…சிசிடிவி காமிரா வைங்க…ஆதாரம் கொண்டு வாங்க…முயற்சி பண்ணுவோம்….காரயே தள்ளிட்டுப் போயிடுறானுங்க…நீங்க டூ வீலரப்பத்திச் சொல்ல வந்திட்டீங்க…? இங்கருந்து கடத்திட்டுப் போன காருக…மண்டபம் மணல் வெளில இஞ்ஜினில்லாம வெறும் பாடியா அம்மணமாக் கிடந்த கதை எத்தனை தெரியுமா? நம்ம ஒடம்புக்கு நாம எவ்வளவு பாதுகாப்போ அதுபோலதான் நாம வச்சிருக்கிற சாமான்களுக்கும்…இன்னைக்கு ஒலகம் அதான் சார்…உபதேசம்தான்..

நல்ல போலீஸ்…..-ஒரு சல்யூட் போட்டு விட்டுத் திரும்பினேன். அதைக் கூட அவன் பதிலுக்குத் தரவில்லை. அம்புட் டு அலுப்பு…!

யாருங்க நீங்க…? – எதிரே நின்ற இளைஞனிடம் கேட்டேன். வயது இருபதிலிருந்து இருபத்தைந்திற்குள் இருக்கும். தலைமுடியை ஒரு சைஸாக வெட்டியிருந்தான். இத்தனூண்டு தலைக்குள் என்னவெல்லாம் ஜாலம்? எப்படி எப்படியோ முடி வெட்டிக் கொள்கிறார்கள் இப்போதெல்லாம்…பார்க்கவே நன்றாயில்லை. ஒரு பையன் அவனிஷ்டப்படி முடி வெட்டிக் கொண்டு அவன் அப்பன் முன்னால் போய் இன்று நிற்க முடியாது. அத்தனை கோரம்…! இடது புறம் ஒழுங்காக நேர் வரிசையில் வகிடெடுத்து ஒதுக்கி வலது புறத்தைச் சற்றே தூக்கிப் படிய வாரி விட்டுக் கொண்டு நெற்றியில் விபூதிக் கீற்றோடு லட்சணமாய் வலம் வந்த காலமெல்லாம் போயிற்று. இப்போதெல்லாம் முடியை எங்கே சீவுகிறார்கள்? கையால் விரல்களை உள்ளே செலுத்தி ஒரு கோது கோதுகிறார்கள்.  படிந்ததா, படியவில்லையா என்கிற கேள்வி எழவில்லை. அது படியாததுபோல் பம் பம்மென்று அவர்களும் படியாதவர்களாய்த்தான் இருக்கிறார்கள். அடியாத மாடு படியாது…!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பது முதுமொழி. இப்போது எள்ளும் வகையில் இருந்தாலும் எள்ளாமை வேண்டும். ஜாக்கிரதை..!

நான் இந்த ஏரியா நற்பணி மன்றத் தலைவர் சார்…..என் பேரு உபேந்திரன்.

சரி…உங்களுக்கு என்ன வேணும்…?

உங்க அபார்ட்மென்ட்ல கழிவுத் தண்ணி ரோட்டுல போகுது சார்…அது கூடாது….கவுன்சிலர் சொல்லச் சொன்னாங்க…

கவுன்சிலரா? யாரு அந்தம்மாவா? இந்தப் பக்கமே அவங்க வந்ததில்லையே. நாங்க பார்த்ததேயில்லையே?

ஆமா சார்….அவங்க சொல்லித்தான் நான் பார்த்துக்கிட்டிருக்கேன்…-இவன் சொல்வது உண்மையா? அல்லது புருடாவா?

மழை பேய்ஞ்சா இந்த அபார்ட்மென்ட் சுற்றிலும் டெயில் என்ட் மாதிரி மூணு பக்கத்துத் தண்ணியும் சேர்ந்து தேங்கிடுது…எங்க அபார்ட்மென்ட் தண்ணிலயே மிதக்குது…அதுக்கு ஆயிரம் தடவை சொல்லியாச்சு…ரோட்ட உசத்துங்கன்னு…செய்யல…இதச் சொல்ல வந்திட்டாங்களா…?

அதை பாதாளச் சாக்கடை, தண்ணிக் குழாய்…இதெல்லாம் எரெக்ட் பண்ணின பின்னாடி சரி பண்ணிடுவாங்க சார்…அதுவரைக்கும் பொறுத்துக்குங்க….

வந்ததுலர்ந்து பொறுத்துக்கிட்டுத்தானே இருக்கோம். பொறுத்திட்டிருக்கிறவங்களுக்கு அது மட்டும்தான் சொத்து…எல்லாத்துக்கும் பொறுமையா இருக்கிறது…சகிச்சிக்கிட்டுக் கிடக்கிறது. ஜனங்களே அதுக்குப் பழகித்தானே கிடக்காங்க…! எல்லாக் கஷ்டங்களும் அவங்களுக்குத்தான்…!

ஓகே சார்….இதுக்குச் சொல்லுங்க….என்ன செய்யலாம்னு….?

அது அப்பப்போ ஒவ்வொரு சதுரமாப் பார்த்து, சோக் பிட் அடைப்பு எடுத்து நாங்களே சரிபண்ணிக்குவோம்….காமன் சோக்பிட்ல இப்போத்தான் லேசாக் கசிய ஆரம்பிச்சிருக்கு…அந்தந்த வீட்டுக்குன்னு உள்ள சின்ன சைஸ் சோக் பிட்டுகளைச் சுத்தம் பண்ணினோம்னா அந்தப் பொது சோக்பிட் தானே சரியாயிடும். அத நாங்க பார்த்துக்கிடுறோம்…கவுன்சிலருக்குத் தெரியும்….எங்க தண்ணி எல்லாமே இந்தத் தரைக்கடிலயே லூஸ் டாங்க் இருக்கு…அதுல இறங்கி பூமி உறிஞ்சிடும்…

அதுக்கில்ல சார்…கார்ப்பரேஷன் ஆட்கள் வந்தா ஃபைன் பண்ணுவாங்க…இருபதாயிரம், இருபத்தஞ்சாயிரம்னு தண்டம் விதிச்சிடுவாங்க… நீங்க உடனடியா அதைச் சரிபண்ணிடணும்…தண்ணி தேங்கக் கூடாது. கொசு அடையுது…டெங்கு பரவுதுன்னு கார்ப்பரேஷன்ல ஸ்டிரிக்டா இருக்காங்க….தெனமும் ரௌன்ட்ஸ் வர ஆரம்பிச்சிருக்காங்க…பார்த்தாங்கன்னா ஆபத்து….ராத்திரி வேன்ல மருந்தடிச்சிட்டுப் போறாங்களே…பார்க்கிறீங்கல்ல…..?

சரிங்க…அதான் சொல்றேன்ல…நாங்களே சரி பண்ணுக்குவோம்னு…நீங்க கிளம்புங்க…

போறதுக்கு நான் வரல்ல சார்….சரி பண்றதுக்குத்தான் வந்திருக்கேன்….! எங்களக் கேள்வி கேட்பாங்க….! பதில் சொல்லியாகணும்….

நான் அவனை உற்றுப் பார்த்தேன். இவன் யார் இதைக் கேட்க….? நற்பணி மன்றம் என்றால் அது கார்ப்பரேஷன் சார்ந்ததா? அரசுத் தரப்பில் அப்படி ஒன்றுமில்லையே? கேள்வி கேட்பாங்கன்னு சொல்லி என்னை பயமுறுத்துறான்? கத்துக்கிட்டுத்தான் வர்றானுங்க…! அஃபிஷியல் இன்ஸ்பெக் ஷன் போல்ருக்கு? ஆளாளுக்குக் கிளம்பிட்டானுங்களா?

சரி பண்றதுன்னா…? நீங்களே பண்ணிக் கொடுக்கிறீங்களா….?  கார்ப்பரேஷன் கான்ட்ராக்டா…?

ஆமா சார்….கான்ட்ராக்டுன்னு இல்ல…ஆனா நாங்கதான் பண்ணுவோம்….நாங்க ரெண்டு மூணு க்ரூப் இருக்கோம் இந்த ஏரியாவுல…எங்ககிட்டத்தான் சொல்லியிருக்காங்க….எல்லாத்தையும் சரி பண்ணனும்னு…!  எங்க டார்கெட் அது…!

அடேங்கப்பா…? டார்கெட் வேறே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா? எல்லாம் ஸ்பீடுதான்.. யாரு…? கவுன்சிலரா? கார்ப்பரேஷன் ஆளுக வந்து செய்யமாட்டாங்களா? அங்கதான சொல்ல முடியும்….?எழுதிக் கொடுத்துக் கேட்க முடியும்…செய்து கொடுங்கன்னு….? அங்கதான பணம் கட்டவும் முடியும்?

அவங்க செய்ய டைம் எடுக்கும் சார்…ட்ரெயினேஜ் பைப் இறக்கி, அதுல வீட்டுக்கு வீடு கனெக் ஷன் கொடுத்து….அதுக்கு ரொம்ப நாளாகும்….அது தனி கான்ட்ராக்ட்…..

ஓ.கே…அப்போ நீங்க செய்றது? ஓப்பன் கான்ட்ராக்டா? -எனக்கே சிரிப்பு வந்தது என் கேள்விக்கு. அடக்கிக் கொண்டேன்.

இது தனி சார்….நாங்களே ஆள் வச்சிருக்கோம். சொன்னீங்கன்னா ஒரே நைட்ல செய்து முடிச்சிடுவோம்…உங்களுக்குப் பிரச்னை எதுவும் வராது…..

என்ன சொல்கிறான் இவன்? ஒரே நைட்லங்கிறான்…எதுக்கு நைட்ல செய்யணும், பகல்லயே செய்ய வேண்டிதானே? யாருக்கும் தெரியாமச் செய்யணுமா? அப்போ அது தப்பாச்சே?  பிரச்னை வராதா? காசு கொடுத்து செய்யப்போறோம்…என்ன பிரச்னை வரப்போகுது…? எதுக்குப் பயப்படணும்?  கையுல காசு…வாயில தோசை…செய்ற வேலைக்குத் துட்டு…அவ்வளவுதானே…?

ஒண்ணும் யோசிக்காதீங்க சார்…  பாத்ரூம் வாட்டரை அப்டியே இழுத்து, பொது சோக் பிட்லர்ந்து வடிகாலோட சேர்த்திடுவோம்…சேர்ந்து போயிடும்…வெளில எதுவும் தெரியாது. ஒண்ணும் பிரச்னையில்லை…! அப்புறம் கசிவுங்கிறதே இருக்காது…

பிரச்னையில்ல…பிரச்னையில்லை…இதென்ன வார்த்தை அடிக்கடி? அப்போ பிரச்னையான பிரச்னையா? என்னங்க சொல்றீங்க? மழை நீர் வடிகாலோடவா…? அதோட கொண்டு கழிவு தண்ணியச் சேர்ப்பீங்களா? கொஞ்சம் கொஞ்சமா கசடு சேர்ந்து ஒரு நாளைக்கு அடைச்சிக்கிறிச்சின்னா? அதுவுமில்ல அப்புறம் எதுக்களிக்கும்? அரசாங்கம் ரோட்டுல மழை நீர் தேங்கக் கூடாது…ஜனங்க கஷ்டப்படக்கூடாதுன்னு வடிகால் போட்டிருக்காங்க…நீங்க என்னடான்னா அதுல கொண்டு வீடுகளோட பாத்ரூம் வாட்டரச் சேர்க்கிறேன்ங்கிறீங்க…? இது தப்பில்ல….?

தப்பில்ல சார்…நீங்க புரியாமப் பேசுறீங்க…இந்த ஏரியா பூராவும் அப்படித்தான்.  இங்கன்னில்ல…எங்கன்னாலும்? எல்லாப் பக்கமும்  அப்படித்தான் செய்திருக்காங்க…இந்த ரோட்டுலயே நிறைய வீடுகளுக்குச் செய்தாச்சு…போய் ஒரு ரவுண்டு பார்த்திட்டு வாங்க…நீங்கதான் பாக்கி…..?

நான் அமைதி காத்தேன்…இவன் சொல்வது சரியா? உண்மையா? நிறைய வீடுகளுக்குச் செய்தாச்சு என்கிறானே? தினமும் போக வர என்றிருக்கிறேன் நான். ஒரு நாளும் எதுவும் கண்ணில் பட்டதில்லையே? என் கண் என்ன பொட்டையா?  இவனை நம்பிக் காசு கொடுக்கலாமா? காசு கொடுப்பது இருக்கட்டும். முதலில் இப்படிச் செய்யலாமா? வீட்டுக்கு வீடு பாத்ரூம் வாட்டரை அதுக்குள் விட்டால் மொத்த நீரோட்டமும் நிரம்பி வழியாதா? ஸ்டேக்நேட் ஆகி ஸ்தம்பித்து விடாதா? ஓட்டமில்லாமல் அங்கங்கே உடைப்பெடுக்காதா? பிறகு ஏரியாவே நாறிப் போகுமே? அரசாங்கம் இதற்காகவா மழை நீர் வடிகால் அமைத்திருக்கிறார்கள்? அங்கங்கே நிறையச் செய்தாயிற்று என்கிறானே இந்தப் பையன்…இதெல்லாம் கவர்ன்மென்டுக்குத் தெரியுமா, தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் கண்டுக்காமல் இருக்கிறார்களா? கவுன்சிலர் ஆட்கள் என்கிறானே? ஒரு குருப்பே இருக்கிறது என்று வேறு சொல்கிறான்? கவுன்சிலர் கார்ப்பரேஷனைச் சேர்ந்தவர். கார்ப்பரேஷன் அரசாங்கத்தைச் சேர்ந்தது. அப்போ அரசாங்கத்துக்குத் தெரிந்தும் தெரியாமலும்தான் இது நடக்கிறதா? இப்படியெல்லாமும் நடக்கிறது என்று தெரிய வந்தால்…இவர்களுக்கு பாதிக்காதா? இதென்ன உள்ளடி வேலை?

அப்பப்போ வந்து  மழைநீர் வடிகாலைச் சரி பண்ணுவாங்க சார்…அடைக்காம இருக்க… எல்லாத்துக்கும் ஆள் போட்டிருக்காங்க…ஜரூரா வேலை நடந்திட்டிருக்கு…மழை பெய்யும்போதெல்லாம் வருவாங்க…வந்து பார்ப்பாங்க…எங்கயாச்சும் அடைச்சிருந்திச்சின்னா உடனடியா சரி பண்ணிடுவாங்க…!

ஓகோ…அவுங்களே வந்து சரி பண்ணித் தர்றாங்களா? அப்ப அப்ரூவ்டுன்னு சொல்லுங்க…? என்னப்பா தம்பி…இப்டிச் சொல்றே…நாளைக்கு யாராச்சும் வந்து எப்டிங்க கழிவு தண்ணிய இந்த வடிகால்ல விட்டீங்கன்னு கேள்வி கேட்டா? கேசுப் போடுவோம்னு சொன்னா யாருப்பா பதில் சொல்றது? அப்போ உன்னையவா கூப்பிட முடியும்? நீ என்ன அஃபிஷியலான ஆளா? கவர்ன்மென்ட் சர்வென்டா?  நற்பணி மன்றம்ங்கிறே…இன்னிக்கு இருப்பே…நாளைக்குப் போயிடுவே…யாருக்குத் தெரியும்? நீங்கதான் செய்தீங்கன்னு நாங்கதான் கையைக் காண்பிக்க முடியுமா இல்ல ஒத்துக்கத்தான் செய்வாங்களா? அப்டியே அவங்க ஒத்துக்கிட்டாலும் எங்களுக்குத் தெரியாதுன்னு நீங்க கையை விரிச்சிட்டீங்கன்னா? நாங்க எங்க போய் நிற்கிறதாம்? நீங்க சொல்றது ஒண்ணும் சரியாத் தெரிலயே? யோசிக்கணும்…தம்பி…!. டைம் கொடுங்க…!

அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்த்தேன். அமைதியாய்ச் சற்று நேரம் நின்றவன் பிறகு சொன்னான். இப்போது அவன் முகம் முற்றிலுமாய் மாறியிருந்தது அந்நியன் போல….!

இந்தப் பகுதில…இந்த நகர்ல… பல எடங்கள்ல ட்ரெய்னேஜ்ஜையே இதுக்குள்ள விட்டுருக்காங்க சார்… …சைலன்டா எல்லாமும் போயிட்டுத்தான் இருக்கு…எல்லாருக்கும் இது தெரியத்தான் தெரியும். ஆனா யாரும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கிட மாட்டாங்க…வர்ற போற இன்ஸ்பெக் ஷன் ஆட்களும் கண்டுக்கிட மாட்டாங்க…அதுக்கும் காரணமிருக்கு…எதுக்கு அநாவசியமாப் பயப்படுறீங்க…? எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் சார்….துட்டை மட்டும் நீங்க கொடுங்க போதும்….

சம்பாதிப்பதற்கென்றே ஒரு கூட்டம் அங்கங்கே இப்படி அலைகிறது என்பதாய்ப் புரிந்தது . காசு எப்படா கைக்கு வரும் என்கிற நோக்கிலேயே பேசுகிறானே? யாரும் கண்டுக்க மாட்டாங்க என்பதிலேயே எவ்வளவு தப்பு அடங்கியிருக்கிறது?

யோசிச்சுச் சொல்றேம்பா…உங்க இன்ட்ரஸ்டுக்கு தேங்க்ஸ்….நீங்க இப்பப் போயிட்டு வாங்க…ரெண்டு நாள் கழிச்சி போன் பண்றேன்…எல்லார்ட்டயும் கேட்கணும்ல….இருக்கிறது பூராவும் வாடகைக்குக் குடியிருக்கிறவங்க..ஓனர்கள்லாம் வெளி நாட்டுல இருக்காங்க…அவுங்களுக்கு ஃபோன் பண்ணி நான் சம்மதம் வாங்கணும். அவுங்க வாடகைக்குக் குடியிருக்கிறவங்ககிட்டே தகவல் சொல்லணும்…எல்லாரும் வாட்ஸப்புல சம்மதிக்கணும். பணம் கை கூடணும்….இம்புட்டு வேலை இருக்கு. தனி வீடுன்னா பரவால்லே…உங்களுக்குத் தெரியும்தானே…..? என் கைக்குப் பணம் வராமே நான் எதுவும் செய்ய முடியாது….பார்த்துக்குங்க…என் கைக்காசு போட முடியாது. அந்தளவுக்கு வசதி எனக்கில்ல…வசூல் பண்ணிட்டுத்தான் சொல்ல முடியும்…இல்லையா…செய்து கொடுங்க…வசூலாக ஆக தந்திடுறேன்…முடியுமா? என் சக்தி அவ்வளவுதான்….-

அப்டியெல்லாம் அலைய முடியாது சார்….ஒன் டைம் பேமென்ட்தான்…இப்பக் கிளம்பறோம் ….வேறே யார்ட்டயும் சொல்லிடாதீங்க…ஏன்னா பல பேரு கேட்டுட்டு வருவாங்க…நாங்க செய்றோம்னு….கவுன்சிலர் சொன்னாங்கன்னு வந்து நிப்பாங்க…அந்தம்மா சொல்லியிருக்கிறது எங்ககிட்ட மட்டும்தான்….இந்தத் தெரு கடைசில ஒருத்தர் இருப்பாரு…ஒர்க் ஷாப் வச்சிருக்கிறவரு…அவுரு ஃபோன் பண்ணித் தகவல் கேட்பாரு….ஒத்துக்கிடாதீங்க…நான் செய்து தர்றேம்பாரு…இந்தத் தெருவுலயே இருந்திட்டு வேறே ஆள்ட்ட விடுவீங்களான்னு மிரட்டுவாரு…எனக்கு ஒரு அமௌன்ட் வரணும்ப்பாரு….கவுன்சிலர் பேரச் சொல்வாரு…மசிஞ்சிடாதீங்க…போயிட்டு வர்றோம்…காச ரெடி பண்ணிட்டுப் பேசுங்க..நாங்க தெனமும் வந்திட்டுத்தான் இருப்போம்…பார்த்திட்டேதான் போவோம்….ஆச்சுங்களா…?

படியிறங்கினான் அந்தப் பையன். கீழே முதல் மாடி ஏறும் இடத்தில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அதுவரை அவனை நான் பார்க்கவில்லை. அவனும் எந்தச் சத்தமும் கொடுக்கவில்லை. இருவரும் வெளியேறினர். கூட்டாகவே சேஃப்டியாகத்தான் அலைகிறார்கள் போலும்…! எத்தனை பேருக்கு என்னென்ன பங்கோ? எவன் கண்டான்? எதெதோ நடக்கிறது இங்கே…எதுவும் நேரடி வித்தை இல்லை….அது மட்டும் பளிச்சென்று தெரிகிறது. தினசரி வருவானாம்…பார்ப்பானாம்…வேறே யார்ட்டயும் விட்டு செஞ்சா, இவன் வந்து இடிப்பான் போல்ருக்கு…? இவன் செய்து அவன் இடிக்காம இருக்கணுமே?  அதுக்கு உத்தரவாதம் உண்டா?

எனக்குப் பெருத்த யோசனையாய்ப் போனது. இவர்களெல்லாம் யார்? எங்கிருந்து முளைத்தார்கள்? எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள்? கட்சியா அல்லது வெளியாட்களா?  நற்பணி மன்றம் என்கிறானே? அது எந்தக் கட்சியைச் சார்ந்தது? அப்படி ஒன்று உள்ளதா இல்லை வெறும் ஃப்ளக்ஸ் போர்டா?  இவனிடம் ஒப்படைத்தால் இன்னொரு கட்சிக்காரன் வந்து எனக்கும் காசு கொடு என்று மிரட்ட மாட்டான் என்பது என்ன நிச்சயம்? ஆளாளுக்குக் கிளம்பி வந்து நின்றால்? இதென்ன தொல்லை?  தேவையா எனக்கு? தனி வீடென்றாலும் பரவாயில்லை தொலைகிறது என்று விடலாம். பொது அபார்ட்மென்டில் கெட்ட பேராகாதா? காசைப் பிடுங்கி நான் தின்று விட்டேன் என்று பழி வருமே? இவர்களை நம்பி எப்படி இதைச் செய்வது? காசை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டி விட்டால்?

எரியாவில் தண்டல் வசூலிப்பதுபோல வெவ்வேறு ரூபங்களில் இப்படிக் கிளம்பி விட்டார்களா? குறிப்பிட்ட வேலையைச் செய்து தருகிறேன் என்று சொல்லும் இவர்கள் பணம் கை மாறியதும் வருவார்கள் என்பது என்ன நிச்சயம்?  கட்டாயம் செய்து தருவார்கள் என்பதற்கு என்ன உறுதி? ராத்திரி டியூட்டி என்கிறானே? அதுவே தப்பாய்த் தெரிகிறதே?  நன்றாய்த்தான் பேசுகிறார்கள். அதுதான் காரிய சித்திக்கான வழி என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். குடியிருப்போரிடம் நைச்சியமாய்ப் பேசித்தானே காரியம் சாதிக்க முடியும்?  அதையும் சிறப்பாய்ச் செய்து முடிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாளைக்கு இன்னொருவன் வந்து அல்லது கார்ப்பரேஷன் ஊழியர்களே வந்து செய்ததை இடித்துப் போட்டால்? தப்பு சார்…யாரக்கேட்டு இப்டியெல்லாம் செய்தீங்க? அவனிடம் எந்த ஆதாரத்தைக் காண்பிக்க முடியும் உங்கள் அனுமதியோடுதான் என்று? இதென்ன வம்பாப் போச்சு?

மனசு குழம்பித்தான் போனது எனக்கு. மொத்தம் உள்ள எட்டு வீட்டுக்கும் நான்தானா பொறுப்பு? எவனாவது காது கொடுக்கிறானா? அட…அந்த மேடமாவது என்ன, ஏது என்று கேட்கிறதா? எனக்கென்ன தலைவிதியா…இப்படி இல்லாததையும் பொல்லாததையும் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமென்று?

மண்டை குழம்பிப் போய் படுக்கையில் விழுந்தேன். பகலில் என்றுமே நான் தூங்கியதில்லை. அன்று என்னை அப்படி அசத்திவிட்டது. மாலையில் வழக்கம்போல் வாக்கிங் கிளம்பினேன். என் பார்வை ஒவ்வொரு வீடாக விழுந்தது. எதுவும் அடையாளம் தெரியவில்லை. பல இடங்களில் “அந்தத்“ தண்ணீரையும் கழிவுகளையும் இதற்குள்ளேதான் விட்டிருக்கிறார்கள் என்றானே அந்தப் பையன்…அது எங்கே? ஒரே மர்மமாயிருந்தது. என்னால் எதையும் துல்லியமாய்ப் பார்க்க முடியவில்லை. எளிய நடுத்தர மக்கள் தவறுக்கு அஞ்சியவர்கள். அப்படித்தான் என்னால் நினைக்க முடிந்தது.  ஒரு வேளை நான்தான் முதல் ஆளோ? தெருக்கோடிலர்ந்து ஆரம்பிப்போம் என்று வந்து நின்று விட்டார்களோ? சிலத ரிவர்ஸ்ல ஆரம்பிச்சாத்தான் பலிதமாகும்…

 மனசாட்சி இல்லா செயல்? நம் அபார்ட்மென்டில் கழிவு தண்ணீர் லாரி வந்து மாசா மாசம் அள்ளிச் செல்கிறதே…ஆயிரத்து அறுநூறு அழுதாகிறதே…? பாத்திரம் தேய்க்கும், குளிக்கும் தண்ணீரையே இதனுடன் கலப்பது தவறு என்றால்…இந்த அநியாயத்தை எங்கு போய்ச் சொல்வது? அரசுக்கு உதவியாய்த்தான் பிரஜைகள் இருக்க வேண்டும்…எதிராகவா செயல்படுவது? ஆகாது…ஆகாது…இந்த அபார்ட்மென்டில் தரைக்கு அடியே உள்ள லூஸ்பிட்டில்தானே இன்றுவரை கழிவுநீர் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பொட்டு ஜலம் வெளியேறியதேயில்லையே? எந்த அபார்ட்மென்டில் இவ்வளவு பெர்ஃபெக்டாக மெயின்டெயின் பண்ணுகிறார்கள்? அப்படியிருக்கையில் முதல் ஆளாக நம்மிடம் வந்து பிடியாய் நிற்கிறார்களே? ஒழுகும் இடம் வேறு எதுவும் கண்ணில் படவில்லையா? அல்லது அங்கெல்லாம் சம்மதம் பெற்று விட்டார்களா?

போகும் வழியில் அந்த ஃப்ளக்ஸ் போர்டு கண்ணில் பட்டது. நாலைந்து முகங்கள் பெரிசு பெரிசாகச் சிரித்துக் கொண்டிருந்தன. அதில் ஒன்றுதான் அந்தப் பையனோ? அவன்தானா? நற்பணி மன்றம் என்றால் என்ன வேலை செய்கிறார்களாம்? என்ன சேவையோ? போர்டு வைத்து நாங்கள்தான் என்கிறார்களே…அதுவே பெரிய விஷயம்!  இப்படிக் கொள்ளலாமா? அல்லது வேலை வெட்டி இல்லாதவர்களாய்ச் சேர்ந்து கொண்டு அதிகாரமுள்ள கட்சிகளின் பெயரில் அல்லது அடுத்த நிலைப் பின்னணியில் இப்படி அலைகிறார்களா? அடையாளம் எதுவுமில்லையே? வண்ணங்களும் எதையும் சுட்டவில்லையே?  அரட்டி உருட்டிச் சம்பாதிப்பதுதான் வேலையா? அல்லது நயந்து சொல்லிக் காரியமாற்றிக் கொள்வதா? பசங்க பவ்யமாத்தான் பேசறானுக…! உலகமெங்கள் கைகளிலே…உருளும் பணமும் பைகளிலே…யோசிச்சுப் பார்த்தா நான்னே ராஜா….!

அபார்ட்மென்டுகளாய் என் பார்வை போனது என்னவோ உண்மைதான். ..அக்கறையாய் விசாரிக்கவும் செய்தேன்தான். அவர்கள் சொன்னார்கள்.

அப்படித்தான் சார்….என்ன பண்ணச் சொல்றீங்க…? ஏரியாவுக்கு ஒண்ணுன்னு கோஷ்டி திரியுது…அபார்ட்மென்டுக்கு ஏத்த மாதிரி வசூல்…உங்க அபார்ட்மென்ட்டுல எட்டு வீடு இருக்குன்னா…நாப்பது கேட்பாங்க…பைசா குறைக்க மாட்டாங்க…எதுக்கு இவ்வளவுன்னு கேட்கப்படாது. சொன்னதைக் கொடுத்திரணும். யாரு வந்து பேசினாங்களோ அவன்ட்டத் தவிர வேறே ஆள்ட்ட நீங்க கொடுக்கவும் முடியாது. சின்ன வேலைதான்….அரை மூடைச் சிமிண்டு கூட ஆகாதுதான். நாலு தட்டு மணல்தான் ஆகும். கொஞ்சம் ஜல்லி…சட்டுச் சட்டுன்னு போட்டுப் பரப்பி, ஒரு இழுப்பு இழுத்து விட்டுட்டுப் போயிடுவாங்க…தண்ணி அதுபாட்டுக்கு உள்ளுக்குள்ளே போக ஆரம்பிச்சிடும்…வெளில தெரியாது எதுவும்…நாமளே ஒரு சித்தாள வச்சி செய்திட முடியும்தான். முடியும்…ஆனா முடியாது…அவுங்கள ஒதுக்கிட்டு வேறே எவனையும் நீங்க நெருங்கவே முடியாது. அப்டிச் செய்தீங்கன்னா…ராத்திரியோட ராத்திரியா வந்து இடிச்சிப் போட்டுட்டுப் போயிடுவாங்க…கடப்பாரையால நாலு குத்துக் குத்தினா முடிஞ்சு போச்சு…!.நடந்திருக்கு அப்படி…! மசியாதவங்களுக்கு அதுதான் பதில்…! ஆனா ஒண்ணு…கார்ப்பரேஷன்ல ஒரு வார்த்தை கேட்டுக்கிறது நல்லது…இப்ப இந்த ஏரியாவுல துவக்கியிருக்காங்கன்னு நினைக்கிறேன்…

பளிச்சின்னு சொல்லப்போனா இதுவும் ஒரு வகையான தண்டல் அராஜகம்தான். நாமதான் எல்லாத்துக்கும் பழகிட்டமே….எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க…பேசாமச் செய்யச் சொல்லிட்டு காச வசூல் பண்ணிக் கொடுத்தனுப்புங்க…அது ஒண்ணுதான் வழி….! ஆள் வந்து கேட்டாச்சுல்ல…இனி காரியம் முடிக்கிறவரைக்கும் உங்கள விட மாட்டாங்க… பொறில சிக்கின எலி மாதிரிதான்…..!

எனக்கென்னவோ சரியாய்த் தோன்றவில்லை. முடிந்தவரை இழுத்தடிப்பது என்று முடிவு செய்துகொண்டேன்…எதற்கும் கார்ப்பரேஷன் ஆபீஸ் போய் ஒரு வார்த்தை கேட்டு விடுவது, விண்ணப்பித்துக் கொள்வது என்றும் முடிவு செய்து கொண்டேன். இவன்தான் சரியான ஆளுன்னுதானே அபார்ட்மென்ட்ல எங்கிட்ட இந்த வேலயை ஒப்படைச்சிருக்காங்க…? அவுங்க எங்க ஒப்படைச்சாங்க…அதுவா என் தலைல விழுந்திருக்கு….! போகட்டும்…பத்தோட பதினொண்ணா இதையும் செய்து வைப்போம்…எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்!கொஞ்சம்அலையவேண்டியிருக்கும்…அவ்வளவுதானே… ஆனா சரியாச் செய்யணும்…தப்பு வந்திடக் கூடாது…தப்பான கைக்குப் போயிடக் கூடாது…! ஜாக்கிரதையா இருக்கணும்…! காசு பறிபோயிடக் கூடாது…!

அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். எதுக்கும் நல்லா விசாரிச்சிக்குங்க சார்…! –மறுபடியும் ஒரு எச்சரிக்கை. அவருக்கும் பயம் வந்திடுச்சு போல்ருக்கு…எதுக்குடா வம்புன்னு…? மனிதர்கள் ஜாக்கிரதையானவர்கள். நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன என்று? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி…அதானே?

வீதியெங்கும் அங்கங்கே இரும்புக் கம்பங்கள் உயர உயரமாய் நிறுத்தப்பட்டு வெவ்வெறு விதமான  வண்ணக் கொடிகள் விர் விர்ரென்று காற்றுக்கு ஈடு கொடுத்துப் பறந்து கொண்டிருந்தன. ஒன்றை இன்னொன்று பீட் பண்ணுவது போல் உயரங்கள் மேலெழுந்திருந்தன. சிறிசும் பொிசுமாய் உயரத்திற்கேற்றாற்போல் ஜிகு ஜிகுவென்று பறந்து அலைக்கழிந்தன. ஜிகு ஜிகு ஜிகு-ஜிகு ஜிகு ஜிகு.ஜியாலக்கடி ஜியாலோ…

 இடது ஓரத்திலும், வலது ஓரத்திலும் என்று எதிரும் புதிருமாக அந்தக் கம்பங்களின் கனமான சிமிண்ட் அடித்தள  மேடைகள்  எதிலும் இடித்து விடக் கூடாது என்று பயந்து வாகனங்கள் நின்று, நிதானித்து, ஒதுங்கி, ஒடுங்கி ஜாக்கிரதையாய் நகர்ந்து கொண்டிருந்தன.

                                    ------------------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை           ஆவநாழி -ஜனவரி-பிப்ரவரி 2025 இதழ் பிரசுரம் “காளான்கள்…!”             ஆ ளாளுக்கு வந்து நின்றார்கள். எங்கிருந்துதான் ஃப...