22 மே 2023

 

                                                                                          

சிறுகதை                                    “மாசற்ற ஊழியன்            22.03.2023 பிரசுரம்        


                                                                                                                                                                                                                                                                    

      

       அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது.  இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி.  நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் மனதில்தான் எத்தனை நம்பிக்கை? நம்மாள் வந்திட்டாருய்யா...கனிவான பார்வையில் சொல்லாமல் சொன்னார்கள்.

 

உறாஉற்...உறாஉற்...உறா...குரலெடுத்து உச்சமாய் சிரிக்க முயன்றார்.   சுற்றிலும் ஏகாந்தமாய்க் கூடியுள்ள மக்களின்பால் கவனம் சென்றது. . என்னைப் போலவே அவர்களும் யோசனையில் இருப்பதுபோலவே தென்படுகிறதே! கனிவான அந்தப் பார்வை நொடியில் ஏன் இப்படி மறைந்து விட்டது? ரொம்பவும் அப்படிப் பார்த்தால் அரசர் லேசாக நினைக்கக் கூடும் என்று தோன்றி விட்டதோ? மக்கள் கருத்தானவர்கள். எந்த நேரத்தில் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆழமாய் அறிந்தவர்கள். அமைதியாய்த்தான் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் செய்ய வேண்டிய நேரத்தில் மிகச் சரியாய்ச் செய்து காண்பித்து விடுவார்கள்.

அது கிடக்கட்டும்....அப்படி என்ன யோசனை? அதுதான் என்னிடம் வந்து விட்டாயிற்றே! பிறகென்ன கவலை? இனி எல்லாம் ஜெயம்தான். எல்லாவற்றையும் ஒரு ஆட்டு ஆட்டாமல் விடமாட்டேன். இத்தனை ஆண்டுகள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம். குமுறிக் கொண்டிருந்த மனசு. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொண்டதால் எதுவும் செய்ய முடியாத நிலை.  இனி ஒவ்வொன்றாய் அடித்துத் தூள் கிளப்ப வேண்டியதுதான். மனதுக்குள் பெரிய பட்டியலே தோன்றியது மகாராஜாவுக்கு. அவ்வளவு பேரும் கொண்டாட்டமாய் மக்களின் வரிப்பணத்தை ஸ்வாகாப் பண்ணியவர்கள். அவர்களுக்கு நல்லது செய்வதாய் படம் பண்ணியவர்கள். பாவலாக் காட்டியவர்கள். தெரிந்துதான் அவர்களும் உடன்பட்டார்கள். ஏதோ கொஞ்சமாவது நன்மை கிடைக்கிறதே என்று! ஆனாலும் அதற்கும் என்ன ஒரு அதிகாரம், ஆர்ப்பாட்டம், விளம்பரம். கையை நீட்டச்சொல்லித் தடவி விட்டதற்கா இவ்வளவு? என்னமோ கொடுத்தாற்போலும், மாயமாய் மறைந்தாற்போலும்?

ஒரு நோட்டம் விட்ட அந்தக் கணத்தில் பிரஜைகளை, அவர்களின் மன உணர்வுகளை ஆழமாய் உணர முடிந்தது. திடீரென்று ஒரு ஐயம். ஒருவேளை உறங்கி விட்டார்களோ! நான்தான் அப்படி என் காலத்தைக் கழித்திருக்கிறேன் என்றால் இவர்களுமா இப்படி? நானாவது சாதகமான காலத்தை எதிர்நோக்கி உறங்கி என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இவர்கள்? பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் அவர்களால்? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ ஒரு வாய்ப்பு அவர்களுக்கு. பிறகு எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே? விதியே என்று இருக்க வேண்டியதுதானே? முடியுமானால் ஏதாவது எழுதிக் கொண்டுவந்திருப்பார்கள். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஏதாச்சும் ஆகுதா பார்ப்போம்...அவ்வளவுதானே? 

 

       சரி, சபையை ஆரம்பித்தால்தான் இவர்கள் விழித்துக் கொள்வார்கள். அமைச்சரே! யோவ் அமைச்சரே!! என்னய்யா நீர்!!! உம்மிடம் பொறுப்பை ஒப்படைத்ததே தவறு போலிருக்கிறதே? காலாகாலத்தில் ஆரம்பித்து வையுமய்யா! மக்கள் எகத்தாறாகக் கூடியிருக்கிறார்கள். நீர் என்னடாவென்றால் முழித்துக் கொண்டிருக்கிறீரே? கொதித்து, பொறுமை இழந்து விடப் போகிறார்கள்.

 

அரசே! இதோ ஆரம்பித்து விட்டேன் அரசே... முதலில் இறைவணக்கம்.

       என்னது? இறை வணக்கமா? என்னய்யா இது? எப்பொழுதும் இல்லாத புது வழக்கம்? 

       நீங்கள் சபை நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என்று சொன்னீர்களே…மன்னா...! அதனால்தான்...

 

       உண்மைதான்…அதற்காக? இதென்ன அரங்கக் கூட்டமா? மக்கள் சபை அய்யா…மக்கள் சபை…அவர்களின் பிரச்னைகளைப் பேச வந்திருக்கும் இடம். அதற்குத்தான் முதலிடம். அதற்காகத்தானே இன்று இந்த சபையே? பிரச்னைகளை வெறுமே பேசுவதோடு கலைந்து விடக்கூடாது…தீர்வு காண வேண்டும்…அப்படியான கோணத்தில்தான் இவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனுவையும் பரிசீலிக்கப் போகிறேன்...ஒன்றே ஒன்றானாலும் உருப்படியாய்,வசமாய் மாட்டியிருக்கிறது ஒரு மனு...அதற்கான நீதி இன்று...     

செய்யுங்கள் மன்னா...நன்றாகச் செய்யுங்கள்...இருந்தாலும் சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?

       சம்பிரதாயமா? நல்லது. அப்படியென்றால் நான் ஒரு யோசனை சொல்கிறேன். சம்பிரதாயத்தைப் பயனுள்ளதாக்குவோம்…இந்த நாட்டின் பொது நலனுக்காக வேண்டும் ஒரு பாடலை பாடச் சொல்லும்…அது இரண்டு வரியாய் இருந்தாலும் பாதகமில்லை.

       நல்லது அரசே…என் மகனே இருக்கிறான்…

 

       ”எது உம் மகனா? ஏனய்யா…அதற்கும் கூடவா தயார் பண்ணிக் கொண்டுவந்து விட்டீர்? சரி போகட்டும்…இன்று  வேண்டுமானால் பாடிவிட்டுப் போகட்டும்… எதிலும் வாரிசு என்கிற பேச்சுக்கே இடமில்லை இங்கே. மக்களில் ஒருவர்தான் ஒவ்வொரு முறையும் இறை வணக்கம் பாட வேண்டும்…என்னை என்ன கிறுக்கன் என்று கண்டீரா? உம் மகன் பாடுவதானாலும் மக்களிடம் அனுமதி பெறவேண்டுமய்யா? அவன் பெயரை அறிவித்து அதை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவர்கள் ஒரு சேர சம்மதம் சம்மதம் என்று ஒப்புகைக்குரல்  எழுப்ப வேண்டும். அல்லாமல் நீர் தன்னிச்சையாக அறிவிப்பதும், அதற்கு நான் அமுக்குணியாய் இருப்பதும் அத்தனை நல்லதல்ல.

       ஆகட்டும் மன்னா….ஆனாலும் நீங்கள் இப்படித் திடீர் என்று முற்றிலும் மாறிப் போவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..

       உமக்கு அதிக சர்வீஸ் ஆகி விட்டதே என்று வாய் கிழிகிறதா? என்ன, நாம் தனியே சம்பாஷிப்பதையெல்லாம் பொதுச் சபையினில் பகிரங்கப் படுத்துகிறீர்? எங்கே உமது மகன்…அவனை வந்து சட்டென்று பாடி விட்டு மறையச்  சொல்லும்…

       மகனே ருக்மாங்கதா….

       என்னது? ருக்மாங்கதனா? என்னய்யா பேர் இது? சரித்திர காலப் பெயரையெல்லாம் வைத்துக் கொண்டு..

       இல்லை அரசே…ருக்மாங்கதன் நமக்கு முந்தைய காலத்தவன்... மக்களுக்காகவே வாழ்ந்து மடிந்தவன்…வாழ்நாள் பூராவும் அவர்களின் பிரச்னையைத் தலையில் சுமந்தவன்…அவர்களைத் தட்டி எழுப்பியவன்…புரட்சியை வெடிக்கச் செய்து புதிய உலகம் படைத்தவன்…

       அப்படி இவன் இருக்கப் போவதில்லையென்றாலும், பெயராவது அப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே என்று வைத்தீராக்கும்…பெயரில் என்னய்யா இருக்கிறது…செயல்…செயல்…அது ஒன்றே நமது வெற்றி….அதுதானய்யா காலத்திற்கும் நிற்கும்….நம்மைஅடையாளப்படுத்துவது நம்மின் தன்னலமற்ற சேவை ஒன்றே…தன்னையே அற்பணித்தவன் இந்தப் பெயர் கியர் இதிலெல்லாம் கவனம் செலுத்துவதில்லை…நீர் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்…சாதாரண மக்களைப் பாரும்…குப்புசாமி,அமாவாசை,  பிச்சாண்டி, சாமுண்டி…என்று …அதுதானய்யா யதார்த்தம்…யதார்த்தம்தான் வாழ்க்கையின் அசல்…அதைப் புரிந்துகொள்ளும் நீர்…

ஆகட்டும்மன்னா….நேரமாகிறது…என்மகனைஅழைக்கிறேன்…ருக்மாங்கதா…ருக்மாங்கதா…

       தந்தையே…

       பின்னால்தான் நிற்கிறாயா…நான் உன் இருப்பிடத்தை மக்கள் மத்தியில் தேடுகிறேன்…

       அங்கு நின்று என்ன பயன் தந்தையே…உங்கள் அருகில் நின்றால்தானே சட்டென்று இடத்தைப் பிடிக்க முடியும்…

       ஆனாலும் மக்களின் நாடி அறிய வேண்டுமப்பா…

       அதற்கு  அதிகாரம் கையில் இருக்க வேண்டும் தந்தையே…

       இப்படி ஒரு அபத்தமான பதிலை நான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை…மக்களோடு மக்களாய் நின்றால்தான் அவர்களின் மனங்களை  அறிய முடியும் என்பதுதான் மரபு….அரசரும் நானும் இன்றும் கூட மாறுவேடத்தில் பல இடங்களுக்குச் சென்று வருவது அதற்காகத்தான்…

       நீங்கள் நினைப்பதுபோல் நான் அவர்களுக்கு உழைத்து உருக்குலைந்து அவர்கள் என்று என் பெயரைச் சொல்வது, நான் என்று உங்கள் பதவியை அடைவது? அது நடவாத காரியம்…இடத்தைப் பிடித்து மடத்தை ஆள வேண்டியதுதான்...உம்...சொல்லுங்கள் என்று உசுப்பினால் கோரசாகக் கத்திவிட்டுப் போகிறார்கள்....மந்தையிலே ஒரு ஆடு ம்மே...என்றால் ஒன்றன்பின் ஒன்றாக மற்றவையும் கத்துவதில்லையா? இந்த மக்கள் மந்தையை எப்படி மேய்ப்பது என்பதை நான் நன்கறிவேன் தந்தையே...

       அதற்குள் முடிவு செய்து விட்டாயா? எனக்கு எப்பொழுது ஓய்வு தர வேண்டும் என்பது அரசருக்குத் தெரியும்…அதற்கு சம்பிரதாயங்கள் நிறைய உள்ளன….

       ஒரு வயதுக்கு மேல் சம்பிரதாயங்களெல்லாம் பார்க்க வேண்டியதில்லை என்று ஒரு உப ஆணை உள்ளதை நீங்கள் அறிய மாட்டீர்கள் தந்தையே…உங்கள் காலத்திலே உருவானதுதான் அது..உங்களது சர்வாதிகாரத்தில் தானே சுயம்புவாக எழுந்தது அது. நம்மையறியாமல் நமக்கென்று நம் வாழ்க்கையில் நாம் வலைகளைப் பின்னிக் கொள்கிறோம்...அதற்குப் பெயர்தான் வினை...அதை விதைத்தால் அதைத்தானே அறுக்க முடியும்.. .நான் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். அதைத் தொட்டவுடன் உங்களை நானே தட்டி விட்டு விடுவேன்…அப்போது எவனும் குறுக்கே வரமுடியாது…வந்தாலும் தேறாது...

       தேறாதா? அப்படியென்றால்?

அப்படியென்றால் அப்படித்தான். இப்போதே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நடக்க நடக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் தலைவிதியே என்று...அப்போது உங்கள் கைகளும் கட்டப்பட்டுவிடும்...

இப்போதே நான் அப்படித்தானே இருக்கிறேன்...

புரிந்தால் சரி...

மெதுவாகப் பேசு…என்னை விட உனக்கு மூளை ஜாஸ்தி…நமக்குள் இப்படியெல்லாம் வாதம் மூழ்கிறது என்று தெரிந்தால் அதுவே பெரிய ஆபத்து...உன்னை அருகே வைத்துக் கொண்டிருப்பதே ஆகாது…என் காரியத்தையே கெடுத்து விடுவாய் போலிருக்கிறதே…போய் ரெண்டு வரி பாடிவிட்டு வா….போ…போ…

       முதலில் இறை வணக்கம். எல்லாரும் எழுந்து நிற்கலாம்.

      

யாரோடும் எவரோடும் யாண்டும் சேரக் கண்டு                        

யாதொன்றின் காரணங்கள் எவரும் அறியாதிங்கு

       எல்லாமும் நன்மைக்கே இறைவன் பாதம் நின்று

ஏத்திடுவோம் போற்றிடுவோம் எமக்கு நன்மை என்று

 

அமைச்சரே….இப்படி வாரும்….

வந்தேன்…

என்னய்யா இது, இறை வணக்கம் மாதிரியே இல்லையே…

கடவுள் வாழ்த்துதான் மன்னா…தலைவனைப் போற்றுதல்..தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி…அவரின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்து அவர் பாதத்துளிகளில் சமர்ப்பித்தல். தலைவனை இறைவனாகப் பார்க்கிறார்கள் மக்கள்.

மக்களா? தொண்டர் என்று சொல்லும்…மொத்த மக்களும் அவர் பின்னாடி என்பதுபோல் பகர்கிறீரே…!

தலைவர் அப்படித்தான் சொல்கிறார் மன்னா?

எந்தத் தலைவரைய்யா…? நீர்பாட்டுக்குப் பிதற்றுகிறீர்…இங்கே மக்கள்தான் தலைவர்களய்யா…மன்னன்தான் தொண்டன்…

அது தேர்வு செய்வதற்கு முன்பு….தேர்ந்தபின்பு மன்னன்தான் மக்களுக்குத் தலைவன்…அதில்தான் எத்தனை இன்பம் இருக்கிறது. அதை அறியமாட்டேன் என்கிறீர்களே…பதவி சுகத்தை உணராத மன்னர் என்றால் தாங்கள்தான்…

பதவியாம் பதவி…நான் இங்கே அதற்கா வந்திருக்கிறேன்…இதுநாள் வரையில் செய்ய முடியாதவற்றையெல்லாம் நிறைவேற்றத்தானய்யா இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். இந்த இடம் என் மா தவத்தால் பெறப்பட்டது. என் மக்களுக்கு நல்லது செய்ய நானே அடைந்த மாபெரும் பேறு.

       அப்படியானால் நேற்றுவரை எங்கிருந்தீர்கள் தாங்கள்…

       என்னிடமே கேள்வி கேட்கிறீரா? உம்மை அமைச்சராக வைத்திருப்பதே தவறு…அதெல்லாம் சொல்வதற்கில்லை. போகப் போக உமக்கே தெரியும்... இந்த அமர்வு முடிந்தவுடன் முதல் வேலையாக உம்மைத் தூக்கியாக வேண்டும். இல்லையென்றால் நீர் உம் மகனை அரியணை ஏற்றுவதுபற்றி ஆகவேண்டியதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்…ஆபத்தான ஆளய்யா நீர்…

       அமைச்சரே…எங்கே அந்த வரப்பு கட்டிய அதிகாரியை அழைத்து வரச் செய்யும்…இன்று அது ஒன்றுதான் விசாரணை...மீதி மனுக்களை தினம் ஒன்றாகப் பார்க்கலாம்...

       மன்னா, ஒரு வேண்டுகோள். அது ஒருவரில்லை. பலர் இருக்கிறார்கள் .நாடு முழுவதும் அத்திட்டத்தை நாம் நிறைவேற்றியிருக்கிறோமே…

       திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் நீங்கள் என்ன பொருளில் சொல்கிறீர்கள்? நிதி ஆதாரம் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்கிற பொருளில்தானே…

       ஆம் மன்னா…திட்டத்திற்கென்று இத்தனை கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது என்றாலே நமக்குப் பெருமைதானே…மக்களுக்கான திட்டங்களில்தானே இச்செலவை மேற்கொண்டிருக்கிறோம்…

செலவுதானய்யா மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. திட்டம் என்னவாயிற்று?.

அங்கங்கே எல்லா இடங்களிலும் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது மன்னா...   எழுதி வைத்துவிட்டால் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்கிறீர்...அப்படித்தானே?

இல்லை மன்னா திட்டத்தை நிறைவேற்றி, பிறகுதான் போர்டு வைக்கப்பட்டது என்று சொல்ல வந்தேன்.

ஆனால் இன்று போர்டு மட்டும்தான் இருக்கிறது என்பதையும் சொல்ல மறந்துவிட்டீரே?

அதை எப்படி மன்னா நாமே சொல்லிக்கொள்ள முடியும்...

ம்ம்...அப்படி வாரும் வழிக்கு...அதனால்தான் மக்கள் சொல்கிறார்கள். அதைத் தெரிந்து கொள்ளும்.

மக்கள் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைத் திருப்தி செய்யவே முடியாது மன்னா...இங்கு வந்து உட்கார்ந்து பார்த்தால்தான் அவர்களுக்குக் கஷ்டம் புரியும்...

எதைப்பற்றி?

திட்ட ஒதுக்கீடுபற்றி....

அதாவது திட்டத்தின் மூலமாக உமக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்துகொள்வது என்பதுபற்றி...அப்படித்தானே...?

எல்லாவற்றிற்கும் இப்படிக் குதர்க்கமாய்ப் பொருள் கண்டால் எப்படி?

அப்படியென்றால் இல்லை என்று மறுக்கிறீர்....அப்படித்தானே..?

ஏனய்யா வாய் அடைத்து விட்டது...? இன்று ஒருநாள்தான் நீர் அமைச்சர்...இன்றே உமது கடைசி நாள்...நினைவில் வைத்துக் கொள்ளும்...இந்தத் திட்ட ஆய்வில் நீரும் இருந்திருக்கிறீர்...அதனால்தான் இன்று உமக்கு இடம்...நாளை முதல் நீர் தடம் தெரியாமல் போய்விடுவீர்... சரி....போகட்டும்...உமது விஷயத்தைப் பிறகு பார்ப்போம்...இப்போது .நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்...

 

வாய்க்கால் கட்டிய இடத்தில் கடைமடை வரை தண்ணீர் பாய்கிறதா? பார்த்தீரா? கட்டிய காங்கிரீட்  வயல் வரப்புகளில் ஆடு நடந்தால் இடியாமல் இருக்கிறதா? ஒரு தட்டுக்கு சிமின்ட்டுக்கு எத்தனை தட்டு மணல் போட்டிருக்கிறார்கள் அதைக் கணக்குப் பண்ணினீரா? உடைகல் வைத்துக் கட்டப்பட்டுள்ளதா? அல்லது அங்கங்கே கிடந்த கப்பிகளை அள்ளிப் போட்டிருக்கிறார்களா? ஒரிஜனல் ஜல்லி கொண்டு வரப்பட்டதா? கலவை எப்படியிருந்தது...கண்ணுற்றீரா? ஒரு மழைக்காவது தாங்குமா? அல்லது பலத்த காற்றுக்கே பெயர்ந்து போகுமா?

மன்னா ஒரே சமயத்தில் இத்தனை கேள்விகளை அடுக்குவீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை....

இத்தனையையும்  என் சார்பில் நீர் கேட்டிருக்க வேண்டுமய்யா...நீர் எதிரணியில் சேர்ந்து கொண்டதனால் இப்போது நானே கேட்கும் நிலை ஆகிவிட்டது...

இதோ நிற்கிறாரே அந்த அதிகாரி அவர் ஒப்பந்தத்திற்கு விட்ட ஒப்பந்தகாரரிடம் அவர் ஏற்றுக் கொண்ட வேலைக்கு ஏற்றாற்போல் போதிய பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளதா? இல்லை போன வருஷம் வேலை செய்வதற்குக் கொடுத்த அதே பத்திரத்தை எடுத்து இந்த வருடத்திற்கும் கணக்குக் காண்பிக்க வசதி செய்யப்பட்டதா? இதற்காக யார் யாருக்கு எவ்வளவு எவ்வளவு கொடுத்தார்? மேலிருந்து கீழ்வரை உண்டான கமிஷனின் சதவிகிதம்தான் என்ன? என்னய்யா முழிக்கிறீர்...அந்த அதிகாரியிடம் முன் விசாரண நடத்தினீரா இல்லையா? அமைச்சரே உம்மைத்தான் கேட்கிறேன்....

 

மன்னா,நான் ஏற்கனவே அதிர்ந்து போயிருக்கிறேன்... இதென்ன மறுபடியும் திடீர்த் தாக்குதல்? அதுவும் மக்கள் மன்றத்தில்...தாங்கள் கட்டளையிட்டிருந்தால் சிரமேற்கொண்டு செய்து முடித்திருப்பேனே...? இப்படியெல்லாம் நடக்கிறதென்று இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது....

நீர் சரியான அமுக்குளியய்யா..முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று எல்லோரும் அறிந்த பழமொழியின் முழு உண்மை இன்றுதான் உணரப்படுகிறது......உமது மகனை எப்படி உள்ளே நுழைப்பது என்பது பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர். ஆனால் இது தெரியவில்லை என்கிறீர்...நம்பும்படியாக இருக்கிறதா?

மன்னர் உத்தரவின்படி நிதி ஒதுக்கீட்டோடு என் வேலை முடிந்து விட்டது மன்னா...

உம்மின் தேவையே அதுதானே...மற்றதைப் பற்றியெல்லாம் நீர் என்று கவலைப்பட்டிருக்கிறீர்...

பிறகு அதிகாரிகள் என்று எதற்கு இருக்கிறார்கள் அரசே...எல்லாவற்றையும் நாமே தலையில் சுமக்க முடியுமா?

ஊழல் நடக்கும் என்று தெரிந்தால் சுமந்துதானய்யா தீர வேண்டும்...மக்கள் நம்மைத்தான் மனதில் வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருக்கிறார்களே ஒழிய அதிகாரிகளா தேர்வு செய்யப்பட்டார்கள்? அவர்களா மக்களின் பிரதிநிதிகள்? அவர்கள் மக்களின் சேவகர்கள்...அதை உணர்த்துவது நம் வேலை...

இங்குதானய்யா எனக்கு பலத்த சந்தேகம் வருகிறது?

மன்னா...

என்ன நொன்னா...? மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளால் அதிகார வர்க்கம் கெட்டதா? அல்லது அவர்களால் இவர்கள் கெட்டார்களா?

அது பிடிபட்ட காலத்தில் நீதி மன்றத்தில்தான் தெரியும் மன்னா?

எப்படி?

உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்டாய் என்று...குடுமிப்படி வரும்...அப்பொழுது....

பலே ஆளய்யா நீர்...நன்றாக விளக்கம் அளிக்கிறீர்...என்ன இருந்தாலும் மதி நுட்பம் வாய்ந்த அமைச்சராயிற்றே...

ஆனாலும் உம் மீது எனக்கு வருத்தம்தான்...

எதற்காக மன்னா? நான் எனது கடமையைக் கண்ணும் கருத்துமாகத்தானே செய்கிறேன்...

கண்ணாய்ச் செய்திருக்கிறீர்...கருத்தாய்ச் செய்யவில்லை...கருத்தாய்ச் செய்வது என்பது அர்ப்பணிப்பது...அது தன்னலமற்றது...அப்படி ஆளா நீர்? எனக்கு அந்த நம்பிக்கையெல்லாம் இல்லை..வாரத்தின் முதல்நாள் மனுநீதி நாளாக அறிவித்து பொருந்தலாறு வரை மக்கள் வரிசை நீள்வதைப் பார்த்திருக்கிறீர்தானே? அதற்கு என்ன பொருள்? மக்கள் அத்தனை ஆயிரம் குற்றங் குறைகளோடு இருக்கிறார்கள் என்று பொருள். அப்படிக்  குவிந்த மனுவில் ஒன்றுதான் இப்போது நான் கேட்பது.....ஒவ்வொரு மனுவும் ஒரு பெரும் தண்டனைக்குரியதாகத் தோன்றுகிறதய்யா எனக்கு...உரிய தீர்ப்பளித்தால்தான் மக்கள் ஆறுதல் கொள்வார்கள். இல்லையெனில் புரட்சி வெடிக்கும் அபாயம் உண்டு நாட்டில்...ஞாபகமிருக்கட்டும்...

பாரும்...இப்பொழுதாவது மக்கள் குறைகளைக் கண் கொண்டு பாரும்...அரண்மனையின் உள்ளே ஏடுகளில் நாமாக எழுதிக் கொள்வதில்  இல்லையய்யா அரசாட்சி...மக்களோடு மக்களாய் ஒன்று கலந்து அவர்களின் வாழ்வியலின் நுட்பங்களை உணர்வதுதான் ஆட்சியின் சாரம் என்று அறியப்படும்.......

மனுதாரின் பெயரைப் படியும்.....

மன்னா...அது...வந்து....

என்னய்யா வந்து போயி....படியும் என்றால் படியும்...படித்துத் தொலையும்...

ப...ப....ப.....பஞ்சலிங்.....

ம்ம்....தெரிகிறதா....இந்த மனுதாரர் இப்போது ஓய்வு பெற்ற ஒரு பணியாளர்....தான் இந்த அதிகாரியிடம் பட்ட பாட்டை இம்மனுவில் புகாராக எழுதியுள்ளார்....விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று பத்தி பத்தியாகக் கை ஒடிய எழுதித் தலையில் அடித்துக் கொண்டும் அதிகாரி என்கின்ற போர்வையில் இந்த ஆள் அதைச் சட்டை செய்யவில்லை.அதையெல்லாம் தூக்கிக் குண்டிக்கடியில் போடும் என்று ஏளனமாய்ப் பகன்றிருக்கிறார்.  போதாக்குறைக்கு இவரை பலர் மத்தியிலும் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார். எழுதியதையெல்லாம் கிழித்துப் போடும் என்று சொல்லி, வேறு பேப்பரில் நான் சொல்வது போல் எழுதுங்கள் என்று வேறு வற்புறுத்தியிருக்கிறார். இவர் முடியாது என்று மறுத்து நின்றபோது, லீவு போட்டுவிட்டு ஒழுங்காய் வெளியேறு என்று விரட்டியடித்திருக்கிறார்.  தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றியிருக்கிறார்....ஓய்வு பெறப்போகும் கடைசி ஒரு வருஷத்தில் இருக்கிறேன் நான் என்று வேண்டியபோது அதற்கான சலுகையை அவருக்கு அளிக்காமல், இதுதான் உன் தலைவிதி என்று காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ஆளைக் கடத்திவிட்டு அவருக்கு வேண்டும் ஒரு நபரைத் தன்னிடத்தில் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணமாயும், காரியமாயும் அவர் யாரைப் பயன்படுத்தியிருக்கிறார் தெரியுமா?

அதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன் மன்னா...

உம்முடைய பெயரைத்தானய்யா பயன்படுத்தியிருக்கிறார்...அதைத் தெரிந்து கொள்ளும்...

மன்னா...என்ன இது அநியாயம்....

நடிக்கிறீரா...என்னிடமே நடிக்கிறீரா....நீர் அவருக்கு வேண்டியவராம்...நீர் இருக்கும்வரை யாரும் அவரை அசைத்துக் கொள்ள முடியாதாம்....என்னை எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். எனக்கு அமைச்சரைத் தெரியும்...அமைச்சர் என் பாக்கெட்டில்.....என்றிருக்கிறார். நீர் அப்படித்தான் இருந்தீரோ....உம்மீதே இப்போது சந்தேகம் வருகிறது எனக்கு. உமது முகம் ஏன் இவ்வளவு விகாரமாகிறது? இருக்கட்டும்...அதைப் பிறகு பார்ப்போம்....அதற்குத் தனியாக வருகிறேன்....

 பலரையும் கடித்துக் குதறிய ஓநாய்..இந்த அதிகாரி .குறிப்பாக மக்களை...மக்களின் வரிப் பணத்தை....இப்படியான மனிதர்களை விட்டு வைக்கலாமா? கூடாது...கூடவே கூடாது...முதலில் அவரிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்யுங்கள்...அரசு கஜானாவில் சேருங்கள்...அவருக்கு அவரது நியாயமான பணிக்கு என்ன உண்டோ அதை மட்டும் கொடுத்து விடுங்கள்...பிழைத்துப் போகட்டும்...ஆனால் ஒன்று தனது மொத்தப் பணிக்காலத்திலும் கடமை தவறி, சொத்துச் சேர்த்த அந்தக் கயவனை இப்போதைக்குத் தனிமை இருட்டுச் சிறையில் போடுங்கள். பிறகு பார்க்கலாம் அவன் முடிவை. மக்களுக்குச் செய்ய வேண்டிய பணி எத்தனையோ காத்திருக்கிறது. அவர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களை அப்படிக் காக்க வைப்பது மாபெரும் தவறு.

மகா ஜனங்களே...இந்த நடவடிக்கையில் உங்களுக்குத் திருப்திதானா? இனி படிப்படியாக ஒவ்வொன்றிலும் இம்முறை புகுத்தப்படும்...யாரும் எதிலிருந்தும் தப்ப முடியாது...

மிக்க சந்தோஷம் மன்னா...உங்களுக்கு நன்றி....இதுபோல் ஏராளமான புகார்கள் இன்னும் பல உள்ளன. ஒவ்வொன்றிலும் எங்களின் உழைப்பு சுரண்டப்பட்டிருக்கிறது...உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது...

அத்தனையும் கவனிக்கப்படும்...உங்களில் ஒருவன் நான்...உங்களுக்கான திட்டங்களை நான் அறிவேன்...அவற்றின் பின்புலத்தையும் அறிவேன்....நிதி ஆதாரங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன...அவை மக்களை வந்து அடையும்போது எவ்வாறு தேய்ந்து மாய்ந்து போய்விடுகிறது என்பதையெல்லாம் உணர்ந்தவன் நான்...இனி ஒருபோதும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்...என் ராஜ்யத்தின் திட்டங்கள் முழுமையாக உங்களை வந்தடையும். அதில் குறை கண்டீர்கள் என்றால் தாராளமாக நீங்கள் என்னை அணுகலாம். நான் உங்களில் ஒருவன்.

மகா ஜனங்களே...இத்தோடு இச்சபை கலைகிறது...எனக்கு வேறு சில அத்தியாவசியப் பணிகள் உள்ளன. படிப்படியாக உங்கள் குறைகள் முழுவதுமாய் நூறு சதவிகித நேர்மையோடு தீர்த்து வைக்கப்படும். என்னை நீங்கள் நம்பலாம். இல்லையென்றால் ரோட்டில் இழுத்துப் போட்டு அடிக்கலாம்.  நீங்கள் இதுவரை பொறுமை காத்ததற்கு நன்றி.... சொல்லியவாறே கிரீடத்தையும், செங்கோலையும், உடைவாளையும்,ஒவ்வொன்றாகக் கழற்றினார் பஞ்சலிங்கம். ராஜ இருக்கையில் அவற்றை அதிராமல் வைத்தார். தன் அறைக்குள் சென்று வழக்கமான வேட்டி சட்டையோடு வெளியே வந்தார். ரொம்பவும் பழுப்பேறிப் போய்விட்டதாகத் தோன்றியது. இன்று பென்ஷன் வந்ததும் முதலில் ரின் பார் சோப்பு வாங்கி காவி போகத் தோய்த்து உலர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

மணியைப் பார்த்தார். இரண்டு தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஆஉறா...இன்று முப்பத்தி ஒன்றாம் தேதியாயிற்றே....என்றவாறே தனது செல்லை எடுத்தார். ஏதாவது மெஸேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தார்.

தனது ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் கிரடிட்  ஆகியிருக்கிறதா என்பதைத்தான் அவர் நோக்கினார். எதுவுமில்லை. ஏமாற்றமாயிருந்தது. நேரே வீட்டிற்குப் போவதா, அல்லது கருவூலத்திற்குப் போவதா என்று தடுமாற்றமாயிருந்தது. ஒரு நாள் இரண்டு நாள் தாமதமானாலும் பென்ஷன் என்பது கண்டிப்பாய் வந்து விடும். ஏதோ அத்தனை வருடங்கள் நேர்மையாய்ப் பணியாற்றியதற்கு இந்த ஆதாரமாவது இருக்கிறதே என்று மனம் ஆறுதல் பட்டது. நேர்மையாய் இருந்தவனுக்கும், ஊழலாய் இருந்தவனுக்கும் எல்லோருக்கும்தானே பென்ஷன் உண்டு என்றும் மனது அரற்றியது. அப்போதைக்கு வீட்டிற்குச் செல்வது என்று முடிவெடுத்து அந்த வீதியில் சடாரென்று திரும்பினார். லேசான தலை சுற்றல். உடம்பில் ஒரு பதட்டம். உள்ளே சுகர் இறங்குவதுபோல் ஒரு உணர்வு. கைகள் பேன்ட் பாக்கெட்டைத் துழாவின. வழக்கமாய் வைத்திருக்கும் சாக்லெட் இருக்கிறதா என்று தேடினார். உடனே போய் நிறைய ஜீனி போட்டு ஒரு டீ அடித்தால் தேவலை.  ஒரு நிமிடம் தாமதிக்கத் தவறிவிட்டோமே என்று அந்தக் கணத்தில் தோன்றியது அவருக்கு.

அப்போது சற்றும் எதிர்பாராவண்ணம் எதிரே வந்த மொபெட்காரன் அவரை ஒரு இடி இடித்தானே பார்க்கலாம். தொபீர் என்று ப்ளாட்பாரத்தில் சாய்ந்தார் பஞ்சலிங்கம்.

ஐயா...ஐயா...அய்யய்யோ...உங்க மேலயா இடிச்சிட்டேன்....என்னை மன்னிச்சிடுங்கய்யா...மன்னிச்சிடுங்கய்யா...கூறிக்கொண்டே அவரை எழுப்பி உட்கார்த்திவிட்டு எதிர்க்கடையில் போய் ஒரு சோடாவை வாங்கி வந்து அவர் முகத்தில் தெளித்து, மீதியை அவர் வாயில் மெல்ல ஊற்றினான் அவன். சிறிது சிறிதாக சுய நினைவு பெற்ற பஞ்சலிங்கம்....

நானே தடுமாறிட்டுத்தான் வந்திட்டிருந்தேன்...நீ ஒண்ணும் என்னை இடிக்கலே..நானாத்தான் குறுக்கே விழுந்துட்டேன்....என்றார் மெதுவாக. அந்த நேரத்திலும் உண்மை பேசியதில் அவருக்கு ஒரு ஆறுதல்.

வண்டில உட்காருங்கய்யா...வீட்டுல கொண்டு விட்டிடுறேன்.... பதறினான் அவன்.

வேண்டாம்...வேண்டாம்...நா பஸ்லயே போய்க்கிறேன்...இன்னைக்கு நீ கொண்டு விட்டிடுவே...நாளைக்கு யார் வருவா? ரொம்ப தேங்க்ஸ்...நீ கிளம்பு...

பார்த்துப் போங்கய்யா...அவன் சொன்னான். கௌஸ் பாய் என்னும் அந்த நேர்மையான பியூன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் பஞ்சலிங்கம்.

வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களிலும், வறுமையிலும், துயரங்களிலும், நேர்மையும் ஒழுக்கமும் தவறாத எத்தனையோ நல்ல மனிதர்களைத் தான் சந்தித்திருக்கிறோம், அவர்களோடு பழகியிருக்கிறோம்  என்று நினைக்க முற்பட்டபோது, மகிழ்ச்சியோடு,  அர்த்தமுள்ள வாழ்க்கையை தான் வாழ்ந்திருப்பதாக எண்ணி ஒரு நிறைவும் ஏற்பட்டது அவருக்கு.

                    ---------------------------------

 

      

 

 

 

13 மே 2023

 

 

“சொல்லப்படாத கதைகள்“ – சிறுகதைத் தொகுப்பு – ஜனநேசன். வெளியீடு – பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-18.

-------------------------------------------------------------------------------------------------------




இத்தொகுதியின்  முதல் கதையில் நாம் கவனிக்க வேண்டியது இதன் தலைப்புதான்.

குருகும் உண்டு மணந்த ஞான்றே….

இது குறுந்தொகையின் 25-வது பாடலின் கடைசி வரி.

யாருமறியாமல் நான் தலைவனோடு கூடிய காலையில் அங்கே ஓடிக் கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையும், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் மட்டுமே இருந்தன.  அவைகளை எப்படி சாட்சிகளாக்க முடியும்? தலைவன் என்னோடு கூடியதற்கு சாட்சிகள் இல்லையே? அவன் தன் உறுதியிலிருந்து தவறினால் நான் என் செய்வேன்?  என்று பதறுகிறாள் தலைவி. இது இப்பாடலின் கருத்தாக மிளிர்கிறது என்று அறியப்படுகிறது.

            கதையின் நாயகி படித்தவள். நிதானமாய் அணுகுகிறாள் விஷயத்தை. அவனோடு சினிமா திரையரங்கில் நுழைந்த காட்சிக்கான சாட்சியும், பிள்ளையார் சிலைக்கு எதிரிலான விளக்குக் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த காமிரா வழியும், சாட்சிகளைச் சேகரிக்கிறாள்.

            காதலித்தவன் கைவிட்ட நிலையில் அவனது பெற்றோரிடம் நேரில் சென்று உண்மையுரைக்கிறாள்.  அவர்களும் படித்தவர்கள். நேர்மையாக கண்ணியமான குடும்பம். அணுகுமுறை நிதானமாய் இருக்கிறது.

நடப்பு உலகத்தின் பராபரியான ஊடகச் சூழலை மனதில் வைத்து வெட்ட வெளிச்சமாய்  எதையும் செய்து கேவலப்படுத்தாமல், நேரில் வந்து தங்களிடமே சொன்னதற்கு நன்றி  என்று அப்பெண்ணின் பண்பாடு குறித்து  மெச்சி, அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். 

சொல்ல நினைத்த கதைக்கு எவ்வகையிலான வடிவம் கொடுத்து  எடுத்துரைத்தால் சிறக்கும் என்று சரியாக முடிவெடுத்து இச்சிறுகதையை வடிவமைத்திருக்கிறார் ஜனநேசன். அதனால் எளிய விஷயமாயினும் இக்கதை சிறப்புப் பெறுவதான தோற்றம் கொள்கிறது. 

அந்தவகையில் ஜனநேசனுக்கு நம் பாராட்டுக்கள்.

இது போல் கருத்து மிகுந்த எட்டுக்கதைகள் இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்கின்றன. மாதிரிக்கு ஒன்று. அப்போதுதான் வாங்கிப் படிக்கும் ஆர்வம் மிகும்.

இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளின் ஆன்மாவைக் குறிக்கிறது இந்த “சொல்லப்படாத கதைகள்“ தலைப்பின் கதை என்கிறார் ஆசிரியர். தலைப்பு வைப்பதிலும் அதைப் பொருள் கொள்ளும்படி செய்வதிலும் படைப்பாளியின் அக்கறை முக்கியமே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், போதும் என்கிற மனம் வந்துவிட வாய்ப்புண்டு. புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படித்தால்தான் இலக்கியச் சுவை கூடும்.

கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று படைப்பாளியின் பயணம் வெற்றிகரமாய்த் தொடர்கிறது. அவருக்கு நம் பாராட்டுக்கள். மனமார வாழ்த்துவோம்.

                                                ----------------------

 

12 மே 2023

 

“யா…ரப்பே…” – சிறுகதை – ஜவ்வாது முஸ்தபாவின் “ஆறாம் விரல்”  வாசிப்பனுபவம். சிறுகதைத் தொகுப்பு – நன்னூல் பதிப்பகம், மணலி-திருத்துறைப்பூண்டி. (தொடர்புக்கு - 99436 24956)

------------------------------------------------------------------------------------------------------




          சமூக நல்லிணக்கம் இன்றைய முக்கியத் தேவை. அதற்கே கேடு வந்துவிடுமோ என்பதாக பயப்படும் காலமாக இருக்கிறது இன்றைய சூழல். இலக்கியம் இந்த நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுதல் என்பது மிகவும் அவசியம். இலக்கியத்தைப் பயனுள்ள முறையில் அடையாளப்படுத்தும் படைப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமுதாய மேம்பாட்டிற்கான தூண்டுகோலாக நாம் அவற்றைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

            அம்மாதிரியான படைப்புக்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் உண்டுதான். அது எந்த மதத்தைப்பற்றி யார் எழுதியிருந்தாலும், படைப்பு என்ன சொல்கிறது என்பதை மட்டும் உற்று நோக்கி அதன் அவசியத்தை இலக்கியப் பரப்பிற்குள் கொண்டு வந்து கவனப்படுத்த வேண்டியது கடமையாகிறது. இலக்கிய வாசகர்களின் உள்ளத்தில் நன்னெறிகளை ஆழப் பதிய வைத்து அம்மாதிரியான படைப்புக்களின் அவசியத்தை மேலெடுத்துச் செல்ல வெளிப்படையாகவோ, இலக்கியப் பயன்பாட்டிலோ பணியாற்ற வேண்டியிருக்கிறது.

            “ஆறாம் விரல்” சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஜவ்வாது முஸ்தபா அந்தப் பணியைத் தன் கடமையாகச் செய்திருக்கிறார். ஒரு படைப்பாளிக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

            மதக் கோட்பாடுகளை வலியுறுத்தும் அதே நேரம் அவற்றைப் பின்பற்றுவதில் நடைமுறை வாழ்க்கையின் வறுமையின்பாற்பட்ட சிக்கல்கள் மனித உயிர்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை மையமிட்டு, அதனால் ஏற்படும் சொந்த பந்தங்களுக்கிடையிலான உறவு விரிசல்களையும், மன வருத்தங்களையும், சுமுகமின்மையையும் அங்கங்கே தொட்டுத் தொட்டுச் சுட்டிக் காட்டிச் செல்லும் இவர் எழுத்தின் இயல்பான ஓட்டம் நம் மனதை நெருடி நெருடி வேதனையுறச் செய்கிறது. எத்தனையோ வாழ்க்கைச் சிக்கல்களுக்கிடையில், மன ஊனங்களுக்கிடையில்  இறை நம்பிக்கை நம்மை எப்படி வழி நடத்துகிறது என்பதையும் வலியுறுத்தி இவர் கதை சொல்லும் விதம் நமக்கு ஆறுதலளிக்கிறது.

            மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் என்பது எத்தனை அவசியமாக முன்னிற்கிறது என்பதற்கு தன் கதைகளின் கதாபாத்திரங்களுக்கு இவர் வைத்துள்ள பெயர்களும் அதன் மூலம் உருவாக்கி நிறுத்தும் குண நலன்களும் அன்பையும், அரவணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நிறுத்தி அவற்றின் என்றைக்குமான அவசியத்தை ஆழப் பதியச் செய்து முன்னேறும் கதைக்களன் நிகழ்வுகளும் படைப்பாளியின் மீதான மதிப்பை உயர்த்திப் பிடித்து மதிப்புறச் செய்கிறது.

            “யா…ரப்பே…“ – என்ற இந்த முதல் கதையே நம் மனதை வெகுவாகப் பிழிந்தெடுத்து விடுகிறது எனலாம். இக்கதையைப் படித்தபோது இன்னொரு குடும்பத்தில் நடந்த ஆயுளுக்குமான ஒரு பேரதிர்ச்சி அந்த மொத்தக் குடும்பத்தையும் காலத்துக்கும் எப்படிச் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியது என்கிற நினைவு எழுந்து என் மனதை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கி விட்டது.

            அந்த அளவிற்கான பாதிப்பை இத்தொகுப்பின் இந்த முதல் கதையே ஏற்படுத்தி படைப்பாளியின் கருணை மிகுந்த மனநிலையையும், எண்ண ஓட்டங்களையும் உணர்த்தி தொகுப்பின் மீதான மரியாதையை மேம்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை என்றுதான் கூற வேண்டும்.

             யா…ரப்பே….என்றால் “கடவுளே…” என்றுதான் பொருள். ஆனால் எம்மாதிரியான சூழலில் இந்த வேண்டுதல் நிகழ்கிறது என்பதுதான் கவனிக்கத் தக்கதாகிறது.  வெறும் உதட்டளவில் வெளிப்படும் வார்த்தைகளா அவைகள். எவ்வளவு துன்பங்களை, மன பாரங்களை  உள்ளடக்கி அதன் உருவகமாக அடிவயிற்றிலிருந்து பீறிடுகிறது இந்த மாயச் சொல்…! தீராத துயரங்களை எதிர்நோக்கும் எளிய மனிதர்கள் யாரிடம் போய் வேண்டி நிற்பார்கள்? கடவுள் நம்பிக்கை மனிதனின் உயிர்நாடி போன்றதாய் விளங்கி அவனுக்கு ஆறுதலளித்து மேலும் சோர்வடைந்து விடாமல் அவனை இயக்குகிறது. என்றேனும் விடிவு பிறக்கும் என்பதன் தணியாத நம்பிக்கையே கடவுள்.

            ரகமத் அப்படித்தான் தன கணவன் ரகீமிற்காக வேண்டி நிற்கிறாள். அவளின் மனத் துயரம் அளவிடற்கரியது. மருத்துவர் லூயிஸ்  தன்னாலியன்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். ஆனால் ரகீமின் கைப் புண் ஆறுவதாயில்லை. மணிக்கட்டுவரை எடுத்த பின்பும் தொடர்கிறது. தொடர்ந்து அழுகிக் கொண்டேயிருக்கிறது.  என்ன காரணத்தினால் இது நிகழ்கிறது என்பதை உறுதி செய்ய முடியா நிலை. தர்உறாவிற்கு சென்று ஓதுதல் முடித்த பின்பும் விடிவு ஏற்படாமல் வேதனை தொடர்கிறது. செவிலித்தாய் சுந்தரவள்ளி அவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்கிறாள்.  ஆனால் கடைசிவரை ரகீமின் கைப்புண்ணிற்கு முடிவே இல்லாமல் போகிறது. அறுவை சிகிச்சைக்குப்பின்பு கட்டப்பட்ட கட்டை மீறி புழுத்து நெளிகிறது. இரு மகள்களோடு சேர்ந்து நிற்கும் கடைசி நிமிடங்கள். மொத்த மாத்திரைகளையும் விழுங்கி முடிவைத் தேடிக் கொள்கிறான் ரகீம். செய்வினையின்பாற்பட்ட சோதனைதான் இது என்று உறவுகளின் மேல் கொண்ட சந்தேகங்கள் கோபத்தையும், பழியையும் மனதிற்குள் விதைத்து  அதனை மீறிய இறை நம்பிக்கை அவர்களை வழி நடத்திச் சென்று… ஏமாற்றமாகி இறுதி முடிவின்சொல்லொணா வேதனை நம்மை கதி கலங்கச் செய்து விடுகிறது. இறைவா…யாருக்கும் இந்தத் துயரம் நிகழக் கூடாது என்று ரகமத்தோடு சேர்ந்து நாமும் இறைவனை வேண்டி நிற்கும் நிர்க்கதியான நிலையே ஏற்படுகிறது.

            இத்தனை துயரமிக்க சோக காவியத்தை மனம் சுமந்து நிற்கும்போது நாமும் நிலை குலைந்து போகிறோம். என்றுதான் ஆதரவற்றவர்களுக்கு விடிவு? எப்படித்தான் அந்த விடிவு? யார் மூலம்தான் அந்த விடிவு? யா ரப்பே…! (றப்பே…என்பதுதான் சரியோ…!) என்று அகன்ற வானத்தைப் பார்த்து நாமும் வேண்டி நிற்கிறோம்.

            ஜவ்வாது முஸ்தபாவின் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட சூழ லியல் மக்களின் அனுபவம் சார்ந்த இந்தத் தொகுப்பின் கதைகளில் சில பாராட்டத்தகுந்த பரிசுகளையும் வென்றுள்ளன என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தொகுதியின் மூன்று நான்கு கதைகள் சிறப்பாக இருந்தாலே அதைச் சிறந்த தொகுப்பு என்று பாராட்டும் வகைமையில் இத்தொகுதியின் மொத்தப் பதினாக்கு கதைகளின் பத்துக்கும் மேற்பட்ட கதைகள் நம் சிந்தையைப் புரட்டிப் போடும் வலிமை வாய்ந்தவையாய்த் திகழ்தல் படைப்பாளியின் ஆளுமை மிக்க எழுத்துத் திறனை வெளிப்படுத்தும் சாட்சிகளாய் மிளிர்கின்றன.

            அடுத்தடுத்த தொகுதிகளில் ஜவ்வாது முஸ்தபா இன்னும் இன்னும் மேலே சென்று தன் எழுத்துத் திறனை உச்சியில் நிறுத்துவார் என்பது திண்ணம்.

                                                ---------------------------------------

11 ஏப்ரல் 2023

 

“வனம் புகுதல்“ -  18-வது சிறுகதைத் தொகுப்பு-மணிவாசகர் பதிப்பகம்-சென்னை -  



பொருளடக்கம்

1)   எதிர்பார்ப்புகள்

2)   மௌனம் சம்மதம்

3)   மாறுதடம்

4)   ரயிலில் ஏறிய ரங்கன்

5)   நீக்(ங்)குதல்

6)   தன்னை வென்றவன்

7)   பென்னி

8)   அதிகாரம்

9)   வனம் புகுதல்

10) மனோ-ரஞ்சிதம்

11) மிரட்டும் தனிமை

12) பால்தாத்தா

13) எளியோரைத் தாழ்த்தி

14) எனக்கே எனக்கு

15) பேப்பர் பையன்

16) நேற்றுப் பால்

17) அந்தக் கரணம்

18) விலகல்

------------------------------

 

 

 

 

 

 

10 ஏப்ரல் 2023

 

சிறுகதை                                           “ஏகாந்தம்”        திண்ணை இணைய இ.தழ் 02.04.2023   






ரமணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா?  தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ?

      ஏம்ப்பா இப்டித் தனிக்கட்டையா உட்கார்ந்திருக்கே? எங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கலையா? எங்களோட பேசப் பிடிக்கலையா? பேசவே மாட்டேங்கிறியே?

      யாரும் இந்நாள் வரை கேட்கவில்லை. கேட்க வேண்டும் என்று என் மனம் விழைகிறதா? பொருட்படுத்தவில்லையே என்கிற வருத்தம் எழுகிறதா? அப்படியானால் அந்தத் தனிமைக்கு ஏது பெருமை? அதன் மகத்துவம்தான் என்ன? தனிமை என்பது விரும்பி ஏற்றுக் கொள்வதல்லவா? தனிமையை, அமைதியை அனுபவிப்பது என்பது ஒரு யோக மனநிலையல்லவா? அலைபாயும் மனதை வைத்துக் கொண்டு தனிமையில் இருந்தென்ன பயன்? எல்லா இக பர இயக்கங்களிலிருந்து, சராசரிகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு மோன நிலையை எட்டுவதற்கான முயற்சியல்லவா அது? அந்த முயற்சிகளை மேற்கொள்வதும், அதில் தனித்துப் பயணிப்பதுமே ஒரு தனி சுகமல்லவா? இந்த லௌகீக எண்ணங்களிலிருந்து எப்படி விடுபடுவது? என்று விடுபடுவது? அதன் ஆரம்பப் படிநிலை அமைதியை, தனிமையை எட்டுவதல்லவா?

      அறைக் கதவை யாரோ மெல்லத் தயங்கித் தயங்கித் திறக்கும் சத்தம். தன் இருப்பு அறிந்து சுவடின்றி மறைதல்.  இதுவே ஒரு தொந்தரவுதான். தனிமை என்பது என்ன? அமைதி என்பதும்தான் என்ன? குறுக்கு நெடுக்கே யாரும் வராத, எந்தச் சத்தமும் எழாத அமைதி, தனிமை. அது கிடைக்க வேண்டாமா? ஒருங்கிணைந்த அல்லது ஒருங்கிணைக்க முயற்சிக்கும் தியானத்தைக் கலைக்க ஸ்தூல வடிவுத் தொந்தரவுகள்!

      தனியே உட்கார்ந்திருந்தால், தனிமைப் படுத்திக் கொண்டால், யாரையும் கண்கொண்டு பார்க்காதிருந்தால், யாருடனும் ஏறெடுத்து ஒரு வார்த்தை பேசாதிருந்தால் எல்லாம் கிட்டிவிட்டதாக ஆகுமா? அது எதன் மீதும், எவை மீதும், யார் மீதும் எந்த ஒட்டுதலும், பகைமையும் கொள்ளாத தன்மையல்லவா? எல்லாமும் சமநிலை. ஏற்ற இறக்கங்கள் என்பதற்கு அங்கே இடம் ஏது? தனிமையும், அதற்கான பயிற்சியும் தரும் மோனநிலை எத்தகைய மகத்துவமான ஒரு விலகல்?

யாரை யார் தனிமைப்படுத்துவது? அவரவர் சுதந்திரம் அவரவருக்கு. அந்தந்த வயசிற்கேற்றாற்போல் மனம் நாடும் சுதந்திரத்தை ஒருவன் மேற்கொள்ளக் கூடாதா? கடைசிவரை லௌகீகமாய் இருந்து கழித்துதான் மண்டையைப் போட வேண்டுமா? வெவ்வேறு படி நிலைகள் என்று பிறகு ஏன் வைத்திருக்கிறார்கள்? அந்தந்த வயதிற்கு அந்தந்த மனநிலை ஏற்படும் என்பதைக் கணித்துத்தானே? அந்த மனநிலையைப் பக்குவமாய் எய்துபவன் அதை நோக்கி நகர்வதில், நகர்த்திக் கொள்வதில், தன்னை நிறுத்திக் கொள்வதில் என்ன தவறு? மனம் ஒரு சீரான பயணத்தில் இருந்து கடந்து வந்திருந்தால்தானே உரிய காலத்திலான அந்த இடம் வந்து சேர்ந்திருக்கும்? தானே வந்து சேர்ந்த அந்த இடத்தை ஒருவன் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வதில் என்ன முறைமை கெடுகிறது? அது காலம்வரை கடந்து வந்த தூரத்தை விட, அந்த இடம் ஒருவனை அதீதமாய் ஈர்க்கும்போது, ஆகர்ஷிக்கும்போது அவன் அங்கே நிலைப்பதில் யார் எதைச் சுட்ட முடியும்? என்ன குறைகாண முடியும்?

பக்குவமற்றவர்கள் ஒருவனைத் தனிமைப் படுத்தி விட முடியுமா? தனிமை என்பதும், தனிமைப்படுத்திக் கொள்தல் என்பதும் அத்தனை சராசரியாய் உணரப்பட வேண்டியவைகளா? இன்னொருவன் தன்னைத் தனிமைப்படுத்தி அதில் அவன் வெற்றி கண்டுவிட முடியுமா? சில  எளிய முடிவுகளுக்கு ஒரு மதிப்பார்ந்த விலை உண்டா என்ன? தோன்றி மறையும் சில, வந்து போகும் பல காலத்தால் காணாமல் போகும் மின் மினிகள். அதையெல்லாம் நினைந்து ஒருவன் தன்னை இளக்கிக் கொள்ள இயலுமா?

      தனிமை ஒரு தனி இன்பம். அங்கே எதிர்ப்பு என்பது இல்லை. இணக்கம் என்பதும் இல்லை. எதிர்ப்பைத் தானே உருவாக்கிக் கொண்டால்தான். அதற்கான எதிர்வினைகளை ஏற்படுத்தி அதில் இன்பமுறுவதும், திருப்தியடைவதும் தனி சுகம். தனிமைக்கு ஒரு நியாயம் வேண்டும். அந்த நியாயத்திற்கு ஒரு அர்த்தம் வேண்டும். அந்த நியாயம் தனக்கு மட்டுமே ஆனது. மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்த நியாயத்தின் அர்த்தம் மற்றவர்களால் உணரப்பட வேண்டும் என்கிற தேவையுமில்லை. அது தனக்கானது. தன்னால் உருவாக்கப்பட்டது. தனக்குத்தானே இன்பம் காணுவது. அதன் மதிப்பை எதிராளி அறிவதற்கில்லை. அறிந்து மதிக்கப்பட வேண்டும் என்கிற அவசியமுமில்லை.

      ஆனாலும் நான்கு பேரோடு சேர்ந்து ஜீவிக்கும்போது அந்தத் தனிமை அநியாயமாய்ப் பழிக்கப்படுகிறது. வெவ்வேறு காரணங்களால் அலட்சியப்படுத்தப்படுகிறது.  உருத் தெரியாமல் அலைக்கழிக்கப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அதன் இருப்பு மற்றவர்களால் உறுதி செய்யப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது. அழிக்க முடியாமல் சீண்டச் செய்கிறது. அல்லது கண்ணிலிருந்து மறைக்கச் செய்கிறது. கேலி கொள்கிறது. எள்ளி நகையாடப்படுகிறது.

      தான் ஆரம்பித்து வைத்தது, இப்போது தனக்கே எதிராகப் பாய்கிறதோ?. தனிமை பகையாக உருமாறுகிறதோ என்ற சந்தேகம் கிளர்ந்தது. தனிமையை யாரும் விரும்புவதில்லை. தனியாய் இருப்பவன் உட்பட. ஆனால் ஒருவனைத் தள்ளுகிறது அது. ஒதுங்கு என்று விரட்டுகிறது. ஏதோ ஒரு சூழல் அவனைக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. இணக்கம் காண்பிக்கிறது.  யார் கண்ணிலும் படாதே என்று மறைய வைக்கிறது.  தனியாய் இருப்பவனைக் காண விருப்பமில்லை எவருக்கும். அதற்கான அவசியம் இல்லை என்று கருதப்படுகிறது. தனியாய் இருப்பவன் தண்டச் சோறு என்ற கருத்து நிலவுகிறது. சிலாக்கியமான தொடுதல் கூட இல்லாதவன் இருந்தென்ன போயென்ன என்ற கருத்து பரவலாகிறது. சுற்றிலும் எளிய மக்கள், உறவுகள்...சராசரிகள்...பலரும் அப்படி இருக்கவே விரும்புகிறார்கள்.

      தனிமையே எதிராளிக்கு உபத்திரவமாய் இல்லாது இருப்பதுதான் என்பதற்கு எதிராக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நேரம் தவிர்த்து இருப்பின் தொலையட்டும் என்று ஏற்கப்படுகிறது.  .  தனிமையும் அமைதியும் விலையற்றுப் போய்க் கிடக்கிறது. அதன் மகத்துவம் உணரப்படுவதில்லை. சராசரியாய் இருந்து தொலைப்பதுதான் எல்லோர்க்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையை அலட்சியப்படுத்துதலிலும், தனித்திருப்பவனும் அலட்சியப்படுத்தப்படுகிறான். ஆனால் அது அவனால் பொருட்படுத்தப்படுவதில்லை. அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை. ஏனெனில் அவன் உலகம் தனி உலகம். அங்கே அவனை உணர்ந்தவர்கள் மட்டுமே காலடி வைக்க முடியும். அவனுக்கு ஒத்துழைக்க நினைப்பவர்கள் மட்டுமே அருகில் செல்ல முடியும். யாருமே இல்லையாயினும் தனித்திருப்பவன் எந்தவித மனத்தாங்கலுக்கும் ஆளாவதில்லை. எவரையும் நினைந்து நோவதில்லை. எதையும் நினைத்துக் குறைபட்டுக் கொள்வதில்லை. அவனியக்கம் அவன் உணர, தடையின்றி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

      தனிமைப் படுத்திக் கொள்வதும், தனிமையாய்க் கழிப்பதும் என்னுடைய முழு சுதந்திரத்தின்பாற்பட்டது. அதற்குள் யாரும் உள் நுழைய முடியாது. அந்தக் கோட்டையில், பரந்த உலகத்தில் நான் மட்டுமே இருக்கிறேன். அதை யாரும் சீர் குலைக்க முடியாது. அதை விமர்சிக்க முடியாது. அதன் மேன்மையை உணருவதற்குத் தனிப் பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் இருந்தால்தான் அதை மதிக்க இயலும். அதன் மகத்துவத்தை உணர இயலும்.

      என்னை விட்டு விடுங்கள். என் தனிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோர்க்கும் ஒரு நிலை உண்டு. அந்த நிலையை அவன் எய்துவதை உணருங்கள். அதன் மகத்துவத்தை அவன் தன் இருப்பின் மூலம் பிறருக்கு உணர்த்துகிறான். அதை ஆத்மார்த்தமாய் உணரப் பழகிக் கொள்ளுங்கள். அவன் தனிமையில், அதன் மோனத்தில் யாரும் இம்சிக்கப்படுவதில்லை. யாரும் எள்ளி நகையாடப் படுவதில்லை. எவரும் குறைத்து மதிப்பிடப் படுவதில்லை. எவரும் நெருக்கமோ, விலகலோ இல்லை. எதுவும் அங்கே சமம். எல்லாமும் அங்கே பரம். இல்லாதிருப்பதை நோக்கிச் செல்லும் ஏகாந்தம்.

      அவனை அவனாக இருக்க விடுங்கள். அந்த முயற்சியைக் குலைக்காதீர்கள். அந்த அமைதிக்குப் பங்கம் விளைவிக்காதீர்கள். அந்தப் பயணத்தைத் தடுக்காதீர்கள். அவன் போகட்டும். எதுவரை முடியுமோ அதுவரை போய்ப் பார்க்கட்டும். எங்கே நிலைக்குமோ அங்கே நின்று நிலைக்கட்டும். எந்த நிலை அவனை அடையாளப்படுத்துமோ அந்த நிலையை அவனாகவே எய்தட்டும். அங்கே பரிபூர்ணம் பிறக்கட்டும். அந்த முழுமையில் அவன் தன்னைக் கரைத்துக் கொள்ளட்டும்.

      ரமணன் தன் அமைதியை, தனிமையை, தியானத்தைத் தொடர்கிறான். அது அவனை இந்த இக பர இயக்கங்களிலிருந்து கைகோர்த்து, எங்கோ அழைத்துச் செல்கிறது. அங்கே அவன் தனியனாகிறான். எடையற்ற, இலகுவான, கண்ணுக்குத் தெரியாத, காதால் உணர முடியாத இயக்கமாகித் தன்னை அந்தக் ககனவெளியில் கரைத்துக் கொள்கிறான்.

      கதவு  மீண்டும் திறக்கிறது. தட்டில் பரிமாறப்பட்ட சாப்பாடு முன்னே வைக்கப்படுகிறது. அவர்கள் அவனை, அவன் தனிமையை, அமைதியை மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

                                    --------------------------------

 

     

 

 

 

 

 

'நிற்பதுவே-நடப்பதுவே” -சிறுகதை-திண்ணை-09.04.2023 பிரசுரம்







            என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….

            சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை.   பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும்.  அதுவுமில்லை.

            ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று முப்பது, ஒன்று நாற்பது, ஒன்று இருபத்தைந்து என்றெல்லாம் விற்பதற்கில்லை. ஒரே விலை. அப்படியானால் ஒரே பலன் என்றிருக்க வேண்டும்தானே? அது மாறுபட்டு விடுகிறது. பாதிக்கும் மேலானோர் அதிருப்தியில்தான் செல்கிறார்கள். சிலருக்கு  வெறும் தேங்காயாய் வந்து விடுகிறதே…? இந்தக் கடை சரியில்ல…என்று ஒதுங்கி விட்டால்?

            ஏன்யா….இளநியக் கேட்டா….தேங்காய வெட்டுற….தண்ணி ஜாஸ்தியாப் பார்த்து வெட்டத் தெரியாதா? தேங்காய்க்குள்ள இருக்கிற அளவுக்கே தண்ணி இருந்தா அது எப்படிய்யா இளநி ஆகும்?

            கேள்விகளை நன்றாய்த்தான் கேட்கிறார்கள்.  கொள்முதல் செய்யும் இடத்தில் இதெல்லாம் பேச முடிகிறதா? அவனாய் எண்ணி எண்ணித் தூக்கிப் போடுவதுதான். பெரிசும், சிறிசுமாகத்தான் வருகிறது.

            அண்ணே…! கொஞ்சம் பொறுக்கிப் போடுங்கண்ணே….சரியா வியாபாரம் பார்க்க முடில…..! பயந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

            என்னாது? பொறுக்கிப் போடவா? சர்தான்….இப்டி ஆளாளுக்குப் பொறுக்கிப் போட்டா அப்புறம் நாங்க பொறுக்கிட்டுப் போவேண்டிதான்…!

            என்னாண்ணே இப்டிச் சொல்றீக…? வருஷக் கணக்கா ஒங்ககிட்டதான வாங்குறேன்…எனக்கு அந்தச் சலுக தரக் கூடாதா? இப்டிக் கறாராப் பேசுறீகளே…?

            இந்தா பாரு சின்னாண்டி….பொள்ளாச்சிலர்ந்து லோடு வருது…வண்டிச் சத்தம், ஆட்கூலி, டிரைவர் சம்பளம், ஏத்துக் கூலி எறக்குக் கூலி….பெட்ரோலு, டீசலு, டோல் கேட்டுன்னு நூறு இருக்கு…எல்லாம் போகத்தேன் நாங்க காசு பார்க்கணும்…ஆகையினால பொத்திட்டு வாங்கிட்டுப் போ…நீ என்னா வெலைக்கு விக்கற, எம்புட்டு லாபம் பார்க்குற…என்னா விவரம்னு  நாங்க ஏதும் கேட்டமா? பெறவென்ன?

            அதற்கு மேல் பேசினால் மறுநாளைக்கு  சரக்கு இல்லையென்று கூறி விடுவார்கள். இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது சின்னாண்டியின் அன்றாட வாழ்க்கை. சமயங்களில் காய்க்கு ஏற்றாற்போல் விற்றால்தான் சரக்கைத் தள்ள முடியும் என்கிற சொந்தச் சுய உணர்வு முடிவில் கடை விரித்தவுடன் பெரிசு, சிறிசு என்று பிரித்துப் போட்டு வியாபாரத்தையும் நடத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்படிப் பிரித்த நாட்களில் கிறு கிறுவென்று இளநீர்கள் விற்றுத் தீர்ந்துமிருக்கின்றன. ஆனால் கடைசியில் காசை எண்ணும் போது முதலுக்கே மோசமாய்த்தான் இருந்திருக்கின்றன.

            வாடிக்கையாளரையும் அனுசரித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. உழவர் சந்தை ஆபீசில் கெஞ்சிக் கூத்தாடி சந்தைக்குள்ளேயே ஒரு இடம் பிடித்தான் ஆரம்பத்தில். அந்தா…கடோசில இருக்குல்ல…அங்க போட்டுக்க உன் கடையை… என்று ஒரு மூலையைக் காட்டினார்கள் ஆரம்பத்தில்.  மதியம் ஒரு மணியைப் போல் வந்து வாய் இழக்காமல் ஓசி இளநீருக்கு நின்றார்கள்.  சமயங்களில் ஆபீசர் இன்சுபெக் ஷனுக்கு வந்திருக்காகய்யா…ரெண்டு இளநீ வெட்டு என்று அதிகாரமாய்க் கேட்டார்கள்.

            அவர்களை அன்றாடம் பிச்சாண்டி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். தினமும் சரியாக மணி ஒன்று நெருங்கும்போது ஒரு பெரிய படுதாப் பையை எடுத்துக் கொண்டு வந்து கடை கடையாய் நீட்ட, அவர்களும் கைக்கு வந்ததை அள்ளி அள்ளிப் போட “அடப் பாவிகளா…ஒரு வாரத்துக்குத் தேறுமேய்யா….?” என்று முனகியவர்கள் பலர். காசு கொடுத்து வாங்கினால் ஐநூறு செலவழித்தாலும் அந்தப் பை நிறையாது. அது ஓசியிலேயே அன்றாடம் நிறைகிறது என்றால்?  வாங்கிக் கொண்டு போய் இவர்கள் வீட்டு வாசலில் கடை போட்டு விடுகிறார்களோ? இம்புட்டு காய்கறி ஒரு குடும்பம் திங்கணும்னா…பத்து நாளானாலும் தீராதே….? என்று வயிறெரிந்தார்கள்.

            இந்த ஓசிக்கு சம்மதிக்கவில்லையென்றால் மறுநாள் கடை போட டோக்கன் கிடைக்காது. வாயை மூடிக்கொண்டு கொடுத்துத் தீர்த்தால்….மீதிக் காயைச் சாக்கில் கட்டி அதே எண்ணுள்ள கடையில்  பாதுகாப்பாய் வைத்து விட்டும் செல்லலாம்.மறுநாள் டோக்கனும் இடமும் அன்றே உறுதி. வந்தபின்தான் தண்ணீரைத் தெளித்து புதுக்காய்கள் போலாக்கி விடலாமே…? தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி என்று வந்து சேரும் காய்கள் இத்தனை நாட்கள் எந்த வாட்டமும் காணாமல் எப்படி நிமிர்ந்து நிற்கின்றன? எல்லாம் மருந்தடிக்கும் யோகம்தான். வாடிப் போன கீரையே அந்த சாயத் தண்ணீரில் முக்கி எடுத்தால் நிமிர்ந்து மலர்ந்து சிரிக்கிறது.  அப்போதே பறித்து வந்த கீரை கூட அத்தனை பளபளப்பாய் இருந்து கண்டதில்லை.   கேட்டால் எல்லாம் தோட்டத்துக் காயு, காலைல கைவிட்டுப் பறிச்ச வீட்டுத் தோட்டத்துக் கீரைக….சாமி….என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.   மக்களும் அதைத்தானே நம்பி வாங்கித் தின்று   வியாதி வெக்கை என்று அலைகிறார்கள்? எளிய மக்கள் எப்படி இப்படி மாறினார்கள்?

அட என் கிராமத்து அன்பான ஜனங்களே…நீங்கள் எப்போது இப்படி பொய் சொல்லக் கற்றுக் கொண்டீர்கள்? நிறுத்த நிறுவை போக ஒரு கை தாராளமாய் அள்ளிப் போட்ட உங்கள் தாராள மனசு எங்கே போய் மறைந்து கொண்டது? அரை கிலோ இருபத்தெட்டு என்றால் முப்பதுக்குப் போட்டுர்றேன் என்று பிடுங்கி விடுகிறீர்கள். கால் கிலோ பன்னெண்டு என்றால் பதினஞ்சுக்குப் போடுறேன்…என்று சில்லரைத் தட்டுப்பாடு காரணம் சொல்லி ரவுன்ட் ரவுன்டாய்ப் பிடுங்குகிறீர்களே? இதெல்லாம் உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது? வெள்ளந்தியாய் இருந்த உங்கள் விகல்பமற்ற மனதை இந்த உலக நடப்புகள்தான் இப்படி மாற்றி விட்டதா? 

சின்னாண்டியும் அவர்களோடேயே அன்றாடம் கழித்து விடலாம் என்றுதான் பார்த்தான். காய் வாங்க வருபவர்கள் மாய்ந்து மாய்ந்து அங்கே இன்னொரு மூலையில் வைத்திருக்கும் பத்து ரூபாய்க் காளான் சூப்பைத்தான் மண்டி மண்டிக் குடிக்கிறார்களே தவிர முப்பது நாற்பது கொடுத்து ஒருத்தனும் தைரியமாய் வந்து இளநீர் கொடுங்க என்று கேட்க மாட்டேங்கிறானே?  தினசரி கடை போட்டு, ஆபீசுக்கு ஓசிக்கு வெட்டி நீட்டவா இங்கே வியாபாரம் செய்ய வந்தேன்?

சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டான் சின்னாண்டி. அதே உழவர் சந்தையின் வெளிச் சாலையில் சற்றுத் தள்ளி ரோட்டோரமாய்  தன் கடையை விரித்தான்.  ஆரம்பத்தில் நன்றாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. டவுனில் அலைந்து திரிந்து சாமான்செட்டுகள் வாங்கி வரும் புருஷன் பெண்டாட்டி முதற்கொண்டு அவன் கடைக்கு முன் வந்து வண்டியை நிறுத்தினார்கள்.  கூல் டிரிங்கும், பழ ரசமும் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ மேல், அலைந்த அலைச்சலுக்கு உடம்புச் சூடும் குறையும் என்று நின்று நிதானித்து உறிஞ்சி, பிட்டு விடாமல் வழுக்கையையும் வழிச்சு வாங்கி ஆயாசமாய் உள்ளே தள்ளிவிட்டுப் போனார்கள். சமயங்களில் இன்னொண்ணு குடுங்க…என்று கூட வாங்கிக் குடித்து விட்டுப் போனார்கள்.

பரவால்லியே…இந்தப் பக்கத்து ஆளுங்க…நல்ல வசதியானவுக போல்ருக்கு …என்று எண்ணி வியந்திருக்கிறான் சின்னாண்டி. ஆடி ஓடி அங்கே ஒரு நல்ல இடம் அமைந்ததே என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதற்கும் ஒரு வினை வந்தது. பக்கத்தில் செக்கச் செவேல் என்று ஒரு பெரிய வணிக வளாகத்தைத் திறந்திருந்தார்கள்.பேச்சுக்குப் பேச்சு எல்லாம் “ஃப்ரெஷ்ஷா” கிடைக்குது என்றார்கள். அரசு டெப்போவில் கிடைக்கும் அன்றாடப் பால் பாக்கெட் கூட அம்பது பைசா அங்கே கம்மி என்றார்கள். போதாக்குறைக்கு நாளைக்குப் பால் நாளைய தேதி போட்டு இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கே வந்திடுது என்று குஷிப்பட்டார்கள்.

இந்தியா பூராமைக்கும் மாநிலத்துக்கு மாநிலம் மாவட்டத்துக்கு மாவட்டம்  கடை போட்டிருக்கும் அந்த “ஃப்ரெஷ் “  ஏன் ஒரு பொருளைப் பாதி விலைக்கு விற்க முடியாது? அடப் பாவி…அதற்காக இளநீரைக் கூடவா நீ விற்க வேண்டும்? தண்ணிப் பழம் முதற்கொண்டு இப்டியா லாரி லாரியாக் கொண்டு அடுக்கணும்? மலை மலையாய் இப்படிக் கொண்டு வந்து இறக்கினால்…என்னை மாதிரி சிறு வியாபாரி என்னதான் செய்வான்? அன்றாடங் காய்ச்சியாய் இருக்கும் என் வயிற்றிலா நீ அடிக்க வேண்டும்? இன்னைக்குப் பூரா இந்த இளநீ வித்தாத்தான்யா ராவுக்கு வீட்டுல போய் வயிறார நான் சாப்பிட முடியும்? அப்பத்தான்யா பொழுது புலர நா போய் கொள் முதல் பண்ண முடியும்? என்ன மாதிரி செத்துப் பிழைக்கிறவன் வயித்துல அடிக்கவா நீ இப்படிக் கடை பரப்பினே? நாங்கள்லாம் உயிரோட இருக்கணுமா வேணாமா? திருவிழாக் கூட்டம்மாதிரி வருதேய்யா சனம் உன்னத் தேடி…அதுல நாலு ஆளுகதானே என்னத் தேடி வந்திட்டிருந்தாக….அதுக்குமா வென? இப்டியே போச்சுன்னா எதுக்கு இந்த உசிர வச்சிக்கிட்டுன்னு எங்கள மாதிரி ஆளுகளெல்லாம் கடல்ல போய் விழுந்து மாய்ஞ்சு போக வேண்டிதானா? அந்தக் கடலத் தேடிப் போயி உயிர மாய்ச்சிக்கிறதுக்கும் எனக்கு ரூபா ஐநூறு இருந்தாத்தானய்யா முடியும்? தற்கொலதான் பண்ணிக்கணும் செலவில்லாம…!

இப்டி ஏழைக வயித்துல தேடித் தேடி…பார்த்துப் பார்த்து அடிக்கிறீகளே…இது நியாயமா? எங்களயெல்லாம் கடவுள் ஏன்தான் படைச்சாருன்னு நினைக்க வச்சிட்டீகளே?

நகரில் இப்படி நாலஞ்சு இடம் மாற்றியிருக்கிறான் சின்னாண்டி. எல்லா இடமும் ஆரம்பத்தில் சூடு பிடித்தாற் போலிருக்கும். பிறகு படுத்து விடும். ஆனால் ஒன்று. விற்காமல் நிற்கும் இளநிகளை தென்னை மட்டைகளை வைத்து வெளித்தெரியாமல் அழுத்தமாய் மூடி வைத்துவிட்டுப் போய் விடுவான் சின்னாண்டி. ஒரு நாளும் அது திருடு போனதில்லை. அந்த மட்டும் அந்தப் பகுதி மக்களே அதற்குப் பாதுகாப்பு. விடிகாலை நாலு மணிக்கு காந்தி மியூசியம் வாசலில் ப்ளாட்பாரம் ஓரமாய்க் கொண்டு ஐநூறு இளநிகளை இறக்கி விட்டுப் போகிறதே ஒரு வேன். அந்த நாகு அண்ணன் எட்டரை மணியைப் போல்தானே வியாபாரத்திற்கு என்றே வருகிறார். அதுவரை அது பாதுகாப்பாக இருக்கிறதே…! மக்களிடம் இன்னும் நல்லதனம் முற்றிலும் அழிந்து படவில்லை.  நம்பினால்தான் வாழ்க்கையோ….!

நாகுண்ணே…நானும் வந்து அப்டிக் கொஞ்சம் தள்ளி கடை போட்டுக்கிறேண்ணே என்று கேட்ட அன்றைக்கு என்ன கோபம் வந்தது அண்ணாச்சிக்கு?

ஏய்…இதென்ன ஓசிக்கு வச்சிருக்கேன்னு நினைச்சியா? கார்ப்பரேஷனுக்கு வாடகை கொடுக்குறன்ப்பா….இந்த வரிசைல நெட்டுக்கப் பாரு….கொய்யாப் பழம், வெள்ளரிக்காய்…பதநீ….மாம்பழம், நுங்குன்னு உட்கார்ந்திருக்காக பார்த்தியா…அவுகளெல்லாம் தர்மத்துக்கு உட்கார்ந்திருக்காகன்னு நெனச்சியா? ஒவ்வொண்ணும் காசாக்கும்….! இங்கயே ஒக்காந்து பாரு…ஆளுக வந்து கையை நீட்டுறத…இந்த ஒலகத்துல எங்கயும், எதுவும் ஓசியில்ல….மறைவான்னாலும் ஏதாச்சும் நடந்திட்டிருக்குமாக்கும்…ஒலகமே காசுலதாம்ப்பா மெதக்குது….!

அந்த இடத்தையும் மாற்றி இதோ பாலத்துக்கடியில், கீழ்ப்பாலம் ஓரமாய் இப்போது கடையை விரித்திருக்கிறான் சின்னாண்டி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று செய்தி வருகிறது. பெரியார் அணைப் பக்கம், தேனி, திண்டுக்கல் என்று மழை பிய்த்துக் கொண்டு அடிக்கிறதாம்.வைகைக் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்று உஷார்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வைகையில் எந்நேரம் வெள்ளம் வரும் என்று தெரியாத நிலை. திறந்து விட்ட தண்ணீர் எப்போது கரை புரண்டு இந்தக் கீழ்ப்பாலத்தைமூழ்கடிக்கும் என்று கதி கலங்கிக் கிடக்கும் சிறு வியாபாரிகள். போலீஸ் வந்து வந்து விரட்டிக் கொண்டிருக்கிறது. ஆட் புழக்கம் அந்தப் பக்கம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது.

அண்ணே…நாளைக்கு இந்த எடம் நமக்கு நிச்சயமா….? – கேட்டான் பருத்திப்பால் விற்கும்  அய்யணனிடம்.

இன்னைக்கே ஒண்ணுமில்லயேப்பா….கீழ்ப்பாலத்துல கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஏறிக்கிட்டு இருக்கு பாரு….இன்னும் கொஞ்சம் போச்சுன்னா சுத்தமா நிப்பாட்டிருவாக….பெறகு எப்டி இந்தப் பக்கம் வந்து வியாபாரம் பார்க்குறது?

காலையில் இந்தப் பக்கம் வர முடியாதென்றால் மீதி இளநீரை எங்கு வைத்து விட்டுப் போவது? -முகத்தில் கவலை தோய செய்வதறியாது நின்றிருந்தான் சின்னாண்டி. நாளைக்கு புதிய கொள் முதல் இல்லையென்று அப்பொழுதே முடிவாகிப்போனது.

நீ ஒண்ணும் கவலப்படாதண்ணே…இந்த வண்டிக்கு அடில ஒரு சாக்கக் கட்டி அதுல பாரத்த ஏத்திருவோம். ரெண்டு பேரும் சேர்ந்து உருட்டிக் கொண்டு போயிருவோம்…என்ற அய்யணனை நன்றியோடு பார்த்தான் சின்னாண்டி. அய்யணனும் அவன் பகுதி ஆள்தான். ஆகையால் கொண்டு சேர்ப்பதில் அத்தனை சிரமம் இருக்காது. ஏரியா திரும்புகையில் கொஞ்ச தூரம் இளநி மூட்டையைச் சுமக்க வேண்டியிருக்கும். அவ்வளவே…

எப்பொழுதும் லாலா மிட்டாய்க் கடை வாசலில் பொழுது விடிகையிலேயே கடை போட்டு விடுவான் அய்யணன். சுடச் சுட அவனிடம் பருத்திப்பால் குடிக்கும் வாடிக்கை நிறைய இருந்தார்கள். அந்தப் பக்கம் யோகா பயிற்சி வகுப்பு நடக்கும் ஒரு கூடம் இருந்தது. பயிற்சி முடித்து வரும் அவர்கள் நேரே அவனிடம்தான் வருவார்கள். அங்கு வள்ளிசாக வியாபாரம் பார்த்தபிறகுதான் இந்தப் பாலத்தடிக்கு வருவான். அருகிலுள்ள மில்லில் வேலை முடித்து வருபவர்களால் கொஞ்சம் மறு வியாபாரம் பார்க்க முடியும். ஆக ஒரு நாளைக்கு பெருங்குடத்துக்கு ஒன்றும், சிறு குடத்துக்கு ஒன்றுமாக அவன் வியாபாரம் நிச்சயப்பட்டிருந்தது.

அய்யணண்ணே…இன்னைக்கு ஒங்களாலதான் எம் பொருளப் பத்திரப்படுத்த முடிஞ்சிச்சு….நீங்க மட்டும் ஒதவலண்ணா….இம்புட்டு கனமுள்ள இளநிகள நா எப்டிக் கொண்டாந்திருக்க முடியும்? ரிக் ஷாவோ ஆட்டோவோ பிடிச்சு வாடகை கொடுத்து நா என்ன காசு பார்த்திருக்க முடியும்? மொதலுக்கே மோசமால்ல போயிருக்கும்…! ஒங்க ஒதவிதான் இன்னைக்கு என் கையக் கடிக்காமப் பண்ணியிருக்கு…..ரொம்ப நன்றி ஒங்க ஒபகாரத்துக்கு….

நீ என்னப்பா இதுக்கெல்லாம் போயி நன்னி சொல்லிக்கிட்டு….நம்மள மாதிரி ஆளுக ஒருத்தருக்கொருத்தர் ஒதவாம பெறவு யாரு வந்து செய்வாக…அந்தப் பாலத்தடிக்கு வியாபாரம்னு போயி நின்னதே தப்பாப் போச்சு….நாந்தேன் யோசிக்காம ஏமாந்து வந்திருக்கேன்னா…நீயும் வந்து திடுதிப்னு நிக்கிறே?….எத்தன எடம்தான் மாத்துவ….நானும் ஒன்னைக் கவனிச்சிக்கிட்டுத்தேன் இருக்கேன்….ஒரு குறிப்பிட்ட எடம்னு தெகையாம அலையா அலையுற…நானாவது சட்டுச் சட்டுனு வண்டிய உருட்டிட்டு நகர்ந்திடுவேன்….எந்தெந்த எடம் எந்தெந்த நேரம் வியாபாரத்துக்குப் பலிதமாகும்னு எனக்குத் தெரியும்….அட…காலேஜ் பொம்பளப் புள்ளைக கூட விரும்பிக் குடிக்குதுப்பா…..சூப்பு செய்து கொண்டாங்கண்ணேன்னு கேட்குதுங்க…வண்டிய இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தில்ல அதச் செய்யணும்….அதான் ரோசனயா இருக்கு…அதப்போல  உனக்குத் தெரிஞ்ச இந்த இளநி வியாபாரத்த எப்படி சுலபமாக்கிக்கிறதுன்னு யோசிங்கண்ணே….சட்டுச் சட்டுன்னு எடம் மாத்திப் போயிட்டேயிருக்கணும்….ஆனா வெட்டி அலச்சலா இருக்கப்படாது. போய் நின்னா பத்துக் காயாச்சும் வெட்டணும். அஞ்சு கிலோமீட்டர் சுத்துல ஒரு நாள்ல அத்தனையையும் வித்துப் புட மாட்டீகளா…? உங்களால முடியாதா என்ன….? நல்லா ரோசன பண்ணுங்க…அலையுறது பிரயோசனமா இருக்கணும்னு சொல்ல வந்தேன்….வேறே ஒண்ணு தப்பா நெனச்சிக்கிடாதீக….

அய்யணனின் அறிவுரைகள் சின்னாண்டியை உசுப்பித்தான் விட்டது.  பாங்காய்த்தான் சொல்கிறான். பதவாகமாய்த்தான் எடுத்து வைக்கிறான். அவரவர் வியாபாரத்தில் அவரவர் நிமிர வேண்டும் என்பதே அவனின் அறிவுரையாயிருக்கிறது.

சரிண்ணே….நாளைக்கு முடிஞ்சாப் பார்ப்போம்….சந்திச்சிக்கிட்டம்னா பேசுவோம்….

மூட்டையை முதுகில் சுமந்து பிரிந்து நடந்தான் சின்னாண்டி. எதிர்பாரா வேகமாய் சர்ர்ரென்று ஒரு வண்டி இவனைக் கடந்தது. மூன்று முக்குகள் சந்திக்கும் அந்த இடம் வெளிச்சமில்லாமல் கிடந்தது.  மூட்டையோடு திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் பொருட்படுத்தாமல் நடந்தான்.

யாருப்பா….சின்னாண்டியா…..என்னய்யா….கண்டுக்காமப் போற……?

அட…தெரிந்த குரலாய் இருக்கிறதே….ஐயோ…அந்த மவராசனா இருக்குமோ….? மனசுக்குள் ஏற்பட்ட பதட்டத்தில் சற்றே தயங்கி நின்று மூட்டையைக் கீழே இறக்கினான் சின்னாண்டி. திரும்பிப் பார்த்தான். ஐயா….நீங்களா……? என்னங்கய்யா இந்த நேரத்துல? இம்புட்டு லேட்டாப் போறீக…..?

ஆமய்யா…. ஒரு வாரம் பேங்கு லீவுல்ல… பூஜா லீவெல்லாம் முடிச்சு இன்னைக்குத்தான வந்தோம்…அதான் வேல ஜாஸ்தி…..எல்லாருமே இப்பத்தான் கௌம்பினோம்…..அது கெடக்கட்டும்….நா சொன்னது என்னாச்சு….? ஏன் வரல…..?

என்னாதுங்கய்யா….? – ஒன்றும் புரியாமல் தலையைச் சொரிந்தான் சின்னாண்டி.

என்னாய்யா…மறந்திட்டியா….? ஒனக்கு ஏதாச்சும் வசதி பண்ணுவம்னு பார்த்தா…நீயே இப்டி சோம்பேறியா இருந்தீன்னா எப்டிங்கிறேன்…?

ஐயா என்ன சொல்றீகன்னு புரியலீங்க….? எதுவும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது…?

சரியாப் போச்சு…..ஏன்யா…வெறுமே ஒன்னோட ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கொண்டான்னு சொன்னதையா இப்டி மறந்திட்டே….? அதுக்கு ஒனக்கு வலிக்குதா?  ஒரு வண்டி வாங்க ஏற்பாடு செய்றன்யா….அதுல இளநிகளப் போட்டுக்கிட்டு உருட்டு….வியாபாரம் சுலபமாயிடும்….அம்புட்டையும் வௌக்கிச் சொன்னாதான் உனக்கு மண்டைல ஏறுமா?

ஐயா…மன்னிச்சிருங்க சாமி…இந்தத் தர்க்குறி அத மறந்திட்டன்….நாளைக்குக் கட்டாயம் எடுத்தாந்து ஒங்ககிட்ட ஒப்படைச்சிடுதேன்….நீங்க நல்லாயிருக்கணும்…..

அதெல்லாம் கெடக்கட்டும்…முதல்ல அதுகளக் கொண்டாந்து குடு…புரிஞ்சிதா? ஒரு ஏற்பாடு பண்ணிருவோம்……

ரொம்ப நன்றிங்கய்யா……உங்க கால்ல விழுந்து கும்பிடுறேன்…….

அது காதில் விழுந்ததோ என்னவோ….போய்க் கொண்டிருந்தார்.

இன்னொன்றும் அந்தக் கணத்தில் மனதில் மின்னலாய்த் தோன்ற ஐயா…ஐயா….என்று சத்தமெடுத்துப் பலமாய்க் கத்தியபோது  வண்டி வெகு தூரம் போயிருந்தது. அடடா…மர மண்டைல எதுவும் நிக்கவும் மாட்டேங்குது. சட்டுனு ஞாபகமும் வரமாட்டேங்குது…

நாளை ரேஷன் அட்டையையும், ஆதார் அட்டையையும் அவரிடம் கொடுக்கும்போது அய்யணனுக்கும் ஒரு அகலமான பருத்திப் பால் வண்டிக்கு அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சின்னாண்டி. அதற்கு முன் அய்யணனையும் ஒரு முறை பார்த்து அவன் சம்மதத்தையும் பெற வேண்டும் என்றும் அவன் மனசு சொல்லியது.

                                                ---------------------------------------