12 மே 2023

 

“யா…ரப்பே…” – சிறுகதை – ஜவ்வாது முஸ்தபாவின் “ஆறாம் விரல்”  வாசிப்பனுபவம். சிறுகதைத் தொகுப்பு – நன்னூல் பதிப்பகம், மணலி-திருத்துறைப்பூண்டி. (தொடர்புக்கு - 99436 24956)

------------------------------------------------------------------------------------------------------




          மூக நல்லிணக்கம் இன்றைய முக்கியத் தேவை. அதற்கே கேடு வந்துவிடுமோ என்பதாக பயப்படும் காலமாக இருக்கிறது இன்றைய சூழல். இலக்கியம் இந்த நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுதல் என்பது மிகவும் அவசியம். இலக்கியத்தைப் பயனுள்ள முறையில் அடையாளப்படுத்தும் படைப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமுதாய மேம்பாட்டிற்கான தூண்டுகோலாக நாம் அவற்றைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

            அம்மாதிரியான படைப்புக்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் உண்டுதான். அது எந்த மதத்தைப்பற்றி யார் எழுதியிருந்தாலும், படைப்பு என்ன சொல்கிறது என்பதை மட்டும் உற்று நோக்கி அதன் அவசியத்தை இலக்கியப் பரப்பிற்குள் கொண்டு வந்து கவனப்படுத்த வேண்டியது கடமையாகிறது. இலக்கிய வாசகர்களின் உள்ளத்தில் நன்னெறிகளை ஆழப் பதிய வைத்து அம்மாதிரியான படைப்புக்களின் அவசியத்தை மேலெடுத்துச் செல்ல வெளிப்படையாகவோ, இலக்கியப் பயன்பாட்டிலோ பணியாற்ற வேண்டியிருக்கிறது.

            “ஆறாம் விரல்” சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஜவ்வாது முஸ்தபா அந்தப் பணியைத் தன் கடமையாகச் செய்திருக்கிறார். ஒரு படைப்பாளிக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

            மதக் கோட்பாடுகளை வலியுறுத்தும் அதே நேரம் அவற்றைப் பின்பற்றுவதில் நடைமுறை வாழ்க்கையின் வறுமையின்பாற்பட்ட சிக்கல்கள் மனித உயிர்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை மையமிட்டு, அதனால் ஏற்படும் சொந்த பந்தங்களுக்கிடையிலான உறவு விரிசல்களையும், மன வருத்தங்களையும், சுமுகமின்மையையும் அங்கங்கே தொட்டுத் தொட்டுச் சுட்டிக் காட்டிச் செல்லும் இவர் எழுத்தின் இயல்பான ஓட்டம் நம் மனதை நெருடி நெருடி வேதனையுறச் செய்கிறது. எத்தனையோ வாழ்க்கைச் சிக்கல்களுக்கிடையில், மன ஊனங்களுக்கிடையில்  இறை நம்பிக்கை நம்மை எப்படி வழி நடத்துகிறது என்பதையும் வலியுறுத்தி இவர் கதை சொல்லும் விதம் நமக்கு ஆறுதலளிக்கிறது.

            மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் என்பது எத்தனை அவசியமாக முன்னிற்கிறது என்பதற்கு தன் கதைகளின் கதாபாத்திரங்களுக்கு இவர் வைத்துள்ள பெயர்களும் அதன் மூலம் உருவாக்கி நிறுத்தும் குண நலன்களும் அன்பையும், அரவணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நிறுத்தி அவற்றின் என்றைக்குமான அவசியத்தை ஆழப் பதியச் செய்து முன்னேறும் கதைக்களன் நிகழ்வுகளும் படைப்பாளியின் மீதான மதிப்பை உயர்த்திப் பிடித்து மதிப்புறச் செய்கிறது.

            “யா…ரப்பே…“ – என்ற இந்த முதல் கதையே நம் மனதை வெகுவாகப் பிழிந்தெடுத்து விடுகிறது எனலாம். இக்கதையைப் படித்தபோது இன்னொரு குடும்பத்தில் நடந்த ஆயுளுக்குமான ஒரு பேரதிர்ச்சி அந்த மொத்தக் குடும்பத்தையும் காலத்துக்கும் எப்படிச் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியது என்கிற நினைவு எழுந்து என் மனதை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கி விட்டது.

            அந்த அளவிற்கான பாதிப்பை இத்தொகுப்பின் இந்த முதல் கதையே ஏற்படுத்தி படைப்பாளியின் கருணை மிகுந்த மனநிலையையும், எண்ண ஓட்டங்களையும் உணர்த்தி தொகுப்பின் மீதான மரியாதையை மேம்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை என்றுதான் கூற வேண்டும்.

             யா…ரப்பே….என்றால் “கடவுளே…” என்றுதான் பொருள். ஆனால் எம்மாதிரியான சூழலில் இந்த வேண்டுதல் நிகழ்கிறது என்பதுதான் கவனிக்கத் தக்கதாகிறது.  வெறும் உதட்டளவில் வெளிப்படும் வார்த்தைகளா அவைகள். எவ்வளவு துன்பங்களை, மன பாரங்களை  உள்ளடக்கி அதன் உருவகமாக அடிவயிற்றிலிருந்து பீறிடுகிறது இந்த மாயச் சொல்…! தீராத துயரங்களை எதிர்நோக்கும் எளிய மனிதர்கள் யாரிடம் போய் வேண்டி நிற்பார்கள்? கடவுள் நம்பிக்கை மனிதனின் உயிர்நாடி போன்றதாய் விளங்கி அவனுக்கு ஆறுதலளித்து மேலும் சோர்வடைந்து விடாமல் அவனை இயக்குகிறது. என்றேனும் விடிவு பிறக்கும் என்பதன் தணியாத நம்பிக்கையே கடவுள்.

            ரகமத் அப்படித்தான் தன கணவன் ரகீமிற்காக வேண்டி நிற்கிறாள். அவளின் மனத் துயரம் அளவிடற்கரியது. மருத்துவர் லூயிஸ்  தன்னாலியன்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். ஆனால் ரகீமின் கைப் புண் ஆறுவதாயில்லை. மணிக்கட்டுவரை எடுத்த பின்பும் தொடர்கிறது. தொடர்ந்து அழுகிக் கொண்டேயிருக்கிறது.  என்ன காரணத்தினால் இது நிகழ்கிறது என்பதை உறுதி செய்ய முடியா நிலை. தர்உறாவிற்கு சென்று ஓதுதல் முடித்த பின்பும் விடிவு ஏற்படாமல் வேதனை தொடர்கிறது. செவிலித்தாய் சுந்தரவள்ளி அவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்கிறாள்.  ஆனால் கடைசிவரை ரகீமின் கைப்புண்ணிற்கு முடிவே இல்லாமல் போகிறது. அறுவை சிகிச்சைக்குப்பின்பு கட்டப்பட்ட கட்டை மீறி புழுத்து நெளிகிறது. இரு மகள்களோடு சேர்ந்து நிற்கும் கடைசி நிமிடங்கள். மொத்த மாத்திரைகளையும் விழுங்கி முடிவைத் தேடிக் கொள்கிறான் ரகீம். செய்வினையின்பாற்பட்ட சோதனைதான் இது என்று உறவுகளின் மேல் கொண்ட சந்தேகங்கள் கோபத்தையும், பழியையும் மனதிற்குள் விதைத்து  அதனை மீறிய இறை நம்பிக்கை அவர்களை வழி நடத்திச் சென்று… ஏமாற்றமாகி இறுதி முடிவின்சொல்லொணா வேதனை நம்மை கதி கலங்கச் செய்து விடுகிறது. இறைவா…யாருக்கும் இந்தத் துயரம் நிகழக் கூடாது என்று ரகமத்தோடு சேர்ந்து நாமும் இறைவனை வேண்டி நிற்கும் நிர்க்கதியான நிலையே ஏற்படுகிறது.

            இத்தனை துயரமிக்க சோக காவியத்தை மனம் சுமந்து நிற்கும்போது நாமும் நிலை குலைந்து போகிறோம். என்றுதான் ஆதரவற்றவர்களுக்கு விடிவு? எப்படித்தான் அந்த விடிவு? யார் மூலம்தான் அந்த விடிவு? யா ரப்பே…! (றப்பே…என்பதுதான் சரியோ…!) என்று அகன்ற வானத்தைப் பார்த்து நாமும் வேண்டி நிற்கிறோம்.

            ஜவ்வாது முஸ்தபாவின் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட சூழ லியல் மக்களின் அனுபவம் சார்ந்த இந்தத் தொகுப்பின் கதைகளில் சில பாராட்டத்தகுந்த பரிசுகளையும் வென்றுள்ளன என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தொகுதியின் மூன்று நான்கு கதைகள் சிறப்பாக இருந்தாலே அதைச் சிறந்த தொகுப்பு என்று பாராட்டும் வகைமையில் இத்தொகுதியின் மொத்தப் பதினாக்கு கதைகளின் பத்துக்கும் மேற்பட்ட கதைகள் நம் சிந்தையைப் புரட்டிப் போடும் வலிமை வாய்ந்தவையாய்த் திகழ்தல் படைப்பாளியின் ஆளுமை மிக்க எழுத்துத் திறனை வெளிப்படுத்தும் சாட்சிகளாய் மிளிர்கின்றன.

            அடுத்தடுத்த தொகுதிகளில் ஜவ்வாது முஸ்தபா இன்னும் இன்னும் மேலே சென்று தன் எழுத்துத் திறனை உச்சியில் நிறுத்துவார் என்பது திண்ணம்.

                                                ---------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...