சிறுகதை “மாசற்ற ஊழியன் 22.03.2023 பிரசுரம்
அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா.
என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை
உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக
ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு
நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார்.
இந்த மக்கள் மனதில்தான் எத்தனை நம்பிக்கை? நம்மாள் வந்திட்டாருய்யா...கனிவான பார்வையில்
சொல்லாமல் சொன்னார்கள்.
உறாஉற்...உறாஉற்...உறா...குரலெடுத்து உச்சமாய் சிரிக்க முயன்றார். சுற்றிலும் ஏகாந்தமாய்க் கூடியுள்ள மக்களின்பால்
கவனம் சென்றது. . என்னைப் போலவே அவர்களும் யோசனையில் இருப்பதுபோலவே தென்படுகிறதே! கனிவான
அந்தப் பார்வை நொடியில் ஏன் இப்படி மறைந்து விட்டது? ரொம்பவும் அப்படிப் பார்த்தால்
அரசர் லேசாக நினைக்கக் கூடும் என்று தோன்றி விட்டதோ? மக்கள் கருத்தானவர்கள். எந்த நேரத்தில்
எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆழமாய் அறிந்தவர்கள். அமைதியாய்த்தான் எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் செய்ய வேண்டிய நேரத்தில் மிகச் சரியாய்ச் செய்து
காண்பித்து விடுவார்கள்.
அது கிடக்கட்டும்....அப்படி என்ன யோசனை? அதுதான் என்னிடம் வந்து
விட்டாயிற்றே! பிறகென்ன கவலை? இனி எல்லாம் ஜெயம்தான். எல்லாவற்றையும் ஒரு ஆட்டு ஆட்டாமல்
விடமாட்டேன். இத்தனை ஆண்டுகள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம். குமுறிக் கொண்டிருந்த மனசு.
ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொண்டதால் எதுவும் செய்ய முடியாத நிலை. இனி ஒவ்வொன்றாய் அடித்துத் தூள் கிளப்ப வேண்டியதுதான்.
மனதுக்குள் பெரிய பட்டியலே தோன்றியது மகாராஜாவுக்கு. அவ்வளவு பேரும் கொண்டாட்டமாய்
மக்களின் வரிப்பணத்தை ஸ்வாகாப் பண்ணியவர்கள். அவர்களுக்கு நல்லது செய்வதாய் படம் பண்ணியவர்கள்.
பாவலாக் காட்டியவர்கள். தெரிந்துதான் அவர்களும் உடன்பட்டார்கள். ஏதோ கொஞ்சமாவது நன்மை
கிடைக்கிறதே என்று! ஆனாலும் அதற்கும் என்ன ஒரு அதிகாரம், ஆர்ப்பாட்டம், விளம்பரம்.
கையை நீட்டச்சொல்லித் தடவி விட்டதற்கா இவ்வளவு? என்னமோ கொடுத்தாற்போலும், மாயமாய் மறைந்தாற்போலும்?
ஒரு நோட்டம் விட்ட அந்தக் கணத்தில் பிரஜைகளை, அவர்களின் மன உணர்வுகளை
ஆழமாய் உணர முடிந்தது. திடீரென்று ஒரு ஐயம். ஒருவேளை உறங்கி விட்டார்களோ! நான்தான்
அப்படி என் காலத்தைக் கழித்திருக்கிறேன் என்றால் இவர்களுமா இப்படி? நானாவது சாதகமான
காலத்தை எதிர்நோக்கி உறங்கி என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இவர்கள்? பாவம், அவர்கள்
என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் அவர்களால்? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ ஒரு
வாய்ப்பு அவர்களுக்கு. பிறகு எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே? விதியே என்று
இருக்க வேண்டியதுதானே? முடியுமானால் ஏதாவது எழுதிக் கொண்டுவந்திருப்பார்கள். அதைத்
தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஏதாச்சும் ஆகுதா பார்ப்போம்...அவ்வளவுதானே?
சரி, சபையை ஆரம்பித்தால்தான் இவர்கள் விழித்துக்
கொள்வார்கள். அமைச்சரே! யோவ் அமைச்சரே!! என்னய்யா நீர்!!! உம்மிடம் பொறுப்பை ஒப்படைத்ததே
தவறு போலிருக்கிறதே? காலாகாலத்தில் ஆரம்பித்து வையுமய்யா! மக்கள் எகத்தாறாகக் கூடியிருக்கிறார்கள்.
நீர் என்னடாவென்றால் முழித்துக் கொண்டிருக்கிறீரே? கொதித்து, பொறுமை இழந்து விடப் போகிறார்கள்.
அரசே! இதோ ஆரம்பித்து விட்டேன் அரசே... முதலில் இறைவணக்கம்.
என்னது? இறை வணக்கமா? என்னய்யா இது? எப்பொழுதும்
இல்லாத புது வழக்கம்?
நீங்கள் சபை நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என்று
சொன்னீர்களே…மன்னா...! அதனால்தான்...
உண்மைதான்…அதற்காக? இதென்ன அரங்கக் கூட்டமா?
மக்கள் சபை அய்யா…மக்கள் சபை…அவர்களின் பிரச்னைகளைப் பேச வந்திருக்கும் இடம். அதற்குத்தான்
முதலிடம். அதற்காகத்தானே இன்று இந்த சபையே? பிரச்னைகளை வெறுமே பேசுவதோடு கலைந்து விடக்கூடாது…தீர்வு
காண வேண்டும்…அப்படியான கோணத்தில்தான் இவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கும் ஒவ்வொரு
மனுவையும் பரிசீலிக்கப் போகிறேன்...ஒன்றே ஒன்றானாலும் உருப்படியாய்,வசமாய் மாட்டியிருக்கிறது
ஒரு மனு...அதற்கான நீதி இன்று...
செய்யுங்கள் மன்னா...நன்றாகச் செய்யுங்கள்...இருந்தாலும் சம்பிரதாயம்
என்று ஒன்று இருக்கிறதல்லவா?
சம்பிரதாயமா? நல்லது. அப்படியென்றால் நான் ஒரு
யோசனை சொல்கிறேன். சம்பிரதாயத்தைப் பயனுள்ளதாக்குவோம்…இந்த நாட்டின் பொது நலனுக்காக
வேண்டும் ஒரு பாடலை பாடச் சொல்லும்…அது இரண்டு வரியாய் இருந்தாலும் பாதகமில்லை.
நல்லது அரசே…என் மகனே இருக்கிறான்…
”எது உம் மகனா? ஏனய்யா…அதற்கும் கூடவா தயார்
பண்ணிக் கொண்டுவந்து விட்டீர்? சரி போகட்டும்…இன்று வேண்டுமானால் பாடிவிட்டுப் போகட்டும்… எதிலும் வாரிசு
என்கிற பேச்சுக்கே இடமில்லை இங்கே. மக்களில் ஒருவர்தான் ஒவ்வொரு முறையும் இறை வணக்கம்
பாட வேண்டும்…என்னை என்ன கிறுக்கன் என்று கண்டீரா? உம் மகன் பாடுவதானாலும் மக்களிடம்
அனுமதி பெறவேண்டுமய்யா? அவன் பெயரை அறிவித்து அதை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக
அவர்கள் ஒரு சேர சம்மதம் சம்மதம் என்று ஒப்புகைக்குரல் எழுப்ப வேண்டும். அல்லாமல் நீர் தன்னிச்சையாக அறிவிப்பதும்,
அதற்கு நான் அமுக்குணியாய் இருப்பதும் அத்தனை நல்லதல்ல.
ஆகட்டும் மன்னா….ஆனாலும் நீங்கள் இப்படித் திடீர்
என்று முற்றிலும் மாறிப் போவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..
உமக்கு அதிக சர்வீஸ் ஆகி விட்டதே என்று வாய்
கிழிகிறதா? என்ன, நாம் தனியே சம்பாஷிப்பதையெல்லாம் பொதுச் சபையினில் பகிரங்கப் படுத்துகிறீர்?
எங்கே உமது மகன்…அவனை வந்து சட்டென்று பாடி விட்டு மறையச் சொல்லும்…
மகனே ருக்மாங்கதா….
என்னது? ருக்மாங்கதனா? என்னய்யா பேர் இது? சரித்திர
காலப் பெயரையெல்லாம் வைத்துக் கொண்டு..
இல்லை அரசே…ருக்மாங்கதன் நமக்கு முந்தைய காலத்தவன்...
மக்களுக்காகவே வாழ்ந்து மடிந்தவன்…வாழ்நாள் பூராவும் அவர்களின் பிரச்னையைத் தலையில்
சுமந்தவன்…அவர்களைத் தட்டி எழுப்பியவன்…புரட்சியை வெடிக்கச் செய்து புதிய உலகம் படைத்தவன்…
அப்படி இவன் இருக்கப் போவதில்லையென்றாலும்,
பெயராவது அப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே என்று வைத்தீராக்கும்…பெயரில் என்னய்யா
இருக்கிறது…செயல்…செயல்…அது ஒன்றே நமது வெற்றி….அதுதானய்யா காலத்திற்கும் நிற்கும்….நம்மைஅடையாளப்படுத்துவது
நம்மின் தன்னலமற்ற சேவை ஒன்றே…தன்னையே அற்பணித்தவன் இந்தப் பெயர் கியர் இதிலெல்லாம்
கவனம் செலுத்துவதில்லை…நீர் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்…சாதாரண மக்களைப் பாரும்…குப்புசாமி,அமாவாசை, பிச்சாண்டி, சாமுண்டி…என்று …அதுதானய்யா யதார்த்தம்…யதார்த்தம்தான்
வாழ்க்கையின் அசல்…அதைப் புரிந்துகொள்ளும் நீர்…
ஆகட்டும்மன்னா….நேரமாகிறது…என்மகனைஅழைக்கிறேன்…ருக்மாங்கதா…ருக்மாங்கதா…
தந்தையே…
பின்னால்தான் நிற்கிறாயா…நான் உன் இருப்பிடத்தை
மக்கள் மத்தியில் தேடுகிறேன்…
அங்கு நின்று என்ன பயன் தந்தையே…உங்கள் அருகில்
நின்றால்தானே சட்டென்று இடத்தைப் பிடிக்க முடியும்…
ஆனாலும் மக்களின் நாடி அறிய வேண்டுமப்பா…
அதற்கு
அதிகாரம் கையில் இருக்க வேண்டும் தந்தையே…
இப்படி ஒரு அபத்தமான பதிலை நான் உன்னிடமிருந்து
எதிர்பார்க்கவேயில்லை…மக்களோடு மக்களாய் நின்றால்தான் அவர்களின் மனங்களை அறிய முடியும் என்பதுதான் மரபு….அரசரும் நானும்
இன்றும் கூட மாறுவேடத்தில் பல இடங்களுக்குச் சென்று வருவது அதற்காகத்தான்…
நீங்கள் நினைப்பதுபோல் நான் அவர்களுக்கு உழைத்து
உருக்குலைந்து அவர்கள் என்று என் பெயரைச் சொல்வது, நான் என்று உங்கள் பதவியை அடைவது?
அது நடவாத காரியம்…இடத்தைப் பிடித்து மடத்தை ஆள வேண்டியதுதான்...உம்...சொல்லுங்கள்
என்று உசுப்பினால் கோரசாகக் கத்திவிட்டுப் போகிறார்கள்....மந்தையிலே ஒரு ஆடு ம்மே...என்றால்
ஒன்றன்பின் ஒன்றாக மற்றவையும் கத்துவதில்லையா? இந்த மக்கள் மந்தையை எப்படி மேய்ப்பது
என்பதை நான் நன்கறிவேன் தந்தையே...
அதற்குள் முடிவு செய்து விட்டாயா? எனக்கு எப்பொழுது
ஓய்வு தர வேண்டும் என்பது அரசருக்குத் தெரியும்…அதற்கு சம்பிரதாயங்கள் நிறைய உள்ளன….
ஒரு வயதுக்கு மேல் சம்பிரதாயங்களெல்லாம் பார்க்க
வேண்டியதில்லை என்று ஒரு உப ஆணை உள்ளதை நீங்கள் அறிய மாட்டீர்கள் தந்தையே…உங்கள் காலத்திலே
உருவானதுதான் அது..உங்களது சர்வாதிகாரத்தில் தானே சுயம்புவாக எழுந்தது அது. நம்மையறியாமல்
நமக்கென்று நம் வாழ்க்கையில் நாம் வலைகளைப் பின்னிக் கொள்கிறோம்...அதற்குப் பெயர்தான்
வினை...அதை விதைத்தால் அதைத்தானே அறுக்க முடியும்.. .நான் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து
கொண்டிருக்கிறேன். அதைத் தொட்டவுடன் உங்களை நானே தட்டி விட்டு விடுவேன்…அப்போது எவனும்
குறுக்கே வரமுடியாது…வந்தாலும் தேறாது...
தேறாதா? அப்படியென்றால்?
அப்படியென்றால் அப்படித்தான். இப்போதே எல்லாவற்றையும் சொல்லிக்
கொண்டிருக்க முடியாது. நடக்க நடக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் தலைவிதியே என்று...அப்போது
உங்கள் கைகளும் கட்டப்பட்டுவிடும்...
இப்போதே நான் அப்படித்தானே இருக்கிறேன்...
புரிந்தால் சரி...
மெதுவாகப் பேசு…என்னை விட உனக்கு மூளை ஜாஸ்தி…நமக்குள் இப்படியெல்லாம்
வாதம் மூழ்கிறது என்று தெரிந்தால் அதுவே பெரிய ஆபத்து...உன்னை அருகே வைத்துக் கொண்டிருப்பதே
ஆகாது…என் காரியத்தையே கெடுத்து விடுவாய் போலிருக்கிறதே…போய் ரெண்டு வரி பாடிவிட்டு
வா….போ…போ…
முதலில் இறை வணக்கம். எல்லாரும் எழுந்து நிற்கலாம்.
யாரோடும் எவரோடும் யாண்டும் சேரக் கண்டு
யாதொன்றின் காரணங்கள் எவரும் அறியாதிங்கு
எல்லாமும் நன்மைக்கே இறைவன் பாதம் நின்று
ஏத்திடுவோம் போற்றிடுவோம் எமக்கு நன்மை என்று
அமைச்சரே….இப்படி வாரும்….
வந்தேன்…
என்னய்யா இது, இறை வணக்கம் மாதிரியே இல்லையே…
கடவுள் வாழ்த்துதான் மன்னா…தலைவனைப் போற்றுதல்..தலைவன் எவ்வழி தொண்டன்
அவ்வழி…அவரின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்து அவர் பாதத்துளிகளில் சமர்ப்பித்தல்.
தலைவனை இறைவனாகப் பார்க்கிறார்கள் மக்கள்.
மக்களா? தொண்டர் என்று சொல்லும்…மொத்த மக்களும் அவர் பின்னாடி என்பதுபோல்
பகர்கிறீரே…!
தலைவர் அப்படித்தான் சொல்கிறார் மன்னா?
எந்தத் தலைவரைய்யா…? நீர்பாட்டுக்குப் பிதற்றுகிறீர்…இங்கே மக்கள்தான்
தலைவர்களய்யா…மன்னன்தான் தொண்டன்…
அது தேர்வு செய்வதற்கு முன்பு….தேர்ந்தபின்பு மன்னன்தான் மக்களுக்குத்
தலைவன்…அதில்தான் எத்தனை இன்பம் இருக்கிறது. அதை அறியமாட்டேன் என்கிறீர்களே…பதவி சுகத்தை
உணராத மன்னர் என்றால் தாங்கள்தான்…
பதவியாம் பதவி…நான் இங்கே அதற்கா வந்திருக்கிறேன்…இதுநாள் வரையில்
செய்ய முடியாதவற்றையெல்லாம் நிறைவேற்றத்தானய்யா இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். இந்த
இடம் என் மா தவத்தால் பெறப்பட்டது. என் மக்களுக்கு நல்லது செய்ய நானே அடைந்த மாபெரும்
பேறு.
அப்படியானால் நேற்றுவரை எங்கிருந்தீர்கள் தாங்கள்…
என்னிடமே கேள்வி கேட்கிறீரா? உம்மை அமைச்சராக
வைத்திருப்பதே தவறு…அதெல்லாம் சொல்வதற்கில்லை. போகப் போக உமக்கே தெரியும்... இந்த அமர்வு
முடிந்தவுடன் முதல் வேலையாக உம்மைத் தூக்கியாக வேண்டும். இல்லையென்றால் நீர் உம் மகனை
அரியணை ஏற்றுவதுபற்றி ஆகவேண்டியதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்…ஆபத்தான ஆளய்யா நீர்…
அமைச்சரே…எங்கே அந்த வரப்பு கட்டிய அதிகாரியை
அழைத்து வரச் செய்யும்…இன்று அது ஒன்றுதான் விசாரணை...மீதி மனுக்களை தினம் ஒன்றாகப்
பார்க்கலாம்...
மன்னா, ஒரு வேண்டுகோள். அது ஒருவரில்லை. பலர்
இருக்கிறார்கள் .நாடு முழுவதும் அத்திட்டத்தை நாம் நிறைவேற்றியிருக்கிறோமே…
திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால்
நீங்கள் என்ன பொருளில் சொல்கிறீர்கள்? நிதி ஆதாரம் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்கிற
பொருளில்தானே…
ஆம் மன்னா…திட்டத்திற்கென்று இத்தனை கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது
என்றாலே நமக்குப் பெருமைதானே…மக்களுக்கான திட்டங்களில்தானே இச்செலவை மேற்கொண்டிருக்கிறோம்…
செலவுதானய்யா மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. திட்டம் என்னவாயிற்று?.
அங்கங்கே எல்லா இடங்களிலும் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது மன்னா... எழுதி வைத்துவிட்டால் திட்டம் நிறைவேற்றப்பட்டு
விட்டது என்கிறீர்...அப்படித்தானே?
இல்லை மன்னா திட்டத்தை நிறைவேற்றி, பிறகுதான் போர்டு வைக்கப்பட்டது
என்று சொல்ல வந்தேன்.
ஆனால் இன்று போர்டு மட்டும்தான் இருக்கிறது என்பதையும் சொல்ல மறந்துவிட்டீரே?
அதை எப்படி மன்னா நாமே சொல்லிக்கொள்ள முடியும்...
ம்ம்...அப்படி வாரும் வழிக்கு...அதனால்தான் மக்கள் சொல்கிறார்கள்.
அதைத் தெரிந்து கொள்ளும்.
மக்கள் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைத் திருப்தி
செய்யவே முடியாது மன்னா...இங்கு வந்து உட்கார்ந்து பார்த்தால்தான் அவர்களுக்குக் கஷ்டம்
புரியும்...
எதைப்பற்றி?
திட்ட ஒதுக்கீடுபற்றி....
அதாவது திட்டத்தின் மூலமாக உமக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்துகொள்வது
என்பதுபற்றி...அப்படித்தானே...?
எல்லாவற்றிற்கும் இப்படிக் குதர்க்கமாய்ப் பொருள் கண்டால் எப்படி?
அப்படியென்றால் இல்லை என்று மறுக்கிறீர்....அப்படித்தானே..?
ஏனய்யா வாய் அடைத்து விட்டது...? இன்று ஒருநாள்தான் நீர் அமைச்சர்...இன்றே
உமது கடைசி நாள்...நினைவில் வைத்துக் கொள்ளும்...இந்தத் திட்ட ஆய்வில் நீரும் இருந்திருக்கிறீர்...அதனால்தான்
இன்று உமக்கு இடம்...நாளை முதல் நீர் தடம் தெரியாமல் போய்விடுவீர்... சரி....போகட்டும்...உமது
விஷயத்தைப் பிறகு பார்ப்போம்...இப்போது .நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்...
வாய்க்கால் கட்டிய இடத்தில் கடைமடை வரை தண்ணீர் பாய்கிறதா? பார்த்தீரா?
கட்டிய காங்கிரீட் வயல் வரப்புகளில் ஆடு நடந்தால்
இடியாமல் இருக்கிறதா? ஒரு தட்டுக்கு சிமின்ட்டுக்கு எத்தனை தட்டு மணல் போட்டிருக்கிறார்கள்
அதைக் கணக்குப் பண்ணினீரா? உடைகல் வைத்துக் கட்டப்பட்டுள்ளதா? அல்லது அங்கங்கே கிடந்த
கப்பிகளை அள்ளிப் போட்டிருக்கிறார்களா? ஒரிஜனல் ஜல்லி கொண்டு வரப்பட்டதா? கலவை எப்படியிருந்தது...கண்ணுற்றீரா?
ஒரு மழைக்காவது தாங்குமா? அல்லது பலத்த காற்றுக்கே பெயர்ந்து போகுமா?
மன்னா ஒரே சமயத்தில் இத்தனை கேள்விகளை அடுக்குவீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை....
இத்தனையையும் என் சார்பில்
நீர் கேட்டிருக்க வேண்டுமய்யா...நீர் எதிரணியில் சேர்ந்து கொண்டதனால் இப்போது நானே
கேட்கும் நிலை ஆகிவிட்டது...
இதோ நிற்கிறாரே அந்த அதிகாரி அவர் ஒப்பந்தத்திற்கு விட்ட ஒப்பந்தகாரரிடம்
அவர் ஏற்றுக் கொண்ட வேலைக்கு ஏற்றாற்போல் போதிய பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளதா? இல்லை
போன வருஷம் வேலை செய்வதற்குக் கொடுத்த அதே பத்திரத்தை எடுத்து இந்த வருடத்திற்கும்
கணக்குக் காண்பிக்க வசதி செய்யப்பட்டதா? இதற்காக யார் யாருக்கு எவ்வளவு எவ்வளவு கொடுத்தார்?
மேலிருந்து கீழ்வரை உண்டான கமிஷனின் சதவிகிதம்தான் என்ன? என்னய்யா முழிக்கிறீர்...அந்த
அதிகாரியிடம் முன் விசாரண நடத்தினீரா இல்லையா? அமைச்சரே உம்மைத்தான் கேட்கிறேன்....
மன்னா,நான் ஏற்கனவே அதிர்ந்து போயிருக்கிறேன்... இதென்ன மறுபடியும்
திடீர்த் தாக்குதல்? அதுவும் மக்கள் மன்றத்தில்...தாங்கள் கட்டளையிட்டிருந்தால் சிரமேற்கொண்டு
செய்து முடித்திருப்பேனே...? இப்படியெல்லாம் நடக்கிறதென்று இப்பொழுது நீங்கள் சொல்லித்தான்
எனக்கே தெரிகிறது....
நீர் சரியான அமுக்குளியய்யா..முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது
என்று எல்லோரும் அறிந்த பழமொழியின் முழு உண்மை இன்றுதான் உணரப்படுகிறது......உமது மகனை
எப்படி உள்ளே நுழைப்பது என்பது பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர். ஆனால் இது
தெரியவில்லை என்கிறீர்...நம்பும்படியாக இருக்கிறதா?
மன்னர் உத்தரவின்படி நிதி ஒதுக்கீட்டோடு என் வேலை முடிந்து விட்டது
மன்னா...
உம்மின் தேவையே அதுதானே...மற்றதைப் பற்றியெல்லாம் நீர் என்று கவலைப்பட்டிருக்கிறீர்...
பிறகு அதிகாரிகள் என்று எதற்கு இருக்கிறார்கள் அரசே...எல்லாவற்றையும்
நாமே தலையில் சுமக்க முடியுமா?
ஊழல் நடக்கும் என்று தெரிந்தால் சுமந்துதானய்யா தீர வேண்டும்...மக்கள்
நம்மைத்தான் மனதில் வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருக்கிறார்களே ஒழிய அதிகாரிகளா
தேர்வு செய்யப்பட்டார்கள்? அவர்களா மக்களின் பிரதிநிதிகள்? அவர்கள் மக்களின் சேவகர்கள்...அதை
உணர்த்துவது நம் வேலை...
இங்குதானய்யா எனக்கு பலத்த சந்தேகம் வருகிறது?
மன்னா...
என்ன நொன்னா...? மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளால் அதிகார வர்க்கம்
கெட்டதா? அல்லது அவர்களால் இவர்கள் கெட்டார்களா?
அது பிடிபட்ட காலத்தில் நீதி மன்றத்தில்தான் தெரியும் மன்னா?
எப்படி?
உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்டாய் என்று...குடுமிப்படி
வரும்...அப்பொழுது....
பலே ஆளய்யா நீர்...நன்றாக விளக்கம் அளிக்கிறீர்...என்ன இருந்தாலும்
மதி நுட்பம் வாய்ந்த அமைச்சராயிற்றே...
ஆனாலும் உம் மீது எனக்கு வருத்தம்தான்...
எதற்காக மன்னா? நான் எனது கடமையைக் கண்ணும் கருத்துமாகத்தானே செய்கிறேன்...
கண்ணாய்ச் செய்திருக்கிறீர்...கருத்தாய்ச் செய்யவில்லை...கருத்தாய்ச்
செய்வது என்பது அர்ப்பணிப்பது...அது தன்னலமற்றது...அப்படி ஆளா நீர்? எனக்கு அந்த நம்பிக்கையெல்லாம்
இல்லை..வாரத்தின் முதல்நாள் மனுநீதி நாளாக அறிவித்து பொருந்தலாறு வரை மக்கள் வரிசை
நீள்வதைப் பார்த்திருக்கிறீர்தானே? அதற்கு என்ன பொருள்? மக்கள் அத்தனை ஆயிரம் குற்றங்
குறைகளோடு இருக்கிறார்கள் என்று பொருள். அப்படிக்
குவிந்த மனுவில் ஒன்றுதான் இப்போது நான் கேட்பது.....ஒவ்வொரு மனுவும் ஒரு பெரும்
தண்டனைக்குரியதாகத் தோன்றுகிறதய்யா எனக்கு...உரிய தீர்ப்பளித்தால்தான் மக்கள் ஆறுதல்
கொள்வார்கள். இல்லையெனில் புரட்சி வெடிக்கும் அபாயம் உண்டு நாட்டில்...ஞாபகமிருக்கட்டும்...
பாரும்...இப்பொழுதாவது மக்கள் குறைகளைக் கண் கொண்டு பாரும்...அரண்மனையின்
உள்ளே ஏடுகளில் நாமாக எழுதிக் கொள்வதில் இல்லையய்யா
அரசாட்சி...மக்களோடு மக்களாய் ஒன்று கலந்து அவர்களின் வாழ்வியலின் நுட்பங்களை உணர்வதுதான்
ஆட்சியின் சாரம் என்று அறியப்படும்.......
மனுதாரின் பெயரைப் படியும்.....
மன்னா...அது...வந்து....
என்னய்யா வந்து போயி....படியும் என்றால் படியும்...படித்துத் தொலையும்...
ப...ப....ப.....பஞ்சலிங்.....
ம்ம்....தெரிகிறதா....இந்த மனுதாரர் இப்போது ஓய்வு பெற்ற ஒரு பணியாளர்....தான்
இந்த அதிகாரியிடம் பட்ட பாட்டை இம்மனுவில் புகாராக எழுதியுள்ளார்....விதிமுறைகளைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று பத்தி பத்தியாகக் கை ஒடிய எழுதித் தலையில் அடித்துக்
கொண்டும் அதிகாரி என்கின்ற போர்வையில் இந்த ஆள் அதைச் சட்டை செய்யவில்லை.அதையெல்லாம்
தூக்கிக் குண்டிக்கடியில் போடும் என்று ஏளனமாய்ப் பகன்றிருக்கிறார். போதாக்குறைக்கு இவரை பலர் மத்தியிலும் கேலியும்
கிண்டலும் செய்திருக்கிறார். எழுதியதையெல்லாம் கிழித்துப் போடும் என்று சொல்லி, வேறு
பேப்பரில் நான் சொல்வது போல் எழுதுங்கள் என்று வேறு வற்புறுத்தியிருக்கிறார். இவர்
முடியாது என்று மறுத்து நின்றபோது, லீவு போட்டுவிட்டு ஒழுங்காய் வெளியேறு என்று விரட்டியடித்திருக்கிறார். தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றியிருக்கிறார்....ஓய்வு
பெறப்போகும் கடைசி ஒரு வருஷத்தில் இருக்கிறேன் நான் என்று வேண்டியபோது அதற்கான சலுகையை
அவருக்கு அளிக்காமல், இதுதான் உன் தலைவிதி என்று காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ஆளைக்
கடத்திவிட்டு அவருக்கு வேண்டும் ஒரு நபரைத் தன்னிடத்தில் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணமாயும், காரியமாயும் அவர் யாரைப் பயன்படுத்தியிருக்கிறார் தெரியுமா?
அதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன் மன்னா...
உம்முடைய பெயரைத்தானய்யா பயன்படுத்தியிருக்கிறார்...அதைத் தெரிந்து
கொள்ளும்...
மன்னா...என்ன இது அநியாயம்....
நடிக்கிறீரா...என்னிடமே நடிக்கிறீரா....நீர் அவருக்கு வேண்டியவராம்...நீர்
இருக்கும்வரை யாரும் அவரை அசைத்துக் கொள்ள முடியாதாம்....என்னை எந்தக் கொம்பனாலும்
எதுவும் செய்ய முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். எனக்கு அமைச்சரைத் தெரியும்...அமைச்சர்
என் பாக்கெட்டில்.....என்றிருக்கிறார். நீர் அப்படித்தான் இருந்தீரோ....உம்மீதே இப்போது
சந்தேகம் வருகிறது எனக்கு. உமது முகம் ஏன் இவ்வளவு விகாரமாகிறது? இருக்கட்டும்...அதைப்
பிறகு பார்ப்போம்....அதற்குத் தனியாக வருகிறேன்....
பலரையும் கடித்துக் குதறிய
ஓநாய்..இந்த அதிகாரி .குறிப்பாக மக்களை...மக்களின் வரிப் பணத்தை....இப்படியான மனிதர்களை
விட்டு வைக்கலாமா? கூடாது...கூடவே கூடாது...முதலில் அவரிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம்
பறிமுதல் செய்யுங்கள்...அரசு கஜானாவில் சேருங்கள்...அவருக்கு அவரது நியாயமான பணிக்கு
என்ன உண்டோ அதை மட்டும் கொடுத்து விடுங்கள்...பிழைத்துப் போகட்டும்...ஆனால் ஒன்று தனது
மொத்தப் பணிக்காலத்திலும் கடமை தவறி, சொத்துச் சேர்த்த அந்தக் கயவனை இப்போதைக்குத்
தனிமை இருட்டுச் சிறையில் போடுங்கள். பிறகு பார்க்கலாம் அவன் முடிவை. மக்களுக்குச்
செய்ய வேண்டிய பணி எத்தனையோ காத்திருக்கிறது. அவர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்களை அப்படிக் காக்க வைப்பது மாபெரும் தவறு.
மகா ஜனங்களே...இந்த நடவடிக்கையில் உங்களுக்குத் திருப்திதானா? இனி
படிப்படியாக ஒவ்வொன்றிலும் இம்முறை புகுத்தப்படும்...யாரும் எதிலிருந்தும் தப்ப முடியாது...
மிக்க சந்தோஷம் மன்னா...உங்களுக்கு நன்றி....இதுபோல் ஏராளமான புகார்கள்
இன்னும் பல உள்ளன. ஒவ்வொன்றிலும் எங்களின் உழைப்பு சுரண்டப்பட்டிருக்கிறது...உண்மை
மறைக்கப்பட்டிருக்கிறது...
அத்தனையும் கவனிக்கப்படும்...உங்களில் ஒருவன் நான்...உங்களுக்கான
திட்டங்களை நான் அறிவேன்...அவற்றின் பின்புலத்தையும் அறிவேன்....நிதி ஆதாரங்கள் எவ்வாறு
வழங்கப்படுகின்றன...அவை மக்களை வந்து அடையும்போது எவ்வாறு தேய்ந்து மாய்ந்து போய்விடுகிறது
என்பதையெல்லாம் உணர்ந்தவன் நான்...இனி ஒருபோதும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்...என்
ராஜ்யத்தின் திட்டங்கள் முழுமையாக உங்களை வந்தடையும். அதில் குறை கண்டீர்கள் என்றால்
தாராளமாக நீங்கள் என்னை அணுகலாம். நான் உங்களில் ஒருவன்.
மகா ஜனங்களே...இத்தோடு இச்சபை கலைகிறது...எனக்கு வேறு சில அத்தியாவசியப்
பணிகள் உள்ளன. படிப்படியாக உங்கள் குறைகள் முழுவதுமாய் நூறு சதவிகித நேர்மையோடு தீர்த்து
வைக்கப்படும். என்னை நீங்கள் நம்பலாம். இல்லையென்றால் ரோட்டில் இழுத்துப் போட்டு அடிக்கலாம். நீங்கள் இதுவரை பொறுமை காத்ததற்கு நன்றி.... சொல்லியவாறே
கிரீடத்தையும், செங்கோலையும், உடைவாளையும்,ஒவ்வொன்றாகக் கழற்றினார் பஞ்சலிங்கம். ராஜ
இருக்கையில் அவற்றை அதிராமல் வைத்தார். தன் அறைக்குள் சென்று வழக்கமான வேட்டி சட்டையோடு
வெளியே வந்தார். ரொம்பவும் பழுப்பேறிப் போய்விட்டதாகத் தோன்றியது. இன்று பென்ஷன் வந்ததும்
முதலில் ரின் பார் சோப்பு வாங்கி காவி போகத் தோய்த்து உலர்த்த வேண்டும் என்று நினைத்துக்
கொண்டார்.
மணியைப் பார்த்தார். இரண்டு தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஆஉறா...இன்று
முப்பத்தி ஒன்றாம் தேதியாயிற்றே....என்றவாறே தனது செல்லை எடுத்தார். ஏதாவது மெஸேஜ்
வந்திருக்கிறதா என்று பார்த்தார்.
தனது ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் கிரடிட் ஆகியிருக்கிறதா என்பதைத்தான் அவர் நோக்கினார். எதுவுமில்லை.
ஏமாற்றமாயிருந்தது. நேரே வீட்டிற்குப் போவதா, அல்லது கருவூலத்திற்குப் போவதா என்று
தடுமாற்றமாயிருந்தது. ஒரு நாள் இரண்டு நாள் தாமதமானாலும் பென்ஷன் என்பது கண்டிப்பாய்
வந்து விடும். ஏதோ அத்தனை வருடங்கள் நேர்மையாய்ப் பணியாற்றியதற்கு இந்த ஆதாரமாவது இருக்கிறதே
என்று மனம் ஆறுதல் பட்டது. நேர்மையாய் இருந்தவனுக்கும், ஊழலாய் இருந்தவனுக்கும் எல்லோருக்கும்தானே
பென்ஷன் உண்டு என்றும் மனது அரற்றியது. அப்போதைக்கு வீட்டிற்குச் செல்வது என்று முடிவெடுத்து
அந்த வீதியில் சடாரென்று திரும்பினார். லேசான தலை சுற்றல். உடம்பில் ஒரு பதட்டம். உள்ளே
சுகர் இறங்குவதுபோல் ஒரு உணர்வு. கைகள் பேன்ட் பாக்கெட்டைத் துழாவின. வழக்கமாய் வைத்திருக்கும்
சாக்லெட் இருக்கிறதா என்று தேடினார். உடனே போய் நிறைய ஜீனி போட்டு ஒரு டீ அடித்தால்
தேவலை. ஒரு நிமிடம் தாமதிக்கத் தவறிவிட்டோமே
என்று அந்தக் கணத்தில் தோன்றியது அவருக்கு.
அப்போது சற்றும் எதிர்பாராவண்ணம் எதிரே வந்த மொபெட்காரன் அவரை ஒரு
இடி இடித்தானே பார்க்கலாம். தொபீர் என்று ப்ளாட்பாரத்தில் சாய்ந்தார் பஞ்சலிங்கம்.
ஐயா...ஐயா...அய்யய்யோ...உங்க மேலயா இடிச்சிட்டேன்....என்னை மன்னிச்சிடுங்கய்யா...மன்னிச்சிடுங்கய்யா...கூறிக்கொண்டே
அவரை எழுப்பி உட்கார்த்திவிட்டு எதிர்க்கடையில் போய் ஒரு சோடாவை வாங்கி வந்து அவர்
முகத்தில் தெளித்து, மீதியை அவர் வாயில் மெல்ல ஊற்றினான் அவன். சிறிது சிறிதாக சுய
நினைவு பெற்ற பஞ்சலிங்கம்....
நானே தடுமாறிட்டுத்தான் வந்திட்டிருந்தேன்...நீ ஒண்ணும் என்னை இடிக்கலே..நானாத்தான்
குறுக்கே விழுந்துட்டேன்....என்றார் மெதுவாக. அந்த நேரத்திலும் உண்மை பேசியதில் அவருக்கு
ஒரு ஆறுதல்.
வண்டில உட்காருங்கய்யா...வீட்டுல கொண்டு விட்டிடுறேன்.... பதறினான்
அவன்.
வேண்டாம்...வேண்டாம்...நா பஸ்லயே போய்க்கிறேன்...இன்னைக்கு நீ கொண்டு
விட்டிடுவே...நாளைக்கு யார் வருவா? ரொம்ப தேங்க்ஸ்...நீ கிளம்பு...
பார்த்துப் போங்கய்யா...அவன் சொன்னான். கௌஸ் பாய் என்னும் அந்த
நேர்மையான பியூன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் பஞ்சலிங்கம்.
வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களிலும், வறுமையிலும், துயரங்களிலும்,
நேர்மையும் ஒழுக்கமும் தவறாத எத்தனையோ நல்ல மனிதர்களைத் தான் சந்தித்திருக்கிறோம்,
அவர்களோடு பழகியிருக்கிறோம் என்று நினைக்க
முற்பட்டபோது, மகிழ்ச்சியோடு, அர்த்தமுள்ள
வாழ்க்கையை தான் வாழ்ந்திருப்பதாக எண்ணி ஒரு நிறைவும் ஏற்பட்டது அவருக்கு.
---------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக