30 ஜனவரி 2026

 

பேசும் புதிய சக்தி-பிப்ரவரி 2026 - சிறுகதை        பிரசுரம்               

“எதிர்பார்ப்புகள்”                                                                          ------------------------------------------------




புவனாவும் நம்ம பொண்ணுதானேன்னு நினைச்சு விட்ரு…அவ்வளவுதான்… - எடுத்த எடுப்பில் பாயின்ட்டுக்கு வந்தார் நவநீதன். எத்தனை நாளைக்கு இதை இழுப்பது? அலுப்பு வந்துவிட்டது அவருக்கு.சதா இதைப்பற்றியா நினைத்துக் கொண்டிருப்பது? பிரச்னைகளை நாமே உருவாக்கி வீடு பூராவும் இறுக்கமாக்கிக் கொண்டு மயான அமைதியில் வளைய வருவதா? தனதும் அவளுடைய வயதிற்குமான பொருத்தம் என்று இதை எப்படிக் கொள்வது? பெரியவர்கள், அனுபவப்பட்டவர்கள் என்பதற்கு அப்புறம் என்னதான் பொருள்? குறைந்தபட்சம் தங்களுக்குத் தாங்களே அதை உணர வேண்டாமா? அவரவர் மனதிற்காவது அந்தச் சமாதானம் கொள்ள வேண்டாமா? சும்மா முறுக்கிக் கொண்டு திரிவதா அழகு? இளசுகளுக்கும் நமக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்?

            உடனடியாக பதில் எதுவுமில்லை. பதில் வராது என்று தெரியும் இவருக்கு. அதற்கு ஒரு மனசு வேணும். ஒரு பக்குவம் வேணும்தான். அல்லது சொல்பவர்கள் வார்த்தைகளையாவது ஆய்ந்து பார்க்கத் தெரிய வேணும். அதற்கும் ஒரு சம்மதம் இருக்கணும். இப்படி ஏதாவதொன்று பாகேஸ்வரியிடம் இருக்கும் என்று தோன்றவில்லை. அவ்வளவு எளிதாய் அவள் மசிய மாட்டாள்தான். மாமியார் ஸ்தானம் என்பதை அம்மா ஸ்தானம் என்று விரிவாக நினைக்க அவள் தயாரில்லை.

            ஒண்ணு சொல்றேன் கேளு….இந்த வாழ்க்கையை ரொம்ப யோசிச்சோம்னா அது விபரீதத்துலதான் கொண்டு போய் விடும். எதையும் மனசுல போட்டுக்காம,  அன்றாடக் காரியங்களைச் செய்திட்டே போகணும்…அப்பத்தான் தடுமாறாம ஓடம் கடந்து போகும். யோசிக்க ஆரம்பிச்சோம்னா எல்லாம் குழப்பம்தான்…..- அவள் மூஞ்சியைப் பார்த்து நேரடியாகச் சொன்னார் நவநீதன்.

            கவனமாய்த்தான் கேட்டுக் கொண்டாள். ஆனால் எந்த ரியாக் ஷனும் இல்லை. மாமியாராயிற்றே…அதெப்படி உடனடியாகச் சம்மதிப்பது? தன் கௌரவம் என்னாவது? தானும் ஒரு வீட்டு மருமகளே என்கிற நினைப்பிருந்தால்தானே? வந்த புதிதில் கொஞ்சம் வித்தியாசமாய்த்தானே தானும் இருந்தோம் என்கிற நினைப்பு வேண்டாமா?

            உறால்ல போய் உட்காருங்க…காப்பி கலந்து எடுத்திட்டு வர்றேன்…..என்றாள். சம்பந்தமேயில்லாமல் பதில் சொல்வதில் கெட்டிக்காரி.  அதாவது தான் கேட்டதற்கு ஒப்புதல் இல்லை என்பதான பொருளடங்கியது.

            என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறது? எல்லாமுமே கடைசியில் ஒரு டம்பளர் சாம்பல்தான். இவ்வளவுதான் இவர் நினைப்பு. காவி உடுத்தாத சந்நியாசி. வெறும் கௌபீனத்தோடு போய் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் பகவான் ரமணரைப் போல் அமர்ந்து விடுவோமா என்று பல சமயங்களில் யோசிக்கிறார். மனம் அந்தளவுக்கு விட்டுத்தான் போகிறது. அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு வாழ்வதுதான் விவேகம்….எங்கோ படித்தது…அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து வெறுமையை விரிக்கிறது.

            புவனாவுக்குப் பிரியமான அம்மாவாக இருந்து விடு என்கிறார் இவர். அவ்வளவுதான் அவர் சொன்னது. தன் மனது ஏற்றுக் கொண்டதை அவள் மனதும் ஏற்க வேண்டும் என்கிற கட்டாயமா என்ன? அவரவர் ஸ்தானம் என்று ஒன்று இருக்கிறதே?

            அத்தனை சுலபத்திலா தானும் ஏற்றுக் கொண்டோம்? அதுவும் கொஞ்சம் காலம் கடந்ததுதானே? எல்லா ஆட்டமும் ஆடித்தானே ஓய்ந்தது மனம்?

            சூடான காப்பி வந்தது. அதைக் கொஞ்சம் மெதுவாய் வைத்திருக்கலாம் டேபிளில். நறுக்கென்று தலையில் குட்டியது போலிருந்தது. ஆனாலும் ஆவி பறக்கும் அந்தக் காப்பி மணம் அவள் கைபாகத்தை உச்சி முகர்ந்தது.

            மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நாலு பேர் வீட்டிலிருந்தால் நாலும் நாலு விதம்தான். யாரை யார் மாற்ற முடியும்? அவரவரே பக்குவப்பட்டு மாறிக் கொள்ள வேண்டியதுதான்.  மாறிவிட்டோம் என்று உணர்ந்து மாறினாலும் சரி, உணராமலே அதுவே மாயமாய் காலப்போக்கில் நிகழ்ந்து போனாலும் சரி…நல்லது நடந்தால் முடிந்தது விஷயம். அவ்வளவே அவர் எதிர்பார்ப்பு.

            நாம இன்னும் கொஞ்சம் நல்லபடியாத் தேடி  சரியாப் பார்த்திருக்கணும்…அவசரப்பட்டுட்டோம்….. – பழையபடி ஆரம்பித்தாள் பாகேஸ்வரி. மனசு தாளவில்லை அவளுக்கு. சமாதானம் ஆக மாட்டேனென்கிறது.

            பார்த்தியா…அடியப்பிடிடா பாரத பட்டான்னு திரும்பவும் ஆரம்பிக்கிறியே? இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப் போகுது அவனுக்கு.  மனச சமனப் படுத்திக்கோ…புகைய விடாதே…! எல்லாமும் நாள் ஆக ஆக சரியாப் போகும்.  எவ்வளவோ ஸ்லோகம் சொல்றே…சாமி கும்பிடுறே…கோயிலுக்குப் போறே….இவ்வளவுதானா உன் முதிர்ச்சி? சராசரி மனுஷங்க வாழ்க்கைல பக்குவப்படணும்னுதான் நியமங்களையே உண்டாக்கி வச்சிருக்கான்…அதிகபட்சம் மனசும் உடம்பும் கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு அது உதவும்ங்கிறதுதான் நடைமுறை. அந்த அன்றாட நியமங்கள் ஓரளவு கூட நம்மைப் பக்குவப்படுத்தலைன்னா அப்புறம் என்னதான் இருக்கு?  இப்படித் தொட்டதுக்கெல்லாம் புலம்பிட்டுத் திரியறதா? வாழ்க்கைல கஷ்டப்பட்டு, வறுமைல அடிபட்டு மேலே வந்தவனுக்கு பக்குவம்ங்கிறது உடம்போட ஒட்டின விஷயமாயிடுது. அல்லாதவங்களுக்கு அதுவே துன்பமாயிடுது….! அந்த எல்கையைத் தொட முடியலை…

            தன் விளக்கங்கள் அவளை சமாதானப்படுத்தியதோ என்னவோ? அவளின் அமைதி இவருக்குப் புரியாத ஒன்றாயிருந்தது.  நீங்க ரொம்ப முதிர்ச்சிதான்…தெரியாதா எனக்கு? என்று கோபப்படுவாள்.

            தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லாததே தன் மருமகளின் மீதான வாஞ்சையாக மாறிப் போனதோ? என்னவோ தெரியவில்லை அவருக்கு அந்தப் பெண்ணின் மேல் கோபமே வருவதில்லை. அதே சமயத்தில் ஒரேயடியாக மகிழ்ந்து குலாவுவதுமில்லை.  நிதானம் அவரது இயல்பு.  உடம்போடு ஊறிப் போன விஷயம்.

தேவைக்குப் பேசுவதோடு சரி.  அளந்த வார்த்தைகளில் ஒன்றிரண்டு நிமிடங்கள்.. அம்மாதிரி நேரங்களில் அவர் தன் மருமகளின் முகத்தை நேருக்கு நேர்கூடப் பார்த்துப் பேசியதில்லை. வேறு திசையில் நோக்கியோ அல்லது அநாயாசமாய்த் தலை குனிந்து கொண்டோ அல்லது நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் நிலையிலோதான் பேச்சுக் கொடுத்திருக்கிறார். சொல்லும் பதில்கள் அத்தனை பொருத்தமாய் இல்லாததுபோல்தான் தோன்றுகின்றன. சமயங்களில் அவை புரியாதனவாயும் இருக்கின்றனதான்.  சரி…சரி…என்று விட்டு விடுகிறார். என்ன பெரிய மந்திராலோசனை இந்த எளிய வாழ்க்கையில்?  நாளும் பொழுதும் நயமாய் ஓடினால் சரி….அவ்வளவுதான்.

அடுப்படியில் சமையலில் மும்முரமாய் இருந்தாள் பாகேஸ்வரி. எதுவும் பேச நேரமில்லை. சமையல் பக்குவமாய் அமையவில்லையெனில் அதற்கு ஒரு சண்டை வரும்.

எனக்கு உங்கம்மா சமையல் பிடிக்கவேயில்லை.  காரசாரமில்லாம…மந்தமா…வயசானவங்களுக்கு சமைக்கிற மாதிரி…!

அதுதான் வயித்துக்கும் உடம்புக்கும் நல்லது. ஓட்டல்ல போய் அடிக்கடி தின்னா…அப்புறம் ஆஸ்பத்திரியைத் தேடிப் போக வேண்டிதான்…-ராகவனின் பதில் அந்தப் பெண்ணைப் பொறுமை இழக்கச் செய்திருக்கிறது. இருப்பினும் அவனால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. பல நாட்கள் இவள் மாங்கு மாங்கு என்று செய்து வைத்திருக்கும் சமையல் வகைகள் வீணாகின்றன. வேலைக்காரிக்குத் தூக்கிக் கொடுக்கிறாள். அது சந்தோஷமாய் வாங்கிக் கொண்டு போவதில் ஒரு திருப்தி.

புவனாவும் ராகவனும் திரும்பும் நேரமாயிற்று. ஏதோ அதி முக்கிய வேலைகள் இருப்பதுபோல் பரபரவென்று கிளம்பிப் போனார்கள்.…எண்ணிலடங்காப் பொருட்களை…அவைகளின் தேவைகளை உணராது அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து சேருவார்கள். பாதிக்கு மேல் வீணாகும். இடம் அடைந்ததுதான் மிச்சம்.   இந்தத் தலைமுறை செய்யும் எத்தனையோ விரயங்களில் இதுவும் ஒன்று. காசுக்கு ஏது மதிப்பு? அள்ளிவிட்டதுபோக மீதம்தான்.

ஓய்வூதியம் இல்லா இவர்கட்கு நாலு காசு சேர்த்து வைத்துக் கொண்டால்தானே ஆச்சு? அந்த புத்தி, தெளிவு, அக்கறை எவனுக்காச்சும் இருக்கா?  சினிமால காண்பிக்கிற ஆடம்பரத்தையெல்லாம் நடப்பு வாழ்க்கைலயும்  கொண்டு வர முடியுமா? ஒரு நிதானம் வேண்டாம்?  வெறும் பொழுதுபோக்கும், கும்மாளமும்தான் வாழ்க்கையா? ரத்தம் சுண்டிப் போச்சுன்னா அப்புறம் என்ன பண்ணுவாங்களாம்? ஆஸ்பத்திரில போய் படுத்துக்குவாங்களா? எண்ணி எண்ணி மறுகுகிறார். பாகேஸ்வரியை விடத் தானே அதிகம் இவர்கள்பற்றி வேதனைப் படுவதாய் உணர்ந்தார். இந்த மனசுதான் எதையெதையெல்லாம் நினைத்து  அல்லாடுகிறது?

சும்மாக்கிடந்து துருப்பிடிக்கிறதை விட வேலை செஞ்சு தேயுறது மேல்.. என்று பலமுறை கோபமாய்ச் சொல்லியிருக்கிறார். அது அந்தப் பெண் இந்த வீட்டுக்கு வந்த புதிதில்  சுறுசுறுவென்று கோபப்பட்டுச் சொன்னது. காதில் வாங்கினால்தானே? தனக்குத்தான் சொல்கிறார் என்ற புரிதலே இருக்காது போலிருக்கிறது. எதையும் நேரடியாய் மட்டையடியாய் அடித்தால்தான் மண்டையில் ஏறுமோ என்னவோ?

துரும்பை நகர்த்த மாட்டாங்குதே? ஆணியடிச்ச மாதிரி ஒரேயிடத்துல அசையாம உட்கார்ந்திருக்கே…? எப்படிச் சொல்வது? வாய்விட்டுச் சொன்னால் சண்டைதான் மிச்சம். அவனுக்குமே பிடிக்கவில்லையே? சதா நொய்…நொய்யின்னுட்டு…என்று முனகுகிறானே? அம்மா அடுப்படியில் கிடந்து சாகிறாளே என்கிற கரிசனம் வேண்டாம்? புதுப் பொண்டாட்டி மயக்கம்.

கொஞ்ச நாளில் அந்த வேகமும் இவருக்குத் தணிந்துதான் போனது. யாரையும் யாரும் சொல்லித் திருத்த முடியாது என்பதைப் புரிந்து அமைதியாகிப் போனார். ஆனால் மனசு புழுங்குவது குறையவில்லையே? நமக்குப் பின் நலமாய், வசதி வாய்ப்பாய், ஆரோக்கியமாய் இருகக வேண்டுமே என்கிற ஆதங்கம்தானே? ஓடியாடி வேலை செஞ்சாத்தானே உடம்புக்கு நல்லது. கொஞ்சமேனும் இயக்கம் வேண்டாமா?

அவுங்க வீட்டுல அது அப்டிப் பழகியிருக்குடி….இங்க வந்த பிறகு திடீர்னு மாறணும்னா…காலைல ஆறுக்கு எழுந்திரின்னா எப்படி விழிக்கும்? அந்தப் பத்துமணிங்கிறது…கொஞ்சம்கொஞ்சமாய்த்தான்குறையும் இதையெல்லாம் நாம பார்க்கத்தான் முடியுமே தவிர, சொல்ல முடியாது. அவன்தான் சொல்லணும். நம்ம பிள்ளை. அவனே கம்னு இருக்கான். அப்புறம் எப்படி நாம சொல்றது? சொல்லி சண்டையிழுக்கச் சொல்றியா?

அவன் சொல்லத் தைரியமில்லாமல் இருக்கிறானா அல்லது பயந்து கிடக்கிறானா? புதுப் பெண்ணின் மோகத்தில் திளைத்திருப்பவனுக்கு மற்ற எதுவும் பெரிதாய்த் தெரியாதே? அதைச் சுட்டிக் காட்டினால் நாம்தான் குற்றவாளியாவோம்.

இன்னொரு  வீட்டுக்குப் போகும் பெண்ணை இப்படியா வளர்ப்பது? அந்த அப்பன்காரனுக்கு வெட்கமில்லையா? எவ்வளவு பொறுப்பா வளர்க்கணும் ஒரு பெண் பிள்ளையை? என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கணும்?  சொல்லி என்ன செய்ய? நாம கவனிச்சிருக்கணும்…எப்பப் படுக்கும்…எப்ப எழுந்திரிக்கும்? சமைக்குமா… அடுப்படிப் பக்கமாச்சும் போகுமா? ஒரு காப்பித்தண்ணியாச்சும் போடத் தெரியுமா? அட…நமக்குச் செய்ய வேண்டாம். அவனுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவாச்சும் துப்பு வேணாமா? சண்டிக் குதிர மாதிரி அந்த அறைக்குள்ளயே ஒண்டிக் கிடந்தா எப்படி?  ஆறு மாசம் கூடவே இருந்து பார்த்தாத்தான் இதையெல்லாம் கண்டு பிடிக்க முடியும். அது சாத்தியமா? எங்கும் சாத்தியமில்லை. தோராயமாய் ஒரு முடிவுதான் எடுக்க முடியும். பலரும் அப்படி எடுத்துத்தான் திண்டாடுகிறார்களோ?

சின்ன வயசுல எல்லாப் பிள்ளைகளும் அழகாத்தான் தெரியும்…வயசுப் பசங்களுக்கு அந்த அழகு கண்ணை மறைச்சிரும். அதனாலதான் பெரியவங்க பார்த்து முடிவு செய்யணும்னு சொல்றது. நாமளும் அதத்தான் பார்க்கிறோம். கண்ணு. காது, மூக்கு, வாய், சிரிப்பு, காலு கையின்னு…பார்த்து மகிழ்ந்திடுறோம்.  திருப்தியடையறோம். ஆனா பேச்சு எப்டியிருக்குன்னு, பக்குவம் தெரியுதான்னு கணிக்க முடியறதில்லை. ஆணும் பொண்ணும் போய் தனியா நின்னு பேசிட்டு வர்றாங்க..அது அவுங்களுக்குள்ள ஈர்ப்புல முடிஞ்சு போயிடும்…நடைமுறை வாழ்க்கைக்கு உதவுறதக் கணிக்க முடியறதில்லை…அதுலதான் பெரியவங்களும் கோட்டை விட்டுடறோம்…தனியாக் கூட்டிட்டுப் போய், எப்டிப் பேசுதுன்னு அறிய  பெரியவங்க கேள்வி கேட்டா…அது தப்பால்ல போயிடுது?

இப்போது சொல்லி என்ன செய்ய? எல்லாமும் முன்னப்பின்னதான் இருக்கும். எதுவும் உறன்ட்ரட் பர்சன்ட் பெர்ஃபெக்ட் கிடையாது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…-இதைத்தான் இவர் விடாமல் சொல்கிறார்.

து நாள் வரைக்கும் மூணு பேருக்குச் செஞ்சேன். இனிமே இந்த மகராணிக்கும் சேர்த்து வடிச்சிக் கொட்டணும் போல்ருக்கு? தலேலெழுத்தா எனக்கு? நல்லா வந்து வாய்ச்சிதே….? நமக்கு அறிவில்லே.யாரச் சொல்லி என்ன பயன்? நம்ம பையன் பாடுதான் திண்டாட்டம்…..காலம் பூராவும் எப்படிச் சமாளிக்கப் போறானோ?

உன் பையன் மட்டுமா திண்டாடுறான்…நாமளும்தான்…அவ்வளவுதான் உனக்குத் தெரிஞ்சிது…இந்தக் காலத்துப் பிள்ளைகளக் கட்டுனவன் பாடு பூராவும் இந்த ரேஞ்ச்தான்…இந்த மட்டுக்கும் ஓட்டல்ல போய் டிரிங்ஸ் அடிச்சிட்டு டான்சாடாம இருக்குதுங்களேன்னு நினை…அவுங்க வேலை பார்க்குற கம்பெனி அன்யூவல் டே கொண்டாடுறாங்களே…அப்ப என்ன நடக்குதுன்னு நினைச்சே…இதே ஆட்ட பாட்டம்தான்….இந்தப் பொண்ணு ஆடுறதயெல்லாம் நீ பார்த்தேன்னா…நீ ஆடிப் போயிடுவே… உறார்ட் அட்டாக்கே வந்திடும் உனக்கு…! நம்ம இருக்கிறதையே மறந்து ஆட்டம் போடுமாக்கும். ஒரு மரியாதையேயில்லையேன்னு நீ நினைக்கக் கூடாது…!

என்னங்க…என்னென்னமோ சொல்றீங்க…? நான் பார்க்கலியே?

நீதான் வரல்லியே…இந்த ஐ.டி. கலாச்சாரம் இதத்தான் வளர்த்து விட்டிருக்காக்கும்…அவ அவ  தன்னோட புருஷனோடதான் ஆடுறாளான்னெல்லாம் நீ கேட்கப் படாது…யாரோடவேணாலும்            ஆடலாம்…பாடலாம்…குலுங்கலாம்…குலுக்கலாம்…அந்தளவுக்குக் கேவலமாப் போச்சு இப்போ….உருப்படியாச் சொல்லப் போனா…வேலைக்குப் போகாத, ஒரு கிராமத்துப் பெண்ணா பார்த்துக் கட்டி வச்சிருந்தோம்னா நிம்மதியான பாடாயிருந்திருக்கும்….

அது வந்திச்சின்னா அதென்ன லட்சணமாயிருக்குமோ? இதாச்சும் பார்க்கிற வேலைல நாலு காசு கொண்டு வரும்…நாளப் பின்ன நம்மளுக்குப் பிறகு கொஞ்சம் வசதி வாய்ப்பா இருப்பாங்க….வெறும் பிள்ளப் பூச்சியக் கூட்டியாந்து என்ன செய்ய?

பார்த்தியா பார்த்தியா…கிராமத்துப் பொண்ணுன்னவுடனே என்னமோ சொல்றியே? அதுலயும் நம்பிக்கையில்லையா? இந்தப் பேச்சை இத்தோட விட்டிடு…அவ்வளவுதான் …மேற்கொண்டு ஏதாச்சும் சொல்லப் புகுந்தேன்னு வச்சிக்கோ, விபரீதமாகி அப்புறம் எதுல போய் நிக்கும்னு சொல்ல முடியாது. யுத்த களம் ஆரம்பமாயிடும் பிறகு…! அப்புறம் அது சரியாக ஒரு மாசம் ஆகும்…பழி நம்ம மேலதான் விழும்…ஜாக்கிரதை…! மாமனார், மாமியார் கொடுமைன்னு கெட்ட பேர்தான் வரும்…

கொஞ்சம் அதிகமாகவே சொல்கிறோமோ என்றிருந்தது இவருக்கு. ஒரு மூன்றாவது நபரைச் சொல்வது போல… தன் மருமகப் பெண்ணைத் தானே நம்பிக்கையில்லாமல் பேசுவது சரியா? அது மருமகளாய் இந்த வீட்டோடு ஒன்றி விட்டதா? இன்னும் வேற்றாள் மாதிரித்தானே ஒதுங்கிக் கிடக்கிறது. ஆளும் ஒட்டவில்லை. மனசும் ஒட்டவில்லையே?

நான் செய்றேன்…நீங்க உட்காருங்க…என்று ஒரு நாளைக்காவது வந்து நின்றிருக்கிறதா? அட அது கூட வேண்டாம். அம்மா..காய் நறுக்கட்டுமா? இன்னிக்கு டிபன் நான் செய்யட்டுமா? சட்னி அரைக்கட்டுமா?  இப்டி ஏதாச்சும் உபகாரமாவது உண்டா? கிட்ட வந்தா ஒட்டிக்குமோன்னு  ஒதுங்கியே கிடந்தா? இந்த வயசுக்கு வேலை செய்யாமே சோம்பி இருத்தல் தகுமா? ஆபீஸ் வேலை மட்டும் பார்த்தா போதும் போல்ருக்கு….லீவு நாள்ல கூட அண்டப்டாதா? இனிமே நமக்கு இந்த வீடுதான்…இவங்களோடதான் காலட்சேபம்…கழிச்சாகணும்…இவங்கதான் நம்ம உறவுங்கிற  நெருக்கமான எண்ணமே வந்த மாதிரித் தெரிலயே…? அந்தப் பக்குவத்துக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தாத்தானே அது சாத்தியம்?

எதுவும் புலம்பாத….அந்தப் பொண்ணு காதுல விழுந்துடப் போவுது…சுருட்டி மடக்கி சூட்கேஸ் எடுத்திட்டுக் கிளம்பிடப் போகுது…அப்புறம் தனிக்குடித்தனம்தான் பார்த்துக்கோ….உன் பையன்தான் சமைக்க வேண்டியிருக்கும்…! நம்ம கூட இருக்கச்சே இப்போ அவனை ஸ்பெஷலா கவனிக்கிற நீ…அவனும் அம்மா…அம்மான்னுட்டு உங்கிட்டதான் எல்லாத்தையும் கேட்கிறான்…அவளக் கண்டுக்கிறதேயில்லை அதைக் கவனிச்சியோ…? தன் பாடு கழிஞ்சாச் சரின்னு அவன் இருக்கான்.

அப்புறம்? எம் பிள்ளை எப்டியிருப்பான்? எம்மேலே பாசமா இருக்கிறதுல என்ன தப்புங்கிறேன்? அவன் சப்போர்ட்லதான் நான் தைரியமா வளைய வரேன்…

இந்த பார்…இதெல்லாம் வெட்டிப் பேச்சு…தெரிஞ்சிக்கோ…என்னைக்கு அவனுக்குக் கல்யாணம் ஆச்சோ அன்னைலர்ந்து அவன் அவளோட ஆளு…! அதுதான் சரியும் கூட…நாம என்ன ஆயுசு முழுக்க கூட இருக்கப் போறமா? என்னைக்கு திடீர்னு தனிக்குடித்தனம்ங்கப் போறானோ? யாருக்குத் தெரியும்? நாமதான் இன்னும் எத்தனை நாளைக்கு? மனச விலகலா வச்சிக்கப் பழகிக்கோ…!

எம் பையன் அப்டியெல்லாம் தப்புப் பண்ண மாட்டான்….உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்…-வார்த்தைகளில் பெருமை ஜொலித்தது.

நினைச்சிட்டிரு….இந்த மாதிரி அசட்டு அம்மாக்கள் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கேன்…கேள்விப்பட்டிருக்கேன்…அவனா வாய்விட்டுச் சொல்லு முன்னாடி நாமளா கழன்டுக்கிறதுதான் கௌரவம். அதத் தெரிஞ்சிக்கோ…நாமளே அவங்களைத் தனிக்குடித்தனம் வச்சு, இருங்கன்னுட்டு வெளியேறதுதான் நமக்குப் பெருமை. அப்பத்தான் அவங்களுக்கும் எல்லாமும் பழகும். அனுபவம் கைகூடும். வரவு செலவுகள் புரியும்.  தனியா குடும்பம் நடத்துறதுல இருக்கிற கஷ்ட நஷ்டங்கள் தெரியவரும்.  எல்லாத்துக்கும் பழகி ஒரு நிதானத்துக்கு வர ஏதுவாயிருக்கும். இப்போ அதைக் கெடுக்கிற நீ…!  பிடியா அடுப்படிய விட்டு நகராம அடம் பிடிக்கிறே…அது ஒரு நாள் பழி சண்டைல வந்து நிக்கப் போகுது…அன்னிக்குக் கேவலப்படப் போறே…!

தனிக்குடித்தனம் போனா அந்தப் பொண்ணு வீட்டுல சமைக்காதாக்கும். எல்லாம் வெளிலர்ந்துதான் வரும். வயிறும் உடம்பும் கெட்டுப் போகும் அவனுக்கு….

அதுக்குக் கெட்டா பரவால்லியா? அதயும் சொல்ல மாட்டேங்கிறே…? நாளைக்கு குழந்தை பெறப் போறது அவனா அவளா? அதுக்கும் உடம்பு நல்ல ஆரோக்கியமா இருக்கணும்தானே? நம்ம வம்ச வாரிசைக் கொடுக்கப் போறது அதுதானே?

தன்னோட அம்மாவக் கொண்டு வச்சிக்கிது. உனக்கென்ன? அவுங்க சமைப்பாங்கல்ல? மனசுக்கு அதுதான் சமாதானம் எந்தப் பெண்ணுக்கும். உனக்கு ஒரு பெண்ணிருந்தா அப்பத் தெரியும் அந்த அருமை…!

அதெல்லாம் நடவாது….அவுங்க என்னால முடியாதுன்னுட்டாங்களாம். அது தெரியாதா உங்களுக்கு? அது பெரிய மேனாமி
னுக்கி….! தேர் மாதிரி அசைஞ்சிண்டு நின்னுண்டிருக்கும்…

 போகட்டும்…இவங்களுக்கென்ன காசுக்கா பஞ்சம்? தினசரி வெளிலதான்…எழுதி வச்சிக்க… சூரை விட வேண்டிதானே? ரெண்டு பேர் சம்பாத்தியம்னா சும்மாவா? ஒருத்தர் சம்பளம் பூராவும்  வயித்துக்குப் போனாலும் இன்னொருத்தர் துட்டு மிஞ்சுமே…?  இன்னிக்குத் தேதிக்கு எந்தப் பொம்பளை வீட்டுல சமைக்கிறா? ஓட்டல்ல ராத்திரி ரெண்டு மணிக்குத் திங்குறதப் பார்த்திருக்கியா? வெளில காத்துக் கிடந்து டோக்கன் வாங்கி பழி கிடக்கானுங்க..காலம் தறிகெட்டுப் போயிடுச்சாக்கும்…!  குடும்பம் குடும்பமா நடு ராத்திரிக்கும் மூணாம் ஜாமத்துக்கும் ஓட்டல்ல தவம் கிடக்குதுங்க…திங்குற நேரம், தூங்குற நேரம் எல்லாமும் மாறிப் போச்சு…வியாதிகள் எப்படிப் பெருகிச்சின்னு நினைக்கிறே? இந்த மாதிரி எல்லாமும் தலை கீழா மாறித்தான்…ஆஸ்பத்திரிகள்லாம் நிரம்பி வழியுது…

பேசிப் பேசி ஓய்ந்ததுதான் மிச்சம். எதுவும் முன்னேற்றமில்லை.

ரெண்டு பேர் மனசும் தவியாய்த் தவித்தது என்பதுதான் உண்மை. ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் என்று பேர். ஆறுதல்பட்டால்தானே? இப்படிக் கூறுகெட்டுப் போய் ஒரு கல்யாணத்தப் பண்ணி பையன் வாழ்க்கையைக் கெடுத்திட்டமே என்று தீராத வயிற்றெரிச்சலில் கிடந்தார்கள். எதைச் சொல்வது எதை விடுவது? நடை உடை பாவனை என்று எதை நினைத்தாலும் இவருக்கு ஒட்டவில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொன்றாய் தவிர்க்க முடியாமல் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கிறதுதான்.

இந்தக் காலத்துப் பெண்கள் அணியும் அந்த நைட்டியே இவருக்குப் பிடிப்பதில்லைதான். தன் வீட்டில் நைட்டி அணியும் பெண்ணா? அதிர்ந்தார். அந்த அவலத்தை நைட் மட்டும் அணிந்து கொண்டால் போதாதா? தொலையுது என்று விடலாம்தான்.  நாள் பூராவுமா அதோடு திரிய வேண்டும்?  உள்ளே பாவாடை அணிந்து மேலங்கியாக இதை அணிவார்களா அல்லது இது மட்டும்தானா? எப்படிக் கூச்சமில்லாமல் இருக்கிறார்கள்? அவர்களுக்கே கூச வேண்டாமா இது? அந்த டிரஸ்ஸோடு ஃப்ரீயாகப் பழகுகிறார்களோ?

பாகேஸ்வரியைக் குழந்தை பிறப்பின்போது மருத்துவமனையில் இந்த உடையோடு சில நாட்கள் பார்த்ததோடு சரி.  அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பும்போதே புடவையோடுதானே அடியெடுத்து வைத்தாள். இந்தப் பாழாய்ப் போன நைட்டியை எவன் கண்டு பிடித்தான்?

அட…தூங்கி எழுந்தாச்சா…கழட்டி வீச வேண்டிதானே? அதோடயேவா நாள் பூராவும் அலையறது? கீழே குப்பை போட என்று கூட இதோடுதான் ஓடுகிறது அந்தப் பெண். இதுதான் இப்படியென்றால் அடுக்ககத்தில் உள்ள வேறு சிலரும் இப்படித்தானே திரிகிறார்கள்? ஐநூறடி தூரத்தில் உள்ள கடைக்குப் போய் அவசரத்துக்குப் பால் கூட வாங்கி வருகிறார்களே? வரிசையாய் இரு பக்கமும் இருக்கும் வீட்டிலிருப்பவர்கள் பார்க்க மாட்டார்களா?  வாசலில் வரும் வண்டிக்காரனிடம் நின்று காய்கறிகளை சாவகாசமாய் லஜ்ஜையின்றிப் பொறுக்கி எடுக்கிறார்களே? அவனுக்கும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதோ என்னவோ? அல்லது மரத்துப் போயிருக்கலாம்.  அந்த ஆளுக்கு இருக்கும் பக்குவத்தைத் தானும் தனக்குள் வரவழைத்துக் கொள்ள வேண்டுமோ? லகிடு மாதிரித் திரிகின்றன ஒவ்வொன்றும்.  யாருமே இந்த உடையை அப்படியொன்றும் பொருட்படுத்தியமாதிரித் தெரியவில்லையே? நான்தான் இப்படித் தவிக்கிறேனா?

 உலகமயமாக்கலின் விரிந்த கலாச்சார வெளியில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் மாறிப் போயின? அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கான உடைகள்…! சல்வார் கமீஸ் என்று ஒரு உடை இருந்தது என்றுதான் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. மூன்று துண்டுகள் கொண்ட இந்திய இன அணியாக அது கருதப்பட்டது. ஒரு கமீஸ், ஒரு சல்வார்…அதாவது ஒரு ஜோடி கால்சட்டை மற்றும் ஒரு துப்பட்டா…அதாவது தாவணி என்று சொல்லலாம்…அந்த டிரஸ் கூடப் பரவாயில்லைதான். இன்றைய சிக் ஆடைகளுக்கு அவை எவ்வளவோ மேல்  என்றுதான் தோன்றுகிறது.  கவர்ச்சியும் அழகும் ஊருக்கெல்லாமா வெளிச்சம் போட வேண்டும்? புருஷன் பார்த்தாப் போறாதா?

அதுவும் தன் மருமகளாய் வந்த பெண் இப்படி டிரஸ்ஸில் திரியும் என்று இவர் கனவில் கூடக் கருதவில்லை.  கல்யாணத்தின் போதே பலத்த சந்தேகம் வந்து விட்டது இவருக்கு? இதென்னடா இது வம்பாப் போச்சு? ஆளாளுக்கு இப்படி டான்ஸாட ஆரம்பிச்சிட்டாங்களே? குதி குதின்னு குதிக்கிறாங்களே…போதாக் குறைக்கு நம்மள வேறே இழுக்குறாங்க…சும்மா வாங்க…இன்னைக்கு ஒரு நாத்தானே? – ஒரு முறை முறைத்தாரே பார்க்கலாம். கேட்டவன் கூட்டத்தில் காணாமல் போனான். மாப்பிள்ளை அழைப்பிற்கு  காரில் கோயிலுக்குப் போய்த் திரும்புகையில் என்ன ஆட்டம் பாட்டம்? அட…நம்ம பய ராகவனும் சேர்ந்தில்ல குதிக்கிறான் வெறி பிடிச்ச மாதிரி?

டாய்ய்ய்ய்…! ஓங்கி நிலமதிரக் கத்தி பூமியை மிதித்து எழும்ப வைத்து அந்தக் கும்மாளத்தை நிறுத்த வேண்டும் என்கிற அளவுக்குக் கோபம் வந்து விட்டது இவருக்கு. எப்படி அந்தக் கணத்தைச் சமாளித்தார் என்றே தெரியவில்லை. ஏதோ சின்னப் புள்ளைங்க…ஆடிட்டுப் போகட்டும்…விடுங்க…என்றார் ஒருவர். உளறாதே என்று கர்ஜித்தார். …மனது தாளவில்லை.

அட…புரோகிதர் மந்திரம் சொல்ல விட்டாங்களா?  அதுக்குள்ளயும் எத்தனை ஃபோட்டோக்கள்?எவ்வளவு குறுக்கீடுகள்?  அந்த மந்திரங்களின் புனிதமான அர்த்தங்களை யாரேனும் உள் வாங்கினார்களா? வெறுமே மந்திரத்தை சம்பாவனைக்காக ராகமாய் உச்சரித்து விட்டுப் போகாமல் அதற்குத் தெளிவாய் அர்த்தம் வேறு சொன்னாரே மைக்கில். அதன் அருமை உணர்ந்தார்களா எவரும்? அந்தப் பாண்டித்யத்தை மதிக்க வேண்டாமா? என்ன ஒரு தீட்சண்யம்?  அதை யாரேனும் காது கொடுத்துக் கேட்டார்களா? நெருப்பை சாட்சியாய் வைத்து மந்திர உச்சாடனங்களை நிறைவேற்றி, அனைத்துப் பெரியோர் முன்னும் தாலிகட்டும் அந்த நிகழ்வு என்ன வெறும் சம்பிரதாயச் சடங்கா? எவன் உணர்கிறான் அதன் புனிதத் தன்மையை? எல்லாமும் ஆரவாரமாய்ப் போய் அமர்க்களமாய்  வெடித்து நிற்கிறது இங்கே!. காசு தண்ணீராய் இறைகிறது. அது ஒன்றுதான் மிச்சம்.

எல்லாக் கூத்தும் முடிந்து ஒரு வழியாய்  வீட்டிற்குக் கூட்டி வந்தாயிற்று. யப்பாடா….ஓய்ஞ்சிச்சிப்பா எல்லா ஆர்ப்பாட்டமும்….இனிமே கொஞ்சம் அமைதியாயிருக்கலாம்தான்…என்றால் இனிமேல்தான் பலதும் இருக்கிறது என்பது போலல்லவா நடக்கிறது இங்கு எல்லாமும்?  ஏன் தன்னால் இந்தச் சூழலை ஜீரணிக்கவே முடியவில்லை? தான் கூடப் பர வாயில்லையே…அவளானால் கொதித்து மருகுகிறாளே…? இந்த மன உளைச்சலிலேயே  அவள் படுக்கையில் ஏதும் விழுந்து விடாமல் இருக்க வேண்டுமே? ஈஸ்வரா…என் பாடு திண்டாட்டமாய்ப் போய் விடுமே…?

வாசலில் டாக்ஸி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அவர்கள்தான். வெளியில் என்று கிளம்பினால் கேப்ஸ்தான். ஆட்டோ கூட இல்லை. அதற்கும் காருக்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம்? ஆனாலும் அஞ்சாமல் இப்படிக் காசை எடுத்து வீசும் இந்தத் தலைமுறையை நினைத்து இவருக்குத் தலைமூர்ச்சைக்கு வருகிறது. விரைவில் சொந்தக் கார் வந்து நிற்கப் போகிறது.ஆர்டர் பண்ணியாச்சு. பணம் கொடுத்தாச்சு. எல்லாம் கண நேரம்தான். காசு காற்றில் பஞ்சாய்ப் பறக்கிறது.  அது இருந்தால்தான் கௌரவமாம். வீட்டிற்கு வீடு கார்…அடுக்ககத்தில் எல்லோருக்கும் கார் உள்ளது. தன் இடம் மட்டும் காலியாயிருக்கிறது. கேவலமில்லையா?

அஞ்சு பைசாவுக்கும், பத்துப் பைசாவுக்கும் டவுன் பஸ்ஸில் ஏறிச் சீரழிந்த காலங்களை நினைத்துக் கொண்டார் நவநீதன். தனது ஒவ்வொரு பைசா வரவுக்கும் செலவு எழுதி வைத்ததையும், அதிலேயும் வேண்டாத செலவு என்று கருதியவற்றை, அதன் தேவையையே விட்டொதுக்கியதையும், அன்று இருந்த கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் எண்ணி வியந்து கொண்டார். அது இரும்புக் கோட்டை. யாராலும் அசைக்க முடியாதது.

இன்று கட்டுக்களை மீறுவதுதான் வாழ்க்கை. சம்பிராதாயங்களை உடைப்பதுதான் முற்போக்கு என்று கொடி கட்டிப் பறக்கிறது.

தன் அறைக்குள் சென்று புகுந்து கொள்வதற்காகச் சட்டென்று எழுந்தார் நவநீதன். அது அவர் வழக்கம். அவர்கள் முன் உட்கார, அமர்ந்து சம்பாஷிக்க அவர் கூசினார்.  அதுதான் உண்மை. அவர்களின் நவநாகரீக உடைகளைக் கண்ணோட்டமிடாமல் அவரால் பேச முடிவதில்லை. அதன் மீது அவரின் வெறுப்பை அவரால் தவிர்க்க முடிவதில்லை. பெரியவர்கள் முன்னால், பெற்றோரின் முன்னால் அவர்கள் அப்படித் தோன்றுவது, தங்களை  வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வது மரியாதையற்ற செயலாய் அவருக்குத் தோன்றி அவரை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கியது. வயதானவர்கள் தனியாய் இருத்தல்தான் உத்தமம்.

நம் கௌரவத்தை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு எழுந்து செல்கிறார். தன்னை அந்த அறையில் முடக்கிக் கொள்கிறார். பாகேஸ்வரி அடுப்படியில் வேகிறாள். இவர் அந்த அறையினுள் தனிமையில் வேகிறார். ஃபேனுக்கடியில் கிடந்தாலும் மனசு வேகத்தானே செய்கிறது.  அந்த வேக்காட்டைக் காலம்தான் தணிக்க வேண்டும். மனம் சமனநிலை அடைய இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது. தலைமுறை இடைவெளி அதை சாத்தியமாக்குமா அல்லது புரட்டிப் போடுமா?  காலம்தான் பதில் சொல்ல வேண்டும் இந்தக் கேள்விக்கு.  

காலம் காட்டும் திசையின் வழி அவர்கள் பயணிக்கிறார்கள். அந்த நால்வரும்தான். யாருக்குச் சலுகை காட்டும் இந்த இயற்கையும் எதிர்காலமும்?

                                    ----------------------------------

           

                       

கருத்துகள் இல்லை: