01 அக்டோபர் 2025

 

வெள்ளோட்டம் - சிறுகதை - தாய் வீடு மாத இதழ் - அக்டோபர் 2025 பிரசுரம்

---------------------------------------------------------------------------------------------------






அப்பாவின் அனத்தல் பொறுக்க மாட்டாமல் ஒரு நாள் பிரபு  கோபமாய்ச் சொன்னான். என்ன இப்படிக் கொதிச்சுட்டான் என்றிருந்தது கருணாகரனுக்கு.  அவன் மறுத்துச் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. மிகுந்த வருத்தமாயிருந்தது.

            இங்கிருந்து கிளம்பினால் இடம் வாங்கி, லோன் போட்டு, வீடு கட்டித்தான் நகருவேம்ப்பா….அப்போ இதை வாடகைக்கு விட்டாப் போதும்…வேறே வாடகை வீடு பார்த்து நாம போய் இருக்கிறாப்ல எல்லாம் ஐடியா இல்ல….-முடிவாய்ச் சொல்லி விட்டான்.

            அப்போதுதான் யோசித்தார் கருணாகரன் தன் தவறை. பெரிய மனதோடு அவன் பெயருக்கு இந்த டபிள் பெட்ரூம் ஃப்ளாட்டை வாங்கினது தப்பு என்று. வாங்கினது கூடத் தப்பில்லைதான் அதைத் தன் பெயரிலேயே பதிவு செய்யாமல் விட்டதுதான் மாபெரும் தவறு என்று நினைத்தார். அதைச் செய்திருந்தால்  இப்போதான தன் விருப்பத்தை சுதந்திரமாய் நிறைவேற்றியிருக்கலாம். யாரும் தடுக்க முடியாது.  அநாவசியக் கஷ்டங்களுக்கு இடமில்லாமல்  போயிருந்திருக்கும். அவன் பெயருக்கு வீடு இருப்பதை மனதில் வைத்து, மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறான். தன் வார்த்தைக்கு மதிப்பில்லை. நல்லது சொன்னால் கேட்க வேண்டாமா? அதென்ன அத்தனை பிடிவாதம்? நான்தான் இருக்கேன்லப்பா…எல்லா உதவியும் செய்றதுக்கு? பிறகென்ன உனக்கு வீடு மாத்தறதுல கஷ்டம்? என்று சொல்லிப் பார்த்தார். அவன் அசைவதாய் இல்லை.

            சென்னைக்கு வந்த பிறகு, அதிலும் அவனுக்குத் திருமணம் ஆனபிறகு அதிகாரம் தன் கையிலிருந்து போய் விட்டாற்போல் உணர்ந்தார் கருணாகரன். இனிமே அவனை “டா“ போட்டுக் கூப்பிடாதீங்க…என்று புதிதாய் ஒருநாள் சொன்னாள் காயத்ரி.  அதிசயமாய் இருந்தது இது. என் பையனுக்கு என்றும் நான் தகப்பன்தானே?அவன நான் எப்படிக் கூப்டா என்ன?  இதிலென்ன தப்பு? இது என் அன்பான உரிமையில்லையா? இதைப் போய்த் தடுக்கிறாளே? என்று எண்ணினார். ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனும் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தபோதுதான் “டா“ வை நிறுத்த வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.  கல்யாணம் ஆகிவிட்டதால் மனைவி முன், தான் “டா” போட்டு அழைக்கப்படுவதை ஒருவேளை அவனே விரும்பவில்லையோ? அல்லது அந்தப் பெண் விரும்பவில்லையா? சரி…விட்டு விடுவோம் என்று நிறுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் அந்த “டா“வில் இருந்த நெருக்கம் சற்றே விலகியது போல்தான் அவரால் உணர முடிந்தது.

            இப்படித்தான் சின்னச் சின்ன விஷயங்களாய் விலகல் ஏற்படும் போலிருக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல் அமைதி காப்பதும் கூட ஒருவித மறுப்பின் அடையாளம்தான் என்று உணர்ந்து கொண்டார். அதிகம் பேசாமல் இருப்பதே கூட ஒருவித அதிகாரம்தானே? நிறையப் பேசி அதிகாரத்தை வெளிப்படுத்துவது..பேசாமலே இருந்து கழுத்தறுப்பது…என்று இரண்டு வகை இருக்கிறதே என்று அவர் மனசு சொல்லியது.

            ஏன் அவன் பெயருக்கு வீட்டை எழுதினீங்க…? யாராச்சும் இப்படி செய்வாங்களா? மடத்தனமால்ல இருக்கு….காலம் எதை எப்படி மாற்றும்னு சொல்ல முடியாதுங்க…உங்களையே வெளியேத்தினாலும் போச்சு….ப்ராப்பர்ட்டிலாம் கடைசி வரை நம்ம பெயரில்தான் இருக்கணும். அப்பத்தான் சிதைல போய் அடங்குறவரைக்கும் மதிப்பு மரியாதையா இருக்க முடியும். உலகம் போற போக்குத் தெரியாமச் செய்திட்டீங்களே? -பலரும் இப்படித்தான் சொன்னார்கள். யோசிக்க ஆரம்பித்திருந்தார் கருணாகரன். இனி கைவசம் இருப்பதையும் கைவிட்டுவிடக் கூடாது என்கிற தீர்மானம்   வந்தது அவருக்கு. ஆனால் தன் பையன் அப்படியெல்லாம் இருக்க மாட்டான் என்கிற நம்பிக்கையும் ஒரு பக்கமாய் இருக்கத்தான் செய்தது.  ஆனால் கைபேசியில் பார்க்கும் பலவிதமான வீடியோக்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்தன.  மருமகள் தன் மாமியாரைப் பிடித்துத் தள்ளிவிடும் ஒரு காட்சி. போ…போய்த்தொலை…என்ற சுடுசொற்களோடு. அந்தக் கிழவி தடால் என்று கட்டிலிலிருந்து கீழே விழும் காட்சி மனதைப் பதை பதைக்கச் செய்தது. உனக்கு எல்லா வசதியும் இங்க இருக்குப்பா…தனி ரூம், டி.வி., நல்ல சாப்பாடு, தண்ணி வசதி, டாய்லெட் வசதி…பிரச்னையில்லாம இருக்கலாம்…என்று சொல்லி தந்தையின் சம்மதம் எதிர்பார்க்காமலேயே பணத்தைக் கட்டி விட்டு விட்டுப் போகும் பலரும் படத்தில் வந்தார்கள். வாய்மூடி மௌனியாய் இருக்கும் வயசான, ஆட்டம் கண்ட பெற்றோர்கள்.  மனதில் உள்ளதைச் சொல்ல முடியாமல் கண்ணீர் கசிகிறார்கள். இப்டியெல்லாம் இருக்கிறதுக்குச் செத்துடலாம்…என்கிறார் ஒருவர். நன்றி கெட்டவனுக…இவன்க மூஞ்சியவே பார்க்க நான் விரும்பலை…என்று வெறுத்து உமிழ்கிறார் ஒரு பெரியவர். எவனும் என்னை வந்து பார்க்கணும்ங்கிற அவசியமில்ல….என்று தன் பென்ஷன் காசை நம்பி நிமிர்கிறார் இன்னொருவர்.

            அப்பாவின் நினைவு தினத்திற்கு ஒரு முதியோர் இல்லம் சென்று பணம் கட்டியிருந்தார் கருணாகரன். அன்றைய தினம் அங்கிருக்கும் அனைவருக்கும் பாயாசம், வடை. நாலுவகைக் காய்கறிகள், பச்சடி, கிச்சடி, இனிப்பு, பழம், இவைகளோடு விருந்து. சாப்பாட்டு இலையின் முன் அமர்ந்து அவர்கள் தன் தந்தைக்காகத் தியானித்ததும், தனக்கு நன்றி தெரிவித்ததும், ஆசீர்வதித்ததும் அவர்களை ஒவ்வொருவராக இலை முன் நின்று தான் கவனித்ததும். பின் அவர்களோடு அமர்ந்து உண்டதும் மறக்க முடியாத நிகழ்வாயிருந்தது. மாலையில் அங்கு போய் காற்றாட அமர்ந்திருந்த பொழுது அவர்களில் பலர் வாசலையே நோக்கிக் கொண்டிருந்ததும், சாலையில் யார் வருகிறார்கள் என்று கவனித்துப் பார்த்ததும்.. மாதம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லும் மகனைக் காணவில்லையே என்று ஏங்கிக் கிடந்ததும் இவரை மிகவும் வருத்தியது. அந்த நிலை தனக்கும் வந்து விடக் கூடாது என்று அப்போதைக்கு மனதைத் திடப் படுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் காலம் யாரை எவ்வாறு. எங்கு  கொணடு நிறுத்துமோ என்கிற பயமும் அவருள் இருக்கத்தான் செய்தது.

சிந்தனை அறுபட்டது. பல சமயங்களில் பின்னோக்கிப் போய்விடுவதாக உணர்ந்தார். எதிர்காலம் எப்படியிருக்குமோ என்கிற பயம் கூடவே வந்து கொண்டிருந்தது. சென்னைக்கு வரும் முன்பான தனக்கும் தன் மனைவிக்குமான பேச்சை நினைத்துப் பார்த்தார்.

சென்னைல ஒரு வீடு வாங்குவோம்…நாம அங்க போயிடுவோம்.. அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணுவோம். தனிக்குடித்தனம் வைப்போம்…பிறகு நாம இந்த மதுரைக்குத் திரும்ப வந்திடுவோம்…-இதுதான் கிளம்பும் முன் உண்டான சுருக்கமான பேச்சு, ஒப்பந்தம். அக்ரிமென்டா எழுதிக் கொடுக்க முடியும்? புருஷன் பெண்டாட்டிக்குள் என்ன அக்ரிமென்ட்? வாய் வார்த்தைதான் ஒப்பந்தம். அதற்கு மதிப்பில்லை என்றால்?  அவள் இப்போது வர மறுக்கிறாள். பையனும் அமைதி காக்கிறான். நீ வேணா போய் இருந்துக்கோ…என்று சொல்லி விடுவானோ? என்ற சந்தேகம் வந்தது இவருக்கு. நான் வராப்ல இல்லை. பையனோடுதான் இருப்பேன். அவன் போயிடுங்கன்னு சொல்லட்டும். கிளம்பறேன்…அல்லாமல் நான் நகர்றாப்ல இல்லை என்றாள். அவன் அப்படிச் சொல்ல மாட்டான் என்கிற திடமிருந்தது அவளிடம். ஆனால் நீயும் இருப்பா…அங்க ஏன் போறே? என்று ஒரு வார்த்தை வரவில்லை. போனாப் போய்க்கோ…ரோட்டுல விழுந்து செத்தா சாவு..! இதுதான் தன் கதியா?தன் கடமைகளை நூறு சதவிகிதம் முற்றாய் நிறைவேற்றியவனுக்கு இதுதான் நன்றியா? இதுதான் பலனா? பெற்ற பிள்ளைகள் அம்மாவிடம் ஒரு மாதிரியாயும், அப்பாவிடம் வேறு மாதிரியாயும் ஏன் இருக்கிறார்கள்? தான் தன் தந்தையிடம் அப்படியில்லையே? எனக்கு ஏன் நிகழ்கிறது இப்படி?  கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன. தனக்கு மட்டுமா? இந்த உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான தந்தையர்க்கும் இதே நிலைதான். தாயாரை ஒதுக்கிய தனயன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது தாய் தனியே மகனிடம் மாட்டிக் கொண்டால் பெரும்பாலும் நிகழ்ந்து போகிறது. அவர்களும் ஒரு நாள் கிழமாவார்கள் என்று ஏன் உரைப்பதில்லை, உணருவதில்லை?

 ஆரம்பம் முதலே. அதாவது படிக்கிற காலம் முதலே அவன் அம்மா கோண்டுதான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒன்றாய் கோயில் போவார்கள். கடைக்குப் போவார்கள்.  அவன் ஊரில் இருந்தால் இவருக்கு வண்டி கிடைக்காது. அம்மாவைப் பின்னால் உட்கார்த்திக் கொண்டு ஊர்வலம் வருவான். சரி…நாலு நாளைக்குத்தானே என்று விட்டுவிடுவார். காலேஜ் படிக்கும்போதும், பிறகு வேலைக்குப் போனபோதும் அப்படித்தான்.   ஏதாவது முக்கிய வீட்டுக் காரியமாய் வேண்டுமென்றால் மட்டும் அவர்களால் செய்ய முடியாததற்கு  இவரை அணுகுவார்கள். மற்றப்படி பேச்சு…பேச்சு…பேச்சு…அப்படி என்னதான் பேசுவார்களோ என்று நினைத்துக் கொள்வார் இவர்.  தனக்கு எதிராகவா பேசிவிடப் போகிறார்கள்? இதை ஏன் இத்தனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்? பையனுக்கு அம்மாமேல் பிரியம் ஜாஸ்தி. இருந்துவிட்டுப் போகட்டுமே! அதனால் தனக்கென்ன பாதகம்? என்று விட்டு விட்டார் இவர். தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் பேசிவிட்டால் கூட…போதும்…போதும் இன்னைக்கு..அப்புறம் உங்கம்மா கோவிச்சிக்கப் போறா…! என்று கிண்டலடிப்பார் சமயங்களில். ஒட்டுதல் இல்லாத சேவையாற்றல். அதாவது கடமையைச் செய்தல். பலனை எதிர்பாராமல். எது எப்படி நடக்கும். எங்ஙனம் மாறும் என்று யாரால்தான் நிர்ணயிக்க முடியும்? காலமும் நேரமும் எப்படி இழுத்துக்கொண்டு போகிறதோ அதனூடே பயணம் செய்வோம். விதி விட்ட வழி.

மனைவியுடனான அந்த எழுதப்படாத ஒப்பந்தம் இப்போது காலாவதியாகி விட்டது. அவருக்கும் சேர்த்துத்தான். ஆனால் இவருக்குத்தான் இந்தச் சென்னையில் இருப்புக் கொள்ள மாட்டேனென்கிறது. ரெண்டு மாதத்திற்கொருமுறை ஊர் சென்று வருகிறார். அங்கு போய் அவர் ஜனங்களைப் பார்த்தால்தான் திருப்தி. ஆரோக்கியம். அவர்கள் பேசுகிறார்களோ இல்லையோ, ஒரு சிறு புன்னகை, நல்லாயிருக்கீங்களா? என்ற ஒற்றை வார்த்தைக் கேள்வி…வேண்டாமே…அவர்களையெல்லாம் கண் கொண்டு பார்த்தாலே போதுமே..மனதிற்குப் புதிய உற்சாகமும், ஆரோக்கியமும் வந்துவிடுகிறதுதான். அப்படித்தான் இவரது மீதி வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே வாழ்க்கை துவங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் வாழ்க்கை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது…..!! பாதையெல்லாம் மாறி வரும்…பயணம் முடிந்து விடும்… - பாடலின் கடைசி வரி…அவரை ஈர்த்தது. என்று முடியுமோ இந்தப் பயணம் என்று அவர் மனது ஏங்கியது. கடந்து போன காலங்களின் ஈரத்தில்தான் இப்போது தான் மீதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டார் கருணாகரன். நடப்பு வாழ்க்கை அவருக்கு அத்தனை ஸ்வாரஸ்யம் தருவதாயில்லை.  சொல்லப்போனால் பையனின் திருமணத்திற்குப் பின்பே அந்த ஸ்வாரஸ்யம் போய்விட்டது என்று துல்லியமாயத் தோன்றியது அவருக்கு.  தனிக் குடித்தனம் வைத்து விட்டு நாம் நம் இடம் பெயர்ந்து விடுவோம் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அவருள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உலகம் பூராவும் தன் எண்ணம்போல் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இவள் மட்டும் ஏனிப்படித் தனித்து நிற்கிறாள்? இதென்ன பெருமைக்குரியதா? நாளைக்கு மருமகளினால் கேவலப்படுத்தப்பட்டால் அப்போது என்ன செய்வாள்? முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வாள். இந்த உலகத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் எங்காவது ஒத்துப் போயிருக்கிறதா? ஒரு இடம் சொல்ல முடியுமா? இப்போதென்ன அவ்வளவு இஷ்டமாகவா இருந்து கொண்டிருக்கிறார்கள்? தலைமுறையே வேறு…பிறகு எப்படி ஒத்துப் போகும்? கேவலப்பட்டு வெளியேற வேண்டுமென்பது அவள் தலைவிதியோ என்னவோ? அதை யார்தான் தடுக்க முடியும்? முடியும்னா கூட்டிட்டுப் போப்பா…என்று சவால் விடுவதுபோல் சொல்கிறான். அவன் ஆதரவு இருக்கிறது என்கிற நினைப்பிலிருக்கிறாள். அது தடம் மாற எவ்வளவு நாழி ஆகும்? சிலருக்கு வயசாகிறதேயொழிய அதற்கான மனப் பக்குவம் வருவதில்லை.  காலமும், அனுபவங்களும் என்று இவர்களுக்கு ஆதரவாய் இருந்திருக்கிறது? இப்பூவுலகில் ஒரு உதாரணம் காண்பிக்க முடியுமா? காயத்ரியை நினைக்க, பரிதாபமாய்த்தான் இருந்தது கருணாகரனுக்கு.

                                                           

 

 

கணையாழி மாத இதழ் - அக்டோபர் 2025  பிரசுரம்

சஞ்சலங்கள்”




நான் வரலை – பளீரென்று பதில் சொன்னார் பரணீதரன். ஃபோனில் தன் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டிருக்கும். சந்தேகமில்லை. கேட்டிருப்பதென்ன…பொட்டிலறைந்தாற்போல் அதிர்ந்திருக்கும்.

            எதிர்த்தரப்பில் நிலவும் அமைதியே அதை உறுதி செய்தது.

            அப்டிச் சொல்லாதீங்க…நல்லாவா இருக்கு நீங்க பேசுறது? என்றாள் யாமினி. ஒரு நிமிடம் கழித்து அவள் இப்படிப் பேசியதே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு சொல்கிறாள் என்பதை உணர்த்தியது.

எப்படியானால் என்ன…என் முடிவு இதுதான். நான் வரலை….. – மீண்டும் தனக்குள்ளேயே ஒரு முறை அழுத்தமாய்ச் சொல்லிக் கொண்டார். அந்த முனகலும் அவள் காதுக்கு விழுந்திருக்கும்தான். லைன் துண்டிக்கப்பட்டது.

            ஜன்னலுக்கு வெளியே கிளையில் நின்ற அணில் கூர்மையாய் இவரையே நோக்கிக் கொண்டிருந்தது. முகத்தின் இறுக்கத்தை அதுவும் உணர்ந்திருக்கலாம்.  கணத்துக்குக் கணம் விருட் விருட்டென்று ஓடித் திரியும் அது அப்படி நின்றிருந்ததும் தன்னையே ஸ்திரமாய் நோக்கியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அணிலுக்குக் கூடக் கூர்மை உண்டு போலும்!. அடுத்தாற்போலான தன் அசைவை எதிர்நோக்கியிருக்கிறதோ?

            அதுவாவது தன்னைப் பொருட்படுத்துகிறதே? அவர்கள்?  கூட இருக்கும்போது எதையுமே கண்டு கொள்ளாதவர்கள், கிளம்பி வந்து ஊரில் தன் வீட்டில் தனியே தஞ்சம் புகுந்திருக்கும்பொழுது எதற்குத் தொல்லைப் படுத்துகிறார்கள்? வீட்டிலுள்ள மூத்தவர்களின் தேவையறிந்து நடக்கத் தெரியாதவர்கள், கண்காணாதபோது பரிந்து பேசி என்ன பயன்? அப்படியானால் விலகி இருந்தால்தான் அருமை புரியுமா? சேர்ந்திருந்தால் ச்சீ…ச்சீ..என்று போகுமோ? தனக்கு மட்டும்தான் அந்தச் ச்சீ…ச்சீ…அவளுக்கில்லை. காரணம் அவளின் தேவை அத்தியாவசியம்.

            தான் இல்லாதபோதுதான் தன் தேவை சற்றேனும் உணரப்படுகிறதா? அல்லது கையோடு காவல் என்கிற கணக்காய் ஒரு ஆம்பளை வீட்டில் கூட இருப்பது எவ்வளவு பாதுகாப்பு என்று  அழைத்து வைக்கிறார்களா… வாசலில் கட்டிப் போட்டிருக்கும் நாயைப் போல…?

தக்க மதிப்பு மரியாதையில்லாமல் ஓரிடத்தில் இருந்து விட முடியுமா? சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்? என்று  மானமின்றிக் கை நனைக்க முடியுமா? என் துட்டு வேணும்…ஆனால் நான் வேண்டாம். அதுதானே? பணத்தையும், சேமிப்பையும் பாதுகாத்திருப்பவன், அது அவன் வசம் இருக்கும்போதே, கைமாறாத போதே, தனக்கான மரியாதையையும், மதிப்பையும் இழந்து விடுவானா? தன் மதிப்போடு இருந்துதானே ஜீவிக்க விரும்புவான்?

            என் தேவை என்று அவர்களுக்கு ஏதுமில்லை.  பணத்தைத் தவிர. எனக்குத்தான் தேவை. ஒராள் கூட இருந்தால் அவனுக்கான டீ, காபி, டிபன், சாப்பாடு, தண்ணீர்த் தேவை என்று கழிந்தாகணுமே…? நல்லவேளை…மருந்து மாத்திரை என்று எதுவும் இதுவரை வரவில்லை. தன் இருப்பின்மை அதற்கான தேவைகளைக் குறைக்கிறதுதானே,   அட…மின்சாரம் எவ்வளவு மிச்சம்?  கரன்ட் செலவு வள்ளிசாகக் குறையுமே? எப்பொழுது வேண்டுமானாலும் சட்டுச் சட்டென்று கழிப்பிடம், பாத்ரூம் போய்க் கொள்ளலாம்…தங்கு தடை ஏதுமில்லை. நேரத்தை மனதில் கொள்ளாமல் உள்ளே தவம் செய்து விட்டு வரலாம்…யார் கேட்கப் போகிறார்கள்? வெளில இந்தாள் காத்திருப்பானே என்கிற எண்ணம் வேண்டாம். அதற்கான மனப்புழுக்கத்திற்கு ஆளாக வேண்டாம்..  பிறகென்ன…சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டியதுதானே?

            எந்தச் சங்கடமும் தன்னால் வேண்டாம் என்றுதானே கிளம்பி வந்தது? தன்னால் அவர்களுக்குச் சங்கடமா அல்லது அவர்களால் தனக்குச் சங்கடமா? அவர்கள் தரும் சங்கடங்களை, அவர்களால் உணரப்படாத உபத்திரவங்களை விட்டு விலகுவதற்குத்தானே இப்படி வந்து ஒற்றைப் பனை மரமாய் நிற்பது?

            கக்கூஸ் போனா எவ்வளவு நேரம்டா? சட்டுன்னு வர மாட்டீங்களா? -தாங்கமாட்டாமல்தான் கேட்டுவிட்டார் ஒருநாள். எங்கே வேட்டியோடு கழிந்து விடுமோ என்கிற பயம். சமீபமாய் அடக்க முடியாமல் இந்த அச்சம் வேறு வந்து தொலைத்திருக்கிறது. சிறுநீர் கசிகிறது என்கிற சந்தேகம் என்றோ வந்து விட்டது. அதைச் சொல்வதில்லை. பொறுத்து அடக்கிக் கொள்கிறார்.  எதைத்தான் சொல்கிறார் இவர். எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு அமுக்கி இறுக்கிக் கொள்வதுதான். ஆனால் அடங்க வேண்டிய இயற்கை  முட்டிக் கொண்டு நிற்கிறதே…? அதை உணர்ந்து இரக்கம் கொள்ள யாருமில்லையே?

            என்னப்பா இப்படிக் கேட்கிறே? முழுசாப் போயிட்டுத்தானே வரணும்…பாதில வர முடியுமா?-சந்துரு எரிச்சலுற்றான்  - இந்தக் கேள்விக்கு பரணியால் பதில் சொல்ல முடியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் அவசரம்தான் முக்கியம். உலகமே அப்படித்தான். நன்றாக உற்றுப் பார்த்தால் மனிதன் முற்றும் சுயநலமானவன் என்பதே புலப்படும்.

            கக்கூசையும், குளிக்கிற பாத்ரூமையும் எவன் ஒண்ணாக்கினான்? இந்த நடைமுறையைக் கொண்டு வந்தது எந்த அறிவாளி? அவன் தலைல மண்ண அள்ளிப் போட…! – மனதிற்குள் திட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

இன்று எல்லா வீடுகளும் அப்படித்தான் கட்டப்படுகிறது. அதுவே நடைமுறையாக ஆகிவிட்டது. என்னதான் ஃப்ளஷ் பண்ணினாலும்? சுற்றிலும் தண்ணீரை அடித்து ஊற்றினாலும்  குளிக்கும் இடத்தில் அந்தக் கக்கூஸ் வாடை இல்லாமல் போகுமா? அதுக்கு ஒரு சென்ட்டை கொண்டு வந்து மாட்டித் தொங்கவிட வேண்டியிருக்கிறது. அது ஐஸ்கட்டி மாதிரி சின்னச் சதுரமாய் ஜொலித்து மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. நாலு நாளைக்கு மணக்கும். அத்தோடு சரி…பிறகு? ஒரு மாசத்துக்கு எத்தனையை வாங்கித் தொங்க விடுவது? என்ன வீண் செலவு இது?

            அவரால் அடக்க முடியவில்லை.  அவசரமாய் வந்து நிற்கும் வேளை கதவு உள்ளே சாத்திக் கிடக்கிறது. குளிப்பதும் அங்கேயேதான் என்றாகிப் போனதுதான் தொல்லை. டபிள் பெட் ரூமில்  அந்த இன்னொரு கக்கூஸில் போனால் என்ன? அதை ஒட்டிய அறையில் அவன் அருமைப் பொண்டாட்டி படுத்திருக்கிறாள். குழந்தையும் அருகே. அவர்களின் தூக்கம் கெட்டு விடுமாம்.  மகராணி துயிலெழத்தான் மணி பத்தாகுமே?

அத்தோடு வெஸ்டர்ன் டாய்லெட் என்பது இவர் அறையின் பகுதியில்தான் இருக்கிறது. தனக்கு அதுதான் வசதி என்று அந்த அறையைத் தனக்கு வைத்துக் கொண்டார் இவர். இப்போதோ எல்லோரும் அதையே பயன்படுத்துகிறார்கள். காலை மடக்கிக் கீழே உட்கார எவருக்கும் முடிவதில்லை அல்லது விருப்பமில்லை. வசதி வாய்ப்புக்கள்தானே வியாதியைக் கொண்டு வந்தன! 

முப்பது வயசிலேயே இவர்கள் இப்படி முடங்கிப் போனார்கள். தான் தனது ஐம்பதுக்குப்பிறகுதான்…அப்படிக் கூடச் சொல்லக் கூடாது…சர்வீசில் இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த வகைக் கக்கூசையே பயன்படுத்தியிருக்கிறோம். இதையெல்லாம் யாரிடம் போய்ச் சொல்வது?இந்தாளென்ன கக்கூசப்பத்தியே பேசிட்டிருக்கிறான்? நினைப்பார்களோ?

கணினியின் முன்னால் வயிற்றைத் தள்ளிக்கொண்டு பிள்ளையார் போல உட்கார்ந்து கிடப்பதைப்போல, கக்கூசிலும் நேரம் காலம் மறந்து அமர்ந்து கிடக்கிறார்கள். சமயங்களில் கையில் ஒரு புத்தகம். மொபைலில் வீடியோ பார்க்கிறார்கள்.  தண்ணீர் இறங்கினால் முப்பதாயிரம், நாற்பதாயிரம் மொபைல் பாழாகி விடுமே என்கிற பயம் ஏதுமில்லை. போனா இன்னொண்ணு வாங்கிக்கிறது….காசுதான் மரத்துல காய்க்கிறதே! உலுப்பினாப் போச்சு…!

ஒருவன் குளிக்கப் போனால் அதிக பட்சம் பத்து நிமிடம் ஆகுமா? அதற்கு மேல் ஒரு ராட்சசன் குளித்தாலும் அவனுக்கேற்றாற்போல் அது  தாமதம் ஆகாதே? இவன் என்னதான் செய்கிறான் உள்ளே? அவ்வளவு பெரிய ஆகிருதியா இவனுக்கு?  அரைமணி நேரமா குளிக்க? ரெண்டு சொம்பு விட்டு உடம்பை நனைக்க, ரெண்டு சொம்பு விட்டுத் தலையை நனைக்க…பிறகு சோப்புத் தேய்க்க…கையால் தேய்த்துக் கழுவ….தண்ணீர் விட்டு இறக்க.. …தலையோடு காலாக மூணு சொம்புத் தண்ணீர் விட்டு உறரிஉறி…என்று சொல்லிக் குளியலை முடிக்க…இதுக்கு மேல் என்ன இருக்கு அன்றாடக் குளியலில்? குளிக்கிறானா, தூங்கிட்டானா?

நல்லாக் குளிச்சிட்டுத்தானேப்பா வர முடியும்? பாதில சோப்போட அப்டியே வெளியேற முடியுமா? காக்கா குளி குளிக்க முடியுமா?

உன்னை யாருப்பா பாதில வெளியேறச் சொன்னாங்க? இவ்வளவு நேரமான்னுதானே கேட்டேன்…?

நா எப்டி வழக்கமாக் குளிப்பனோ அப்படிக் குளிச்சிட்டுத்தான் வெளில வருவேன். …வெயிட் பண்ணித்தான் ஆகணும்….

என்னப்பா இப்படிச் சொல்ற? டாய்லெட்டுக்குத்தான் இத யூஸ் பண்ற…குளிக்க அங்க போகப்படாதா…?

அங்க போய்க் குளிச்சா…குழந்தை எழுந்திரிச்சிடும்….அழ ஆரம்பிக்கும். அவளுக்கும் தூக்கம் போயிடும்….அந்த பாத்ரூம யூஸ் பண்ண முடியாது….இங்கதான் எல்லாமும்….ராத்திரி குழந்தை அடிக்கடி எழுந்திரிச்சிடுது. அவளுக்குத் தூக்கம் போயிடுது…அது உனக்குத் தெரியுமா?

அதற்கு மேல் கேள்வி இல்லை என்பதுபோல் அவன் பேசியது இவரைத் திடுக்கிட வைத்தது. யோசிக்கவும் வைத்தது. குழந்தை பெற்றால் தாயாரின் தூக்கம் பாழ். தெரியாததா இவருக்கு? ஆனாலும் தன் வார்த்தைக்கு மதிப்பில்லை. அப்பாவின் உடல் ரீதியான கஷ்டங்கள் அவனால் உணரப்பட்டிருக்கிறதோ என்னவோ தெரியாது…அதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் சாமர்த்தியம். கண்டுக்காத…கண்டுக்காத…என்று அடிக்கடி  தங்கள் பேச்சின் நடுவே உரைக்கிறார்களே…அதற்கு இதெல்லாம்தான் அர்த்தமோ!

பொண்டாட்டிக்குப் பயந்த பய…..! கோழை… - மனதுக்குள் வெட்கினார். வயசான அப்பனுக்கு இயற்கை இடர்பாடுகள் இருக்கும் என்கிற உணர்தல் இல்லை. கருணை இல்லை.  உறுத்தல் இல்லை. முதியவர்களின் சங்கடங்களை உணராதவர்களுக்கு உறுத்தல் மட்டும் எப்படி வரும்? எங்கிருந்து இரக்கம் வரும்?  என்ன பிள்ளைகள்..? பாசமற்ற ஜந்துக்கள்….

யாமினியை நினைத்துக் கொண்டார் பரணீதரன். ஒரு வார்த்தை என்றாவது கண்டித்துப் பையனைப் பேசியிருக்கிறாளா? அவன் பேசுவது எதுவுமே அவள் காதில் விழுவதில்லை. அது அப்பனுக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பஞ்சாயத்து. நாம் தலையிடக் கூடாது என்று மௌனம் காக்கிறாளோ? அல்லது தான் சொன்னாலும் அவன் எங்கே கேட்கப் போகிறான் என்று விலகி நிற்கிறாளா? அல்லது இந்த மனுஷனுக்கு வேற வேலை இல்ல என்று ஒதுக்கி விட்டாளா?  அப்படியெல்லாம் விட்டுக் கொடுத்து விட மாட்டாள் பையனை. அவள் என்றுமே அவனின் பக்கம்தான். அவன் எது செய்தாலும் அதுவே நியாயம்… என்ன சொன்னாலும் அதுதான் சரி.

பையன்,  மாடியிலிருந்து கீழே குதி என்றால்  அடுத்த விநாடி அட்சர சுத்தமாய்க் குதித்து விடுவாள். மறு பேச்சில்லை.

அம்மா…உன் மருமக கால் வலிக்குதுங்கிறா…கொஞ்சம் பிடிச்சு விடேன்…என்றாலும் சரி என்று போய் “வித்யா…கொஞ்சம் கால நீட்டும்மா…“ என்று பதவாகமாய்ச் சொல்லி பாங்காய்க் கால்களை எடுத்து தன் மடியில் போட்டுக் கொண்டு  அமுக்கி விடுவாள்.. அவள் ரெண்டு திட்டுத் திட்டினாலும் இன்பமாய், சுரணையற்று வாங்கிக் கொள்வாள். கண்ணையும் கருத்தையும் மறைக்கும் பிள்ளைப் பாசம்…தராதரங்கள் அங்கு விலையாவதில்லை.

அவன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு மேல் அவள் கேட்பதில் என்ன வியப்பு இருக்கப் போகிறது? அவள்தான் வெள்ளைக்காக்கை பறக்கிறது என்றால் ஆமாம்…ஆமாம்…அதோ…அதோ…என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறாளே? இம்மாதிரிப் பிரகிருதிகளை என்னதான் செய்வது?

கொஞ்சம் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கக் கூடாதா? அதான் அஞ்சு மணிக்கு ஒரு தரம் டாய்லெட் போயிட்டுத்தானே வர்றீங்க…? அதுக்குள்ளேயும் இன்னொரு தரமா? ரெண்டாம் தரம் காபி குடிக்காதீங்க…! வாயை அடக்குங்க…அதனாலதான் உங்களுக்கு வயித்தைக் கலக்குது…கரெக்டா அவன் குளிச்சிட்டிருக்கிறபோது உங்களுக்கு அவசரமாயிடுமா? அதென்ன அப்படியொரு உறரிபரி? கொஞ்ச நேரம் அடக்கிட்டு உட்கார்ந்திருக்க முடியாதா? என்னமோ யோகா பண்றேன்…அதப் பண்றேன்…இதப் பண்றேன்னு பீத்திக்கிறீங்களே…யோகால இதை அடக்குறதுக்கு எதுவும் பயிற்சியில்லையா? என் உடம்பு என் கன்ட்ரோல்ல…ன்னு சொல்வீங்களே…இது மட்டும் உங்களுக்கு அடங்க மாட்டேங்குது போல்ருக்கு…தினசரி இதுவா பிரச்னை…? தாங்க முடியாத அவசரம்னா அபார்ட்மென்ட் கீழே பொது டாய்லெட் ஒண்ணு இருக்குல்ல அங்க போயிட்டு வாங்க…!

தன்னை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. போனவன் வந்தவன் எல்லாம் ஆளாளுக்குப் பயன்படுத்தி அந்த டாய்லெட் இப்போது பாழாகி உபயோகமற்றுக் கிடக்கிறது. நான் அங்கு போக வேண்டுமாம். வியாதியை வாங்கிக் கொண்டு வர…! உரிமை இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசி விடுவதா? அப்பா பாவம்டா….ரொம்ப அவசரம்னா கீழே போயிட்டு வந்துடு…என்று ஒரு வார்த்தை அவனைப் பார்த்துச் சொல்ல முடியமா இவளால்?

 பிள்ளைங்க வளர்ந்து ஆளாயிட்டா நாமதான் அவுங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கப் பழகிக்கணும்…இப்போ நான் இல்லியா….உங்களை மாதிரியா ஒவ்வொண்ணுக்கும் பறந்திட்டிருக்கேன்? அடங்கிக் கிடக்கலை?

உண்மைலயே நீ ரொம்ப மெச்சூர்டுதான்…என்றார் இவர். அதை அவள் எப்படிப் புரிந்து கொண்டாளோ? கண்மூடித்தனமாக இருப்பதுட் மெச்சூரிட்டியின் இன்னொரு பகுதிதானே…!

றுபடியும் இப்போது ஃபோன் பெல் அடித்தது. ஆளை விடுங்கடா சாமி என்று கழன்று ஓடி  வந்தாலும், அப்டி ஈஸியா நழுவிட முடியுமா? என்று பிடித்துக் கொள்கிறார்கள். சேர்ந்து இருக்கையில் இருக்கும் தொல்லையை விடத் தனியாய் ஓடி வந்த பிறகு உண்டாகும் இடர்கள்தான் அதிகம். அப்டியெல்லாம் தனியாப் போயி நிம்மதியா இருந்திட முடியுமா? விட்ருவமா? என்பதைப் போல…

என்ன? அதான் காலைலயே சொல்லியாச்சுல்ல…சும்மா என்ன ஃபோன் பண்ணிட்டு? – சற்றுக் கோபமாகவே கேட்டார். .போன் வந்தாலே எரிச்சல்தான் வந்தது இவருக்கு.

டிக்கெட் போட்டுட்டீங்களான்னு கேட்கத்தான்….!-அடேயப்பா…என்ன அக்கறை?

என்னது டிக்கெட்டா? வந்த வேலை பாதி கூட முடியலை .  அதுக்குள்ளயும் டிக்கெட் போடுன்னு அவசரப்படுத்தினா என்ன அர்த்தம்?

என்ன பெரிய வேலை? பாங்க் ஒர்க்தானே? முடிச்சவரைக்கும் போதும்…கிளம்பி வாங்க…கோர் பாங்கிங்தானே…மீதி இருக்கிறதை இங்கே இருக்கிற அதே பாங்குகளுக்குப் போயி வேணுங்கிறதைச் செய்துக்கலாம்…

அங்கெல்லாம் என்னால டூ வீலர்ல அலைய முடியாது. எங்கயாச்சும் மோதி, காலக் கைய ஒடைச்சிக்கிறதுக்கா? மெட்ராஸ் டிராஃபிக்ல என்னால வண்டி ஓட்ட முடியாது…படுக்கைல விழுந்தேன்னா அப்பறம் எல்லாருக்கும் அவஸ்தை….

அதெல்லாம் ஒண்ணும் விழமாட்டீங்க…மெது மெதுவாப் போயிட்டு வரலாம்…உங்களால முடியும்..!

நம்பிக்கையளிக்கிறாளாம்? அடேயப்பா எவ்வளவு அக்கறை? அங்கிருந்தால் காய்கறி நறுக்குவேன், பால் காய்ச்சுவேன். வெந்நீர் போடுவேன்…தோசைக்கு மாவு அரைத்துக் கொடுப்பேன்…அவசரத்துக்குப் பற்றுப் பாத்திரம் தேய்த்துக் கொடுப்பேன்…வேலைக்காரி வராத நாட்களில் முழுப் பாத்திரங்களையம் தேய்த்து அடுக்கி விடுவேன்…உலர்ந்த துணிகளை மடித்துக் கொடுப்பேன்…இப்பொழுது அத்தனையும் நின்று போனது அம்மாவுக்கு. இருக்கும் வேலை போதாதென்று இந்தச் சில்லரை வேலைகளையும் தானே கட்டிச் சுமக்க வேண்டியிருக்கிறதே…? அந்தப் பெண் துரும்பை நகர்த்த மாட்டேனென்கிறதே? உடம்பை அசைத்தால் துவண்டு விடுமோ என்று தேர் மாதிரி நகர்கிறதே? மனசாட்சி என்று ஒரு வார்த்தை சொல்வார்களே…அந்தச் சொற்களையெல்லாம் மொழியிலிருந்து தூக்கி எறிந்து மூலையில் கிடாசி விட்டார்களா? அது மனம் சம்பந்தப்பட்டதாயிற்றே…அது உறுத்தாதா சாட்சியாய் நின்று?

அரை குறையாய்க் கிளம்பி வந்தால்  மீதி வேலைக்கு உன் பையனைக் கூட்டிட்டுத்தான் ஒவ்வொண்ணுக்கும் அலையணும்பரவால்லியா? அதுலயும் டபிள்ஸ் போக என்னாலாகாது. காரைத்தான் எடுத்தாகணும். அதான் புதுப் பெருமை வந்து ஒட்டிட்டிருக்கே….உன் பையன் ஒவ்வொரு பேங்குக்கும் என்னோட கார்ல அலைவானா? அவன் ஸ்டேட்டஸ் என்னாகுறது? வயசான தகப்பன்களைக் கூடக் கூட்டிட்டுப் போறதே அந்தஸ்துக் குறைவா நினைக்கிற காலமாச்சே இது! கஷ்டப்பட்டு, சீரழிஞ்சு, அக்கறையா காசைச் சேர்த்து வச்சு, லட்டு மாதிரித் தூக்கிக் கொடுத்தா….சரின்னு வாங்கிக்குவானுங்கஏன்னா காசு கசக்காதே… அதுக்காக அப்பன்காரன் கூட மெனக்கெடமுடியுமா?சீரழியறதும், செருப்புக்கட்டுறதும் பெத்தவங்களுக்குத்தான் விதிச்ச விதி….அவனுங்களுக்கில்லஅவுகல்லாம் ராஜ பரம்பரை….உட்கார்ந்த எடத்துல அதிகாரம் பண்ணித்தான் பழக்கம்சுகவாசிகள்…! என்ன…நா சொல்றதெல்லாம் காதுல விழுகுதா இல்லியா? லைன்லதான இருக்கே…?

இப்ப என்னதான் சொல்றீங்க…நீங்க வரப்போறீங்களா இல்லையா? குரலில் அதிகாரம் தொனித்தது இவருக்குள் எரிச்சலை உண்டு பண்ணியது. அவள் தன்னைப்பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்?  வீட்டுக்கு அடிமையா நான்? வயசானால் அடங்கிக் கிடக்கணும் என்று நினைக்கிறாளா? கால் கை முடமானால் அப்போ அவ்வளவுதானா? கிள்ளுக்கீரையால்ல போச்சு?

வந்த வேலை முடியாம என்னால நகர முடியாது. இங்க வீடு கிடக்குற கிடப்புக்கு அதை சுத்தம் பண்ணவே ஒரு வாரம் ஆகும். அதுக்குத்தான் நீயும் கூட வரணும்னு சொல்றேன். அதுக்கு வாயே திறக்க மாட்டேங்கிறே…இப்போ என்னைப் புறப்பட்டு வரச் சொல்ல மட்டும் என்ன துப்பு இருக்கு உனக்கு? போட்டது போட்டபடி கிளம்ப வேண்டிதானா? வயசானவன் இப்படித் தனியாப் புறப்பட்டுப் போயிருக்கானேங்கிற கரிசனம் கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு? அதுவே இல்லேங்கிறப்போ…இந்தக் கேள்வியெல்லாம் உன்னால எப்படிக் கேட்க முடியுது? வெட்கமாயில்லே…? ராத்திரி இங்கே தனியே தூங்குறப்போ அப்டியே போயிட்டேன்னா? விட்டது சனின்னு இருப்பியா? சகதர்மிணின்னா என்ன அர்த்தம்? இன்பம், துன்பம் ரெண்டுலயும் சரிசமமாப் பங்கு கொள்றவதான் அவ.  நீ அப்டி இருக்கியா?  வையி ஃபோனை…மேற்கொண்டு பேசினே….அப்புறம் நான் கிளம்பியே வரமாட்டேன்…இங்கயே பர்மனென்டா டேராப் போட்டுடுவேன்…ஞாபகம் வச்சிக்கோ…..

ஃபோனை சட்டென்று கட் பண்ணினார் பரணீதரன். அவளைப் பேச விடாமல் கடகடவென்று தானே பொழிந்து தள்ளிவிட்டதை நினைத்து மகிழ்ந்து கொண்டார். நேரில் இயலாதது ஃபோனில் எவ்வளவு சாத்தியமாகிறது? இருக்கும் வயிற்றெரிச்சலையெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டதுபோல் உணர்ந்தார். ஆனாலும் ஒரு பாதிதான் வெளியேறியிருக்கிறது…மீதி? பாதிக்குப் பாதிதானே எப்போதும் பேச முடிகிறது. முழுசாய் அவிழ்த்து விட்டால் ஜென்மப் பகையாகிப் போகும்…! அப்படிப் பழி சண்டை போட்டு யார் ஜெயிக்கணும்? யார் தோற்கணும்? பேச்சைக் குறைத்தாலே பாதி நிம்மதி. ஓட்ட வாயா இருந்து என்ன பிரயோஜனம்?

கடந்த பத்து வருடமாய் இவர்தான் ஒருத்தராய் இப்படிப் போகவும் வரவுமாய் இருந்து கொண்டிருக்கிறார்.  ஓரிரு முறை அவள் வந்ததோடு சரி…பிறகு நான் வரலை என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்.  நீங்க இருந்தா இருங்க…போனாப் போங்க என்ற கணக்குத்தான். அந்த ஊர் வீட்டைப் பற்றித் துளிக் கூடக் கவலையில்லை.  இப்படி அத்தனை சாமான் செட்டுகளோடு வெறுமே பூட்டிப்போட்டு விட்டு வந்து கிடக்கிறோமே என்கிற கவலை இம்மியும் இல்லை. ரெண்டு மாசத்திற்கொருமுறையேனும் ஒரு தடவை போய் நான்கைந்து நாட்கள் இருந்து கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை துளிக்கூட இல்லை.

நீங்க மட்டும்தான் வந்தீங்களா? – எதிர்த்த வீடு, பக்கத்து வீடு என்று கேட்கிறார்கள். இந்தாள் பேச்சை அந்தம்மா கேட்காது போல்ருக்கு…அதான் இப்டித் தனியா அலையுறாரு….! கழட்டி விட்டுட்டாங்க போல்ருக்கு? – நினைத்துக் கொள்வார்களோ? மாமியோடு வந்தால்தான் மதிப்பு…! உலகம் பூராவும் ஒரே மாதிரிதான் கிடக்கு…!!

நினைச்சா நினைச்சி்ட்டுப் போறாங்க….யாருக்கு விளக்கம் கொடுத்து என்ன ஆகணும் இனிமே? அவனவன் பாடு அவனவனுக்கு…யாரை திருப்திப் படுத்தியாகணும்? பெத்த பசங்களே அப்பனைத் திருப்திப்படுத்த நினைக்கலை…ஆத்தாளை மட்டும் திருப்திப்படுத்துறதா அவ நினைச்சிட்டிருக்கா…ஒரு நாளைக்கு அவளையும் வெளில தள்ளப் போறான். கழட்டி விடப்போறான். தனிக் குடித்தனம்னு ஒத்தக்கால்ல நிக்கப் போறான். அப்பத்தான் புத்தி வரும். கால் கை நல்லாயிருக்கிறவரைக்கும் ஓடும். ஏன்னா இப்போ வேலை செய்ய ஒரு ஆள் வேண்டியிருக்கு…அப்பத்தான இவுங்க இஷ்டம்போல ஊர் சுத்தலாம்…ஓட்டலுக்குப் போகலாம். சினிமா பார்க்கலாம்…இஷ்டம் போல காசைக் கரியாக்கி வேண்டாத பொருட்களையெல்லாம் வாங்கி வாங்கி அடுக்கலாம்…உடம்புல ரத்தச் சூடு இருக்கிற வரைக்கும்தான் இந்த ஓட்டம் ஆட்டம்பாட்டமெல்லாம். ரத்தம் சுண்டிப் போச்சுன்னா? அப்போ தெரியும் அப்பனோட அருமையும் பெருமையும்…! ஆஉறா…பெரியவங்க நம்ம கூட இருக்கிறது எவ்வளவு பெரிய பாதுகாப்பு?

நமக்காக நம்ம சொல்ற சுடு சொல்லையெல்லாம் பொறுத்துக்கிட்டு, நம்ம பேசுற அநாவசியமான பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம நம்மளோட இருந்து காலம் கழிச்சாங்களே…சேர்த்து வச்ச சேமிப்பையெல்லாம் ஒண்ணு விடாம நமக்கே கொடுத்திட்டு, மீதி வாழ்க்கைல பிடிப்பில்லாம காவி கட்டாத சந்நியாசியா கடைசி வரை நமக்குத் துணையிருந்து இறுதி மூச்சை விட்டாங்களே…அவுங்களுக்கு முழு நன்றியுள்ளவங்களா, கடமையுணர்ந்து ஒரு நாளாச்சும் நாம நடந்துக்கிட்டமான்னு ஒரு நாளைக்கு நெனப்பு வரும்ல…அன்னைக்குத் தெரியும் பெத்தவங்களோட அருமை…

நினைத்து நினைத்து மனதுக்குள் அழுது கொண்டிருந்தார் பரணீதரன். தனியாய்ப் புறப்பட்டு வந்தும் தன்னால் நிம்மதியாய் இருக்க முடியவில்லையே…மனிதன் ஒரு கூட்டுப் புழு…நாலு பேரோடு ஒன்றாய் இருந்து பழக்கப்பட்டவன்…அவனால் தனித்து இயங்க முடியாதோ? அதுவும் இவர் அப்பா, அம்மா, பாட்டி, அண்ணா, தம்பி, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை என்று கூட்டுக்
குடும்பமாக இருந்து வளர்ந்து வாழ்ந்தவராயிற்றே?  வீராப்போடு கிளம்பி வந்திருந்தாலும் அது எத்தனை நாளைக்கு என்று எண்ணிக் கொண்டல்லவா நிற்க வேண்டியிருக்கிறது? அங்கிருக்கும்போது இங்க வரணும்னு இருக்கு. இங்க வந்தபின்னாடி அங்க போகணும்னு தோணுது…என்ன மனசு இது? ஒரே ஊசலாட்டம்….?

ஒவ்வொரு முறையும் தான் தோற்றுப் போவதாகவே உணர்ந்தார் பரணீதரன். திடீரென்று ஏற்பட்ட ஞானோதயத்தில் புத்துணர்வு பெற்றவராய் இன்னும் என்னென்ன வேலைகள் மீதமுள்ளன என்று அலச ஆரம்பித்தார். அவைகளை முடிக்க எத்தனை நாளாகும் என்று அவர் மனது கணக்குப் போட ஆரம்பித்தது. நாலு நாள் டயத்தை அவராகவே நிர்ணயித்துக் கொண்டு ரயில் டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க ஆரம்பித்தார். சிறப்பு ரயில் உள்ளீடாக அலசு அலசென்று அலசினார். ஒரு வண்டி இல்லை. என்றுமே ரயில் டிக்கெட்டுக்குத் தாளம்தான்.

போகிறோமோ இல்லையோ டிக்கெட்டைப் போட்டு வைப்போம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பேயே ரிசர்வ் பண்ணி எல்லோரும் இடத்தை நிரப்பி விடுகிறார்கள். பிறகு அசால்ட்டாகக் கான்சலும் பண்ணிக் கொள்கிறார்கள். கழியும் தொகைபற்றி எவனும் கவலைப்படுவதேயில்லை.  எதை நம்பி காத்திருப்புப் பட்டியலானாலும் பரவாயில்லை என்று பதிவு  செய்வது? ஆர்ஏசி என்று கிடைத்தால் கூட இரவு பூராவும் கொட்டுக் கொட்டு என்று உட்கார்ந்தல்லவா போக வேண்டும்? சீனியர் சிட்டிசன்ஸ் என்று படுக்க இடம் கிடைத்து விடுகிறதா என்ன? இருந்த மன இறுக்கமெல்லாம் சிதறிச் சின்னாபின்னமாகிப்  போனது பரணீதரனுக்கு. ஆனாலும் போயாக வேண்டும்.

ஃபோனை எடுத்தார். பையன் எண்ணுக்குத் தட்டினார்.

என்னாச்சுப்பா… திடீர்னு….? உடம்பு சரியில்லையா? -பதறினான்.

அதெல்லாமில்லேடா….சந்துரு…அப்பாவுக்கு ஒரு டிக்கெட் போட்ருப்பா ஏதாச்சும் ஒரு டிராவல்ஸ்ல…?  பஸ் ஸ்டான்ட் வந்து கூட்டிட்டுப் போயிடு…பஸ்,ஆட்டோ பிடிச்செல்லாம் என்னால வர முடியாதுப்பா…!

கண்டிப்பா வர்றேம்பா….அதுக்கு ஏன் ஒர்ரி பண்றே? நம்ம கார்ல வந்து கூட்டிட்டு வர்றேன்…டிக்கெட் போட்டுட்டு வாட்ஸப் பண்றேன்…ஓ.கேயா…?

ரொம்ப தேங்க்ஸ்ப்பா…என்றபோது கண்கள் கலங்க நா குழறியதை அவரால்  தடுக்க முடியவில்லை. மனசு மிகவும் லேசாகிப் பஞ்சாய்ப் பறந்து கொண்டிருந்தது.

என்னப்பா இது…தேங்க்ஸெல்லாம் சொல்லிட்டிருக்கே…. ? – ஃபோனை அணைத்த அந்தக் கணம் சந்துருவின் அந்தக் கடைசி வார்த்தைகள் அவர் காதில் லேசாக விழத்தான் செய்தன.   பாசக்காரப் பயதான்…மனது நினைத்துக் கொண்டது.

தேங்க்ஸ்பா…தேங்க்ஸ்பா… - ஆனாலும் அவர் வாய் அந்த வார்த்தைகளை முனகத்தான் செய்தது.

 

                                    ---------------------------------------

 

 

           

 

              

 

சிறுகதை பிரசுரம் - தினமணி கதிர் 28.09.2025

“பட்ட கடன்”




            ங்க பொண்ணு எங்க வீட்டைத் தவிர வேறே எங்கே வாழ்க்கைப் பட்டிருந்தாலும் இந்நேரம் உங்க வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கும்…- கடும் கோபத்தில்தான் இப்படிப் பேசினார் விநாயகன். இதைச் சொல்ல வேண்டுமென்று வெகு நாளாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார் அவர். எடுபடுகிறதோ இல்லையோ, சொல்லியே ஆக வேண்டும் என்று மனம் உறுதிப்பட்டிருந்தது. அந்தளவுக்கான ஆதங்கம் அவரைத் தாக்கியிருந்தது.

வெளிப்படையாச் சொல்லணும்னா உங்க பொண்ணு வந்த பின்னாடி எங்க வீட்ல நிம்மதிங்கிறது இல்லாமப் போயிடிச்சு…அதான் உண்மை…என்று ஒரு போடு போட்டார்.

அதிர்ந்து போனார் சம்பந்தம். இப்படியான நேரடித் தாக்குதல் வரும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. எதிர்கொள்ள முடியாமல் தவித்தார். இறுகிப் போய் உட்கார்ந்திருந்தார். ஆடிப்போனார் என்றுதான் சொல்ல வேண்டும். மனுஷன் பட்டுப் பட்டுன்னுல்ல பேசுறாரு?

பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்னையாகத்தான் இருந்தது விநாயகம் வீட்டில்.. இப்படியா ஒரு பெண்ணை வளர்த்திருப்பார்கள்? எதைச் சொன்னாலும், எதைப் பேசினாலும் குத்தமாகவே எடுத்துக் கொண்டால்? எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டேயிருந்தால்? கேப்பேன்…கேள்வி கேப்பேன்..கேட்கணும்…அது என் உரிமை…என்று அச்சுப் பிச்சு என எதையாவது நினைத்துக் கொண்டு சண்டைக்கு சதிராய் நின்றால்?  புத்திசாலி என்று தன்னைத்தானே வரித்துக் கொண்டு ஏறுக்கு மாறாய்த் தொட்டதற்கெல்லாம் பேசிக் கொண்டிருந்தால்?

            விநாயகத்திற்கு வீடே  நரகமாய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும், நம் வாழ்க்கை மீதியை நாம் தனியே இருந்து வாழ்ந்து கழிப்போம் என்று எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தார் மிருணாளினியிடம்.  கேட்டால்தானே? அதனால்தான் இப்போது நிம்மதியில்லை.  நான் என் பையனோடுதான் இருப்பேன் என்கிறாள்.  சரி என்று இவரும் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். இம்புட்டு வயசுக்கு மேல் தனியே போய் சமைச்சு சாப்பிட்டுக் கொண்டு இருந்து அல்லல் படணும் என்ற தலையெழுத்தா என்ன? எல்லாக் கடமைகளையும் முறையே முடித்தவனுக்கு எவனும் ஒரு வார்த்தை தப்பாய்க் கேட்க முடியாதவருக்கு கடைசிக் காலத்தில் தனியே போய் இருந்து கழிக்க வேண்டும் என்று எந்த விதியில் சொல்லியிருக்கிறது? பலன் கருதாத கடமைதான். ஆனாலும் ஆதரவற்றிருப்பது எந்த வினையைச் சார்ந்தது? தனியே இருப்பதிலும் ஒரு ருசி இருக்கிறதுதான். அமைதியும், தனிமையுமான மகிமையே தனிதான். ஆனால் ஒவ்வொரு இரவிலும் அது பயமுறுத்துகிறதே?

            உங்களை யாரு போகச் சொன்னாங்க? இங்கயே இருங்கன்னுதானே சொல்றது? – அவளின் ஆதரவான பதில்தான் இவரை இருத்தி வைத்திருக்கிறது. பையனுக்கும் கேட்பதுபோல்தான் சொன்னாள். ஏன் நந்தினிக்கும் கேட்கத்தான் செய்தது. இந்த வீட்லருந்து எங்களை யாரும் அசைக்க முடியாதாக்கும் என்கிற பிரேரணை அது.

அவரும் அவளுக்கு ஆதரவுதானே? ஒருவருக்கொருவர் கடைசி காலத் துணை. தெம்பு இருக்கும் வரை உழைக்க வேண்டும். பையனுக்கு உதவியாய் இருந்து விட்டுப் போவோம் என்று தொடர்ந்தால், இந்தப் பெண்ணின் ஆர்ப்பாட்டங்கள் தாங்க முடியவில்லையே? வீட்டின் அமைதியே காணாமல்தான் போனது.

இத்தனைக்கும் துரும்பை நகர்த்துவதில்லை. காலை படுக்கைத் துயிலெழுவதே பத்து மணி ஏதும் சொல்வதில்லை. என்னவோ பண்ணிக்கட்டும்…வீட்ல சண்டை இல்லாம இருந்தாச் சரி…என்று விட்டாயிற்று.தலைமுறை மாறிவிட்டதாம். பகல்ல தூங்கி ராத்திரி முழிக்கிற பரம்பரை போல்ருக்கு…நினைத்துக் கொண்டார்.

கொஞ்சமேனும் மனசாட்சி வேண்டாம்? பிறந்த வீட்டில், கல்யாணத்திற்கு முன் இருந்தது போலவா புகுந்த வீட்டிலும் இருப்பது? வெட்கமாயில்லை? இந்த லட்சணம் தெரிந்த அந்த மனுஷனும் கண்டு கொள்ளாமல் திரிகிறானே? எடுத்துச் சொல்ல மாட்டான்? இவன் என்ன அப்பன்? அப்பனையும் ஆத்தாளையும் மிஞ்சிய பெண்ணா இவள்? இது தெரியாமல்தான் கல்யாணம் பண்ணினமா? கூடவே இருந்து அன்றாட நடவடிக்கைகளையெல்லாம் கவனித்து,  திருப்தி வந்து திருமண நிச்சயம் பண்ண வேண்டுமெனில் அது சாத்தியமா? பெண் பார்க்கப் போன இடத்தில் நாலு நாள் இருந்திட்டுப் போறேன் என்று உட்கார முடியுமா? எல்லாம் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் முடிந்து போயிற்று. இனி என்ன செய்வது? கட்டியழ வேண்டியதுதான். உன்னால நான் கெட்டேன்…என்னால நீ கெட்டே!!! நம்மால் அவர்கள் கெடவில்லை. அதுதான் சத்தியம். ஒரு பிடுங்கலைக் கழற்றிவிட்ட நிம்மதி. தன் பெண்ணைப்பற்றி அறியாதவர்களா அவர்கள்?  

பையன் மனதுக்குள் எப்படியெல்லாம் புழுங்குகிறானோ? அவன் அவளோடு…அதாவது தன் பெண்டாட்டியோடு பேசுவதேயில்லை. அவள் ஏதாவது சொன்னால்…. ம்ம்… என்று ஒரு புன்னகை. அல்லது ஓகே…ஓகே…என்று ஒரு சின்ன வார்த்தை. அதையும் அவள் முகத்தைப் பார்த்துச் சொல்வதில்லை. அந்த முகத்தில் ஏதேனும் ஒரு சுமுகம் இருந்தால்தானே? எப்போதும் கடு கடுவென்றே வெடிப்பது போல் தென்பட்டால்? என்ன பெரிய…மகராணி என்ற நினைப்போ? ராஜ பரம்பரையா? சாதாரண லோயர் மிடில் கிளாஸ் குடும்பம்தானே? ஒரு பெண்ணை இப்படியா வளர்ப்பது தத்தாரியாய்? பொறுப்புணர்ச்சி என்பது கொஞ்சமாவது வேண்டாமா?

            எப்பப் பார்த்தாலும் அதென்ன கடு கடுன்னு? எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாப்பில…? முகத்தை இனிமையாவே…சிரிச்ச முகமாவே வச்சிக்கத் தெரியாதா? மனசுக்குள்ள ஆங்காரம் ஓடிட்டேயிருக்குமோ? எங்க யாரையும் பார்க்கவே பிடிக்கலையா? பேசவே பிடிக்கலையா? புகுந்த இடத்தை பிடிச்ச மாதிரி ஆக்கிக்கிறதுதானே பொண்ணுக்கழகு?  இங்கென்ன குறைச்சல் உனக்கு? நல்லா மூணு வேளையும் மூக்குப் பிடிக்கத் தின்னுப்புட்டு  திங்கு திங்குன்னு கிடக்கியே? அது போதாதா? வாய் மட்டும் ஒன்றரை முழத்துக்குக் கிழியுது? வாயை அடக்கு…பேச்சைக் குறை….வயசு மட்டும் கழுதமாதிரி ஆகிப் புண்ணியமில்லை. மனுஷாளுக்கு அதுக்கேத்த பக்குவம் வேணுமாக்கும்… எதைப் பேசணும், எதைப் பேசக் கூடாதுங்கிற வாயடக்கம் வேணும் பொம்பளைக்கு…வீட்டுல சதா சர்வகாலமும் கலகத்தை உண்டு பண்ணிட்டிருந்தே அப்புறம் உன் பொழப்பு நாறிப் போகுமாக்கும்…நான் என்ன செய்வேன்னு உனக்குத் தெரியாது. செய்ய வேண்டியதைச் செய்திடுவேன். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்….-அபாரமாய் மிரட்டி வைத்திருந்தான் ராஜன். அத்தனையும் அந்தப் பெண்ணுக்குத் தேவை என்றுதான் தோன்றியது இவர்களுக்கு. புகுந்த வீட்டில் உள்ளவர்கள்தான் இனி நமக்கு ஆதரவு, இங்குதான் இனி நம் மீதி வாழ்க்கை  என்கிற நல்லெண்ணம், புரிதல் வேண்டாமா? எண்ணி எண்ணி மறுகினார் விநாயகன்.

            இவன் பேசும் அத்தனையும் மறு நிமிஷம் அவள் அப்பனுக்குப் போய்விடும். அந்தாள் ஏன் எதுவும் கேட்பதில்லை? தன் பெண்ணின் லட்சணம் தெரிந்து இருக்கிறான் போலும்? இத்தனை நாள் நாம அனுபவிச்சோம்…இப்ப அவுங்க அனுபவிக்கிறாங்க…! மனசுல நினைச்சிப்பானோ? கமுக்கமாய் இருப்பதும் காரியார்த்தம்தானே?

தன் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக் கொண்டார். பையன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமோ என்று மனதுக்குள் புழுங்கி அழுதார். எண்ணி எண்ணி மறுகினார். அவசரப்பட்டு விட்டோம்…இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகலாம். இருபத்தஞ்சுதானே? எல்லாம் போச்சு. மாயமாய் மறைந்து விட்டது அத்தனை யோசனைகளும். அதுதான் விதியோ? பிடிச்சிருக்குப்பா….முடிச்சிரு….என்று அவன் சொன்ன வார்த்தைகள் பெரிய பாரத்தை இறக்கி விட்டது போல் ஆகிப் போனது. யப்பாடா…ஒரு பெரிய பொறுப்பு விட்டது! என்கிற ஆசுவாசம். அதுவே மற்ற எல்லாவற்றையும் கண்களுக்கு மறைத்து விட்டது. மாய தந்திரம் செய்து விட்டது. நமக்கேத்த குடும்பம் இதான்…முடிச்சிற வேண்டிதான்…என்று மனசு முடி போட்டுக் கொண்டது.

சம்பந்தியின் தாய் தந்தையரைப் பார்த்தவேளையில் தன் குடும்பச் சொந்தங்களை எங்கெங்கோ சந்தித்து அளவளாவி மகிழ்ந்த திருப்தி ஏற்பட்டது மனதுக்கு. அதுவே பெண்ணின் தாய் தந்தையரின் இருப்பையும், வளர்ப்பையும் மறைத்து விட்டது. எல்லாம் சரியாயிருக்கும்…கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படும். அது இயற்கைதானே என்று மனம் சமாதானம் செய்து கொண்டது. இப்பொழுதும் மனம் முழுக்கத் தளர்ந்து விடவில்லைதான். இன்னும் நம்பிக்கையிருக்கத்தான் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போடும் என்கிற அனுபவச் சித்தம். சக்கரம் சுழலும். சங்கடம் மறையும்…என்கிற சமாதானம். ஒன்று மாற வேண்டும் அல்லது ஒரே மாதிரியான இருப்பு அலுத்துச் சலிக்க வேண்டும்.  ஆனால் அதன் பின்னணி வெறும் அமைதியாகிப் போகும். எந்த நல்லதுக்கும் கெட்டதுக்கும் கூட வாய் திறக்காது. மௌனம் பரம சுகம்.

            ன்னை எங்கண்ணா எனக்குப் பாந்தமாப் பார்த்து வச்சான். ஆனா என் பையனுக்கு நான் அப்படிப் பார்க்கத் தவறிட்டனோன்னு என் மனசாட்சி என்னைப் போட்டு அரிச்செடுக்குது…..-மனைவி மிருணாளினியிடம் சொல்லி அழுதார் விநாயகன். ஆமாம்…அழத்தான் செய்தார். இதைச் சொன்ன வேளையில் எல்லாம் அவர் கண்களில் நீர் திரண்டது. ஒரு குழந்தையைப் போல் ஓவென்று வாயெடுத்து, சத்தமிட்டு அவள் மடியில் தலை புதைத்து அழுது தீர்க்க வேண்டும்போல்தான் இருந்தது அவருக்கு.

            காரணம் இனி ஒன்றும் செய்ய முடியாதே…! என்கிற எண்ணம்.  அது அவரை வாட்டியது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மணமுறிவா பண்ண முடியும்? அதெல்லாம் நம் குடும்பத்திற்குப் பொருந்துமா? அந்தக் குடும்பத்தையும் அந்த அளவுக்கா துயரப்படுத்துவது? இன்னும் அந்தப் பாவம் வேறு வேண்டுமா? சின்னச் சின்னக் குறைபாடுகள், பொருந்தி வராமை என்று பலவும் இருக்கத்தானே செய்யும்? நாளடைவில் எல்லாம் சரியாகும் என்று பார்த்தால் மேலும் மேலும் கோணிக் கொண்டால் என்னதான் செய்வது?

            அவ தனியா இருக்கணும்னு விரும்புறா போல்ருக்குப்பா…தனிக்குடித்தனம் நடத்துங்க…நாங்க ஊருக்குப் போயிடுறோம்…கறாராய்ச் சொல்லித்தான் பார்த்தார். ராஜன் மறுத்துவிட்டான்.

            இந்த வயசான காலத்துல உங்களைத் தனியா விட நான் தயாராயில்லைப்பா…! என்னோட நீங்க ரெண்டு பேரும் இருக்கணும். இதுக்கு அவ சம்மதம் தேவையில்லை. அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான் அவ பொறுப்பு. மீதி வாழ்க்கை அவளுக்கு இங்கேதான். அதனால நீங்கதான் அவளுக்கு அப்பாவும் அம்மாவும்…இதைக் கொஞ்ச நாள் கழிச்சாவது அவ உணருவான்னு நினைக்கிறேன்…-பையனின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் போனது..

யாரிடமேனும் சொல்லி யோசனைகேட்டால் ஏற்றுக் கொள்வார்களா? நெட்டையோ குட்டையோ…வச்சு வாழணும்…அதுதான் சரி என்பார்கள். எல்லா வீட்டிலும் உள்ளதுதான் என்று ஒத்துப் பாடுவார்கள். நம்ம வீட்டக் கம்பேர் பண்ணும்பொது இது தங்கம்…என்று பாராட்டுவார்கள்.  சொந்தத்தில் ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  காரணம் அம்மாதிரி எதுவும் இதற்கு முன் நடந்ததில்லை. ஒருவருக்கொருவர் சண்டையும் சச்சரவும் நடந்திருக்கிறதுதான். பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பிய கதைகளும் உண்டுதான். ஆனால் பிரிவு என்று வந்ததில்லை. பெரியவர்கள் பாங்காய் எடுத்துச் சொல்லி திரும்பவும் சேர்த்து வைத்ததுதான். அதிகபட்சம் நாலு நாள் தாங்கியதில்லை. எல்லாமும் காலப் போக்கில் சரியாய்த்தானே போயிற்று. சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை நீக்க யாராலும் முடியாது…என்பதுபோல் புருஷன் பெண்டாட்டி சண்டை என்பது அடிக்கடி வந்து போவது. கடந்து செல்வது. ஆனால் அந்தச் சண்டை மாமனார், மாமியார் கூடவும் சேர்ந்து கொண்டு தலையைவிரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது என்பதுதான துரதிருஷ்டம். நம் கொடுப்பினை அவ்வளவுதானோ?

            திருமண வயது என்பது உடற்கூறு சம்பந்தப்பட்டதாகத்தான் நிர்ணயித்திருக்கிறார்கள் போலும்? மனக்கூறு என்ற ஒன்றை நினைத்துப் பார்த்திருப்பார்களா? பொறுமையும், பக்குவமும், சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுத்தலும் மனதளவில் ஊறித் திளைத்திருக்க வேணடாமா? அவைகள் மட்டும் வயதாக ஆக, அடிபட்டு…அடிபட்டு…அனுபவத்தில்தான் கைவரும் என்றால் எப்படி? அப்படியானால் அதுவரை மற்றவர்களெல்லாரும் இவர்களைச் சகித்துக் கொள்ள வேண்டுமா? குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களெல்லாம் காது கேளாத செவிடுகளாய் நடந்து கொள்ள வேண்டுமா? இவளின் அலட்சியங்களை, பொருட்படுத்தாமையை, ஏளனங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?

            எல்லா சகிப்புத் தன்மையும் தன் பையனுக்கும்தான் என்று தோன்றியது இவருக்கு. அவன்தான் அவளின் அவன் புதுப் பொண்டாட்டியின் பேச்சுக்களையெல்லாம், செயல்களையெல்லாம் சகித்துக் கொள்கிறான். யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்தான் என்றாலும், ஒருவர் விட்டுக்கொடுக்க எதிராளியும் நாளடைவில் அதற்குப் பழகிக் கொள்ள வேண்டாமா? இவன் விட்டுக் கொடுக்கிறானா அல்லது விட்டு விலகி விட்டானா? அதனால்தான் வீடு அமைதியாய்ப் போய்க் கொண்டிருக்கிறதோ? அதீத அமைதியும் வேறொன்றை உணர்த்துகிறதே? அப்படி உணர்த்தும் என்றும் தெரிந்தும்தான் வேறுவழி? என்று  நினைத்து அமைதி காக்கிறானோ? – பலவாறு யோசித்து அன்றைய சந்தர்ப்பத்தின் போது அதைக் கேட்டே விட்டார் விநாயகன்.

            பேச்சுன்னாலும் அநியாயப் பேச்சு சார் உங்க பொண்ணுக்கு? ஒரு பொம்பளை இந்தப் பேச்சுப் பேசி நான் எங்கும் பார்த்ததில்லை.கோபத்தில் பொம்பளை என்றே வந்து விட்டது அவருக்கு. கலோக்கியல் லாங்க்வேஜ்…அதை அவர் புரிந்து கொண்டாலும் சரி ..புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி…சொன்னது சொன்னதுதான் என்றிருந்தது இவருக்கு. அதென்ன பழிச்சொல்லா? பேச்சு வழக்குத்தானே…அதற்கொரு வியாக்கியானம் கொடுக்க வேண்டுமா என்ன?

வீட்டுல உங்ககிட்டயும் இப்படித்தான் பேசியிருக்கும் போல…அப்டித்தான் தெரியுது…அம்மா அப்பாட்டப் பேசட்டும்…அது அதோட உரிமை. கண்டிக்கிறதும், கண்டிக்காததும் உங்களோட விருப்பம். நானாயிருந்தா கடுமையாக் கண்டிச்சி பக்குவப்படுத்தியிருப்பேன்……சுண்டியிருப்பேன். அது வேறே விஷயம்…ஆனாலும் இன்னொரு வீட்டுக்கு வாழ்க்கைப் பட்டுப் போற பொண்ணுக்கு இவ்வளவு பேச்சு ஆகவே ஆகாது சார்….வாயின்னா வாயி…அப்படியொரு வாயி…அவன்ட்டயே என்னமாப் பேசுது உங்க பொண்ணு…? கொஞ்சமானும் ஒரு அடக்கம் வேணாம்? வீட்டுல பெரியவங்க இருக்கிறாங்கங்கிற மரியாதை வேணாம்?  நாங்க வாயே திறக்கிறதில்லை. காதுல விழாதமாதிரி இருந்திடுறோம்.  பேசினாத்தானே வம்பு? அவன் பாடு…அவ பாடுன்னு விட்டுட்டோம்…ஆனாலும் எங்க பையன் மனசு சங்கடப்படும்போது எங்களுக்கும் வருத்தமாயிருக்குமா இருக்காதா? கொஞ்சமாச்சும் விட்டுக் கொடுத்துப் பேசாது ஒரு பொண்ணு? இப்டியா எடுத்ததுக்கெல்லாம் குதர்க்கமா அர்த்தம் பண்ணிட்டு, எடுத்தெறிஞ்சு பேசுறது? தன்னைப் புத்திசாலின்னு நினைச்சிக்கிட்டு, அசட்டுத்தனமாப் பேசுறது? ஒரு வேலை வெட்டி செய்றதில்ல…சரி வீட்டு வேலைகள்ல கொஞ்சம் உதவியா இருப்போம்ங்கிற கரிசனம்கூட இல்ல…நாம இப்படி வெட்டியாக் கிடக்கமேங்கிற உறுத்தல கூட இல்ல…எப்படா லீவு முடியும்னு இருக்கு. எதுக்கு இப்படி லாங் லீவு? பின்னாடி டெலிவரின்னு வர்றபோது பயன்படுமே? அதைச் சொன்னா காதுலயே வாங்குறதில்லை. அது என் இஷ்டம்னு மறிச்ச பேச்சு. இதே அளவுக்கு வெளில வாய் கிழியுதான்னு  தெரில….ஆபீஸ்ல இந்த வாய் இருந்திச்சின்னா சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவான்…ஏற்கனவே கான்ட்ராக்ட்ல இருக்கிறவங்கதானே இவங்கல்லாம.   அங்க மட்டும் பொத்திக்கிட்டு இருப்பாங்க போல…ஏன்னா கை நிறைய அள்ளிக் கொடுக்கிறான்ல…? அதனால அங்க வாய் கொள்ளாமப் பேச முடியாதே…? அதான் வீட்டுல பொரிச்சுக் கொட்டுது போல்ருக்கு. அர்த்தமில்லாத கோபங்கள் எங்கயும் மதிக்கப்படுறதில்லை….அது தெரியணும்…ஏ.ஐ. வந்திட்டிருக்கு…இவங்களையெல்லாம் களையெடுக்க. பத்துக்கு மூணுதான் வச்சிப்பான். ஏழு வீட்டுக்குப் போகணும்…நடக்குதா இல்லையான்னு பார்க்கத்தான் போறாங்க..! வேலையில்லாம, வருமானமில்லாம…லோ…லோ…ன்னு அலையப் போறாங்க எல்லாரும்!!!

            சம்பந்தி சம்பந்தம் தனக்கும் இந்தப் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார். இப்படியுமா பிரம்மமாய் இருக்க முடியும்?  அது இவருக்கு எரிச்சலையூட்டியது. சரியான கல்லுளிமங்கன். எப்படியோ வாயாடிப் பெண்ணை நல்ல இடத்திலே தள்ளி விட்டுவிட்டார். கடமை முடிந்தது. இனி அவுங்க பாடு….நமக்கான நமைச்சல் விட்டுது ஒரு வழியா…! இப்படித்தான் நினைத்து மனதுக்குள் களிக்கிறாரோ? நாம்தான் மாட்டிக் கொண்டோமோ? அப்போ அவர் புத்திசாலி…நான் மடையன்…அப்படித்தானே?  நல்லவனாய் இருந்தால் எப்போதும் பிரச்னைதான். நாளும் பொழுதும் இந்தப் பெண்ணோடு பொருதிக் கொண்டிருக்க முடியுமா? காலம் பூராவும் எப்படி வாழப் போகிறான் என் பையன்? மனதுக்குள் துக்கம் முட்டியது விநாயகத்திற்கு.

அவருக்கும் தெரியும் தன் பெண் வாயாடிதான் என்று. எவ்வளவோ சொல்லியாயிற்று…கேட்டால்தானே? பிறவிக் குணத்தை மட்டையை வச்சுக் கட்டினாலும் போகாது என்பார்கள். அது பிறவிக் குணமாய்த் தன் மகளுக்கு அமைந்து போனதாய் சம்பந்தம் சம்பந்தத்தோடு  உணர்ந்திருந்தார். அவர் மனைவி அவரை இந்த வயசிலும் வாங்குகிறாளே? அதே புத்திதானே பெண்ணுக்கும் இருக்கும்? ஒன்றைப் பார்த்து ஒன்று வளர்வதுதான். அதனால்தான் குடும்பங்களில் நேம நிஷ்டைகளைப் பழக்கமாய் வைத்திருக்கிறார்கள். அந்த நியமங்கள் கிரமமாய்க் கடைப்பிடிக்கப்படவில்லையானால் இப்படியெல்லாம்தான் வலித்துக் கொண்டு போய் நிற்கும். எல்லாமும் எதிர்காலத்தில் கோணிக் கொண்டு நிற்கும். இப்போது நமக்கு வந்து விடிந்திருக்கிறது! இது முன் ஜென்ம வினையா அல்லது மூத்தோர் சாபமா?

என்ன பெரிய மகராணியா? சாதாரணக் குடும்பம்தானே? மிடில் கிளாஸ்தானே? பேரழகியா? சுமார் ரகம்தானே? இருநூறு பவுனோடு வந்து இறங்கியிருக்கிறதா? நிமிர்ந்து பேச? வரதட்சணையே பேசவில்லையே? விருப்பப்பட்டதைப் போடுங்கன்னுதானே சொன்னது? எதையும் வற்புறுத்தலையே? எவ்வளவு போட்டீங்கன்னு இன்னிவரைக்கும் ஒரு வார்த்தை கேட்டிருப்பமா? இல்ல பார்த்திருப்பமா? பெரிய அறிவாளிங்கிற நினைப்போ? புத்திசாலின்னு தன்னை நினைச்சிக்குதோ? நினைச்ச நேரம் நினைச்ச கம்பெனிக்கு தன்னிச்சையா முயற்சி பண்ணி ஆபீஸ் மாறிக்கிற தனித் திறமையாச்சும் உண்டா? எதுவுமே இல்லாத சராசரியா இருந்திட்டு என்ன கர்வமான பேச்சு? சினிமா பார்க்க, கண்ட பொருட்களை வாங்கிக் குவிக்க, ஓட்டல்ல போய் கண்டதையும் தின்னுட்டு வயித்தையும் வாயையும் கெடுத்துக்க? இதுதானே தெரியும்? ஏண்டா பொழுது விடியுதுன்னு இருக்கு வீட்டுல? எப்பப் பார்த்தாலும் கர்ரு…புர்ருன்னு இருந்திட்டிருந்தா? என்னத்தையோ பண்ணித் தொலைச்சிட்டுப் போகட்டும்னு ஒதுங்கி இருந்தா பொழுது பொழுதாக் கலகமிழுத்தா என்னதான் பண்றது? பெண்ணா, தாடகையா? மனசுக்குள் புழுங்கி நின்றார் விநாயகன்.

கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்…எல்லாம் சரியாப் போயிடும்…எங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க…என்றார் சம்பந்தம்.  இப்படித் துக்க சம்பந்தமில்லாமப் பதில் பேசுறதுனாலதான் சம்பந்தம்னு பேர் வச்சிருக்காங்க போல்ருக்கு! நினைத்துக் கொண்டார் விநாயகன். ஆனால் ஒன்று அவுங்க தனிக்குடித்தனம் இருக்கட்டுமே…விட்ருலாமே…என்ற வார்த்தை இன்றுவரை வந்ததில்லை. அவர் எப்படிச் சொல்வார். சொன்னால் அது தன் பெண் தன் மூலமாகச் சொல்வதாகத்தானே அர்த்தப்படும்? அதோடு அவரே அவர் பையனோடுதானே இருக்கிறார். தனிக்குடித்தனமா வைத்திருக்கிறார்? வாயைத் திறக்க ஏது வக்கு?

உங்க பொண்ணுக்கு வேணுங்கிறத எடுத்துச் சொல்லுங்க சார்….எங்கள அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றீங்க? என்ன அசட்டுப் பேச்சு இது? அட்ஜஸ்ட் பண்ணிட்டு நிக்குறதுனாலதான் உங்க பொண்ணு எங்க வீட்ல நீட்டிக்குதுன்னு எடுத்த எடுப்புல சொன்னேன்…அதுக்குள்ளயும் மறந்திட்டீங்களா? அதப் புரிஞ்சிக்கலையா நீங்க? புகுந்த வீட்டுல எப்டி நடந்துக்கணும்னு பக்குவமா எடுத்துச் சொல்லுங்க…புத்திமதி சொல்லி அனுப்புங்க…அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்லுங்க…அஞ்சுல விளையாதது எங்க அம்பதுல விளையப் போகுது…? எல்லாம் லிபி…! சாதாரணமா கோபதாமில்லாம இருக்கச் சொல்லுங்க…எங்க கூட முகம் கொடுத்துக் கூடப் பேச வேண்டாம்…அவ வேலை அவளுக்கு…எங்க வேலை எங்களுக்கு..அப்டி இருந்தாக் கூடப் போதும்..வீடு நிம்மதியா இருக்கணும்… அதான் எங்களுக்கு வேணும்…பொழுதுக்கும் போர்க்களம் மாதிரி இருந்தா என்ன அர்த்தம்?  வீடுங்கிறது ஒரு கோயில் மாதிரி…நாங்க அப்படித்தான் வச்சிருக்கோம். அதைச் சுடுகாடா ஆக்கப் பார்க்கலாமா?

            நியமங்கள் என்று எதுவுமில்லாத குடும்பம்தானோ என்று இவருக்குத் தோன்றியது. அந்தப் பெண் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டு இவர் பார்த்ததேயில்லை. அதென்ன சிறு கீற்றுப் போல ஒரு ஒட்டுப் பொட்டு? அது இருக்கா இல்லையா என்பதுபோல் உன்னிப்பாய்ப் பார்த்தும் புலப்படவில்லையே? அதுதான் ஃபேஷனாம்…! அப்படியும் ஒரு பொட்டு தயாரித்து விற்கிறார்களா என்ன? பார்க்க அமையும் வேளைகளிலெல்லாமும் பாழ் நெற்றியாகவே இவருக்குத் தோன்றுகிறது. எதையுமே அவன் சொல்ல மாட்டானா? ராத்திரிப் படுக்கைக்குப் போட்டுக் கொள்ளும் நைட்டியை நாள் முழுதுமா போட்டுக் கொண்டு அலைவார்கள்? உள்ளே சுதந்திரமாய் இருக்கட்டும் என்று காற்றாட விட்டால்…பார்க்கும் கண்களெல்லாம் வெறிக்காதா? குனிந்த தலை நிமிராமல், அறையை விட்டு வெளியே வராமல் பதுங்கிக் கிடக்கிறார் இவர். அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்க்க இவர்தான் கூச்சப்படுகிறார்.  என்னே காலக் கொடுமை?

            எதிர் வீடு, பக்கத்து வீடு என்று குப்பை போட வருபவர்களெல்லாமும் இப்படித்தான் அலைகிறார்கள். எவன் வரித்தான் இந்த உடையை? குப்பை வண்டிக்காரனே நிமிர்ந்து முகம் பார்க்கக் கூசுகிறான்? அதை இவர்கள் உணரவில்லையா? அல்லது இந்தத் தலைமுறை இப்படித்தான் இருக்கும் என்று அவனுக்கும், அவர்களுக்கும், ஏன் இந்த உலகத்துக்கே பழகி விட்டதா? நாள் முழுக்க நைட்டியிலேயேவா அலைவார்கள்? வீட்டில் பெரியவர்கள், மூத்த தலைமுறையினர் இருக்கும் இடத்தில் இது முறையான உடைதானா? அவர்களைத்தான் மதிப்பதேயில்லையே? அப்புறம் என்ன உடை அணிந்தால்தான் என்ன? மத்தளம் மாதிரி, கதகளி டிரஸ்ஸா இது?   அவனும் சொல்லிச் சொல்லிப் பார்த்து ஓய்ந்துதான் போனான். எப்படியோதொலையட்டும்…..!தறுதலைங்க…வாயில் என்னமாய்த்தான் வருகிறது?

              

மனதில் அடுக்கடுக்காக என்னனென்னவோ தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது. மூன்று தங்கைகளோடு வளர்ந்த  தான் தன் சகோதரிகளிடம் இப்படி ஏதும் பார்த்ததேயில்லையே? பம்பரமாய் அல்லவா வீட்டு வேலைகளைச் செய்வார்கள்? சமையலாகட்டும், பற்றுப் பாத்திரம் தேய்த்து அடுக்குவதாய் இருக்கட்டும், துணி மணிகள் மடித்து வைப்பதாய் இருக்கட்டும், வீடு பெருக்கிச் சுத்தம் செய்வதாய் இருக்கட்டும்..குடும்பச் செலவுகளைக் கவனிப்பதாய் இருக்கட்டும்…சேமிப்பாய் இருக்கட்டும்…எல்லாவற்றையும் தன் தாயார் எப்படிக் கச்சிதமாய்க் கற்றுக் கொடுத்து  புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்? ஒரு குற்றங் குறை உண்டா இன்றுவரை? மொத்தக் குடும்பமுமே தன் கையில் என்றல்லவா பெருமையோடு சுமக்கிறார்கள்?அதில் சில அம்சங்கள் கூட இந்தப் பெண்ணிடம் காணப்படவில்லையே?  சாப்பிட உட்கார்ந்தால் ஒரு மணி நேரம். குளிக்கப் போனால் ஒரு மணி நேரம்…(தினமும் குளிக்கிறதா?) தூங்கிவிட்டால் காலை பத்து பத்தரை அல்லது பதினொண்ணு…என்னதான் விளங்கும்? பெற்றவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டாமா? இப்படியா ஒரு பெண்ணைப் பொருத்தமின்றி வளர்த்து ஆளாக்குவது?

காலை டிபனை அதுபாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டுத் திரிகிறதே…பிறகுதான் குளியலா? சாயங்காலம் நாலு மணிக்கு மேல் குளித்தால் என்ன அர்த்தம்? அப்படியென்றால் மதியச் சாப்பாட்டையும் உள்ளே தள்ளிவிட்டு, அது ஜீரணித்தும் ஜீரணிக்காமல்  இதென்ன ரெண்டும் கெட்டான் குளியல்? இதற்கெல்லாம் கூடவா அவர்கள் வீட்டில் பழக்கவில்லை? உடல் ஆரோக்கியம் என்பதே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பழக்க வழக்கமாயன்றோ இருக்கிறது? இவருக்குப் பலதையும் நினைக்க நினைக்க தன் மேல்தான் கோபம் பொங்கியது. ஆட்காட்டி விரலைத் தன்னை நோக்கித் திருப்பிக் கொண்டு தன்னையே மிகக் கடுமையாய் நொந்து கொண்டார் விநாயகம். வயிற்றெரிச்சல் பீறிட்டது அவரிடம்.

கொஞ்சம் பின்னால போயிட்டு வர்றேன் என்று சம்பந்தம் எழுந்து சென்றிருந்த நேரம் அது. தான் பேசிய பேச்சில் வயிற்றைக் கலக்கி விட்டதோ என்னவோ? அந்தம்மாள் அறையை விட்டு வெளியே தலை காட்ட வில்லை. எல்லாரும் திட்டமிட்டுத்தான் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாடு முடிந்தது சுபமாய். வலையில் மாட்டிக் கொண்டு தன் குடும்பம்தான்….சீரழிகிறது.

            கண்ண மூடிட்டுக் கல்யாணம் பண்ணினியா..மடப்பயலே? புத்தியச் செலுத்தி எல்லாத்தையும் கவனிக்க மாட்டியா? ஃபேமிலி நல்லபடியான்னு தோணிச்சின்னா உடனே ஓகே பண்ணிடுவியா? அந்தப் பொண்ணு எப்படி? அதோட பேச்சு எப்படி? பொறுப்பான நடத்தை எப்படி? ன்னு எதையுமா கவனிக்க மாட்டே? குருடா நீ? உனக்குச்   சங்கடமாயிருந்தா உன் மனையாள்ட்டச் சொல்லி இதையெல்லாம் கவனிக்கச் சொல்லியிருக்கலாம்தானே? அதுக்குமா அறிவில்ல? உனக்கே ஒண்ணும் தெரியாதுன்னா சகோதராள் யாரையாச்சும் கூடக் கூட்டிட்டுப் போகலாமுல்ல? அதுக்குமா யோசனை போகலை?  ஆயிரம் காலத்துப் பயிருடா நாயே…! கோழி அமுக்கிறமாதிரியா பொண்ணை அமுக்குவ? உன் பையன் ஓகே சொல்லிட்டான்னா உடனே முடிச்சிடுவியா? அவன் வயசுக்கு, அவன் கண்ணுக்கு எல்லாம் பிரமாதமாத்தான்டா தெரியும்…அதுக்குத்தான பெரியவங்களாப் பார்த்து முடிவு பண்ணனும்னு சொல்றது?  நீயும் கோட்டை விட்டேன்னா?

            கோட்டை விட்டு விட்டதாகத்தான் உணர்ந்தார் விநாயகன். இனி என்னதான் செய்வது? இருப்பதைக் கொண்டு ஓட்ட வேண்டியதுதான். சொல்லிச் சொல்லி மாற்ற வேண்டியதுதான். எதிர்த்துப் பேசினால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  நாளும் பொழுதும் சண்டை என்றால் போட வேண்டியதுதான். என்றாவது ஒரு நாள் ஆடி ஓயாமலா போகும்? ஒன்று அது ஓயணும். அல்லது நாம ஓயணும்…இருக்கிற இருப்பைப் பார்த்தா நாமதான் ஓய்ஞ்சு போவோம் போல்ருக்கு…! அது ஓயற மாதிரித் தெரில. காரணம் வயசு அப்படி. எல்லாத்தையும் முற்போக்காப் பார்க்குறாங்களாம். பாழாப் போன முற்போக்கு? அது என்ன எழவு முற்போக்கோ? பொம்பளைங்களுக்கு சுதந்திரம்னு பேச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சானுங்க..எல்லாமும் பாழாத்தான் போச்சு…டிரஸ் கோடு முதற்கொண்டு சப்ஜாடா எல்லாமும் மாறிப் போச்சு. அதுக நெளிக்கிற நெளிப்பப் பார்த்தா எந்த ஆம்பளைதான் சும்மாப் போவான்? சுத்த சந்நியாசி கூட ஒருவாட்டி திரும்பித்தானே பார்ப்பான்? ஊரும் உலகமும் துள்ளிக்கிட்டுத் திரியுது. கைகோர்த்து அலையுது…ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம ஆட்டம் போடுதுக…இந்த லட்சணத்துல நம்ம வீட்டுப் பிள்ளைய நாம எப்படித் திருத்தறதுன்னு யோசிச்சா தீர்வு புலப்படவா போகுது? பலவாறு யோசித்து யோசித்து மண்டை காய்ஞ்சுதான் போனார் விநாயகன். தனக்கே பைத்தியம் பிடித்து விடுமோ என்கிற அச்சம் வந்து விட்டது அவருக்கு.

            என்ன சார்…நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டேயிருக்கேன்…நீங்க எதுவும் சம்பந்தமேயில்லைங்கிறாப்ல உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? – சற்றுக் கோபமாகவே கேட்டார் விநாயகன்.

            என்னத்தச் சொல்லச் சொல்றீங்க…? என்றார் அவர். தன் பெண்ணைப் பற்றித் தெரிந்த கதைதானே? இதுநாள்வரை நாம் அனுபவித்தோம். இப்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள்…இந்தப் பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளாமல் விடுமா? -

            எல்லாம் பக்குவமா நடந்துப்பா…நாளாக நாளாக எல்லாம் சரியாப் போயிடும்…இந்தக் காப்பியைக் குடிங்க முதல்ல…. – சொல்லிக்கொண்டே சம்பந்தியம்மா அமிர்தம் வந்து நிற்க…

            நாள்தான் ஆயிட்டிருக்கு….ஒண்ணும் சரியாகுறாப்புல இல்லை….தினசரி ஏதாவது பிரச்னை….பொழுது விடிஞ்சு பொழுது போனா இவுங்க தலவலி பெரிய தலவலியாப் போச்சு….வர வர அவன் வீட்டுக்கே வர்றதில்லை. ஆபீஸ்ல வேலை ஜாஸ்தின்னு அங்கயே தங்கிடுறான்…எங்க பையன் ரொம்ப சாஃப்ட் நேச்சர்….அவனுக்குக் குதர்க்கமாப் பேசுறது, எடுத்தெறிஞ்சு பேசறது…ஏன்…கத்திப் பேசறதுங்கிறதே தெரியாது….அவனுக்குப் போயி இப்படி அமைஞ்சு போச்சேன்னு எங்களுக்கு அவ்வளவு வருத்தமாயிருக்கு…மன வேதனை தாங்க முடியல்லே..

            வருத்தப் படாதீங்க சார்…நான் பக்குவமாச் சொல்றேன்…நல்லபடியா நடந்துப்பா…எல்லாம் சரியாயிடும்…. – சமாதானமாகவே சொன்னார் சம்பந்தம். கூடவே கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க…எல்லாம் நல்லபடி சொல்லி அனுப்பறேன்…என்றார். பட்டென்று வாயில் வந்தது விநாயகனுக்கு…

            எதுக்கு உங்க வீட்டுக்கு அனுப்பச் சொல்றீங்க? அதான் தெனமும் பேசிட்டிருக்கீங்களே…? என்றார் விநாயகம்.

            இதை சம்பந்தம் எதிர்பார்க்கவில்லைதான். ஆடிப் போனார் என்பது தெரிந்தது. குனிந்த தலை நிமிரவில்லை.  விநாயகம் தொடர்ந்தார்.

            ஏன் சார்…இது கூட நீங்க சொல்ல மாட்டீங்களா? இப்டி உங்க புகுந்த வீட்டுல நடக்கிற அன்றாட விஷயங்களையெல்லாம் நீ இப்படி தினமும் என்கிட்டயும், அம்மாகிட்டயும்னு வெளில சொல்லக் கூடாதும்மா…உங்க வீட்டுல நடக்கிறது உங்க வீட்டோட இருக்கணும்…புகார் மாதிரி அன்றாடம் இப்டியெல்லாம் பேசக் கூடாது. அது தப்புன்னு சொல்ல வேண்டாமா நீங்க? நாலு சுவத்துக்குள்ள நடக்கிறது வெளில போகக் கூடாதுன்னு  எடுத்துச் சொல்லத் தெரியாதா உங்களுக்கு? அதென்ன மணிக்கணக்கா உங்ககிட்டத் தவறாம தெனமும் பேசுறது? அதுவே எங்களுக்குப் பிடிக்கலை. நாங்க எதுவும் சொல்றதில்லைதான். சொன்னாச் சொல்லிக்கட்டும்,..என்ன குடியா முழுகுன்னு விட்ருவோம். அவன் சங்கடப்படுறான்ல….? நான் ஒண்ணு சொல்லட்டுமா…முதல் இதைக் கட் பண்ணுங்க…எல்லாம் சரியாப் போயிடும்…ஒத்த வார்த்தை உங்க வீட்டைப் பத்தி எங்க காதுக்கு வரக்கூடாதுன்னு கண்டிஷன் போடுங்க…இனிமே அந்த வீடுதான் உன் வீடு  இது இல்லன்னு புத்தில உறைக்கிறமாதிரி சுளீர்னு ஒண்ணு போடுங்க…படிப்படியா சரியாகுதா இல்லையா பாருங்க…? நீங்க என்ன அறிவுரை சொல்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா நாளுக்கு நாள் பேயாட்டம் அதிகமாத்தான் ஆகுது…குறையலை..மொத்தத்துல எங்களுக்கு மன நிம்மதி அறவே போச்சு….. – சொல்லி நிறுத்தினார் விநாயகம்.  கண்களில் நீர் திரண்டிருந்ததை பகிரங்கமாகவே துடைத்துக் கொண்டார்.

            ஒன்றே ஒன்று பாக்கி என்று தோன்றியது. அதையும் சொல்லி முடித்தார். பிறகுதான் மனது ஆறுதல்பட்டது. அதுதான் ஆரம்பித்த முதல் பேச்சு. நாங்க நல்லவங்களா அமைஞ்சு போனோம். அதுதான் நீங்களும் உங்க பொண்ணும் பண்ணின அதிர்ஷ்டம்.  இல்லன்னா உங்க பொண்ணு பாடு திண்டாட்டம்தான். என்னைக்கோ வாழாவெட்டியாத் திரும்பி வந்திருக்கும்…

            ஒத்துக்கிறேன் சார்….மனப்பூர்வமா ஒத்துக்கிறேன்…ஒரேயொரு விண்ணப்பம்…ஒரு மாசத்துக்கு அவ எங்க வீட்ல வந்து இருக்கட்டும்…பிறகு என்ன மாதிரி எம் பொண்ணு மாறியிருக்குன்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இது என்னோட பணிவான ரெக்வெஸ்ட்…தயவுசெய்து இதை மட்டும் உடனடியா செய்யுங்க….

            சம்பந்தம் இப்பொழுதுதான் முழு சம்பந்தத்தோடு பேசியதாய் விநாயகத்திற்குத் தோன்றியது. அன்று மாலையே அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார். காலம் எல்லாவற்றையும் மாற்றிப்போடும் என்கிற நம்பிக்கை. நல்லதே நடக்கட்டுமே..வேண்டாமென்றா மறுக்க முடியும்? அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதானே?

            ஆனால் ஒன்று. அதற்குள் தன் பெண்ணிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருந்தார் சம்பந்தம். சூட்கேஸைத் தயார் பண்ணிக்கொண்டு நந்தினி கிளம்பிய வேகம் இவரை வியக்க வைத்தது. கொக்கு மீனுக்குக் காத்திருந்ததுபோல், காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல்…இதையும் பேசி வைத்துக் கொண்டுதான் செய்கிறார்களோ? இந்தக் கோணல் புத்தி என்னிக்கு இவங்களை விட்டுப் போகும்?  .

                                                            ----------------------------------