01 அக்டோபர் 2025

 

சிறுகதை பிரசுரம் - தினமணி கதிர் 28.09.2025

“பட்ட கடன்”




            ங்க பொண்ணு எங்க வீட்டைத் தவிர வேறே எங்கே வாழ்க்கைப் பட்டிருந்தாலும் இந்நேரம் உங்க வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கும்…- கடும் கோபத்தில்தான் இப்படிப் பேசினார் விநாயகன். இதைச் சொல்ல வேண்டுமென்று வெகு நாளாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார் அவர். எடுபடுகிறதோ இல்லையோ, சொல்லியே ஆக வேண்டும் என்று மனம் உறுதிப்பட்டிருந்தது. அந்தளவுக்கான ஆதங்கம் அவரைத் தாக்கியிருந்தது.

வெளிப்படையாச் சொல்லணும்னா உங்க பொண்ணு வந்த பின்னாடி எங்க வீட்ல நிம்மதிங்கிறது இல்லாமப் போயிடிச்சு…அதான் உண்மை…என்று ஒரு போடு போட்டார்.

அதிர்ந்து போனார் சம்பந்தம். இப்படியான நேரடித் தாக்குதல் வரும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. எதிர்கொள்ள முடியாமல் தவித்தார். இறுகிப் போய் உட்கார்ந்திருந்தார். ஆடிப்போனார் என்றுதான் சொல்ல வேண்டும். மனுஷன் பட்டுப் பட்டுன்னுல்ல பேசுறாரு?

பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்னையாகத்தான் இருந்தது விநாயகம் வீட்டில்.. இப்படியா ஒரு பெண்ணை வளர்த்திருப்பார்கள்? எதைச் சொன்னாலும், எதைப் பேசினாலும் குத்தமாகவே எடுத்துக் கொண்டால்? எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டேயிருந்தால்? கேப்பேன்…கேள்வி கேப்பேன்..கேட்கணும்…அது என் உரிமை…என்று அச்சுப் பிச்சு என எதையாவது நினைத்துக் கொண்டு சண்டைக்கு சதிராய் நின்றால்?  புத்திசாலி என்று தன்னைத்தானே வரித்துக் கொண்டு ஏறுக்கு மாறாய்த் தொட்டதற்கெல்லாம் பேசிக் கொண்டிருந்தால்?

            விநாயகத்திற்கு வீடே  நரகமாய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும், நம் வாழ்க்கை மீதியை நாம் தனியே இருந்து வாழ்ந்து கழிப்போம் என்று எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தார் மிருணாளினியிடம்.  கேட்டால்தானே? அதனால்தான் இப்போது நிம்மதியில்லை.  நான் என் பையனோடுதான் இருப்பேன் என்கிறாள்.  சரி என்று இவரும் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். இம்புட்டு வயசுக்கு மேல் தனியே போய் சமைச்சு சாப்பிட்டுக் கொண்டு இருந்து அல்லல் படணும் என்ற தலையெழுத்தா என்ன? எல்லாக் கடமைகளையும் முறையே முடித்தவனுக்கு எவனும் ஒரு வார்த்தை தப்பாய்க் கேட்க முடியாதவருக்கு கடைசிக் காலத்தில் தனியே போய் இருந்து கழிக்க வேண்டும் என்று எந்த விதியில் சொல்லியிருக்கிறது? பலன் கருதாத கடமைதான். ஆனாலும் ஆதரவற்றிருப்பது எந்த வினையைச் சார்ந்தது? தனியே இருப்பதிலும் ஒரு ருசி இருக்கிறதுதான். அமைதியும், தனிமையுமான மகிமையே தனிதான். ஆனால் ஒவ்வொரு இரவிலும் அது பயமுறுத்துகிறதே?

            உங்களை யாரு போகச் சொன்னாங்க? இங்கயே இருங்கன்னுதானே சொல்றது? – அவளின் ஆதரவான பதில்தான் இவரை இருத்தி வைத்திருக்கிறது. பையனுக்கும் கேட்பதுபோல்தான் சொன்னாள். ஏன் நந்தினிக்கும் கேட்கத்தான் செய்தது. இந்த வீட்லருந்து எங்களை யாரும் அசைக்க முடியாதாக்கும் என்கிற பிரேரணை அது.

அவரும் அவளுக்கு ஆதரவுதானே? ஒருவருக்கொருவர் கடைசி காலத் துணை. தெம்பு இருக்கும் வரை உழைக்க வேண்டும். பையனுக்கு உதவியாய் இருந்து விட்டுப் போவோம் என்று தொடர்ந்தால், இந்தப் பெண்ணின் ஆர்ப்பாட்டங்கள் தாங்க முடியவில்லையே? வீட்டின் அமைதியே காணாமல்தான் போனது.

இத்தனைக்கும் துரும்பை நகர்த்துவதில்லை. காலை படுக்கைத் துயிலெழுவதே பத்து மணி ஏதும் சொல்வதில்லை. என்னவோ பண்ணிக்கட்டும்…வீட்ல சண்டை இல்லாம இருந்தாச் சரி…என்று விட்டாயிற்று.தலைமுறை மாறிவிட்டதாம். பகல்ல தூங்கி ராத்திரி முழிக்கிற பரம்பரை போல்ருக்கு…நினைத்துக் கொண்டார்.

கொஞ்சமேனும் மனசாட்சி வேண்டாம்? பிறந்த வீட்டில், கல்யாணத்திற்கு முன் இருந்தது போலவா புகுந்த வீட்டிலும் இருப்பது? வெட்கமாயில்லை? இந்த லட்சணம் தெரிந்த அந்த மனுஷனும் கண்டு கொள்ளாமல் திரிகிறானே? எடுத்துச் சொல்ல மாட்டான்? இவன் என்ன அப்பன்? அப்பனையும் ஆத்தாளையும் மிஞ்சிய பெண்ணா இவள்? இது தெரியாமல்தான் கல்யாணம் பண்ணினமா? கூடவே இருந்து அன்றாட நடவடிக்கைகளையெல்லாம் கவனித்து,  திருப்தி வந்து திருமண நிச்சயம் பண்ண வேண்டுமெனில் அது சாத்தியமா? பெண் பார்க்கப் போன இடத்தில் நாலு நாள் இருந்திட்டுப் போறேன் என்று உட்கார முடியுமா? எல்லாம் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் முடிந்து போயிற்று. இனி என்ன செய்வது? கட்டியழ வேண்டியதுதான். உன்னால நான் கெட்டேன்…என்னால நீ கெட்டே!!! நம்மால் அவர்கள் கெடவில்லை. அதுதான் சத்தியம். ஒரு பிடுங்கலைக் கழற்றிவிட்ட நிம்மதி. தன் பெண்ணைப்பற்றி அறியாதவர்களா அவர்கள்?  

பையன் மனதுக்குள் எப்படியெல்லாம் புழுங்குகிறானோ? அவன் அவளோடு…அதாவது தன் பெண்டாட்டியோடு பேசுவதேயில்லை. அவள் ஏதாவது சொன்னால்…. ம்ம்… என்று ஒரு புன்னகை. அல்லது ஓகே…ஓகே…என்று ஒரு சின்ன வார்த்தை. அதையும் அவள் முகத்தைப் பார்த்துச் சொல்வதில்லை. அந்த முகத்தில் ஏதேனும் ஒரு சுமுகம் இருந்தால்தானே? எப்போதும் கடு கடுவென்றே வெடிப்பது போல் தென்பட்டால்? என்ன பெரிய…மகராணி என்ற நினைப்போ? ராஜ பரம்பரையா? சாதாரண லோயர் மிடில் கிளாஸ் குடும்பம்தானே? ஒரு பெண்ணை இப்படியா வளர்ப்பது தத்தாரியாய்? பொறுப்புணர்ச்சி என்பது கொஞ்சமாவது வேண்டாமா?

            எப்பப் பார்த்தாலும் அதென்ன கடு கடுன்னு? எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாப்பில…? முகத்தை இனிமையாவே…சிரிச்ச முகமாவே வச்சிக்கத் தெரியாதா? மனசுக்குள்ள ஆங்காரம் ஓடிட்டேயிருக்குமோ? எங்க யாரையும் பார்க்கவே பிடிக்கலையா? பேசவே பிடிக்கலையா? புகுந்த இடத்தை பிடிச்ச மாதிரி ஆக்கிக்கிறதுதானே பொண்ணுக்கழகு?  இங்கென்ன குறைச்சல் உனக்கு? நல்லா மூணு வேளையும் மூக்குப் பிடிக்கத் தின்னுப்புட்டு  திங்கு திங்குன்னு கிடக்கியே? அது போதாதா? வாய் மட்டும் ஒன்றரை முழத்துக்குக் கிழியுது? வாயை அடக்கு…பேச்சைக் குறை….வயசு மட்டும் கழுதமாதிரி ஆகிப் புண்ணியமில்லை. மனுஷாளுக்கு அதுக்கேத்த பக்குவம் வேணுமாக்கும்… எதைப் பேசணும், எதைப் பேசக் கூடாதுங்கிற வாயடக்கம் வேணும் பொம்பளைக்கு…வீட்டுல சதா சர்வகாலமும் கலகத்தை உண்டு பண்ணிட்டிருந்தே அப்புறம் உன் பொழப்பு நாறிப் போகுமாக்கும்…நான் என்ன செய்வேன்னு உனக்குத் தெரியாது. செய்ய வேண்டியதைச் செய்திடுவேன். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்….-அபாரமாய் மிரட்டி வைத்திருந்தான் ராஜன். அத்தனையும் அந்தப் பெண்ணுக்குத் தேவை என்றுதான் தோன்றியது இவர்களுக்கு. புகுந்த வீட்டில் உள்ளவர்கள்தான் இனி நமக்கு ஆதரவு, இங்குதான் இனி நம் மீதி வாழ்க்கை  என்கிற நல்லெண்ணம், புரிதல் வேண்டாமா? எண்ணி எண்ணி மறுகினார் விநாயகன்.

            இவன் பேசும் அத்தனையும் மறு நிமிஷம் அவள் அப்பனுக்குப் போய்விடும். அந்தாள் ஏன் எதுவும் கேட்பதில்லை? தன் பெண்ணின் லட்சணம் தெரிந்து இருக்கிறான் போலும்? இத்தனை நாள் நாம அனுபவிச்சோம்…இப்ப அவுங்க அனுபவிக்கிறாங்க…! மனசுல நினைச்சிப்பானோ? கமுக்கமாய் இருப்பதும் காரியார்த்தம்தானே?

தன் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக் கொண்டார். பையன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமோ என்று மனதுக்குள் புழுங்கி அழுதார். எண்ணி எண்ணி மறுகினார். அவசரப்பட்டு விட்டோம்…இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகலாம். இருபத்தஞ்சுதானே? எல்லாம் போச்சு. மாயமாய் மறைந்து விட்டது அத்தனை யோசனைகளும். அதுதான் விதியோ? பிடிச்சிருக்குப்பா….முடிச்சிரு….என்று அவன் சொன்ன வார்த்தைகள் பெரிய பாரத்தை இறக்கி விட்டது போல் ஆகிப் போனது. யப்பாடா…ஒரு பெரிய பொறுப்பு விட்டது! என்கிற ஆசுவாசம். அதுவே மற்ற எல்லாவற்றையும் கண்களுக்கு மறைத்து விட்டது. மாய தந்திரம் செய்து விட்டது. நமக்கேத்த குடும்பம் இதான்…முடிச்சிற வேண்டிதான்…என்று மனசு முடி போட்டுக் கொண்டது.

சம்பந்தியின் தாய் தந்தையரைப் பார்த்தவேளையில் தன் குடும்பச் சொந்தங்களை எங்கெங்கோ சந்தித்து அளவளாவி மகிழ்ந்த திருப்தி ஏற்பட்டது மனதுக்கு. அதுவே பெண்ணின் தாய் தந்தையரின் இருப்பையும், வளர்ப்பையும் மறைத்து விட்டது. எல்லாம் சரியாயிருக்கும்…கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படும். அது இயற்கைதானே என்று மனம் சமாதானம் செய்து கொண்டது. இப்பொழுதும் மனம் முழுக்கத் தளர்ந்து விடவில்லைதான். இன்னும் நம்பிக்கையிருக்கத்தான் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போடும் என்கிற அனுபவச் சித்தம். சக்கரம் சுழலும். சங்கடம் மறையும்…என்கிற சமாதானம். ஒன்று மாற வேண்டும் அல்லது ஒரே மாதிரியான இருப்பு அலுத்துச் சலிக்க வேண்டும்.  ஆனால் அதன் பின்னணி வெறும் அமைதியாகிப் போகும். எந்த நல்லதுக்கும் கெட்டதுக்கும் கூட வாய் திறக்காது. மௌனம் பரம சுகம்.

            ன்னை எங்கண்ணா எனக்குப் பாந்தமாப் பார்த்து வச்சான். ஆனா என் பையனுக்கு நான் அப்படிப் பார்க்கத் தவறிட்டனோன்னு என் மனசாட்சி என்னைப் போட்டு அரிச்செடுக்குது…..-மனைவி மிருணாளினியிடம் சொல்லி அழுதார் விநாயகன். ஆமாம்…அழத்தான் செய்தார். இதைச் சொன்ன வேளையில் எல்லாம் அவர் கண்களில் நீர் திரண்டது. ஒரு குழந்தையைப் போல் ஓவென்று வாயெடுத்து, சத்தமிட்டு அவள் மடியில் தலை புதைத்து அழுது தீர்க்க வேண்டும்போல்தான் இருந்தது அவருக்கு.

            காரணம் இனி ஒன்றும் செய்ய முடியாதே…! என்கிற எண்ணம்.  அது அவரை வாட்டியது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மணமுறிவா பண்ண முடியும்? அதெல்லாம் நம் குடும்பத்திற்குப் பொருந்துமா? அந்தக் குடும்பத்தையும் அந்த அளவுக்கா துயரப்படுத்துவது? இன்னும் அந்தப் பாவம் வேறு வேண்டுமா? சின்னச் சின்னக் குறைபாடுகள், பொருந்தி வராமை என்று பலவும் இருக்கத்தானே செய்யும்? நாளடைவில் எல்லாம் சரியாகும் என்று பார்த்தால் மேலும் மேலும் கோணிக் கொண்டால் என்னதான் செய்வது?

            அவ தனியா இருக்கணும்னு விரும்புறா போல்ருக்குப்பா…தனிக்குடித்தனம் நடத்துங்க…நாங்க ஊருக்குப் போயிடுறோம்…கறாராய்ச் சொல்லித்தான் பார்த்தார். ராஜன் மறுத்துவிட்டான்.

            இந்த வயசான காலத்துல உங்களைத் தனியா விட நான் தயாராயில்லைப்பா…! என்னோட நீங்க ரெண்டு பேரும் இருக்கணும். இதுக்கு அவ சம்மதம் தேவையில்லை. அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான் அவ பொறுப்பு. மீதி வாழ்க்கை அவளுக்கு இங்கேதான். அதனால நீங்கதான் அவளுக்கு அப்பாவும் அம்மாவும்…இதைக் கொஞ்ச நாள் கழிச்சாவது அவ உணருவான்னு நினைக்கிறேன்…-பையனின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் போனது..

யாரிடமேனும் சொல்லி யோசனைகேட்டால் ஏற்றுக் கொள்வார்களா? நெட்டையோ குட்டையோ…வச்சு வாழணும்…அதுதான் சரி என்பார்கள். எல்லா வீட்டிலும் உள்ளதுதான் என்று ஒத்துப் பாடுவார்கள். நம்ம வீட்டக் கம்பேர் பண்ணும்பொது இது தங்கம்…என்று பாராட்டுவார்கள்.  சொந்தத்தில் ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  காரணம் அம்மாதிரி எதுவும் இதற்கு முன் நடந்ததில்லை. ஒருவருக்கொருவர் சண்டையும் சச்சரவும் நடந்திருக்கிறதுதான். பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பிய கதைகளும் உண்டுதான். ஆனால் பிரிவு என்று வந்ததில்லை. பெரியவர்கள் பாங்காய் எடுத்துச் சொல்லி திரும்பவும் சேர்த்து வைத்ததுதான். அதிகபட்சம் நாலு நாள் தாங்கியதில்லை. எல்லாமும் காலப் போக்கில் சரியாய்த்தானே போயிற்று. சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை நீக்க யாராலும் முடியாது…என்பதுபோல் புருஷன் பெண்டாட்டி சண்டை என்பது அடிக்கடி வந்து போவது. கடந்து செல்வது. ஆனால் அந்தச் சண்டை மாமனார், மாமியார் கூடவும் சேர்ந்து கொண்டு தலையைவிரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது என்பதுதான துரதிருஷ்டம். நம் கொடுப்பினை அவ்வளவுதானோ?

            திருமண வயது என்பது உடற்கூறு சம்பந்தப்பட்டதாகத்தான் நிர்ணயித்திருக்கிறார்கள் போலும்? மனக்கூறு என்ற ஒன்றை நினைத்துப் பார்த்திருப்பார்களா? பொறுமையும், பக்குவமும், சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுத்தலும் மனதளவில் ஊறித் திளைத்திருக்க வேணடாமா? அவைகள் மட்டும் வயதாக ஆக, அடிபட்டு…அடிபட்டு…அனுபவத்தில்தான் கைவரும் என்றால் எப்படி? அப்படியானால் அதுவரை மற்றவர்களெல்லாரும் இவர்களைச் சகித்துக் கொள்ள வேண்டுமா? குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களெல்லாம் காது கேளாத செவிடுகளாய் நடந்து கொள்ள வேண்டுமா? இவளின் அலட்சியங்களை, பொருட்படுத்தாமையை, ஏளனங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?

            எல்லா சகிப்புத் தன்மையும் தன் பையனுக்கும்தான் என்று தோன்றியது இவருக்கு. அவன்தான் அவளின் அவன் புதுப் பொண்டாட்டியின் பேச்சுக்களையெல்லாம், செயல்களையெல்லாம் சகித்துக் கொள்கிறான். யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்தான் என்றாலும், ஒருவர் விட்டுக்கொடுக்க எதிராளியும் நாளடைவில் அதற்குப் பழகிக் கொள்ள வேண்டாமா? இவன் விட்டுக் கொடுக்கிறானா அல்லது விட்டு விலகி விட்டானா? அதனால்தான் வீடு அமைதியாய்ப் போய்க் கொண்டிருக்கிறதோ? அதீத அமைதியும் வேறொன்றை உணர்த்துகிறதே? அப்படி உணர்த்தும் என்றும் தெரிந்தும்தான் வேறுவழி? என்று  நினைத்து அமைதி காக்கிறானோ? – பலவாறு யோசித்து அன்றைய சந்தர்ப்பத்தின் போது அதைக் கேட்டே விட்டார் விநாயகன்.

            பேச்சுன்னாலும் அநியாயப் பேச்சு சார் உங்க பொண்ணுக்கு? ஒரு பொம்பளை இந்தப் பேச்சுப் பேசி நான் எங்கும் பார்த்ததில்லை.கோபத்தில் பொம்பளை என்றே வந்து விட்டது அவருக்கு. கலோக்கியல் லாங்க்வேஜ்…அதை அவர் புரிந்து கொண்டாலும் சரி ..புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி…சொன்னது சொன்னதுதான் என்றிருந்தது இவருக்கு. அதென்ன பழிச்சொல்லா? பேச்சு வழக்குத்தானே…அதற்கொரு வியாக்கியானம் கொடுக்க வேண்டுமா என்ன?

வீட்டுல உங்ககிட்டயும் இப்படித்தான் பேசியிருக்கும் போல…அப்டித்தான் தெரியுது…அம்மா அப்பாட்டப் பேசட்டும்…அது அதோட உரிமை. கண்டிக்கிறதும், கண்டிக்காததும் உங்களோட விருப்பம். நானாயிருந்தா கடுமையாக் கண்டிச்சி பக்குவப்படுத்தியிருப்பேன்……சுண்டியிருப்பேன். அது வேறே விஷயம்…ஆனாலும் இன்னொரு வீட்டுக்கு வாழ்க்கைப் பட்டுப் போற பொண்ணுக்கு இவ்வளவு பேச்சு ஆகவே ஆகாது சார்….வாயின்னா வாயி…அப்படியொரு வாயி…அவன்ட்டயே என்னமாப் பேசுது உங்க பொண்ணு…? கொஞ்சமானும் ஒரு அடக்கம் வேணாம்? வீட்டுல பெரியவங்க இருக்கிறாங்கங்கிற மரியாதை வேணாம்?  நாங்க வாயே திறக்கிறதில்லை. காதுல விழாதமாதிரி இருந்திடுறோம்.  பேசினாத்தானே வம்பு? அவன் பாடு…அவ பாடுன்னு விட்டுட்டோம்…ஆனாலும் எங்க பையன் மனசு சங்கடப்படும்போது எங்களுக்கும் வருத்தமாயிருக்குமா இருக்காதா? கொஞ்சமாச்சும் விட்டுக் கொடுத்துப் பேசாது ஒரு பொண்ணு? இப்டியா எடுத்ததுக்கெல்லாம் குதர்க்கமா அர்த்தம் பண்ணிட்டு, எடுத்தெறிஞ்சு பேசுறது? தன்னைப் புத்திசாலின்னு நினைச்சிக்கிட்டு, அசட்டுத்தனமாப் பேசுறது? ஒரு வேலை வெட்டி செய்றதில்ல…சரி வீட்டு வேலைகள்ல கொஞ்சம் உதவியா இருப்போம்ங்கிற கரிசனம்கூட இல்ல…நாம இப்படி வெட்டியாக் கிடக்கமேங்கிற உறுத்தல கூட இல்ல…எப்படா லீவு முடியும்னு இருக்கு. எதுக்கு இப்படி லாங் லீவு? பின்னாடி டெலிவரின்னு வர்றபோது பயன்படுமே? அதைச் சொன்னா காதுலயே வாங்குறதில்லை. அது என் இஷ்டம்னு மறிச்ச பேச்சு. இதே அளவுக்கு வெளில வாய் கிழியுதான்னு  தெரில….ஆபீஸ்ல இந்த வாய் இருந்திச்சின்னா சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவான்…ஏற்கனவே கான்ட்ராக்ட்ல இருக்கிறவங்கதானே இவங்கல்லாம.   அங்க மட்டும் பொத்திக்கிட்டு இருப்பாங்க போல…ஏன்னா கை நிறைய அள்ளிக் கொடுக்கிறான்ல…? அதனால அங்க வாய் கொள்ளாமப் பேச முடியாதே…? அதான் வீட்டுல பொரிச்சுக் கொட்டுது போல்ருக்கு. அர்த்தமில்லாத கோபங்கள் எங்கயும் மதிக்கப்படுறதில்லை….அது தெரியணும்…ஏ.ஐ. வந்திட்டிருக்கு…இவங்களையெல்லாம் களையெடுக்க. பத்துக்கு மூணுதான் வச்சிப்பான். ஏழு வீட்டுக்குப் போகணும்…நடக்குதா இல்லையான்னு பார்க்கத்தான் போறாங்க..! வேலையில்லாம, வருமானமில்லாம…லோ…லோ…ன்னு அலையப் போறாங்க எல்லாரும்!!!

            சம்பந்தி சம்பந்தம் தனக்கும் இந்தப் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார். இப்படியுமா பிரம்மமாய் இருக்க முடியும்?  அது இவருக்கு எரிச்சலையூட்டியது. சரியான கல்லுளிமங்கன். எப்படியோ வாயாடிப் பெண்ணை நல்ல இடத்திலே தள்ளி விட்டுவிட்டார். கடமை முடிந்தது. இனி அவுங்க பாடு….நமக்கான நமைச்சல் விட்டுது ஒரு வழியா…! இப்படித்தான் நினைத்து மனதுக்குள் களிக்கிறாரோ? நாம்தான் மாட்டிக் கொண்டோமோ? அப்போ அவர் புத்திசாலி…நான் மடையன்…அப்படித்தானே?  நல்லவனாய் இருந்தால் எப்போதும் பிரச்னைதான். நாளும் பொழுதும் இந்தப் பெண்ணோடு பொருதிக் கொண்டிருக்க முடியுமா? காலம் பூராவும் எப்படி வாழப் போகிறான் என் பையன்? மனதுக்குள் துக்கம் முட்டியது விநாயகத்திற்கு.

அவருக்கும் தெரியும் தன் பெண் வாயாடிதான் என்று. எவ்வளவோ சொல்லியாயிற்று…கேட்டால்தானே? பிறவிக் குணத்தை மட்டையை வச்சுக் கட்டினாலும் போகாது என்பார்கள். அது பிறவிக் குணமாய்த் தன் மகளுக்கு அமைந்து போனதாய் சம்பந்தம் சம்பந்தத்தோடு  உணர்ந்திருந்தார். அவர் மனைவி அவரை இந்த வயசிலும் வாங்குகிறாளே? அதே புத்திதானே பெண்ணுக்கும் இருக்கும்? ஒன்றைப் பார்த்து ஒன்று வளர்வதுதான். அதனால்தான் குடும்பங்களில் நேம நிஷ்டைகளைப் பழக்கமாய் வைத்திருக்கிறார்கள். அந்த நியமங்கள் கிரமமாய்க் கடைப்பிடிக்கப்படவில்லையானால் இப்படியெல்லாம்தான் வலித்துக் கொண்டு போய் நிற்கும். எல்லாமும் எதிர்காலத்தில் கோணிக் கொண்டு நிற்கும். இப்போது நமக்கு வந்து விடிந்திருக்கிறது! இது முன் ஜென்ம வினையா அல்லது மூத்தோர் சாபமா?

என்ன பெரிய மகராணியா? சாதாரணக் குடும்பம்தானே? மிடில் கிளாஸ்தானே? பேரழகியா? சுமார் ரகம்தானே? இருநூறு பவுனோடு வந்து இறங்கியிருக்கிறதா? நிமிர்ந்து பேச? வரதட்சணையே பேசவில்லையே? விருப்பப்பட்டதைப் போடுங்கன்னுதானே சொன்னது? எதையும் வற்புறுத்தலையே? எவ்வளவு போட்டீங்கன்னு இன்னிவரைக்கும் ஒரு வார்த்தை கேட்டிருப்பமா? இல்ல பார்த்திருப்பமா? பெரிய அறிவாளிங்கிற நினைப்போ? புத்திசாலின்னு தன்னை நினைச்சிக்குதோ? நினைச்ச நேரம் நினைச்ச கம்பெனிக்கு தன்னிச்சையா முயற்சி பண்ணி ஆபீஸ் மாறிக்கிற தனித் திறமையாச்சும் உண்டா? எதுவுமே இல்லாத சராசரியா இருந்திட்டு என்ன கர்வமான பேச்சு? சினிமா பார்க்க, கண்ட பொருட்களை வாங்கிக் குவிக்க, ஓட்டல்ல போய் கண்டதையும் தின்னுட்டு வயித்தையும் வாயையும் கெடுத்துக்க? இதுதானே தெரியும்? ஏண்டா பொழுது விடியுதுன்னு இருக்கு வீட்டுல? எப்பப் பார்த்தாலும் கர்ரு…புர்ருன்னு இருந்திட்டிருந்தா? என்னத்தையோ பண்ணித் தொலைச்சிட்டுப் போகட்டும்னு ஒதுங்கி இருந்தா பொழுது பொழுதாக் கலகமிழுத்தா என்னதான் பண்றது? பெண்ணா, தாடகையா? மனசுக்குள் புழுங்கி நின்றார் விநாயகன்.

கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்…எல்லாம் சரியாப் போயிடும்…எங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க…என்றார் சம்பந்தம்.  இப்படித் துக்க சம்பந்தமில்லாமப் பதில் பேசுறதுனாலதான் சம்பந்தம்னு பேர் வச்சிருக்காங்க போல்ருக்கு! நினைத்துக் கொண்டார் விநாயகன். ஆனால் ஒன்று அவுங்க தனிக்குடித்தனம் இருக்கட்டுமே…விட்ருலாமே…என்ற வார்த்தை இன்றுவரை வந்ததில்லை. அவர் எப்படிச் சொல்வார். சொன்னால் அது தன் பெண் தன் மூலமாகச் சொல்வதாகத்தானே அர்த்தப்படும்? அதோடு அவரே அவர் பையனோடுதானே இருக்கிறார். தனிக்குடித்தனமா வைத்திருக்கிறார்? வாயைத் திறக்க ஏது வக்கு?

உங்க பொண்ணுக்கு வேணுங்கிறத எடுத்துச் சொல்லுங்க சார்….எங்கள அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றீங்க? என்ன அசட்டுப் பேச்சு இது? அட்ஜஸ்ட் பண்ணிட்டு நிக்குறதுனாலதான் உங்க பொண்ணு எங்க வீட்ல நீட்டிக்குதுன்னு எடுத்த எடுப்புல சொன்னேன்…அதுக்குள்ளயும் மறந்திட்டீங்களா? அதப் புரிஞ்சிக்கலையா நீங்க? புகுந்த வீட்டுல எப்டி நடந்துக்கணும்னு பக்குவமா எடுத்துச் சொல்லுங்க…புத்திமதி சொல்லி அனுப்புங்க…அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்லுங்க…அஞ்சுல விளையாதது எங்க அம்பதுல விளையப் போகுது…? எல்லாம் லிபி…! சாதாரணமா கோபதாமில்லாம இருக்கச் சொல்லுங்க…எங்க கூட முகம் கொடுத்துக் கூடப் பேச வேண்டாம்…அவ வேலை அவளுக்கு…எங்க வேலை எங்களுக்கு..அப்டி இருந்தாக் கூடப் போதும்..வீடு நிம்மதியா இருக்கணும்… அதான் எங்களுக்கு வேணும்…பொழுதுக்கும் போர்க்களம் மாதிரி இருந்தா என்ன அர்த்தம்?  வீடுங்கிறது ஒரு கோயில் மாதிரி…நாங்க அப்படித்தான் வச்சிருக்கோம். அதைச் சுடுகாடா ஆக்கப் பார்க்கலாமா?

            நியமங்கள் என்று எதுவுமில்லாத குடும்பம்தானோ என்று இவருக்குத் தோன்றியது. அந்தப் பெண் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டு இவர் பார்த்ததேயில்லை. அதென்ன சிறு கீற்றுப் போல ஒரு ஒட்டுப் பொட்டு? அது இருக்கா இல்லையா என்பதுபோல் உன்னிப்பாய்ப் பார்த்தும் புலப்படவில்லையே? அதுதான் ஃபேஷனாம்…! அப்படியும் ஒரு பொட்டு தயாரித்து விற்கிறார்களா என்ன? பார்க்க அமையும் வேளைகளிலெல்லாமும் பாழ் நெற்றியாகவே இவருக்குத் தோன்றுகிறது. எதையுமே அவன் சொல்ல மாட்டானா? ராத்திரிப் படுக்கைக்குப் போட்டுக் கொள்ளும் நைட்டியை நாள் முழுதுமா போட்டுக் கொண்டு அலைவார்கள்? உள்ளே சுதந்திரமாய் இருக்கட்டும் என்று காற்றாட விட்டால்…பார்க்கும் கண்களெல்லாம் வெறிக்காதா? குனிந்த தலை நிமிராமல், அறையை விட்டு வெளியே வராமல் பதுங்கிக் கிடக்கிறார் இவர். அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்க்க இவர்தான் கூச்சப்படுகிறார்.  என்னே காலக் கொடுமை?

            எதிர் வீடு, பக்கத்து வீடு என்று குப்பை போட வருபவர்களெல்லாமும் இப்படித்தான் அலைகிறார்கள். எவன் வரித்தான் இந்த உடையை? குப்பை வண்டிக்காரனே நிமிர்ந்து முகம் பார்க்கக் கூசுகிறான்? அதை இவர்கள் உணரவில்லையா? அல்லது இந்தத் தலைமுறை இப்படித்தான் இருக்கும் என்று அவனுக்கும், அவர்களுக்கும், ஏன் இந்த உலகத்துக்கே பழகி விட்டதா? நாள் முழுக்க நைட்டியிலேயேவா அலைவார்கள்? வீட்டில் பெரியவர்கள், மூத்த தலைமுறையினர் இருக்கும் இடத்தில் இது முறையான உடைதானா? அவர்களைத்தான் மதிப்பதேயில்லையே? அப்புறம் என்ன உடை அணிந்தால்தான் என்ன? மத்தளம் மாதிரி, கதகளி டிரஸ்ஸா இது?   அவனும் சொல்லிச் சொல்லிப் பார்த்து ஓய்ந்துதான் போனான். எப்படியோதொலையட்டும்…..!தறுதலைங்க…வாயில் என்னமாய்த்தான் வருகிறது?

              

மனதில் அடுக்கடுக்காக என்னனென்னவோ தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது. மூன்று தங்கைகளோடு வளர்ந்த  தான் தன் சகோதரிகளிடம் இப்படி ஏதும் பார்த்ததேயில்லையே? பம்பரமாய் அல்லவா வீட்டு வேலைகளைச் செய்வார்கள்? சமையலாகட்டும், பற்றுப் பாத்திரம் தேய்த்து அடுக்குவதாய் இருக்கட்டும், துணி மணிகள் மடித்து வைப்பதாய் இருக்கட்டும், வீடு பெருக்கிச் சுத்தம் செய்வதாய் இருக்கட்டும்..குடும்பச் செலவுகளைக் கவனிப்பதாய் இருக்கட்டும்…சேமிப்பாய் இருக்கட்டும்…எல்லாவற்றையும் தன் தாயார் எப்படிக் கச்சிதமாய்க் கற்றுக் கொடுத்து  புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்? ஒரு குற்றங் குறை உண்டா இன்றுவரை? மொத்தக் குடும்பமுமே தன் கையில் என்றல்லவா பெருமையோடு சுமக்கிறார்கள்?அதில் சில அம்சங்கள் கூட இந்தப் பெண்ணிடம் காணப்படவில்லையே?  சாப்பிட உட்கார்ந்தால் ஒரு மணி நேரம். குளிக்கப் போனால் ஒரு மணி நேரம்…(தினமும் குளிக்கிறதா?) தூங்கிவிட்டால் காலை பத்து பத்தரை அல்லது பதினொண்ணு…என்னதான் விளங்கும்? பெற்றவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டாமா? இப்படியா ஒரு பெண்ணைப் பொருத்தமின்றி வளர்த்து ஆளாக்குவது?

காலை டிபனை அதுபாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டுத் திரிகிறதே…பிறகுதான் குளியலா? சாயங்காலம் நாலு மணிக்கு மேல் குளித்தால் என்ன அர்த்தம்? அப்படியென்றால் மதியச் சாப்பாட்டையும் உள்ளே தள்ளிவிட்டு, அது ஜீரணித்தும் ஜீரணிக்காமல்  இதென்ன ரெண்டும் கெட்டான் குளியல்? இதற்கெல்லாம் கூடவா அவர்கள் வீட்டில் பழக்கவில்லை? உடல் ஆரோக்கியம் என்பதே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பழக்க வழக்கமாயன்றோ இருக்கிறது? இவருக்குப் பலதையும் நினைக்க நினைக்க தன் மேல்தான் கோபம் பொங்கியது. ஆட்காட்டி விரலைத் தன்னை நோக்கித் திருப்பிக் கொண்டு தன்னையே மிகக் கடுமையாய் நொந்து கொண்டார் விநாயகம். வயிற்றெரிச்சல் பீறிட்டது அவரிடம்.

கொஞ்சம் பின்னால போயிட்டு வர்றேன் என்று சம்பந்தம் எழுந்து சென்றிருந்த நேரம் அது. தான் பேசிய பேச்சில் வயிற்றைக் கலக்கி விட்டதோ என்னவோ? அந்தம்மாள் அறையை விட்டு வெளியே தலை காட்ட வில்லை. எல்லாரும் திட்டமிட்டுத்தான் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாடு முடிந்தது சுபமாய். வலையில் மாட்டிக் கொண்டு தன் குடும்பம்தான்….சீரழிகிறது.

            கண்ண மூடிட்டுக் கல்யாணம் பண்ணினியா..மடப்பயலே? புத்தியச் செலுத்தி எல்லாத்தையும் கவனிக்க மாட்டியா? ஃபேமிலி நல்லபடியான்னு தோணிச்சின்னா உடனே ஓகே பண்ணிடுவியா? அந்தப் பொண்ணு எப்படி? அதோட பேச்சு எப்படி? பொறுப்பான நடத்தை எப்படி? ன்னு எதையுமா கவனிக்க மாட்டே? குருடா நீ? உனக்குச்   சங்கடமாயிருந்தா உன் மனையாள்ட்டச் சொல்லி இதையெல்லாம் கவனிக்கச் சொல்லியிருக்கலாம்தானே? அதுக்குமா அறிவில்ல? உனக்கே ஒண்ணும் தெரியாதுன்னா சகோதராள் யாரையாச்சும் கூடக் கூட்டிட்டுப் போகலாமுல்ல? அதுக்குமா யோசனை போகலை?  ஆயிரம் காலத்துப் பயிருடா நாயே…! கோழி அமுக்கிறமாதிரியா பொண்ணை அமுக்குவ? உன் பையன் ஓகே சொல்லிட்டான்னா உடனே முடிச்சிடுவியா? அவன் வயசுக்கு, அவன் கண்ணுக்கு எல்லாம் பிரமாதமாத்தான்டா தெரியும்…அதுக்குத்தான பெரியவங்களாப் பார்த்து முடிவு பண்ணனும்னு சொல்றது?  நீயும் கோட்டை விட்டேன்னா?

            கோட்டை விட்டு விட்டதாகத்தான் உணர்ந்தார் விநாயகன். இனி என்னதான் செய்வது? இருப்பதைக் கொண்டு ஓட்ட வேண்டியதுதான். சொல்லிச் சொல்லி மாற்ற வேண்டியதுதான். எதிர்த்துப் பேசினால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  நாளும் பொழுதும் சண்டை என்றால் போட வேண்டியதுதான். என்றாவது ஒரு நாள் ஆடி ஓயாமலா போகும்? ஒன்று அது ஓயணும். அல்லது நாம ஓயணும்…இருக்கிற இருப்பைப் பார்த்தா நாமதான் ஓய்ஞ்சு போவோம் போல்ருக்கு…! அது ஓயற மாதிரித் தெரில. காரணம் வயசு அப்படி. எல்லாத்தையும் முற்போக்காப் பார்க்குறாங்களாம். பாழாப் போன முற்போக்கு? அது என்ன எழவு முற்போக்கோ? பொம்பளைங்களுக்கு சுதந்திரம்னு பேச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சானுங்க..எல்லாமும் பாழாத்தான் போச்சு…டிரஸ் கோடு முதற்கொண்டு சப்ஜாடா எல்லாமும் மாறிப் போச்சு. அதுக நெளிக்கிற நெளிப்பப் பார்த்தா எந்த ஆம்பளைதான் சும்மாப் போவான்? சுத்த சந்நியாசி கூட ஒருவாட்டி திரும்பித்தானே பார்ப்பான்? ஊரும் உலகமும் துள்ளிக்கிட்டுத் திரியுது. கைகோர்த்து அலையுது…ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம ஆட்டம் போடுதுக…இந்த லட்சணத்துல நம்ம வீட்டுப் பிள்ளைய நாம எப்படித் திருத்தறதுன்னு யோசிச்சா தீர்வு புலப்படவா போகுது? பலவாறு யோசித்து யோசித்து மண்டை காய்ஞ்சுதான் போனார் விநாயகன். தனக்கே பைத்தியம் பிடித்து விடுமோ என்கிற அச்சம் வந்து விட்டது அவருக்கு.

            என்ன சார்…நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டேயிருக்கேன்…நீங்க எதுவும் சம்பந்தமேயில்லைங்கிறாப்ல உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? – சற்றுக் கோபமாகவே கேட்டார் விநாயகன்.

            என்னத்தச் சொல்லச் சொல்றீங்க…? என்றார் அவர். தன் பெண்ணைப் பற்றித் தெரிந்த கதைதானே? இதுநாள்வரை நாம் அனுபவித்தோம். இப்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள்…இந்தப் பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளாமல் விடுமா? -

            எல்லாம் பக்குவமா நடந்துப்பா…நாளாக நாளாக எல்லாம் சரியாப் போயிடும்…இந்தக் காப்பியைக் குடிங்க முதல்ல…. – சொல்லிக்கொண்டே சம்பந்தியம்மா அமிர்தம் வந்து நிற்க…

            நாள்தான் ஆயிட்டிருக்கு….ஒண்ணும் சரியாகுறாப்புல இல்லை….தினசரி ஏதாவது பிரச்னை….பொழுது விடிஞ்சு பொழுது போனா இவுங்க தலவலி பெரிய தலவலியாப் போச்சு….வர வர அவன் வீட்டுக்கே வர்றதில்லை. ஆபீஸ்ல வேலை ஜாஸ்தின்னு அங்கயே தங்கிடுறான்…எங்க பையன் ரொம்ப சாஃப்ட் நேச்சர்….அவனுக்குக் குதர்க்கமாப் பேசுறது, எடுத்தெறிஞ்சு பேசறது…ஏன்…கத்திப் பேசறதுங்கிறதே தெரியாது….அவனுக்குப் போயி இப்படி அமைஞ்சு போச்சேன்னு எங்களுக்கு அவ்வளவு வருத்தமாயிருக்கு…மன வேதனை தாங்க முடியல்லே..

            வருத்தப் படாதீங்க சார்…நான் பக்குவமாச் சொல்றேன்…நல்லபடியா நடந்துப்பா…எல்லாம் சரியாயிடும்…. – சமாதானமாகவே சொன்னார் சம்பந்தம். கூடவே கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க…எல்லாம் நல்லபடி சொல்லி அனுப்பறேன்…என்றார். பட்டென்று வாயில் வந்தது விநாயகனுக்கு…

            எதுக்கு உங்க வீட்டுக்கு அனுப்பச் சொல்றீங்க? அதான் தெனமும் பேசிட்டிருக்கீங்களே…? என்றார் விநாயகம்.

            இதை சம்பந்தம் எதிர்பார்க்கவில்லைதான். ஆடிப் போனார் என்பது தெரிந்தது. குனிந்த தலை நிமிரவில்லை.  விநாயகம் தொடர்ந்தார்.

            ஏன் சார்…இது கூட நீங்க சொல்ல மாட்டீங்களா? இப்டி உங்க புகுந்த வீட்டுல நடக்கிற அன்றாட விஷயங்களையெல்லாம் நீ இப்படி தினமும் என்கிட்டயும், அம்மாகிட்டயும்னு வெளில சொல்லக் கூடாதும்மா…உங்க வீட்டுல நடக்கிறது உங்க வீட்டோட இருக்கணும்…புகார் மாதிரி அன்றாடம் இப்டியெல்லாம் பேசக் கூடாது. அது தப்புன்னு சொல்ல வேண்டாமா நீங்க? நாலு சுவத்துக்குள்ள நடக்கிறது வெளில போகக் கூடாதுன்னு  எடுத்துச் சொல்லத் தெரியாதா உங்களுக்கு? அதென்ன மணிக்கணக்கா உங்ககிட்டத் தவறாம தெனமும் பேசுறது? அதுவே எங்களுக்குப் பிடிக்கலை. நாங்க எதுவும் சொல்றதில்லைதான். சொன்னாச் சொல்லிக்கட்டும்,..என்ன குடியா முழுகுன்னு விட்ருவோம். அவன் சங்கடப்படுறான்ல….? நான் ஒண்ணு சொல்லட்டுமா…முதல் இதைக் கட் பண்ணுங்க…எல்லாம் சரியாப் போயிடும்…ஒத்த வார்த்தை உங்க வீட்டைப் பத்தி எங்க காதுக்கு வரக்கூடாதுன்னு கண்டிஷன் போடுங்க…இனிமே அந்த வீடுதான் உன் வீடு  இது இல்லன்னு புத்தில உறைக்கிறமாதிரி சுளீர்னு ஒண்ணு போடுங்க…படிப்படியா சரியாகுதா இல்லையா பாருங்க…? நீங்க என்ன அறிவுரை சொல்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா நாளுக்கு நாள் பேயாட்டம் அதிகமாத்தான் ஆகுது…குறையலை..மொத்தத்துல எங்களுக்கு மன நிம்மதி அறவே போச்சு….. – சொல்லி நிறுத்தினார் விநாயகம்.  கண்களில் நீர் திரண்டிருந்ததை பகிரங்கமாகவே துடைத்துக் கொண்டார்.

            ஒன்றே ஒன்று பாக்கி என்று தோன்றியது. அதையும் சொல்லி முடித்தார். பிறகுதான் மனது ஆறுதல்பட்டது. அதுதான் ஆரம்பித்த முதல் பேச்சு. நாங்க நல்லவங்களா அமைஞ்சு போனோம். அதுதான் நீங்களும் உங்க பொண்ணும் பண்ணின அதிர்ஷ்டம்.  இல்லன்னா உங்க பொண்ணு பாடு திண்டாட்டம்தான். என்னைக்கோ வாழாவெட்டியாத் திரும்பி வந்திருக்கும்…

            ஒத்துக்கிறேன் சார்….மனப்பூர்வமா ஒத்துக்கிறேன்…ஒரேயொரு விண்ணப்பம்…ஒரு மாசத்துக்கு அவ எங்க வீட்ல வந்து இருக்கட்டும்…பிறகு என்ன மாதிரி எம் பொண்ணு மாறியிருக்குன்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இது என்னோட பணிவான ரெக்வெஸ்ட்…தயவுசெய்து இதை மட்டும் உடனடியா செய்யுங்க….

            சம்பந்தம் இப்பொழுதுதான் முழு சம்பந்தத்தோடு பேசியதாய் விநாயகத்திற்குத் தோன்றியது. அன்று மாலையே அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார். காலம் எல்லாவற்றையும் மாற்றிப்போடும் என்கிற நம்பிக்கை. நல்லதே நடக்கட்டுமே..வேண்டாமென்றா மறுக்க முடியும்? அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதானே?

            ஆனால் ஒன்று. அதற்குள் தன் பெண்ணிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருந்தார் சம்பந்தம். சூட்கேஸைத் தயார் பண்ணிக்கொண்டு நந்தினி கிளம்பிய வேகம் இவரை வியக்க வைத்தது. கொக்கு மீனுக்குக் காத்திருந்ததுபோல், காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல்…இதையும் பேசி வைத்துக் கொண்டுதான் செய்கிறார்களோ? இந்தக் கோணல் புத்தி என்னிக்கு இவங்களை விட்டுப் போகும்?  .

                                                            ----------------------------------

 

கருத்துகள் இல்லை: