01 அக்டோபர் 2025

 

வெள்ளோட்டம் - சிறுகதை - தாய் வீடு மாத இதழ் - அக்டோபர் 2025 பிரசுரம்

---------------------------------------------------------------------------------------------------






அப்பாவின் அனத்தல் பொறுக்க மாட்டாமல் ஒரு நாள் பிரபு  கோபமாய்ச் சொன்னான். என்ன இப்படிக் கொதிச்சுட்டான் என்றிருந்தது கருணாகரனுக்கு.  அவன் மறுத்துச் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. மிகுந்த வருத்தமாயிருந்தது.

            இங்கிருந்து கிளம்பினால் இடம் வாங்கி, லோன் போட்டு, வீடு கட்டித்தான் நகருவேம்ப்பா….அப்போ இதை வாடகைக்கு விட்டாப் போதும்…வேறே வாடகை வீடு பார்த்து நாம போய் இருக்கிறாப்ல எல்லாம் ஐடியா இல்ல….-முடிவாய்ச் சொல்லி விட்டான்.

            அப்போதுதான் யோசித்தார் கருணாகரன் தன் தவறை. பெரிய மனதோடு அவன் பெயருக்கு இந்த டபிள் பெட்ரூம் ஃப்ளாட்டை வாங்கினது தப்பு என்று. வாங்கினது கூடத் தப்பில்லைதான் அதைத் தன் பெயரிலேயே பதிவு செய்யாமல் விட்டதுதான் மாபெரும் தவறு என்று நினைத்தார். அதைச் செய்திருந்தால்  இப்போதான தன் விருப்பத்தை சுதந்திரமாய் நிறைவேற்றியிருக்கலாம். யாரும் தடுக்க முடியாது.  அநாவசியக் கஷ்டங்களுக்கு இடமில்லாமல்  போயிருந்திருக்கும். அவன் பெயருக்கு வீடு இருப்பதை மனதில் வைத்து, மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறான். தன் வார்த்தைக்கு மதிப்பில்லை. நல்லது சொன்னால் கேட்க வேண்டாமா? அதென்ன அத்தனை பிடிவாதம்? நான்தான் இருக்கேன்லப்பா…எல்லா உதவியும் செய்றதுக்கு? பிறகென்ன உனக்கு வீடு மாத்தறதுல கஷ்டம்? என்று சொல்லிப் பார்த்தார். அவன் அசைவதாய் இல்லை.

            சென்னைக்கு வந்த பிறகு, அதிலும் அவனுக்குத் திருமணம் ஆனபிறகு அதிகாரம் தன் கையிலிருந்து போய் விட்டாற்போல் உணர்ந்தார் கருணாகரன். இனிமே அவனை “டா“ போட்டுக் கூப்பிடாதீங்க…என்று புதிதாய் ஒருநாள் சொன்னாள் காயத்ரி.  அதிசயமாய் இருந்தது இது. என் பையனுக்கு என்றும் நான் தகப்பன்தானே?அவன நான் எப்படிக் கூப்டா என்ன?  இதிலென்ன தப்பு? இது என் அன்பான உரிமையில்லையா? இதைப் போய்த் தடுக்கிறாளே? என்று எண்ணினார். ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனும் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தபோதுதான் “டா“ வை நிறுத்த வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.  கல்யாணம் ஆகிவிட்டதால் மனைவி முன், தான் “டா” போட்டு அழைக்கப்படுவதை ஒருவேளை அவனே விரும்பவில்லையோ? அல்லது அந்தப் பெண் விரும்பவில்லையா? சரி…விட்டு விடுவோம் என்று நிறுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் அந்த “டா“வில் இருந்த நெருக்கம் சற்றே விலகியது போல்தான் அவரால் உணர முடிந்தது.

            இப்படித்தான் சின்னச் சின்ன விஷயங்களாய் விலகல் ஏற்படும் போலிருக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல் அமைதி காப்பதும் கூட ஒருவித மறுப்பின் அடையாளம்தான் என்று உணர்ந்து கொண்டார். அதிகம் பேசாமல் இருப்பதே கூட ஒருவித அதிகாரம்தானே? நிறையப் பேசி அதிகாரத்தை வெளிப்படுத்துவது..பேசாமலே இருந்து கழுத்தறுப்பது…என்று இரண்டு வகை இருக்கிறதே என்று அவர் மனசு சொல்லியது.

            ஏன் அவன் பெயருக்கு வீட்டை எழுதினீங்க…? யாராச்சும் இப்படி செய்வாங்களா? மடத்தனமால்ல இருக்கு….காலம் எதை எப்படி மாற்றும்னு சொல்ல முடியாதுங்க…உங்களையே வெளியேத்தினாலும் போச்சு….ப்ராப்பர்ட்டிலாம் கடைசி வரை நம்ம பெயரில்தான் இருக்கணும். அப்பத்தான் சிதைல போய் அடங்குறவரைக்கும் மதிப்பு மரியாதையா இருக்க முடியும். உலகம் போற போக்குத் தெரியாமச் செய்திட்டீங்களே? -பலரும் இப்படித்தான் சொன்னார்கள். யோசிக்க ஆரம்பித்திருந்தார் கருணாகரன். இனி கைவசம் இருப்பதையும் கைவிட்டுவிடக் கூடாது என்கிற தீர்மானம்   வந்தது அவருக்கு. ஆனால் தன் பையன் அப்படியெல்லாம் இருக்க மாட்டான் என்கிற நம்பிக்கையும் ஒரு பக்கமாய் இருக்கத்தான் செய்தது.  ஆனால் கைபேசியில் பார்க்கும் பலவிதமான வீடியோக்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்தன.  மருமகள் தன் மாமியாரைப் பிடித்துத் தள்ளிவிடும் ஒரு காட்சி. போ…போய்த்தொலை…என்ற சுடுசொற்களோடு. அந்தக் கிழவி தடால் என்று கட்டிலிலிருந்து கீழே விழும் காட்சி மனதைப் பதை பதைக்கச் செய்தது. உனக்கு எல்லா வசதியும் இங்க இருக்குப்பா…தனி ரூம், டி.வி., நல்ல சாப்பாடு, தண்ணி வசதி, டாய்லெட் வசதி…பிரச்னையில்லாம இருக்கலாம்…என்று சொல்லி தந்தையின் சம்மதம் எதிர்பார்க்காமலேயே பணத்தைக் கட்டி விட்டு விட்டுப் போகும் பலரும் படத்தில் வந்தார்கள். வாய்மூடி மௌனியாய் இருக்கும் வயசான, ஆட்டம் கண்ட பெற்றோர்கள்.  மனதில் உள்ளதைச் சொல்ல முடியாமல் கண்ணீர் கசிகிறார்கள். இப்டியெல்லாம் இருக்கிறதுக்குச் செத்துடலாம்…என்கிறார் ஒருவர். நன்றி கெட்டவனுக…இவன்க மூஞ்சியவே பார்க்க நான் விரும்பலை…என்று வெறுத்து உமிழ்கிறார் ஒரு பெரியவர். எவனும் என்னை வந்து பார்க்கணும்ங்கிற அவசியமில்ல….என்று தன் பென்ஷன் காசை நம்பி நிமிர்கிறார் இன்னொருவர்.

            அப்பாவின் நினைவு தினத்திற்கு ஒரு முதியோர் இல்லம் சென்று பணம் கட்டியிருந்தார் கருணாகரன். அன்றைய தினம் அங்கிருக்கும் அனைவருக்கும் பாயாசம், வடை. நாலுவகைக் காய்கறிகள், பச்சடி, கிச்சடி, இனிப்பு, பழம், இவைகளோடு விருந்து. சாப்பாட்டு இலையின் முன் அமர்ந்து அவர்கள் தன் தந்தைக்காகத் தியானித்ததும், தனக்கு நன்றி தெரிவித்ததும், ஆசீர்வதித்ததும் அவர்களை ஒவ்வொருவராக இலை முன் நின்று தான் கவனித்ததும். பின் அவர்களோடு அமர்ந்து உண்டதும் மறக்க முடியாத நிகழ்வாயிருந்தது. மாலையில் அங்கு போய் காற்றாட அமர்ந்திருந்த பொழுது அவர்களில் பலர் வாசலையே நோக்கிக் கொண்டிருந்ததும், சாலையில் யார் வருகிறார்கள் என்று கவனித்துப் பார்த்ததும்.. மாதம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லும் மகனைக் காணவில்லையே என்று ஏங்கிக் கிடந்ததும் இவரை மிகவும் வருத்தியது. அந்த நிலை தனக்கும் வந்து விடக் கூடாது என்று அப்போதைக்கு மனதைத் திடப் படுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் காலம் யாரை எவ்வாறு. எங்கு  கொணடு நிறுத்துமோ என்கிற பயமும் அவருள் இருக்கத்தான் செய்தது.

சிந்தனை அறுபட்டது. பல சமயங்களில் பின்னோக்கிப் போய்விடுவதாக உணர்ந்தார். எதிர்காலம் எப்படியிருக்குமோ என்கிற பயம் கூடவே வந்து கொண்டிருந்தது. சென்னைக்கு வரும் முன்பான தனக்கும் தன் மனைவிக்குமான பேச்சை நினைத்துப் பார்த்தார்.

சென்னைல ஒரு வீடு வாங்குவோம்…நாம அங்க போயிடுவோம்.. அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணுவோம். தனிக்குடித்தனம் வைப்போம்…பிறகு நாம இந்த மதுரைக்குத் திரும்ப வந்திடுவோம்…-இதுதான் கிளம்பும் முன் உண்டான சுருக்கமான பேச்சு, ஒப்பந்தம். அக்ரிமென்டா எழுதிக் கொடுக்க முடியும்? புருஷன் பெண்டாட்டிக்குள் என்ன அக்ரிமென்ட்? வாய் வார்த்தைதான் ஒப்பந்தம். அதற்கு மதிப்பில்லை என்றால்?  அவள் இப்போது வர மறுக்கிறாள். பையனும் அமைதி காக்கிறான். நீ வேணா போய் இருந்துக்கோ…என்று சொல்லி விடுவானோ? என்ற சந்தேகம் வந்தது இவருக்கு. நான் வராப்ல இல்லை. பையனோடுதான் இருப்பேன். அவன் போயிடுங்கன்னு சொல்லட்டும். கிளம்பறேன்…அல்லாமல் நான் நகர்றாப்ல இல்லை என்றாள். அவன் அப்படிச் சொல்ல மாட்டான் என்கிற திடமிருந்தது அவளிடம். ஆனால் நீயும் இருப்பா…அங்க ஏன் போறே? என்று ஒரு வார்த்தை வரவில்லை. போனாப் போய்க்கோ…ரோட்டுல விழுந்து செத்தா சாவு..! இதுதான் தன் கதியா?தன் கடமைகளை நூறு சதவிகிதம் முற்றாய் நிறைவேற்றியவனுக்கு இதுதான் நன்றியா? இதுதான் பலனா? பெற்ற பிள்ளைகள் அம்மாவிடம் ஒரு மாதிரியாயும், அப்பாவிடம் வேறு மாதிரியாயும் ஏன் இருக்கிறார்கள்? தான் தன் தந்தையிடம் அப்படியில்லையே? எனக்கு ஏன் நிகழ்கிறது இப்படி?  கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன. தனக்கு மட்டுமா? இந்த உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான தந்தையர்க்கும் இதே நிலைதான். தாயாரை ஒதுக்கிய தனயன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது தாய் தனியே மகனிடம் மாட்டிக் கொண்டால் பெரும்பாலும் நிகழ்ந்து போகிறது. அவர்களும் ஒரு நாள் கிழமாவார்கள் என்று ஏன் உரைப்பதில்லை, உணருவதில்லை?

 ஆரம்பம் முதலே. அதாவது படிக்கிற காலம் முதலே அவன் அம்மா கோண்டுதான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒன்றாய் கோயில் போவார்கள். கடைக்குப் போவார்கள்.  அவன் ஊரில் இருந்தால் இவருக்கு வண்டி கிடைக்காது. அம்மாவைப் பின்னால் உட்கார்த்திக் கொண்டு ஊர்வலம் வருவான். சரி…நாலு நாளைக்குத்தானே என்று விட்டுவிடுவார். காலேஜ் படிக்கும்போதும், பிறகு வேலைக்குப் போனபோதும் அப்படித்தான்.   ஏதாவது முக்கிய வீட்டுக் காரியமாய் வேண்டுமென்றால் மட்டும் அவர்களால் செய்ய முடியாததற்கு  இவரை அணுகுவார்கள். மற்றப்படி பேச்சு…பேச்சு…பேச்சு…அப்படி என்னதான் பேசுவார்களோ என்று நினைத்துக் கொள்வார் இவர்.  தனக்கு எதிராகவா பேசிவிடப் போகிறார்கள்? இதை ஏன் இத்தனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்? பையனுக்கு அம்மாமேல் பிரியம் ஜாஸ்தி. இருந்துவிட்டுப் போகட்டுமே! அதனால் தனக்கென்ன பாதகம்? என்று விட்டு விட்டார் இவர். தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் பேசிவிட்டால் கூட…போதும்…போதும் இன்னைக்கு..அப்புறம் உங்கம்மா கோவிச்சிக்கப் போறா…! என்று கிண்டலடிப்பார் சமயங்களில். ஒட்டுதல் இல்லாத சேவையாற்றல். அதாவது கடமையைச் செய்தல். பலனை எதிர்பாராமல். எது எப்படி நடக்கும். எங்ஙனம் மாறும் என்று யாரால்தான் நிர்ணயிக்க முடியும்? காலமும் நேரமும் எப்படி இழுத்துக்கொண்டு போகிறதோ அதனூடே பயணம் செய்வோம். விதி விட்ட வழி.

மனைவியுடனான அந்த எழுதப்படாத ஒப்பந்தம் இப்போது காலாவதியாகி விட்டது. அவருக்கும் சேர்த்துத்தான். ஆனால் இவருக்குத்தான் இந்தச் சென்னையில் இருப்புக் கொள்ள மாட்டேனென்கிறது. ரெண்டு மாதத்திற்கொருமுறை ஊர் சென்று வருகிறார். அங்கு போய் அவர் ஜனங்களைப் பார்த்தால்தான் திருப்தி. ஆரோக்கியம். அவர்கள் பேசுகிறார்களோ இல்லையோ, ஒரு சிறு புன்னகை, நல்லாயிருக்கீங்களா? என்ற ஒற்றை வார்த்தைக் கேள்வி…வேண்டாமே…அவர்களையெல்லாம் கண் கொண்டு பார்த்தாலே போதுமே..மனதிற்குப் புதிய உற்சாகமும், ஆரோக்கியமும் வந்துவிடுகிறதுதான். அப்படித்தான் இவரது மீதி வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே வாழ்க்கை துவங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் வாழ்க்கை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது…..!! பாதையெல்லாம் மாறி வரும்…பயணம் முடிந்து விடும்… - பாடலின் கடைசி வரி…அவரை ஈர்த்தது. என்று முடியுமோ இந்தப் பயணம் என்று அவர் மனது ஏங்கியது. கடந்து போன காலங்களின் ஈரத்தில்தான் இப்போது தான் மீதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டார் கருணாகரன். நடப்பு வாழ்க்கை அவருக்கு அத்தனை ஸ்வாரஸ்யம் தருவதாயில்லை.  சொல்லப்போனால் பையனின் திருமணத்திற்குப் பின்பே அந்த ஸ்வாரஸ்யம் போய்விட்டது என்று துல்லியமாயத் தோன்றியது அவருக்கு.  தனிக் குடித்தனம் வைத்து விட்டு நாம் நம் இடம் பெயர்ந்து விடுவோம் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அவருள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உலகம் பூராவும் தன் எண்ணம்போல் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இவள் மட்டும் ஏனிப்படித் தனித்து நிற்கிறாள்? இதென்ன பெருமைக்குரியதா? நாளைக்கு மருமகளினால் கேவலப்படுத்தப்பட்டால் அப்போது என்ன செய்வாள்? முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வாள். இந்த உலகத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் எங்காவது ஒத்துப் போயிருக்கிறதா? ஒரு இடம் சொல்ல முடியுமா? இப்போதென்ன அவ்வளவு இஷ்டமாகவா இருந்து கொண்டிருக்கிறார்கள்? தலைமுறையே வேறு…பிறகு எப்படி ஒத்துப் போகும்? கேவலப்பட்டு வெளியேற வேண்டுமென்பது அவள் தலைவிதியோ என்னவோ? அதை யார்தான் தடுக்க முடியும்? முடியும்னா கூட்டிட்டுப் போப்பா…என்று சவால் விடுவதுபோல் சொல்கிறான். அவன் ஆதரவு இருக்கிறது என்கிற நினைப்பிலிருக்கிறாள். அது தடம் மாற எவ்வளவு நாழி ஆகும்? சிலருக்கு வயசாகிறதேயொழிய அதற்கான மனப் பக்குவம் வருவதில்லை.  காலமும், அனுபவங்களும் என்று இவர்களுக்கு ஆதரவாய் இருந்திருக்கிறது? இப்பூவுலகில் ஒரு உதாரணம் காண்பிக்க முடியுமா? காயத்ரியை நினைக்க, பரிதாபமாய்த்தான் இருந்தது கருணாகரனுக்கு.

                                                           

 

கருத்துகள் இல்லை: