சிறுகதை வாசகசாலை 118 வது இதழ் பிரசுரம் 18.10.2025
“மனக் கிலேசங்கள்”
சொன்னாக் குத்தமா எடுத்துக்கப்டாது.
அப்டீன்னா சொல்றேன்….கேள்வி கொஞ்சம் சூடாத்தான் இருக்கும்…பரவால்லியா? -என்றவாறே மந்தாகினியின்
முகத்தைப் பார்த்தார் ஜம்புகேஸ்வரன்.
அந்த முகத்தில் தெரிவது கோபமா, அமைதியா
அல்லது அழுத்தமா என்று புரியவில்லை. எதையும் வெளிக்காட்டாது அடக்கும் திறமையான பாவம்
கொண்ட பெண்ணோ என்றும் நினைக்கத் தலைப்பட்டார்.
நான் எதைக் கேட்டாலும், குத்தமா எடுத்துக்கப்
படாதுன்னு சொல்லிட்டே ஆரம்பிக்கிறேங்களேப்பா…? என்றது அந்தப் பெண்.
மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என்று யோசனை
வந்தது ஜம்புவுக்கு. பொழுது விடிந்ததும் விடியாததுமாக இந்தப் பெண்ணிடம் பொருத முடியுமா
என்று நினைக்க ஆரம்பித்தார். எதைத் தொட்டாலும் அதில் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கிறது
இந்தப் பிசாசு என்று எரிச்சல் தலையெடுத்தது இவருக்கு. மருமகளைப் பிசாசு என்று நினைக்கலாமா?
பிசாசு போல ஆட்டம் போட்டால் வேறு எப்படி நினைப்பது? வீடே ஆடிப்போய்த்தான் கிடக்கிறது
இந்தப் பெண் வந்த பிறகு.
ஜம்புகேஸ்வரனும் அக்கினியம்மாளும் ஒடுங்கிப்
போய்த்தான் கிடக்கிறார்கள். பேயைக் கொண்டு வந்து நடு வீட்டுக்குள் வைத்ததுபோல் ஆயிற்றே?
என்று பலத்த யோசனையில் இருந்தார்கள் இருவரும்.
உனக்குப் பேரு அக்கினி. ஆனா நம்ம வீட்டுல
பெர்மனன்டா வேறொரு அக்கினி அணையாத குண்டமா எரிஞ்சிட்டேயிருக்கு…என்றார் மனைவியிடம்.
அதுக்கு முன்னாடி நீ குளிர்ந்து போயிட்டே….- என்று கிண்டல் செய்தார். அதாவது உன் பாச்சா
எதுவும் பலிக்கலை என்பதை அப்படிச் சொன்னார்.
மாமியார் அதிகாரம் வீடுகள்ல தூள் பறக்கும்னு
சொல்வாங்க. பரந்த இந்த வீட்டுல எந்தப் பொந்துக்குள்ள நீ ஒடுங்கியிருக்கேங்கிறதே தெரியலை…உன்
வீராவேசம்லாம் எங்கிட்டதான். அங்க எடுபடலை…-என்று சாடினார்.
புத்திசாலித்தனமாகக் கேட்பதாய் நினைத்துக்
கொள்ளுமோ என்னவோ? பேச்சு முறையே இதனிடம் இப்படித்தான் இருக்கிறது. பெரியவர்கள் சிறியவர்கள்
என்கிற வித்தியாசமேயில்லை. ஏழு வயதுச் சிறுவனான தன் மகனிடம் கூட இப்படித்தான் பேசுகிறது.
அந்தச் சிறுவனின் மனதில் என்ன சீண்டுதல் சிந்தனை இருக்கும். அப்படி வன்மமாய் நினைத்துக்
கொண்டு அவனே தன்னைக் கிண்டல் செய்கிறானோ என்று எண்ணிக் கேட்கும் போல…! மனதுக்குள் தாழ்வு
மனப்பான்மை இருக்குமோ என்னவோ? அல்லது அவர்களைப் போல் சுறுசுறுப்பாகத் தான் இயங்க முடியவில்லையே
என்கிற ஆதங்கமாயும் இருக்கலாம். தன்னை யாரும்
மட்டமாக நினைத்து விடக் கூடாது என்ற எண்ணம் மேலிடவே எல்லாவற்றையும் எதிர்கொள்ளுமாய்
இருக்கும்.
ஏம்மா இந்தக் கலர் கம்மீஸ் போட்டுக்கிற?
இது உனக்கு ச்யூட்டாகவே இல்லை…!
எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணும்
சொல்ல வேண்டாம். சின்னப்புள்ளயா லட்சணமா இரு…..! ஒரு பொடியனிடம் கூடவா இப்படிப் பேச்சு?
இதென்ன மெச்சூரிட்டி? அது தன் வயசுக்கான லட்சணத்தோடு இருக்கிறதா?
இது வயசுப் பிள்ளையா அடக்க ஒடுக்கமாய்
இருக்கிறதா என்கிற எண்ணம் போனது இவருக்கு. எடுத்தெறிந்து பேசுதலயே வழக்கமாய்க் கொண்டுள்ளதே?
பிறர் எதைச் சொன்னாலும் ஏதேனும் பொடி வைத்தே பேசுவார்கள் என்று குதர்க்கமாய் ஏன் நினைத்துக்
கொள்கிறது? அதுதான் க்ளெவர்னெஸ் என்று எண்ணிக்கொண்டிருக்கிறதோ? எதையும் எதற்காக, ஏன்,
எப்படி என்று கேள்…! என்கிற கதை விபரீதமாகவும்
பரிணமிப்பதுண்டு போலும்?
முகத்தில் எப்போது பார்த்தாலும் ஒரு அதிருப்தி.
அலட்சியம். என்ன வந்தது அப்படி? வசதி வாய்ப்பில்லையா? இடமில்லையா? காசு பணமில்லையா?
எதுதான் இல்லை? போதிய மனசுதான் இல்லை. இதையெல்லாம் கண்கொண்டு பார்க்க வேண்டி வந்து
விட்டதே என்று நொந்தது ஜம்புகேஸ்வரனுக்கு. லட்சணமாய், இனிமையாய் முகத்தை வைத்துக் கொண்டு
என்றுதான் இந்தப் பெண் தங்களிடம் பேசும்? அந்த குண விசேஷமேயில்லையோ? கண்ணால் பார்க்கக் கண்டுதானே எல்லாமும் தெரிகிறது.
மனசு சங்கடப் படுகிறது. எதையும் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டு இருந்து விட்டால்?
எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டால்? அப்படியும் விடவா முடிகிறது?
பேசும் பேச்சுக்கள் ஏதாவது காதில் வந்து விழுந்து தொலைக்கிறதே?
ஆபீஸ் கிளம்புறபோது மட்டும் பையன்கிட்ட
வந்து சொப்புச் சொப்புன்னு முத்தம் கொடுத்துட்டுப் போறியே…அதுவரைக்கும் அவனை ஸ்கூலுக்குத்
தயார் பண்ணின உறரிபரிபத்தி ஒரு நிமிஷமாவது யோசிச்சியா? அந்தப் பொறுப்பு உனக்கில்லையா?
உன் பிள்ளைக்கு நீ செய்யாம யார் செய்வாங்க? அது ஏன் உனக்குத் தோண மாட்டேங்குது? வயசான
எங்களுக்குச் செய்யணும்னு என்ன தலைவிதியா?
நீங்க விலகிக்குங்கோ…நான் செய்துக்கிறேன்.
இம்புட்டு ராங்கி இருக்கிறவ, தள்ளுங்க…எம்
பிள்ளைக்குச் செய்றதுக்கு எனக்குத் தெரியும்னு வந்து பிடுங்கியில்ல செய்யணும்? உன்னால
முடியாது…ஏன்னா நீ அட்டச் சோம்பேறி. உங்கப்பன்
உன்னை அப்படித்தான் வளர்த்திருக்கான். அதுக்காக ரொம்பப் பெருமைப் பட்டுக்கணும்….
முடிந்தது கதை. அத்தோடு அழுக உட்கார்ந்ததுதான்.
அன்று ஆபீஸ் கட். கோபித்துக் கொண்டு வெளியேறியிருந்தாலும் இனி சாயங்காலம்தானே சண்டை
தொடரும் என்று நிம்மதியாய் இருந்திருக்கலாம். லீவைப் போட்டால்?
அறைக் கதவு டமால் என்று சாத்தப்படுகிறது.
அதற்கு வாயிருந்தால் அழும். எத்தனை இடியைத்தான் தாங்கும் அது? இதென்ன மரியாதையற்ற செயல்?
வீட்டில் வயதில் பெரியவர்கள் இருக்கிறார்களே என்கிற மட்டு மரியாதை துளிக்கூடக் கிடையாதா?
என்னப்பா…பேசவே மாட்டேங்கிறீங்க?
-மந்தாகினியின் தொடர்ந்த கேள்வி இவரை
உசுப்பியது. அடிக்கடி இப்படி நினைவுகளில் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறார். மனதின்
தாபம் அவரை அப்படி இழுத்துச் சென்று விடுகிறது. ஒரு நல்ல பையனுக்கு இப்படித் தப்பாக்
கல்யாணம் பண்ணி வச்சிட்டமே என்கிற அளவுக்குத் துயறுருகிறார். இந்த வேதனை தன்னை சாகுற
வரை விடாதோ என்று பயப்படுகிறார். அவன் நிம்மதியாகத்தான் இருக்கிறானா அல்லது மனதுக்குள்
அழுகிறானா?
அதான் சொன்னேனே…நேர் கோணத்துல எடுத்துக்கிறதுன்னா
உங்கூடப் பேசலாம். இல்லன்னா அது சாத்தியமில்லை… - என்றார் மறுபடியும்.
சும்மா சொல்லுங்கப்பா…எதுவும் நினைச்சிக்க
மாட்டேன்….
ஜம்புகேஸ்வரனுக்கு அப்போதும் தைரியம்
வரவில்லை. தைரியமென்றால் பயம் என்றில்லை. தயக்கம். எதற்கு அநாவசியமாய் ஒரு சண்டை? என்று
தோன்றியது. எல்லாம் காலப் போக்கில் சரியாகும். சிலது உடனே சரியாகி விடும். அது அபூர்வம்.
பலது காலப் போக்கில்தான்…வீட்டுப் பெரிசுகள் மண்டையைப் போட்ட பின்னால்தான் நடந்தேறும்.
அப்போது அவர்களுக்கு ரத்தச் சூடு குறைந்திருக்கும. உடம்பு தளர ஆரம்பித்திருக்கும்.
படிப்படியாகப் புத்தி வரும். ஒரே மாதிரி வாழ்க்கையில் இருந்து மடிந்தவர் என்று எவருமில்லை
இந்த உலகத்தில். கடைசிக் காலத்திலாவது மாறித்தான் இருக்கிறார்கள். என்ன ஒன்று என்றால்
அதை வெளியே சொல்லாமல், காட்டிக் கொள்ளாமல் இருந்து மறைந்திருப்பார்கள். நாத்திகர்கள்
ஆத்திகர்களாகிய கதைகள் எத்தனையோ உண்டு இவ்வுலகத்தில். இந்த லௌகீக விஷயம் என்ன பெரிய
பிரமாதம்?
அப்பா…அப்பா…ன்னு நீ வந்து நிக்கிறதாலே
சொல்றேன். சொல்லத் துணியறேன்னுதான் சொல்லணும். நம்ம அப்பாதானேன்னு நீ கோவிச்சிக்கக்
கூடாது. முதல்லயே சொல்லிடுறேன். அதுக்கு சம்மதம்னா சொல்றேன்…..
இந்த வீட்லயே நீங்க ஒருத்தர்தான் என்
கூட ஃப்ரீயாப் பேசுறவங்க. அம்மா கூடத் தேவைக்குதான்
பேசுவாங்க. மோகனோ ஆபீஸ், ஆபீஸ்னு கதியாக் கிடக்கிறவர். சரி…ஓ.கே…போகலாம்…வரலாம்…னு
துண்டு துண்டா சில வார்த்தைகள் பேசுவார் அவர். இப்போ நீங்களும் என்னடான்னா இவ்வளவு
தயங்குறீங்க….?
கணவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்
கொள்கிறார்கள் இந்தக் காலத்தில். நீ, வா…போ….என்று சர்வ சகஜமாய். அது எப்படியோ இருந்து
தொலைத்துவிட்டுப் போகட்டும்…என்று விட்டு விட்டார். சின்னஞ் சிறிசுகள்…எப்படியிருந்தால்
நமக்கென்ன? அவனே ஒன்றும் சொல்லவில்லையே? ஒருவேளை அதைப் பெருமையாக நினைக்கிறானோ? அல்லது எதிர்க்கத் துணிவில்லையா?
அதுக்கில்லம்மா….நீ உன்னை ரொம்ப மாத்திக்கணும்…நிறைய
விஷயங்கள்ல …கல்யாணம் ஆனப் பிறகும், இன்னொரு வீட்டுக்கு மருமகளா வந்த பின்னும் உங்க பிறந்த வீட்டுலயே இருந்த மாதிரி
இங்கயும் இருக்கக் கூடாது.
மந்தாகினியின் முகம் சட்டென்று மாறிற்று.
உன் வீடு மாதிரி நினைச்சு நீ சுதந்திரமா
இயங்கணும்…முதல்ல காலைல படுக்கையை விட்டுப் பத்து மணிக்கு மேலே எழுந்திரிக்கிறதை நிறுத்தணும். அதுவரைக்கும் ஒரு பொம்பளைக்கு தூக்கம் ஆகாது. உடம்பு
சரியில்லாதவங்க கூட ஆறு ஆறரைக்கெல்லாம் எழுந்திரிச்சிடுவாங்க…நீ இப்படி கஜகர்ணத் தூக்கம்
போட்டேன்னா எப்படி? வயசுப் பொண்ணு, அதுவும் வேலைக்குப் போறவ…இப்படித் தூங்கலாமா? அதிகமாத்
தூங்கத் தூங்க உடம்புக்கு வியாதிதான். அதத் தெரிஞ்சிக்கோ. இந்த வயசுல உடம்பு வளைய வேலை
செய்யணும். வேலை செய்யச் செய்ய அசதி வராது. உடம்பு உரம் பெறும். அம்பதுக்கு மேலதான்
இறங்குதசை…தெரியுதா? சும்மாக் கிடந்தா துருப்பிடிச்சுத்தான் போகும்…
அப்டியே பழகிட்டேம்ப்பா…ஆபீஸ் வேலை ஆளை
அமுக்குது…-கொஞ்சம் சீரியஸாகவேதான் சொன்னாள். கொஞ்சம் கொஞ்சமாகக் கோபத்துக்கு ஆளாகிறாள்
என்பதற்கான அடையாளம் அது. தூக்கத்துக்குப் பழகிட்டேன் என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு வெட்கமாயில்லை.
இவர் நினைப்பு இந்த ரீதியில்.
உன் வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி
நீ அப்படி இருந்திருக்கலாம்மா. புகுந்த வீட்டுல அப்படி இருக்கக் கூடாது. திருமணத்துக்குப்
பிறகு தன்னை மாத்திக்கிறதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு…இதை உங்கப்பாவே சொல்லியிருப்பாரே…!
இன்னைவரைக்கும் எங்கப்பா இதைப்பத்திப்
பேசினதேயில்லை. அதுதான் அவர்ட்ட எனக்குப் பிடிச்சது….பெருமையாய்ச் சொல்லிக் கொண்டாள்
மந்தாகினி.
அவருக்கே அது தெரியவில்லையா…அல்லது அங்கு
என்ன வழக்கமோ அப்படியே ஆகட்டும் என்று விட்டு விட்டாரா? திருமணத்திற்கு முன்பே ஒரு
பெண்ணுக்கு நல்லதெல்லாம் சொல்லிக் கொடுத்துப் பழக்கியிருக்க வேண்டாமா?
சமயங்களில் டம்ளரில் தண்ணீர் கொண்டு போய்க்
கொடுத்தான் மோகன். அவிழ்த்துப் போட்ட துணிகளை வாஷிங்மெஷினில் போடுங்க என்றது அது. அதைச்
செய்தான். வாங்க மாடிக்குப் போய் உலர்த்திட்டு வருவோம்…என்ற போது சரி என்று பின்னாடியே
போனான். படுக்கையைப் போட்டான். மடக்கினான். துணிகளை மடித்து அலமாரியில் அடுக்கினான்.
அறையை வேலைக்காரி கூட்டினது போதாதென்று அவ்வப்போது இவனும் கூட்டிக் குப்பை அள்ளினான்.
இதில் எதையும் ஒரு நாளும் செய்யவில்லை மந்தாகினி. இருந்த இடத்திலிருந்து நகராமல் உரல்
மாதிரி உட்கார்ந்திருந்தால்?
மொந்து மொந்து என்று மெத்தையில் ஆடாது
அசையாது உட்கார்ந்து கொண்டு கையில் மொபைலை வைத்துக் கொண்டு என்னத்தையோ பார்த்துக் கெக்கே…பிக்கே..என்று
சிரித்துக் கொண்டிருந்தது. வளைச்சு வளைச்சு சினிமாப் பார்த்தது. எல்லா ஓடிடி.க்களுக்கும்
தடங்கலில்லாமல் பணம் கட்டியிருந்தது. செலவு செய்யலாம்…விரயம் பண்ணலாமா? இவருக்கு இப்படித்தான்
தோன்றியது. விழித்திருக்கும் நேரமெல்லாம் மொபைல் பார்த்தால் அந்தக் கண் என்னத்துக்காகும்?காதில்
இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு கைதட்டிக் கூப்பிட்டால் கூட நிமிருவதில்லை. பின்னால் ஒரு
பாம்பு வந்து படமெடுத்தால் கூடத் தெரியாது.விரைவில் காது மந்தமாகும். அதில் சந்தேகமேயில்லை.
அந்த அளவுக்கு சினிமா மோகம். மொபைல் சேவை. என்ன பிள்ளையை வளர்த்திருக்காங்க..? மனதுக்குள்
புழுங்கினார் ஜம்புகேஸ்வரன்.
பெண் எப்படி என்று கணித்து முடிவு செய்ய
வேண்டுமானால் அவர்கள் வீட்டில் ஆறு மாதம் உடன் இருந்து அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து
உள்வாங்கினால்தான் வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய முடியும். நடைமுறை சாத்தியமா?
அட ஆறு மாசம் வேண்டாம்…ஒரு மாசம்…அட அது கூட வேண்டாம்…நாலு நாள்…பெண் பார்க்கப் போன
இடத்தில் நிச்சயிக்கும் முன்னாலேயே உட்கார்ந்து கை நனைக்க முடியுமா? உலக வழக்கமில்லையே?
மந்தாகினி….டிபன் வச்சிருக்கேன் டேபிள்ல…ஆபீசுக்கு எடுத்து
வச்சிக்கோ…-அடுப்படியிலிருந்து குரல் தெளிவாய் வந்தது. அக்கினியம்மாள் எத்தனை மணி நேரம்தான்
அக்கினி முன் நின்று காய்வாள்? அவள் வேலை அவளுக்கு
முடிந்தாக வேண்டும். பாவம் இந்த வயசிலும் அயராது உழைக்கிறாள். பையனை விட்டுப் போக மனசில்லை.
உடன் பிசினாய் ஒட்டிக் கொண்டிருக்கிறாள். அதனால் அவரும் கூட இருந்தாக வேண்டிய கட்டாயம்.
தனிக் குடித்தனம் வைத்து விட்டு என்னத்தவோ கூட்டிக் கழிக்கட்டும் என்று இருக்கத் தெரியவில்லை.
இதோ வந்திட்டேம்மா…என்று பதில் சொல்லியிருக்கலாம்.
பதிலாக அங்கிருந்து நகர்ந்தாள் மந்தாகினி. டிபன் பாக்சில் இட்டிலிகளை எடுத்து வைத்து,
சட்டினியைச் சின்னக் கிண்ணத்தில் போட்டு, அதையும் அதில் திணித்துக் கொண்டு, பாக்சை
சடாரென்று சத்தமாக மூடியது இவருக்கு என்னவோ போலிருந்தது. இவருக்கே இப்படியென்றால் செய்தவளுக்கு
எப்படியிருக்கும்? முகத்திலடித்தாற்போல் இப்படியா மூடுவது? ஒரு இங்கிதம் வேண்டாம்?
என்னதான் தெரியும் இந்தப் பெண்ணுக்கு?
ரெடி ரெடியா வச்சாலும் அம்மாவுக்கு வலிக்குதாக்கும்?
பாவம் அவள் தலைவிதி. ஒராள் சமையல் அதிகமானதுதான் மிச்சம். இன்றுவரை அடுப்படியில் மருமகளின்
உதவி என்று துரும்பைக் கூட நகர்த்தியது கிடையாது. காய் நறுக்கட்டுமாம்மா….தோசை வார்க்கட்டுமாம்மா…ஊறீம்….வாய்
திறந்தால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுமோ என்று படு ஜாக்கிரதையாய்த்தான் இருக்கிறது.
ஆளை விடுங்க…என்று ஆபீஸ் கிளம்பி விடுகிறது.
அந்தக் குழந்தைக்கும் சேர்த்து இவள்தான் கவனித்தாள். நேரத்துக்குக் கஞ்சி காய்ச்சி,
குளிப்பாட்டி விட்டு, வயிற்றுக்குக் கொடுத்து, டையஃபர் மாற்றி – குழந்தை பராமரிப்பு
என்பது என்ன அத்தனை சுலபமானதா? இருந்து செய்து பார்த்தால்தானே தெரியும்?
ஆபீஸ் முடிந்து வரும்போது ஒரு குழந்தை
அம்மா என்றுதானே ஆசையாய்ப் போய் நிற்கும்? போய் அங்க இரு….நான் டிரஸ் மாத்தணும்…என்று
படாரென்று கதவைச் சாத்தினால்? அது வீச்சு வீச்சென்று அழுது தீர்க்கிறது. பச்சிளம் குழந்தை
அழுவது ஒரு தாய்க்குப் பதறாதா? பதறவில்லையே? என்ன பிறவியோ? என்ன ஜென்மமோ? அழுது அழுதே அதுவும் பெரிதாகிவிட்டது.
இப்போது அதைப் பள்ளியில் கொண்டு விடும்,
கூட்டி வரும் வேலையும் மோகனுக்குச் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளேனும் எதற்கேனும்
மெனக்கெட வேண்டுமே? ம்உறீம்…அந்த ஜோலியே இல்லை. பெத்துப் போட்டதோடு சரி…அத்தனை பாரங்களும்
இவர்களுக்குத்தான். எண்ணி எண்ணி மறுகினார்
ஜம்புகேஸ்வரன். மனசாட்சி என்று ஒன்று அதற்கு இருக்கிறதா? தெரியுமா அல்லது கிலோ என்ன
விலை என்று கேட்குமா?
டிபன் கைக்கு வந்ததோ இல்லையோ ஆபீசுக்குக்
கிளம்பியாயிற்று. அத்தோடு பேச்சு முடிந்தது. ஏதாவது எடுத்துச் சொல்லி படிய வைப்போமென்றால்
நின்று கேட்டால்தானே? பொறுப்பாய் வளர்த்திருந்தால்தானே…பெரியவர்கள் ஏதோ சொல்கிறார்கள்…நின்று
கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்…என்கிற உணர்வாவது இருக்கும். எதுவுமே
இல்லையே இந்தப் பெண்ணிடம்? வீட்டோடு ஒட்டவேயில்லை.
கையில் தினசரியோடு உட்கார்ந்திருந்தார்
ஜம்புகேஸ்வரன். பக்கங்கள்தான் புரண்டனவேயொழிய மனதில் செய்திகள் நிற்கவேயில்லை. அதுதான்
சொந்தச் செய்திகள் படம்போல் சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டேயிருக்கின்றனவே? என்ன உலக
நடப்பு வேண்டிக் கிடக்கிறது? ஒவ்வொரு வீடும் நன்றாய் இருந்தால் நாடு நன்றாய் இருக்கும்.
பலரும் தன்னைப் போல் இப்படித்தான் அல்லல்பட்டு அழுது அ ரற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பலரும் வெளியே சொல்வதில்லை. சகித்துக் கொண்டு மனதுக்குள் அழுது கொண்டிருக்கிறார்கள்.
முதியோர் இல்லம் சென்று தனித்துக் கிடப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்கிற எண்ணம் வருகிறது.
என்ன ஒன்று. படுக்கையில் விழுந்து விடக் கூடாது. மற்றவர்க்கு சிரமம் கொடுத்து விடக்
கூடாது. ச்சீச் சீ…என்று போகும் பிறகு. அதற்குள் கண் மூடி விட வேணும்…
இதை நினைத்த போது அது நம் கையிலா இருக்கிறது
என்கிற எண்ணம் வந்தது ஜம்புகேஸ்வரனுக்கு. அவ முந்தியோ…நான் முந்தியோ…? எல்லாம் இறைவன்
சித்தம்…குடிக்கத் தண்ணி கொடு…என்று கேட்கணும்…வந்து நீட்டுவதற்குள் போயிருக்கணும்…தலை
சாய்ந்து விடணும்…!கிடைக்குமா அந்த பாக்கியம்? – கேள்வி பிறந்த போது நீண்ட பெருமூச்சு
வெளிப்பட்டது ஜம்புகேஸ்வரனிடமிருந்து.
எப்படியோ இருந்து தொலைச்சிட்டுப் போகட்டும்…எதுக்கு
அந்தப் பொண்ணைப் பக்கத்துல கூப்பிட்டு வச்சு…அட்வைசக் குடுக்குறீங்க…இந்தக் காலத்துப்
பிள்ளைகளுக்கு அட்வைஸ்னாலே பிடிக்காது. அது தெரியாதா உங்களுக்கு? முதல்ல நீங்க விவஸ்தையோட இருக்கக் கத்துக்குங்க…-
படபடவென்று அருகில் வந்து பொரிந்து கொட்டினாள் அக்கினியம்மாள். நெருப்பு சூடுதானே…!
நீ சொல்றது ஒருவகைல சரிதான். இம்புட்டு
வயசுக்கு மேலே இனிமேதான் நான் விவஸ்தையோட இருக்கக் கத்துக்கணும்…! -சமயத்துல ஒரு நப்பாசை
வருது பாரு…கோணல்லாம் நிமிர்ந்துடாதான்னு…அதைத் தவிர்க்கணும்…தலைமுறை இடைவெளி நம்மள
மாதிரி வயசானவங்களை அதல பாதாளத்துல தள்ளிடுத்து…அதுதான் யதார்த்தம்…சத்தியமான உண்மை….!
அவரின் புலம்பல்களைக் கேட்டுக் கொண்டு புரிந்தும் புரியாதவளாய் குழப்பமாய்ப் பார்த்தவாறே
தேமேனென்று நின்றாள் அக்கினியம்மாள்.
----------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக