30 மே 2024


            “…என்றாலும் என் நண்பன்…!”

தமிழ்ப்பல்லவி காலாண்டு இதழ்-ஏப்-ஜூன் 2024   பிரசுரம்




            ன்னடா ரொம்ப வெட்கப்படுற…கூச்சமில்லாமச் சாப்பிடு…. – என்றேன் கமலபாலனைப் பார்த்து. அம்மா அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள்.  ஒருவேளை அதுவே அவனைக் கூச்சப்படுத்தியதோ? எதற்காக அப்படிப் பார்க்கிறாள்?

            என்னைப் போலவே அவனும் ஒரு பிள்ளைதான். ஒத்த வயசுள்ளவர்களெல்லாம் ஒரு தாய்க்குப் பெற்ற பிள்ளைகள் மாதிரிதானே? மாறாத அன்பு செலுத்த ஒரு தாயினால் மட்டுமே முடியும்…

            இப்பல்லாம் நீ ரொம்ப அமைதியாயிட்டே….இப்டியே  இருந்தீன்னா நாளடைவில் உனக்கு பேச்சு மொழி மறந்து போக வாய்ப்பிருக்கு….-சொல்லிவிட்டுச் சிரித்தேன் நான். லேசாகப்  புன்னகைத்துக் கொண்டது போலிருந்தது. அம்மா உற்றுப் பார்ப்பதையே நினைத்துக் கொண்டிருப்பானோ? அதுதான் பதில் வரவில்லை.

            அவன் கவனம்  சாப்பாட்டில் இருந்தது. அன்று என் பிறந்த நாள். காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு விட்டு, கோயிலுக்குச் சென்று வந்து இப்போது சாப்பிட    அமர்ந்திருக்கிறோம். நீயும் கோயிலுக்கு வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டபோது சரி என்று ஒப்புக் கொண்டவன், அப்படியே சாப்பிட்டுப் போகலாம் என்று வீட்டுக்கு இழுத்து வந்து விட்டேன்.

            எங்க வீட்ல எங்கம்மா சமைச்சிருப்பாங்கல்ல…அது மிஞ்சித்தானே போகும்…வேண்டாம்டா…என்றுதான் மறுத்தான். அத்தோடு அன்று கறிச்சோறு என்று வேறு சொன்னான். அவன் நாக்கில் ஜலம் ஊறியது போலிருந்தது.

அப்பா வாரத்துல ஒரு நாள் கறி,  மீன்  வாங்கிட்டு வருவாரு. எங்கள மனசுல வச்சிதான் ஆசையாக் கொண்டு  வந்து…பொங்கிப் போடுன்னு அம்மாட்டக் கொடுப்பாரு….அது வீணாகுறது அவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது….அதனால…இன்னொரு நாளைக்குப் பார்ப்போம்டா….என்று உறுதியாக மறுத்தான் கமலபாலன்.

அவன் சொல்வதில் நியாயமிருந்ததுதான். என் விருப்பத்தை விட, அவன் அப்பாவின் விருப்பமும் வழக்கமும் முக்கியம்தானே? அதற்குத்தானே முன்னுரிமை!

அதனாலென்னப்பா…பிறந்த நாளும் அதுவுமா தம்பி கூப்பிடுது…போயிட்டு வா….இந்த ஒரு வாட்டி கவுச்சி வாங்க வேணாம்னு உங்கப்பாவுக்கு நா போன் பண்ணிச்  சொல்லிப்புடறேன்…சரிதானா? – கமலபாலனின் அம்மா இப்படிச் சொன்னபோது சம்மதம் தெரிவித்தான். நம் விருப்பத்தை விட மற்றவரின் விருப்பம்தான் முக்கியம் என்கிற ரீதியில் அவர்கள் பதில் சொன்னது கார்த்திகேயனுக்குப் பிடித்திருந்தது.

பழக்கத்தில் கொஞ்சம் கூச்ச சுபாவம்…கொஞ்சமென்ன…நிறையவே உடையவன் அவன். பள்ளியில் படிக்கையில் கூட பெண் பிள்ளைகளிடம் தலை நிமிர்ந்து. நின்று பேச மாட்டான் கமலபாலன். அது அவன் ஒழுக்கத்தின் அடையாளம். வளர்ப்பின் சான்று.

நான்கூடக் கேட்டிருக்கிறேன். கமலபாலன்ங்கிற பேருக்குத் தகுந்தமாதிரி உன் முகம் எப்பத்தான் மலர்ந்து இருக்கும்? எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் சீரியஸா திங்க் பண்ணிட்டேயிருப்பியா? அப்டி என்னதான்டா யோசிக்கிறே…? அதையாச்சும் சொல்லேன்…என்று அவனைத் தொணத்தி எடுத்திருக்கிறேன் நான்.

அவனிடமுள்ள அந்த அமைதியும், அடக்கமும்,பணிவும், வெட்கமும், கூச்ச சுபாவமுமே எனக்கு வெகுவாகப் பிடித்துப் போய் அவனோடு என்னை நெருங்கியவனாக நிற்க வைத்திருந்தது. எங்கள் நட்பு மானசீகமானது. வெறுமே ஊர் சுற்றவும். சினிமாப் பார்ப்பதற்குமானதல்ல.

அவன் வீட்டிற்கு வந்தாலே அப்பாவும் படு உற்சாகமாகிவிடுவார். பெரிய ப்ளே போர்டு-கேரம் இருந்தது எங்கள் வீட்டில். நானும் அம்மாவும் எதிரெதிர் செட் என்றால் அப்பாவும், கமலபாலனும் ஒரு செட். அநியாயத்துக்கு விளையாடுவான். காய்களைச் சட்டுச் சட்டென்று  குழிக்குள் இறக்கும் லாவகம் பிரமிக்க வைக்கும். அவன் புத்தி அத்தனை ஷார்ப்பாக வேலை செய்யும். ஆடும் வரை ஆட்டம் என்பதற்கடையாளமாய் அந்த ஒரு மணி நேரம் வேறெதிலும் அவன் கவனம் செல்லாது. ஒரே குறியில் நிற்பான்.

 எங்க கொண்டு வச்சாலும் உள்ளே தள்ளிப்புடறானே என்று வயிறெரியும். ஒரு முறை கூட நானும் அம்மாவும் அவர்களிடம் ஜெயித்ததில்லை. அவனிடம் ஜெயிக்க வேண்டும் என்றே வீட்டில் தனியே இருக்கையில் நான் ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருப்பேன். கேரம் போர்டின் நான்கு பக்கங்களில் எந்தத் திசையில் காய் நின்றாலும் எங்கு ஸ்டைகரை நிறுத்தி எப்படி அடித்தால் போய் விழும் என்று விழுந்து விழுந்து பயிற்சி செய்தேன். ரெட்டும் ஃபாலோ காயினும் போட்டுப் போட்டுப் பழகியிருந்தேன். மதியம் சாப்பாட்டிற்கு மேல் உட்கார்ந்தால் ராத்திரி ஆகி விடும் நாங்கள் அதை விட்டு எழுந்திரிக்க. போர்டில் நிறையக் காய்கள் இருக்கும்போது, ரெட் காயினையே குறி வைப்பான் கமலபாலன். முதலில் அதை உள்ளே தள்ள வேண்டும் அவனுக்கு. பிறகு மற்றவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

நாங்கள் இரண்டு பேர் மட்டும் விளையாடும்போது, என்னடா உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு…மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியாத் தூங்குவோம்னா விடுறீங்களா? மொட்ட மாடிக்குத் தூக்கிட்டுப் போய் விளையாடுங்கடா…என்று அப்பா எத்தனையோ முறை சத்தம் போட்டிருக்கிறார். அங்க வெயில் கொளுத்துதுப்பா…என்று சொல்லி விடுவேன் நான். கொஞ்சம் நிழலிடம் உண்டுதான் என்றாலும், அனல் காற்று அடிக்கும். அந்த உஷ்ணக் காத்துக்குத் தூக்கம்தான் வரும். விளையாட்டு ஓடாது.

நாங்கள் இருவரும் ப்ளஸ் டூ  முடித்து விட்டு சும்மாயிருந்தோம். கல்லூரி சேர வசதியில்லை. கம்ப்யூட்டர் கோர்ஸ் படி என்றார் அப்பா. அவன் வீட்டிலும் என்னைப்போலவே அதற்கு அனுப்பிவிட்டார்கள். இருவரும் சேர்ந்துதான் சென்டருக்குப் போவோம்.

பெண்கள் இல்லாத நேரம் பார்த்து நாம டைம் ஃபிக்ஸ் பண்ணிக்கிடுவோம்டா என்றான் கமலன்.  அநியாயக் கூச்சம் அவனுக்கு. இந்த வயசுக்கு பொம்பளப் பிள்ளைகளப் பார்க்கத் தவம் கிடப்பான் அவனவன். நீ என்னடான்னா தலைதெறிச்சு ஓடுற? என்று நானே அவனிடம் சொல்லியிருக்கிறேன்.

அவங்க இருந்தா என்னடா? அதான் பெட்டி பெட்டியாத் தடுத்துத்தானே வச்சிருக்காங்க…ஒருத்தரையொருத்தர் பார்க்க முடியாதே…பிறகென்ன? நமக்கு அலாட் பண்ணின சிஸ்டத்துல நாமபாட்டுக்கு உட்கார்ந்து பிராக்டிஸ் பண்ணிட்டு வருவோம்…என்றேன் நான்.

நேரம் ஒதுக்குவது சென்டரின் பொறுப்பாளர் வசமாயிற்றே? இ்ந்த நேரம்தான் வேண்டும் என்று கேட்டு அது கிடைக்காவிட்டால்? அடுத்த சென்டர், அடுத்த சென்டர் என்று தாண்டித் தாண்டிப் போய்க் கொண்டிருப்பதா? வீட்டின் அருகே இருந்தால்தான் போய் வர வசதி என்று கிடைத்த நேரத்தைப் பிடித்துக் கொண்டோம்.

மலன்…ஏண்டா இன்னைக்குக் கிளாசுக்கு வரலை…? – ஒரு வாரம் சரியாக ஓடிய வண்டி…திடீரென்று பிரேக் அடித்தது. அரசமர ஸ்டாப்பில் வழக்கமாய் நிற்கும் கமலன் அன்று காணவில்லை…ரெகுலராய் வகுப்புக்கு வந்துகொண்டிருந்தானேயொழிய முழு ஈடுபாட்டோடு பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவன் கவனம் சிதறிக்கொண்டேயிருந்தது. யாரேனும் தன்னைப் பார்க்கிறார்களா என்று அவனே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏண்டா…ஜென்ட்ஸ் டைம் வேணும்னு கேட்டுட்டு, இப்போ லேடீஸைத் திரும்பித் திரும்பி நீயே பார்த்திட்டிருந்தேன்னா அவுங்க தப்பா நினைக்கப் போறாங்கடா… - என்றேன்.

நான் அவங்களைப் பார்க்கிறேன்ங்கிறது உனக்கு எப்படித் தெரியும்? அப்போநீ என்னையே கவனிச்சிட்டிருக்கே…அதானே…நீ  நீபாட்டுக்கு உன் வேலையைப் பார்க்க வேண்டிதானே…உனக்கென்ன என் மேலே அவ்வளவு கவனம்? நான் பார்த்தா உனக்கென்னடா? என்றான்.

அன்று அவன் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. அது ஏன் என்று அடுத்த ஒரு வாரத்தில்தான் தெரிய வந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கமலபாலன் கணினி வகுப்பிற்கு வராததும், அவனைப் போய்ப் பார்க்க முடியாமல் எனக்கு வேறு வேலைகள் இருந்ததும், அம்மா உடம்பு முடியாமல் போனதில் நான் சமைக்கிறேன் என்று கிளம்பி, அவள் சொல்லச் சொல்லப் பொறுமையாக சமையல் வேலைகளைக் கவனித்ததும், சாம்பார் ரசமாகி, காய் சட்டி அடி பிடித்துக் கருகிப் போனதும் தனிக்கதை.

கமலபாலன் பெண் மாணவிகள் பயிற்சி பெறும் நேரத்துக்குத் தன் நேரத்தை மாற்றிக் கொண்டு விட்டான் என்பது பிறகுதான் தெரியவந்தது.  அருகிலேயே கூட நிற்கக் கூச்சப்படுபவன், ரெண்டு வார்த்தை நேருக்கு நேர் பார்த்துப் பேசப் பயப்படுபவன், பெண்கள் நிற்கும் இடத்தையே வலியத் தவிர்ப்பவன் எப்படி அவர்கள் நேரத்திற்கு மாறிக் கொண்டான் என்பதும், எதற்காக அப்படிச் செய்தான் என்பதும்தான் எனக்குத் தீராத வியப்பாயிருந்தது.

என்னடாது…ஆளையே காணலையேன்னு நினைச்சா டயத்தையே மாத்திக்கிட்ட போல…..எங்கிட்டக் கூட ஒரு வார்த்தை சொல்லலை….

நாம  வழக்கமாப் போற நேரத்துக்கு என்னால வர முடிலடா…! உன்கிட்டே சொன்னா நீ சங்கடப்படுவே…எப்டிச் சொல்றதுன்னு யோசிச்சிக்கிட்டேயிருந்தேன்….உனக்கு இப்போ நான் போகுற டைம் நிச்சயம் ஒத்து வராதுன்னு எனக்குத் தெரியும். உன்கிட்டே சொன்னா என்னையும் போக விடமாட்டே…எதையாவது சொல்லி என்னை நிப்பாட்டிடுவே…அதுக்கு பயந்துதான் உன்கிட்டே சொல்லாம இதைச் செய்தேன்….நாம என்ன சின்னப் பிள்ளைகளா…எல்லாத்துலயும் ஒண்ணுகூடி அலையுறதுக்கு? இந்தக் கம்ப்யூட்டர் கோர்ஸையும் முடிச்சிட்டு. எங்கயாச்சும் வேலை கிடைச்சிச்சின்னா அவரவர் திசைல ஆளுக்கொரு பக்கமாப் போகப்போறோம்…எதுக்கு அநாவசியமா அதுக்குள்ளயும் ஒருத்தருக்கொருத்தர் மனஸ்தாபம்? அதான் உன்கிட்டே சொல்லாமயே இதைச் செய்துக்கிட்டேன்…..இதென்னடா பெரிய குத்தமா? – உன்கிட்டே…உன்கிட்டே என்று  அவன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனான். எதற்கு இல்லாததையும், பொல்லாததையும் அவனாகவே கற்பனை செய்து கொண்டு இப்படி விபரீதமாய்ப் பேசுகிறான்? அப்படியென்ன அவனுக்கு வெறுப்பு? திடீரென்று இதென்ன விலகிய மனநிலை? ரொம்பவும் பொறுப்பாகச் சிந்திப்பதாக அவனாகவே நினைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏன் இப்படி விலக்கிக் கொள்ள வேண்டும்? வீணாய்க் கஷ்டப்படுத்திக் கொள்கிறானே…என்றிருந்தது எனக்கு.

நான்தான் சொன்னனேடா…அவன் ஆளே புரியலைன்னு…என்றாள் அம்மா.

என்னம்மா சொல்றே…? அப்படீன்னா? …ஏதோ  சொல்கிறாளே அம்மா….?

அப்படீன்னா…அப்டித்தான்…அதெல்லாம்கேட்காதே….அவன் விலகிடுவான் பாரு உன்னை விட்டு……அவனே நம்ம வீடு வர்றதை நிறுத்திடுவான் …அப்டித்தான் தோணுது எனக்கு…

அம்மா என்ன சொல்கிறாள்? கமலபாலனை ஏதேனும்  தப்பான முறையில் பார்த்திருப்பாளோ? ஏதேனும் மதுபானக் கடையில் வைத்துப் பார்க்க நேர்ந்திருக்குமோ? நானும் கொஞ்சம் நடந்திட்டு வர்றேன் என்று மெயின்ரோட்டில் இருக்கும் காய்கனி அங்காடிகளுக்குக் கால் வீசிக் கிளம்பி விடுகிறாளே? அப்போது ஏதேனும் பார்வையில் பட்டிருக்குமோ? -வெளிப்படையாய்ச் சொல்லாமல் ஏன் அம்மாவும் இப்படிப் பூடகமாய்ச் சொல்லி வதைக்கிறாள்?

அவன் என்னடாவென்றால் திடீரென்று என்னிடமிருந்து விலகியது போல் பேசுகிறான். என்னிடம் எதுவும் சொல்லாமல்  தனித்து இயங்கத் தலைப்பட்டிருக்கிறான்? வீட்டுக்குப் பார்க்க வருவதையே தவிர்த்திருக்கிறான். என் கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து ஓடுவதுபோல் மறைந்து திரிகிறான். இந்நிலையில் அம்மாவும் இப்படிப் பேசுகிறாளே? எங்கள் நட்பு அவ்வளவுதானா? நான் ஒன்றும் தப்பு செய்யவில்லையே?

கேரம்போர்டின் காய்கள் நகர மறுத்தன. சிவப்பும் அதனுடைய ஃபாலோ அப்…ஆன கறுப்புக் காயும்….வீழ்த்த மனமின்றி கவனிப்பாரற்று ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. மற்ற கறுப்பு. வெள்ளைக் காய்களை மனமின்றி வெவ்வேறு  போக்கில் தட்டி நகர்த்திக் கொண்டிருந்தேன் நான். எதையும் குழிக்குள் வீழ்த்தும் மனநிலையில் அப்போது இல்லை. எதிரில் அம்மாவும், பக்கவாட்டில் அப்பாவும், அவருக்கு இணையாக கமலபாலனும் அமர்ந்து ஆடிய நாட்கள் நினைவுக்கு வந்தன. அப்போதெல்லாம் அவனோடு இஷ்டமாக இருந்த அப்பா…இப்போது ஏன் அவனைப்பற்றிப் பேசுவதேயில்லை? என்ற கேள்வி என்னை அரித்தது.

நட்பு…நட்பு என்று சொல்லி என்ன பயன்? கூடச் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கும், தின்பதற்கும், சினிமாப் பார்ப்பதற்கும்தானா சிநேகிதன்? அவனே ஆளைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறானே? அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மா அவனோடு சரியாகப் பேசாததும், சிரித்துப் பேசி சந்தோஷிக்காததும், ஏதாச்சும் சாப்பிடு என்று  எப்போதும் உபசரிக்காததும்தான் இன்றைய நிலையின் அடையாளமோ?

சும்மாவானும் அதைப் போட்டு நொட்டு…நொட்டுன்னு ஏன்டா தட்டிக்கிட்டிருக்கே…ஏதாச்சும் உபயோகமா புத்தகம் இருந்தா எடுத்துப் படி…அநாவசியமா டயத்தை வேஸ்ட் பண்ணாதே…! கேரம் போர்டைத் தூக்கி மூலைல கிடாசு…தலவேதனையா இருக்கு…

அப்பா பொத்தாம் பொதுவாய்க் கண்டிக்க ஆரம்பித்தார்.

கம்ப்யூட்டர் கோர்சுக்கு என்னென்னவோ புத்தகமெல்லாம் வாங்கினியே…அதெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு என்ன ஏதுன்னு பார்க்க வேண்டிதானே…சாயங்காலம் இன்ஸ்டிட்யூட் போய் பிராக்டீஸ் பண்றதுக்குச் சுலபமா இருக்குமில்ல….? எதுக்கு நேரத்தையம், காலத்தையும் வீணடிக்கிறே…? கரெஸ்பான்டென்ஸ் கோர்சுல ஏதேனும் படிக்க முடியுமா பாரு…உங்கப்பாட்டச் சொல்லி பணம் புரட்டிக் கட்டச் சொல்றேன்…வீட்டுல இருந்தமேனிக்கே படிக்கலாம்ல…பிஎஸ்ஸி…கம்ப்யூட்டர் சயின்ஸ்…பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ன்னு ஏதேதோ சொல்றாங்களே…அதுல ஏதாச்சும் ஒண்ணைப் படிக்கிறதுக்குக் டிரை பண்ணு..அம்மா அனத்தி எடுத்தாள்.

கமலபாலன் நட்பு விலகிப் போனதே என்று நான் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதில் அப்பா, அம்மா இருவரும் மிகக் கவனமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றியது.

எங்கயாச்சும் செகன்ட்உறான்ட் கம்ப்யூட்டர் கிடைக்குமா ராஜா…? அப்டீன்னா பாரேன்…யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களா? உங்க ஸ்கூல்ல கூட பிரின்ஸிபால்ட்டக் கேட்டுப் பாரு…ஏதாச்சும் வழி பிறக்கும்…வீட்டுல வீணாப் பொழுதைக் கழிக்காம உபயோகமா நீயே பிராக்டீஸ் பண்ணலாமில்லியா? வாங்கி வச்சிருக்கிற இந்தப் புத்தகங்கள் வழி பயிற்சி பண்ண முடியுமா முடியாதா? அப்டி ஏதாச்சும் முயற்சி பண்ணிப் பாரேன்…உபயோகமா இருக்கும்னா சொல்லு….பணத்துக்கு வழி பண்றேன். கடன்தான் வாங்கணும்…..படிப்புக்குத்தானே செலவு பண்றோம்…பரவால்ல…

ஒரு வாரம் கழிந்தது. கமலபாலன் நினைப்பே இல்லாமல் கணினி வகுப்பிற்குச் சென்று வந்து கொண்டிருந்தேன் நான். அப்பா தன் நண்பர் ஒருவர் மூலமாய் ஒரு கணினியை வீட்டில் கொண்டு வந்து இறக்கியிருந்தார். அதற்கென்று உள்ள மேஜையையும் வாங்கி தனி அறையில் அதற்கான ப்ளக் பாயின்ட்களை ஒரு எலெக்ட்ரீஷியனை வைத்து பொருத்தச் செய்து கணினியை ஜன்னலுக்குச் சற்று ஓரமாய் காற்று வருவதுபோலான ஒரு ஓரத்தில் இருத்தி, இனிமே உன் வேலையை நீ வீட்டுலயும் தொடரலாம். பணம் கட்டிப் படிக்கிற ஸ்கூல்ல ஒரு மணி நேரம்தான் அலவ் பண்ணுவான். இங்க உன்னைக் கேள்வி கேட்க யாரும் கிடையாது. அங்க படிச்சதை இங்க பயிற்சி செய்யவும், புதிசு புதிசாக் கண்டு பிடிக்கவும், உன் கம்ப்யூட்டர் நாலெஜ்ஜை சுதந்திரமா வளர்த்துக்கவும்  இனி எந்தத் தடையுமில்லை. இன்னிக்கு இதுதான் கை ஓங்கியிருக்கு. இதுல நீ நல்லபடியா மேல வரணும்ங்கிறது என் எண்ணம். ஆசை. அதனாலதான் இதைச் செய்திருக்கேன்…வேறே எதைப்பத்தியும் நினைக்காம, படிப்புல கவனம் செலுத்து….நீ ஒருத்தன்தான் எங்களுக்கு. உன்னோட நல் வாழ்க்கைதான் எங்க குறிக்கோள்….எங்க எண்ணத்துல மண் விழாம நீ அதைப் புரிஞ்சு நடந்துக்குவேன்னு நினைக்கிறேன்….சொல்லிவிட்டு என் தலையில் கை வைத்து அப்பா ஆசீர்வாதம் செய்தார். எதற்கு இவ்வளவு பேச்சு? என்னவோ பயந்து போய்ச் சொல்வதாகத் தோன்றியது எனக்கு. என் மீது அவர்களின் நம்பிக்கை இவ்வளவுதானா என்று தோன்றியது.

அவர் கடைசியாய்ச் சொன்ன அந்த வார்த்தைதான் என் மனசை உறுத்திக் கொண்டேயிருந்தது. எங்க எண்ணத்துல மண் விழாம…..எதற்காக அப்பா இப்படிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்? எதை மனதில் வைத்து அவர் இவ்வளவு பயந்ததுபோல் பேசுகிறார்? அம்மாவும் அப்பாவின் வார்த்தைகளை ஆமோதிப்பது போல் ஆமாண்டா ராஜா…என்று சொல்லி  நெற்றியை வழித்து ஆசீர்வதித்தாளே? அப்போது அவள் கண்கள் ஏன் அப்படிக் கலங்கியிருந்தது?

பெற்றோரின் நம்பிக்கைகள் சிதறாது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் அடுத்தடுத்த நாட்களில் இயங்கிக் கொண்டிருந்த நான்…அன்று கேள்விப்பட்ட, அதுவாக நேருக்கு நேர் காதுக்கு வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

டேய் ராஜா சேதி தெரியுமா? நம்ப கமலபாலன்…அதாண்டா உன்னோட டியரஸ்ட்…டியர்மோஸ்ட் .ப்ரெண்டு…ஒரு வாரமா ஆளக் காணலன்னு சொன்னீல்ல….அவன் எங்க போயிட்டு வந்திருக்கான் தெரியுமா?  நாங்க கண்டுபிடிச்சிட்டமே?

கேட்டுவிட்டு கிருஷ்ணராஜூ சிரித்தபோது அவன் கூட நின்ற இன்னும் ரெண்டு மூன்று நண்பர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.  சொல்லலாமான்னு கேட்டுட்டுச் சொல்லுடா…என்றான் ஒருவன். அதிலேயே ஏதோ கேலி படிந்திருப்பதை உணர்ந்தான் ராஜா.

என்னன்னு விஷயத்தச் சொல்லாம நீங்களா சிரிச்சா எப்படிடா? என் நண்பனைப் பத்தி எதுக்கு அநாவசியமா கேலி பண்றீங்க?  என்று எரிச்சலோடு கேட்டான் ராஜா. எவர்களையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று ஒதுங்கியிருந்தானோ அவர்கள் இன்று வலிய வந்து பேசுகிறார்கள். எதையோ சொல்ல முற்பட்டு தன்னைக் கேலி செய்ய முனைகிறார்கள்? பொழுது போகாதவர்களின் செய்கை இப்படித்தானே இருக்கும்?

விழுப்புரம் பக்கத்துல ஒரு ஊர்ல  திருவிழாவாம் – ஒருவன் புதிர் போடுவதுபோல் சொன்னான்.

அதை ஏண்டா அப்படிச் சொல்றே? அந்த ஊருக்குன்னு ஒரு பேர் உண்டுதானே…அதச் சொல்லிச் சொல்ல வேண்டிதானே…? என்றான் இன்னொருவன்.

சரி…நீங்க யாரும் சொல்ல வேண்டாம்….நானும் கேட்க வேண்டாம்…நீங்க போகலாம்….என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாய் அகன்றான் ராஜா.

இன்னும் சொல்லவே இல்ல…அதுக்குள்ள பயந்திட்டு ஓடுறாம்பாரு….என்று கைகொட்டிச் சிரித்தான் அதுவரை பேசாமலிருந்த இன்னொருவன்.

வேலையற்றவர்கள், வெட்டியாய்ப் பொழுது போக்குபவர்கள்…தாங்கள் என்ன செய்வது என்று யோசிப்பதை விட அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே கவனமாய் இருப்பவர்கள்…அவர்களை மன ரீதியில் தொந்தரவு செய்பவர்கள். கெடுக்க நினைப்பவர்கள். அடுத்தவன் மேலேறி முன்னேறி விடாமல் இருப்பதற்குண்டான வழிகளைச் சதா சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்….இம்மாதிரி நாலு பேர் இருந்தால் போதும் ஊரே கெட்டுடும்….- நினைத்தவாறே வேக வேகமாய் நடந்து கொண்டிருந்த ராஜாவின் மனதில் அந்த விழுப்புரம் பக்கத்து ஊர் என்று சொன்ன அந்த ஊரின் பெயர் மனதில் ஓடியது..

கமலபாலன் கமலியாயிட்டாண்டோய்…. என்று அவர்கள் இவனைப் பார்த்துக் கத்தியது சன்னமாய்த் தன் காதில் விழுந்ததும் அதை உறுதி செய்தது.

அடப்பாவமே…! என்று அவன் வாய் அவனையறியாமல் முனகியது. அடுத்த நொடி இருந்தால் என்ன…அதென்ன பாவமா…அவர்களும் நம் சமூகத்தில் ஒரு அங்கம்தானே…நம்மோடு சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தானே…? ஒவ்வொருவரும் அவரவர் குல தெய்வ வழிபாடு செய்வதைப்போல் அவர்களும் அவர்களின் தெய்வங்களை வழிபடுகிறார்கள். இதிலென்ன தவறு இருக்க முடியும்? முடியுமானால் அவர்களோடு சேர்ந்து நாமும் கும்பிட வேண்டும். குதூகலிக்க வேண்டும். இல்லையென்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அதுதான் மரியாதை.முறைமை. அதை விடுத்து வேறு மாதிரி அநாகரீகமாய் நினைப்பதும், நடந்து கொள்வது எப்படிச் சரியாகும்? ஓட்டுரிமையே வழங்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு. இன்னும் என்னென்னவோ சலுகைகளையெல்லாம் அரசே வழங்கியிருக்கிறது.  ரயிலில் ஒரு முறை சென்னை சென்றபோது வந்த அவர்களை அமர்த்திஅவர்களோடு தான் பேசியதும், அவர்களுக்கான அரசு சலுகைகளை அவர்களுக்கு உணர்த்தியதும், நன்றி சொல்லி அவர்கள் வணங்கிவிட்டுப் போனதும்…

ராஜாவின் மனசு கமலபாலனை விட்டு இம்மியும் பிரளவில்லை. என்றானாலும் அவன் என் இனிய நண்பன். இதயத்தோடு ஒன்றி விட்டவன். கமலபாலன் கமலி ஆகிவிட்டால் என்ன?  என்றும் அவன் என் நண்பன்தான்! அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ராஜா தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

.

                                    --------------------------------------

 

             

           

கருத்துகள் இல்லை:

  எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு