30 மே 2024

 

அவளுக்கென்றோர் மனம்  -சிறுகதை – சங்கு இதழ் – ஏப்-ஜூன் 2024


                ந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு... – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு கணேசனின் இந்த வார்த்தைகள் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்.

      ம்ம்...பார்த்தீங்களா...இவ்வளவு நேரமாச்சு...இன்னும் வரலை...என்னன்னு நினைக்கிறது?- வருமா, வராதா? - சுசீலாவின் வார்த்தைகளில்  கோபம் கனன்றது.

      இதிலே நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? இன்னைக்கு அந்தம்மா வேலைக்கு வரலை...அவ்வளவுதான்...

      ஆமாம், ரொம்ப ஈஸியாச் சொல்லியாச்சு...இது மத்தவாளுக்கும் புரியாதா? திடீர் திடீர்னு வராம இருந்தா எப்படி? அதுதானே கேள்வி. சொல்லிக்கொண்டே அவள் கைகள் அரக்க அரக்கப் பாத்திரத்தைத் தேய்த்தன. சுற்றிவர மலையாய்க் கிடக்கும் பற்றுப் பாத்திரங்கள். அவள் தேய்த்துத் தேய்த்து வைக்க நான் அலம்பி அலம்பி எடுத்து உள்ளே கொண்டு வந்து அடுக்கினேன்.

      அடுத்து வர்ற போது கேளு....கேட்டாத்தானே அந்தம்மாவும் பயந்துக்கிட்டு ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...இல்லன்னா நா சொன்ன மாதிரி நிறுத்திப்புடு...

      என்னத்தக் கேட்குறது...பேசாம நிப்பாட்டிட வேண்டிதான்....எதுக்கு இப்படிக் கஷ்டப்படணும்?ஆயிரம் ரூபாயும் கொடுத்திட்டு இப்படி அடிக்கடி வராம இருந்தா? மாசத்துல பத்து நாள் நாமளே செய்துக்கிறதுக்கு எதுக்கு அந்தம்மாவுக்கு இப்படிக் கொடுக்கணும்? நம்மள விட்டா ஆளில்லன்னு நினைச்சிடுச்சி போலிருக்கு...

               இப்பச் சொன்ன பார், அதுதான் கரெக்ட்...நிப்பாட்டிடு...ரூபா மிச்சம். உடனுக்குடனே தேய்ச்சிட்டோம்னு வச்சிக்க....மடைல பாத்திரமே விழாதே...? எதுவுமே பழக்கம்தான்...ஒரு சிஸ்டத்துக்குப் பழகிட்டோம்னா பிறகு சிரமமாத் தெரியாது. அந்தம்மா ஒண்ணு இருக்குன்னுதானே பேசாமப் போட்டு வைக்கிறோம்...அது நினைச்சா வருது...நினைச்சா இருந்துக்குது...இன்னைக்கு வரேன், வரல்லைன்னு ஒரு போன் பண்ணியாவது சொல்லலாம்ல......என்ன எதுக்குன்னு நீயும் கேட்க மாட்டேங்குற...எதாச்சும் ரெண்டு வார்த்தை கேட்டாத்தானே அந்தம்மாவும் ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...வந்தியா, சரி...வரல்லியா அதுவும் சரின்னு இருந்தா? ஏத்தமாத்தானே போகும்...?

      ஏன், நீங்க கேட்க வேண்டிதானே?

      அதெப்படீடி...நான் கேட்குறது?  பொம்பளப்பிள்ளைட்டப் போயி...?

      ஏன், கேட்டா என்ன? கூச்சமா இருக்கா? இல்லை வெட்கமா?

      உனக்குக் கேட்குறதுக்குத் தெம்பில்ல...என்னைத் தூண்டி விடுறயாக்கும்? நான் கேட்டுப்புடுவேன் ரெண்டே வார்த்தைல..எனக்கென்ன வெட்கம்? முப்பத்து மூணு வருஷமா ஆபீஸ்ல நிறையப்பேற மேய்ச்சிட்டுத்தான் இருக்கேன்....அப்புறம் அந்தம்மா வேலையை விட்டு நின்னுடுச்சுன்னா? அதுக்குத்தான் யோசிக்கிறேன்...வேலைக்கு அங்கங்க விசாரிச்சு ஆளப் பிடிக்கிறது என்ன பாடா இருக்கு? முதல்ல யார் இருந்தாங்க? ஏன் நின்னாங்க? எவ்வளவு குடுத்தீங்க? அது இதுன்னு என்னெல்லாம் கேள்விக? இதுக்கெல்லாம் பதில் தயார் பண்ணிக்கிட்டுத்தான் தேடவே ஆரம்பிக்கணும். தயார் பண்ணி வச்சிருக்கிற பதில் கேட்குறவங்களைத் திருப்திப் படுத்தணும். அடுத்து யார் வேலைக்கு வரப்போறாங்களோ அவங்களே நம்மளை நேர்காணல் நடத்தினாலும் நடத்துவாங்க...அதுல நாம தேறினாத்தான் வேலைக்கு வர சம்மதிப்பாங்க...இது இப்போதைய காலம். அதுதான் பலமான யோசனையா இருக்கு. ஒரு ஆள நிறுத்துறது பெரிசில்ல. அடுத்து ஒருத்தரைப் பிடிக்கிறது இருக்கு பாரு அதுதான் மலை.  ரெண்டே வார்த்தைல நான் பேசிப்புடுவேன்...அதுவா பெரிசு? காரியம்தான் முக்கியம். வீரியமில்லை.      

அப்டி என்னதான் கேட்பீங்களாம்? அதத்தான் சொல்லுங்களேன் பார்ப்போம்...

      பார்த்தியா, இதானே வேண்டாங்கிறது....என்ன கேட்கணும்னு எங்கிட்டக் கேட்டுக்கிட்டு நீ கேட்கப் போறியாக்கும்? உனக்கு அந்தம்மாட்ட நேரடியாக் கேட்குறதுக்குப் பயம்....வேலைக்காரிகிட்டப் பயந்து சாகுற ஆள இப்பத்தான் பார்க்கிறேன் நான்....

      பயமென்ன பயம்...அதெல்லாம் ஒண்ணுமில்லே.....

      ஒண்ணுமில்லேன்னா என்ன அர்த்தம்? அந்தம்மாவ இப்படி இஷ்டத்துக்கு வளர்த்து விட்டது நீதானே? நாந்தான் சொன்னேன்ல...கராறா ஆரம்பத்துலயே சொல்லிப்புடுன்னு...எதத்தான் சொன்ன நீ? இன்னின்ன வேலை செய்யணும்னு  சொல்லியிருந்தேன்னா அத ஏன் செய்யலைன்னு கணக்கு வச்சிக் கேட்கலாமே?   ஐந்நூறு ரூபாய்க்கு வேலைக்கு வந்த அந்தம்மா இப்ப ஆயிரம் வாங்குது...சம்பளம்தான் கூடியிருக்கு...வேலை அதேதான்....ஆனா ஒழுங்காச் செய்யுதா? கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான். வாரம் ஒரு முறை வீடு துடைக்கணும்னு சொன்னே....செய்யுதா? நீ கிடந்து துடைச்சிட்டிருக்கே...இதுல அப்பப்போ என்னைவேறே போட்டு பாடாப் படுத்தறே...அன்னைக்கு நீ செய்திட்டிருந்தப்போ பாதில வந்த அந்தம்மாவ மீதியைத் துடைச்சு முடின்னு கூட உனக்குச் சொல்லத் தைரியமில்ல...வாய் வர மாட்டேங்குது...அந்தம்மாவும் கொண்டாங்க நான் துடைக்கிறேன்னு சொல்ல மாட்டேங்குது...சம்பளம் ஏத்தினியே...அது வீடும் துடைச்சிக் கொடுத்திடுன்னு சொல்லித்தானே? அப்பச் சரின்னு தலையாட்டிப்புட்டு இப்படி மெத்தனமா இருந்தா எப்படி? தினசரி காலைல எட்டரைக்கு வந்திடு...அப்பத்தான் எனக்கு சரியா இருக்கும்னு சொன்ன...கேட்டுச்சா...பக்கத்துல,  பாங்குல வேலை பார்க்குதே அந்த மேடம்  வீட்டுக்குப் போயிட்டுத்தான் வருது...நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்த பின்னாடிதானே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போச்சு....அப்போ முதல்ல நம்ம வீட்டுக்குத்தான கரெக்டா வரணும்...காலைல ஏழுக்கெல்லாம் அங்க நுழைஞ்சிடுது...நாந்தான் வாக்கிங் போயிட்டு வரச்சே பார்க்கிறேனே...

      அதுக்கென்ன பண்றது? அந்த வீட்டுல டிபன், சாப்பாடு, அப்பப்போ மிஞ்சுற காய்கறி, தேங்கா, மாங்கா, துணிமணின்னு நிறையக் கொடுக்கிறாங்க... அங்கதான நோங்கும்...!

      நீயே இப்படிச் சொன்னா? உனக்கு எங்கிட்டதான் வாய் கிழியுது..என்னை ஜெயிக்கணும்ங்கிற மாதிரிப் பேசுற....அந்தம்மா வந்திச்சுன்னா கப்சிப்னு ஆயிடுற...அதுவும் அத சாதகமா எடுத்துக்கிட்டு என்னவோ வந்தோம், செய்தோம்னு கழிச்சிக் கட்டிட்டுப் போயிடுது....ஒரு நாளைக்காச்சும் திருப்தியா வேலை செய்திருக்கா சொல்லு...மனசேயில்லாத மாதிரிச் செய்யும்.. எப்பப்பாரு, உடம்பு முடியலைங்கிற மாதிரி .முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு...அது எப்டியோ இருந்திட்டுப் போகட்டும்...நா அதுக்குச் சொல்லலை...அது சிரிச்சா என்ன அழுதா என்ன? நமக்கு வேலை நடந்தாச் சரி...ஆனா கொடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்க்கணுமில்ல...?

      எத்தனையோ முறை நானும் சொல்லிட்டேன்...பீரோவுக்கு அடிலயும், கட்டிலுக்கு அடிலயும் விளக்குமாத்த விட்டுக் கூட்டுன்னு...என்னைக்காச்சும் கேட்டுறுக்கா? ஏழு ரூம் உள்ள இந்த வீட்டை ரெண்டு நிமிஷம் கூட ஆகாது....ஒரு இழுப்பு இழுத்திட்டுப் போயிடுது..விளக்குமாத்துக்கு வலிக்குமான்னு ஒரு நாளைக்குத்தான் கேளேன்....அடில கிடக்குற தூசி அப்டியேதான் தேங்கிக் கிடக்கு நாள்கணக்கா...கத்த கத்தயா, சுருட்டை சுருட்டையா... எல்லாம் உன் தலை முடிதான் வேறென்ன...?

      உங்களுக்கு என் தலைய உருட்டலேன்னா ஆகாதே...?

      உன் தலையை உருட்டலை, முடியத்தான்....உன் தலைய உருட்டி நா என்னடி செய்யப்போறேன்...இப்டி இருக்கியேன்னு சொல்ல வந்தேன்...உன்னப் பார்த்தா பாவமா இருக்கு எனக்கு. சரி சரி கிளம்பு...ஆபீசுக்கு நேரமாகல?

      அப்பயே ஆயாச்சு..இன்னைக்கு லேட் அட்டென்டன்சுலதான் கையெழுத்துப் போடணும்...அநேகமா மூணு லேட் ஆகியிருக்கும்...அரை நாள் லீவு கட்.....இத சரி பண்ணுங்கோ.... – சொல்லிக்கொண்டே என் முன் வந்து நின்றாள் இடுப்பில் செருக வேண்டிய புடவை மடிப்பைப் பிடித்தவாறே...

      அவள் பிடித்திருக்கும் முன்பகுதி  மடிப்பின் கீழ் தொங்கும் நான்கு விசிறி மடிப்புகளை ஒன்றாகப் பிடித்து அயர்ன் பண்ணியதுபோல் செய்து இழுத்து விட்டேன். எடுத்துச் செருகிக் கொண்ட போது ஏதோ ஐ.ஏ.எஸ் ஆபீசர் போலத்தான் இருந்தாள். தோற்றத்தில் இருந்தால் போதுமா? நிர்வாகம் என்பது வெறும் தோரணையில் மட்டுமில்லையே? கமாண்டிங் கெபாசிட்டி என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள்? இங்கு வேலைக்காரியிடமே இப்படித் தயங்கித் தடுக்கிடுகிற இவள், அலுவலகத்தில் பதினைந்து பேர் கொண்ட பிரிவினை எப்படி மேய்க்கிறாள்?

      எல்லாம் லீவு லீவுன்னு போயிடறதுகள் எனக்கென்னன்னு...எல்லாத்தையும் நாமளே கட்டிண்டு அழ வேண்டியிருக்கு...எதுகளுக்கும் ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ்ல எழுதத் தெரில..அதாச்சும் பரவால்ல...சமாளிச்சிக்கலாம்...சொல்றதச் செய்தாலே போதும்...ஏதாச்சும் சொன்னா படக்குன்னு ஃபைலை. நம்ம டேபிள்ல கொண்டு வச்சிடுறா...இந்த மட்டுக்கும் பொறுப்பு விட்டுதுன்னு...வேலை கத்துக்கணும்ங்கிற ஆர்வமே இல்லை யாருக்கும்...நம்ம செக்ஷன் வேலையை நாமதான் பார்க்கணும்ங்கிற கெத்து வேணாமோ...வெறுமே பைல்களை அடுக்கி அடுக்கி வச்சிண்டிருந்தாப் போதுமா...வேலை யார் பார்க்கிறது? சாயங்காலமாச்சின்னா டேபிளைத் துடைச்சி வச்சிட்டுப் போயிடுறா...ரொம்ப சின்சியர் மாதிரி... மாசக் கடைசியாச்சின்னா போய் ஏ.டி.எம்ல மட்டும் நீட்டி எடுக்கத் தெரியறதோல்லியோ? அத நாம சொல்லப்படாது. சொன்னாக் குத்தமாயிடும்...அது அவாளோட உரிமையாச்சே...! அப்படீன்னா கடமை? அதக் கேட்கப்படாது...

நன்னா லாங்க்வேஜ் எழுதறவாளும் இருக்கா...அவா வேலை செய்ய மாட்டா....என்னைக்கோ ஆரம்பத்துல  சின்சியரா வேலை செய்து வாங்கி வச்சிருக்கிற பேரைக் கெட்டியாப் பிடிச்சிண்டு ஓட்டிண்டிருக்கா....வேலை செய்யாதவாளைப் பார்த்துப் பார்த்து நாமளும் ஏன் செய்யணும்ங்கிற அலட்சியம் வந்துடுத்து அவாளுக்கும்...ஒவ்வொரு ஆபீசிலயும் ஒவ்வொரு செக்ஷன்லயும் இன்னைக்கும் ஒத்தர் ரெண்டு பேர் அவாஉண்டு அவா வேலையுண்டுன்னு இருக்கிறவா இருக்கத்தான் இருக்கா...அப்படிப்பட்டவாளை வச்சித்தான் ஆபீஸ்களே ஓடிண்டிருக்குன்னு கூடச் சொல்லலாம்...எப்படி வேலையே செய்யாதவாளை மாத்த முடியாதோ அதுபோல வேலை மட்டுமே கதின்னு கிடக்கிற இவாளையும் யாராலேயும் மாத்த முடியாது...

இதுல வி.ஆர்.எஸ் வேறே கொடுக்கப் போறானாம்...இன்னும் பத்து வருஷம் சர்வீஸ் இருக்கிறவாளெல்லாம் சரி, ஓ.கே.ன்னுட்டு வீட்டுக்கு வர முடியுமா? நிறையப் பேரு தயாராத்தான் இருக்கா...ஏதாச்சும் வள்ளிசாக் கொடுத்தா வாங்கிண்டு கழன்டுக்கலாம்னு...வள்ளிசா எங்க கொடுக்கப் போறான்...கையை நீட்டச் சொல்லித் தடவித்தான் விடுவான்...நிறையப் பேரு மெயினா வேறே பிஸ்னஸ் அது இதுன்னு பார்த்துண்டு, இதைத்தானே சைடா வச்சிண்டிருக்கா...? நல்லா யோசிச்சுப் பாருங்கோ...ஒரு நாளைக்கு எழுநூறு, ஆயிரம்னு வாங்கறா எல்லாரும்...அதுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம நாம வேல செய்றோமா? வெளில ஒவ்வொருத்தர் எத்தனை கஷ்டப்படறா? கண்ணால பார்க்கத்தானே செய்றோம்? அப்புறம் ஏன் அவன் வி.ஆர்.எஸ் கொண்டுவர மாட்டான்? மூவாயிரம், ஐயாயிரம்னு செய்றதுக்கு எத்தனை பேர் காத்துண்டு க்யூவில நிக்கிறா?  அவாளைக் கூட்டிண்டு வந்து வேலையை வாங்கிப்பிட்டு அத்தக் கூலி மாதிரிக் கொடுத்தனுப்பப் போறான்...எல்லாமும் நீங்களா வரவழைச்சிண்டதுதானே? நாம ஒரு ஸ்தாபனத்துல இருக்கோம்னா அதோட முன்னேற்றத்துக்கு உயிரக் கொடுத்துப் பாடு பட்டிருந்தோம்னா, அட அதுவே வேண்டாம் அவா அவா வேலையை ஒழுங்கா செய்திருந்தோம்னா,  இன்னைக்கு இந்த நிலைமை வருமா? வேலை செய்யாம அதை நஷ்டத்துல கொண்டு போய் விட, நஷ்டத்த ஈடு கட்டுறதுக்கு ஆட்களை வெளியேத்தறான் அவன்...செய்யத்தானே செய்வான்...வெளியேற்றாதே...வெளியேற்றாதேன்னு வெளில நின்னுண்டு கோஷம் போட்டா நடக்குமா? அப்டியே வெளில அனுப்பிடுவான் போலிருக்கு...

      கோஷம் போடுறதுலயும் இப்ப சந்தேகம்...ஏன்னா இவாளே நாலு அஞ்சுன்னு பிரிஞ்சி இருக்கா...எவன் எப்போ யார் கூடப் போய் என்ன பேசறான்னு அவுங்களுக்குள்ளயே தெரியாது..பக்கத்துல நிக்கிறவன் சரியான ஆள்தானாங்கிறதுலயே சந்தேகம்....உள்ளே என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியாம வெளில நம்பிக்கையோட நிறைய அப்பாவிகள் கூடித்தான் இருக்காங்க...இன்னமும் விகல்பமில்லாம கூடத்தான் செய்றாங்க...வெறுமே கூடிக் கலையற கும்பலாத்தானே எல்லாமும் இருக்கு....என்ன சாதிக்க முடிஞ்சிது...நடக்குறது நடந்துக்கிட்டுதான் இருக்கு...ரொம்பக் கொஞ்ச காலம் வேணும்னா தள்ளிப் போட்டிருக்கலாம்...இவுங்க ஸ்டிரைக்குனால உண்டான பலன் அவ்வளவுதான்...பெர்மனென்ட் சொல்யூஷன் என்ன? ஸ்தாபனம் என்ன நினைக்குதோ அதுதான் நடந்துக்கிட்டிருக்குது....

 இதெல்லாம் கேட்கக் கிளம்பினா,  கேட்டாக் குத்தம்....கருங்காலின்னுவா..கேட்கத்தான் நினைக்கிறது...எங்க கேட்க முடியறது? .உரிமையை உரிமையோட கேட்குற தகுதி எப்ப வருது? நம்ம கடமையைத் தவறாமச் செய்யறபோதுதானே? ஆனா ஒரு துரதிருஷ்டம். தன் கடமையை ஒழுங்காச் செய்றவாளுக்கே இதையெல்லாம் கேட்க முடியாமப் போயிட்டதுங்கிறதுதான்...இதல்லாம் சொல்ல முடியாது....அதான்...யார் சந்தாக் கேட்டாலும் தொலையறதுன்னு நானும் கொடுத்திடுறது...அவாளுக்கும் தெரியும்...காசு வந்தாச் சரின்னு அவாளும்தான் வாங்கிக்கிறா...அதையும் சொல்லியாகணுமே...எங்க பாலிஸிக்கு நீங்க எதிரான கருத்து உள்ளவங்க...ஆகையினால உங்ககிட்ட சந்தா வாங்க மாட்டோம்னு யாராவது சொல்றாளா என்ன? இல்ல, எல்லாத்துக்கும் சந்தாக் கொடுக்கிறீங்களே...எப்டி மேடம்?னு இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருக்காளா?சந்தா இல்லாட்டா நன்கொடைன்னு போட்டுப்பாளோ என்னவோ... என்னைமாதிரியே நிறையப் பேரு இருப்பா போலிருக்கு..நாலு மாடியிருக்கே...அவாளும் கேட்கத்தான் நினைக்கிறா...ஆனா கேட்குறதில்லே...ஏன்னு அவாளுக்கே தெரியல போலிருக்கு...ஏதோஎல்லாமும் ஓடிண்டிருக்கு...அவ்வளவுதான்...ஆனா ஒண்ணு...எல்லாரும்வேணுங்கிறவாதான்...யாரையும் பகைச்சிக்கிறதுக்கில்லை...

பேச ஆரம்பித்தால் அத்தனை விஷயங்களைக் கோர்வையாகச் சொல்வாள்.கடைசியில் எவ்வளவு ஜாக்கிரதையாக ஒரு வார்த்தை சொன்னாள் பார்த்தீர்களா?  எல்லாமும் அறிந்தவள். எதுவும் செய்ய ஏலாதவள். அதுதான் பாவம்.

சொன்னதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று கேட்டேன் நான்.

உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா? அதென்ன எல்லா சங்கத்துக்கும் சந்தாக் கொடுக்கிறது? அசிங்கமாயில்லே?  அதை வெட்கமில்லாம வேறே சொல்லிக்கிறே? இருக்கிறதிலயே எது பெட்டர்னு பார்க்கிறது. அதுக்கு மட்டும் கொடு. மத்தவாள்ட்ட நான் அந்தச் சங்கம்னு சொல்லிடு...அவ்வளவுதானே...?

நான் ஏன் அப்படி இருக்கணும். எனக்கென்ன வந்தது? வாயிழந்து அவங்களைக் கேட்காம இருக்கச் சொல்லுங்க....கேட்குறாங்க...பாவமா இருக்கு...அதனால கொடுக்கிறேன்...

அது பொய்யி...எந்தச் சங்கத்துக்காரனாலும் உனக்கு எந்தத் தொந்தரவும் வந்திடக் கூடாதுங்கிற சுயநலம்...அதுதான் உண்மை. நீ ஒரு பச்சோந்தி மாதிரி....எல்லா இடத்துக்குத் தகுந்த மாதிரியும் நிறம் மாறிப்பே...அவ்வளவுதான்...சரி இவ்வளவு பேசறியே...இந்தச் சங்கத்துக்காரங்களெல்லாம் ஸ்டிரைக்குன்னு இறங்கும்போது என்னைக்காவது அவுங்க கூடப் போய் நீ நின்னிருக்கியா? ஒரு நாளைக்காவது கோஷம் போட்டிருக்கியா?

அதுதான் நமக்கும் சேர்த்து அவுங்க போடறாங்களே...

இது தப்பிக்கிற வேலை...நான் இந்த மாதிரி பதிலை உன்கிட்ட எதிர்பார்க்கலை...ஆபீஸ் வேலைல ரொம்ப சின்சியர்னு உன்னைச் சொல்லிக்கிற நீ உன்னோட நியாயமான உரிமைகள் உனக்குக் கிடைக்காமப் போறபோது எப்படி மழுங்குணி மாதிரி உட்கார்ந்திருக்கே? உனக்கு சுய கௌரவம் உண்டுல்ல?  எப்படி முடியுது உன்னால? அதையெல்லாம் வாங்கித் தரத்தான் அவுங்க இருக்காங்கல்லன்னு இருக்கே...அப்படித்தானே? அது சுயநலம்தானே? நாமதான் சந்தாக் கொடுக்கிறோமேன்னு உன்னைச் சமாதானப் படுத்திக்கிறே....? ஆனா இறங்கிப் போராடணும்னு உனக்குத் தோணலை....சந்தாக் கொடுத்தா மட்டும் எல்லாம் முடிஞ்சிதா அர்த்தமா? சந்தாங்கிறது மெம்பர்களோட எண்ணிக்கையை உறுதிப்படுத்திறதுக்கும், போராட்டம் தர்ணான்னு வர்றபோது நோட்டீஸ், போஸ்டர், பந்தல், மைக், இப்படியான செலவுகளை ஓரளவு ஈடுகட்டுறதுக்கும்தான்...எவ்வளவு கைக்காசு இழக்கிறாங்க தெரியுமா உனக்கு? சங்கம், போராட்டம்னு இறங்கிட்டவங்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல...

அதெல்லாம் பத்தி எனக்கென்ன வந்தது?..அதுல இருக்கிறவங்க கவலைப்பட வேண்டியது அது....நான் வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகமில்லாம வேலை பார்க்கிறேன்..அது எனக்கு திருப்தியைத் தருது...அவ்வளவுதான்....மத்தவங்க வேலையையெல்லாம் எடுத்து சுமக்கிறேன்...அவுங்க அப்படியில்லையே?

இதை இங்க உட்கார்ந்து ஏன் சொல்றே? அவுங்க கூடப் போயி நில்லு...நின்னுட்டு சொல்லு...உன்னை மதிக்கிறாங்களா இல்லையா பாரு...உனக்குன்னு ஒரு இடம் கிடைக்குதா இல்லையா பாரு? அவுங்களும் வேலையே செய்யாம வெட்டிக்கு அலையணும்னு நினைக்கிறவங்க இல்லையே? அவுங்க மத்தில போயிப் பேசு எந்த நியாயத்தையும்...இங்கயே உட்கார்ந்திட்டுக் குதிரை ஓட்டினேன்னா?

அப்பாடீ...! எனக்கு வேண்டாம்ப்பா...இன்னும் அதை வேறே கட்டிட்டு அழணுமா? என்னால ஆபீஸ் வேலைலருந்து டீவியேட் ஆக முடியாது...அத ஒழுங்காப் பார்க்கிறதுதான் எனக்கு, என் மனசுக்கு, உடலுக்கு ஆரோக்கியம்....மத்ததெல்லாம் எனக்கு செகண்ட்ரிதான்....

அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் என்னாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதே. ஏனென்றால் அது அவள் வேலை. அவள் ஆபீஸ். நானா அவளுக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தேன். அவளாக, அவள் திறமையின்பால் பெறப்பட்டது அது. திருமணத்திற்கு முன்பிருந்தே, பல ஆண்டுகளாக அந்த வேலையிலிருக்கிறாள். அவளை மணந்தவன் என்பதனாலேயே அதற்கு வற்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ, இயலாதே.

ஆனாலும் என் மனைவி அப்படியில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டுதான்.

பல சமயங்களில் அவளை அலுவலக வாசலில் இறக்கி விட்டு வரும்போது சாலையோரத்தில் பந்தலைப் போட்டுக் கொண்டு, கோரிக்கைகளைச் சுமந்து கொண்டு,  மைக்கில் கத்திக் கொண்டிருக்கும் தோழர்களைப் பார்க்கும்போது என் மனதுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். நான் அவர்களை எப்படித் தாண்டிச் செல்கிறேன்? என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.

ஸ்டிரைக்குங்கிறீங்க...எல்லாரும் உள்ளே போயிட்டிருக்காங்க...? கூப்பிட மாட்டீங்களா? – சிரித்துக் கொண்டே கேட்பேன். அவர்களிடம் ரெண்டு வார்த்தைகளேனும் பேசாமல் என்னால் அவ்விடம் விட்டு அகல முடியாது.

அதெல்லாம் அவுங்களா வரணும் தோழர்...நாம எத்தன தடவை கூப்பிட்டாலும் அப்டி இருக்கிறவங்க அப்டித்தான் இருப்பாங்க....சுயமா அந்த உணர்வு இல்லாதவங்கள என்ன சொன்னாலும் உசுப்ப முடியாது தோழர்...சரின்னு விட்ரவேண்டிதான்...

பல சமயங்களில் அனைத்துச் சங்கங்களும் சேர்ந்து வெளியேறும்போது படு முன்னெச்சரிக்கையாக இவள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு வந்த வேகத்தைப் பார்க்க வேண்டுமே! அடடா...அடடா...அடடா...!!! என்னே அற்புதம்...என்னே அற்புதம்....

மருத்துவரிடம் சென்று அந்த மெடிக்கல் சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொடுத்த மாபாவி நான்தானய்யா...நான்தான்.

இதற்கென்றேதான் ஒருவர் இருக்கிறாரே...அவருக்கு வேலை மருத்துவம் பார்ப்பது இல்லை. இதுதான்..தனியாக ரகம் வாரியாகப் படிவம் பிரின்ட் செய்து வைத்துக் கொண்டு எங்கே எங்கே என்றுதான் உட்கார்ந்திருக்கிறாரே....அது சரி...பேஷன்ட் வந்தால்தானே...?

மாநிலம் முழுவதும் நடந்த ஒரு ஒட்டு மொத்தப் போராட்டத்தின் போது எங்கள் துறையில் உள்ள அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை உள்ளே சென்று வலுக்கட்டாயமாக நாங்கள் வெளியேற்றியதும், பின்னர் அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாங்கள் சிலபேர் தண்டிக்கப்பட்டதும், என் நினைவில் வந்து போனது.

 

      அன்றாடம் அவள் அசந்து சளிந்து வரும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்தான்....ஏதாச்சும் வீட்டுல வச்சுச் செய்ய முடியும்னா கொண்டாயேன்...நா வேணா செய்து தர்றேன்....சொல்லியிருக்கிறேன்...

      அதெல்லாம் உங்களுக்குப் புரியாது....ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். வீட்டில் கொண்டு வந்து செய்வதுபோலவும் இப்பொழுது இல்லையே...எல்லாமும் கணினியில்தானே ஓடுகிறது...அதைப்பற்றி அடேயப்பா எவ்வளவு புலம்பியிருக்கிறாள்?

      சொல்லித் தர்றவாளுக்கே சரியாத் தெரியலை...ஆனா நம்மளைக் குத்தம் சொல்றா...அவா செய்த தப்பை மறைக்க, ஏன் மேடம் இப்டிச் செய்தீங்கன்னு ஏதோ நாம தப்பு செய்துட்ட மாதிரி முந்திண்டு நம்மகிட்டயே திருப்புறா...எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கோ...இன்னைக்கு ஆபீஸ் வேலைல திறமையெல்லாம் வேண்டாம்...இதெல்லாம்தான் தெரிஞ்சிருக்கணும்...மூணு நாள், ஒரு வாரம்னு டிரெயினிங் கொடுத்துப்பிட்டு, உடனே உட்கார்ந்து செய்யுன்னா யாருக்குத்தான் கை வரும்? எல்லாம் திணறின்டிருக்குகள்...ஒண்ணுக்கொண்ணப் பண்ணிப்பிட்டு முழிக்கிறதுகள்...அதுக்குன்னு டாட்டா ஆப்பரேட்டர் போஸ்ட் இருக்கு....அதை ஃபில் அப் பண்றதில்லை...ஒவ்வொரு செக்ஷனுக்கும் சாங்ஷன் இருக்கு...எதையும் இன்னைவரைக்கும் பூர்த்தி செய்யலை...எல்லாமும் காலியாத்தான் கெடக்கு...நம்ம உசிரை வாங்கறா..கம்ப்யூட்டர் முன்னாடி நாள் பூராம் கிடந்து கண்ணு பூத்துப் போறது....என்ன தலையெழுத்தோ....

      பையன் எப்பப் படிச்சிட்டு வேலைக்குப் போவான்னு காத்திண்டிருக்கேன்...அவன் ஒரு இதுல உட்கார்ந்திட்டான், மறுநிமிஷம், அவன் என்ன என்னை வெளியேத்தறது...நானே குட்பை சொல்லிட்டு வந்திடுவேன்....இப்பொழுது சொல்கிறாள். உண்மையில் அது நடந்தபிறகு செய்வாளா என்று நினைப்பேன் நான். பெண்கள் அவர்களுக்கிருக்கும் வேலையை எத்தனை பிடிப்பாய் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் ஆதாரமே அதுதான். புருஷன் இரண்டாம் பட்சம்தான். அப்படித்தானே பல இடங்களில் நடக்கிறது? பிறகு சொல்வதில் என்ன தப்பு?

      ஆபீஸ் வாசலில் அவளை இறக்கிவிட்டபோதுதான் வீட்டுச் சாவி ஞாபகம் வந்தது எனக்கு.

      இந்தா...இந்தா உன் சாவியக் கொடு...என் சாவி வீட்டுக்குள்ள மாட்டிக்கிடுச்சி....

      இது வேறயா? சலித்துக் கொண்டே கைப்பையில் போட்டுத் துழாவினாள். அநியாய டென்ஷன்....

      நிறையப் பேர் இப்படித்தான் தனக்குத்தானே வலியப் பதறிக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. சாவியை எடுத்தபோது கூடவே ரெண்டு மூணு சில்லரைகள், ரூபாய் நோட்டு என்று கீழே விழுந்தன. அவளைப் பார்க்கவே இவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

      சரி...சரி..போ...நா எடுத்துக்கிறேன்...

      அது சரிதான்....எனக்கு டீ குடிக்கக் காசு வேண்டாமா? கொண்டாங்கோ...பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு ஓடினாள்.

      பரபரவென்று உள்ளே நுழையும் பலருக்கு நடுவே இவள் கலந்தபோது உருவம் மறைந்து போனது.

      எனக்கு வேறு வேலையில்லை.. அதிகபட்சம் லைப்ரரி செல்லும் வேலைதான். பிறகு பாங்க் வேலை, அவள் சொல்லியிருந்தால் சொன்ன வீட்டுச் சாமான்களை வாங்கிச் செல்வது இவைதான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் இவையெல்லாம் முடிந்து போகும். பிறகு வீடுதான். பேசாமல் நாமே வீட்டு வேலைகளையும் செய்து விட்டால் என்ன? சமையல் வேலையோ அவள் செய்கிறாள். என்ன பெரிய சமையல்? ரெண்டு பேருக்குச் சமைப்பது என்ன ஒரு பெரிய வேலையா? காய்கறி நறுக்கிக் கொடுத்தாகிறது...சாதமோ குக்கரில் வெந்து விடுகிறது. ஒரு கறி, ஒரு சாம்பார் அவ்வளவுதானே...இதைச் சொன்னால் பழியாய்க் கோபம் வரும். எங்கே,  ஒரு நாளைக்கு நீங்க செய்ங்கோ பார்ப்போம்...சவால் விடுவாள். செய்யவும்தான் செய்தேன். எனக்குப் பிடித்தது. அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய? அவள் சமையலை நான் சகித்துக் கொண்டு சாப்பிடவில்லையா? அவள் கைபாகம் எனக்கு அலுக்கவில்லையா? அதுபோல் என் கை ருசியையும் அவள் சகித்துக் கொள்ள வேண்டியதுதானே? கொஞ்ச காலம் இப்படித்தான் ஓடட்டுமே? பிறகு எனக்கென்று ஒரு கை பாகம் வராதா? படியாதா? அது அலுக்கும்வரை நானே சமைக்கலாமே? அதுவரை என் நளபாகத்தை அவள் சுவைக்கலாமே? கேட்டால்தானே?

      பெண்களுக்கு சமையல் இல்லையென்றால் எதுவோ கையைவிட்டுப் போனமாதிரி இருக்கும்போலும்? வீட்டு உரிமையில் ஏதோ கழன்று போயிற்று என்று மனதுக்குள் பயப்பட்டுக் கொள்வார்களோ என்னவோ? தன் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற நமது நிர்வாக அமைப்பு, இந்தக் குடும்ப அமைப்பிலிருந்துதான் கிளைத்து வியாபித்து இருக்குமோ?  பலவாறு நினைத்தவாறே கிளம்பி வெளி வேலைகள் சிலவற்றைக்  கவனித்து விட்டு வீடு வந்து சேருகிறேன் நான்.

      அன்று மாநில அரசு விடுமுறை நாள். லைப்ரரி கிடையாது. எனவே அங்கு செல்ல வேண்டியதில்லை. ஒரு வேலை மிச்சம். சற்றுச் சீக்கிரமே வீடு வந்தாயிற்று. கொஞ்ச நேரத்தில் வாசலில் சத்தம்.

      சார், ஸ்பீட் போஸ்ட்.....

      கதவைத் திறந்து கொண்டு படியில் இறங்கினேன்.

நேத்து வந்தேன் சார்...கதவு பூட்டிருந்திச்சு....டோர் லாக்குடுன்னு போட்டுட்டு இன்னைக்கு எடுத்திட்டு வர்றேன்...பையன் பாஸ்போர்ட் போலிருக்கு சார்.....ஒரு ஆதரிசேஷன் லெட்டர் கொடுத்திட்டீங்கன்னா நல்லாயிருக்கும்...

ஓ! ரெடியா வாங்கி வச்சிருக்கேன்....இந்தாங்க பிடிங்க....எடுத்து வந்து கொடுத்தேன்.

பாஸ்போர்ட்டைக் கையில் வாங்கியதும், சுசீலா சொன்னது நினைவுக்கு வந்தது.

பையன் மட்டும் ஒரு வேலைல உட்கார்ந்திட்டான்னா........

என்னவோ அப்பொழுதே அவனுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டதைப் போன்றதொரு பிரமை ஏற்பட்டது எனக்கு.

சார்...நாளைக்கு சரஸ்வதி பூஜை லீவு சார்....போஸ்டல் உறாலிடே.... – சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருந்தார் போஸ்ட்மேன்.

கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன். வாசல் திரையை இழுத்து விட்டேன். இனிமேல் எனக்கென்ன வேலை. ஏதாச்சும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார வேண்டியதுதான். இந்த வாரத்திற்கு மாவு அரைத்தாயிற்று. அது நான்கைந்து நாட்களுக்கு வரும்...ஆகையினால் அந்த வேலை இன்று இல்லை.

பீரோவைத் திறந்து ஒரு தடிப் புத்தகமாய் எடுத்தேன். நிறைய வாங்கி அடுக்கியாயிற்று. படித்துத்தான் தீர்க்க வேண்டும். ஆயுள் கிடைக்குமா?

மீண்டும் வாசலில் சத்தம்.

எழுந்து போய் எட்டிப் பார்த்தேன்.

வேலைக்காரம்மா....

என்னங்க இப்ப வர்றீங்க...?

ஏன்? இன்னைக்கு அம்மாவுக்கு லீவுதான...அதான் கொஞ்சம் லேட்டாப் போவோம்னு வந்தேன்.....

இன்னைக்கு லீவில்லீங்க...ஆபீஸ்....நாளைக்கு ஒருநாள்தான் லீவு.....

அப்டியா...காலண்டர்ல சிவப்பாப் போட்டிருந்திச்சு....நா ரெண்டு நா லீவுன்னு நினைச்சேன்....அதனாலென்ன பாத்திரம்லாம் வௌக்காமத்தான கெடக்கும்...நீங்க இருக்கீகள்ள....இப்ப வௌக்கிக் கவுத்திட்டுப் போயிடறேன்....

எல்லாம் தேய்ச்சாச்சு....நீங்க டயத்துக்கு வரல்லியேன்னு அவதி அவதியா எல்லாத்தையும் அவதான் மாங்கு மாங்குன்னு தேய்ச்சுக் கவுத்தினா...ஆபீசுக்கு வேறே லேட்டு இன்னைக்கு...ஒரு போன் பண்ணிச் சொல்ல மாட்டீங்களா...இப்டித்தான் நீங்கபாட்டுக்கு இருப்பீங்களா....? என் குரலில் சற்றே உஷ்ணம்.

லீவுன்னு நினைச்சிட்டேன்யா.... சொல்லிக்கொண்டே போய்விட்டது அந்தம்மா.

ரெண்டு வார்த்தை ஏன் கூடச் சொன்னோம் என்று இருந்தது எனக்கு. முணுக்கென்றால் கோபித்துக் கொள்ளும் குணம் கொண்ட பெண்மணி. காலண்டரில் அந்தம்மா பார்த்தது மாநில அரசு விடுமுறையை. இவள் எதில் வேலை பார்க்கிறாள் என்பது கூட அந்தம்மாவுக்குத் தெரியாதோ? திடீர்ச் சந்தேகம் வந்தது எனக்கு.  எத்தனையோ முறை வீட்டு போன் டெட் என்று வந்து சொல்லியிருக்கிறதே?

அடுத்து அந்தம்மா வேலைக்கு வருமா, வராதா என்பது நாளைக் காலை வரை சஸ்பென்ஸ்.

நினைச்சா வேலைக்கு வருது...நினைச்சா இருந்துக்குது....

காலையில் அப்படி நினைத்தது இன்று தப்பாய்ப் போயிற்றுதான். யதார்த்தமாய் அது தாமதமாய் வரப்போக அது வேறு மாதிரி ஆகிவிட்டது இன்று.

மாலையில் சுசீலா வந்த போது சொன்னேன்.

ஆமாமா...சொல்லித்து....என்றாள் அவள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

என்னது? சொல்லித்தா? ஆபீசுக்கு உன்னைத் தேடி வந்துடுத்தா? அதுக்குத் தெரியுமா உன் ஆபீஸ் எதுன்னு?  - மடமடவென்று கேள்விகளை அடுக்கினேன்.

அன்னைக்கு ஒரு நாள் வீட்டு போன் டெட்டுன்னு கம்ப்ளெயின்ட் கொடுத்ததோல்லியோ...அதை உடனே சரி பண்ணச் சொல்லிட்டு, இப்ப சரியாயிடுத்தான்னு நான்தான் அதுகிட்டக் கேட்டிருந்தேன்...அதுதான் செல் வச்சிருக்கே...இப்போ செல் இல்லாதவாதான் யாரு? .அந்த நம்பரைக் குறிச்சு வச்சிண்டிருக்கும் போலிருக்கு....கரெக்டா ஆபீசுக்குப் பேசித்து பாருங்கோளேன்..யாரோ சுசீலாம்மா...சுசீலாம்மான்னு உங்களத்தான் கூப்பிடறாங்க மேடம்னு கொடுத்தாங்க...பார்த்தா இது...!.பாவம்...அதுக்கும் எவ்வளவு பிரச்னையோ? நாலஞ்சு வீட்டுல வேலை பார்த்துத்தானே பிழைக்கிறது...கஷ்டந்தானே...பாவமாத்தான் இருக்கு.... இன்னைக்கு விசேஷமோல்லியோ...நான் வீட்டுல இருப்பேன்னு நினைச்சிண்டு கொஞ்சம் லேட்டாத்தான் போவமேன்னு வந்திருக்கு....நீங்க ஏதாச்சும் தாறுமாறாச் சொன்னேளா அதை...?

 

அடியாத்தீ...நல்ல கதையாப் போச்சு....நா ஏன் சொல்றேன்....உன் பாடு அவ பாடு.......மனசுக்குள் திக்கென்றது எனக்கு. நல்லவேளை, வாயை அதிகம் திறக்கவில்லை. ஆனாலும் எனக்குள் ஒரு பயம் வதைக்கத்தான் செய்கிறது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சாமீ...!

சுசீலாவிடம் இப்படிச் சொல்லிவிட்டேனேயொழிய மனதென்னவோ அதை நினைத்து  அடித்துக் கொள்ளத்தான் செய்கிறது. அதுதான் சொன்னேனே நாளை காலை வரை சஸ்பென்ஸ் என்று!!

 

                        ----------------------------------------

 

                                   

     

     

     

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...