09 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு-“காவலுக்கு”-சிறுகதை-வாசிப்பனுபவம்-உஷாதீபன்

தி.ஜா.நூற்றாண்டு-“காவலுக்கு”-சிறுகதை-வாசிப்பனுபவம்-உஷாதீபன்


       கிராமங்களிலே நம் மக்களிடத்தில் எத்தனையோ சொலவடைகள் உண்டு. அந்த ஒற்றை வரிச் சொலவடைகள் மூலமாக பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லி விடுவார்கள். சும்மாவா சொல்லி வச்சாங்க...என்று ஆரம்பித்து, பட்டென்று சுருக்கமாய் அப்படிச் சொல்வதன் மூலம் மனதிற்குள் அந்தக் குறிப்பிட்ட விஷயம் பச்சென்ற ஒட்டிக் கொள்ளும். இது நல்லதற்கும் கெட்டதற்கும் என இரண்டுக்குமே புழங்குவது உண்டு.

       அதுபோல பட்டப் பெயர்கள் சொல்லியும் ஒருவரை அழைப்பது உண்டு. அதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட நபர் செய்யும் தொழில் அல்லது அவரது நடத்தை அல்லது அவரது குறிப்பிட்ட ஒரு குணம், அவர் பிறந்த ஊர், வந்த வழி என்று இப்படி ஏதாவது ஒன்றின் மூலம் ஒருவர் சுலபமாகப் புரிந்து கொள்ளப்படுவார்.

       ஓயாமாரி வெங்கு, வாழைக்கா வடை சீனு, பர்மா டாக்டர், வெள்ளிக்கிழமை வீராச்சாமி (தவறாமல் வெள்ளியன்று சந்தைக்கு வந்து மாமூல் வாங்குபவன் என்பதால்) என்பதாக.

       இப்படியான சில வழக்கங்கள் இருப்பது போலவே குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது வயதான பெண்மணிகள், குறிப்பாகப் பாட்டிமார்கள் வாயெடுத்தால் ஓரு குறிப்பிட்ட வார்த்தைகளோடே தங்கள் பேச்சை ஆரம்பிப்பவர்களாக எப்போதும் இருப்பதை நாம் கவனித்திருக்கலாம்.

       எனக்கு அப்பவே தெரியும்.....                                                               இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்....                                              இதெல்லாம் சரிப்பட்டு வராது....                                                                 When I was in Madras..... - என்று எப்போது அவர்களோடு பேசினாலும் மேற்கண்டது போல் ஒன்றைச் சொல்லிக் கொண்டுதான் தங்கள் பேச்சையே அவர்கள் ஆரம்பிப்பார்கள்.

       இதெல்லாம் நம் வாழ்க்கையில் நாம் கவனித்த பல்வேறுவிதமான கதாபாத்திரங்களில் சில. இதுபோலவே ஊரில் சில பாட்டிமார்களும் இருப்பதுண்டு. நம் வீடுகளிலேயே மூத்த தலைமுறையினர் சந்தித்திருக்கக் கூடும். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பழக்கமும் இருக்கும். அது வேண்டுமென்றே அவர்கள் செய்வதாக அல்லது சொல்வதாக இருக்காது. ஆனால் அது அவர்களின் வழக்கமான பழக்கமாக, அவர்களால் விடமுடியாததாக, மனதுக்குள் குற்றங்குறையில்லாததாக, உடம்போடு ஒட்டியதாக, ரத்தத்தோடு ஊறிய விஷயமாக இருக்கும். அவர்கள் பேசுவதை அவச்சொல்லாக அல்லது முதியவள் இடும் சாபமாக அல்லது சொல்வது பலித்துவிடுமோ என்று பயப்படுவதாக யாரும் கருதுவதில்லை. அந்தம்மா எப்பவுமே அப்டித்தான், அந்தப்பாட்டி பேச்சே அப்டித்தான், அந்தாள் என்னைக்கு ஒழுங்காப் பேசியிருக்காரு...என்பதாகச் சொல்லி ஒதுக்கி விடுவார்கள். குற்றமாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். முதியவள், முதியவர் என்கிற மரியாதையோடு, சொன்னா சொல்லிட்டுப் போகட்டும் என்றும், அது கிடக்கு என்றும் ஒதுக்கி விடுவார்கள்.

       ஆனாலும் குடும்பத்தில், வீட்டில், அன்றாட நிகழ்வில் அவச்சொல் ஆகாது என்பது நியதி. வீட்டின் ஈசான மூலைகளில் தீய சக்திகள் இருந்து இவைகளை உள்வாங்கும் என்றும் அதன் எதிர்வினையாக கெட்டவை நிகழும் வாய்ப்புண்டு என்பதும் நம் நம்பிக்கை. இதனால்தான் நம் வீடுகளிலெல்லாம் ஓரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “பழம் மாற்றுதல்” என்று ஒரு நிகழ்வை நிறைவேற்றுவார்கள். நடுக்கூடத்தில் இடது மூலையில் தீபம் ஏற்றி, அர்ச்சனைப் பொருட்கள் வைத்து குலதெய்வத்தை நினைத்து, விழுந்து வணங்கி, சுமங்கலிகளுக்குப் புடவை வைத்துக் கொடுப்பார்கள்.

       தி.ஜா.வின் அனுபவங்களையும், அவதானிப்புகளையும் வைத்துப் பார்க்கும்போது நம் அனுபவங்களெல்லாம் கிட்டத்திலே கூட நெருங்க முடியாது என்பதுதான் உண்மை. எத்தனையோ விதமான மனிதர்களைத் தத்ரூபமாக உலவ விட்டிருக்கிறார் தன் படைப்புக்களில். அவர்களுக்கான அந்தப் பாரம்பர்ய உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நம்மை அந்தக் காலத்திற்கே  இழுத்துக் கொண்டு சென்று விடுகிறார் என்பதுதான் நிஜம்.

       அப்படியான ஒரு பாட்டிதான் இந்தக் கதையிலும் வருகிறாள். அந்த வீட்டுக்குக் காவலுக்காக இருப்பதாகப் பிள்ளையும், மருமகளும் நினைக்கிறார்கள். பெரியவர்கள் நமக்குத் துணைதான் என்றாலும் காவலுக்காக, வீட்டைப் பார்த்துக் கொள்வதற்காக என்று கிள்ளுக்கீரை போல் அவர்களை நினைக்க முற்பட்டால் அப்படி நினைப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டால் அது மாதிரி வேதனையான விஷயம் வேறு எதுவும் அவர்களுக்கு இருக்க முடியாது.

       அவர்களிடம் இருக்கும் எல்லாக் குறைகளோடேயும், சகிப்புத் தன்மையோடு, அவர்கள் மீது மதிப்பு வைத்து, மரியாதை கொண்டு அவர்களைச் சந்தோஷப்படுத்துவதுதான், மனம் நோகாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் அவர்களை நாம் சரியாகப் பராமரிக்கிறோம் என்பதற்கான அடையாளம். தான் மதிப்பும் மரியாதையோடும்தான் இந்த வீட்டில் வலம் வருகிறோம் என்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்களின் பரிபூர்ண ஆசி நமக்குக் கிடைக்கும்.

       அல்லாமல், கிடந்துட்டுப் போகட்டும்...என்றும்...இன்னும் கொஞ்ச நாள்தானே என்றும் (யாருக்கு எப்போது என்று யார் கண்டது? ஏதோ வீட்டுக்கு ஒரு துணையாச்சு, சின்னச் சின்ன உபகாரமாச்சு...என்று கருதி, மனைவியின் கொடுக்கைப் பிடித்துக் கொண்டு,  கூட வைத்துக் கொள்வது மாதிரிப் பாபம் வேறு கிடையவே கிடையாது.

       இந்தக் கதையில் வரும் பாட்டி அப்படி வயசானவள்தான், வீட்டுக்குக் காவலுக்கு என்று வந்திருப்பவள்தான் என்றாலும், வாயைத் திறந்தால் அவச்சொல்லாய்த்தான் அவளுக்குத் தெறிக்கும். அது அவள் வழக்கமாகவே ஆகி விடுகிறது. ஆனாலும் அதை யாரும் குத்தமாய் எடுத்துக் கொள்வதில்லை.

       வழக்கமாய் வீட்டுக்கு வெற்றிலை கொடுக்கும் வேதாந்தி பாட்டிம்மா...எப்ப வந்தீங்க...? என்று சந்தோஷத்துடன் கேட்க....நா வந்து பத்து நாளாச்சே...நேத்திக்குக் கூட உன்னை நினைச்சிண்டேன்...தினமும் குரல் கேட்குமே...செத்துப் போயிட்டானோ...இருக்கானோன்னு தெரிலயே...ன்னு.... என்கிறாள். இப்பத் தெரிஞ்சிதா...இருக்கனா...செத்திட்டனான்னு..? என்று அவன் கேட்க, எதுக்காகச் செத்துப் போகணும்? மகராஜனா இன்னும் நூறு வருஷம் இரு...என்கிறாள். உன் தம்பி சடையன் இருப்பானே...அவன் இருக்கானா, செத்துப் போயிட்டானா...? என்று உடனே இன்னொன்று கேட்கிறாள். அஞ்சு வருஷம் முன்னாடியும் வந்திருந்தபோதும்  நீங்க இப்டித்தான் கேட்டீங்க....அப்ப நான் என்ன சொன்னேன்...எந்தம்பி இப்ப சடையன் இல்லே...செபாஸ்தியன்னு சொன்னேன்ல என்கிறான். என் தம்பின்னா எனக்கு அப்புறம்தானே செத்துப் போகணும்...? என்க, குசாலாக அவா அவா அந்தந்தக் காலத்துலே செத்துப் போறதுதான் நல்லது...என்கிறாள் பாட்டி.

       என் மச்சினன் புள்ளே ஆராமுது பொண்டாட்டி மேலே கோச்சுண்டு கொளத்திலே விழுந்து ப்ராணனை விட்டான்...என்னோட சிநேகிதி ராதா பொண்டாட்டி...அவளைப் பார்த்துட்டு வரணும்னு  சொன்னேன்...அவ கான்ஸர்ல செத்துட்டதாச் சொன்னா? ஓரொரு தடவையும் சின்னது, பெரிசுன்னு வித்தியாசமில்லாமே டாபி வந்துடுத்து, மோட்டார்லே அடி பட்டுது, மாடு முட்டிடுத்து, ஆத்தோட போயிட்டதுன்னு சேதி கேட்டா எப்டியிருக்கும்? என்று வேதனைப்படுகிறாள்.

       பதிலுக்கு வேதாந்தி கேட்கிறான். அப்டீன்னா செத்துப் போயிட்டாங்களா, இருக்காங்களான்னு ஏன் கேட்குறீங்க...இருக்காங்களா இல்ல செத்துப் போயிட்டாங்களான்னு கேட்கலாமே? என்கிறான். மாத்திக் கேட்டுட்டா மட்டும் போனவா எழுந்து வந்துடப் போறாளா?  இல்லே இருக்கிறவா செத்துப் போகாம இருக்கப் போறாளா? என்கிறாள். வாயெடுத்தால் இந்தப் பேச்சுதான் வருகிறது பாட்டியிடமிருந்து. இப்படி ஒரு காரெக்டர்....

       ராதா செட்டி பொண்டாட்டி செத்துப் போயாச்சு...இப்போ செட்டியார் இருக்காரா இல்ல செத்துப் போயிட்டாரா? கருங்கல்லா இருப்பாரே...இருந்து என்ன பண்ண? கருங்கல்லு கண்ணை மூடற வேளை வந்தா யார் தடுக்க முடியும்? என்கிறாள். பேத்திகள்லாம் கான்பூர்ல நல்லாயிருக்காங்களா என்று கேட்கிறான் அவன். நல்லாவும், பொல்லாத்தனமாவும் இருக்காங்க என்று பதில் வருகிறது. பெரிய பேரன் பெல்லாரி பாஷ்யம் அய்யங்கார் பொண்ணைக் கல்யாணம் பண்ணின்டான், ரெண்டாமத்தவன் குண்டூர்ல ஒரு ரெட்டிப் பொண்ணைப் பிடிச்சி ரிஜிஸ்தர் கல்யாணம்....மூணாவது பேரன் எல்லாத்தையும் தாண்டி ஒரு துலுக்கப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு குதிக்கிறான்...தினமும் பொழுது விடிஞ்சு பொழுது போனா ஒரே சண்டை.... என்று பிலாக்கணம் பாடாத குறையாக ஒப்பிக்கிறாள் பாட்டி.  

       சாதிப் பிரிவிலே தீயை மூட்டுவோம், சந்தை வெளியிலே கோலை நாட்டுவோம்...என்று பாடிக்கொண்டே வேதாந்தி செல்கிறான். உப்பிலியும் மனைவி கஸ்தூரியும் வெளியே கிளம்புகிறார்கள். சரியாப் பூட்டினியா என்று உப்பிலி கேட்க, எல்லாம் பூட்டியாச்சு, ரேழியிலே காவலுக்கு நாய் படுத்துண்டிருக்கே...என்கிறாள் கஸ்தூரி....பாட்டி காதில் விழுந்து விட, ஆமா...சின்ன நாய் வெளியே போறது, பெரிய நாய் காவல் காக்குது...என்கிறாள் பாட்டி. நீங்க சண்டை போடாம சௌஜன்யமா இருங்கோ...ஆண் நாயும், பெண் நாயும்....என்று முணுமுணுக்கிறான் உப்பிலி.

       பாட்டி ரேழித் திண்ணையில் ஒடுங்குகிறாள். ஒரு வயதுக்கு மேல் பெண்கள் ஆண்கள் போல. நம் வீடுகளில் நாமே கவனித்திருக்கலாம். ஆண் தன்மையே பல சமயங்களில் அவர்களிடம் புலப்படும்.இங்கு பாட்டியின் அடங்காப் பேச்சும், நடவடிக்கையும் உப்பிலியை அப்படி நினைக்க வைக்கிறது. காவலுக்கு வைத்துவிட்டுச் செல்லும் பாட்டியின் மனசு ஒடுங்குகிறது. பார்த்து மாமாங்கம் ஆச்சு...உப்பிலி ரங்கராஜனை...என்று சொல்லித்தானே கான்பூரிலிருக்கும் மூத்தவனிடமிருந்து பிடிவாதமாய்க் கிளம்பி வந்திருக்கிறாள். நான் கிளம்பிடுவேன் சீக்கிரம் என்று நினைத்தவாறே தன்னை ஒடுக்கிக் கொள்கிறாள் பாட்டி.

       இந்தப் படைப்பில் பாட்டியின் காரெக்டரும் அவள் பேச்சும் நாம் கவனிக்க வேண்டியது. அப்படியான நம் பழைய மனிதர்களை, நம் குடும்ப உறவுகளை நமக்கு நினைவுவூட்டி விடுகிறது. குற்றமில்லாத அப்படியான பெரியவர்கள் நம்மிடையே இன்று இல்லையே என்கிற ஏக்கமும் எழுகிறது. வழிகாட்டியாய் இருந்தவர்கள் வழி வழியாய் வரமாட்டார்கள் போலிருக்கிறது. காலதேவனின் தீர்ப்பு இது.

                                          --------------------------------

 

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...