08 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு “மக்களை ஈர்த்த மகராசர்”-சிறுகதை-வாசிப்பனுபவம்-

 தி.ஜா.நூற்றாண்டு “மக்களை ஈர்த்த மகராசர்”-சிறுகதை-வாசிப்பனுபவம்-உஷாதீபன்

      ஜனநாயகம் என்பது அவரவர் வேலையை சட்டத்தை மதித்து, விதிமுறைகளைக் கடைப்பிடித்து, ஒழுங்காய் சுதந்திரமாய்ச் செயலாற்றுவதற்குத்தான். மக்களுக்கு முன்னோடியாய், வழிகாட்டியாய் இருந்து அதன் நற்பெயரைக் காப்பாற்றுவதற்குத்தான். கூட்டத்தைக் கூட்டி ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் செய்வதற்கல்ல என்பதை உணர்த்தும் விதமாய் எழுதப்பட்டிருக்கும் சிறுகதை. அதை இங்கிருப்பவனே சொன்னால் எடுபடாது. ஒரு மூன்றாமவன் சொல்லும்போது அது உரைக்கும். அந்த மூன்றாமவனும் யாராய் எப்படிப்பட்ட நபராய் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ததுதான் தி.ஜா.வின் பெருமை, புத்திசாலித்தனம்.

      எங்கேனும் வெளிநாடு செல்லும்போது இம்மாதிரியான ஒரு நிகழ்வு அவர் கண்ணில் பட்டிருக்க வேண்டும். அது உறுத்தலாயிருந்திருக்கும். அதை எப்படிச் சொல்லி இங்குள்ளவர்களுக்குப் புரிய வைப்பது  என்று யோசித்து, அல்லது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காகவேனும்,  இந்தச் சின்னஞ் சிறுகதையைக் கொடுத்துள்ளார் தி.ஜா. என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் எழுதியதிலேயே மிகவும் சிறிய கதையாய் இதுதான் இருக்க வேண்டும்.

      எந்தவொரு நிகழ்வென்றாலும் கூட்டமாய்ப்  புறப்பட்டுப் போவது, மாலை மரியாதைகளை வலிய வழங்கச் செய்வது, ஊருக்கு தன் பதவிசை தம்பட்டம் போட்டுக் காண்பிப்பது, செல்லுகின்ற இடங்களில் இருப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது, ரயில் ஜங்ஷன், விமான நிலையம் என்று பந்தா காண்பித்து, பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி, அவை புறப்படுதலைத் தாமதப்படுத்துவது, அதன் மூலம் தன் வறட்டுச் செல்வாக்கை உலகுக்குக் காண்பிப்பது...என்பதான இன்றைய அரசியல்வாதிகளின் விளம்பர ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, முன்பாகவே  நடைமுறையாக இருந்து வந்திருக்கின்றன என்பது தி.ஜா. வின் இந்தப் பழையை கதையைப் படிக்கும்போது நமக்குத் தெரிய வருகிறது.

      இந்தக் கதையில் இரண்டே இரண்டு பாத்திரங்கள். ஒன்று நம்மவர். அரசியல்வாதி பசுபதிநாத். இன்னொருவர் ஒரு வெள்ளைக்காரர். நம்மவர் என்றால் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதி. தி.ஜா. அவரை “மொத்தமான மனிதர்” என்று விளிக்கிறார். அதுவும் பொருத்தம்தானே...! பெரிய ஆகிருதியாய் இருந்து, உடல் கொள்ளாத மாலை மரியாதைகளை ஊர் பார்க்க, உலகு பார்க்க ஆரவாரத்தோடு,  ஆர்ப்பாட்டமாய், பெருத்த வாழ்க கோஷங்களுடன், வெற்(று)றி கோஷங்களுடன் வாங்கிக் கொள்கிறார் என்றால் அவர் “மொத்தமான மனிதர்”தானே?

      விமானம் கிளம்ப நேரமாகிவிட்டது என்று நிலைய அதிகாரிகள் பதட்டத்துடன் அறிவுறுத்தியும் அவரையும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்தையும் விலக்க முடியவில்லை யாராலும். அவராவது நிலைமை புரிந்து, தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். அதுவுமில்லாமல் விமானப் படியேறும்வரை (எந்தச் சோதனையுமில்லாமல் எல்லாவற்றையும் தாண்டி)  கழுத்தில் விழுந்த மாலைகளைக் கழற்றிக் கழற்றிக் கொடுத்துக் கொண்டே ஒரு வழியாய் உள்ளே போய்த் தன் இருக்கையில் உட்காருகிறார். லௌஞ்சின் உள் நுழைவாயிலில் தேவையான சோதனைகள் முடிந்து முறைப்படி விமானத்தில் ஏறிய அந்த வெள்ளைக்காரர் அமர்கிறார். அவரது இருக்கையும் அருகிலேயே.

      காரில் வந்து இறங்கியது முதல் உள்ளே வந்து அமரும் வரையான அவரது நடவடிக்கைகளை, அவருக்குக் கூ(ட்)டிய கூட்டங்களைக் கண்ணுற்ற அந்த வெள்ளைக்காரர் ஏதோ பெரிய வி.ஐ.பி, போலிருக்கிறது, மந்திரியாக இருப்பாரோ என்று கூட வருபவருடன் கேட்டு, அந்த எண்ணத்திலேயே மரியாதையோடு அவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறார். பேசிக் கொண்டே வருகிறார்கள். இடையில் வரும் பானத்தை ஒரு மிடறு அருந்துகிறார் அந்த வெள்ளைக்காரர். நம்மவர் பருகிக்கொண்டேயிருக்கிறார்.

      தேசீய உளுந்து வாரியத்தின் தலைவராகத் தன்னை நியமித்திருக்கிறார்கள்  என்றும் நீங்கள் சாப்பிடும் முட்டை, கோழி மாமிசத்திற்கிணையான புரதச் சத்துள்ளது இது என்று சொல்லி மாதிரிக்கு வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் உளுந்தை எடுத்து வெள்ளைக்காரருக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்லி உபசாரம் செய்கிறார். உளுந்து கலந்து செய்த முறுக்கு ஒன்றையும் கொடுத்துக் கடிக்கச் செய்கிறார்.  இந்த உளுந்தை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்யலாம் என்பதை முடிவு செய்வதற்காகத்தான் இப்போது வெளிநாடு செல்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். ஓ...! வெரி நைஸ்...”  என்று கை குலுக்குகிறார் வெள்ளைக்காரர். நேரம் கடக்கிறது. வெள்ளைக்காரர் இறங்கும் இடம் வந்து விடுகிறது.

      இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தோமே...நீங்கள் யாரென்றே நான் கேட்கவில்லையே...நீங்களும் சொல்லவில்லையே...என்று கடைசி நேரத்தில் நம்மவர் சற்றே பரபரப்போடு அந்த வெள்ளைக்காரரிடம் கேட்கையில், இறங்கும் முஸ்தீபில், போகிற போக்கில் அவரிடம் கை குலுக்கி விட்டு, நான் இந்த நாட்டின் உதவிப் பிரதம மந்திரி என்று அவர் சொல்ல நம்மவர் ஆ...வென்று வாயைப் பிளக்கிறார்.

      ரொம்ப ஆச்சரியப்படாதீர்கள் உங்கள் இந்தியாவின் எட்டில் ஒரு பங்குதான் எங்கள் நாடு...என்று சொல்ல...உங்களை வரவேற்க யாரும் வரவில்லையா? என்று கேட்கிறார் நம்மவர். அதோ..என்று தன் மனைவியையும், தன் செயலாளரையும் சுட்டிக் காண்பிக்கிறார்.

      போலீஸ்...கீலீஸ்....என்று இவர் விழிக்க, போலீஸா...எதற்கு? என்று அவர் சொல்ல...உங்கள் நாடு ஜனநாயக நாடில்லையா? என்று இவர் திருப்பிக் கேட்கிறார். ஜனநாயக நாடுதான்...அதனால்தான் யாரும் வரவேற்க வரமாட்டார்கள்...என்று சொல்லிவிட்டு இறங்கிப் போய் விடுகிறார் அந்த உதவி பிரதம மந்திரி.

      ஜனநாயகமா...பூ...என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்கிறார் நம் தேசீய உளுந்து வாரியத் தலைவர். இவ்வளவுதான் கதை.

      இதில் தி.ஜா. சொல்லியதை விட சொல்லாமல் விட்டதை அவரவர் விஷய ஞானத்திற்கேற்பப் புரிந்து கொள்வதுதான் நம்மின் திறமை. ஜனநாயகம் என்கிற பெயரில். சுதந்திரம் என்கிற பெயரில் நம் நாடு எவ்வளவு கட்டற்றுப் போய்க் கிடக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. சொல்ல நினைத்ததைச் சுருக்கமாக, நறுக்கென்று சொல்லிவிட்டு கதையை முடித்து விட்ட தி.ஜா.வின் சிந்தனைகள் எவ்வளவோ ஆழமானவை.

                                    ------------------------------------------

                                   

கருத்துகள் இல்லை: