09 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு- “விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்”- சிறுகதை-வாசிப்பனுபவம்-

தி.ஜா.நூற்றாண்டு- “விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்”- சிறுகதை-வாசிப்பனுபவம்-உஷாதீபன்      தி.ஜா.வின் சிறுகதைகள் என்று   செவ்வியல் படைப்புக்களோடு கலந்து முழுத் தொகுதி கொண்டு வரப்பட்டு விட்டது.  சிறப்புச் சிறுகதைகள், தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்று பிரித்தும் தனித்தனியாகத் தொகுதிகள் வந்திருக்கின்றன. தொகுக்கப்படாத சிறுகதைகள் என்று தலைப்பிட்டு மேற்கண்ட எந்தத் தொகுதிகளிலும் இடம் பெறாத கதைகள் தனிப் புத்தகமாகவும்  வந்து விட்டன.

இத்தனை வெவ்வேறு தொகுதிகளிலும்  சேர்க்கப்படாத கதைகள் என்று இன்னும் சிலவும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான தி.ஜா.கதைகள் வலைத் தமிழ்.காம் என்கிற இணைய தளத்தில் வலம் வருகின்றன.

தி.ஜா. கதைகள் எதுவும் படிக்காமல் விடுபட்டதாக இருக்கக் கூடாது என்கிற ஆவலில் அவற்றையும் நாம் படிக்க முனையும் போது ஒன்று புரிகிறது. செவ்வியல் தன்மை இல்லாத காரணத்தால் அவை மேற்கண்ட தொகுப்புகளில் இடம் பெறாமல் போயிருக்கும் வாய்ப்புண்டு என்பதே அது. மிகுந்த தேடுதலில், பலரது உழைப்பில், மெனக்கெடுதலில் கொண்டு வரப்படும் ஒரு மேன்மையான படைப்பாளியின் தொகுதி எப்படி அமைய வேண்டும் என்கிற தீர்மானம் அதை அக்கறையோடு வெளிக்கொணரும் பொறுப்புடையவர்களின் முடிவைச் சார்ந்ததுதானே...!

ஒரு இயக்குநருக்கு அவரது எல்லாப் படங்களும் வெற்றிப்படங்களாய் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  சுமார் ரகம், ரொம்ப சுமார், தோல்விப் படம் என்றும் அமைந்திருக்கிறதுதானே?

அதுபோல சுமார் ரகக் கதைகளையும் ஏதோ அவசியத்தை முன்னிட்டு அல்லது அவசரத்தை முன் வைத்து, தி.ஜா. எழுதியிருக்கிறார் என்றுதான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. இந்த வலைத்தளத்தில்  பவனி வரும் தி.ஜா. கதைகளில் நிறைய எழுத்துப் பிழைகளும் மலிந்து கிடக்கின்றன. அவன்...அவள்...என்பது முதற்கொண்டு மாறி,  கவனிக்கப்படாமல் நாமாகப் புரிந்து படிக்கும் நிலையை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் இவையெல்லாம் படிக்கக் கிடைத்ததே, அதற்கு இந்த வலைத்தளம் உதவியதே என்றே நாம் சமாதானம் செய்து கொண்டு நன்றி தெரிவிக்க  வேண்டியிருக்கிறது.

இந்தக் கொரோனா காலத்தில் கூட தனியார் மருத்துவ மனைகள் முதலில் ஒரு லட்சம் கட்டுங்கள் என்று சொல்லியும், மூன்று நான்கு லட்சம் என்று பில்கள் போட்டும், ஏழு லட்சம் வரை பிடுங்கியும், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு உதவியைப் பெற மறுத்தும், ரொம்பவும் வற்புறுத்தி, உரிய அரசாணைகளைக் காண்பித்து நிரூபித்து அது போகவும் அதிகமாக மீதித் தொகையைப் பிடுங்கியும், முதலில் செலவு செய்து பின்பு Reimbursement  பெற முடியாமல் அவதியுற்றும் - என பல்வேறு செய்திகளை நாம் படிக்கிறோம். பாதிக்கப்பட்ட நண்பர்கள் மூலம் கண்ணுறுகிறோம்.  

கொரோனாக் அல்லாத பல்வேறு விதமான வியாதிகளுக்கு, ஆபரேஷன்களுக்கு என மருத்துவ மனைகள் எப்படி லட்சம் லட்சமாய்ப் பிடுங்குகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஒரு காய்ச்சல், தலைவலி என்று போய்ப் படுத்தாலும், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று பட்டியலிட்டு, அட்மிட் பண்ண வைத்து, நாலு நாளைக்கு இருக்க வைத்து கன்னா பின்னாவென்று பில்லை எகிறி விடும் மருத்துவ மனைகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பாதிப்பு இன்று நேற்று  ஏற்பட்டதல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்பதை இந்த “விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்” என்கிற கதையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் தி.ஜா. அப்பொழுதே இதைப்பற்றித் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர்களின் காசு பறிக்கும் உத்தியை அவரது தேர்ந்த எழுத்துத் திறமையின் மூலம் ஒற்றை வரியில் இப்படிச் சொல்கிறார்.

       “ஆத்மான்னு ஒண்ணு இருக்காமே...அதைத்தான் இன்னும் சோதிக்கலே...கண்ணுக்குத் தெரிஞ்சு, கையிலியும் அகப்பட்டா, அதையும் சோதிக்கிறேன்னு ஒரு ரெண்டாயிரத்தைப் (அந்தக் காலக் கட்டணம் இது) பிடுங்கியிருப்பான்“

தங்கைக்கு ஏற்பட்ட ஒரு நோவில் அவளின் ஒரு கால், முழங்கால்வரை எடுக்கப்பட்டு விடுகிறது. அண்ணா பார்க்க வந்திருக்கிறான். ஆறுதல் கூற முடியாமல் கண்ணீர் வடிக்கிறான். அவளும் அழுது கொண்டே இந்த முப்பது வயசுக்கு மேலே இனிமே மீதியிருக்கிற வருஷங்களை எப்படிண்ணா ஓட்டறது...என்று சொல்லிக் கதறுகிறாள். கணவன் சீராளனும் துயருறுகிறான். துடைத்து, சுத்தம் செய்து பெரும் உதவியாய் இருக்கும் தோட்டி உள்ளே வரப் பார்க்கிறாள். இவர்கள் இருவரும் வெளியேறி நின்று, அவள் தொடைவரை எடுக்கப்பட்டதை அவளுக்குச் சொல்ல வேண்டாம் என்று தோட்டியை எச்சரிக்கிறார்கள். பாதத்திலிருந்து கழுத்துவரை மூடப்பட்டிருக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

இதற்கு முன்பு டாக்டர் ரௌன்ட்ஸ் வருகிறார். தொங்கவிடப்பட்டிருக்கும் சார்ட்டைப் பார்க்கிறார். கன்டின்யூ...என்கிறார். அந்தப் பெண்ணின் தோளில் தட்டிக் கொடுக்கிறார். அடுத்தது, அடுத்தது என்று புறப்பட்டுப் போய் விடுகிறார். இதுக்கு இவருக்கு ஐம்பது ரூபா ஃபீஸ்....அந்த நர்சுக்கு பதினைஞ்சு...நாற்பது நாளுக்கும் மேலாச்சு...ரெண்டாயிரம் தாண்டிப் போச்சு பீஸே....ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஷூகர் டெஸ்ட், ஸ்கேனிங், அது இதுன்னு கொஞ்சம் கொஞ்சமா நிறையப் பிடுங்கிட்டாங்க...எல்லாமே முப்பதாயிரம் தாண்டும் போல்ருக்கு...என்று பேசிக் கொள்கிறார்கள். இவங்க என்ன டாக்டரா இல்ல வெட்டியான்களா?  டாக்டருக்கு சொந்தக் க்ளினிக் இது.  பாலி க்ளினிக்னு பேரு. அவர் ஆஸ்பத்திரிலயே அவரோட பேஷன்ட்ஸைப் பார்க்கிறதுக்கு, டெய்லி விசிட்டுக்கு ரூபா...என்ன அநியாயம் இது...!

பக்கத்து ரூம்ல மைசூர்க்காரங்க இருக்காங்க...காலு புரையோடி எடுக்கணும்னு சொல்ல, பணம் கட்டினாத்தான் ஆச்சுன்னுட்டாங்க...பேஷன்ட்டோட தம்பி ஊருக்குப் போயி நிலம் கரைய வித்துக் கொண்டு வந்து கட்ட, அப்புறம்தான் காலையெடுத்தாங்க...பாதத்தோட போயிருக்க வேண்டியது, பணம் கொண்டுவர்றதுக்குள்ள கால் முழுக்க புரை பரவி, காலையே எடுக்க வேண்டியதாப் போச்சு....ஒரு பெரியவர் சொல்கிறார்.

பதினைஞ்சு நாளா தலைவலிக்குதுன்னு வந்து நின்னா, மண்டைக்குள்ள ஏதோ கோளாறுன்னு டெஸ்ட் பண்ணித்தான் சொல்லணும்னு இன்பேஷன்டா இருக்கணும்னுட்டாங்க...நான் சொன்னேன்..தினமும் ரெண்டு காஸாலட்டு மாம்பழம் தின்னுகிட்டிருக்கே...நீல மாம்பழத்துக்கு மதுரையிலே காஸாலெட்டும்பாங்க...மாம்பழத்தோட பால் சாப்பிடணும்...இல்லன்னா வறட்சி கொடுத்து மண்டை வலிக்கும்னேன். ஒரு எல்.எம்.பி டாக்டர்...எட்டணாவுக்கு ஆறு வேளை மிக்சர் கொடுத்தான். மூணு வேளையிலே சரியாப் போச்சு. அப்பல்லாம் ஊருக்கு ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டு வந்து பயமுறுத்துவான். இப்ப எல்லா டாக்டருமே அப்படி ஆயிட்டான்....

இந்த அநியாயத்தைக் கேட்காம விடப் போறதில்ல என்று கொதிக்கிறார் மாப்பிள்ளை சீராளன். ஒராள் வருகிறான். அய்யா...நேத்து நான் லீவுங்க...எடுத்த காலைக் கொண்டுபோய் புதைக்கிறதுக்கு எங்களுக்கு பதினஞ்சு ரூபா கொடுக்கிறாங்க...உங்ககிட்டே அம்பது வாங்குறாங்க... நாற்பது கொடுக்கச் சொல்லுங்கய்யா...ரொம்ப அநியாயமா இருக்கு...என்ற புலம்புகிறான்.

இந்த ஞான வெட்டியானுக்கு அந்த விஞ்ஞான வெட்டியான் கொடுக்கும் கூலி வயிறெறியப் பண்ணுகிறது. தோட்டிப் பெண்ணின் கணவன் ராயப்பன் அவன். வெளியில் நடக்கும் இந்தப் பேச்சில் பிரமை பிடித்துக் கிடக்கும் சீராளன், அடுத்த வருட சாகுபடிக்கு விரை, தச்சுகூலி, எரு இதற்கெல்லாம எங்கே கடன் புரட்டலாம் என்று யோசித்தவாறிருக்கிறான்.

       அறையினுள்ளிருந்து தோட்டிப் பெண் வெளியே வருகிறாள். அம்மா கூப்பிடுறாங்க என்கிறாள். சீராளன் உள்ளே நுழைகிறான். இவ்வளவு பணத்தைக் கொள்ளையடிச்சு என்ன செய்வான் ஒரு மனுசன்? என்று குழம்பி நிற்கிறார் மைத்துனர்.                      ----------------------------------------

                           

 

 

கருத்துகள் இல்லை: