10 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு-”பூட்டுகள்” சிறுகதை-வாசிப்பனுபவம்

தி.ஜா.நூற்றாண்டு-”பூட்டுகள்” சிறுகதை-வாசிப்பனுபவம்-உஷாதீபன்



       ம் குடும்பங்களில் மூத்த தலைமுறையினரின், அதாவது நம் பெற்றோர் காலத்து வாழ்க்கை முறை என்பதே நம்மிலிருந்து முற்றிலும் மாறுபாடானது. அவர்களின் நுணுக்கமான பார்வைகளும், சிந்தனைகளும், பொறுப்பான நடவடிக்கைகளும், குடும்பம் நடத்தும் முறைமையும்  நம் தலைமுறைக்கு வரவே வராது. எந்தவொரு விஷயத்தையும் முன்னதாகவே திட்டமிட்டு, மனதுக்குள் இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் பண்ணி, தீர்க்கமாக இயங்குவார்கள். அவர்களது காரியங்களும் அந்தந்த நேரத்துக்கு சரியாகத் துவங்கி, ஒழுங்காக நடைபோட்டு, சுபமாக முடிந்து விடும்.

       அப்பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர்-அதாவது அடுத்த வீடு-பக்கத்து வீடு, எதிர்வீடு என்று விடாத தொடர்புகள் இருந்தன. பொருட்கள் கொடுக்கல் வாங்கல், புத்தகங்கள் இரவல் வாங்கிப் படித்தல், அவசரத்திற்குப் பரஸ்பரம் பண உதவி செய்து கொள்ளல், பின் மொத்தமாகவோ, சிறிது சிறிதாகவோ திரும்பப் பெற்றுக் கொள்ளல் என்று ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவிகளோடு சௌஜன்ய நிலைமை இருந்து வந்தது. குறிப்பாக அக்ரஉறாரத்தில் இந்த மாதிரியான இயங்குதல்களைப் பலரும் கண்கூடாகக் கண்டிருக்கலாம். மனித நம்பிக்கைகள் என்பது மிகவும் அந்நியோன்யமான நிலையில் அன்பான நடவடிக்கைகளாக இருந்து வந்தன என்பதுதான் அன்றைய நிஜம்.

       அந்த மாதிரி சிரத்தையான, பொறுப்பு மிகுந்த ஒரு குடும்பத்தையும் அவர்களுக்கு இணக்கமாக இருந்த அடுத்த வீட்டு அன்பர்களையும் மனதில் வைத்து இந்தக் கதையைச் சொல்கிறார் தி.ஜா. வெளியூருக்கு ஒரு காரியம் நிமித்தமோ அல்லது ஒரு திருமணம் நிமித்தமோ செல்ல வேண்டி வருகையில் வீட்டை கவனமாய்ப் பூட்டி கொல்லைப் புறத்திலிருந்து ஒவ்வொரு கதவுகளாகச் சாத்தி,. தாழ் போட்டு, கொண்டி போட்டு பின் பூட்டுப் பூட்டி நன்றாகப் பூட்டியிருக்கிறதா என்று  இழுத்து இழுத்துப் பார்த்து வாசல் கதவு வரை அனைத்துக் கதவுகளையும் பூட்டியிருக்கிறோமா என்பதை மனதில் இருத்தி திருப்தி ஏற்படுத்திக் கொண்டு வெளியூருக்கு வண்டியை விடுவதே எல்லோரின் வழக்கம். அன்றெல்லாம் நகை, பணம் இவைகளை வீட்டில் வைத்தே பாதுகாத்தல் என்பதே பெரும்பாலான நடைமுறையாக இருந்து வந்தது. பெரிய டிரங்குப் பெட்டியில் போட்டுப் பூட்டி, பரண் மேல் ஏற்றி, அப்பெட்டி தெரியாத வகையில் தட்டு முட்டுச் சாமான்களைச் சுற்றிலும் போட்டு மறைத்து...என்று பாதுகாத்தார்கள். அன்றைக்கும் இன்றைக்கும் இச்செயலில் பெரிய மாற்றம் இருப்பதாகச் சொல்ல முடியாதுதான். இன்றும் வீட்டில் மறைக்கும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கள்ளத்தனமாக. நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என்று வங்கி லாக்கரில் வைத்தும் பாதுகாக்கிறார்கள். இந்தக் கதையில் பழைய நடைமுறை சொல்லாமல் சொல்லப்படுகிறது.

       அந்தக் கால வீடுகளுக்கும், தற்போதைய கான்கிரீட் கட்டட வீடுகளுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. அப்போது  பகுதிக்குப் பகுதி பெரிய பெரிய மரக் கதவுகளைத் தவறாமல் வைத்திருப்பார்கள். தாழ்வான நிலைகள் தலையைக் குனிந்து குனிந்தே போக வர வேண்டியதாய் இருக்கும். மறந்தால் இடிதான்.  அத்தனை கதவுகளுக்கும் கொண்டி போட்டு அதைத் தூக்கி மாட்டி, மாட்டிய கொக்கியை நெட்டுக் குத்தலாகத் திருப்பி, அதில் ஒரு பூட்டை நுழைத்துப் பூட்டுவார்கள். இப்படியே கொல்லைக்கதவு, இரண்டாம் கட்டுக் கதவு,அடுக்களைக் கதவு, முன் கதவு, இடைக்கழிக் கதவு என்று அறை அறையாகப் பூட்டி நிறுத்தி சலிக்காமல் பெரிய பெரிய பூட்டுக்களையும் போட்டு வீட்டைப் பாதுகாப்பாய் அரணாக நிறுத்திவிட்டுத்தான் வெளியேறுவார்கள். . ஒரு கொத்துச் சாவியே இடுப்பில் பத்திரமாய்த் தொங்கும். போதாக் குறைக்கு பக்கத்து வீட்டில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வேறு கிளம்புவார்கள். முடிந்தால் வீட்டு வேலையாளை அல்லது பண்ணையாளைத் திண்ணையில் படுத்துக் கொள்ளச் சொல்லிச் செல்வார்கள். இப்படியெல்லாம் கண்ணும் கருத்துமாய் இருப்பது என்பதுவே அந்தக் கால வழக்கம்.

       அப்படித்தான் இந்தப் “பூட்டுகள்” கதையிலும் நடக்கிறது. உப்பிலி தன் மனைவி குழந்தைகளோடு ஒரு வெளியூர் கல்யாணத்திற்குக் கிளம்புகிறார். பகல் பதினோரு மணி ரயில். அதற்குள் படிப்படியாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் நடக்கிறது..  முதலில் அடுத்த வீட்டுக்காரரிடம் சொல்லிக் கொள்ளச் செல்கிறார். அப்போது மணி எட்டுதான் ஆகிறது. அண்ணா மாப்ளையோட தங்கைக்குத்தான் கல்யாணம் என்றாலும் போகாவிட்டால் கோபிப்பார்கள் என்று அண்ணா வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்துக் கிளம்பி விடுகிறார் குடும்பத்தோடு.

       வாசல்ல சித்த வீட்டைப் பார்த்துக்கணும், கொல்லைப் பக்கம், மத்யானம், சாயங்காலம், ராத்திரி படுத்துக்கப் போறதுக்கு முன்னாலே ரெண்டு தடவைன்னு காபந்து பண்ணக் கேட்டுக் கொண்டு ஒரு டார்ச் லைட்டையும் உதவிக்குக் கொடுக்கிறார். பொன்னுச்சாமியை திண்ணையில் படுத்துக்கச் சொல்லியிருக்கேன். ராத்திரி சோதனை பண்ணும்போது உதவிக்கு அவனையும் கூப்பிட்டுக்கலாம் என்று சொல்லி, டார்ச் லைட்டை அவனிடம் கொடுத்துவிட வேண்டாம், நான் வந்து வாங்கிக்கிறேன் என்றும் கவனமாய்ச் சொல்கிறார். மேலும் ஊருக்குப் போவதை யாரிடமும் வாயைத் திறந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்.  

       விடைபெற்றுக் கொண்டு போய், அவர் மனைவி வருகிறாள். நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள திரும்பிடுவோம்...மாலையில் பசும்பால்காரி வந்ததும் அந்த பாலை வாங்கணும்.. நீங்க உபயோகிச்சிக்கலாம்...காசு தரணும்ங்கிறதில்லை...நாங்க வந்தப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு டம்ளர் காபி மட்டும் போட்டுக் கொடுத்தாப் போரும்...(பிரயாணக் களைப்புத் தீர)  என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

       அந்தக் காலத்து வீடுகள் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சமயங்களில் ஜன்னல் வழி பார்ப்பது போல் கூட இருக்கும். அங்கு நடப்பது, பேசுவது அத்தனையும் கேட்கும். கொல்லைப் புறம் நன்றாகத் தெரியும். அப்படியான வீடுகள் அவைகள். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் குறுக்குச் சுவர் ஒன்றுதான் என்பதாகவும் பல வீடுகள் இருந்ததுண்டு.

       கஸ்தூரி குழந்தைகளுக்குத் தலைவாரிவிட்டு ரெடி பண்ணுகிறாள். பத்தே காலுக்காவது கிளம்பியாக வேண்டும் என்ற அவசரம். ரெயிலடி ஒன்றரை மைல் தூரம். மாட்டு வண்டியில் நேரத்துக்கு முன்னமையே போய்விடலாம்தான். இடையிடையே கொல்லைக் கதவு, இரண்டாம் கட்டு நடைக்கதவு என்று சாத்துவதும், பூட்டுவதுமாகிய சத்தங்கள் கேட்கிறது. ஒன்பதுக்கே குழந்தைகளுக்கு சட்டையைப் போட்டு ரெடி பண்ணினால் அதுகள் ஓடுவதும் சாடுவதுமாய் வெளியூர் போவது ஊருக்குத் தெரிந்து விடும் அபாயம். மீண்டும் கதவுகள் திறக்கப்பட்டு, திரும்பச் சாத்தப்பட்டு, பூட்டும் சத்தங்கள்.

       பொன்னுச்சாமி வண்டியை எடுக்க, கிளம்பியாயிற்று. கடைசியாய் ஒரு முறை என்று அனைத்துக் கதவுகளையும் திறந்து பூட்டி திரும்பவும் ஒரு மனத் திருப்தியோடு கிளம்புகிறார் உப்பிலி. வண்டி கணத்தில் தெருத் திரும்பி, கொஞ்ச நேரத்தில் அந்தச் சத்தம். குழந்தை அழும் சத்தம். ரெண்டு குழந்தைகள் மட்டும்தான் கூடப் போச்சு. கைக் குழந்தை இல்லை....இப்போது பளிச்சென்று நினைவுக்கு வருகிறது அவர்களுக்கு.

       ஐயோ...அண்ணா....இங்க வாங்கோளேன்....குழந்தை அழற சத்தம் பக்கத்தாத்துல கேட்கிறதே...என்று பதறுகிறாள். தீட்சிதர் பதறியடித்து அங்கும் இங்கும் ஓடுகிறார்.. அதற்குள் உப்பிலி போன மாட்டு வண்டி வேகமாய்த் திரும்ப வந்து நிற்கிறது. மனைவியைத் திட்டிக் கொண்டே கதவைத் திறக்கிறார்...உப்பிலி. அடித்துப் பிடித்து மனைவியும் உள்ளே நுழைய அடுத்த நிமிடம் குழந்தை அழும் சத்தம் நிற்கிறது. எல்லோருக்கும் மூச்சு வாங்க...அய்யோடா...அப்பாடா.......

       ஓய் தீட்சிதரே...இப்படியுமா ஒரு தாயாருக்கு மறந்து போகும்?  உப்பிலி இவரிடம் குறைபட்டுக் கொள்கிறார். இனிமே சாயங்கால ரயில்தான் என்று கிளம்பிப் போகிறார்கள். கன்னம் வைக்காமல், தீவட்டிக் கொள்ளைக்காரன் வராமல் தீட்சிதர் நான்தான் பார்த்துண்டேன்...என்கிறார். நல்ல பொம்மனாட்டி, நல்ல தாழ்ப்பாள்யா...என்று சொல்ல...பணத்தோடசொத்தோடஅருமை தெரியுமா..உமக்கு...என்று பதில் வருகிறது. கதை முடிகிறது.

       வீட்டைப் பகுதி பகுதியாய் மூடி, கொண்டி போட்டு, பூட்டுப் போட்டு, இழுத்து இழுத்துப் பார்ப்பதும், ஒ்ரு தடவைக்கு நாலு தடவை ஊருக்குக் கிளம்பும் முன் திறப்பதும் மூடுவதுமாய் இருந்து கடைசியில் குழந்தையையே கோட்டை விடுவதும், இத்தனை கதவடைச்சு பூட்டைப் போட்டா எந்தத் திருடன்யா வருவான்...தொழிலே வெறுத்துப் போகாது அவனுக்கு....என்பதான உப்பிலியின் நடவடிக்கைகளும், அடைத்துப் போன வீட்டில் மாட்டிக் கொள்ளும் குழந்தை, கடைசியில் தாயாரின் கைக்கு வந்ததும்தான்  வாசிக்கும் நமக்கும் உயிர் வருகிறது.

       எவ்வளவோ கவனமாயும், கருத்தாயும் இருப்பவர்களுக்கும் தவறும் என்பதைச் சுட்டிக் காட்டும் கதையாகவும், முழுக்க முழுக்கப் பணத்தையே புத்தியில் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு வேறு எதுவும் பெரிசாய்த் தெரியாது என்பதும், அதனாலேயே முக்கியமானவை மறந்து போகவும், கைவிட்டு நழுவவும் வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்தும் சிறுகதையாக இப்படைப்பு அமைந்துள்ளது. பூட்டுகள் பாதுகாப்பாய் உணரப்படும் அதே சமயத்தில் ஆபத்தானதாகவும் மாறி விடும் அபாயம் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லும் படைப்பு.

       தி.ஜா.வின் குடும்பப் பாங்கான உரையாடல்கள் வெகு இயல்பாக நம்மை ஆகர்ஷிக்கின்றன. உப்பிலி மற்றும் கஸ்தூரி என்கிற பெயர்களும் கதாபாத்திரங்களும் தி.ஜா.வின் மனதுக்குப் பிடித்தவைகள் போலும். மேலும் சில கதைகளில் இதை நாம் காண முடிகிறது. சொத்தையும் பணத்தையும் பூதம் காப்பது போல் காக்க வேண்டிய அந்தக்காலக் கட்டாயத்தை கதை அழுத்தமாகச் சொல்கிறது. உப்பிலி பக்கத்து வீட்டுக் காரரிடம் எப்படியெப்படியெல்லாம் பூட்டிய வீட்டைக் காபந்து பண்ண வேண்டும் என்று சொல்லும் உரையாடலும், பிறகு மனைவி கஸ்தூரி வந்து மாமியிடம் சொல்லிக் கொள்ளும் அழகும் மிகவும் ரசிக்கத் தக்கவை. படிக்கும் வாசகனும் இவற்றில் லயித்துப் போய் கடைசியில் அவனும்தான் தொட்டில் குழந்தையைக் கைவிட்ட உணர்வை, ஆபத்தை உணர்கிறான். பயணம் செல்லாமல் உடனே திரும்ப வந்து பூட்டிய வீட்டிலிருந்து குழந்தையை மீட்ட பிறகுதான் நமக்கே உயிர் வருகிறது.  அந்த அளவுக்கான ஆழ்ந்த லயிப்பை ஏற்படுத்தும் இச்சிறுகதை தி.ஜா.வின் சிறுகதைப் பயணத்தில் இன்னொரு முக்கியமான வெற்றி.

                                         -----------------------------------------

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...