நடிகை எம்.என்.ராஜம் என்கிற வேம்ப் காரெக்டர் (Vamp Character) ஆல் ரௌன்டர். கதாநாயகி வில்லியாகி இருக்கிறாரா?
ஆகியிருக்கிறார். எப்போது? வயசானபோது...! சரி, வில்லி கதாநாயகி ஆகியிருக்கிறாரா? ம்ம்...ஆகியிருக்கிறார். அது...எப்போது...? அப்போதே....! போகட்டும்....ரெண்டும்
இல்லாமல் நகைச்சுவைப் பாத்திரமேற்றிருக்கிறாரா? ம்ம்...அதுவும்தான்.....எப்போது? இதற்கும்
என்ன எப்போது? எல்லாமும் அப்போதேதான்...! ஒரே சமயத்தில் வில்லியாய் தூள் கிளப்ப, கதாநாயகி
என்று இனிமையாய் பவனி வர, நகைச்சுவையையும் விட்டு வைப்பானேன் என்று விடாமல் வலம் வந்து
கொண்டிருந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது நடிகை எம்.என்.ராஜம்தான். ஆல் ரௌன்டர் மதுரை
நரசிம்ம ஆச்சாரி ராஜம். ஏழாவது வயதிலேயே
நடிப்பு மேடை ஏறியிருந்ததால், இந்த அனுபவங்கள் எல்லாம் கிட்டாமலா போய்விடும்? முதன்மை கதாநாயகி, எதிர்மறை வில்லி மற்றும் நகைச்சுவை
என்று எதுவானாலும் - எதுக்கு யோசனை...அதான் ராஜம் இருக்காங்களே...! என்று மனதில் முந்திக்கொண்டு
வந்து நின்றவர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை
நாடகப் பட்டறையும், டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக மன்றமும் செதுக்கிக் கற்றுக் கொடுக்காததையா
திரையுலகம் புதிதாய்ச் சொல்லிவிடப் போகிறது? அடிப்படை அங்குதானே ஜனிக்கிறது? திரைக்கேற்றாற்போல்
திருத்தங்கள் நிகழ்ந்து இங்கே வெளிச்சமாய் மிளிர்கிறது என்பதுதானே...யதார்த்தம்?! ஆனால்
ஒன்று....வில்லி பாத்திரம் என்றால் அந்த எம்.என்.ராஜத்தின் மீது மக்களுக்கு அப்படியொரு
பழி கோபம் இருந்தது என்னவோ உண்மை. இந்தக் கடங்காரி
வந்து என்ன பாடு படுத்தறா? என்ன ஆட்டம் போடுறா? இப்டி எல்லாரையும் ஆட்டி வைக்கிறாளே?
என்று தியேட்டரில் படம் பார்க்கும்போதே வாய்விட்டுக்
கத்தினார்கள். சபித்தார்கள். அதுதான் அவர் நடிப்பிற்குக் கிடைத்த பாராட்டும் விருதும்.
நாயகி
பாத்திரம் என்றால்...நல்லாயிருக்கே...அவளா இது? ..என்று மனதில் இனிமை பொங்கும் சந்தோஷத்தில்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே..இது வேறையா...? என்று வியக்கும் வண்ணம் நகைச்சுவைப்
பாத்திரங்களிலும் வந்து நிற்க...இதுவும் பொருத்தமாத்தான் இருக்கு நம்ப ராஜத்துக்கு........என்று
நம் தமிழ்த் திரை ரசிகர்களான பெண்களும், ஆண்களும் சொந்தம் கொண்டாடி முழு மனதோடு ஏற்றுக்
கொண்டார்கள். கதையும், காட்சிகளும் என்ன சொல்கின்றன...அதை ரசித்தார்கள்...
அதிலிருக்கும் அர்த்தமும், அழுத்தமும் அவர்களை
திருப்திப்படுத்தியது. 1949
ல் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த எம்.என்.ராஜம், தனது 14-வது
வயதில் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன் கால்களை அழுத்தமாக ஊன்றினார். அதெல்லாம் முடியாதுண்ணே...அது மட்டும் என்னால
செய்ய முடியாது....வேறே எந்த மாதிரி வேணாலும் காட்சி எடுத்துக்குங்க...எட்டி உதைக்கல்லாம் முடியாது.....என்று
அடம் பிடித்த ராஜத்தை, அந்தக் காரெக்டரின், அந்தக் காட்சியின் அவசியத்தை வலியுறுத்தி,
அப்பொழுதுதான் மக்கள் மனதில் அந்த நல்ல விஷயம் படியும் என்று எடுத்துச் சொல்லி சம்மதிக்க
வைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாதான். ரத்தக்கண்ணீர் என்ன சாதாரணப் படமா? அது ஒவ்வொருவனின்
வாழ்க்கைக்கான பாடமாயிற்றே? வெளிநாட்டில்
படித்துத் திரும்பிய மோகன் படாடோபமான வாழ்க்கை நடத்துகிறான். தவறான வழியில் தயக்கமின்றிச்
செல்கிறான். தறி கெட்டு அலைகிறான். பரத்தையரின் பழக்கம் ஏற்படுகிறது. பணத்தையும் ஆரோக்யத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கிறான். வியாதிக்காளாகிறான். பிறர் அருகே நெருங்க அஞ்சும் தொழுநோய்
அவனைத் தொற்றிக் கொள்கிறது. அவனிடமிருந்து ஏராளமான பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, காம
வலையில் வீழ்த்தி, அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஏமாற்றி உருக் குலைத்த காந்தா அவனை விரட்டியடிக்கிறாள். அவளுக்காகக் கொட்டிக்
கொடுத்த செல்வத்தோடு கூடிய அந்த மாளிகையிலிருந்து அவனை விரட்டியடிக்கிறாள். அந்த பங்களாவின்
ஓரமாய் ஓர் இடத்தில் தான் தங்கிக் கொள்ள அனுமதியளிக்கும்படியும், வெளியே விரட்டியடிக்காதே
என்றும் கெஞ்சிக் கதறுகிறான் மோகன். நீ இங்கிருந்தால் அந்த வியாதி என் நாய்க்குக் கூடத்
தொற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு என்று சொல்லி, அவனை வெளியே போ...என்று விரட்டி, காலால்
எட்டி உதைக்கிறாள். மாடிப்படிகளில் உருண்டு, கீழே விழுந்து புரண்டு கதறுகிறான் மோகன்.
தன் வாழ்க்கையில் அவன் செய்த தவறுகளையெல்லாம்
உணரும் தருணமாகிறது அது. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதியடைவதில்லை என்கிற
மெய்மையையும், தாயை எட்டி உதைத்த தன் கால்கள் இப்போது நடக்கத் தெம்பின்றி ஊனமான நிலையையும்
நினைத்து நினைத்து, சீந்துவாரின்றி தன் தவறுகளுக்காக வருந்துகிறான். மோகன்
என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் தத்ரூபமான நடிப்பு, பார்ப்போர் உள்ளத்தை உருக வைக்கும். நெஞ்சம்
பதற வைக்கும். அவரவர்களின் வாழ்க்கைத் தவறுகளை நினைத்து நடுங்க வைக்கும். தமிழ்த் திரையுலகமும் நம் மக்களும் அதுநாள்வரை காணாத
வெறும் படமல்ல, பாடம் அது. .. நடிகர்திலகம் கூடத் தன் நடிப்பில் அதற்குப்பின்தான் என்று சொல்ல வேண்டும்.
நவராத்திரி படத்தில் அதே தொழுநோயாளியாக அவர் நடித்தது சிறப்புதான் என்றாலும், இந்த
ரத்தக் கண்ணீர் மோகன் கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தை இதுநாள்வரை வேறு எதுவும்
விஞ்சியதில்லை. கதையமைப்பு அப்படி. அதற்கான காட்சிகளில் அவ்வளவு வீர்யம். அந்த வீர்யத்தைக்
கண் முன்னே கொண்டு வந்த நடிகர்கள். அதில் சக்ரவர்த்தியாய்த் திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா.
இந்தக்
காட்சிக்கான படப்பிடிப்பின்போதுதான் எட்டி உதைக்கும் அந்தக் காட்சியில் எம்.என்.ராஜம்
என்னால் முடியாது என்று மறுத்தது. ராதாதான் வற்புறுத்தி நடிக்கச் செய்து அந்தக் காட்சியின்
அவசியத்தை, அழுத்தத்தை, தாக்கத்தை பார்வையாளர்களுக்குள் நிலை நிறுத்தினார். நீ உதைக்கிறமாதிரி உதை, நான் படில உருண்டு
புரண்டு விழுந்து கொள்கிறேன் என்று சொன்ன எம்.ஆர். ராதா, காட்சியின் தத்ரூப உணர்ச்சிகர
நடிப்பில் தன்னை மறந்து உண்மையாகவே சற்று வேகமாக ராதா அண்ணனை உதைத்துத் தள்ளியதையும்,
மிக அருமையாக அமைந்துவிட்ட அந்தக் காட்சிக்காகவும், வாயாரப் பாராட்டி மகிழ்ந்தார் நடிகவேள்
என்பதை இன்றும் மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார்
எம்.என்.ராஜம். ரத்தக் கண்ணீர் வாழ்க்கையில்
ஒவ்வொரு மனிதனும் அறிந்துணர வேண்டிய பாடமாக அமைந்த சிறப்பான திரைப்படம். அது
எம்.என்.ராஜத்திற்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்து விடுகிறது. அங்கிருந்துதான்
வேகமெடுக்கிறது அவரது திரைப்பயணம். அடுத்தடுத்து
வில்லி கதாபாத்திரமா...கொண்டு வா ராஜத்தை...என்று தயாரிப்பாளர்கள் முதல் இயக்குநர்கள்வரை
முந்திக் கொண்டு சொல்லும் நிலைக்கு அவரைக் கொண்டு நிறுத்துகிறது. வேம்ப் (வில்லி) காரெக்டரில்
ஆரம்பித்த அவரது திரைப்பயணம் எல்லா வேடங்களையும் என்னால் செய்ய முடியும் என்று அவரை
ஒரு ஆல் ரவுண்டராக ஆக்குகிறது.. மதுரை சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த பலர் திரைப்பட
உலகில் பரிமளித்திருக்கிறார்கள். இப்படிச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு உடனடியாக வருபவர்
புகழ் பெற்ற பாடகர் நம் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்தான். திருமதி எம்.என்.ராஜம் அவர்களும் இந்த சௌராஷ்டிர
சமூகத்தைச் சேர்ந்த மதுரைக்காரர்தான். வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களும் இந்த சமூகம்தான்.
எல்லோருமே புகழ்பெற்றவர்களாகத்தான் விளங்கியிருக்கிறார்கள். 25.05.1940ல் பிறந்த எம்.என்.ராஜம்
பின்னணிப் பாடகர் திரு ஏ.எல்.ராகவனை 02.05.1960 ல் திருமணம் செய்து மிகச் சிறந்த மனமொத்த தம்பதிகளாக, இரண்டு குழந்தைகளுக்குப்
பெற்றோராக, இன்றும் நம் கண்முன்னே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். திருமதி எம்.என்.ராஜத்தின்
வயது இப்போது 79 முடிந்து எண்பது. ஆயிரம் பிறை கண்ட அபூர்வப் பெண்மணி. இன்றும் அவ்வப்போது
டி.வி. சீரியல்களில் தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறார். 2014 வரை நடித்திருக்கிறார்.
ஆடின கால் நிற்காது என்பதுபோல் நடிப்புலகில் பவனி வந்தவர்களுக்கு, கடைசி வரை நடித்துக்
கொண்டேயிருக்க வேண்டும் என்கிற தீராத ஆசை என்பது உள்ளார்ந்த லட்சியமாகவும் கனவாகவுமே
இருக்கும். அதுதான் அவர்களுக்கு ஆத்ம சாந்தி. சிவாஜி,
எம்.ஜி.ஆர்., ஜெமினி, எம்.ஆர்.ராதா., எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.நம்பியார், என்.எஸ்.கிருஷ்ணன்
என்று பிரபலமானவர்கள் அத்தனைபேரோடும் நடித்திருக்கும் பெருமை பெற்ற இவரின் புகழ் பெற்ற
படங்கள் அநேகம். ரத்தக் கண்ணீர், புதையல், தங்கப்பதுமை,
நாடோடிமன்னன், பாசமலர், தாலிபாக்யம், அரங்கேற்றம், பாவை விளக்கு, பதிபக்தி, தெய்வப்பிறவி,
நல்ல இடத்து சம்பந்தம், நல்ல தம்பி, நான் பெற்ற செல்வம், நானே ராஜா, பாக்தாத் திருடன், பாசவலை, என்று சிறந்த திரைப்படங்களின் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அத்தனையும்
முத்தான திரைப்படங்களாய் அமைந்து இவரது பெயரையும் புகழையும் நிலைநாட்டி, அடுத்தடுத்து
என்று இவர் பயணித்துக் கொண்டேயிருப்பதற்கு பலமான காரணமாய் அமைந்தன. 1949 ல் நல்ல தம்பி படத்தில் அநாதைக் குழந்தையாகக்
குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 1949 ல் பி.யு.சின்னப்பாவோடு மங்கையர்க்கரசியில்
நடிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார். 1950 களில் ஏராளமான படங்களில் நடித்த ஒரே நடிகை
இவர்தான். நாடோடி மன்னனில் இளவரசி மனோகரி பாத்திரத்திலும், பதிபக்தி என்கிற சமூகப்
படத்தில் மருக்கொழுந்து கதா பாத்திரத்தை ஏற்றுச் சிறப்புச் செய்ததையும் சம்பூர்ண ராமாயணத்தில்
சூர்ப்பனகையாய் வந்ததையும் யாரால் மறக்க முடியும்? தொடர்ந்த
இந்த வெற்றிப் பயணத்தைக் கணக்கில் கொண்ட அரசு, இவரது அசாத்தியத் திறமையை மனதில் வைத்து,
அதை உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் 1962-ல் இவருக்குக் கலைமாமணி விருது கொடுத்துக் கௌரவித்தது.
சென்னை திருவல்லிக்கேணி உற்யூமர் க்ளப் 2015ல் இவரை அழைத்து, தலைமை விருந்தினராக அமர்த்தி
சிறப்புச் செய்து கௌரவித்திருக்கிறது என்பதும் இங்கே நாம் அறிந்தாக வேண்டிய முக்கியச்
செய்தியாகிறது. வில்லி வேடத்தில் திரைத்துறைக்குள் நுழைந்த
எம்.என்.ராஜம், வேம்ப் வில்லி என்று பெயரெடுத்து, கொடுமைக்காரச் சித்தி, இரண்டாந்தார
மனைவி என்று வெவ்வேறு விதமான ரோல்களில் வலம் வந்து கொண்டிருக்கையில், மென்மையான கதாபாத்திரங்களிலும்
இவர் பொருந்தி வருவார் என்பதையும், படித்த கண்ணியமான, கௌரவமான பாத்திரங்களுக்கும் இவரால்
திறமை காட்ட முடியும் என்றும் முடிவு செய்த இயக்குநர்கள் இவருக்கு வித விதமான வேஷங்களைக்
கொடுத்து நடிக்க வைத்து இவரை மேலும் வெளிக்
கொண்டு வந்தார்கள். அதில் குறிப்பிடத் தக்கது என்று சிலவற்றை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டியிருக்கிறது.
அதன் மூலம் இவரது திறமையை மென்மேலும் உணர நம் தமிழ் ரசிகர்களுக்கு இது அரிய வாய்ப்பு. அப்படியொரு திரைப்படம்தான் தெய்வப் பிறவியும்,
பாசமலர் திரைப்படமும். தெய்வப்பிறவி படத்தில்
இவரது காதலராக வருபவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மிகவும் கூச்ச சுபாவம்
உள்ளவராகவும், அக்கா பத்மினி சொல்லியனுப்பியதாலேயே வந்ததாகவும்...கூறி மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்பார். நீங்க…!...நீங்க எங்க இங்க….? – எம்.என்.ராஜத்தின்
வீட்டு வாசலில் இந்தக் காட்சி. அதிசயமாய், எதிர்பாராது, ராமு என்ற எஸ்.எஸ்.ஆரைப் பார்த்த
மென்மையான அதிர்ச்சியில் கேட்கிறார் நா….நா வந்து….நந்தியாவட்டப் பூ இல்ல…நந்தியாவட்டப்பூ...அத
ரெண்டு...பறிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்…. எதுக்கு…? ம்…..கண்ணு
வலிக்கு….ம்…! உங்களுக்கா….? – சிரித்துக்கொண்டே… கல்லூரில
படிக்கும்போது…உங்களப் பார்க்கணும்னு காத்துக்கிட்டிருந்த எனக்குல்ல கண்ணு வலி எடுத்திருச்சு….. ம்ம்….!!! உங்ககிட்டப்
பேச முடியலையேன்னு சித்தம் கலங்கி நொந்தில்ல போயிருந்தேன்…. உனக்காவது சித்தம் கலங்கிப் போச்சு….உன்னக்
கண்ட ரெண்டு கணத்துக்குள்ளாகவே, எனக்குப் பைத்தியமே பிடிச்சுப் போச்சு….. நான் உண்மையாச் சொல்றேன்…எனக்கு எப்பவுமே
உன்னுடைய நினைவுதான்…கண்ண மூடினா, உன்னப்பத்திக் கவலைதான்….. இந்த
இடத்தில் கள்ளபார்ட் நடராஜன் கோபமாய் உள்ளே நுழைவார். வேகமாய் வந்து பளாரென்று எஸ்.எஸ்.ஆரின்
கன்னத்தில் அறைந்து விட்டுச் சொல்லுவார்… திலகத்தப் பத்திப் பேச உனக்கு என்னடா உரிமையிருக்கு?
– கன்னத்தில் பதிந்த விரல்களோடு பொறுக்க முடியாமல்
வெலவெலத்து நிற்கிறான் ராமு. மனோகர்….நீ
செய்தது உனக்கே நல்லாயிருக்கா? அறிவுள்ளவன் செய்ற காரியமா இது? – திலகத்தின் ஆக்ரோஷமான
கேள்வி. அது எங்க அண்ணனுக்கே கிடையாதே….! .இருந்திருந்தா
இவனுக்கு இப்டி ஒரு உரிமை கிடைச்சிருக்குமா? மனோகர், இப்ப நீ இவரை அடிச்ச பாரு… தப்புங்கிறியா?
நான் ரொம்ப இளகின மனசு படைச்சவன் திலகம்…உங்கிட்ட எனக்கு என்னடா பேச்சு…? பேச வேண்டிய
எடத்துல நான் பேசிக்கிறேன்….- கோபமாய் மனோகர் வெளியேறுகிறான். என்ன இது…? இந்த சம்பவத்த…. இதோட மறந்துற
வேண்டிதான்…..
என்ன சொல்றீங்க….? இந்த விஷயம் மட்டும் எங்க அத்தானுக்குத் தெரிஞ்சா,
எங்க குடும்பமே கலைஞ்சு போயிடும்….. அதுக்காக…? நீ
என்னை நேசிக்கிறது உண்மையாயிருந்தா, இதப்பத்தி எங்கயும், யாருகிட்டயுமே பேசக் கூடாது….-
திலகத்திடம் சத்தியம் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான் ராமு. சிறு காட்சிதான். ஆனாலும் அடி
வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பாக சட்டென்று ஒரு முடிவு எடுத்து, இந்த
நிகழ்வு என் அத்தானுக்குத் தெரியக் கூடாது, ஏன் யாருக்குமே தெரியக் கூடாது என்று தீர்மானிக்கும்
எஸ்.எஸ்.ஆரின் ராமு என்கிற கதாபாத்திரமும் அன்பின் வயப்பட்டு அதற்கு சம்மதிக்கும் திலகம் என்ற
எம்.என்.ராஜத்தின் அடங்கிய, காதல் வயப்பட்ட நடிப்பும் இந்த இடத்தில் வானளவு உயர்ந்து நிற்கும். குடும்பம்
என்கிற அமைப்பு எந்தக் காரணங்களுக்காகவும் சிதைந்து விடக் கூடாது என்கிற தத்துவம் பலமாய்
பொருந்திப் பிரகாசிக்கும். இதில் காதலியாக என்றால் பாசமலர்
படத்தில் நடிகர்திலகத்தின் டாக்டர் மனைவியாக மிகுந்த கௌரவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தில்
நடித்திருப்பார். படித்த மனைவி என்கிற அந்தஸ்தோடு அவர் செய்திருக்கும் அந்தப் பாத்திரம்
வெறும் ஏற்றுக் கொண்ட வேஷமல்ல. வாழ்ந்த கதாபாத்திரம். மாலதி என்ற அந்த டாக்டர் வேஷத்தில் நடிகர்திலகத்திற்கு மனைவியாக வந்து ஒட்டியும்
ஒட்டாமலும் அவர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் சில காட்சிகளும், மனைவி தன் சொல்லை,
விருப்பத்தைப் புறக்கணிக்கும் கணத்தில் நடிகர்திலகத்தின்
உணர்ச்சி பாவங்களும், நம் மனதைப் பிழிந்தெடுக்கும். இப்படியெல்லாமும் திரைப்படங்கள்
வந்து மனித வாழ்வை மேன்மைப் படுத்திய நம் தமிழ்த்
திரையுலகம் இன்று வெறும் வன்முறையின் பிறப்பிடமாகக்
காட்சியளிக்கிறதே என்கிற வேதனை அந்த மூத்த தலைமுறையினருக்கு இன்று இருந்துகொண்டிருக்கிறது
என்பதுதான் உண்மை எம்.என்.ராஜத்தின்
தமிழ் வசன உச்சரிப்பு மறக்க முடியாத ஒன்று. அரசியாய் அமர்ந்தால் அங்கே வெளிப்படும்
கம்பீரமும், அதே பாத்திரம் வில்லியாய் இருந்தால் அங்கே தெறித்தெழும் ஆணவமும், கோபமும்,
திமிர்த்தெழும் நடிப்பும் என்றும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாதவை. நடிக்கும் படங்களிலெல்லாம்
கதாநாயகியாய் வந்தால்தான் பெருமையா? வில்லி கதாபாத்திரத்திலும் சோபிக்க முடியும்...அதே
நேரத்தில் மற்றவர்களை ஒதுக்கி நிறுத்தி, தன்னை நினைவில் வைத்துக் கொள்ளவும் செய்ய முடியும்...எல்லாமும் நம் திறமையின்பாற்பட்ட
விஷயம் என்கிற தன்னம்பிக்கையும், அனுபவமும் அவரை உச்சத்தில் வைத்திருந்தன. தங்கப்பதுமையில் அவர் ஏற்றிருக்கும்
அரசி கதாபாத்திரமும், அவருக்குப் படைத்தளபதியாய் நிற்கும் எம்.என். நம்பியாரின் கம்பீரமும்
என்ன கொடுமையான அரசு? என்று இவர்கள் அநியாயத்தை யார்தான் தட்டிக் கேட்பது என்று நம்மைக்
கொதிக்க வைக்கும் நடிப்பும் அது ஒரு கதையைச் சொல்லும் திரைப்படம் என்பதை மறக்கப் பண்ணி,
நம்மின் வெறுப்பை உமிழ வைக்கும். கண்ணிழந்த குற்றவாளியாய் நடிகர்திலகம் வந்து நிற்க....அவர்
மீது சாட்டப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தலையெடுக்க....கொற்றவனைத்தான் கொன்றுவிட்டோமே
என்கிற ஆணவமா...கொடுந்தண்டனை கிடைக்கும்? என்று கடுங்கோபமாய் அரசியாய் நின்று ஆணவமாய்ப்
பேசும் எம்.என்.ராஜத்தின் நடிப்பு நம்மைப்
பதற வைக்கும். அரசனுக்கு வைத்தியம் செய்கிறேன் என்று அவரைக்
கொன்று விட்டதாக நடிகர்திலகத்தின் மீது குற்றச் சாட்டு. உண்மையில் அவரைக் கொன்றது அரசியாரின்
சதியும், அதற்குத் துணை நின்ற தளபதி நம்பியாரின் துரோகமும்தான். அறங் கூறும் இந்த
அவைக் களத்தையும் அரசியாரையும் அவமதிக்கின்றான். அதற்கும் சேர்த்து தண்டனை கொடுக்க
வேண்டும்..என்று தளபதி கர்ஜிக்க... குற்றவாளிக்கு
இந்த நீதி சபையில் வழக்காட உரிமை உண்டு....மக்களின் மதிப்பிற்குரிய வைத்தியனாக விளங்கியவன்
என்பதால் இறுதியாகக் கேட்கிறேன்..இங்கு எவரேனும் இவனுக்காக வாதாட முன் வருவார் உண்டா?
- இப்படிக் கேட்கும்போது பத்மினி காவலர்களின் தடுப்புக்களை விலக்கிக் கொண்டு உள்ளே
நுழைவார்....இந்த இறுதிக் கட்டக் காட்சியில் தன் கணவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க
முயலும் பத்மினியும், உண்மை வெளியே வந்துவிடுமோ என்கிற பதற்றத்தைக் காண்பிக்காமல் திரும்பத்
திரும்பப் பொய்யாய்ப் பேசி, சபையோருக்கு அந்த வைத்தியன் குற்றவாளியே என்பதை வலியுறுத்தும்
அரசியாரும் என அடுக்கடுக்காய், வீர்யமாய் நகரும் காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். படபடக்கச்
செய்யும். அரசியாய் அமர்ந்து அந்த வில்லி கதாபாத்திரத்தை எம்.என்.ராஜத்தைத் தவிர வேறு
யாரும் செய்திருக்க முடியாது இத்தனை
கொடூரமான பாத்திரங்களை ஏற்ற அவர் எப்படி மும்தாஜாக பாவை விளக்கில் வலம் வந்தார்? காவியமா
நெஞ்சில் ஓவியமா? என்ற அந்தப் பாடலில் உறீ”மாயூனாக நடிகர்திலகமும், மும்தாஜாக எம்.என்.ராஜமும்
எப்படிப் பொருந்தி நின்றார்கள்? இன்றும் அந்தப் பாடல் காட்சியைக் காண நினைக்கும்போது
மனம் எப்படி மகிழ்ந்து போகிறது? விடிவெள்ளி படத்தில் நடிகர்திலகத்திற்குத் தங்கையாகவும்,
பாலாஜிக்கு மனைவியாகவும் வந்து அற்புதமாய்த் தன் நடிப்பை வெளிப்படுத்தினாரே? எத்தனை
குடும்பப் பாங்கான பாத்திரம் அது? ஸ்ரீதரின் அருமையான தேர்வாய் எம்.என்.ராஜம் என்ற அந்த நடிகையால் அந்தத் தங்கை கதாபாத்திரம் எவ்வளவு புகழ்
பெற்றது? இன்றைய இளைய தலைமுறையினரும்,
ஏன் இன்றைய திரைப்பட நட்சத்திரங்களுமே கூட பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய,
ரசிக்க வேண்டிய அற்புதமான நடிகர்களும், நடிகைகளும் வியாபித்திருந்த காலம் அது. ஐம்பதுகள்,
அறுபதுகளில் வந்த திரைப்படங்களில் வரிசையாகப் பல படங்களில் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்துக்
கொண்டேயிருந்தார் எம்.என் ராஜம். மங்கையர்
திலகம் படத்தில் அடங்காப்பிடாரிப் பெண்ணாகவும், ரங்கோன்ராதா திரைப்படத்தில் சிவாஜிக்கு
இரண்டாந்தாரமாக வந்து பானுமதிக்குப் பேய் பிடித்திருப்பதாக அளந்து, பைத்தியக்காரப்
பட்டம் கட்டி, வீட்டை விட்டுத் துரத்த யத்தனிக்கும் வேஷத்திலும், பாக்கியவதியில் மயக்கும்
மோகினியாகவும், பதிபக்தியில் நடிகர்திலகத்தின் நேரடி ஜோடியாக மருக்கொழுந்து என்ற கதாபாத்திரத்திலும்,
பாவை விளக்கில் ஒரு ஜோடியாகவும், நானேராஜாவில் தங்கை ரோலில் சூர்ப்பனகை மாதிரியும்,
புதையல், காத்தவராயன் படங்களில் காமெடி ஜோடியாகவும்,என்.எஸ்.கிருஷ்ணன் படங்களில் சிறு
சிறு வேடங்களில் ஆரம்ப நாட்களிலும் எல்லாவற்றிற்கும் மேலாக நாடோடி மன்னன் படத்தில்
கணவனின் அன்பிற்காக ஏங்கும் மனோகரி பாத்திரத்தில் எத்தனை அழகாக, அழுத்தமாக வசனம் பேசி
தன் திறமையை நிலைநாட்டியிருந்தார்? இன்னும்
எத்தனையெத்தனை வேஷங்களிலெல்லாமோ வந்து தன் நடிப்பு அனுபவத்தைத் தொடர்ந்து நிரூபித்து ரசிகர்களுக்கு அலுப்பூட்டாத
நடிகையாக வலம் வந்து கொண்டேயிருந்தார் எம்.என்.ராஜம்.? இன்றும் நினைத்து நினைத்துப் பெருமை கொள்ளலாம் அவர் தன் திரையுலக அனுபவத்திற்காக.
தமிழ் ரசிகர்களின் ரசனை அறியாமலா அந்தப் பயணம் நிகழ்ந்தது? அந்தக் காலகட்டத்திலான படங்கள்
மீண்டும் வராதா என்று ஏங்கும் அளவுக்கு சிறப்பான திரைப்படங்களும், திறமைமிக்க நடிக
நடிகையர்களும், சிறந்த கதையமைப்பும், காட்சியமைப்பும், பொருத்தமான இசைச் சேர்க்கையும்,
தேனினும் இனிய பாடல்களும் இன்றும் நாம் எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் நினைவுகளாகிவிட்டன
என்பதுதான் இன்றுள்ள யதார்த்தமான உண்மை. வெறும் கறுப்பு வெள்ளைப் படங்களே வந்தால்கூடப்
போதும் என்று எண்ணி மனத்தில் அந்தப் பழைய படக் காட்சிகள் தோன்றித் தோன்றி இன்றும் மூத்த தலைமுறையினரை நிறைவாக
வைத்துள்ளன. இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை
செப்பனிட்டுக்கொள்ள, மேன்மைப்படுத்திக் கொள்ள ஐம்பது அறுபதுகளில் வந்த அந்தத் திரைப்படங்கள் காவலாய்
நின்று உதவும் என்பதை யாரும் மறுக்க இயலாது. நடிகை திருமதி எம்.என்.ராஜம் அவர்கள் திரைத்
துறையில் பரிணமித்த நாற்பதுகள் தொட்ட அறுபதுகள் வரையிலான கால கட்டங்கள் திறமையுள்ள
ஒரு கலைஞரை என்றும் திரைத்துறை புறக்கணிக்காது என்பதற்கடையாளமாய் அவரை மிகுந்த அக்கறையோடு
பயன்படுத்திக் கொண்டது. திருமதி எம்.என்.ராஜம் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின்
1953ம் ஆண்டு முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர்.
சத்யபாமா பல்கலையின் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
முதலமைச்சராய் இருந்தபோது தமிழ்நாடு செய்தித் திரைப்பட நிறுவனங்களின் செய்திப் படங்களுக்குப்
பின்னணிக் குரல் கொடுப்பராக இவரை நியமித்தார். இயக்குநர்
சிகரம் கே. பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பையாவுக்கு மனைவியாக, அந்தண மாமியாக வந்து இவர் கலக்கிய நடிப்பை யாரும்
இன்றளவும் மறந்து விட முடியுமா?
------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக