பாட்டை
யாவின் பழங்கதைகள் - பாரதி மணி-வாசிப்பனுபவம்
------------------------------------------------------ பாட்டையா என்று சொல்லி திரு பாரதி மணி அவர்களை அவரை நெருக்கமாய் அறிந்தவர்கள் அழைத்து சந்தோஷம் கொள்கிறார்கள். திருப்தியுறுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த பாரதி மணி என்கிற பெயரில் இருக்கும் கம்பீரம், அழகு அதைத் தவிர வேறு எதிலும் இருப்பதாகத் தோன்றவில்லை.
பெரியவர் திரு.பாரதி மணி அவர்கள் என்று விளிப்பதிலே அவரின் உண்மையான மதிப்பு மிளிர்கிறது. அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அவரை மேலும் அறிய வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. அப்படி அறிவதனால் அவர் மீது இருக்கும் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது.
இவர் எதிர்கொண்ட அனுபவங்கள் நிச்சயமாகப் பலருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றி, அவற்றை எந்தவித கர்வமோ, மனக் கசப்போ, வருத்தமோ, விலகலோ இன்றி சமநிலையில் நின்று எடுத்துரைக்கும் தன்மை இவரை நம்மில் ஒருவராக நெருக்கிப் பிணைத்து விடுகிறது.
வெளிநாடு போய் வந்து பயணக் கட்டுரைகள் எழுதிய பெரும்பாலோர் அங்கே இட்லியும் போண்டாவும் நல்ல காபியும் கிடைப்பதைப் பற்றிச் சொல்லியே அதிசயித்திருக்கிறார்கள் . இவரின் உள் நாட்டு அனுபவங்கள் அந்த ரீதியிலானது இல்லை. கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்து அதில் தோய்ந்த அனுபவங்களை ரொம்பவும் அநாயாசமாக எடுத்துரைக்கும்போது, அவை எல்லாமும் பலருக்கும் ஏற்படாத, இவருக்கு மட்டுமே என்று சிறப்பாய்க் கிடைத்த அனுபவங்களாய் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
தி.ஜா.வின் புன்னகை ரொம்பவும் பக்குவப்பட்டது என்றுதான் தோன்றுகிறது. இல்லையெனில் அப்படி எளிதில் கடந்து போகுதல் ஆகாது. எழுதறதோட முடிஞ்சது வேலை...பாத்ரூம் போயிட்டு வர்ற மாதிரி என்று எத்தனை இலகுவாகச் சொல்லி விடுகிறார்?
மரப்பசு நாவலை விரும்பிப்படித்த கட்டுரை ஆசிரியரும், முகத்தைச் சுருக்கிய விமர்சகர்களான பிரபல எழுத்தாளர்களும், ஒரு கவிஞர் மரப்பசு அம்மணியை மனதில் வைத்து டெல்லியில் ஒரு பெண் எழுத்தாளரை எதிர்கொண்டு அடி வாங்கியதையும் அறியும்போது ஸ்வாரஸ்யத்திற்கு நடுவிலும் ஒரு சின்ன சோகம் தலையெடுக்கிறது. நாவலின் தாக்கம் எந்த அளவுக்கு என்று தோன்றி தி.ஜா.வின் எழுத்து அப்படியெல்லாம் கூட நம்ப வைத்திருக்கிறதே...இதை அவர் கேள்விப்பட்டால் என்ன சொல்லியிருப்பார் என்று எண்ண வைக்கிறது.
அதான் சொல்லிட்டனே...எழுதறதோட என் வேலை முடிஞ்சு போச்சுன்னு...இந்த மாதிரிக் கிறுக்குத்தனத்துக்கெல்லாம் நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்று கேள்வி விழுந்திருக்கலாம். படிக்க ஆரம்பிக்கும்போதே புதிதாக சமையல் ஐட்டம் என்ன சொல்லப் போகிறார் பார்ப்போம் என்கிற எதிர்பார்ப்பு வந்து விடுகிறது. அது இவரிடம் மட்டும்தான். முகநூலில் போட்டிருந்த இவரது கைபாகத்திலான அவியலை மறக்க முடியுமா? சுவைபடச் சொல்லப்படும் சமையல் குறிப்புகள் நமக்கு இந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
தி.ஜா.வுக்குப் பிடித்த எள்ளு மிளகாய்ப்பொடிபற்றிச் சொல்கையில் வறுத்த எள்ளின் வாசனையும், வாயில் கடிபடும் பருப்பும் நமக்கு நாக்கில் துறு துறு பண்ணுகிறது.
கர்நாடக சங்கீதம் கலந்த கதையமைப்புக் கொண்ட திரைப்படங்களில் வித்வானாய் நடிப்பவர்கள் இதுவரை சரியாய்த் தாளம் போட்டதில்லை என்பதுதான். இதை நானும் உன்னிப்பாய்க் கவனித்திருக்கிறேன்.
ஜகதலப்பிரதாபன் படத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள் நான்கு பேராய் உட்கார்ந்து கொண்டு அவரே பாட, மிருதங்கம் வாசிக்க, வயலின் இழுக்க கொன்னக்கோல் சொல்ல என்று “நமக்கினி பயமேது...தில்லை நடராஜன்...ராஜன்...இருக்கும்போது....நமக்கினி பயமேது....என்று சுக சங்கீதமாய்ப் கச்சேரி பண்ணுகையில் போட்ட தாளத்திலும் எனக்கு அத்தனை திருப்தியில்லைதான். நடிப்புக்காக என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். But Classical based songs என்று கலவையாகக் கொடுக்கையில் நடிகர்கள் தப்பிப்பார்கள். அசல் சாஸ்திரீய சங்கீதப் பாட்டுக்கு, அசல் வித்வானாய் என்றால் கதை சற்றுக் கந்தல்தான். அம்மாதிரி ஒரு வித்வான் வேஷத்தில் அந்தக் குறையைத் தீர்க்க வேண்டுமென்பதற்காகவே நடிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை இவர் தெரிவிக்கிறார். யாராவது நடிக்க வைத்து விடுங்களேன்...அவர் ஆசை தீரட்டும். நன்றாகச் செய்வாரய்யா எங்கள் பெரியவர் பாரதி மணி ஐயா..! நடிக்கத் தெரிந்தவர்கள்...நடிக்க நினைக்கிறார்கள்...வேறென்ன? அவரது நாடக அனுபவமும், திரையனுபவமும் கணக்கிடக் கூடியதா என்ன? ஆசைப்படுவதெல்லாம் நடக்கிறதோ இல்லையோ...எதிராளிக்குச் சொல்லியாவது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாமே...! என்ற மனக்குறை சற்றே தென்பட்டாலும் அவர்பால் பலரும் செலுத்தும் அன்பும், ஆதரவும் அவரை அங்கே கொண்டு நிறுத்தும் என்றே நாமும் நினைப்போமாக.
ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ சாரங்கனும், ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் உறன்றியும், சுஜாதாவின் ஊஞ்சல் வரதராஜன், காலயந்திரம் மஉறாதேவன் போன்ற கதா பாத்திரங்களையும் நடித்து விட வேண்டும் என்கிற இவரது தணியாத ஆசை இந்த வயதிலும் அவருக்கிருக்கும் உத்வேகத்தை நமக்குப் புலப்படுத்துகிறது.
நடிகர்திலகம் சிவாஜிக்கு பெரியாராய் ஒரு படத்திலேனும் நடித்துவிட வேண்டும் என்கிற அவரது தணியாத ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதை இங்கே எண்ணத் தோன்றுகிறது.
ஒரு படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் கிடைக்கப் போக, தட்ட முடியாமல் அடுத்தடுத்த படங்களில் அதே வேஷத்தை ஏற்க, பாட்டையா போகும் காரில் சிவப்பு விளக்கு எரிகிறதா என்று அவரே பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்று ஜெயமோகன் நகைச்சுவையாய்ச் சொல்லப் போக.....போதும் முதலமைச்சர் ஆனது என்று இவருக்குத் தோன்றி விடுகிறது.
இன்ஸ்பெக்டர் வேஷம் போட்ட சிலரை அவர்கள் அதே வேடத்தில் தொடர்ந்து வருவதை நாம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே...! ஆனால் அது வேறு. இவர் அனுபவம் என்பது வேறு. பல ஆண்டுகளாய் நாடகங்களில் காலூன்றித் தழைத்து நின்ற பெருமகன் இவர். திரைப்படங்கள் இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றேதான் நமக்குத் தோன்றுகிறது.
அந்த வேஷத்தை எவ்வளவு கச்சிதமாய், கம்பீரமாய் ஒத்த குரலோடு அவர் செய்திருந்தால் அது திரும்பத் திரும்ப அவருக்குக் கிடைத்திருக்கும் என்று எண்ண வைக்கிறதுதானே! குரல் வளம் என்பது முக்கியமான ஒன்று. அது இவருக்கு செழுமையாக அமைந்திருப்பது மிகப்பெரிய கிஃப்ட். அந்தக் குரலின் ஏற்ற இறக்கங்களும், அதில் வெளிப்படும் பாவங்களும் சரளமாய் வந்து விழும் அழகு காண்போரை மன நெருக்கம் கொள்ளச் செய்யும். இல்லையென்றால் சின்னச் சின்ன வேடங்கள் செய்த இவருக்கு, திரையுலகில் ஏன் இத்தனை மௌசு? ஏன் இந்த மரியாதை? அவர் அருமை தெரிந்துதானே அது தானே கிடைக்கிறது?
நாகையா மிகப் பெரிய நடிகர். ஆனால் சிறு வேஷம் ஏற்றாலும், அதற்கு அவருக்கான சம்பளம் நிச்சயம். அந்தச் சிறு வேஷத்தை அவர்தான் செய்ய வேணும் என்கிற தீர்மானம் இருந்திருக்கிறதே இயக்குநர்களுக்கு. அதல்லவா அங்கே நினைக்கப்பட வேண்டும்?
பிரண்டையைப்பற்றி இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா? அட, மூத்த தலைமுறைக்குத்தான் என்ன தெரியும்? அக்ரஉறார வீடுகளில் அப்பளம், வடகம் தயாரிக்கையில் பிரண்டை சேர்ப்பார்கள். பிரண்டைத் தொக்கு,ஊறுகாய் செய்வதுண்டு. என்னதான் கைப்பக்குவம் காண்பித்தாலும் அந்த நாக்கரிப்பு லேசாய்த் தலையை நீட்டும். கரட்டுப்பகுதிகளில் கள்ளிச் செடிகளோடு தழுவி பிரண்டை தன்னிச்சையாய் வளர்ந்து நீண்டிருப்பதை சற்றே உன்னிப்பாய்க் கவனித்தால் கண்டு கொள்ளலாம். ஒரு பார்வையில் பச்சைப் பாம்பு சுற்றியிருக்கிறதோ என்று கூடத் தோன்றும்.
உன்னைப் பெத்த வயித்துல பெரண்டயத்தான் வச்சுக் கட்டிக்கணும்....தாய் தன் செல்வங்களைப் பார்த்துச் சொல்லும் இவ்வார்த்தைகளை அநேகமாய் நாமெல்லோருமே கேட்டிருக்கக் கூடும். அரி...அரியென்று அரிக்கும் பிள்ளைகள் வீட்டிலிருந்தால் அப்படிச் சொல்வதுண்டு. பெற்றோர்கள் தாங்கள் நினைத்ததுபோல், குறிப்பாய் தாய், தான் நினைத்ததுபோல் பிள்ளை உயர்நிலைக்கு வராமல் தத்தாரியாய்த் திரிந்தானென்றால், வயிற்றெரிச்சலில் அப்படிச் சொல்வதுண்டு. ஆனாலும் அப்போதைக்கான கோபத்தின் அடையாளம் மட்டுமே அது.
அம்மா வாயெடுத்தால் பிரண்டை...பிரண்டைங்கிறாளே என்று அந்த நிஜமான பிரண்டையோடு போய் அவள் முன் நிற்க, ஆசிர்வாதத்தோடு.... பிரண்டைத் துவையலும் கிடைத்துப் போகிறது. சமத்து...கட்டித் தங்கம்...என் செல்லம்...வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்...இது அந்த யுக்தி. அடுமாண்டு போவானே...என்ற ஆசீர்வாதத்தோடு கலத்தில் விழும் துவையல்....! ஆஉறா...அந்தக் காலம் அது...அது...அது...வசந்த் & கோ காலம்...இந்தக் காலம்...இது...இது...இது...எல்லாம் போன காலம்..
.. வஜ்ரவல்லி என்னும் பிரண்டை நம் புராணங்களிலும் இடம் பெற்ற கதையைக் கூறி, விஸ்வாமித்திரருக்குச் சாப்பாடு போட்ட வசிஷ்டரை நினைவுபடுத்தி பிரண்டையைச் சேர்த்தால் 300 கறிவகைக்குச் சமானம் என்கிற கதையை சுவைபடச் சொல்லிச் செல்லும்போது...இன்னும் என்னவெல்லாம்தான் இவர் நினைவில் தங்கியிருக்கும் என்று பிரமிக்க வைக்கிறது.
நேற்று சாப்பிட்ட காலம்பற டிபன் மறந்து போகுது நமக்கு. பெரியவர் பாரதிமணிக்கு, கற்ற கல்வியும், படித்த படிப்பும், கிடைத்த அனுபவங்களும் உடம்பெல்லாம் நினைவலைகளாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை என்று நாகர்கோயில் பார்வதிபுரம் வந்து சேரும் அவர், தந்தைக்கு செய்த சிஸ்ரூஷைகளையும், தாயாரின் கவனிப்பும், அப்பாவின் சாஸ்திரீய சங்கீத ரசனையும், நாகர்கோயிலில் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தின் கதை வசனத்தை ஊரே பார்த்திராத டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டு வந்து அப்பாவுக்குப் போட்டுக் காண்பித்ததும், இந்தியாவின் முதல் திரைப்படத் திருட்டு இதுதான் என்று தலைப்பிட்டுச் சொல்லிச் செல்லும் அழகு மிகவும் ருசிக்கும்படியாகவும், மனசை இழக்கும்படியாகவும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஜோஸ்யத்தில் ஒருவனின் சாவு தெரியும். ஆனால் அதை ஜோஸ்யர்கள் சொல்வதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நன்கு ஜோஸ்யம் கற்றுத் தெளிந்தவர்கள், தங்கள் சாவையே அறிந்தவர்கள் எவ்வளவு நிதானத்தோடும் முனைப்போடும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முற்படும்போது அந்தப் பெரியவர்களின் முதிர்ச்சியை நினைத்து வியப்பாகிறது நமக்கு. கட்டுரை ஆசிரியரின் தகப்பானருக்கு அது கொடுப்பினை.
கத்திக்கு ஒரு கட்டுரையா? பின்னே...? பதம் என்கிற ஒரு சொல் அங்கே வருகிறதே...! வெறும் கத்தியின் பதமா அது? மனிதர்களின் பதத்தை அறியும் செயலல்லவா? எந்த வேலையில் ஒருவன் தேர்ந்தவனாய் இருக்கிறானோ அந்தப் பணிக்கான கருவியின் தேர்வு அவனிடம்தான் இருக்கிறது. அது பதம். அதை அவன் மட்டுமே அறிவான். முடி வெட்டுபவனுக்கு முடி சிக்கும் அந்தக் கணம் அந்தப் பதத்தை உணர்கிறான் அவன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்ல பீலா அமைவதெல்லாம்...அவனவன் வரம்! பீலா என்கிற பதத்தின் பொருள் ஊர்க்காவலன்...என்றால் அவன் சிறந்த வீட்டுக் காவலனும்தான். A Good peeler shapes India.
இன்றைய அரசியல் சூழலில் இந்தப் பதத்தின் உண்மைப் பொருளை உணர்வது அவசியம். சமையலில் நளனான இவருக்கு காய்கறி நறுக்க மொண்ணைக் கத்தி வைத்திருப்பவர்களைக் கண்டால் அப்படிக் கோபம். அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகனோ, திரைக் கலைஞனோ இல்லை...ஒரு நல்ல சமையல்காரன் என்று பெருமையோடு யார்தான் கூறுவார்கள்? சவால்யா...போய் நின்னு பாரு தெரியும்....! I am a born chef...! என்று தலை நிமிர்கிறார்.
பால்ராஜ் மதோக்கைத் தெரியுமா? அரசியலில் ராஜ தந்திரம் தெரியாமல் உதிர்ந்து போன ஒரு மாமனிதர் என்று அறிமுகப்படுத்துகிறார். சொல்லிக் கொண்டு போகும் விஷயங்களைப் படிக்கும்போது நியாயம்தான் என்றே நமக்குத் தோன்றுகிறது. வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் முன்னத்தி ஏர். பாரதீய ஜனதாவைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து அடுத்தவர் கையில் அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொடுத்த, தாரை வார்த்த அப்பாவி. பட்டவன் ஒருத்தன். அனுபவிக்கிறவன் இன்னொருத்தன். இந்திராகாந்தியின் எமர்ஜென்சியில் 18 மாத சிறைவாசம் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்துக் கொடுத்தது மகா தவறு, அது பிற்காலத்தில் இந்தியாவுக்குப் பெருத்த தலைவலியாய் இருக்கும் என்று ஒத்தைக்கு நின்றவர். யார் கேட்டார்கள்? அத்வானிக்கும் அவருக்கும் பிடிக்காதது, பிறகு அவராலேயே அவர் ஒதுக்கி வைக்கப்பட்டது....ஒரு அசட்டுக் குழந்தையின் பொம்மையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அதை வீட்டுக் அனுப்புவது..மதோக்கின் கதை அவரை அறியாத நமக்கே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எங்குமே உழைத்து ஓடாய்ப் போனவன் ஒரு கட்டத்தில் ஒதுக்கத்தான் பட்டிருப்பானோ? என்னவெல்லாமோ நடந்தேறியிருக்கிறதே...நமக்குக் கால்வாசி கூடத் தெரியாதே என்று எண்ணி வெட்கப்பட வேண்டியிருக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனுக்கு என்ன பெரிய அனுபவங்கள் ஏற்பட்டு விடப் போகிறது?
உலகம் மிகவும் பெரியது. அதில் சிறு துளி நாம். திரு.பாரதிமணி அவர்களின் அனுபவங்கள் முன் நாம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். கடுகுக்குக் கூடக் கட்டுரை உண்டா எனில் இவரிடம் உண்டுதான். நாம் உபயோகிக்கிறோமே தாளிப்பதற்காக...அது கடுகே இல்லை என்கிறார். ஆனால் காரம் போகவில்லையே என்றால் அதற்குப் பெயர் ராய். (Rai) என்று திரும்பவும் அழுத்திச் சொல்கிறார். மஞ்சள் பூவோடு, பஞ்சாப் உறரியானா மாநிலங்களில் விளைவது Sarson எனப்படும் கடுகாம். இந்த ராய் முக்கியமாக ஊறுகாய்களுக்குப் பயன்படுவது. ஆவக்காய் ஊறுகாயா
எங்க சார்...அதெல்லாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு.... இப்பல்லாம் Buy one get one ஊறுகாய்தான் சார். வீட்டுல யார் சார் போடுறாங்க ஊறுகாய்..பேர்.சொன்னாலே மாமி அடிக்க வருவாங்க...
பாட்டி காலத்தோட போச்சு. எல்லாமும் ..கச்சிட்டில மாவடு ஊறுகாய் போட்டது....சாதீர்த்தத்துக்கு கொஞ்சம் மாவடு கடிச்சிண்டு....ஒரு டம்ளர் உள்ள விட்டாப் போதும். ஒரு வேளை சாப்பாட்டுக்குச் சமானம். காயும் கனியும் கட்டி அளக்கணும்...என்று சொல்லி பாட்டி அழகர்கோயில் மாவடுக்காரியை இழுத்துத் திண்ணையில் உட்கார்த்தி, பிச்சு...அந்தப் படியைக் கொண்டா சொல்றேன்...என்று குரல் கொடுத்து, இருக்கும் காம்பைப் பூராவும் படக் படக்கென்று கிள்ளியெறிய....ஏ...பாட்டி....நீ என்ன...அம்புட்டையும் உடைச்சிக்கிட்டிருக்கே..காம்போடதான் அளக்க முடியும்...அதெல்லாம் பிய்க்கக் கூடாதாக்கும்....என்று கத்த....
ஏண்டீ...அதுக்காக இம்புட்டு நீளக் காம்போடவா அளப்பாங்க..இதென்ன அநியாயம்....பாதிக்குப் பாதி காம்பு தாண்டி நிக்கும் படில...என்று சொல்லிச் சொல்லியே இடது கையைப் படியோடு சேர்த்து வளைத்து அணைத்து,...ஒரு படிக்கு ஒன்றரைப் படி மாவடு அளந்த ஆம்பூர் பாட்டி இருந்த காலம் எங்கே...இன்று எங்கே...?
மெய்க் கடுகு என்று நினைக்க அது பொய்க்கடுகாய்ப் போன கதையே எங்களுக்கு இப்போதுதானே தெரிகிறது? இப்படி இன்னும் என்னென்ன தெரியாது என்று எங்களைத் தாளிப்பீர்களோ...வெட்கமாய் இருக்கிறதய்யா...எங்கள் விஷய ஞானம் பற்றி...!
மாங்கல்யம் தந்துனானே...மமஜீவன...என்று நீங்கள் வாங்கிய கடன்களை அடைத்த அந்த நேர்மையும்...நாணயமும் வாழ்க்கைப் பாடமாகவல்லவா நிற்கிறது? வட்டியும் முதலுமாகச் சேர்த்து வாங்கிக்கோ என்று பத்திரம் எழுதிக் கொடுத்த அந்தக் கைகளை நீட்டுங்கள்....முத்தம் சொரிய...உன் பெற்றோரைக் கும்பிடுகிறேன்...உன்னை வளர்த்த விதத்துக்காக....என்று சொல்லிய அந்த வார்த்தைகள் எத்தனை ஆத்மார்த்தமானவை? அவரை அப்படி வரவழைத்தது எது? உலகம் எவ்வளவு வேண்டுமானாலும் மாறலாம். தலைகீழாக நிற்கலாம். தனி மனிதனின் நேர்மை, நாணயம், ஒழுக்கம் இவைகளுக்குப் பங்கம் செய்து கொள்ளாமல் இருந்தோமானால் அதற்கு ஈடு இணை இல்லைதான். அவன்தான் உயர்ந்த மனிதன்.
இவ்வளவு விஷயங்களை கையில் ஒரு குறிப்புமில்லாமல் இந்த மனுஷன் எப்டி எழுதறாரு? இப்படியா துல்லியமா அத்தனையும் ஒத்தருக்கு ஞாபகத்தில் இருக்கும்? டைரியில் குறித்து வைத்தாலும் தேடிப் பிடித்து எழுத சோம்பேறித்தனம். எழுதலேன்னா இப்போ என்ன கெட்டுப் போகுது? என்கிற அலுப்பு. அசராமல் இந்த மனுஷன் இப்படி எழுதித் தள்ளுகிறாரே? கோடவுனா...? மனுஷனுக்கு ஆனாலும் இவ்வளவு ஞாபக சக்தி ஆகாது...! என்னதான் புத்திசாலியா இருக்கட்டுமே...அதுக்கும் ஒரு அளவில்லையா? உலகளாவும் விஷயங்கள் அத்தனையுமா இப்படி அத்துபடி? ஒரு மனுஷனுக்கு அனுபவங்கள் சேரவும் ஒரு தனிக் கொடுப்பினை வேண்டுமோ?
உங்களின் இந்த ஆழமான அனுபவங்கள் இப் பூவுலகில் யாருக்கும் கிட்டாதது. வெறும்பழங்கதைகள் அல்ல அவை. விழுமியங்களை, மகத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். வழிகாட்டியிருக்கிறீர்கள்.
அனுபவங்கள்தான் மனிதனைச் செழுமைப் படுத்துகின்றன. இந்த வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் கிட்டி விடுவதில்லை. அனுபவச் செழுமை கொண்ட படைப்பாளிகளின் எழுத்தைத் தேடிக் கண்டடைந்து அறிந்து பயனுறுவதே நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளும் வழிமுறை. அதை உங்களின் இந்தப் புத்தகம் நிறையத் தந்திருக்கிறது. இன்னும் நீங்கள் எழுத வேண்டும். வானளாவிய உங்கள் வாழ்க்கை அனுபவங்களின் ஒரு சிறு பகுதிதான் இதுவரை வெளி வந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. முழுமையாக அத்தனையையும் நீங்கள் எங்களுக்காக இறக்கி வைக்க வேண்டும் என்பதே எங்களின் அன்பான வேண்டுகோள். இளைய தலைமுறைக்குப் பாட்டையாவின் படைப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதை இந்தப் புத்தகம் நீக்கமற நிரூபிக்கிறது.
-------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக