09 மார்ச் 2020

 “பிரதீபன்எழுதிய

ண்மறை துணி” - கவிதைகள்-குறுங்காவியங்களின் தொகுப்பு-                  தொடர்ந்து எழுதுவதும் எழுதாமல் இருப்பதும், வாசிப்போடு நிறுத்திக் கொள்வதும் அவரவர் விருப்பம். இம்மாதிரி நிகழ்வதற்கு இங்கே ஏராளமான காரணிகள் இருக்கின்றனதான். எழுதப் புகுந்ததே அவரவர் விருப்பத்தின்பாற்பட்டதுதான் எனும்போது நிறுத்திக் கொள்வதைப் பற்றிக் கேள்வி கேட்பதற்கில்லை.                                           தீவிர இலக்கிய வாசிப்பிற்கு ஆட்பட்டு அதனால் ஏற்பட்ட உந்துதலில் எழுத வந்தவர்கள் உண்டு. எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் தீவிர வாசிப்பைக் கைக்கொண்டு எழுத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இரண்டுமே சலித்துப் போய் போதும் என்று விட்டவர்களும் உண்டு. மனம் அதற்கு மேலும் ஒன்றை நாடுவதுதான் காரணம். அதுதான் வாசிப்பினால் ஏற்பட்ட உண்மையான பலன்.                                                                                       ஆனால் அந்தத் தீவிர வாசிப்பிற்கு ஆட்பட்டு ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் எழுத ஆரம்பித்தவர்கள் அவர்களது ஆரம்ப காலங்களில் எழுதிய  பல்வேறு படைப்புக்கள் மிகத் தரமுள்ளதாக, அந்தந்தக் காலங்களிலேயே புத்தக வடிவம் பெற்றவைகளாக, இலக்கியச் சிறு பத்திரிகைளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக,  பிறகு காலப் போக்கில் அவர்கள் மறக்கப்பட்டு அந்தப் புத்தகங்கள் இப்போது கிடைக்காதா என்று ஏங்கும் வண்ணமாக, தேடித் திரியும் பணியாக எத்தனையோ தரமான எழுத்தாளர்களுக்கு அப்படியான துரதிருஷ்டம் அமைந்திருக்கிறது.                                                  அது அந்த எழுத்தாளரைப் பொறுத்தவரை துரதிருஷ்டமாய் இருந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ஒரு உத்வேகத்தில் எழுத வந்து, கொஞ்சம் எழுதி, பிறகு போதும் என்று எப்படி திடீரென்று வந்தார்களோ அப்படியே திடீரென்று நிறுத்திவிட்டவர்களுக்கு அது என்றுமே ஒரு பொருட்டாய் இருந்ததில்லை.            அந்த நேரத்துல, அந்த வயசுல ஏதோ ஒரு இன்ட்ரஸ்ட்...ஏதோ கொஞ்சம் எழுதினோம்...அவ்வளவுதான்...அதுக்கு மேல அதுல ஒண்ணுமில்ல....-என்று சொன்னவர்களைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.                                              சிற்சில இலக்கிய, வணிகப்  பத்திரிகைகளில் வந்திருந்து பிறகு எழுதி எழுதித் தனக்குத்தானே வைத்துக் கொண்டு கடத்தி விட்டவர்களும் நிறைய இருக்கிறார்கள்தான்.                                                                            இவை எல்லாமும் ஒரு தனி மனிதனின் மனம் சார்ந்த விஷயம். எது பெரிது, எது சிறிது என்கிற கேள்விகளுக்கு அங்கே இடமில்லை. பிரபலம், பிரபலமல்லாதது அங்கே விலையற்றுப் போகின்றன. அவர்களைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையோடு விலகிப் போகும், யாரும் அறிந்திராத ஒரு முதிர்ந்த பக்குவ நிலை அது. பார்வையை மறைக்கும் படலத்தை விலக்கி விட்டுப் போகும் எளிய செயல்.                                      தீவிர வாசிப்பு மனிதனைச் செதுக்குகிறது. காலமும் அனுபவங்களும் அவனைப் பக்குவப்படுத்துகிறது. பக்குவமடைய அடைய   அவன் சிறந்த விவேகியாகிறான். அமைதியானவனாக மாறி விடுகிறான். மற்றவர்களிடமிருந்து மிகுந்த வித்தியாசப்பட்டவனாய்க் காட்சியளிக்கிறான். எல்லோரையும் தள்ளி நின்று பார்க்கும் சமநிலையை எய்துகிறான்.                                                                   பிரதீபன் இப்படியெல்லாம்தான் மாறி உருப்பெற்றிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது அவரது “கண்மறை துணி”  கவிதைத் தொகுப்பினைப் படிக்கும்பொழுது.            தொடர்ந்து படிக்கப் படிக்க எப்படி இராமாயணம், மகாபாரதம் என்கிற இரண்டு இதிகாசங்களை மீறிய ஒன்று எதுவுமில்லை என்று எப்படித் தோன்றிக்கொண்டேயிருக்கிறதோ அது போல...மரமாய்க் கிளர்ந்து தழைத்துதவக் கனவுகள் கண்ட இவர்....தனது நாற்பதாண்டு காலக் கவிதை வெளியை அலசி முத்தெடுத்தாற்போல ஒரு கனமான தொகுதியைக் கொண்டு வந்து, அத்தோடு போதும் என்று நிறுத்திக் கொண்டு விட்டாரோ என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. அவரது விடாத வாசிப்புப் பழக்கத்தினால் இந்த “பிரேக்” ஏற்பட்டுப் போனதோ என்று தோன்றி நம்மை வருந்த வைக்கிறது.  அவரது மனம் எப்படிச் சொல்கிறது பாருங்கள்:-   அழுகித் தோல் கிழிந்து - அசிங்கமாய்ச் -  சிதைந்து நாறுவது - வெளியே சதைப்பற்றுதான் - உள்ளே கொட்டை - திடமானது - மண்ணில் விழுந்து - மரமாய்க் கிளர்ந்து தழைத்துதவக் - கனவுகள் காண்பது - அது!      கனவுகள் கண்டு கொஞ்சத்தை நனவாக்கி அத்தோடு போதும் என்று நிறுத்திக் கொண்டு விட்டாரோ என்று எண்ண வைக்கிறது.                                                                                                பொழுது விடிவது மலர்கள் மலர்வதும், இளஞ்சூரியன் தன் கதிர்களைப் பரப்புவதும், குளிர் காலை சில் காற்றும் என அழகியலாய் ரசிக்கும் மனங்களிடையே பெற்றோர் வழி வந்த தன் வாழ்வியலின் பிரதிபலிப்பாய் காணும் கண்கள் எதையெல்லாம் காட்சிப்படுத்துகின்றன? மனிதன் ஈரமுள்ள நெஞ்சு கொண்டவனாய், இரக்க சிந்தை உள்ளவனாய், நேயமுள்ளவனாய்த் தன்னை முன்னிறுத்தி கொள்பவனுக்கு இவையெல்லாம்தானே காட்சிகளாய்க் கண்ணில் பட்டு மனதை உறையச் செய்யும்? கடை வாசலெல்லாம் - ஈரம் கண்டது - நீர் தெளித்துவிட்டாள் - தன் பழைய இருமலோடு - தேய்ந்த செருப்புக்கள் - காலுக்கு ஒரு கலர் - வீடு வீடாய்ப் -  பால் கறக்க ஓடினார் - ஆசனத்தில் - ஒட்டுப் போட்ட டவுசர் - பனியனின் கீழே - முக்கால் பெடலில் பையன் - நியூஸ் பேப்பரோடு விரைந்தான் - ஒருவர் சத்தம் ஒருவருக்குக் கேட்டுப் போனது .                                                                                   ளிய மக்களை நெஞ்சில் இருத்தி இருப்பவன்   கவிதைகள் இதைத்தானே இப்படித்தானே சொல்லும்?                                                               மனிதர்களின் இயல்பு உதவி செய்தவர்களிடம்தான் மேலும் மேலும் உதவிகளை எதிர்பார்க்கும். ஒருவன் செய்வான் என்பது தெரிந்து விட்டால் அவனிடமே போய் நின்றால் என்ன என்றுதான் தோன்றும். அவனிடம் போனால் கிடைக்கும் என்கிற நம்பிக்கைதான் துளிர்க்கும் இது இயல்பு. ஆனால் அவனால் அந்த உதவி மறுக்கப்படும்பொழுது, அதாவது அவனிடமிருந்து நாம் எதிர்பார்த்த உதவி கிடைக்காத போது அது நாள்வரை அவன் செய்தவைகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு நம் மனது இப்படி மறுத்துவிட்டானே என்று முரணாய் எண்ண வைக்கும். இது மனித இயல்பு. அது ஒரு வயசான கிழவிக்கும் வாய்க்கக் கூடாதா என்ன?                                 வாசலில் போய் நின்றபோதே - அடிக்காத குறையாய்-விரட்டிய அவர்கள் எல்லாம்-நல்லவர்களாய்ப் போய் விட்டார்கள்-அந்தக் கிழவிக்கு-திண்ணையில் இருக்கச் சொல்லி-நீரும் உணவும் தந்து போஷித்த அவன்-இரவில் அங்கே படுக்க அனுமதிக்கவில்லை என்ற போது-சாப்பாடும் தந்து விரட்டுகிறாயே என்று பழித்துக் கொண்டே போகிறாள். உலக இயல்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை இந்தச் சின்னக் கவிதை மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் கவிஞர்.                                        வாழ்வெனும் மாயப் பேராற்றில் நீந்தியும், அலைப்புண்டும், மூழ்கியும் மீண்டுயிர்த்தும் நான் கண்ட தரிசனங்களே இக்கவிதைகள் என்று தனது நாற்பதாண்டு கால எழுத்தியக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளையும், பத்துக் குறுங்காவியங்களையும் சேர்த்து முழுத் தொகுதியாகக் கொண்டு வந்துள்ள கவிஞர் பிரதீபன் அவர்களை நாம் மனதாரப் பாராட்டலாம்.                                        கண்மறை துணி என்கிற தலைப்பிலே இவர் எழுதியுள்ள குறுங்காவியங்கள் பெரும் புலவரோ இவர் என்று நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. எங்கோ ஒரு தவறு, அக்கொடை,கேள்வி முனை, மரப்பாச்சி, அந்த ஒரு பார்வை, சட்டகம், பிரியா விடை,செழுமலர், குரலின் திசை என்று வெவ்வேறு வித்திசாயமான தலைப்புகளில் இவர் படைத்திருக்கும் குறுங்காவியங்கள் வெள்ளமெனப் பெருகியிருக்கும் கவிதை மனதை நமக்குப் புலப்படுகின்றன. நவீன மனிதனின் தேடல்கள்,வேட்கைகள் ஆகியவற்றை வெளிப்படுத்த காவிய, புராண, வரலாற்று மாந்தர்களின் கதைகளைத் தன்னின் மனோதர்மத்திற்கு ஏற்றவாறு குறுங்காவியங்களாக்கி, மிகுந்த நம்பிக்கையோடும், தைரியத்தோடும் முன் வைக்கிறார் இந்தப் படைப்பாளி.                                                         நீலக்குயில், ழ, மையம், விருட்சம், பாலம், கல்கி, ஜன்னல், தீராநதி என்று கவிதைகளைப் பரவலாக உலாவிட்டிருக்கிறார். தூத்துக்குடி வானொலி நிலையத்திலும் நிறையக் கவிதைகளைப் பவனி வரச் செய்திருக்கும் இவர் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாய் இருக்கிறது.                                                      --------------------                               


கருத்துகள் இல்லை: