30 ஜூன் 2019


“நட்பு”-சிறுகதை - இந்திரா பார்த்தசாரதி                                                                
வாசிப்பனுபவம் - உஷாதீபன்                                         வெளியீடு – இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்-தொகுதி-2                                               கிழக்கு பதிப்பகம், சென்னை – 
      ]



குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான உலகம் தனி. அவர்கள் மனதில் எது நன்மையை உண்டாக்கும். எது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் துல்லியமாக அறிதல் என்பது சற்றே கடினமான விஷயம்தான். நல்லதை மட்டுமே சொல்லிக் கொடுத்து வந்தால், வளரும் பருவத்தில்  அவை மனதில் படியும். அல்லாதவைகள் பின்னர் அறியப்படும்போது நாட்டமின்றி மனது ஒதுங்கி விடும் வாய்ப்பு பெருமளவு உண்டு.
        ஆனாலும் குழந்தைகளின் குடும்ப சூழல், மிக இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடும் இழப்புகள் ஆகியவை அவர்களின் மனங்களில் ஓரளவு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றனதான்.. அந்த பாதிப்பின் அடையாளங்கள் அவர்களின் வாழ்வினில் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
        இரண்டு சிறுவர்களுக்கான நட்பின்பாற்பட்ட இந்தச் சிறுகதையில் அப்படியொன்றை அழுத்தமாய்ப் பதிவு செய்கிறார் இந்திரா பார்த்தசாரதி. சிறார்களுக்கான இந்தக் கதையில் இளம் பிராயத்தில் மனதில் என்ன படிந்து போகிறதோ அது இருவருக்குமே தொடர்கிறது. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரு சிறுவர்கள் நட்புக் கொள்ளும்போது, அது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட நட்புதான் என்கிற ரீதியில் ஒருவன் மனதை லேசாக சந்தேகிக்க வைத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
        இளம் பிராயம் முதலான கூச்ச சுவாபம் என்பது ஒருவகையில் பார்த்தால் ஒழுக்கத்தின அடையாளம் அது. தவறுகள் செய்வதிலிருந்து தடுக்கும் மனநிலையை அது ஏற்படுத்தும் என்று சொல்லலாம். அதே கூச்ச சுபாவம், தங்கு தடங்கலின்றி எல்லோரோடும் பழகுவதற்கும், சந்தோஷித்து இருப்பதற்கும் தடையின்றி ஒரு விஷயத்தை அணுகுவதற்கும், தைரியமாக ஒன்றை எதிர்நோக்குவதற்கும்,  தடங்கலாக இருக்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
        விவரம் தெரியாத இரண்டு வயதிலேயே பெற்றோரை விபத்தில் இழந்தவன் செந்தில். இயல்பாகவே கூச்ச சுபாவம் உடையவன். யாருடனும் தானாகவே போய்ப் பேச, பழக மாட்டான். கூச்ச சுபாவமுடைய பையன்களைச் சீண்டுவதில் முரட்டுப் பையன்களுக்கு ஒரு அலாதி இஷ்டம்.
        எட்டாவது வகுப்பில் தொடர்ந்து ரெண்டு வருஷங்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மணி என்கிற பையன் செந்திலைச் சீண்டுகிறான். அப்போது பள்ளிக்குப் புதிதாக வந்த பாலு அவனைத் தடுக்கிறான். இருவருக்கும் நடக்கும் சண்டையில் மணி மண்ணைக் கவ்வுகிறான். பாலு அந்தக் கோஷ்டிக்குப் புதிய தலைவனாகிறான்.
        பாலு படிப்பிலும் கெட்டிக்காரன். விளையாட்டில் சூரன். அவன் தன்னுடைய நெருங்கிய நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் செந்திலுக்குப் பெருமை.
        கதை ஆரம்பிக்கும்போதே செந்திலுக்கு ஏதோ கெட்ட கனவு வருவதுபோல் திடுக்கிட்டு எழுந்து, பாலு அன்று ஊரைவிட்டுப் போகப்போவதை நினைத்து வருந்தி, பாட்டியிடம் வருத்தத்தோடு சொல்கிறான். பாலுவின் தந்தைக்கு திருச்சிக்கு மாற்றலாகிவிடுகிறது.
        அவனோட அப்பாவுக்கு மாத்தலாயிடுச்சி. போறான். இதிலென்ன அதிசயம்…? என்கிறாள் பாட்டி. செந்திலுக்கு எரிச்சல் வருகிறது. அவனது மனதை, மன வருத்தத்தைப் புரிந்து பேச அவனுக்குப் பெற்றோர் இல்லை. பாட்டி யதார்த்தமாய்ப் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
        பெரியவங்க எல்லாருமே உணர்ச்சியே இல்லாத மரக்கட்டைங்க….என்று பாட்டியிடம் எரிந்து விழுகிறான்.
        அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே சரி…நான் மரக்கட்டைதான்….என்கிறாள் பாட்டி.
        பெரியவர்களுக்கு சிநேகிதர்களே இருப்பதில்லை. சிநேகிதர்கள் என்றால் உண்மையான சிநேகிதர்கள். பாலுவைப் போல…வயதானால் எல்லோரும் தனியாளாய் ஆகி விடுகிறார்கள். பலவாறு நினைத்தக் கொள்கிறான் செந்தில்.
        பாலுவும் அவனும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பரிசுப்பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டதில் அவர்களின் நட்பு மேலும் நெருங்கியது. செந்திலுக்கு இதில் பெரும் மகிழ்ச்சி.
        அவன் தான் சிறுவயது முதல் சேர்த்த ஸ்டாம்ப் ஆல்பத்தை பாலுவுக்குப் பரிசாக அளிக்கிறான். பாலுவோ அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்திருந்த பேனாவை அவனுக்குக் கொடுக்கிறான். அந்தப் பேனாவில் எழுதி எழுதித்தான் அவன் வகுப்பில் முதல் மார்க் வாங்குகிறான். செந்திலுக்கு அந்தப் பரிசு ரொம்பவும் பிடித்திருந்தது.
        இப்போது அவர்கள் குடும்பம் மாறுதலில் செல்கிறது. செந்திலுக்கு மிகுந்த வருத்தம். பள்ளியில் பிற மாணவர்கள் தன்னைக் கேலி செய்வதைத் தடுத்தவன் பாலு. அவன் போய்விட்டால் அம்மாதிரி மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துப் பயம் கொள்கிறான்.
        அவர்கள் ஊருக்குக் கிளம்பும் முன் ஒரு முறை பாலுவைக் கடைசியாகச் சந்தித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான்.
        திருச்சிக்குப் போனா என்னை மறந்துடுவேல்ல……
        நான்சென்ஸ்….நீ என்னுடைய பெஸ்ட் ஃப்ரென்ட்….எப்படி மறக்க முடியும்…நீ மறந்துடுவியா…?
        நான்சென்ஸ்…எனக்குத்தான் நீ வேணுமேயொழிய உனக்கு நான் வேண்டாம். நீ இல்லாட்டி அந்த மணி ராஸ்கலும் அவன் ஃப்ரென்ட்சும் என்னை டீஸ் பண்ணிட்டே இருப்பாங்க… நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? ஏன் உங்கப்பாவுக்கு மாத்தலாயிடிச்சி. ?
        திருச்சியிலே ஒருத்தன் இங்கே வரணும்னு பாக்கறான். பெரிய இடத்து சிபாரிசு. எங்கப்பாவுக்கு இஷ்டமில்லதான். வேறே வழி…
        செந்திலுக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது. பாலு சமாதானம் சொல்கிறான்.
        நீ இப்டியெல்லாம் அழக்கூடாது. எல்லாரோடையும் சகஜமா பழகணும்…ப்ரென்ட்ஸ் ஆக்கிக்கணும்…அப்பத்தான் உன்னை யாரும் டீஸ் பண்ண மாட்டாங்க…
        உனக்கு மட்டும் ஏன் என்னை டீஸ் பண்ணனும்னு தோணலை…? சட்டென்று இந்தக் கேள்வியைக் கேட்கிறான்.
        நானும் பண்ணியிருப்பேன்… ஆனா இன்னொருத்தன் ஒரு பு்ல்லி கணக்கா உன்னை டீஸ் பண்றச்சே… அவனை சாலெஞ்ச் பண்ணனும்னு எனக்குத் தோணிச்சு…அதனால் மத்தவங்க சேர்ந்து எனக்குப் பட்டாபிஷேகம் கட்டிட்டாங்க….
        செந்திலுக்கு  இந்த பதில் ஏமாற்றமாய் இருக்கிறது. அப்படியானால் அவனுக்கு இவன் மேல் உண்மையான பரிவு இல்லையா? 
        பாலு சொல்கிறான்.என்னவோ தெரில…உன்னைப் பார்த்ததும் எனக்கு அப்படி ஒரு அட்டாச்மென்ட்…
        செந்தில் சொல்கிறான்…..“எனக்கும் அப்படித்தான்“…. – இரண்டு தினங்களுக்கு முன் அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.   பாலு கொடுத்த பேனாவை பாட்டியிடம் காண்பிக்கிறான்.
        சின்ன வயசிலேயிருந்து ஆசையா சேர்த்தியே…அந்த ஸ்டாம்ப் ஆல்பத்தையா கொடுத்திட்டே….?
        என்ன பாட்டி…இப்டிக் கேட்கிறே…அவன் முதல் மார்க் எடுக்கிற அமெரிக்காவுல வாங்கின பேனாவையே எனக்குக் கொடுத்திருக்கான்…ஆசையோட ….அதுதானே முக்கியம்…. என்கிறான் பாட்டியிடம்
பதிலுக்குப் பாட்டி….முதல் மார்க் முக்கியம்…ஆசை…கீசையெல்லாம் அப்புறம்தான்….என்கிறாள்.
        இதுதான் சுயநலம்கிறது….
        யார்தான் சுயநலமில்லே…?வாழ்க்கைல பொழைக்கணும்னா சுயநலமா இருக்கக் கத்துக்க….பாட்டியின் பதில் விநோதமாயிருக்கிறது செந்திலுக்கு.   மறுநாள் காலையில் பாலு வீடு பூட்டியிருப்பதைப் பார்க்கிறான்.
        போயிட்டாங்களா…?சொல்லிக்கவேயில்லை என்று வருத்தமுறுகிறான்.   திரைச் சீலைகள் தொங்குகின்றன. சொந்தக்காரங்ககிட்ட சொல்லிக்கப் போயிருப்பாங்க… -கீழ் வீட்டு மாமி சொல்கிறாள்.
        சாமான்களை ஏத்த லாரியே வந்த மாதிரித் தெரில…
        ரா்திரியே ஏத்தி அனுப்பிச்சிருப்பாங்க…  - என்னவோ பதில் கிடைக்கிறது. செந்திலுக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது. பாட்டி சொல்வதுபோல் எல்லோருமே இந்த உலகில் சுயநலம்தானோ,..?
        பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த மாலைதான் செந்திலுக்குத் தெரிகிறது. பாலுவின் அப்பாவின் அம்மா திடீரென்று காலமாகிவிட்டார் என்று. திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
        பதினைந்து நாட்கள் கழிந்து பாலு திரும்ப வருகிறான்.
        பார்க்க ஓடுகிறான் செந்தில்.   பாட்டி இப்போ போகக் கூடாது என்கிறாள். சனிக்கிழமை ஆகாது…என்கிறாள். பார்க்கத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறான் செந்தில். பிறகு உன் இஷ்டம் என்று விட்டு விடுகிறாள்.
இதற்குள் பாலுவே பார்க்க வந்து விடுகிறான். எங்கப்பா மாத்தலை கான்சல் பண்ணிட்டாங்க…தாத்தாவைக் கூட்டிக் கொண்டுவந்து வச்சிட்டு, வைத்தியம் பார்க்கணும்னு ரெக்வெஸ்ட் கொடுத்து கான்சல் பண்ணிட்டாங்க….என்கிறான்.
        அப்போ இங்கேதான் இருக்கப்போறே…என்று மகிழ்ச்சியில் அவனைக் கட்டிக் கொள்கிறான் செந்தில்.
        சட்டென்று பாலு கூறுகிறான்…..
        ஆமாம்….சரி, என் பேனாவைத் திருப்பிக் கொடுத்திரு…என்கிட்டே…நான் உன் ஆல்பத்தைத் தந்திடுறேன்….ஓ.கே…?
        அவனை மகிழ்ச்சியோடு கட்டிக் கொண்டிருந்த செந்தில் சரேலென்று விலகி…அவனை ஏற இறங்கப் பார்க்கிறான்..மனதுக்குள் துக்கம் பொத்துக் கொண்டு வருகிறது.
        செந்திலுக்கு மட்டுமென்ன…நமக்கும்தான்….குழந்தைகளின் மனது எப்போது…எப்படியிருக்கும்…என்று யார் கண்டது? இந்த உலகத்தில் எல்லாருமே சுயநலம்தான்….வாழ்க்கையில பொழைக்கணும்னா சுயநலமா இருக்கக் கத்துக்கோ என்று செந்திலின் பாட்டி சொன்னது இங்கே ஏன் நமக்கு ஞாபகம் வர வேண்டும்? இது எதன் அடையாளம்? பாலுவின் நடவடிக்கை…அந்த முதல் மார்க் வாங்கும் பேனாவைத் திருப்பிக் கேட்டது கூட ஒருவகையில் அந்த மாதிரிதானோ…என்றும் நம்மை நினைக்க வைக்கிறது.
பார்த்துப் பார்த்தும், கேட்டுக் கேட்டும்….அறிந்து்ம் அறியாலும் சில பழக்கங்கள் இளம் பிராயம் முதல் படிந்து போகின்றதுதானே…!
        குழந்தைகளுக்கிடையே நடக்கும் சம்பாஷனையானாலும்…பெரியவர்களாகிய நம் மனதையும் அது திடுக்கிடத்தான் வைக்கிறது. செந்திலின் ஆழமான அன்பும், இளகிய மனதும், கூச்ச சுபாவமுள்ள பையனின் மென்மையான பேச்சும் நடவடிக்கைகளும் நம்மை செந்திலின்பால் பரிதாபம் கொள்ள வைக்கிறது.
        நட்பு என்கிற பதத்தை இந்தக் கதை எப்படி அர்த்தப்படுத்துகிறது? ஒரு சார்பில் மட்டுமா அல்லது இரு தரப்பிலுமா? இரு தரப்பிலுமென்றால் என்ன அளவினில்……? எந்த விகிதாச்சாரத்தில்?  பரஸ்பரம் சம அளவில் நிரம்பி வழிகிறதா? அல்லது அளந்து நகர்கிறதா? – கேள்விகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்திரா பாரத்தசாரதியின் இந்தச் சிறுவர் கதை மிகப் பெரிய தத்துவங்கள் பலவற்றை அவரது தேர்ந்த உரையாடல்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறது.
                                ----------------------------------------------------------------------


                    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...