29 ஜூன் 2019

“ஒரு காதல் கதை” வண்ணநிலவன் சிறுகதை வாசிப்பனுபவம்


             “ஒரு காதல் கதை”                                 


                
வண்ணநிலவன் சிறுகதை                                     
                                                                      
வாசிப்பனுபவம்                         ,                      
காலச்சுவடு-ஜூலை 2019 இதழ்                                                                                         
மீப காலமாக மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார் வண்ணநிலவன். அதுவரையில் மகிழ்ச்சி. அவர் எழுதி வெளிவந்த எம்.எல்.நாவலுக்குப்பின் தொடர்ந்து சில கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது காலச்சுவடில் வந்த இரண்டாவது கதை. “ஒரு காதல் கதை”.
        அதே பழைய இதமான நடை எடுத்த எடுப்பில் நம் மனதைப் பரவசப்படுத்துகிறது. அதிர்வில்லாமல் போகிற போக்கில் இதமாய்க் கதை சொல்லும் பாங்கு. ஒரு வலிந்த காதல் நிகழ்வை, ஒரு சார்புக் காதல் நடைமுறையை அதன் முகம் அழியாமல் அப்படியே சொல்லியிருக்கிறார்.
        இன்று இப்படித்தான் நடக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. வெளியே சந்திக்கும், எதிர்ப்படும் பெண்களோடு பேசவே கூச்சப்படும் காலம் ஒன்று இருந்தது. அப்படி வலியப் பேசினால் அது தவறு என்கிற நடைமுறையும் இருந்தது. தெரிந்த பெண்களோடு வீதிகளில், கோயில்களில், கடை கண்ணிகளில் பேசினாலும் ஓரிரு வார்த்தைகளோடு சரி என்கிற அடக்கமான, அமுத்தலான, மரியாதையான, ஒழுக்கம் விஞ்சிய செயல்பாடுகள் இருந்தது ஒரு காலம்.
        இன்று எல்லாமும் தலைகீழாய் மாறிக் கிடக்கிறது. எதிர்ப்பட்டுப் பேசாவிட்டால்தான் கேவலம் என்று ஆகிப் போனது. சுற்றிலும் யார் இருக்கிறார்கள், செய்வது, செய்யப்போவது சரியா, தவறா என்கிற கேள்விகளுக்கே இடமில்லை. நினைத்தவுடனே, மனதில் தோன்றியவுடனே அல்லது தான் மட்டும் ஒரு தலையாக மனதில் நினைத்துவிட்டாலும், எதிர்த்தரப்புக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிடினும் ஒரு பெண்ணைப் பார்ப்பதுவும், தொடர்ந்து பார்ப்பதுவும், பேச முனைவதுவும், தெரிந்தும் தெரியாமலும் விரட்டுவதும், நெருக்குவதும், விரும்பியதாகக் கருதுவதும், தானே அப்படிக் கருதிக்கொண்டு தொடர்ந்து வற்புறுத்துவதும், ஏற்பு உண்டா இல்லையா என்பதையெல்லாம் பற்றிக் கவலை கொள்ளாமல், பொது இடம் என்று எதையும்  நினையாமல், பெற்றோர் சம்மதம் என்கிற கேள்விகளெல்லாம் எழாமல், தன் பெற்றோர், அப்பெண்ணின் பெற்றோர், உற்றார், சுற்றத்தார் என்று எதையும் மதியாமல், இது தவறு, அடாவடி, இப்படியான நடவடிக்கைகள் இரு தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும், எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு, ஒழுங்கற்ற செயல் இது என்று எதையும் நினையாமல், தான் நினைத்ததைத் தொடர்ந்து செய்து கொண்டே போவதுமான நடவடிக்கைகள் இன்று சர்வசாதாரணமாய் விரவிக் கிடக்கும் சமுதாய நடைமுறைகளாய் உள்ளன.
        அப்படி ஒரு பையனான இந்தக் கதையின் நாயகன் (அவனுக்கு நாயகன் என்கிற அந்தஸ்தைக் கூடக் கொடுக்க வேண்டுமா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது ஆரம்பத்தில்) மாரிச் செல்வி என்ற பெண்ணை விடாது துரத்துகிறான். தினம் அவள் ஏறும் பஸ்ஸில் ஏறுகிறான். பக்கத்தில் உட்காருகிறான். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளோடு பயணம் செய்கிறான். அவள் இறங்கும் இடத்தில் இறங்குகிறான். அவளைப் பின் தொடர்கிறான். அவள் கோயிலுக்குச் செல்வதைப் புரிந்து கொண்டு அங்கும் சென்று அவளுக்காகக் காத்திருக்கிறான். அவள் உட்காரும் இடம் இதுதான் என்று அதற்கு எதிர்த்தாற்போல் அமர்ந்து அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்….விடாது அவளையே வட்டமிடுகிறான். என்று கொத்திக் கொண்டு செல்வது என்று கழுகாகக் காத்துக் கொண்டிருக்கிறான்.
        வலிய அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். தினமும் அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸூக்கு வந்து அவள் அருகே அவளைக்  கேட்காமலே, அவள் விருப்பம் அறியாமலே அருகில் நெருங்கி உட்காருகிறான். கையைச் சுற்றிப் போடுகிறான். நெருக்குகிறான். அத்தனையையும் வேதனையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறாள் மாரிச் செல்வி. தினமும் மனதை திக்…திக்…என்றே வைத்துக் கொண்டு அவனோடு பழகவும் முடியாமல், விலகவும் இயலாமல் நாலைந்து மாதங்கள் ஓடிவிடுகின்றன அவளுக்கு. அவன் உடம்பிலிருந்து வீசுகின்ற வியர்வை வாடை, அவன் வாயிலிருந்து வீசுகின்ற நாற்றம் இதெல்லாம் கூட அவளுக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் எதையும் அவன் பொருட்படுத்துவதாக இல்லை. ஓரிரண்டு முறை இதுபற்றியெல்லாம் அவள் கூறியும் சட்டை செய்யாதவனாய் இருந்து அவளே குறி என்று அலைகிறான்.
        கோயிலுக்குப் போனால் எப்படியோ தெரிந்து கொண்டு அங்கேயும் வந்து விடுகிறான் என்று ஒரு வாரம்போல் கோயிலுக்கும் போகாமல் இருக்கிறாள். பிறகு ஒருநாள் போகையில் அங்கே அவன் உட்கார்ந்து காத்துக் கொண்டு இருக்கிறான்.ஏன் ஒருவாரமாய்க் காணலை என்று கேட்கிறான்.  அவனைத் தவிர்ப்பதற்காக பஸ் ஏறும் இடத்தை மாற்றுகிறாள். அங்கும் வந்து விடுகிறான். கூட இருக்கும் தோழி ஜெயராணியிடம் ஒரு நாள் இந்த விஷயத்தை அவள் எடுத்து வைக்க…அவனின் நடவடிக்கைகளை அறிந்த அந்தப் பெண்….யே.ய்…அவன் உன்னை லவ் பண்றான்டி…என்று இவளுக்குப் புரிய வைக்க…அப்டீன்னா என்ன என்று மாரிச்செல்வி கேட்க… உன்னைக் காதலிக்கிறான்….கல்யாணம் பண்ணிக்க விரும்புறான் போல…என்று கூற…அப்டீன்னா அப்புறம் பிள்ளையெல்லாம் பெத்துக்க வேண்டியிருக்குமே….என்று இவள் விகல்பமில்லாமல் கேட்கிறாள்.
        பெறகு எதுக்குடி கல்யாணம் பண்ணுவாங்க…ஆம்பளப் பசங்க டாவ் அடிக்கிறதே அதுக்குத்தாண்டீ….என்று விளக்குகிறாள் தோழி. ஜெயராணி சொன்ன பிறகு மாரிச் செல்விக்கு இன்னும் பயமாகிப் போகிறது. தன்னை அவன் கடித்துத் தின்பதுபோல் உணர ஆரம்பிக்கிறாள். மனதுக்குள் தினமும் பயந்து பயந்து சாகிறாள். வீட்டில் பெற்றோரிடம் சொல்லவும் பயம். பெரிய கலகம் ஆகிவிடுமோ என்கிற நடுக்கம்.
        இப்படியே நாட்கள் கழிய ஒரு நாள் அவளைத் தனியே சந்தித்த அவன்…திடீரென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்…மாரிச்செல்வி…நீ இல்லன்னா நா செத்துப் போயிடுவேன்…நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். சர்வீஸ் கமிஷன் எழுதினது பாஸாயிட்டேன்…கொஞ்ச நாள்ல வேலைக்கு ஆர்டர் வந்துடும். நாம சந்தோஷமா இருக்கலாம்…என்கிறான்.
        இதில் வண்ணநிலவன் செய்திருக்கும் ஒரே புதுமை இதுதான். பொதுவாய் நடைமுறையிலும், சினிமாவிலும் இம்மாதிரி முறையற்ற செயல்களைச் செய்பவர்கள் பொறுக்கிகளாய்த்தான் இருப்பார்கள். ஒன்றுக்கும் உதவாக காலிகளாய்த்தான் வெட்டியாய், வீட்டுக்கும் நாட்டுக்கும் பாரமாய்த் திரிபவர்களாய்த்தான் இருப்பார்கள். இந்தக் கதாநாயகனோ காதல் என்கிற காரியத்தை மட்டும் அடாவடித்தனமாய்ச் செய்துவிட்டு, தனது ஸ்திரநிலையை அவளிடம் விளக்கி நாம் இருவரும் ஒன்று சேரலாம் என்று வற்புறுத்துகிறான். கொஞ்சம்  தோசையை இப்படி மாற்றிப் போடுவோமே என்று நினைத்துச் செய்திருப்பதுபோலவே தோன்றுகிறது. இதேபோல்தான் கதையின் முடிவிலும் ஒரு மாற்றத்தைப் புகுத்தியிருக்கிறார்.
     இந்தக் காலத்தில் அடாவடியாய் எல்லாமும் நடக்குமென்றால் ஏன் இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்று அவர் சிந்தித்ததுபோல் நமக்குத் தோன்றுகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதுதானே? என்று நினைத்திருக்கலாம். அல்லது ஒரு மாற்றத்திற்கு இப்படி ஒன்றை எழுதித்தான் வைப்போமே…இம்மாதிரியும் ஒரு கதை சொல்லலாம்தானே…! என்று தோன்றியிருக்கலாம் அது படைப்பாளியின் சுதந்திரம் என்று நாமும் கருதத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்வதுபோல் சொல்லும் முறை வண்ணநிலவனின் திறமை. அதை நாம் பாராட்டியாக வேண்டும்.
       திட்டமிட்டு படிப்படியாக அவன் நகர்கிறான் என்பது இக்கதையில் துல்லியமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி சர்வீஸ் கமிஷன் எழுதி, பாஸாகி, வேலைக்குக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு பிள்ளைக்கு, நல்ல ஒரு பெண்ணாகப் பார்த்து சிறப்பாக ஒரு கல்யாணம் பண்ணி, அவனைக் குடியும் குடித்தனமுமாக  வைக்க அந்தப் பெற்றோருக்குத் தெரியாதா என்ன என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அது ஏன் அந்தப் பிள்ளைக்குத் தெரியாமல் போயிற்று? அப்போ வளர்ப்பு சரியில்லை என்று எண்ணத்தானே வேண்டியிருக்கிறது?  காலம் கலிகாலம்…எப்படியும் எதுவும் நடக்கலாம் இங்கே…என்று இருக்கும் இக்காலத்தில் இப்படியும் ஒன்று நடந்துவிட்டுப் போகட்டுமே என்று படைப்பாளிக்கு தோன்றும் சுதந்திரம் ஒன்று இருக்கிறதல்லவா? எவனாவது ஒருத்தன் எங்கயாவது இப்படியான கேரக்டர்ல இல்லாமலா போவான்?
       அவளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட படத்தைத் தன் பெற்றோரிடம் காண்பித்து சம்மதமும் பெற்றாயிற்று என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போடுகிறான் ஒரு நாள். இந்தப் பெண் பயந்து சாகிறது மனதுக்குள். ஐயோ…வீட்டுக்கு வந்து நின்று விடுவானோ…வீட்டில் தெரிந்தால் கொன்று போட்டு விடுவார்களே…பெரிய கலவரம் வெடிக்குமே…என்ன ஆகுமோ…ஏதாகுமோ என்று நாளும் பொழுதும் உறக்கமின்றி பயந்து கழிக்கும் அந்தப் பெண் சற்றும் எதிர்பாரா வகையில் ஒரு நாள் அவன் தன் பெற்றோர்களுடன் வீட்டுக்கே பெண் கேட்க வந்து நிற்பதைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
       ஒரு புதுமையாய் இதையும்தான் செய்து வைப்போமே…இப்படியும் ஒரு திருமணம் நடந்ததாக இருக்கட்டுமே என்று ஒரு முடிவைத் திணித்திருக்கிறார் வண்ணநிலவன். திணித்ததாக இல்லாமல் அவரின் இயல்பான எழுத்துத் திறனில்  அது கௌரவமாக நடை பயில்கிறது என்பதுதான் இந்தக் கதையின் வரைவுக்குக் காரணமாகிறது இங்கே. 
       பெற்றோர் நிச்சயம் சம்மதிக்கப்போவதில்லை, கலகம்தான் வரப்போகிறது இந்த நிகழ்வில், இன்றுவரை தான் அவனைப் பற்றி ஒரு வார்த்தை அந்த வீட்டில் சொல்லாதிருக்கையில் அது வேறு பழியாகப் போகிறது என்று பலவாறு வருந்தி, பயந்து, நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மிகுந்த சந்தோஷத்தோடு அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து விடுகிறார் மாரிச் செல்வியின் தந்தை.
       அந்த ஞாயிற்றுக் கிழமை அவ்வாறு விடிகிறது அவளுக்கு. ஆச்சரியப்படும்படியாக எல்லாவற்றிற்கும் அப்பா சம்மதித்ததுதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. தன் விருப்பம் துளிக் கூடக் கேட்கப்படவில்லை. போலீஸ்ல போய் கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுப்போம்டீ என்று ஜெயராணி சொன்னதைக் கேட்டிருந்தால் அவன் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டானோ என்று நினைக்கிறாள். போதாக்குறைக்கு “சொல்லவேயில்லையேடி” என்று சித்தி மல்லிகா வேறு கன்னத்தைக் கிள்ளுகிறாள்.
       அவர்களெல்லாம் போன பிறகு அப்பா சொல்கிறார். பையன் கவர்ன்மெண்டு வேலையிலிருக்கான். என்ன சாதியா இருந்தா என்ன? வேலையில்லா பெருசு…சீரு ஒண்ணுமே வேண்டாம்…பொண்ணை வீட்டுக்குக் கூட்டி விட்டாப் போதும்ங்கிறாங்க…நம்ம மாரி செஞ்ச அதிர்ஷ்டம்…இப்பேர்ப்பட்ட எடங் கெடச்சிருக்கு… என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
       மாரிச் செல்விக்கு அவனுடைய வாய் நாற்றம்  நினைவுக்கு வந்து குமட்டுகிறது.
       ஒரு காதல் கதை இப்படியும் இருந்தால் என்ன? …எல்லாவற்றையும் வெட்டுக் குத்தில்தான் கொண்டு செல்ல வேண்டுமா…கொலைப் பழியில்தான் முடிக்க வேண்டுமா….? அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருமணங்கள் இப்படியும் நடந்துதானே போகின்றன. ஒழுங்காய்ப் படித்து வேலைக்குப் போனவனுக்குக் காதல் வரக் கூடாதா? அப்படியாப்பட்ட ஒருவன் ஒரு பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கக் கூடாதா? அவள் விரும்பியோ விரும்பாமலோ அதுபற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் காதலை அவளிடம் தன்னிச்சையாகப் ப்ரபோஸ் (இப்போது இப்படித்தானே இதைச் சொல்கிறார்கள்!) பண்ணக் கூடாதா? கவர்ன்மென்ட் பரீட்சை எழுதியிருக்கேன். பாஸ் பண்ணிட்டேன்…வேலைக்குப் போகப் போறேன்…என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு என்ன கொள்ளை? என்று கேட்கக் கூடாதா? சாதியாவது மதமாவது…நல்ல சம்பாத்தியமா…கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு….இதவிட நம்ம பொண்ணுக்கு வேறே எந்த நல்ல இடம் கெடைக்கப்  போவுது…? என்று நினைக்கக் கூடாதா? பொண்ணோட சம்மதம்லாம் கேட்கணும்ங்கிற அவசியமில்லை….பெத்தவங்களுக்குத் தெரியாதா? அந்தப் பய எப்படி நம்ம பொண்ணை செல்பி எடுத்து அவங்க அப்பன் ஆத்தாட்டக் காண்பிச்சு, சம்மதிக்க வச்சுக் கூட்டியாந்திருக்கான்? அதுக்கு நாம மட்டமாவா போயிட்டோம்…? கதைய முடி சொல்றேன்….
       இதுவும் சற்று வித்தியாசமான கதைதான். வண்ணநிலவனுக்குப் பாராட்டுக்கள். மனதளவில் ஏற்க முடியாதவர்கள் வெறும் கதைதானே என்று ஒதுக்கி விடலாம். இன்றைய யதார்த்தத்திற்குப் பொருந்தாதது என்று நினைப்பவர்கள் இப்படியொன்று எழுத முடியுமென்றால் எங்களால் ஒதுக்கவும் முடியுமே என்று தாராளமாய் ஒதுக்கி விடலாம். ஒதுங்கியும் செல்லலாம். 
                           --------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...