29 ஜூன் 2019

“சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்“ தி.ஜானகிராமன் சிறுகதை வாசிப்பனுபவம்


“சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்“                                                       தி.ஜானகிராமன் சிறுகதை                                            வாசிப்பனுபவம்                                                                         

வெளியீடு:- காலச்சுவடு பதிப்பகம்> நாகர்கோயில்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
            
        இந்தக் கதை முழுக்க அன்பும், மனிதாபிமானமும் வழிந்தோடுகிறது. நீண்ட நெடிய கதையின் எழுத்ததிகாரம் எப்படிச் சொல்வது என்கிற பெருவியப்பை நமக்கு ஏற்படுத்துகிறது. நான் சொல்லியிருப்பது அதன் சாரத்தை மட்டுமே.        
உத்ராபதி…உனக்கு வயசு நாப்பதாயிருக்கும்…சாளேசரம் போட்டுக்கிற வயசு…நல்லா பார்த்துச் சொல்லு….எனக்கா மணியார்டர்…? – என்று முத்து ஐயர் கேட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது இது.
       
எம்.சாம்பமூர்த்தியாரு?                                                                                     நம்ப அக்கணாக் குட்டிதான்…
        அக்கணாக்குட்டியா? நம்ப புள்ளையா? இப்ப மெட்ராஸிலயா இருக்கு அது? – தபால்காரரின் வார்த்தைகளில் வழியும் அன்பும் அக்கறையும். தி.ஜா. எழுதும் காலத்தில் அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  
        வந்திருக்கும் மணியார்டர் தொகை நாற்பதில் முப்பத்தொன்பது ரூபாய்க்கு நோட்டும், ஒரு ரூபாய்க்குச் சில்லரையும் எடுத்து வைக்கிறார் போஸ்ட்மேன் உத்ராபதி.
        சில்லரையும் மாத்திப்புட்டு, நாற்பது ரூபாயும் கொடுப்பானேன்? அரை ரூபாய் குறைச்சுண்டுதான் கொடுக்கிறது?
        முழுப்பணத்தையும் கொடுத்து, தருவதை வாங்குவதுதானே முறை. அன்பை உணர்தலும் அதன்  அடையாளமும் அது. அந்தக் காலத்திலேயே வழக்கம்  இருந்ததுதான். கொடுப்பதை மறுக்காமல் மரியாதையோடு பணிந்து வாங்கிக் கொள்வது. அது மனிதனை மனிதன் மதித்த காலம். ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாத காலம். ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் சமமாகப் பேசிப் பழகிய காலம்.
        அசடு, ஒன்றும் தெரியாத பிள்ளை, எதற்கும் லாயக்கில்லை என்று கருதிய தன் பிள்ளை ஊரிலிருந்து பணம் அனுப்பியிருப்பதைக் கண்டு பூரித்துப் போகிறார் தந்தை. பெயரையும், எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும், தன் பிள்ளைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பரபரவென்று மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொள்ளும் முத்து அய்யர் இடது காதுக்கு நூலைச் சுற்றிக் கொள்கிறார். இதில் ஆரம்பிக்கும் கதை இதிலேயே முடிகிறது.
        நம்ம எம்.கே.ஆர்.கிட்டப் போய்ப் புலம்பினேன். நம்ம பையனுக்கு ஒரு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள்...இப்டி உதவாக்கரையாத் திரியறானே....என்று புலம்பப் போக...அன்பும் ஆதரவும் செழித்திருந்த அந்த நாட்களில்....அக்கணாக்குட்டிக்கும் ஒரு இடம் கிடைக்கிறது. உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமே...! தெரிந்தவர்கள், நமக்கு வேண்டியவர்கள் என்று எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தர்மம் ஓங்கியிருந்த காலம்.
        ஒரு பெரிய மனுஷன் வீட்டுல கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம்...அனுப்புறீரா...? புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல கொண்டு விட, கூட்டிவர, கடை கண்ணிக்குப் போக...ன்னு...சாப்பாடு போட்டு நல்லாப் பார்த்துப்பாங்க....சம்மதமா...? – அப்படிப்போனவன்தான் அக்கணாக்குட்டி. தன் அசட்டுப் பிள்ளைக்கும் ஒரு காலம் வந்து விட்டதே...! அவனாலும் நாலு துட்டு சம்பாதிக்க முடியும் என்று உலகம் காட்டிவிட்டதே...! எல்லாம் பகவான் செயல்...
. கால் ரூபாய் போதும் சாமி...எதுக்கு அரை....அதெல்லாம் வேண்டாம் என்று தன்மையோடு மறுக்கும் உத்ராபதி. இந்தப் பண்பாடு ஒரு எளிய மனிதனிடம் படிந்திருந்த ஒழுக்கத்தின் அடையாளம்.
        முதல் சம்பளம் வாங்கியிருக்கான் எம் பையன்...எட்டணாவாத்தான் வாங்கிக்கயேன்....என்று முத்து அய்யர் சொல்வதை மறுத்து இப்படிச் சொல்கிறார் போஸ்ட்மேன். ஊரும் உலகமும் கூடியானவரை உத்தமமாய்க் கழிந்த காலங்கள் அவை. பரஸ்பரம் மனிதரை மனிதர் மதித்த காலம்.
        முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவையும் கூட அது நீடிக்கிறது.  மூன்றாம் தடவை மூன்று நாள் தாமதமாகிறது. அது சற்று வேதனையளிக்கிறது. ஐந்தாம் தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வருகிறது. என்ன கஷ்டமோ என்னவோ என்கிற பரிவுச் சிந்தனையில் மனம் சமாதானமாக, பணம் வந்து குதித்து விடுகிறது.
        இது சம்பாதிச்சு நான் சாப்பிடணும்ங்கிறதில்லை...என்னவோ...முன்ன மாதிரிக் கண் செரியாத் தெரியறதில்லை.கை நடுங்கறது...இனம் புரியாத ஒரு மனக் குழப்பம்...எத்தனை கல்யாணத்துக்கு டின்னரும், டிபனுமாப் பண்ணிப் போட்டிருக்கேன். இந்தப் பய இப்படிப் பிள்ளையாப் பிறந்து  நிக்கறதேங்கிற கவலை...என் தைரியமே ஆடிப்போச்சு ஸ்வாமி...இப்ப அது நிமிந்துட்டது. ஆனா குழப்பம் தீரலே.....
        புரியாத குழப்பத்தோடுதான் அண்ணாவையரோடு மெட்ராஸ் கிளம்புகிறார்.
        ஒரு வாரமா ஜூரம்...முந்தாநாள்தான் ஜலம் விட்டுண்டேன்...ராத்திரி மெட்ராஸ் போகணும்...யாராச்சும் இந்தத் தடவை கூட இருந்தாத் தேவலைன்னு தோண்றது. நாளைக்கு அர்ஜண்டா கேஸூ...உறக்கோர்ட்ல....நீ கூட வந்து ஒரு ரசம் சாதமோ...தொகையலோ பண்ணிப் போட்டாத் தேவலை...
        அதுக்கெண்ணன்னா செஞ்சுப்புடறது.... – கிளம்பி விடுகிறார் முத்து அய்யர்.   போறது போறோம்...அங்கதானே பிள்ளை அக்கணாக்குட்டி இருக்கான்.. அவனையும் இது சாக்குல பார்த்துட்டு வரலாமே...மனது குதி போடுகிறது. அப்படியாவது உள்ளே அடங்கிக் கிடக்கும் குழப்பம் தீராதா....என்னவோ போட்டுப் படுத்துகிறதே...! அக்கணாக்குட்டியின் மீது கொண்ட அன்பும் பாசமும் அவரை அலைக்கழிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது அவனைப் பார்த்துவிட்டு வந்து விட வேண்டும். என்ன வேலைதான் பார்க்கிறான் என்று தெரிய வேண்டாமா?
        பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் ஒழிகிறது  அவருக்கு. அண்ணாவையருக்கு சமைத்துப் போட்டு அவரோடு சுற்றவே நேரம் போதவில்லை.
        நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக்குட்டியப் பார்த்திட்டு வந்துடு...சாயங்காலம் நாம ரயிலுக்குக் கிளம்பணும்...முடிஞ்சா அந்தப் பயலையும் அழைச்சிண்டு வா...நானும் ஒரு பார்வை பார்த்துக்கிறேன்....
        சொன்னதும், முத்துவுக்கு அவிழ்த்துவிட்ட கழுதையாட்டம் மனது குதி போடுகிறது. புறப்பட்டு விடுகிறார். வீடு கண்டு பிடிப்பது என்பது ஒன்றும் அத்தனை சிரமமாய் இருக்கவில்லை. அது பங்களா. பங்களா கூட இல்லை. சின்ன அரண்மனை. நிறைய மரங்கள் அடர்ந்து, கார் நிற்கும் முகப்போடு, சிமின்ட் சோபா இரண்டு திண்ணை போல் கட்டியிருக்க அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
        அம்பி....! - அழைக்கிறார் முத்து.   ஒரு முறைக்கு இருமுறை....குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு விடும் வேலை அன்று இல்லை. சனிக்கிழமை. குழந்தைகள் சில விளையாடிக்கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று பந்தயம் சொல்லி பெட்டுக் கட்டிக் கொண்டிருக்க....நான் சைக்கிள்ல டபிள்ஸ் போறேன்...எந்தப் போலீஸ் பிடிக்கிறான் பார்ப்போம்....என்ற பேச்சுக் கிடையே பையிலிருந்து ஐந்து ரூபாய்ப் பணத்தை எடுத்து வைக்கும் ஒரு பையன்.
        அதிர்ந்து போகிறார் முத்துவைய்யர். பன்னிரெண்டு வயதுக் குழந்தை கையில் பெட்டுக் கட்ட ஐந்து ரூபாய் பணம்.!
        சாம்பமூர்த்தின்னு ஒரு பையன்...கும்மோணத்திலேர்ந்து...இங்கதானே வேலையாயிருக்கான்....
        கும்பகோணத்துப் பையனா...இப்படி இறங்கி அதோ அங்கே போங்கோ....ஒரு கிழவர் பதில் சொல்கிறார்.
         நீங்க யாரு...?
        நான் அந்தப் பையனோட தோப்பனார்....
        பெரியய்யா இருக்கிற இடம் இதுதான்....அவங்க கூடத்தான் அந்தப் பையன் இருக்கான்....உள்ளே போங்கோ....
        தாழ்வாரத்தில் வந்து சார்....என்று சத்தம் கொடுக்க....யாரு? என்று உள்ளேயிருந்து ஒரு குரல். பிறகு அது புரிந்து யாரு அப்பாவா...? என்ற அக்கணாக்குட்டியின் கேட்பு.
        படிந்திருக்கும்  சற்றே வெளிச்சம் கலந்த இருளில் அமர்ந்திருக்கும் பெரிய உருவத்தையும், அதனோடு நெருங்கி நின்று அதன் தலையைப் பதமாய்ச்  சொரிந்து விட்டுக் கொண்டிருக்கும் சிறிய உருவத்தையும் இருளோடு இருளாகக் காண்கிறார் முத்து. மேஜை மீதிருக்கும் மங்கிய விளக்கொளியில் அக்கணாக்குட்டியின் முகம் தெரிகிறது.
        நீங்கதான் அக்கணாக்குட்டியோட தோப்பனாரா...வாங்கோ...உட்காருங்கோ.....-கறுப்புக் கண்ணாடி. உதடு அறுந்து தொங்குகிறது. துவண்ட சரீரம். பெரியவர் கன்னத்தைச் சொரிந்து கொள்கிறார். மடங்கிய விரல்கள்.
        எல்லோரும் நகத்தால்தான் முகத்தைச் சொரிவார்கள். இவரென்ன...மடங்கிய விரல்களின் பின் பக்க நடுப்பகுதி கொண்டு.....? – அதிர்ந்து போகிறது மனசு. முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருக்கிறது. புரிந்து கொள்கிறார். போயும் போயும் இந்தவேலைக்கா பையனை அனுப்பினேன்.
        பையனோட அம்மாவுக்கு உடம்புக்குமுடியலை. அவனை சித்த அனுப்பிச்சு வைக்கணும்...
        பாதகமில்லை....போயிட்டு வா...போய் லெட்டர் போடு...எப்ப வர்றேன்னு...எழுதணும்.....
        எப்படியோ அழைத்து வந்து விடுகிறார். மனசு மட்டும் விடாது அலைபாய்கிறது முத்துவுக்கு.
        ஏண்டா...மக்கு...இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு சொல்லவே இல்லியே...! என்கிறார். உன்னை ஏமாத்தியிருக்காடா...அசட்டுப் பொணமே....!
        அதெல்லாம் இல்லேப்பா....அது ஒண்ணும்  தொத்து வியாதி இல்லையாம். இந்தோ போட்டிருக்கா பாரு பேப்பர்லே.... – ஒரு புத்தகத்தைப் பிரித்துஅதிலிருந்து ஒரு தினசரித்தாள் ஒன்றை எடுத்து...அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண்....யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள்..
        இது யாரு தெரியுமா...ராணி...மகாராணி....வெள்ளைக்கார தேசத்துலே... ஒரு கிராமத்துக்குப் போயி அங்க இதமாதிரி இருக்கிறவாளை கவனிக்கிறாளாம். மருந்து சாப்பிட வைக்கிறாளாம். அவாள் எல்லாரையும் பார்த்து கையைத் தடவிக் கொடுக்கிறா வெள்ளைக்கார ராணி.....ஒட்டிக்கும்னா செய்வாளா....பேத்தியம் மாதிரிப் பேசிறியே...! –
        பேத்யம்...மாதிரி நானா...?
        படத்தை மட்டும் பார்க்கிறியே....கீழே என்ன எழுதியிருக்கு பாரு....அக்கணாக்குட்டி காண்பிக்கிறான்.
        பாலாம்பிகே வைத்யோ...-சுலோகம் வாயில் முணுமுணுக்க மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு இடது காதுக்கு தொங்கும் நூலைச் சுற்றிக்கொண்டு அந்தச் செய்தியைப் படிக்கத் தலைப்படுகிறார் முத்துவைய்யர்.
        கதை முழுக்க ஒருவருக்கொருவர் செய்யும் உதவியும், அதில் ஒட்டி உறவாடும் மனிதாபிமானமும், அன்பும் இருக்கும் குறைபாடுகளை மீறி நல்லதே  என்று நம்மை உணர வைக்கிறது.
        சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உணர்வுகளை அப்பட்டமாய் உணர வைக்கும் தி.ஜா.வின் எழுத்து வன்மை நம்மை வியக்க வைக்கிறது. சின்னச் சின்னக் கதா பாத்திரங்கள்தான். ஆனால் அத்தனையும் நம் மனதில் நிலைத்திருப்பதுபோல், அவை பேசும் பாங்கும், எடுத்து வைக்கும் வியாக்கியானங்களும் அதிரச் செய்கின்றன. அப்படியென்ன....எளிய உரையாடல்கள்தானே....என்று ஒரு புதிய வாசகனுக்குக் கூடத் தோன்றக் கூடும். ஆனால் மிகுந்த சொற்சிக்கனத்தோடு அதை எழுதிப் பார்த்தால்தான் தெரியும்....ஏழ்மையிலும், இயலாமையிலும், அடுத்தவரை நாடி நிற்கும் நிச்சயமற்ற இயங்குதள வாழ்க்கை நிலையிலும்....மனம் தடுமாறி...நிலையற்ற குழப்பமான சூழலில் சாதாரண மனிதனின் மனோ நிலை எவ்வகையிலெல்லாம் தடுமாறி அலைபாயக் கூடும் என்பதை இப்படைப்பில் மிகுந்த ஆழத்தோடு நமக்குச் சொல்கிறார். இந்த வாழ்க்கையின் அனுபவம், தன் அசட்டுப் பையனைக் கூட  எப்படி மாற்றியிருக்கிறது, என்ன மாதிரி ஒரு பக்குவம் கொள்ள வைத்திருக்கிறது  என்று வியக்கும் தந்தையின் மன நிலையை வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தி.ஜானகிராமன்.
                                -----------------------------------------------------------------------------


               
       
       
       
       



கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...