13 அக்டோபர் 2018

திருவாசகம் - மாறாடுதி பிண நெஞ்சே...! - பத்தி எழுத்து


பத்தி எழுத்து  
“மாறாடுதி பிண நெஞ்சே…!”
விடிகாலையில் கோயில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பலரும் விரும்புவதுண்டு. அதுவும் மதுரை மீனாட்சி அம்மன் போன்ற பெரிய கோயில்களுக்குச் சென்று ஒவ்வொரு பிராகாரமாக அமைதியாகச் சுற்றி வந்து, உதடுகள் ஸ்தோத்திரங்களை முணுமுணுக்க, மனம் ஒன்றி வழிபடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருப்பதை நம் குடும்பங்களிலும், வழிபடும் பக்தர்களிடமும் நாம் கண்டிருக்கிறோம். கண்டு கொண்டுமிருக்கிறோம். பெரும் பெரும் கோயில்களிலெல்லாம் அப்படி தியானித்து சுற்றிவரும்போது நம் காதுகளில் இடைவிடாது ஒன்று ஒலித்துக் கொண்டிருப்பதை கண்ணுற்றிருப்போம். பலருக்கும் தினமும் கேட்டுக் கேட்டு அந்தப் பதிகங்கள் மனனம் ஆகியிருக்கும் என்று கூடச் சொல்லலாம். தன்னையறியாது மெய்மறந்து அந்த சிவ ஸ்தலங்களின் கோயில் பிராகாரங்களைச் சுற்றி வரும்போது காதுகளில் ஒலிக்கும் பாடல்களோடு சேர்ந்து இவர்களின் உதடுகளும் அவைகளை முணுமுணுக்கும் இயல்புக்கு பக்தி செய்பவர்கள் நிலைபெற்றிருப்பார்கள்.
     பயிற்சி பெற்ற ஓதுவார்களால் அப்படி அனுதினமும் பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் தேவாரம், திருவாசகம் என்பதைப் பலரும் அறிவார்கள். பன்னிரு திருமுறைப் பாடல்களின் பக்தி, ஆழம் பொதுமக்களை சைவ நெறி பற்றச் செய்து பக்தி இயக்கங்களை நாடுமுழுவதும் பரவச் செய்தது என்பது வரலாறு.
     பன்னிரு திருமுறையில், தேவாரம் முதல் ஏழு தொகுதிகள் உடையது ஆகும். மொத்தம் 796 பதிகங்களும், 8349 பாடல்களையும் உள்ளடக்கியது. திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறையும், திருநாவுக்கரசர் அடுத்த மூன்று திருமுறையும், சுந்தரர் கடைசியாக ஏழாவது திருமுறையும் உருவாக்கியவர்களாவர்.
     சைவத் திருமுறைகளுள் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்க வாசகப் பெருமானாரால் இயற்றப்பட்டது. தமிழில் சிறந்த இலக்கிய வரிசையில் வைக்கத் தகுந்ததான திருவாசகம் மிகுந்த பக்திச் சுவையும்  மனதை உருக்கிடும்  தன்மையும் கொண்டதாகும்.
     திருவாசகத்தின் ஆன்ம சுத்தி என்கிற எட்டாவது பதப்பொருளுக்கான பாடலில் இறைவனின் திருவடியை எவ்வழியிலேனும் முனமுவந்து வழிபடாதவன், பிணம் போன்ற மனத்தினை உடையவன் என்பதான பொருளில் “துணையிலி பிணநெஞ்சே…“ என்று கூறுகிறார் மாணிக்கவாசகர். 
     இந்த மனம் அறநெறியின்பால் செல்லாமல், பொய்யான நெறிகளையே நாடிச் செல்வதால், செல்ல மனம் ஒருமைப்பட்டு நிற்பதால் “மாறாடுதி பிண நெஞ்சே…” என்பதாக ஒன்பதாவது பதப்பொருளில் வலியுறுத்திச் சொல்கிறார்.
     அறிவி லாத எனைப்புகுந் தாண்டுகொண்                                          டறிவதை யருளிமேல்                                                      நெறியெ லாம்புல மாக்ிகய எந்தையைப்                                          பந்தனை யறுப்பானைப்                                                     பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா                                   றாடுதி பிணநெஞ்சே                                                        கிறியெ லாமிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத்                                       தாயென்னைக் கெடுமாறே.
     அறிவற்றுக் கிடந்த இந்த எளியவனைப் பொருட்படுத்தி, எழுந்தருளி வந்து ஆட்கொண்டு, கருணை செய்து ஞானத்தைக் கொடுத்தருளி, மேலாகிய வீட்டுநெறி முழுவதும் புலப்படுத்தி எமக்குத் தந்தையாயிருந்து என் தளைகளைத் தொலைத்தவனாய் என்னோடு இருந்து, எமை விட்டு நீங்காத இறைவனின் இன்னருள் பெற மனம் ஒருமைப்பட்டு “மாறாடுதி பிண நெஞ்சே” என்று மனத்தை நோக்கி இறங்குகின்றார். இறை ஞானம் பெற்ற பிறகும் அதன் வழி ஒழுகவில்லையானால், பெரும் கேடும், இழிவும் உண்டாகும் ஆதலால் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாயென்னைக் கெடுமாறே…என்று இறைஞ்சுகிறார் என்பதே இந்த ஒன்பதாம் பதப் பாடலின் பொருளாய் அமைகிறது.

                           --------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...