“அரங்கம்” “கல்விக் கண்” காட்சி – 1
இடம்- சிவசுப்பிரமணியன்
படித்த கிராமத்துப் பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளி.
மாந்தர் - சிவசுப்பிரமணியன் மற்றும் மகன் சந்துரு.
சந்துரு - ஏம்ப்பா…இதுவா
நீ படிச்ச ஸ்கூலு…..? ஒரே அழுக்கு….வ்வே……அட்டப் பழசு….எனக்குப் பிடிக்கலே….
சிவசுப்பிரமணியன்- (சிரித்துக் கொள்கிறார்) இது கிராமத்துப் பள்ளிக்கூடம்…பஞ்சாயத்துலேர்ந்து
நடத்துற பள்ளி…அவுங்க நிதி வசதிக்கேத்த மாதிரிதான் இருக்கும்…
சந்துரு –நீ படிச்ச அந்தக் காலத்துலேர்ந்து இப்டித்தான் இருக்குங்குறே….
…பழசாயிடுச்சின்னா இடிச்சிட்டுக் கட்ட மாட்டாங்களா…? அங்கங்க இடிஞ்சு, விரிசல் விழுந்து….பசங்களுக்குப்
பயமாயிருக்காது?
சிவசுப்ரமணியன் – நாங்க படிக்கிறபோதே மரத்தடிலதான் பாடம் நடத்துவாங்க…ஆனா
அப்போ ஸ்கூல் கட்டின புதுசு….நல்லாயிருக்கும்….மரத்தடி குளுகுளுன்னு இருக்கும்.. …. தலைமையாசிரியர். எப்பவும் ரவுன்ட்ஸ்லயே இருப்பார்…..அத்தனை ஒழுங்காவும்
கட்டுப்பாட்டோடயும் படிச்ச காலம்….
சந்துரு – இங்கே எந்த ஸ்டான்டர்டு
வரைக்கும் இருக்கு….?
சிவசுப்ரமணியன் – ஃபிப்த்
ஸ்டான்டர்டு…அதாவது ஐந்தாம் வகுப்பு வரைக்கும்…அதுக்குப் பெறகு சிக்ஸ்த் டு இலெவன்த்…அதாவது ஆறாம் வகுப்புலேர்ந்து
பதினொண்ணு வரைக்கும் உயர்நிலைப்பள்ளி….….இந்த ஸ்கூல்லயே
மதிய உணவுக் கூடம் இருக்கு…அதை இன்னும் காண்பிக்கலையே ….?
சந்துரு – அதென்னப்பா….மதிய உணவு…..?
சிவசுப்ரமணியன் – நூன் மீல் ப்ரோக்ராம்….னு ஒரு அரசுத் திட்டம்…அந்தக் காலத்துல காமராஜர்னு
ஒரு முதலமைச்சர் இருந்தார்….அவர்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரைப் பெருந்தலைவர்னு
சொல்லுவாங்க….
சந்துரு – ஸ்கூல்லயே சாப்பாடு போடுவாங்க…அதானே….இப்பக் கூட கவர்ன்மென்ட் ஸ்கூல்கள்ல
இருக்கேப்பா….? எனக்குத் தெரியும்….ஏழைப் பிள்ளைங்கல்லாம் சாப்பிடுவாங்கல்ல…
சிவசுப்ரமணியன் – அதேதான். ஆனால் அதை முதன் முதல் அறிமுகப்படுத்தினவர் அவர்தான். ஏழைக் குழந்தைகள்
படிக்க வசதியில்லாம இருக்கிறதைப் பார்த்து, அதுகளுக்கு சாப்பாடு போட்டா…ஸ்கூலுக்கு
வரும்தானேன்னு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தின தெய்வம் அவரு….
சந்துரு –எதுக்கு அவரை தெய்வம்ங்கிறே….?
சிவசுப்பிரமணியன் – எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்….அப்டீன்னா கல்வி கற்றுக் கொடுக்கிற வாத்தியார்
மட்டுமில்ல….அந்தக் கல்வியை ஏழை பாழை வித்தியாசமில்லாம கற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுத்தாரே…அவரும்தான்
கடவுள்…..! அந்த நன்றி உணர்ச்சில அப்டிச் சொன்னேன்….எனக்கெல்லாம் தெய்வம் அவர்தான்….
சந்துரு – என்னப்பா சொல்றே…புரியலையே…?
சிவசுப்பிரமணியன் – எல்லாக் குழந்தைகளுக்கும் கல்விங்கிறது அதி முக்கியம்னு உணர்ந்து. இலவசக்
கல்வியைக் கொண்டு வந்தவரு பெருந்தலைவர் காமராஜர்தான்…..பைசா செலவில்ல எங்களுக்கு….அனுவல்
எக்ஸாமுக்கு மட்டும் ஒரு சிறு தொகை…தேர்வுக் கட்டணம்…..அவ்வளவுதான்…
சந்துரு – அப்போ…நீயெல்லாம் பணம் கட்டாமத்தான் படிச்சியா….? ஃப்ரீ எஜூகேஷனா…?
சிவசுப்பிரமணியன் – ஆம்மா….உங்க தாத்தாவுக்கு பணம் கட்டிப் படிக்க வைக்கிற வசதியெல்லாம் இல்லை…..அந்தச்
சமயத்துல காமராஜர் கொண்டு வந்த இந்த இலவசக் கல்வித் திட்டம் வாழ்நாள்ல எங்களால மறக்க
முடியாத ஒண்ணு…அதுனாலதான் அவரைக் கல்விக்கண் திறந்த மேதைன்னு சொல்றோம்….
சந்துரு – நம்ப வீட்ல உன் ரூம்ல ஒரு படம் மாட்டி மாலை போட்டிருக்கியே…அவர்தானே…
சிவசுப்பிரமணியன் – சாட்சாத் அவரேதான்….அவரை வாழ்நாள்ல மறந்துடக் கூடாதுன்னுதான் அந்தப் படத்தை
மாட்டியிருக்கேன். அப்பா, அம்மாவைக் கும்பிடுறபோது அவரையும் மறக்காமக் கும்பிடுவேன்….அனுதினமும்….
சந்துரு – சூப்பர்ப்பா……நன்றி மறப்பது நன்றன்றுன்னு எனக்குப் பாடம் நடத்தியிருக்காங்க
டீச்சர்…..
காட்சி – 2 - மாந்தர் – சிவசுப்பிரமணியன்,
சந்துரு….சற்றுத் தள்ளிய அறையில் தலைமையாசிரியர். இவர்கள் வருவதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சந்துரு – சரி…போவோமா….?
சிவசுப்பிரமணியன் - பொறு…பொறு…வந்த காரியம் இன்னும்
முடியலை….இந்த ஸ்கூலுக்கு ஒரு டொனேஷன் கொடுக்கணும்னுதான் முக்கியமாக் கிளம்பி வந்தேன்….அந்த
நல்ல காரியத்தைப் பண்ணிடுவோம்….
சந்துரு – எதுக்குப்பா டொனேஷன்….? பணம் கொடுக்கப்போறியா….?
சிவசுப்பிரமணியன் – ஆமா…என்னோட பல வருஷக் கனவு அது…இதுக்காகவே கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வச்சிருக்கேன்….கட்டடமெல்லாம்
விரிசல் விழுந்து கெடக்குன்னு சொன்னீல்ல…அதச் சரி செய்யத்தான்……இரு வந்திடுறேன்….
சந்துரு – நானும் வர்றேம்ப்பா……எங்கிட்டக் கொடு…நான்தான் கொடுப்பேன்– கூடவே ஓடுகிறான்.
சிவசுப்ரமணியன் – (தலைமையாசிரியரிடம் பேசுகிறார்) தன் பர்சுக்குள் தயாராய் எழுதி வைத்திருந்த
காசோலையை எடுத்து சந்துருவிடம் கொடுத்து அவன் மூலம் நீட்டுகிறார்…….நன்றியோடு எழுந்து
வணங்கிப் பெற்றுக் கொள்கிறார் தலைமையாசிரியர். கை குலுக்குகிறார்.
தலைமையாசிரியர் – வெரி குட் பாய்…என்று சந்துருவின் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டுகிறார். அடுத்த
முறை நீங்க வர்றபோது கட்டடம் பழுது பார்த்து பெயின்ட் பண்ணி பளபளன்னு இருக்கும் ….சத்துணவுக்குன்னு
ஒரு சமையலறை வேறே கட்டப்போறோம்… உங்க பணம்தான் அதுக்கான ஊக்கத்தைக் கொடுத்திருக்கு…..காலம்
அறிந்து இடத்தாற் செயின்னு சொல்வாங்க…சரியான சமயத்துல கொடுத்திருக்கீங்க…
சிவசுப்பிரமணியன் – நான் ராமருக்கு உதவி செய்த அணில் மாதிரி…என்னால முடிஞ்சது….
தலைமையாசிரியர் – அதுக்கும் மனசு வேணுமே.….படிச்ச பள்ளியை நினைவு வச்சிக்கிட்டு எத்தனை பேர்
இப்டி வருவாங்க? எங்க பணத்துக்குத் தட்டுப்பாடு இருக்கோ…அங்கதான் மனசு விரிஞ்சு கிடக்கு….
சிவசுப்பிரமணியன் – ரொம்ப சந்தோஷம் சார்….என் ஆத்ம திருப்திக்காக செய்தது இது. என் நெடுநாளையக்
கனவுன்னே சொல்லலாம்…எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி…..நா வர்றேன் சார்…..
தலைமையாசிரியர் – ஓ,கே..தாங்க்யூ வெரி மச்….வெரி கைன்ட் ஆஃப் யூ……
சந்துரு – அப்பாவைப் பெருமிதத்தோடு வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் சந்துரு.
காட்சி – 3 – மாந்தர்
– சிவசுப்பிரமணியன்….சந்துரு…..உயர்நிலைப்பள்ளி கட்டடக்
காவலர் கண்ணுச்சாமி…..
சிவசுப்பிரமணியன் – வணக்கம்யா…இது நான் படிச்ச ஸ்கூலு…என்
பையனுக்கு சுத்திக் காண்பிக்க வந்திருக்கேன்….உள்ளே போகலாமா…?
கண்ணுச்சாமி – அதுக்கென்னங்கய்யா…தாராளமா கூட்டிப் போய்க் காண்பிங்க…
சிவசுப்பிரமணியன் - அந்தோ…மேலே தொங்குதே ஒரு போர்டு….அதைப்படி…….
சந்துரு – நிமிர்ந்து பார்க்கிறான். வரிசையாக எழுதியுள்ள பெயர்களைப் படிக்கிறான்.
1967 என்று போட்டு எழுதியிருந்த பெயரைப் பார்த்து அதிசயிக்கிறான். என்னப்பா இது…உன்
பேர் போட்டிருக்கு…1967 எஸ்.எஸ்.எல்.சி.ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்டா நீ….? இத்தனை நாள் சொல்லவேயில்லையே…?
…நீ நல்லாப் படிப்பேன்னு இன்னிக்குத்தான் எனக்குத் தெரியும்…
சிவசுப்பிரமணியன் –குசும்புடா உனக்கு… உங்கம்மாவுக்குத் தெரியும் என் படிப்புப்பத்தி. அப்போ பாபுன்னு ஒருத்தன் இருந்தான். அவன்தான் எல்லாத்துலயும்
முதல்ல வருவான்….அவனை எப்டியாச்சும் படிப்புல பீட் பண்ணியாகணும்னு வெறியாப் படிச்சேன்…அதோட
பலன்தான் அது…….
சந்துரு – சூப்பர்பா…..நானும் உன்னை மாதிரியே படிக்கிறேம்பார்….கட்டாயம் ஜெயிப்பேன்……
சிவசுப்பிரமணியன் – உனக்கென்னடா…ராஜாவாச்சே நீ….அப்பாவை விடப் பத்து மடங்கு டேலன்டட் நீ படிக்கிறதுக்குக்
கேட்கணுமா….? - மகனை ஆசையோடு அள்ளித் தூக்கி
முத்தமிடுகிறார்.
பள்ளியின் கட்டட அமைப்பை விவரித்துக் கொண்டே வகுப்புகளைச் சுற்றிக் காண்பிக்கலானார்.
சந்துரு – அப்பா….உங்க ஸ்கூலைக் கவனிச்சியா…..இங்கிலீஷ் லெட்டர் “H” மாதிரி- பில்டிங்க கட்டியிருக்காங்க பாரு…..
சிவசுப்ரமணியன் – அடடடடே….நான் உனக்குச் சொல்லணும்னு இருந்ததை நீயே கவனிச்சிட்ட பார்த்தியா….?
அதுதான் இந்த ஸ்கூலோட ஸ்பெஷல் …. ….இந்தக் கட்டடமும் அழகு…இங்க படிச்ச பையன்களும்,
வாத்தியார்களும் எல்லாமே அழகு….இந்த வருஷம் ப்ளஸ் டூவுல மாவட்டத்துலயே ஃபஸ்ட் வந்திருக்கு இந்த ஸ்கூல்…. தெரியுமா? இதுக்கும்
ஒரு கதையிருக்கு…
சந்துரு – என்னப்பா அது?
சிவசுப்பிரமணியன் – எஸ்.எஸ்.எல்.சி ஃபைனல் எக்ஸாமுக்கு
மட்டும் பதினோரு ரூபா கட்டணும். அதை பாட்டிதான் ஒருத்தர் வீட்டுக்குக் கூட்டிப் போய்,
கால்ல விழுந்து வணங்கச் சொல்லி கடன் வாங்கிக் கொடுத்தாங்க….மதியம் மூணு மணியோட டைம்
முடிஞ்சு போச்சு…ஓடிவந்து கடைசி நிமிஷத்துல கட்டினேன்…..அந்த நாளை என்னால மறக்கவே முடியாது..
சொல்லிவிட்டு சந்துருவைப் பார்த்தார் சிவசுப்பிரமணியன். கண்கள் கலங்கியிருந்தன.
அந்தச் சிறு உள்ளம் தன் அனுபவத்தைப் புரிந்து கொண்டதாய் உணர்ந்து சிலிர்ப்புற்றார்.
சந்துரு – அப்பா…என்னைத் தூக்கிக்கோப்பா….என்ற சந்துரு, அவர் தோளுக்கு வந்ததும் ஆசையாய்
முகத்தோடு முகம் பொருத்திக் கொண்டான்.
சிசசுப்பிரமணியன் – என் தங்கம்டா நீ…. …செல்லமாச்சே….செல்லக்குட்டியாச்சே…சமத்துப் பையன்….
–கொஞ்சியவாறே வெளியேறிய சிவசுப்ரமணியன்…வாட்ச்மேனுக்கு நன்றி சொல்லிவிட்டு, “…டீ சாப்பிடுங்க…”என்றவாறே
அவர் கையில் ஒரு ஐம்பது ரூபாயைத் திணித்தார்.
சந்துரு – (இடுப்பை விட்டு இறங்கியவாறே). தன் மொபைல் கேமராவில் கோணம் பார்த்த சந்துரு….திடீரென்று
“அப்பா…நீ அந்த கேட் முன்னாடி போய் நில்லு….உன்னையும் ஸ்கூலையும் சேர்த்து ஒரு ஃபோட்டோ….”
என்றவாறே ஆவலோடு “க்ளிக்“க ஆரம்பித்தான்.
-----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக