13 அக்டோபர் 2018

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....!!


கட்டுரை            “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலேவந்ததே…..!!                         ---------------------------------------------------------------------------








மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அதன் ஒரு நிகழ்ச்சியில்  சிவாஜி ரசிகர்களை அழைத்து நடிகர்திலகத்தை அவர்கள் எப்படியெல்லாம் ரசித்தார்கள் என்ற விஷயத்தைப் பரவலாக விவாதத்திற்குள்ளாக்கியது.
     அருமையான, நல்ல, நிகழ்ச்சி. மூத்த தலைமுறையைச் சார்ந்த, ஐம்பதுகள், அறுபதுகளைத் தாண்டிய பெரியவர்கள், பெண்மணிகள் பலரும் தாங்கள் பார்த்து ரசித்த சிவாஜி படங்களையும், காட்சிகளையும் சொல்லிச் சொல்லி மனம் பூரித்துப் போனார்கள். கண் கலங்கினார்கள். வார்த்தைகள் வராமல் தடுமாறினார்கள். வெறும் ரசிக மனங்களாய் இல்லாமல் பாச மனங்களாய்த் தோன்றின அவை. பெரும்பாலும் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போய் படம் பார்த்தோம் என்பதைச் சொல்லி சிவாஜி மேல் உள்ள பிரியத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதைச் சொல்வதற்கு ஒரு மேடை கிடைத்ததே என்று காத்துக் கொண்டிருந்தது போல் தங்கள் வயதையும் தள்ளாமையையும் பார்க்காது அவர்கள் இந்த நிகழ்ச்சிக்குக் குழுமியிருந்ததுதான் அதிசயம்.
     1952 ல் சிவாஜி பராசக்தி மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்த பிறகு அவரளவுக்கான தெளிவு வேறு எவரிடமுமில்லை என்ற கணிப்பில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுப் போக, அடுத்தடுத்து அவருக்குப் படங்கள் சேர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில், ஒரு என்.டி.ஆரும், நாகேஷ்வரராவும், பிரேம் நசீரும் தங்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி நகர்ந்து, தங்களை அவரவர் சொந்த இடத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த அளவுக்கான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி, திரையுலகைத் தன்னை நோக்கித் திருப்பி, தீவிர கவனம் கொள்ள வைத்தவர் நடிகர்திலகம் அவர்கள்.
     படிப்படியாக வெகு சீக்கிரத்திலேயே சிவாஜியின் நடிப்புக்கும், அர்த்தபூர்வமான காட்சிகளுக்கேற்ற பார்வை, சிரிப்பு மற்றும் பாவங்களுக்கும்,, வசனம் பேசும் திறமைக்கும், அதுவரை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத ஸ்டைலுக்கும், அவருக்கு மட்டுமே எது செய்தாலும் அழகுதான் என்று  அடிமையாகிப் போன தமிழ் ரசிக மனங்கள், சிவாஜியின் மேல் உயிரையே வைத்த பாசச் சொந்தங்களாகத் தங்களையே வரித்துக் கொண்டன.
     அப்படியான திறமை மிகுந்த ஒருவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து நிலைத்ததும், அற்புதமான கதாசிரியர்களும், வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும் அவர் மூலமாகப் படிப்படியாக வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். இவருக்கு இப்படிக் காட்சிகள் அமைத்தால் காட்சியும் சோபிக்கும், கதையும் சோபிக்கும், அவரும் சோபிப்பார், நாமும் சோபிப்போம் என்று வரிந்து கட்டிக் கொண்டு திறமையான பல இயக்குநர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். அவரால் இவர்களுக்குப் பெருமையா அல்லது இவர்களால் அவருக்குப் பெருமையா? என்று சொல்ல முடியாத அளவுக்கு மொத்தத் திரைப்படமும் கன கச்சிதமாக அமைந்து வெற்றி கண்டன. உடன் அமைந்த அனுபவமிக்க குணச்சித்திர நடிகர்களும், நகைச் சுவை நடிகர்களும், துணை நடிகர்களும் எல்லோருமாகச் சேர்ந்து மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்தும்போது, கதையின் நாயகனை மையமாக வைத்துப் படம் அடியெடுத்து வைத்து நகர்ந்து, அத்தனையிலும் விஞ்சி நிற்பது அவரது நடிப்பே என்னும் தவிர்க்க முடியாத முடிவுக்கு ரசிகர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.
     ஆனால் நடிகர்திலகத்தின் மனம் உடன் நடிக்கும் மேடை நாடக அனுபவமிக்க பழுத்த ஜாம்பவான்களின் நடிப்பில் மதிப்பு வைத்ததும், சிறந்த இயக்குநர்களின் திறமையைக் கணக்கிட்டுக் கொண்டதும், இவர்களெல்லாம்தான் தனது சொத்து என்று அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டதும், அவர்களிலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டுபோய் உச்சத்தில் வைத்துக் கொள்வதே தன்னை நிலை நிறுத்தும் என்று உணரச்செய்து, அதிலேயே அவரது மனம் அதீதக் கவனமாய் இருந்தது. ஒரு சிறந்த மாணவனுக்கு இவைகளெல்லாம்தானே கல்யாண குணங்களாகவும், லட்சணங்களாகவும் இருக்க முடியும்?  ஒவ்வொரு படத்தையும் இதுதான் தன் முதல் படம் என்று கருதியே செயல்பட்டால்தான் அந்த வெற்றி நின்று நிலைக்கும் என்பதில் அவர் மிகவும் தீர்மானமாய் இருந்தார். அதுபோல் அவருக்குப் படங்களும் அமைந்தன. அப்படித்தான் ஒவ்வொரு படமும் அவருக்கு வெவ்வேறு பரிமாணங்களில் அவரின் திறமையைப் பளிச்சிட வைத்தது. ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்  அவர். அடுத்தடுத்த காட்சிகளில் புதுமையாய், காட்சிக்குப் பொருத்தமாய், தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டார்.
     இந்த சீனைப் பாருங்க…பிரமாதமா இருக்கும்…
     இந்த ஒரு காட்சி போதும் இந்தப் படத்துக்கு….
     இப்டியே ஒவ்வொரு சீன்லயும் பிரமாதப் படுத்தியிருப்பார் பாருங்க….
என்று குறிப்பிட்ட காட்சிகளை எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஆவலாய் வந்து காத்துக் கிடந்து மறுபடி மறுபடி பார்த்து விக்கித்துப் போனார்கள் ரசிகர்கள். தாமதமாய்ப் படத்திற்கு வந்தால்கூட, அந்த சீன் போயிருக்காதுல்ல…என்ற மனச் சமாதானத்தில் உள்ளே நுழைந்தார்கள். படம் முடிந்து வெள்ளைத் திரை ஆனபோது மனம் கனத்து வெளியேறினார்கள். அடுத்த காட்சிக்கே அவரோடு மீண்டும் உறவாட யத்தனித்தார்கள். மனதைப் பறிகொடுத்து பைத்தியமாய் அலைந்தார்கள். இப்படியா ஒரு மனிதன் ஈர்க்க முடியும்? என்ன ஒரு ஆகர்ஷன சக்தி? வெறும் நடிப்பாய் மட்டும் இல்லாமல், அந்தந்தக் கதாபாத்திரமாகவே எப்படி வாழ்கிறான் இந்த மனிதன்? இவருக்கென்று கதைகள் அமைகிறதா? அல்லது அந்தந்தக் கதைகளுக்கென்று இவரைத் தேர்ந்தெடுக்கிறார்களா? யாரால் எது பெருமை பெருகிறது?
     இதை இன்றைக்குச் சொல்வதானால் “அசத்திட்டாருங்க…” “பின்னிட்டாருங்க….” என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சு வழக்கில் புகுந்துவிட்ட இந்த வார்த்தைகள் இன்றைக்குத்தான் பொருந்தும். அன்றைய காலகட்டத்திற்கு சுட்டுப் போட்டாலும் பொருந்தி நிற்காது.
     அன்றைய ரசிகர்களின் தராதரம் என்பதே வேறு. அவர்கள் அந்தந்தத் திரைப்படங்களின் மூலமாய்த் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பார்த்தார்கள். அதன் தாக்கங்களைக் கணக்கிட்டுக் கொண்டு, தங்களை அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். அன்றைய திரைப்படங்களும் அப்படித்தானே இருந்தன. மனித வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய பங்கு ஊடகங்களுக்கு உண்டுதானே…! அதிலும் சினிமா என்கிற காட்சி ஊடகம் அதீத சக்தி வாய்ந்ததாயிற்றே…!
     இப்பத்தான அந்தப் படத்தைப் பார்த்திட்டு வர்றே…அப்புறம் இப்டி நடந்துக்கிட்டேன்னா எப்டி? உன்னோட அபிமான நடிகர் அப்டியா சொல்லியிருக்கார்? என்று கண்டித்த பெரியவர்களும் உண்டு.
     அப்படியெல்லாம் ரசித்து, ரசித்துப் பார்த்து தங்களையே இழந்து நின்று, உடல், பொருள், ஆவி அனைத்தும் சிவாஜிக்குத்தான் என்று காலங்களைக் கடந்து வந்த  தீவிர ரசிகர்களாகிய இன்றைய பெரியவர்கள், அன்று நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாங்கள் ரசித்த அந்த நடிகர்திலகத்தின் ஆத்மார்த்தமான நடிப்பை, அந்தக் காட்சிகளின் அருமை பெருமையை அத்தனை ஆழமாய் வெளிப்படுத்தவில்லையோ என்றுதான் தோன்றியது.
     ஒருவேளை அது காலங்கள் கடந்து போய்விட்ட நிலையினாலும், காட்சிகளின் தாக்கம் மனதில் தேய்ந்து மறைந்து விட்ட நிலையினாலும், யதார்த்த வாழ்க்கையின் தவிர்க்க முடியாத  நிகழ்வுகளாலும் ஏற்பட்ட சோர்வாகவும் கூட இருக்கலாமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.
     ஒரு ரசிகன் சிந்தித்ததைவிட, ஒரு வசனகர்த்தா சிந்தித்ததை விட, ஒரு இயக்குநர் சிந்தித்ததைவிட, மிகவும் மேலேதான் தன் நடிப்பை உயரத்திற்குக் கொண்டு போனார் சிவாஜி. அதனால்தான் ஓடிக் கொண்டிருக்கும் காமிராவை நிறுத்தக் கூட மனமின்றி, மறந்துவிட்ட நிலையில் காட்சியோடு ஒன்றிப் போனார்கள்  இயக்குநரும் மற்றவரும். அருமை, அருமை என்று ஓடி வந்து ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டார்கள். பிரமாதம், பிரமாதம் என்று சொல்லியவாறே வந்து கை குலுக்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அப்படிச் சிவாஜி செய்த காட்சிகள் எத்தனை எத்தனையோ…! சொல்லி மாளாது அவைகள். அதை அப்படியே முன்னிறுத்த அன்று அந்த நிகழ்வில் நான் இல்லாமல் போனேனே என்றுதான் என் மனம் ஆதங்கப்பட்டது.
     அப்படியே இருந்திருந்தாலும் வெறும் வாய் வார்த்தையாய் ரசித்து எடுத்துச் சொன்னால் மட்டும் போதுமானதாக அவை இருந்திருக்காது. ஒவ்வொன்றையும்பற்றி எடுத்துச் சொல்லச் சொல்ல, அதற்கான காட்சிகள் (கிளிப்பிங்க்ஸ்) திரையில் விரிய வேண்டும் எனக்கு. அப்படி விரிய விரிய நான் சொன்னது சரிதான் என்றும், இவன் ரொம்பவும் ஆழமாகத்தான், நம்மை விட அழகாகத்தான்  ரசித்திருக்கிறான் என்றும் எல்லோரும் நினைக்க வேண்டும் எனக்கு. அப்போதுதான் என் மனம் திருப்திப்படும். எதற்காக திருப்திப்படும்? என்று ஒரு கேள்வி வருகிறது இங்கே. நடிகர்திலகத்தின் பெருமை, அவரின் சாதனை, இனி எவராலும் முறியடிக்கப்பட முடியாதது என்பதை ஊர் உலகம் அறிய வேண்டும் எனக்கு. இன்றுவரை அப்படி அறிந்திருக்கிறதா என்பதில் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு.
     திரைப்படக் கல்லூரிகளில் நடிப்பு பற்றி அணு அணுவாக உணர்ந்து கொள்வதற்கு  அவரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? எத்தனையோ குணச்சித்திர நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தனை குணச்சித்திரங்களையும்தான் தன் நடிப்பு வாழ்க்கையில் பல படங்களில் பற்பல கதாபாத்திரங்களில் இவர் செய்து காண்பித்து இருக்கிறாரே…! மாணவர்களுக்கு இவரது திரைப்படங்களைத் தினசரி போட்டுக் காண்பித்து, விளக்கினாலே போதுமே…! ஒன்று யோசித்துப் பாருங்கள். அந்த அளவுக்கான உயர்ந்த பீடத்தில் நடிகர்திலகத்தை வைத்து நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா?
     எத்தனையோ பாடாவதிப் படங்களில் நடித்தவர்தான் அவர். அது அவர் தொழில். வருமானத்திற்காகச் செய்தது. அது அவர் பாடு. அதைக் குறை சொல்வதற்கில்லை. ஆனால் அந்த அத்தனை பாடாவதிகளையும் மறக்கடிக்கும் விதமாய் கொட்டிக் கொடுத்திருக்கிறாரே நமக்கு. ஐம்பதுகளில் ஆரம்பித்து எழுபதுகளின் ஆரம்பம் வரைக்குமான எத்தனையெத்தனை நல்ல படங்கள், நடிப்பை உயர்த்திப் பிடித்த படங்கள் வந்து சென்றிருக்கின்றன? மறுக்க முடியுமா? கலர் படங்கள் வர ஆரம்பித்தன…அவரது படங்களும் ஒன்றிரண்டைத் தவிர எல்லாமும் மோசமாக ஆரம்பித்தன என்று வேண்டுமானால் சொல்லலாம்.
     என்ன இவன் இப்படிச் சொல்கிறானே…தீவிர ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறான்….என்று தோன்றலாம்தான். தீவிர, தரமான ரசிகனாய் இருப்பவனுக்குத்தான், இது தவறு என்று சொல்வதற்குமான உரிமை கிடைக்கிறது. அவனால்தான் அத்தனையையும் மீறி நல்லதைத் தூக்கிப் பிடிக்க முடியும். அந்தத் திறமை உயர்ந்த ரசிகனுக்கு மட்டுமே உரியது.
     மனைவி இறந்த வேதனையில் அவன் இருக்கிறான். அந்த வேதனை தாளாது தந்தையையும் இழந்த துக்கம். எங்கே நிம்மதி தேடுவது என்று அலைந்த அவன், அந்த இரவு விடுதியில் பொழுதைப் போக்குவதற்காக வந்து அமர்கிறான்., மேடையில் ஆடும் பெண்ணின் அழகிலும், அவளின் மென்மையான அசைவுகளிலும் தன் மனதைப் பறி கொடுக்கிறான். துக்க மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் அமைகிறது அந்த நிகழ்வு. அவள் மீது அவனுக்கு ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசையை வெளிப்படுத்தும் விதமாய் இரண்டு விரல்களுக்கு இடையே புகையும் சிகரெட்டை மென்மையாய் உள்ளிழுத்து, உதடுகளின் நடுவே சற்றே உள் நுழைந்த சிகரெட்டின் இழுப்போடு மனம் கனிந்த மகிழ்ச்சியின் அடையாளமாய்  புகையை அவர் வெளியேற்றும் அந்தக் காட்சி பார்வையாளர்களுக்கு அதன் முழு அர்த்தத்தைக் கொண்டு வந்து நிறுத்தும். பொருந்தியிருக்கும் உதடுகள் எப்படி அந்த சிகரெட்டை உள்ளே மென்மையாக, லேசாக உள் இழுத்து அவள் மீதான தன் ஆசையை வெளிப்படுத்தும் காட்சி, நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாருக்கு அத்தனை அழகாக அமையும்? இந்தக் காட்சியை இயக்குநர் விளக்கி அவர் செய்தார் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த அழகு கொஞ்சும் அந்தக் காட்சியை அவரைத் தவிர யார் அத்தனை துல்லியமாக நடித்துக்காட்ட முடியும். அவரது கோட்டும், சூட்டும், Nஉறர் ஸ்டைலும், இடக்கையில் கட்டியிருக்கும் வாட்சும், பக்கவாட்டிலான முக அமைப்பும், அளவான நெற்றி, அதற்குக் கீழே அமைந்த அழகான மூக்கு, அதன் கீழான சரியான இடைவெளியில் அமைந்த மீசைப் பகுதி, வரைந்த சித்திரமாய் அமைந்த உதடுகள், அதன் கீழே இவையெல்லாவற்றிற்கும் அழகு சேர்ப்பதுபோலான பரந்த ஒற்றை நாடி…உப்பிய கன்னங்கள், யாருக்கய்யா அமைந்தது இந்த அழகு? வேறு யாரேனும் ஒருவரைச் சொல்லுங்கள் பார்ப்போம்?
     யாருய்யா இந்த ஆளு, மீன் மாதிரி வாயசைச்சு, வாயசைச்சுப் பேசுறாரு? ஆள மாத்துங்கய்யா…..என்று பராசக்திக்காகச் சொல்லப்பட்டவர்தான் சிவாஜி. அன்று அந்தப் பெரியவர் பி.ஏ.பெருமாள் அய்யா மட்டும் அவரை மறுத்திருந்தால்?  இப்படி ஒரு பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்குமா? அந்த நன்றிக்கு எத்தனை பெருமை சேர்த்தார் நடிகர்திலகம்? கால காலத்திற்கும் நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்ளலாம் போலத்தானே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்?
     புதிய பறவை படத்தின் மூக்குச் சிந்தும் காட்சியைப் பற்றிச் சொன்னார்கள் ஒரு பெண்மணி. அது என்ன சாதாரணக் காட்சியா என்ன? அப்படி ஒரு காட்சியை அங்கே வைக்க வேண்டும் என்று தோன்றிய வசனகர்த்தாவோ, இயக்குநரோ, அவருக்கு என்னவொரு கற்பனை இருந்திருக்க வேண்டும்? அந்தப் படத்தின் அதுவரையிலான காட்சிகள் எப்படியெப்படி அமைந்திருந்தால் அங்கே அந்தக் காட்சியை வைத்தால் படு பொருத்தமாய் இருக்கும் என்று இயக்குநர் முடிவு செய்திருக்க முடியும்?
     இனி வேறு வழியே இல்லை என்கிற ஒரு இக்கட்டான கட்டத்தில், தான் செய்த கொலையை ஒப்புக் கொள்வது என்கிற முடிவுக்கு வருகிறான் கதாநாயகன். அப்படி வந்து தனக்குத்தானே ஒரு தீர்மானத்திற்கு வந்த வேளையில் அந்த முடிவிற்கான முழு மனநிலையோடு அந்த நாற்காலியில் அமரும் காட்சிதான் அது. அப்படி அமருவதும் ஒரு நடிப்புதான் என்பேன் நான். இப்படியான ஒரு முடிவுக்கு இறுதியாக வந்தவன், அப்படித்தான் அமர வேண்டும். அதுதான் அழகு. இதற்குத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், நான் காட்சியை விளக்க விளக்க எனக்குக் க்ளிப்பிங்ஸ் வேண்டும் என்று. நான் சொல்லி முடித்ததும் அந்தக் காட்சியை நீங்கள் கண்டீர்களென்றால் உங்களுக்குப் புரியும்….அருமை…அருமை…என்று.  அந்த முடிவோடு அந்தச் சாய்வு நாற்காலியில் நடிகர் திலகம் வந்து பிரம்மாண்டமாக அமரும் அந்தக் காட்சியும் அவரது காலடியில் இருந்து உத்திரத்தை நோக்கிய காமிரா கோணமும்,  அத்தனை சீக்கிரத்தில் யாருக்கும் மறந்து விடாது. மறக்கக் கூடாது. இத்தனை இன்வால்வ்மென்டோடு…, இங்கே ஆங்கிலத்தில்தான் இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு. அர்ப்பணிப்பு உணர்வோடு என்று சொன்னால் கூட அது முழுமையாய்ப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. இத்தனை இன்வால்வ்மென்டோடு…உயிரைக் கொடுத்து, தன் உணர்வுகளை அர்ப்பணித்து யாரேனும் நடிப்பிற்காகத் தன்னை இழந்திருக்கிறார்களா? சொல்லுங்களேன்…கேட்டுக் கொள்கிறேன்….ஒரு படம் ஆரம்பித்து, அது முடியும்வரை அந்தக் கேரக்டரின் ஞாபகங்களோடேயே, அந்தக் கதாபாத்திரமாகவே வீட்டிலும் வலம் வருவாராம் நடிகர்திலகம்.
     பிரஸ்டீஜ் பத்மனாபய்யர்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கேன் வியட்நாம் வீடுங்கிற படத்துக்காக….பார்த்துட்டு எப்டியிருக்குன்னு சொல்லுங்கோ…..நன்னாப் பண்ணியிருக்கேன்னு நீங்கள்லாம் சொன்னாத்தான் எனக்குத் திருப்தி….. – மனதிற்குள் குழந்தையாய் இருக்கும் கலைஞனுக்குத்தான் இப்படி வார்த்தைகள் வரும். ஒரு நல்ல கலைஞன் மனதிற்குள் பச்சைக் குழந்தையாய்த்தான் இருப்பான். அதுதான் சத்தியம். அவன் நூற்றுக்கு நூறு  கலைஞனாக மட்டுமே இருந்தால்தான் வெற்றி. அப்படிப்பட்டவர்தான் நடிகர்திலகம்.
     மனைவியை விபசாரி என்று சொன்ன வாயைக் கிழித்து எறிகிறேன் என்று, மாசு மருவற்ற என் அக்காளை எப்படி நீ அவ்வாறு சொல்லலாம் என்று சிவாஜியின் சட்டையைப் பிடித்து, சுற்றி இறுக்கி அக்காளின் ஒழுக்கத்தைப்பற்றிப் பிரலாபித்து,  அவரை வார்த்தைகளால் பிளந்தெடுத்து, எஸ்.எஸ்.ஆர்  கொதித்துப் போய்  நிற்கையில், டேய்…டேய்….என்னடா….ஒழுக்கத்தைப்பத்தி என்கிட்டயே பேசுறியா…? என்று அலட்சிய பாவத்தோடு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒரே ஒரு வார்த்தை கேட்பார். அதுவரை வரிவரியாக எஸ்.எஸ்.ஆர்.  பேசிய அத்தனை வசனங்களும் அங்கே கணத்தில் அடிபட்டுப் போகும்…சிவாஜி பேசியதற்குத்தான் கைதட்டு விழுந்து கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் அந்த இடத்தில் சிவாஜியின் பேச்சுதான் மோசம். மனைவி மீது அநாவசியமாய் சந்தேகப்பட்டு, பேசக் கூடாதவார்த்தைகளைத் தெறிக்கவிடும் காட்சி அது.  கதைப்படி அந்த இடம் அவரை இறக்கி நிறுத்தும் காட்சி. தன் அன்பிற்குரிய மனைவி மீதே சந்தேகப் பிசாசு பிடித்துக் கொண்ட வேளையில், தவறாகப் பேசும் ஒரு காட்சி. எஸ்.எஸ்.ஆரின் மனக்கொதிப்பு மிகவும் உன்னதமானதும், காட்சியை உயர்த்திப் பிடிக்கும் லாவகமானதும் ஆகும். உணர்ச்சிப் பிழம்பான இந்தக் காட்சியைப் போல் இன்றுவரை அப்படி ஒரு காட்சி எந்தத் திரைப்படத்திலும் அமையவில்லை என்று சொல்வேன் நான்.  ஆனால் அந்த இடத்தில் கூட ஓரிரு சொல் வசனத்தினால், அதை உச்சரிக்கும் முறையினால், தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் சிவாஜி. தெய்வப்பிறவி படத்தின் இந்தக் காட்சியை யாரேனும் அவ்வளவு எளிதாக, சினிமாதானே என்று மறந்து விட முடியுமா என்ன?
     பதினைந்து நிமிடத்திற்கு, சோழ மன்னனாக மிக நீண்ட கலைஞரின் வசனத்தைப் பேசுவார் நடிகர்திலகம் என்று சொல்லப்பட்ட போதே இன்னொன்றையும் சொல்லியிருக்க வேண்டும் அங்கே. அந்த மொத்த வசனமும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்பதும், ஒரே மூச்சில் பேசப்பட்டது என்பதும், காமிரா நடிகர்திலகத்தை விட்டு நகராது அரைவட்டமாக அவரை நோக்கியே பயணிக்கும் என்பதையும் ரசிக மனங்கள் கண்டிப்பாக மனதில் நிறுத்தியிருக்க வேண்டும். அதுதான் இந்தக் காட்சியின் வெற்றி.
     எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போய் படம் பார்த்தோம், ரிலீஸ் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் அப்படியே நின்று அடுத்த காட்சிக்குக் கால் கடுக்கக் காத்துக் கிடந்து அங்கே வரும் கடலைப் பருப்பை வாங்கித் தின்று கொண்டு கால் வலிக்க வலிக்க நின்று அடுத்த காட்சிக்கு முதல் ஆளாய் டிக்கெட் எடுத்துப் போய் படம் பார்த்த சிலிர்ப்பை முதிர்ந்த ரசிகர்கள் வெளிப்படுத்தியபோது நமக்கும் மெய் சிலிர்த்துத்தான் போனது. அதிலும் சைக்கிள் வைத்திருந்தால் தனி டிக்கெட் என்று சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போய் அதற்கும் காசு கொடுத்து நிறுத்தி,  ஸ்பெஷல் டிக்கெட் பெற்றுப் படம் பார்த்த பெருமை மறக்க முடியாதது என்று ஒருவர் சொன்னபோது, இப்படி இப்படியெல்லாம் இருந்த சின்னச் சின்னச் சந்தோஷங்கள் எல்லாம் இன்று அழிந்துபட்டனவே என்று மனம் வேகத்தான் செய்தது. வெறும் நாலணாவுக்கும், பெஞ்சு டிக்கெட்டிற்கு எட்டணாவும், மாடிக்கு ஒரு ரூபாயிலும்,  இரண்டு ரூபாயிலும் படம் பார்த்த சந்தோஷமும் குதூகலமும் யாராலும் மறக்க இயலாதுதான்.
     அப்படியான ஒரு சந்தோஷத்தை அன்றைய நிகழ்ச்சி நமக்கு நடத்திக் காட்டியது. நடிகர்திலகத்தைப் பற்றிச் சொல்வதானால் படம் படமாய் எழுதிக் குவிக்க ஏராளமாய் விஷயங்கள் உண்டுதான். அந்த மா மேரு மலையின் சாதனைகள் அளவிடற்கரியது. அணுவைப் பிளந்து எழுகடலைத் தன் நடிப்பில் புகுத்தியவர் அவர்.  அவரைப் போல் ஒருவர் இனி எந்த ஜென்மத்திலும் வரப்போவதில்லை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் இங்கே நினைக்கப்பட வேண்டிய பெருமை…!
                ---------------------------------------------------------------
    
    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...