03 நவம்பர் 2013

“இருந்தாலும் அவர்தான் பெஸ்ட்”- கட்டுரை (காட்சிப் பிழை மாத இதழ் அக்டோபர் 2013)

(எஸ்.வி.சுப்பையா)

images (1)
---------------------------------images ---------kalaikoyil -----------------------------
வர் இந்த வேடத்தில் நடித்தபிறகு, வேறு எவருக்கும் அது எடுபடவில்லை. பொருந்தவுமில்லை. நடிகர்திலகம் உட்பட. எப்படிச் சொல்லப் போச்சு? கொச்சையாக, முணுக்கென்று அவரது ரசிகர்களுக்குக் கோபம் வருமா என்ன? கொதித்தெழுவார்களோ? அப்படியெல்லாம் இல்லை. காரணம் அவர்களும் அதை அறிவார்கள். திறமையை மதிக்கப் பழகியவர்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கும் அத்யந்த சிறப்புக்களை அறுதியிட்டுப் பிரித்து உணர்ந்து ரசிக்கக் கற்றவர்கள். அப்படியான எல்லோரையும் போற்றி மதிக்கவும் தெரிந்தவர்கள். அதனால் உண்மையான, தரமான பகிர்ந்துரையாடலை முறையாய் எதிர்நோக்குவார்கள். அவர்கள்தான் இன்று எல்லோரும் மூத்த தலைமுறையினராய் ஆகிவிட்டார்களே? இப்பொழுது பேசி என்ன செய்ய? கேள்வி விழுவது காதுக்குக் கேட்கிறது. அவர்களைச் சொல்வதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, அந்தப் பழம் பெருமைகளை உணர்த்தியாக வேண்டியிருக்கிறது. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து இதை இங்கே செய்தாக வேண்டிய அவசியம் இருப்பதாகவே தோன்றுகிறது.
நவீன இலக்கியத்தில், எப்படி சு.ரா. அவர்கள் வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனைச் சிறந்த விவேகியாக மாற்றுகிறது என்று சொன்னாரோ, அதைப்போல பழைய திரைப்படங்கள் இன்றைய தலைமுறையினருக்குத் தரமான ரசனையையும், நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறமையையும், , கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், குடும்ப அமைப்பின் மேன்மைகளையும் போதிக்கும் தகுதி வாய்ந்தவை என்று சொல்ல வேண்டியதாகிறது.
ஒரு நிதானமான, சுபாவியான வாசகனாய் நின்று சற்றே உங்கள் சித்தத்தைக் கொஞ்சம் எனக்குக் கடன் கொடுங்கள். ஆர்வத்தோடு கடக்கும் வரிகளில் உங்கள் கண்களையும் சிந்தையையும் ஓட விடுங்கள். என்னதான் சொல்லுகிறான் பார்ப்போமே என்று கூடவேதான் வாருங்களேன்.
வைத்திருந்த தலைப்பாகை புஸ்ஸென்று உப்பியதுபோல் பெரிதாகத் தெரிந்தது. முறுக்கிய மீசை அளவில் சிறியதாக அமைந்து அதற்கான கம்பீரத்தைக் குறைத்தது. அதுவும் சேர்ந்து பேசினால்தான் அந்த மிடுக்கு. இதை அந்த வேஷத்தில் அவரிடம் உணர்ந்தவர்கள் இங்கே சற்றுச் சிணுங்கினார்கள். கற்பனை செய்து கோர்த்து, பாடலாய் எழுப்பும் வரிகள் லட்சியபாவத்தின் வீர்யத்தை விட, மென்மையையும், தன்மயமான நடிப்பின் அடையாளத்தையும் மட்டுமே முனைப்பாய்ப் பிரதிபலித்ததைச் சட்டென்று உணர்ந்து கொண்டார்கள். கண்களின் ஓரப் பார்வையும், பக்கவாட்டுத் திரும்புதலும், பாடலுக்கு ஏற்ற தலையசைப்பும், வைத்திருந்த மீசைக்கு உகந்த உதட்டோரச் சிரிப்பும், யாராக இருந்தாரோ அவரை முழுமையான, கம்பீரமான வீச்சோடு நூறு சதவிகிதம் முன் கொண்டு நிறுத்தாமல், அவரின் நடிப்புத் திறனை மட்டுமே முன்னிறுத்தி, பழகின ரசிகனுக்கு, அவராய்ப் பார்க்க வைத்து அந்தப் பாத்திரத்திற்கு ஒரு மெல்லிய புறக்கணிப்பை உண்டாக்கியது. இருந்தாலும் அவரது ரசிகர்கள் அதை வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்கினார்கள். நம்மவரை நாமளே விமர்சிப்பதா? என்று மனம் பொத்தி, கைதட்டி ஆரவாரித்து மேல் பூச்சுப் பூசினார்கள்.
அவரை விட நாம் இதை நன்றாகச் செய்திருக்கிறோமா, இல்லையா என்கிற சந்தேகத்தை, மனதுக்குள் அவருக்கே இவைகள் தோற்றுவித்தன. அவருக்குமே அப்படித் தோன்றி உறுத்தியிருக்கும்போது, காலகாலமான அவரது ரசிகர்களுக்கு நெருடாமல் இருக்குமா? சமைப்பவர்களைவிட, கைபாகத்தை உண்டு ரசித்தவர்களுக்குத்தானே தெரியும் சமையலின் வாய் ருசி? திறமையை மதிக்கப் பழக்கப்பட்டவர்களாயிற்றே அவர்கள்? அப்படிப்பட்டவர்கள், எல்லாமும் எங்களவரிடம் மட்டுமே சர்வானுபவ அடக்கம் என்பதாகக் கொள்வது கண்மூடித்தனமாகாதா? அறிவீலித்தனமாகி விடாதா? அதனால் அவர்கள் சொன்னார்கள் ஒன்று கூடி.
“இருந்தாலும் இதுல அவர்தான் பெஸ்ட்…ஒத்துக்கிறோம்…”
வெளிப்படையாய்ச் சொல்லித்தான் விட்டார்கள். பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்வதுதான் திறமைசாலிக்கு அழகு. அவரது படையினருக்கும் பெருமை. பேச்சு முடிந்ததய்யா அத்தோடு…!
இதே நிலை அவருக்கு இன்னொன்றிலும் ஏற்பட்டது. அது தொழுநோயாளி முதியவராக, ஒன்பதில் ஒன்றாக அவர் பாத்திரமேற்றது. உடம்பு முழுக்க மறைத்துப் போர்த்திய போர்வையோடு, எழுந்து நடக்க இயலாமல், மெல்ல மெல்ல நோவோடும் வேதனையோடும் நகர்ந்து செல்லும் காட்சி. பார்க்கவே பரிதாபமாய்த்தான் இருந்தது. எந்த மனிதனுக்கும் இம்மாதிரியான கேடு வரக்கூடாது என்று மனசு ஆதங்கப்பட்டதுதான். நல்ல வித்தியாசம் காட்டினார். மறுப்பதற்கில்லை. நடிப்பு உயிர்மூச்சாயிற்றே…! இருந்தாலும் ரத்தக் கண்ணீரை அடிச்சிக்க முடியாதுப்பா….என்றார்கள் இங்கேயும்.
முதல் போட்டியில் முதலாமவரே முந்தி நின்றார். இரண்டாவதிலும், அந்த வேறொருவரே முன்னிலை வகித்தார். . அது நியாயம்தான் என்று இவரும்தான் புரிந்து கொண்டார். அதுதான் பெருந்தன்மை. தன் திறமைமேல் நம்பிக்கை கொண்ட ஒருவனின் தர்க்க நியாயம். காரணம் அவர்களின் ஒன்று கூடிய நாடகப் பயிற்சி. தொழில் தர்மம். ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமை, முனைப்பு. அதில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரிக்க முடியாத நட்பும் அன்பும்.
அந்தவகையில் எல்லோராலும் ஒரு மனதாக, ஒன்று கூடிப் புரிந்து கொள்ளப்பட்டவர் திரு எஸ்.வி.சுப்பையா அவர்கள். அந்த இன்னொருவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, நடிகர்திலகம் அவர்கள். முன்னவர் இட்ட அந்த வேடம் தான் சுப்ரமண்யபாரதியார். பெயரை உச்சரிக்கும்போதே நமக்குள் ஒரு கம்பீரம் தொனிக்கிறதா? அதை அப்படியே கொண்டு வந்து கண் முன் நிறுத்தியவர் அவர். அந்தப் பளீரென்ற சிரிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? தீட்சண்யமான பார்வையைக் கணக்கிட்டிருக்கிறீர்களா? கண்டு அனுபவித்திருக்கிறீர்களா? நடிப்பிற்கு இலக்கணம் வகுப்பதற்காகவே இவர்களுக்கெல்லாம், இம்மாதிரியான சிரிப்பும், புன்னகையும், மென்னகையும், பார்வையும், நடப்பும், இருப்பும் கை வந்ததோ? வியந்துதான் போவீர்கள்.
நல்லா, பிரமாதமாப் பண்ணியிருக்காரேப்பா…இவர் படமெல்லாம் பார்க்கணுமே… ஆர்வம் துள்ளுகிறது என் மகனுக்கு. இதே எதிர்பார்ப்பு இன்றைய இளைய தலைமுறையினர் பலரிடமும் உள்ளதுதான். சகித்து, அமிழ்த்தி, உட்கார்த்தி வைத்துவிட்டால், பார்க்க ஆரம்பித்துவிட்டால், புரிந்து உணர்ந்து கொள்கிறார்களே…! நாம்தான் சொல்லியாக வேண்டும். வேறு யார் சொல்வது? உணரவைப்பது? தவறவிட்டவர்களுக்கு கண்டிப்பாக இது நஷ்டம்தான்.
ர்வ வல்லமையுள்ள, தெய்வத்தின் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் உண்மை…. என்று சொல்லித்தான் ஆரம்பிக்கும் அந்த நீதிமன்றக் காட்சி. அந்தக் காலத்தில் இதைக் கோர்ட் சீன், கோர்ட் சீன் என்று கொண்டாடுவார்கள்.
உமது பெயர்?
தமிழ்க்கவிஞன் சுப்ரமண்யபாரதி…
உமக்குத் தொழில்?
எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்…
சிதம்பரம்பிள்ளை, சுப்ரமண்யசிவா இருவரையும் உமக்குத் தெரியுமா?
சூரியனையும், சந்திரனையும் தெரியுமா என்று கேட்கிறீரே? இருவரும் எனது இரண்டு கண்மணிகள். இவர்களை இழந்தால் பாரதி பார்வையற்ற குருடனாவான்…
இவர்கள் பிரசங்கங்களை நீர் கேட்டிருக்கிறீரா?
நான் மட்டுமென்ன, நாடே கேட்டது, நல்லுணர்வு பெற்றது…
நீர் உமது இந்தியா பத்திரிகையில் அவற்றினை வெளியிட்டதுண்டா?
ஓ! அதைவிட வேறு வேலையென்ன இருக்கிறது எனக்கு? என்னுடைய பத்திரிகை மட்டுமல்ல. இந்தியாவிலுள்ள தலைசிறந்த பத்திரிகைகளெல்லாம் அதை வெளியிட்டன…
அது அரச நிந்தனையான பேச்சென்று இந்தக் கோர்ட் கருதுகிறது..
அவர்கள் அரசரைப் பற்றிப் பேசவேயில்லை. எங்கள் நாட்டைப்பற்றியும், அதன் வருங்கால மகத்தான எதிர்காலத்தைப்பற்றியும்தான் பேசினார்கள்..
அப்போது தடை உத்தரவு அமுலில் இருந்தது..அதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா?
ம்…பேசிக் கொண்டார்கள்…
அதை மீறுவது குற்றம். அதனால் ஆபத்து வரும் என்று நீர் உமது நண்பர்களுக்குச் சொன்னீரா?
சத்தியப் போர் செய்யும் சுதந்திர வீரர்கள் ஆபத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாமார்க்கும் குடியல்லோம்…நமலையஞ்சோம்…
உமது பத்திரிகையில் நீர் அரசாங்கத்தைத் தாக்கி எழுதியதால் உம்மை ஓர் ராஜத் துவேஷி என்று நான் குற்றம் சாட்டுகிறேன்…
கூறிக் கொள்ளும்…நன்றாக நானூறு முறை கூறிக்கொள்ளும்…அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை…
சரி…நீர் போகலாம்…
போகிறோம்…..!!!
போகிறோம் என்று கூறிக்கொண்டு கைத்தடியை ஒரு முறை உயர்த்தி மீண்டும் சத்தமெழ ஊன்றி கம்பீரமாய்ச் சிரித்துக் கொண்டே பாரதியார் வெளியேறும் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து விடும். கை தட்டல் பறக்கும் இந்தக் காட்சியில். ஒரே ஒரு காட்சியில் தோன்றினாலும் கூட படம் முழுக்க நினைக்க வைத்து விடுவார் தன் ஆழமான நடிப்பின் மூலம். பாரதியாராகவே வாழ்ந்திருப்பார் எஸ்.வி.சுப்பையா. அந்தப்படத்தில் இதைப்போல இன்னும் பல காட்சிகள் உண்டு அவருக்கு. அழுத்தம் திருத்தமாக மேற்கண்ட வசனங்களை அவர் பேசும் காட்சியும், அதற்கு அவர் காண்பிக்கும் முகபாவங்களும், கையசைவுகளும், உடல் மொழியும், இனித் தமிழ்த் திரைப்படக் காலத்தின் கடைசி நாள் வரைக்கும் இவர்தான்யா பாரதியார் என்று ஸ்தாபித்து, நினைக்க வைத்துவிட்டது எல்லோரையும். யாரேனும் மறுக்க முடியுமா இந்த உண்மையை?
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திற்கு சித்ரா கிருஷ்ணசாமி திரைக்கதை எழுதியிருந்தார். எஸ்.டி. சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். இன்னின்ன நடிகர்கள் இந்த இந்தப் பாத்திரமேற்கப் போகிறார்கள் என்று முடிவு செய்த பின்னால் அவர்களுக்கேற்ப எழுதப்பட்ட வசனமா? அல்லது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் போராட்ட குணமும், செயல் வீரமும் இவ்வாறிருந்தன என்று பறைசாற்றவென்றே அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்களா என்று நம்மை வியக்க வைக்கும். இரண்டில் எது முந்தியது என்று ஆராய்ந்தோமானால், நல்ல காய்கறிகளை, சுவையாய்ச் சமைத்துப் போட்டவர்கள் இவர்கள் என்றுதான் நாம் நினைப்போம். சுதந்திர எழுச்சியும், தேசப்பற்றும் அழியாமல் இருக்க வேண்டுமானால் இந்தப் படத்தை எல்லாப் பள்ளிகளிலும் தவறாமல் மாதம் ஒருமுறையாவது போட்டுக் காட்ட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன் நான். வெறும் வியாபாரத்திற்காக எடுக்கப்பட்ட படமல்ல இது. உண்மையான தேசப்பற்றின் மீது எழுந்த அழியாத சித்திரம். பி.ஆர். பந்துலு அந்த வழி வந்த அற்புதமான இயக்குநர்.
ய்யா பாரதி, போய்விட்டாயா? சுதந்திரம் வாங்காமல் சாக மாட்டேன், சுதந்திரம் வாங்காமல் சாக மாட்டேன் என்று அடிக்கடி கூறுவாயே அய்யா…எப்படியய்யா அதை மறந்தாய்? எப்படி மறந்தாய்? நீர்தான் கம்பன், நான்தான் சோழன் என்று அடிக்கடி என்னைக் கேலி செய்வாயே அய்யா. திலகர் மறைந்தார், அரவிந்தர் துறவியானார், நீ அமரனாகிவிட்டாயா? ஐயோ…எல்லோரும் என்னை இப்படித் தனி மரமாக்கித் தவிக்க விட்டுப் போய்விட்டீர்களே…” என்று முதுமையில் சிதம்பரம்பிள்ளை தன் வீட்டில் அமர்ந்து புலம்பும் இந்த உருக்கமான காட்சியில் சுவற்றில் மாட்டியுள்ள பாரதியின் படம் உயிர்பெற்று பிள்ளையைப் பார்த்துக் கண்ணீர்விடுவதுபோலவும், இடது தோள் தலைப்பாகைத் துணியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் படமாய்க் காட்சி ரூபமாவது போலவும் வரும் இக்காட்சியில் கரையாதவர் மனம் உண்டா? தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுகாதவர்தான் யார்?
கப்பலோட்டிய தமிழன் வெளிவந்த புதிதில் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை அப்படம். பெரிய ஏமாற்றமாய் முடிந்தது. சிவாஜிக்கே அதை அவர் பலரிடத்திலும் சொல்லி வாழ்நாளெல்லாம் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு மனத்தாங்கலாகிப் போனது. நியூஸ் ரீல் போலிருக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள். ஆனால் ஒன்று. அத்தனை கடுமையான உழைப்பில் அப்படி ஒரு படத்தை எடுப்பது என்பது யாராலும் இயலாது. உண்மையான தேசப்பற்று இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. வெறும் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல அது. காலத்துக்கும் காக்கப்பட வேண்டிய ஆவணப் பெட்டகம்.
இப்பொழுது இப்படத்தைப் பார்ப்பவர்கள் அப்படித்தான் உருகிப் போகிறார்கள். எப்படியெல்லாம் அச்சு அசலாக, வாழ்ந்திருக்கிறார்கள் என்று பிரமிக்கிறார்கள். இன்றும் இப்படம் பற்றி அறியாத இளைய தலைமுறையினர் பலர் உண்டு. எப்படி ஒரு கர்ணன் வந்து மீண்டும் வெற்றிக்கொடி நாட்டியதோ, அதேபோல் இந்தப்படமும் தற்போது வெளியிடப்பட்டால் அதே அளவுக்கான வெற்றியை ஒரு வேளை சந்திக்கத் தவறினாலும், நஷ்டம் ஏற்படுத்தாமல், ஒரு நல்ல காரியத்தை இந்த நாட்டிற்குச் செய்தோம் என்கிற திருப்தியையும், நிறைவையுமாவது நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
எஸ்.வி.சுப்பையாவைப்பற்றியதான இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே அவரது இந்தப் பாரதியார் நடிப்பைப்பற்றிப் பேசித் துவக்கியதற்குக் காரணம் அவரைப் நினைப்போர் எவராயிருந்தாலும், முதலில் அவர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது இந்தப் பாரதியார் வேடமும், நடிப்பும், அதன் அருமையான சித்தரிப்பும்தான். அதற்குப் பின் எல்லோருக்கும் பாரதியார் என்றால் சுப்பையாதான் நினைவுக்கு வந்தார். இன்றைக்கும் அது தொடரத்தான் செய்கிறது. அத்தனை ஆழமான அழியா முத்திரை அது. இதேபோல் அவருடைய அத்தனை படங்களிலும் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரம் அனைத்திற்கும் உயிர் கொடுத்து உலவ விட்டிருப்பவர் அவர். நடிப்பைப் பிழைப்பாகச் செய்தவர்கள் அல்லர் அந்தக் கால நடிகர்கள். அதை ஆத்ம நிவேதனமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். உயிருக்கு இணையாகப் போற்றிப் பாதுகாத்துப் பொக்கிஷமாய் நின்றார்கள்.
1946 லேயே விஜயகுமாரி என்ற திரைப்படத்தின் மூலமாய் நடிக்க வந்து விட்டவர் என்று ஒரு செய்தி காணக் கிடைக்கிறது. சக்தி நாடக சபா, டி.கே.எஸ். நாடகசபா என்று நாடகங்களில் நடித்து, 1950 க்குப் பிறகு சிறு சிறு வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களான எம்.ஆர்.ராதா, பாலையா, நாகையா, எஸ்.வி.ரங்காராவ் இவர்களின் வரிசையில் மிக முக்கியமானவராய்த் திகழ்ந்தவர் எஸ்.வி.சுப்பையா அவர்கள். அப்படியான திறமையான நடிப்பை வெளிப்படுத்திய படம்தான் பாதகாணிக்கை. நமச்சிவாயம்பிள்ளை என்கிற அந்தக் கதாபாத்திரத்தில் வந்து பெரியமனுஷத் தன்மையோடு கம்பீரமான ஆகிருதியாய், நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையுமாய், நரைத்து முறுக்கிய மீசை, பெரிய குங்கும சந்தனப்பொட்டு, காதில் கடுக்கன், முழுக்கைச் சட்டை, பஞ்சகச்சம் என்று படுபொருத்தமாய், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, வெளுத்து வாங்கியிருப்பார் சுப்பையா. அவரது கம்பீரமான தோற்றமும் அந்த அனுபவமான நடிப்பும் யாராலும் மறக்க இயலாதது. எல்லோராலும் ஏறக்குறைய மறக்கப்பட்டுவிட்ட அந்தப் படம் தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. அதிலுள்ள வீடுவரை உறவு, வீதிவரை மனைவி…என்ற பாடல் மட்டுமே இன்றுவரை நினைவில் உள்ளது. அந்தக் காட்சியில் நொண்டியாய் நடிக்கும் அசோகனைக் கூட ஏறக்குறைய எல்லோரும் மறந்துதான் விட்டார்கள். இம்மாதிரிப் பல முக்கியமான படங்கள் மூத்த தலைமுறை ரசிகர்களாலேயே மறக்கப்பட்டும், திரையரங்குகள், தொலைக்காட்சிகள் இவைகளும் மறந்து போய், அப்படங்களுக்கான படச்சுருள்கள் இருக்கின்றனவா இல்லையா என்கிற ஏக்கத்தை எப்பொழுதும் மூத்த ரசிகனின் மனதில் இன்றும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாகப் பாகப்பிரிவினை, பாலும் பழமும், பாவ மன்னிப்பு, இரும்புத் திரை, மங்கையர் திலகம், கப்பலோட்டிய தமிழன், பொன்னூஞ்சல், நீதி போன்ற படங்கள். ஜெமினிகணேசனுடன் நடித்த “காலம் மாறிப் போச்சு” திரைப்படம்தான் இவருக்குத் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.
நடிப்பை விடத் தன்னை ஒரு தேர்ந்த விவசாயியாகப் பிறர் அறிவதைத்தான் பெருமையாகக் கருதியிருக்கிறார் என்று அறிகிறோம். சென்னைக்குச் சற்றுத் தள்ளியிருக்கிற காரனோடை என்கிற சொந்தப் பண்ணை இடத்தில் உள்ள அவரது நிலத்தில்தான் உழுது விவசாயம் செய்திருக்கிறார். தன்னை ஒரு நடிகன் என்று பார்ப்பதை விட விவசாயி என்று கொள்வதையே பெரிதும் விரும்பியிருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்குதான் இருந்து கழித்திருக்கிறார். பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், விரதம் இருப்பார் என்றும், காபி, டீ அருந்துவதில்லை என்றும் கூழ் மட்டுமே கொண்டு வந்து குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும் அறிகிறோம். சிவாஜியோடு சேர்ந்து நடித்த நானே ராஜா என்ற திரைப்படத்தைப் பழைய தலைமுறையினரே பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். அதிலே சுப்பையாதான் வில்லன். முகத்திலுள்ள கள்ளமும், கோபமும், வன்மமும், ரகசியமான பழிச்சிரிப்பும் கலந்த அவரது முரணான நடிப்பு நம்மை அவர் மீது அப்படி வெறுப்பு கொள்ளச் செய்யும். அந்த அளவுக்கு சின்சியராக அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கூடவும் சில படங்களில் நடித்திருக்கிறார். பணத்தோட்டம், இதயக்கனி, தாலி பாக்கியம் என்று. கண்கண்ட தெய்வம், ஆதிபராசக்தி, சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், இன்னும் பல படங்கள் உண்டு., அரங்கேற்றத்தின் அய்யர் கதாபாத்திரத்தை யாரேனும் மறக்க முடியுமா? இல்லை நத்தையில் முத்து வரதாச்சாரி காரெக்டரைத்தான் விட்டு விட முடியுமா?
ஆதிபராசக்தியில் அபிராமிப் பட்டராக எத்தனை அழுத்தமான நடிப்பைக் கொடுத்தார். இவர் பாடினா அமாவாசை அன்னைக்கு என்ன, எந்த நாளிலும் நிலவு வரத்தான்யா செய்யும் என்பதுபோலல்லவா இருந்தது அந்த நடிப்பு. சொல்லடி அபிராமி பாடலை யாராலேனும் மறக்க முடியுமா? டி.எம்.எஸ். தன் கணீர்க் குரலை இவருக்குக் கொடுத்திருந்தாலும், அந்த இடத்தில் அந்தப் பாத்திரம்தானே நின்றது…! ஏதோவொருவகையில் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளுக்காக, அந்தக் கதாபாத்திரத்திற்காக, அந்தத் திரைப்படத்தைத் திரும்பவும் பார்க்கத் தூண்டும் எழுச்சியை ஏற்படுத்தினார்கள் அந்தக் கால நடிகர்கள். அதில் சுப்பையா மிக முக்கியமானவர் என்றால் மிகையாகாது.
ஜெமினிகணேசனுடன் நடித்த மணாளனே மங்கையின் பாக்கியம், பார்த்திபன் கனவு, அதில் ஓடக்காரப் பொன்னனாக வரும் அவரது நடிப்பு, ஏ.வி.எம்.மின் ராமு திரைப்படத்தில், புத்தி பேதலித்தவராகக் காட்டில் திரிந்து கொண்டிருக்கும் பைத்தியமாக வரும் அவரது நடிப்பு, இதையெல்லாம் நம்மால் அத்தனை எளிதில் மறந்துவிட முடியுமா?
பாவ மன்னிப்புப் படத்தில் ஃபாதர் ஜேம்ஸ் கேரக்டரில் எத்தனை கச்சிதம்? அண்ணா, அண்ணா என்று எம்.வி.ராஜம்மா அவரிடம் வந்து பாசத்துடன் பேசும் காட்சிகளும், அதற்கு சற்றும் குறையாத நேசத்துடன் அவர் பதிலுரைக்கும் தன்மையும், மறந்துவிடக் கூடிய காட்சிகளா அவைகள்? ஃபாதர் ஜேம்ஸ் அவர்களிடம் டிரைவராக பாலையா போய்ச் சேர்வார். இதையே பாகப்பிரிவினை படத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அந்தப் பெரிய குடும்பத்தின் தலைவனாக இருப்பார் பாலையா. அருகில் மரியாதையான தம்பியாய் சுப்பையா நிற்பார். மனைவியாக எம்.வி.ராஜம்மா நடிப்பார். ஒரு குறிப்பிட்ட நடிகர்களையே அடுத்தடுத்த படங்களில் பார்த்திருந்த போதும், அந்தந்தக் கதாபாத்திரங்களாகவேதானே பார்த்தோம். இது பொருத்தமாயில்லையே என்று ஏதாவது ஒன்றில் தோன்றியிருக்கிறதா? எப்படிப் படத்துக்குப் படம் அப்படி உரு மாறினார்கள்? எந்த வாழ்க்கை அனுபவம் அவர்களுக்குக் கை கொடுத்தது? எது அவர்களது உடல்மொழியை மாற்றியது? என்னதான் இயக்குநர் கதை சொல்லி, காட்சிகளை விவரித்தாலும், இயக்கினாலும், இந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு அவற்றை முழுமையாக உள்வாங்கி, இப்படியா அதாகவே வாழ முடியும்? வாழ்ந்தார்களே…!
பாலும் பழமும் திரைப்படத்தில் சிவாஜியை வளர்த்த தந்தையாக வருவாரே?
ஊரிலிருந்த வந்த டாக்டர் ரவி, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, ஆதுரமாகக் கையைப் பிடித்துக் கொண்டு, முகத்தில் மகிழ்ச்சியும் மரியாதையும் பொங்க, அய்யா….நல்லாயிருக்கீங்களா? என்று ஆவலாய்க் கேட்க, அந்த மரியாதையையும், அன்பையும், பாசத்தையும் புரிந்து கொண்ட பெரியவராய்….அவர் தலையைத் தடவியவாறே….பாசம் பொங்கச் சிரித்துக் கொண்டே, “நல்ல்ல்லா இருக்கேன்….”என்று அழுத்தமாக அவர் சொல்லும் அந்த ஒரு காட்சி போதுமே…மொத்தப் படத்திற்கும்…..
பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்குத் தம்பியாய் வரும் பாத்திரம் என்ன சோடை போனதா? கிராமத்தான் என்றால் அசல் கிராமத்தான் தோற்றான் போங்கள்….அந்தப்படத்தில் எவரையேனும் அப்படி நாக்கு மேல் பல்லுப்போட்டு ஒரு குறை சொல்லி விட முடியுமா? அவருக்குப்பின் அந்தப் பாத்திரத்தில் நாம் வேறு யாரையேனும் நினைத்துப் பார்க்க முடியுமா? அது அவரது உண்மையான நடிப்பிற்குச் செய்யும் துரோகமாகாதா?
இரும்புத் திரை படத்தில் சிவாஜிக்கு அண்ணன் சரவணனாக வந்து, விளாசுவாரே நடிப்பில். அப்பா, சித்தப்பா வந்திருக்காங்க….என்று பையன் மில் வாசலுக்கு வந்து சொல்ல, அப்டியா….? என்று சந்தோஷம் பொங்க அந்தச் சின்னப் பையன் கன்னத்தில் தட்டிக் கொண்டே ஆவலாய் வீடு வரும் காட்சியும், பாசம் பொங்க இருவரும் கட்டிக் கொள்ளும் காட்சியும் கண்ணில் நீர் வராதவர் யார்? ஒரு சினிமாப்படத்தில் இத்தனை தத்ரூபமா? சொந்த வாழ்க்கையின் ஒரு குடும்பம் போல், அண்ணன் தம்பிகள் போல்….எப்படி இவர்களால் இப்படி வாழ முடிகிறது. வெவ்வேறு நாட்களில், மாதக் கணக்கில் படப்பிடிப்பு செய்யப்பட்ட ஒரு கதையில், மொத்தப் படத்திற்கும் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், வித்தியாசம் தெரியாமல், தொடர்ச்சி குன்றி விடாமல், அந்தக் கதாபாத்திரமாகவே எப்படி வாழ்ந்தார்கள்?
இத்தனை வருஷமா உன் காலடியிலேயே நாயாட்டமா கெடந்தனேய்யா…எந்தம்பி உன்னைப் பத்திச் சொன்னதெல்லாம் சரியாத்தான்யா போச்சு..எந்தம்பியப் பத்தி எதாச்சும் பேசினே….என்றவாறே ரங்காராவின் கோட்டை இழுத்துப் பிடித்துத் தொங்குவாரே…அந்தக் காட்சி ஞாபகமிருக்கிறதா?
எல்லாக்குழப்பமும் தீர்ந்து, முதலாளி ரங்காராவ் கடைசியில் திருந்தி, தன் மகள் வைஜயந்திமாலாவை சிவாஜிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கையில், அந்தக் கல்யாண ஊர்வலத்தில் இரு குடும்பத்தாரும் எதிரெதிரே வந்து நின்று மணமக்கள் இவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு, முதலாளியை நோக்கி ஒரு பணிவான சிரிப்போடு பவ்யமாய் அடியெடுத்து வந்து, ரங்காராவைப் பதமாய்க் கட்டிக் கொள்வாரே, அந்தக் காட்சியை மறந்து விடுவீர்களா யாரும்?
சின்னச் சின்னக் காட்சிகள்தான் எனினும், அதனை எடுத்த விதமும், அதற்கென அமைந்த நடிகர்களும், இயக்குநர்கள் நினைத்து, கற்பனை செய்த அளவுக்கு மேலும் அல்லவா உயர்த்திக் காட்டினார்கள்?
தன் வாழ்நாளில் மதிப்பு மிக்க ஒரு நடிகராகவே இருந்து பிரிந்த எஸ்.வி.சுப்பையா அவர்கள் கடைசியாக ஒரு சொந்தப் படம் எடுத்தார். அதற்குக் கூட நட்பின் காரணமாக சிவாஜி அவர்கள் ஊதியம் பெற்றுக் கொள்ளவில்லை என்ற நல்ல செய்தி நமக்குக் கிடைக்கிறது. இன்னொரு பிறவியில்தான் அவருக்கு என் கடனை அடைக்க வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினாராம் சுப்பையா அவர்கள்.
அது ஒரு வெற்றிப்படம். அமைதியான, அழகான, அடக்கமான படம். அந்தப் படத்தில் பனைமரமேறும் சாமுண்டியாக நடிகர்திலகம் நடித்திருப்பார். சுப்பையா அண்ணன் மேல் கொண்ட மதிப்பின் காரணமாக, உயர்ந்த மனிதன் படத்தில் அப்போது நடித்துக் கொண்டிருந்த நடிகர்திலகம் அவர்கள், ஏ.வி.எம். நிறுவனத்தில் பர்மிஷன் வாங்கிக் கொண்டு இடையிடையில் வந்து தாமதமின்றி முடித்துக் கொடுத்தாராம். அவ்வளவு மதிப்பு, மரியாதை.
காவல்தெய்வம் என்ற அந்தப்படத்தை மூத்த தலைமுறையினரே பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சிவகுமார், லட்சுமி நடித்தது. இப்போது எங்கேனும் வந்தால், கிடைத்தால் தவறாது பார்த்து விடுங்கள். ராகவன் என்கிற ஜெயிலர் காரெக்டர் சுப்பையாவுக்கு.
எப்படி அந்தப் படத்தின் வித்தியாசமான நடிகர்திலகத்தின் சாமுண்டி வேடத்தை நீங்கள் மறக்க முடியாதோ, அதேபோல் எஸ்.வி.சுப்பையா அவர்கள் ஏற்றுக் கொண்ட ஜெயிலர் வேடத்தையும் கண்டிப்பாக நீங்கள் மறக்கவே முடியாது. அத்தனை நிதானமான, மனிதத் தன்மையுடன் கூடிய, அன்பும், கண்டிப்பும் பொழியும் ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தை மிகுந்த தன்னம்பிக்கையோடு ஏற்று, மிடுக்காக, பாந்தமாக, நிறைவாகச் செய்து முடித்திருப்பார். ஜெயிலர் என்றவுடன் கைதி கண்ணாயிரம் படத்தில் வந்த ஜாவர் சீத்தாராமனை உங்களுக்கு ஞாபகம் வரக்கூடும். அது, அவர் பாணியில் ஒருவகையான நடிப்பை அதில் வெளிப்படுத்தியிருப்பாரென்றால், இது என்னுடைய தனிப்பட்ட வகை நடிப்பு, எதனோடும் சேராதது, ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது, என் வழி தனி வழி என்று தன்னைக் கம்பீரமாக முன்னிறுத்திக் கொண்டிருப்பார் எஸ்.வி.சுப்பையா. அவரது இந்தப் படத்திற்கு எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தன் அவர்கள்தான் கதை வசனம் என்பதை எல்லோரும் அறிவர். அவரது கைவிலங்கு நாவல்தான் காவல்தெய்வமானது என்பதும் அறியப்பட்ட ஒன்று.
மனதிற்குப் பிடிக்காத வசனங்களை, நீக்கி விடுங்கள் என்று சொல்லும் திடம் எஸ்.வி.சுப்பையாவிடம் இருந்திருக்கிறது. அது எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கான தரமான உயரத்தில்தான் தன்னை வைத்துக் கொண்டு இந்தத் தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்திருக்கிறார் திரு எஸ்.வி.சுப்பையா அவர்கள் என்பதை அறிய முற்படும்போது நமக்கு முன்னோடியான அந்த அற்புத நடிகரின் விசேஷமான குணாதிசயங்களை நாமும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பின்பற்ற முயற்சிக்க வேண்டும் என்கிற வகையிலான முனைப்புத் தோன்றுவதுகூட நியாயம்தானே…! ----------------------------------ushaadeepan@gmail.com

04 செப்டம்பர் 2013

03.09.2013 மதுரை புத்தகத் திருவிழா (தமுக்கம் கலையரங்கில்) வில் என்.சி.பி.எச் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட எனது 12-வது சிறுகதைத் தொகுப்பு ”தவிக்கும் இடைவெளிகள்”

தவிக்கும் இடைவெளிகள் - படம்
இதுவரை வெளிவந்துள்ள மொத்தம் 12  புத்தகங்களில், இரண்டு குறுநாவல் தொகுப்புகள் போக, மீதமுள்ளவற்றி  ல் 10 வது சிறுகதைத் தொகுப்பு இது.      

”தவிக்கும் இடைவெளிகள்”----சிறுகதைத் தொகுப்பு-----ஆசிரியர்---உஷாதீபன்.
                   செய்யாறு தி.தா.நாராயணன்.
            

எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ,பொழுதை கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா…!..எனக்கு மூச்சு முட்டுகிறது.. ஆமாம் ஜீவனத்துக்கு என்ன பண்ணுகிறாராம்?. ஒரு சின்ன கரு போதும் அவருக்கு, அந்த சின்ன புள்ளியை வைத்தே வாசல் முழுக்க வியாபித்துவிடும் பிரமாண்டமான அழகிய கோலமாக்கிவிடுவார் நேர்த்தியாக. இத்தொகுப்பில் இவருடைய எழுத்தில் பரவலாகத் தெரியும் தனித்தன்மை பற்றி நான் சொல்லியாக வேண்டும்.
“நியாயம் என்றால் எது நியாயம்? உங்களுக்கு நியாயமானது                                             மற்றவங்களுக்கும் நியாயமாக தோணனும்னு அவசியமா?.கட்டாயமா?. .                               மனுஷாளுக்கு மனுஷாள் மாறுபடாதா?. குணநலன்களை வச்சிதானே மனநிலை?..”--------இப்படி ஒரு பத்தி பூராவும், ஒரு பக்கம் பூராவும், ஏன் கதை முழுக்கவும் கேள்விகளாகவே, அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் பதில் என்று இவரால் எப்படி எழுத முடிகிறது? என்று வியப்பாக இருக்கிறது. கேள்விகளிலேயே சுவாரஸ்யமான ஒரு கதையும் வந்து விடுகிறது, அதில் ஒரு ஆழமும் கிடைத்து விடுகிறது. அப்படிப்பட்ட திரு உஷாதீபன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றை NCBH வெளியிட்டிருக்கிறது.
“தவிக்கும் இடைவெளிகள்”---இது மேற்படி சிறுகதைத் தொகுப்பின் பெயர். 19 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. படிக்கும்போதே தெரிகிறது ஒரு சிறுகதை எழுதுவதற்கான தந்திரங்கள் அத்தனையும் இவருக்கு பிடிபட்டுள்ளன.. முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகிற வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை, காலத்தை துண்டாக நறுக்கித் தருவதுதான் சிறுகதை என்கிற சிறுகதைகளுக்கான இலக்கணத்தில் உஷாதீபனின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒட்டிக் கொள்ளுகின்றன.. அவற்றில் உயிர்த்துடிப்பும்,மனங்களின் சுழற்சியும், விசாலமும், கண்ணீர் தெறிப்பும், சிரிப்புகளும், உறைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும், இது என் கதைதான், என் வீட்டில் இப்படித்தான் நடக்கின்றன, என்று நமக்கு தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. அத்தனையும் நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கைகளே.
ஐம்பது காசை ஏமாந்து விடுவோமோ என்ற தவிப்பு, சொல்லவும் முடியாத கூச்சம், அப்படியே நடுத்தர வர்க்க மனிதர்களின் இயல்பை `மனக்கணக்கு’ கதையில் வடித்து விடுகிறார்,
`சுப்புண்ணா’ கதையில் மனம் பேதலித்த மகனை பராமரிக்கும் ஒரு குடும்பம். அவர்கள் படும் வலிகள், ஊடே அவன் முரட்டுத்தனமாய் எதையும் செய்வானோ என்கிற அச்சம். முடிவு அதிர்கிறது. செட்டான விவரிப்பு.
மரணம்..?ஒருவருடைய மரணத்தில் அவரோடு வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ,சுவாரஸ்யங்களை அசைபோட்டு, சொல்லிச் சொல்லி அழுவது இயல்பு. அவற்றை நோகநோகச் சொல்கிறார்.  `செத்தும் கொடுத்தார் சித்தப்பா” கதையில்
`சபாஷ் கணேசா’ நாம் அங்கங்கே பார்க்கக்கூடிய ஒரு மனிதர். ஏன் அது நாமாகக் கூட இருக்கலாம்.Vegabond. ஒரு வேலை செய்யாமல் கெத்தாக திரியும் மனுஷன். சரி இவரிடம் என்ன கதை இருக்கிறது?.இருக்கிறதே.கடைசியில் ஒரு உன்னதமான காரியம் செய்து பிறருக்காக வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தமே இருக்கிறது என்பதில் நமக்கு ச்சே! என்று மனங்குளிர்ந்துபோகிறது..

நாக்கு என்றொரு கதை என்னை நெகிழ வைத்து விட்டது. பொதுவாகவே வயசான தாத்தா பாட்டிகள் பேரனுக்கு தின்பண்டங்களை ஊட்டும்போது  தானும் ஒரு வாய் போட்டுக்கிறதுதான். நாலு பிஸ்கட் பையனுக்கென்றால் ஒண்ணு பாட்டிக்கு. அதற்குக் காரணம் அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க தன் பிள்ளைகள் சாப்பிடணும்னு தன் வேட்கையை அடக்கிக் கொண்டவர்கள். இப்போது வில்பவர் போன பின்னால் ஆசையை அடக்க முடிவதில்லை. அப்படித்தான் காலம் முழுக்க தான் வாழ்க்கைப்பட்ட  தன் பெரிய குடும்பத்திற்கு விதவிதமாக செய்துப் போட்டு, தானும் சாப்பிட்டு மகிழ்ந்த மரகதம் பாட்டிக்கு நாக்கு நீளம் என்று மருமகள் திட்டுகிறாள். தன் கணவரின் வருடாந்திர திதிக்காக தன் எதிரில் மருமகள் சுட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் வடையும், மொறுமொறு அதிரசமும் அவளுக்கு வாயில் நீர் சுரக்க வைக்கிறது.. சாப்பிடு என்று கணவனே சொன்னதைப் போல் மானசீகமாய் உணர்ந்து, ஒரு அதிரசத்தை எடுத்து கடிக்க பேரன் போட்டுக் கொடுத்து விடுகிறான்.அதைத் தொடர்ந்து நடக்கும் ஏச்சுக்கள். நம் கண்கள் கலங்கி விடுகின்றன. சம்பவங்களும் சொன்ன நேர்த்தியும் மனசைப் பிழிகிறது..
இன்னொரு கதை `சுயம்’—கொஞ்சம் விவகாரமான விஷயம். கறவல் மாடுகளை வைத்துக் கொண்டு அவைகளே தன் உலகம் என்று வழ்ந்து வரும் பரமேஸ்வரன், மின்சாரத் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். பாட்டு டீச்சரான அவர் மனைவி கொஞ்சகால யாருடனோ வாழ்ந்து விட்டு திரும்பி வந்தவள் என்கிற விஷயம் மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகிறது. இந்தாளுக்கு புத்தியில்லே என்றெல்லாம் விமர்சனங்கள். ஆனால் முடிவில் அதிலிருந்து விலகி, அதிலுள்ள இன்னொரு கோணத்தைக் காட்டும் கொச்சையில்லாத செக்ஸ் கதை.
`இனம்’ என்றொரு கதை குட்டித் துணி தலையணையைத் தோளில் இருத்தி அதன் மேல் தையல் மிஷினை ஏற்றி,தெருத்தெருவாய் சுற்றி தைக்கும் தொழிலாளி ஆறுமுகம் வேலையில் சுத்தம், நேர்மை போன்ற அவன் பண்புகளால் அந்தக் குடும்பத்தலைவனை ரொம்பவே பாதித்தான். அவன் மீது இரக்கம் கொள்ளும் கணவன் அவனுக்கு பேங்க் லோனுக்கு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கிறான். மனைவி உபத்திரவம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள். கையறு நிலை. அவன் வாழ்வு மேம்படாதா? என்று நினைக்கிறார். ஒருநாள் ஆறுமுகம் வந்து நன்றி சொல்லுகிறார். உங்களால்தான் கஷ்டமில்லாமல் நாலு ஊர்களுக்குப் போய் சம்பாதிக்க முடிகிறது என்கிறான். பார்த்தால் தான் ஸ்கூட்டர் வாங்கியபின் உபயோகமில்லாமல் கிடந்த தன்னுடைய பழைய சைக்கிளை மனைவி தூக்கி அவனுக்கு இனாமாக கொடுத்து விட்டிருக்கிறாள். அவளுடைய மன விசாலத்தைக் கண்டு அவருக்கு குபீரென்று பூரிப்பு. கூடவே லேசாய் ஒரு உறுத்தல் தனக்கு அந்த யோசனை வரவில்லையே என்று.. கதையின் கட்டுக்கோப்பும், நடையும்…நான் ரசித்துப் படித்தேன்.
வயதான தாயை பராமரிக்கும்போது நுணுக்கி நுணுக்கு எத்தனை விஷயங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது. படித்து முடிக்கும்போது வாழ்ந்து முடித்த நிறைவு ஏற்படுகிறது. உணர்வுகள் கதையில்.
பையனை பொறுப்புடனும், தன் பணியில் ஒரு ஈடுபாட்டோடு செய்ய வேண்டுமே என்ற கவலையோடு, மகனுக்கு கற்றுத்தரும்( திட்டி)  தந்தையும், அவனை ஏன் சும்மா திட்றீங்க என்று மகனுக்காக மல்லுகட்டும் மனைவியும் அச்சு அசலாய் என் வீட்டில் நடக்கிறது. ஏன் எல்லாருடைய வீடுகளிலும் தான்.இது `கேள்விகள்’ கதை.
விட்டதடி ஆசை என்ற கதையில் கல்யாண்மாகி புதுக்குடித்தனம் போக வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் போது, அங்கே எதிர் போர்ஷன் பெண் பலவீனப்பட்டு சிருங்கார சமிக்ஞை காட்டுவதும், அதைப் பிடிக்காத அந்த ஆண் ஒதுக்கிவிட்டு வெளியே வந்து விடுதலும் சற்று வலிந்த கற்பனையாய் பட்டது. முதல் பார்வையிலேயே ஒரு பெண் அந்தளவுக்கு இறங்கி வருதலும்,இளைஞனான அவன் கொஞ்சமும் சலனப் படவேயில்லை என்பதில் சற்று மிகை தெரிந்தது.              
தவிக்கும் இடைவெளிகள் என்ற கதை அருமை…அருமை…மனம் லயித்தது. சாஃப்ட்வேர் அடிமைகளாக சேர்ந்து, கைநிறைய சம்பாதித்து, கெத்தாக திரியும் மகன்களைக் கொண்ட தகப்பன்களுக்கெல்லாம் ஏற்படும் அனுபவம். அட்வைஸ் தருவதால் மகன்களிடம் செல்லாக் காசாகிவிடும் தகப்பன்கள். ஆனால் எந்த  மனைவியும் அட்வைஸ் தருவதில்லை. பச்சோந்திகளாய் கட்சிமாறி அவனுடன் அரட்டையடிக்கப் போய் பிள்ளைகளுக்குப் பிடித்த அம்மாவாக இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளி.
           இப்படி இவருடைய கதைகளில் மத்தியமர்கள்தான் உலாவருகிறார்கள். கேள்விகளின் மூலம் சுவாரஸ்யமாய் போதிக்கிறார்கள். வாழ்க்கைப் பாடத்தை கற்றுத்தருகிறார்கள். படிக்கும்போதே வாழ்ந்த நிறைவு. தமிழ் சிறுகதைகளுக்கு இத்தொகுப்பு  ஒரு ப்ளஸ். இன்னொரு ப்ளஸ் அதன் இலக்கியத்தரம். வாசகர்களுக்கு என் அப்பீல், இதை வாங்கிப் படியுங்கள்.



  
           

17 ஆகஸ்ட் 2013

“வெட்டி ஆபீசர்”–தளம் கலை-இலக்கியக் காலாண்டிதழில் (ஜூலை–செப் 2013) எனது சிறுகதை.



 

 


 
மீசை முருகேசன் இன்று மீசையை மழித்திருந்தான். ஐநூறு கி.மீ. தள்ளி வந்து இங்கு இப்படி உட்கார்ந்திருப்போம் என்று நினைக்கவேயில்லை. அன்றைய நிலவரப்படி அவன் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது.அப்படிப் பார்த்தால் அவன் ஊரை விட்டு வந்தே இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிப்போனது. எங்கெங்கோ சுற்றிவிட்டு அப்படி அப்படியே வந்து கொண்டிருக்கிறான் ஒரு நாடோடியைப்போல.
சொல்லப் போனால் இன்றைய தேதியில் அவன் ஒரு அசல் நாடோடிதான். அவனுக்கென்றுதான் யாருமேயில்லையே? இருக்கும் சொந்தங்களும் உதறிவிட்ட பின்பு அவர்களை எப்படி இன்னும் நெருக்கமாக நினைத்துக் கொண்டிருப்பது? ஏதோவோர் விரக்தியில் அவன் இப்படிக் கிளம்பியிருந்தான். விரக்தியென்ன? தான் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன? யார்தான் கண்டு கொள்ளப் போகிறார்கள்? செத்தால், தான் ஒரு அநாதைப் பிணம்தான். எனக்கென்றுதான் எந்தவொரு முகவரியும் இல்லையே? முகவரி இல்லாதவன் தன்னுடைய பயணத்தை மட்டும் எப்படி வரித்துக் கொள்ள முடியும்? அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யார் கவலைப் படப் போகிறார்கள்? இன்னைக்கு இங்கே போகிறேன், அப்டியே நாளைக்கு அந்த ஊருக்குப் போயிட்டு நாளைக் கழிச்சு ஊருக்கு வந்துடுவேன் என்பதுபோல் யாரிடம் அவன் சொல்ல வேண்டும்?
பாண்டிச்சேரி போய்விட்டு அந்த ரூட்டில் சென்னையை நோக்கி வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. நீளநெடுஞ்சாலைல நெட்டுக்க அப்டியே போகவேண்டிதான் என்று சொன்னார்களே என்று அதையும்தான் பார்ப்போமே என ஏறி உட்கார்ந்து விட்டான். பிறகுதான் அவனுக்கே தெரிந்தது. எதுக்கு இறங்குவானேன் என்று ஒரு ஆயாசம். ஒரு மணி நேரப் பிரயாணத்திற்குப் பின் மனதில் அந்த எண்ணம் உதித்தது. வண்டியை ஒரு அத்வானக் காட்டில் நிறுத்தினார்கள். சுற்றிலும் வெறும் பொட்டல். கண்ணுக்கு எட்டிய வரை. சர் சர்ரென்று வண்டிகள் ஒன்று மாற்றி ஒன்று போகவும் வரவுமாய் இருந்தன. டிபன் சாப்பிடச் சென்றவன் வேண்டுமென்றே அப்படியே இருந்து விட்டான். கண்டக்டர் சுற்று முற்றும் அரக்கப் பரக்கப் பார்ப்பது சாப்பிடும் இடத்திலிருந்து தெரிந்தது. சார் போகலியா என்று யாரோ அவனைக் கேட்டது போல்தான் இருந்தது. வேறொரு ஆளை என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த ஆள் கிளம்பிப் போனதும் வண்டி புறப்பட்டு விட்டது. உள்ளே டிக்கெட்டுகளைக் கணக்கு வைத்திருந்தானானால் குறைந்திருப்பதைக் கண்டிருக்க முடியும். அப்படிச் செய்யவில்லை போலிருக்கிறது. அதுவும் நல்லதுக்குத்தான். காசைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் நகர்ப்புறம் எந்தப் பக்கம் என்று பார்த்தான். அதற்கு எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தான். வண்டி வந்து கொண்டிருக்கும்போதே ஒரு சின்ன ஊர் எதிர்ப்பட்டதுபோல் இருந்தது. அதை நினைவில் வைத்து இன்றைய பொழுது அங்கேதான் என்று முடிவு செய்து கொண்டான்.
பான்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மீதிப் பணம் தட்டுப்பட்டது. இடுப்பைச் சுற்றிக் கையால் தடவினான். அரணாக்கயிறில் அந்தச் சங்கிலி வளையமாகச் சுற்றப்பட்டிருப்பது பாதுகாப்பாக இருக்கிறதா என்று நுனியைத் தடவினான். சற்றே தொங்கிக் கொண்டிருப்பதைச் சரி செய்து விட்டுக் கொண்டான். அப்படித் தான் செய்வதே யார் கண்ணிலேனும் படுகிறதா என்று பார்வை போனது. புது ஊரில் வேட்டைதான் அவனுக்கு. ஏதோ கூட்டம் முடிந்து வந்த சனக் கும்பலில் இருண்டு கிடந்த பவர் கட் கும்மிருட்டுத் தார் ரோட்டில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வழியில் பறித்த சங்கிலியோடு பதறப் பதற ஓடினான். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. இன்னும் பயமற்ற தன்மை வரவில்லை. தான் இந்தத் திருட்டுத் தொழிலுக்கு உகந்த ஆள்தானா என்ற சந்தேகம் இன்னும் தன்னிடமே இருந்து கொண்டிருக்கிறது. பிரியமில்லாமலதான், ஏதோ அசட்டுத் தைரியத்தில்தான் செய்துகொண்டிருக்கிறோமோ என்று அவனுக்கே அடிக்கடி தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது.
கொஞ்ச தூரத்தில், திருப்பத்தில் போலீஸ் ஸ்டேஷன். உதறலெடுத்து ஒன்றுக்கு நெருக்கியது. வெகு நிதானத்தோடு நடந்து கடந்த சாமர்த்தியத்தை நினைத்தால் ஆச்சரியம்தான். கையில் ஏற்கனவே வைத்திருந்த தினசரியோடு கவனமாகப் படிப்பதுபோலவே தலை குனிந்த மேனிக்கு எப்படி அத்தனை தூரம் கடந்து வந்தோம். சட்டென்று வந்த ஒரு நகரப் பேருந்தில் ஏறி அப்பாவியாய் அமர்ந்து அது நிலையத்தை அடைந்த போது எந்தவொரு முடிவுமில்லாமல் கிடைத்த வேறொரு பஸ்ஸில் மறுபடியும் ஏறி அமர அது அவனை இப்படிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது…..கடவுளே உதவி செய்தது போல் புதிய நகரத்தில் லட்டு மாதிரி ஒரு பொருள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான்.
சங்கிலி நல்ல கனம். குறைந்தது ஏழு எட்டுப் பவுனாவது தேறும். ராமையாவிடம் சொல்லித்தான் விற்றுத் தரச் சொல்ல வேண்டும். அவர்தான் சரியான ஆள். உருக்கியோ, பெருக்கியோ விற்றுவிடும் சாமர்த்தியம் அவருக்கு மட்டும்தான் உண்டு. என்ன செய்தேன் என்று எதுவும் சொல்ல மாட்டார். அதெதுக்குடா உனக்கு? இந்தா பிடி காசை… என்பார். பட்டுப் பட்டென்று கைக்குக் காசு வருவது உறுதி. கையில காசு வாயில தோசை. அதனால்தான் திரும்பத் திரும்ப அவரிடமே போய் நிற்க வேண்டியிருக்கிறது. சொன்ன நேரத்துக்கு, நாளுக்கு, அவர் தப்பியதே இல்லை. தப்புச் செய்வதிலும், ஒரு நேரந் தவறாமையும், கடமையுணர்வும், காரியக் கெட்டியும் அவரிடம் இருப்பது கவனிக்கத் தக்கது. அதுதான் இவனை உறுத்துகிறது. தப்பென்ன தப்பு? யாரையும் காட்டிக் கொடுத்தால்தானே தப்பு சாதாரண ஜனங்கள் பழம் நகையைக் கொண்டு கொடுப்பதுபோல் நானும் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்கிறார். அவர்கள் புது நகையை வாங்குகிறார்கள். நான் துட்டு வாங்கிக் கொள்கிறேன் அவ்வளவுதானே…! நின்ற இடத்திலேயே இது சாத்தியமாகிறது அவருக்கு. தனக்கு அப்படியில்லை. அங்கங்கே கை வைத்துத்தான் வண்டி ஓடுகிறது.
அதென்னவோ இந்தத் தொழில் ஆரம்பித்த நாளிலிருந்து கையில் பணம் நன்றாய்த்தான் புரளுகிறது. பிக்கலில்லை…பிடுங்கலில்லை. இது நாலாவதோ, அஞ்சாவதோ….ஒரே ஊரில் இருந்தால்தானே சந்தேகம். நூறு கிலோ மீட்டர் தள்ளித் தள்ளிப் போய், தொழில் செய்தால் எவனுக்குத் தெரியப் போகிறது? இன்றுவரை தெரியவில்லை. அவ்வளவுதான். கொஞ்ச நாள்தான் ஆகிறதென்றாலும் செழிப்புதான். இன்றுவரை வண்டி ஜமாதான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சங்கிலி பறிப்பு என்கிற செய்தியைப் படிக்கத்தான் நேர்ந்தது. அதில் ஒன்றில் மட்டும்தான் தான் திருட்டு நடத்திய இடம்பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையே, தான் மறுநாள் வெளியூரில் வைத்துத்தானே படித்தோம். ஆனால் அது தான் செய்த திருட்டு போல் இல்லை. தன் திருட்டுதானோ என்று சந்தேகமும் வரத்தான் செய்தது. செய்தியில் அத்தனை தெளிவில்லை. நல்லவேளை, படிப்பில்லாவிட்டாலும், இந்தமாதிரிச் செய்தி விஷயங்களையாவது மெது மெதுவாய்ப் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக் கொண்டான். தான் கூகை இல்லை. அந்தவரைக்கும் சற்று திருப்தி. இவ்வளவு அருகில் அங்கிருக்க வேண்டாம் என்றுதானே உடனே பஸ் ஏறியது. இடம் மாறுவதில்தான் வசதி. எங்கிருக்கிறோம் என்றே யாருக்கும் தெரியாமல் போவது அதைவிட வசதி. தான் இருந்தால் என்ன, செத்தால் என்ன? எவனுக்குத் தெரிய வேண்டும்? யார் ஒரு சொட்டுக் கண்ணீர் விடப் போகிறார்கள்?
இதுவரை நடத்திய ஐந்து திருட்டுக்கும் பணம் கொடுத்தது ராமையாதான். அது ஒன்றுதான் தவறு போல் இன்றுவரை தோன்றி, உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதென்னவோ வேறு யோசனை தோன்றவேயில்லை. இப்போதுதான் மனம் சுதாரிக்கிறது. ஆளை மாற்ற வேண்டும். ஒருவரையே நம்பி இருப்பது என்றைக்கானாலும் காட்டிக் கொடுத்துவிடும். பிறகு எல்லாத் திருட்டுக்களும் தெரிந்து போகும் வாய்ப்பு உண்டு. திருச்சி பெரிய கடை வீதியில் ஒருத்தர் இருப்பதாக மூளைச்சாமி சொன்னான் அன்று. தான் அதைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையிலேயே அவன் மூளைச்சாமிதான். இல்லையென்றால் அவன் காரியங்களை அப்படிக் கவனமாய்ப் பார்ப்பானா? அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான்? ஆளையே பார்க்க முடியவில்லையே? எங்காவது வேலைக்குச் சேர்ந்து விட்டானோ?
களவாடிய வெள்ளிக் குத்துவிளக்குகளை அங்குதானே கொண்டு சென்று விற்றதாகச் சொன்னான். அங்கு தங்கமும் செல்லுபடியாகுமா என்று தான் கேட்டபோது அதற்கு என்னவோ சொல்லி மழுப்பிவிட்டான். தான் அந்த இடத்தைத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதுபோல.
இம்முறை அங்கு சென்றால்தான் என்ன? அவனுக்குத் தெரியாமல், அவன் பெயரைச் சொல்லாமல் நாமாகச் சென்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அப்படியானால் இன்று இங்கு ஏன் இப்படி அலைய வேண்டும்? பேசாமல் கிளம்பிய திசையிலேயே சென்னைக்குச் செல்ல வேண்டியதுதானே? அங்கு போய் வழக்கமாய்த் தங்கும் மேன்ஷனில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, பிறகு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். அதுதான் சரி. ஆனால் அதுவரை இந்தச் சங்கிலி தன்னிடம் இருப்பதோ, தான் பாண்டிச்சேரியிலிருந்து வருவதோ, யாருக்கும் தெரியக் கூடாது.
குறிப்பாக சன்யாசிக்கு. அவன்தான் போலீஸ் இன்ஃபார்மர். எப்படியாவது போலீஸில் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவன். மொத்த செலக் ஷனின்போது அப்படியே உள்ளே நுழைந்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். தான் ஏதோ நகை செய்பவரிடம் வேலை பார்ப்பதாகவும், வாங்குவதும், விற்பதுமான வேலைகளில் கிடைக்கும் கமிஷனைக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிப்பதாகவும்தான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அந்த நினைப்புக்கு பங்கம் வந்து விடக் கூடாது. தன் அரையோடு ட்ரவுசரின் உள்ளே மறைந்திருக்கும் அது அப்படியே இருக்கட்டும். எந்த நிலையிலும் அதை அங்கிருந்து அகற்றக் கூடாது. ஊர் போய்ச் சேரும் வரை அதுதான் அதற்குப் பாதுகாப்பான இடம்.
இந்த எண்ணத்திற்கு முருகேசன் வந்தபோது மீண்டும் திரும்பி சட்டென்று சென்னைக்குச் சென்று விட்டால் என்ன என்று நினைத்தான். நினைப்பினூடே ஏதோவோர் ஊருக்குள் நுழைந்து விட்டது தெரிந்தது.. கலைந்திருந்த முடி பரட்டையாய் இருப்பதும், அந்த அழகோடு சன்யாசி முன் போய் நிற்பது ஆகாது என்றும் தோன்றியது அவனுக்கு. அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
கட்டிங்கா…சேவிங்கா…என்று சலூன்காரன் கேட்டதற்கு ஏதோவோர் நினைப்பில் ரெண்டுந்தான் என்றான். பிறகுதான் மழித்த மீசையைக் கண்ணாடியில் பார்த்தவாறே இல்ல ப்ரதர்…கட்டிங் மட்டுந்தான் என்றான்.
வழக்கத்திற்கு மாறாகத் தன்னை ஒருவன், அதுவும் தன் ஊரில் ப்ரதர் என்று கூப்பிட்டது அவனை உறுத்தியதோ என்னவோ, கண்ணாடி வழியே முகத்தை அவன் பார்த்த விதம் இவனைத் துணுக்குறச் செய்தது. தலையைச் சற்றே குனிந்து கொண்டபோது சர்சர்ரென்று தலையில் தண்ணீர் அடிக்க, போனவாரம் எங்கெங்கோ சுற்றிவிட்டு, வீடு வந்து சேர்ந்தபோது பக்கத்து வீட்டு மல்லிகா அம்மாவோடு நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அநாவசியமாய் முருகேசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
மல்லிகா அவனைக் குறி வைக்கிறாளோ என்று கொஞ்ச நாளாகவே தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. எந்தத் தகுதியை வைத்து தான் அவளோடு பழகுவது? ஒரு உறுதியான வேலையில்லாமல், செய்யும் கமிஷன் நகை வேலையிலும் ஸ்திரப்பட முடியாமல்,(இது கமிஷன் நகை வேலையா? திருட்டல்லவா? தெரிந்தால் மூஞ்சி பார்க்க மாட்டாளே) மன உளைச்சலுக்கு ஆளாகி, இதுவரை யாரும் அறியாத, தன் மனசுக்கே இன்னும் பொருந்தி வராத, விளையாட்டுத் தனமாய் ஏதோ செய்து கொண்டிருக்கிறோமோ என்று அடிக்கடி இன்னும் தோன்றி உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
உனக்கு சேர்க்கை சரியில்லை நீ என்னோடு பேசாதே, என்னப் பார்க்க வராதே…என்றாள் ஒருநாள். அதிர்ந்து போனான். அப்படியே அவள் மடியில் விழுந்து அழ வேண்டும்போல் இருந்தது. அன்றே அதைச் செய்திருந்தால் ஒருவேளை மன்னித்திருப்பாளோ என்னவோ? தானும் கூட ஒழுங்காய் நகைக்கடை கமிஷன் வேலைக்குச் சென்றிருக்கலாம். எல்லாம் மாறி விட்டது. அவள் சொன்னது சரிதான். அந்தச் சடையாண்டி கண்ணில் பட்டதால் வந்த தோஷம். இப்டிக் கமிஷனுக்குக் கையக் கைய நீட்டிக்கிட்டு எத்தன காலத்துக்கு இருக்கப் போற…? என்னோட வா…சொல்றேன் என்றான்.
ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் கோயில் உண்டியல் திருட்டு இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. என்ன பெரிய காசு சேர்ந்திருக்கப்போவுது என்று விட்டுவிட்டார்களோ என்னவோ? ஆனால் ஐயாயிரத்துக்குக் குறையவில்லை அன்று. இருவரும் பங்கு போட்டுக் கொண்டார்கள். படு ஜாலியாகச் சுற்றினார்கள். நாகர்கோயில் தாண்டி அந்தச் சிற்றூரில் அந்தத் தேதியில் அவன் இருப்பான் என்று எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சடையாண்டி அங்கு நடந்துகொண்டதுதான் இவனுக்குப் பிடிக்கவில்லை.
யே…! கேரளாக் குட்டிகடா….ஒருவாட்டி வந்து பாரு… அப்டியே ஊருக்கு இழுத்திட்டுப் போயிடுவமான்னு இருக்கும்…என்று வம்படியாய்க் கூட்டிக் கொண்டு போனான். அவன் ஆசை காட்டியதில் இவனும் நுழைந்துதான் விட்டான். ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்ததும்தான் மனசு விட்டுப் போனது. எனக்குப் படிக்கணும்…அதுக்குக் காசு வேணும்…அதனாலதான் வந்திருக்கேன்…என்று கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டது அது. இவனுக்கு காமாட்சி ஞாபகம் வந்தது. அத்தை பெண் காமாட்சி படிக்கணும், படிக்கணும் என்று இப்படித்தான் அடம் பிடித்தது. நீ படிச்சி என்னாடி செய்யப்போற…இந்தா இருக்கான் பாரு, முருகேசன் அவன் கையப்பிடிச்சிக்க…எல்லாம் அவன் பார்த்துக்குவான்….என்று வெறும்பயலாய் நின்ற அப்போதே இவன் மீது அப்படி ஒரு நம்பிக்கை வைத்து சொன்னது அத்தை. ஆனால் அத்தைக்கு இருந்த நம்பிக்கை மாமாவுக்கு இல்லாமல் போனதுதான் துரதிருஷ்டம். இவனுக்குத்தான் துரதிருஷ்டம். காமாட்சிக்கல்ல.
போயும் போயும் இந்தக் காலிப்பயலுக்கா என் பொண்ணைக் கொடுப்பேன்….என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தை இன்றுவரை அவன் மனதை விட்டு அகலவேயில்லை. அது அவன் கேள்விப்படாத வார்த்தை. ஆனால் படு கேலியானது, கேவலமானது என்பது மட்டும் புரிந்தது. அவனைத் தெருவில் எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் கூட அந்த வார்த்தையை அவர் வாய்விட்டு முனகுவதை அவன் புரிந்திருக்கிறான். அவனுக்காக மட்டும்தான் அவர் அந்தத் திட்டுதலை உபயோகப்படுத்துகிறார் என்று தெரிந்தது. அது ஒருவகைக் கேவலமான, கேலியான இகழ்ச்சி என்று பிறகுதான் அவனுக்குப் புரிந்தது. அந்தப் புரிதலுக்கு ஆதாரமாய் ஒருவனைப் பார்த்து, அவன் நிலையையும், தன் நிலையையும் பொருத்திக் பார்த்துக் கொண்டுதான் அதன் வீர்யம் அறிந்து கொண்டான் முருகேசன். மனசை வதைத்தது அவனுக்கு. பேர் சொல்லும்படி தனக்கு வழிகாட்ட ஒருவரும் இல்லாமல் போனார்களே என்று சமயத்தில் வருந்துவது உண்டு. ஆனாலும் அந்தப் பழிச்சொல் அவன் மனதை விட்டு அழியவே மாட்டேன் என்கிறதே?காமாட்சிக்கு முன் சொல்லப்பட்ட வார்த்தையல்லவா அது? அதனால்தானோ தன்னை இந்தளவு தாக்குகிறது?
அவ வாழ வேண்டாமா? இவனோட சேர்த்துவிட்டா இவளையே ஊருக்கு வித்துட்டுப் போயிடுவான் அவன். இப்டி ஒரு நெனப்பு வச்சிருக்கியா நீ…நல்லவேள எங்காதுல விழுந்திச்சி…இல்லன்னா எம்பொண்ணையே பேசாம அவனோட ஓடிப்போன்னு அனுப்பிச்சிருப்ப போலிருக்கே…. என்று சொல்லி விஷயம் விபரீதம் ஆகிவிடும் போலிருக்கிறது என்று அவராகவே பயந்து கொண்டு காமாட்சியை அவசர அவசரமாக விழுப்புரத்திலிருந்து வந்த ஒரு வரனுக்கு முடித்து விட்டார். படிக்கணும், படிக்கணும் என்று சொன்ன காமாட்சியின் கனவில் மண் விழுந்தது.
உண்மையில் காமாட்சியைக் கல்யாணம் செய்து கொண்டு அவளை எப்பாடுபட்டாவது படிக்க வைக்க வேண்டும் என்றுதான் லட்சியமாய் நினைத்திருந்தான் முருகேசன். அவளை அடைந்திருந்தால் தன் வாழ்க்கை எத்தனை அழகாகத் திசை மாறியிருக்கும். அந்த விரக்திதான் தன்னை இப்படி மாற்றிவிட்டதோ என்று தன்னையே கேட்டுக் கொள்வான். காமாட்சியின் அழகில் முருகேசனுக்கு அப்படி ஒரு மயக்கம். ஒரு சின்ன வேலையில் இருந்திருந்தால் கூட மாமா நம்பி இருப்பார். எப்படியாவது ஏதாவது ஒரு நகைக்கடையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்தான் அவன். எட்டாம் வகுப்பு வரை படித்துத்தான் என்ன பயன்? ஒரு சின்னக் கூட்டல் கழித்தல் கணக்குக் கூடத் தெரியாமல் எல்லாமும் மறந்து மண்ணடித்தல்லவா போய்க்கிடக்கிறது? பிறகு எப்படி நகைக்கடையில் வேலை பார்ப்பதாம்?
இந்த ஆறு மாடிக்கும் இருக்கிற ஸ்டாஃப்களுக்கு காபி, டீ எடுத்திட்டுப் போகணும்…கஸ்டமர்ஸ்வந்தாஅவுங்களுக்கும்சப்ளைபண்ணனும்…யூனிஃபார்ம் தந்துருவோம்…அதைத்தான்போட்டுக்கணும்… .தலையெல்லாம் இப்டி இருக்கக் கூடாது. நல்லா ஒட்டக் கட் பண்ணி, படியச் சீவி, டீசன்டா இருக்கணும்…சம்மதமா, சம்மதம்னா இந்த வேலைதான் உனக்கு…நாளையிலேர்ந்து வா…என்றார் அந்தக் கண்டி ஜூவல்லரிக்காரர். சரி என்று அப்போதைக்கு அதையாவது ஒப்புக் கொள்ள மனம் வந்ததா? காபி, டீ சப்ளை பண்ணனுமாமுல்ல? நானா அதுக்கு ஆளு? எடுபிடி செய்றதுக்கா இருக்கேன்? நா நாலு ஆள வச்சி வேலை வாங்குவன்யா….என்னப்போயி எடுபிடி வேலைக்குக் கூப்பிடுற….? என்று வெளியில் வந்து தலையைச் சிலுப்பிக் கொண்டு கடையைப் பார்த்து நிமிர்ந்து கூறி விட்டு வந்து விட்டான். தன் தலை யாருக்கும் வணங்காது என்று அப்போதுதான் புரிந்து கொண்டான் முருகேசன்.
கல்யாணம் நிச்சயம் ஆனபின்னாடி ஒரு நாள் மாரியம்மன் கோயிலில் வைத்துத்தான் சொன்னாள் காமாட்சி. அந்த வேல அப்பா உனக்காகச் சொன்னதுதான். யாருக்கும் தெரிய வேண்டாம்னு கேட்டுக்கிட்டு, சொல்லி வச்சிருக்காரு…நீயானா முறைச்சிக்கிட்டு வந்திட்டே…அம்மா அழுத அழுகைல அப்பா இறங்கி வந்துதான் கெடந்தாரு…சரி போகட்டும், பொண்ணு உள்ளுரோட கெடக்கும்னு ஒரு இளகின நெனப்பு வந்திச்சி அவருக்கு…நீதான் அதைக் கெடுத்துக்கிட்டே…இதச் சொல்லலாம்னா நீதான் ஊருலயே இருக்கிறதில்லியே…! ஊர் சுத்திக் கழுத…..திட்டினாள் காமாட்சி. அது கூட அன்று அவனுக்கு இதமாகத்தான் இருந்தது. அவள் வேறோருவனுக்கு நிச்சயமாகிவிட்ட பின்பும் ஏனோ அன்று அவள் வார்த்தைக்கு இவனுக்குக் கோபம் வரவில்லை.
எந்தக் காமாட்சியைத் தான் மனதார விரும்பி, அவள் தனக்குக் கிடைக்காமல் போனாளோ அவளின் அந்தத் திருமண நாளன்று தான் அந்த முதல் திருட்டைச் செய்தது. அவள் கிடைக்காமல் போன விரக்தியில் அப்படியா தொழில் தேர்ந்தெடுக்கச் சொன்னது? எந்த மனசு அப்படி வக்கரித்துக் கொண்டது? போய் முட்ட முட்டக் குடிச்சிட்டுக் கிடந்திருந்தாக் கூடப் பரவால்லியே…அன்னியோட போகும்…ஆனால் அந்தப் பழக்கம் கூட இல்லாத தன்னிடம் இந்தத் திருட்டுத் தொழில் எப்படி ஒட்டிக் கொண்டது? அந்தச் சடையாண்டியோடு நடத்திய முதல் திருட்டுதான் அது. அதற்கு முன்பேதான் மல்லிகா அவனை வெறுத்துவிட்டாள். அவளாவது போகட்டும். ஏனோ அவளிடம் மனம் நோங்கவில்லை அவனுக்கு. அவளின் அதீதமான அழகு கூசச் செய்திருந்தது முருகேசனை. அவளாகத்தான் தன்னை விரும்புகிறாளோ என்று அவள் மீது ஆசை வைக்க முனைந்தான் இவன். ஆனால் பூத்தவுடனேயே கருகிப் போனது அது. ஆனால் காமாட்சி அப்படி அல்ல. அது அவன் விரும்பிய பெண். அவள் போதும் தனக்கு என்று நினைத்திருந்தான். தனக்கேற்ற கச்சிதமான அழகு அவள்தான் என்று சந்தோஷித்திருந்தான் முருகேசன். முறை வேறு. கொடுத்தால் தனக்குத்தான் அந்தச் சொத்து. வேறு யார் வந்து கொத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற மெத்தனம் இருந்தது அவனிடம். ஆனால் அவனை ஒரு ஆளாகவே மதிக்காத மனம் அவள் தகப்பனிடம் இருந்தது என்பதைத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டான் அவன். அது காலந்தாழ்ந்து போன விஷயமாகிப் போனது. தனக்கான நல்வாய்ப்பு ஒன்று கைகூடி வருகிறது என்றுகூட அவனால் சுதாரிக்க முடியவில்லை. நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கூட அந்த நகைக் கடை வேலையை ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் காமாட்சி அவனுக்கான வாய்ப்பை அவனிடம் சொன்னதும், அவன் அதுபற்றி முடிவெடுத்த காலமும் பொருந்தி வரவில்லை. அதற்குள் காலம் கனிந்து விட்டது. யாருக்கு? அவளுக்கு. எந்த ஒரு தாய் தந்தையர்தான் இப்படியான ஒரு இளகிய சிந்தனையை தன் மகளுக்காக அளிப்பர்? அப்படியும் அது கைகூடாததனால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? தங்கள் பெண்ணின் வாழ்க்கை மீது அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒரு நேரிய அக்கறை இருந்ததோ அது போல் தன் மீது அக்கறை கொள்ள யாருமேயில்லாத அனாதையாகி விட்டோமே என்ற கழிவிரக்கம் முருகேசனை வதைத்தது. பலன்? அவனின் திசையைத் திருப்பியது.
நல்லவேளைடா, அந்தப் பொண்ணு பொழைச்சிச்சு. ஒரு பெரிய லேத்துப் பட்டறை வச்சிருக்கிற, மாசங்கூடி நல்லாக் காசு பார்க்கிற ஒரு செழிப்பான ஆளுக்குத்தான் உன்னோட காமாட்சியைக் கொடுத்திருக்காரு அவுரு அப்பாரு…அதுவும் சந்தோசமாத்தான் போச்சு…வேறென்ன பண்ண…ஒண்ணுமில்லாத ஓட்டாண்டி ஒன்னைக் கட்டிக்கிட்டு, வாழ்க்கை பூராவும் கண்ணைக் கசக்கிக்கிட்டு மூக்கைச்சிந்திக்கிட்டுக் கெடக்கவா….அதோட படிப்பு ஆசைதான் நிறைவேறல…வாழ்க்கையாச்சும் நல்லா அமைஞ்சிச்சேன்னு திருப்தியாயிடுச்சு அது….
நியாயமாய்த்தான் தோன்றியது முருகேசனுக்கு. நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்று கூறியிருந்தால் வெறுங்கையில் முழம் போட முடியுமா என்று சொல்லித்தான் சிரித்திருப்பார்கள். கல்யாணங் கட்டிக்கிட்டா என்ன புள்ள, நீபாட்டுக்குப் படி….உன்னை நா தொந்தரவே செய்யமாட்டேன்….நீ எனக்குக் கெடச்சதே போதும் புள்ள….இந்த முருகேசன் இனி எப்டி இருக்கப் போறாம்பாரு…..என்று என்னென்னவோ நினைத்து வைத்திருந்தான். எல்லாமும் பொய்யாகி விட்டது அவன் வாழ்க்கையில். தானே விரும்பிய அந்த மல்லிகாதான் விரட்டிவிட்டாள். அவளையாவது நான் விரும்பவில்லை. அதனால் அது வலிக்கவில்லை. இது நான் விரும்பி, நெருங்கியதாயிற்றே. விரும்பிப் போனால் விலகிப் போகும் என்பார்களே…அது என்னளவில் உண்மையாகிவிட்டதே…! மனிதன் வாழ்க்கையில் ஒரு பெண்ணால்தான் தலை நிமிர்கிறான். எத்தனையோ பேருக்கு அவன் வெற்றிக்குப் பின்னாலே ஒரு பெண்தான் இருக்கிறாள் என்பார்களே…! எனக்கு மட்டும் ஏன் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை? அந்த அளவுக்கா நான் துரதிருஷ்டக்காரன்? என் வாழ்க்கையில் பெண் யோகமேயில்லையா? அவளோடுடனான போகமே கிடையாதா? ஏனிப்படி துரதிருஷ்டக் கட்டையாய்ப் போனேன்.
என்னைக் கொண்டு வலிய விட்டானே அந்தச் சடையாண்டி. அப்போது கூட அந்த லாட்ஜ் பெண்ணிடம் நான் தவறாக நடந்து கொள்ளவில்லையே…அங்கும் காமாட்சியின் அந்த ஆசைகளைத்தானே நான் கனவுகளாய்க் கண்டேன். சே…! வாழ்க்கையில் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்காமல் போக வேண்டும் என்பதுதான் எனக்கான சாபக்கேடா? ஏனிப்படி என் வாழ்வு திசை தெரியாமல் போய்விட்டது? மாலுமியற்ற கப்பல் நோக்கமற்றுச் செல்வதுபோல் அல்லவா என் நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன?
இப்போது நான் இருக்கும் இருப்பு யாருக்காக? எந்தத் தாய் தந்தையரைக் காப்பாற்ற? எந்தச் சகோதரிகளைக் கரையேற்ற? எந்த மனைவி குழந்தைகளைக் காத்து நிற்க? எனக்கென்று யார் இருக்கிறார்கள்? என் மீது அன்பு கொண்ட உள்ளம் எது? என் வருகைக்காக யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? என் நலத்திற்காக யார் வேண்டி நிற்கிறார்கள்? எதுவுமே அற்ற வெற்று ஜீவனா நான்?
சென்னையில் காலடி வைத்தபோது முருகேசனின் மனம் கனத்துப் போய்க் கிடந்தது. இனி ஊருக்குப் போவதனால் எந்தப் பயனும் இல்லை. அங்கு தனக்காக யாரும் இல்லை. தன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர் எவருமில்லை. இன்னும் சில நாட்களை இந்தச் சென்னையிலேயே கழித்து விட வேண்டியதுதான். தன்னைப்பற்றி, தன் தோற்றத்தில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது. இப்போதைய தன்னுடைய தேவை அதுதான். இருக்கும் பணத்தை வைத்து நாட்களை நியாயமாகக் கழிப்போம். பிறகு பார்ப்போம் என்ன செய்யலாம் என்று. ஊருக்குப் போவது கூட அடுத்த யோசனைதான். அப்படியே போனாலும் அது திருச்சிதான். அங்கு போய்த்தான் அதை விற்க வேண்டும். மூளைச்சாமி சொன்ன பெரிய கடை வீதி நகைக் கடையைத்தான் தேர்ந்தெடுத்து மூளையோடு விற்றுக் காசு பார்க்க வேண்டும். அந்தக் காசை வைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, உண்டியலில் பணம் போட வேண்டும். பிறகு இந்தத் திருட்டுத் தொழிலுக்கு இத்தோடு ஒரு முழுக்குப் போட்டு விட்டு எங்காவது போய் யோக்கியமாய் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கை சரியாய் அமையாதவனெல்லாம் கெட்டுச் சீரழிந்துதான் போக வேண்டுமா? திருந்தி மீளக் கூடாதா? மீண்டு, மீண்டும் எழும்வரை யார் கண்ணிலும் படக் கூடாது. குறிப்பாகக் காமாட்சியின் தந்தையின் கண்களில். அவர் முன்னால் போய் நானும் மனிதன்தான் என்று தலை நிமிர்ந்து நின்று அந்த அவரின் வார்த்தைகளைத் துடைத்தெறிய வேண்டும். உன்ன இப்டியெல்லாம் திட்டியிருக்கேன், என்னை மன்னிச்சிக்கப்பா…என்று அவர் சொல்லாவிட்டாலும், அரவணைத்து ஏற்றுக் கொண்டால் சரி. காமாட்சி கிடைக்காவிட்டாலும், அவள் அன்பு நிலைத்தால் போதும். அந்த வீட்டின் மரியாதைதான் எனக்கு முக்கியம்.
யோசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் முருகேசன். பொழுது மெல்ல இருட்டிக் கொண்டு வருவதை உணர்ந்தான். எப்பொழுது போனாலும் ஏதேனும் ஒரு மேன்ஷனில் தங்கிக் கொள்ளலாம் என்கிற தைரியம் இருந்தது. சும்மாவானும் நண்பர்களோடு அடிக்கடி வந்து போன பழக்கம்தான். அவர்கள் கூடத் தன்னை மதித்துத்தான் இருக்கிறார்கள். இன்றுவரை வந்தால் இடம் கொடுக்கிறார்கள். அந்த வார்த்தைக்குரியவனா என்று ஒரு முறை கூட அவர்கள் அறியத் துணிந்ததில்லை. மாமாவைத் தவிர வேறு யாரும் அவனை நோக்கி அந்த நெருப்பு வார்த்தைகளை வீசியதில்லை. அறிந்திருப்பார்களோ என்று கொண்டாலும், வாய்விட்டுச் சொன்னதில்லை. ஆனால் அந்தக் காமாட்சியின் தந்தை தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அப்படித்தான் எதிர்கொள்கிறார். அந்த வார்த்தைகளைத் தனக்காகப் பயன்படுத்துவதில் அவருக்கு ஒரு அதீத ருசி. தனக்கு மட்டுமே அது முழுமையாகப் பொருந்தும் என்பதான ஒரு தீர்மானம். அவென் ஒரு வெட்டி ஆபீசு……
அந்த வார்த்தைகள் இன்று வரை முள்ளாகத் தைத்து மனதை வதைக்கின்றன. காமாட்சிக்குக் கல்யாணம் ஆனபோது அந்தக் காயம் ரணமாகிவிட்டது.
இப்பொழுது அது ஏன் திடீரென்று மனதில் திரும்பத் திரும்பத் தோன்றுகிறது? தன்னை உறுதிப் படுத்தவா? தன் மனதில் இன்னும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் நல்லெண்ணங்களைச் ஸ்திரப்படுத்தவா? நானும் மனுஷனாகிக் காண்பிக்கிறேன் என்று வெறி கொள்ள வைக்கிறதே….!
உடலைத் தழுவிய கடற்கரைக் காற்றின் இதமான வருடலில் பயணச் சோர்வைப் போக்க, மணலில் கால் பதிய நடந்து, அப்படியே ஒரு ஓட்டைப் படகின் மறைவில் ஒதுங்கினான் முருகேசன்.
என்னவோ ஒரு இனம் புரியாத சோகம் மனதை வந்து அப்பிக் கொள்ள உடம்பே கனத்துப் போனது போல் உணர்ந்தான். போயும் போயும் இந்தத் திருட்டுத் தொழிலில் போய் மனது லயித்ததே….என்று ஒரு எண்ணம் மின்னலாய்த் தோன்றி ஒரு கணம் ஆழமாய் நிலைத்து நின்றது.
கைகள் அவனையறியாமல் அரணாக் கொடியில் சுற்றப்பட்டிருந்த சங்கிலியை உருவியது. எல்லாம் இந்தப் பழக்கம் செய்த வினை. அது கொடுத்த தற்காலிகச் சுகம். அதனால் நான் இழந்த வாழ்க்கையின் சொந்தம். சாகும் மட்டும் என் கூடவே கை கோர்த்து வர வேண்டியதைக் கோட்டை விட்டு விட்டு, இந்தத் தற்காலிகச் சுகத்திற்குப் பழகிக் கொண்டேனே?சேர்க்கை சரியில்லை. அதனால் வந்த வினை….ஆம் அன்று அந்த மல்லிகா சொன்னது சரிதான். ஒரு மூன்றாமவள் அவள். ஆனால் அப்படியான நெருப்பு வார்த்தைகள் என் காமாட்சியிடமிருந்து ஒரு நாள் கூட வரவில்லையே…! நான் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதானே அவள் விரும்பினாள். இன்னொருவனுக்குத் துணைவியாகிவிட்ட அவள், இப்போதும் கூட என் நலத்தைத் தானே விரும்புவாள். அந்தச் சொத்தை இழந்தேனே நான். அதைவிட வேறு எந்தச் சொத்து என் கைக்கு வந்து என்ன பயன்? கொத்தாகப் பிடித்துக் கொண்டு பரவிய இருட்டுக்குள் நடந்தான். சங்கிலி அவன் கைகளைப் பலமாகப் பிணைப்பதுபோல் இறுகியது. இதுதான் என் நல் வாழ்க்கைக்கான வேலி. முள்வேலி. தீண்டத்தகாத நெருப்பு வேலி. அலைகள் அவன் கால்களை முழங்கால் அளவுக்குத் தழுவ ஆரம்பித்த இடத்தில் உறுதியாய் நின்றான், இந்த நிமிடத்திலிருந்து என் வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது. பரந்த இந்தக் கடல் மாதாவின் முன் நான் எடுக்கும் உறுதிமொழி இது. என்னை ஈன்றெடுத்த தாயின் மீது ஆணை. இன்று முதல் நானும் ஒரு முழுமையான மனிதன். கையை ஒரு சுழற்றுச் சுழற்றி கடலின் வெகு தூரத்திற்கு சென்று விழுவது போல் அந்தத் திருட்டுச் சங்கிலியை வீசியெறிந்தான் முருகேசன். இப்போது அவன் மனம் மென்மையாய், எந்த அழுத்தமுமின்றி, காற்றாக இந்தப் பரந்த வெளியில் பறக்கத் தயார் நிலையில் இருந்தது. கால் பதியப் பதிய உறுதியாக, நிலையாக அடிகள் வைத்து நடக்க ஆரம்பித்தான்.
திரும்பிக் கரையேறி அவன் முன்னேறிக் கொண்டிருந்தபோது சுற்றிலும் முழுமையாகப் பரவியிருந்த அந்தக் கரும் இருட்டுக்குள் கடலுக்குள் சென்று நின்று அப்போது அவன் என்ன செய்தான் என்பது புரியாது அங்கே பரவலாய் அமர்ந்திருந்த பலருடைய கண்கள் அவனையே கூர்ந்து பார்த்தவண்ணமிருந்தன.
----------------------------------

28 ஜூலை 2013

இறகுகளின் வண்ணங்கள்

Photo

Photo

தற்செயலாக வீட்டின் வாசலுக்கு வந்தபோதுதான் தெரிந்தது அது. கிரில் மீது உட்கார்ந்திருந்தது. வெளியே வந்து அதன் முதுகுப் பகுதியை உற்று நோக்கினேன். ப்ரௌன் கலரில் அழகான டிசைனில் அதன் இறகுப் பகுதி. பூச்சியா, வண்டா, பறவையா என்று தெரியவில்லை. அடிக்கப் போக கொட்டி வைத்தால் என்ன செய்வது என்ற அச்சம். வெறுமே விரட்டி விடுவோமே என்று எதையேனும் வைத்துத் துரத்தினாலும் சட்டென்று வந்து கண்ணில் பாய்ந்து விடுமோ என்கிற சந்தேகம். ஓங்கி ஒரு போடு போட்டு சாகடிக்க வும் மனமில்லை. எதற்காக அதைச் செய்ய வேண்டும். அப்படி செத்துப் போகவா இங்கே வந்து உட்கார்ந்தது? அல்ல. அல்ல. நான் ரசிக்க. இப்படி ஒருத்தன் இங்கேயிருக்கிறான் என்று மானசீகமாய் உணர்ந்து அடைக்கலாம் போல் உட்கார்ந்திருக்கிறது. வெகு நேரம் அந்த அழகை ரசித்தேன். நன்றாகப் பார்த்துக் கொள். பிறகு கிடைக்காது. உனக்காகத்தான் வந்தேன். பட்டுப்பூச்சியைப் போல் தொட்டு, கையில் விட்டுக் கொள்ள ஆசைதான். அந்த இறகின் வண்ணம் அழிந்துவிட்டால்? அதை விரட்ட மனம் வருமா? அப்படியெல்லாம் எதுவும் செய்ய மனமில்லை. காரணம் அதன் அழகு. அந்த வண்ண இறகு முதுகுப் பகுதி. சரி. வெகு நேரத்திற்கு அப்படியே அசையாமல் இருந்தால் எப்படி? உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து ஒட்டிக்கொண்டு கிடக்கிறதா? சந்தேகம் வந்தது. ஒரு பேப்பரை எடுத்து லேசாகத் தொட்டேன். என்ன அதிசயம் பாருங்கள். இறகை விரித்துப் படபடவென்ற அது, தரையிலிருந்து மெல்ல மெல்ல நீள வாக்கில் மேலே போய் அப்படியே பறந்து மறைந்து விட்டது. இன்று என் மனதை, என் பொழுதுகளை இனிமையாக்கிய அந்தப் பூச்சியை, பறவையை, வண்டினை (?) யாரேனும் அறிவீர்களா? முன்புறமும், பின்புறமுமாக அந்தப் படத்தைப் பாருங்களேன். யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

 

 

20 ஜூலை 2013

“இந்த வார கலா ரசிகன்” – தினமணி நாளிதழ் – 14.7.2013 – ல் எனதுதனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுதி மற்றும் எனதுஎழுத்து பற்றி தினமணி ஆசிரியரின் விமர்சனம்.

Picture 001




சாவி வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலிருந்து எனக்கு அறிமுகமான பெயர் உஷாதீபன். நேரில் சந்திக்கவில்லையே தவிர அவரது எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருபவன்தான் நான். அது மட்டுமல்ல, "தினமணி கதிர்' சிறுகதை எழுத்தாளர்களில் உஷாதீபனும் ஒருவர் என்பதால், நான் சொல்லி "தினமணி' வாசகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

படிக்க வேண்டும் என்று எடுத்து அலமாரியில் நான் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் ஏராளம். படித்து முடித்து அடுக்கி வைத்திருப்பவை அதைவிட ஏராளம். இரண்டாவது பட்டியலில் ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகம் உஷாதீபனின் "தனித்திருப்பவனின் அறை' என்கிற சிறுகதைத் தொகுப்பு.
"உணர்வுகளின் விளிம்பில்' கதையில் தொடங்கி, "பெண்ணே நீ' வரை 21 கதைகள். உஷாதீபனின் கதைகளில் தத்துவங்களோ, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்னைகளோ இருக்காது. மிகவும் எளிமையான கதைகள். சிக்கலான உறவுகள், எதிர்மறைச் சிந்தனைகள் என்றெல்லாம் பார்க்கவே முடியாது. ஆனால், யதார்த்தம் இருக்கும். ஒரு சராசரி நடுத்தரவர்க்க சிந்தனை அவரது கதைகளின் அடித்தளம். அதை சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த கதைசொல்லி உஷாதீபன்.
21 சிறுகதைகளிலும் அவர் காட்டியுள்ள அத்தனை கதாபாத்திரங்களும், நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறார்கள். சம்பவங்களும் சரி, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர்கொண்ட நிகழ்வாக இருக்கும். அதைத் தேவையில்லாத வார்த்தை ஜாலங்களில்லாமல் யதார்த்தமாகச் சொல்லும் லாகவம் அவருக்குக் கைவந்திருக்கிறது.
ஆமாம் உஷாதீபன், அந்தந்தச் சிறுகதைகளுடன், அது எந்த இதழில் எப்போது பிரசுரமானது என்பதை ஏன் குறிப்பிடாமல் விட்டுள்ளீர்கள்?






14 ஜூலை 2013

தாமரை ஜூலை 2013 இலக்கிய இதழில் எனது “முனைப்பு” சிறுகதை

2013-07-15 10.54.412013-07-15 10.55.44

 

--------------------------------

“டேய், இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா…” – செந்திலைப் பார்த்து ஆவேசமாகக் கத்தியவாறே ஓடி வந்த மாரியப்பன், வந்த வேகத்தில் இவனருகில் இருந்த பசை வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். துரத்தி வந்தால் உடனடியாகப் பிடிக்க முடியாத தூரத்திற்குச் சென்று விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டதுபோல் இருந்தது அவன் ஓடிச்சென்று நின்ற இருட்டான பகுதி. அந்த நடுராத்திரியில் அவன் அங்கே வருவான் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எவனிடமும் சொல்லாமல்தான் அந்த ஆர்டரைப் பிடித்திருந்தான் அவன். அதை தனக்குள் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான். மொத்த நகரத்திற்கும் அவன் ஒருவனே அந்த வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அப்படித்தானே சொல்ல வேண்டும். எப்படித்தான் அவனுக்குக் கொடுத்தார்களோ! இன்னும் ஆச்சரியம் நீங்கியபாடில்லை. நல்ல எண்ணத்தோடு எல்லாவற்றையும் செய்ய முயன்றால், செய்தால், எல்லாமும் நல்லபடியாய் நடக்குமோ என்னவோ!

அப்படிச் சொல்லிக் கொள்வதில் அவனுக்கே ஒரு பெருமை இருக்கத்தான் செய்தது. யாரிடமும் அவன் அதைச் சொல்லவில்லைதான். சொல்லக் கூடாது என்பதுதானே அவன் எண்ணம். சொன்னால் நிச்சயம் பொறாமை வரும். போட்டி வரும். சண்டை வரும். . ஆனாலும் இந்த மாரிப் பயலுக்கு எப்படித் தெரிந்தது? திருகுதாளம் பிடிச்சவனாச்சே இவன்?

.

வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் மேலே போக முடியும். நியாயமான ரிஸ்க் எடுப்பதில் என்ன தவறு? மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட்டுமா? அவனின் அன்புக் குடும்பத்திற்கும் சேர்த்துத்தானே அவன் யோசிக்கிறான். யாரும் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் செந்திலால் முடியும். காரணம் அவன் உழைப்பு அப்படி. அவனின் கடுமையான உழைப்பில் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி. ஆரம்பத்தில் சிலருடன் சேர்ந்துதான் அவன் அந்த வேலையைத் துவக்கினான். அவர்களின் பழக்க வழக்கங்கள் பின்னால் இவனுக்கு ஒத்து வரவில்லை. மகாத்மாகாந்திக்குச் சொன்னதுபோல் இவனுக்கு இவன் தாய் சொல்லியிருந்தது மனதிலேயே பதிந்து போயிருந்தது.

”போதப் பழக்கம், பொம்பளப் பழக்கம் ரெண்டும் ஆகாதுய்யா…”

இன்றுவரை அவன் உறுதியாய்க் கடைப்பிடித்து வருபவை அவை. ஆத்தாள் தன் கணவன்பாலான அனுபவத்தில் கண்ட உண்மைகளை அவனுக்குச் சொல்லி வைத்தாள். தன்னை அத்தனை உறுதியாய் வளர்க்கவில்லையென்றால் தான் எங்கே தேறியிருக்கப் போகிறோம்? நேரத்திற்கு எழுந்திரிக்க, பல் விளக்க, குளிக்க, சாமி கும்பிட என்று ஒவ்வொன்றாய் ஆத்தா தனக்குச் சொல்லி வைத்ததுதானே தன்னை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. ஆத்தாவோடு சேர்ந்து மார்க்கெட்டிற்குப் போவதும், மொத்தக் கடையில் காய்களை வாங்கிக் கொண்டு வந்து தெருக்களிலும், வீதி ஓரங்களிலும் கால் கடுக்க நடந்தும், அமர்ந்தும் காய்கறிகளை முழுதுமாக விற்றுத் தீர்த்து சாயங்காலம் கமிஷன் காசைக் கண்ணாரக் கண்டபோது ஆத்தாவிற்கு இவனே யோசனை சொன்னானே!

“ஏன் ஆத்தா நம்ம வீட்டுக்குப் பின்னாடிதான் அம்புட்டு எடங்கெடக்குதே…நாம அதுல கீரை போட்டா என்ன?”

”போடா, போக்கத்தவனே…கீரயைப் போட்டு என்னாத்தக் காசு பார்க்கப் போற நீ…முடி முடியாப் போட்டு அஞ்சஞ்சு ரூபாய்க்கு வித்து லாபம் பார்த்து ஆகுமா?”

”என்னாத்தா இப்டிச் சொல்ற நீயே? அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா?”

”அதுக்கில்லடா…எடம் எங்க கெடக்குன்னு கேட்குறேன்…”

”ஆத்தா, மத்தவுக எடத்த நாம ஆக்ரமிக்கவா ப்ளான் பண்றோம்…நல்லா சுத்தப்படுத்தி நல்லதுதான பண்றோம்…மண்ணக் கொத்தி விட்டு, கீரைய வெதப்போம்…வளர வளரப் பிடுங்கிப் பிடுங்கி வித்துக்கிட்டிருப்போம்…உடமப்பட்டவுக வந்து கேட்டாகன்னா எடுத்துக்குங்கய்யான்னு கும்பிட்டுட்டு விலகிக்கிடுவோம்….சும்மானாச்சுக்கும் கருவேல மண்டி, பாம்பு அடையறதுக்கு இது பரவால்லேல்ல…யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாக….கெட்ட எண்ணமுள்ளவுகளப் பார்த்தாலே தெரிஞ்சிடும் ஆத்தா…நமக்கு அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்திடாது…”

சொன்னான். காரியத்திலும் இறங்கினான். பாலாக் கீரை, சக்கரவர்த்தினி, பருப்புக் கீரை என்று பலரும் பேர் அறியாத கீரைகளையெல்லாம் விதைத்து, அவை செழிப்பாக வளர்ந்து ஓங்கி நிற்பதைக் கண்டு உள்ளம் பூரித்து, பூமியோடு அவை பொருந்தி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசித்து இவைகளையா பிடுங்குவது என்று நினைத்து வருந்துமளவுக்கு மனம் தயங்கி, பிடுங்கப் பிடுங்க வளருவதுதானே என்று ஏதோஒருவகையில் சமாதானம் செய்து கொண்டு, சந்தையின் நுழைவாயிலில் அவன் கடை போட்ட போது பச்சைப் பசேல் என்று குளிரக் குளிர பசும் இளமையாய் அவை சிரித்து நின்றபோது, வியாபாரம் பிச்சுக்கொண்டுதான் போனது.

ஆனால் அவனது துரதிருஷ்டம். அத்தனை சீக்கிரத்திலா எதிர்கொள்ள வேண்டும். ஒரு ஆறு மாதப் பொழுதிலேயே அந்த இடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. மனிதர் ஒரு வார்த்தை தன்னைத் தப்பாய்ப் பேசவில்லை. அவனையே கட்டும் வீட்டிற்குக் காவலாளியாய் இருக்கக் கேட்டுக் கொண்டார். கொஞ்ச நாள் அந்தக் காசும் வரத்தானே செய்தது. இன்றும் கூட குடி வந்த அந்த வீட்டுக்காரர்களுக்கு இவன்தான் கீரை சப்ளை செய்கிறான். எங்கிருந்து? மொத்த வியாபாரத்திலிருந்து வாங்கி சில்லறை விற்பனையில்.

எந்த வேலையையும் செய்யத் தயங்காத தன்னின் ஈடுபாடுதான் தன்னை இத்தனை நாட்கள் நிலை நிறுத்தியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்வான். அப்பா தள்ளுவண்டியில் பழம் விற்றிருக்கிறார். ஐஸ் விற்றிருக்கிறார். தெருத் தெருவாகச் சென்று காய்கறி விற்றிருக்கிறார். டிரை சைக்கிளில் சிமின்ட் ஏற்றுவது, கட்டுக் கம்பி ஏற்றுவது, செங்கல், மணல் கொண்டு இறக்குவது, ஜல்லி அடிப்பது, என்று எந்த வேலை செய்யவில்லை அவர். ஒன்றையாவது கேவலமாக நினைத்திருப்பாரா? கௌரவம் பார்த்திருப்பாரா? நமக்கெதுக்குடா அதெல்லாம். உழைக்கணும், சாப்பிடணும் அவ்வளவுதான் என்பார். அவர் இருந்திருந்தால் இந்தக் குடும்பம் இன்று இப்படியா இருக்கும்? தங்கச்சிகளை வேலைக்கு அனுப்பியிருப்பாரா? எப்படியாப்பட்ட மனுஷன்? நாமதான் கொடுத்து வைக்கலை. அம்மா சொல்லிச் சொல்லி வருந்தும் அவற்றையே நினைத்துக் கொள்வான் இவன்.

பின் புது வீட்டுக்காரர் சொல்லித்தான் அந்த சினிமாத் தியேட்டர் வேலைக்குப் போனான் செந்தில். வேலையில் சேர்ந்த முதல்நாள்தான் அவரும் ஒரு பங்குதாரர் என்பதே அவனுக்குத் தெரியும்.

ந்தவிதப் பதட்டமும் இல்லாமல் மாரியைக் கூர்மையாகத் திரும்பிப் பார்த்த இவன், “ஒழுங்கா வச்சிரு…“ என்று மட்டும் இங்கிருந்தே கத்திச் சொல்லிவிட்டு கையிலெடுத்திருந்த பசையை சுவற்றில் திருப்பிப் போட்டிருந்த போஸ்டரில் தடவ ஆரம்பித்தான். மேலும் கீழுமாக, வலதும் இடதுமாகக் கையகலத்திற்குச் சமமாகத் தடவியிருக்கிறோமா என்று கொஞ்சம் பார்வையை ஓரப்படுத்திப் பார்த்துக் கொண்டான். நான்கு மூலைகளிலுமோ, அல்லது நட்ட நடுவிலோ எங்கும் பசை பரவாமல் துருத்திக் கொண்டு சுவற்றில் பொருந்தாமல் நிற்கக் கூடாது. அம்மாதிரி அரைகுறை வேலை செய்வது அவனுக்கு என்றுமே பிடிக்காது. எங்கேயாவது துருத்திக் கொண்டிருந்தால் மாடுகள் வாயை வைத்து பரக்கென்று ஒரு இழு இழுத்து விடும். பகலில் ”என்னடா போஸ்டர் ஒட்டியிருக்கே நீ? ஒரு நா கூட நிக்கலே..” என்று சம்பந்தப்பட்டவர் யாரும் அவனைக் கேட்டு விடக் கூடாது.

தொழில் சுத்தம் வேண்டாமா? செந்திலைப் போல் இந்த வேலையில் கஷ்டப்படுபவர் யாருமில்லை எனலாம். அதில் அவனுக்கு ஒரு தனிப் பெருமையே உண்டு. பெரும்பாலும் பலரும் சைக்கிளின் இருபுறமும் பசை வாளியும், போஸ்டருமாகத்தான் திரிவார்கள். எட்டும் உயரத்திற்கு ஒட்டி விட்டோ, அல்லது ஏதாவதொன்றைக் கிழித்து விட்டோ ஒட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள். ஆனால் செந்தில் அப்படியில்லை. கூடவே ஒரு ஏணியையும் எப்பொழுதும் கொண்டு செல்வான். அது அவன் சொந்த ஏணி. கட்டட வாட்ச்மேனாக இருந்தபோது கடைசியாக அவன் வேண்டிக் கேட்டு வாங்கிக் கொண்ட பொக்கிஷம் அது. சைக்கிளில் அதை இறுக்கமாகக் கட்டி வண்டி மிதிக்கும்போது டபுள் வெயிட்டாகத்தான் இருக்கும். அஞ்சமாட்டான் அந்த பாரத்திற்கு. அவன் சுமக்கும் குடும்ப பாரத்தை விடவா இதெல்லாம் பெரிது? ஏழு படி ஏறும் உயரம் இருக்கும் அது. எந்த இடமானாலும் சுவற்றில் அதை வாகாகச் சாய்த்துக் கொண்டு உயரத்தில் மற்ற விளம்பரங்களுக்குப் பாதிக்காத வகையில் தான் ஒட்டும் போஸ்டர்கள் பலரின் பார்வைக்கும் படுவதுபோல் பார்வையான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக ஒட்டிவிட்டு வருவான். இந்த அக்கறையும், கவனமும், மற்றவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே. பெரும்பாலும் சக்குச் சக்கென்று ஒட்டித் தீர்த்துவிட்டு சடனாய் வேலையை முடிக்கத்தானே பார்க்கிறார்கள். செந்தில் என்றும் அப்படியிருந்ததில்லை. இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா ஆரம்பித்ததும் கணக்கு வழக்குகள் முடிந்த வேளையில் கொல்லைப்புறம் கக்கூசுக்குப் பக்கத்தில் தீவாளியில் வெது வெதுவெனக் கொட்டி வைத்திருக்கும் பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர்களை வாங்கத் தயாராக வந்து நிற்பான் இவன்.

”ஊர்க்கணக்கு பூராவும் தீர்த்தாச்சு…இனி இவன் கணக்குத்தான் பாக்கிய்யா…” – என்று சொல்லிக் கொண்டே மானேஜர் அவனுக்கான போஸ்டர்களை எடுத்துக் கொடுக்கப் பணிப்பார். சிறுசு, பெரிசு என்று அங்கேயே பிரித்து வைத்துக் கொண்டுதான் கிளம்புவான். பெரிய போஸ்டர்கள் நாலு பங்காக இருக்கும். அவைகளைக் கவனமாய் ஒட்ட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் மாற்றி எதுவும் ஒட்டி விடக் கூடாது. எழுத்துக்கள் மறைந்து விடக் கூடாது. உருவம் சுருங்கி, ஒச்சம் போல் ஆகிவிடக் கூடாது. அத்தனை கவனம் உண்டு அவனுக்கு.

“தங்கப்ப - தக்கம்னு ஏதோ ஒரு படத்துல காமெடி வருதுல்ல…அதமாதிரி அர்த்தக் கேடா ஒட்டிப்புடாதறா…வேலயப் பார்த்துச் செய்யி…” எதையாவது சொல்லிக் கொண்டுதான் அனுப்பி விடுவார் மானேஜர். அவர் குணம் அப்படி. ஆள் வித்தியாசமெல்லாம் அவருக்குக் கிடையாது. தன்னைப் பற்றி அறிந்திருந்தும், தன்னிடமும் அவர் அப்படிச் சொல்வது செந்திலுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பாயிற்றே? சரிங்கய்யா…என்றுவிட்டுத்தான் கிளம்புவான். ரெண்டு வார்த்தை அதிகம் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொள்வதற்கு, பணிந்து போய்விடுவது மேலாயிற்றே என்பது அவன் எண்ணமாக இருந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் அதுதானே பிடித்தும் இருக்கிறது. சரி, இதனாலென்ன குறைந்தா போய் விடுகிறோம். இதுதான் செந்திலின் முடிவு. தங்கச்சிகளெல்லாம் வேலைக்குப் போய் முடிந்த அளவுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் நிலையில் அண்ணனாகிய தான் கொடுப்பது அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவன் மனது உறுதியாகத்தான் இருந்தது. மனசில் அது வைராக்கியமாகவே படிந்திருந்தது.

போஸ்டர்களைப் பெற்றுக் கொண்டு அவன் புறப்படும்பொழுது அப்படியிப்படி மணி பதினொன்றைத் தாண்டி விடும்… தியேட்டருக்கு அருகிலிருந்து வரிசையாக எந்தெந்தத் தெருவுக்குள் நுழைய வேண்டும்…எங்தெந்த சந்துகளைத் தவிர்க்க வேண்டும் அந்நேரத்தில், என்பதையெல்லாம் மனதிலேயே கணக்குப் பண்ணிக் கொண்டு வண்டியை மெதுவாக உருட்டுவான் செந்தில். அந்த ஊரில் எத்தனை முட்டுச் சந்து உள்ளது, முடுக்குச் சந்து எத்தனை, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்பெல்லாம் நடக்கிறது, யார் யார் அந்தத் தப்பையெல்லாம் செய்கிறார்கள், எவனெனவன் எதற்காக அலைகிறான்கள் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடி. ஆனால் அவற்றைப் பற்றி அவன் எங்கும் யாரிடமும் மூச்சு விட்டதில்லை.

நமக்கெதுக்குங்க…நம்ம பொழைப்பே பசையோட பசையா இருக்குது…இதுல அந்தக் கண்றாவிகளையெல்லாம் வேறே மேலே ஒட்டிக்கிடணுமா என்பான் யாராவது அவன் வாயைக் கிளறப் பார்த்தால்!. வேலை, வேலை, வேலை. அதுதான் அவனின் தாரக மந்திரம். எடுத்துக் கொண்ட வேலையை ஒழுங்காக, ஒழுக்கமாக, திருத்தமாக, சொன்ன நேரத்துக்குக் தாமதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க வேண்டும்.

இல்லையென்றால் டிக்கெட் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இந்த வேலையையும் நானே செய்கிறேன் என்று முனைவானா?

”உனக்கெதுக்குடா இதெல்லாம், வீட்டுல போய்த் தேமேன்னு படுக்கமாட்டாம?” என்பார் முதலாளி கூட.

”இல்லீங்க முதலாளி. எனக்கு மூணு தங்கச்சிங்க…அதுகள ஒழுங்காக் கட்டிக் கொடுக்கணும். எங்க அம்மா தனியாக் கெடந்து என்னதான் செய்யும்?”

அவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து அவரே நெகிழ்ந்துதான் போனார். இப்படிப் பையன்களை வேலைக்குப் போட்டால்தான் தன் தியேட்டர் பிழைக்கும் என்று ஒரு எண்ணமிருந்தது அவருக்கு. இன்னும் ஒரு சில வேலையாட்களைக் கூட செந்திலை வைத்துத்தான் தேர்வு செய்தார். பொறுப்பாய் இருப்பவனுக்குத்தான் பொறுப்பானவர்களை அடையாளம் காண முடியும். சொல்லப்போனால் செந்தில்தான் ஆல் இன் ஆல் என்றே சொல்லலாம்.

டிக்கெட் கொடுக்கும் வேலையையே அத்தனை திறம்படப் பார்ப்பவன் செந்தில். அவன் மாடிக்குச் சென்று மணி அடித்தபிறகுதான் டிக்கெட் கவுன்டர்களையே திறப்பார்கள். பிறகுதான் ஆபீஸ் ரூமிலிருந்து அவனே கையில் டிக்கெட் டப்பாவோடு வருவான். அப்படி வரும்போது தியேட்டர் நிர்வாகமே தன்னிடம் இருப்பதுபோல் அவன் மனதுக்குள் ஒரு கம்பீரம் எழும். அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் முன்னப் பின்னப் பார்த்து, இருக்கும் கூட்டத்தை அனுசரித்து பெல் கொடுக்கச் செல்லுவான். அது அவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. மிடில் கிளாஸ் டிக்கெட்டுகளை எப்போதும் அவன்தான் கொடுப்பான். யாரையும் அதற்கு அவன் விட்டதில்லை. அதற்கு அப்படிப் பெயர் வைத்தது அவன்தான்.

”அந்தக் கூட்டத்த சமாளிக்க அவன்தான்டா லாயக்கு…” என்பார் மானேஜர்.

எவ்வளவு கூட்டம் கட்டி ஏறினாலும், ஒருநாள் கூடக் கணக்குத் தப்பியதில்லை அவனுக்கு.

”காச வாங்கி, எத்தன டிக்கட்டுன்னு கேட்டு, பாக்கிச் சில்லரையக் கொடுத்துப்பிட்டு அப்புறந்தான் டிக்கெட்டையே கிழிக்கணும் மாப்ள….இந்த சிஸ்டத்த நீ மாத்தவே கூடாது. வர்றவங்ஞள்ல பல பிக்காலிப் பயலுவ இருப்பானுக…குறிப்பா ராத்திரி ரெண்டாம் ஆட்டம்…மப்புலதான் நுழைவானுக…உன்ன அப்டி இப்டிக் கொழப்பிடுவானுக…நாமதான் உஷாரா இருக்கணும்…இந்தா பாக்கிக் காசப் பிடி…ரெண்டு டிக்கெட்டா…இந்தா பிடி…ன்னு சக்குச் சக்குன்னு கையில திணிக்கணும்…எடு…எடு..ன்னு நாம போடுற அவசரத்துல கை தானே பின்னால போயிடணும்…அடுத்தாள் புளுக்குன்னு நீட்டுவான்ல…நாமதான் தயாரா இருக்கணும்…”

பல வருஷம் சர்வீஸ் போட்டவர்களுக்கே அவனிடம் சற்று பயம்தான்.

”ஒரு நாள் கூட இந்தப்பய ஒத்தப் பைசா விட்டதில்லடா…நாமதான் கணக்கு ஒப்படைக்கைல இவன்ட்ட நின்னுட்டு முழிக்க வேண்டிர்க்கு…”

எல்லோரிடமும் கணக்கு வாங்குவதும் இவன்தான். மொத்தக் கணக்கையும் ஆபீஸில் ஒப்படைக்க வேண்டியது இவனின் பொறுப்பு.

”நேத்து வேலைக்கு வந்திட்டு நம்மளயே எப்டி வேல வாங்குறாம் பார்த்தியா?” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம். ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே? யார் செய்வார்கள் இதெல்லாம்? சொல்லாமலே அவனே எடுத்துச் செய்கிறானே? கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன? வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே? எங்குமே தன்னலமற்ற உழைப்புக்கு உரிய மரியாதையே தனிதான்.

சொல்லப் போனால் அந்தத் தியேட்டரில் ஓடும் திரைப்படங்களும் கூட அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்றன என்றும் சொல்லலாம். கடந்த சில வருஷங்களாக அங்கே பழைய படங்கள்தானே ஓடுகின்றன. எம்.ஜி.ஆர். படம்., சிவாஜி படம், ஜெமினி படம், எஸ்.எஸ்.ஆர் படம் என்று வரிசையாக. சொல்லப்போனால் இன்று நகரில் பழைய படம் போடும் தியேட்டர் அது ஒன்றுதான் என்று சொல்லலாம்.

”இதுகளே போதும்ப்பா நமக்கு…அன்னைக்கு எப்டி வசூல் வந்திச்சோ அதுக்கு பாதகமில்லாம இன்னைக்கும் ஒரு வாரத்துக்குக் காசு பார்க்க முடியுது…போதுமே அது! எதுக்குப் புதுப்படத்த செகன்ட் ரௌன்டு, தேர்ட் ரௌன்டுன்னு எடுத்துக்கிட்டு…அதுக்கேத்த மாதிரி டிக்கெட்டும் வைக்க முடியாது…அம்புட்டுக் காசு வாங்கவும் கட்டுபடியாகாது…அம்புட்டுக் காசு கொடுத்து நம்ம தியேட்டருக்கெல்லாம் ஆளுகளும் வரமாட்டாக…இப்டியே ஓடட்டும் பார்க்கலாம்…”

விடாப்பிடியாக இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார் முதலாளி. வாரத்தின் இரண்டு சந்தை நாட்களிலெல்லாம் கூட்டம்தான். கேட்கவே வேண்டாம். அன்றைக்கெல்லாம் பார்த்தால் புரட்சித்தலைவர் படம்தான். படப்பெட்டியை செந்தில்தான் போய் எடுத்து வருவான்.நேரடியாகப் போய்ப் பேசி இந்தப் படம்தான் வேண்டும் என்று தேர்வு செய்து ஓட்டி அதை வசூல் காண்பிப்பதில் கில்லாடி அவன்.

”எத்தனை தடவை டி.வி.ல போட்டாலும். சனத்துக்கு தியேட்டர்ல வந்து பார்க்குறதுல மோகம் குறையலேயப்பா…” என்று சந்தோஷப்படுவார் முதலாளி.

”அது பழைய படத்தோட மவுசு முதலாளி… நம்ம சனம் மனசுல நல்ல விஷயங்கள் ஆழமா அமுங்கிப் போய்க் கிடக்கு…அத ஒருத்தர் எடுத்துச் சொல்லும்போது, அதுக்காகப் போராடும்போது, மனசு மகிழ்ந்து போறாங்கல்ல…அத அழிய விடாம மனசுலயே வச்சிருக்காகல்ல…அதோட நாம நார்மலாத்தான டிக்கெட்டும் வச்சிருக்கோம்…” என்பான் இவன்.

உள்ளே விசில் பறக்கும் வேகத்தைப் பார்த்து “இறந்து இத்தன வருஷங்களிச்சுமா ஒரு மனுஷம் மேல இம்புட்டுப் பாசம் இருக்கும்..” என்று வியந்து போவார்.

இவனுக்கோ சிவாஜி படம்தான் உயிர். ”அப்பா…ஒரு மனுஷன் வாழ்க்கைல எப்டியெல்லாம் இருக்கணும்னு குடும்பப் பாங்கா ஒரு கதையை எவ்வளவு அழகாச் சித்தரிச்சிருக்காங்க? மனுஷங்க ஒருத்தர மிஞ்சி ஒருத்தர் எவ்வளவு நல்லவங்களா இருக்க முயற்சி செய்யுறாங்க…நம்ம நடிகர் திலகம் படமே படம்ப்பா…என்னா ஒரு அநாயாசமான நடிப்பு?

செந்திலின் ரசனையே தனி. அவன் மனசு சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் கொள்ளும். முதலாளியிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டு வீட்டிலுள்ள நாலு டிக்கெட்டுகளையும் தவறாமல் கொண்டு வந்து காண்பித்து விடுவான். ஒரு முறை கூட அவர் எதுவும் கேட்டதில்லை. போறான்யா நம்ம பய அவன்…. இதுதான் அவர் பதிலாயிருந்தது.

“அண்ணே, அந்தத் தியேட்டர் வேலைய மட்டும் விடவே விடாதேண்ணே…அம்புட்டு நல்லவுக உங்க முதலாளி….”

”எல்லாம் நல்லவுகதான்….விழுந்து விழுந்து உழச்சா யார்தான் பொத்திட்டிருக்க மாட்டாக….” என்பான் இவன் பதிலுக்கு. ஆனாலும் மனதுக்குள் நன்றியுணர்ச்சி பெருகத்தான் செய்யும்.

மீதிப் பசையை நடுவிலும் போஸ்டரின் முழுப் பகுதியிலும் தடவ ஆரம்பித்தபோது இன்னொரு கால் கை பசை வேண்டும்போல்தான் இருந்தது. இடது கையால் போஸ்டரைப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்து, “கொண்டாடா வெண்ணை…”என்று கத்தினான். அவன்தான் உட்கார்ந்திருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.

இருட்டுக்குள் ஒரு குத்துக்கல்லில் அமர்ந்து ஜாலியாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் மாரி. இவன் பக்கம் திரும்பியதாகவே தெரியவில்லை.

என்ன ஒரு தைரியம்? தேவையில்லாம வந்து எதுக்கு இப்டி லொள்ளு பண்றான்?

”டேய் ஒழுங்காச் சொல்றேன்…இப்ப நீ அந்த வாளியை இங்க கொண்டாந்து வைக்கல, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது…பார்த்துக்க…” என்றான்.

அந்த நேரத்தில் அந்த சத்தம் போதும் என்பதுபோல் இருந்தது அவன் பேசியது. எதிர்த்தாற்போல் ஒரு பள்ளிக்கூடம். பிறகு சற்றுத் தள்ளி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அதற்கும் அடுத்தடுத்து இரண்டு மூன்று கடைகள். ஒரு ட்டு வீலர் ஒர்க் ஷாப் ஒரு பெட்டிக் கடை என்று இருந்தன. எல்லாவற்றின் வாசல் திண்டுகளிலும், கிடைத்த இடத்திலும், மறைவிலும், தங்களைத் தாங்களே முடிந்த அளவு மறைத்துக் கொண்டும், ஆட்கள் முடங்கியிருந்தார்கள். நிறையக் குறட்டை ஒலிகள் அந்த அமைதியை மீறி எகிறிக் கொண்டிருந்தன. எந்த இடமும் காலியாக இல்லை. அவர்களையெல்லாம் எழுப்புவதுபோலக் கத்த முடியாது. கத்திப் பேசி ஓரிருவர் எழுந்து கொண்டாலும், கதை கந்தல்தான்.

“இங்க போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு எத்தன வாட்டிடா உங்களுக்குச் சொல்றது…மசிருங்களா….கேட்க மாட்டீங்களா…ஸ்கூல் பிள்ளைங்க பார்க்கிற மாதிரியாடா இருக்கு…படிக்க வர்ற பிள்ளைக இதப் பார்த்திட்டு இளிச்சிட்டு நிக்கவா….போடா….இனி இங்க வந்தே காலெ ஒடச்சிப்போடுவேன்….”

எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள்தான். ஆனால் இன்று ஒரு சிறு மாற்றம். அதனால்தான் அவனே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான். இப்பொழுது அவன் ஒட்டிக் கொண்டிருப்பது சினிமா போஸ்டர்கள் அல்ல. ஜவுளிக்கடை போஸ்டர்கள். அழகழகாய் தேவதைகளாய் நிற்கும் பெண்கள். புதிய புதிய கண்களைக் கவரும் டிசைன்களில். பளபளக்கும் சேலைகள். சுடிதார்கள். சல்வார்கமீசுகள், ஸ்கர்ட்கள், டவுசர் சட்டைகள், பேன்ட் சர்ட்கள், என்று பலவித வண்ணங்களில். ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்காமல் போகவே முடியாது நிச்சயம். அதை விளம்பரப்படுத்தும் வேலை இப்போது இவனுக்கு.

ஊருக்குப் புதிதாக ஒரு மிகப் பெரிய ஜவுளிக்கடை வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் விளம்பரம். ஃப்ளக்ஸ் போர்டுகள். பஸ்-ஸ்டான்டு, சிக்னல்கள், சாலைத் தடுப்புகள், உணவு விடுதிகளின் வாசல்கள், டீக் கடைகள், பெட்டிக் கடைகள் என்று எங்கு பார்த்தாலும் அவர்களின் கடை பெயரோடு…பெட்டி பெட்டியாய்த் தூக்கி நிறுத்தி உள்ளே விளக்குப் போட்டு, கடைக்கும் சேர்த்து வெளிச்சமாக விளம்பரத்தை அள்ளிக் கொட்டியிருந்தார்கள். ஒரு டீக்கடைக்குக் கூட இம்புட்டு மவுசா? அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா? ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா வாங்கிப்புடறானுங்க…! ரொம்பவே அதிகம்தான் என்றாலும் மற்ற எல்லா ஜவுளி ஸ்தாபனங்களையும் ஒரே அமுக்காய் அமுக்கி விட வேண்டும் என்று சவால் விட்டது போலிருந்தது அவர்களின் இந்தப் போஸ்டர் கலாச்சாரம்.

“என்னதான் விளம்பரம் வச்சாலும் செஞ்சாலும், போஸ்டர் ஒட்டுற மாதிரி ஆகாதுய்யா…அதான் நம்ம மக்கள் நல்லா அறிஞ்சது…அதுதான்யா அவுங்க பார்வைல பட்டுக்கிட்டே இருக்கும்….போற எடமெல்லாம் நம்ம கடை விளம்பரத்தப் பார்த்து அவனவன் அசந்து போய் ஓடியாந்துரணும்…வேறே எங்கயும் போப்பிடாது…ஊர் பூராவும் ஒரு எடம் விடப்படாது…வருஷக்கணக்கா சினிமாப் போஸ்டர் ஒட்டி அனுபவப்பட்டிருக்கிற உள்ளுர்காரன் ஒருத்தனப் புடி…அவன்ட்ட ஒப்படை இந்த வேலய…கச்சிதமா முடிஞ்சி போயிரும்….ரெண்டே நாள் ராத்திரில வேலை முடிஞ்சிரணும்னு கண்டிஷன் போடு….கேட்குற துட்டை விட்டெறி…தொலையட்டும்…வேலை சொன்ன டயத்துக்கு முடிஞ்சிறணும்னு கறாரா சொல்லிப்புடு…”

“”அய்யா நா இருக்கேன்யா…எங்கிட்டக் கொடுங்கய்யா…உங்க விருப்பப்பிரகாரம் நா முடிச்சிர்றேன்யா.”. கையைத் தலைக்கு மேலே தூக்கி பெரும் கும்பிடாகப் போட்டு நெடுஞ்சாண்கிடையாய் தடால் என்று விழுந்தான் செந்தில்.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்தது அன்று அவனின் பாக்கியம். என்ன ஆச்சரியம். தியேட்டர் முதலாளி மகனுமல்லவா அங்கே நின்றிருந்தார். அந்தக் கட்டடத்தின் பொறியாளரே அவர்தான் என்று அன்றுதான் அவனுக்கே தெரியும். அவரது சிபாரிசில் மறு பேச்சில்லாமல் அது அவனுக்குப் படிந்து போனது அவன் அதிர்ஷ்டம்தான்.

என்னவோ கடை திறக்கப் போறாகளாமே பார்ப்பம்…என்று அங்கே நுழைந்தவன், தற்செயலாய் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த பேச்சைக் கேட்க நேரிட, மண்டியிட்டு தண்டனிட்டு எப்படியோ அந்த ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

ஒருத்தனிடமும் வாய் திறக்கவில்லை. திறந்தால் ஆளாளுக்குப் பங்குக்கு வந்து விடுவார்கள். பிச்சிப் பிச்சி குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையாகிவிடும். யாரையும் அவன் பங்கு சேர்த்துக் கொள்ளவும் முடியாது. சேர்ப்பதென்றால் அதற்கும் போய் பெரிய இடத்தில் பேசியாக வேண்டும். அதெல்லாம் சரிப்படாது. அடிக்கடி அப்படிப் போய் முன்னாடி நிற்க ஏலாது. எதையாவது செய்து காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வந்ததை விடக் கூடாது. அத்தோடு பொதுவாக அவர்களின் போக்கும்தான் சரியில்லையே! தானே அதற்காகத்தானே ஒதுங்கியிருக்கிறோம்!

மூன்று தங்கச்சிகளும். படித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை ஒழுங்காய் கொஞ்சமாவது படிக்க வைத்து கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். படிக்கும் இந்த வயதிலேயே ஒவ்வொன்றும் ஓரொரு வேலையைச் செய்யத்தான் செய்கின்றன. பெரிய தங்கச்சி மீனு, தையல் வேலைக்குப் போகிறது. அடுத்த தங்கச்சி அன்பு அருகிலுள்ள விருதூரில் தறியடிக்கப் போகிறது. கடைசிச் செல்லம் வள்ளி அன்றாடம் பூக்கட்டும் வேலைக்குச் சென்று ஏதோ அதால் முடிந்ததைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சரியாய்ச் சொல்லப் போனால் இந்தத் தியேட்டர் வேலைக்கு முன் அவன் படாத பாடுபட்டிருக்கிறான்.. ஒரு நாள் நெல் மண்டியில், ஒரு நாள் வெங்காய மண்டியில், ஒரு நாள் உறார்ட் வேரில், ஒரு நாள் சிமிண்ட் கடையில், ஒரு நாள் பெயின்ட் கடையில் என்று அல்லாடியிருக்கிறான். நினைப்பதற்கே கூடப் பல சமயங்களில் வெட்கமாகத்தான் இருக்கும் செந்திலுக்கு. தங்கச்சியெல்லாம் கூடப் பின்னால் பூக்கடை, தையல் கடை என்று வைத்து விடலாம் போலிருக்கிறது, தனக்கென்று ஒன்று இது நாள் வரையில் அமையவில்லையே? என்னென்னவோ கையில் கிடைத்ததையெல்லாம்தானே கண்டமேனிக்குச் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்?

“அதனாலென்னண்ணே….நாங்களாச்சும் எங்களுக்குப் பாவாடை தாவணின்னு அப்பப்ப எடுத்துக்கிடுறோம்…நீ உனக்குன்னு எதுவுமே செய்துக்கிறதில்லையே…கிடைக்கிற துட்டை அப்புடியேல்ல கொண்டாந்து அம்மாட்டக் கொடுத்திடுற…வருத்தப் பட்டுக்கிடாதண்ணே…எல்லாம் சரியாப்போகும்…“ – மூத்த தங்கச்சி மீனாள்தான் சொல்லிச் சொல்லி இவனைத் தேற்றி வைக்கும். அந்த மட்டுக்கும் இந்த அளவிலாவது மதிப்பு வைத்திருக்கிறார்களே என்று அவர்களுக்காகவே வாழ்ந்து கழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான் செந்தில்.

அப்படியான நேரத்தில்தானே இந்தப் பின் வீட்டுப் புண்ணியவான் வந்து சேர்ந்தார். அவர் சொல்லித்தானே தியேட்டர் வேலைக்குச் சென்றது.

”எதுக்குண்ணே இந்தப் போஸ்டர் ஒட்டுற வேலையெல்லாம்…அசிங்கமா இருக்குது…”

ஒரு நாள் தங்கச்சி அன்பு இப்படி அலுத்துக் கொண்டபோது இவன் சொன்னான்.

”தப்பும்மா…தப்பு…தப்பு…வேலைல எதுவும் கேவலமில்லேம்மா….பிச்சையெடுக்கிறது, திருடுறது…இது ரெண்டுதான் செய்யக் கூடாதும்மா…மத்த எதுவும் தப்பு இல்லே…தெரிஞ்சிக்கோ….”

அண்ணன் மதிப்பாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுள்ள தங்கைகள். சே! நான் ரொம்பக் கொடுத்து வைத்தவன்…என் வாழ்நாளை இதுகளுக்காகவே செருப்பாய்த் தச்சுப் போட்டாலும் தகும். இப்படி எண்ணி எண்ணித்தான் தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் அவன்.

ருக்கும் பசையையே நன்றாக இழுத்துத் தேய்த்தான் செந்தில். நன்றாகப் பரவியிருக்கிறது என்று மனதுக்கு சமாதானம் ஆனது. அப்படியே சுவற்றில் இழுத்து ஒட்டினான். சுருக்கம் எதுவும் விழாமல், எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடாமல் நிரவலாக முழுப் போஸ்டரையும் இரு கைகளாலும், நன்றாக அழுத்தி ஒட்டிய போது பின்னால் மெல்லிய அரவம் கேட்டது. இருட்டின் அமைதியைக் குலைக்கும் சிறு சிறு அசைவுகள். அசப்பில் ஏதோ வித்தியாசமாய் உணர கலவரத்துடன் சுவற்றோடு சேர்ந்த ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெல்லத் திரும்பியபோது,

அங்கே தென்பட்ட அந்த நால்வரும் அவனைப் பூனையாய் நெருங்கினார்கள். இருட்டு விலகாத அந்த வேளையில், தெருக்கோடி விளக்கு வெளிச்சமும் சற்றும் பரவியிருக்காத அப் பகுதியில் எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு முரட்டுக் கரம் மட்டும் மேல் எழுந்து அவன் வாயைச் சட்டென்று பொத்தி அழுத்தியது.

”ஏண்டா வௌக்கெண்ண, உன்னோட சினிமாக் கொட்டாய் வேலயப் பார்த்தமா செவனேன்னு இருந்தமான்னு நிக்காம, அடுத்தவன் பொழப்பக் கெடுக்கணும்னு எத்தன நாளாடா நினைச்சிட்டிருந்த…?”-மூஞ்சியைக் கடுவன் பூனையாக வைத்துக் கொண்டு கேட்டான் ஒருவன்.

”நாங்க நாலஞ்சு பேர் ஊர் பூராத்துக்கும் எப்பயும் செய்துக்கிட்டிருக்கிறதை நீ வந்து ஒருத்தனாப் புடுங்கிக்கிட்டு, எங்கள வாய்ல நொட்டிட்டுப் போலாம்னு நினைக்கிறியா…?”

கரகரத்த அடித்தொண்டையில் கடூரமாகக் கேட்டவாறே பக்கத்து இருட்டு மூத்திரச் சந்துக்குள் அவனைச் சரசரவென இழுத்துச் சென்ற அவர்களின் கரணை கரணையான முரட்டுக் கைகளும், கால்களும் ஒரு சேரச் சரமாரியாக அவன் மீது பாய்ந்த போது, அந்த திடீர்த் தாக்குதலைச் சமாளிக்கச் சிறிதும் திராணியின்றி, கொஞ்சங் கொஞ்சமாகத் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான் செந்தில்.

”தாய்ளி, இன்னிக்கு நீ செத்தடீ…வசமா மாட்டுன…”

மங்கி மயங்கிய அந்தக் கண்களின் வழியே அவர்களைப் பார்க்க முயன்ற அவன் சற்றுப் பின்னால் விலகி நிற்கும் அந்தச் சின்ன உருவத்தையும் கலக்கமாகப் பார்த்த அந்தக் கடைசி நிமிஷத்தில், அது மாரியப்பன்தான் என்பதை அவன் மனசு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது.

என்னமோ தாங்க முடியாத விபரீதம் நடந்து போய் விடுமோ என்று அவன் மனம் அச்சப்பட்டுத் தடுமாறிய அந்தக் கணத்தில் மனக் கண்ணில் அம்மாவும் மூன்று தங்கச்சிகளும் சட்டென்று தோன்றி அவனை உலுப்ப, எங்கிருந்துதான் அந்தச் மா சக்தி வந்ததோ, அவனுக்கே தெரியாத போக்கின் ஒரே வீச்சில் கையையும் காலையும் உதறிக் கொண்டு துள்ளி எழுந்த செந்தில், ஓங்கி, பலம் கொண்ட மட்டும், அவர்களை மொத்தமாக ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு அங்கிருந்து விடுபட்டுத் தாறுமாறாக ஓட ஆரம்பித்தான். வேகமெடுக்கும் பாம்பு எப்படி விளு விளுவென்று வளைந்து நெளிந்து அசுரப் பாய்ச்சல் பாய்கிறதோ அதுபோல அடங்காத மின்னல் வேகத்தில் அவன் தன் வீடு வந்து மடாரென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போய் விழுந்த போது தங்கச்சிகளும், அம்மாவும் பதறியடித்துக் கொண்டு எழ அப்படியே தன்னிலை இழந்து, கண்கள் செருகி மயக்கமானான் அவன்.

----------------------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...