எதிரே
அமர்ந்திருக்கிறாள் அம்மா
ஏதாவது பேசேன் என்றால்
என்னையே
வைத்தகண் வாங்காமல்
பார்க்கிறாள்
எண்பது வயது அம்மா
என்னில் அப்படி
என்ன பார்க்கிறாள்?
ஏராளமாய் இருக்கும்
அம்மாவுக்கு
அவள் பார்க்க வளர்ந்த
ஆருயிர் உடம்பு இது!
இங்கு என்ன கருப்பு?
ஓ! இது மச்சமா?
இது என்ன காயம்
பாபு அடித்த
கிட்டிப்புள் தழும்புதானே?
அம்மாவின் தடவலில்
ஆறுதல் கொள்கிறது
அந்த ஆறிய தடம்!
என்னையே பார்ப்பதில் – அப்படி
என்னதான் இன்பமோ?
சிறு குழந்தையாய்த்
தாலாட்டி
பள்ளிச் சிறுவனாய்ப்
பாராட்டி
வயது இளைஞனாய்
வகுத்தெடுத்து
இன்று
வாழும் மனிதனாய்த்
தாங்கி நிறுத்தியவள்
எதிரே அமர்ந்திருக்கிறாள் அம்மா
எதுவும் பேசாமல்
என்னையே பார்க்கிறாள்
என்னவோ ஒரு உறுத்தல்
என் மனச் சிறைக்குள்ளே
எதிர்த்துப் பேசினேனே
அதை நினைப்பாளோ?
பொய்யுரைத்தேனே
அந்த ஞாபகமோ
அவள்
கண்களில் ஆறு பெருக
முன் கோபத்தில்
முறுக்கி நின்றேனே
அது உறுத்துகிறதோ?
பெற்ற தாயைப் பேணுதல் மறந்து என்
பெருமையுரைத்தேனே – அந்தப்
பேதமை நினைப்பாளோ?
கல்லாய்ச் சமைந்து
என்னையே பார்க்கிறாளே
ம்! அதுதான் உண்மை
எதிரே அமர்ந்து
என்னையே நோக்கி – என்
பாவங்களைக் கரைக்கிறாள்
அம்மாவால் மட்டும்தான்
அனைத்தையும்
மன்னிக்க முடியும்!!
------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக