02 ஜூலை 2024

 

சிறுகதை          -  தன்னிரக்கம்  - பிரசுரம் தினமணிகதிர் 30.06.2024


     

மணி மூணுதானே ஆகுது…அதுக்குள்ளயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க…? சுதாகரன் படுக்கையை விட்டு எழுந்து பாத்ரூம் போக விளக்கை எரிய விட்டபோது சுந்தரி கேட்டாள்.

லைட்டைப் போட்டவுடன் எழுந்தாளா அல்லது தூங்காமலேயே புரண்டு கொண்டிருக்கிறாளா என்று சந்தேகம் வந்தது இவருக்கு. வயதாகிப் போனால் எல்லாமும் குறைந்துதானே போகிறது. ஆரோக்கியம், உணவு, உறக்கம் என்று.

திரும்பிப் படுத்துக்கோ…வெளிச்சம் கண்ணுல படுறமாதிரி ஏன் கிடக்கே?

ஆமா…நீங்க இப்டி சீக்கிரமே எழுந்து கொட்டமடிக்கக் கிளம்புவீங்கன்னு கண்டனா நான்…? படுங்க பேசாம…நாலு மணிக்கு எழுந்தாப் போதும்…



ஐயையோ…தூங்கிப் போயிட்டேன்னா சங்கடம்….அந்த டென்ஷன் ஆகாது. நா அவ்வளவுதான். நீ தூங்கு…. பல் தேய்ச்சிட்டு பால் காய்ச்சி காப்பி குடிச்சிக்கிறேன். அப்புறம் வா நீ….

அவருக்கு எல்லாமே அரை மணி நேரத்துக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னமே அந்தந்த வேலைக்கேற்றாற்போல் முடிந்து விட வேண்டும். அநாவசிய டென்ஷன் கூடாது. சின்ன வயசிலிருந்தே அப்படித்தான். அது இன்றுவரை விடாது தொடர்கிறது. சீக்கிரமே எழுவது மற்றவர்களுக்குக் குடைச்சலாகத் தெரிகிறது. என்ன செய்ய?

இன்று அவர் தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். அதற்காக இருபது நாட்களுக்கு முன்னேயே ரயிலில் டிக்கெட் ரிசர்வ் பண்ணி விட்டுக் காத்திருக்கிறார். ஒவ்வொரு நாளாகக் கழித்துக் கொண்டு வருகையில் மனசு திக் திக் என்கிறது.

எதற்காக?  ஊருக்குப் போக வேண்டுமே என்கிற அலுப்பு ஒரு பக்கம். அங்கே போய் சமைத்துச் சாப்பிட வேண்டுமே என்கிற சிரமம் இன்னொரு பக்கம். பேரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்கிற வருத்தம் வேறு. அவனுக்குத் தெரியாது இவர் சூட்கேஸைத் தயார் பண்ணியது. தேவையான துணிமணிகளை எடுத்துக் வைத்துக் கொண்டு மெத்தைக் கட்டிலுக்கடியில் தள்ளி விட்டார். அவன் பார்வையில் படாமல். பட்டால் சூட்கேஸை எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேன் என்பான். ஊருக்குப் போகக் கூடாது என்று சொல்லி அழுவான். நானும் வருவேன் என்பான். அந்த சுகமே தனிதான். நமக்காக ஒரு புதிய ஜீவன். மனது உருகித்தான் போகிறது.

 காலையில் அஞ்சுக்கெல்லாம்தான் இவர் கிளம்பி விடுவாரே. அவன் ஆறரை ஏழு என்று எழுந்திரிக்கையில் முதலில் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். அழுது அடம் பிடிப்பான். வீட்டை ரெண்டாக்குவான்.  பிறகு பாட்டி சமாதானம் செய்ய மெல்ல மெல்ல சரியாய்ப் போகும். வேறு வழி? பையனோடு இருப்பு என்று சென்னைக்கு வந்து விட்டாலும் இன்னும் சொந்த ஊரில்தான் வரவு செலவு, வங்கிக் கணக்கு வழக்கு எல்லாம். அங்கைக்கும் இங்கைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அங்கு போகாமலும் இருக்க முடியவில்லை…இங்கேயே கிடக்கவும் இயலவில்லை.

பையனோடுதான் இருப்பேன் என்று பிடியாய் உட்கார்ந்து விட்டாளே?  மருமகப் பெண்ணும் எதுவும் சொல்வதில்லை. எங்கே சொல்ல? என்னத்தைச் சொல்ல? அதுதான் பொழுது விடிந்ததும் விடியாததுமாய் வேலைக்கு என்று கிளம்பியாக வேண்டியிருக்கிறதே? கம்பெனி பஸ்ஸைப் பிடிக்க டாண் என்று காலை ஏழுக்கு ஸ்டாப்பில் இருந்தாக வேண்டும். ராத்திரி திரும்புகையில் மணி எட்டாகி விடும். ஓய்ஞ்சு உட்கார்ந்து…அய்யோடா…அப்பாடா…!  என்னவோ நடக்கிறது போங்கள். இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல? யந்திர வாழ்க்கை என்றால்  உண்மையில் இப்போதுள்ள ஐ.டி. இளைஞர்கள் இளைஞிகள் வாழ்கிறார்களே அதுதான். மூத்த தலைமுறைக்காலமான பத்து டூ அஞ்சு எல்லாம் என்றோ மலையேறி விட்டது.

நானே சொந்தமாய்ச் சமையல் செய்து சாப்பிடுவதுபற்றி சுந்தரிக்கு ஆதங்கம்தான். இந்த மனுஷன் என்னத்த சமைச்சான்?  என்கிற அலட்சியம்.

 உங்களை யாரு சமைக்கச் சொன்னது? ஒரு மாமி இருக்காங்கன்னு சொன்னீங்களே…அவுங்க கிட்டச் சொல்லிட்டா போச்சு… கொண்டு வந்துட்டுப் போறாங்க…

எப்டியானாலும் டிபன் நான்தானே பண்ணியாகணும்? – ஊர் போய் முதல் வேலையாய் மாவு அரைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்து முட்டியது அவரை. போய் இறங்கியதும் இறங்காததுமாக அரிசியும் உளுந்தும் வாங்கப் புறப்பட வேண்டும்.  அப்படியே வாங்கி வந்தாலும் ஊறப்போடத் தண்ணீர் வேண்டும். அதற்கு வாசலில் வேன் வர வேண்டும். போய்ச் சேரும் நேரம் மதியம் ஒரு மணி. அவனோ காலை எட்டு எட்டரைக்கே கீ…கீ…கீங்…என்று காது கிழிய உறாரன் அடித்துக் கொண்டு வந்து போயிருப்பான்.  பதப்படுத்தப்பட்ட தண்ணீர் என்று பெயர். மூணு நாள் கழிந்தால் புழு நெளிகிறது. அதற்குள் அதை முழுவதும் பயன்படுத்தியாக வேண்டும். எத்தனை தரம் எதிர் வீட்டில் தண்ணீர் கேட்பது? சட்டியைத் தூக்கிக் கொண்டு போய் “யம்மா…பிச்ச போடுங்க….“என்பது போல்?

ஒண்ணும் சங்கடப்படாதீங்க சார்…கூச்சப்படாமக் கேளுங்க….என்றுதான் சொல்கிறார்கள்.

.சார் ரொம்பக் கூச்சப்படுவாரு…நாமளே கொண்டு போய்க் கொடுத்திடுவோம்…பாவம்…! என்று தண்ணீரை ஒரு அளவுப் பாத்திரத்தில் தூக்கிக்கொண்டு வந்து இந்தாங்க பிடிங்க…என்றா தருவார்கள்? அப்படியென்ன அவசியம் இருக்கிறது அவர்களுக்கு? பூட்டிக் கிடக்கும் வீட்டை யாரும் தூக்கிக் கொண்டு போகாமல் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்வதே பெரிது. ஆளிருக்கிறது என்பதற்கடையாளமாய் மாலையானால் வாசல் லைட்டைப் போடுவதும், பின் பத்து மணிக்கு வந்து அணைப்பதும்…யார் செய்வார்கள்? அந்த அளவை, கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? மேலும் மேலுமா சிரமம் கொடுப்பது?

ரயில்ல ஒரு தண்ணீர் பாட்டில் தர்றான். நீங்க இங்கேயிருந்து ஒரு பாட்டில் வெந்நீர் கொண்டு போறீங்க…ஏ.சி. ட்ரெயினில் அதிகம் குடிக்க மாட்டீங்க…இறங்கினவுடனே பத்து ரூபாயக் கொடுத்து இன்னொரு ரயில் நீர் பாட்டில் வாங்கினா அன்னைக்குப் பொழுது ஆச்சு…நாளைக்குக் காலம்பற வேன்காரன் வந்துடப் போறான். பிறகென்ன? காசு செலவழிக்க ஒவ்வொண்ணுக்கும் யோசிச்சா எப்படி?  கஞ்சப் பிசினாறி….!

நினைப்பது எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாய்க் கேட்டு விடுகிறாள். போனது போக மிச்சம் என்பதுபோல. அப்படித்தான் இதையும் கேட்டாள்.

உங்களை யாரு டிபன் பண்ணிக்கச் சொன்னது? அதையும் சேர்த்து அந்த மாமிட்டச் சொல்லிட வேண்டிதானே? சப்பாத்தியோ, தோசையோ கொண்டு வந்துட்டுப் போறாங்க…ஊருக்குத் திரும்புற அன்னைக்கு மொத்தம் எவ்வளவு ஆச்சுன்னு உருவிக் கொடுத்துட்டு வருவீங்களா? எல்லாத்துக்கும் யோசிச்சிக்கிட்டே இருக்கீங்களே…? மிச்சம் பண்ணி என்னத்தக் கண்டீங்க? ஒரு ஸ்வீட் வாங்கி ஆசையா உள்ளே தள்ள முடியமா? ஆகாது உடம்புக்கு.  மேலும் மேலும் சேமிச்சு என்ன பண்ணப் போறோம்? சேர்த்து வச்சதெல்லாம் போதும். அவுங்கவுங்க சம்பாத்தியம் இருக்குதானே…நாம தூக்கிக் கொடுக்கிறதுலயா வாழப் போறாங்க…நம்மளோட இதுநாள் வரையிலான சேமிப்பு நாம சாகுற வரைக்கும் நம்மைப் பாதுகாத்துக்கிறதுக்கு… முதல்லயே தூக்கிக் கொடுத்துட்டு ஓட்டாண்டியா அம்போன்னு நிக்கிறதுக்கில்லே….புரியுதா?

பையன் இருக்கும்போதே அவன் காது கேட்கத்தான் இதையெல்லாம் சொல்கிறாள். மருமகளும் இருக்கிறதுதான். அவர்களும் கேட்கிறார்கள்தான். ஆனால் எதுவும் பதில் பேசுவதில்லை. எதையும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கடைசியில் நம்ம கைக்குத்தானே வந்தாகணும்ங்கிற எண்ணமிருக்கலாம். அவள் அளவுக்கு கணீர்னு தன்னால் சொல்ல முடியாது. வாயே திறப்பதில்லையே?

திடீர்னு உடம்புக்கு வந்திடுச்சின்னா…வைத்தியச் செலவுக்கு வேண்டாமா? லட்ச லட்சமான்னா ஆகும். அதுக்குப் பையன்ட்டக் கையேந்து வீங்களா? உங்க சுய கௌரவத்துக்கு அதெல்லாம் ஒத்து வருமா? அதனாலதான் அப்டிச் சொல்றது…..

என்ன இப்டிப் பேசற? அவன் தனியா ஒரு வீடு கட்டணும்ங்கிறான். அதுக்கு நாம உதவாம வேறே யாரு உதவுவாங்க…? வாகான இடமாப் பார்த்திட்டிருக்கான்…அமைஞ்சிதின்னா அட்லீஸ்ட் இடம் வாங்குறதுக்காவது நாம கொடுத்துதவ வேண்டாமா?

பொசுக்குன்னு நீங்களே எடுத்து நீட்டிட்டீங்கன்னா…தங்களோட சேமிப்பு, சேஃப்டின்னு அவுங்களுக்குத் தோணிடும். அவங்க பணத்தையே கொடுக்கட்டும். இருப்புல குறைஞ்சாத்தான் திரும்ப சேமிக்கணும்ங்கிற புத்தியும் அக்கறையும் வரும்….அவுங்களா எதுக்கும் வாயைத் திறக்காத போது நீங்களே எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி முணுக் முணுக்குன்னு முன்னால போய் நிக்குறீங்க…? யாரையும் அவ்வளவு சுலபமா நம்பிடாதீங்க…தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான். அத மனசல வச்சிக்குங்க….

யோசிக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரு தீர்மானம் இருந்தது சுந்தரிக்கு. ஊசலாட்டம் எல்லாம் தனக்குத்தான். இப்படிச் செய்யலாமா அப்படிச் செய்யலாமா…என்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் தன்மை. மனிதனின் பாதிக் காரியங்கள் இப்படித்தான் கெடுகின்றன. அல்லது நடக்காமல் போகின்றன.

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. காப்பி குடித்து முடித்திருந்தார் சுதாகரன். சமீபமாக இந்தக் காப்பியும் தன் வயிற்றுக்கு ஆவதில்லை. உப்பென்று பெரிதாக்கி விடுகிறது. பசி மந்தித்துப் போகிறது.  அடியோடு நிறுத்தி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு காலை உற்சாகத்திற்கு என்னதான் செய்வது? உற்சாக பானம் என்று ஒன்று உள்ளதா என்ன? எல்லாம் நாமே நினைத்துக் கொள்வதுதான். அல்லது பழக்கத்திற்கு அடிமையாவதுதான்.

உங்க பையன் டீதானே சாப்பிடுறான். அதுபோல நீங்களும் டீக்குப் பழகிக்குங்க…அது அவ்வளவா தொந்தரவு செய்யாது….ஆனா ஒண்ணு. அதையும் ஒண்ணு ரெண்டோட நிறுத்திக்கணும். மூணு நாலுன்னு தாண்டக் கூடாது. ரொம்பத் திக்காவும் குடிக்கக் கூடாது. முதல் முறையாப் போட்ட டீத்தூள்லயே ரெண்டாம் டீயையும் போட்டு லைட்டாக் குடிக்கப் பழகிக்கணும். அப்பத்தான் வயித்துத் தொந்தரவு இல்லாம இருக்கும்….

டீக்கு மாறி விடுவோமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் சுதாகரன். யோசனையில்தான் காலம் கழிகிறதேயொழிய, அந்த டிகாக் ஷன் காப்பியின் மணம் மூக்கிலேயேதான் நிற்கிறது.  காஃபி மேக்கரில் பொடியைப் போட்டுத் தண்ணீர் ஊற்றும்போதே சொட்டுச் சொட்டாய் இறங்கும் அந்த திக்கான டிகாக் ஷன் மணம் அதென்ன இன்று நேற்றா வந்தடைந்தது? இளம் பிராயம் முதலே உயிரோடு  உறவாடிக் கொண்டிருக்கிறதே? இன்டியன் காஃபி என்று காபிக்கொட்டைக்கு வரிசையில் நின்று கெஞ்சிக் கூத்தாடி அரை கிலோவும் ஒரு கிலோவுமாக வாங்கி வந்து அதை அரைத்துக் காபிப் பொடியாக்கி….அந்த நாட்களில் அதுவே ஒரு பெரும் சாதனை. அதுவும் இல்லாமல் இருந்த காலமும் உண்டுதான்.

காபிப்பொடிக்கும், சர்க்கரைக்கும் காசில்லாமல் அப்பா கொண்டு வரும் கொஞ்சூண்டு துட்டில் எத்தனைக்கு முழம் போட்டிருக்கிறாள் அம்மா. அதுவும்தானே நடந்தேறியது. கஜ கர்ண வித்தை பயின்ற காலம் அது. அன்று கிடைத்த தண்ணிக் காப்பி பிறகு வந்த காலங்களில் இதக் கூடப் பிரியப்பட்ட மாதிரியான க்வாலிட்டில குடிக்க உரிமையில்லையா? அப்புறம் எதுக்குத்தான் சம்பாதிப்பதாம் என்றாகிப் போனது. சின்னச் சின்ன ஆசை…சிறகடிக்க ஆசை….!.

குளித்து முடித்து வெளியே வந்தார் சுதாகரன். அந்தக் காலை நேரத்தில் எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்து  ஃப்ரெஷ்ஷாக இருப்பது மனதுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

இந்த பாருங்கோ….மூணு தோசை வச்சிருக்கேன். அடில மிளகாய்ப் பொடி…போறுமா…இன்னொண்ணு வைக்கட்டுமா? -கேட்டாள் சுந்தரி.

அவள் எழும் நேரத்தை அவளுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. எப்பொழுது எழுந்தால் எப்பொழுது வேலை முடியும் என்கிற தீர்மானம் உண்டு.

 பதில் சொல்லுங்கோ…காதுல விழுந்துதா?

மூணே போதும்….அப்புறம் வயித்தக் கலக்கித்துன்னா சங்கடம்…ரயில்ல டூ பாத்ரூம் போறதெல்லாம் அத்தனை சரிப்படாது. லக்கேஜை விட்டுட்டுப் போகணும்.  பயமாயிருக்கும்…வேணாம்….

உங்களுக்கு எல்லாத்துக்கும் பயம். மனுஷா எல்லாரும் என்ன திருடாளா? நம்மள மாதிரிதானே மத்தவாளும்…கொஞ்சம் பார்த்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போனா ஆச்சு….யாரையும் நம்புறதில்லே…

நம்ப முடியாதுடி….இந்தக் காலம் அப்படி. நாம யார்ட்டச் சொல்லிட்டுப் போறோமோ அவனே நம்ம பொட்டியைத் தூக்கிட்டுக் கம்பி நீட்டிடுவான்…அல்லது யாராவது கவனிச்சிட்டிருந்தாங்கன்னா அவங்க அபேஸ் பண்ணிடுவாங்க…தலைக்கு மேலே வச்சதே இருக்கா…இருக்கான்னு தலையை நிமித்தி நிமித்திப் பார்க்க வேண்டியிருக்கு…! நீ என்னமோ பேசறே….

அய்யே…போதுமே உங்க பேச்சு…!  உங்கள மாதிரி நாலு பேர் பயந்தாப் போதும்…அப்புறம் ட்ரெயினுக்கே நாளடைவுல கூட்டம் குறைஞ்சு போயிடும். திருட்டுப் போயிடும்னு….அப்டியெல்லாம் யாருமில்லே…மனுஷாளை நம்பப் பழகிக்குங்கோ…

இனிமேலா…? சொந்த பந்தங்களையே நம்ப முடில இந்தக் காலத்துல….பார்க்கப் போனா எங்க வந்து ஒட்டிண்டிடுவாளோன்னு அளந்து அளந்து பேசறாங்க…ஃபோன்ல பேசுறது கூட குறைஞ்சு போச்சு…இல்லன்னா ரொம்ப இஷ்டமா இருக்கிற மாதிரி…வாயால வழிய விடுறாங்க…எல்லாம் பொய்….அநியாய சுயநலம்….அவனவனுக்கு அவனவன் பொண்டாட்டி, புள்ள…இது மட்டும்தான்…தாய் தகப்பனக் கூட எவனும் கொண்டாடுறதில்ல…ஒரு மூலைல கிடந்துட்டுப் போகட்டும்…இல்லன்னா முதியோர் இல்லத்துல சேர்த்துடுவோம்னு துணிஞ்சிடுறாங்க…இவனுங்களுக்கு வயசே ஆகாதா? நாளைக்கு இவனுங்களும் கிழப்பயலுக ஆக மாட்டாங்களா?மார்க்கண்டேயர்களா எல்லாரும்?  அப்போ அவனவன் பிள்ளைக அவுங்களத் தூக்கி எறிஞ்சாங்கன்னா? எவனாவது இத யோசிக்கிறானா? முதியோர்களை மதிக்காத, கொண்டாடத் தெரியாத சமூகம் என்ன சமூகம்?

அது கெடக்கட்டும்….இந்த எவர்சில்வர் சம்படத்துல சாதம் வச்சிருக்கேன். கொஞ்சமா பால் ஊத்தியிருக்கென். அங்க போய், போற வழிக்கு தயிர் பாக்கெட் வாங்கிட்டுப் போங்க. சாதத்தோட தயிரைக் கலக்கி  சாப்பிடுங்க….ஊறுகாயும் தனியா சுத்தித் தர்றேன்….

ஏறக்குறைய எல்லாம் ரெடி. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தோசை மாவையும் ஊற்றி வைத்திருந்தாள். போய் இரண்டு நாளைக்குக் கவலையில்லை. பத்து வீடு தள்ளி மாவு விற்கிறார்கள்தான். ஏனோ அந்த மாவு வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அரைச்ச மாவையே அரைச்சு…கரைச்ச மாவோட கரைச்சு…எதுக்கு அதையெல்லாம் சொல்லிக் கொண்டு…அவர்கள் பிழைப்பு அது….விற்றுத் தள்ளுகிறதே…! அந்த பகாசுரக் கிரைன்டர் வாயிருந்தால் அழும்…! அவர்கள் தூங்கும்போதேனும் அதுவும் தூங்குமா என்பதே சந்தேகம்தான்…!! ஒருவேளை அந்தச் சத்தம் இல்லையெனில் அவர்களுக்குத் தூக்கமே வராதோ என்னவோ…? அப்படியும் இருக்கலாமே!

என்னப்பா..ரெடியா…? கேட்டுக் கொண்டே பையன் விழிப்பு வந்து  எழுந்து வந்தான்.

அலாரம் வச்சிருந்தியா? கரெக்டா எழுந்திட்டியே?

ஆமாம்ப்பா….உன்னை எக்மோர்  கொண்டு விடணும்ல…?

அநாவசியமா உன்னைச் சிரமப்படுத்த வேண்டிர்க்கு…பேசாம ஏதாச்சும் டாக்ஸி புக் பண்ணினேன்னு வச்சிக்கோ…நாம்பாட்டுக்கு இங்க வாசல்லயே டாட்டா சொல்லிட்டுப் போயிப்பேன். ராத்திரியே புக் பண்ணிட்டா அவன்தான் காலைல டாண்ன்னு நாலே முக்கால் அஞ்சுக்கெல்லாம் வந்து நிக்கிறானே? வாடகைதான் தாறுமாறாக் கேட்பான். புக் பண்றபோது ஒண்ணு காண்பிக்கும். எக்மோர் போய் இறங்கிற போது வேறொண்ணைக் காண்பிக்கும். அவன் சொல்றதுதான்..கொடுத்ததுதான். வயித்தெறிச்சலா இருக்கும். இதென்னடா இது…ட்ரெயின் டிக்கெட்டுல பாதியக் கேட்கிறானேன்னு….

எதுக்குப் புலம்புறே? நான்தான் கொண்டு விடுறேன்னு சொல்லிட்டேன்ல..அதுக்குத்தானே எழுந்திரிச்சேன்….நம்மகிட்டயோ கார் இருக்கு….அப்புறம் எதுக்கு டாக்ஸில போகணும்? ஒண்ணும் பிரச்னையில்லப்பா…நீயா ஏதாச்சும் நினைச்சிக்காதே…மனசைப் போட்டு உழட்டிக்காதே…!

அதுக்கில்லே…ஏஏஏ……இப்டி நாலுக்கும் நாலரைக்கும் எழுந்திரிக்க வேணாமே….ஆறரை ஏழுன்னு தூங்கலாமே… என்னால தூக்கம் கெடுதுதானே…? ராத்திரி பன்னெண்டு…ஒண்ணுன்னு வேலை பார்த்துட்டு வந்து விழறே…? அதுதான் சங்கடமாயிருக்கு….

ஒரு சங்கடமுமில்லே…எப்பயாச்சும் ஒருவாட்டிதானே?   கிளம்பு…கிளம்பு…!

எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாயிற்றா என்று ஒரு முறை ரீவைன்ட் செய்து பார்த்துக் கொண்டார். பர்ஸ்…ஆதார் கார்டு…ஏ.டி.எம் கார்டுகள் பணம்…பத்திரமா என்று பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்துக் கொண்டார். சுந்தரி கொடுத்த டிபன் ஐட்டங்கள் ஒரு தனி பேக் முதுகில் சுமக்க…அப்புறம் ஒரு சூட் கேஸ்…அதில் பக்கவாட்டில் செருகிய வெந்நீர் பாட்டில். மொபைலைத் திறந்து ஒரு முறை டிக்கெட்டை சரி பார்த்துக் கொண்டார்.

எந்தக் கோச்,…எந்த சீட்…என்பது அடிக்கடி மறந்து போகிறதே…

ஸ்கிரீன் ஷாட் எடுத்து சேவ் பண்ணி வச்சுக்கோப்பா….பையன் சொல்லியிருந்தான்.. ஜங்ஷன் போய் இன்னொரு முறை திரும்பவும் நிச்சயம் பார்க்க வேண்டியிருக்கும். கண்டிப்பாய் மறந்துதான் போகும். அந்தப் பதட்டமெல்லாம் வேண்டாம் என்றுதான் ரொம்ப முன்னதாகவே போய் நிற்பது.

கோச் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்வதும் ஒருவகையில் நிம்மதிதான். ரயில் தனக்கு நேரம் கொடுப்பதற்குப் பதிலாக தான் அதற்கு நேரம் கொடுப்பது. அதில் ஒரு அலாதி திருப்தி. அப்படி அமர்ந்திருப்பதும், ரயில் ஏற வரும் பல்வேறு முகங்களை ரசித்துப் பார்ப்பதும் தனி சந்தோஷம்.

பத்திரமாப் போயிட்டு வாப்பா….சமைக்க முடிலன்னா சிரமப்படாதே…அம்மா சொன்ன அந்த மாமிட்ட வாங்கி சாப்பிடு…இல்லன்னா ஓட்டல்ல போய் சாப்பிடு….காசு செலவழியுமேன்னு பார்க்காதே…உன் பென்ஷன் காசுல ஒரு ஐயாயிரம் கூட மாசம் கூடி நீ செலவு பண்றதில்லே…எனக்குத் தெரியும்….அப்டியெல்லாம் இருக்கணும்னு அவசியமில்லே….விருப்பப்பட்டதை வாங்கிச் சாப்பிடு…சுணங்காதே…எல்லா டிரான்சாக் ஷனையும் சென்னைக்கு மாத்திட்டு, அந்த வீட்டையும் பேசாம வித்துடலாம்.அதான் முப்பது  வருஷத்துக்கு மேலே குடியிருந்தாச்சில்ல…போறாதா….சொல்லிட்டேதான் இருக்கேன்..…நீதான் கேட்கமாட்டேங்கிறே…?  அலையாமக் கொள்ளாம சிவனேன்னு  சென்னைலயே கிடக்கலாம்தானே…?  சரி…கவனமாப் போ….ரயில்ல ஏறி இறங்குறபோது ஜாக்கிரதை…ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போ…பஸ்ல போகாதே…இந்த லக்கேஜையும் வச்சிட்டு பஸ்ல போகக் கூடாது…எங்கயாவது விழுந்து வப்பே…புரியுதா? -சுற்றிலும் பலரும் இதைக் கவனித்துக் கொண்டிருப்பது கொஞ்சம் லஜ்ஜையாக இருந்தது இவருக்கு. பேசிப் பேசியே என்னைத் தொண்டு கிழம் ஆக்கிடுவாங்க போல்ருக்கு….!

பத்திரமாப் போயிட்டு வாப்பா…டாட்டா…பை…பை…இறக்கி விட்டானோ இல்லியோ….பறந்து விட்டான்.  பின்னால் அலறும் வண்டிகளின் சத்தம் அப்படி விரட்டுகிறது. தூரத்தே போகும் காரையே பார்த்துக் கொண்டு ஒரு நிமிடம் நின்றார் சுதாகரன். நீண்ட பெருமூச்சு கிளர்ந்தது.

மனுஷனுக்கு வயசாகக் கூடாது. ஊரிலிருக்கும் வீட்டை விற்பது, கணக்கு வழக்குகளை சென்னைக்கு மாற்றுவது என்று எல்லாவற்றிலும் தலையைக் கொடுக்கிறார்கள்.  உரிமையுண்டுதான்…அவளும் கேட்டுக் கொண்டிருக்கிறாளே? அவள் பாடு ஜாலி. கழிந்து விடும். தன் பாடு? இப்படியும் ஒரு சந்தேகம் வரத்தானே செய்கிறது?

நாளைக்கு இவனே என்னை வெளியே போ என்றால் நான் எங்கு போய் நிற்பதாம்? நடக்காது என்று எப்படிச் சொல்வது? எதுவும் நடக்கலாமே? சேச்சே…நம்ம பையன் அப்டியெல்லாம் இருக்க மாட்டான்…! இப்படி நினைக்க இவர் தயாரில்லை. காலம் யாரையும் எங்கேயும் புரட்டிப் போடும். தூக்கி வீசும்.

 இங்க வந்துடு…என்று சொல்வதற்கு நான் கட்டிய அந்த மாளிகைதானே இன்றும் காத்துக் கொண்டிருக்கிறது? அது அவருக்கு ஒரு கோயில். அங்கிருந்தால் அப்படியொரு நிம்மதி மனதுக்கு. சொல்லப் போனால் அவரின் ஆரோக்கியமே அங்குதான்.

இவ்வளவு எதற்கு?

அம்மா!…அப்பா தனியா அலையறா? அது எனக்குப் பிடிக்கல..நீயும் கூடப் போயிட்டு வா…இந்த வயசுல அப்பாவத் தனியா அனுப்பறதுக்கே எனக்கு இஷ்டமில்ல…ஒருத்தருக்கொருத்தர் துணை…அப்பப்போ ஒரு மாசம் போய் இருந்திட்டு வாங்கோ…இங்க நாங்க எப்டியோ சமாளிச்சிக்கிறோம்…எங்களுக்கும் பழகணும்ல…தனியா இருந்து செய்து பார்த்தாத்தானே கஷ்ட நஷ்டங்கள் புரியும்? நாளைக்குக் குழந்தைன்னு ஒண்ணு வந்திடுச்சின்னா இன்னும் கஷ்டமில்லையா? அதுக்குள்ளேயும் எங்களுக்கு கொஞ்சமாச்சும் எக்ஸ்பீரியன்ஸ் ஆக வேண்டாமா? கிளம்பு…கிளம்பு…நீயும் அப்பா கூடப் போறே….-

சொல்லவில்லையே? இன்றுவரை ஒரு வார்த்தை இது குறித்துப் பேசியிருப்பானா? அம்மா புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே அலைகிறான் இன்றும்.

என்னிடம் இவ்வளவு பேசும் இவன் தன் அம்மாவிடம் ஏன் என் சார்பாய்ச் சொல்ல மாட்டேனென்கிறான்? என் சார்பென்ன…பொதுச் சார்பு…அதுதானே சரி… சின்ன வயதிலிருந்தே அம்மா கோண்டுதான் அவன். இன்று மனைவி என்று ஒருத்தி வந்து விட்ட பின்பும் அப்படியே இருந்தால்?

அட அவன்தான் வேண்டாம்…இவளுக்காவது தெரிய வேண்டாமா?

பேசாம அமுந்து கிடங்கோ. ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் நாம ரெண்டு பேருமே போவோம்…நானும் உங்க கூட வர்றேன்….வீட்டையும் சுத்தம் பண்ணிட்டு லோகல் வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு வரலாம். எல்லா கோயில்களுக்கும் போயிட்டு சாவகாசமாத் திரும்பலாம்…ஒண்ணும் கெட்டுடாது…! சந்தோஷமாப் போயிட்டு வரலாம்… ….-சொல்லவில்லையே?

நான் இங்கதான் இருப்பேன். என் பையனோடுதான் இருப்பேன்…அங்க வரலை ….என்னால முடியலை….!! – திட்டமிட்ட திடமான வார்த்தைகள். முடியலை என்பது பொய். இங்கு கிடந்து மாங்கு மாங்கு என்று வேலை செய்ய மட்டும் முடிகிறதா?

நா மட்டும் என்ன எள வட்டமா…அலையறதுக்கு? எனக்குந்தான் முடியல…ஊர்ப்பட்ட டிரான்சாக் ஷனையும் வீட்டையும் அங்க விட்டுட்டு அம்போன்னு இங்கயே குந்தியிருக்க முடியமா? அந்த வீட்டோட கதி என்னாகுறது? பூட் பங்களாவா ஆயிடும் …! பேய்தான் குடியிருக்கும் அப்புறம்!

என் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் இல்லை.  என்ன உலகமடா இது?

அம்மாவின் இந்தப் பிடிவாதப்  பேச்சை அவனும் அமைதியாய்க் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். என்னிடம் பேசும் உரிமை கூட அவனுக்கு அம்மாவிடம் இல்லையோ? இதை அவன் பெண்டாட்டி கவனித்துக் கொண்டேயிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியாதா? ஆனாலும் அவன் அம்மா கோண்டுதான்.  

நான் ஊருக்குக் கிளம்பும்போதெல்லாம்  வேண்டியதைப் பார்சல் பண்ணி ஆளைக் கிளப்புவதில்தான் சுந்தரி  குறியாய் இருக்கிறாள். என்னத்துக்கு இப்டி அலையறேள்…? என்று கரிசனமாய்  ஒரு வார்த்தை இல்லை இன்றுவரை.  வீடுவரை உறவு…வீதி வரை மனைவி…!

எத்தனை நாளைக்கு என்று பார்க்கிறேன்? -  தனக்குள் ஆதங்கமாய் முனகிக் கொண்ட சுதாகரனுக்குள் நீண்ட ஏக்கப் பெருமூச்சொன்று  கிளர்ந்தது.

எதிரே தன் வயதொத்த தம்பதியர் சிலர் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருப்பதை அவரின் ஏக்கப் பார்வை தீர்க்கமாய்க் கண்ணுற்றது. லேசாகக் கண்கள் கலங்கியது அப்போது.

                                    --------------------------------

02 ஜூன் 2024

 

”மதிப்பு”                  சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024



                                       ---------------  

எதுக்குக் கிடந்து இப்படித் துடிக்கிறே? என்று  கேட்டார் சுகவனம்.

இப்போதுதான் அறிவிப்பே வந்திருக்கிறது. விழா வைப்பதற்கு இன்னும் தேதி குறிக்க வேண்டும். இன்னும் சில போட்டிகளில் முடிவு அறிவித்தாக வேண்டும். எல்லாப் போட்டிகளுக்கும் முடிவு அறிவித்த பின்பே விழாவைப் பற்றி யோசிப்பார்கள். இப்பத்தானே முடிவே அறிவிச்சிருக்கோம் என்கிற அயர்ச்சி அவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். விழா என்பது பெரிய எடுப்பு.

இப்போதே பரிசுத் தொகை கைக்கு வந்துவிட்டதுபோல் இவள் ஏன் கிடந்து துடிக்கிறாள்? – மேகலாவைக் கூர்ந்து நோக்கினார் சுகவனம்.

அவளின் உற்சாகம் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தது இவருக்கு. இந்தப் பத்தாயிரம் ஒரு  பெரிய  தொகையா? என்று நினைத்தார். ஏதோ ஒரு லட்சம் கிடைத்ததுபோல் சந்தோஷிக்கிறாளே? இதைப் போல் எத்தனை பத்தாயிரங்களுக்குப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பேன்? அது இவளுக்குத் தெரியுமா?

தெரிஞ்சதுனாலதானே பிரச்னையே? அது மனசுல கிடந்து அழுத்திட்டிருக்கிறதுனாலதானே இந்தப் பேச்சே வருது!-இப்படியும் நினைத்துக் கொள்ளத் தலைப்பட்டார். புத்தகமா வாங்கிக் குவிங்க…படிக்கிறீங்களோ? அடுக்கி வச்சு அழகு பார்க்கிறதுக்கா? - மனசுக்குள் கிடந்து புகைந்து கொண்டிருக்கும் ஆறா நெருப்பு.! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்….திக்கித் திணறி…! எதுடா சமயம் என்று காத்திருந்ததுபோல்…இப்போது.கணக்கில் வரவு வைக்கிறாள்.

இருந்திருந்தும் ஒரு பரிசு கிடைச்சிருக்கு….செக் கைக்குக் கிடைச்சவுடனே நேரா என்கிட்டே கொண்டு வந்து கொடுத்திடணும்…தெரிஞ்சிதா?  - புதிய அதிகாரம் இது.

அதென்ன இருந்திருந்தும்? இதற்கு முன்பு வாங்கிய நான்கைந்து பரிசுகளை வரவு வைக்கவில்லையோ? வருஷங்கள் ஆயிற்றே என்று மறந்து விட்டாளோ?

அதெல்லாம் ஆரம்பத்துல, நீங்க இவ்வளவு கணக்கில்லாமப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கிறதுக்கு முன்னே வந்தது…அது இந்தக் கணக்கிலே வராது…!! – அவள் சொல்லாவிட்டாலும் ஓங்கிக் குரலெடுத்துச் சொல்வது போலவே இருந்தது சுகவனத்திற்கு.

காசோலையை பத்திரமா வச்சிக்காம, தொலைச்சிடுவேன் என்று நினைத்து விட்டாளோ? பொருத்தமில்லாமல் நினைப்பதில் பெண்களுக்கு நிகர் அவர்களேதான். நான் என்ன சின்னப் பையனா காத்துல பறக்க விட்டிட்டு வர்றதுக்கு? என்ன கேட்கிறாள் இவள்?

தங்கள் உத்தரவு…அடியேன் சித்தம்…..- பொறுமையோடு பதிலை இப்படித்தான் பகர்ந்தேன். அதிலிருந்த கேலியை உணர்ந்தாளோ என்னவோ? - சொன்னபோது திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.

அது சரி…செக் என் பெயருக்குத்தானே தருவாங்க…அதை உன்கிட்டே கொண்டு வந்து காண்பிக்கத்தானே முடியும்…உன் வங்கிக் கணக்குலயா போட முடியும்? திரும்ப எங்கிட்டேதானே தந்தாகணும்?  – என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்றுதான் இதைச் சொன்னார் சுகவனம்.

அது எனக்குத் தெரியாதா? நீங்க என்ன பெயர்ல செக் வாங்கியிருக்கீங்கன்னு பார்க்க வேண்டாமா? அதுக்குத்தான் சொல்றேன்…-முன் யோசனை இல்லாமல் நான் வாங்கி வருவேன் என்று என்னைப் பற்றி அவநம்பிக்கையாகவே நினைப்பதில் அவளுக்குத் தனி முனைப்பு. ஒரு குரூர சந்தோஷம்.

அது கூட எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டியா? புனை பெயர்லயா வாங்குவேன்? என்னுடைய ஒரிஜினல் நேம்லதான் செக் போடச் சொல்லுவேன். என்கிட்டயே கொடுங்கன்னு வாங்கி “பே-டூ” ங்கிற இடத்துல கே.ஆர்.சுகவனம்னு நானே எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்.அதெல்லாம்கவனமாயிருப்பேன்….கவலைப்படாதே…! சில பத்திரிகைகள்லேர்ந்து பணம் வருதே. வர்ற செக் பூராத்துலயும் என்னோட “யோகி“ங்கிற புனை பெயரா போட்டிருக்கு? என் சொந்தப் பெயர்தானே போட்டு வருது…பார்க்கிறேல்ல…செக் எழுதக் கையெடுக்கிறவனுக்கே எடுத்த எடுப்புல இந்த சந்தேகம் வந்திருமாக்கும். யோகின்னு எழுதினா சரியா வருமான்னு பாமரன் கூட யோசிப்பான்ல….! பிழை திருத்தி, கன கச்சிதமா எடிட் பண்ணி பிரசுரம் பண்ற  பத்திரிகைக்காரங்க…இத யோசிக்க மாட்டாங்களா? அவுங்களுக்கு நாம ஒண்ணும் சொல்லித் தர வேண்டாம். அவுங்க நமக்குச் சொல்லித் தருவாங்களாக்கும்…!

எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல விழா வச்சிடுவாங்க…அதுக்குள்ளே மறந்திடாதீங்க..எப்பயாச்சும் ஃபோன்ல கூப்டாங்கன்னா…? அதுக்குத்தான் முன்னமே உஷாராச் சொல்லி வைக்கிறேன்…கே.ஆர்.சுகவனம்ங்கிற பெயருக்குச் செக் போடுங்கன்னு கவனமாச் சொல்லிடுங்க…முடிஞ்சா ஸ்பெல்லிங் கூடச் சொல்லிடலாம். நீங்க sugavanam-னு கணக்கு வச்சிருக்கீங்க…அவுங்க sukavanam-னு செக்குல எழுதிடப் போறாங்க….ஏற்காது திரும்பி வந்திடும். போதாக் குறைக்கு பாங்குல ஃபைன் வேறே போட்டாங்கன்னா? நம்ப காரியத்துல நாமதான் கவனமாயிருக்கணும். ஊரானுக்கு என்ன வந்தது? என்ன….நான் சொல்றது புரிஞ்சிதா? -போடு போடென்று போட்டாள் மேகலா.

இப்டியே ஒவ்வொண்ணையும் பரிஞ்சு பரிஞ்சு இவ நினைச்சிட்டிருந்தான்னா…இவளுக்கு  B.P. ஏறாம என்ன செய்யும்? ஒருவகையில் எனக்கு அவள் மீது பரிதாபமாகவே இருந்தது. இப்படி ஒரு அசட்டு மனுஷனக் கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடு?-ன்னு நினைத்துக் கொண்டிருப்பாளோ? நாம படிக்கிறது, எழுதுறதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல போல்ருக்கு? அது மேல துளி மரியாதையில்லயே?

யார் சிந்தனையை யார்தான் தடுக்க முடியும்? தனக்குத்தானே உண்டாக்கிக் கொள்வதுதானே மனித மனம். அதை யாரால்தான் தடுக்க முடியும்? மனப் போராட்டம் என்பது அவரவரே ஏற்படுத்திக் கொண்டு அலைபாயும் செயல். தங்களின் ஈகோவைத் தானே பாராட்டிக் கொள்வதும், சீராட்டிக் கொள்வதுமாக.

என் மனது இப்போதே திட்டமிட ஆரம்பித்திருந்தது. அந்த விழாவில் எப்படியும் ஸ்டால்கள் போடுவார்கள். அப்போது அதுநாள்வரை வாங்காத புத்தகங்களையெல்லாம் வாங்கி விட வேண்டும்…வாங்கிவிடலாம்தான். அதை இவளுக்குத் தெரியாமல் வீடு கொண்டுவந்து  சேர்ப்பது எப்படி? இப்போதே யோசனை நீண்டது சுகவனத்திற்கு.

வீட்டுக்குத் தெரிந்து வாங்கியதைவிட,  தெரியாமல் வாங்கிச்  சேர்த்ததுதான் அதிகம். இருங்க…இருங்க…கீழேயே இருங்க…நான் வர்றேன்…என்று.போனில் சொல்லிவிட்டு, இரண்டாம் மாடியிலிருந்து தரை தளத்திற்கு ஓடுவார். அருகிலுள்ள ஒரு புத்தக விற்பனை நிறுவனம் இவருக்கு எக்காலத்திலும் பத்து சதவிகிதக் கழிவில் புத்தகங்களைத் தந்து கொண்டிருந்தது. அதன் மூலமாகத்தான விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார். சலுகைகளையும் கொஞ்சம் நீட்டிப் பார்த்தார். பலித்தது.

பக்கத்துலதானங்க இருக்கீங்க…ஒரு ஆள டூ வீலர்ல அனுப்பினீங்கன்னா, கொண்டு வந்து கொடுத்திட்டுப் போறான்…உங்களுக்கும் கூரியர் சார்ஜ் மிச்சம்தானே…? பலித்தது பஞ்சாங்கம்…!  ஆன் லைனில் தவறாமல் பணம் அனுப்பி, விடாமல் புத்தகங்கள் வாங்கும் ரெகுலர் கஸ்டமருக்கு இதுகூடச் செய்யவில்லையென்றால் எப்படி? ஓ.கே.சார்…ட்ரை பண்றேன் என்றார்கள். செய்தே விட்டார்கள். எழுபது, எண்பது. நூறு,நூற்றிருபது என்று பைசா மிச்சம்தானே? மனுஷன்…வகையா ஐடியாக் கொடுக்கிறான்யா…?

தரை தளம் போய் பையோடு வாங்கி வரும் புத்தகக் கட்டை முதுகுக்குப் பின்னால் மறைத்து விடுவிடுவென்று நுழைந்து தன் அறைக்குச் சென்றுவிடுவார் சுகவனம். அந்தச் சமயம் பார்த்து மேகலா அடுப்படியில் இருந்தால் (பெரும்பாலும் அங்கேதானே நிற்கிறாள்) பிரச்னையே இல்லை.

யாரு வந்தாங்க…? என்று கேட்டாளானால்….ஒரு நண்பர்…என்று பல சமயங்களில் பொய் சொல்லியிருக்கிறார். இல்லையெனில் ஏதாச்சும் தபால் வந்திருக்கான்னு பார்க்கப் போனேன் என்பார்.  புத்தகமா? என்றும் கேட்டு விடுவதுண்டு. சந்தேகம் இல்லாமல் இருக்குமா? புத்தகத்தோடு சேர்த்து என்னை நினைத்துப் பார்ப்பதே அவள் வேலையாயிற்றே? என் பிம்பம் அவளிடம் அப்படித்தான் பதிந்திருந்தது.

அவுங்களா அனுப்புறாங்க… நான் என்ன பண்றது? என்று சற்று குரலை உயர்த்தி விடுவார். விமர்சனம் எழுதச் சொல்றாங்க..மாட்டேன்னு சொல்ல முடியுமா? ஓசில கிடைக்கிற புத்தகத்தை வேணாம்னு சொல்லச் சொல்றியா? காசு போட்டு வாங்கினா நூத்தம்பது, இருநூறு, முன்னூறுன்னு எத்தனைக்குக் கொடுக்கிறது? வாங்கி மாளுமா இல்ல கொடுத்துதான் ஆகுமா? படிச்சிப்புட்டு அதப் பத்தி எழுதுங்கன்னு வற்புறுத்தினா  மறுக்க முடிலயே?  என் விமர்சனம் அவுங்களுக்குப் பிடிச்சிருக்கு….அதனால அவுங்க நாலு பேருக்குச் சொல்றாங்க…அவுங்களும் என் புத்தகத்துக்கும் விமர்சனம் எழுதுங்க சார்னுட்டு வலிய அனுப்புறாங்க….எனக்கு டைம் இல்லீங்க…என்னால அதெல்லாம் முடியாதுன்னு எப்படி முறிச்சு சொல்றது?  அது முடியாது. மத்தவங்க மனசு சங்கடப்படுற மாதிரிப் பேச என்னால ஆகாது, என் விமர்சனத்தையே நான் அப்படிக் கறாரா வச்சிக்கிறதில்லையே? சாஃப்ட்டாதானே  எழுதுவேன். வாழப் பழத்துல ஊசி இறக்குற மாதிரிக் கூடக் குத்த மாட்டனே? அவனவன் படிக்கிறான். ஒரு ஆர்வத்துல எழுதுறான்…சொந்த முயற்சில புத்தகம் கொண்டு வர்றான். செலவழிச்சு செய்றான். இல்லன்னா எதுவோ ஒரு பதிப்பகம் இலவசமாப்  போடுது…நமக்கென்ன வந்தது. நம்பளை மதிச்சுக் கேட்டாங்களா…ரெண்டு வார்த்தை புகழ்ந்து எழுதினமா…அதுல அவுங்களுக்கு ஒரு சந்தோஷம், திருப்தி..…நமக்கும் ஒரு வரவு….வரவுன்னா பைசா ஒண்ணும் வரப்போறதில்ல…புத்தகம் ஃப்ரீயாக் கிடைக்குதே…அதச் சொல்றேன்…அப்படிச் சேர்த்ததுதாண்டீ என் ரூம்ல இருக்கிற முக்கால் வாசிப் புத்தகம்….காசு போட்டு வாங்கினா உனக்குத் தெரியாம நடந்திடுமா? துணிந்து அடிப்பார் சுகவனம்.

 ஒரு துரும்பையாச்சும் இந்த வீட்டுக்குள்ள நீ அறியாமக் கொண்டாந்திட முடியுமா? உன்கிட்டேதானே ராஜ்ஜியமே இருக்கு?  -நான் சொன்ன நீண்ட யதார்த்த நடைமுறை நியாயங்களில் மயங்கிப்போய் திருப்திப்பட்டு விட்டது  அவள் வெள்ளை மனம்.

உண்மையில் பார்க்கப் போனால் பத்துக்கு மூணு நாலுதான் இலவசமாக வந்தவை. மற்றவையெல்லாம் அடியேன் காசு போட்டு வாங்கியதுதான். எனக்கே பல சமயங்களில் இம்புட்டுக் காசு செலவிக்கிறோமே…இது சரியா…? என்று வதக் வதக்கென்றுதான் இருக்கும்.  அவளிடம் ஓசி…ஓசியென்று ஓங்கி ஓங்கிச் சொல்லி நம்ப வைத்து விடுவேன். வாங்கும் வேகத்திற்குப் படிக்கிறேனா என்றால் இல்லை. “என்னிடம் உள்ள புத்தகங்கள்“ என்று பட்டியல் போடவா? படிக்கவல்லவா வேண்டும்? என்னிடம் இருக்கும் புத்தகங்களுக்கு விடிய விடிய…குறைந்தது தினசரி ராத்திரி ரெண்டு மணி வரை படித்தால்தான் கடைசி மூச்சுக்குள் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியும். அவ்வளவு சேர்ந்து போய் விட்டதுதான். அது சேர்ந்து விட்டது. நான் சோர்ந்து போனேனே? ஆனாலும் புதிய வரவுகளை நிறுத்த முடியவில்லை என்பதுதான் பைத்தியம் பிடித்த கதை.

ஓ…இவரா…போனவாரமே போன்ல சொல்லியிருந்தாரு…புக் அனுப்பறேன் சார்…கொஞ்சம் உங்க விமர்சனம் வேணும்னு கேட்டிருந்தாரு…ஓகேன்னேன். அனுப்பிச்சிருக்கார் போல்ருக்கு…மதிச்சுக் கேட்கிறவங்களுக்கு எப்படி மறுக்க முடியும்? .என்று சொல்லிக்கொண்டே காலிங் பெல் சத்தம் கேட்டவுடனே…நான் போறேன்…நான் போறேன்…நீ உட்கார்ந்திரு…எதுக்குப் பதட்டப்படுறே…என்று அவளை அடக்கிவிட்டு நானாகவே ஓடிப் போய் கையெழுத்திட்டு வாங்கிய கூரியர் தபால்கள்தான் அதிகம்.

என்னா சார்…புஸ்தகமா வந்திட்டிருக்கு..லைப்ரரி வச்சிருக்கீங்களா? லென்டிங் லைப்ரரியா? – என்ன மாதிரிப் புஸ்தகங்கள் சார்…? – கூரியர்காரனும், போஸ்ட்மேனும் தவறாமல் கேட்ட கேள்விகள் இவை. அவர்களிலும் நிறையப் படிப்பவர்கள் இருக்கிறார்களே? ஓரிரு முறை கொடுத்து வாங்கியும் இருக்கிறேனே? வரும் பார்சல் ஒழுங்கா டெலிவரி ஆனால் சரி…!

நாலைந்து நூல்களுக்கு விமர்சனம் எழுதத்தான் செய்தேன். இல்லையென்று சொல்லவில்லை. பிறகு ஒரு அலுப்பு வந்து விட்டது. ஓசி வேலைய எவ்வளவு நாள் தீவிரமாப் பார்க்குறது? இதுதான் எப்பவும் என் பொழப்பா?படிக்கிறதும் எழுதறதும்?  இருக்கும் நூல்களை முழுவதுமாக என்று படித்துத் தீர்ப்பது? அதில் இவ்வளவு தீவிரம் இல்லையே?

எதுக்கு இப்படி ஓசிப் புத்தகத்துக்கு அலையுறீங்க?   பிராணன விடறீங்க? இதென்ன இராமாயணமா, மகாபாரதமா? மாஞ்சு மடிஞ்சு படிக்கிறதுக்கு…? காலத்துக்கும் திரும்பத் திரும்பப் படிக்கவும், புதிசு புதிசாப் புரிஞ்சிக்கவும் உள்ள இதிகாசங்கள் அதுதான். ஒருவாட்டி படிச்சுத் தூக்கி எறியறதுதானே மத்ததெல்லாம். படிக்காட்டாலும் என்ன நஷ்டம்? இப்போ நீங்க வாங்கித் தொலைச்சிட்டமேன்னு படிக்கிறீங்களா…இல்ல விதியேன்னு, படிச்சுத் தொலைக்கணுமேன்னு படிக்கிறீங்களா?  இதுக்குப் போய் இப்டி உசிரை விடணுமா? நீங்க பண்றது ஒண்ணும் எனக்குப் பிடிக்கலே…!

விட்டுச் சொல்லிவிட்டாள் ஒரு நாள். அவள் கருத்தில் அவள் என்றும் ஸ்திரம். நான்தான் தடுமாற்றத்தில் உள்ளவன். புலிவாலைப் பிடித்தவன் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து இருக்கவும் பிடிக்காமல், விட்டு ஓடவும் ஏலாமல்…!  ஏண்டா இந்த உலகத்துல புகுந்தோம்?

இந்த புக் வந்திருக்கே…அந்த புக் வந்திருக்கே என்று தகவல்கள் எனக்கு விடாமல் வர இதென்னடா பெரிய வம்பாப் போச்சு…? என்று ஆகிவிட்டது எனக்கு. எது வந்தா எனக்கென்னய்யா? என்கிட்டே எதுக்கு சொல்லித் தொலையுறீங்க? நான் என்ன கேட்டனா? வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்க போலயே? என்று மனதுக்குள் புகைந்து தள்ளினேன். புதிய புத்தகங்களின் வரவு என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. என்னதான் முடிவு?

ஏய்…! கேட்டியா சேதியை…பரிசுத் தொகையை புக்ஃபேர்ல வச்சே தந்துர்றாங்களாம்…அடுத்தவாரம் 5-ம் தேதி மாலை 3-4 ன்னு போட்டிருக்காங்க…வாட்ஸப் அனுப்பியிருக்காங்க பார்….- சொல்லிக் கொண்டே வந்த செய்தியை அவளிடம் காண்பித்தேன்.

நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஏன் மாதங்கள் என்றே சொல்லலாம். நான் அதை மறந்தே போன வேளையில்தான் அந்தச் செய்தி வந்திருந்தது. ஆம்மா…அத மறந்தே போனமே…!

அப்டியா…சுருக்க முடிச்சிட்டாங்க போல்ருக்கு….அது அவுங்க இஷ்டம்…நாம ஒண்ணும் சொல்றதுக்கில்லே….என்னிக்காம்…? -எனக்கேட்டுக்கொண்டே வந்து என் மொபைலை வாங்கிப் பார்த்தாள் மேகலா.

நல்லதாப் போச்சு….உள்ளூர்லயே காரியம் முடியப் போறது. போய் வாங்கிட்டு வந்திடுங்க…செலவு மிச்சம்..

நீயும் வர்றியா? -கேட்டேன். ஒரு வார்த்தை என்னைக் கேட்டீங்களா? என்று நாளைக்குக் கேட்டுவிடக் கூடாதே?

வேண்டாம்…எனக்குக் கூட்டத்தக் கண்டாலே அலர்ஜி. நா வரலை…இந்தப் பத்தாயிரத்த வாங்குறதுக்குப் படையோட போகணுமா? அடுத்த தெருவுல இருக்கிற உங்க அக்கா, அத்திம்பேர்னு கூப்பிட்டுடாதீங்க…சிரிக்கப் போறாங்க…ப்ராபகேன்டா பண்ணாம  நீங்க மட்டும் கமுக்கமாப் போயிட்டுவாங்க போறும்….என்றாள் மேகலா.

அவள் பதிலில் எனக்கு உடன்பாடில்லைதான். பத்தாயிரத்தைக் கவனமாகப் பிடுங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்வாளாம். ஆனால் சொல்லும்போது மட்டும் இந்தப் பிசாத்துத் துட்டை வாங்க நான் வேறே வரணுமாக்கும் என்று பிகு பண்ணுவாளாம்? எப்படியிருக்கிறது பாருங்கள்?

என்னைப் பொறுத்தவரை எழுதுவதும், பரிசு பெறுவதும் என்றும்  மதிப்புடையதுதான். கதைகளை எழுதி முடித்து, திருத்தி வடிவமைத்து, ஒரு திருப்தி வந்த பிறகு பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமாகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சவால்தான். அது ஏற்கப்பட்டு பிரசுரமாகி விட்டால் அதுவே எனது முதல் வெற்றி. என் எழுத்து ஜெயிக்கிறது…!

அப்படியாகப் பத்துப் பதினைந்து கதைகள் சேர்ந்து அதைப் புத்தகம் போட வேண்டி ஒரு போட்டி அறிவித்த அமைப்பிற்கு அனுப்பி,  ஐவர் கொண்ட குழு அதனை மீண்டும் பரிசீலித்து, ஓகே… இதை ஏற்கலாம் என்று பரிந்துரைத்ததும், அது புத்தகமாக வந்ததும் எனது இரண்டாவது வெற்றி. அப்படித்தான் இப்போது பரிசு வாங்கியுள்ள எனது நூல் தேர்வு பெற்றுள்ளது.

புத்தகமான அந்த நூல், பரிசுப் போட்டி அறிவித்த வேறொரு நிறுவனத்தின் அல்லது பதிப்பகத்தின் தேர்வுக் குழுவால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, மறுபடியும் அங்கீகரிக்கப்பட்டு, பரிசுக்குரிய நூலாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறதென்றால் அது எனது மூன்றாவது வெற்றி என்றே நான் கருதுகிறேன். ஒரு சிறந்த புத்தகத்திற்கான தொடர்ந்த அங்கீகாரம் என்றும் சொல்லலாம்தானே? அதன் மூலம் ஒரு எழுத்தாளன் அடையாளப்படுத்தப்படுவது நல்ல விஷயம்தானே?

பத்தாயிரம் என்பது ஒன்றும் குறைவான தொகையல்லவே? ஒரு லட்சத்தை ஒருவருக்கே கொடுப்பதற்குப் பதிலாக, பத்துப் பத்தாகப் பத்துப் பேருக்குப் பிரித்துக் கொடுக்கும்போது பரிசு கிடைத்தது என்று பத்துப் பேர் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெறுகிறார்களே? அவர்கள் இன்னும் நன்றாக எழுத வேண்டும், மேலும் பரி
சுகளைப் பெற வேண்டும், நல்ல ஆக்கங்களை எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஊக்கம் பெறுவார்களே...? அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவரை மதிப்புறு நிலையில் நோக்குவார்களே? (மேகலா அப்படியில்லையே என்பது எனக்கு வருத்தம்தான்)

இதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லப் புகுந்தால் நிச்சயம் மேகலா ஏற்றுக் கொள்ளப் போவதில்லைதான். அவளுக்கு நான் வாங்கிக் குவித்திருக்கும் அறையடங்காத புத்தகங்கள்மேல் அப்படியொரு வெறுப்பு. வீட்டில் குறுக்கும் நெடுக்கும் போகையில் கண்ணில் படும்  அவைதான் அவள் மனதை விடாது உறுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் சத்தியமான நிஜம்.

வாசிப்பு ரசனை என்பது வேறு. அது எல்லோருக்குமா அமைந்து விடுகிறது. அந்த உலகில் பயணிப்பவர்கள் புதிது புதிதாக அல்லது திரும்பத் திரும்ப வெவ்வேறு நூல்களையும், ஒரே நூலையும்கூட படித்துப் படித்து உள்வாங்கிக் கொண்டு தங்களைப் பதப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கான பக்குவம் என்பதே தனி. அந்த உலகமே வேறு. அவர்கள் மிகப் பெரிய விவேகிகள்.

அந்தப் பழக்கம் அவளுக்கு  இல்லாதது என்பது ஒன்றும் பெரிய குற்றமில்லைதான் எனினும், சராசரி மக்கள்தான் இந்த உலகில் அதிகம் என்பதும் நாம் அறிந்ததே. வாழ்க்கை அனுபவங்கள் கைகூடி பக்குவப்பட்ட நபர்களாக குடும்பத்தில் ஒரு பாந்தமான அங்கமாக வளைய வருகிறார்களே அதுதான் மிக மிக  முக்கியம்.

அந்தவகையில் மேகலாவை ஒன்றும் நான் குறையுள்ளவளாக நோக்கவில்லைதான். ஆனாலும் கொஞ்சத்துக்குக் கொஞ்சமேனும் தன் கணவன் ஒரு படைப்பாளி என்கிற மதிப்பான-என்பது கூட வேண்டாம்…நல்லெண்ணம் இருந்தால் கூடப் போதும்தான். அதுகூட அவளிடம் இல்லையென்பதுதான் என் துரதிருஷ்டம். ஒருவேளை மனதின் அடியாழத்தில் இருக்குமோ என்னவோ?

இந்தா…நீ கேட்ட காசோலை. சரியா இருக்கா பார்த்துக்கோ…விழாவுக்குப் போயிட்டு வந்தாச்சு. செக்கை வாங்கிட்டு வந்தாச்சு…உங்கிட்டக் ஒப்படைச்சாச்சு…முதல்ல பிடி இதை….என்றவாறே நீட்டினேன் அவளிடம்.

ஓ.கே…ரொம்ப சந்தோஷம்…என்று சற்றே செயற்கையாகக் கூறியவாறே அதை பவ்யமாக  வாங்கிப் பார்த்தவள்  முகம் மலர உடனடியாக ஒன்றைக் கேட்டாள்.

அது சரி…“பெண்ணியம்“ -ங்கிற பத்திரிகைல உங்க கதை ஒண்ணு ஆறுதல் பரிசு வாங்கித்தே…அந்தக் கதை வந்திடுச்சா? அதுக்கான சன்மானம்  ரெண்டாயிரம் ரூபாய் எப்பக் கிடைக்கும்?

என்னோடு சேர்ந்து நீங்களும் மேகலாவையே கூர்ந்து நோக்குகிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது!!!

                                    -----------------------------------

 

சிறுகதை                            “நானுமா ஒரு காரணம்…?”  - பிரசுரம்-வாசகசாலை இணைய இதழ்


                        அப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால் இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது.

                        எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால் போயிற்று…ஊர் உலகத்தில் வேறு கடைகளே இல்லையா என்ன? ஏன் அது ஒன்றைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? அங்கேயே  பழி கிடக்க வேண்டும்?

                        கையில காசு…வாயில தோசை…!  காலை வீசி நடந்தால் எத்தனையோ இடம்? – யோசிக்கவும் செய்தேன்.

                        மனிதன் ஒன்றுக்குப் பழகி விட்டான் என்று வையுங்கள். பிறகு அவனை இடம் மாற்றுவது என்பது அத்தனை சுலபமல்ல. மகா கஷ்டம்.  செக்குமாடு மாதிரி அதிலேயேதான் சுற்றிக் கொண்டிருப்பான். அதிலிருந்து அவனை வெளியேற்றுவது துர்லபம்.  கொட்டிலில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துவிட்டால், அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக ஊர்க்கோடி வயற்காட்டிற்குச் சென்று  தீர மேய்ந்து விட்டு அதுவே மீளக் கொட்டிலுக்கு வந்து சேர்ந்துவிடும்தானே? ஏறக்குறைய மனிதனும் அந்தக் கதைதான். ஒரு சுற்று வட்டத்தில் அலைபவன்.

                        நானும் அப்படித்தான் பழகிப் போயிருந்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதில் எது பரவாயில்லை, நமக்கு ஏற்றது  என்று தேர்வு செய்து ஒவ்வொரு முறையும் அங்கேயே போய்த் தவம் கிடந்தேன். பழி கிடந்தேன். இருப்பதில் இதுதான் பரவாயில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

                        நல்லதோ கெட்டதோ…நம் தலை அவனுக்குத்தான் தெரியும். தலை கொடுத்தான் தம்பி என்று அவன் அழைக்கும்போது போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டால், வேலை அது பாட்டுக்கு நடக்கும். கண்களைத் திறந்தால் முடி கண்ணுக்குள் விழுந்து விடும் அபாயம் உண்டு என்று சமயங்களில் தூங்கிப் போனதும் உண்டுதான். அதென்னவோ தெரியாது, அந்த இருக்கையில் போய் அமர்ந்து விட்டால் எங்கிருந்துதான் துயிலிறைவன் வந்து அப்படி அணைத்துக் கொள்வானோ….கண்களும் சிந்தனையும் தானாகவே செருகி ஆளை இழுத்துக் கொள்ளும்.  கடுப்பில் தாடையைப் பிடித்து, மண்டையை அசைத்து அவன் நிமிர்த்தி விடுகையில் அது கூட ஒரு சுகம்தான். அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் எல்லாமும் அவன் கட்டுப்பாட்டில்தான். நல்ல கிரகம்டா சாமி…! என்று கூட அவன் நினைத்திருக்கலாம். வந்துட்டான்யா சாவுக்கிராக்கி…! என்றும் கூட.

                        முடி திருத்தல் என்பது அவனின் முழுக்கட்டுப்பாட்டில். என் தலை, என் வகிடு, என் வாரல் என்றெல்லாம் எதுவும் நான் வாய்விட்டதில்லை. கட்டளை கிடையாது. தொழில் அனுபவத்தில் ஒரு தலையைப் பார்த்ததும்தான் அவனுக்குள் ஒரு தீர்மானம் வந்து விடுகிறதே…! இதை மாதிரி எத்தனை தலைகளைப் பார்த்திருப்பான் அவன்? சக்குச் சக்கு என்று வெட்டித் தீர்த்து கால் மணி நேரத்தில் வேலையை முடித்து விடுகிறானே…? அதுக்குள்ளயுமா? முடிஞ்சிருச்சா? அடப்பாவி…இதுக்கா நூத்தி அம்பது? கொஞ்சம் பழகினா நமக்கு நாமளே செய்துக்கலாம் போல்ருக்கே? தோன்றத்தானே செய்கிறது!!

                        என் டிபார்ட்மென்ட் நண்பர் ஒருவர் அவர் பிள்ளைகளுக்கு அவரேதான் வெட்டி விடுவார். சலூனுக்கு என்று அனுப்பியதேயில்லை. தனக்குத்தானே முன்னாலும் பின்னாலும் என்று முடி வெட்டிக் கொண்டுவிடுவார்.  பின்னாடி கண்ணடியைப் பிடிறா….! என்று பையனை நிற்க வைத்து காரியத்தை முடித்து விடுவார். கூர்ந்து கவனித்தால்தான் அல்லது சந்தேகம் கொண்டு நாமே வாய்விட்டால்தான்…ஆமா…நானேதான் வெட்டிக்கிருவேன்…என்று சொல்லியிருக்கிறார். ஒன்றும் பெரிதாக அசிங்கமாய் இருக்காது.  ஒரு முறை சொன்னால் போதாதா? பிறகு நாமதான் பிரான்ட் போட்டு நிறுத்தி விடுவோமே…!  எவ்வளவு செலவு மிச்சம்? மூணு பசங்க வேறே அவருக்கு…! கேட்கணுமா? ரிடையர்ட்டமென்டுக்குப் பிறகு ஒரு தொழில் கைவசம்…!சொல்லிக் கேலி செய்வோம் அவரை….வச்சிட்டாப் போச்சு…நீங்கள்லாம் எங்கிட்டதான் வரணும்…இப்பவே சொல்லி வைக்கிறேன்….என்று பதிலுக்கு கான்ட்ராக்ட் போடுவார். அண்ணல் காந்திஜி அவரேதான் முடி வெட்டிக் கொண்டார் என்று படித்திருக்கிறோமே…! என்ன கேவலம்?

                        அடுத்து நீங்கதான்…என்று உள்ளே கல்லாவில் உட்கார்ந்திருக்கும் பொறுப்பாளர் சொல்லியும் ஆள் மாறியிருக்கிறதுதான். நேரம் ஆகிறதே…என்றும்…எப்பத்தான் கூப்பிடுவாரு…? என்றும் காத்துக் கொண்டிருந்த வேளைகளில் ஏமாற்றங்கள் மிஞ்சியிருக்கின்றனதான். ஆனாலும் வேறு இடம் சென்றதில்லை. சரி…பிறகு வர்றேன்…என்று எழுந்ததில்லை. இவன் இல்லாட்டி இன்னொருத்தன்…என்ன பெரிய்ய்ய கிராக்கி வேண்டிர்க்கு? என்று விருட்டென்று எழுந்து வெளியேறியதில்லை. மனிதன் பழக்கத்திற்கு ஆட்பட்டவன். செக்குமாட்டுப் புத்தி.

                        வாசலில் இருக்கையில் கிடக்கும் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டே, இதுதான் சாக்கென்று ஓசியில் படித்துத் தீர்ப்பதும் ஒருவகையில் இன்பம்தானே…? என்ன ஒரு சங்கடம் எனில், பழைய, நாள்பட்ட இதழ்களும், செய்திதாள்களும் அப்படி அப்படியே, போட்டது போட்டபடி கிடக்கும். சமயங்களில் அரை மணி ஒரு மணி என்று படித்துத் தீர்த்திருப்போம். பிறகுதான் தெரியும் அது முதல் நாள் பேப்பர் என்று. இந்த ஆழ்ந்த செய்தி வாசிப்பை மனதில் வைத்து உள்ளே ஆளை மாற்றி விடும் ஜாலமும் நடக்கும்தான். அதையும் கண்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரெண்டு பேர் அட்வான்ஸாய் எப்போதும் உள்ளே தயாராய் அமர்ந்திருப்பார்கள்.

                        ஒரு கல்யாணத்துக்குப் போறேன். கொஞ்சம் நல்லா, பார்வையா வெட்டி விடுங்க…என்று நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். வாய் விடாமல் இருந்திருந்தால் ஒரு வேளை சரியாய் அமைந்திருக்குமோ என்னவோ? என்று சரியாய் அமைந்தது? கொஞ்சம் முன்னப் பின்னேதான் இருக்கும். சரி…கெடந்துட்டுப் போகுது…என்ன ஆணழகன் கெட்டுப் போகுது? என்று கிளம்பி விடுவதுதான்.  சொன்னதுவே அவனைத் தடுமாற வைத்து விட்டதோ என்னவோ? அல்லது இத்தனை நாள் வெட்டினது திருப்தியில்லையோ என்கிற சந்தேகமும் வந்திருக்கலாம்.

                        நல்லா, நறுவிசா பண்ணிருவோம் சார்…உட்காருங்க…-

                        எத்தனை பணிவு? அதென்ன நறுவிசு?

                        முடியக் குறைச்சிறவா?  என்றான். சைடு பூரா மெஷின் போட்ருங்க…மேலே கொஞ்சமா குறைங்க…படிய வாருற மாதிரி….என்றேன்.

                        மேலேயும் குறைங்க என்றால் பிறகு எப்படிப் படியத் தலை வார முடியும்? கொஞ்சம் அப்படி இப்படி விரைத்துக் கொண்டுதான் நிற்கும். நாலு நாள் ஆகும்போது நல்லா உட்கார்ந்திரும்… - இதுதான் அவன் முடிவு. அவன் முடிவென்ன, முடி வெட்டுவோர் பலரும் சொல்லும், படியாத முடிவு.  முடி வெட்டி முடித்து, போதாக் குறைக்கு நம் கையில் சீப்பை வேறு தருவார்கள். வழக்கம்போல வாரி, அழகுபார்த்தால், அங்கங்கே அறுவடை செய்த நிலமாய்த்  தலை நீட்டும் வணங்கா முடிப் பிசிறுகளை அமுக்கி அமுக்கி விடுவார்கள். குளிச்சீங்கன்னா சரியாப் போகும் சார்….ரெண்டு நாள்ல உட்கார்ந்திரும்….இதுவே நல்லாயிருக்கு…இதுக்கு மேலே குறைக்கக் கூடாது….கிளம்புங்க….என்று விரட்டுவார்கள். தொழில் தெரிஞ்ச எனக்கே அட்வைஸா…? என்ற ஆக்ஞை. நாமும் இடத்தைக் காலி பண்ணினால் சரி என்று வெளியேறுவோம். பலருக்கு உள்ளே பரவியிருக்கும் சலூன் வாடை பிடிக்காது. முடிக் கற்றையும், வியர்வையும், மூச்சுக் காற்றும், லோஷன்களும்  சேர்ந்து….என்னவோ செய்யும்.

                        பின்னால் அடுத்த ஆள் எந்திரிச்சு தயாராய் நிற்பான். நாமும் தலையைக் குனிந்து கொண்டு கிளம்பி விடுவோம். மேற்கொண்டு அங்கிருக்கும் பெரிய கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றால் இன்னும் என்னென்ன குறைபாடு தெரியுமோ? திரும்பத் திரும்பப் பார்த்துத்தான் என்ன செய்ய? போனது போனதுதானே?

                        ஒவ்வொரு வாட்டியும் பார்த்திட்டேன். பின் தலைல இப்டித் தூக்கிட்டே நிற்குது. அந்த இடத்தப் படியுற மாதிரி வெட்ட மாட்டீங்களா…? சீப்புக்கு அடங்கவே மாட்டேங்குதே?

                        அது வேணாம் சார்…பெறவு அசிங்கமாப் போயிரும். குளிச்சி தலை சீவிட்டு அப்டியே லேசா அமுக்கி விட்ருங்க…உட்கார்ந்திக்கிரும்….இதுக்கு மேலே வெட்டக் கூடாது. வட்டச் சீப்பு வச்சிருக்கீங்களா? அத வச்சு சீவுங்க…சல்லுன்னு படிஞ்சிரும்…

                        இல்லீங்க…அந்த எடத்தை லேசா குறைங்க….துருத்திக்கிட்டு நிக்குது பாருங்க…அந்த ஸ்பாட்ல….லேசா டச்சப் பண்ணுங்க…சரியாயிடும்…இது எனக்குப் பிடிக்கல…ஒவ்வொரு வாட்டியும் இப்டித்தான் ஆகுது….அந்த எடம் மட்டும் சரியா வரல….மண்டைக்கு வெளில தலையைக் காட்டுது பாருங்க…

                        நீங்க என்ன சொல்றீங்களோ அப்டியே செய்றேன்.  உங்க திருப்திதான் என்னோட திருப்தி. அதுக்குத்தான நான் இருக்கேன். இருங்க…பாருங்க…போதுமா…போதுமா…சரியாயிடுச்சா…படியுதா? இப்போ படிஞ்சிருச்சா நல்லாப் பாருங்க…திருப்திதானா? ஓ.கே…..-சொல்லிவிட்டு அப்போதும் கையினால் அமுக்கித்தான் விட்டான். தொலையுது என்று படிந்தது போலிருந்தது அந்த இடம். திருப்தியில்லைதான். அவனுக்கும் சங்கடம். எனக்கும் சங்கடம். கல்லாவில் அமர்ந்திருக்கும் பொறுப்பாளர் கவனிக்கிறாரா என்றும் ஒரு பார்வை.

                        அமுக்கியபோது உட்கார்ந்த அது, நான் இருக்கையை விட்டு எழுந்தபோது அதுவும்  விசுக்கென்று எழுந்து நின்று கொண்டது. எதுடா சமயம் என்று காத்திருந்த அவன்…துடைப்பம் கொண்டு அந்தச் சுழல் நாற்காலியை ஒரு சுற்றுச் சுற்றிப் பெருக்கி, காலடியிலும், சுற்றிலும் என்று குவிந்திருந்த முடிக்கற்றைகளை ஒன்று சேர்த்து முரத்தில் தள்ளிப் போட்ட அந்தக் கணம், சடாரென்று ஒருவன் அதே இருக்கையில் பாய்ந்து உட்கார….அதற்கு மேலுமா அங்கு நிற்க முடியும்? இதுக்கு மேலேயும் என்னால் வெயிட் பண்ண முடியாது என்கிற அவசரம் உட்கார்ந்தவனுக்கு.

                        ஒரு கல்யாணத்துக்குப் போறேன். நல்லாப் பண்ணி விடுங்கன்னு சொன்னா….? முடி வெட்டுறாரா….களையெடுக்கிறாரா? -கல்லாவில் காசு கொடுக்கும்போது இப்படி முனகிக் கொண்டேதான் பணத்தை நீட்டினேன். பொறுப்பாளன் வாயே திறக்கவில்லை. அவனுக்கும் என் படுத்தலில் ஒப்புதல் இல்லையோ என்னவோ? இன்னும் கொஞ்சம் போச்சுன்னா….

                        ஒன்னையெல்லாம் யாருய்யா இங்க கூப்டாங்க….எங்கயாச்சும் மரத்தடிக்குப் போக வேண்டிதான…? என்று சொன்னாலும் போச்சு…! அவன் ஆளை விட்டுக் கொடுப்பார்களா?

                        அந்த ரணம் எனக்கு ஆறவேயில்லை. கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் என் தலையையேதான் பார்த்து வணக்கம் சொன்னார்கள். வரவேற்றார்கள். ஒருத்தரும் என் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை, பேசவில்லை. புன்னகை பூத்ததில் என் முடி வெட்டுக்கான கேலியும் கலந்திருந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது. மாரேஜ் ஸ்பெஷல் போல்ருக்கு…என்று எண்ணியிருப்பார்களோ? தலையைப்பற்றியே நினைப்பு மனதை விட்டு அகலவே இல்லை.

                        ஓ மண்டைக்கு இது பத்தாதா? என்று என் தலைமுடி எனக்கே வணங்காமல் தன் போக்கில் விரைத்துக் கொண்டு நின்றிருந்தது. இந்தக் காலத்தில் இளைஞர்கள் எப்படி எப்படியோ முடி வெட்டிக் கொள்கிறார்கள். முடி திருத்தகம் என்பதற்கே இப்போதுதான் முழு அர்த்தம் வாய்த்திருக்கிறதோ என்று தோன்றுகிறது அவைகளைப் பார்த்தால். ஒரு சின்னத் தலையில் இத்தனை விளையாட்டா? என்னென்னவோ மாதிரியெல்லாம் வளைத்து, நெளித்து, சுருட்டி, நீட்டி, முடிந்து தலையைக் கந்தர்கோலம் பண்ணிக் கொள்கிறார்களே…அவையெல்லாம் எந்த அழகில் சேர்த்தி? அவைகள் அழகுக்காகவா அல்லது ஸ்டைல் என்றும் மாடர்ன் என்றும் சொல்கிறார்களே அந்தக் கண்றாவியா? காலிப் பயல்கள் மாதிரித் திரியிறான்கள்…! அப்பன் ஆத்தா எப்படிச் சம்மதிக்கிறார்கள் இதற்கு? அல்லது தண்ணி தெளித்து விட்டு விட்டார்களா?

                        அப்படியெல்லாமா நான் அந்த ஆளைப் படுத்தினேன்? எனக்கு வழக்கம்போல எப்படி வெட்டுவாயோ அப்படியே வெட்டு என்றுதானே சொன்னேன்? பின் தலை, மேல் பகுதியில் துருத்தி நிமிர்ந்து நிற்கும் முடிக்கற்றையைப் படிய வை என்று சொன்னது ஒரு தப்பா? அங்கே மேலும் கை வைத்தால் இன்னும் அசிங்கமாகும் என்றால் அதை உறுதியாய்ச் சொல்லி போதும் சார்…என்று ஸ்திரமாய் நிற்க வேண்டியதுதானே? உன் தொழிலில் உனக்கே ஒரு தீர்மானம் இல்லையென்றால் எப்படி நீ அடுத்தடுத்து வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவாய்? ஒரு இளைஞனுக்கு இப்படிக் கோளாறு நடந்தால் சும்மா விடுவானா? தொலையுது என்று வெளியேறுவானா? கலகம் பண்ண மாட்டான்? வயசானவன் என்றால் இளக்காரமா? அப்படி என்னய்யா வயசு? நாற்பதுகளில் இருப்பவன்தானே நானும்?

                              எனக்கென்ன வந்தது? நீங்க சொல்றீங்க செய்றேன்…எம்பேர்ல பெறவு குத்தம் சொல்லக் கூடாது என்று வெட்டிச் சாய்ப்பாயா? அந்த எடத்த மட்டும் மழுங்கச் செறச்சு விடு என்றால் செய்து விடுவாயா? இதுதான் உங்கள் தலைக்கு அழகு…நான் சரியாத்தான் முடி வெட்டியிருக்கேன். இதுக்கு மேலே கை வச்சா கெட்டுடும்…னு நின்ன எடத்துல நிற்க வேண்டாமா? தொழில் தீர்மானம் இல்லாத மடப்பய மவன்….!!! – கோபத்தில் வாய் கண்டமேனிக்கு முனகியது.

                        இதோ அடுத்த கட்டிங்கிற்கு வந்து உட்கார்ந்தாயிற்று. அதே கடைக்குத்தான் வந்திருக்கிறேன். தூங்கி எந்திரிச்சா முடிதான் காடா வளர்ந்திடுதே?  வேறெங்கே போக…? தெரு நாய் சுத்திச்சுத்தி ஒரே தெருவுல விடாம அலையுமே…அந்தக் கதைதான். அதே தெரு.  அதே கடை. அதே சிந்தனை.

                        இந்த முறை யாரிடம் தலையைக் கொடுக்கப் போகிறேனோ? எவன் கையில் மாட்டப் போகிறேனோ? உள்ளே வழக்கம்போல் அஞ்சாறு நாற்காலிகளில் தொடர்ச்சியாக வேலை நடந்து கொண்டிருந்தது. தொழிலுக்கொன்றும் குறைவில்லை. அது செழிப்பாய்த்தான் நடக்குது. பூனை கண்ணை மூடிட்டா பூலோகம் இருண்டு போகுமா என்ன? இந்தப் பூனை தானாக உள்ளே நுழைந்ததுதானே?

                        சார்…நீங்க போகலாம்…. – உள்ளிருந்து  கண்ணாடிக் கதவு லேசாய்த் திறந்து குரல் வெளிப்பட்டது. நிர்வாகம் மிகக் கவனமாய் இருப்பது தெரிந்தது. வரிசை மாறினால் ஆள் மாறும். நான்தான் முன்னே வந்தேன் என்று  சண்டை உதிக்குமே…!  உட்கார்ந்து கண்காணிப்பவனுக்கு அது கூடக் கவனமில்லையென்றால் எப்படி?

காலியாய் இருந்த, காண்பித்த  இருக்கையில் போய் அமர்ந்தேன். எதிரிலிருந்த பெரிய கண்ணாடி பளீரென்று  முகத்தையும் தலையையும் வெளிச்சமாய்க் காண்பித்தது. சலூன்களுக்கென்று தனியாய்க் கண்ணாடிகள் விற்குமோ? அசடை சமர்த்தாய்க் காட்டுகிறதே?  என் முகம் கூடக் கொஞ்சம் அழகாய்த்தான் இருக்கிறது. அதனால்தான் பல இளைஞர்களும் வந்து வந்து அப்படி…இப்படி…என்று நெளிந்து வளைந்து குனிந்து அழகு பார்த்துச் செல்கிறார்களோ? எப்படிப் பார்த்தாலும் இருக்கும் அழகுதானே இருக்கும்…காண்பிக்கும்?

அடடே…மறந்துட்டனே…! அந்தாள்தானோ? நிராகரிக்க எண்ணியிருந்தேனே? இந்த முறை வேறு ஆளிடம்தான் தலையைக் கொடுக்க வேண்டும். என் மனம் உஷார் ஆனது.

துணி போர்த்த வந்த   ஆளை நிமிர்ந்து பார்த்தேன். நல்லவேளை. அந்தப் பழையவர் இல்லை. சார்…வாங்க…என்றவாறே வணக்கம் சொன்ன அவன்  விரித்த துணியிலிருந்து சலவை வாசனை என் மூக்கில் ஏறியது. நிமிண்டி விட்டுக் கொண்டேன். வரிசையாக இருந்த ஒவ்வொரு இருக்கையாய் நோக்கினேன். எல்லாவற்றிலும் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தந்தத் தலையில் கவனமாய் இருக்கும் முடி திருத்தாளர்கள். கத்தரிக்கோலின் சத்தம் ஒரு மெல்லிய இசையைக் கூட்டுவது போல் உணர்ந்தேன்.

அந்தாளக் காணலியே? –  மனம் துணுக்குற்றது. நல்ல வேளை…தப்பிச்சேன்… சமாதானம் அடைந்த அதே பொழுதில் இந்தாள் எப்படியோ? என்று சற்று பயமும் தலைதூக்கியது. புதுசோ இல்ல சர்வீஸ் போட்ட ஆளோ? அரண்டவன் கண்ணுக்கு….?

என்ன சார் பார்க்குறீங்க…?  வழக்கமா வெட்டுறவரையா? சண்முகம் அண்ணாச்சியத்தான…? தெரிந்ததுபோல் கேட்கிறானே?

அவுரு பேரெல்லாம் தெரியாதுங்க எனக்கு….அவர் எங்க….லீவா….?-ஆளக் காணல…சாதாரணமாய்த்தான் கேட்டேன்.

இல்ல சார்….அவர அனுப்பியாச்சு….-மெஷினை என் பக்கவாட்டுத் தலையில் கவனமாய் ஓடவிட்டுக் கொண்டே சொன்னான் அவன்.

எனக்கு என்னவோ போலிருந்தது அந்தச் செய்தி. ஏங்க…?  உடம்பு முடியலையா? மனசுக்குள் இனம் புரியாத சங்கடம்.

அதெல்லாமில்லீங்க சார்…அதான் அனுப்பியாச்சிங்கிறேன்ல….! போன வாட்டி நீங்க வந்திட்டுப் போனீங்கல்ல….அந்நியோட அவரும் போயிட்டாரு…..!!

அடப் பாவமே…! என் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போலிருந்தது எனக்கு. என்ன காரணம்? என்று விளக்கமாக அதற்கு மேல் கேட்க எனக்கும் வாய் வரவில்லை. அன்றுதான் கடைசிப் பரீட்சையோ? நான் அவரைப் படுத்தின பாடே இதற்குக் காரணமாயிருந்திருக்குமோ? அதைக் கவனித்துத்தான் தொழில் சுத்தம் இல்லை என்று அனுப்பி விட்டார்களோ?

நான் எனக்கு வேண்டாம் என்றுதான் ஒதுக்க நினைத்தேனேயொழிய கடைக்கே வேண்டாம் என்றா சொன்னேன். இப்படி ஏன் செய்தார்கள்? ஒருவன் பிழைப்புக் கெட்டுப் போனதே? எங்கு போனாரோ? என்ன ஆனாரோ? வேறு ஏதாச்சும் கடையில் இடம் கிடைக்குமா? இல்லை வருவாய்க்கு வழியில்லாமல் கஷ்டப்படுவாரா? – என்னென்னவோ நினைத்து மனசு மிகவும்  வேதனைப்பட்டது.

தெளிவாய் என் முகம் காட்டும் கண்ணாடியைத் தீர்க்கமாய் நோக்கியவாறிருந்தேன். வழக்கம்போல் உச்சந்தலைப் பகுதியில் படியாது துருத்திக் கொண்டிருக்கும் முடிக் கற்றைகளை மெல்ல மெல்லக் குறைத்து படிய வாரி வாரிச் சுருக்கிச் சரி பார்த்து  வடிவமைக்கும் பணியில் அவன் கவனமாயிருந்தான்.

வேலையைத் துவங்கும் முன் அவனும் எதுவும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. தலையில் தண்ணீர் அடித்து, ஆழமாய் விரல் விட்டுக் கலைத்து, சிக்கெடுத்து, சீப்பை விட்டு வகிடு ஒதுக்கி வேலையை ஆரம்பித்திருந்தான். இந்தத் தலைக்குக் கேட்குறதுக்கு என்ன இருக்கு? என்று அவன் அனுபவத்தில் தோன்றியிருக்கலாம்.

 இதே தொழில் சுத்தமும் நிதானமும் அந்தாளிடம் பார்க்கவில்லையே…! பாவம்…!! …ரொம்ப சுமார்தான். அவ்வளவு போறாது…!

இங்கிருந்தவர்களிலேயே சற்று வயசான ஆள் அவர்தான். மற்றெல்லோரும் இளைஞர்கள்…அவரை விடச் சிறியவர்கள்…! இந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல்  அவரைச் சேர்ப்பானேன்? பின்  விலக்குவானேன்? அதுவும் ஒரு கருணையினால்தானோ? இருக்கலாம்.  ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள இவர்களின் கிளைகள் ஏதாவதொன்றிற்கு அனுப்பியிருக்கலாம். அதுகூடப் பரவாயில்லை. இங்கேயே கொஞ்சம் வயசானவர்களை அவரிடம் தள்ளலாமே? கூட்டத்தைச் சமாளிக்கலாமே? அதற்கும் அவருக்குப் போதாது என்று நினைத்து விட்டார்களோ?  ஆள்கள் வந்தமணியமாய்த்தானே இருக்கிறது? ஊர் உலகில் இருப்பவர்களெல்லாம் ஒரே சமயத்தில் முடி வெட்டக் கிளம்பி விட்டார்களோ என்பதைப் போல…! நகர்ப் புறங்களில் எத்தனை கடைகள் வந்தாலும் கூட்டமாய்த்தானே கிடக்கிறது? நாள், கிழமை எதுவுமே சேர்த்தியில்லைதான்.மக்கள் எல்லா நாளும்தான் முடிவெட்டிக் கொள்கிறார்கள். ஞாயிறு கூட்டம் எகிறுகிறது. அந்த நாளைத் தான் தேர்ந்தெடுத்ததுதான் தவறோ? அதுவே அவருக்கு வினையாக அமைந்து விட்டதோ?

சண்முகம் அண்ணாச்சி…! அந்தப் பெயர் பிடித்திருந்தது எனக்கு. எவ்வளவு ஒட்டுதலான அழைப்பு? ஆனால் கவைக்கு உதவவில்லை. அதுதான் கள யதார்த்தம்.  அண்ணாச்சி என்று விளிக்கும் அளவுக்கு அவர்களுக்கு மன நெருக்கமாய் இருந்திருக்கிறாரே! எப்படி உதறினார்கள்?  அந்தக் கணத்தில் அந்த நாமகரணம் என்னுள் நின்று நிலைத்துப் போனது.

நானுமா இதற்குக் காரணம்? என்ற உறுத்தலான கேள்வி மட்டும்  விடாது  தொக்கி நின்று கூடவே வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.                                                  

                                                  -------------------------------