02 ஜூன் 2024

 

சிறுகதை                            “நானுமா ஒரு காரணம்…?”  - பிரசுரம்-வாசகசாலை இணைய இதழ்


                        ப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால் இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது.

                        எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால் போயிற்று…ஊர் உலகத்தில் வேறு கடைகளே இல்லையா என்ன? ஏன் அது ஒன்றைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? அங்கேயே  பழி கிடக்க வேண்டும்?

                        கையில காசு…வாயில தோசை…!  காலை வீசி நடந்தால் எத்தனையோ இடம்? – யோசிக்கவும் செய்தேன்.

                        மனிதன் ஒன்றுக்குப் பழகி விட்டான் என்று வையுங்கள். பிறகு அவனை இடம் மாற்றுவது என்பது அத்தனை சுலபமல்ல. மகா கஷ்டம்.  செக்குமாடு மாதிரி அதிலேயேதான் சுற்றிக் கொண்டிருப்பான். அதிலிருந்து அவனை வெளியேற்றுவது துர்லபம்.  கொட்டிலில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துவிட்டால், அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக ஊர்க்கோடி வயற்காட்டிற்குச் சென்று  தீர மேய்ந்து விட்டு அதுவே மீளக் கொட்டிலுக்கு வந்து சேர்ந்துவிடும்தானே? ஏறக்குறைய மனிதனும் அந்தக் கதைதான். ஒரு சுற்று வட்டத்தில் அலைபவன்.

                        நானும் அப்படித்தான் பழகிப் போயிருந்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதில் எது பரவாயில்லை, நமக்கு ஏற்றது  என்று தேர்வு செய்து ஒவ்வொரு முறையும் அங்கேயே போய்த் தவம் கிடந்தேன். பழி கிடந்தேன். இருப்பதில் இதுதான் பரவாயில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

                        நல்லதோ கெட்டதோ…நம் தலை அவனுக்குத்தான் தெரியும். தலை கொடுத்தான் தம்பி என்று அவன் அழைக்கும்போது போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டால், வேலை அது பாட்டுக்கு நடக்கும். கண்களைத் திறந்தால் முடி கண்ணுக்குள் விழுந்து விடும் அபாயம் உண்டு என்று சமயங்களில் தூங்கிப் போனதும் உண்டுதான். அதென்னவோ தெரியாது, அந்த இருக்கையில் போய் அமர்ந்து விட்டால் எங்கிருந்துதான் துயிலிறைவன் வந்து அப்படி அணைத்துக் கொள்வானோ….கண்களும் சிந்தனையும் தானாகவே செருகி ஆளை இழுத்துக் கொள்ளும்.  கடுப்பில் தாடையைப் பிடித்து, மண்டையை அசைத்து அவன் நிமிர்த்தி விடுகையில் அது கூட ஒரு சுகம்தான். அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் எல்லாமும் அவன் கட்டுப்பாட்டில்தான். நல்ல கிரகம்டா சாமி…! என்று கூட அவன் நினைத்திருக்கலாம். வந்துட்டான்யா சாவுக்கிராக்கி…! என்றும் கூட.

                        முடி திருத்தல் என்பது அவனின் முழுக்கட்டுப்பாட்டில். என் தலை, என் வகிடு, என் வாரல் என்றெல்லாம் எதுவும் நான் வாய்விட்டதில்லை. கட்டளை கிடையாது. தொழில் அனுபவத்தில் ஒரு தலையைப் பார்த்ததும்தான் அவனுக்குள் ஒரு தீர்மானம் வந்து விடுகிறதே…! இதை மாதிரி எத்தனை தலைகளைப் பார்த்திருப்பான் அவன்? சக்குச் சக்கு என்று வெட்டித் தீர்த்து கால் மணி நேரத்தில் வேலையை முடித்து விடுகிறானே…? அதுக்குள்ளயுமா? முடிஞ்சிருச்சா? அடப்பாவி…இதுக்கா நூத்தி அம்பது? கொஞ்சம் பழகினா நமக்கு நாமளே செய்துக்கலாம் போல்ருக்கே? தோன்றத்தானே செய்கிறது!!

                        என் டிபார்ட்மென்ட் நண்பர் ஒருவர் அவர் பிள்ளைகளுக்கு அவரேதான் வெட்டி விடுவார். சலூனுக்கு என்று அனுப்பியதேயில்லை. தனக்குத்தானே முன்னாலும் பின்னாலும் என்று முடி வெட்டிக் கொண்டுவிடுவார்.  பின்னாடி கண்ணடியைப் பிடிறா….! என்று பையனை நிற்க வைத்து காரியத்தை முடித்து விடுவார். கூர்ந்து கவனித்தால்தான் அல்லது சந்தேகம் கொண்டு நாமே வாய்விட்டால்தான்…ஆமா…நானேதான் வெட்டிக்கிருவேன்…என்று சொல்லியிருக்கிறார். ஒன்றும் பெரிதாக அசிங்கமாய் இருக்காது.  ஒரு முறை சொன்னால் போதாதா? பிறகு நாமதான் பிரான்ட் போட்டு நிறுத்தி விடுவோமே…!  எவ்வளவு செலவு மிச்சம்? மூணு பசங்க வேறே அவருக்கு…! கேட்கணுமா? ரிடையர்ட்டமென்டுக்குப் பிறகு ஒரு தொழில் கைவசம்…!சொல்லிக் கேலி செய்வோம் அவரை….வச்சிட்டாப் போச்சு…நீங்கள்லாம் எங்கிட்டதான் வரணும்…இப்பவே சொல்லி வைக்கிறேன்….என்று பதிலுக்கு கான்ட்ராக்ட் போடுவார். அண்ணல் காந்திஜி அவரேதான் முடி வெட்டிக் கொண்டார் என்று படித்திருக்கிறோமே…! என்ன கேவலம்?

                        அடுத்து நீங்கதான்…என்று உள்ளே கல்லாவில் உட்கார்ந்திருக்கும் பொறுப்பாளர் சொல்லியும் ஆள் மாறியிருக்கிறதுதான். நேரம் ஆகிறதே…என்றும்…எப்பத்தான் கூப்பிடுவாரு…? என்றும் காத்துக் கொண்டிருந்த வேளைகளில் ஏமாற்றங்கள் மிஞ்சியிருக்கின்றனதான். ஆனாலும் வேறு இடம் சென்றதில்லை. சரி…பிறகு வர்றேன்…என்று எழுந்ததில்லை. இவன் இல்லாட்டி இன்னொருத்தன்…என்ன பெரிய்ய்ய கிராக்கி வேண்டிர்க்கு? என்று விருட்டென்று எழுந்து வெளியேறியதில்லை. மனிதன் பழக்கத்திற்கு ஆட்பட்டவன். செக்குமாட்டுப் புத்தி.

                        வாசலில் இருக்கையில் கிடக்கும் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டே, இதுதான் சாக்கென்று ஓசியில் படித்துத் தீர்ப்பதும் ஒருவகையில் இன்பம்தானே…? என்ன ஒரு சங்கடம் எனில், பழைய, நாள்பட்ட இதழ்களும், செய்திதாள்களும் அப்படி அப்படியே, போட்டது போட்டபடி கிடக்கும். சமயங்களில் அரை மணி ஒரு மணி என்று படித்துத் தீர்த்திருப்போம். பிறகுதான் தெரியும் அது முதல் நாள் பேப்பர் என்று. இந்த ஆழ்ந்த செய்தி வாசிப்பை மனதில் வைத்து உள்ளே ஆளை மாற்றி விடும் ஜாலமும் நடக்கும்தான். அதையும் கண்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரெண்டு பேர் அட்வான்ஸாய் எப்போதும் உள்ளே தயாராய் அமர்ந்திருப்பார்கள்.

                        ஒரு கல்யாணத்துக்குப் போறேன். கொஞ்சம் நல்லா, பார்வையா வெட்டி விடுங்க…என்று நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். வாய் விடாமல் இருந்திருந்தால் ஒரு வேளை சரியாய் அமைந்திருக்குமோ என்னவோ? என்று சரியாய் அமைந்தது? கொஞ்சம் முன்னப் பின்னேதான் இருக்கும். சரி…கெடந்துட்டுப் போகுது…என்ன ஆணழகன் கெட்டுப் போகுது? என்று கிளம்பி விடுவதுதான்.  சொன்னதுவே அவனைத் தடுமாற வைத்து விட்டதோ என்னவோ? அல்லது இத்தனை நாள் வெட்டினது திருப்தியில்லையோ என்கிற சந்தேகமும் வந்திருக்கலாம்.

                        நல்லா, நறுவிசா பண்ணிருவோம் சார்…உட்காருங்க…-

                        எத்தனை பணிவு? அதென்ன நறுவிசு?

                        முடியக் குறைச்சிறவா?  என்றான். சைடு பூரா மெஷின் போட்ருங்க…மேலே கொஞ்சமா குறைங்க…படிய வாருற மாதிரி….என்றேன்.

                        மேலேயும் குறைங்க என்றால் பிறகு எப்படிப் படியத் தலை வார முடியும்? கொஞ்சம் அப்படி இப்படி விரைத்துக் கொண்டுதான் நிற்கும். நாலு நாள் ஆகும்போது நல்லா உட்கார்ந்திரும்… - இதுதான் அவன் முடிவு. அவன் முடிவென்ன, முடி வெட்டுவோர் பலரும் சொல்லும், படியாத முடிவு.  முடி வெட்டி முடித்து, போதாக் குறைக்கு நம் கையில் சீப்பை வேறு தருவார்கள். வழக்கம்போல வாரி, அழகுபார்த்தால், அங்கங்கே அறுவடை செய்த நிலமாய்த்  தலை நீட்டும் வணங்கா முடிப் பிசிறுகளை அமுக்கி அமுக்கி விடுவார்கள். குளிச்சீங்கன்னா சரியாப் போகும் சார்….ரெண்டு நாள்ல உட்கார்ந்திரும்….இதுவே நல்லாயிருக்கு…இதுக்கு மேலே குறைக்கக் கூடாது….கிளம்புங்க….என்று விரட்டுவார்கள். தொழில் தெரிஞ்ச எனக்கே அட்வைஸா…? என்ற ஆக்ஞை. நாமும் இடத்தைக் காலி பண்ணினால் சரி என்று வெளியேறுவோம். பலருக்கு உள்ளே பரவியிருக்கும் சலூன் வாடை பிடிக்காது. முடிக் கற்றையும், வியர்வையும், மூச்சுக் காற்றும், லோஷன்களும்  சேர்ந்து….என்னவோ செய்யும்.

                        பின்னால் அடுத்த ஆள் எந்திரிச்சு தயாராய் நிற்பான். நாமும் தலையைக் குனிந்து கொண்டு கிளம்பி விடுவோம். மேற்கொண்டு அங்கிருக்கும் பெரிய கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றால் இன்னும் என்னென்ன குறைபாடு தெரியுமோ? திரும்பத் திரும்பப் பார்த்துத்தான் என்ன செய்ய? போனது போனதுதானே?

                        ஒவ்வொரு வாட்டியும் பார்த்திட்டேன். பின் தலைல இப்டித் தூக்கிட்டே நிற்குது. அந்த இடத்தப் படியுற மாதிரி வெட்ட மாட்டீங்களா…? சீப்புக்கு அடங்கவே மாட்டேங்குதே?

                        அது வேணாம் சார்…பெறவு அசிங்கமாப் போயிரும். குளிச்சி தலை சீவிட்டு அப்டியே லேசா அமுக்கி விட்ருங்க…உட்கார்ந்திக்கிரும்….இதுக்கு மேலே வெட்டக் கூடாது. வட்டச் சீப்பு வச்சிருக்கீங்களா? அத வச்சு சீவுங்க…சல்லுன்னு படிஞ்சிரும்…

                        இல்லீங்க…அந்த எடத்தை லேசா குறைங்க….துருத்திக்கிட்டு நிக்குது பாருங்க…அந்த ஸ்பாட்ல….லேசா டச்சப் பண்ணுங்க…சரியாயிடும்…இது எனக்குப் பிடிக்கல…ஒவ்வொரு வாட்டியும் இப்டித்தான் ஆகுது….அந்த எடம் மட்டும் சரியா வரல….மண்டைக்கு வெளில தலையைக் காட்டுது பாருங்க…

                        நீங்க என்ன சொல்றீங்களோ அப்டியே செய்றேன்.  உங்க திருப்திதான் என்னோட திருப்தி. அதுக்குத்தான நான் இருக்கேன். இருங்க…பாருங்க…போதுமா…போதுமா…சரியாயிடுச்சா…படியுதா? இப்போ படிஞ்சிருச்சா நல்லாப் பாருங்க…திருப்திதானா? ஓ.கே…..-சொல்லிவிட்டு அப்போதும் கையினால் அமுக்கித்தான் விட்டான். தொலையுது என்று படிந்தது போலிருந்தது அந்த இடம். திருப்தியில்லைதான். அவனுக்கும் சங்கடம். எனக்கும் சங்கடம். கல்லாவில் அமர்ந்திருக்கும் பொறுப்பாளர் கவனிக்கிறாரா என்றும் ஒரு பார்வை.

                        அமுக்கியபோது உட்கார்ந்த அது, நான் இருக்கையை விட்டு எழுந்தபோது அதுவும்  விசுக்கென்று எழுந்து நின்று கொண்டது. எதுடா சமயம் என்று காத்திருந்த அவன்…துடைப்பம் கொண்டு அந்தச் சுழல் நாற்காலியை ஒரு சுற்றுச் சுற்றிப் பெருக்கி, காலடியிலும், சுற்றிலும் என்று குவிந்திருந்த முடிக்கற்றைகளை ஒன்று சேர்த்து முரத்தில் தள்ளிப் போட்ட அந்தக் கணம், சடாரென்று ஒருவன் அதே இருக்கையில் பாய்ந்து உட்கார….அதற்கு மேலுமா அங்கு நிற்க முடியும்? இதுக்கு மேலேயும் என்னால் வெயிட் பண்ண முடியாது என்கிற அவசரம் உட்கார்ந்தவனுக்கு.

                        ஒரு கல்யாணத்துக்குப் போறேன். நல்லாப் பண்ணி விடுங்கன்னு சொன்னா….? முடி வெட்டுறாரா….களையெடுக்கிறாரா? -கல்லாவில் காசு கொடுக்கும்போது இப்படி முனகிக் கொண்டேதான் பணத்தை நீட்டினேன். பொறுப்பாளன் வாயே திறக்கவில்லை. அவனுக்கும் என் படுத்தலில் ஒப்புதல் இல்லையோ என்னவோ? இன்னும் கொஞ்சம் போச்சுன்னா….

                        ஒன்னையெல்லாம் யாருய்யா இங்க கூப்டாங்க….எங்கயாச்சும் மரத்தடிக்குப் போக வேண்டிதான…? என்று சொன்னாலும் போச்சு…! அவன் ஆளை விட்டுக் கொடுப்பார்களா?

                        ந்த ரணம் எனக்கு ஆறவேயில்லை. கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் என் தலையையேதான் பார்த்து வணக்கம் சொன்னார்கள். வரவேற்றார்கள். ஒருத்தரும் என் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை, பேசவில்லை. புன்னகை பூத்ததில் என் முடி வெட்டுக்கான கேலியும் கலந்திருந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது. மாரேஜ் ஸ்பெஷல் போல்ருக்கு…என்று எண்ணியிருப்பார்களோ? தலையைப்பற்றியே நினைப்பு மனதை விட்டு அகலவே இல்லை.

                        ஓ மண்டைக்கு இது பத்தாதா? என்று என் தலைமுடி எனக்கே வணங்காமல் தன் போக்கில் விரைத்துக் கொண்டு நின்றிருந்தது. இந்தக் காலத்தில் இளைஞர்கள் எப்படி எப்படியோ முடி வெட்டிக் கொள்கிறார்கள். முடி திருத்தகம் என்பதற்கே இப்போதுதான் முழு அர்த்தம் வாய்த்திருக்கிறதோ என்று தோன்றுகிறது அவைகளைப் பார்த்தால். ஒரு சின்னத் தலையில் இத்தனை விளையாட்டா? என்னென்னவோ மாதிரியெல்லாம் வளைத்து, நெளித்து, சுருட்டி, நீட்டி, முடிந்து தலையைக் கந்தர்கோலம் பண்ணிக் கொள்கிறார்களே…அவையெல்லாம் எந்த அழகில் சேர்த்தி? அவைகள் அழகுக்காகவா அல்லது ஸ்டைல் என்றும் மாடர்ன் என்றும் சொல்கிறார்களே அந்தக் கண்றாவியா? காலிப் பயல்கள் மாதிரித் திரியிறான்கள்…! அப்பன் ஆத்தா எப்படிச் சம்மதிக்கிறார்கள் இதற்கு? அல்லது தண்ணி தெளித்து விட்டு விட்டார்களா?

                        அப்படியெல்லாமா நான் அந்த ஆளைப் படுத்தினேன்? எனக்கு வழக்கம்போல எப்படி வெட்டுவாயோ அப்படியே வெட்டு என்றுதானே சொன்னேன்? பின் தலை, மேல் பகுதியில் துருத்தி நிமிர்ந்து நிற்கும் முடிக்கற்றையைப் படிய வை என்று சொன்னது ஒரு தப்பா? அங்கே மேலும் கை வைத்தால் இன்னும் அசிங்கமாகும் என்றால் அதை உறுதியாய்ச் சொல்லி போதும் சார்…என்று ஸ்திரமாய் நிற்க வேண்டியதுதானே? உன் தொழிலில் உனக்கே ஒரு தீர்மானம் இல்லையென்றால் எப்படி நீ அடுத்தடுத்து வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவாய்? ஒரு இளைஞனுக்கு இப்படிக் கோளாறு நடந்தால் சும்மா விடுவானா? தொலையுது என்று வெளியேறுவானா? கலகம் பண்ண மாட்டான்? வயசானவன் என்றால் இளக்காரமா? அப்படி என்னய்யா வயசு? நாற்பதுகளில் இருப்பவன்தானே நானும்?

                              எனக்கென்ன வந்தது? நீங்க சொல்றீங்க செய்றேன்எம்பேர்ல பெறவு குத்தம் சொல்லக் கூடாது என்று வெட்டிச் சாய்ப்பாயா? அந்த எடத்த மட்டும் மழுங்கச் செறச்சு விடு என்றால் செய்து விடுவாயா? இதுதான் உங்கள் தலைக்கு அழகுநான் சரியாத்தான் முடி வெட்டியிருக்கேன். இதுக்கு மேலே கை வச்சா கெட்டுடும்னு நின்ன எடத்துல நிற்க வேண்டாமா? தொழில் தீர்மானம் இல்லாத மடப்பய மவன்….!!! – கோபத்தில் வாய் கண்டமேனிக்கு முனகியது.

                        தோ அடுத்த கட்டிங்கிற்கு வந்து உட்கார்ந்தாயிற்று. அதே கடைக்குத்தான் வந்திருக்கிறேன். தூங்கி எந்திரிச்சா முடிதான் காடா வளர்ந்திடுதே?  வேறெங்கே போக…? தெரு நாய் சுத்திச்சுத்தி ஒரே தெருவுல விடாம அலையுமே…அந்தக் கதைதான். அதே தெரு.  அதே கடை. அதே சிந்தனை.

                        இந்த முறை யாரிடம் தலையைக் கொடுக்கப் போகிறேனோ? எவன் கையில் மாட்டப் போகிறேனோ? உள்ளே வழக்கம்போல் அஞ்சாறு நாற்காலிகளில் தொடர்ச்சியாக வேலை நடந்து கொண்டிருந்தது. தொழிலுக்கொன்றும் குறைவில்லை. அது செழிப்பாய்த்தான் நடக்குது. பூனை கண்ணை மூடிட்டா பூலோகம் இருண்டு போகுமா என்ன? இந்தப் பூனை தானாக உள்ளே நுழைந்ததுதானே?

                        சார்…நீங்க போகலாம்…. – உள்ளிருந்து  கண்ணாடிக் கதவு லேசாய்த் திறந்து குரல் வெளிப்பட்டது. நிர்வாகம் மிகக் கவனமாய் இருப்பது தெரிந்தது. வரிசை மாறினால் ஆள் மாறும். நான்தான் முன்னே வந்தேன் என்று  சண்டை உதிக்குமே…!  உட்கார்ந்து கண்காணிப்பவனுக்கு அது கூடக் கவனமில்லையென்றால் எப்படி?

காலியாய் இருந்த, காண்பித்த  இருக்கையில் போய் அமர்ந்தேன். எதிரிலிருந்த பெரிய கண்ணாடி பளீரென்று  முகத்தையும் தலையையும் வெளிச்சமாய்க் காண்பித்தது. சலூன்களுக்கென்று தனியாய்க் கண்ணாடிகள் விற்குமோ? அசடை சமர்த்தாய்க் காட்டுகிறதே?  என் முகம் கூடக் கொஞ்சம் அழகாய்த்தான் இருக்கிறது. அதனால்தான் பல இளைஞர்களும் வந்து வந்து அப்படி…இப்படி…என்று நெளிந்து வளைந்து குனிந்து அழகு பார்த்துச் செல்கிறார்களோ? எப்படிப் பார்த்தாலும் இருக்கும் அழகுதானே இருக்கும்…காண்பிக்கும்?

அடடே…மறந்துட்டனே…! அந்தாள்தானோ? நிராகரிக்க எண்ணியிருந்தேனே? இந்த முறை வேறு ஆளிடம்தான் தலையைக் கொடுக்க வேண்டும். என் மனம் உஷார் ஆனது.

துணி போர்த்த வந்த   ஆளை நிமிர்ந்து பார்த்தேன். நல்லவேளை. அந்தப் பழையவர் இல்லை. சார்…வாங்க…என்றவாறே வணக்கம் சொன்ன அவன்  விரித்த துணியிலிருந்து சலவை வாசனை என் மூக்கில் ஏறியது. நிமிண்டி விட்டுக் கொண்டேன். வரிசையாக இருந்த ஒவ்வொரு இருக்கையாய் நோக்கினேன். எல்லாவற்றிலும் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தந்தத் தலையில் கவனமாய் இருக்கும் முடி திருத்தாளர்கள். கத்தரிக்கோலின் சத்தம் ஒரு மெல்லிய இசையைக் கூட்டுவது போல் உணர்ந்தேன்.

அந்தாளக் காணலியே? –  மனம் துணுக்குற்றது. நல்ல வேளை…தப்பிச்சேன்… சமாதானம் அடைந்த அதே பொழுதில் இந்தாள் எப்படியோ? என்று சற்று பயமும் தலைதூக்கியது. புதுசோ இல்ல சர்வீஸ் போட்ட ஆளோ? அரண்டவன் கண்ணுக்கு….?

என்ன சார் பார்க்குறீங்க…?  வழக்கமா வெட்டுறவரையா? சண்முகம் அண்ணாச்சியத்தான…? தெரிந்ததுபோல் கேட்கிறானே?

அவுரு பேரெல்லாம் தெரியாதுங்க எனக்கு….அவர் எங்க….லீவா….?-ஆளக் காணல…சாதாரணமாய்த்தான் கேட்டேன்.

இல்ல சார்….அவர அனுப்பியாச்சு….-மெஷினை என் பக்கவாட்டுத் தலையில் கவனமாய் ஓடவிட்டுக் கொண்டே சொன்னான் அவன்.

எனக்கு என்னவோ போலிருந்தது அந்தச் செய்தி. ஏங்க…?  உடம்பு முடியலையா? மனசுக்குள் இனம் புரியாத சங்கடம்.

அதெல்லாமில்லீங்க சார்…அதான் அனுப்பியாச்சிங்கிறேன்ல….! போன வாட்டி நீங்க வந்திட்டுப் போனீங்கல்ல….அந்நியோட அவரும் போயிட்டாரு…..!!

அடப் பாவமே…! என் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போலிருந்தது எனக்கு. என்ன காரணம்? என்று விளக்கமாக அதற்கு மேல் கேட்க எனக்கும் வாய் வரவில்லை. அன்றுதான் கடைசிப் பரீட்சையோ? நான் அவரைப் படுத்தின பாடே இதற்குக் காரணமாயிருந்திருக்குமோ? அதைக் கவனித்துத்தான் தொழில் சுத்தம் இல்லை என்று அனுப்பி விட்டார்களோ?

நான் எனக்கு வேண்டாம் என்றுதான் ஒதுக்க நினைத்தேனேயொழிய கடைக்கே வேண்டாம் என்றா சொன்னேன். இப்படி ஏன் செய்தார்கள்? ஒருவன் பிழைப்புக் கெட்டுப் போனதே? எங்கு போனாரோ? என்ன ஆனாரோ? வேறு ஏதாச்சும் கடையில் இடம் கிடைக்குமா? இல்லை வருவாய்க்கு வழியில்லாமல் கஷ்டப்படுவாரா? – என்னென்னவோ நினைத்து மனசு மிகவும்  வேதனைப்பட்டது.

தெளிவாய் என் முகம் காட்டும் கண்ணாடியைத் தீர்க்கமாய் நோக்கியவாறிருந்தேன். வழக்கம்போல் உச்சந்தலைப் பகுதியில் படியாது துருத்திக் கொண்டிருக்கும் முடிக் கற்றைகளை மெல்ல மெல்லக் குறைத்து படிய வாரி வாரிச் சுருக்கிச் சரி பார்த்து  வடிவமைக்கும் பணியில் அவன் கவனமாயிருந்தான்.

வேலையைத் துவங்கும் முன் அவனும் எதுவும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. தலையில் தண்ணீர் அடித்து, ஆழமாய் விரல் விட்டுக் கலைத்து, சிக்கெடுத்து, சீப்பை விட்டு வகிடு ஒதுக்கி வேலையை ஆரம்பித்திருந்தான். இந்தத் தலைக்குக் கேட்குறதுக்கு என்ன இருக்கு? என்று அவன் அனுபவத்தில் தோன்றியிருக்கலாம்.

 இதே தொழில் சுத்தமும் நிதானமும் அந்தாளிடம் பார்க்கவில்லையே…! பாவம்…!! …ரொம்ப சுமார்தான். அவ்வளவு போறாது…!

இங்கிருந்தவர்களிலேயே சற்று வயசான ஆள் அவர்தான். மற்றெல்லோரும் இளைஞர்கள்…அவரை விடச் சிறியவர்கள்…! இந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல்  அவரைச் சேர்ப்பானேன்? பின்  விலக்குவானேன்? அதுவும் ஒரு கருணையினால்தானோ? இருக்கலாம்.  ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள இவர்களின் கிளைகள் ஏதாவதொன்றிற்கு அனுப்பியிருக்கலாம். அதுகூடப் பரவாயில்லை. இங்கேயே கொஞ்சம் வயசானவர்களை அவரிடம் தள்ளலாமே? கூட்டத்தைச் சமாளிக்கலாமே? அதற்கும் அவருக்குப் போதாது என்று நினைத்து விட்டார்களோ?  ஆள்கள் வந்தமணியமாய்த்தானே இருக்கிறது? ஊர் உலகில் இருப்பவர்களெல்லாம் ஒரே சமயத்தில் முடி வெட்டக் கிளம்பி விட்டார்களோ என்பதைப் போல…! நகர்ப் புறங்களில் எத்தனை கடைகள் வந்தாலும் கூட்டமாய்த்தானே கிடக்கிறது? நாள், கிழமை எதுவுமே சேர்த்தியில்லைதான்.மக்கள் எல்லா நாளும்தான் முடிவெட்டிக் கொள்கிறார்கள். ஞாயிறு கூட்டம் எகிறுகிறது. அந்த நாளைத் தான் தேர்ந்தெடுத்ததுதான் தவறோ? அதுவே அவருக்கு வினையாக அமைந்து விட்டதோ?

சண்முகம் அண்ணாச்சி…! அந்தப் பெயர் பிடித்திருந்தது எனக்கு. எவ்வளவு ஒட்டுதலான அழைப்பு? ஆனால் கவைக்கு உதவவில்லை. அதுதான் கள யதார்த்தம்.  அண்ணாச்சி என்று விளிக்கும் அளவுக்கு அவர்களுக்கு மன நெருக்கமாய் இருந்திருக்கிறாரே! எப்படி உதறினார்கள்?  அந்தக் கணத்தில் அந்த நாமகரணம் என்னுள் நின்று நிலைத்துப் போனது.

நானுமா இதற்குக் காரணம்? என்ற உறுத்தலான கேள்வி மட்டும்  விடாது  தொக்கி நின்று கூடவே வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.                                                  

                                                  -------------------------------

 

 

                       

                                                                                                                                    

கருத்துகள் இல்லை:

  எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு