15 ஜூன் 2012

சில யதார்த்தங்கள் சிறுகதை

தினமணிக்கதிர்

(First Published : 10 Jun 2012 )

இன்னைக்காவது போய்ப் பார்த்திட்டு வந்திடுங்க...ரொம்பப் பாவமாயிருக்கு...

-குரலில் அசாத்தியக் கழிவிரக்கத்தோடு சொன்னாள் லலிதா. லேசாக அழுதுவிட்டதுபோல்கூடஇருந்தது.

போகிறேன், போகிறேன் என்று சொல்லி இத்தனை நாள் இழுத்தாயிற்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை. எப்படியும் சொல்லி ஆளை அனுப்பியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தோடு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருப்பாள் போலிருந்தது. தன் கணவன் எதிலும் முறை தவறிவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை. யாரும் எதுவும் ஒரு வார்த்தை பேசி விட இடங்கொடுக்கலாகாது. அது உறவோ, வெளியோ...

எல்லாம் சரிதான், சொந்த பந்தங்களுக்கு அது பொருந்தி வரும். வெளியிடங்களுக்குமா அப்படி? அதிலும் கூடவா நேரங்காலந் தவறாமை? இப்படியெல்லாம் பார்க்கப் போனால் மனுஷன் வாழவே முடியாது. இந்த முறைமைகளையெல்லாம் விட்டு ஒழித்தாலே நிம்மதியாய் இருக்கலாம். எங்கே விடுகிறார்கள்? வருஷம் முழுக்க அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டுதானே இருக்கிறது.

""வாழ்க்கைங்கிறதே அதானே? நீங்க மட்டும் சாப்பிட, தூங்க, எழுந்திருக்க, ஆபீஸ் போக, வரன்னு இருக்கிறதா? ஒரு காலத்துல எல்லாரும் கூடி வாழ்ந்தோம். இப்போ அது சாத்தியப்படலை. அவ்வப்போது விசேடங்கள், நிகழ்ச்சிகள்னாவது சந்திச்சிக்க வேண்டாமா? உறவுகள் அப்புறம் எப்படி பலப்படும்? விட்டுப் போயிராதா? அதுக்காகத்தானே விழாக்களும் விசேடங்களும்? வாழ்க்கையை அப்புறம் எப்படி புதுப்பிச்சிக்கிறது? - விட்டால் நீண்ட சொற்பொழிவாற்றி, புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.

இவற்றுக்காக அடிக்கடி லீவு போடுவதும், ஓடுவதும், சாடுவதும், செலவுகள் மேற்கொள்வதும், அட...செலவைப்பற்றிக் கூட ஒன்றுமில்லை...சொந்தங்களுக்குத்தானே செய்கிறோம்...வேறு யார் நமக்காக இருக்கிறார்கள்? எடுத்துப் பிடித்துப் போய் வருவதுதானே மிகவும் சிரமமாக இருக்கிறது? அடிக்கடி ஆபீசில் லீவு போட்டால் கெட்ட பெயர் ஆகாதா? எவன் மூஞ்சிக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது?

""அவன் வர மாட்டான்யா...எந்த விசேடத்துக்கு வந்திருக்கான்...ஏதாச்சும் ஒரு பங்ஷனுக்கு வந்திருக்கிறதாச் சொல்லு...அட...சந்தோஷமான நிகழ்ச்சிகளுக்கு வரவேணாம்...சாவுக்கு வரவேண்டாம்? அப்புறம் என்னய்யா மனுஷன் அவன்?''

ஓர் இழவுக்குப் போகாமலிருந்து என்னவெல்லாம் பேச்சு வந்துவிட்டது. அதைக் கேட்டு அப்படியே செத்துவிடலாம் போல் ஆகிவிட்டதே.

""அதானே மனுஷத்தன்மை...அப்புறம் என்ன ஒட்டும் உறவும்? நாளைக்கு அவனுக்கும் ஒரு நல்லது கெட்டது நடக்கும்தானே? அதுக்கு நாமும் போகணும், வரணும்தானே? அந்தச் சமயம் போட்டுப் பார்த்துற வேண்டியதுதான்....''

""எல்லாப் பேச்சும் கேட்டாகி விட்டது. சொந்த அண்ணன்மார்கள், சகோதரர்கள் என்று விட்டுக் கொடுக்காமல் போய்விட்டாலும், உறவுகளில் பலர் காதுபடப் பேசத்தானே செய்கிறார்கள்? ஆனால் ஒன்று. எவனும் எதையும் பேசுவதற்குத் தயங்குவதில்லை. தோன்றுவதையெல்லாம் பேசித்தான் விடுகிறார்கள்; எடிட்டிங் என்பதே கிடையாது. எதைப் பேசி என்னாகப் போகிறது? அவரவர் இருப்பு அவரவருக்கு என்று விடுகிறார்களா என்ன? பேசித் தீர்த்தால்தான் எல்லோருக்கும் மனது ஆறுகிறது. அது பக்குவப்பட்டதாய் நாம் நினைக்கும் ஆசாமிக்கும் சரி, சராசரி மனிதனுக்கும் சரி..எல்லோருக்கும் ஒன்றாய்த்தான் இருக்கிறது. நியமங்களையெல்லாம் கடைப்பிடித்து முயற்சித்துத்தான் பார்க்கிறார்கள். மனசு

கேட்டால்தானே? சராசரியாய் இருப்பதில்தான் மனிதனுக்கு சந்தோஷம். திருப்தி. செய்வதற்கு வடிகட்டல் என்று எதுவும் இல்லாமல் செய்துவிடுவதில்தான் மனிதனுக்கு ஆறுதலும், திருப்தியும்.

""எனக்குத் தெரிய நிறைய விஷயங்களுக்கு நீங்க போனதேயில்லை. ஒத்துக்குங்க...அதான் உண்மை. என்ன ஒண்ணு கரெக்டா பணத்தை அனுப்பிடறீங்க...அதுக்கு அஞ்சறதில்லை. ஆனாலும் இவனென்ன? இப்படி பணத்துக்காகவா பத்திரிகை அனுப்பறோம் இவனுக்குன்னு நினைப்பாங்களா இல்லையா?'' -சுளீர் சுளீர் என்றுதான் சொல்கிறாள் லலிதா. அப்படியாவது இவனுக்கு உறைக்கிறதா? பார்ப்போம் என்று.

""நினைச்சா நினைச்சுட்டுப் போறாங்க...என் இருப்புப் பிரகாரம் என்னை யாரு புரிஞ்சிக்கிறாங்களோ அவுங்க போதும் எனக்கு. அதுதான் என்னைப் பொறுத்தவரை யதார்த்தம். உண்மையான அன்புங்கிறதும் அதுதான்னு நான் நினைக்கிறேன்''

""அப்படிச் சொன்னா எப்படிங்க? நாளப் பின்ன நமக்கும் ஒரு காயம், கஷ்டம்னா நாலுபேர் வர வேண்டாமா? நல்லது கெட்டதுன்னு நமக்கும் நடக்கும்தானே? மனுஷாள் வேண்டாமா? அதுதானே பலம்''

எதற்கோ எதையோ சொல்லிப் பயமுறுத்துகிறாள். வற்புறுத்துகிறாள். வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டதல்ல. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று எவனுக்கும் தெரியாது. ரகசியமானது வாழ்க்கை. கணிக்கவே முடியாது. ஊகம் செய்யலாம், திட்டமிடலாம். செயலாற்றலாம். ஆனால் இதுதான் நடந்தாக வேண்டும் என்பது எந்தளவுக்கு நிச்சயம்? இந்த உறவுகள் உண்டாக்கி வைத்த சம்பிரதாயங்களில்தான் எத்தனை சிக்கல்கள்?

உறங்குவது போலும் சாக்காடு...உறங்கி விழிப்பது போலும் பிறப்பு....நாளை நடப்பதை யாரறிவார்? நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு...

அப்பாடி...எவ்வளவு சொல்லி வைத்திருக்கிறார்கள். மனிதன் திமிரான இஷ்டம்போலான, தான்தோன்றியான வாழ்க்கையை நடத்தி விடக்கூடாது என்று எத்தனை கட்டுப்பாடுகளை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்? மனிதன் இவற்றை எப்போதேனும் மீறினாலும் அது எத்தனை துல்லியமாக கண்ணுக்குப்படுகிறது? எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறது?

அநித்தியமான வாழ்க்கை... ஆனாலும் வாழாமல் முடிகிறதா? வாழ்ந்து காட்டுவதுதானே வாழ்க்கை...வாழ்க்கையை எப்படி அர்த்தப்படுத்துவது? வாழ்ந்து காட்டித்தானே?

வாழ்க்கை அர்த்தம் பொருந்தியதோ இல்லையோ, நீ அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்வது பயனுள்ளதாக்கிக் கொள்வது உன் பொறுப்பு. வாழ்க்கை உன் கையில்தான் இருக்கிறது. அதை மற்றவர் கையிலோ, உலகத்தின் கையிலோ ஒப்படைத்து விடாதே. இப்படியிப்படி இருப்பதுதான் அர்த்தம் பொருந்தியது என்கிறார்கள் சாதாரணர்கள். அவர்களைச் சராசரிகள் என்று சொல்லலாமா? சாமானியர்கள் என்று சொல்வதா? படிக்க, வேலைக்குப் போக, கல்யாணம் பண்ண, குழந்தை பெற, குடும்பம்னு இருக்க, இருந்து இருந்தே மடிய என்பதுதான் சாமானியனின் சுழற்சியா இது? அத்தோடு முடிந்து போகிறதா வாழ்க்கை? அடப்பாவி இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் வேறோன்றுமேயில்லையா?

இயற்கை மனிதனுக்கு எவ்வளவு அள்ளித் தந்திருக்கிறது? அதையெல்லாம் கண்கொண்டு ரசிக்க வேண்டாமா? மனதால் அள்ளிப் பருக வேண்டாமா? எத்தனையெத்தனை ஜீவராசிகள் பார்த்துப் பார்த்து ரசிக்க எத்தனையெத்தனை இடங்கள்? கேட்டுக் கேட்டு ரசிக்க, உள்வாங்க, அறிவைப் பெருக்க எத்தனையெத்தனை கருத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன?

எதையாவது நுகர்ந்திருக்கிறாயா நீ? என்றாவது இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கிறாயா? தவிர்த்திருந்தால் நீ மனிதனேயில்லை. உன் வாழ்க்கையே வீண். அன்றாடம் நீ ஜீவிப்பதே விரயம். வெறுமே மூச்சு வாங்குவதற்காகவா வாழ்க்கை?

யாரிடம் சொல்வது? யார் கேட்பார்கள்? இதையெல்லாம் கேட்டு கிறுக்கன் என்பார்களோ? கேலி செய்வார்களோ? இதுதான் வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது எல்லோருக்கும் ஒன்றுபோல் அல்லவா அமைந்திருக்க வேண்டும்? அப்படியா இருக்கிறது வாழ்க்கை? கூன், குருடு, நொண்டி, முடம், செவிடு, ஊமை என்று எவ்வளவு வேறுபட்டுப் போய்க் கிடக்கிறது? எத்தனை கொடூரமாய் சிதைந்து போய்க் கிடக்கிறது? மனிதனுக்கு மனிதன் எத்தனை வேறுபட்டுக் கிடக்கிறது?

ஒரேமாதிரி வாழ்க்கைதான் என்றால் அது எல்லோருக்கும் சந்தோஷமாகவோ, துக்கமாகவோதானே அமைந்திருக்க வேண்டும்? ஏன் மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுகிறது? சரி, இந்த சந்தோஷம் என்றால் என்ன? துக்கம் என்றால் என்ன? அது நமக்கு நாமே வரவழைத்துக் கொள்வதா அல்லது மற்றவர்கள் தருவதா? ஒருவருக்கான சந்தோஷத்தையும், துக்கத்தையும் மற்றவர்களால் தரமுடியுமா? அல்லது அவனுக்கு அவனே சம்பாதித்துக் கொள்வதா?

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்றது எதனால்?

இப்படியெல்லாம் வாழ்க்கை பலபட்டுக் கிடக்கையில் இதுதான் என்று வரையறுத்து எங்கே நிலைத்து நிற்க முடியும்?

""போச்சு, உங்களுக்கு நீங்களே பேசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா இன்னிக்கு நீங்க புறப்பட்டுப் போனாப்லதான்...ஒண்ணு மட்டும் சொல்றேன்... நீங்க உங்களுக்காக மட்டும் வாழாதீங்க...எனக்காகவும் கொஞ்சம் வாழப் பழகிக்குங்க..ஏன்னா உங்களுக்கு நா கழுத்த நீட்டியிருக்கேம் பாருங்க...அதுக்காக சொல்றேன்...''

சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் பெரிதாக உணர்த்தி விட்டவளாய் கொல்லைப்புறம் சென்று குத்திட்டு உட்கார்ந்தவளாய் சுற்றிலும் கிடந்த பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தாள் லலிதா.

எடுத்துக் கொண்ட சிறு புளித்துண்டு அவள் கைக்குள்ளிருந்து அரக்கப் பாத்திரத்தில் இறங்கியபோது பளிச்சென்று அது வெளிச்சம் பெறுவதைப் பார்க்க முடிந்தது.

வாழ்க்கையை இந்த உலகத்தில் அநேகம் பேர் இப்படித்தான் புதுப்பித்துக் கொள்கிறார்கள் போலும் அல்லது குறிப்பாகப் பெண்களா? இல்லையென்றால் அது சலித்துப் போகும் போலும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது இதுதானோ?

எல்லோரையும் போல் இருந்துவிட்டு மடிந்து மண்ணடித்துப் போ என்கிறார்கள். அதுதானே?

""கதவைச் சாத்திக்கோ...இதோ வந்திடறேன்...இன்னிக்கு ரொம்ப யோசிக்க வச்சிட்டே...''

இவன் வெளியேறுவதைக் கண்டு ஓடோடி வந்த லலிதா ""இருந்து, அவருக்கு ஆறுதலா நிறையப் பேசிட்டு வாங்கோ...புண்ணியமுண்டு...''என்றாள்.

""தனியாத்தான் இருக்கேன்...வீட்டுக்கு வாங்களேன்...'' என்று வருந்தி வருந்தி அழைத்திருந்த அந்த முதியவரை அன்று எப்படியும் பார்த்தே விடுவது என்று லலிதா சொன்னதில் உறுதிப்பட்டுக் கிளம்பியிருந்த இவனுக்கு, மனதுக்குள் என்னவோ ஒரு சிறு நெருடல். இனம் புரியாத சோகம். என்ன மனப்போக்கோ இது! பல சமயங்களில் இப்படித்தான் கழன்றுபோய்க் கிடக்கிறது.

நினைத்தவாறே தயங்கித் தயங்கி அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த வேளையில் இவன் எதிர்கொண்ட நிசப்தம் அவனை மேலும் பயமுறுத்தியது.

இருள் நிறைந்த நீண்ட பட்டாசாலை. அதைத் தாண்டிய கூடம். பிறகு கொல்லைப்புறம் நோக்கி இழுத்துச் செல்லும் மீண்டும் ஒரு நீண்ட ரேழி என்று கிடந்த அந்தப் பழங்கால வீட்டில் ஏன் இப்படி இருளடைந்து கிடக்கிறது என்ற சந்தேகத்துடனேயே நுழைந்த இவனுக்கு, சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களுக்கிடையே தலைமாட்டில் ஏற்றி வைத்திருந்த அந்தத் தீபமும், அதன் முன்னே நீண்டு கிடந்த அந்தப் பெரியவரின் சடலமும், பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

“சபாஷ், பூக்குட்டி…!” சிறுகதை

(தினமணி – சிறுவர் மணி – 02.06.2012 பிரசுரம்)

தை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப் பொறுத்தவரை அன்று மட்டும்தான் பேத்தியோடு பேச முடியும், விளையாட முடியும். சனிக்கிழமை விடுமுறை நாளில் கூட ஆபீஸ் சென்று விடுவார் அவர். அதென்னவோ அப்படிப் போனால்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அவருக்கு.

வாரா வாரம் ஏதேனும் கதைகளைத் தயார் செய்து விடுவார்தான். அல்லது நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு குழந்தைக் கதைகளைத் தேர்ந்து விடுவார். குறிப்பாகக் குழந்தை அஸ்வினிக்கு மகாபாரதக் கிளைக் கதைகளைச் சொல்லத் தவறுவதில்லை அவர். இராமாயணமும் சொல்லுவார். அடிக்கடி அதையே சொன்னால் போரடித்து விடுமோ என்று அன்றாட நடப்புக் கலந்த யதார்த்தக் கதைகளையும் சொல்ல யத்தனித்தார். கொஞ்சங் கொஞ்சமாக இந்த உலகமும் புரியட்டும் என்று நினைத்தார். அது அத்தனை சுருதி சுத்தமாக வரவில்லையோ என்று அவருக்கே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

வாசலில் கீரை விற்பவள், காய்கறி கொண்டு வருபவள், செருப்புத் தைப்பவன், தையல் மிஷினைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையும் தொழிலாளி, போஸ்ட்மேன், ஐஸ் விற்பவன், அயர்ன்காரர், கூரியர் சர்வீஸ்காரர் என்று வகைக்கு ஒன்றாக எப்படியோ திரித்து மறைத்து ஒரு கதையை உருவாக்கிச் சொல்லிக் கொண்டிருந்த அவருக்கு இன்று என்ன வந்ததோ மனதில் ஒன்று கூட உருவாகவில்லை.

சொல்லலாம்தான், நேற்று ஒரு டஜன் என்று பதினாறு பழத்தை ஏதோ கவனப் பிசகில் கொடுத்துவிட்டுப் போன வாழைப் பழக்காரனையும், அதைக் கவனித்தே கமுக்கமாய் வாங்கி வைத்த மனையாளையும் பற்றிச் சொல்லிவிடலாம்தான். பிறகு பாட்டியைப் பற்றித் தவறான எண்ணம் குழந்தை மனதில் விழுந்து விட்டால்? வேண்டாம் என்று மனசை அடக்கிக் கொண்டார்.

இன்று இருக்கும் இருப்பைப் பார்த்தால் கடைசியில் அதைத்தான் சொல்ல வேண்டி வருமோ என்கிற அச்சம் அவர் மனதில் புகுந்தபோதுதான் பளிச்சென்று அந்த நிகழ்வு அவர் மனதில் உதித்தது. அப்பாடா…! என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே ”கத வந்திருச்சி…..” என்று உற்சாக மிகுதியில் குழந்தையின் கன்னத்தைத் தடவிக்கொண்டே கத்தினார் ராமகிருஷ்ணன்.

சொல்லு தாத்தா…சொல்லு தாத்தா….சீக்கிரம் சொல்லு…..என்று மளார் என மடியில் வந்து படுத்துக் கொண்டது அஸ்வினி. ஆரம்பித்தார் ராம்கி.

“எப்டியோ கவனிக்காம, அந்த ஒன்வேல போயிட்டேன் தாத்தா…..என்று ஆரம்பித்தார். கதையைச் சரியான இடத்தில் ஆரம்பித்துவிட்டதாய் அவர் மனம் பெருமிதம் கொண்டது. ஒரு நேர்மையான கதையை குழந்தைக்குச் சொல்லப் போவதில் மகிழ்ச்சி. உற்சாகம்.

ஒன்வேன்னா….? உடனே விழுந்தது கேள்வி. குழந்தையைப் பொறுத்தவரை அது சரிதானே? எனவே ஒரு வழிப்பாதை என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்தார்.

“ஓ…!அப்டியா? அப்போ நீ அங்கயிருந்த போர்டைக் கவனிக்கலையா?”

இருக்கிற டிராஃபிக் உறரிபரில எனக்கு அது கண்ணுல படலடா…அதோட அந்தப்பக்கம்லா நா அடிக்கடி போனதில்ல….ஆகையினால எனக்குத் தெரிலன்னு வச்சிக்கயேன்…. – தன் தவறுக்கு குழந்தைக்கு ஏற்றாற்போல் சமாதானம் சொன்னார் ராம்கி.

குழந்தை இவரின் மூஞ்சியைப் பார்த்தது. என்னவோ கேட்க நினைப்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.

என்னா சொல்லு…? என்றார் இவர்.

டிராஃபிக் போலீஸ் பிடிச்சிட்டானா தாத்தா….? –முகத்தில் கலவரம்.

பிடிச்சா என்ன? தெரியாமத்தானே போயிட்டேன்…வேணும்னேவா போனேன்….?

அதெப்படித்தாத்தா போலீசுக்குத் தெரியும்….குழந்தை விடாமல் கேட்டது.

தெரியாதுதான்…அதான் கூப்டுட்டான்……என்றார் இவர்.

ஐயைய்யோ…அப்றம்? – பயந்தவாறே அஸ்வினி இவரின் கையைப் பற்றிக் கொண்டது.

இங்குதான் குழந்தைக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் ராம்கி. எப்படியாவது ஒரு நல்லதைப் புகுத்தி தன்னால் அதற்கு ஒரு கதை சொல்லிவிட முடிகிறது. அதன் மூலம் நல்ல எண்ணங்களை அதன் மனதில் விதைக்க முடிகிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல் இப்பொழுதே அதன் மனதில் நல்ல விஷயங்களாய்ப் போட்டு நிரப்பி விட்டால் பிறகு கெட்ட, தவறான விஷயங்களோ, எண்ணங்களோ மனதில் உதிக்க வாய்ப்பில்லையல்லவா? இந்த மட்டுக்கும் இம்மாதிரி ஒரு நல்லது செய்வதற்காவது பையனும், மருமகளும் தனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்களே என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொண்டார்.

குழந்தை இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. தாத்தா மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்திவிட்டது அதை மேலும் கலவரப்படுத்தி விட்டதோ என்னவோ?

ஏன் தாத்தா பேசாம இருக்கே…? போலீஸ்காரர் திட்டினாரா? என்றது அஸ்வினி.

திட்டினாராவா? எதுக்காகத் திட்டணும்? நான்தான் தப்புதான், தெரியாம வந்துட்டேன்னுதானே சொன்னேன்…எதுக்காகத் திட்டறார்? முழிச்சிப் போனாராக்கும்…? என்றார் இவர்.

குழந்தை சிரித்தது. இவர் தொடர்ந்தார்.

எங்கயுமே உண்மையை ஒத்துண்டோம்னா அதுக்கு மதிப்பும் மரியாதையும் ஜாஸ்திடா கண்ணு….அடாவடி பண்ணினாத்தான் தப்பாக்கும்….அதை நல்லாத் தெரிஞ்சிக்கோ…

அடாவடின்னா…?

குழந்தை இப்படிக் கேட்ட பின்புதான் ஏன் அந்த வார்த்தையைச் சொன்னோம் என்றிருந்தது இவருக்கு. அந்தந்த வயது வரும்போது, சமூகத்தோடு கலக்கும்போது தானாகவே தெரிந்துவிட்டுப் போகிறது…எதற்காக இப்பொழுது? ஏதோ தப்புச் செய்துவிட்டதுபோல் உறுத்தல் …ஆனாலும் அதை மேற்கொண்டு காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தார்.

உண்மைக்கு எங்கயுமே மரியாதையும் மதிப்பும் அதிகம்டா ராஜாத்தி.. மகாத்மாகாந்தி உண்மையே பேசின அரிச்சந்திர மகாராஜாவைத் தானே தனக்கு வழிகாட்டியா எடுத்திண்டார்….உனக்குச் சொல்லியிருக்கேன்லயா…உண்மைக்கு இருக்கிற சக்தி அப்டி…அது நெருப்பு மாதிரின்னு வச்சிக்கயேன்…..நாம பேசுறது உண்மையாயிருந்தா நம்மகிட்டருந்து வார்த்தைகள் தடங்கல் இல்லாம, பளிச்சின்னு வெளிவரும்…இல்லன்னா, அதாவது பொய்யிருந்திச்சுன்னு வச்சிக்கோ, வாய் உளரும்….வார்த்தைகள் தடுமாறும்….அதுவே நாம பேசுறது பொய்யின்னு காண்பிச்சுக் கொடுத்திடும்…ஆகையினால எங்கயானாலும் நாம தப்பித் தவறி ஒரு தப்போ, தவறோ செய்திட்டாலும், அதை ஒத்துக்கணும்…தைரியமா ஒப்புத்துக்கிற மனசை நாம வளர்த்துக்கணும்…அது நேர்மையோட அடையாளம்…அந்த நேர்மைதான் நம்மை என்றைக்கும் வாழ வைக்கும்…மேற்கொண்டு தவறுகளச் செய்யமாட்டோம்...தெரிஞ்சிதா…? –சொல்லிவிட்டு குழந்தை முகத்தையே உற்றுப் பார்த்தார் ராம்கி.

இறுக்கமான முகத்தோடு அது இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டது.

அப்புறம் என்ன தாத்தா செய்தே…?

என்னத்தச்செய்றது….ஸாரி சொல்லிட்டேன்ல…அதுக்கு மேல என்ன இருக்கு? யார் ஒத்துக்கிறா இந்தக் காலத்துல…? சரி போங்கன்னுட்டான்….வந்துட்டேன்…அவ்ளவுதான்…

விட்டுட்டானா…..நல்ல போலீஸ்….என்றது அஸ்வினி. கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது குழந்தை. என்ன யோசனை என்று அதையே பார்த்துக்கொண்டிருந்தார் இவர்.

சரி, தாத்தா நா பால் குடிக்கப் போறேன்….என்றுவிட்டு எழுந்து அம்மாவைப் பார்த்து ஓடியது. அந்த அழகையே ரசிக்கலானார் இவர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றியது ராம்கிக்கு. ஆனால் மனசில் ஒன்று உறுத்தியது.

அதென்ன, நல்ல தாத்தா என்று சொல்லும் என்று பார்த்தால் நல்ல போலீஸ் என்று விட்டுப் போகிறது. நான் சொன்ன கதையின் சாராம்சமான நேர்மை, உண்மை என்பவைகளைப் புரிந்து கொண்டதா இல்லையா? கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது இவருக்கு. கற்பனையில் திரித்துக் கூறும் கதைகள் சரியாகத் தனக்கு அமையவில்லையோ என்று நினைக்கலானார். இது தன்னின் அனுபவமாயிற்றே? அதனால்தானே பளிச்சென்று மனதில் தோன்றியதை அப்படியே சொன்னேன். ஒரு பிட்டுக் கற்பனை, மண்ணாங்கட்டி ஒன்று கிடையாதே…! குழந்தைக்கு ஏதாச்சும் புரிந்ததா இல்லையா? - சற்றுக் குழப்பத்துடனேயே படுக்கைக்குப் போனார் ராமகிருஷ்ணன்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட அழைத்துச் சென்றபோது குழந்தை அஸ்வினி சாவகாசமாய்க் கேட்டது.

ஏன் தாத்தா, நேர்மை, உண்மைன்னு நேத்திக்கு சொன்னியே ஒரு கதை…அந்தக் கதைல போலீஸ்காரர் உங்களை சரி போங்கன்னு விட்டுட்டார் வந்துட்டேன்னீங்கல்ல…?

ஆமாம்….என் ஒரு ஆளையே கவனிச்சிட்டிருந்தாப் போதுமா…டிராஃபிக்கைக் கண்காணிக்க வேண்டாமா? எவ்வளவு கூட்டம்?

அது சரி தாத்தா…அவன் போகச் சொல்லிட்டான் நீங்க வந்துட்டீங்க…! ஆனாலும்….. – என்னவோ சொல்லத் தயங்குவது போல நிறுத்தியது குழந்தை.

ஆனாலும்….? சொல்லு……என்ன கேட்கிற…? தயங்காமச் சொல்லு... தெரியாமப் போயிட்டாலும் நீங்க ஒன்வேல போனது தப்புதானே…?

தப்புதான்…..- குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று சற்று திடுக்கென்றே இருந்தது இவருக்கு.

அப்போ என்ன ஃபைனோ அதைச் சொல்லுங்கன்னு நீங்க கட்டிட்டில்ல வந்திருக்கணும்…..அப்போதானே அது உண்மையான நேர்மை? –

ராம்கிக்கு அவர் செவுணியில் யாரோ பளாரென்று ஓங்கி அறைந்தது போலிருந்தது அந்த நிமிடத்தில். பேருந்தில் ஏறி அமர்ந்து இவரையே பார்த்து அதன் பதிலுக்காக அந்தக் குழந்தை காத்திருந்தபோது, முகத்தில் ஈயாடாமல் வெல வெலத்துப் போய் நின்று கொண்டிருந்தார் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன்.

ஒன்று மட்டும் மேலும் அவருக்கு நன்றாக விளங்கியது. தான் அதுநாள்வரை சொல்லிக் கொடுத்த நேர்மையும் நாணயமும் உண்மையும் கலந்த கதைகள் எல்லாம் சேர்ந்து தன் பேத்தியை நன்றாகத் தெளிவு பெற வைத்திருக்கிறது என்பதே அது…!!

--------------------------------------------(தினமணி-சிறுவர் மணி – 02.06.2012 பிரசுரம்)

10 ஜூன் 2012

“மொழி விளையாட்டு” சிறுகதை

 

எனக்கு இங்கிலீஷ் வரவில்லை என்றுதான் என்னை மாற்றினார் கிருஷ்ணசாமி. சற்று அவசரப்பட்டுவிட்டார். மொழிக்கு அவர் இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கத் தேவையில்லைதான். ஒருவரை இடம் மாற்றும் அளவுக்குச் சென்றிருக்க வேண்டாம் என்பதுதான். மற்றப்படி அவரின் எதிர்பார்ப்பில் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. ஆனால் அதை அலுவலகத்தில் உள்ள மற்ற எல்லோரும் பூர்த்தி செய்கிறார்களா என்பது கேள்விக்குறி. அப்புறம் எப்படி நான் மட்டும் பாதிக்கப்படலாம்? சர்வீசுக்குப் புதியவன் என்றால் எதுவும் செய்து விடலாமா? இப்பத்தான வேலைக்கே வந்திருக்கோம் என்று நானும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அவரின் எதிர்பார்ப்பை மற்ற எல்லோராலும் நிச்சயமாகப் பூர்த்தி செய்ய முடியாது என்கிற தீர்மானத்தில்தான் நான் இதைச் சொல்கிறேன். அப்படியான ஒரு அதீத எதிர்பார்ப்பு அவரிடம் இருந்ததா என்பதேயும் எனக்குச் சந்தேகத்தைத் தந்தது. ஏனெனில் அவரின் ஆங்கிலம் ஒன்றும் அத்தனை உயர்தரமானதாய் இருக்கவில்லை என்கிற எனது கண்டு பிடிப்புத்தான்.

ஒண்ணுமில்லாம, பொட்லர் இங்கிலீஷை வச்சு ஓட்டியிருக்கான்யா இந்த ஆளு… என்று பிற்பாடு நினைத்தேன்.

உனக்குத்தான் இங்கிலீஷே வரவில்லையே, நீ எப்படி அவரின் மொழியின் தரத்தை நிர்ணயித்தாய் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அன்றைய நிலையில் எனக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கான தீவிர முயற்சியில் நான் இருந்தேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இலக்கியத்தில் எது நல்ல படைப்பு என்று அடையாளம் கண்டு சொல்பவர்களெல்லாம் நல்ல படைப்பாளியாய் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல விமர்சகர்களாய் இருந்தவர்களெல்லாம் மிகச் சிறந்த சிறுகதைகளையும், நாவல்களையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் படைத்தவர்கள் அல்லவே…! அவர்கள் விமர்சகர்கள். நிறைய வாசித்து, வாசித்து, பரந்த, பழுத்த வாசிப்பனுபவத்தின் வாயிலாக விமர்சகர்களாய் உருவெடுத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் தரமான விமர்சனங்களின் மூலமாய்த் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்தானே…? அதுபோல்தான் நான் சொல்வதும் என்று கொள்ளுங்கள்.

அந்த அந்நிய மொழியின்பாலான எனது தீவிர முயற்சி என்னை அந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது. ஆங்கிலம் நம் மண் சார்ந்த மொழி அல்ல. காலனி ஆட்சியாளர்களால் அது நமக்குக் கற்றுத் தரப்பட்ட மொழி. அவர்களுக்கு நாம் தொண்டூழியம் செய்யும் பொருட்டு அவர்களால் நம்மிடையே திணிக்கப்பட்ட மொழி. அந்த மொழியைத் தீவிரமாகக் கற்றுக் கொண்டு அவர்களையும் மீறினார்கள் நம்மவர்கள். அதிகாரத்தைப் பறைசாற்றும் தொனியிலான மொழியாக அது உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டது. இன்றளவும் அது செலுத்திவரும் போலி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு நாம் அம்மொழியை ஆசையாய் அரவணைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மிடையே இருப்பவர்களையே அதைப் பயன்படுத்தி பயமுறுத்துகிறோம். விலகி ஓடச் செய்கிறோம். எட்டி நின்று பணியச் செய்கிறோம். இது என் குரு சொல்லித் தந்தது. என் நெஞ்சில் ஒளிரும் சுடர் அவர்.

வெறும் மொழி, பரஸ்பரம் இருவருக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்ள அல்லது சாதாரண உரையாடல்களை மேற்கொள்ள உதவும் காரணி இந்த அளவுக்கான அதிகாரத்தைச் செலுத்தலாமா? இன்று நம்மிடையே உள்ள பலரும் இதனால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் நாம் அதை வெளியில் சொல்லாமல், மனதுக்குள் போட்டுப் பூட்டி வைத்துக் கொண்டும், கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டும் கேவலமாய்க் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோமே…அது சரியா?

கிருஷ்ணசாமி இப்படித்தான் என்னை விரட்டியிருக்கிறார் என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. அரசு அலுவலகங்களில் வேலை பார்க்க மொத்தமே இருநூறோ முன்னூறோ ஆங்கில வார்த்தைகள் தெரிந்தால் போதும். திருப்பித் திருப்பி அதிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும் நீங்கள் எழுதும் வரைவுகள். அதை ஆங்கிலத்தில் டிராஃப்ட் என்று பெருமையாய்க் கூறிக் கொள்வார்கள் அவர்கள். ரெண்டு வரி டிராஃப்ட் எழுதத் தெரியாதுய்யா அவனுக்கு…என்று கமென்ட் அடிப்பார்கள். சொல்பவருக்கே தெரிந்தது அந்த ரெண்டு வரியாகத்தான் இருக்கும். அதை நீங்கள் அரைத்த மாவையே அரைக்கும்போது உங்கள் மனதில் தவிர்க்க இயலாமல் படிந்து போகும். ஒரே மாதிரிப் படித்துப் படித்து அலுத்துச் சலித்து நீங்களும் செக்கு மாடாகி விடுவீர்கள் என்பதுதான் நிஜம். வழக்கத்தில் இல்லாத வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நீங்கள் எழுதினீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஒன்று உங்கள் கோப்பு மேலாளருக்குப் போகும்போது அவர் திருத்தி விடுவார், அப்படியும் தப்பினால் அலுவலர் கட்டாயம் கை வைப்பார். பெரும்பாலும் தப்பாது என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.

இதென்னய்யா புது வார்த்தையா இருக்கு…? இதெல்லாம் வாணாம், வழக்கம் போல எழுதினாப் போதும்…வித் ரெஃபரென்ஸ் டு யுவர் லெட்டர்னே போடுங்க…அப்ரபோஸ், கிப்ரபோஸ் இதெல்லாம் வேண்டாம்….என்று பெருமாள் கோவில் பட்டையாய் அடித்து வழக்கமான வார்த்தைகளைக் கிறுக்கி விடுவார்கள். ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன். சொல்லக் கூட மாட்டார்கள். சொன்னால்தானே கேள்வி. கேள்வியென்ன கேள்வி? அதெல்லாம் ஒன்றும் கேட்க முடியாது. மீறிக் கேட்டால் நீங்கள் எழுதியதையே கிழித்துப் போட்டுவிட்டு வேறு எழுதி அனுப்பி விடுவார். உங்கள் மீது அம்புட்டுப் பிரியம் அவருக்கு.

அரைகுறைகள்தான் ஆடுவார்கள் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். நிறை குடம் தளும்பாது. முதுமொழி. யாரும் இங்கே நிறைகுடமில்லை. அப்படி பாவித்துக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே உயரத்தில் உட்கார்த்திக் கொள்வார்கள். குட்டி அரைகுறைகள் பெரிய அரைகுறையை வேண்டி நிற்கும்.

நிர்வாகத்தில் மனிதனின் சொந்த குணங்கள், வக்கிரங்கள் என்று புகுந்ததோ அன்றுதானே அது கெட ஆரம்பித்தது. அப்படிப் படிப்படியாய்க் கெட்டவைகளில் இதுவும் ஒன்று.

இருக்கிற பாஷை போதும், புதுசா ஒண்ணும் நுழைக்க வேண்டாம் என்பதுதான். அப்படி ஏதாச்சும் எழுதுபவனை முதலில் பிடிக்காது.

நம்மை விடக் கூட இங்கிலீஷ் தெரியும் போல்ருக்கே இவனுக்கு…சரியில்லையே…கட் பண்ணனுமே…என்றுதான் சிந்தனை போகும். அத்தனை பரந்த எண்ணம். அதன் பிரதிபலிப்பாய்த்தான் அடித்தல், திருத்தல். ஏறக்குறைய உங்கள் மூஞ்சியிலேயே குறுக்காகக் கோடு இழுத்தால் எப்படியிருக்கும்? அப்படி நினைத்துக் கொள்ளுங்களேன். அப்பொழுதுதான் நான் சொல்வதனுடைய முழுமையான பாதிப்பை உணர முடியும். உங்களுக்கு அதிகம் தெரியும் என்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி நீங்கள் வெளிப்படுத்த முனைந்தால், ஏதாச்சும் செய்து உங்களை மட்டம் தட்டப் பார்ப்பார்கள். அய்யோடா, அப்பாடா என்று உட்காருவதுவரை விடமாட்டார்கள். பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? எக்கேடும் கெட்டு ஒழியுங்கள் என்று வழக்கம் போல் அவர்களைப் போலவே எழுதிக் கிழிக்க ஆரம்பித்து விடுவீர்கள். கழுதையைப் பார்த்திருக்கிறீர்களா? நின்ற இடத்திலேயே மணிக்கணக்காய் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும். எதற்காக நிற்கிறது? என்ன செய்யப் போகிறது? என்று எதுவும் தெரியாது. நாமும் அப்படியே ஆகிவிடுவோம். இன்னும் பச்சையாய்ச் சொல்வோமா? எருமை மாட்டு மேலே மழை பேய்ஞ்சாப் போலே என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த கிளார்க்குகளையே பிரிவின் கோப்புகளை எடுத்து முதலில் ரிமைன்டர் போடக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான். நன்றாக நீங்கள் வேலை பழகின பிறகும் அதைத்தான் விருப்பமாகச் செய்து நிறைய வேலை செய்துள்ளதாய்க் காண்பிப்பீர்கள் என்பது வேறு விஷயம். அப்படி நினைவூட்டாய்ப் போட்டுத் தள்ளிய ஒரு கிளார்க்தான் மாநிலத்திலேயே பெஸ்ட், ஃபர்ஸ்ட், சின்சியர், என்றெல்லாம் சர்டிஃபிகேட் கொடுத்து தமிழ்நாட்டின் எல்லா ஆபீஸ்களுக்கும் சர்குலர் அனுப்பினார் இந்தக் கிருஷ்ணசாமி. நாங்களெல்லாம் மனதுக்குள் சிரித்துக் கொண்டோம். அவரின் கணிப்பில் அந்த அவர்தான் நல்ல பணியாளர். கஷ்டமான கோப்புகளை முதலில் கையிலெடுத்து அதை முழுக்கப் படித்து, புத்திசாலித்தனமாய் டிஸ்போஸல் கொடுப்பது என்பதெல்லாம் உங்கள் சொந்த விருப்பம் சார்ந்தது. நீங்களாக மெனக்கெட்டுக் கொண்டால் மெனக்கெட்டுக்க வேண்டியதுதான். யாரும் உங்களுக்கு மாலை போட மாட்டார்கள். இங்கே ரிமைன்டர் போடுபவன்தான் நல்ல வேலையாள். அதுக்கு ஒரு டெய்லி வேஜஸ் ஆள் போதும் என்பேன் நான்.

இப்படியாகத்தான் முதலில் இரண்டு வரி நினைவூட்டிலிருந்து பழகட்டும் என்பதாக ஆரம்பிக்கும் பணிகள். அதையே பலரும் அவரவர் பிரிவுக்கு என்று ரோனியோ உருட்டி வைத்திருப்பார்கள்.வேலையை எளிதாக்குகிறார்களாம். அங்கும் இங்குமாக மையைத் தீற்றிக் கொண்டு நிறைய ரெடிமேட் வாசகங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதான் ஸார்…ஸ்டென்சில் கட் பண்றது…காப்பி எடுக்கிறது….

அதக் காப்பி எடுக்க அந்தப் பியூன் என்ன கிராக்கி பண்ணிப்பான்னு நினைக்கிறீங்க…இத்தனைக்கும் சீனியர் பியூனுக்கு இந்த வேலைக்காகவே ஸ்பெஷல் பே வேறே. அதையும் வாங்கிக்கிட்டு அவன் சடைக்கிற சடைப்பைப் பார்த்தீங்கன்னா…? இப்டியே மேலேருந்து கீழவரைக்கும் அத்தனையையும் கெடுத்துட்டாங்ஞ சார்….

அப்படி ரெடி லெட்டர்கள் வைத்திருப்பவர்கள் பலர் உயர் அலுவலருக்கு, கீழுள்ள அதிகாரிக்கு என்று வித்தியாசமில்லாமல் மரியாதை நோக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கும் கூத்தெல்லாம் நிறைய நடக்கும். மேலாளரும் பார்க்காமல், அலுவலரும் பார்க்காமல் மொட்டைக் கையெழுத்துப் போட்டு அனுப்ப அது கேள்விக்குறியோடு பல சமயங்களில் வந்து நிற்கும்.

ஏன்யா இப்டிக் கழுத்தறுக்கிறீங்க…பேசாமத் தமிழ்ல எழுதிட்டுப் போக வேண்டிதானய்யா…தாய் பாஷைதான் இருக்குல்ல…என்று தலையில் அடித்துக் கொள்வார். தமிழும் சரியாக வராது என்பதுதான் சத்தியமான உண்மை.

சார்…ஒரு சந்தேகம்….

என்ன…?

ஆய்வு அறிக்கைங்கிறதுல…சின்ன ரியா பெரிய றியா….?

அதென்ன சின்ன ரி பெரிய றி…? ரெட்டைக் கொம்பா, ஒத்தக் கொம்பான்னு கேட்கத் தெரியாதா? ரெட்டைக் கொம்பு றி போடுய்யா….இங்கிலீஷ்தான் வராதுன்னா தமிழுமா வராது….கஷ்டம்யா….உங்களோட…என்னவோ ரெட்டைக் கொம்பும், ஒத்தைக் கொம்பும் சரியான பிரயோகம் என்பதைப் போல இவர் சடைக்கிற சடைப்பு?

ஒழுங்காய் மரியாதையாய் வல்லினமா, மெல்லினமா, இடையினமா என்று எவனுக்கும் கேட்கத் தெரியாது. சின்ன ரி, பெரிய றி, ரெண்டு சுழி ன மூணு சுழி ண என்றுதான் பேசுவார்கள். அத்தனையையும் கேட்டுவிட்டு கடைசியில் தப்பாகவும் எழுதுவார்கள்..

ஆயிரம் ஓட்டை உடைசல்கள் இருக்கலாம். ஆனால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்க முடியாது.

அப்டித்தான்யா, விடு…பாதகமில்லாம வேல நடக்குதா…அவ்வளவுதான்….காலம் இப்படித்தான் படிப்படியாக மாறி நின்று விட்டது. வேறு என்னதான் செய்வது? எத்தனை நாளுக்குத்தான் வருஷக்கணக்காய்த் திருத்திக் கொண்டிருப்பது? இஸ், வாஸ், உறாஸ், உறாட், உறாவ் என்று ஓய்ந்துதான் போவீர்கள்.

க்ராமருக்கு முப்பது மார்க் இருக்கு. சொளையா வாங்கிரணும்….என்று எக்ஸாமினேஷன் உறாலில் யாரும் பார்க்காமல் அருகே வந்து காதைத் திருகுவார் வாத்தியார் கிருஷ்ணசாமி. ராமன் மரத்தை வெட்டினான். மரம் ராமனால் வெட்டப்பட்டது. ஆக்டிவ் வாய்ஸ், பாசிவ் வாய்ஸ் சொல்லித் தந்தது அவர்தான். தொடையில் வாங்கிய கிள்ளு இன்னும் ஞாபகமிருக்கிறது. அந்தக் கிருஷ்ணசாமி தியாகி. கருணையின் வடிவம். கடவுளுக்கு நிகர். அவர் அன்று போட்ட விதைதான் இன்று எனக்குப் பச்சென்று பிடித்துக் கொண்டது. சட்டென்று தேறி விட்டேனே…எனக்கே ஆச்சரியமான ஆச்சரியம். பள்ளி இறுதிக்குப் பின்னால் அதைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நான் செய்த இமாலயத் தவறு.

ஆனால் கிருஷ்ணசாமி என்னை மாற்றிய அன்று நான் அப்படித்தான் இருந்தேன். காலையில் அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்ப மிடச் சென்றபோது மேலாளர் தியாகராஜன் தடுத்தார்.

உங்கள மாத்தியாச்சு….யூனிட் ஆபீஸ் போட்டிருக்கு….இந்தாங்க ரிலீஃப் ஆர்டர்……

பெருத்த அதிர்ச்சிதான் எனக்கு. ஆனாலும் காரணம் தெரிய வேண்டுமே…

அங்கிருக்கிற ஸ்டெனோ அவருக்கு வேணுமாம்…கேட்டு வாங்கியிருக்காரு….நீங்க அங்க போறீங்க…வைஸ் வெர்ஸா…

நியாயமாய்த்தான் தோன்றியது. அது அவர் விருப்பம். யார் என்ன சொல்ல முடியும்? அவர் எல்லாம் செய்வார் போலிருக்கு. நம்மால் அது முடியாதே என்று நினைத்துக் கொண்டேன். நான் எல்லாம் என்று சொல்வது உங்களை நெருடியிருக்கும். அந்தக் காலத்தில் ஸ்டெனோ என்பவன் அலுவலரின் பர்சனல் க்ளார்க். அதாவது அவரின் எல்ல்ல்ல்லாவற்றிற்கும் பொறுப்பானவன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆபீசர் ஒன்றுக்குப் போவது முதற்கொண்டு அவருக்கு நினைவு படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ளவன். எப்படி காவல் துறையில் ஒரு போலீஸ், ஆர்டர்லி போலிருந்து கொண்டு உயரதிகாரியின் வீட்டுக்கு என்னவெல்லாம் செய்கிறாரோ அதுபோல் ஒரு ஸ்டெனோவும். கேட்டால் நீங்கதான பி.ஏ., அப்புறம் நீங்க செய்யாம யாரு செய்வா…என்பார்கள். பேரு பெத்த பேரு, தாகத்துக்கு தண்ணி லேது…..

இந்த….குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு விடுறது…கூட்டிட்டு வர்றது…மத்தியான சாப்பாடு கொடுத்திட்டு வர்றது…இதெல்லாம் தயவுசெய்து என்னால முடியாது சார்….தப்பா நினைச்சிக்காதீங்க…..அஃபிஷியலான உங்க பர்ஸனல் மட்டும்தான் என்னால பார்க்க முடியும்……ஸாரி….

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருந்தேன் நான். அது யானை வாய்ச் சுண்ணாம்பாய் இருந்திருக்கும் போல. என்ன செய்யலாம் என்று யோசித்த மனுஷன் இப்படிச் செய்து விட்டார். என்ன துணிச்சல்? சர்வீசில் இதுவரை எவனொருவனும் இப்படிச் சொன்னதில்லையே?

போகட்டும் அதுபற்றி ஒன்றுமில்லை. ஆனால் வேறொன்று போல் காதில் விழுந்ததே என்று யோசனையிலேயே இருந்தேன். அதைத் தீர்த்தவன் ராதாகிருஷ்ணன்தான். அவன் டிஸ்டிரிக்ட் கன்ட்ரோல் ஆபீஸில் இருந்தவன். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து எனது முதல் அலுவலக ரீதியிலான நெருங்கிய நண்பன்.

உனக்கு இங்கிலீஷ் வரலயாம்டா…..அப்டித்தான் காதுக்கு வந்திச்சு….என்றான்.

உன் இங்கிலீஷ் பத்தலையாம்டா என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. அதெப்படி வரலை என்று சொல்லப் போச்சு?

நானும் அன்று அத்தனை வீக்காகத்தான் இருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை வெட்கமின்றி இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் என்பது வேறு. கடுமையான உழைப்பில் ஸ்டெனோகிராபி உயர்நிலை ஆங்கிலம் முடித்தவன் நான். அப்படித்தான் ஸ்டெனோ ஆனேன் சர்வீஸ் கமிஷன் எழுதி. தமிழ் சுருக்கெழுத்துக் படித்தால் ரூபாய் நூற்றைம்பது ஸ்பெஷல் பே என்று உத்தரவு போட்டார் எம்.ஜி.ஆர். அது 1977. அதையும் உடனே பிடிவாதமாகப் படித்து அந்தத் தொகையைப் பெற்றவன். எடுத்த எடுப்பில் ஐந்து வருஷம் சர்வீஸ் போட்டவனை விடக் கூடச் சம்பளம் என்றதுமே ஆபீஸே முழித்தது என்னைப் பார்த்து. அந்தக் காலத்தில் பேயாக உழைப்பேன். பார்ப்பவர்கள் பயந்து போவார்கள். எனது உழைப்புதான் என்னை உயர்த்தியது.

எங்கள விடக் கூடச் சம்பளம் வாங்கறேல்ல…வா…வந்து டிபன் வாங்கிக் கொடு…என்பார்கள். எந்த வகையிலாவது நைவேத்தியம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதான் என் க்வாலிஃபிகேஷன் நிற்கும்.

ஆனாலும் ப்ராக்டிகல் நாலெட்ஜ் என்பதே வேறு. அலுவலக நடைமுறைகளைப் புரிந்து கொள்ள சற்றுக் கால அவகாசம் வேண்டாமா? அதைத் தரவில்லையே இந்த மனுஷன்? புதிதாக சர்வீசுக்கு வந்தவனை ஊக்கப்படுத்தாமல் இதென்ன எடுத்த எடுப்பில் ஒரு அடி? என்னதான் ஆனாலும் சின்ன வயசான எனக்கு அப்படித்தானே தோன்றும்.

இங்க இருக்கறவனெல்லாம் பெரிசா இங்கிலீஷ்ல கிழிக்கிறானுங்களோ? என்றேன். அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள் எல்லோரும். கேள்வி கேட்க ஒருவனாவது வந்தானே என்றும் இருந்திருக்கலாம். பெரூசல்ங்கிற வார்த்தையை ஒருத்தன் பெர்சூவல்ங்கிறான். Joined ஆன்னு கேட்கிறதுக்குப் பதிலா Jointed ஆன்னு கேட்கிறான். Concerned Clerk ன்னு சொல்லத் தெரில….Certain clerk ன்னு சொல்றான்….என்ன இங்கிலீஷ் வாழுது இங்கே…? ஒண்ணுமில்லாத சாதாரண வார்த்தைக்கெல்லாம் மானேஜர் டிக் ஷ்னரியைப் புரட்டிக்கிட்டிருக்காரு…சரி ஏதோ பெரிசா எழுதப் போறாருன்னு பார்த்தா வழக்கமான பஞ்சாங்கமாத்தான் இருக்கு அது….யாருக்கு இங்க இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கு…எனக்குத் தெரிலன்னு சொல்றதுக்கு? இவரையே AMIE.., MISAE., ன்னு காசக்கொடுத்து பட்டம் வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிறதாத்தான் சொல்றாங்க….

காதுக்குப் போனால் போகட்டும் என்றுதான் நானும் சொன்னேன். அத்தனை கடுப்பு எனக்கு. இங்கிலீஷ் ஃப்ளுயன்ஸி இல்லாத ஆத்திரம். ஆனாலும் அன்றைய தேதியில் இரண்டு வரியில் லீவு லெட்டர் எழுதக் கூட நான் திணறிக் கொண்டுதான் இருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். சாதாரணமாய்த் திக்கித் திணறிப் பேசுவது என்பது வேறு. அஃபிஷியல் லாங்க்வேஜ் என்பதே வேறு.

நான்தான் சர்வீஸ் கமிஷனிலேயே கம்யூனிஸத்திற்கும் கம்யூனாலிசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிப் பாஸ் பண்ணி யவனாயிற்றே? வெளியில் வந்தவுடன்தானே பொறி தட்டியது. அது அஞ்சு மார்க் கேள்வி. அதனால் தப்பித்தேன்.

பால்கள் எத்தனை வகைப்படும்? என்று கேட்டால் ஆண் பால், பெண்பால், ஆட்டுப் பால், மாட்டுப்பால், கழுதைப்பால், ஒட்டகப்பால் என்று எத்தனை பேர் எழுதி வைக்கிறார்கள்? அதுபோல் ஒன்றுதானே இதுவும்…? அதற்காக மனிதன் அங்கேயே ஸ்டாக்னேட் ஆகி நின்று விடுவானா என்ன? ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி….என்று விடாமல் பாடிக் கொண்டிருப்பதும், கேட்டு மனசில் வாங்கிக் கொண்டிருப்பதும் என்ன சும்மாவா?

புலம்பிக் கொண்டேதான் போய்ச் சேர்ந்தேன் யூனிட் ஆபீசிற்கு. வேறு என்ன செய்ய முடியும்? அந்த அபீஸ் உண்மையிலேயே எனக்குப் பிடித்திருந்தது. சந்திரா என்றொரு லேடி இருந்தார்கள். கேரள அழகு. அந்தப் புன் சிரிப்பும் மென்மையும் வைத்த கண் வாங்க முடியாது. என் மேல் அம்புட்டுப் பிரியம் அவர்களுக்கு. அலுவலகத்திலேயே வயசில் சின்னவன் நான். அடித்துப் பிடித்து விளையாடாத குறைதான். குசும்பாய் என்னமாவது பேசினால் முதுகில் செல்லமாய் அடி விழும். அது ஆபீஸ் இல்லை. வீடு. அங்குதான் நான் பக்குவப்பட்டேன். அவர்களிடம்தான் வேலை கற்றுக் கொண்டேன். யாரும் எனக்கு நிகரில்லை என்ற பிரதிக்ஞையோடு வளர்ந்தேன். அதை ஊட்டியது அந்தச் சந்திரா அக்காதான். இன்று நினைத்தாலும் அந்தச் சந்திரமுகம் கண்ணுக்குள்.,

அன்று பிடித்த பிடிதான். அதற்குப் பிறகு ஆளாளுக்கு என்னைத் தேடி வந்து காத்து நிற்க வைப்பது போல் ஒரு காலம் வரத்தான் செய்தது. என் ரூம் வாசலில் பழி கிடந்தார்கள். என்னுதக் கொஞ்சம் பாருங்க ஸார்…என்று கெஞ்சினார்கள். மனசுக்குள்ளேயே கருவறுத்த கதையாய் எந்தக் கிருஷ்ணசாமி என்னை வேண்டாம் என்று சொன்னாரோ அதே கிருஷ்ணசாமி அவருக்கான தலைமை அலுவலகத்தில் அவருக்குத்தான் அந்த சீட் என்று நான் வரும் வரை காலியாய் வைத்திருந்து நான் வந்ததும் என்னிடம் லட்டுபோல் தூக்கிக் கொடுத்தார். காலம் அவரை அப்படிப் புரட்டிப் போட்டிருந்தது.

இங்குதான் நாம் ஒன்றைக் கவனித்தாக வேண்டும். மொழி என்பது வெறும் பரிமாற்றக் கருவி. அது தகுதிக்கான நிர்ணயம் அல்ல என்பேன் நான். காலப் போக்கில் அலுவலக நடைமுறைகளெல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று பின் ஏன் உத்தரவிடப்படவேண்டும். எப்பொழுதும் போல் இங்கிலீஷில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட வேண்டியதுதானே…! அது தமிழோ ஆங்கிலமோ துறையில் வேலை பார்ப்பதற்கு அக்கறையோடு விதிமுறைகளைக் கற்றிருக்க வேண்டுமே….விரல் நுனியில் எல்லாவற்றையும் வைத்துப் பாருங்கள் உங்களுக்கான மதிப்பே தனிதான். இதை மெனக்கிட எத்தனை பேர் தயாராய் இருக்கிறார்கள். பெரும்பாலோர் அடுத்தவன் மேல் குதிரை ஏறுபவர்கள்தானே….எவனையாவது கையைக் காலைப் பிடிச்சு…கெஞ்சி, கூத்தாடி….காலத்தையும் பொழுதையும் நகர்த்த வேண்டும். தவறுகளிலிருந்து தப்பிக்க வேண்டும்….இப்படிப்பட்டவர்கள் மத்தியில் விதியே என்று ச்சீ…கதியே என்று ரூல்ஸ்களோடும், தொடர்பான ஃபைல்களோடும் கிடையாய்க் கிடப்பவனை விடுவார்களா?

பயங்கரமான ஆள்யா அவுரு….நீ என்ன சந்தேகம் வேணாலும் கேட்டுக்கய்யா…அவர்ட்டப் பதில் இருக்குமாக்கும்…அவரப் பிடி….எதிலிருந்தும் தப்பிச்சிக்கலாம்….இப்படித்தான் என்னை அணுகினார்கள் பலரும். பலருக்குள் அந்த அவரும்தான் இருந்தார். நாயை அடிப்பானே, பீயச் சுமப்பானே…

ஆச…ஆச…நல்லா உதைக்காம விட்டானுங்களே….கட்டிப் போட்டு உதைக்கிற மாதிரியே இருக்குதே…இனிமே நா எப்டிப் பாட்டு எழுதுவேன்…எதை எழுதினாலும் ஏம்ப்பா இது நீ எழுதினதா..இல்ல மண்டபத்துல யாராச்சும் எழுதிக் கொடுத்து அத வாங்கிட்டு வந்திருக்கியான்னு கேட்பானுங்களே…எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே…அய்ய்ய்யோ…..

இப்படித்தான் வந்தார் அவரும். அபிமன்யு வளையத்தில் சிக்கிக் கொண்டார். விடுவி என்றார்.

கடைசிவரை அவர் பெயரில் இருந்த ஒழுங்கு முறை நடவடிக்கைக் கோப்பை டீல் செய்தவன் நான்தான். அதற்கான ஆங்கிலமே தனி. அதற்குத் தனியாகப் பயிற்சி பெற வேண்டும். அதில் தேறக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தனை வருஷ சர்வீசில் எப்படியோ அந்த வேலை பழகியிருந்தது எனக்கு. எவனும் இதற்கெல்லாம் மெனக்கெட மாட்டான். அபூர்வமாய் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். அவரே கதி என்று கிடப்பார்கள் எல்லோரும். ஏன், துறையே அவர் காலடியில்தான் கிடக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்…

படிக்கணுமய்யா…படிக்கணும்…சும்மால்ல….அறுபது வயசுவரைக்கும் இந்த வேலைல இருக்கப் போறோம்னு தெரியுதுல்ல…அப்புறம் படிச்சா என்ன? எல்லாத்துலயும் அறைகுறையாவும், அடுத்தவன் முதுகுல ஏறியும் எத்தனை காலத்துக்குத்தான் ஓட்டுவீங்க?

உண்மைதான் சார் நீங்க சொல்றது என்பார்களே தவிர எவனும் பிரயத்தனப்பட மாட்டான். சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் மறைந்து விடுவார்கள் நாம் இருக்க வேண்டிய இடம் இதுவல்லவென்று. சும்மாவானும் அரட்டை அடிச்சமா, வெளில போனமா, டீயக் குடிச்சமா, வடையத் தின்னமா என்று திரிவார்கள்.

பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. சாதாரணச் சராசரி ஆளாக இருந்தாலே போதும். என்ன, கொஞ்சம் அக்கறையும், சின்சியாரிட்டியும் வேண்டும். அது யாருக்கு இருக்கிறதோ அவர்கள் வெற்றியடைகிறார்கள். அல்லாதவர்கள் அடுத்தவர் கொடுக்கைப் பிடித்துக் கொண்டே திரிகிறார்கள். அவர்களுக்கும் ஒடுகிறதுதான். ஆனால், அது என்ன ஒரு பிழைப்பா? மனுஷனென்றால் தன்னம்பிக்கை, தன் உழைப்பு வேண்டாமா? சுயமாய் நிற்கத் தெரிய வேண்டாமா?

அந்த சுயம் கழன்று போனது அவரிடம். பெரிய பணக்காரர்தான். துறையில் வேலைக்குச் சேரும்போதே காரில் நுழைந்தவர்தான். இந்த வேலையைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற அவசியமில்லாதவர்தான். ஆனால் காசாசை யாரை விட்டது? மொத்த ஒதுக்கீடு இத்தனை லட்சம் என்றால் அதில் பத்துப் பர்ஸன்ட் எவ்வளவு என்று மனம் கணக்குப் போட ஆரம்பித்து விட்டதே…! தானாய் வருவதை எதற்கு வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டதே…! இதுநாள் வரை இருந்திட்டுப் போனவனெல்லாம் என்ன மாட்டிக்கவா செய்தான்? எல்லாம் நல்லாத்தான் இருக்கானுக…! என்று நினைக்க ஆரம்பித்து விட்டதே…! எல்லாருக்கும் நடக்கிறதைப் போலத்தான் நமக்கும் நடக்கும் என்றுதான் தோன்றியதே தவிர, வேற மாதிரி நடந்திருச்சின்னா? என்று தோன்றவே இல்லையே…!

என்னை மாற்றிய அந்த முதல் ஐந்து வருட உறானஸ்ட் கிருஷ்ணசாமியை என்னால் மறக்கவே முடியாது. ஆனால் அன்றைய நிலையில் என்னை, என் உறான்ஸ்டியை, என் சின்சியாரிட்டியைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லாமலிருந்தது. ஏனென்றால் நான் ஒரு சாதாரணக் க்ளார்க். அவனுக்கெதுக்கு கௌரவமும், கண்ணியமும்? மாசச் சம்பளத்துக்கு வேலை பார்க்குற சாதாரண ஊழியன்தானே? என்கிற நினைப்பு. அவர் மட்டும் பின்ன என்னவாம்? யார், என்ன வேலை பார்க்கிறான், என்ன சம்பளம் வாங்குகிறான் என்பதா முக்கியம்? எப்படியிருக்கிறான் என்பதுதானே முக்கியம். ஒரு உயரதிகாரிக்கு இருக்க வேண்டிய கடமையுணர்வும், கண்ணியமும், கட்டுப்பாடும், நேர்மையும், நாணயமும், ஒரு சாதாரணக் கீழ்நிலைப் பியூனுக்கு இருக்கக் கூடாதா? அப்படியிருந்தால் அவன் மதிக்கப்படக் கூடாதா? என் வாழ்நாளில் எத்தனை பேரை அப்படிப் பார்த்திருக்கறேன்?

அந்தப் புரிதல் இப்போதுதான் அவரிடம் தெரிகிறதோ? என்னைத் தேடி வந்ததனால் அப்படிச் சொல்லவில்லை. வந்து விட்டாரே மனுஷன் கௌரவம் பார்க்காமல்….பிறகு என்ன செய்வது? விரட்ட முடியுமா? அது பண்பாடா?

இதோ இன்றும் அவர் சம்பந்தப்பட்ட கோப்பை தினமும் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன் நான். அன்னார் பெயரிலான நடவடிக்கை நிலுவையிலிருப்பதையும், அதன் இறுதியை எதிர்நோக்கியும் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறார் என்று போட்டுக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஓய்வுப் பலன்கள் எதுவும் இன்றும் கைக்கு வரவில்லை. வயசோ நழுவிக் கொண்டிருக்கிறது. உடலும் மனமும் தளர்ந்து கொண்டிருக்கிறது.

சங்கரன், உங்களாலதான் இது முடியும். முடியணும்….எனக்காக இதை எவ்வளவு சீக்கிரம் செய்து கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுக் கொடுத்தீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போகும்…நீங்கதான் செய்யணும் எனக்கு…. என்று என் சீட்டுக்கு எதிரே வந்து உட்கார்ந்து கொண்டு என் கையைப் பிடித்துக் கொண்ட காட்சி அப்படியே என் கண் முன்னே நிற்கிறது.

எனக்குத்தான் இங்கிலீஷ் வராதே….குசும்பாக மனதில் தோன்றுகிறது அப்போதும். கடுமையான எனது உழைப்பும், உடும்புப் பிடியும் இப்போதும் சமயங்களில் என்னை குறும்பாய் நினைக்க வைக்கிறதுதான். என் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் மீது எனக்கு அத்தனை திமிர்.

துறையில் எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்கள்? இவருடைய கொலீக்ஸ் எவ்வளவு பேரைப் பார்த்திருப்பார்? இவர் அதிகாரம் பண்ணிய எத்தனை பேர் இன்றும் மண்டியிட்டு நிற்பார்கள்? அவர்களில் ஒருவன் கூடத் தேறவில்லையா? ஏன்? அத்தனை பேரும் சுயநலக்காரர்களோ? காசுக்கு நாயாய் அலைபவர்களோ? இவரைக் கண்டும் காணாமல் போகிறார்களோ?

அன்று நடந்தது வெறும் ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் அதுதான் என் மனதில் விழுதாய் விழுந்தது. இன்று விருட்சமாய் நிற்கிறது. அது அவர் மனதில் இருக்கிறதோ இல்லையோ? பீத்தத் தனமாய் அதைப் போய் இன்று நினைவு படுத்தலாமா? நான் மனுஷனா? பார்க்கவே பரிதாபமாய் நிற்கும் அவருக்கு என்ன சமாதானம் சொல்வேன் நான். இவர் அடித்த காசையெல்லாம் இந்த ஒரு கேஸை வைத்தே பிடுங்காமல் விடமாட்டார்களே? காசு என்றாவது மனிதனுக்கு நிம்மதியைக் கொடுக்குமா? காற்று, தண்ணீர் போல் அதுவும் வாழ்க்கையின் தேவையின்பாற்பட்ட ஒரு காரணிதானே? அதுவேவா வாழ்க்கை? யார் அதை உணர்கிறார்கள்? போதாது போதாது என்று பத்துத் தலைமுறைக்கல்லவா தவறான வழியில் சொத்து சேர்க்கிறார்கள்? ஒருத்தனைச் சொல்லச் சொல்லுங்கள் ஒரு நாளாவது நிம்மதியாய் இருந்தான் என்று….? மனசாட்சி பேசுமா?

கையில் கொஞ்சம்

காசு இருந்தால்

நீதான் அதற்கு எஜமானன்

கழுத்து வரைக்கும் காசு சேர்ந்தால்

அதுவே உனக்கு எஜமானன்

இன்று என் முன்னே அம்போ என்று அமர்ந்து, தன் கௌரவமெல்லாம் உதிர்த்து, குழந்தையைப் போல் வாய் விட்டு அழும் இவரை எப்படித் தேற்றுவேன்? ஆதரவாய் அவர் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுகிறேன்.

சீக்கிரம் முடிச்சிறுவோம் சார்…கவலைப் படாதீங்க…..

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா……!!! 

(உயிரோசை இணைய இதழ் – 04.06.2012)

--------------------------------------------------

27 மே 2012

”பாலு மீண்டும் உள்ளுர் வருவான்” சிறுகதை

 

 பாலு தினமும் ஏழரைக்கே ஆபீஸ் வந்து விடுகிறான். அவ்வளவு சீக்கிரம் வரணும் என்கிற அவசியமில்லை. வழக்கமாய் பத்தே முக்கால் பதினொன்றுக்கு நுழைபவன்தான் அவன். கேட்டால், தபால் வாங்கிட்டு வாறேன் சார் என்பான். எங்க தபால்களை? என்றால் ஒண்ணும் இல்லை சார் இன்றைக்கு என்று கூறுவான். பன்னிரெண்டு மணியைப்போல் ஒரு கத்தைத் தபால் வரும். பாலு வந்தாப்ல சார்…அப்ப நான் பிரிச்சிட்டிருந்தேன்…போ…கொண்டாரேன்னு நாந்தான் அனுப்பிச்சேன் என்பார் போஸ்ட்மேன். அவரைச் சரி பண்ணி வைத்திருந்தான் பாலு. இப்பொழுது அவன் டைம் மாறியிருக்கிறது. கொஞ்ச நாளாய்த்தான் இந்த மாற்றம். அவனாகவே அப்படி மாற்றிக் கொண்டான். அது என்ன ஏழரை கணக்கு என்றால் அதற்கும் காரணமில்லாமலில்லை. எட்டு மணிக்கு அந்தப் பெண் கிளம்பிவிடுகிறது என்பது தெரிந்தது. எந்தப் பெண்? அந்த எதிர் வீட்டு மாடிப் பெண். அது அங்கிருந்து இவனைப் பார்த்தது. இவனும் அதைப் பார்த்தான். பார்த்துக் கொண்டேயிருந்தது பிறகு ஒரு நாள் சிரித்தது. இவனும் சிரித்து வைத்தான். அப்படியே ஒட்டிக் கொண்டது. இப்பொழுதுதான் மாறுதலில் வந்திருக்கிறான். அதற்குள் ஆரம்பித்து விட்டானா என்றிருந்தது எனக்கு.

தபால் வாங்க சதாம் போகிறார். தபாலையும் வாங்கிக் கொண்டு பத்தரைக்குள் வந்து விடுவார். அவருக்கு மட்டும் எப்படி முடிகிறது. அவர் போகும்போது மட்டும் போஸ்ட்மேன் தபால் பிரிக்கிறேன் என்று சொல்ல மாட்டாரா என்றால் மாட்டார். பாலுவுக்கு மட்டும்தான் அந்தச் சலுகை. அது அவன் முக ராசி. உடனே அடுக்கி வைத்திருப்பவைகளைக் கொடுத்து அனுப்பி விடுவார் போஸ்ட்மேன். பாய் விருட்டென்று நுழைந்து, விருட்டென்று வெளியேறி விடுவார். அவர் பாணி தனி. காக்கவைத்தாலும் அவருக்குப் பிடிக்காதுதான்.

அடுத்த வாரம் பூராவும் கூட்டற அம்மா வராது. பாலு, நீதான் டர்ன். தினமும் காலைல ஏழுக்கெல்லாம் வந்து ஆபீசக் கூட்டி, தண்ணி எடுத்து வச்சிரு.

நிர்வாக அலுவலர் ஆணையிட்டார். அதன் தொடர்ச்சியான திங்கட்கிழமைதான் இவன் சீக்கிரம் வரவேண்டியிருந்தது. மாடிக்கும் கீழுக்கும் கூட்டிச் சுத்தம் செய்ய குறுக்குப் போய் விட்டது இவனுக்கு. மாடியில் கூட்டிக் கொண்டிருந்த போதுதான் அதைப் பார்த்தான். அப்படி ஒன்றும் பெரிய அழகெல்லாம் இல்லை. சுமாராய்த்தான் இருந்தது. இருந்தாலும் அந்தச் சிரிப்பில் விழுந்தான். இவன் ஆபீசைப் பெருக்கிக் கொண்டிருந்த போதுதான் பார்த்தது அது. ஆகையினால் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியாளனாய் இருப்பதில் அதற்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்பது இவனுக்கு உறுதியானது. அது என்ன செய்கிறது என்று யோசனை போனது. எதுவாயிருந்தால் என்ன என்று கூடவே மெத்தனமாய்த் தோன்றவும் செய்தது. எப்படி அந்தப் பெண்ணுடன் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். யோசனையிலேயே நாட்கள் போய்விட்டன.

யேய், பாலு…என்ன பானையைக் கழுவித் தண்ணி பிடிச்சியா அப்டியே பழைய தண்ணியோட ஊத்தினியா? உள்ளல்லாம் ஒரே அழுக்கா இருக்கு? என்று மாடியில் உள்ள பணியாளர்கள் கேட்டபோதுதான் அவனுக்கே தெரிந்தது. காலையில் எட்டு மணிக்கு தண்ணி பிடித்தால்தான் ஆயிற்று. பிறகு வராது. ஸாரி சார்….கழுவித்தான் பிடிச்சேன்…அப்டியும்…என்று இழுத்தான். அவர்கள் இவனை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள்.

அலுவலக நேரங்களில் மாடிப் பக்கமே வராதவன் இப்பொழுது இங்கேயே திரிகிறானே? என்று சந்தேகப்பட்டார்கள்.

மாடியிலுள்ள திட்டப் பிரிவு பியூன் சதாமிடம் நீ கீழ போய்க்கிறியா? என்று வேறு கேட்டிருக்கிறான். கீழே நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளரிடம் என்னை மேல போட்ருங்க ஸார் என்றிருக்கிறான். அவர் திடுக்கிட்டுப் போனார்.

அதெல்லாம் முடியாது. டிரஷரிக்கு போறதுக்கு எனக்கு வேற நல்ல ஆள் இல்லை. சதாமெல்லாம் அனுப்பினா கதையாகாது. பேசாம இரு என்றிருக்கிறார் சாமுவேல். அதனால்தான் சதாமிடம் போட்டு நச்சரிக்கிறான் என்பதாகப் பேச்சு. இருவரும் மனமுவந்து ஒப்பமிட்டு எழுதிக் கொடுத்தால் போட்டுத்தானே ஆக வேண்டும் என்கிற எண்ணம்.

மாடிக்கும் கீழுக்கும் இவுருக்கு டிரான்ஸ்பர் வேணுமாமா? அய்யா சும்மா பொத்திட்டு இருக்க மாட்டார் போலிருக்கு… என்றிருக்கிறார் அட்மோ குமாரசாமி. திகிடு முகடாய்ப் பேச்சு வரும் அவரிடம். அதை வைத்து ஆள் எப்படி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். அவரையும் டபாய்க்கும் வேலை பாலுவுக்குத் தெரியும். எதிரில் நிற்கையில் பூனையாய் பம்மிக் கிடப்பான். இந்தப் பக்கம் வந்து உறாலில் எல்லோரும் பார்ப்பதுபோலவே கையைக் காட்டி சத்தமில்லாமல் திட்டுவான். கமுக்கமாய் மற்றவர்கள் சிரித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கும் குமாரசாமியைப் பிடிக்காது. யாருக்குமே பிடிக்காமல் இருந்த ஒருத்தர் என்றால் அது அவர்தான். ஆனால் அது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லோருக்கும் பிடித்த அதிகாரியாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் நினைத்ததில்லை. எல்லோரும் தனக்குப் பணிந்து போக வேண்டும். பயந்து நடுங்க வேண்டும். அப்படியே மற்றவரை வைத்திருந்து தான் செய்யும் தப்புகள் தெரியாமல் ஓட்ட வேண்டும். அலுவலகத் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். முடிந்தால் அவரையும் பயப்படுத்தி வைத்திருக்க வேண்டும். எதுவானாலும் அட்மோ என்ன சொன்னாரு? என்று கேட்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். தன் ஆலோசனை இல்லாமல் அங்கே ஒரு துரும்பு கூட நகர்ந்து விடக் கூடாது. இதுதான் அவர் ராஜ்ஜியம்.

பாலு சதாமிடமும் பேசி வைத்திருந்தான். சதாம் பியூன் படு அப்பாவி. பாலு ஏதாச்சும் செய்து விடுவான் என்று பயந்தே சரி என்று தலையாட்டியிருப்பார். வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அவரை மாதிரி டயத்துக்கு ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் யாராலும் அத்தனை கரெக்டாகக் காபி வாங்கி வர முடியாது. கூப்பிட்டால் எழுந்து ஓடோடி வருவார். அடுத்த குரல் கொடுக்க விடமாட்டார். அவருக்கென்று கொடுத்துள்ள ஸ்டூலில்தான் உட்கார்ந்திருப்பார். மாறி யார் பார்க்கப் போகிறார்கள் என்று ஒரு நாற்காலியில் அவர் உட்கார்ந்து இவன் பார்த்ததில்லை.

பாலு அப்படியில்லை. உள்ளே கேபினில் ஆபீசர் இருக்கையிலேயே போய் அமர்ந்து அந்த சுழல் நாற்காலியில் சுற்றுவான். சாய்ந்தமேனிக்கு டெலிபோனை எடுத்துக் காதில் வைப்பான். அவ்வாறான சமயத்தில் கிளார்க்குகள் யார் வந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டான். ஒரு தரம் கண்காணிப்பாளர் மயிலேறி வந்தபோதே அவன் சாவகாசமாகத்தான் எழுந்தான். என்னய்யா என்ன? இதெல்லாம் நல்லால்லே…பார்த்துக்க…என்றார் அவர். உடனே ஒழுங்கீனம் என்று மெமோ கொடுத்தார். இனி செய்ய மாட்டேன், மன்னிக்கவும் என்று பதிலிறுத்தான் பாலு. அதெல்லாம் சாதாரணம் அவனுக்கு. நெருப்புன்னா வாய் வெந்தா போகும் என்கிற வகை சார்ந்தவன்.

அவ்வளவுதான் விட்டுவிட்டார் மயிலேறி. . அதற்கு மேல் ஃபைல் பார்க்கப் போய் விடுவார். அவருக்கு கோப்புகளைத் தவிர ஒன்றும் தெரியாது. துறைக்கு வந்த புதிதில் நன்றாக வேலையைப் பழக்கி விட்டிருக்கிறார்கள். இவரும் செக்கு மாடு மாதிரி செய்து தரவ் ஆகியிருக்கிறார். இன்றுவரை அதையே செய்து கொண்டிருக்கிறார். அவ்வளவே. புதிதாக எதையும் சிந்திக்கத் தெரியாது. ஏற்கனவே முன்னோர்கள் செய்தபடிதான் செய்வார். அதற்கு இப்படிச் செய்தால் என்ன என்று யோசித்து, செயல்பட்டு, ஒன்றை காலாகாலத்தில் முடிப்போம் என்று முனைய மாட்டார்.. ஏதாச்சும் தப்பு வந்திச்சின்னா? கோடு தாண்டாத கோமகன் அவர்.

சதாம் பாய் காபி வாங்கி வரும் விஷயம் சொல்லும்போது குறுக்கே இது வந்து விட்டது பாருங்கள். இதில் என்ன விசேஷம் என்றால் தன் கைக்காசு போட்டு வாங்கிவந்து விடுவார் பாய். அவருக்குக் காரியம் ஆக வேண்டும். ஒவ்வொருவராகக் காபியைக் கொடுக்கும் போது காசு வாங்கிக் கொள்வார். இதைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் கடன் சொன்னவர் பலர். பியூனிடம் போய் கடன் சொல்கிறோமே என்பதெல்லாம் எங்கள் குழாத்திற்குக் கிடையாது. மாட்டினால் மாட்டியதுதான். அதற்காக சதாம் அசந்தவர் அல்ல. நச்சரிக்கவும் மாட்டார். கொடுக்கும்போது வாங்கிக் கொள்வார். கொடுக்காவிட்டால் வாய் திறந்து கேட்கமாட்டார். அதுதான் அவரின் பலவீனம்.

ஏன் பாய் உங்களுக்கென்ன காசு அவ்வளவு லேசாப் போச்சா…ஒரு காபிக் காசு இருந்தா சாயங்காலம் பஸ்ஸுக்கு ஆகுமுல்ல என்பேன் நான். இருக்கட்டும் சார்… எங்க போகுது…? என்பார் சர்வ சாதாரணமாக. அவரை விட ஐயாயிரம் கூட வாங்கும் பல எழுத்தர்கள் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு வெட்கமில்லை. நம்ம பேரச் சொல்லி வாங்குறாருல்ல…என்பார்கள் மனசாட்சியில்லாமல். சதாம் வாங்க மாட்டார். தெரியும்தான். இவர்களின் தவறுக்கு நாக்கு மேல் பல்லுப்போட்டுப் பேசுவார்கள். நரம்பில்லாத நாக்கு ஏதும் பேசும்தான்.

பாலு அப்படியில்லை. அவன் கை நீட்டுவான். கிடைத்தவரை சுருட்டுவான். எவ்வளவு வந்தாலும் பத்தாது. இரு பக்க அன்ட்ராயர் பை, சட்டை உள் பை. பேன்ட்டின் டிக்கெட் பாக்கெட், அதன் இருபக்கப் பைகள், பனியனுக்குள் என்று வெவ்வேறு இடத்தில் செருகியிருப்பான். எவ்வளவோ ஆள் மாறித்தான் போய்விட்டான். ஆனாலும் அவன் மீது ஏதோ ஒரு பிரியம். இது நம்ம ஆளு.

இத்தனைக்கும் பாலு கல்யாணமாவன். அதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இத்தனை நாள் அவன் தேனியிலிருந்தான். இத்தனை வருடங்கள் என்பதுதான் சரி. நான்தான் முயற்சி செய்து அவனை மதுரைக்குக் கொண்டு வந்தேன். அவனும் என்னிடம்தான் கேட்பான். மதுரைக்கு வாங்கிக் கொடுங்க…கொடுங்க…என்று அரிப்பான்.

நம்மள ரொம்ப நம்புறான் போல்ருக்கே…? என்று எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது. என் வார்த்தைக்கு அலுவலர்களிடத்தில் கொஞ்சம் மதிப்பிருந்ததுதான்.நான் காசு வாங்காதவன். வேலையில் சின்சியரானவன். வம்பு தும்பு இல்லாதவன். விதி முறைகள் முழுக்க அறிந்தவன். அலுவலர்களின் ஆலோசனைக்கு உகந்தவன். போதாதா? அவனுக்கு முதன்முதல் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் அடித்தவனே நான்தான். செக் ஷன் கிளார்க்கும் நான்தான். நானேதான் டைப்பிஸ்டும். படு சுறுசுறுப்பாக வேலை பார்ப்பான். சொல்வதையெல்லாம் சட்டுச் சட்டென்று புரிந்து கொள்வான். நீ பியூனா இருக்க லாயக்கில்லை என்று சொன்னேன். தலைக்கேறி விட்டதோ என்னவோ? அநேகமாய் அப்பொழுதுதான் மனதளவில் அவன் கெட ஆரம்பித்திருப்பான். சாயங்காலம் தபால் அனுப்ப டெஸ்பாட்ச் பிரிவில் அவனைப் போட்டேன். அப்பொழுது அந்த அலுவலகத்திற்கே நான்தான் சீஃப். என் தலைமையில்தான் நான்கைந்து இளநிலைக் கிளார்க்குகள் வேலை பார்த்தார்கள். அப்படியான ஒரு அந்தஸ்து எனக்குக் கிடைத்திருந்தது. அந்த செல்வாக்கில்தான் பாலுவை மதுரைக்குக் கொண்டு வந்தது. இனிமே குடிக்கிற ஜோலியெல்லாம் ஆகாது என்று சொன்னேன். பாலு கேட்கவில்லை. ஏனென்றால் தேனியிலேயே நன்றாகப் பழகி மொடாக் குடியன் ஆகியிருந்தான். சாயங்காலம் ஆனால் திடீரென்று தலை மறைவாகிவிடுவான். இதற்காகவே டெஸ்பாட்ச் தபால்களை எடுத்துக் கொண்டு ஆர்.எம்.எஸ்ஸில் போடுகிறேன் என்று ஓடுவான். அப்படி ஓடுவது தண்ணியில் நீந்த என்பது பிறகுதான் தெரிந்தது. தபாலைப் பெட்டியில் சேர்த்துவிட்டு நீந்து என்றேன்.

எதிராய் குடிசை போட்டிருந்த நரிக்குறவர் சமுதாயப் பெண் ஒருவரைக் கை வைத்திருக்கிறான். அவர்கள் பிடித்துக் கட்டிப் போட்டு விட்டார்கள். அடி பின்னி விட்டார்கள். கேட்டால் அதெல்லாம் இல்லை என்பான். நிறையக் காயங்களோடே அவன் பட்ஜெட் கோப்புகளைத் தூக்கி வந்தது எனக்குக் கண் முன்னால் நிற்கிறது. என்னய்யா இது? என்ற போது ஆக்ஸிடென்ட் என்றான். எல்லோரும் நம்பினார்கள். தண்ணியப் போட்டுட்டு வண்டில பறந்திருப்பான். நிதானம் இருந்தாத்தான? என்றார்கள். இந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கலாம். யாரும் வாய்விட்டுச் சொன்னதில்லை. அவனை அந்த நரிக் குறவர்களிடத்திலிருந்து விடுவித்ததில் எனக்கும் பங்குண்டு. போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்தவர் மூலம் சொல்லி அவர்களின் கூடாரங்களையே அங்கிருந்து அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே கிளப்பியதோடு கதை முடிந்தது.ஒன்றுக்கொன்று தொடர்பாக எல்லாமும் சட்டுச் சட்டென்று நடந்துவிட்டது. சூட்டோடு சூடாக அவனைக் கிளப்பி மதுரைக்கும் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். உடல் காயங்களே இங்கு வந்துதான் ஆறியது அவனுக்கு. அவன் பெண்டாட்டிக்கு இன்றுவரை தெரியாது. அது பொம்பளை அடி என்று.

அந்த நேரம் போடிக்காரன் ஒருத்தன் அமைந்தான். அவன் தேனிக்குப் போறேன் என்று சொல்ல மனமொத்த மாறுதலில் பாலுவை மதுரைக்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டேன். உங்களுக்காகத்தான் போடறேன் என்று சொல்லிக் கொண்டேதான் ஆணையில் கையொப்பமிட்டார் அலுவலர். இங்கே என்னடாவென்றால் மாடிக்கும் கீழுக்கும் மனமொத்த மாறுதல் விண்ணப்பம் கொடுக்கிறான் அவன். எப்படியிருக்கிறது பாருங்கள்.

அவன் என்ன லூஸா? என்றார் அட்மோ. இல்ல ஸார் நாந்தான் என்று சொல்லத்தான் யத்தனித்தேன். வாய் அடங்கிக் கொண்டது. என்னவோ நல்லா வேலை பார்ப்பான்னு சொன்னீங்களேன்னு போட்டேன்…ஆனா ஆள் சரியில்லையே…என்றார்.

ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தான் பாலு. ஃபைல்களில் ரிமைன்டரெல்லாம் எழுதுவான். பி.ஆர். பதிவான். டி.ஆர். சுற்றுவான். முடிவுற்ற கோப்புகளைத் தைப்பான். ஓராண்டு, மூவாண்டு, பத்தாண்டு, நிலை என்று பிரித்து, தைத்து, மேலே அழகாக எழுதி பதிவறைக்கு அனுப்புவதில் கில்லாடி. நூறு கோப்புகளானாலும் அலுக்காமல் சலிக்காமல் கிச்சென்று தைத்து, தைத்த மூலை “ட“ வடிவத்தில் ஒரே சீராக பைன்ட் செய்தது போல் நிற்பதைக் காட்டி ஆபீசையே அசத்துவான். வேலை அத்தனை சுத்தம்.

இத்தனைக்கும் எஸ்.எஸ்.எல்.சி. கம்ப்ளீட் பண்ணியிருந்தான். அப்படியே அவனைப் பதிவறை எழுத்தராக்கி, பிறகு இளநிலை எழுத்தராகவும் கொண்டுவந்து விடலாம். இடையில்தான் அவனுக்கு கொனஷ்டை வந்து விட்டதே…டிரைவிங் லைசன்ஸ் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு நாள் அதோடு வந்து நின்றான்.

என்ன பாலு , நேத்தைக்குத்தான் சொன்னே…இன்னைக்கு கையோட வந்து நிக்கறே…

ஏற்கனவே வேலை நடந்திட்டிருந்திச்சி…என்றான். யாரைப் பிடித்தானோ, என்ன செய்தானோ…?

எட்டுப் போட்டியா? என்றேன்.

காருக்கு எட்டெல்லாம் தேவையில்லை சார்…ரிவர்ஸ், லெஃப்ட், ரைட்டு, கியர் சேஞ்சிங், நியூட்ரல் இவ்வளவுதான் என்று என்னென்னவோ சொன்னான். எப்படியோ அவனை அடிச்சிக்க ஆளில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. ஏனென்றால் எதிலும் இறங்கி முடியலை என்று அவன் வந்து நின்று நான் பார்த்ததில்லை.

ஆபீசில் டிரைவர் தேர்வு நடந்த போது பாஸ்தான் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு எங்கே எடு? என்றார். முன்னாடி போ, பின்னாடி வா, சைடுல போ…லெஃப்ட் ஒடி, ரைட் கட் பண்ணு…என்று அவனைப் பென்ட் எடுத்தார். பாலு முடிந்த மட்டும் செய்தான். அவருக்குத் திருப்தி இல்லைதான். ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். கவலைப்படாம இரு, எல்லாம் நா பார்த்துக்கிறேன்…என்று சொன்னேன். என் வார்த்தைக்காகத்தான் அவனை டிரைவராக்கினார்.. ஒரு கண்டிஷன் போட்டார். உள்ளுர் இல்லை தேனியில்தான் போடுவேன் என்றார். அவருக்கு ஐந்து மாவட்டம் கன்ட்ரோல். இங்கு போட்டால் அவனைத்தான் வண்டியை எடுக்கச் சொல்ல வேண்டும். ஒரு சர்வீஸ் போட்ட ஆளாய் இருந்தால் தேவலாம் என்கிற எண்ணமிருந்தது. அத்தோடு அவருக்குக் காரும் இருந்தது. கார் டிரைவர் விடுப்பன்றைக்கு ஜீப் டிரைவரை ஓட்டச் சொல்லலாம். புது ஆள் பாலுவை எப்படிக் கார் ஓட்டச் சொல்வது? அதற்கு தனி எக்ஸ்பீரியன்ஸ் வேண்டுமே…!

ச்சீ…ச்சீ…இந்த மனுஷன்ட்ட எவன்யா கார் ஓட்டுவான். பார்த்துப் போ…பார்த்துப்போன்னு சொல்லியே நம்மள மோத வச்சிருவாருய்யா….ஏறி உட்கார்ந்தமா, கம்முன்னு வந்தமான்னு வரமாட்டாரு….ஆக்ஸிடென்ட் ப்ரோன் டிரைவர்னு சொல்வாங்க…அத மாதிரி நம்ம பெயரை ரிப்பேர் ஆக்கிடுவாரு போலிருக்கு…என்பார் சுப்பிரமணியன். அவர்தான் அம்பாஸிடர் இன்சார்ஜ். இன்றைக்கும் அவர்தான். ஆனால் ஒரு மாற்றம்.

பாலு டிரைவராய்ப் போனவன் இன்று பியூனாய்த் திரும்பி வந்திருக்கிறான். பார்வை குன்றி விட்டது அவனுக்கு. இனி ஜீப் ஓட்டக் கூடாது என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்து திரும்பப் பியூன் ஆகி விட்டான். ஆனால் கவனமாய் ஒன்று செய்தான். டிரைவர் சம்பளம்தான் வேண்டும் என்று. அதுவும் ஓ.கே. ஆனது. அது ஒன்றும் அவனுக்காகச் செய்த சலுகை அல்ல. விதி அப்படி. அவன் தலைவிதி. பியூனாய் இருந்து கொண்டு டிரைவர் சம்பளம் வாங்குறான் பாருய்யா….என்றார்கள். வயிறெரிந்தார்கள்.

வந்த இடத்திலாவது சும்மா இருக்கிறானா? எதிர் வீட்டுப் பெண்ணை சைட் அடிக்கிறான். அதற்கு மட்டும் பார்வை நன்றாக இருக்கிறது போலும்…! கல்யாணமாகி அழகான மனைவியுடன் சமத்தாக இருக்க மாட்டானோ? இல்லையே…அந்த நாளும் வந்தது.

ஐயோ பாலு…என்னைக் காப்பாத்து…என்னை எல்லாரும் அடிக்கிறாங்களே….என்னைக் காப்பாத்து…காப்பாத்து…பாலு…பாலு… - குய்யோ முறையோ என்று அலுவலகத்திற்குள் ஓடி வந்தது அந்தப் பெண்.

உறாய்…யாரும்மா அது, ஆபீசுக்குள்ள வந்திட்டு…? என்றவாறே அட்மோ அவர் அறைக்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தார். கொல்லைப்புறம் இருக்கும் ஒவ்வொரு அறையுனுள்ளிருந்தும் அந்தந்தப் பணியாளர்கள் அனைவரும் வெளிப்பட்டனர். மாடியிலிருந்து நாங்கள் கீழே ஓடி வந்தோம்.

கையில் விளக்குமாரோடு ஒரு வயதான அம்மாள் புடவையை ஏற்றிச் செருகிக் கொண்டு அவள் கையை ராட்சதத் தனமாக இழுத்து முதுகில் சொத்துச் சொத்து என்று நாலு வைத்தது.. நிறுத்தாமல் வைத்துக்கொண்டே இருந்தது.

இதற்குள் அட்மோவுக்கு என்ன தோன்றியதோ…நீ என்னம்மா வயசுக்கு வந்த பிள்ளையப் போட்டு இந்தச் சாத்துச் சாத்துற….இழுத்திட்டு வெளில போம்மா…இதெல்லாம் உங்க வீட்டுல வச்சிக்குங்க….என்றார்.

ஆபீஸ் அப்பொழுதுதான் ஆரம்பித்த நேரம். எல்லோரும் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அந்தச் சுறுசுறுப்பு இதை வேடிக்கை பார்க்க உதவியது. மூலையை விட்டு நகர்த்த முடியவில்லை அதை. அப்படி ஒடுங்கியிருந்தது. ஒரு ஆம்பிளை வந்தார் தடியாய். அந்தப் பெண்ணின் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினார். அது அலறியது. அப்படியே தரதரவென இழுத்துப் போனார்.

ஆபீசாய்யா நடத்துறீங்க….ஆபீஸ்…..இன்னும் ரெண்டே நாள்ல காலி பண்ண வக்கிறேனா இல்லையா பாரு…என்று விட்டு வெளியேறினார்.

அலுவலகம் ஸ்தம்பித்திருந்தது. அத்தனை திடுக்கிடலிலும் சிலர் கவனமாய் பாலுவைத் தேடினார்கள். எங்கய்யா அவன? ஆளக் காணல…?

அவனெங்க இருந்தான். அவன் போயி எவ்வளவோ நேரமாச்சு….என்று கல்யாணப் பரிசு தங்கவேல் போல் பேசினார்கள். சிரித்தார்கள். அன்றைக்கு ஆபீஸ் வேலை அவ்வளவுதான். ஏதாச்சும் ஒன்று கிடைத்தால் போதாதா? அதை வைத்தே அன்றைய பொழுதை ஓட்டி விடலாமே. ஊழியர்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்?

கொல்லைப்புறம் கதவு திறந்திருந்தது. அதற்குப் பிறகு பெரும் பொட்டல். சற்றுத் தள்ளி மாட்டுத் தாவணி. எப்படிப் போனாலும் யார் கண்ணிலாவது பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் பாலு மாயமாகி விட்டானே…அதுதான் பாலு…!

ஒரு வாரம் கடந்து விட்டது. பாலு வரவேயில்லை. லீவு லெட்டர் மட்டும் வந்தது. தபாலில். கவனமாய் ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பியிருந்தான். அக்னாலெட்ஜ்மென்ட்டும் வைத்திருந்தான். எவ்வளவு விவரம் பாருங்கள். ஒரு மாதம் மெடிக்கல் லீவு வேண்டுமாம். நல்லதுக்குக் காலமில்லை. சிரித்தார்கள் எல்லோரும். அங்கங்கே யாரோ பார்த்ததாக வேறு சொல்லிக் கொண்டார்கள். ஊகமாய் பேசுவதில்தான் என்னவொரு திருப்தி? சென்சேஷனல் நியூஸ் கொடுத்தார்கள்.

அட்மோ தீவிரமாய் வேலையில் இறங்கினார். பாலுவுக்கு உடனே ஒரு வெளியூர் மாறுதல் வழங்கி பிரச்னையை அப்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வந்தார். சீஃப் கேம்ப் முடித்து வந்த அன்றைக்கு போஸ்ட் அப்ரூவலுக்கு தன் கைப்பட எழுதி அனுப்பி வைத்தார். கமுக்கமாய் ஒப்புதலாகி வந்தது. நிர்வாக அலுவலர் என்றால் சும்மாவா?

இனி அவன் இந்த வாசப்படி மிதிக்கக் கூடாது என்றார். அவர் சொன்னது அவருக்கே செயற்கையாக இருந்ததோ என்னவோ? யாருமே அதை ரசித்ததாகத் தெரியவில்லை. எங்கோ நின்று கொண்டு சிரித்தபடியே பாலு இதை ரசிப்பதாய்த் தோன்றியது எனக்கு.

இந்நேரம் மயிலேறியை விட்டிருக்க வேண்டும். அவர்தான் சரியான ஆள். பாலு தப்பிக்க முடியுமா? ஒழுங்கீனம், வேலையில் கவனமின்மை, கடமை தவறுதல், அது இது என்று இன்னும் ஏதாச்சும் இரண்டொன்றைச் சேர்த்து, அதற்கு என்னென்ன விதிமுறைகள் உண்டோ அதையும் போட்டுப் போட்டு அவனை குற்ற வளையத்திற்குள் நிறுத்தி விட மாட்டாரா?

அதெல்லாம் எதுவும் தேவையில்லை என்பது போலல்லவா இவர் காரியத்தை முடித்து முற்றுப்புள்ளி வைத்து விட்டார்…! ஆபீசும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனது.

அதைவிட இன்னொரு ஆச்சரியம். ரெண்டு நாள்ல கிளப்புறேனா இல்லையா பார் என்று சவால் விட்டுப் போன அவர்கள் வீடு மாறிக் கொண்டு போய் விட்டார்கள். வெளியூரே போயாச்சு என்றும் சிலர் சொன்னார்கள். (பாலுதான் பாவம், காதலியை விட்டுவிட்டு என்ன செய்யப் போகிறானோ…!!)

அந்த நாட்கள் ரொம்பவும் பிஸியானவை. நான் வேலை பார்த்த அந்த அலுவலகமே அப்படித்தான். எல்லோரும் காலிலே வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் அலைவார்கள். ஒருத்தராவது நிம்மதியாய் இருந்தார் என்று கிடையாது. தலைக்கு மேல் எப்போதும் கத்திதான். பொழுது விடிந்து ஆபீசிற்குள் நுழைந்தால் போதும், செக்ரட்டேரியட்டிலிருந்து ஃபோனுக்கு மேல் ஃபோன் வந்து கொண்டே இருக்கும். அப்பொழுது இந்த ஃபேக்ஸ் வசதியெல்லாம் கிடையாது. கேட்கும் அறிக்கையைத் தயார் செய்து சாயந்தரம் யாராவது ஒருத்தர் (கேட்கப்படும் குறுக்குக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தகுதி படைத்தவர் அல்லது சமாளிக்கத் தெரிந்தவர்) எடுத்துக் கொண்டு அந்த ராத்திரி ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்து மறுநாள் காலையில் பத்து மணிக்கு சென்னை கோட்டையில் அறிக்கையோடு இருக்க வேண்டும்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைக்குக் காலைல ரிப்போர்ட் இங்க இருக்கணும். டொக் என்று ஃபோன் வைக்கப்பட்டு விடும். வயிற்றில் புளியைக் கரைக்கும். ஒரு சிலருக்கு உடனே ரெண்டுக்கு வந்து விடும். சத்தமில்லாமல், இந்த வந்திடறேன் சார்…என்று கக்கூசைப் பார்த்து ஓடுவார்கள். நித்திய கண்டம் பூர்ண ஆய்சு என்பது போல்தான்.

இருக்கும் சபார்டினேட் அலுவலகத்திற்கெல்லாம் உடனே ஃபோன் போட்டு, அவர்களைப் பிடுங்கி எடுத்து அல்லது கறாராய்ப் பேசி அதாவது வைது, திட்டி, நொறுக்கி தேவையான புள்ளி விபரங்களை இப்பவே சொல்லு என்று ஃபோனிலேயே கேட்டு வாங்கி விடுவோம்.

நீங்கதான் இதுக்கு சரியான ஆளு…என்று இம்மாதிரி சமயங்களிலெல்லாம் என்னிடமதான் ஃபோனைக் கொடுத்து விடுவார்கள். எல்லாமே அள்ளுப் பிள்ளு ஃபிகர்கள்தான். எதுவுமே உண்மையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பேப்பரில் ஒன்று. நடப்பில் வேறொன்று. அதுதான் உண்மை. காலம் காலமாய் இதைப் பழகியவர்கள் அதிரவே மாட்டார்கள்.

.இப்டீச் சொல்லியே உளப்புங்கய்யா….இந்த ஃபிகர்சையெல்லாம் கன்ஃபார்ம் பண்ணி நாளைக்குக் காலைல ரிப்போர்ட் இன் டூப்ளிகேட் இங்க இருக்கணும். ஸ்பீட் போஸ்டெல்லாம் ஆகாது. ஒரு ஆள்ட்டக் கொடுத்தனுப்புங்க…..(அவனுக்காவது பயணப்படி கிடைக்குமே…!) இப்படித்தான் நிர்வாகம் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும்…!!

அடுத்த ஒரு மாதத்திற்குள் எங்கள் அலுவலகத்தின் கன்ட்ரோலில் இருக்கும் கிளை அலுவலகங்களின் வருடாந்திர அலுவலக ஆய்வை முடித்து அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பியாக வேண்டும். அதில் எந்தக் குறையும் வைக்கக் கூடாது. அட்மோ எங்கெங்கோ தொலைபேசி, ஆய்விற்கு வரும் தகவலை உறுதி செய்து கொண்டிருந்தார். தங்குமிடங்கள், சாப்பாடு, இன்னபிற வசதிகள் இப்படி எல்லாமுமாக…

நாங்கள் அந்த வாரம் இராமநாதபுரம் போனோம். என்னையும் இன்னொரு பக்திமான் எழுத்தரையும் கோயிலுக்கு அனுப்பினார் அட்மோ. தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டார்.

மறுநாள் காலை அலுவலரின் கார் வந்தது. அந்த மாத ஆய்வுக் கூட்டம் அங்குதான். நாள் முழுக்க ஓரே பரபரப்பு, படபடப்பு. கத்தல். கனைத்தல். இடி, மின்னல் மழை. மாலை ஒரு சின்ன டிபனோடு ஆய்வுக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அது நேரம் வரை இருந்த டென்ஷன் எல்லாம் எங்கே மறைந்தது, எல்லோரும் அதிசயித்தார்கள். மாலை அலுவலர் கையில் ஒரு சூட்கேஸோடு தனியே எங்கோ புறப்பட்டுப் போனார். மறுநாள் அவர் சென்னை போக இருப்பதாகச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் கார் மீண்டும் அங்கே வந்தது. வந்த அடுத்த நிமிடம் அந்தப் பொம்பளை ஸ்டெனோ அதில் ஏறிக் கொள்ள கார் பறந்தது.

அந்த அலுவலகத்தில் ஒரு வாரம் இருந்து ஆண்டு ஆய்வு அறிக்கை தயாரிக்கப் போகும் எங்களது இருக்கை நல்ல வசதியான இடத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆய்வுக் குழுவுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற கவனம் தெரிந்தது அதில். தினசரி மாலை ஒவ்வொரு இடங்களென சுற்றுலாத் தலங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன எங்களுக்காய். கடைசி நாள் பார்ட்டி என்றார்கள். அதற்குள் அறிக்கையையும் முடித்தாக வேண்டும். ஒரு புக்லெட் நூறு பக்கத்திற்குள் தயாரித்தாக வேண்டும். எங்களுக்கா தெரியாது. இதில்தானே ஊறிப்போய்க் கிடக்கிறோம் நாங்கள். இத்தனை வருஷ சர்வீஸ் என்பது என்ன சும்மாவா? ஆனாலும் முதல் மூன்று நாட்கள் நாங்கள் வேலையில் கவனமாய்த்தான் இருந்தோம். பூசி மெழுகினாலும் அதையும் பளிச்சென்று வெளிச்சம் போடாமல் செய்தாக வேண்டுமே?

நீங்க இங்க உட்காருங்க என்று எனக்கென ஒரு தனி இருக்கையைக் காண்பித்திருந்தார் கண்காணிப்பாளர் முருகேசன். அவருக்கு என்னைத் தெரியும். எனக்கு அவரைத் தெரியும். எங்களின் புரிதல் அப்படி.

அதில் உட்கார்ந்ததும், தெரியுதா…? என்றார் என்னைப் பார்த்து.

எதண்ணே? என்றேன் நான்.

உன்ன எதுக்கு இங்க உட்கார்த்தினேன்…? நேரா ஜன்னல் வழியாப் பாருய்யான்னா…? அடுத்தாப்ல….தெரியுதா?

நான் பார்த்தேன். பார்த்தேன். பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னால் பார்வையைச் சிறிது கூட விலக்கவே முடியவில்லைதான்.

எப்டீ…ஆளு? என்றார் நமுட்டுச் சிரிப்போடு.

நான் கிறங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். என்னை உலுப்பினார். என்ன, இங்கயே மயங்கிட்டியா? வாயில ஈ போயிரப் போவுது…மூடு…..என்றார்.

து, இப்பொழுது அந்தக் காரில் ஏறிப் போய்க் கொண்டிருந்தது.

என்னண்ணே….? என்றேன்.

அப்டித்தேன்…! நம்ம டிரைவர் சுப்ரமணிட்டக் கேட்டுப்பாரு…இன்னும் கத கதையாச் சொல்வான்….அவரோட பெங்களுர் போயி மணிக் கணக்கா வாசல்ல காவக் காத்த கண்றாவியெல்லாம் ஏராளமா இருக்கப்பூ…..தெரிஞ்சிக்க…..

எங்கயோ மச்சம் உள்ள ஆளும்பாங்களே….அது உண்மதான் போல்ருக்கு …என்றேன். ஏன் உனக்கில்லையேன்னு ஏக்கமா இருக்குதா…? என்று முதுகில் பட்டென்று தட்டினார் முருகேசன்.

எனக்கு ஒன்று மட்டும் அப்போது சட்டென்று மனதுக்குள் உறுதியானது.

பாலு இன்னும் கொஞ்ச நாளில் நிச்சயம் உள்ளுருக்குத் திரும்ப வந்து விடுவான் என்பதுதான் அது.(உயிரோசை இணைய இதழ் - 28.5.2012)

-----------------------------------------------------------

16 ஏப்ரல் 2012

“பிசிறு” சிறுகதை


 

தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருப்பார்கள். பின்புறக் கேரியரில் ஒரு சாக்கினை மடித்துப் போட்டு இருபக்கத்திற்கும் சமமாகத் தொங்குமாறு குடங்களைக் கட்டியிருப்பார்கள். குடத்தின் கழுத்தில் இறுக்கமான சுருக்கு. தண்ணீர் பிடித்துச் செல்லும்போது சிக்கென்று நிற்கும். நிற்க வேண்டும்.

எல்லோருக்கும் கை வந்த அந்தக் கலை ஏனோ எனக்கு மட்டும் படியவில்லை. அவர்களைப் போல நானும்தான் செய்து பார்த்தேன். தண்ணீர் பிடித்துத் தொங்கவிட்டுப் பாதி தூரம் கூட வந்திருக்கவில்லை. கழுத்துப் பகுதியிலிருந்து மேற்புறமாகச் சுருக்கு இளகி அப்படியே கயிறு மேலேறி குடம் பொத்தென்று கீழே விழுந்து விட்டது. நடு ரோட்டில் தண்ணீர் ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது. எனக்கோ பெருத்த அவமானமாக இருந்தது. நாலாங்கிளாஸ் படிக்கும் சின்னஞ்சிறுவன் கூட குடத்தைக் கட்டிக் கொண்டு சிட்டாய்ப் பறக்கிறான். தடிமாடு மாதிரி வளர்ந்த எனக்கு அது ஏனோ கைவரவில்லை. நல்ல கனமான குடமா இருக்கணும் சார்…என்றார்கள் உதவிக்கு வந்தவர்கள். பாதித் தண்ணீரோடு நிமிர்த்திக் கொடுத்தார்கள். இதை எங்க கொண்டு போக…என்று அதையும் ரோட்டில் ஊற்றினேன். காலிக் குடத்தைக் கட்டிக் கொண்டு வீடு பயணிக்கையில் ஜோராக நிமிர்ந்து வந்தது அது.

சவக்காடு என்று ஒரு இடம். ஒரு காலத்தில் பிணங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் இடமாக இருந்ததால் அந்தப் பெயர் விளங்கிற்று என்றார்கள். ஒரு சிலர் சவக்காடில்லை, சிவக்காடு என்றார்கள். சிவன் சாம்பலைப் பூசிக் கொண்டு ஆடியதாய் மனதில் நினைத்துக் கொண்டு. அந்த இடத்தில்தான் வழக்கமாய் எல்லோரும் சென்று அடைவார்கள் தண்ணீர் பிடிப்பதற்கு. கூட்டமான கூட்டம். நாலு ஐந்து இடங்களில் அடி பைப் வைக்கப்பட்டிருக்கும். படக்கு படக்கு என்று தண்ணீர் அடிக்கும் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

என்ன விசேஷம் என்றால் ஊரெல்லாம் நாயாய் பேயாய் தண்ணீருக்கு அலைந்தாலும், அங்கு மட்டும் எந்நேரமும் வந்து கொண்டேயிருக்கும். நின்றது என்கிற பேச்சுக்கே இடமில்லை. பூமிக்கடியிலான பைப் லைன் வெகு பள்ளம் அங்கே, அதனால்தான் அப்படி வருகிறது என்று சொன்னார்கள். அருகில் நூறடி தூரத்தில் உள்ள வீடுகளில் பொட்டுத் தண்ணீர் வராது. இங்கே அடி பைப்பை வைத்து சிறிது தண்ணீரை உள்ளே ஊற்றி படக் படக்கென்று அடித்து பிரஷரை ஏற்றினால் எழும்பிக் கொண்டு மேலே வந்து தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்.

குடம் ஒரு ரூபாய். ஒரு அடி பைப்பில் நாளெல்லாம் தண்ணீர் கொட்டுவதால் எப்படியும் நூறு நூற்றைம்பது குடங்களுக்காவது காசு தேறும். இப்படியான சேதி ஊர் பூராவும் பரவி கார்ப்பரேஷன்காரர்கள் வந்து தண்ணீரைக் காசுக்கு விற்கக் கூடாது என்றார்கள். சரி, ஓசி கொடுக்கிறோம் என்று தெரியாமல் காசு வாங்கிக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள். அதுவும் தெரிந்து போய் கார்ப்பரேஷனில் தண்ணீர் விடும் நாள், நேரம், தவிர மற்ற நேர, நாட்களில் யாருக்கும் தண்ணீர் அடிக்க விடக் கூடாது, அப்படிச் செய்தால் குழாய் கனெக் ஷன் பிடுங்கப்படும் என்று கண்டிப்பாகச் சொல்லப் போக கொஞ்ச நாட்களுக்கு அந்தக் களேபரம் ஓய்ந்தது அங்கே. அடிக்கடி சம்பந்தப்பட்டவர்கள் வேறு வந்து வேவு பார்க்கப் போக, ஜனங்களுக்குத் தண்ணீர் விடுவது நின்றது.

பழையபடி ஆட்கள் சைக்கிளில் குடங்களைச் சுமந்து கொண்டு சர்ரு, புர்ரு என்று வேகமாய் மிதித்துக் கொண்டு எங்கடா தண்ணீர் கிடைக்கும் என்று அலைய ஆரம்பித்தார்கள்.

கார்ப்பரேஷன் கமிஷனர் பங்களாக் குழாய்ல தண்ணி கொட்டுதாம்….என்று யாரோ சொல்லப் போக கூட்டம் அலை மோதியது அங்கே. போலீஸ் வந்து இங்கல்லாம் தண்ணி பிடிக்கக் கூடாது என்று விரட்ட, பிடிச்சிட்டுப் போகட்டும்யா விடுங்க…என்றாராம் கமிஷனர். என்ன ஒரு இரக்கம் பாருங்கள். மவராசனா இருக்கட்டும் என்று வாழ்த்தியது ஜனம். அதுக்காக இப்படியா? டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு கூட்டம் கட்டி ஏறியது என்றால்? கடைசியில் போலீஸ் பந்தோபஸ்து போட வேண்டிய நிலை வந்தது. ஒரு கட்டத்தில் கமிஷனர் தன் பங்களாவுக்கு முன் அப்படியான கச்சரா புச்சராக் கூட்டம் விடாமல் இருப்பதை வெறுக்க தண்ணீர் விடுவது அறவே நின்றது. பங்களா வெளி கேட் இழுத்து மூடப்பட்டது.

இப்படியாகத்தானே சைக்கிளில் குடத்தைக் கட்டிக் கொண்டு தவறு, தவறு அதுதான் ஆகாமல் ஆயிற்றே, என் மொபெட்டில் ஒரே ஒரு குடத்தை வைத்துக் கொண்டு அல்லது கேனை நிறுத்திக் கொண்டு நானும் அலைய ஆரம்பித்தேன். அப்படி அலைந்த போது நான் கண்டுபிடித்த இடம்தான் அந்த வீடு.

வாங்க…எங்க இன்னும் கடந்து போறீங்க…இங்கதான் தண்ணி வருதுல்ல.. என்று சாலையைப் பார்த்துக் கொண்டு நின்ற அந்த அம்மாள் வலிய அழைத்தது என்னை. எப்பொழுதுமே யாராவது அங்கு தண்ணீர் பிடித்துக் கொண்டேயிருப்பார்கள்தான். யாரேனும் ரெண்டு பேர் காத்துக் கிடப்பார்கள். இதையெல்லாம் பார்த்தவாறே நகர்ந்து விடுவது என் வழக்கம். சொல்லப்போனால் அங்கிருந்து அரைக் கி.மீ. தூரம் கடந்தால்தான் நான் வழக்கமாய்ப் பிடிக்கும் அந்த சவக்காடு இடம் வரும்.

அதுதான் இல்லை என்று ஆகிவிட்டதே என்று கேட்கிறீர்களா? அது அப்படியல்ல. இல்லை என்று ஆகும். பிறகு இருக்கும். பின்னும் ஒரு நாள் இல்லை என்று ஆகிப் போகும். இதுதான் வழக்கம்.

போகட்டும்யா…சனம் தண்ணிக்காக என்ன பாடு படுது…நம்மளாலதான் எல்லா எடத்துக்கும் விட முடியல…அங்க அதுபாட்டுக்கு வந்திட்டிருக்குது…அத நிறுத்தி என்னா செய்யப் போறோம்…அதக் கெடுப்பானே…அங்க நிறுத்தப் புகுந்தோம்னா அதோட கனெக் ஷன் உள்ள மேட்டு வீடுக பலதுக்கும் இல்லாமப் போகும். பெறவு அங்க பிரச்னை கௌம்பும்…அவுகளுக்குப் பதில் சொல்லி மாளாது. கழுத கெடக்கு விடு…என்னா அந்தத் துட்டை வாங்கி அவுக என்ன கோட்டையா கட்டிடப் போறாக…ஏற்கனவே நம்ம செக் ஷன் ஆபீசரு ஒருத்தர் போயி அடி பெத்துட்டு வரல்லியா…இனியும் அங்க பிரச்னை பண்ணினம்னா டப்பா கழன்டு போகும்…

இதுதான் நடந்தது. இப்பொழுதும் அங்கே ஜே.ஜே. என்று திருவிழாக் கூட்டம்தான். யம்மா, அய்யா, அண்ணே, யக்கா, என்னங்ணா, வந்துட்டங்ணா, சரிங்ணா, என்று மக்களிடையே உறவு முறை ரெம்பவும் நெருக்கமாகி விட்டது அங்கே.

அரை கி.மீ. கடந்து அந்தச் சந்து நுனியில் நுழையும்போதே காத்துக் கிடக்கும் கூட்டத்தைப் பார்த்து வதக் என்கும் எனக்கு. இங்க போயி என்னத்த நின்னு, என்னத்த அடிச்சு, என்னத்த தண்ணிய என்னத்தப் பிடிச்சு….. என்று மலையாய் அலுப்பு வந்தது எனக்கு. போதும்டா சாமி இந்தத் தண்ணிக்குப் படற பாடு…..

உங்கள யாரு பாடு படச் சொன்னா…அதான் ட்ரை சைக்கிள்ல புருஷன் பொண்டாட்டியா ரெண்டு பேர் தள்ளிட்டுப் போறாங்களே… …அவுங்ககிட்டச் சொல்லுங்க…தெனம் நமக்கும் ரெண்டு கொடம் வேணும்னு…தருவாங்க…

அந்தாளு கொடம் அஞ்சு, ஏழுங்கிறான்…தூரத்துக்கேத்தமாதிரி….தெனம் இதுக்கு இருபது முப்பதுன்னு கொடுக்கச் சொல்றியா…அவன் கொடத்தக் கழுவுறானோ இல்லியோ…எந்நேரமும் ஒரு பாக்கப் போட்டு மென்னுக்கிட்டே கிடக்கான்…அங்கங்க புளிச் புளிச்சின்னு துப்ப வேற செய்றான்…அப்டியே வாயத் துடைச்சிக்கிறான். அதே கையால தண்ணிக் கொடத்தத் தூக்கிக் கவுத்து ஊத்துறான்…அங்கங்க நின்னு பீடியை இழுக்கிறான்…அன்டர்வேர் தெரியறமாதிரி சொறியறான்…இதெல்லாம் நீ பார்த்திருக்கியா…நா தெனம் பார்க்கிறேன்…அவன்ட்டப் போயி தண்ணிய வாங்குங்கிற…வௌங்கினாப்லதான்…

அவள் வாய் அத்தோடு அடைத்துப் போனது. எப்டியோ கொண்டுவந்தாச் சரி என்று விட்டு விட்டாள். பாடெல்லாம் எனக்குத்தானே..தினமும் 25 லிட்டர் மினரல் வாட்டர் கேனைக் கொண்டு வந்து இறக்க எவனிடம் ஐவேஜூ உள்ளது.

நீங்க என்ன சைக்கிள்லயா போறீங்க…செலவாகாம இருக்க…? மொபெட்லதான போறீங்க…அதுக்கு பெட்ரோல் எங்கிருந்து வருது? ஓசிலயா ? அந்தச் செலவையும் கணக்குப் பண்ணினீங்களா? – கேட்டாள்.

நானென்ன லேசுப்பட்டவனா? என்ன கவனித்தாள் அவள்? ஏதேனும் கடை கண்ணி என்று செல்லும்போதே ஒரே வேலையாய் நாலைந்து காரியத்தை முடிப்பதுபோல்தானே சென்று வருகிறேன். இந்த ஒன்றுக்கு மட்டும் என்றா வண்டியைக் கிளப்புகிறேன்?

என்ன சார்…லைப்ரரிக்கு கொடத்தோட வர்றீங்க…?

என்ன சார்…பேங்க் வேலையா வர்றபோதும் கையில குடம்தானா?

அட, உழவர் சந்தைக்கு பைக்கு பதிலா குடத்தக் கொண்டு வந்த ஆள இப்பத்தான்யா பார்க்கிறேன்… - நண்பர் கேலி செய்யவில்லையா?

எத்தனை கேள்விகள்? எத்தனை கிண்டல்கள்? எதைக் கண்டாள் எதைக் கேட்டாள்? எல்லாப் புகழும் ஒருவனுக்கே….

ண்டி தானாக நின்று போகிறது அந்த இடத்தில். ஒரு அடி அதற்கு மேல் வைக்க முடியாது. இப்படி நின்று தடுத்தால்? ஓரமாய் மரத்தடியில் நிறுத்தி ஸ்டான்ட் போடுகிறேன். அதற்குள் அந்தத் தண்ணீர்க் கேனை உரிமையோடு எடுத்து உள்ளே செல்கிறது அந்தம்மாள்.

என்னா கேனப்போயி இப்டி வச்சிருக்கீங்க…கழுவவே மாட்டீகளா…? – கேட்டுக் கொண்டே குழாயின் குறுக்கே நீட்டி சிறிது தண்ணீரைப் பிடித்துக் குலுக்குகிறது.

தெனம் கழுவணுமாக்கும்…அப்பத்தான் உள்ளாற பாசம் பிடிக்காம இருக்கும்…தண்ணி வீச்சமில்லாம இருக்குமாக்கும்…

என்னவோ ஒரு பொடியை உள்ளே தூவி மீண்டும் குலுக்குகிறது. கொஞ்ச நேரத்தில் வெளியில் இருந்து பார்த்த எனக்கு உள்ளே தெரியும் வெளிச்சம். மனிதர் மனங்களையும் இப்படி நுணுகிப் பார்த்தால்தான் உள்ளே இருக்கும் வெளிச்சம் தெரியும் போலும்.

அடேயப்பா எத்தனை குடங்கள்? இத்தனை எண்ணிக்கையை எப்படிச் சேர்த்திருக்கும் இந்த அம்மாள்? தண்ணீர் பிடிக்க வந்து மறந்து போனவர்கள் இருப்பார்களோ? அஞ்சாறு குடம் என்று வைத்துப் போனவர்கள் மறந்து விட்டிருப்பார்களோ? அப்படி ஒன்றிரண்டாய் மறந்து மறந்து இத்தனை சேர்ந்திருக்குமோ? பழைய குடங்கள் எங்கும் விற்பதில்லையே? புதிதுதானே வாங்கியாக வேண்டும். ஒட்டும் போட முடியாதே? ஓட்டை விழுந்தால் அடைக்க முடியாதே…அடைத்தாலும் நிற்காதே…!

நீ இருக்கியே…இப்டியே கண்டமேனிக்கு விட்டேத்தியா நினைக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு…சும்மாக் கெடடா… வந்தமா, தண்ணியப் பிடிச்சமா, போனமான்னு இல்லாம…இதென்ன விருதாச் சிந்தனை?

கேனுக்குள் தண்ணீர் ஃபோர்சாக இறங்கும் சத்தம். ஒரு குறிப்பிட்ட அளவு நிறையும் வரை சாய்ந்து விடாமல் இருக்க கேனைக் கையால் பிடித்துக்கொண்டு நிற்கும் அந்த அம்மாள். என்ன ஒரு அக்கறை? செய்யும் வேலையில்தான் என்ன ஒரு அர்ப்பணிப்பு உணர்வு? அங்கே வரிசையாக அணிவகுத்து நிற்கும் நீர் நிறைந்த குடங்களே அதற்கு சாட்சி. அது விற்பதற்கோ அல்லது கொண்டு வந்தவர்கள், வந்து எடுத்துச் செல்வதற்கோ? எதுவானாலும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு. என்ன ஆனாலும் மூத்த தலைமுறையினரின் பொறுப்புணர்வே தனிதான். இந்த சமூகம் இன்னும் அவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களால் காப்பாற்றப்படும் விழுமியங்கள்தான் நம் குடும்ப அமைப்பின் ஆதார சுருதியாக விடுபடாமல் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மாற்றம் என்ற ஒரு வார்த்தையைத் தவிர எல்லாமும் மாறுதலுக்குட்பட்டது என்கிறோம். ஆனால் மாறாத, காலம் காலமான, அழிவற்ற, அடிப்படை ஒழுக்கங்களும், பண்பாடும், பொறுப்புணர்வும், செயல்பாடும்தான் இன்னும் மீதமாகி நாம் வீழ்ந்து படாமல் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு நிகழ்வுகளிலும் இப்படி எத்தனை எத்தனையோ அர்த்தப்பூர்வமான மேன்மைகள். இந்தாங்க,எடுத்துக்குங்க…சொல்லியவாறே தண்ணீர் கேனைத் தூக்கி என்னருகே வைத்தது அந்த அம்மாள்.

கையில் காசைத் திணித்தேன்.

என்னாது…? ஒத்த ரூபாயக் கொடுக்கிறீங்க…..மூணு ரூபா கொடுங்க…..

எது? மூணு ரூபாயா? எல்லா எடத்துலயும் ஒரு ரூபாதான…? எல்லார்ட்டயும் வாங்குறத என்ட்டயும் வாங்கிக்குங்க…- அந்த அம்மாள் என்னிடம்தான் ஸ்பெஷலாகக் கேட்கிறது என்று தோன்றியது எனக்கு.

பின்ன? உங்ககிட்ட மட்டுமா கூடக் கேட்கப் போறேன்….அல்லாருந்தான் கொடுக்கிறாக…கொடுங்க…கொடுங்க…பாட்டிக்குக் கொடுத்தா என்ன கொறஞ்சா போவீங்க…கொடுங்க….- தன்னைப் பாட்டி என்று எனக்கு பாவித்துக் கேட்டதில் நான் இறங்கலாம் என்ற நினைப்பு..

எங்கிட்டக் காசில்ல….ஒர்ரூபாதான் கொண்டாந்தேன்….அடுத்தவாட்டி பார்ப்போம்….சொல்லிக் கொண்டே கீழே இறங்கினேன்….நான் அங்கே நின்ற வேளையில் வெறும் ஐம்பது பைசாவும், ஒரு ரூபாயும் கைமாறுவதைத்தான் பார்த்தேன். என்னிடம் மூன்று கேட்டால் எப்படி? நான் என்ன இளிச்சவாயனா? ஏன் என்னிடம் மட்டும் அப்படிக் கேட்கிறது? எல்லோரும் சைக்கிளில் தண்ணீர் எடுத்துச் செல்ல, நான் மட்டும் மொபெட்டில் வருகிறேனே, அதனாலா? வேறு சிலரும் அப்படி வருகிறார்கள்தானே? ஆனால் அவர்களில் யாரும் இங்கு பிடிப்பதாய்த் தெரியவில்லை. இங்கு வருவதெல்லாம் வெறும் சைக்கிள் பார்ட்டிதான். அப்படியானால் மாட்டிய முதல் கிறுக்கன் நான்தானா? வசதியான பார்ட்டி என்று நினைத்துவிட்டதோ?

நல்லாயிருக்கு நீங்க பண்றது…கேனை வச்சு தண்ணிய அடிச்சி, நிரப்பிக் கொடுத்திருக்கேன்….அதுக்காச்சும் காசு கொடுத்திட்டுப் போங்க…நீங்க பாட்டுக்குப் போறீங்க…நல்ல ஆளுங்க நீங்க….அஞ்சு ரூவால்லாம் கொடுக்கிறாக…நீங்க என்னடான்னா மூணு கொடுக்க அழுகிறீங்க….

இன்னும் கொஞ்சம் போனால் சத்தம் பலமாகி தெருவில் மானத்தைக் கூட்டிவிடும் போலிருக்கிறது. நல்லா மாட்டினன்யா நானு….

பையைத் துழாவினேன். இன்னொரு ஒரு ரூபாய் தட்டுப் பட்டது. எடுத்து நீட்டினேன்.

இம்மாம் பெரிய கேனைத் தூக்கிட்டு வந்து ஒத்த ரூபா கொடுக்கிறாரு…? ஆளப்பாரு….

அந்தம்மாள் சத்தம் போடுவது வந்து கொண்டிருந்த என் காதில் விழுந்தது. எப்படி அழுத்தமாய் உழைக்கிறதோ அதுபோல் படு அழுத்தமாய்ப் பேசவும் செய்யும் போலும்…

தோ…இன்றும், இப்பொழுதும் தண்ணீர் பிடிக்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அங்கே அல்ல. வழக்கமான சவக்காட்டுப் பக்கம்தான். காத்திருந்துதான் பிடித்தாக வேண்டும். கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ…சொல்ல முடியாது. ஆனாலும் அங்கு ஒரு ரூபாய்தான். அதில்தான் மனதுக்கு நிம்மதி. அரைக் கிலோ மீட்டர் அதிகம்தான். போக, வர ஒரு கி.மீ. தூரம். அந்தப் பெட்ரோலுக்கான காசு என்னாவது? வண்டி என்ன தண்ணீரிலா ஓடுகிறது? காற்றாய்க் கரைவது காசுதானே? அதை நினைத்து அந்தம்மாளுக்கு ஒத்த ரூபாய் கூடக் கொடுக்கக் கூடாதா? மனசாகவில்லையே? நான் என்ன செய்ய? எல்லோரிடமும் வாங்கும் துட்டை என்னிடமும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே? அதென்ன என்னிடம் மட்டும் கூடக் கேட்பது? அது எனக்கு நியாயமாகப் படவில்லை. இன்று என்னிடம் மூணு கேட்டால் நாளை என்றேனும் மற்றவர்களுக்கு உயர்த்தும்போது எனக்கும் ரேட் கூடுமல்லவா? அப்போது அஞ்சக்கொண்டா, பத்தக் கொண்டா என்றால் நான் எங்கு போவது? அப்போது இன்னும் மனசுக்குக் கஷ்டமாக இருக்குமே?

இதென்னடா இது வம்பாப் போச்சு? வேலியோட போற ஓணானை வலிய மடில பிடிச்சுக் கட்டின கதை?

ஏண்ணே…பேசாம நடந்து வர வேண்டிதானே…உங்கள யாரு அந்தச் செடியப் பிடிச்சு இழுக்கச் சொன்னாங்க? என்று கையில் முள் கோடாய் இழுத்துவிட்ட வேதனையில் சுரீர் என்று துள்ளித் துடிக்கும் பாலையாவைப் பார்த்து, காகா ராதாகிருஷ்ணன் ஏதோவொரு பழைய அரதப் பழசுப் படத்தில் கூறுவார். அது ஞாபகம் வந்து சிரிப்பை மூட்டியது எனக்கு.

அம்புட்டு தூரம் சென்று பிடித்தாலும் பிடிப்பேனேயொழிய ஒரு ரூபாய் அதிகம் கொடுப்பதாக இல்லை. என்ன மனசு இது? எனக்கு நானே கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். ஒரு வகையில் பார்த்தால் முட்டாள்தனமாகக் கூடத் தோன்றத்தான் செய்கிறது. மனிதன் தான் ஏமாற்றப்படுவதாக உணரும்போது ஏதோ ஒரு பிடிவாதம் அவனிடம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை, ஏமாறுவதில்லை என்கிற வைராக்கியம் பிறக்கிறது. ரொம்பச் சாதாரண விஷயம்தான். ஆனாலும்….

ங்க வீட்டுக்காரரென்ன தண்ணி பிடிக்கவே வரமாட்டேங்குறாரு இப்பல்லாம்…வரச் சொல்லுங்க…. – அந்த அம்மாள் கேட்டதாக என் மனையாள் சொல்கிறாள்.

அவுங்களுக்கு எப்டித் தெரிஞ்சது நீதான் என் பொண்டாட்டின்னு….? ஜோடியா எப்பப் பார்த்தாங்களாம்? அப்டியே பார்த்திருந்தாலும், நீ என் பொஞ்சாதின்னு எப்டி முடிவு பண்ணினாங்களாம்?

எப்டியோ தெரிஞ்சுது….இப்ப அதுவா முக்கியம்…? இந்த வாய்தான ஆகாதுங்கிறது? போகட்டும், அங்கயே பிடிங்க…அந்தம்மா கேட்குற காசைக் கொடுங்க…பிசினாறித்தனம் பண்ணாதீங்க…பாவம் அவுங்க…பல சமயம் காசிராஜன் க்ளினிக்குல அவுங்களைப் பார்த்திருக்கேன்….எலும்பும் தோலுமான வீட்டுக்காரரக் கூட்டிட்டு வர்றதப் பார்க்கணுமே….பெரிய்ய்ய்ய கொடுமை அது… இன்னைக்கோ நாளைக்கோன்னு இருப்பார் அவர்…யார் வாயிலயும் விழாதீங்க…. ஆகாது…கேட்டதக் கொடுத்திட்டு, தண்ணியப் பிடிச்சிட்டு வந்து சேருங்க….ஒண்ணும் நஷ்டமாயிடாது…..குடி முழுகிடாது…..புரியுதா….

உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது அவள் சொன்னது. அநேகமாக நாளை அங்கேதான் செல்வேன். அதற்கு மேல் என் வண்டி நிச்சயம் நகராது. அந்தளவுக்குத் தளர்ந்தாயிற்று நான். கடைசியாக என்னவள் சொன்ன அந்தச் செய்தி…மனதை என்னவோ பாடாய்ப் படுத்துகிறது? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…! அங்கேயே செல்வோம்…பழக்கத்தில், பின்னால் ஏதாவது கடன் உடன் கேட்டாலும் கொடுத்து உதவலாம்தான். பாவமாய்த்தான் இருக்கிறது பார்க்கப் பார்க்க…! மனதைத் தொடர்ந்து சங்கடப்படுத்தத்தான் செய்கிறது. போனால் போகிறது. நம்மாலான உதவி. தேவையென்றால் செய்துதான் வைப்போமே…போகுமிடத்திற்குப் புண்ணியம் தேடி…. மனம் பட்டென்று ஒரு அதீத முடிவுக்குச் சென்றது. திடீரென்று உறுதிப் பட்டது. தேர் நிலைக்கு வந்தது.

எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல…? (திண்ணை இணைய இதழ் வெளியீடு – 15.4.2012)

--------------------------------------------------------------------

10 ஏப்ரல் 2012

கிசு…கிசு… சிறுகதை



 

கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்… -அந்த நள்ளிரவில் சவமாகத் தூங்கிக் கொண்டிருந்த நடிகை மேகலா பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது.

கிர்ர்ர்ர்ர்…..

“யாரது?“ கேட்டவாறே ஓடிப்போய் மாடிப்படி லைட்டைப் போட்டவள் இறங்கினாள்.

யாருன்னு சொல்றீங்களா? – மீண்டும் கேட்டுவிட்டுக் கதவை நெருங்கினாள்.

கதவைத் திற மேகலா…நான்தான்….

நீங்களா? நீங்க அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கிறதால்ல சொன்னாங்க…? – குரல் நடுங்கியது அவளுக்கு.

போகலே…அந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பினேன்… - சொல்லியவாறே உள்ளே நுழைந்தான் பிரேம்குமார்.

உன்னைத் தீர்த்துக்கட்டுறதுக்காகத்தான் அப்படி ஒரு செட்அப் பண்ணினேன்… - உள்ளே நுழைந்தான்.

ஆமாண்டி…நாலு காசுக்கு ஓட்டலில் டான்ஸ் ஆடிட்டிருந்த உன்னைக் கொண்டுபோய் பெரிய ஸ்டார் ஆக்கினேன் பாரு…நீ எனக்குக் காண்பிச்ச நன்றி இருக்கே…அதுக்கு ஏதாச்சும் பரிசு தர வேண்டாமா? உன்னோட மார்க்கட் டல்லாயிடக் கூடாதுன்னு என் படத்திலெல்லாம் உன்னை சிபாரிசு பண்ணினேனே…அப்பல்லாம் உன்னைப்பத்திப் புரிஞ்சிக்கலடி…இப்போ என் மார்க்கெட் ஓய்ஞ்சு போற வேளைல எனக்குக் கிடைக்கிற ஒன்றிரண்டு சான்சையும் கெடுக்கிறியே…ஏன்? அன்னைக்கு என் கூட நடிக்கிறதுல ஒரு இன்பம் இருக்கு…த்ரில் இருக்கு…நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது…அது இதுன்னல்லா பேட்டி கொடுத்த நீ…பிரேம்குமாரைப் போட்டா நடிக்க மாட்டேன்னு சொல்றியாமே? பிடிவாதம் பிடிச்சு எனக்கு வர்ற வாய்ப்புக்களையெல்லாம் கெடுக்க ஆரம்பிச்சிட்டியே…உன்னை சும்மா விடலாமா? அதுக்காகத்தான் இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன்…

பிரேம்… வேண்டாம்…என்னை ஒண்ணும் செஞ்சிடாதே…அப்புறம் போலீஸ்ல மாட்டிக்குவே…

பயமுறுத்துறியா…உனக்கு வழி காண்பிச்ச எனக்கே புத்தி சொல்றியா…? அவுட்டோர் ஷூமட்டிங்குக்கு இன்னைக்குப் பெங்களுரு போயிருக்கிறதா யூனிட்டையே நம்ப வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்…சந்திராலயா யூனிட்டே எனக்காக சாட்சி சொல்லும்…பெங்களுர்ல ஓட்டல் டிரடிஷன் தெரியமா உனக்கு…இன்னிக்கு தேதிக்கு நான் அங்க இருக்கேன்…ஆனா இங்க உன்னைக் கொலை பண்றேன்…

பொற கலங்கிப் போய் பின் வாங்கினாள் மேகலா.

டைரக்டர் கோபிநாத் மேல் உத்தரத்தைப் பார்த்தவாறே மோவாயைச் சொறிந்தார். கூடவே அப்படி ஒண்ணும் மேகலாவுக்கு எதிரிகள் இருக்கிறதாத் தெரில இன்ஸ்பெக்டர்…என்றார்.

நேத்து முழுக்க உங்க படத்தோட ஷூட்டிங்லதான் மேகலா இருந்திருக்காங்க…அப்போ யார் கூடவாவது ஏதாச்சும் தகராறு இருந்திச்சா? தொடர்ந்து தோண்டினார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்.

நோ நோ இன்ஸ்பெக்டர்….அவுங்க ஆக்டிங்க டைம் தவிர மத்த நேரத்துல யார் கூடவும் எதுவும் பேச மாட்டாங்க….ஏதாச்சும் புத்தகமும் கையுமாத்தான் இருப்பாங்க…

ஐ…ஸீ…சமீப காலமா அவுங்க யார் கூட அதிகமாச் சேர்ந்து நடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?

வருஷத்துக்கு மூணோ நாலோதான் பண்ணுவாங்க…அதுவும் பெரிய பட்ஜெட் கம்பெனிங்கதான்…பிரபலமான உறீரோக்களோடதான் இருக்கும்…

ஸாரி மிஸ்டர் கோபிநாத்…நா சினிமாவுல அதிகமா கவனம் செலுத்துறதில்லை…அந்தப் பிரபலமான உறீரோக்கள் யார் யாருன்னு சொல்ல முடியுமா?

சிக்கலான கேள்வி…ஸாரி இன்ஸ்பெக்டர்….இதுக்கு பதில் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது…ஃபீல்டுல இப்பத்தான் காலூன்றியிருக்கேன் நா….என்னை வம்புல மாட்டி விட்டிடும் இதுக்கு பதில் சொன்னேன்னா…சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி போடாத பத்திரிகைகளே கிடையாது…நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்க வேண்டிதானே… - கூறியவாறே அங்கிருந்த பத்திரிகைகளை எடுத்து டேபிள் மேல் போட்டார் கோபிநாத்.

சற்று நேரம் அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரஉறீமுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி கவனத்தை ஈர்த்தது.

பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான்.

ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் காட்சியைக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிய டைரக்டர் உறலோ சார்…என்றவாறே வரவேற்றார் வர்மாவை.

என்ன டைரக்டர் சார்…பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஐ திங்க் யு ஆர் சாடிஸ்ஃபைட்…

யெஸ்…யெஸ்…ஐ ஆம் ஃபுல்லி சாடிஸ்ஃபைட்…வெளி மாநிலத்துல வேலை பார்த்தாலும் தமிழர் பண்பாடுங்கிறதை மறக்காம எங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆதரவா இருக்கீங்களே…அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்…

நான் என்ன பெரிசா செய்திட்டேன்…மேலதிகாரி ஆர்டர்…அவ்வளவுதானே…இருந்தாலும் அதையும் இவ்வளவு சின்சியரா செய்யணுமே…

அது சரி டைரக்டர் சார்…நம்ம பிரேம்குமார் எப்ப வந்தாரு…

அவருதான் ட்யூட்டியில ரொம்ப ப்ராம்ப்ட் ஆச்சே…முந்தியே வந்திட்டாரே…

ஐ. ஸீ….

எதுக்குக் கேட்குறீங்க…?

நத்திங்…முன்னே இருந்த மார்க்கெட் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டேன்…இருந்தாலும் அவருடைய ட்யூட்டி கான்ஷியஸைப் பார்த்தீங்களா?

இதற்குள் காட்சி முடிந்து பிரேம் குமார் அங்கே வந்து சேர்ந்தான்.

உறலோ இன்ஸ்பெக்டர்…உறவ் ஆர் யூ…கேட்டவாறே வந்து கை குலுக்கினான்.

வெரி ஃபைன் மிஸ்டர் பிரேம்…உங்க சினிமா வாழ்க்கை எப்படி இருக்கு? ரொம்ப சீக்கிரமா பெங்களுரு வந்திட்டீங்களாமே?

ஆமா இன்ஸ்பெக்டர்…மெட்ராசிலே ஷூட்டிங் இல்லே…வேற வேலையும் இல்லே…சரி இங்கே வந்து ரெஸ்ட் எடுப்போமேன்னுதான் புறப்பட்டேன்…

ஐ..ஸீ…எங்கே தங்கியிருக்கீங்க..வழக்கம்போல் Nஉறாட்டல் டிரடிஷன்தானே…

யெஸ்…பெங்களுருவில் அதைவிட்டு வேறே எங்கேயும் நா போறதில்லே…

ஓகே. மிஸ்டர் பிரேம்…அப்போ நான் புறப்படுறேன்…

அச்சா…விடை கொடுத்தான் பிரேம்குமார்.

றுநாள் காலையே இன்ஸ்பெக்டர் வர்மா மீண்டும் தன்னைத் தேடி தன் அறைக்கே வருவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உறலோ…விஷயம் தெரியுமா? சென்னைல நடிகை மேகலா கொலையாம்…

அப்படியா…? செயற்கையாய் அதிர்ந்தான் பிரேம்.

தெரியாதா? கேட்டவாறே தினசரியை நீட்டினார்.

பிரபல நடிகை மேகலா கொலை…சென்னையில் பயங்கரம்…முதல் நாள் மாலைப் பேப்பரின் அந்தத் தலைப்புச் செய்தியைப் படித்தபோது அவனை அறியாமல் கைகள் ஆட்டம் கண்டன. அடக்கிக் கொண்டான்.

அப்புறம் இன்ஸ்பெக்டர்…எப்படி நடந்திருக்க முடியும் இந்தக் கொலை…? ரொம்பக் கவலையோடு கேட்டான்.

உங்களை மாதிரித்தான் நானும்…யாருக்குத் தெரியும்..ஆமாம் மிஸ்டர் பிரேம்…உங்களோட சேர்ந்து சில படங்களில் நடிச்சவங்களாச்சே…அவங்க கேரக்டர் எப்படி?

என்ன இன்ஸ்பெக்டர் நான் அறிமுகப்படுத்திய பொண்ணு அவங்க…இப்டிக் கேட்கிறீங்களே?

சார்…சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்…

ஷூட்டிங் டயத்துலயே அவுங்க யார் கூடவும் பேச மாட்டாங்க…அவங்ககிட்ட யாரும் தப்பாப் பேச முடியாது…அவ்வளவு நல்ல பொண்ணு…சில பேர் ராங்கிக்காரின்னு சொல்வாங்க…ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லே…

ஐ.ஸீ…

எனி ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர்?

நோ…நோ..ஃபார் இன்ஃபர்மேஷன் கேட்டேன்…ஆனா ஒண்ணு மிஸ்டர் பிரேம்…கொலையாளி ரொம்ப சாமர்த்தியசாலி…

ஏன் அப்டிச் சொல்றீங்க…? பிரேம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.

கைக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஃபிங்கர் பிரின்ட்ஸ் கூடக் கிடைக்காம… ஆனா பூட் பிரின்ட்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்..

இசிட்…அது சரி…இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?

இன்னிக்கு மாரினிங் நியூஸை வச்சித்தான் சொல்றேன்…

பேப்பர் படிக்கக் கூட டைம் இல்ல இன்ஸ்பெக்டர்…ரொம்ப டைட்…

ஆல்ரைட் மிஸ்டர் பிரேம்…நா கிளம்பறேன்…

தூக்கம் வராமல் புரண்ட பிரேம்குமார் துள்ளி எழுந்து அமர்ந்தான்.

ஃபூட் பிரின்ட்ஸ்…ஃபூட் பிரின்ட்ஸ்…கொலை நடந்த இடத்தில் ஃபூட் பிரின்ட்ஸ்…வர்மாவின் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்த ஆரம்பித்தன. மனதிற்குள் யாரோடு பிளேடால் அறுப்பதுபோல் இருந்தது. பயம் பூதாகாரமாய் உருவெடுத்தது.

எப்படி சாத்தியம்? இருக்கலாம். நம் போதாத வேளைக்கு மாட்டிக் கொண்டாலும் போயிற்று. விபரீதம். எப்படியாவது அழித்துவிட வேண்டும். அதற்கு முன்னோடியாச சென்னை அறையில் வைத்திருக்கும் ஷூவை அகற்றியாக வேண்டும்.

முடிவு செய்தான். பயணத்தை ரத்து செய்த ஒரு வி.ஐ.பி.யின் இடத்தைப் பிடித்துப் பறந்து சென்னை வந்து சேர்ந்தான். பரபரப்பான கூட்டத்தின் நடுவே புகுந்து கடந்து அறையை அடைந்தபோது -

வாங்க மிஸ்டர் பிரேம்குமார்…என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திட்டீங்க? ஷூவை எடுத்து மறைக்கிறதுக்கா? மல்லேஸ்வரம் இன்ஸ்பெக்டர் வர்மா சொன்னதை நம்பிப் புறப்பட்டு வந்திட்டீங்களா? நாங்க சந்தேகப்பட்டது சரியாப் போச்சு…

என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…அவரைப் பார்த்துக் கத்தினான் பிரேம்.

ஒய் ஆர் யூ ஷவுட்டிங்? எவ்வளவோ கேர்ஃபுல்லாத்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கீங்க…இத்தனைக்ளவரா நடந்துக்கிட்ட நீங்க கொஞ்சம் இந்தக் காவல்துறையோட திறமையயும் நினைச்சுப் பார்த்திருக்க வேண்டாமா? அதென்ன எங்க மேலே அத்தனை அவநம்பிக்கை உங்களுக்கு?

சதுர வடிவமாக வைரத்துண்டு போல் பளபளத்தது ஒரு பட்டன்.

இது எப்படி எங்க கைக்குக் கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா? போஸ்ட் மார்ட்டத்துலதான்…நீங்க கொலை செய்தபோது உங்களோட ஏற்பட்ட போராட்டத்துல மேகலா இதை விழுங்கியிருக்காங்க…சினிமா டெக்னிக் மாதிரி இல்ல? அப்படித்தான். ஆனா இது அவுங்க வயித்துக்குள்ள போனதுதான் உங்க துரதிருஷ்டம்…இன்னும் சந்தேகமாக? ஒரு பட்டனை வச்சு எப்படிடா இவன் நேரா நம்மளைத் தேடி வந்தான்னுதானே? ஒரு சந்தேகந்தான்…என்னடா ஆயிரத்தெட்டு நடிகைகள் இருக்கிற போது நேரா நம்ம ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கானேன்னுதானே யோசிக்கிறீங்க…காரணம் இல்லாமலா? இந்த பட்டனைக் கொண்டு வந்து திரும்பவும் உங்க சட்டைல வச்சுத் தைச்சாகணும்னு நான் எவ்வளவு அக்கறையா வந்திருக்கேன் பார்த்தீங்களா? ரியலி இடீஸ் பியூட்டி மிஸ்டர் பிரேம்…இத்தனை அழகான பட்டன்களோட இந்தச் சட்டையை எங்கே வாங்கினீங்க? என்ன விழிக்கிறீங்க? மேகா வாங்கிக் கொடுத்தாங்களா? அவங்களுக்கும் உங்களுக்கும்தான் சண்டையாச்சே? புரியல…? இதோ பாருங்க… - கூறியவாறே அந்தப் புத்தகத்தை நீட்டினார் இன்ஸ்பெக்டர்.

அமுதம் என்ற வாரப்பத்திரிகையில் இப்படி வெளியாகியிருந்தது அந்தச் செய்தி –

”பிரேம்மயான நடிகருக்கு இப்பொழுது மார்க்கெட் அவ்வளவு இல்லையென்று அவரோடு இனி சேர்ந்து நடிப்பதில்லையென முடிவு செய்து விட்டாராம் ஸ்கையையும் சட்டத்தையும் தன் பெயராகக் கொண்ட அந்தப் பிரபல நடிகை. அவரோடு சேர்ந்து வரும் வாய்ப்புக்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறாராம். ஒரு காலத்தில் அவரைப் பற்றி பிரேமையோடு உளறித் தள்ளிய இந்த நடிகை இப்பொழுது அவரை எதிரில் கண்டால் கூட கண்டு கொள்வ தில்லையாம். இதனால் பிரேமையான நடிகர் குமுறுகிறாராம். அது சரி…இவர்கள் சண்டையைக் கவனிக்கவா நமக்கு நேரம்…”

என்ன மிஸ்டர் பிரேம்…கிசு கிசு செய்தி கூட எவ்வளவு… உபயோகப்படுது பார்த்தீங்களா? உங்க சந்தேகமெல்லாம் தீர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்…லேட்டாச்சு போகலாமா? கேட்டவாறே எழுந்தார் இன்ஸ்பெகட்ர் ரஉறீம்

பிரேதமாய் பின் தொடர்ந்தான் பிரேம்குமார்.

---------------------- (உயிரோசை – இணைய வார  இதழ்- 9.4.2012)

04 ஏப்ரல் 2012

“சூ ழ ல்” சிறுகதை

 

சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு.. சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான நிழல். தலைக்கு மேலே சரசரவென ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறி. அதன் சத்தம் மட்டும் துல்லியமாய் காதுகளில்.

கதவைச் சாத்திடு…யாருக்கும் நான் இருக்கிறதைச் சொல்ல வேண்டாம்…என்று விட்டு, தனது டூ வீலரையும் உள்ளே தூக்கி நிறுத்தியிருந்தார்.

விடுமுறை நாளில் வேலைக்கு வருவது நிலுவை வேலைகளை முடிக்க. அன்றும் யாரேனும் தேடி வந்து விட்டால் வேலை கெட்டுப் போகும். அதோடு மட்டுமல்லாமல் அப்படி ஆட்கள் வருவதும் தங்கள் காரியங்களுக்காக வேண்டுவதும் வேறு வகையான அர்த்தங்களைக் கொடுக்கும். வந்த நோக்கம் முக்கியப் பணிகளை முடிப்பது. வாரத்தின் முதல் வேலை நாளில் அலுவலர் கேட்கும்போது தயாராய் இருப்பது.

அந்த மிகப் பெரிய காம்பவுன்டின் வலது கோடியில் இருக்கும் நுழைவாயிலின் ஆரம்பத்தில் இருக்கும் சின்னப் பிள்ளையார் கோயிலில் படுத்துக் கிடப்பான் வாட்ச்மேன் ரங்கன்.

காலைல பல்லும் விளக்காம, கக்கூசுக்கும் போகாம இப்டிப் படுத்து உருண்டு கோயிலை அசிங்கப்படுத்தற நீ….பிள்ளையார் ஒண்ணும் கேட்கலையா? என்று கொண்டேதான் உள்ளே நுழைந்தார்.

அவுருக்குத் தெரியும் சார் நா ராத்திரி பூராவும் தூக்கம் முழிச்சுக் காவக்காக்குறேன்னு…- ரங்கனும் அசராமல் பதில் சொன்னான். அவன்தான் இவரிடம் சகஜமாகப் பேசுபவன். அதென்னவோ அவனோடு ஒரு ஒட்டுதல் இவருக்கு. அதற்குக் காரணம் தெரியவில்லைதான். ஏதோவொரு வகையில் அவனின் பேச்சு பல சமயங்களில் இவருக்குப் பிடித்திருந்தது. அவ்வளவுதான்.

அடேங்கப்பா….பிள்ளையார் முழிச்சிட்டு இருந்தாத்தானே நீ காவக் காக்குறதை அவர் பார்க்க முடியும்…அவர் தூங்கிட்டார்னா?

அவுருக்கு ஏது சார் தூக்கம்? எந்நேரமும் கண்ணுமூடாம உலகத்தைக் காக்குறதுதான கடவுளுக்கு வேலை…

அப்போ நீ எதுக்கு? அவர்தான் காவல் காக்குறாருல்ல…?

அப்டியில்ல சார்…அவர் சஞ்சாரம் செய்யப் போயிட்டாருன்னா?

சிரித்தவாறே கேட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்தவர்தான். அடேயப்பா…லீவு நாளில்தான் எப்படி வேலை ஓடுகிறது? இதில் பாதி கூட இருப்பதில்லையே வேலை நாட்களில்….சதா ஆட்கள் வருவதும் போவதுமாய்….இன்று எப்படியும் டேபிளைக் காலி செய்து விட வேண்டும். அதென்னவோ எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள். காலையிலிருந்து நடவடிக்கை எடுத்த கோப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டு மொத்தமாக மாலை நான்கு மணியைப் போல் தன் டேபிளில் கொண்டு சுமத்தினால், தான் வீட்டுக்குப் போக வேண்டாமா? தினசரி ஆறு மணிக்கு மேல் உட்கார்ந்து ஒவ்வொன்றாகப் பார்த்து, அடித்து, திருத்தி, சரி செய்து, அல்லது வேறு ஒன்று எழுதி ராத்திரி ஒன்பதே வழக்கமாகிப் போனதே! இதற்காகவா உள்ளுர் வந்தது? தினசரி தாமதம் என்றால்?

ந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்து சேர்ந்தது முதல் வேலை அதிகம்தான். உள்ளுர் என்றால் அப்படித்தான். கிளம்பினாலும் அரை மணிக்குள் வீடு போய்ச் சேர்ந்து விடலாமே…! ரொம்பவும் சந்தோஷமாய் உணர்ந்தார் இந்த அனுபவத்தை. வீட்டுச் சாப்பாட்டின் ருசியே தனிதான். வெறும் தயிர்சாதம் மாவடு என்றாலும் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது என்கிற உறுதி உண்டு. காலம் போன கடைசியிலாவது வந்து சேர்ந்தோமே…! எந்தப் பிரக்ஞையும் இல்லாமலே இத்தனை காலம் ஓட்டியாயிற்று.. சொச்ச காலத்தையாவது இங்கே ஓட்டுவோம் என்று நிம்மதியாய் அவரது கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

அப்பாய்ன்ட்மென்ட் ஆன நாள் முதல் இன்றுவரை கடந்த முப்பது ஆண்டுகளாக அவர் வெளியூர்தான். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னங்க சொல்றீங்க? முப்பது வருஷமாவா உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கலை? என்று புரியாமல் அல்லது பொய்யோ என்பதுபோல் பார்ப்பார்கள். விதி வலியது என்று அவர்களுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?

சலிக்காமல், சளைக்காமல் விடுமுறை நாளில் ஊர் வருவது, இருப்பது, பின் புறப்பட்டுச் சென்று விடுவது என்று இருந்தே காலத்தைக் கழித்துவிட்டார். அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம் மாறுதல் விண்ணப்பம் கொடுத்து நேரில் சென்று என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து உள்ளுர் வாங்கிக்கொண்டு போய்ச் சேர்ந்து விட்டார்கள். இவரது ஊரைச் சேர்ந்தவர்களே, இவரோடு கூட அப்பாய்ன்ட் ஆன பலரும் உள்ளுர் வந்து பல காலமாயிற்று. என்னவோ இவருக்கு அது வாய்க்கவில்லை. அப்ளிகேஷன் அனுப்புவதோடு சரி. எவனையும் நேரில் சென்று பார்க்கும் ஜோலியெல்லாம் இல்லை. இங்கே நான் க்ளார்க் மாதிரி அங்கே அவன் க்ளார்க். அவனையென்ன நான் போய்ப் பார்ப்பது? கெஞ்சுவது, தலையைச் சொரிவது? இம்மாதிரிக் கேள்விப் பட்டாலே அவருக்கு எரிச்சல்தான் வரும். அதெல்லாம் என்னால முடியாதுங்க….இதுதான் அவர் பதில்.

மனைவி அபிதா. பள்ளி ஆசிரியை. அவளை அலைக்கழிக்க வேண்டாம் என்று விட்டு விட்டார். இல்லையென்றால் இவர் வேலை பார்க்கும் ஊருக்கு அவளை மாறுதல் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கலாமே…! அவளுக்கும் அதில் முனைப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னவோ ஆர்வமில்லை. எல்லாம் செக்கு மாடு கதைதான்.

லீவு நாளுக்கு வாங்க…அது போதும்…நா இங்கியே இருந்துக்கிறேன்….என்று சொல்லி விட்டாள். பக்கத்து பக்கத்து ஊர்களுக்கு மாறுதல் கிடைத்தாலும் அவள் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. போய்ப் போய் வந்து கொண்டிருந்தாள். அப்படிப் போய் வந்ததனாலேயே அது பெரிதும் இரக்கத்திற்குள்ளாகி, கடந்த ஏழெட்டாண்டுகளாய் அவள் உள்ளுரிலேயே இருக்கிறாள்.

எந்தப் புண்ணியவாளன் கண்களில் இவரின் அப்ளிகேஷன் பட்டதோ!

என்னய்யா இது…அநியாயமா இருக்கு…..வருஷா வருஷம் அவர் அப்ளிகேஷனும் வந்திருக்கு…ரிஜிஸ்டர்ல பதிஞ்சு பதிஞ்சு சுழிச்சிருக்கீங்களே…ஒரு மனுஷன் நேர்ல வந்து உங்களப் பர்சனலாப் பார்த்தாத்தான் எதுவும் செய்வீங்களா…இல்லன்னா எனக்கென்னன்னு விட்ருவீங்களா? செக் ஷன்ல எத்தனை ஆள் மாறினா என்னய்யா…ரிஜிஸ்டர் என்ட்ரி பேசும்ல…? அப்புறம் எதுக்கு இதெல்லாம்? சும்மா கண் துடைப்புக்கா…? இதுக்குப் பேர்தான் சீனியாரிட்டியா…? க்ளார்க்கா சேர்ந்து, செக் ஷன் அசிஸ்டன்ட் ஆகி, இப்போ கண்காணிப்பாளராவும் ஆயிட்டார். அவரும் வருடாந்திரக் கடன்ங்கிற மாதிரி அப்ளிகேஷன் அனுப்ப, நீங்களும் காலியிடமில்லை காலியிடமில்லைன்னு எழுதி எழுதி முடிச்சிருக்கீங்களே? இது அநியாயமில்லை? இத்தனை வருஷத்துல எப்பவோ சீனியாரிட்டில அவர் மொத ஆளா வந்திருக்கணுமேய்யா….என்னா ஃப்ராடு பண்ணினீங்க…? என்று வாங்கு வாங்கென்று வாங்கியதாக இவர் காதுகளுக்கு வந்த அந்தப் போதில் மனசுக்குள் குளிர் பரவியது ராகவாச்சாரிக்கு. மானசீகமாய்க் கும்பிட்டுக் கொண்டார். அந்தப் பலன்தான் இன்று இங்கு உட்கார்ந்திருக்கிறார். பைசாக் கொடுக்காமல், யாரையும் நேரில் சென்று பார்க்காமல் அப்ளிகேஷன் மட்டும் பேசியது அவரது இந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் என்று சொல்லலாம்.

கையில் அந்தக் கோப்பை எடுத்தவுடன் மனத்துக்குள் ஒரு தடங்கல் வந்தது இவரிடம். அவரையறியாமல் சுற்றிலும் எவரும் இருக்கிறார்களா என்று பார்வை ஓடியது. இந்தப் பட்டப் பகலின் தனிமை கூடவா இப்படிப் பயமுறுத்தும்?

சார்…பார்த்து முடிச்சி விடுங்க….ஏதாச்சும் செய்திருவோம்….

என்ன சொல்றீங்க….?

என்ன சார், புரியாத மாதிரிக் கேட்குறீங்க…ரிலீஸ் பண்ணி எழுதி வைங்க சார்…ஒரு பர்சன்ட் வாங்கிக்குங்க….சொல்லணுமா இதுக்கு நா….

ராகவாச்சாரிக்கு உடம்புக்குள் சில்லென்று என்னவோ பரவியது. ஒரு பர்ஸன்ட்…ஒரு பர்ஸன்ட்…..ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ரூபாய்…..

படுபாவி…சர்வ சாதாரணமாய்த் தருகிறேன் என்று சொல்கிறானே…? வேறு யாரேனும் சொல்லி அனுப்பியிருப்பார்களோ? அல்லது நான் என்ன செய்கிறேன் என்று சோதனை செய்கிறார்களா? ரொம்பவும் கவனமாய் இருக்க வேண்டும். இந்த ஆபீசே ஒரு மர்மமாய் இருக்கிறது. யார் எப்படி என்று இன்னும் நன்றாகப் பிடிபடவில்லை. அதற்குள் தடுமாறக் கூடாது…முடிவு செய்து கொண்டார்.

செக் ஷன் க்ளார்க் லீவுங்க…அவரு இல்லாம நா எப்டிச் செய்றது?

என்னசார்…எனக்கென்ன தெரியாதா? எத்தனை வருஷமா இங்க கான்ட்ராக்ட் பார்க்கிறேன் நான்….அவுரு இல்லேன்னா என்ன? நீங்க எழுதி வச்சா ஓ.கே. ஆயிட்டுப் போகுது….

தன்னை அவசரப்படுத்தி க்ளார்க்குக்குக் கொடுக்கும் அரை பர்ஸ்ன்ட் பணம் மிச்சம் என்று வாங்கிக் கொண்டு மீளப் பார்க்கிறான் ஆள். லட்ச லட்சமாய் காசு பார்ப்பவனுக்கு இந்த அரை பர்சன்ட் ஒரு பர்சன்ட்டில்தான் வந்துவிடப் போகிறதா? மனசோடு அதையும் சேர்த்துக் கொடுத்துவிட்டுப் போவோம் என்ற நல்ல எண்ணமில்லை. நாளை அந்தோணி வந்தால் நான் என்ன பதில் சொல்வது? சார், என் பங்கு….என்று இழுப்பானே….தரலை என்றால் சந்தேகப்படுவானே? தானே சேர்த்து வாக்கட்டை போட்டு விட்டதாய் நினைப்பானே…?

நீங்க கிளம்புங்க…பார்த்து செய்வோம்….என்றார் பொதுவாய்.

வந்தவனின் முகம் மாறியது.

உங்ககிட்ட சொன்னா ஈஸியா முடிஞ்சு போகும்னு ஜே.இ., சொன்னாரு…நீங்க என்னடான்னா இப்டிச் சொல்றீங்க….

யாரு ஜே.இ.,…?

ஜெகந்நாதன் சார்…..

அவரே சொல்லிட்டாரா…? அவர்தாங்க இந்தப் பீரிட்ல இருந்திருக்காரு….அவர ரெக்கமன்ட் பண்ணச் சொல்லுங்க….முடிஞ்சு போகும்…..

நா இல்லன்னு சொல்றாரு அவுரு…..?

என்னங்க, நான் இல்லைன்னு சொன்னாலும் நியாயம்…இப்பத்தான் வந்திருக்கேன்….பத்துப் பதினைஞ்சு வருஷமா குத்துக்கல்லு மாதிரி இந்தக் காம்பவுன்ட்டுக்குள்ளயே குதிரை ஓட்டுறாரு….அவுரு ரெக்கமன்ட் பண்ணக் கூடாதா? யாராச்சும் ஒரு செக் ஷன் ஆபீசர் ரெக்கமன்டேஷன் இல்லாம கதையாகாது….அதுதான் ப்ரொசீஜர்…..முதல்ல ஜெகந்நாதனச் சரி பண்ணுங்க…..

சொல்லி அனுப்பியதுதான். இன்றோடு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. என்ன காரணத்துக்காக அந்த ஆள் வரவில்லை என்று தெரியவில்லை. அந்த ஜே.இ., ஜெகந்நாதனும் ஒரு வார்த்தை பேசவில்லை இவரிடம்.

என்னவோ ரகசியங்கள் இருப்பது போல் உள்ளது இந்த அலுவலகத்தில். எழுத்தர்கள் ரொம்பவும் பவ்யமாய் நடந்து கொள்வதுபோல் தெரிகிறார்கள். இருக்கும் ஏ.இ., ஜே.இ., க்களும் பணிவாய்த்தான் இருக்கிறார்கள். அலுவலக சூப்பிரன்டென்டென்ட் என்ற மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அந்த மரியாதையில் என்னவோ மறைந்திருக்கிறது. ஏதோவொரு கள்ளத்தனம்.

வெளிப்படையாய்ப் பேசாத்தனம். பேச முடியாத் தன்மை. ஒவ்வொருவர் மனதிலும் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அட, இந்தக் க்ளார்க்குப் பசங்களும் கூடவா இப்படி இருப்பார்கள்? பதினோரு மணிக்கு டீ சாப்பிடக் கிளம்பும் போது அவர்களோடு கை கோர்த்துக் கொண்டல்லவா அலைகிறார்கள்? ஒரு நாள் கூட என்னைச் சேர்த்துக் கொண்டதில்லையே?

நானும் வரலாமா? என்றார் ஒரு நாள். போகவும் செய்தார். ஆனால் ஒட்டவில்லை. அவர்களின் பேச்சு ஜாடையாய் இருந்தது. கூட நடக்கும் இவரைப் பொருட்படுத்தாமல் அவர்களாக என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். புரிந்தும் புரியாததுமாய் இவரும் சிரித்துக் கொண்டார். அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை. அன்று எல்லோருக்கும் சேர்த்து இவரைக் காசு கொடுக்கச் செய்து விட்டார்கள். பத்து டிக்கெட்டுக்குக் குறையாது. ஒரு நாளுக்கு நூறு வரை செலவு செய்ய யாரிடம் இருக்கு ஐவேஜு…! கொடுக்கல் வாங்கல் இருக்கும் அவர்களுக்குச் சரி….தான் அப்படி இருக்க முடியுமா? விலகிக் கொண்டார். மறுநாளிலிருந்து போவதை நிறுத்திக் கொண்டார். பியூனைக் கொண்டு ப்ளாஸ்க்கில் வாங்கி வரச்சொன்னார்.

பெண் பணியாளர்களோடு சேர்த்து நாலஞ்சு டீ தேவைப்பட்டது. பியூன் ரெங்கசாமி ஒரு டீக் காசை ஆட்டை போடுவான் என்றார்கள்.

என்னய்யா இது கொஞ்சமா ஊத்திட்டு வர்றே…முக்கா டம்ளராவது கொடுக்க வாணாம்? என்று சத்தம் போட்டார். அதிலிருந்து அவருக்கு மட்டும் அப்படி வந்தது. மற்றவர்கள் கொடுத்ததைக் குடித்தார்கள். அவ்வளவுதான் சார்…அவன்ட்டப் போயி என்னத்தச் சண்டை போடச் சொல்றீங்க…? என்றார்கள். வெளியே பெஞ்சில் அமர்ந்து கொண்டு முக்க முழுங்க முழு டம்ளரில் டீ குடித்தான் அவன்.

ஆபீசே என்ன இத்தனை பீத்தலாய் இருக்கிறது? என்று தோன்றியது இவருக்கு. படு சல்லிப் பயல்களாய் இருப்பார்கள் போலிருக்கிறதே…

காலைல ஆபீசுக்கு வந்திட்டு சாயங்காலம் வீடு திரும்பைல பையில அம்பது நூறு இல்லாமப் போக மாட்டான் சார் அந்த ரெங்கசாமி….வாட்ச்மேன் சரவணனின் கூற்று இது. செகன்ட் ஷிப்ட் காவலன் அவன்.

முன்னே விரிந்திருந்த அந்தக் கோப்பைப் புரட்டலானார் ராகவாச்சாரி. முழுக்க முழுக்கப் பிணை வைப்புப் பத்திரங்களை விடுவிப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் அடங்கிய கோப்பாக இருந்தது அது. வந்திருக்கும் விண்ணப்பங்களில் எது எது டிஸ்போஸ் செய்யப்பட்டது எது எது இன்னும் பென்டிங் என்பதே தெரியவில்லை. ஒரே கலவையாய்க் கிடந்தது. இடையிடையில் சம்பந்தமில்லாத வேறு பொருள் கொண்ட கடிதங்களும் இடைச் செருகல்களாகக் இணைந்திருந்தன. அவையெல்லாம் எதற்கு இதில் வந்தன? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். இதென்ன மிஸ்ஸலேனியஸ் ஃபைலா? என்று கோபம் வந்தது. அன்று பூராவும் பார்த்தாலும் அந்த ஒரு கோப்புக்கான அலசல் தீராது என்று தோன்றியது. அந்தக் கோப்பு அப்படிக் கலவையாய் இருப்பதுதான் பாதுகாப்பு என்ற கவனம் இருக்குமோ? யாரும் எதுவும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு கோப்பு கலவையாய் இருப்பதுதான் சேஃப்டி…! ஆஉறா…என்ன ஒரு கண்டுபிடிப்பு? தப்புச் செய்பவர்களுக்குத்தானே இதெல்லாம் தோன்றும்? தன் சர்வீசில் எத்தனை பார்த்திருக்கிறார் அவர்!

ஆனால் ஒன்று மட்டும் வித்தியாசமாய் இருந்தது. அதுதான் அது. ஒரே முகவரியில் வெவ்வேறு பெயர்களிலான விண்ணப்பங்கள். கீழே கையெழுத்து மட்டும் ஒரே ஆள்.

இதெல்லாம் அவரோட ஆட்கள் சார்….பத்திரம் பூராம் அவர் வாங்கிக் கொடுக்கிறதுதான்…தன் பேர்லயே எல்லாத்தையும் தர முடியாதுல்ல…அவரோட அசிஸ்டன்ட்கள் வேலை செய்வாங்க….கொடுத்திரலாம்…ஒண்ணும் பயமில்லே…..

நீங்க எதுக்குத்தான்யா பயந்தீங்க…?

வருஷா வருஷம் இப்டித்தான் சார்….சென்னைக்குப் போயி அங்கேயே ஆர்டரை வாங்கிட்டு வந்திடுவாங்க…நாம ஒண்ணும் செய்றதுக்கில்லே….சரி சரின்னு வாங்கி வச்சிக்கிட வேண்டிதான்…கேட்டாத் திருப்பிக் கொடுக்க வேண்டிதான்…

எல்லாம் சரி…என்னவோ இருந்து விட்டுப் போகட்டும்…குறைந்த பட்சம் அந்தந்த ஆட்கள் வந்தாவது ஒரு கையெழுத்துப் போடலாமில்லையா….

அதெல்லாம் வரமாட்டாங்க சார்…எல்லாம் வெவ்வேறு ஊர்ல இருப்பாங்க…ரெண்டு பேர் துபாய்ல இருப்பாங்க…இன்னும் ரெண்டு பேர் சிங்கப் பூர் போயிருப்பாங்க…இல்லன்னா ஏதாச்சும் டூர்ல இருக்காங்கன்னுவாரு…என்ன பண்ணச் சொல்றீங்க…?

அதுக்காக…?

அதுக்காகன்னா அப்டித்தான்….எல்லாக் கையெழுத்தையும் இவரே போட்ருவாரு…..

பதறிப் போனார் வரதாச்சாரி. பதிவேட்டைப் பக்கம் பக்கமாய்ப் புரட்டினார். எல்லாம் அந்தந்தப் பெயரை அப்படி அப்படியே எழுதினாற்போல இருந்தது. வலது கையிலும், இடது கையிலுமாக மாறி மாறிப் போட்டிருப்பானோ அந்த ஆள். அப்படித்தான் தோன்றியது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே…அந்த ஆள்தான் வர வேண்டும் என்று என்ன இருக்கிறது? என்ன ஒரு கூட்டு சதி….கூட்டு சதியா, கூட்டுக் கொள்ளையா?

இது நாள்வரை வெளியூரில் நிர்வாகப் பிரிவில் இருந்து கழித்து விட்டு வந்த இவருக்கு இந்தக் கொடுமை பெருங் கொடுமையாய்த் தோன்றியது. ஒரு கணம் ஏனடா உள்ளுர் வந்தோம் என்று உடம்பு ஆடிப் போனது. ஒன்றும் அதற்கு மேல் ஓடவில்லை. கிடக்கட்டும் என்று அப்படியே தூக்கித் தள்ளி வைத்தவர்தான்.

சார்…நாளைக்குப் பார்ட்டி வந்துரும்….

வரட்டுமேன்யா…வந்தா என்ன…தலையையா சீவிடுவாங்க…எல்லாம் எனக்குத் தெரியும்…நீ உன் வேலையைப் பாரு - கத்தினார். சத்தம் பெரிதாய் இருப்பதைக் கண்டு பதறிப் போய் ஒதுங்கி விட்டான் அந்தோணி.

தற்குப் பின் அவரும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்றிருந்தார். இதோ, இன்று, இப்பொழுது, அவர் முன்னால் அந்தக் கோப்பு.?

அட, ராமச்சந்திரா…..இந்த விடுமுறை நாளிலும் இதுதான் கண்ணில்பட்டு உபத்திரவம் செய்ய வேண்டுமா? எரிச்சல் வந்தது. அன்று போல் இன்றும் எந்தச் சலனமும் இல்லாமல் அதைத் தள்ளி வைத்தார். வேறு ஒரு கோப்பினை எடுத்தார். உறாய்யாச் சாய்ந்து கொண்டு மைன்ட் ஃப்ரீயாகப் பார்க்கத் தொடங்கினார். லீவு நாளில் வந்து வேலை பார்த்தால் டென்ஷன் இல்லாமல் பார்க்க வேண்டாமோ? அன்றைக்குமா பிக்கலும், பிடுங்கலும்….?

வேலையையெல்லாம் முடித்து விட்டுக் கிளம்பிய பொழுது மணி ஏழு ஆகி விட்டது.

இன்றைக்குமா இந்தப் பாடு? என்று கண்டிப்பாகச் சலித்துக் கொள்வாள் அபிதா. பல சமயங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பது ரொம்பவும் வசதியாகப் போய்விடுகிறது. இங்கிருக்கும் நிலைமை அவளுக்குப் புரிவதில்லை. சொன்னாலும் அலட்சியம். ஊர் உலகத்துல வேறே ஆபீஸே இயங்கலியா? உங்க ஆபீஸ் மட்டும்தான் இப்டியா? அதிசயமாத்தான் இருக்கு…என்று அர்த்தம் பொருத்தம் இல்லாமல் எதையேனும் பேசுவாள். அவள் சலிப்பு, சொல்லித் தீருவது. இல்லையென்றால் அது ஆதங்கமாக மாறிவிடும் அபாயம் உண்டு. எனவே புலம்புவதைப் புலம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார். கொஞ்ச நேரத்தில் எல்லாமும் சமனுக்கு வரும். பிறகு வழக்கமான இயக்கம்.

எந்தக் குடும்பத்திலுமே பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே போவதனால்தானே சண்டை வளர்கிறது. அன்றாட வேலையைப் போலவே இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தானே எழும்பி தானே அடங்கிக் காணாமல் போய் விடுமே…! இது குடும்ப சைக்காலஜி. எத்தனை பேருக்குத் தெரிகிறது இந்தத் தாத்பரியம். எல்லாம் நான் பெரிசா, நீ பெரிசா என்கிற கதைதான். பாதிக் குடும்பங்கள் நிம்மதியற்று அலைவது இந்தக் காரணத்தினால்தான்.

உலகத்திலே விட்டுக் கொடுத்தலைப் போல நிம்மதியான பாடு வேறு ஒன்றுமில்லை. சில நஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நஷ்டம் என்று மனது கணக்குப் பண்ணினால்தானே அந்தத் தாக்கம். எல்லாமும் பூஜ்யம் என்கிற உணர்வு வந்து விட்டால் மனதுக்கு எந்த ஏற்ற இறக்கமும் தோன்றாது.

நமது பாட்டனார், முப்பாட்டனார் எப்படி வாழ்ந்தார்கள் என்று நமக்குத் தெரியுமா? அவர்கள் தம்பதி சமேதராய் சந்தோஷ போஷகர்களாய்த்தான் வாழ்ந்து மறைந்தார்கள் என்று அறிய ஆதாரங்கள் உண்டா? நம் தாயாரிடம் கேட்டாலே தன் தந்தையைப் பற்றி, அதாவது நம் தாத்தாவைப் பற்றிச் சொல்வார்கள். தாத்தாவுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்டால் சொல்லத் தெரியுமா? அப்பப்போ ஏதோ பார்த்திருக்கேன் என்பார்கள். நமக்கு முந்திய மூன்று தலைமுறையைப் பற்றியே நம்மால் சொல்ல முடியவில்லை. எதை நிர்ணயித்து என்ன ஆகப் போகிறது?

மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அதாவது அந்த ஒரு வார்த்தையைத் தவிர எல்லாமும் இந்த உலகத்தில் மாறுதலுக்குரியது. காலத்தால் அழிந்து போகக் கூடியது. மறந்து மண்ணடிச்சுப் போவதானது. இதில் வாழும் காலத்தை எத்தனை பேர் நரகமாக்கிக் கொண்டு திரிகிறார்கள்?

சலனமின்றி ஓடும் நதியை நடுவே இறங்கி வெட்டியாய் கலக்கிக், கெடுத்துக் கொண்டுதான் நான் குளிப்பேன் என்றால் யார் தடுக்க முடியும்? எல்லாமும் நம் கையில்தான் இருக்கிறது. இருப்பது போதும், இது இப்படியே நிம்மதியாய் ஓடினால் சரி என்று விட்டு விட்டால் அவனுக்கு நிம்மதி. அல்லாமல் ஸ்வாரஸ்யமே இல்லையே என்று தேவையில்லாமல் பொருத்தமில்லாமல் ஒன்றுக்குள் நுழைந்தால் அது விபரீதம்தான்.

மனிதன் தன் இயல்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். தனக்கு எது பொருந்தும் என்று ஒருவன் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் இயல்பு நிலையிலிருந்து மாறக் கூடாது. அதற்குப் பெயர்தான் ஒரிஜினாலிட்டி. அதுதான் அழகு. எப்படித்தான் ஒருவன் செயற்கையாக நடந்து கொண்டாலும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவனின் ஒரிஜினாலிட்டி அவனைக் காட்டிக் கொடுத்து விடும்.

எனது ஒரிஜினாலிட்டி சதும்ப ஆபீஸ் வேலை பார்ப்பது. அதை நிம்மதியாக்கிக் கொள்வது. வீட்டில் குறையில்லாமல் பொறுப்பாக இயங்குவது. இயன்றவரை இவையிரண்டையும் முழுமையாகச் செய்ய முயல்வது. நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை அனாவசியமாகக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது.

டேயப்பா…! வண்டியில் வரும்போதே என்னவெல்லாம் சிந்தனை. இது ரொம்ப ஆபத்தாயிற்றே…இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த மாதிரிச் சிந்தனைகள், அதுவும் சாலையின் நடுவே…என்ன இது கண்றாவி…ஏன் இப்படி ஆகிப் போனேன். எதற்காக இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும்? இப்போ அப்படி என்ன வந்தது? படு பாவி…ஒரு பர்ஸன்ட்…ஒரு பர்ஸன்ட் என்று சொல்லி என்னையும் சலனப்படுத்தி விட்டானே…நானுமா இந்தச் சபலத்திற்கு ஆட்பட்டுப்போனேன். இத்தனை காலம் வெளியூரில் என் மனதில் தோன்றாத சலனமும், சபலமும் இப்போது ஏன் தோன்றுகிறது? ஏன் என் மனதைப் போட்டு இப்படி அலைக்கழிக்கிறது? வினாச காலே விபரீத புத்தி என்பார்களே…அதுவோ…!

குழப்பத்தோடேயே வீடு போய்ச் சேர்ந்தார் ராகவாச்சாரி. வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்து மின் விசிறியைச் சுழல விட்டு அமர்ந்தவர்தான். வேகமெடுத்தபோது கீச், கீச், கீச் என்று அது கத்த ஆரம்பித்து விட்டது.

மொத்தமா நின்னவுடனே கழற்றிக்கிடுவோம் சார்…கொஞ்ச நாளைக்கு இப்டியே ஓடட்டும்…இப்பத் தொட்டா காயலும் மாத்தணும். செலவு ஜாஸ்தியாகும்… என்று சொல்லிவிட்டுச் சென்ற எலெக்ட்ரீஷியனை நினைத்துக் கொண்டார். அது போடும் சத்தத்தைப் பார்த்தால் தூங்கிக் கொண்டிருக்கும்போது தலையில் விழுந்து விடுமோ என்பது போலிருந்தது. வீட்டுச் செலவுகளையெல்லாம் யோசித்து யோசித்துத்தான் செய்வார் ராகவாச்சாரி. அபிதா சொன்னாளே என்பதற்காக சிரமேற்கொண்டு உடனே எதையும் நிறைவேற்றி விடுவதில்லை. அது அவர் மனதுக்கு நியாயமானதாகத் தோன்ற வேண்டும். தவிர்க்க முடியாத அவசியம்தான் என்று உறுதிப்பட வேண்டும். தேவை என்று ஒன்றை நீட்டித்துக் கொண்டே போனோமானால் பிறகு அதற்கு ஒரு முடிவே இல்லாமற் போய்விடும். அப்படித்தான் கோடுகளை வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் அவர்.

என்னவோ அவர் மனதைப் போட்டு அரித்தது. அலுவலரின் அறைக்குள் சென்று மீண்டிருந்த அந்தக் கோப்பின் ஞாபகம் வந்தது. ஆஉறா…! அது அவர் கேம்ப் ஆபீசுக்கல்லவா சென்று மீண்டது? அந்த அறைக்கு எப்பொழுது சென்றது? யார் அனுப்பினார்கள்? நான் பார்க்கவேயில்லையே? ஒப்பமாகி வந்திருக்கிறதா? இப்பொழுதுதான் என் டேபிளுக்கு வந்திருப்பதுபோல் ஒதுக்கிவிட்டேனே? அப்படியானால் என்ன உத்தரவாகியிருக்கிறது? எடுத்துப் பார்த்திருக்கலாமோ?

தொலைபேசி மணி அடித்தது. இன்று விடுமுறை நாள். ஆனாலும் ஏதேனும் சந்தேகம் கேட்பதற்காக அல்லது நாளைய பணியை நினைவுபடுத்தி உறுதி செய்து கொள்வதற்காக அலுவலர் பேசலாம். இவரிடம் ஒன்றைக் கேட்டுக் கொண்டுதான் பயணத்தைத் தொடருவார். இப்பொழுது வேண்டாம், இன்ன தேதியில் அதைச் செய்து கொள்ளலாம் என்பதான இவரது யோசனைகள் அவருக்கு பக்கபலமாக இருந்தது. அதுதான் ராகசாச்சாரியின் சிறப்பு. ஒரு வேளை அந்தமாதிரியான முதன்மை ஸ்தானம்தான் தன்னை லேசாக ஆட்டிப் பார்க்கிறதோ, ஒரு அதீதமான தைரியத்தைக் கொடுத்து தன்னைச் சிக்கலில் மாட்டிவிட யத்தனிக்கிறதோ?ரொம்பவும் கவனமாக யோசிக்கத் தலைப்பட்டார்.

உறலோ, ராகவாச்சாரி உறியர்…..

நான்தான் எஸ்.இ., பேசறேன்….ச்சாரி சார்.. ….நாளைக்கு நாம என்கொயரிக்காக மணிகண்டம் போறோம்…..தகவல் போயிடுச்சில்லையா?

அனுப்பிச்சு அக்னாலெட்ஜ்மென்ட்டும் வாங்கியாச்சு சார்…அந்த டிரைவர், பியூன், சம்பந்தப்பட்ட செக் ஷன் ஆபீஸர், அந்தப் பார்ட்டி நாலுபேரையும் ரெஸ்ட் உறவுசுக்கு வரச் சொல்லியிருக்கு…

கண்டிப்பா நீங்களும் வரணும்…வேறே யாரையும் அனுப்பிடாதீங்க…ஃபைல் எடுத்திட்டீங்களா…? செபரேட் ரிட்டர்ன் ஸ்டேட்மென்ட்ஸ் ஷூட் பி அப்டெய்ன்ட் ஃப்ரம் த இன்ட்விஜ்வல்ஸ்…ஓ.கே. கீப் இட் கான்ஃபிடன்ஷியல்….காலைல எட்டு மணிக்கு கரெக்டா பஸ் ஸ்டான்ட் வந்திடுங்க…..

தொலைபேசி லைன் துண்டிக்கப்பட்டது.

எங்கே தான் வராமல் போய்விடுவோமோ என்று எதையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று பேசிவிட்டு ஃபோனை வைத்துவிட்டதும், எல்கைதாண்டிப் போகிற ஊர் என்பதனால் ஜீப்பைத் தொடாமல் பேருந்து நிலையத்திற்கு வரச் சொல்வதும், எல்லாவற்றிற்கும் மேலாக கண்டிப்பின் அடையாளமாகப் பயன்படுத்தும் சொல்லாக சார் போட்டுப் பேசுவதையும், துல்லியமாய் உணர்ந்து கொண்டார் ராகவாச்சாரி. அக்கடா என்று இருப்போம் என்று நினைத்து உள்ளுர் வந்தால், அங்குதான் எல்லாமும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது. கஷ்டப்படுபவன் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? அவனுக்கு விடிவு என்பதே கிடையாதா? ஆனாலும் ஒரு விஷயம் தன்னைச் சார்ந்து இருப்பதில்தான் என்னவொரு திருப்தி, நிறைவு?

உடனடியாக எழுந்து முகம் கைகால் கழுவிக் கொண்டு அபிதா தந்த அற்புதமான காபியைக் குடித்து விட்டு அந்தக் குறிப்பிட்ட கோப்பினை எடுத்து வைத்துக் கொண்டு அதில் மூழ்கிப் போனார் ராகவாச்சாரி. மனதுக்குள் மொத்தப் படமும் உருவாக வேண்டும் அவருக்கு. எங்கெங்கு எடிட் செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் அதில் தலையிடுவது அவருக்குப் பிடிக்காது. இவர் எழுதி அனுப்பிய கோப்பிலே அலுவலரே கை வைப்பது ஆகாது. அத்தனை துல்லியமாக இருக்க வேண்டும் அவருக்கு. என் கடன் பணி செய்து கிடப்பதே…! மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்குள் இந்த மனிதனின் கடமையாற்றல் சொல்லி மாளாது. ஆத்ம திருப்தி என்று சொல்வார்களே…அது இன்று தேய்ந்து போன சொல் வழக்கு. ஆனால் அதற்காக மட்டுமே இத்தனை ஆண்டு காலம் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போனவர் இந்த ராகவாச்சாரி.

றுநாள் அந்த ஓய்வு விடுதியில் வைத்து விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் அந்தத் தொலைபேசி வந்தது அவருக்கு. சட்டைப் பையிலிருந்து எடுத்து இரண்டு முறை அணைத்தும், மறுபடியும் மறுபடியும் ரிங் வருவதைக் கண்டு என்னவோ அவசரம் என்று உணர்ந்தவராக அறைக்குள் பேசுவது முறையல்ல என்று எழுந்து “சாரி சார்…“ என்று விட்டு சுற்றுப்புறத் தோட்டப் பகுதிக்குள் நுழைந்தார் ராகவாச்சாரி. அந்த இடிச் செய்தி வந்து இறங்கியது அவர் காதில்.

சார்….நா சரவணன் வாட்ச்மேன் பேசறேன்….நம்ம ஆபீஸ்ல விஜிலன்ஸ் ரெய்டு வந்திருக்காங்க சார்….

என்னய்யா சொல்ற…? பதறிப்போய்க் கேட்டார் ராகவாச்சாரி.

ஆமா சார்…கரெக்டா காலைல பத்தரைக்கு நுழைஞ்சிட்டாங்க…வாசக் கதவைச் சாத்திட்டு யாரும் உள்ளே வராதபடிக்கு ஆரம்பிச்சிட்டாங்க சார்….டிராப்டிங் ஆபீசர் மேகநாதன் மாட்டிக்கிட்டார் சார்….அந்தோணி சார் செக் ஷன் பைலில் ஏதோவொண்ணை எடுத்து ஆர்டர் கொடுக்கைல பிரச்னை ஆகியிருக்கு சார்….வழக்கமா வருமே ஒரு பார்ட்டி அந்தாள்தான் சார். எதுத்தாப்ல உட்கார்ந்திருந்தாரு…அந்தோணி சார் இன்னைக்கு வரலை…கேம்ப் முடிச்சிட்டு இன்னைக்கு ஆபீஸ் வராதீங்க…அப்டியே வீட்டுக்குப் போயிடுங்க சார்…யாருக்கும் சொல்லிக்கிட வேணாம்…இது நா உங்களுக்கு மட்டும் பேசுறது…..வச்சிடறேன்….நா பேசினேன்னு தெரிய வேணாம்…

விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தார் ராகவாச்சாரி. எந்தக் கோப்பு அலுவலரின் அறைக்குள் சென்று மீண்டிருக்கிறதோ அதில்தான் பிரச்னையாகியிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. அது, தான் பார்த்து ஒப்பமிடாமல் போய் மீண்டது. கை வைத்தால் பிரச்னை வரும் என்று தெரிந்துதான் ஒத்திப்போட்டது. ஆனால் தன் பார்வைக்கு வராமல் நேரடியாக எல்லாமும் நடந்திருக்கிறது. போகட்டும்…யாருக்கென்ன? வினை விதைத்தால் அதைத்தான் அறுத்தாக வேண்டும். ஆனால் ஒன்று! உள்ளே விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் அவரும் ஒரு வார்த்தை தன்னிடம் கூறவில்லையே! என்ன ஒரு அழுத்தம்? அப்படியானால் என்ன பொருள்? திறமையானவன் தனக்கு வேண்டும். தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவனின் உழைப்பும் வேண்டும். தனக்குப் பக்கபலமான அவனை விட்டுவிடத் தயாரில்லை. அதே சமயம் இன்னொரு பக்கமான அந்தப் பேராசையும் வேண்டும். தான் இதில் தலையைக் கொடுக்க விரும்பவில்லை என்று உணர்ந்துதான் இதைப்பற்றித் தன்னிடம் பேசவேயில்லையோ? ஒரு மாதமாக அடிக்கடி வந்து போகும் அந்த ஆள் இப்படித்தான் காரியத்தை முடித்துக் கொண்டிருக்கிறானா? இத்தனை விபரீத முடிவுக்கு ஏன் போனான்? இந்த மேகநாதன் ஏன் அதில் தலையிட்டார்? அப்படியானால் மேகநாதனுக்கும் பாஸுக்கும் இடையில் என்ன நடந்தது? பிரிவு எழுத்தர் அந்தோணி ஏன் கழற்றி விடப்பட்டான்? கழற்றி விடப்பட்டானா அல்லது எதுக்கு வம்பு என்று நேக்காக ஒதுங்கி விட்டானா? அவன் எம்டன் ஆச்சே…இம்மாதிரி விஷயங்களில். இந்த உலகில் எப்படி வாழ்வது என்பதை விட எப்படித் தப்பிப்பது என்பதைத்தான் முதலில் கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டுமோ? யோசனைகள் நீண்டு கொண்டே போனது ராகவாச்சாரிக்கு.

ஆயிரத்தைந்நூறு ரூபாய் என்று அன்றொரு நாள் அந்தப் பார்ட்டி ஒரு பர்ஸன்ட் ஆசை காட்டியதையும், அந்தக் கணத்தில் தன் மனது லேசாகச் ஆடிப் போனதையும், இப்போது நினைத்த போது, மெல்லிய நடுக்கம் பரவியது அவர் உடம்பில்.

கூடவே தனது பணி ஓய்வு வெகு பக்கத்தில் என்ற எண்ணம் வந்தபோது ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காத கதையாய் இதுகாலம் வரையிலான நேர்மையும், கண்ணியமும், கடமை தவறா நற்பெயரும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்த நிச்சலனமான வாழ்க்கையை அனாவசியமாய் அல்ப சபலத்திற்கு ஆட்பட்டு மொத்தமாய்க் கெடுத்துக் கொண்டு நிற்கக் கூடாது என்ற சுதாரிப்பு அந்தக் கணத்தில் அவர் மனதில் பிரதிக்ஞையாய் மாறி அவரை மிகத் தெளிந்த மனநிலைக்குத் தள்ளியது. --------------------------------