10 ஜூன் 2012

“மொழி விளையாட்டு” சிறுகதை

 

எனக்கு இங்கிலீஷ் வரவில்லை என்றுதான் என்னை மாற்றினார் கிருஷ்ணசாமி. சற்று அவசரப்பட்டுவிட்டார். மொழிக்கு அவர் இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கத் தேவையில்லைதான். ஒருவரை இடம் மாற்றும் அளவுக்குச் சென்றிருக்க வேண்டாம் என்பதுதான். மற்றப்படி அவரின் எதிர்பார்ப்பில் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. ஆனால் அதை அலுவலகத்தில் உள்ள மற்ற எல்லோரும் பூர்த்தி செய்கிறார்களா என்பது கேள்விக்குறி. அப்புறம் எப்படி நான் மட்டும் பாதிக்கப்படலாம்? சர்வீசுக்குப் புதியவன் என்றால் எதுவும் செய்து விடலாமா? இப்பத்தான வேலைக்கே வந்திருக்கோம் என்று நானும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அவரின் எதிர்பார்ப்பை மற்ற எல்லோராலும் நிச்சயமாகப் பூர்த்தி செய்ய முடியாது என்கிற தீர்மானத்தில்தான் நான் இதைச் சொல்கிறேன். அப்படியான ஒரு அதீத எதிர்பார்ப்பு அவரிடம் இருந்ததா என்பதேயும் எனக்குச் சந்தேகத்தைத் தந்தது. ஏனெனில் அவரின் ஆங்கிலம் ஒன்றும் அத்தனை உயர்தரமானதாய் இருக்கவில்லை என்கிற எனது கண்டு பிடிப்புத்தான்.

ஒண்ணுமில்லாம, பொட்லர் இங்கிலீஷை வச்சு ஓட்டியிருக்கான்யா இந்த ஆளு… என்று பிற்பாடு நினைத்தேன்.

உனக்குத்தான் இங்கிலீஷே வரவில்லையே, நீ எப்படி அவரின் மொழியின் தரத்தை நிர்ணயித்தாய் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அன்றைய நிலையில் எனக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கான தீவிர முயற்சியில் நான் இருந்தேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இலக்கியத்தில் எது நல்ல படைப்பு என்று அடையாளம் கண்டு சொல்பவர்களெல்லாம் நல்ல படைப்பாளியாய் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல விமர்சகர்களாய் இருந்தவர்களெல்லாம் மிகச் சிறந்த சிறுகதைகளையும், நாவல்களையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் படைத்தவர்கள் அல்லவே…! அவர்கள் விமர்சகர்கள். நிறைய வாசித்து, வாசித்து, பரந்த, பழுத்த வாசிப்பனுபவத்தின் வாயிலாக விமர்சகர்களாய் உருவெடுத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் தரமான விமர்சனங்களின் மூலமாய்த் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்தானே…? அதுபோல்தான் நான் சொல்வதும் என்று கொள்ளுங்கள்.

அந்த அந்நிய மொழியின்பாலான எனது தீவிர முயற்சி என்னை அந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது. ஆங்கிலம் நம் மண் சார்ந்த மொழி அல்ல. காலனி ஆட்சியாளர்களால் அது நமக்குக் கற்றுத் தரப்பட்ட மொழி. அவர்களுக்கு நாம் தொண்டூழியம் செய்யும் பொருட்டு அவர்களால் நம்மிடையே திணிக்கப்பட்ட மொழி. அந்த மொழியைத் தீவிரமாகக் கற்றுக் கொண்டு அவர்களையும் மீறினார்கள் நம்மவர்கள். அதிகாரத்தைப் பறைசாற்றும் தொனியிலான மொழியாக அது உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டது. இன்றளவும் அது செலுத்திவரும் போலி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு நாம் அம்மொழியை ஆசையாய் அரவணைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மிடையே இருப்பவர்களையே அதைப் பயன்படுத்தி பயமுறுத்துகிறோம். விலகி ஓடச் செய்கிறோம். எட்டி நின்று பணியச் செய்கிறோம். இது என் குரு சொல்லித் தந்தது. என் நெஞ்சில் ஒளிரும் சுடர் அவர்.

வெறும் மொழி, பரஸ்பரம் இருவருக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்ள அல்லது சாதாரண உரையாடல்களை மேற்கொள்ள உதவும் காரணி இந்த அளவுக்கான அதிகாரத்தைச் செலுத்தலாமா? இன்று நம்மிடையே உள்ள பலரும் இதனால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் நாம் அதை வெளியில் சொல்லாமல், மனதுக்குள் போட்டுப் பூட்டி வைத்துக் கொண்டும், கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டும் கேவலமாய்க் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோமே…அது சரியா?

கிருஷ்ணசாமி இப்படித்தான் என்னை விரட்டியிருக்கிறார் என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. அரசு அலுவலகங்களில் வேலை பார்க்க மொத்தமே இருநூறோ முன்னூறோ ஆங்கில வார்த்தைகள் தெரிந்தால் போதும். திருப்பித் திருப்பி அதிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும் நீங்கள் எழுதும் வரைவுகள். அதை ஆங்கிலத்தில் டிராஃப்ட் என்று பெருமையாய்க் கூறிக் கொள்வார்கள் அவர்கள். ரெண்டு வரி டிராஃப்ட் எழுதத் தெரியாதுய்யா அவனுக்கு…என்று கமென்ட் அடிப்பார்கள். சொல்பவருக்கே தெரிந்தது அந்த ரெண்டு வரியாகத்தான் இருக்கும். அதை நீங்கள் அரைத்த மாவையே அரைக்கும்போது உங்கள் மனதில் தவிர்க்க இயலாமல் படிந்து போகும். ஒரே மாதிரிப் படித்துப் படித்து அலுத்துச் சலித்து நீங்களும் செக்கு மாடாகி விடுவீர்கள் என்பதுதான் நிஜம். வழக்கத்தில் இல்லாத வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நீங்கள் எழுதினீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஒன்று உங்கள் கோப்பு மேலாளருக்குப் போகும்போது அவர் திருத்தி விடுவார், அப்படியும் தப்பினால் அலுவலர் கட்டாயம் கை வைப்பார். பெரும்பாலும் தப்பாது என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.

இதென்னய்யா புது வார்த்தையா இருக்கு…? இதெல்லாம் வாணாம், வழக்கம் போல எழுதினாப் போதும்…வித் ரெஃபரென்ஸ் டு யுவர் லெட்டர்னே போடுங்க…அப்ரபோஸ், கிப்ரபோஸ் இதெல்லாம் வேண்டாம்….என்று பெருமாள் கோவில் பட்டையாய் அடித்து வழக்கமான வார்த்தைகளைக் கிறுக்கி விடுவார்கள். ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன். சொல்லக் கூட மாட்டார்கள். சொன்னால்தானே கேள்வி. கேள்வியென்ன கேள்வி? அதெல்லாம் ஒன்றும் கேட்க முடியாது. மீறிக் கேட்டால் நீங்கள் எழுதியதையே கிழித்துப் போட்டுவிட்டு வேறு எழுதி அனுப்பி விடுவார். உங்கள் மீது அம்புட்டுப் பிரியம் அவருக்கு.

அரைகுறைகள்தான் ஆடுவார்கள் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். நிறை குடம் தளும்பாது. முதுமொழி. யாரும் இங்கே நிறைகுடமில்லை. அப்படி பாவித்துக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே உயரத்தில் உட்கார்த்திக் கொள்வார்கள். குட்டி அரைகுறைகள் பெரிய அரைகுறையை வேண்டி நிற்கும்.

நிர்வாகத்தில் மனிதனின் சொந்த குணங்கள், வக்கிரங்கள் என்று புகுந்ததோ அன்றுதானே அது கெட ஆரம்பித்தது. அப்படிப் படிப்படியாய்க் கெட்டவைகளில் இதுவும் ஒன்று.

இருக்கிற பாஷை போதும், புதுசா ஒண்ணும் நுழைக்க வேண்டாம் என்பதுதான். அப்படி ஏதாச்சும் எழுதுபவனை முதலில் பிடிக்காது.

நம்மை விடக் கூட இங்கிலீஷ் தெரியும் போல்ருக்கே இவனுக்கு…சரியில்லையே…கட் பண்ணனுமே…என்றுதான் சிந்தனை போகும். அத்தனை பரந்த எண்ணம். அதன் பிரதிபலிப்பாய்த்தான் அடித்தல், திருத்தல். ஏறக்குறைய உங்கள் மூஞ்சியிலேயே குறுக்காகக் கோடு இழுத்தால் எப்படியிருக்கும்? அப்படி நினைத்துக் கொள்ளுங்களேன். அப்பொழுதுதான் நான் சொல்வதனுடைய முழுமையான பாதிப்பை உணர முடியும். உங்களுக்கு அதிகம் தெரியும் என்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி நீங்கள் வெளிப்படுத்த முனைந்தால், ஏதாச்சும் செய்து உங்களை மட்டம் தட்டப் பார்ப்பார்கள். அய்யோடா, அப்பாடா என்று உட்காருவதுவரை விடமாட்டார்கள். பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? எக்கேடும் கெட்டு ஒழியுங்கள் என்று வழக்கம் போல் அவர்களைப் போலவே எழுதிக் கிழிக்க ஆரம்பித்து விடுவீர்கள். கழுதையைப் பார்த்திருக்கிறீர்களா? நின்ற இடத்திலேயே மணிக்கணக்காய் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும். எதற்காக நிற்கிறது? என்ன செய்யப் போகிறது? என்று எதுவும் தெரியாது. நாமும் அப்படியே ஆகிவிடுவோம். இன்னும் பச்சையாய்ச் சொல்வோமா? எருமை மாட்டு மேலே மழை பேய்ஞ்சாப் போலே என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த கிளார்க்குகளையே பிரிவின் கோப்புகளை எடுத்து முதலில் ரிமைன்டர் போடக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான். நன்றாக நீங்கள் வேலை பழகின பிறகும் அதைத்தான் விருப்பமாகச் செய்து நிறைய வேலை செய்துள்ளதாய்க் காண்பிப்பீர்கள் என்பது வேறு விஷயம். அப்படி நினைவூட்டாய்ப் போட்டுத் தள்ளிய ஒரு கிளார்க்தான் மாநிலத்திலேயே பெஸ்ட், ஃபர்ஸ்ட், சின்சியர், என்றெல்லாம் சர்டிஃபிகேட் கொடுத்து தமிழ்நாட்டின் எல்லா ஆபீஸ்களுக்கும் சர்குலர் அனுப்பினார் இந்தக் கிருஷ்ணசாமி. நாங்களெல்லாம் மனதுக்குள் சிரித்துக் கொண்டோம். அவரின் கணிப்பில் அந்த அவர்தான் நல்ல பணியாளர். கஷ்டமான கோப்புகளை முதலில் கையிலெடுத்து அதை முழுக்கப் படித்து, புத்திசாலித்தனமாய் டிஸ்போஸல் கொடுப்பது என்பதெல்லாம் உங்கள் சொந்த விருப்பம் சார்ந்தது. நீங்களாக மெனக்கெட்டுக் கொண்டால் மெனக்கெட்டுக்க வேண்டியதுதான். யாரும் உங்களுக்கு மாலை போட மாட்டார்கள். இங்கே ரிமைன்டர் போடுபவன்தான் நல்ல வேலையாள். அதுக்கு ஒரு டெய்லி வேஜஸ் ஆள் போதும் என்பேன் நான்.

இப்படியாகத்தான் முதலில் இரண்டு வரி நினைவூட்டிலிருந்து பழகட்டும் என்பதாக ஆரம்பிக்கும் பணிகள். அதையே பலரும் அவரவர் பிரிவுக்கு என்று ரோனியோ உருட்டி வைத்திருப்பார்கள்.வேலையை எளிதாக்குகிறார்களாம். அங்கும் இங்குமாக மையைத் தீற்றிக் கொண்டு நிறைய ரெடிமேட் வாசகங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதான் ஸார்…ஸ்டென்சில் கட் பண்றது…காப்பி எடுக்கிறது….

அதக் காப்பி எடுக்க அந்தப் பியூன் என்ன கிராக்கி பண்ணிப்பான்னு நினைக்கிறீங்க…இத்தனைக்கும் சீனியர் பியூனுக்கு இந்த வேலைக்காகவே ஸ்பெஷல் பே வேறே. அதையும் வாங்கிக்கிட்டு அவன் சடைக்கிற சடைப்பைப் பார்த்தீங்கன்னா…? இப்டியே மேலேருந்து கீழவரைக்கும் அத்தனையையும் கெடுத்துட்டாங்ஞ சார்….

அப்படி ரெடி லெட்டர்கள் வைத்திருப்பவர்கள் பலர் உயர் அலுவலருக்கு, கீழுள்ள அதிகாரிக்கு என்று வித்தியாசமில்லாமல் மரியாதை நோக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கும் கூத்தெல்லாம் நிறைய நடக்கும். மேலாளரும் பார்க்காமல், அலுவலரும் பார்க்காமல் மொட்டைக் கையெழுத்துப் போட்டு அனுப்ப அது கேள்விக்குறியோடு பல சமயங்களில் வந்து நிற்கும்.

ஏன்யா இப்டிக் கழுத்தறுக்கிறீங்க…பேசாமத் தமிழ்ல எழுதிட்டுப் போக வேண்டிதானய்யா…தாய் பாஷைதான் இருக்குல்ல…என்று தலையில் அடித்துக் கொள்வார். தமிழும் சரியாக வராது என்பதுதான் சத்தியமான உண்மை.

சார்…ஒரு சந்தேகம்….

என்ன…?

ஆய்வு அறிக்கைங்கிறதுல…சின்ன ரியா பெரிய றியா….?

அதென்ன சின்ன ரி பெரிய றி…? ரெட்டைக் கொம்பா, ஒத்தக் கொம்பான்னு கேட்கத் தெரியாதா? ரெட்டைக் கொம்பு றி போடுய்யா….இங்கிலீஷ்தான் வராதுன்னா தமிழுமா வராது….கஷ்டம்யா….உங்களோட…என்னவோ ரெட்டைக் கொம்பும், ஒத்தைக் கொம்பும் சரியான பிரயோகம் என்பதைப் போல இவர் சடைக்கிற சடைப்பு?

ஒழுங்காய் மரியாதையாய் வல்லினமா, மெல்லினமா, இடையினமா என்று எவனுக்கும் கேட்கத் தெரியாது. சின்ன ரி, பெரிய றி, ரெண்டு சுழி ன மூணு சுழி ண என்றுதான் பேசுவார்கள். அத்தனையையும் கேட்டுவிட்டு கடைசியில் தப்பாகவும் எழுதுவார்கள்..

ஆயிரம் ஓட்டை உடைசல்கள் இருக்கலாம். ஆனால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்க முடியாது.

அப்டித்தான்யா, விடு…பாதகமில்லாம வேல நடக்குதா…அவ்வளவுதான்….காலம் இப்படித்தான் படிப்படியாக மாறி நின்று விட்டது. வேறு என்னதான் செய்வது? எத்தனை நாளுக்குத்தான் வருஷக்கணக்காய்த் திருத்திக் கொண்டிருப்பது? இஸ், வாஸ், உறாஸ், உறாட், உறாவ் என்று ஓய்ந்துதான் போவீர்கள்.

க்ராமருக்கு முப்பது மார்க் இருக்கு. சொளையா வாங்கிரணும்….என்று எக்ஸாமினேஷன் உறாலில் யாரும் பார்க்காமல் அருகே வந்து காதைத் திருகுவார் வாத்தியார் கிருஷ்ணசாமி. ராமன் மரத்தை வெட்டினான். மரம் ராமனால் வெட்டப்பட்டது. ஆக்டிவ் வாய்ஸ், பாசிவ் வாய்ஸ் சொல்லித் தந்தது அவர்தான். தொடையில் வாங்கிய கிள்ளு இன்னும் ஞாபகமிருக்கிறது. அந்தக் கிருஷ்ணசாமி தியாகி. கருணையின் வடிவம். கடவுளுக்கு நிகர். அவர் அன்று போட்ட விதைதான் இன்று எனக்குப் பச்சென்று பிடித்துக் கொண்டது. சட்டென்று தேறி விட்டேனே…எனக்கே ஆச்சரியமான ஆச்சரியம். பள்ளி இறுதிக்குப் பின்னால் அதைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நான் செய்த இமாலயத் தவறு.

ஆனால் கிருஷ்ணசாமி என்னை மாற்றிய அன்று நான் அப்படித்தான் இருந்தேன். காலையில் அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்ப மிடச் சென்றபோது மேலாளர் தியாகராஜன் தடுத்தார்.

உங்கள மாத்தியாச்சு….யூனிட் ஆபீஸ் போட்டிருக்கு….இந்தாங்க ரிலீஃப் ஆர்டர்……

பெருத்த அதிர்ச்சிதான் எனக்கு. ஆனாலும் காரணம் தெரிய வேண்டுமே…

அங்கிருக்கிற ஸ்டெனோ அவருக்கு வேணுமாம்…கேட்டு வாங்கியிருக்காரு….நீங்க அங்க போறீங்க…வைஸ் வெர்ஸா…

நியாயமாய்த்தான் தோன்றியது. அது அவர் விருப்பம். யார் என்ன சொல்ல முடியும்? அவர் எல்லாம் செய்வார் போலிருக்கு. நம்மால் அது முடியாதே என்று நினைத்துக் கொண்டேன். நான் எல்லாம் என்று சொல்வது உங்களை நெருடியிருக்கும். அந்தக் காலத்தில் ஸ்டெனோ என்பவன் அலுவலரின் பர்சனல் க்ளார்க். அதாவது அவரின் எல்ல்ல்ல்லாவற்றிற்கும் பொறுப்பானவன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆபீசர் ஒன்றுக்குப் போவது முதற்கொண்டு அவருக்கு நினைவு படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ளவன். எப்படி காவல் துறையில் ஒரு போலீஸ், ஆர்டர்லி போலிருந்து கொண்டு உயரதிகாரியின் வீட்டுக்கு என்னவெல்லாம் செய்கிறாரோ அதுபோல் ஒரு ஸ்டெனோவும். கேட்டால் நீங்கதான பி.ஏ., அப்புறம் நீங்க செய்யாம யாரு செய்வா…என்பார்கள். பேரு பெத்த பேரு, தாகத்துக்கு தண்ணி லேது…..

இந்த….குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு விடுறது…கூட்டிட்டு வர்றது…மத்தியான சாப்பாடு கொடுத்திட்டு வர்றது…இதெல்லாம் தயவுசெய்து என்னால முடியாது சார்….தப்பா நினைச்சிக்காதீங்க…..அஃபிஷியலான உங்க பர்ஸனல் மட்டும்தான் என்னால பார்க்க முடியும்……ஸாரி….

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருந்தேன் நான். அது யானை வாய்ச் சுண்ணாம்பாய் இருந்திருக்கும் போல. என்ன செய்யலாம் என்று யோசித்த மனுஷன் இப்படிச் செய்து விட்டார். என்ன துணிச்சல்? சர்வீசில் இதுவரை எவனொருவனும் இப்படிச் சொன்னதில்லையே?

போகட்டும் அதுபற்றி ஒன்றுமில்லை. ஆனால் வேறொன்று போல் காதில் விழுந்ததே என்று யோசனையிலேயே இருந்தேன். அதைத் தீர்த்தவன் ராதாகிருஷ்ணன்தான். அவன் டிஸ்டிரிக்ட் கன்ட்ரோல் ஆபீஸில் இருந்தவன். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து எனது முதல் அலுவலக ரீதியிலான நெருங்கிய நண்பன்.

உனக்கு இங்கிலீஷ் வரலயாம்டா…..அப்டித்தான் காதுக்கு வந்திச்சு….என்றான்.

உன் இங்கிலீஷ் பத்தலையாம்டா என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. அதெப்படி வரலை என்று சொல்லப் போச்சு?

நானும் அன்று அத்தனை வீக்காகத்தான் இருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை வெட்கமின்றி இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் என்பது வேறு. கடுமையான உழைப்பில் ஸ்டெனோகிராபி உயர்நிலை ஆங்கிலம் முடித்தவன் நான். அப்படித்தான் ஸ்டெனோ ஆனேன் சர்வீஸ் கமிஷன் எழுதி. தமிழ் சுருக்கெழுத்துக் படித்தால் ரூபாய் நூற்றைம்பது ஸ்பெஷல் பே என்று உத்தரவு போட்டார் எம்.ஜி.ஆர். அது 1977. அதையும் உடனே பிடிவாதமாகப் படித்து அந்தத் தொகையைப் பெற்றவன். எடுத்த எடுப்பில் ஐந்து வருஷம் சர்வீஸ் போட்டவனை விடக் கூடச் சம்பளம் என்றதுமே ஆபீஸே முழித்தது என்னைப் பார்த்து. அந்தக் காலத்தில் பேயாக உழைப்பேன். பார்ப்பவர்கள் பயந்து போவார்கள். எனது உழைப்புதான் என்னை உயர்த்தியது.

எங்கள விடக் கூடச் சம்பளம் வாங்கறேல்ல…வா…வந்து டிபன் வாங்கிக் கொடு…என்பார்கள். எந்த வகையிலாவது நைவேத்தியம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதான் என் க்வாலிஃபிகேஷன் நிற்கும்.

ஆனாலும் ப்ராக்டிகல் நாலெட்ஜ் என்பதே வேறு. அலுவலக நடைமுறைகளைப் புரிந்து கொள்ள சற்றுக் கால அவகாசம் வேண்டாமா? அதைத் தரவில்லையே இந்த மனுஷன்? புதிதாக சர்வீசுக்கு வந்தவனை ஊக்கப்படுத்தாமல் இதென்ன எடுத்த எடுப்பில் ஒரு அடி? என்னதான் ஆனாலும் சின்ன வயசான எனக்கு அப்படித்தானே தோன்றும்.

இங்க இருக்கறவனெல்லாம் பெரிசா இங்கிலீஷ்ல கிழிக்கிறானுங்களோ? என்றேன். அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள் எல்லோரும். கேள்வி கேட்க ஒருவனாவது வந்தானே என்றும் இருந்திருக்கலாம். பெரூசல்ங்கிற வார்த்தையை ஒருத்தன் பெர்சூவல்ங்கிறான். Joined ஆன்னு கேட்கிறதுக்குப் பதிலா Jointed ஆன்னு கேட்கிறான். Concerned Clerk ன்னு சொல்லத் தெரில….Certain clerk ன்னு சொல்றான்….என்ன இங்கிலீஷ் வாழுது இங்கே…? ஒண்ணுமில்லாத சாதாரண வார்த்தைக்கெல்லாம் மானேஜர் டிக் ஷ்னரியைப் புரட்டிக்கிட்டிருக்காரு…சரி ஏதோ பெரிசா எழுதப் போறாருன்னு பார்த்தா வழக்கமான பஞ்சாங்கமாத்தான் இருக்கு அது….யாருக்கு இங்க இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கு…எனக்குத் தெரிலன்னு சொல்றதுக்கு? இவரையே AMIE.., MISAE., ன்னு காசக்கொடுத்து பட்டம் வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிறதாத்தான் சொல்றாங்க….

காதுக்குப் போனால் போகட்டும் என்றுதான் நானும் சொன்னேன். அத்தனை கடுப்பு எனக்கு. இங்கிலீஷ் ஃப்ளுயன்ஸி இல்லாத ஆத்திரம். ஆனாலும் அன்றைய தேதியில் இரண்டு வரியில் லீவு லெட்டர் எழுதக் கூட நான் திணறிக் கொண்டுதான் இருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். சாதாரணமாய்த் திக்கித் திணறிப் பேசுவது என்பது வேறு. அஃபிஷியல் லாங்க்வேஜ் என்பதே வேறு.

நான்தான் சர்வீஸ் கமிஷனிலேயே கம்யூனிஸத்திற்கும் கம்யூனாலிசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிப் பாஸ் பண்ணி யவனாயிற்றே? வெளியில் வந்தவுடன்தானே பொறி தட்டியது. அது அஞ்சு மார்க் கேள்வி. அதனால் தப்பித்தேன்.

பால்கள் எத்தனை வகைப்படும்? என்று கேட்டால் ஆண் பால், பெண்பால், ஆட்டுப் பால், மாட்டுப்பால், கழுதைப்பால், ஒட்டகப்பால் என்று எத்தனை பேர் எழுதி வைக்கிறார்கள்? அதுபோல் ஒன்றுதானே இதுவும்…? அதற்காக மனிதன் அங்கேயே ஸ்டாக்னேட் ஆகி நின்று விடுவானா என்ன? ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி….என்று விடாமல் பாடிக் கொண்டிருப்பதும், கேட்டு மனசில் வாங்கிக் கொண்டிருப்பதும் என்ன சும்மாவா?

புலம்பிக் கொண்டேதான் போய்ச் சேர்ந்தேன் யூனிட் ஆபீசிற்கு. வேறு என்ன செய்ய முடியும்? அந்த அபீஸ் உண்மையிலேயே எனக்குப் பிடித்திருந்தது. சந்திரா என்றொரு லேடி இருந்தார்கள். கேரள அழகு. அந்தப் புன் சிரிப்பும் மென்மையும் வைத்த கண் வாங்க முடியாது. என் மேல் அம்புட்டுப் பிரியம் அவர்களுக்கு. அலுவலகத்திலேயே வயசில் சின்னவன் நான். அடித்துப் பிடித்து விளையாடாத குறைதான். குசும்பாய் என்னமாவது பேசினால் முதுகில் செல்லமாய் அடி விழும். அது ஆபீஸ் இல்லை. வீடு. அங்குதான் நான் பக்குவப்பட்டேன். அவர்களிடம்தான் வேலை கற்றுக் கொண்டேன். யாரும் எனக்கு நிகரில்லை என்ற பிரதிக்ஞையோடு வளர்ந்தேன். அதை ஊட்டியது அந்தச் சந்திரா அக்காதான். இன்று நினைத்தாலும் அந்தச் சந்திரமுகம் கண்ணுக்குள்.,

அன்று பிடித்த பிடிதான். அதற்குப் பிறகு ஆளாளுக்கு என்னைத் தேடி வந்து காத்து நிற்க வைப்பது போல் ஒரு காலம் வரத்தான் செய்தது. என் ரூம் வாசலில் பழி கிடந்தார்கள். என்னுதக் கொஞ்சம் பாருங்க ஸார்…என்று கெஞ்சினார்கள். மனசுக்குள்ளேயே கருவறுத்த கதையாய் எந்தக் கிருஷ்ணசாமி என்னை வேண்டாம் என்று சொன்னாரோ அதே கிருஷ்ணசாமி அவருக்கான தலைமை அலுவலகத்தில் அவருக்குத்தான் அந்த சீட் என்று நான் வரும் வரை காலியாய் வைத்திருந்து நான் வந்ததும் என்னிடம் லட்டுபோல் தூக்கிக் கொடுத்தார். காலம் அவரை அப்படிப் புரட்டிப் போட்டிருந்தது.

இங்குதான் நாம் ஒன்றைக் கவனித்தாக வேண்டும். மொழி என்பது வெறும் பரிமாற்றக் கருவி. அது தகுதிக்கான நிர்ணயம் அல்ல என்பேன் நான். காலப் போக்கில் அலுவலக நடைமுறைகளெல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று பின் ஏன் உத்தரவிடப்படவேண்டும். எப்பொழுதும் போல் இங்கிலீஷில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட வேண்டியதுதானே…! அது தமிழோ ஆங்கிலமோ துறையில் வேலை பார்ப்பதற்கு அக்கறையோடு விதிமுறைகளைக் கற்றிருக்க வேண்டுமே….விரல் நுனியில் எல்லாவற்றையும் வைத்துப் பாருங்கள் உங்களுக்கான மதிப்பே தனிதான். இதை மெனக்கிட எத்தனை பேர் தயாராய் இருக்கிறார்கள். பெரும்பாலோர் அடுத்தவன் மேல் குதிரை ஏறுபவர்கள்தானே….எவனையாவது கையைக் காலைப் பிடிச்சு…கெஞ்சி, கூத்தாடி….காலத்தையும் பொழுதையும் நகர்த்த வேண்டும். தவறுகளிலிருந்து தப்பிக்க வேண்டும்….இப்படிப்பட்டவர்கள் மத்தியில் விதியே என்று ச்சீ…கதியே என்று ரூல்ஸ்களோடும், தொடர்பான ஃபைல்களோடும் கிடையாய்க் கிடப்பவனை விடுவார்களா?

பயங்கரமான ஆள்யா அவுரு….நீ என்ன சந்தேகம் வேணாலும் கேட்டுக்கய்யா…அவர்ட்டப் பதில் இருக்குமாக்கும்…அவரப் பிடி….எதிலிருந்தும் தப்பிச்சிக்கலாம்….இப்படித்தான் என்னை அணுகினார்கள் பலரும். பலருக்குள் அந்த அவரும்தான் இருந்தார். நாயை அடிப்பானே, பீயச் சுமப்பானே…

ஆச…ஆச…நல்லா உதைக்காம விட்டானுங்களே….கட்டிப் போட்டு உதைக்கிற மாதிரியே இருக்குதே…இனிமே நா எப்டிப் பாட்டு எழுதுவேன்…எதை எழுதினாலும் ஏம்ப்பா இது நீ எழுதினதா..இல்ல மண்டபத்துல யாராச்சும் எழுதிக் கொடுத்து அத வாங்கிட்டு வந்திருக்கியான்னு கேட்பானுங்களே…எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே…அய்ய்ய்யோ…..

இப்படித்தான் வந்தார் அவரும். அபிமன்யு வளையத்தில் சிக்கிக் கொண்டார். விடுவி என்றார்.

கடைசிவரை அவர் பெயரில் இருந்த ஒழுங்கு முறை நடவடிக்கைக் கோப்பை டீல் செய்தவன் நான்தான். அதற்கான ஆங்கிலமே தனி. அதற்குத் தனியாகப் பயிற்சி பெற வேண்டும். அதில் தேறக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தனை வருஷ சர்வீசில் எப்படியோ அந்த வேலை பழகியிருந்தது எனக்கு. எவனும் இதற்கெல்லாம் மெனக்கெட மாட்டான். அபூர்வமாய் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். அவரே கதி என்று கிடப்பார்கள் எல்லோரும். ஏன், துறையே அவர் காலடியில்தான் கிடக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்…

படிக்கணுமய்யா…படிக்கணும்…சும்மால்ல….அறுபது வயசுவரைக்கும் இந்த வேலைல இருக்கப் போறோம்னு தெரியுதுல்ல…அப்புறம் படிச்சா என்ன? எல்லாத்துலயும் அறைகுறையாவும், அடுத்தவன் முதுகுல ஏறியும் எத்தனை காலத்துக்குத்தான் ஓட்டுவீங்க?

உண்மைதான் சார் நீங்க சொல்றது என்பார்களே தவிர எவனும் பிரயத்தனப்பட மாட்டான். சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் மறைந்து விடுவார்கள் நாம் இருக்க வேண்டிய இடம் இதுவல்லவென்று. சும்மாவானும் அரட்டை அடிச்சமா, வெளில போனமா, டீயக் குடிச்சமா, வடையத் தின்னமா என்று திரிவார்கள்.

பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. சாதாரணச் சராசரி ஆளாக இருந்தாலே போதும். என்ன, கொஞ்சம் அக்கறையும், சின்சியாரிட்டியும் வேண்டும். அது யாருக்கு இருக்கிறதோ அவர்கள் வெற்றியடைகிறார்கள். அல்லாதவர்கள் அடுத்தவர் கொடுக்கைப் பிடித்துக் கொண்டே திரிகிறார்கள். அவர்களுக்கும் ஒடுகிறதுதான். ஆனால், அது என்ன ஒரு பிழைப்பா? மனுஷனென்றால் தன்னம்பிக்கை, தன் உழைப்பு வேண்டாமா? சுயமாய் நிற்கத் தெரிய வேண்டாமா?

அந்த சுயம் கழன்று போனது அவரிடம். பெரிய பணக்காரர்தான். துறையில் வேலைக்குச் சேரும்போதே காரில் நுழைந்தவர்தான். இந்த வேலையைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற அவசியமில்லாதவர்தான். ஆனால் காசாசை யாரை விட்டது? மொத்த ஒதுக்கீடு இத்தனை லட்சம் என்றால் அதில் பத்துப் பர்ஸன்ட் எவ்வளவு என்று மனம் கணக்குப் போட ஆரம்பித்து விட்டதே…! தானாய் வருவதை எதற்கு வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டதே…! இதுநாள் வரை இருந்திட்டுப் போனவனெல்லாம் என்ன மாட்டிக்கவா செய்தான்? எல்லாம் நல்லாத்தான் இருக்கானுக…! என்று நினைக்க ஆரம்பித்து விட்டதே…! எல்லாருக்கும் நடக்கிறதைப் போலத்தான் நமக்கும் நடக்கும் என்றுதான் தோன்றியதே தவிர, வேற மாதிரி நடந்திருச்சின்னா? என்று தோன்றவே இல்லையே…!

என்னை மாற்றிய அந்த முதல் ஐந்து வருட உறானஸ்ட் கிருஷ்ணசாமியை என்னால் மறக்கவே முடியாது. ஆனால் அன்றைய நிலையில் என்னை, என் உறான்ஸ்டியை, என் சின்சியாரிட்டியைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லாமலிருந்தது. ஏனென்றால் நான் ஒரு சாதாரணக் க்ளார்க். அவனுக்கெதுக்கு கௌரவமும், கண்ணியமும்? மாசச் சம்பளத்துக்கு வேலை பார்க்குற சாதாரண ஊழியன்தானே? என்கிற நினைப்பு. அவர் மட்டும் பின்ன என்னவாம்? யார், என்ன வேலை பார்க்கிறான், என்ன சம்பளம் வாங்குகிறான் என்பதா முக்கியம்? எப்படியிருக்கிறான் என்பதுதானே முக்கியம். ஒரு உயரதிகாரிக்கு இருக்க வேண்டிய கடமையுணர்வும், கண்ணியமும், கட்டுப்பாடும், நேர்மையும், நாணயமும், ஒரு சாதாரணக் கீழ்நிலைப் பியூனுக்கு இருக்கக் கூடாதா? அப்படியிருந்தால் அவன் மதிக்கப்படக் கூடாதா? என் வாழ்நாளில் எத்தனை பேரை அப்படிப் பார்த்திருக்கறேன்?

அந்தப் புரிதல் இப்போதுதான் அவரிடம் தெரிகிறதோ? என்னைத் தேடி வந்ததனால் அப்படிச் சொல்லவில்லை. வந்து விட்டாரே மனுஷன் கௌரவம் பார்க்காமல்….பிறகு என்ன செய்வது? விரட்ட முடியுமா? அது பண்பாடா?

இதோ இன்றும் அவர் சம்பந்தப்பட்ட கோப்பை தினமும் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன் நான். அன்னார் பெயரிலான நடவடிக்கை நிலுவையிலிருப்பதையும், அதன் இறுதியை எதிர்நோக்கியும் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறார் என்று போட்டுக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஓய்வுப் பலன்கள் எதுவும் இன்றும் கைக்கு வரவில்லை. வயசோ நழுவிக் கொண்டிருக்கிறது. உடலும் மனமும் தளர்ந்து கொண்டிருக்கிறது.

சங்கரன், உங்களாலதான் இது முடியும். முடியணும்….எனக்காக இதை எவ்வளவு சீக்கிரம் செய்து கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுக் கொடுத்தீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போகும்…நீங்கதான் செய்யணும் எனக்கு…. என்று என் சீட்டுக்கு எதிரே வந்து உட்கார்ந்து கொண்டு என் கையைப் பிடித்துக் கொண்ட காட்சி அப்படியே என் கண் முன்னே நிற்கிறது.

எனக்குத்தான் இங்கிலீஷ் வராதே….குசும்பாக மனதில் தோன்றுகிறது அப்போதும். கடுமையான எனது உழைப்பும், உடும்புப் பிடியும் இப்போதும் சமயங்களில் என்னை குறும்பாய் நினைக்க வைக்கிறதுதான். என் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் மீது எனக்கு அத்தனை திமிர்.

துறையில் எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்கள்? இவருடைய கொலீக்ஸ் எவ்வளவு பேரைப் பார்த்திருப்பார்? இவர் அதிகாரம் பண்ணிய எத்தனை பேர் இன்றும் மண்டியிட்டு நிற்பார்கள்? அவர்களில் ஒருவன் கூடத் தேறவில்லையா? ஏன்? அத்தனை பேரும் சுயநலக்காரர்களோ? காசுக்கு நாயாய் அலைபவர்களோ? இவரைக் கண்டும் காணாமல் போகிறார்களோ?

அன்று நடந்தது வெறும் ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் அதுதான் என் மனதில் விழுதாய் விழுந்தது. இன்று விருட்சமாய் நிற்கிறது. அது அவர் மனதில் இருக்கிறதோ இல்லையோ? பீத்தத் தனமாய் அதைப் போய் இன்று நினைவு படுத்தலாமா? நான் மனுஷனா? பார்க்கவே பரிதாபமாய் நிற்கும் அவருக்கு என்ன சமாதானம் சொல்வேன் நான். இவர் அடித்த காசையெல்லாம் இந்த ஒரு கேஸை வைத்தே பிடுங்காமல் விடமாட்டார்களே? காசு என்றாவது மனிதனுக்கு நிம்மதியைக் கொடுக்குமா? காற்று, தண்ணீர் போல் அதுவும் வாழ்க்கையின் தேவையின்பாற்பட்ட ஒரு காரணிதானே? அதுவேவா வாழ்க்கை? யார் அதை உணர்கிறார்கள்? போதாது போதாது என்று பத்துத் தலைமுறைக்கல்லவா தவறான வழியில் சொத்து சேர்க்கிறார்கள்? ஒருத்தனைச் சொல்லச் சொல்லுங்கள் ஒரு நாளாவது நிம்மதியாய் இருந்தான் என்று….? மனசாட்சி பேசுமா?

கையில் கொஞ்சம்

காசு இருந்தால்

நீதான் அதற்கு எஜமானன்

கழுத்து வரைக்கும் காசு சேர்ந்தால்

அதுவே உனக்கு எஜமானன்

இன்று என் முன்னே அம்போ என்று அமர்ந்து, தன் கௌரவமெல்லாம் உதிர்த்து, குழந்தையைப் போல் வாய் விட்டு அழும் இவரை எப்படித் தேற்றுவேன்? ஆதரவாய் அவர் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுகிறேன்.

சீக்கிரம் முடிச்சிறுவோம் சார்…கவலைப் படாதீங்க…..

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா……!!! 

(உயிரோசை இணைய இதழ் – 04.06.2012)

--------------------------------------------------

கருத்துகள் இல்லை: