15 ஜூன் 2012

சில யதார்த்தங்கள் சிறுகதை

தினமணிக்கதிர்

(First Published : 10 Jun 2012 )

இன்னைக்காவது போய்ப் பார்த்திட்டு வந்திடுங்க...ரொம்பப் பாவமாயிருக்கு...

-குரலில் அசாத்தியக் கழிவிரக்கத்தோடு சொன்னாள் லலிதா. லேசாக அழுதுவிட்டதுபோல்கூடஇருந்தது.

போகிறேன், போகிறேன் என்று சொல்லி இத்தனை நாள் இழுத்தாயிற்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை. எப்படியும் சொல்லி ஆளை அனுப்பியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தோடு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருப்பாள் போலிருந்தது. தன் கணவன் எதிலும் முறை தவறிவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை. யாரும் எதுவும் ஒரு வார்த்தை பேசி விட இடங்கொடுக்கலாகாது. அது உறவோ, வெளியோ...

எல்லாம் சரிதான், சொந்த பந்தங்களுக்கு அது பொருந்தி வரும். வெளியிடங்களுக்குமா அப்படி? அதிலும் கூடவா நேரங்காலந் தவறாமை? இப்படியெல்லாம் பார்க்கப் போனால் மனுஷன் வாழவே முடியாது. இந்த முறைமைகளையெல்லாம் விட்டு ஒழித்தாலே நிம்மதியாய் இருக்கலாம். எங்கே விடுகிறார்கள்? வருஷம் முழுக்க அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டுதானே இருக்கிறது.

""வாழ்க்கைங்கிறதே அதானே? நீங்க மட்டும் சாப்பிட, தூங்க, எழுந்திருக்க, ஆபீஸ் போக, வரன்னு இருக்கிறதா? ஒரு காலத்துல எல்லாரும் கூடி வாழ்ந்தோம். இப்போ அது சாத்தியப்படலை. அவ்வப்போது விசேடங்கள், நிகழ்ச்சிகள்னாவது சந்திச்சிக்க வேண்டாமா? உறவுகள் அப்புறம் எப்படி பலப்படும்? விட்டுப் போயிராதா? அதுக்காகத்தானே விழாக்களும் விசேடங்களும்? வாழ்க்கையை அப்புறம் எப்படி புதுப்பிச்சிக்கிறது? - விட்டால் நீண்ட சொற்பொழிவாற்றி, புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.

இவற்றுக்காக அடிக்கடி லீவு போடுவதும், ஓடுவதும், சாடுவதும், செலவுகள் மேற்கொள்வதும், அட...செலவைப்பற்றிக் கூட ஒன்றுமில்லை...சொந்தங்களுக்குத்தானே செய்கிறோம்...வேறு யார் நமக்காக இருக்கிறார்கள்? எடுத்துப் பிடித்துப் போய் வருவதுதானே மிகவும் சிரமமாக இருக்கிறது? அடிக்கடி ஆபீசில் லீவு போட்டால் கெட்ட பெயர் ஆகாதா? எவன் மூஞ்சிக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது?

""அவன் வர மாட்டான்யா...எந்த விசேடத்துக்கு வந்திருக்கான்...ஏதாச்சும் ஒரு பங்ஷனுக்கு வந்திருக்கிறதாச் சொல்லு...அட...சந்தோஷமான நிகழ்ச்சிகளுக்கு வரவேணாம்...சாவுக்கு வரவேண்டாம்? அப்புறம் என்னய்யா மனுஷன் அவன்?''

ஓர் இழவுக்குப் போகாமலிருந்து என்னவெல்லாம் பேச்சு வந்துவிட்டது. அதைக் கேட்டு அப்படியே செத்துவிடலாம் போல் ஆகிவிட்டதே.

""அதானே மனுஷத்தன்மை...அப்புறம் என்ன ஒட்டும் உறவும்? நாளைக்கு அவனுக்கும் ஒரு நல்லது கெட்டது நடக்கும்தானே? அதுக்கு நாமும் போகணும், வரணும்தானே? அந்தச் சமயம் போட்டுப் பார்த்துற வேண்டியதுதான்....''

""எல்லாப் பேச்சும் கேட்டாகி விட்டது. சொந்த அண்ணன்மார்கள், சகோதரர்கள் என்று விட்டுக் கொடுக்காமல் போய்விட்டாலும், உறவுகளில் பலர் காதுபடப் பேசத்தானே செய்கிறார்கள்? ஆனால் ஒன்று. எவனும் எதையும் பேசுவதற்குத் தயங்குவதில்லை. தோன்றுவதையெல்லாம் பேசித்தான் விடுகிறார்கள்; எடிட்டிங் என்பதே கிடையாது. எதைப் பேசி என்னாகப் போகிறது? அவரவர் இருப்பு அவரவருக்கு என்று விடுகிறார்களா என்ன? பேசித் தீர்த்தால்தான் எல்லோருக்கும் மனது ஆறுகிறது. அது பக்குவப்பட்டதாய் நாம் நினைக்கும் ஆசாமிக்கும் சரி, சராசரி மனிதனுக்கும் சரி..எல்லோருக்கும் ஒன்றாய்த்தான் இருக்கிறது. நியமங்களையெல்லாம் கடைப்பிடித்து முயற்சித்துத்தான் பார்க்கிறார்கள். மனசு

கேட்டால்தானே? சராசரியாய் இருப்பதில்தான் மனிதனுக்கு சந்தோஷம். திருப்தி. செய்வதற்கு வடிகட்டல் என்று எதுவும் இல்லாமல் செய்துவிடுவதில்தான் மனிதனுக்கு ஆறுதலும், திருப்தியும்.

""எனக்குத் தெரிய நிறைய விஷயங்களுக்கு நீங்க போனதேயில்லை. ஒத்துக்குங்க...அதான் உண்மை. என்ன ஒண்ணு கரெக்டா பணத்தை அனுப்பிடறீங்க...அதுக்கு அஞ்சறதில்லை. ஆனாலும் இவனென்ன? இப்படி பணத்துக்காகவா பத்திரிகை அனுப்பறோம் இவனுக்குன்னு நினைப்பாங்களா இல்லையா?'' -சுளீர் சுளீர் என்றுதான் சொல்கிறாள் லலிதா. அப்படியாவது இவனுக்கு உறைக்கிறதா? பார்ப்போம் என்று.

""நினைச்சா நினைச்சுட்டுப் போறாங்க...என் இருப்புப் பிரகாரம் என்னை யாரு புரிஞ்சிக்கிறாங்களோ அவுங்க போதும் எனக்கு. அதுதான் என்னைப் பொறுத்தவரை யதார்த்தம். உண்மையான அன்புங்கிறதும் அதுதான்னு நான் நினைக்கிறேன்''

""அப்படிச் சொன்னா எப்படிங்க? நாளப் பின்ன நமக்கும் ஒரு காயம், கஷ்டம்னா நாலுபேர் வர வேண்டாமா? நல்லது கெட்டதுன்னு நமக்கும் நடக்கும்தானே? மனுஷாள் வேண்டாமா? அதுதானே பலம்''

எதற்கோ எதையோ சொல்லிப் பயமுறுத்துகிறாள். வற்புறுத்துகிறாள். வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டதல்ல. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று எவனுக்கும் தெரியாது. ரகசியமானது வாழ்க்கை. கணிக்கவே முடியாது. ஊகம் செய்யலாம், திட்டமிடலாம். செயலாற்றலாம். ஆனால் இதுதான் நடந்தாக வேண்டும் என்பது எந்தளவுக்கு நிச்சயம்? இந்த உறவுகள் உண்டாக்கி வைத்த சம்பிரதாயங்களில்தான் எத்தனை சிக்கல்கள்?

உறங்குவது போலும் சாக்காடு...உறங்கி விழிப்பது போலும் பிறப்பு....நாளை நடப்பதை யாரறிவார்? நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு...

அப்பாடி...எவ்வளவு சொல்லி வைத்திருக்கிறார்கள். மனிதன் திமிரான இஷ்டம்போலான, தான்தோன்றியான வாழ்க்கையை நடத்தி விடக்கூடாது என்று எத்தனை கட்டுப்பாடுகளை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்? மனிதன் இவற்றை எப்போதேனும் மீறினாலும் அது எத்தனை துல்லியமாக கண்ணுக்குப்படுகிறது? எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறது?

அநித்தியமான வாழ்க்கை... ஆனாலும் வாழாமல் முடிகிறதா? வாழ்ந்து காட்டுவதுதானே வாழ்க்கை...வாழ்க்கையை எப்படி அர்த்தப்படுத்துவது? வாழ்ந்து காட்டித்தானே?

வாழ்க்கை அர்த்தம் பொருந்தியதோ இல்லையோ, நீ அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்வது பயனுள்ளதாக்கிக் கொள்வது உன் பொறுப்பு. வாழ்க்கை உன் கையில்தான் இருக்கிறது. அதை மற்றவர் கையிலோ, உலகத்தின் கையிலோ ஒப்படைத்து விடாதே. இப்படியிப்படி இருப்பதுதான் அர்த்தம் பொருந்தியது என்கிறார்கள் சாதாரணர்கள். அவர்களைச் சராசரிகள் என்று சொல்லலாமா? சாமானியர்கள் என்று சொல்வதா? படிக்க, வேலைக்குப் போக, கல்யாணம் பண்ண, குழந்தை பெற, குடும்பம்னு இருக்க, இருந்து இருந்தே மடிய என்பதுதான் சாமானியனின் சுழற்சியா இது? அத்தோடு முடிந்து போகிறதா வாழ்க்கை? அடப்பாவி இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் வேறோன்றுமேயில்லையா?

இயற்கை மனிதனுக்கு எவ்வளவு அள்ளித் தந்திருக்கிறது? அதையெல்லாம் கண்கொண்டு ரசிக்க வேண்டாமா? மனதால் அள்ளிப் பருக வேண்டாமா? எத்தனையெத்தனை ஜீவராசிகள் பார்த்துப் பார்த்து ரசிக்க எத்தனையெத்தனை இடங்கள்? கேட்டுக் கேட்டு ரசிக்க, உள்வாங்க, அறிவைப் பெருக்க எத்தனையெத்தனை கருத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன?

எதையாவது நுகர்ந்திருக்கிறாயா நீ? என்றாவது இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கிறாயா? தவிர்த்திருந்தால் நீ மனிதனேயில்லை. உன் வாழ்க்கையே வீண். அன்றாடம் நீ ஜீவிப்பதே விரயம். வெறுமே மூச்சு வாங்குவதற்காகவா வாழ்க்கை?

யாரிடம் சொல்வது? யார் கேட்பார்கள்? இதையெல்லாம் கேட்டு கிறுக்கன் என்பார்களோ? கேலி செய்வார்களோ? இதுதான் வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது எல்லோருக்கும் ஒன்றுபோல் அல்லவா அமைந்திருக்க வேண்டும்? அப்படியா இருக்கிறது வாழ்க்கை? கூன், குருடு, நொண்டி, முடம், செவிடு, ஊமை என்று எவ்வளவு வேறுபட்டுப் போய்க் கிடக்கிறது? எத்தனை கொடூரமாய் சிதைந்து போய்க் கிடக்கிறது? மனிதனுக்கு மனிதன் எத்தனை வேறுபட்டுக் கிடக்கிறது?

ஒரேமாதிரி வாழ்க்கைதான் என்றால் அது எல்லோருக்கும் சந்தோஷமாகவோ, துக்கமாகவோதானே அமைந்திருக்க வேண்டும்? ஏன் மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுகிறது? சரி, இந்த சந்தோஷம் என்றால் என்ன? துக்கம் என்றால் என்ன? அது நமக்கு நாமே வரவழைத்துக் கொள்வதா அல்லது மற்றவர்கள் தருவதா? ஒருவருக்கான சந்தோஷத்தையும், துக்கத்தையும் மற்றவர்களால் தரமுடியுமா? அல்லது அவனுக்கு அவனே சம்பாதித்துக் கொள்வதா?

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்றது எதனால்?

இப்படியெல்லாம் வாழ்க்கை பலபட்டுக் கிடக்கையில் இதுதான் என்று வரையறுத்து எங்கே நிலைத்து நிற்க முடியும்?

""போச்சு, உங்களுக்கு நீங்களே பேசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா இன்னிக்கு நீங்க புறப்பட்டுப் போனாப்லதான்...ஒண்ணு மட்டும் சொல்றேன்... நீங்க உங்களுக்காக மட்டும் வாழாதீங்க...எனக்காகவும் கொஞ்சம் வாழப் பழகிக்குங்க..ஏன்னா உங்களுக்கு நா கழுத்த நீட்டியிருக்கேம் பாருங்க...அதுக்காக சொல்றேன்...''

சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் பெரிதாக உணர்த்தி விட்டவளாய் கொல்லைப்புறம் சென்று குத்திட்டு உட்கார்ந்தவளாய் சுற்றிலும் கிடந்த பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தாள் லலிதா.

எடுத்துக் கொண்ட சிறு புளித்துண்டு அவள் கைக்குள்ளிருந்து அரக்கப் பாத்திரத்தில் இறங்கியபோது பளிச்சென்று அது வெளிச்சம் பெறுவதைப் பார்க்க முடிந்தது.

வாழ்க்கையை இந்த உலகத்தில் அநேகம் பேர் இப்படித்தான் புதுப்பித்துக் கொள்கிறார்கள் போலும் அல்லது குறிப்பாகப் பெண்களா? இல்லையென்றால் அது சலித்துப் போகும் போலும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது இதுதானோ?

எல்லோரையும் போல் இருந்துவிட்டு மடிந்து மண்ணடித்துப் போ என்கிறார்கள். அதுதானே?

""கதவைச் சாத்திக்கோ...இதோ வந்திடறேன்...இன்னிக்கு ரொம்ப யோசிக்க வச்சிட்டே...''

இவன் வெளியேறுவதைக் கண்டு ஓடோடி வந்த லலிதா ""இருந்து, அவருக்கு ஆறுதலா நிறையப் பேசிட்டு வாங்கோ...புண்ணியமுண்டு...''என்றாள்.

""தனியாத்தான் இருக்கேன்...வீட்டுக்கு வாங்களேன்...'' என்று வருந்தி வருந்தி அழைத்திருந்த அந்த முதியவரை அன்று எப்படியும் பார்த்தே விடுவது என்று லலிதா சொன்னதில் உறுதிப்பட்டுக் கிளம்பியிருந்த இவனுக்கு, மனதுக்குள் என்னவோ ஒரு சிறு நெருடல். இனம் புரியாத சோகம். என்ன மனப்போக்கோ இது! பல சமயங்களில் இப்படித்தான் கழன்றுபோய்க் கிடக்கிறது.

நினைத்தவாறே தயங்கித் தயங்கி அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த வேளையில் இவன் எதிர்கொண்ட நிசப்தம் அவனை மேலும் பயமுறுத்தியது.

இருள் நிறைந்த நீண்ட பட்டாசாலை. அதைத் தாண்டிய கூடம். பிறகு கொல்லைப்புறம் நோக்கி இழுத்துச் செல்லும் மீண்டும் ஒரு நீண்ட ரேழி என்று கிடந்த அந்தப் பழங்கால வீட்டில் ஏன் இப்படி இருளடைந்து கிடக்கிறது என்ற சந்தேகத்துடனேயே நுழைந்த இவனுக்கு, சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களுக்கிடையே தலைமாட்டில் ஏற்றி வைத்திருந்த அந்தத் தீபமும், அதன் முன்னே நீண்டு கிடந்த அந்தப் பெரியவரின் சடலமும், பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...