24 மார்ச் 2021

முகங்கள்-G.P.சத்யா - சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம் -

 

முகங்கள்-G.P.சத்யா - சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம் - உஷாதீபன்.         வெளியீடு:- வாதினி பதிப்பகம், கே.கே.நகர், சென்னை-78.



 

     நாடறிந்த எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்குத்தான் பலர் இருக்கிறார்களே! நாமறிந்த எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்லியே ஆக  வேண்டும் என்கிற உந்துதலில் எழுத்தாளர் G.P. சத்யாவின் ”முகங்கள்”  சிறுகதைத் தொகுப்பினைக் கையிலெடுத்தேன். இப்புத்தகம் என் கைக்கு வந்தே ஆறு மாதங்கள் ஆயிற்று. இப்பொழுதுதான் இதற்கு நேரம் வாய்த்தது. எழுத்தாளர் பொறுத்தருள்க....!

     சத்யாவிடம் வேகம் இருக்கிறது. தோன்றும் கருவை உடனடியாகக் கதையாக்கிச் சொல்லிவிட வேண்டும் என்கிற துடிப்புமிருக்கிறது. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை இன்னொன்றின் மூலமாக உணர்த்துவதும், அதன் மூலம் படைப்பாளி சொல்லாததை வாசகன் கண்டடைவதும்தான் சிறுகதையின் தாத்பர்யம். அதைப் புரிந்து கொண்டு கச்சிதமாக எழுதுகிறார் சத்யா. அளவான வார்த்தைகள், அர்த்தமுள்ள உரையாடல்கள், செறிவான கருத்துக்கள் என்று குறைந்த பக்கங்களில் கதை சொல்லும்  திறன் அவருக்கு திறம்பட வாய்த்திருக்கிறது.  

     எழுத்தாளர்கள் ஊர் சுற்றினால் நிறைய அனுபவங்களைச் சேகரிக்கலாம். அவை கதைகளாக மாறும் வாய்ப்பு உண்டு. அப்படிக் கதை எழுதும்போதுதான் அந்த உற்சாகம் கரை புரளும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து அப்பா, அம்மா, பாட்டி, அக்கா தங்கை. தம்பி என்று உழன்று கொண்டிருந்தால் “முதல்ல இதத் தாண்டுய்யா...” என்று சொல்லத் தோன்றும். படித்துப் படித்து அலுத்தும் போகும். படைப்பாளி வெளி உலக அனுபவங்களை எழுத வேண்டும். அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் அநேகம். அவர்களின் வாழ்க்கைப் பாடுகளிலிருந்து எழுத நிறைய இருக்கும். அவற்றைப் படைப்பாக்க வேண்டும். எளிய மனிதர்களின் வாழ்வில்தான் எத்தனையோ மனம் கசியும் சம்பவங்கள் காணக் கிடைக்கும். அந்த நுண்ணுணர்வினைப் படைப்பாக்கும்போது மனித நேயமும், கருணையும் பொங்கி வழிய படைப்பின் மேன்மை புலப்படும்.

     சத்யா தன் அனுபவத்தில் அப்படி நிறையக் கண்டடைந்திருக்கிறார். வேலை வாய்ப்புக்கென்று நிறைய ஊர்களுக்கு அலைந்திருக்கிறார். வேற்று மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார். வெவ்வேறு மொழி பேசும், வேறு வேறு கலாச்சாரப் பழக்க வழக்கங்களுடைய மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். அவர்களின் பேச்சு முறைகளை, குண விசேஷங்களை நடவடிக்கைகளைக்  கண்ணுற்றிருக்கிறார். அதைத் தன் ஊரில், தன் மக்களோடு ஏற்பட்ட அனுபவத்தோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவமும், அதற்கும் இதற்குமான வேற்றுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை உணரும் தன்மையும் அவருக்கு சிறப்பாக வாய்த்திருக்கிறது. அப்படித்தான் அவரின் கதைகளெல்லாமும் அர்த்தபூர்வமாய் அமைந்திருக்கின்றன. சொந்த ஊரின் அன்றாட வாழ்வு அனுபவங்கள், வேலைக்குச் சேர்ந்த இடத்து அனுபவங்கள், வெளி மாநில அனுபவங்கள் என்று அவரது எல்கை விரிந்திருக்கிறது.

     ஒரு ஊர் நமக்குப் பிடிக்க முக்கிய காரணம் அந்த ஊரின் உணவு வகை என்று சொல்லலாம். அது இடறினால் ஊரும் இடறும். வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு கிடைக்காத இடத்தில் எத்தனை நாளைக்குக் குப்பை கொட்ட முடியும் என்ற கேள்வி எழுந்து எப்பொழுதடா இங்கிருந்து வண்டியைக் கிளப்புவோம் என்று மனதுக்குள் ஒரு பரபரப்பு வந்து விடும். புளிக்கும் ஜிலேபியை வாயில் வைக்கும் தருணம் நாயகனுக்கு ஊர் பிடிக்காமல் போகிறது. என்ன பண்ணியிருக்கே? நீயும் உன் சமையலும் என்று மனைவியிடம் சலிப்பதில்லையா? அந்தக் கதைதான்.

     பதினொன்றரைக்கு டீ/நிகோடின் ப்ரேக் என்று சுருங்கச் சொல்லத் தெரிந்திருக்கிறது.  சிகரெட்டின் நிகோடின் படிந்த உதடுகள் படிமமாக மனதில். அதனால்தான் அப்படி எழுதத் தூண்டுகிறது. மனதில் உள்ள ஒரு வெறுப்பும் காரணம். அடுத்தடுத்த வேலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. யு.ஆர்.லக்கி யங்மேன்...முதல் கதை....அந்த வயதில் அது உற்சாகம்தான். அரசுப் பணிக்கு அப்படிக் காத்துக் கிடந்த காலம் என ஒரு தலைமுறை உண்டு. சத்யா அப்படிப் பல தனியார் வேலைகளில் ஈர்க்கப்பட்டிருக்கிறார். பல நிறுவனங்களால் விரும்பப் பட்டிருக்கிறார். பலரால் விருப்பமாய் அழைக்கப்பட்டிருக்கிறார் என்று ஆசிரியரைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நேரத்துக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்கிற உத்வேகம் நமக்கும் இருந்திருக்கிறதே...அது கதையின் வேகத்திலும் கச்சிதமாய்ப் புலப்படுகிறது.

     வெவ்வேறு என்.ஜி.ஓ. பணிகளில் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி சுகாதாரம் என்பதை மையமாகக் கொண்ட செயல்பாடுகளும், முக்கிய பங்களிப்பாகக் கொண்டு அதற்கான நிதி ஆதாரங்களும் வெளி நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் அவற்றில் பாசிட்டிவான விஷயங்களே முன் வைக்கப்பட்டு அவையே வளர்ச்சிக்கான ஆதாரங்களாக எடுத்துரைக்கப்பட்டு என்.ஜி.ஓ. செயல்பாடுகள் தியாகத்தின் அடிப்படையிலான நற்பணிகளாக முன்னிறுத்தப்படுகின்றன.  முரணான. நெகிழ்வான விஷயங்கள் வலிந்து மறைக்கப்படுகின்றன. என்.ஜி.ஓ. அமைப்புகளின் நோக்கம் தொடர்ந்து விடுபடாமல் கூடுதலாக நிதி ஆதாரங்களைப் பெறுதல் என்கிற மையப்புள்ளியின் முனைப்பாகவே மாறி விடுகின்றன. பெருங்கூட்டம் இதை மையமாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

     ஆனால் இந்தப் பணியின் புள்ளி விபரங்களை சேகரிக்கும் சேவகர்கள், பணியாட்கள், அவர்களுக்கான  மனசாட்சியோடு செயல்படும்போது அல்லது மனசாட்சிக்கு முரணாக, பிழைப்புக்காக, நிறுவனத்தின் வற்புறுத்தலுக்காக செய்து விட்டு, உள் மனசாட்சியில் உழலும்போது  இப்படி ஒரு வேலையைக் கூலிக்காகச் செய்துதான் ஆக வேண்டுமா என்ற உறுத்தல் என்றாவது ஒருநாள் வரக்கூடும்.

     அந்த உறுத்தல் இந்தக் கதையின் நாயகனுக்கு வருகிறது. எதை எழுதக் கூடாது என்று மேலிடம் சொல்லியதோ எதை மறைக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளதோ அந்தந்த விஷயங்கள் நெருடலாகின்றன. நல்ல மனங்கள் இம்மாதிரி விஷயங்களில் உறங்குவதில்லை. அந்த நேர்மையுள்ளத்தை இந்தக் கதை தொட்டுச் செல்கிறது.

     பார்க்காத காட்சிகளாக மறைக்கச் சொன்னவை, பார்த்த காட்சிகளாக மனசைப் படுத்தியெடுக்கிறது. இந்த உலகத்தில் அநேக மனிதர்கள் இம்மாதிரி சமரசம் செய்து கொண்டுதான் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். உலகமே சமரசம் செய்யும் களமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை கோடிட்டுக் காட்டியிருக்கிறது ஆசிரியரின் “பார்க்காத காட்சிகள் என் பார்வைக்கு”.

     விரும்பிப் போனால் விலகிப் போகும். இக்கதையின் மெஸ் பாட்டி, பட்டுவின் அம்மாவுக்கு அப்படித்தான் விலகிப் போகிறாள். பொதுவாகவே பழைய சாப்பாட்டு மெஸ்களில் (அதாவது தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல், அந்தக் கால ஒற்றை மேஜை, நாற்காலிகள் போட்டு இருட்டறைக்குள் உட்கார்ந்து சாப்பிடுவது போன்றதான் சூழல், சாப்பிட்ட இலையை எடுக்க வேண்டும் என்பதான பழைய பழக்க வழக்கங்கள், ஒரே மாதிரியான சாப்பாடு தயாரிப்பு முறைகள் என்று.....) இன்றைய தலைமுறையினர்க்கு ஈடுபாடு இருப்பதில்லை. ஃபோனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுவதிலும், வயிற்றையும் வாயையும் கெடுத்துப் புண்ணாக்கிக் கொள்வதிலும்தான் இன்றைய தலைமுறையினர்க்கு ஈர்ப்பு இருக்கிறது.

     பட்டுவுக்குப் பிடித்த பாட்டி மெஸ் அவள் அம்மாவுக்குப் பிடிக்காமல் போகிறது. சாம்பார் ஊளைத் தண்ணி, ரசம் அதவிட மோசம்....என்பதாக - அதைவிட பாட்டியின் அன்பான உபசரிப்பு கூட அங்கே எடுபட மறுக்கிறது. ஆனால் அந்த அரவணைப்பு குழந்தைக்கு உகந்தாகிறது. குழந்தையின் உணர்வு புரிந்து கொள்ளப்பட்டு மாமா அங்கே போய் டிபன் வாங்கி வர, குழந்தை திருப்தியுறுகிறது. அவன் அம்மாவும் திருப்தியுறுகிறாள். மூத்த தலைமுறையினரின் ஒத்த மன நிலையினை மெஸ்பாட்டி மூலம் முன் வைக்கிறார் ஆசிரியர். மெஸ்பாட்டி ரசித்து உணர வேண்டிய கதை.

     இம்மாதிரி மொத்தம் 29 கதைகள் சொல்லியிருக்கிறார்  எழுத்தாளர் ஜி.பி.சத்யா அவர்கள். குறைந்த அளவில் மூன்று நான்கு பக்கங்களில் அவரால் கதை சொல்லப்பட்டிருப்பதால் ஒரு தொகுதியில் 150 பக்கங்களில் இத்தனை எண்ணிக்கையிலான கதைகளைக் கொண்டு வர முடிகிறது. நிறைய அனுபவங்களின் சேகரிப்பு அவருக்கு இந்தத் துடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

     சண்டிகாரில் பான் பூரி சாப்பிட்ட அனுபவம், திருச்சி பான்பூரிக் கடையில் நிற்கும்போது அவர் நினைவுகளில் எழுந்து நெருடுகிறது. எப்போதும் வாழ்வின் முதல் அனுபவங்கள் நம் நினைவுகளில் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். புதிதான முதல் அனுபவங்கள் என்றுமே மறப்பதில்லை. அம்மாதிரியான பல அனுபவங்களைக் கொண்ட கதைகளை இத்தொகுதியில் சேகரித்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். சந்திக்கும் மனிதர்களின் உள் மன ஓட்டங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் அவருக்கு நிரம்ப வாய்த்திருக்கிறது. அவர்களுடனான அனுபவங்களை நினைவில் சேகரித்து வைத்துக் கொள்ளும் தன்மையும் உள்ளது. ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் எளிய மனிதர்களின் தொடர்புடையதான அனுபவங்கள்தான் அவனை மிகுந்த பக்குவமுள்ளவனாகவும், சிறந்த விவேகியாகவும் மாற்றும் திறன் கொண்டவை. இலக்கியம் அந்தப் பணியைச் செய்கிறது. அந்த மனப் பக்குவமும், குணப் பக்குவமும் வாய்க்கப் பெற்றவராக இந்தப் படைப்பாளி விளங்குகிறார் என்பதை இந்தத் தொகுதியிலுள்ள பல்வேறு அனுபவ முத்திரை கொண்ட கதைகளைப் படித்தறிகையில் நாம் உணர்கிறோம். விமர்சன நோக்கில் அல்லாமல், ரசனையின்பாற்பட்ட கருத்துரைகளையே இங்கே வழங்கியிருக்கிறேன். அதுதான் அழகியல் கொண்ட ஒரு இலக்கியப்படைப்பிற்கான ஆதாரம் என்று சொல்லலாம். அப்படியாக ஒரு புத்தகத்தை அளவிடுதல் என்பதே சிறப்பான பார்வையாக அமையும்.

     ஒன்று நிச்சயம். கல்கி, கதிர், குங்குமம் போன்ற வார இதழ்கள் இன்றும் கதைகளைப் பிரசுரித்து வருகின்றன. ஆனால் அவைகள் கேட்பது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான  வார்த்தைகளைக் கொண்ட கதைகளை அனுப்புங்கள் என்று. அதாவது 750 வார்த்தைகள், 1200 வார்த்தைகளுக்குள் என்று இயம்புகின்றன. சத்யாவின் கதைகள் இவைகளோடு கச்சிதமாய்ப் பொருந்துகின்றன. பிரபல வார இதழ்களில் கதைகள் வருவது பலரது கவனத்திற்கும் போகும்தானே? எழுதும் உற்சாகத்தையும் இதன் மூலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம். சத்யா இந்த முயற்சிகளைச் செய்து பார்க்க வேண்டும். சமீபத்தில் புதியதாக ஒரு தொகுதி இவருக்கு வந்திருக்கிறது என்று அறிகிறேன். அந்தத் தொகுதியின் மூலம் எழுத்தாளர் இன்னும் பலபடிகளில் மேம்பட்டு தன் படைப்புக்களை விஸ்தரித்திருப்பார் என்பது சர்வ நிச்சயம். ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பாளிக்கான காலம்  மெல்ல மெல்லக் கனிந்து கொண்டிருக்கிறது.

                           ---------------------------------

 

12 மார்ச் 2021

செல்லாத பணம் - நாவல் - இமையம் - “வாசிப்பு அனுபவம்” - உஷாதீபன்

செல்லாத பணம் - நாவல் - இமையம் - “வாசிப்பு அனுபவம்”  - உஷாதீபன்      



     ரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.  ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம். அந்தந்தக் கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்பினைக் கண்டு வியப்பது, நாவல் நிகழ்கின்ற கால கட்டத்தின் சமூக நடைமுறைகள், பேச்சு வழக்குகள், இயற்கை நிகழ்வுகள், சித்தரிக்கப்பட்டிருக்கின்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறைகள், கதை நிகழ்கின்ற சூழல் இப்படிப் பலவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது தீவிர வாசிப்பில் கட்டிப் போட்டு விடுகின்றன. அதனிலும் முழுக்க முழுக்க யதார்த்த உலகில் ஒரு நாவல் பயணிக்கிறதென்றால், அந்த உலகம் வாசகனுக்குப் பெரிதும் பரிச்சயமானதாய் அமைந்து போய்விட்டால், ஊடே தானும் நடைபயில்வது  என்பது எளிதான விஷயமாகி விடுகிறது. நாம் ஒன்று இப்படி எழுத முனையவில்லையே என்று நினைத்து ஏங்கும் அளவுக்கு கடைசிவரை கொண்டு நிறுத்திவிட்டுத்தான் ஓய்கிறது.

     இந்த நாவலுக்கான இரண்டு வரிக் கதையை இருநூறு பக்கங்களுக்குக் கொண்டு செலுத்த முடியுமா என்று நிச்சயம் எழுத ஆரம்பித்த அந்தக் கணத்தில் படைப்பாளிக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் இந்த சமூகத்திலுள்ள அன்றாட நிகழ்வுகள், அவலங்கள், நெறி கொண்டோரும், நெறி தவறியவர்களும் கலந்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்கின்ற நடைமுறை யதார்த்தங்கள்,  ஒழுக்கக் கேடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள், அதில் பாதிக்கப்படுவோரின் தீராத சோகங்கள், நிர்வாக நடைமுறைகளில் இருக்கும் சீர்கேடுகள், அதற்குஈடு கொடுக்க முடியாமல் சீரழியும், பலியாகும் எளிய மக்களின் பாடுகள்… இப்படிப் பலவற்றையும் ஒவ்வொன்றாக, பகுதி பகுதியாக நினைத்துப் பார்க்க முற்படுகையில் இதனை இப்படிச் சொன்னால்தான் அழுத்தம் பெறும், உறைக்கும், வாசக மனதில் தாக்கங்களை ஏற்படுத்தும், சமூகத்துக்கான எச்சரிக்கையாக அமையும், சமூக நீதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாகி உதவும் என்பதாகப் பலவும் ஆசிரியரின் எண்ணச் சிடுக்குகளில் வலம் வந்து தெளிவு பெற்றிருக்கலாம்.

பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட நாட்களில் மதிப்பிழந்த காகிதங்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த நோட்டுக்கள் கிழித்து எறியப்பட்டுக் கேட்பாரற்று வீதியோரங்களில் குப்பையாய்க் கிடந்த நாட்களில் மக்களில் பலர் பார்த்து வயிறெறிந்தும், சிரித்துக் கொண்டும் சென்ற காட்சிகள் எதுவுமே கூட வரப்போவதில்லை என்கின்ற இந்த அநித்தியமான வாழ்க்கையின் உண்மையைப் பரைசாற்றுவனவாக அமைந்தன. அதே சமயத்தில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக அது திகழ்வதைத் தவிர்க்க முடியாத வகையில் பயன்பட வேண்டிய நேரத்தில் வேண்டியவர் கையில் இல்லாமல் போவதும், தேவையில்லாதோர் கைகளில் அநாவசியமாய்த் தேங்கி நிற்பதும், தேவையுள்ளோர் கையில் மதிப்பின்றித் திகழ்வதும்,  கொடுக்கும் மனசிருந்தோர் ஆயினும், கேட்காமல் என்ன கொடுப்பது என்ற கௌரவத்தின்பாற்பட்ட விஷயமாய் நின்று புழக்கமின்றி அடைந்து போவதும், இந்தப் பணம் என்னென்னமாதிரியான மனநிலைகளையெல்லாம் ஏற்படுத்துகிறது, மனிதர்களை எப்படியெல்லாம் நல்லதற்கும் கெட்டதற்கும் ஆட்டி வைக்கிறது என்கின்ற சிந்தனைகளையெல்லாம் தூண்டி விட்டு  நம்மை நிலை கொள்ளாமல் அடிப்பதில் முக்கியப் பங்கு வகித்து நிற்கிறது என்கின்ற நிகழ் யதார்த்தம் நம்மால் புறந் தள்ள முடியாத உண்மையாய் நிலைக்கிறது.

பணம் எப்படி வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறதோ அதுபோல் அது இருந்தும் பயனில்லை என்பதான ஒரு சந்தர்ப்பத்தையும் அது அடைந்து நிற்கையில் மனித மனங்கள் சஞ்சலமின்றி விதியின் விளையாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.  அல்லது இதெல்லாம் விதி என்று எளிய மனம் அதற்கு விடை தேடி ஆறுதல் கொள்கிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று விதித்த விதி பற்றி அறியாமலேயே மனிதன் செயலில் முனையும் பொழுது, அத்தனை பாடுகளையும் வாங்கிக்கொண்டு அவனைச் சீரழித்து கடைசியில் அதுதான் வெல்கிறது. தன் செயல்களுக்கான முரண்கள் அத்தனையையும் ஒதுக்கி விட்டு கடைசியில் முடியாது தணிந்தகாலையில் விதியின் மீது பழியைப் போட்டுவிட்டு ஆறுதல் அடைகிறான் மனிதன்.

இந்த உலகில் நிச்சலனமாய் ஓடிக் கொண்டிருக்கும் அமைதியான வாழ்க்கையை அநாவசியமாய்க் கெடுத்துக் கொண்டு சீரழியும் மனிதர்கள் பலர். காரணம் அறியாமல் அல்லது அறிந்து அதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி அல்லது வெறுப்பில்தன்னைத்தானே நொந்து கொண்டு எதிர்மறையாய்ப் பேசி, எதிர்மறையாய் நடந்து மேலும் மேலும் தவறிழைத்து. தன்னைத் தானே தன் இழி செயல்களின் மூலம் வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல் சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தி அவர்களின் நிம்மதியையும் குலைக்கிறான். தவறு செய்து விட்டோம் என்கின்ற மனசாட்சியின் உந்துதலில் எரிச்சல் பட்டு அதற்கான காரணங்களை எதிராளிகளின் மீது சுமத்தி அவர்களையும் நிம்மதியின்றி அடித்து, மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே தொடர்கிறான்.  தொடர்ந்த தவறுகள், இழி செயல்கள் ஒன்று அவனை அல்லது அவனைச் சார்ந்தவர்களில் ஒருவரை அல்லது சிலரைப்  பலி வாங்கும்போது அவனது தாகம் அடங்குகிறது. அல்லது வேறொரு முடிவிற்குக் கொண்டு நிறுத்துகிறது.

இந்த நாவலில் நிகழும் ஒரேயொரு சம்பவம் அதன் அத்தனை கதாபாத்திரங்களையும் உலுக்கி விடுகிறது. அந்த சம்பவமும் அதன் தொடர்ச்சியான தொடர்புடைய நிகழ்வுகளும்தான் நாவலை படிப்படியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. சம்பவத்துக்கு ஆதரவான அல்லது ஆதரவில்லைபோல் சொல்லிக் கொள்கின்ற மற்றும் அதற்கு எதிரான மனிதர்களோடு நாமும் கூடவே கடைசி வரை பயணிக்கிறோம்.

குடும்பத்தினர் விரும்பாத ஒருவனைப் படித்த மகள் சிற்சில கட்டாயத்தின்பேரில் ஏற்றுக் கொள்ள, தவிர்க்க இயலாத நிலையில் பெற்றோர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விட்டு விலகிக் கொள்கிறார்கள். நீயே கதி, நீயின்றி எனக்கு வாழ்க்கையில்லை என்று ஒருவகையான வன்முறையை அவள் மீது  விடாது அவன் திணித்திடும்போது அந்த வன்முறை தந்த மனச் சிக்கல்களில் உழன்று இப்படி ஒருவன் தன்னை நாடி வாழ்க்கையைச் சீர் குலைத்துக் கொள்கிறானே என்கிற பெண்ணுக்கேயுரிய இரக்க சுபாவத்தில் மனம் நெகிழ்ந்து அவள் அவனை ஏற்றுக் கொள்கிறாள். எந்தவகையிலும் ஒரு பெண்ணுக்குத் தகுதியானவன் அல்ல அவன் என்று பகிரங்கமாய் உணர்ந்திருந்தும், தன் மீது அவன் கொண்டிருந்த வெறித்தனமான பிரியமும், காதலும் கண்டு கசிந்து உருகி, தன் வாழ்க்கையின் தியாகமாய் அது இருந்தாலும் போகட்டும் என்று அவனை அவள் அடைந்து விட, பிறகும் வெவ்வேறு ரூபங்களில்  அவனின் ஆட்டங்கள் தொடர்கின்றன. அவளின் தவறான முடிவு  விபரீதத்தில் கொண்டு விட்டு விடுகிறது.

தான் மோசமானவன்தான் என்றாலும், தன்னை தன்னுடைய குற்றங் குறைகளோடு ஏற்றுக் கொள்ளாதவர்களை அவன் வெறுக்கிறான். தன்னைச் சார்ந்தவர்களே அதைச் சுட்டிக் காட்டும்பொழுது மனிதத் தன்மையற்றவனாய், மிருகத் தனமாய் மாறி விடுகிறான். தவறு செய்கிறோம் என்று உணர்ந்திருந்தும், அதிலிருந்து வெளிவர முடியாதவனாய் அந்தத் தவறுகளின்மேல் எரிச்சல்பட்டு, தன்னைத் தானே வெறுத்தவனாய் அதிலிருந்து மீள முடியாமல், அதனை நியாயப்படுத்தி, அதற்கு பிறர் மேல் குற்றம் சுமத்தி, தன் மனதுக்கு ஒவ்வாத சமாதானம் தேடி, அதிலும் நிம்மதி அடைய முடியாதவனாய் மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் சாதாரணனாய்க் கிடந்து சீரழிகிறான்.

பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் தீவிரமாய் அவனால் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறையைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டு, அவனையும் தன் அன்பினால் நல்வழிப்படுத்த முடியாமல், சந்தோஷமான வாழ்க்கையையும் வாழ ஏலாமல், நாளும் பொழுதும் அடுத்தவரை நாடி நிற்கும் நிலைக்கு மானம் கெட்டு, மதி கெட்டுத் தள்ளப்பட்டு கேவலப்படுகையில் இப்படி ஒரு அவலத்தைத் தேடிக் கொண்டதற்கு முழுப் பொறுப்பு தானே என்கின்ற முடிவினில் தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் அவளின் நியாயம் அவனை அப்பொழுதேனும் புரட்டிப் போடுகிறதா என்றால் அதற்கும் பலனில்லாமல்தான் போய்விடுகிறது.

நா செய்யல….நா கொளுத்தல…. இந்த ரெண்டு வார்த்தைகளைத்தான் கடைசிவரை சொல்கிறான். அவள் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாளா அல்லது அவன் தீ வைத்ததை மறைக்கிறாளா என்பது கடைசிவரை தெளிவு படுத்தாவிடினும் தெரிந்து போய்விடுகிறது. ஆனாலும் இந்த நிகழ்வு அப்படித்தான்  போகும் என்பதில் ஆசிரியர் உறுதியாக நிற்பது நம்மையும் திருப்திப்படுத்துகிறது. பெற்றோர்களின் நல்ல வார்த்தைகளைப் புறக்கணித்து தான் வலியத் தேடிக் கொண்ட அவலத்தை உணர்ந்து, நொந்து இனியும் தன்னால் அவர்களுக்கு எந்தக் கேடும் வந்து விடக் கூடாது என்று கடைசியில் அவள் தன் வாக்குமூலத்தை வெகு சாமர்த்தியமாய் வழங்குகிறாள்.

மதியம் மூன்று மணிக்கு சமைத்துக் கொண்டிருந்தேன். அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. உப்பு பாட்டிலை எடுக்கத் திரும்பினேன். மேடையிலிருந்த மண்ணெண்ணெய் கேன் சாய்ந்து குழம்பிலும் அடுப்பிலும் கொட்டியதும் தீ பிடித்துக் கொண்டது. நான் கத்தினேன். டி.வி. பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் ஓடிவந்து என் மீது தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தார்.  சாக்கை என் மீது போர்த்தி மருத்துவமனைக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். தீ விபத்து எதிர்பாராதவிதமாய் நடந்தது. நான் கொளுத்திக் கொள்ளவில்லை. என் கணவரும் என்னைக் கொளுத்தவில்லை….இதற்கு யாரும் காரணம் இல்லை.

கையில் பத்து லட்சம் பணத்தை வைத்துக் கொண்டு வழக்கு நடத்த அலையும் தந்தை நொந்து போகிறார். இந்த நெலமைலயும் என்னைத் தலை குனிய வச்சிட்டா…சாவட்டும்…அவ சீக்கிரம் சாவறதுதான் நல்லது. புருசன் ஆச போவலை அவளுக்கு. ரோட்டுப் பொறுக்கிக்கே இம்மாம் விசுவாசம்…. என்று பொது இடத்தில் கதறுகிறாள் தாய்.

அந்தப் பொண்ணு தப்புப் பண்ணல. சரியாத்தான் செஞ்சிருக்கு…அவனுக்கு விடுதலயக் கொடுக்கல…சாகுற மட்டும் தண்டனையைக் கொடுத்திருக்கு…இனி ஒவ்வொரு நிமிஷமும் அவன் சாவான். ஒங்க பொண்ணு நல்ல பொண்ணு …கொலகாரனயே காப்பாத்தி விட்டிருக்கு….நல்லவங்களுக்குத்தான் அந்த மாதிரி மனசு வரும். ஒரு உசுரக் கொன்னுட்டான் அவன்…ரெண்டு உசுர அநாதையாக்கிட்டான்.எந்தத் தாயும் பெத்த புள்ளைங்களை விட்டிட்டு சாவ மாட்டா…மீறி சாகுறான்னா அவ மனசு எப்பிடி வெந்திருக்கும்? எனக்குத் தெரியும்…நான் பட்டிருக்கேன்….- கான்ஸ்டபிள் ஆனந்தகுமாரின் இந்த வார்த்தைகள் விளக்கமாய் முன் வைக்கப்படும்போது  ரேவதியின் தாய் தந்தையரோடு சேர்ந்து நாமும் அழுகிறோம்.

இந்த நாவலிலேயே இரண்டு உச்ச கட்டமான, மிக முக்கியமான  இடங்கள் நம் கவனத்தை அதி தீவிரமாய் ஈர்ப்பவை.  ஒன்று…ரேவதியின் கணவன் ரவி தன் சார்பாய் எடுத்து வைக்கும் நியாயம்… இன்னொன்று கடைசியாய் தாய் அமராவதி தன் பெண்ணின் வெந்த சடலத்தைப் பார்த்துக் கதறும் காட்சி.

இவ்வளவு புத்திசாலித்தனமாப் பேசுறானே…வெறும் ஆட்டோ ஓட்டுற இவன், இப்டிப் பேச எங்க கத்துக்கிட்டான்….இந்த புத்திசாலித்தனத்த நல்ல நடப்புக்கு மாத்தியிருந்தான்னா எல்லாரும் சந்தோஷமா இருந்திருக்கலாமே என்று மருமகள் அருண்மொழி நினைத்து வருந்துகிறாள்.

அத்தியாயம் 12 முழுக்க அவளுக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைகள் வெகு அற்புதம். அதை வெறும் எழுத்துத் திறன் என்று கொள்வதற்கில்லை. உண்மையிலேயே அந்த மாதிரி நடப்பியல் கொண்ட ஒருவன் எப்படியெல்லாம் பேசுவான் என்பதை அப்படியே வரிக்கு வரி வடித்தெடுத்திருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

ஐயப்பன் சாமி மேல சத்தியம்…நான் செய்யல…..

அப்டீன்னா அவ தீயே குளிக்கலேன்றியா…?

மண்ணெண்ணெய் ஊத்தியிருந்தா இவ்வளவு வெந்திருக்காது. ஆட்டோவுக்கு ஊத்துற டீசல ஊத்திக்கிட்டா…. என்று ஆரம்பிக்கிறது அவனின் வாய்மொழி…..நீ இப்டி ஆட்டோ ட்யூ கட்ட வச்சிருக்கிற பணத்தை எடுத்து செலவழிச்சா அப்புறம் நா செத்துடுவேன் என்கிற அவளிடம் சரி…செத்துப்போ…என்று விடுகிறான். ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்…வெளையாட்டுக்கு என்று விட்டுக் குலுங்கி அழுகிறான். பொறுக்கியா இருக்க எனக்கு மட்டும் என்ன ஆசையா? என்று கேட்கிறான். நான் பொறுக்கிதான்…ஆட்டோ ஓட்டுறவன்தான். தண்ணி அடிக்கிறவன்தான். அடிக்கடி சண்ட பிடிச்சி போலீஸ் போறவன்தான்…சோத்துக்கு இல்லாத நாயிதான்…இத்தன வருஷத்துல  ஒங்க யார்ட்டயாவது எதிர்ல நின்னு பேசியிருக்கனா…நீங்க எல்லாரும் பெரிய படிப்புப் படிச்சவங்க…பெரிய வேல…பணம் உள்ளவங்க…எல்லாம் இருக்கு உங்ககிட்ட. ஆனா பெரிய மனசு மட்டும் இல்ல…

தன்  கேள்விகளால் அருண்மொழியை அடித்து நொறுக்குகிறான் ரவி. நான் சல்லிப் பயதான். சல்லிப்பய சல்லிப் பயலாத்தான் இருப்பான்…ஆனா பெரிய மனுசன் பெரிய மனுசனா இருக்கணுமா இல்லியா? – அவனின் கேள்விகள் ஒவ்வொன்றும் நம்மையே உலுக்கி எடுத்து விடுகிறது. நான் தெனம் அவ ஒடம்புலதான் அடிச்சேன். நீங்க மனசுல அடிச்சுட்டீங்க….எங்கிட்ட பணம் இல்ல…ஒங்ககிட்டே இருந்திச்சி…அதனால நீங்க எம்மாம் அசிங்கப்படுத்தினாலும் அவ ஒங்ககிட்டே வந்திட்டிருந்தா… பணத்தாலதான் அவ அசிங்கப்பட்டா…இனிமே அந்த அசிங்கம் இல்லே…

அவள வேலைக்கும் அனுப்ப மாட்ட…நீயும் சம்பாரிக்க மாட்ட…சம்பாரிக்கிறதக் குடிச்சிப்புட்டும் வருவ…கடசில சட்டமும் பேசுவ… ஒனக்கு மூள பூராவும் கிரிமினலா இருக்கு….போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிப் போயி நல்லா கிரிமினலாப் பேசக் கத்துக்கிட்டே….- அருண்மொழி ஆத்திரம் தீர வார்த்தைகளை வீசுகிறாள்.

ஆட்டோகாரன ஏன் கட்டினேன்னு கேட்டு தெனம் தெனம் அசிங்கப்படுத்தினீங்க…அந்த அவமானம்தான் அவள எரிச்சிது….அத அவளுக்கு உண்டாக்கனது யாரு…. என்கிறான் அவன்.  ஒருத்தன் நொண்டியாப் பொறக்குறான்…ஒருத்தனுக்குக் கண்ணு தெரில…ஒருத்தன் கருப்பா இருக்கான்…ஒருத்தன் செவப்பா இருக்கான்…ஒருத்தன் நல்லாப் படிப்பான்…ஒருத்தனுக்கு படிப்பு ஏறாது…என்னா செய்ய முடியும்? அது மாதிரி எனக்கு வாய் அதிகம்…கோபம் அதிகம்…அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்கும் பொழுது அருண்மொழி சொல்கிறாள்.

திருடனுக்குத்தான் சட்டம் நல்லாத் தெரியும்….ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு நியாயம்…. என்ற மனதிலிருந்த கசப்பையெல்லாம் வார்த்தையாக்குகிறாள். ஒரு வக்கீல் போல் அடுக்கடுக்காக தங்கு தடையில்லாமல் எப்படி இவனால் இப்படிப் பேச முடிகிறது? ரேவதி தீக்குளித்தது பற்றி யாராவது கேள்வி கேட்டால், கேட்பவரின் வாயை அடைப்பதுபோல் தயாராய் பதில் வைத்திருக்கிறானே? என்று வியக்கிறாள்.

மூணு நாள் ரேவதியோட அப்பா பத்து லட்சத்தக் கைல வச்சிட்டு அலையுறாரு. இத முன்னாடி கொடுத்திருந்தா பத்து ஆட்டோ வாங்கியிருப்பன்…நானும் ஓனர் ஆகியிருப்பன்…ட்யூ கட்ட முடியாம தவிச்சிருக்க மாட்டன். சண்ட வந்திருக்காது…பணக் கஷ்டம் வந்திருக்காது….எங்கிட்ட இல்லாத மாதிரி ஒங்க கிட்டயும் பணம் இல்லாம இருந்திருந்தா…அவ தீக்குளிச்சிருக்க மாட்டா….என்று விட்டு என்னப் பெத்த அம்மா சாவப் போறாக்கா….என்று கதறுகிறான்.   படிக்கும் நாமும் கண் கலங்கி விடுகிறோம்…

இது நான் வெகு சுருக்கமாக இங்கு அளித்திருக்கும் விளக்கம். இமையம் விரித்திருக்கும் அழகைப் பார்த்தால் மனசு உருகி உருகி ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடுகிறது. இதுபோல் கடைசியில் ரேவதியின் எரிந்த பிரேதத்தைப் பார்த்து விட்டு அவள் தாய் அமராவதி கதறும் காட்சியும் நம்மால் மறக்க முடியாதது.

தூங்கிட்டியா அம்மா? தூங்கு…இனி ஒனக்கு எந்தத் தொந்தரவும் இல்ல…தப்பு செஞ்சிட்டோமேன்னு இனி நீ அழுவ மாட்ட…எந்த நாயும் இனி ஒன்ன அடிக்க முடியாது. அம்மாவுக்குத் தெரிஞ்சிருமோன்னு இனி நீ எதையும் மனசுல போட்டு மறைக்க வேண்டியதில்ல….எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்கன்னு யார்ட்டயும் கெஞ்ச வேண்டிதில்ல…இனி எந்த நாயும் ஒம் மூ!ஞ்சில காறித் துப்பாது…எந்தப் பொறுக்கி பேசுற கெட்ட வார்த்தையும் ஒங் காதுல விழாது….இனிமே எம் பொண்ணுக்குத் தூக்கந்தான்…இனி அவ வாய் பேசாது. ஒடம்பு அசயாது. அவ நிழலு மண்ணுல விழாது. ஒன் உசுரு அடங்குனா நல்லதுன்னு என் வாயலேயே சொல்ல வச்சுட்டியே…நீ சாவலடி…என் தங்கமே…உன் அம்மா செத்தாத்தான் நீ சாவே…என் உசுரு இருக்கு மட்டும் நீ என் நெஞ்சல இருப்பம்மா….எம் பொண்ணே நல்லாத் தூங்கு…என்று  இடைவெளியில்லாமல் அந்தத்தாய் புலம்பும் புலம்பல் நம்மையெல்லாம் உலுக்கி எடுத்து விடுகிறது.

இதைத்தான் ஆரம்பத்தில் நான் சொன்னேன். எந்த நாவலும் படித்து  இப்படி அழுததில்லை என்று. இந்த நாவலின் பலமே இந்த நாவலுக்கான அவலம்தான். அது நிகழும் இந்தச் சமுதாயச் சீர் கேடுதான். இதற்கு சமுதாயம் என்ன செய்யும்? என்று கேட்கலாம். அப்படி ஒரு தத்தாரியான பொறுக்கியை வளர்த்தெடுத்ததும், இப்படியொரு குடும்பப் பெண்ணைச் சீரழித்ததும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கௌரவமான குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துச் சீர் குலைத்ததும்…..இன்றைய சமுதாய நடைமுறைகளின் சீரழிவு அல்லாமல் வேறு என்ன? அங்கங்கே ஒவ்வொரு குடும்பங்கள் இம்மாதிரியான ஒழுக்கக் கேடான நிகழ்வுகளால் சீர் குலைந்து கொண்டுதானே இருக்கின்றன? நம்மால் மறுக்க முடியுமா?

இமையத்தின் இந்த நாவல் அவர் எழுத்தில் ஒரு இமயம்….!

                     ------------------------------------------------------------

 

    

 

11 மார்ச் 2021

ஏழாம்கடல் - ஜெயமோகன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் -----------------------------------------------------------

ஏழாம்கடல் - ஜெயமோகன் சிறுகதை - வாசிப்பனுபவம்  -  உஷாதீபன்                          -----------------------------------------------------------


     “எனக்குத் தெரியும்...அருமுத்து...அப்படி ஒரு முத்து ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு...நான் சிப்பி கொண்டுபோயி குடுக்குறது அதனாலேதான்...பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுப்படும்...கையிலே எடுத்துப் பாப்பாரு...முத்துன்னு தெரிஞ்சிரும்...“

     எத்தனை களங்கமற்ற, விகல்பமில்லாத மனசு வியாகப்பனுக்கு? நான்காம் வகுப்புவரைதான் படித்தவர். அவரோ மெட்ரிகுலேஷன் முடித்தவர். கல்வியா மனி தனை உருவாக்குகிறது? அதுவா ஒருவனை செப்பனிடுகிறது? அதுவா இந்த உலகத்தைக் காட்டுகிறது?  அது களங்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இல்லையென்றால் வியாகப்பனே அறியாத, ஏழாம் கடலின் ஆழமான நட்புக்கொண்ட அவருக்கு ஏன் அந்த உண்மை தெரியாமல் போனது?  அது ஏன் மறைக்கப்பட்டது? -ஜெயமோகனின் ஏழாம்கடல் இப்படிப் பல கேள்விகளை எழுப்புகிறது நமக்கு.

     எப்படிப்பட்ட மனிதனையும், எந்த நேர்மையாளனையும் புரட்டிப்போட்டு விடும் அந்தச் சூழல். இருந்து பார்த்தவருக்குத்தான் தெரியும். மனிதன் நேர்மை, நாணயம் என்று வாய் கிழியப் பேசித் திரிவதில் அர்த்தமில்லை. அப்படியான சூழலில் இம்மியும் பிசகாமல் இருந்து காட்டணும்! பிள்ளைவாள் பொதுப்பணித்துறைக்கு போய்ச் சேர்ந்ததும் இதற்கு ஒரு காரணமாய் இருக்குமோ? அதற்குத்தான் ஒரு கோடி காட்டுகிறாரோ?   இல்லையெனில் அந்த முத்து ஏன் மறைக்கப்பட வேண்டும்? பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியும்.....!

     கறி திங்கிறப்ப வாயிலே ஏற்கனவே தட்டுப்பட்டு விட்ட அந்த முத்து...அது வியாகப்பன் அறியாது பிள்ளைவாளுக்கு அளித்த  முத்து. அவருக்குச் சொல்லப்படாத அருமுத்து. ஒரு நாள் பிள்ளைவாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த வியாகப்பனின் ஆத்மார்த்த விருப்ப அடையாள முத்து. அவரறியாமல் பிள்ளேவாளிடம் வந்து சேர்ந்த முத்து.

     பாவம் மாதாவுக்கும் தெரியாது....சிக்கினது ஒரு துளி வெசமாக்கும்....மேலே சொர்க்கம்னு இருக்கும்லா? அங்க இருந்து பிள்ளைவாள் நினைப்பாரு... வியாகப்பன் நல்லவனாக்கும்னு...அவரு என்னைய வெறுக்க மாட்டாரு...பிள்ளே அப்படி வெறுத்துப்போட்டா...பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?

     என்ன ஒரு வரிகள்? இதற்கு மேல் ஒரு மனிதனின் அன்பை, நட்பின் ஆழத்தை, உறவுப் பாலத்தை எப்படி நினைக்க வைத்து உணரச் செய்ய முடியும்? மாதாவுக்கே தெரியாது அது என்று நினைக்கும் மனது வியாகப்பனுடையது. அவரின் பக்தி, அந்த நம்பிக்கை, அதில் பொதிந்திருக்கும் உண்மை, நேர்மை, சத்தியம் அத்தனையும் அந்த ஒரு வரியில் வெளிப்பட்டு விடுகிறதே...! அந்த இக்கட்டிலும் இறையருளை சந்தேகிக்கத் தயாரில்லை அவர். அது அவருக்கு, அந்த வெள்ளை மனதுக்குத் தெரியாத ஒன்று.

     வியாகப்பன் சத்தியவந்தன்...அவரது நேர்மையை, அன்பை, அப்பாவின் மீது உள்ள பாசத்தை சந்தேகிப்பதற்கில்லை...-பர்னபாஸின் அந்த மனசு. ஒருவருக்கு மிஞ்சி ஒருவர் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கை...அதன் ஆழம்.....நேர்மை உள்ளம்....

     என் அப்பா இப்ப நீங்களாக்கும்..என் அப்பா வேற...நீங்க வேற இல்லை...என்னை அனுக்கிரஉறிக்கணும்....-பர்னபாஸின் இந்த வரிகள் அந்த இருவரின் ஆழமான நட்பை,  அவர்கள் இளம் பிராயம் முதல் கொண்டிருந்த பாசமிக்க உறவை எத்தனை உயரமாய்த் தூக்கி நிறுத்துகிறது?

     நல்லா இருக்கணும்...நிறைஞ்சு வாழணும்.....-கண்களைக் கலங்கடித்த வரிகள். நிறைஞ்சு வாழணும்....வியாகப்பனின் ஆசி...விண்ணுலகுக்குப் போய்விட்ட பிள்ளைவாளையும் உடன் நிறுத்தி வழங்கப்பட்ட உளமார்ந்த, பரிபூர்ண வாழ்த்துகள்.

     ஏழாம் கடலின் ஆழம் இறைவனே அறியாதது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும், மாதாவுக்கும்கூடத் தெரியாது...தெரிஞ்சுக்கிடவே முடியாது...நான் அறிஞ்சு கொண்டு வரலை...விசம்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சாலும், இல்லேன்னாலும் அது நான் கொடுத்த விசம்....நான் கடலு கண்டவனாக்கும் பிள்ளே....

     அடுத்த நாளே வியாகப்பன் மறைகிறார்....ஏன்...அது அப்படி நடக்கிறது? சொர்க்கம் போய் பிள்ளேவாளிடம் அந்த சத்தியத்தைச் சொல்லியாக வேண்டும். அந்த அவசரம்தான் வியாகப்பனுக்கு. அவர்களின் அத்தனை வருடப் பாசத்தின், நேசத்தின் அடையாளம் அது. மனசாட்சி வியாகப்பனைக் கொண்டு சென்று விடுகிறது. அந்த நேர்மையான, இறைத்தன்மை வாய்ந்த மனசாட்சி பிள்ளேவாளுக்கு ஏன் வாய்க்கவில்லை? வாய்த்திருந்தால் அந்த முத்து ஏன் மறைக்கப்பட வேண்டும்? அது ஏன் வியாகப்பனுக்குத் தெரிவிக்கப்படாமல் போக வேண்டும்?

     ஏழாம் கடலின் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்.... என்று விளையாடிப் பார்த்திருக்கிறார் ஜெ. நெஞ்சை உருக்கிய அற்புதமான படைப்பை இன்று படித்த நிறைவு.  நன்றி

 

உஷாதீபன்

(94426 84188)