24 மார்ச் 2021

முகங்கள்-G.P.சத்யா - சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம் -

 

முகங்கள்-G.P.சத்யா - சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம் - உஷாதீபன்.         வெளியீடு:- வாதினி பதிப்பகம், கே.கே.நகர், சென்னை-78. 

     நாடறிந்த எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்குத்தான் பலர் இருக்கிறார்களே! நாமறிந்த எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்லியே ஆக  வேண்டும் என்கிற உந்துதலில் எழுத்தாளர் G.P. சத்யாவின் ”முகங்கள்”  சிறுகதைத் தொகுப்பினைக் கையிலெடுத்தேன். இப்புத்தகம் என் கைக்கு வந்தே ஆறு மாதங்கள் ஆயிற்று. இப்பொழுதுதான் இதற்கு நேரம் வாய்த்தது. எழுத்தாளர் பொறுத்தருள்க....!

     சத்யாவிடம் வேகம் இருக்கிறது. தோன்றும் கருவை உடனடியாகக் கதையாக்கிச் சொல்லிவிட வேண்டும் என்கிற துடிப்புமிருக்கிறது. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை இன்னொன்றின் மூலமாக உணர்த்துவதும், அதன் மூலம் படைப்பாளி சொல்லாததை வாசகன் கண்டடைவதும்தான் சிறுகதையின் தாத்பர்யம். அதைப் புரிந்து கொண்டு கச்சிதமாக எழுதுகிறார் சத்யா. அளவான வார்த்தைகள், அர்த்தமுள்ள உரையாடல்கள், செறிவான கருத்துக்கள் என்று குறைந்த பக்கங்களில் கதை சொல்லும்  திறன் அவருக்கு திறம்பட வாய்த்திருக்கிறது.  

     எழுத்தாளர்கள் ஊர் சுற்றினால் நிறைய அனுபவங்களைச் சேகரிக்கலாம். அவை கதைகளாக மாறும் வாய்ப்பு உண்டு. அப்படிக் கதை எழுதும்போதுதான் அந்த உற்சாகம் கரை புரளும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து அப்பா, அம்மா, பாட்டி, அக்கா தங்கை. தம்பி என்று உழன்று கொண்டிருந்தால் “முதல்ல இதத் தாண்டுய்யா...” என்று சொல்லத் தோன்றும். படித்துப் படித்து அலுத்தும் போகும். படைப்பாளி வெளி உலக அனுபவங்களை எழுத வேண்டும். அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் அநேகம். அவர்களின் வாழ்க்கைப் பாடுகளிலிருந்து எழுத நிறைய இருக்கும். அவற்றைப் படைப்பாக்க வேண்டும். எளிய மனிதர்களின் வாழ்வில்தான் எத்தனையோ மனம் கசியும் சம்பவங்கள் காணக் கிடைக்கும். அந்த நுண்ணுணர்வினைப் படைப்பாக்கும்போது மனித நேயமும், கருணையும் பொங்கி வழிய படைப்பின் மேன்மை புலப்படும்.

     சத்யா தன் அனுபவத்தில் அப்படி நிறையக் கண்டடைந்திருக்கிறார். வேலை வாய்ப்புக்கென்று நிறைய ஊர்களுக்கு அலைந்திருக்கிறார். வேற்று மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார். வெவ்வேறு மொழி பேசும், வேறு வேறு கலாச்சாரப் பழக்க வழக்கங்களுடைய மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். அவர்களின் பேச்சு முறைகளை, குண விசேஷங்களை நடவடிக்கைகளைக்  கண்ணுற்றிருக்கிறார். அதைத் தன் ஊரில், தன் மக்களோடு ஏற்பட்ட அனுபவத்தோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவமும், அதற்கும் இதற்குமான வேற்றுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை உணரும் தன்மையும் அவருக்கு சிறப்பாக வாய்த்திருக்கிறது. அப்படித்தான் அவரின் கதைகளெல்லாமும் அர்த்தபூர்வமாய் அமைந்திருக்கின்றன. சொந்த ஊரின் அன்றாட வாழ்வு அனுபவங்கள், வேலைக்குச் சேர்ந்த இடத்து அனுபவங்கள், வெளி மாநில அனுபவங்கள் என்று அவரது எல்கை விரிந்திருக்கிறது.

     ஒரு ஊர் நமக்குப் பிடிக்க முக்கிய காரணம் அந்த ஊரின் உணவு வகை என்று சொல்லலாம். அது இடறினால் ஊரும் இடறும். வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு கிடைக்காத இடத்தில் எத்தனை நாளைக்குக் குப்பை கொட்ட முடியும் என்ற கேள்வி எழுந்து எப்பொழுதடா இங்கிருந்து வண்டியைக் கிளப்புவோம் என்று மனதுக்குள் ஒரு பரபரப்பு வந்து விடும். புளிக்கும் ஜிலேபியை வாயில் வைக்கும் தருணம் நாயகனுக்கு ஊர் பிடிக்காமல் போகிறது. என்ன பண்ணியிருக்கே? நீயும் உன் சமையலும் என்று மனைவியிடம் சலிப்பதில்லையா? அந்தக் கதைதான்.

     பதினொன்றரைக்கு டீ/நிகோடின் ப்ரேக் என்று சுருங்கச் சொல்லத் தெரிந்திருக்கிறது.  சிகரெட்டின் நிகோடின் படிந்த உதடுகள் படிமமாக மனதில். அதனால்தான் அப்படி எழுதத் தூண்டுகிறது. மனதில் உள்ள ஒரு வெறுப்பும் காரணம். அடுத்தடுத்த வேலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. யு.ஆர்.லக்கி யங்மேன்...முதல் கதை....அந்த வயதில் அது உற்சாகம்தான். அரசுப் பணிக்கு அப்படிக் காத்துக் கிடந்த காலம் என ஒரு தலைமுறை உண்டு. சத்யா அப்படிப் பல தனியார் வேலைகளில் ஈர்க்கப்பட்டிருக்கிறார். பல நிறுவனங்களால் விரும்பப் பட்டிருக்கிறார். பலரால் விருப்பமாய் அழைக்கப்பட்டிருக்கிறார் என்று ஆசிரியரைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நேரத்துக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்கிற உத்வேகம் நமக்கும் இருந்திருக்கிறதே...அது கதையின் வேகத்திலும் கச்சிதமாய்ப் புலப்படுகிறது.

     வெவ்வேறு என்.ஜி.ஓ. பணிகளில் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி சுகாதாரம் என்பதை மையமாகக் கொண்ட செயல்பாடுகளும், முக்கிய பங்களிப்பாகக் கொண்டு அதற்கான நிதி ஆதாரங்களும் வெளி நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் அவற்றில் பாசிட்டிவான விஷயங்களே முன் வைக்கப்பட்டு அவையே வளர்ச்சிக்கான ஆதாரங்களாக எடுத்துரைக்கப்பட்டு என்.ஜி.ஓ. செயல்பாடுகள் தியாகத்தின் அடிப்படையிலான நற்பணிகளாக முன்னிறுத்தப்படுகின்றன.  முரணான. நெகிழ்வான விஷயங்கள் வலிந்து மறைக்கப்படுகின்றன. என்.ஜி.ஓ. அமைப்புகளின் நோக்கம் தொடர்ந்து விடுபடாமல் கூடுதலாக நிதி ஆதாரங்களைப் பெறுதல் என்கிற மையப்புள்ளியின் முனைப்பாகவே மாறி விடுகின்றன. பெருங்கூட்டம் இதை மையமாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

     ஆனால் இந்தப் பணியின் புள்ளி விபரங்களை சேகரிக்கும் சேவகர்கள், பணியாட்கள், அவர்களுக்கான  மனசாட்சியோடு செயல்படும்போது அல்லது மனசாட்சிக்கு முரணாக, பிழைப்புக்காக, நிறுவனத்தின் வற்புறுத்தலுக்காக செய்து விட்டு, உள் மனசாட்சியில் உழலும்போது  இப்படி ஒரு வேலையைக் கூலிக்காகச் செய்துதான் ஆக வேண்டுமா என்ற உறுத்தல் என்றாவது ஒருநாள் வரக்கூடும்.

     அந்த உறுத்தல் இந்தக் கதையின் நாயகனுக்கு வருகிறது. எதை எழுதக் கூடாது என்று மேலிடம் சொல்லியதோ எதை மறைக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளதோ அந்தந்த விஷயங்கள் நெருடலாகின்றன. நல்ல மனங்கள் இம்மாதிரி விஷயங்களில் உறங்குவதில்லை. அந்த நேர்மையுள்ளத்தை இந்தக் கதை தொட்டுச் செல்கிறது.

     பார்க்காத காட்சிகளாக மறைக்கச் சொன்னவை, பார்த்த காட்சிகளாக மனசைப் படுத்தியெடுக்கிறது. இந்த உலகத்தில் அநேக மனிதர்கள் இம்மாதிரி சமரசம் செய்து கொண்டுதான் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். உலகமே சமரசம் செய்யும் களமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை கோடிட்டுக் காட்டியிருக்கிறது ஆசிரியரின் “பார்க்காத காட்சிகள் என் பார்வைக்கு”.

     விரும்பிப் போனால் விலகிப் போகும். இக்கதையின் மெஸ் பாட்டி, பட்டுவின் அம்மாவுக்கு அப்படித்தான் விலகிப் போகிறாள். பொதுவாகவே பழைய சாப்பாட்டு மெஸ்களில் (அதாவது தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல், அந்தக் கால ஒற்றை மேஜை, நாற்காலிகள் போட்டு இருட்டறைக்குள் உட்கார்ந்து சாப்பிடுவது போன்றதான் சூழல், சாப்பிட்ட இலையை எடுக்க வேண்டும் என்பதான பழைய பழக்க வழக்கங்கள், ஒரே மாதிரியான சாப்பாடு தயாரிப்பு முறைகள் என்று.....) இன்றைய தலைமுறையினர்க்கு ஈடுபாடு இருப்பதில்லை. ஃபோனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுவதிலும், வயிற்றையும் வாயையும் கெடுத்துப் புண்ணாக்கிக் கொள்வதிலும்தான் இன்றைய தலைமுறையினர்க்கு ஈர்ப்பு இருக்கிறது.

     பட்டுவுக்குப் பிடித்த பாட்டி மெஸ் அவள் அம்மாவுக்குப் பிடிக்காமல் போகிறது. சாம்பார் ஊளைத் தண்ணி, ரசம் அதவிட மோசம்....என்பதாக - அதைவிட பாட்டியின் அன்பான உபசரிப்பு கூட அங்கே எடுபட மறுக்கிறது. ஆனால் அந்த அரவணைப்பு குழந்தைக்கு உகந்தாகிறது. குழந்தையின் உணர்வு புரிந்து கொள்ளப்பட்டு மாமா அங்கே போய் டிபன் வாங்கி வர, குழந்தை திருப்தியுறுகிறது. அவன் அம்மாவும் திருப்தியுறுகிறாள். மூத்த தலைமுறையினரின் ஒத்த மன நிலையினை மெஸ்பாட்டி மூலம் முன் வைக்கிறார் ஆசிரியர். மெஸ்பாட்டி ரசித்து உணர வேண்டிய கதை.

     இம்மாதிரி மொத்தம் 29 கதைகள் சொல்லியிருக்கிறார்  எழுத்தாளர் ஜி.பி.சத்யா அவர்கள். குறைந்த அளவில் மூன்று நான்கு பக்கங்களில் அவரால் கதை சொல்லப்பட்டிருப்பதால் ஒரு தொகுதியில் 150 பக்கங்களில் இத்தனை எண்ணிக்கையிலான கதைகளைக் கொண்டு வர முடிகிறது. நிறைய அனுபவங்களின் சேகரிப்பு அவருக்கு இந்தத் துடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

     சண்டிகாரில் பான் பூரி சாப்பிட்ட அனுபவம், திருச்சி பான்பூரிக் கடையில் நிற்கும்போது அவர் நினைவுகளில் எழுந்து நெருடுகிறது. எப்போதும் வாழ்வின் முதல் அனுபவங்கள் நம் நினைவுகளில் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். புதிதான முதல் அனுபவங்கள் என்றுமே மறப்பதில்லை. அம்மாதிரியான பல அனுபவங்களைக் கொண்ட கதைகளை இத்தொகுதியில் சேகரித்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். சந்திக்கும் மனிதர்களின் உள் மன ஓட்டங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் அவருக்கு நிரம்ப வாய்த்திருக்கிறது. அவர்களுடனான அனுபவங்களை நினைவில் சேகரித்து வைத்துக் கொள்ளும் தன்மையும் உள்ளது. ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் எளிய மனிதர்களின் தொடர்புடையதான அனுபவங்கள்தான் அவனை மிகுந்த பக்குவமுள்ளவனாகவும், சிறந்த விவேகியாகவும் மாற்றும் திறன் கொண்டவை. இலக்கியம் அந்தப் பணியைச் செய்கிறது. அந்த மனப் பக்குவமும், குணப் பக்குவமும் வாய்க்கப் பெற்றவராக இந்தப் படைப்பாளி விளங்குகிறார் என்பதை இந்தத் தொகுதியிலுள்ள பல்வேறு அனுபவ முத்திரை கொண்ட கதைகளைப் படித்தறிகையில் நாம் உணர்கிறோம். விமர்சன நோக்கில் அல்லாமல், ரசனையின்பாற்பட்ட கருத்துரைகளையே இங்கே வழங்கியிருக்கிறேன். அதுதான் அழகியல் கொண்ட ஒரு இலக்கியப்படைப்பிற்கான ஆதாரம் என்று சொல்லலாம். அப்படியாக ஒரு புத்தகத்தை அளவிடுதல் என்பதே சிறப்பான பார்வையாக அமையும்.

     ஒன்று நிச்சயம். கல்கி, கதிர், குங்குமம் போன்ற வார இதழ்கள் இன்றும் கதைகளைப் பிரசுரித்து வருகின்றன. ஆனால் அவைகள் கேட்பது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான  வார்த்தைகளைக் கொண்ட கதைகளை அனுப்புங்கள் என்று. அதாவது 750 வார்த்தைகள், 1200 வார்த்தைகளுக்குள் என்று இயம்புகின்றன. சத்யாவின் கதைகள் இவைகளோடு கச்சிதமாய்ப் பொருந்துகின்றன. பிரபல வார இதழ்களில் கதைகள் வருவது பலரது கவனத்திற்கும் போகும்தானே? எழுதும் உற்சாகத்தையும் இதன் மூலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம். சத்யா இந்த முயற்சிகளைச் செய்து பார்க்க வேண்டும். சமீபத்தில் புதியதாக ஒரு தொகுதி இவருக்கு வந்திருக்கிறது என்று அறிகிறேன். அந்தத் தொகுதியின் மூலம் எழுத்தாளர் இன்னும் பலபடிகளில் மேம்பட்டு தன் படைப்புக்களை விஸ்தரித்திருப்பார் என்பது சர்வ நிச்சயம். ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பாளிக்கான காலம்  மெல்ல மெல்லக் கனிந்து கொண்டிருக்கிறது.

                           ---------------------------------

 

கருத்துகள் இல்லை: