05 அக்டோபர் 2026

 

சிறுகதை    பிரசுரம் - உயிர் எழுத்து மாத இதழ் அக்டோபர் 2026

“மெய் வழி..!”        






            அளவுக்கதிகமாகப் பையனைக் கண்டித்துச் சத்தம் போடுகிறோமோ என்று விஷ்ணுவுக்குத் தோன்றியது.  தன் கோபம் அவன் மீதா அல்லது அவள் மீதா என்ற சந்தேகமும் எழுந்தது. இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லியும் அசைய மாட்டேனென்கிறாளே?  எனக்கு மட்டும்தான் இந்தப் பொறுப்பா, அவளுக்கில்லையா? ஒரு பாதி அவள் செய்தால் மறுபாதி நான் செய்து முடிக்க மாட்டேனா? இப்படிக் கண்டு கொள்ளாமல் இருந்தால் எப்படி?

            ஒரு வேளை தான் சொன்னது அவளுக்குப் புரியவில்லையோ? புரியவில்லையா அல்லது புரியாததுபோல் கிடக்கிறாளா? நேரடியாய் மட்டையடி அடித்தால்தான் மண்டையில் ஏறுமா? எரிச்சலாய் வந்தது விஷ்ணுவுக்கு.

            விடுப்பா…எல்லாம் போகப் போகச் சரியாகும்…சண்டையைக் கிளப்பாதே காலங் கார்த்தாலே… என்றார் நம்பிராஜன். தான் சத்தமின்றிப் பேசுவதன் மூலம் அவன் குரலைக் குறைக்கப் பார்த்தார்.  ஆனால் விஷ்ணுவின் சத்தம் தணிந்தபாடில்லை. கையை மெதுவா…மெதுவா…என்று கீழ்நோக்கி அழுத்தி சைகை செய்தார் நம்பிராஜன்.

            அப்படியில்லப்பா…அவளுக்கும் பொறுப்பு இருக்குன்னு தெரிய வேண்டாமா? இப்டியே தினசரி காலைல டென்ஷனாகிக் கத்திக்கிட்டிருக்க முடியுமா? அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சு… பையனைப் பல் தேய்ச்சு, குளிப்பாட்டி எங்கிட்ட அனுப்பலாமில்ல…நான் டிபன் கொடுத்து, யூனிஃபார்ம் மாட்டி ரெடி பண்ணி ஸ்கூல் அனுப்பிட மாட்டேனா? எத்தனை நாள் ஆட்டோக்காரன் வந்து காத்துக்கிட்டிருக்கான்? ஒரு நாளைக்காவது வண்டி வர்றதுக்கு முன்னாடி இவனை ரெடி பண்ண முடியுதா? இத்தனையையும் கண்ணாரப் பார்த்துக்கிட்டே அவபாட்டுக்குக் கிளம்பிப் போனா எப்படி? அவளுக்குப் பொறுப்பில்லையா? பெத்துப் போட்டதோடு சரியா? -படபடவென்று பொரிய ஆரம்பித்தது அவரைப் பதட்டமடைய வைத்தது.

            கத்தாதே…கத்தாதே…விட்டுத் தள்ளு…தானா உணர்ந்து செய்வா ஒரு நாள்…அதைச் சொல்லிக் காண்பிச்சாக் குத்தமாத்தான் படும். சண்டைதான் மிஞ்சும். அப்புறம் ஓ..ன்னு அழ உட்கார்ந்திடுவா…இப்போ காரியத்தைப் பாரு…அவன் ஸ்கூல் போறதுதான் முக்கியம். எங்கிட்ட அனுப்பு…நான் யூனிபார்ம் மாட்டி விடுறேன்….

            நீங்க ஏம்ப்பா செய்றீங்க? இத்தனை வருஷம் கஷ்டப்பட்டது போதாதா? அஞ்சு மணிக்குத் தவறாம எழுந்து அடுப்படில சாகறா அம்மா…! தினசரி குழந்தைக்கு விதம் விதமா டிபன் தயார் பண்ணி, பழம் நறுக்கி வச்சு… செய்றது பத்தாதா? அதுவே எனக்குப் பிடிக்கலை…உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய வயசில..இது உங்க ரெண்டு பேருக்கும் தேவையா? என் கூடவே இருக்கீங்கங்கிறதுக்காக தண்டனையா உங்களுக்கு?

            விவேக்….இந்தா லஞ்ச்….இந்த டப்பால ஆப்பிள் நறுக்கி வச்சிருக்கேன்…ரெண்டையும் எடுத்து பேக்குல வச்சிக்கோ….தண்ணி பாட்டிலும் வச்சிருக்கேன் பார்…. – சொல்லிக் கொண்டே பரபரவென்று  அவன் ஸ்கூல் பேக் எங்கே என்று கண்கள் தேட அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள் ராமலட்சுமி.

            ஓ.கே. பாட்டி….தேங்க்யூ….-பேரனின் இனிய குரலில் மயங்கிப் போய்…என் தங்கம்….பத்திரமாப் போயிட்டு வாடா குட்டி…பாட்டி குளிக்கப் போறேன்… - என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள் ராமலட்சுமி.

            அவ்வளவு நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது மாதிரியே தெரியவில்லை. விழுந்ததோ அல்லது தினமும் இருக்கிற பாட்டுத்தானே இது என்று விட்டு விட்டாளோ? எது எப்படியோ இருக்கட்டும் என்று எப்பொழுதும்போல் அம்மா தன் காரியத்தை விடாது முறையாகச் செய்து கொண்டிருக்கிறாள். அவள் அளவுக்கான மனோதிடமும், காரிய சித்தியும் யாரிடமும் பார்க்க முடியாது என்று பல சமயங்களில் தனக்குத்தானே நினைத்துக் கொள்வார் நம்பிராஜன்.

            தேவையில்லாமல் குழந்தை விவேக்கை விரட்டுகிறோமோ என்று மனது வருத்தப்பட்டது விஷ்ணுவுக்கு. தினமும் இந்த வேளையில் அவனை இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோமோ…அவனுக்கு இது பழகிவிட்டது போலும்…அல்லது அம்மாவிடம் காட்ட முடியாத கோபத்தை அப்பா தன்னிடம் காட்டுகிறார் என்று இந்த வயசிலேயே புரிந்து கொண்டு விட்டானா? நினைக்கவே வெட்கமாய் இருந்தது.

            ஆண்மையுள்ளவன்னா குழந்தை பெறுவது மட்டும்தான்னு நினைச்சிட்டியா? ஆளுமை உள்ளவன்தான் ஆம்பளை. அதத் தெரிஞ்சிக்கோ. சொல்ல வேண்டியதைச் சொல்லாதவன் என்ன ஆம்பளை? அதை எந்த வழில சொன்னா எடுபடும்ங்கிறது உனக்குத்தான் தெரியணும்.  கோபமாச் சொன்னாத்தான் மண்டைல ஏறும்னா அப்படித்தான் சொல்லியாகணும். அநாவசியமாத் திட்ட வேண்டாம். தேவையானதை சொல்ல வேண்டாமா? அவளுக்கு இதெல்லாம் தெரியாம இருந்ததுன்னா? பிறந்த வீட்டுல சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தாத்தானே எதுவும் தெரியும்? இன்னொரு வீட்டுக்குப் போகுற பொண்ணை அப்படித்தான் வளர்க்கணும்ங்கிறதுதான் முறை. இப்பத்தான் எல்லாம் மாறிப் போய்க் கிடக்கே?  பொம்பளப் பிள்ளைங்க படுக்கையை விட்டு எழுந்திரிக்கிறதே பத்து மணின்னு ஆயிப்போச்சே? வேலை பார்க்குற பிள்ளைங்க அப்படித்தான்னு வேறே பதில் வருது?

            அப்போ கல்யாணம் ஆன பிறகுமா அப்படியே இருக்கிறது?  குழந்தை பெத்த பிறகும் பழைய மாதிரியே இருப்பாங்களா? இப்போ நான் இல்லே? எனக்கு மட்டும் யாரு சொல்லிக் கொடுத்தாங்க? நானாத்தானே செய்றேன்…அதுபோல அவளும் தன் குழந்தைக்குத் தான்தான் செய்யணும்னு நினைக்க வேண்டாமா?

            அவன் கேட்பது சரிதான் என்றாலும்…மாமனாரும், மாமியாரும் கூட இருப்பதே ஒரு சலுகையாக அவள் கருதலாமில்லையா? அதற்கும் வாய்ப்பிருக்கிறதே? ஆனாலும் வேலைகள் கற்றுக் கொள்ள வேண்டாமா? நாளைக்குத் தனிக் குடித்தனம் போனால் எப்படி சமாளிப்பதாம்? அதற்கு இங்கேயே பழகிக்கொள்வதுதானே முறை? அதற்கான வாய்ப்பு இருக்கும்போது தவறவிடுவது சரியா? செய்யட்டுமே…நமக்கென்ன வந்தது? என்று நினைக்கிறதோ அந்தப் பெண்? கற்றுக் கொள்ள மறுப்பது தவறில்லையா? அது சோம்பேறித்தனத்தைத்தானே வளர்க்கும்? சண்டி மாடாய் வளர்ந்திருந்தால் அல்லது வளர்த்திருந்தால் அதை வண்டி மாடாய் மாற்றுவதுதானே சரி? அந்த வேலையை யார் செய்வது? இவன்தானே செய்தாக வேண்டும்? உரிமை அவனுக்குத்தானே!

            கீழே இருந்து வாழ் வாழ் என்று கத்துபவன், மாடிக்குச் சென்று ஏன் நேரடியாக அவள் முகம் பார்த்துப் பேசத் தயங்குகிறான்? பயப்படுறானோ?

            தெரியாதவங்களுக்குச் சொன்னாத்தாம்ப்பா புரியும். சொல்லிச் சொல்லித்தான் திருத்தணும்…

            என்னப்பா நீங்க பேசறது? அவ என்ன சின்னப் பிள்ளையா? கழுத வயசாச்சு…இதெல்லாம் சொல்லிக் கொடுத்துத்தான் தெரிஞ்சிக்கணுமா? தானாத் தெரிய வேண்டாம்? தன் பிள்ளைக்குத் தான் செய்யணும்ங்கிற அக்கறை இருந்தா, தானா வருது…!  தான்தான் செய்யணும்ங்கிற பிடிவாதம் வேண்டாமா? எனக்கென்னன்னு இருந்தா? சோம்பேறிங்கிறேன் நான்…அதுக்கும் அவளுக்குச் சுரணை இல்லை…

            அப்போ நீதான் சொல்லணும்….அதுதான் சரியாயிருக்கும். நாங்க சொல்லக் கிளம்பினா…அது சண்டைலதான் முடியும்…நிச்சயம் தப்பாத்தான் படும். மாமனார், மாமியார் கொடுமைன்னு போய் நிற்கும். ஈரப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்க எவ்வளவு நேரமாகும்? அது தேவையா? அந்தப பாயின்ட்ல அவ போய் நின்னான்னு வச்சிக்கோ…கோர்ட்டுல கூட அதுதான் எடுபடும். இந்தக் காலம் அப்படி…அதுதான் எங்க பார்த்தாலும் பெண் சுதந்திரம், பெண்ணுரிமைங்கிறாங்களே…!!  இந்த ஐ.டி. கலாச்சாரம் வந்த பிறகு பலதும் இப்படித்தான் மாறிப் போய்கிடக்கு…பெண்களோட டிரஸ் கோடே கன்னா பின்னான்னு ஆயிடுச்சு…அதை யாராச்சும் கண்றாவி, அசிங்கம்னு இன்னைக்குச் சொல்ல முடியுமா?  சொல்றவன் கிறுக்கன்.  வீட்டுக்குள்ளயே பெண்கள் அப்படித்தான் அலையுறாங்க…அந்தக் காலத்துல பொண்ணு பெரியவளானா அதுக்கப்புறம் பெத்த அப்பாகிட்டயே தூண் மறைவுல நின்னுதான் பேசுவாங்க. அதுக்கப்புறம் கல்யாணத்துல தாரை வார்த்துக் கொடுக்கிறபோது மடில  அமர்த்திக்கிறதுதான். அந்த சம்பிரதாயமாவது இன்னைக்குத் தேதிக்குக் கண்டின்யூ ஆகுதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டிதான். மத்தப்படி வேறே எதுவும் சொல்றதுக்கில்லே… எதையும் கண்டும் காணாமப் போக வேண்டிதான். அப்பத்தான் வீட்டுல உள்ள பெரிசுங்க தங்களோட மதிப்பைக் காப்பாத்திக்க முடியும்.  பாரு…எங்கள நாங்களே பெரிசுன்னு சொல்லிக்க வேண்டியிருக்கு? இந்த அவலம் எங்கயாச்சும் உண்டா?  ஊரு உலகத்துல இப்போ அதுதானே வயசானவங்களுக்கான பேரு…! என்னமோ இவங்களுக்கெல்லாம் வயசே ஆகாதுங்கிற மாதிரி…நித்திய மார்க்கண்டேயன் மாதிரி….. – ஒரு லெக்சரே அடித்து ஓய்ந்தார் நம்பிராஜன்.

            என்றோ எவ்வளவோ பேசியாயிற்று விஷ்ணுவர்த்தனிடம். அவனுக்கு எல்லாமும் புரியாமலில்லை.  ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் மனைவியிடம் நேரடியாய்ப் பேச. தாங்க முடியாமல் அவ்வப்போது புலம்பிக் கொண்டுதான் இருக்கிறான். ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்ட பசங்க இப்படித்தான் இருப்பாங்களோ? சந்தேகம் வந்தது இவருக்கு.  . அர்த்தமில்லாமல் பையனிடம் கோபப்படுகிறான். இவனின் திடீர்க் கோபத்திற்கு அந்தப் பிஞ்சு உள்ளம்  அடிக்கடி ஆளாகிறது. அதைப் பார்த்தாவது சுரணை வர வேண்டாமா?  யாரையோ யாரோ திட்டுகிறார்கள் என்பதுபோல் இருந்தால்? என்ன மைன்ட் செட் இது? எப்படியான வளர்ப்பு இது?

            அப்பா…ஆட்டோ வந்தாச்சு….. – சொல்லிக்கொண்டே முதுகில் பையை ஏற்றிக்கொண்டு கையில் லஞ்ச் பேக் சகிதமாய் சிறுவன் விவேக் பாய்ந்தோடுவது நம்பிராஜனைப் பயப்படுத்தியது.

            மெதுவாடா குழந்தே…ஆட்டோ நிற்கும். உன்னை ஏத்திண்டுதான் போவார். பதட்டப்படாமே போ….என்று கத்தினார்.

            ஷூவை சரியாய்க் கூடத் துடைக்கவில்லை. மாட்டியிருந்த சாக்சும் தொள தொளவென்று இருப்பதைக் கண்டான் விஷ்ணு. இதையெல்லாமாவது பாங்காய் எடுத்து வைக்கக் கூடாதா? கையில் கிடைத்ததை எடுத்து மாட்டி அனுப்பும் அவதியாயல்லவோ இருக்கிறது? மனதுக்கு உறுத்தலாகவே இருந்தது விஷ்ணுவர்த்தனுக்கு.

            இந்த மாதிரிப் ஒய்ஃப்பை வச்சிக்கிட்டு இன்னொண்ணு பெத்துக்கலாம்னு தப்பித் தவறிக் கூட நினைச்சிடாதே…சொல்லிப்புட்டேன்…அப்புறம் உன் பாடு படு திண்டாட்டமாப் போயிரும்…ஞாபகம் வச்சிக்கோ…. – அது அவர்கள் விருப்பம் என்று இருக்க முடியவில்லை நம்பிராஜனுக்கு. சொல்வதைச் சொல்லி வைப்போம் என்று ஒரே ஒரு முறை இதையும் சொல்லித் தீர்த்து விட்டார். அவனிடமிருந்து எதிர்வினை ஏதுமில்லை. அதுவே சந்தேகமாய் இருந்தது இவருக்கு. என்னவோ பண்ணிக்கட்டும்…நமக்கென்ன என்று பிறகு விட்டுவிட்டார்.

 இதிலெல்லாம் ஒரு அளவுக்கு மேல் தலையிடக் கூடாது. நாம இருக்கப் போறது இன்னும் கொஞ்ச காலம். இன்னைக்கோ…நாளைக்கோ…அது ஆண்டவன் சித்தம்…எதுக்கு இதிலெல்லாம் மூக்கை நுழைச்சிட்டு?

            என்னைக் கொஞ்சம் பஸ் ஸ்டாப்புல விட்டுடறீங்களா? – கேட்டுக் கொண்டே மாடிப் படி இறங்கி விலாசினி வருவது தெரிந்தது. இன்றைய பாடு கழிந்தது…எதற்கு வீண் பேச்சு….என்று நினைத்துக் கொண்டே பதில் எதுவும் சொல்லாமல் போய் வண்டியை வாசலுக்கு இறக்கினான் விஷ்ணு.

            செருப்பை மாட்டிக் கொண்டு  படியிறங்கிக் கீழே வந்தவள்..கொஞ்சம் முன்னாடி நகருங்க…எனக்கு இடம் பத்தல….என்றவாறே பின் சீட்டில் அமர்ந்தாள்.

            வண்டியை ஆக்ரோஷத்தோடு கிளப்பியவன், நகர்ந்தபின்  தலையைத் திருப்பி அவளிடம் கேட்டான்.

            போயிட்டு வர்றேன்…னு அப்பாம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுக் கிளம்பத் தெரியாதா உனக்கு?

            விலாசினி இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பதிலாக அவள் வலது கை அவன் தோளில் படிந்து அழுத்தியது. அந்த சிலிர்ப்பில் அவன் வாய் அத்தோடு அடைத்துப் போனது.

                                                -----------------------------------

           

                                

கருத்துகள் இல்லை: