12 பிப்ரவரி 2026

 

“அநாமதேயர்கள்“             உயிர் எழுத்து மாத இதழ் பிரசுரம் - பிப்ரவரி 2026

சிறுகதை





               கார்ப்பொரேஷன் ஆபீஸ்ல போய்ச் சொல்லுங்க…..-எடுத்த எடுப்பில் இப்படித்தான் பதில் வந்தது அவர்களிடமிருந்து. மேஜையிலிருந்த ஏதோ பேப்பரை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தது அந்தப் பெண். மேற்கொண்டு கேட்க விருப்பமில்லை என்பது போலிருந்தது.

அந்தப் பேப்பர்கள், வந்திருக்கும் மனுக்களோ என்று தோன்றியது. தானும் இப்படியொன்று எழுதிக் கொண்டு வந்து நீட்டியிருக்கலாமோ என்று நினைத்தார் வெங்கடாசலம். பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டு போகச் சொல்லியிருப்பார்கள். பிறகு அது என்ன ஆச்சு என்று அலைய வேண்டும். எங்கேயிருக்கிறது என்றே தெரியாது. தேடி எடுக்கவும் முடியாது. இன்னொண்ணு எழுதிக் கொடுத்திட்டுப் போங்க என்பார்கள் அசால்ட்டாக. வேறென்ன நடக்கப் போகிறது?

உங்ககிட்டத்தான் சொல்லணும்னு சொன்னாங்க…அதுனாலதான் புறப்பட்டு வந்தேன்…என்றார் வெங்கடாசலம்.  பன்னிரெண்டாவது வார்டு கவுன்சிலர் நீங்கதானே? என்றார் கூடவே.அந்தக் கேள்வி அதிகமோ என்று கேட்டவுடன்தான் தோன்றியது. காரியம் முக்கியம். பேச்சா?

அந்தப் பெண் இவரை நன்றாய் நிமிர்ந்து பார்த்தது. என்ன…பிரச்னை பண்ண வந்திருக்கீங்களா? என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை. கண்களில் சிமிட்டலின்றி தீர்க்கமாய் நோக்கினார் வெங்கடாசலம். இதிலென்ன தப்பிருக்கிறது? என்று தோன்றியது அவருக்கு. அவர் பார்வையில் எதிராளி எந்த அர்த்தத்தையும் உணர முடியாது. அப்படியொரு பார்வை வைத்திருக்கிறார் அவர்.

நான்தாங்க அந்த ஏரியாவுக்குக் கவுன்சிலர்..இல்லேங்கல…ஆனா நீங்க சொல்ற வேலையெல்லாம் கார்ப்பரேஷன்லதான் பார்ப்பாங்க…அங்க போய் ஒரு மனு எழுதிக் கொடுங்க…. …ஒரு பத்துப் பேர்ட்டக் கையெழுத்து வாங்கிச் சேர்த்துக் கொண்டு போய்க் கொடுங்க…என்னன்னு கவனிப்பாங்க…. …உங்க ஏரியாவுக்கு குடியிருப்போர் நலச் சங்கம் இருக்கில்ல….! அவுங்க என்ன செய்றாங்க…? அதன் மூலமா வரலாமே…?

அது இருக்கு மேடம்…அதுபாட்டுக்கு….இது நான் குடியிருக்கிற அபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட பிரச்னை….அதனாலதான் நேர்ல சந்திச்சுச் சொல்லலாமேன்னு வந்தேன்…

ஐயா…நீங்க வந்ததப் பத்தி நான் ஒண்ணும் குத்தம் சொல்லலை. உங்க நகர் நலச் சங்கத்து மூலமா வந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் எ.ஃபெக்டா இருக்குமேன்னு சொல்ல வந்தேன்….அபார்ட்மென்ட்களுக்கும் சேர்த்துதானே குடியிருப்போர் நலச் சங்கம்? இல்ல அபார்ட்மென்ட்களாச் சேர்ந்து தனிச் சங்கம் வச்சிருக்கீங்களா? – கேள்வி படு புதியது. இப்படியும் யோசனை தோன்றக் கூடும் என்பதாய் இருப்பதை உணர்ந்தார் வெங்கடாசலம்.

இன்னம் அதுவேறே  தனியா வேணுமா? மேடம்…நான் இங்க புதுசா வந்தவன். அஞ்சாறு வருஷம்தான் ஆகுது.  என் பேச்சையெல்லாம் அவுங்க கேட்க மாட்டாங்க…எங்க அபார்ட்மென்ட்லயே ஒருத்தர் இருக்கார்…அசோசியேஷன் ஆளுதான்…அவருக்குத் தெரியாதா இந்தச் சங்கடம்…தெரிஞ்சு என்ன பண்ண…கண்டுக்காம இருக்கார்…பிரச்னையைக் கையிலெடுத்தா மொத்தமும் தன் தலைல விடிஞ்சிடும்னு கம்முன்னு கிடக்கார்…என்ன செய்யச் சொல்றீங்க….? அந்த நலச் சங்கத்துல இ.சி. மெம்பர்னு நினைக்கிறேன்.

அப்ப நீங்க ஒத்தையாப் போய்த்தான் சொல்லணும்…சீக்கிரம் போய் மனுக் கொடுங்க…இல்லன்னா ஸ்க்வாடு வர்றபோது பார்த்திட்டு ஃபைன் போட்டுடப் போறாங்க…!

கார்ப்பரேஷன்காரங்க ஏற்கனவே வந்தபோது பார்த்து சொல்லிட்டுப் போய்ட்டாங்கம்மா…சீக்கிரம் கழிவு தண்ணி வழியறதச் சரி பண்ணுங்கன்னுட்டு நகர்ந்துட்டாங்க…

அவுங்ககிட்டயே சொல்லியிருந்தீங்கன்னா ஆட்களை அனுப்பிச்சிருப்பாங்களே…? ஒரே நாள்ல செய்து முடிச்சிட்டுப் போயிடுவாங்க…

அதக் கேட்கிறதுக்குள்ளதான் ஓட்டமெடுத்துட்டாங்களே…வேறே ஆட்கள் வருவாங்கன்னாங்க….புரியல…!அதான் உங்களைப் பார்த்துக் கேட்கலாம்னு வந்தேன்…

வேறே ஆட்கள்னா? டெய்லி வேஜஸ் ஆளுகளா? டெம்பரரியா சிலர் வேலை பார்க்குறாங்களே…அவுங்களச் சொல்றீங்களா?

அது எனக்கு எப்படிம்மா தெரியும்? நீங்கதான் சொல்லி ஆட்களை அனுப்புவீங்கன்னு நினைச்சு வந்தேன்…வந்தாங்கன்னா என்ன ஏதுன்னு பேசி, எவ்வளவு செலவு ஆகும்னு சொன்னாங்கன்னா அதத் தயார் பண்ண வசதியாயிருக்கும்…! நான் மட்டும் முடிவு பண்றதில்ல…ஆறு வீட்டுக்காரங்க இருக்காங்க…!

அந்தம்மாள் அமைதியாயிருந்தது. ஏதோ யோசனை செய்தது போலிருந்தது. சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போலவும் இருந்தது. இரண்டு முறை இவரை நிமிர்ந்து பார்த்துத் தலையைக் குனிந்து கொண்டது அதைத்தான் உணர்த்தியது.

ஆட்கள் வந்திருப்பாங்களே…? வரல்லியா? – மொட்டையாய் இப்படிக் கேட்டதும்…மனதில் நினைத்ததைச் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்தார் வெங்கடாசலம்.  

தான் சொல்ல நினைத்திருப்பதைக் கோபத்தில் ஏதேனும் வேண்டாத வார்த்தைகளில் சொல்லி விடுவோமோ என்று அவர் மனது தயங்கியது. அதே சமயம் சொல்லாமல் இருப்பதும் தவறு என்றுதான் தோன்றியது. எப்படி, எங்கு, எதில் ஆரம்பித்துச் சொன்னால் எடுபடும் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தது அவர் மனம்.

ரெண்டு மூணு ஆட்கள் வந்தாங்கம்மா….அதப்பத்திக் கேட்கலாமுன்னுதான்.……

வந்தாங்களா? அப்பப் பேசிற வேண்டிதானே?  டக்குனு வேலை முடிஞ்சிடுமே…..! கவுன்சிலரின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.

அவுங்க யாருன்னே தெரிலயேம்மா…எல்லாத்தையும் மொட்ட மொட்டையாப் பேசறாங்க…கேட்டா சரியாச் சொல்ல மாட்டேங்கிறாங்க…இந்த ஏரியா ஆட்கள்தான்னு சொன்னா என்னன்னு நினைக்கிறது? தனியாச் செய்றதுன்னா நாமளே கூலி ஆட்களைப் பிடிச்சுச் செய்திடலாமே?

கூலி ஆட்கள் எதுக்கு? பயந்துட்டீங்களா? இந்தப் பகுதில  பல வீடுகளுக்கு அவுங்கதான் செய்திட்டு வர்றாங்க….லூஸ் டாங்க் போடுறது…கழிவு தண்ணிய அதுல இறக்கி விடுறது…வடிகால் கட்டியிருக்காங்கல்ல…அத்தோட ஜாயின் பண்ணி விடுறது….இப்டியான வேலைகள செய்து கொடுத்திடுவாங்க….சும்மா பயப்படாமச் செய்யச் சொல்லுங்க…சட்டுன்னு வேல முடிஞ்சி போயிடும்…

இல்ல…அது சம்பந்தமாத்தான் உங்களோட பேசலாமுன்னு……-தயங்கியவாறே நிறுத்தினார் வெங்கடாசலம். மேற்கொண்டு விரிவாகச் சொல்லப் புகுந்தால் சண்டையில் கொண்டு விட்டு விடுமோ என்கிற தயக்கமிருந்தது அவரிடம். கேள்விப்பட்ட வகையில் அது ஒரு ஏற்பாடுதான் என்று மனதில் தோன்றியிருந்தது.

என்கிட்டப் பேச என்ன இருக்கு? வேலை செய்றவுக அவுக…அவங்க கிட்டப் பேசி முடிச்சிக்குங்க…முன்னப் பின்ன இருக்கத்தான் செய்யும்…கூட்டிக் குறைச்சுப் பேசி முடிச்சிக்க வேண்டிதான். அபார்ட்மென்ட்ல எல்லா வீட்டுக்கும் பிரிச்சித்தானே  கொடுக்கப் போறீங்க…? தைரியமாச் செய்ங்க…கார்ப்பரேஷன் ஆளுக திரும்ப வந்திடாம…..! அபராதம் போட்டாங்கன்னா கன்னா பின்னான்னு இருக்கும்…

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் வெளியேறினார் வெங்கடாசலம். அதற்கு மேல் வெளிப்படையாகப் பேச அவருக்கு வாய் வரவில்லை. கிளம்பும்போது இருந்த வேகம் முற்றிலுமாகத் தணிந்திருந்தது. கவுன்சிலர் யாருக்காவது அவராகவே பேசி ஆட்களை ஏற்பாடு செய்து கொடுப்பார் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது நடக்கவில்லை. அந்தம்மாவே அவர்களை இன்னார் என்று குறிப்பிட்டுப் பேசாமல் யாரோ என்பதுபோல் பேசியது இவருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. தன் ஆட்களைத் தானே காட்டிக் கொடுத்தால் எப்படி என்று யோசிக்கிறார்களோ என்னவோ? நமக்கு எதுக்கு அந்த வம்பு?

ஒரு வேளை தன் ஆட்கள்தான் என்று காட்டிக் கொள்வதில் தயக்கமிருக்கும் போலிருக்கிறது. அவரே அப்படி ஜாக்கிரதையாக இருக்கும்போது, பணத்தை வசூல் பண்ணிக் கொடுக்கும் இடத்தில் நிற்கும் தான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும்? யாரிடம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று ஒவ்வொரு வீட்டுக்காரனாய்க் கேட்பானே…அவர்களுக்கு என்ன என்று தீர்மானமான பதிலைச் சொல்வது?

இப்படி ரெண்டு மூணு கோஷ்டி திரியுதுங்க இந்த ஏரியாவுல…அவிங்கதான் செய்றானுங்க அங்கங்க இருக்கிற வீடுகள்ல…அத வச்சுதான் அவுங்களையே நாமளும் ஃபிக்ஸ் பண்ண வேண்டிர்க்கு….உங்க எல்லாருக்கும் சம்மதமா சொல்லுங்க…சம்மதம்னா பணத்தை அபார்ட்மென்ட் அக்கௌன்டுக்கு உடனடியா டிரான்ஸ்பர் பண்ணுங்க…இல்லன்னா விடுங்க…- இப்படிச் சொல்லி விடலாமா?

நினைக்கத்தான் முடிந்தது வெங்கடாசலத்தினால். நினைப்பதையெல்லாம் பேசி விட முடியுமா? வந்து மாட்டிக் கொண்டாயிற்று. வீட்டு ஓனர் என்று ஒரே ஒரு ஆள் மட்டும்தான் குடியிருக்கிறோம். மற்றதெல்லாம் வாடகை ஆட்கள்தான். அவர்களோட வாட்சப்பில் பேசிப் பேசிப் பொறுமையிழந்து நொந்து நூலாகிப் போயாயிற்று. ஒவ்வொரு காரியத்திற்கும் இழுபறிதான். ஒரு டியூப் லைட் மாற்றுவதென்றாலும் ஆயிரம் கேள்விகள். அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி மாய்வதற்குள் போனால் போகிறது என்று தன் செலவிலேயே ஒன்றை வாங்கி கமுக்கமாய் மாட்டி விட்டு  ஓய்ந்து விடலாம் போலிருக்கிறது.

அப்படியும் சில முறை செய்துதான் இருக்கிறார் வெங்கடாசலம். அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம் அவருக்கு.

ஏன்…பென்சன் ஜாஸ்தியாப் போச்சாக்கும் அய்யாவுக்கு? ரொம்ப தாராளமா எடுத்து வீசுறாப்புல இருக்கு….ஒரு டியூப்பானா என்ன? கணக்குல ஏத்தி வச்சிக்கிறது. வேறே செலவுகள் பின்னாடி வராமயா போகப் போகுது? அப்போ அதோட இந்தச் செலவையும் சேர்த்து வசூல் பண்றது…யார் தரமாட்டேன்னு சொல்லப் போறாங்க…? மனுஷாள்னா ரெண்டு கேள்வி கேட்கத்தான் செய்வாங்க…பதில் சொல்லித்தான் ஆகணும்….சொன்னவுடனே தட்சிணையை எடுத்து கீழே வச்சிடுவாங்களா…? பொறுமையாப் பேச வேண்டிதான்….வாங்கிக்க வேண்டி தான்…..

தன் கணவர் இந்த வயதான காலத்தில் இந்தப் பொறுப்பை ஏன் சுமந்து திரிய வேண்டும் என்கிற பச்சாதாபமே இல்லியே கௌரியிடம். ஏதோ எனக்கான கடமை போல் அல்லவா சொல்கிறாள்?

அப்போ ஒண்ணு செய்யு…வாட்சப்புல நீயே டிஸ்கஸ் பண்ணு. சம்மதம் வாங்கு…எல்லார் பணமும் வந்து சேரட்டும். பிறகு வேலையைத் துவக்கலாம்….என்றார் படாரென்று.

எதச் சொன்னாலும் ஏறுக்கு மாறாப் பேசுங்க…வேறென்ன தெரியும்? எங்கிட்டதான் எல்லா வீராப்பும்….வழிமுறையைப் சொல்வோம்னா….இப்டியா பேசறது?

கைபேசி அலறியது. எடுத்தார். ஏற்கனவே வந்த எண்ணாய்த்தான் இருக்கும் என்று தோன்றியது. பெயர் கேட்டு சேமித்து வைக்கவில்லை. யாரோ, எவனோ…கண்டவன் பெயரையெல்லாம் ஃபோனில் சேர்த்து வைக்க முடியுமா? அப்புறம் இன்னொருத்தன் பேசுவான்….நான்தான் இந்த ஏரியாவுக்கும்பான்…ஏற்கனவே ஒருத்தர்ட்டப் பேசிட்டேன்னு அவன்ட்டச் சொல்ல முடியாது. சொன்னா…அந்தாள் ஃபிராடு…அவன்ட்டக் கொடுத்திடாதீங்க…அவன்ட்டப் பணத்தக் கொடுத்து ஏமாந்துடாதீங்க…அப்புறம் நான் பொறுப்பில்ல…என்று ஏதோ இவன் யோக்யன் போலப் பகருவான். எவனை நம்பி இந்த வேலையை முன்னெடுப்பது?

ஜன்னல் வழி வந்த நாற்றம் உமட்டியது.  

காத்துல வர்ற மணத்தப் பார்த்தீங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்களாம்….இன்ஃபெக் ஷன் ஆயிடும்…சீக்கிரம் அடைக்கப் பாருங்கன்னு…

நாலு வீடு தள்ளி செப்டிக் டாங்க் எடுக்குறாங்கடீ….அதப் போய் நம்ம வீட்டு வாடைங்கிறியே…?

அந்த வாடை வேறே…இது வேறே…உங்களுக்கு வித்தியாசம் தெரில…சாக்கடைத் தண்ணிக்கும், கழிவு நீர் கிளீனிங்குக்கும் மணம் வெவ்வேறே….நல்லா கவனிங்க….

ஆஉறா…வீட்டைச் சுற்றி என்னெல்லாம் மணம்? சுகந்த மணங்கள் நம்மைச் சூழ்ந்து நின்று  மயக்குகின்றனவே…! என்னே கொடுப்பினை? -வயிற்றெரிச்சலில் அதை இலகுவாக்க முயன்றார் வெங்கடாசலம்.

ஏரியா பூராவும் எங்கேயாவது இந்தக் கழிவு நீரேற்று லாரி நின்று கொண்டுதான் இருக்கிறது. எந்த வீட்டிலாவது செப்டிக் டாங்க் கழிவு எடுக்கும் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி எடுக்கும்போது குறைந்தது இடதும் வலதுமாக நாலைந்து வீடுகளுக்கு அந்த மணம் பரவும்.

மனுஷன் உட்கார்ந்து சாப்பிட முடியுதா? வாயத் திறந்தா இந்த வாடைதான் வாய்க்குள்ள போகுது….பிறகு சோத்தை எங்கருந்து உள்ளே தள்றது? மூக்குல இந்த நாத்தத்தை வாங்கிக்கிட்டே எவனாவது சாப்பிட முடியமா? அட…ஒரு வாய் தண்ணி குடிக்க முடியுமா சொல்லு….? இருக்கிற ஜன்னல் பூராத்தையும் அடைச்சிட்டாலும் அதை மீறி வீட்டுக்குள்ள பூராவும் பரவி நிற்குது…இப்டி பக்கத்துல எங்கயாச்சும் செப்டிக் டாங்க் லாரி அள்றான்னா…நாம சமைக்கிறதையும், சாப்பிடுறதையும் நிறுத்திட வேண்டிதான் அரை மணிக்கு. டைம் இல்லயா…ரூமுக்குள்ள போயி கதவை இறுக்க அடைச்சிட்டு பாதகமில்லைன்னு நமக்கு நாமே நினைச்சிட்டு வாயில அள்ளி அள்ளிப் போட்டுக்க வேண்டிதான்…

நம்ம வீட்டுக்கு லாரி வந்து நிக்கிற போது மத்தவங்களுக்கும் இடைஞ்சலா இருக்குமே…அதையும் நினையுங்க…! இந்த நகர் புராவும் இப்படித்தான். எங்க பாதாளச் சாக்கடை போடலியோ அந்த ஏரியாவுக்குக் குடி வந்திருக்கக் கூடாது. வந்தது நம்ம தப்பு. விலைக்கே வாங்கிட்டு வந்து குந்திக்கிட்டு…குறைப்பட்டு என்ன புண்ணியம்?

நாம இங்க வந்தே சரியாக் கணக்குப் பண்ணினா ஏழெட்டு வருஷம் ஆகப் போகுது…இந்தப் பத்து வருஷத்துல படாத பாடு இல்ல…ஏண்டா அபார்ட்மென்ட்ல வீடு வாங்கினோம்னு இப்பத்தான் புத்தி வந்திருக்கு….தனி வீடு கட்டிப் போக கையில டப்பு வேண்டாமா? குறைஞ்சது ஒன்றரைக் கோடி இருந்தாத்தான் இடம் வாங்கி வீடும் கட்ட முடியும். நமக்கு அது சாத்தியமா? மழைல கஷ்டப்பட்டாச்சு, வெள்ளத்துல மிதந்தாச்சு….எல்லாமும் சாதாரண மக்களுக்குத்தான்…பெரிய பணக்காரனுக்கில்லே…அரசாங்கத்துக்கு இல்லே…நடுத்தர மக்களுக்கு மட்டும்தான் இந்தத் தீராத கஷ்டம். அதனாலதான் அவுங்க எல்லாத்துக்கும் பழகிக்கிட்டு, சகிச்சிட்டிருக்காங்க….வேறே வழி?

திரும்பவும் ஃபோன் அலறியது. எடுத்து இணுக்கினார் வெங்கடாசலம்.

சார்…நீங்க யாரோ வேறே ஆள்ட்டப் பேசியிருக்கிறதாக் கேள்விப்படுறேன்…அவுங்க இந்த ஏரியா ஆட்கள் கிடையாது. அப்டிச் சொல்லிட்டுத் திரியறானுங்க…எங்களுக்குத் தெரியாம அவிங்ககிட்டே இந்த வேலையைக் கொடுத்தீங்கன்னா நாங்க ராத்திரியோட ராத்திரியா வந்து இடிச்சிப் போட்டுட்டுப் போயிடுவோம்…பார்த்துக்குங்க….. – சொல்லிவிட்டு லைனை அந்தாள் உடன் கட்பண்ணி விட்டதை உணர்ந்தார் வெங்கடாசலம்.

உறலோ…உறலோ….என்று கத்திப் பார்த்தார். இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதே நம்பருக்குப் போட்டார். எடுக்கவில்லை. இந்த ரெண்டாவது மூஞ்சி யாரென்று இன்றுவரை வெங்கடாசலத்திற்குத் தெரியாது. அநாமதேயக் குரலாய் இருந்தது. அவர்களாய் வரும் அன்று வருவார்களாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டுமாம். என்ன தெனாவெட்டான பேச்சு? கார்ப்பரேஷன் ஆட்களும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம். அவர்கள் சார்பாக இவர்களே…! யார் இவர்கள்? எங்கிருந்து புறப்பட்டார்கள்? கண்ணுக்கே தெரியாத மாயமாய்ப் பேசுகிறார்கள். வந்து பேசினவனையும் செய்ய விடமாட்டேனென்கிறார்கள்.

யோசனை பலமானது வெங்கடாசலத்திற்கு. நேற்றிருந்ததை விட கழிவு நீர் அதிகமாகி பிளாட்பாரத்தை விட்டுக் கீழிறங்கி, தார்ச்சாலையில் வியாபித்திருந்தது. வண்டிகள் போகும்போது பறந்தடித்தது. பக்கத்துவீட்டம்மா நின்று கவனித்துக் கொண்டேயிருந்தது.

எதடா புகார் சொல்லலாம் என்று காத்திருந்தது அது. ஏற்கனவே உப்புத் தண்ணிக் குழாய் தொட்டி நிரம்பி ஓவர்ஃப்ளோ ஆகுது. அந்தத் தண்ணி எங்க வீட்டுல தெறிக்குது…மோட்டாரை யாரும் டயத்துக்கு நிறுத்த மாட்டேங்கிறீங்க…எங்கிட்டயாவது பொறுப்பை விட்டுடுங்க…தெனமும் நானே மோட்டார் போடுறேன்…நிறுத்துறேன்…சரியா…ஒரு வேலை மிச்சம்தானே உங்களுக்கு? – எவ்வளவு கிண்டலான பேச்சு? தொட்டதெல்லாம் மென்டல் டார்ச்சர்? நினைவு தப்பிப் போகிறது சிலருக்கு வயசான காலத்தில். அப்படி ஆனால் கூடப் பரவாயில்லை போலிருக்கிறது…

சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் வெங்கடாசலம். நகரின் உட்பகுதிக்குள் மட்டும் ஓட்டிக் கொள்வார். மெயின்ரோட்டில் விட மாட்டார். சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சி என்று நினைத்தார். டூ வீலர் வைத்திருக்கிறார்தான். அதை எடுப்பதில்லை. என்றாவது அபூர்வமாய். இப்போதெல்லாம் மனதுக்குள் பயம் வந்துவிட்டது. பயம் வந்தால் அந்த பயமே விபத்தை உண்டாக்கி விடும் என்று எண்ணினார். அடேயப்பா…என்னா வேகமாய்ப் போறாங்க இந்த சிட்டில? இவங்களுக்கு நடுவே நான் போனால் அடிச்சுத் தூக்கி எறிஞ்சிடுவாங்க போல்ருக்கே…? ஊர்ல தொட்டதுக்கெல்லாம் டூ வீலர்ல போன தானா இப்படி அதைப் போட்டு வைத்திருக்கிறோம்? அவருக்கே வயிற்றெரிச்சலாய்த்தான் இருந்தது.

சும்மாக் கிடந்து துருப்பிடிக்கிறதுக்கு வேலை செஞ்சு தேயலாமே? என்பாள் கௌரி. மனுஷாளுக்கு அது பொருந்துமென்றால் ஒரு இயந்திரத்துக்கும் அது பொருந்தும்தானே?

ஓரத்தில் ஒரு ஃப்ளக்ஸ் போர்டு தென்பட்டது. நிறைய முகங்கள் தலை தலையாய். நண்பர்கள் குழு வட்டம். 18-வது வார்டு என்று போட்டிருந்தது. அதில் ஒன்று தன்னிடம் வந்து பேசி விட்டுப் போன ஒரு பையன் என்பதைக் கண்டு பிடித்து விட்டார் வெங்கடாசலம். ஆனால் சற்று முன் பேசிய அந்த இன்னொருவன், இடித்துப் போட்டு விடுவேன் என்று  மிரட்டியவன் யாராயிருக்கும் என்று அவர் பார்வை தேடியது. தேடி என்ன பயன்? அவனைத்தான் தான் நேரிலேயே பார்த்ததில்லையே? இதில்தான் யாரோ ஒருவனாக அவன் இருக்க வேண்டும்…என்று அவர் மனசு சொல்லியது.

போட்டோவில் பெரிய ஆகிருதியாய் இருப்பவர்கள் நேரில் சுணங்கித் தெரிகிறார்கள். நேரில் சுணக்கமாய்த் தோன்றுபவர்கள்  சிலர் போட்டோவில் தடாலடியாய்த் தென்படுகிறார்கள். முதலில் அங்கங்கே ப்ளக்ஸ் போர்டுகளை நட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்களோ என்னவோ? நண்பர்கள் குழு வட்டம் என்கிறார்கள். கீழே முகவரி என்று எதுவுமில்லை. ரெண்டு மூன்று ஃபோன் எண்கள் தென்பட்டன. தான் சேமித்து வைத்திருக்கும் ஒரு ஃபோன், சற்று முன் மிரட்டலாய் வந்த ஃபோன் எண். எதுவும் இதில் இருக்குமா என்று அவர் பார்வை துழாவியது. சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு எடுத்துப் பார்த்தார். அந்தப் பையனின் ஃபோன் எண். மட்டும் இருந்தது. சற்று முன் மிரட்டிய எண். போர்டில் இருந்த எண்களோடு பொருந்தவில்லை. அப்படியானால் அவன் யார்?  யோசனை போனது வெங்கடாசலத்திற்கு.

அப்போ அந்த முதல் பையன் மீண்டும் வந்தால் இந்த மிரட்டல் போனைப்பற்றிச் சொல்லலாமா? என்று யோசிக்க ஆரம்பித்தார். சாக்கடை வேலையை எப்படியாவது வெகு சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது. கார்ப்பரேஷன் ஆட்கள் வந்து ஒரு வேளை ஃபைன் போட்டு விட்டால்…அந்தப் பணத்தைக் கட்டிவிட்டு குடியிருப்பவர்களிடம் வசூல் பண்ண முடியாது. தரமாட்டேன் என்பார்கள். எடுத்துச் செய்பவனுக்கு அவ்வளவுதான் மரியாதை.

எடுத்த முயற்சிகளையெல்லாம் வாட்சப்பில் பேச ஆரம்பித்தார் வெங்கடாசலம்.  சிலர் ஃபோனில் உடனடியாகப் பேசினார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது பெரும்பாடாய்ப் போனது வெங்கடாசலத்திற்கு. எதற்காகத் தான் கிடந்து இந்தப் பாடு படுகிறோம் என்று விரக்தி வந்தது இவருக்கு. ஆறு வீடுகளில் எவனுக்கும் இல்லாத அக்கறை தனக்கு மட்டும் எதற்கு? இங்கேயே குடியிருப்பதனால்தானே தன் தலையில் விடிந்திருக்கிறது? மற்ற வீட்டுக்காரப் பசங்கள் எல்லாம் .டி. வேலையில் இருப்பவர்கள். இருந்தால் என்ன? செய்யக் கூடாது என்றிருக்கிறதா? தன்னை விட வயதுக்காரப் பிள்ளைகள்தானே சுறுசுறுப்பாக இயங்க முடியும்? வேக வேகமாகப் போனில் பேசவும், வாட்சப்பில் இயங்கவும் அவர்களுக்குத்தானே சாத்தியம். தான் ஏன் வீணே மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டும் இந்த வயதான காலத்தில்? யோசித்து யோசித்து நொறுங்கித்தான் போனார் வெங்கடாசலம். ஆபீசில் எடுத்து எடுத்து எல்லா வேலைகளையும் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டதுபோல் இங்கேயும் தன்னையறியாமல் இந்த வலைக்குள் விழுந்து விட்டோமோ? ஆபீசிலாவது எல்லாம் ஒழுங்காய் இருந்தது. அது வேண்டும் இது வேண்டும் என்றால் எடுத்துக் கொடுக்க ஆளிருந்தது. இங்கு எவனுமில்லையே? தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கக் கூட யாருக்கும் பொறுமையில்லையே?

            பாதி நாள் நான் வெளியூரு. நான் ஏன் சார் ரிப்பேர் செலவுக்குக் கொடுக்கணும்?

            நான் ஒருத்தன்தான் இருக்கேன். என் உபயோகமே ரொம்ப ரொம்பக் கம்மி. என்னால எப்படி சார் சாக்கடை அடைக்கும்?  ஓவர் ஃப்ளோ ஆகும்?

            சோக்பிட் ரிப்பேர்னா பில்டர்தான சார் பார்த்துக் கொடுக்கணும்…நாம ஏன் கார்ப்பரேஷன்  ஆள்ட்டச் சொல்லணும்? எதுக்கு ரிப்பேர் சரி பார்க்கணும்?

            பில்டர் காலம் பூராவும் பார்த்துக் கொடுத்திட்டே இருப்பாரா? அவர் உறான்ட் ஓவர் பண்ணினதோட விஷயம் முடிஞ்சிது. அப்புறம் வர்றதெல்லாம் நாமதான் பார்த்துக்கணும். நம்ம பொறுப்புதான்…

அப்ப ஒனர்ட்டப் பேசுங்க சார்…

ஒனர்ட்ட நான் ஏன்ங்க பேசணும். நீங்க காசைக் கொடுத்திட்டு உங்க வாடகைல கழிச்சிக்குங்க…நான் எடுத்து செய்றதே பெரிசு…இதுல என்னை ஏவுறீங்களா நீங்க…? -கோபமாய்த்தான் கேட்டார் வெங்கடாசலம்.

இனி இந்த மாதிரி வேலைகளில் தான் ஈடுபடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் அப்போது. வயதான காலத்தில் நான் இதற்கு ஆளில்லை. இளைஞர்கள்…உங்களுக்குள்ள யாராவது எடுத்து செய்துக்குங்க…என்னால முடியாது. என்ன பைசாவோ அதத் தந்துடறேன். அதான் இனிமேல் என்னால முடியும்….என்று வாட்சப்பில் போட்டுக்கொண்டேயிருந்தார்.

சட்டென்று ஒன்று மனதில் தோன்றியது. அந்தப் பையனிடம் வேலையை ஒப்படைத்து செய்தால், நான் வந்து இடித்துப் போட்டு விடுவேன் என்று மிரட்டினானே அவன் எப்படி அந்த ப்ளக்ஸ் போர்டில் இருப்பான்? அவன்தான் சண்டைக்காரன் ஆயிற்றே…? ஒரு வேளை அவுங்களுக்குள்ளேயே கோஷ்டிச் சண்டையோ? ஏழெட்டுப் பத்துப் பேர் தெரிகிறார்களே போஸ்டரில்? ரெண்டு கோஷ்டி, மூணு கோஷ்டி என்று இருந்தால்….? அப்போ அந்தப் பையனிடம் வேலையை ஒப்படைத்தால் அவனுக்குத் தெரியாமல் போகுமா? வாங்கும் காசில் பங்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருப்பானோ? இப்போதெல்லாம் பங்குச் சண்டையில்தானே வெட்டும் குத்தும் நடக்கின்றன? அட…கொலை கூடச் செய்கிறார்களே? அதை முன் பகை என்று வேறு சொல்கிறார்கள்.

இப்போது என்னதான் செய்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்தானோ? தீவிரமாக யோசித்தார். தன் யோசனையை நிறைவேற்றுமுன் வாட்சப் குருப்பில் என்ன செய்யலாம் என்று கேட்டு விலாவாரியாக விவரித்தார்.

ஆளாளுக்கு தங்கள் அபிப்பிராயத்தை ரொம்பவும் பொறுப்பாகச் சொல்வது போல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வாயால் வழிய விடுவதுதானே…காசா பணமா? யோசனை சொல்வதற்கு எவனுக்கு வலிக்கிறது? தாங்கள்தான் தீவிரச் சிந்தனையாளர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு தங்களுக்கு ஈடு யாரும் இல்லை என்று வெளிப்படுத்தினார்கள்.

கவுன்சிலரையும் பார்க்க வேணாம்….கண்டபடி திரியறவங்களையும் அணுக வேண்டாம். எந்த நலச் சங்கமும் எதுவும் செய்யாது. எதுவானாலும் நாமதான் செய்தாகணும் நமக்கு….அதுக்கு ஒரே வழி இதுதான் என்றார்கள்.

எப்படியோ…மெஜாரிட்டிக் கருத்து ஒத்துப் போவதை உணர்ந்தார் வெங்கடாசலம். நீங்க சொன்னதைத்தானே செய்திருக்கேன் என்று நாளை கையைக் காட்டி விடலாம். எடுத்துச் செய்தது ஒரு பாவமா? எனக்கென்ன வேலையில்லாமயா அலையறேன்.   சொந்த வேலையை விட்டுட்டு இதுக்குன்னு நாயா பேயா தெனமும் அலைஞ்சிருக்கேன்…எவனும் நாக்கு மேல பல்லுப் போட்டு என்னை ஒரு வார்த்தை சொல்ல முடியாதாக்கும்….சொல்லித்தான் பார்க்கட்டுமே…? அப்புறம் என்ன ஆகுது பாரு….நான் இல்லைன்னா இந்த அபார்ட்மென்டே நாறிப் போகுமாக்கும். என்னவோ எல்லாப் பயலுகளும் கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிட்டே இருக்கானுங்களே…நிக்க நேரமில்லாம அலையறானுங்களே…நம்ம பிள்ளை மாதிரிதானே ஒவ்வொருத்தனும்….முடியுதோ முடியலையோ நாம செய்ததாகவே இருக்கட்டும்னு நான் ஓடியாடிச் செய்திட்டிருக்கேன்…அதப் பழி சொல்ல வந்தா அந்தப் பாவம் சும்மா விடாது…. – தனக்குத்தானே புலம்பிக் கொண்டே புறப்பட்டார்.

அவர் போய் நின்ற இடம் கார்ப்பொரேஷன் அலுவலகம். கையில் விரிவாக எழுதப்பட்ட மனு இருந்தது. அந்த மனுவில் அபார்ட்மென்டில் குடியிருக்கும் அனைத்து நபர்களின் கையொப்பமும் தேதியுடன் இடப்பட்டிருந்தது.

நேரே உள்ளே நுழைந்து அலுவலகத் தலைமையையே சென்று பார்க்க உள்ளே அழைக்கப்பட்டார். எதிரே போய் அமர்ந்தார். தான் ஒரு முன்னாள் மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர்(ஓய்வு) என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கையோடு கொண்டு வந்திருந்த மனுவை எடுத்து  நீட்டினார்.

மனு கவனமாய்ப் படித்துப் பார்க்கப்பட்டது.

நீங்க எந்த வெளி ஆட்களிடமும் கொடுக்க வேண்டாம். அதெல்லாம் அதிகாரபூர்வமானதில்ல. ஆனா அப்படிச் சொல்லிட்டு நிறையத் திரியறாங்க…சில பேர் செய்யவும் செய்திருக்காங்க….போனது போகட்டும்…நீங்க இங்க வந்ததுக்கு மகிழ்ச்சி. இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்குங்க…நாளைக்கு எங்க ஆளுங்க வருவாங்க…வந்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு வேலையை முடிச்சிக் கொடுத்திடுவாங்க…கார்ப்பரேஷன் நிர்ணயிச்சிருக்கிற கூலியை நீங்க கொடுத்தாப் போதும்…புரிஞ்சிதா? அதிகமா ஒரு பைசா யாருக்கும் கொடுக்க வேண்டாம்..அப்படி யாராச்சும் ஏதாச்சும் கேட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க…புகார் கொடுங்க…நான் பார்த்துக்கிறேன். சரிங்களாய்யா….! போயிட்டு வாங்க….! நாளைக்கு எங்க ஆட்கள் வந்து வேலையை முடிச்சிடுவாங்க….-சொல்லியவாறே வணக்கம் தெரிவித்தார் அந்த அதிகாரி.

ரொம்ப நல்லவராயிருக்காரே?-நினைத்துக் கொண்டார். திருப்தியோடு எழுந்து வாசலுக்கு வந்தார் வெங்கடாசலம்.

கேட்டைத் தாண்டி சாலைக்கு வந்து சேர்ந்தபோது கைபேசி அலறியது.

உறலோ…ஐயா….! நான்தான் கதிரவன் பேசறேன்…இன்னைக்கு ராத்திரி வந்து உங்க அபார்ட்மென்ட் சாக்கடை வேலையை முடிச்சிடலாமாங்கய்யா…ஆளுகளத் தயார் பண்ணிட்டேன்….மத்தியானம் போல ஃபோன் பண்ணிட்டு வர்றேன்….பணத்தைத் தயார் பண்ணி வையுங்க…வீட்டுக்கு அஞ்சாயிரம். ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல?  மொத்தம் முப்பதாயிரம். சரிங்களா….உங்களுக்கு மட்டும்தான் இந்த ரேட்டு. வேற எடம்னா அம்பது வாங்குவோம். … …புரிஞ்சிதுங்களா…! மத்தியானமா ஃபோன் பேசறேன்….இன்னைக்கு நைட்டு வேலையை முடிச்சிடுவோம்…சரிங்களா…?-லைன் துண்டிக்கப்பட்டது.

கைபேசியைப் பார்த்துக் கொண்டே பிரமித்து நின்றார் வெங்கடாசலம். இன்னைக்கு நைட்டே…என்றால் என்ன பொருள்? எதுக்காக ராத்திரி வந்து இந்த வேலையைச் செய்யணும்? யாருக்கும் தெரியாமச் செய்றதைத்தான் நைட்ல செய்வாங்க…சொல்லுவாங்க…யாருக்கும் தெரியாமன்னாலே அதுல ஏதோ தப்பு இருக்குன்னுல்ல அர்த்தமாகுது?  ஊரெல்லாம் தூங்கிட்டிருக்கும்போது….மிஷின் போட்டு, தடதடன்னு சத்தத்தோட தரையை உடைச்சு உடைச்சு குழி பறிச்சு இந்த வேலையைச் செய்வாங்களா? என்னய்யா தூக்கத்தக் கெடுத்திட்டுன்னு எவனாச்சும் சண்டைக்கு வந்தான்னா? நம்மளல்ல புகார் கொடுப்பானுங்க… அதிக பட்சம் அரை மூட்டை சிமின்டாகுமா…அட…ஒரு மூட்டைன்னே வைப்போம்…அரை வண்டி ஜல்லி போதாதா? ஒரு வண்டி மணல்?  தண்ணி இங்கயே இருக்கு….இதுக்கு எதுக்கு முப்பதாயிரம்? செய்ற வேலையே தப்பு…செய்ற முறையும் தப்பு…இதுல அதிகாரம் வேறே? என்னா தைரியமா உரத்துப் பேசுறானுங்க…? இவங்களெல்லாம் யாரு கேட்கறது? தண்டல் வசூல் மாதிரில்ல தடாலடி பண்றானுங்க…என்ன அநியாயம்?

அடுத்து மதியத்துக்கு மேல் ஃபோன் வந்தால் எடுப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டார் வெங்கடாசலம். ஆட்கள் நேரில் வந்தால்? என்று ஒரு கேள்வி விழுந்தது.

நேர்ல வந்தா என்ன? கார்ப்பரேஷன்ல சொல்லியாச்சு…அவுங்க வந்து செய்றாங்கன்னுட்டுப் போக வேண்டிதான்…! – முடிவு செய்து கொண்டார்.

எடுத்த நடவடிக்கைகளை வாட்சப்பில் எல்லோருக்கும் தெரிவித்தார்.

நாளைக்கு சனிக்கிழமை லீவுதான் சார்….நாங்க இருக்கோம்…வந்து நிக்கிறோம் சார்… பயப்படாதீங்க… என்றார்கள். அதுவே மிகப் பெரிய ஆறுதலாய் இருந்தது.அட…பொறுப்பாப் பேசுறாங்களே…? ஆச்சரியமாய் இருந்தது வெங்கடாசலத்திற்கு. பயப்படாதீங்க…அந்த வார்த்தைதான் உறுத்தியது. பயந்திருந்தால் இத்தனை செய்திருக்க முடியுமா? எட்டியே பார்க்காத, வழி முறையே அறியாத, இவர்கள் சொல்லும் வார்த்தையா இது? முதலுக்கு மோசமில்ல…அவ்வளவுதான்…  அவர்களை வைத்தே அந்த வேலைக்கான கூலியையும் பேசி, கார்ப்பரேஷன் பணியாளர்களுக்கு நேரடியாகக் கொடுத்துத் தீர்த்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.  கழிவு நீர் வடிகால் ரிப்பேர் திருவிழாவுக்காகக் காத்திருக்கலானார்.

எந்தக் காரியமானாலும் “முடிவெடுக்கும் திறன்“ என்பது அதி முக்கியமானது என்று அப்போது அவர் மனது சொல்லியது.

                                    ------------------------------------

 

 

கருத்துகள் இல்லை: