சிறுகதை 'மிச்சம்“ (குங்குமம் வார இதழ்) 20.02.2026
நீங்க போயிட்டு வாங்கோ…நான் வரலை…என்றார்
கோபாலன்.
உறாலில் என்னவோ பேச்சு நடக்கிறது என்று
தோன்றியபோதே மனதில் முடிவு செய்து கொண்டு விட்டார். அந்த இழுவை நம்மால ஆகாது? கிளம்பவே
ஜாமம் ஆகும். இவர் மனது அலுத்துக் கொண்டது. மலைப்பாய் இருந்தது.
கார்லதானேப்பா போகப் போறோம். வரலாமுல்ல…?
என்றான் தயாளன்.
கார்லதான் போறோம்…அங்க போனவுடனே கோயிலைச்
சுத்தி பார்க்கிங் தேடவே ஒரு மணி நேரம் ஆகும். சுற்றிச் சுற்றி வரணும். அதுக்குள்ளயும்
எனக்கு ஒண்ணுக்கு வந்துடும். அதுக்கு எடத்தைத் தேடணும். சொன்னா நீ சங்கடப்படுவே…நானா
இறங்கி ஒரு ஓட்டலுக்குள்ள போய்த்தான் ஒன் பாத்ரூம் போக முடியும். அவன் சும்மா விடுவானா?
ஒரு காப்பியைக் குடிக்கணும். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு ஒண்ணுக்கு வரும்.
..எதுக்கு இந்த சிரமமெல்லாம்? நீங்க போயிட்டு வாங்கோ…நான் வீட்ல இருந்துக்கிறேன். எனக்கிருக்கிற
உடல் சிரமத்துக்கு எங்கயும் கிளம்ப லாயக்கில்ல…!
நீ பாத்ரூம் போயிட்டு வெளில வெயிட் பண்ணுப்பா…நாங்க
கும்பிட்டுட்டு வந்திடுறோம்….
நல்லாயிருக்கே நீ சொல்றது? கோயிலுக்குன்னு
புறப்டுட்டு சாமி கும்பிடாம வர்றதா? அது சரியாயிருக்குமா? – சங்கடத்தோடு பேசினார் கோபாலன்.
ஆள விடுங்கன்னாலும் இதென்ன அன்புத் தொல்லை?
ஏம்ப்பா…எத்தனையோ நாளு வெளி சுற்றுப் பிராகாரத்துல
நீ உட்கார்ந்துடுவே…நாங்கதான் போயி எல்லா சந்நிதியையும் சுத்திக் கும்பிட்டுட்டு வருவோம்…என்னால
அலைய முடியாது, வரிசைல நின்னெல்லாம் நகர்ந்து போய் சாமி கும்பிட முடியாதுன்னு சொல்லியிருக்கே…இன்னிக்கு
மட்டும் இப்டிச் சொல்றியே…? –
அதையேதான்ப்பா இப்பயும் சொல்றேன்….வெளிலன்னு
வந்தாலே எங்க பாத்ரூம் இருக்குன்னு தேட வேண்டிய நிலைமைல நான் இருக்கேன்…அதுக்கு உன்னையும்
சேர்த்து சிரமப்படுத்த விரும்பலை..யாரையும் சிரமப்படுத்த இஷ்டமில்லை…அதனாலதான் அப்படிச்
சொல்றேன்….-பிடியாய் நின்று தன் பக்கத்தை விளக்கினார் கோபாலன்.
அவருக்குத் தெரியும் அவர் சிரமங்கள். மற்றவர்களை
ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? பெற்ற பிள்ளைதானே…கூட வருவது பெண்டாட்டிதானே…தனக்காகக்
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?
அதெல்லாம் இல்லை. தன்னால் யாருக்கும் கஷ்டம்
வேண்டாம் என்பதுதான் அவர் கருத்து. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்.
அதுபோல் ஒரு பொழுது பொறுத்தால் மறு பொழுது ஒரு வார்த்தை வரத்தான் செய்யும். அதை ஏன்
கேட்கணும், மனசு கஷ்டப்படணும். அதற்கு ஏன் இடம் கொடுக்கணும்? எங்கும் போக வேண்டாம்.
எதையும் பார்க்க வேண்டாம். எந்த ஆசையும் இல்லை அவருக்கு. எல்லாவற்றையும் மொத்தமாய்த்
துறந்து விட்டார் அவர். ஒரே சமயத்தில் பலவற்றையும் அப்படித் துறக்க ஒருவனால் முடியுமா
என்றால் முடியும்தான். அதற்கான மனத் திண்மை அவருக்கு இருந்தது.
அது எப்படித் தனக்குக் கை வந்தது என்று
யோசித்தார் கோபாலன். சிறு வயது முதலே அது தன்னிடம் உடன் பிறந்ததாய்க் கிடக்கிறது என்பதை
உணர்ந்தார். அது அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்டதாய் இருக்கும் என்றும் எண்ணலானார்.
இல்லையென்றால் சொல்லி வைத்தாற்போல் ஐம்பது
ஆண்டுகள் ஒரே பிடியாய் எந்தவிதச் சலனமுமின்றி ஓட்டலில் வேலை பார்த்து தன் எட்டுக் குழந்தைகளைக்
காப்பாற்றிக் கரையேற்ற முடியுமா ஒருவரால்? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் குடும்ப
முன்னேற்றமே குறி என்று ஒருவனால் வாழ்ந்து கழிக்க முடியுமா? தியாக வாழ்க்கையை இந்த
உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்து கடந்திருக்கிறார்கள்?
அப்பா எந்தச் சந்தோஷத்தையும் அனுபவித்தவர்
அல்ல. எந்தச் சந்தோஷத்திற்காகவும் மெனக்கெட்டவரும் அல்ல. இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி என்ற வரிகளுக்கேற்ப தன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து
மறைந்தவர்.
லட்சியம் என்று மனதில் உறுதி செய்து கொண்டா
அவர் வாழ்ந்தார்? முன்னோர்களின் நெறிமுறைகளும், ஆசீர்வாதங்களுமாய்ச் சேர்ந்து அவரை
இயக்கியது. அதுவே அவரது சீரிய வாழ்க்கையாய் அமைந்து போனது.
அதே
மன உறுதியும் செயல்பாடும் தன்னிடமும் ஒட்டிக் கொண்டிருப்பதாய் கோபாலன் நினைத்தார்.
கொஞ்சமேனும் இல்லாமல் போகுமா என்ன?
அதற்காக
சும்மா இருப்பதே சுகம் என்றா அவர் கிடக்கிறார். அல்ல அல்ல….வீட்டில் தனியே இருந்தால்
என்றுமே அவர் வெறுமே கிடந்ததில்லை. ஏதாவது வேலைகளை எடுத்துச் செய்து கொண்டேதான் இருப்பார்.
அது அவர் சுபாவம். ஆபீஸ் வேலைகளையே அப்படிக் கட்டிச் சுமந்தவர்தானே? அந்த குணம் வீட்டுக்கு
என்று விட்டுப் போகுமா?
துடைப்பத்தை
எடுத்துக் கொண்டு வீடு பெருக்கிக் குப்பைகளை ஒருங்கிணைத்து வெளியேற்றுவார். ஜன்னல் கம்பிகளில் ஏறியுள்ள அழுக்கை
ஈரத் துணியை வைத்துத் துடைத்துப் போக்கி சுத்தம் பண்ணுவார். சாமி படங்களைத் துடைத்து
மாட்டுவார். பூஜை அறைத் தரையை எண்ணெய்ப் பிசுக்குப் போக அழுந்தத் துடைத்து, விளக்கைத்
துலக்கிப் பளீரென ஆக்கி புதிதாகத் திரியும் எண்ணெயும் ஊற்றிச் சரி செய்து வைப்பார்.
படுக்கைகளை வெளியில் கொண்டு உதறி, தூசி போக அழகாய் மடித்து ஒதுக்கி வைப்பார். ரொம்பவும்
அழுக்காய் இருந்தால் வாஷிங் மெஷினில் போட்டு மாடியில் கொண்டு சென்று உலர்த்தி காய்ந்த
பிறகு ஞாபகமாய் எடுத்து மடித்து ஒழுங்கு படுத்துவார். மின்சாரம் வராத சமயங்களில் பயன்படும்
இன்வெர்ட்டர் பேட்டரிக்குத் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து அதற்கென்று வாங்கி வைத்துள்ள
பதப்படுத்தப்பட்ட நீரை ஊற்றி பேட்டரி சிறப்பாய் இயங்கத் தயார் செய்வார். உலர்ந்த துணிகளை
எடுத்து மடித்து வைப்பார். தோய்க்க வேண்டிய துணிகளை எடுத்துத் தனியே கூடையில் போட்டுத்
தயாராய் வைப்பார். கட்டில், மெத்தை, நாற்காலி என்று பலவற்றையும் பகுதி பகுதியாய்த்
துடைத்து சுத்தம் செய்து, வீடு எவ்வளவு நீட்டா
இருக்கு? என்று வருபவர் வியக்கும் வண்ணம் ஆக்கி வைப்பார்.
இதிலெல்லாம் அவருக்கு ஒரு
மனதார்ந்த திருப்தியும் நிறைவும் இருந்தது . ஏனென்றால் இவை எல்லாமும் வீட்டில் இருந்து
கொண்டே நூறடி சுற்றளவில் சுற்றிச் சுற்றி வந்து செய்து கொண்டிருப்பவை. இணக்கமான மனநிலையில்
தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என்று பிரதி பலன் கருதாத தியாக மனநிலையில் அல்லது
நிச்சலன மனநிலையில் அவர் விரும்பிச் செய்பவை. அவசரத்துக்கு சட்டென்று பாத்ரூமுக்குள்
நுழைந்து கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை.
இதை விட்டு விட்டு வெளியில்
சென்று சுற்றுவதில் அவர் மனது ஏனோ இணங்கவில்லைதான். குறிப்பாக அவரது தற்போதைய உடல்
ஸ்திதி. மனநிலை. எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும் மனப்பாங்கு. எதுவும் கூடவரப்போவதில்லை
என்கிற புரிதல். கொஞ்ச நாளாகவே மனம் தனிமை, தனிமை என்று அரற்றிக்கொண்டேயிருப்பது. எல்லாமும்
அலுத்து விட்டதுதான். உறவுகளும் கூட என்றே சொல்லலாம். என்ன பெரிய உறவு? அப்படியா பாச
பந்தத்தில் இழைந்து திழைக்கிறோம்? அவரவர் பாடு அவரவருக்கு. நீ சௌக்கியமா…நான் சௌக்கியம்….!
என்கிற ஒற்றைக் கேள்விதான்.
எந்த சந்தோஷத்தையும் அவர்
மனது ஏற்க மறுக்கிறது. எல்லாமும் தோன்றி மறைபவை, எவையும் இந்த உலகத்தில் நிரந்தரமானது
அல்ல, இந்த ககனத்தில் தோன்றியதெல்லாமும் இந்த ககனத்திற்கே. எதுவும் இங்கிருந்து எடுத்துச்
செல்ல முடியாது. இந்த மண்ணில் உள்ளவையெல்லாம் இந்த மண்ணுக்கே…! ஆத்ம ஞானம் ஒன்றே மனிதனைக்
கடைத்தேற்றுவது…பக்தியும், தியானமும்தான் அதை அடையாளம் காட்டும். அர்த்தப்படுத்தும்…மற்ற
எல்லாமும் வெறும் பிரமை… பிரேமை…. !
கிளம்பலாமாப்பா….! – தயாளனின் குரல் இவரை
நனவுலகுக்குக் கொண்டு வந்தது. பெரியநாயகி, மருமகள் தயாளினி, பேரன், பேத்தி…ஒரு படையே கிளம்பியாயிற்று. மொத்தம்
ஆறு டிக்கெட்….
என்னை ஏம்ப்பா வற்புறுத்தறே?
விட்ரேன்….-என்றார் இவர் சலிப்பாக.
இவ்வளவு வருந்திக் கூப்பிடுறான்.
வாங்களேன்…வந்து பேசாம உட்கார்ந்திட்டு இருக்கப் போறீங்க…இதுக்கு உங்களுக்கு வலிக்குதா?
என்றாள் பெரியநாயகி. கூப்பிட ஆளில்லேன்னா அப்பத் தெரியும்…? இது முனகல்.
பேசாம உட்கார்ந்திருக்கிறதுக்கு
இங்கேயிருந்து அம்புட்டுத் தூரம் வரணுமா? இங்கேயே சிவனேன்னு இருந்தா ஆகாதா? -என்றார்
இவர்.
சிவ…சிவா…ன்னு அங்க வந்து
உட்கார்ந்திருங்கப்பா….கபாலீஸ்வரர் கோயிலுக்குத்தான் போறோம்…உங்களுக்குப் பிடிச்ச கோயிலாச்சே…!
உண்மைதான் அவன் சொல்வது.
அது என்னவோ அந்தக் கோயிலில் ஒரு ஈர்ப்பு. தொன்மம் மிளிரும் ஆலயம். பிறந்து வளர்ந்த
சொந்த மண்ணின் அம்மன் கோயிலுக்குப் போய் வருவதுபோல் ஒரு திருப்தி.
நிறைவு. வானுயர்ந்த அந்த கோபுரத்தைப் பார்த்துக் கண்மூடி தியானித்தாலே போதும்.
இதென்னடா பெரிய அன்புத் தொல்லையாப்
போச்சு? என்றவாறே எழுந்தார் கோபாலன். எம்புட்டுச்
சொன்னாலும் விடமாட்டாங்க போல்ருக்கே? ஒட்டிண்டதைப் பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…!
வாயை மூடிண்டு கிளம்பி வாங்க…என்னத்தையாவது
உளர்றது?.-சமயம் பார்த்து வாங்குகிறாள்.
வெளிலதான நைட் டிபன்? என்றார் பையனைப் பார்த்து.
சட்டென்று அந்த நினைப்பு தலை காட்டியது.
தயாளன் அப்பாவைப் பார்த்து
அர்த்தத்தோடு புன்னகைத்தான்.
பின்னே? கோயில் முடிக்கும்போதே
மணி ஒன்பது ஆயிடும்…அப்புறம் வீடு வந்து, செய்து, சாப்டுட்டுப் படுக்கிறதுன்னா மணி பன்னெண்டுதான்.!.
அப்டியே எதுத்தாப்ல எதாச்சும் ஒட்டலாப் பார்த்து நுழைய வேண்டியதுதான்…
போறது போறே…நல்ல தரமான ஓட்டலாப்
பார்த்துப் போ. காரமா சூப்புக் கிடைக்கும்தானே?
கேள்வியைப் பாரு…இந்த வயசுல
அய்யாவுக்கு சூப்புக் கேட்குதாக்கும்? வயித்துக்காகாதாக்கும். நாக்கு ருசியே இன்னும்
போனபாடில்ல….! என்னவோ சந்நியாசி மாதிரிப் பேசறது? எல்லாம் நடிப்பு…! – தோளில் நொடித்துக் கொண்டு பெரியநாயகி படியிறங்கியபோது
கமுக்கமாய் நாய்க்குட்டி போல் கோபாலனும் பின்தொடர்ந்தார்.
---------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக