01 பிப்ரவரி 2026


My all time favourite

ல்லாப் புத்தகத்திலும் ஏதாச்சும் கொஞ்சமேனும் கண்டிப்பாப் படிச்சிருப்பேன்...கிளாஸிக்ஸ் தவிர...அடிக்கடி எடுத்துப் படிக்கிறது அதுதான். அ.மி.யோட "தண்ணீர்" குறைஞ்சது அஞ்சு முறையாச்சும். இ.பா.வோட "ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன" பத்துத் தடவை படிச்சிருக்கேன்.தலைசிறந்த பத்து நாவல்கள்ல இது இரண்டும் கண்டிப்பா இடம் பெறும். குருதிப்புனல் நாவல்..மூணுவாட்டி படிச்சிருக்கேன். அவரது சிறுகதைகளைப் படிச்சிட்டேயிருப்பேன். ஆதவனும் பிடிக்கும்.இ.பா. மாதிரித் தெளிவா..புத்திசாலித்தனமா கதை சொல்ல யாராலும் முடியாது. My all time favourite அவர்தான்..







 

 

சிறுகதை      - பிரசுரம் - தாய் வீடு-பிப்ரவரி 2026 மாத இதழ்                       

”உள்ளொழுக்கு”






            நான் யாரோடும் பேசுவதில்லை  என்றார் ராமமூர்த்தி.

            பறவைகள் சலசலவென்ற சத்தத்துடன் கூட்டாகக் கிளம்பிப் பறந்தது இவர் சொன்னதற்கு சிரிப்பதுபோல் இருந்தது. வானத்தை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்.

            அவர் குரலில் இருந்த தீர்மானத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார் சாமியப்பன்.

            ஏன்? – ஒற்றை வார்த்தையில் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்துக்  கேட்டார்.

            ஏன்னா அது என் இயல்பில்லை…. என்றார் இவர் மறுபடியும்.

            அப்போ உங்களுக்கு ஃபோன் செலவில்லன்னு சொல்லுங்க…. – என்று சூழலைத் தளர்த்த முயன்றார் சாமியப்பன். முன்னால் பின்னால் என்று நடந்து வருபவர்கள் யாரும் தங்கள் பேச்சைக் கவனிப்பார்களோ என்றிருந்தது. காதில் விழத்தானே செய்யும்…!

            ஃபோன் செலவில்லன்னு எப்படிச் சொல்ல முடியும்? நம்ப நம்பருக்கு கனெக் ஷன் வச்சிருக்கமே…அது உயிரோட இருந்தாகணுமே…அதுக்குப் பணம் கட்டித்தானே ஆகணும்? வேலிடிட்டீ…..

            அதோட மட்டுமில்லே….நம்மளோட மத்தவங்க பேசினாலும் அதுக்கும் கனெக் ஷன் இருந்தாகணுமே…-அப்படியாவது யாரும் உங்களுடன் பேசுவதுண்டா? என்ற கேள்வி அதில் மறைந்திருந்தது.

            அதத்தான் சொல்ல வந்தேன்….யாராவது பேசினாங்கன்னா நான் பேசுவேன்…நானா யாருக்கும் பேசறதில்லை…அதுதான் என்னோட இயல்புன்னு உறவுக்காரங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க பாருங்க…அதுதான் அதுல பெஸ்ட்…! ….

            ஏன் அப்படி விட்டுட்டீங்க…? – யதார்த்தமாய்த்தான் கேட்டார் சாமியப்பன்.

            அவரிடம் சொல்வதில் ஒன்றும் தவறில்லைதான். எல்லாவற்றிற்கும் மனசு வெறுத்துப் போனதுதான் காரணம் என்கிற அடிப்படையை, அந்த ஆதங்கத்தை யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும்போலத்தான் இருந்தது இவருக்கும்.

 இவரைப் போலவே சாமியப்பனும் ஒரு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்தான். மாலை நேரம் வழக்கம்போல் அந்தப் பூங்காவிற்கு நடைப் பயிற்சிக்கு  வரும்போது பழக்கமானது. அதில் விசேஷம் என்னவென்றால் இருவரும் ஒரே தேதியில் ஒரே நாளில் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுதான். இந்த ஒற்றுமை அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தைக் கொண்டு வந்திருந்தது.

            ஓய்வூதியம் தொடர்பாக அவர்களுக்குள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. ராமமூர்த்தி ஒரு இரண்டாயிரம் ரூபாய் கூடத்தான் வாங்கினார். காரணம் கடைசி ஒரு வருடத்தில் அவர் வேறு துறைக்குப் பதவி உயர்வில்  கணக்கு அலுவலராய்ச் சென்றதுதான்.

            பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட வேண்டும் என்கிற வெறி அவருள்ளே புகுந்திருந்தது. அதற்கு அலுவரானால்தானே முடியும்?  அவர் வேலை பார்க்கும் சொந்தத் துறையில் அந்த இடத்தைப் பிடிக்க ஜனவரிக்கு மேல் ஆகும் என்கிற நிலை இருந்தது.  அதே சமயம் தனக்கிருக்கும் சிறப்புக் கல்வித் தகுதி கருதி எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற விதியின் கீழ் முப்பத்தி இரண்டு ஆண்டு காலம் வேலை பார்த்த தன் துறையை விட்டுப் புதிய இடத்திற்குத் தாவினார் ராமமூர்த்தி.

            வெளியேறும்போது ஒருவர் கேட்டார். சார் எங்களையெல்லாம் விட்டுட்டு இப்படிப் போறீங்களே… பெரிய இழப்பு சார் எங்களுக்கு…அப்பப்பப் பேசலாமா சார்….?

            வேண்டாம் என்றார் இவர். அவர் அதிர்ந்து போயிருக்க வேண்டும். என்ன இந்த மனுஷன் இப்படிச் சொல்றான்? அது எப்படியோ அத்தனை பேர் காதுக்கும் போய்விட்டது. அதற்குப்பின் யாரிடமிருந்துமே ஃபோன் வந்ததில்லை அவருக்கு.

            என்ன வேண்டிக் கிடக்கு? பூராப்பயலுவளும் லஞ்சப் பேர்வழிங்க…இவிங்ஞளுக்கு மத்தியிலேயிருந்து விலகினதே பெரிசு. அப்புறம் என்ன குசலம் விசாரிப்பு…கொண்டாட்டம்? ஒரு மண்ணும் தேவையில்ல….-மனசு வெறுத்துப் போய்த்தான் வெளியேறினார்.

            பார்ட்டியெல்லாம் வேண்டாம் என்று விட்டார். இவர்தான் தன் கைச் செலவில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார். ஆபீஸ்களில் வேலைகள்தான் நடக்கும். ஆனால் அன்று அங்கு சாப்பாடு நடந்தது. கோப்புகளைப் பூராவும் எடுத்துத் தரையில் கிடாசிவிட்டு மேஜையில்  இலை விரித்து சித்ரான்னங்களுடன் ஜே ஜே. என்று உணவு பறிமாறப்பட்டது. எல்லோர் மனதையும் நிறைத்து விட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார். எதற்கும் எவனும் வயிறெரியக் கூடாதே பிற்பாடு!

            சார்…சாயங்காலம் பார்ட்டிக்கு நாங்க நாலு பேர் இருக்கோம்…என்று வந்து கெஞ்சுவதுபோல் நின்றார்கள். தொலைஞ்சு போங்க…என்று அதற்கும் கொடுத்துத்தான் தலைமுழுகினார்.

            யாராவது காசை இப்படி விரயம் பண்ணுவாங்களா? கூறு கெட்டுப் போச்சா உங்களுக்கு? அவுங்களப் பார்ட்டி வைக்கச் சொல்லி அரைப் பவுன் மோதிரத்தோடும் சந்தன மாலையோடும்  வந்து நிற்கத் தெரியலை…என்னமோ இவரு விருந்து வச்சாராம்…பீத்திக்கிறாரு….! – காயத்ரீ விட்டு வாங்கினாள்.

நானென்ன ரிடையர்ட் ஆயிட்டேனா? மோதிரம் போடுறதுக்கு? டிபார்ட்மென்ட்தானடீ  மாறிப் போறேன்…கழிசடையான எடத்தைவிட்டு இடம் பெயர்றேன்…திருஷ்டிக் கழிப்புன்னு ஒண்ணு இருக்குல்ல…என்றார்.

            தன்னை அங்கிருந்து விலக்கிக் கொள்ளும்முன், தனக்கான வேலைகளை, தேவைகளையெல்லாம் தானேதான் முடித்துக் கொண்டார். போட்டுப் பார்த்திடுவாங்ஞ என்கிற கவனமிருந்தது. ஸ்டிரிக்டா இருந்தவன எவனுக்குத்தான் இந்த உலகத்துல பிடிக்கும்?  வெளியேறிவிட்டால் எவனையும் எதற்கும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது. முப்பத்தியிரண்டாண்டுகள் பணி புரிந்த இடத்தில் பிடிப்பே இல்லாமல் போனது.சூழல் மாசு படிந்ததே அதற்கான பிரதான காரணம் என்று நினைத்துக் கொண்டார்.

            தேர்டு கிரேடு ஆபீசர்தான். ஆனாலும் நான் ப்ளூ இங்க்ல போட மாட்டேன். பச்சை மைப் பேனாவால்தான் ஒப்பமிடுவேன்….என்று பிடிவாதமாய் இருந்தார் ராம
மூர்த்தி. யெலிஜிபிலிட்டி உண்டே….! எவன் கேட்கிறது?

            சார்…உங்களுக்கு முன்னாடி இருந்த யாரும் பச்சை இங்க்ல போட்டதில்ல சார்…என்று பயந்து கொண்டு புலம்பினார்கள் பலர்.  இவர்கள் ஏன் இந்த பயம் பயப்படுகிறார்கள் என்றிருந்தது.  தவறு செய்பவர்களுக்கு மனதுக்குள் எப்போதும் ஒரு தயக்கமும், பயமும் இருந்து கொண்டேயிருக்கும். வருகைப் பதிவேட்டில் பணியாளர்கள் போலவே அவருக்கு முன்பிருந்தவரும் நீலநிற மையிலேயே சுருக்கொப்பமிட்டிருந்தார். தன்னை சிறப்பாகக் காண்பித்துக் கொள்ள அவருக்கு இஷ்டமில்லை…பத்தோடு பதினொன்றாகவே இருக்க விருப்பம். பின்னால் ஒளிந்து கொள்வது. அவர்கள் அப்படித்தான்…!

            மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கத்தான் செய்யும் என்பது பிறகுதான் புரிந்தது. கூட்டத்தோடு கும்மியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் அப்படியில்லை என்று காண்பிக்க முனைந்தார் ராமமூர்த்தி.

            சார்…கலெக்டர் ரௌன்ட்ஸ் வர்றார்…என்றனர்.

            வரட்டுமே…என்றார் இவர். அவர்களோ பரபரத்தார்கள். வந்த பின் எழுந்து வணங்கினால் போதாதா? இப்போதே எழுந்து நின்று கால்கடுக்கக் காத்திருக்கணுமா? அலுவலகத்திலிருந்தவர்களுக்கு இவரின் நடவடிக்கைகள் புதிதாய், புதிராய் இருந்தன.

            ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணித்தானே அந்த அம்பத்திநாலு வயதிலும் மாலை வகுப்பிற்குச் சென்று கணக்கியல் பயிற்சி பெற்றார்? இளநிலைக் கல்வித் தகுதியே போதுமானது என்றிருந்ததுதான். ஆனாலும் மேல்நிலைக் கல்வித் தகுதியையும் அடைந்தே தீர வேண்டும் என்கிற வெறி அவருள் புகுந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம்தான் உள்ளூரிலேயே  அலுவலக மாறுதல் என்று வந்து அதைக் கெடுத்து விட்டது. பதவி உயர்விற்குப் போதுமான கல்வித் தகுதி இருக்கிறதுதானே என்று விட்டு விட்டார்.

            புதிய அலுவலகம்…புதிய வேலைகள்…புதிய பொறுப்புக்கள். அதை ஒழுங்காகச் செய்தாக வேண்டும். எவனும் குத்தம் குறை சொல்லி விடக் கூடாது…பொறுக்காதே…! கவரிமான் புத்தியாயிற்றே?

            இருந்தது இருந்துட்டீங்க…இன்னும் ஒரு வருஷம்…இங்கயே இருந்து ரிடையர்ட் ஆயிட வேண்டிதானே சார்…எதுக்கு கடைசி காலத்துல வேறே டிபார்ட்மென்ட்? -கேட்கத்தான் செய்தனர்.

தொலையட்டும்…இவன் இருந்தா நமக்குத்தான் இடைஞ்சல். அவனும் வாங்க மாட்டான்…நம்பளையும் வாங்க விட மாட்டான்…காசோட அருமை தெரியாத பய…!

எனக்கு வேண்டாம்…என் பங்கை இவங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்திடுங்க…என்றவர்தான். ஆனாலும் அவர்களுக்கு இவர் ஒரு இடைஞ்சல்தான்.

            ஒருவனின் உயர்வு என்பது பலரையும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கத்தானே செய்கிறது?  பிடியாப் பிடிச்சுக் கிளம்பிட்டானே…!

            புது டிபார்ட்மென்ட்டுக்குள்ள நுழைஞ்சிட்டு…எதுக்கு சார் கடைசி காலத்துல…அதெல்லாம் பெரிய கடல் சார்…நம்மால நீந்த முடியாது…

            மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என்று சொன்னவர் எவருமில்லை.

            உங்களுக்கெல்லாம் வயசிருக்கு. அடுத்தடுத்து ப்ரமோஷன் வர வாய்ப்பிருக்கு. ஆனா எங்க காலத்துக்கு அது ரொம்பக் குறைவு. ரெண்டு ஸ்டெப், மூணு ஸ்டெப் தாண்டுறதே அதிகம். நான் இங்கயே இருந்தேன்னா மார்ச்சுக்குள்ளதான் எனக்கு நிர்வாக அலுவலர் பதவி உயர்வு கிடைக்கும். அதே ராங்க்கை இப்போதே அங்க போய் நான் அடைஞ்சிடுவேன். அதான் உதறிட்டுப் போறேன்….என்றார்.

            இந்த வயசுல இவனெல்லாம் படிச்சு எங்க பாஸ் பண்ணப் போறான்…என்று பூடகமாய்ப் பேசிக்கொண்டார்கள்தான்.  வீட்டில் கதவை அடைத்துக் கொண்டு பயிற்சி செய்தார். சின்ன வயசில் இருந்த அதே வேகம் இன்னும் தன்னிடம் அழியவில்லை என்று தோன்றியது. அந்த வேகம்தானே தன்னை சர்வீஸ் கமிஷன் வேலையையே வாங்க வைத்தது. லட்சக் கணக்கான பேர் எழுதிய தேர்வில் பாஸ் பண்ணுவது என்றால்? முதன் முதலில் நாளிதழில் ரிசல்ட் வந்த அந்த நியூஸ் பேப்பரை இன்னும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறார். இவர் நம்பரை அன்டர்லைன் பண்ணியிருப்பார். அன்று அப்பாம்மா முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி? வாங்கும் சம்பளத்தை அப்படி அப்படியே அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்து விடும் பழக்கமிருந்தது அவரிடம். அவர் செலவுக்கு என்று மிகச் குறைந்த தொகையே கேட்டு வாங்கிக் கொண்டார். இது போதுமாடா? போதுமா? என்று திரும்பத் திரும்ப அம்மா கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

அந்த நாள் இனிய நாள்…அது திரும்ப வராது. அம்மா அப்பாவோடு வாழ்ந்த நிறைவான நாட்கள் அவை. சத்தியத்தோடும் லட்சியத்தோடும் கை கோர்த்திருந்த நாட்கள் அவை.

            கணக்கியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் வாயடைத்துப்  போனார்கள். நினைச்சதைச் சாதிச்சிட்டீங்க…என்று உளமார்ந்த பாராட்டுதல்களுடன் வந்து நின்றவர் உதயசங்கரன் பொறியாளர் மட்டும்தான். இவனெல்லாம் எங்க அக்கௌன்டன்சி பாஸ் பண்ணப் போறான்? என்று கேவலமாய் முதுகுக்குப் பின் பேசியவர்கள் பலர்.  அதென்ன அப்படியான கஜகர்ண வித்தையா…பார்த்துடுவோம் ஒரு கை என்றுதான் இறங்கினார். எப்போதுமே தன் முயற்சியில் அசாத்திய நம்பிக்கை உண்டு ராமமூர்த்திக்கு. ஒன்றைக் கையிலெடுத்தால் உடும்புப் பிடியாய் பிடித்து உலுக்கி  எடுத்து விடுவார்.

            லெக்டரின் முதல் மீட்டிங்கில் நன்றாக மாத்து வாங்கினார் ராமமூர்த்தி. எல்லோர் முன்னிலையிலும் அந்தளவுக்கு அவர் காய்ச்சியிருக்கத் தேவையில்லைதான். வந்து ஒரு மாதம்தானே ஆகியிருக்கிறது என்கிற புரிதல் வேண்டாமா? ஆனாலும் அவரை யார் கேள்வி கேட்பது? அத்தனையையம் வாங்கிக் கட்டிக் கொண்டார். மூஞ்சி தொங்கிப்போய் வந்து உட்கார்ந்தார். மனசுக்குள் அசூயை பிறந்தது. என்னை என்ன முட்டாப்பயன்னு நினைச்சிட்டாரா? இந்தப் பேச்சு பேசுறாரு? மனதுக்குள் கருவிக் கொண்டார்.

            அன்றே சுதாரித்தார். அதற்குப் பின் எத்தனை சனி, ஞாயிறுகளுக்கு அவர் வீட்டுக்கு வந்து  திரும்பினார் என்பது அவருக்கே தெரியாது. வீடே மறந்து போனது.  இ.டென்டர் முதற்கொண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அதில்தான் பாராட்டுப் பெற்றார்.  அதற்குப்பின் அவர் இருக்கிறாரா, போய்விட்டாரா என்று எதையும் கண்டு கொண்டதில்லை ஆட்சியர். அவருக்கு எத்தனையோ வேலைகள். எத்தனையோ அரசியல்வாதிகள். யார் யாரோ விசிட்டர்ஸ்….

            விலகுங்க…விலகுங்க…சார் வரட்டும்….என்று கரை வேட்டியோடு நுழைந்த அந்த அரசியல்வாதிக்கு வழி விடச் சொன்ன அன்றே பலவற்றையும் புரிந்து கொண்டார் ராமமூர்த்தி.  எல்லா எடமும் கழிசடையாத்தான் இருக்கும் போல்ருக்கு என்று தோன்றியது. டென்டர்கள் அசலுக்கும், பினாமிக்குமாய் பகிரப்படுவதைக் கண்ணுற்றார். அதற்குப்பின் ஆட்சியர் மீது இருந்த மரியாதை அறவே விட்டுப் போனது. இன்னும் என்னென்னவோ மனதை உறுத்தத்தான் செய்தது. ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எப்படிஎப்படியெல்லாம் பாழாகிறது? திருப்பிவிடப்படுகிறது? கழுத விட்டைல முன் விட்டை என்ன பின் விட்டை என்ன?  சீக்கிரம் இங்கிருந்து என்று கழருவோம் என்று நினைக்க ஆரம்பித்தார். சரியாக ஒன்பது மாதங்கள்…கிடுகிடுவென்று ஓடிவிட்டதுதான்.  ஒரு நாள் கூட லீவு எடுக்கவில்லை. கணக்கிலிருந்த சாதா லீவு, மெடிக்கல் லீவு என்று எல்லாமும் காலாவதி ஆகிப் போனது.  லீவு எடுத்து விட்டு வீட்டில் கெதம் கெதம் என்று உட்கார்ந்து ஆபீசையே நினைத்துக் கொண்டிருப்பதற்கு ஆபீசிலிலேயே கதியாய்க் கிடப்பது மேல் என்று இருந்தே கழித்து விட்டார். என்ன நஷ்டமானாலும் பரவாயில்லை. கௌரவம்தான் முக்கியம். ஒரு பய ஒரு வார்த்தை சொல்லக் கூடாது. அதற்கு இடம் கொடுக்கவே கூடாது. அதுவே லட்சியம்.

            வாங்க மாட்டான் அந்த ஆளு என்கிற தகவல் மேலிடம் வரை போயிருப்பது எப்படியோ காதுக்கு வந்தது. அப்டியா…அப்டியா? என்று வியந்தாராம். இவர் வியந்தாலென்ன வியக்காவிட்டால்தான் என்ன…நான் என்னைக்குமே உயர்தரம்தான்…அதை எவன் பாராட்டி நான் கேட்கணும்… என்று வாளாவிருந்தார் ராமமூர்த்தி. மனதிற்குள் மிகுந்த கர்வம் உண்டு இந்த ஒரு விஷயத்தில்.

            டென்டருக்கென்று ஆபீசுக்குள் வரும்போதே கலெக்டர் சேம்பருக்குள் நுழையும் முன் அமர்ந்திருக்கும் இவர் பையில் செருகிவிட்டுப் போனார்கள். அதிர்ந்து போனார் இவர். உள்ளே கேட்டாலும் கேட்கட்டும்…என்று விரலசைத்து வைத்த ஆளைத் திரும்ப அழைத்து, எடு…என்றார்…ஒற்றை வார்த்தையில். உள்ளே கேட்டால் கேட்கட்டும் என்றுதான் சொன்னார்.  எல்லாம் வழக்கம்தான் சார்…இருக்கட்டும்…என்றான் அவன். உன் வழக்கத்தக் கொண்டு குப்பைல போடு..இதெல்லாம்  அங்கயோட நிறுத்திக்கோ…எங்கிட்ட வரப்படாது….என்றார் படு கறாராய். வார்த்தையும் பார்வையும் அதைத் துல்லியமாய் உணர்த்தியது.  ஒருமையில்தான் பேசினார். அதிர்ந்து போனான் வந்தவன். எவனெவனோ எது எதற்கோ வருகிறார்கள் போகிறார்கள்…அம்புட்டுப் பயலுகளுக்கும் இந்தப் புத்திதான் இருக்குமா? காரியம் சாதிக்கணும்னு இப்படியா பழக்கி விட்ருப்பானுங்க? செல் அரிச்ச மாதிரி ஆகிப் போச்சே?  இவனே போய் உள்ளே  சொன்னாலும் பரவாயில்லை என்றுதான் வாளாவிருந்தார். நா இப்டித்தான்….எங்க வேணா போய்ச் சொல்லிக்கோ…!

            அதற்குப்பின் டென்டர் இறுதி செய்யும் நிகழ்வுக்கு ஆட்சியர் இவரை அழைப்பதே நின்று போனது. அவருக்கே பயமோ என்னவோ? யார் கண்டது? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவனுக்குத் தெரியும்?  இருக்கும் இடத்தை மதிப்பாய் வைத்திருப்பது யார் கையில்?

            வாங்கமாட்டாரா…வாங்க மாட்டாரா…அப்டியா…அப்டியா…என்று வளாகம்                               பூராவும்..பராபரியாய்ப் பேச்சுக்கள் பரவின.  அப்படிப்பட்ட அதிசயமான செய்தியாய் அது இருந்ததுதான் வியக்கக்தக்கது. அம்புட்டுப் பேரும் சகதியில் புரளும் இடம் அது. அங்கு போய் ஒருத்தன் மட்டும் மேட்டில் உட்கார்ந்து  வேடிக்கை பார்க்க முடியுமா?

            ப்பாடா… போதுண்டா சாமி…..அந்த 31ம் தேதி வளாகத்திற்கு வெளியே வந்து தலைக்கு மேலே கையை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு சாஷ்டாங்கமாய்த் தரையில் விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி. எவனாவது கிறுக்கன் என்று நினைத்தாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்றுதான் விழுந்து எழுந்தார்.

            அவரை வழியனுப்பியவர்கள் நாலைந்து பேர்தான். ஆனால் யார் யாருக்கெல்லாம் மனசார அவர்களின் சர்வீஸ் பணியில் உதவி செய்திருந்தாரோ, இடர் நீக்கியிருந்தாரோ, பலன் அடையச் செய்திருந்தாரோ அவர்களெல்லாம் நன்றி மறக்காதவர்களாய் வந்து நின்றிருந்தார்கள்தான்.

            எங்கும் எந்த மாற்றமும் இல்லை…எல்லாமும் ஒரே கசடு என்றுதான் தோன்றியது. எப்படியோ வலையில் விழாமல் மீண்டாயிற்று. மீளுவதே போராட்டமாய் அமைந்து போனதை எண்ணிப் பெருமூச்செறிந்தார்.

            நல்லவனாய் உயிரோடு நடமாடுவதே இந்த உலகத்தில் கஷ்டமானது என்பதாய் உணர்ந்தார். தன் கணக்கு வழக்குகளையெல்லாம் தான் இருந்த கடைசிப் பத்து நாட்களில் சப்ஜாடாய் முடித்துக் கொண்டு வெளியேறியதுதான் இருப்பதிலேயே  உறலைட்டான விஷயம்.. கடைசியாய் அங்கும் கேட்டார்கள். 

சார்…அப்பப்பப் பேசலாமா?   -  இவர் சொன்னார்…..வேண்டாம்…….!!!

ன்ன சாமியப்பன்….ஏது அமைதியாவே வர்றீங்க…ஏதாச்சும் பேசுங்க….? என்றார் ராமமூர்த்தி. வெகு நேரம் அமைதியாகவே நடந்து விட்டோம் என்று உணர்ந்த கணம் அது. எவ்வளவு சிந்தனை பரந்து விரிந்து விட்டது அதற்குள்?

உங்களமாதிரியெல்லாம் நான் இல்லை சார்….கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தேன்…..நீங்க சொக்கத் தங்கம்……!!!

சொக்கமாவது…தங்கமாவது…எல்லாம் அவனவன் மனசப் பொறுத்தது…போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து…என்றார் இவர் யதார்த்தமாய்.

இந்த மனசுதான சார்…எல்லாத் தப்பையும் செய்ய வைக்குது…சலனமில்லாம அதை நீங்க கன்ட்ரோல்ல வச்சிருந்திருக்கீங்களே? அதைப் பாராட்டித்தானே ஆகணும்…!!

வீட்டுக்கு வந்து பாருங்க…எம் பொண்டாட்டி என்ன சொல்றான்னு, என் கன்ட்ரோல் என்ன லெவலுக்கு இருக்குன்னு அப்பப் புரியும்… சொல்லிவிட்டு பலமாய்ச் சிரித்தார் ராமமூர்த்தி.

அந்த நீண்ட ஆர்ப்பாட்டமான சிரிப்பினூடே ஒரு சின்ன சோகம் தொற்றியிருப்பதாய் சாமியப்பன் உணர்ந்தார்.

அதன் இறுதியில் ராமமூர்த்தியின் கண்களில் துளிர்த்திருந்த இரண்டு சொட்டுக் கண்ணீர்…..அவரின் உள்ளார்ந்த துயரத்தை இந்த உலகுக்குப் பறைசாற்றியது.

                                    ---------------------------------------------