“கண்டடைந்தது” - சிறுகதை தினமணி கதிர் - 15.02.2026 பிரசுரம்
சார்…என்ன
சொல்றீங்க…புரியல…..! – எதிர்த்தரப்பிலிருந்து பதில் தணிந்து வந்தது. வேறெப்படி வரும்?
புரியும்தான்…ஆனால்
புரியாததுபோல் பேசுகிறான் அந்த ஆள். செய்வது
அத்தனையும் உள்குத்து வேலை. நேரிலோ, ஃபோனிலோ பேசும்போது இங்க சுகம், அங்க சுகம் என்பதாய்
மேம்போக்காய்த் தடவுவது.உள்ளடி வேலை அதற்கு நேர்மாறாய்! ..-நினைக்கவே எரிச்சலாயிருந்தது
சண்முகநாதனுக்கு. என்ன கீழ்த்தரமான ஆள்? அறுபது தாண்டியவனின் செயலா இது? வெட்கமாயில்லை?
சரியான சில்ரப் பயலா இருப்பான் போல்ருக்கு!
அடுத்த
வார்த்தையைப் பேசும் முன் அருகில் வந்து நின்றாள் நாராயணி. தடுக்கத்தான் வருகிறாள்…புரிந்து
கொண்டார் இவர்.
வேண்டாம்…சொன்னாக்
கேளுங்க…-என்பதற்கடையாளமாய் சைகை செய்தாள்.
பிரச்னையாய்ப் போட்டுப் பிடுங்கி எடுப்பது. சரி செய்வோம் என்று முனைந்தால் வந்து நின்று
தடுப்பது? இதென்ன ரெண்டுங்கெட்டான் வேலை?
ஏண்டீ…என்னை
ஏத்தி விடுறதுபோல எப்பப் பார்த்தாலும் வந்து புலம்பித் தள்றது….நானா பேசி ஒரு தீர்வு
காணுவோம்னு கிளம்பும்போது முன்னே வந்து தடுக்கிறது…இதான்
உன் வேலயா? என்னை என்ன கிறுக்கன்னு நினைச்சீங்களா? – ஃபோனின் வாயை அடைத்துக் கொண்டே கோபமாய்க் கேட்டார்.
பிறகு என்னவோ தோன்ற லைனைக் கட் பண்ணினார்.
…திடீர்னு
கட் பண்ணிட்டீங்க…மூஞ்சில அடிச்சாப்ல….?- திடுக்கிட்டாள் நாராயணி.
இருக்கட்டுமே…என்ன
கெட்டுப் போகுது…? அந்தாள் செய்ற காரியத்துக்கு இது ஒண்ணும் தப்பில்லே… நான் இப்ப எல்லாத்தையும்
பேசியிருப்பேன்…நீ வந்து கெடுத்தே…! என்றார்.
மறுபடி
ஃபோன் வரும் என்று எதிர்பார்த்தார். அந்தாளா பேசுபவன்? கல்லுளிமங்கனாச்சே! நேரடியா
எதையும் எதிர்நோக்காமல் உள்ளடி வேலைகள் செய்றதுதானே அந்தாளுக்கு வேலையே! சில்ர…..!
– மனசுக்குள் கடுப்பேறியது சண்முகநாதனுக்கு.
அப்போதைக்கு
விஷயம் முடிந்தது என்று அடுப்படியை நோக்கி நகர்ந்தாள் நாராயணி. ஒவ்வொரு முறையும் இப்படித்தான்
தவறிப் போகிறது. பேசவிடாமல் வந்து தடுத்து விடுகிறாள். தன்னிடம் வந்து மலையளவு புலம்புகிறாள்.
பிறகு என்றுதான் தீர்வு இதற்கு?
ஒரு வாரமாகவே இவர் மனது புகைந்து கொண்டுதானிருந்தது. நிம்மதியில்லாமல்
ஆக்கி விட்டானே இந்த ஆள்? பெண்ணைக் கட்டிக் கொடுத்தோமா, பொறுப்பு விட்டதா என்றில்லாமல்?
எத்தனை நாளைக்குத்தான் இந்த வேதனையை அனுபவிப்பது? இந்தாள் அங்கிருந்து இந்தப் பெண்ணைத்
தூண்டித் தூண்டி விடுவான்…அது கிளிப்பிள்ளை போல் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருக்கும்…எப்பப்
பார்த்தாலும்…! பொழுது பொழுதாய்ச் சண்டை…அர்த்தமில்லாத …எடுத்தெறிஞ்ச பேச்சு…வீட்டில்
யாரையும் மதிக்காத தன்மை…! நல்லதே சொல்லிக் கொடுக்க மாட்டானோ?-திமிர் பிடிச்சு அலையுதே…!
-இதை எப்படி ஒடுக்குவது என்று தீவிரமாய்ச் சிந்திக்க ஆரம்பித்திருந்தார் சண்முகநாதன்.
புகுந்த வீட்டுல நடக்கிறதையெல்லாம் பொறந்த
வீட்டுக்குச் சொல்லக் கூடாதும்மா…அது தப்பு…அப்படிப்பட்டவ ஒரு பொம்பளையே இல்ல…அதக்
கேட்டுட்டு இப்படிச் செய்…அப்படிச் செய்யுன்னு ஒரு அப்பன் தூண்டி விட்டான்னா …அவன்
நல்ல தகப்பன் இல்லை…அது தெரியுமா உனக்கு…? –,இத அந்தாள் இந்தப் பெண்கிட்ட ஒருவாட்டியாவது கேட்டிருப்பானா? அவனே தூண்டிவிடுற
ஆளால்ல இருக்கான்…?
இவர் நாராயணியை நோக்கி இப்படிக் கேள்விகளை
வீசியபோது அவள் கேட்டாள்.
என்ன நீங்க…அவன் இவன்ங்கிறீங்க? அப்டியெல்லாம்
பேசாதீங்க….
இப்போ இதுதான் கெட்டுப் போச்சாக்கும்? என்றார் எரிச்சலுடன். பிறகு தொடர்ந்தார்.
இப்டி உன்கிட்டே சொல்றதுக்கே உனக்கு உறைக்குதே…அந்தாள்ட்டப்
பேசினேன்னா கெதி என்னா ஆகும்? இந்த பாஷைல பேசுறதுக்குத்தாண்டீ அவன் தகுதியானவன்….பெண்ணுக்கு
நல்லது சொல்லிக் கொடுப்பாங்கன்னு கண்டிருக்கு…புகுந்த வீட்டுல எப்படிப் பொறுப்பா நடந்துக்கணும்னு
பாடம் சொன்னா அவன் பொறுப்பான அப்பன். சதா வில்லங்கத்தல்ல இழுத்து விடுறான்? இவன் மனுஷனா?
நல்ல சம்பந்தி வந்து வாச்சான்யா நமக்குன்னு…!
நல்லதே கத்துக் கொடுக்கல்லியே அந்தப் பெண்ணுக்கு?
…எல்லாம் நம்ம தலவிதி…நல்லா நிதானமாக்
கவனிச்சு இன்னும் சிலது பார்த்து முடிவு பண்ணியிருக்கணும்…!
அவசரப்பட்டுட்டோம்…!-மிகுந்த துக்கத்தோடு பகன்றது போலிருந்தது நாராயணியின் வார்த்தைகள்.
நிதானமா அவங்களோட அன்றாட நடவடிக்கைகளைக்
கவனிச்சு ஒரு பெண்ணோட கல்யாணத்தை முடிவு பண்ணனும்னா குறைஞ்சது ஆறு மாசமாவது அவுங்க
வீட்டுல நாம டேராப் போடணும்…நிச்சயம் பண்ற வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி எவனாவது
உட்கார்ந்து கை நனைப்பானா? இல்ல அவுங்கதான் விடுவாங்களா? அது அசிங்கமில்லே? ஏதோ சில
முக்கியமானதைக் கவனிச்சு…நல்லது கெட்டது பார்த்து …சரின்னு முடிவு பண்றதுதான்…எல்லாமும்
கல்யாணத்துக்கப்புறம் பலதும் சரியாப்போகும்னுதான் நினைப்பாங்க…அப்படி ஒரு தியரி இருக்கே…அது
இந்தப் பொண்ணைப் பொறுத்தவரை ஒர்க் அவுட்டாகாது போல்ருக்கே…. ? சுய புத்தியே இல்லையே…சொல்புத்தி
எங்கயாவது விளங்குமா? நல்லதைச் சொல்லிக் கொடுத்தா ஒருவேளை விளங்கலாம்…இந்தாள்தான் வில்லங்கப்
பார்ட்டியாவுல்ல இருக்கான்….
அதுக்கு அந்தாள் மண்டையைப் போட்டாத்தான்
ஆகும்…அப்புறம்தான் படிப்படியா எல்லாமும் சரியாகும்…ஒரே தீர்வு அதுதான்…
இப்படி ஒரு பதிலை நாராயணி சொல்வாள் என்று
சண்முகநாதன் எதிர்பார்க்கவேயில்லை. சிரிப்புத்தான்
வந்தது அவருக்கு. ஒரு பெண் இப்படிப் பேசலாமா? அதிலும் தன் மனைவி இவ்வாறு பகன்றதை இவரால்
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவரால். சீ…வாயை மூடு…! என்றார் ஆவேசமாக. ஒரு பேச்சுக்குத்தான்
சொல்லியிருப்பாள். மனதாரச் சொல்வார்களா என்ன? வாய் தவறி…மனம் தவதாயப்படும்போது அப்படி
வந்துவிடுகிறதுதான்…அந்தளவுக்கு அந்த மனுஷன் படுத்தறானே?
ஒருவர் இருப்பதும் இறப்பதும் நம் கையிலா
இருக்கிறது? அது ஆண்டவன் சித்தம். யாருக்குத்தான் இருப்பு நிரந்தரம்? ஏன் நானே அடுத்த
நிமிடம் சாகக் கூடாதா? இவள் தலை கவிழக் கூடாதா? இந்த உலகத்திலேயே நிச்சயமானது மரணம்
ஒன்றுதான். அதையும் மறைத்து வைத்து விட்டான் இறைவன். இறந்து விடுவோமோ என்று தோன்றலாமே
தவிர…இறந்து விட்டோம் என்பதை இருப்பவர்கள்தானே சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்களுக்கு…நமக்கில்லையே?
செத்த பிணத்தைப் பார்த்து நீ செத்துட்டே என்றா சொல்ல முடியும்?
அந்தப் பெண் இந்தக் குடும்பத்திற்கேற்றாற்போல் மாற
வேண்டும் என்று வேண்டுமானால் நாம் விரும்பலாமேயொழிய அதுக்கு அவுங்க அப்பன் சாவணும்
என்றால் எப்படி? அது நடந்தால் இது நடந்து விடுமா என்ன? சொல்ல முடியாதுதான். கடவுளைத்தான்
வேண்ட வேண்டும். கதியற்றவர்களின் பிரார்த்தனை பலிக்காமல் போகுமா? குணசாலியாய் இருக்கும்
என்றுதான் கட்டி வைத்தது. அது இப்படி முறுக்கிக்கொண்டு நின்றால்?
அந்த அளவுக்கு வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிறான்
அந்த ஆள். அதனால சொன்னேன். எனக்கென்ன வந்தது? அவர் இருந்தா என்ன போனா என்ன? அது யார்
கைல இருக்கு? அநாவசியமா நம்ப குடும்ப விஷயத்துல தலையிடுறாரேங்கிற கோபம்தான். இங்க நடக்கிறது
ஒவ்வொண்ணையும் இந்தப் பொண்ணு அவர்ட்ட வரி விடாமச் சொல்லிட்டேயிருக்கு. உட்கார்ந்தது,
எந்திரிச்சது, என்ன சமைச்சோம், சாப்பிட்டோம், என்ன பேசினோம்ங்கிறது முதற்கொண்டு எல்லாத்தையும்
தப்பாவே பார்த்து தப்பாவே திரிச்சுத் திரிச்சு தானே விபரீதமா நினைச்சு அவன் அப்பனுக்குச் சொல்றது….அந்தாளும்
கேட்டுட்டு…மேலும் மேலும் தப்புத் தப்பாச் சொல்லிக்கொடுக்கிறான்…எடுத்த எடுப்புல முதல்ல
இப்படி வெளில சொல்றதை நிறுத்துன்னுல்ல ஒரு நல்ல அப்பன் சொல்லணும். அது இல்லை அந்தாள்கிட்ட….இப்படிச்
சொல்றது மூலமா நீ என் பெயரைக் கெடுக்கிற அங்கே…ன்னு சொல்ல வேண்டாமா? என் பொண்ணா இருந்திட்டு
நீ இப்படிப் பேசலாமா?ன்னுல்ல நல்ல மனுஷனாயிருந்தாக் கேட்பான்? எல்லாத்தையும் அந்தாளும்
தப்பாவே எடுத்திட்டு விபரீதமாச் சொல்லிக் கொடுக்கிறான். அதக்கேட்டுட்டு சண்டைக்கு நிற்குது
இது. அதுதான் உண்மைன்னு, சரின்னு, நம்பிண்டு
இந்தப் பொண்ணும் ஆடறது. சுயமாச் சிந்திக்கும் திறனில்லை…அத்தனையும் சொல்புத்தி !
நீ வேணுங்கிறதை வெளில ஆர்டர் பண்ணி இஷ்டம்போல
வாங்கிச் சாப்பிடு…யாரு கேட்கிறது? நீ வேலைக்குப் போறே, சம்பாதிக்கிறே… ஃபினான்ஷியல் இன்டிப்பன்டென்ஸ் வேணும்
பெண்ணுக்கு…அதான் பெண்ணுரிமை…! அதை யாரும் தடுக்க முடியாதாக்கும். அப்படித் தடுத்தா
என்கிட்டே சொல்லு…நான் ஒரு கை பார்த்திடுறேன்….அது இதுங்கிறான்….நல்லதே சொல்லித் தரமாட்டாம்
போல்ருக்கு….! நீ ராணியாக்கும்…உனக்கு எல்லாம் கிடைக்கும்..அதுக்கு நான் கியாரண்டி..ன்னு
உளர்றான் அந்தாள். இதுவும் அப்பா சொல்றது அத்தனையும் வேத வாக்குன்னு நினைச்சிண்டு பேயாட்டம் போடறது! இப்படி ஒரு பிசாசு
நம்ம வீட்டுக்கு மருமகளா வரும்னு கனவுல கூட நான் நினைக்கலே…! இன்னிவரைக்கும் அந்தப் பொண்கிட்ட நீ என்ன சம்பளம்
வாங்குறே…ன்னாவது நாம ஒரு வார்த்தை கேட்டிருப்பமா? இல்ல அவன்தான்…சம்பளப் பணத்தை என்கிட்ட
மாதா மாதம் கொடுத்திரணும்னு சொல்லியிருப்பானா? அதுதான் வச்சிண்டிருக்கு…தனக்குத்தான்
செலவு பண்ணிக்கிறது….இந்த நியாயத்தை யார் சொல்றது? மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா…அப்டியெல்லாம்
இல்லப்பா…அவுங்க என்கிட்டே எதுவுமே கேட்கிறதில்லே…இதுவரை கேட்டதுமில்லேன்னுல்ல சொல்லியிருக்கணும்?
தின்னு தின்னு உடம்பை வளர்த்திருக்கே தவிர…மண்டைல மசாலாதான் இருக்கு அதுக்கு…எல்லாம்
நம்ம தலைவிதி…!
தவதாயப்பட்டாள் நாராயணி. இந்தப் புலம்பலில்
அவளுக்கு ஏதும் நோய் நொடி வந்து படுக்கையில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்
று இவர் பயப்பட்டார். தன்னிடம் கொட்டித் தீர்ப்பதுதான்
அவளுக்கு ரிலீஃப் போலிருக்கிறது. அதுவும் ஒரு வகை நிவாரணிதானே…! அவள் புலம்பல் எந்தப் புள்ளியில்தான் நிற்கும் என்றே
இவருக்குத் தெரியவில்லை.
என்ன கோமாளித்தனம் இது? எல்லாம் காதுல விழறதே…!
ஸ்பீக்கர்ல போட்டுல்ல அந்தப் பெண் பேசுது? கேட்டாக் கேட்கட்டும்ங்கிற திமிரு! அதானே?
அந்தாளே ஒரு ஓட்டாண்டி…பையன லோன் போடச் சொல்லி…அபார்ட்மென்ட்
வீடு வாங்கி அவன டியூ கட்ட வச்சிருக்கான்….ஒரு சேமிப்பில்ல..அத்தனையும் கைவீசிச் செலவு
பண்ணி வீணடிச்சிருக்கான்..! ஜாலியா இருந்து கழிச்சிருக்கான்…! எப்டியோ ரெண்டு பிள்ளைகளையும்
படிக்க வச்சிட்டான்…கடன உடன வாங்கி வாங்கி அடைச்சிட்டேயிருந்திருக்கான்..சிக்கனமாக்
குடும்பம் நடத்தணும்னு அவன் அகராதில் இல்ல போலிருக்கு…விட்டேத்தியா இருந்தே கழிச்சிருக்கான்.
..அதே பழக்கத்தைத் தன் பெண்ணுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கான்…
அப்பப்ப இதுகிட்டப் பணம் வாங்கிப்பான்
போல்ருக்கு…? அப்படித்தான் தெரியுது…நாம என்ன அந்தப் பொண்ணோட பாங்க பாஸ் புத்தகத்தையா
வாங்கிப் பார்க்கப் போறோம்? - சொல்லி விட்டு
நிறுத்தினாள் நாராயணி. இவர் முகத்தை நோக்கினாள்.
அப்படியிருந்ததுன்னா அதை நம்ம பிள்ளைதான்
தடுக்கணும். உதவி செய்யலாம் தப்பில்லை…அதை அவனுக்குத் தெரிவிச்சிட்டுக் கொடுக்கணும்.
புருஷனுக்கே சொல்லாமச் செய்றதுதான் தப்பு. இவனுக்கு ரோஷம் வேணுமே…! ….இவன் கேட்கலை,
கண்டுக்கலைன்னா இவன்தான் ஏமாளி. அதுக்கு நாம என்ன பண்றது? நாம குறுக்கே புகுந்து பேசுறது
அசிங்கம். இதெல்லாமுமே நாம அவுங்க கூட இருக்கிறதுனாலதானே தெரிய வருது. என்னவோ பண்ணிட்டுப்
போறாங்க. புருஷன் பொண்டாட்டி பாடு. நாம ஏன் தலையிடணும்…? வயசான காலத்துல நமக்கு இது
தேவையா?-அடங்காத கோபத்தோடு சொன்னார் சண்முகநாதன். தனிக் குடித்தனம் போகட்டும் என்ற
இவரது யோசனை எடுபடவில்லையே? பையனோடு பிசினாய் ஒட்டிக் கொண்டுதான் இருப்பேன் என்கிறாளே?
அவர்களுக்கு என்று குடும்பம் நடத்தப் பழகும்? வரவு செலவு எப்போது கைக்குள் அடங்கும்?
சேமிப்பு என்பது எப்படிக் கைவரும்? எத்தனையோ கேள்விகள் இவரிடம்.
குடும்பத்தின் அதிகாரம் ஆண் கையில் இருந்தால்தான்
குடும்பம் விளங்கும். ஆனால் அந்த ஆண் பொறுப்பானவனாய், நேர்மையானவனாய், நன்மை தீமைகளைச்
சீர்தூக்கிப் பார்த்து செயல்படுபவனாய் இருத்தல் வேண்டும். சண்முகநாதன் தன் வாழ்க்கையில்
அப்படித்தான் இயங்கி வந்திருக்கிறார். தன் குடும்பத்தை அக்கறையோடும், கருத்தோடும் சிந்தித்து
செயல்பட்டு முன்னேற்றியிருக்கிறார். இல்லையென்றால் ரெண்டு வீடு, ஒரு பிளாட், இத்தனை
சேமிப்புகள் என்று கைவந்திருக்க முடியுமா? மனிதனின் தேவைகள் மிகக் குறைவு என்கிற எண்ணம்
கொண்டவர் அவர்.அநாவசியச் செலவுகள் அவர் வாழ்க்கையில் எட்டிப் பார்த்ததேயில்லை. மாதத்தின்
முதல் செலவே சேமிப்பு என்றுதான் வாழ்ந்து கழித்திருக்கிறார் அவர். தன் மனதும், செயலுமே
தனக்கு சாட்சி. வேறு எவன் சொல்லிப் பாராட்ட வேண்டும். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா
போங்க…!
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனார் சண்முகநாதன்.
ஆனால் நாராயணியின் புலம்பலை நிறுத்தவே முடியவில்லையே! தன்னை விட்டால் வேறு யாரிடம்
தன் மனக்குறைகளைச் சொல்லிப் புலம்புவாள் அவள்?
அவுங்க அப்பா இருக்கிற தைரியத்துல இதுவும் அடங்காப்பிடாரியா
நடந்துக்கிறது. இங்க யாரு என்ன சொல்றாங்க அவளை? அவபாட்டுக்குத்தானே இருக்கா? ஏதாச்சும்
குத்தம் குறை சொல்றமா? காலைல பதினோரு மணிக்குத்தான் எழுந்திருக்கிறா…ஒரு நாளாச்சும்
ஏதாச்சும் சொல்லியிருக்கனா? அடுப்படிப் பக்கம் லீவு நாளாச்சும் எட்டிப் பார்த்திருக்கா
அது? துரும்ப நகர்த்துறதில்ல…சொகுசா தின்னுட்டுத் தின்னுட்டு மொபைல் பார்த்துண்டு,
தூங்கிண்டு…பாத்ரூம் போயிண்டு காலங்கழிக்கறச்சே…இம்புட்டுத் திமிரு இருந்தா…நாள் பூராவும்
வேலை செய்ற எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்சமேனும் நன்றி வேணாம்? காலைல அஞ்சுக்கு எழுந்திருந்து
ராத்திரி வரைக்கும் இவ்வளவு வேலை செய்றாளேங்கிற கரிசனம் வேண்டாம்? என்ன வளர்த்திருக்காங்க
பொண்ணை? நீங்க சொன்ன மாதிரி தனிக்குடித்தனம் வச்சா விளங்கினாப்லதான்…எம் பையன் பாடு
படு திண்டாட்டமாயிடும்…நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காது அவனுக்கு. இதுக்கு சமைக்கத்
தெரியுமோ என்னவோ…நான் செய்றேன்…நான் செய்றேன்னு அந்தாள் வந்து நின்னாருன்னா? நம்ம வீட்ல
வந்து அவன் நிர்வாகம் பண்றதா? அப்படி ஆள்தான் அந்தாளு? உள்ளே விட்டோம்னா நாளடைவில நம்மளையே
அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடுவான்…கேடு கெட்ட மனுஷன்….-பொரிந்து தள்ளினாள் நாராயணி. மன
பாரம் அப்படியாவது இறங்கட்டும் என்று தேமேனென்று கேட்டுக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.
இந்தப் பேச்சு சொல்லப்போனால் தினசரியே
இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருவருக்கும் மனசு ஆறுதலடைய மாட்டேனென்கிறது.
பையனுக்கு சரியாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணவில்லை என்று ஆ தங்கப்படுகிறது மனசு.
பரஸ்பரம் கொட்டித் தீர்த்துக் கொண்டால்தான் வேதனை குறைகிறது. இல்லையென்றால் உடம்புக்கு
ஏதேனும் வியாதி வந்து விடுமோ என்று மனசு பயப்படுகிறது. படுக்கையில் விழுந்தால்…அது
இன்னும் மோசமாயிற்றே…? தனக்கும் பதிலுக்குப் பதில் பேசினால்தானே மனம் ஆறுகிறது?
அட…வேலதான் செய்ய வேண்டாம். அன்பா நாலு வார்த்தை…மரியாதையா
ஒரு சொல்….வேண்டாமா ஒரு பொண்ணுக்கு? அப்படியென்ன பேரழகியா இது? பணக்கார ஃபேமிலியா,?
சாதாரண மிடில் கிளாஸ்தானே? அதி புத்திசாலியா? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கா?
அவர் தன் பொண்ணுக்குப் போட்டதைவிட நாமதான் அதிகமாப் போட்டு வச்சிருக்கோம். எதுக்காக?
எல்லாம் நம்ம பையனுக்காக. இவளுக்காகவா? எல்லாத்தையும் நாளைக்கே கொண்டு போய் பாங்க்
லாக்கர்ல வைக்கச் சொல்றேன்…இந்த வீட்டையும், நகை நட்டுக்களையும் பேரன்கள்தான் எடுத்து
அனுபவிக்க முடியும்…அதுவரை யாருக்கும் தொடுறதுக்கு அனுமதியில்லேன்னு உயில் எழுதி வைக்கப்
போறேன். பத்திரமே எழுதிப் பதிவு செய்து வைக்கிறேனா இல்லையா பாருங்க…!
சரி…சரி…போதும் போதும் நிறுத்து…நிறுத்து…நான்
அவர்ட்டப் பேசலாம்னு கிளம்பப் போக…அதைத் தடுத்திட்டு…இப்போ நீ எங்கிட்டப் பேசிட்டிருக்கே…நாம
பேசறதோட சாராம்சமாவது அவருக்குத் தெரிய வேண்டாமா? அப்பத்தானே அந்தாளுக்குக் கொஞ்சமாவது
சொரணை வரும்? அதையும் தடுத்திட்டியே நீ?
நான் எங்கே தடுத்தேன் …நீங்கதானே ஃபோனை
ஆஃப் பண்ணினீங்க…?
ஆமாண்டீ…யாரு இல்லைன்னு சொன்னா? அவர்
கூடப் பேச ஆரம்பிச்ச வேளைல குறுக்க புகுந்தா? கமுக்கமா நின்னு நான் என்னென்ன பேசறேன்…எப்படிப்
பேசறேன்னு அப்சர்வ் பண்ணனும். ஆரம்பிக்கிறப்பவே வந்து நின்னு தடுக்கக் கூடாது…! அப்புறம்
எனக்கு அந்த வீரியம் விட்டுப் போகுமில்ல…? நியாயம் மனசுல பெருக்கெடுக்கிற போது அதை
அப்படியே கொட்டிடணும்….உண்மை வேகமாத்தான் வெளில வரும். அது உஷ்ணமாத்தான் இருக்கும்.
அதை நாமளே பொருட்படுத்தலைன்னா எப்படி? எதிராளிக்கு எப்படிப் போய்ச் சேரும்? என்னிக்கானாலும்
பேசினாத்தானே தீரும்? விளைவு என்னங்கிறதை அப்புறம் பார்த்துக்கலாம். வயற்றெரிச்சல்
குறையுமே? அதத் தடுத்திட்டியே?
பேசி ஓய்ந்ததுபோல் திடீரென்று அமைதியானார்
சண்முகநாதன். ஒரு நல்ல சந்தர்ப்பம் நழுவவிட்டதாய் உணர்ந்தார். வெகு நாட்களாய் மனதில்
உருப் போட்டுக் கொண்டிருந்த ஒன்றை வடித்தெடுக்கும் முன் குறுக்கே புகுந்து கெடுத்து
விட்டாள் நாராயணி. இவளை வைத்துக் கொண்டு இனி பேசக் கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.
வீட்டுப் பெண்கள் எல்லாவற்றையும் வீட்டு
ஆண்களிடம் புலம்புகிறார்கள். அவர்கள்தான் தீர்க்க வேண்டுமென்று. இஷ்டம்போல் கதறத் தெரிந்த
அவர்களுக்கு, இஷ்டம்போல் வீட்டு ஆம்பளையைச் சுதந்திரமாய் விட வேண்டும் என்று தெரியவில்லையே?
பிறகு எப்படிப் பிரச்னைகளைத் தீர்ப்பது? நானென்ன கையில் தடியையா எடுத்துக் கொண்டு அடிக்கப்
போகிறேன்? வெறும் வார்த்தை விளையாட்டுத்தானே? அது கம்பால் அடிப்பதை விட அதிகக் காயத்தை
உண்டு பண்ணுமே…! சொரணை உள்ளவனுக்கு. உப்புப் போட்டுத் தின்பவனுக்கு ஒரு சில வார்த்தைகள்
போதும்தான். அல்லாதவனுக்கு? வெட்கத்தை உதிர்த்தவனுக்கு? சூடு, சொரணை என்று எதுவுமே
இல்லாதவனுக்கு? எது சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் உறைக்காதுதான். இந்தாள் அந்த ரகமாய்
இருப்பானோ?
சிந்தனை இந்த திசையில் போக…தலை மூர்ச்சைக்கு
வந்தது சண்முகநாதனுக்கு.
ஆள விடு…என்று சொல்லிவிட்டு அறைக்குள்
சென்று கதவைத் சாத்திக் கொண்டார். அவர் மனது அமைதியைத் தனிமையை நாடிக் கொண்டேயிருக்கிறது.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுபோல் இங்கே அன்றாட நிகழ்வுகள் நடக்கின்றன. இவரும்
எவ்வளவோ ஒதுங்கி ஒதுங்கித் தான் செல்கிறார். விடாது கருப்பு என்பதுபோல் வந்து வந்து
ஒட்டிக் கொண்டு நமநம என்று அரிக்கிறது. எப்படி
விலகிப் போவது? பையனின் வாழ்க்கையாயிற்றே? சுமுகமாய்க் கழிந்தால்தானே பெற்றோர்களுக்கு
நிம்மதி? நாளும் பொழுதும் கலகமாய்க் கடந்தால்?
கீழே கேட் திறக்கும் சத்தம். அவன்தான்
வந்துவிட்டான். காரை பார்க்கிங் ஏற்றிவிட்டு வந்து சேரப் பத்து நிமிஷம் ஆகும். அதற்குள்
பள்ளிக்குச் சென்றிருக்கும் பேரன் வந்து விடுவான். காத்திருந்து அவனையும் அழைத்துக்
கொண்டு மேலே வரக் கூட அஞ்சு நிமிஷம். பிறகு ஆறு மணிக்கு அவனை டியூஷனுக்குக் கொண்டு
விட வேண்டும். எட்டு மணிக்குத் திரும்பக் கூட்டி வர வேண்டும். காலையில் அவனைக் குளிப்பாட்டி,
பல் தேய்த்து விட்டு, யூனிபார்ம் அணிவித்துக் கிளப்புவதும் அவன்தான். அதற்குத்தான்
தினசரித் தவறாமல் அஞ்சுக்கு எழுந்து டிபன் தயார் செய்கிறாளே நாராயணி. ஒரு நாள் ஒரு
பொழுதாவது அந்தப் பெண் எதுவும் செய்ததில்லை. அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை
என்பதுபோல் தூங்கிக் கொண்டிருக்கும். சின்னஞ்சிறுவன் ஆறுக்கெல்லாம் எழுந்து பள்ளிக்குத்
தயாராகிவிடுகிறானே என்கிற உறுத்தல் கூட இல்லை. தினசரி காலை எட்டு வரைக்கும் வீடு அல்லோல
கல்லோலப்படுகிறதே என்கிற தாக்கம் சிறிதுமில்லை. நாமும் எழுந்து நம் பங்குக்கு ஏதாவது
செய்வோம் என்கிற எண்ணமில்லை. உலகமே தலைகீழப் புரண்டாலும் நான் பத்துக்கும் பதினொண்ணுக்கும்தான்
எழுந்திருப்பேன் என்று கும்பகர்ணத் தூக்கம் போட்டால்? அசிங்கமாயில்லை. இதைச் சொல்லப்
புகுந்தால் சண்டை…! ஓவென்ற அழுகை. எடுத்தெறிந்த பேச்சு…!
பிள்ளை பெறுவது மட்டும் ஆண்மையில்லப்பா…ஆளுமைத்
திறனோட ஒரு ஆண் இருக்கிறதுதான் ஆண்மை. குடும்பத்துல அது ரொம்ப முக்கியம். அதத் தெரிஞ்சிக்கோ….-பலமுறை சொல்லிவிட்டார்தான்.
உறைத்தால்தானே? இவருக்கோ மனசு புழுங்கியது. எதற்கு உடன் இருந்து கொண்டு இந்தக் கண்றாவியையெல்லாம்
பார்த்துப் பார்த்து மனசு வேக வேண்டும்? அவுங்க பிள்ளை…அவுங்க வாழ்க்கை…தனியா வாழட்டுமே!
நாம ஏன் குறுக்கே நின்று கொண்டு? – எத்தனையோ முறை சொல்லித் தீர்த்து விட்டார். நாராயணி
கேட்பதாயில்லை.
நான் இருந்துக்கிறேன்..நீங்க வேணும்னா
போங்க….-இப்படியொரு பதில் சொல்லலாமா? சொல்கிறார்களே? குடும்பப் பெண்ணுக்கு அழகா அது? குடும்பமாவது…அழகாவது? வயதானால்
எல்லாப் பெண்களுக்கும் வாய் நீண்டு விடுகிறது. காதுவரை கிழிகிறது. எல்லாக் கடமைகளையும்
சீரும் சிறப்புமாய் முடித்தவன் கடைசிக் காலத்தில் தனியாய்ப் போய் இருந்து கஷ்டப்பட
வேண்டுமென்று தலையெழுத்தா என்ன?
உன்னை வச்சுக் காப்பாத்துற மாதிரி என்னையும்
வச்சுக் காப்பாத்த மாட்டானா? அவனோட பேசிட்டுத்தான் இந்த வார்த்தையை என்கிட்டே நீ சொல்றியா?
நாக்கு மேலே பல்லுப் போட்டு என்னைப் பார்த்து
இப்படிப் பேசுறதுக்கு உனக்கு எப்படி மனசு வருது? மனசாட்சின்னு ஒண்ணு உனக்கு
இருக்கா இல்லையா? பையனுக்காக அதை அவுத்து எறிஞ்சிட்டியா வெளில? -கேட்கத்தான் செய்தார்
சுடச்சுட…!
ஆனால் அந்தக் கேள்விக்குத்தான் பதிலே
இல்லை. மழுங்குண்ணி மாங்கொட்டையாய் ஒருவன் இருந்தால்தான் இந்த வாழ்க்கையைப் பிரச்னைகள்
இன்றி ஓட்ட முடியும்….கண்ணையும், காதையும் பொத்திக் கொள்ள வேண்டும். மொழி மறந்து போகும்
அளவுக்கு வாயை மூடிக் கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் இருக்கப் பழகினால்தான் ஓரளவுக்கு
இந்த வாழ்க்கையை, அன்றாடங்களைப் பிரச்னையின்றிக் கடந்து செல்ல முடியும்.
இதுதான், தான் இத்தனை வருஷ வாழ்க்கை அனுபவத்தில்
கண்ட பேருண்மையா? நினைக்க நினைக்க வேதனைச் சிரிப்புத்தான் வெளிப்பட்டது அவரிடம்.
வாழ்க்கையே வேஷம்…இதில் பாசமென்ன, நேசமென்ன….காலத்தின்
கோலம்…புரிந்தது….ஞானிதானே நானும்…!!!!
--------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக