06 அக்டோபர் 2024

“காலச் சுமைதாங்கி“ - சிறுகதை - வாசகசாலை 100 வது இதழ் (06.10.2024)

 

                        


                                        “காலச் சுமைதாங்கி“

றையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார் காமேஸ்வரன். இது போதுமே..! என்றிருந்தது மனசுக்கு.

            ஏம்ப்பா…ஃபேனைப் போட்டுக்க வேண்டிதானே…? என்றவாறே சுவிட்சைத் தட்டப் போனான் சிவா.

            ம்ம்ம்….போடாதே….உடம்பெல்லாம் எரியறது ஃபேனுக்கடிலயே உட்கார்ந்திருந்தா…! மாடி உறீட்டை அப்டியே இறக்குது….இந்த ஜன்னல் வழியா  நல்லா காத்து வருது…இது போதும்…..-குரலில் உறுதியோடு சொன்னார்.

            போய் விட்டான். உறாலில் இருபத்து நாலு மணி நேரமும் ஒரு ஃபேன் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. அங்கு கணினியின் முன் உட்கார்ந்து தன் வேலையை அவன் கவனிக்கிறான். இன்னொரு அறையில் மருமகள் மீனா என்கிற மீனாட்சி அதுவும் கணினியின் முன் அமர்ந்த நிலையில் தன் வேலையைப் பார்க்கிறது.

            இவர் மனைவி விசாலாட்சியோ உறாலில் பையனுக்குத் துணையாக அமர்ந்து ஸ்லோகம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆக ஒரே சமயத்தில் மூன்று மின் விசிறிகள் விடாது ஓடிக் கொண்டிருக்கின்றன. பகலிலும் விளக்குகள் எரிகின்றன. திரையை விலக்கினால் ஜன்னல் வழி சூரிய வெளிச்சம் பளீர் என்று உள்ளே அடிக்கிறது. நல்ல காற்றும் வருகிறது.  அதை யாரும் செய்வதில்லை. சொல்லிச் சொல்லி, செய்து செய்து இவரும் அலுத்து விட்டார். முணுக் முணுக்கென்று எழுந்து போய், விடாது செய்வதற்கு சின்ன வயசா? அல்லது  இதென்ன இவர் வீடா? அவன் வீடு, அவன் சுதந்திரம், அவன் பாத்யதை…! சொல்லலாம், செய்து காண்பிக்கலாம்…கடைப்பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வது? நம் மதிப்பை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது.

நேரத்தைக் கடத்தவென்று எதையாவது செய்ய முடியுமா? அதுவே அவர்களுக்குத் தொந்தரவாய்ப் போனால்?

கரன்ட் சார்ஜ் எட்டாயிரம், பத்தாயிரம் என்று வருகிறது. வயிற்றெரிச்சலாய் இருக்கிறது இவருக்கு. என்னடா இது கொள்ளையா இருக்கு? அதிகமா எரிச்சாலும் இவ்வளவா பில் வரும்? சம்பாதிக்கிறீங்கல்ல…கட்டுங்க…என்று பிடுங்கிக் கொள்கிறார்களோ…! எனத் தோன்றியது.

            வயிற்றுச் சோற்றுக்குச் செலவிடுவதை விட சுற்று வட்டச் செலவுகள்தான் பிய்த்துக் கொண்டு போகிறது.  வண்டிக்குப் பெட்ரோல், லாரித் தண்ணீர், அடுக்கக மெயின்டனன்ஸ் பங்குத் தொகை, அவ்வப்போது ஆட்டோ, டாக்ஸி….காசை அள்ளி விட்ட கதைதான். -அதுக்கு ஒரு மதிப்போ மரியாதையோ இல்லவேயில்லை. வெறும் பேப்பர்தானே அது? அதுகூட இப்போது இல்லை. கார்டை எடுத்து நீட்டினால் ஆச்சு.

            அவங்கதான் இளைய தலைமுறை…நீயுமா இப்படி இருக்கிறது? அவன் இல்லாதபோதாவது லைட்டை அணைக்க மாட்டியா? உன் தலைக்கு மேலே இருக்கிற ஒரு ஃபேன் சுத்தினாப் போதாதா? அந்தக் கடைசில இருக்கிற ஃபேனும் எதுக்கு ஓடணும்? அணைச்சா அந்தக் கரன்ட் செலவு மிச்சம்தானே?

இவளே இப்படி இருந்தால்? அவர்களைச் சொல்லி என்ன பயன்? ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே விதியே என்று அமர்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படிப்பது? வரிகள் நகர மறுக்கின்றன. அதிக பட்சம் ஒரு நாளைக்கு இருபது பக்கங்களுக்கு மேல் செல்ல மாட்டேனென்கிறது. படிக்கப் படிக்க மறந்து போகிறது இப்போதெல்லாம். படிக்கும் அந்தக் கணம் ஏற்படும் சுவாரஸ்யமும் ரசனையும் மட்டும்தான்.

யாரிடமும் எதுவும் பேசவும் முடியவில்லையே! அதுதான் மொபைலோடு பேசிக் கொண்டிருக்கிறார்களே! இடையில் நாம் போய்ப் பேசினால் தொந்தரவாய் அல்லவோ கருதுகிறார்கள்!

தான் சும்மா இருத்தலே அவர்களுக்கு சுகம் என்று நினைக்கிறார்களோ? வயதானவர்களுடன் இன்றைய இளைஞர்கள் பேச விரும்புவதில்லை என்று தோன்றியது. பையனோடு வெளியே செல்கையில் எங்குமே அவன் முகத்தைப் பார்த்துத்தான் பேசுகிறார்கள். கூட அருகில் ஒருவர் நிற்கிறார் என்று யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஒரு தடவை கூட முகத்தைப் பார்ப்பதில்லை. இது ஏன் இப்படி? வயதானவர்கள் என்றால் இளப்பமா?

யாரையும் எதையும் சொல்லித் திருத்த முடியாது. அவர்களாகவே உணர்ந்து செய்தால்தான் ஆச்சு. இந்த முடிவுக்கு அவர் எப்போதோ வந்திருந்தார். பையன் வளரும்போது நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவில்லையா? அல்லது தலைமுறை இடைவெளியினால்  அப்படியாகிப் போனதா? அல்லது இந்தப் புதிய உலகம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து தன்னை விலக்க வைத்துவிட்டதா? வயதானவர்களே சுமைகளாகிப் போன காலமா இது? சுகமான சுமைகள் என்று ஒரு பயலும் நினைக்க மாட்டான் போலிருக்கிறதே? சமுதாயம் ஏன் இப்படிக் கெட்டுப் போனது?

ன் அளவிலாவது கொஞ்சம் சிக்கனப்படுத்துவோம் என்று முனைந்திருந்தார் காமேஸ்வரன். உண்மையில் ஃபேன் போடாதது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது அவருக்கு. ஆனாலும் இருக்கும் அறையின் ஜன்னல் வழி சுமாராகக் காற்று வந்தது. அருகே வந்து அமர்ந்து கொண்டால் அந்தக் காற்றுப் போதுமே…! எதற்கு அநாவசியத்திற்கு ஃபேன்?

இருக்கிற இடத்தை விட்டு அசையுறதில்ல. நாள் பூராவும் அந்த ஃபேன் ஓடிட்டேயிருக்கு. இதுல நமக்குச் சொல்ல வந்துட்டாரு? நினைப்பார்களோ?

தன்னால் வெட்டிச் செலவு என்று ஆகிவிடக் கூடாது. நாளைக்கு ஒரு பேச்சு என்று வந்துவிட்டால் அவரால் தாங்க முடியாது. இப்டிச் சொல்லிட்டானே? என்று மன வேதனைப்பட்டு நொந்து போவார். பிறகு என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. அவளோ பையன் சொல்வதற்குத்தான் தலையாட்டுவாள்.  என்னடா இப்டிக் கேட்கிறே? என்று தலை நிமிர்ந்து ஒரு வார்த்தை அவனைக் கேட்டுவிட மாட்டாள்!  ஆகையால் மிகவும் கவனமாய்த்தான் இருந்தார் காமேஸ்வரன். அறையில் அப்பா இருக்கிறாரா என்று அவர்களுக்கே சந்தேகம் வரும் அளவுக்கு அமைதி காத்தார். இந்த உடம்பும் மனமும் மிகவும் பாரமாகிக் கிடந்தது அவருக்கு. கடமைகளெல்லாம் முடித்து ஓய்ந்த காலத்தில், நிர்மலமாய், நிர்ச்சிந்தனையாய் இருப்போமென்று பார்த்தால் அலை ஓயாது போலிருக்கிறதே? என்னமாவது ஒன்றை மனசு போட்டு உழட்டிக் கொண்டேயிருக்கிறதே?

மிகச் சரியாய்ச் சொல்லப்போனால் அங்கு பையனோடு இருப்பது ஏதோ தண்டச் சோறாக இருந்து கழிப்பதாய்த்தான் தோன்றி அவரை வதைத்தது. அவரும் ஏதாவது வேலையை ஏற்படுத்திக் கொண்டு செய்யத்தான் செய்கிறார். சும்மாவே உட்கார்ந்திருந்தால் எப்படி? சோம்பேறித்தனம்தான் வளர்கிறது. சின்னச் சின்ன வேலைகள்தான் செய்ய முடிகிறது. பெரிய எடுப்பு என்பதில்லை. முன்பெல்லாம் என்றால் நோக்காலியைக் கொண்டு போட்டுக் கொண்டு, அதில் ஏறி ஃபேனைத் துடைத்து சுத்தம் செய்து விடுவார். இப்போது மேலே ஏறினால் தலைசுற்றல் வருகிறதோ இல்லையோ அந்த பயம் வந்து விட்டது. வெட்டிக்கு உட்கார்ந்திருக்கான்யா இந்த ஆளு… என்று நினைத்து விட்டால்?

நீ கொஞ்சம் இதெல்லாம் பார்க்கலாமில்லப்பா? என்று ஏதேனும் அவனிடமிருந்து வார்த்தை வந்து விடுமோ என்று பயந்தார். அதற்காக வலியச் சில வேலைகளை அவரே எடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்.

இன்னிக்கு என்ன பண்ணப் போறே.? காய்களை எடுத்து வை…நறுக்கித் தர்றேன்….என்று போய் உட்கார்ந்து விடுகிறார்.

டிரம்ல தண்ணி இருக்கா…கேன் தண்ணி கவுக்கணுமா? என்று சொல்லிக் கொண்டே போய்ப் பார்த்து, மினரல் வாட்டர் கேனை இழுத்துக் கொண்டு வந்து, கஷ்டப்பட்டுத் தூக்கி தண்ணீர் டிரம்மை நிறைக்கிறார். வலது தோள் பட்டையில் கொஞ்ச நாளாய் ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவர் யாரிடமும் சொல்வதில்லை. சொல்லி என்ன பயன்? வயசாச்சு…இதெல்லாம் சகஜம்…என்பதான பார்வையிருக்கிறது அவர்களிடம்.

காலை நாலரைக்கெல்லாம் எழுந்து விடுகிறார். எங்கே தூக்கம் வருகிறது. ஒரு ஸ்ட்ரோக்…அஞ்சு மணி நேரம்…தூங்கி எழுந்தால் ஆச்சு. அத்தோடு தூக்கம் தொலைந்து போகும். எழுந்து பால் காய்ச்சி, காப்பிக்கு டிகாக் ஷன் போட்டு, குடிக்க வெந்நீர் சுட வைத்து…மடையில் கிடக்கும் பாத்திரங்களில் முக்கியமானதைத் தேய்த்து அலம்பி….அன்றாடம் வீட்டை அவர்தான் துவக்கி வைக்கிறார். காப்பியை குடித்த கையோடு மாடிக்கு நடக்கச் சென்று விடுவார். பிறகு ஏழரை போல் கீழே வருவார். கார் பார்க்கிங்கில் எறிந்து விட்டுச் சென்றிருக்கும் தினசரியைப் போய் எடுத்து வருவார்.  …..

அவராக உண்டாக்கி உண்டாக்கிச் சின்ன சின்ன வேலைகளாகச் செய்து கொண்டுதானிருக்கிறார். சும்மா உட்கார்ந்திருக்கிறோம் என்று யாரும் நினைத்து விடக் கூடாது.. அது வீட்டுக்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

உட்கார்ந்து கிடந்தா அது மனுஷனச் சோம்பேறி ஆக்கிடும்…வியாதி வெக்கைல கொண்டு விட்டுடும். மனுஷன் முடங்கவே கூடாது. முடிஞ்ச அளவு இயங்கிட்டேயிருக்கணும்…அதுதான் அழகு…! உட்கார்ந்து துருப்பிடிக்கிறதை விட வேலை செய்து அயரட்டும் உடம்பு..

ஓய்வூதியம் வருகிறதுதான். அதில் மாதம் ஒரு ஐயாயிரம்…வேண்டாம் ஒரு ரெண்டாயிரம் கூட அவர் தனக்கெனச் செலவழிப்பதில்லை. அப்படியே சேவிங்ஸ்தான். தபாலாபீஸ் சேமிப்பில் அவருக்கும், மனைவிக்கும் போட்டு வைக்கிறார். திடீரென்று மரணம் சம்பவித்தால் அப்படியே பையனுக்குத்தான் போகப் போகிறது அந்தத் தொகை. கவனமாய் நாமினிப் பெயராக அவனைக் குறிப்பிட்டிருக்கிறார் எல்லாவற்றிலும்.

விசாலாட்சிக்காவது மாத்திரை மருந்து செலவிருக்கிறது. அதுபோக வீட்டுக்கான காய்கறிகளை அவளே ஃபோன் செய்து வரவழைத்து விடுகிறாள். உறலோ…மாமி பேசறேன்…என்று கூறிவிட்டு தனித்தனியாகக் காய்கறிகளின் பெயரையோ அளவையோ அவள் சொல்வதில்லை..  ரொம்ப நாள் வாடிக்கை என்பதால் அவனுக்கும் அது பழகித்தான் போயிற்று. எல்லாக் காயும் கொடுத்துவிட்ரு…என்று சொல்லி வைத்து விடுகிறாள். பால் பாக்கெட்டும் வேணும் என்றுதான் சொல்வாள். பத்துப் பாக்கெட்டைக் கொண்டு இறக்கி விடுகிறான் அவன்.

அந்த ஃபிரிட்ஜ்க்கு மூச்சு முட்டும். அவ்வளவு காய்கறிகளைத் திணித்திருப்பாள். அவ்வப்போது குப்பைக் கூடையிலும் பையோடு கொண்டு எறிந்த அழுகிய காய்களைப் பார்க்கத்தான் செய்கிறார். கிலோ எழுபது நூறுன்னு விக்கிறது…எப்படி இவள் சர்வ சாதாரணமாக விரயமாக்குகிறாள்?. இப்படிக் கவனித்துச் சொல்கிறானே என்கிற கோபம்தான் வரும் பேசினால்.

ஒரு பொருளை வீணாக்குவது என்பது அறவே இவருக்குப் பிடிக்காது. சின்ன வயசில் ஒவ்வொன்றும் கிடைக்காமல் ஏங்கியதும், வறுமை பிட்டுத் தின்றதும்தான் அவரை இப்படியாக்கியிருந்தது. மேலுக்குத் துடைக்கும் துண்டைக் கூட கடைசித் தரை துடைக்க, தூசி தட்ட என்பது வரை பயன்படுத்தித்தான் தூக்கி எறிவார். அவரிடம் பழசுகள் நிறைய உண்டு. வரிசைப் படி எடுத்துப் பயன்படுத்தத்தான் செய்வார். துவைத்து, மடித்து எடுத்து அடுக்கும் பழக்கம் இன்றும் அவரிடம் உள்ளதுதான்.

இன்று பசங்கள் அப்படியா இருக்கிறார்கள்? மூவாயிரம் கொடுத்து எடுத்த சட்டையை ஆறே மாதத்தில் ஃபேடாகிப் போச்சு என்று ஒதுக்கி விடுகிறார்கள். யூஸ் அன்ட் த்ரோ… கலாச்சாரம்.

காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டுதான் பறக்கிறார்கள். ஆபீஸ் வேலை அவர்களை விழுங்கி விடுகிறது. வந்து பொணமாய்ப் படுத்து எழுந்திரிக்கிறார்கள். பிறகு மறுபடியும் ஓட்டம். என்ன வேலையோ…என்ன சம்பாத்தியமோ? என்று வேதனையோடு இருந்த இடத்திலிருந்து அசையாமல்  எல்லாவற்றையும் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார் இவர்.

ஆரம்பத்திலிருந்து இவர்தான் கடைக்குப் போய் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். கொரோனா வந்ததோ இல்லையோ…வெளியே போவது நின்றது. ரெண்டு வருஷம் ஓடிப் போனது. அதற்குப் பிறகு  இவர் வெளியே செல்வதும் அறவே  நின்று விட்டது.  

சாயங்காலம் இப்படியே கிளம்பி ஏழாவது தெரு வழியா நடந்து மெயின் ரோடு வழியே வட்டம் போட்டு 12-வது தெரு வழியா ஒரு ரௌன்ட் வர வேண்டிதானே…எதுக்காக தேமேன்னு  உட்கார்ந்திருக்கீங்க? ஒரு நடை கொடுத்தாத்தானே காலுக்கும் பலமிருக்கும்….? உங்களுக்கும் உற்சாகம் இருக்கும்?

அவள் சொல்வதுபோல் செய்யத்தான் செய்தார். ஆனால் தொடர முடியவில்லை. பாதி வழியிலேயே ஒன் பாத்ரூம் வந்து நெருக்கி விடுகிறது. அடக்க முடியவில்லை. சாலை ஓரத்தில் மறைவாய் ஒதுங்க எங்கும் இடமில்லை. தப்பிச்சேன் பொழச்சேன் என்று வீடு வந்து சேர வேண்டியிருக்கிறது. அதிலிருந்து மாடியிலேயே நடக்கிறார்.  எட்டு வீடுகள் கொண்ட பெரிய நீள மாடிதான். குறைந்தது ஒரு மணிநேரம் நடந்தால் ஓரளவு திருப்தியாய்த்தான் இருக்கிறது. அந்த நேரம் கீழே அமர்ந்து கொண்டு மின் விசிறியைச் சுற்ற விட்டுக் கொண்டு…அநாவசியக் கரன்ட் செலவுதானே?. ரெண்டு மாசத்துக்கொருதரம் எட்டாயிரம் வருகிறது என்றால், அதில் தன் செலவே நாலாயிரம் இருக்கும் போலிருக்கிறதே என்கிற உறுத்தலில்தான் தன் சார்பான மின் செலவைக் குறைக்க யத்தனிக்கிறார்.

ராத்திரி ஏ.சி. போட்டால் கூட அரை மணியில் அணைத்து விடுவார். அவளுக்கும் அந்தக் குளிர்ச்சி ஆகாது.. தூக்கக் கலக்கத்தில் எழுந்து முதல் வேலையாக ஏ.சி.யை அணைத்து விட்டு, பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்துக் கொள்வார். அந்த இன்னொரு அறையில் விடிய விடிய ஓடும். அவர்கள் சம்பாத்தியம்…அவர்கள் செலவு…!

சிக்கனம் என்பதே இல்லையே இன்றைய இளைய தலைமுறையினரிடம்? எடுத்தேன் கவிழ்த்தேன் என்றல்லவா  விட்டடிக்கிறார்கள். எவ்வளவு வந்தது, எவ்வளவு போச்சு என்பதற்கு ஏதேனும் கணக்கு உண்டா என்ன? ஒவ்வொரு அணாவுக்கும் அப்பா கணக்கு எழுதி வைத்திருந்ததெல்லாம் இவருக்கு நினைவுக்கு வந்தது. இதை எழுதி என்ன செய்யப் போறார்? என்று தோன்றியதில்லை அந்த இளம் பருவத்தில். அது அவர்களது ஒழுக்கத்தின் அடையாளம். கட்டுக்கோப்பான குடும்ப நடைமுறைக்கு ஆதாரம். எந்தச் செலவு அநாவசியம் என்று பார்த்து அடுத்தபடி அது நடக்காமல் தடுக்கும் லாவகம். தான் சம்பாதிக்கும் துட்டு நியாயமாய்த்தான், இந்தக் குடும்பத்திற்காகத்தான் முற்றிலும் செலவு செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரம். அந்த ஆவணத்தை இன்றும் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறார் காமேஸ்வரன். அவ்வப்போது அதை எடுத்து எடுத்துப் பார்க்கிறார்.

இவ்வளவுதான் இருக்கு என்கிட்ட. எப்டியாவது மூணுபேருக்கும் துணி எடுத்துக் கொடுத்து தைச்சுக் கொடுத்திடுங்க…என்று அப்பா கொடுத்த அந்தச் சிறு தொகையை வைத்து தன் பிள்ளைகளாய் ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று பிடித்த துணிகளைக் குறைந்த விலையில் கையில் இருக்கும் காசுக்கேற்றாற்போல் வாங்கி, அதில் தன் தையல் கூலியையும் பாதியாவது மிச்சப்படுத்தி, மீதியை அப்பாவாய்த் தரும்போது வாங்கிக் கொண்டு தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட உறுதி செய்த ரஉறீம் பாய் என்னும் அந்தத் தையல்காரரை சாகும்வரை மறக்க முடியாது. வெறும் தையல்காரரா அவர்? குடும்பத்தில் ஒருத்தர்.

வாங்க…நல்லாயிருக்கீங்களா? ….உட்காருங்க…என்று சொல்லி பாயைக் கொண்டு வந்து விரிக்கும் அம்மாவின் வரவேற்பும்...அம்மணீ நமஸ்காரம்…என்னும் அவரின் அன்பார்ந்த இருத்தலும்….காட்சிகள் கண் முன் ஓடுகின்றன இவருக்கு. மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வின்றி மதித்த காலம் அது. பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல் குடும்பத்தைப் பொறுப்பாய் நடத்துபவனானால் அவன் சம அந்தஸ்து உள்ளவன் என்பதாய்க் கருதப்பட்ட காலம்.

ஒன்றை நினைக்க ஒவ்வொன்றாய்க் கிளைத்து அவர் நினைவுகளில் வட்டமிடுகின்றன. பழசுலயே மூழ்கிக் கிடக்கான்…என்றுதான் இன்றுள்ளவர்கள் நினைப்பார்கள். ஆனால் அந்த விழுமியங்கள்தான் இன்றும் அவரை உயிர்ப்போடு இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

ட்டென்று ஒன்று தோன்ற எழுந்தார். ச்சே…நினைச்சிட்டேயிருந்தது மறந்து போச்சே…என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு  அடுப்படி நோக்கிச் சென்றார்.

என்ன…டீ…வேணுமா…? என்றாள் விசாலாட்சி.

ம்ம்…அதுக்கில்லே…இப்போ நான் ஒரு வேலை செய்யப் போறேன்….என்றவாறே அடுப்படி ஜன்னலின் கொசுவலை ஃபிரேமைக் கழற்றினார். அதிலானால் அவ்வளவு அழுக்குப் படிந்திருக்கிறது. அவ்வப்போது அதைச் சுத்தம் செய்தால்தானே ஆச்சு??

எடுத்து வந்து பாத்ரூமில் வைத்து தூசி தட்டி, துடைத்து, பிறகு தண்ணீர் விட்டுக் கழுவ ஆரம்பித்தார். சோப்புத் தண்ணீரை ஊற்றி, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவினார்.

ஒரு நாளைக்கு ஒரு கதவு. ஒரேயடியாய் ஒரே நாளில் அடுப்படியில். உறாலில், தன் ரூமில், அவர்கள் ரூமில் இருக்கும் எல்லா வலைகளையம் கழற்றிச் சுத்தம் செய்து விட முடியாது. தண்ணீர் பஞ்சம். குளிப்பதற்கும், பாத்ரூம் போவதற்கும், காலை மாலை முகம் கைகால் கழுவுவதற்கும் யதேஷ்டமாக இருந்தாலே பெரிது. திடீரென்று கீழே சம்ப்பில் தண்ணீர் காலி என்பார்கள்.

. தண்ணி ஏறலேன்னா ஏர் லாக்குன்னு தெரிஞ்சா,  பம்ப்ல தண்ணி ஊத்தி சரி பண்ண வேண்டாமா? அதை யாரும் செய்றதில்லை. யாராவது செய்துப்பாங்க…ன்னு விட்டிர்றாங்க…ஏர் லாக் மட்டும் பண்ணத் தெரியுது. அவுங்களே அதைச் சரி செய்யறதும் தங்களோட பொறுப்புன்னு செய்ய மாட்டேங்கிறாங்க.  …எந்த வம்பும் வேண்டாம்…என்று இவரே மெனக்கிட்டார்.

மாலை கீழே இறங்கிப் போய் கார் பார்க்கிங்கில் அனைத்து லைட்டுகளையும் போடுவது, விடிகாலையில் ஆறு மணிக்கு வெளிச்சம் வந்தவுடன் கன கச்சிதமாய்க் கீழே இறங்கிப் போய் அத்தனையையும் அணைப்பது…என்று செய்து கொண்டிக்கிறார் இவர் அதற்கு கமர்ஷியல் ரேட். நானூறு வந்து கொண்டிருந்த இடத்தில் இப்போது நாலாயிரம். அந்த நாலாயிரத்தைக் கூடிய மட்டும் குறைக்கப் பார்க்கிறார் இவர். குறைந்திருக்கிறதுதான். ஆனால் அதற்குக் காரணம் அவர்தான் என்பதை அவர்கள் உணர்ந்தார்களா தெரியவில்லை. அதொன்றும் லட்சியமில்லை இவருக்கு.

 தன் மனதுக்குப் பிடித்த நல்லவைகளைச் செய்கிறார். அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? அது வீடாய் இருந்தாலும் சரி…வெளியாய் இருந்தாலும் சரி…பொருட்படுத்தியதில்லை. கீழே இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றுகிறார்.  பூச்செடிகள் மலர்ந்து சிரிக்கும்போது மனதுக்கு ரம்மியமாய் இருக்கிறது. வெளியேறுபவர்கள் கேட்டை அப்படியே திறந்து போட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். இவர்தான் வாட்ச்மேன் போல் ஓடி ஓடிப் போய் கேட்டை அடைத்து கொண்டி போடுகிறார். கேவலமாய் நினைப்பதில்லை.

ஒரு பெரிசு இருக்குல்ல…அது பார்த்துக்கும் எல்லாத்தையும்….என்று நினைப்பார்களோ? சிரிப்புத்தான் வருகிறது.

ழுவிய கொசு வலை ஃபிரேமைக் கொண்டு அடுப்படி ஜன்னலில் மாட்டினார். பளீர்னு ஆயிடுச்சே….என்று சந்தோஷப்பட்டுக்கொண்டாள் விசாலாட்சி.

இதைச் செய்யுங்க…அதைச் செய்யுங்க…என்று அவள் எதுவும் சொல்வதில்லைதான். தானாகச் செய்யும்போதும் மறுப்பதில்லை. ஓட்டமாய் ஓடி ஓடி எல்லாம் செய்து ஓய்ந்தவர்தானே என்ற எண்ணமாய்க் கூட இருக்கலாம். அக்கறையா இவ்வளவு சேமிப்புப் பண்ணி, அதைக் கண்ணும் கருத்துமாப் பாதுகாக்குற இந்த மனுஷனையா குறை சொல்றது? என்றும் நினைக்கலாம். ஏன் சொல்லித்தான் பார்க்கட்டுமே? என்று சமயங்களில் முறுக்கிக் கொள்வார் இவர்.

யப்பா…உன்னை யாரும் இங்க ஏதுவும்  குறை சொல்லல…எதுக்கு நீயா ஏதாச்சும் முரணா நினைச்சிட்டுத் தவிக்கிற? – என்பான் பையன். சத்துவ குணம் படைத்த தன் மகனை நினைத்து அவருக்கு என்றும் பெருமைதான். இந்தச் சின்ன வயதிலேயே அவனுக்கிருக்கும் விவேகம் இவரை ஆச்சரியப்படுத்தியது. தான் அவன் வயதில் அப்படியிருந்தோமா என்று யோசித்திருக்கிறார் இவர்.

காமேஸ்வரனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இருந்ததில்லை. சர்வீசில் இருக்கும்போது கூட அப்படித்தான் இருந்தார். ஓய்வு பெற்று விடை பெறும் வழியனுப்பு நாளில் எல்லோரும் அவரின் அந்த குணத்தைத்தான் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். பாராட்டினார்கள். கீழேயிருந்து மேலேவரைக்கும் ….தன் சர்வீஸை அப்பழுக்கில்லாமப் போட்ட ஒரே மனுஷன் இவர்தான் என்று புகழ்ந்தார்கள்.

ரொம்ப சந்தோஷம்… ஆள விடுங்க…என்று வந்து விட்டார் இவர். சுற்றிலும் தப்பாய் நடக்கும் கூட்டத்தின் நடுவே இத்தனை வருடங்களைத் தான் எப்படி ஓட்டினோம் என்று இவருக்கே ஆச்சரியமாய் இருந்தது. கறை படியாத கையோடு வெளியே வந்ததே மிகப் பெரிய சாதனைதான்.

அதற்குப் பின் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை அவர். அந்த திசையிலேயே திரும்பவில்லை.  ராத்திரி படுக்கும்போது கூட அந்தப் பக்கத்தை உணர்ந்து  கால் நீட்டிப் படுத்தார். தனக்கு வர வேண்டிய பணப் பலன்களையெல்லாம் கடைசிப் பதினைந்து நாளில் அவரே பட்டியல் தயாரித்து அனுப்பி, தன் வேலைகளைக் கச்சிதமாய் முடித்துக் கொண்டார். அவர் வெளியே வந்த அடுத்த ஒரு வாரத்தில் அத்தனையும் அவர் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டன.

எல்லாம் படிப்படியா நடக்கும் என்று விட்டு விட்டு பிறகு ஏன் அவர்களிடம் போய்த் தொங்க வேண்டும். என்னானாலும் ஓய்வு பெற்று விட்டால் ஒரு மாத்து கம்மிதான். அதற்குப் பிறகு அங்கு போய் முகம் காண்பித்தால் மதிப்பிருக்காது. தான் அதட்டி, உருட்டி வேலை வாங்கியவர்களிடமே போய் தன் கோரிக்கைக்காக நிற்க வேண்டும். இந்த மனுஷன் என்ன பாடு படுத்தினான் நம்மளை? என்றுதான் நினைப்பார்கள். மனித இயல்பு அது . மனிதர்கள் என்றுமே சராசரிகள்தான்.

இன்னிக்கு இது போதும்…ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு செய்ங்க …டீ தரட்டுமா? என்று கேட்டாள் விசாலாட்சி.

அரை டம்ளர் கொடு…ஜீனி கம்மியா…. – என்றார். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கம்மியாய்த்தான் போடுவாள். இன்னும் கொஞ்சம் போடு என்றால் கூட, எல்லாம் போதும்…இப்டியே குடிச்சுப் பழகுங்க…என்று சொல்லி விடுவாள். அவள் உரிமைக்கும் இடமுண்டு என்று விட்டு விடுகிறார்.

இணக்கமாய்த்தான் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. சுணக்கம் கொள்வது என்பது நாமளாய் கோணலாக்கிக் கொண்டால்தான். மனித வாழ்வின் சங்கடங்களுக்கெல்லாம் காரணகர்த்தா இந்த மனசுதானே!

இப்படித் தன் மதிப்போடு இருக்கையிலேயே போய்ச் சேர்ந்து விட வேண்டும்.

கொஞ்சம் தண்ணி கொண்டாயேன்….என்று கேட்டு, அவள் கொண்டு வந்து நீட்டும்போது தலை சாய்ந்திருக்க வேண்டும்.  அந்த பாக்கியம் கிடைக்குமா தனக்கு? இதுதான் சமீபமாய் இவர் கடவுளிடம் வேண்டிக் கொள்வது. ஆழ் மனது அதை ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சாப்பிட வர்றீங்களா…? சாப்டுட்டுத் தூங்குங்க…!!– விசாலாட்சியின் கனிவான குரல் இவரை உசுப்புகிறது. மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் கருமமே கண்ணாயிருக்கும் அவள்தான் முந்திக் கொள்வாளோ…? அதற்குத்தான் இறையருள் கிடைக்குமோ? இதிலும் வெற்றி அவளுக்குத்தானா? இந்த எண்ணம் இவரை சஞ்சலத்துக்குள்ளாக்குகிறது. அவளில்லாத இந்த மீதி வாழ்க்கை? நினைக்கவே பயமாக…உடம்பு நடுங்க…கண் கலங்குகிறார்.

அவள் மடியில் தன் உயிர் போகும் பாக்கியம் தனக்குக் கிட்டாதோ?  என்று தோன்ற…. அழைத்ததை மறந்து சிலையாய் அமர்ந்திருக்கிறார் காமேஸ்வரன்.

என்ன வரலயா…தட்டு வச்சாச்சு….வாங்கோ…-! – என்ற சத்தம் அவர் காதில் விழுந்ததா தெரியவில்லை.

                                                ---------------------------

 

 

 

கருத்துகள் இல்லை:

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024

                                                                                                        ---------------------------------   ...