13 அக்டோபர் 2024

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024


 

                                                                                                      ---------------------------------




                                                             -

            திகபட்சம் அஞ்சு நிமிஷத்துக்கு மேலே உன்னோட பேச முடியாது….என்றான் அரவிந்தன்.

            தலையை வாரியவாறே கண்ணாடி வழி அவளை நோக்கிய  அவன், பதிலில்லாமல் போகவே,  நான் கிளம்பறேன்….என்றான். ஆபீஸ் போகும் நேரத்தில் ஒன்றைக் கிளப்பிவிட்டுப் போகிறான்.  

            நான் என்ன உங்களோட பேசக் காத்திட்டிருக்கனா? எனக்கு நிறைய வேலையிருக்காக்கும்…

            ஏதோ ஆரம்பிச்சே…அதான்….போற நேரத்துல எதுக்குப் பிரச்னைன்னு….

            என்ன பிரச்னை? பேச ஆரம்பிச்சாலே பிரச்னையா? என் வேலையை நான் பார்த்திட்டிருக்கன்…உங்களோட ஜாலியா யார்தான் பேச முடியும்…? –

            சட்டையை இன் பண்ணி, பெல்ட்டை இறுக்கிய வேகம் தன் பேச்சு பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியது. கிளம்பும்போது எதுக்கு சண்டை என்று நினைக்கிறானோ?

            அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். பிறகு சொன்னான்.

.பொழுது விடிஞ்சவுடனே ராத்திரி நீ வெட்டியாத் தூக்கம் முழிச்சுப் பார்த்த சினிமாவப் பத்தி பேச ஆரம்பிச்சேன்னா எப்டி? அடிதடி…வெட்டு…குத்து…ரத்தம்…இதுவா சினிமா…? ரெண்டு கோஷ்டிக அடிச்சிட்டுச் சாகுறது ஒரு படமா? இன்னும் எத்தன படம்தான் எடுப்பாங்க இப்டி? அபத்தம்….!

            சொல்லிவிட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினான் அரவிந்தன். காலில் மாட்டிய ஷூவை பிரஷ்ஷால் துடைத்து விட்டுக் கொண்டான்.

            குப்பையையும் தூசியையும் ஒதுக்கிறதுக்கு இந்த எடம்தானா கிடைச்சது? வீட்டைப் பெருக்கினா, அந்த வேலை எதோட முடியும்? குப்பையை அள்ளி வெளியே கொண்டு போடுறதோடதானே? அதை ஓரமாக் குமிச்சு வச்சு அழகு பார்த்தா? ஒரு வேலையை எடுத்தா அதை முழுமையாச் செய்யணும். பாதியோட நிறுத்தக் கூடாது. இதெல்லாம் கூட உனக்குச் சொல்லித் தர வேண்டிர்க்கு….வேலைகளைத் திருத்தமாச் செய்யுறதுக்குப் பழகிக்கோ….அதுதான் அழகு…!

            எந்த வகையிலேனும் அவன் தன்னை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பதாய்த் தோன்றியது நந்தினிக்கு. அப்படித்தான் அவளால் எடுத்துக் கொள்ள முடிந்தது. அதில் அவனுக்கு ஒரு குரூர திருப்தி. ஆபீசில் இவனை மற்றவர்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?  

            நான் வழக்கமாச் செய்ற வேலைதானே…அதை என் இஷ்டத்துக்கு எப்டியோ செய்துக்கிறேன். இதிலெல்லாம் நீங்க ஏன் மூக்கை நுழைக்கிறீங்க…? என்றாள்.

            பார்த்தியா…உன் வார்த்தைலயே நீ மாட்டிக்கிறே…காரணம் நீ எதையும் முழுசா செய்து பழகலை….உங்க வீட்டுல உன்னை அப்படிப் பழக்கலை…எப்டியோ செய்துக்கிறேன்னா என்ன அர்த்தம்? இப்டித்தான் செய்யணும்னு சொல்லித் தரலையா உனக்கு? எவ்வளவு நேரம் மிச்சப்படும்? உடல் நோவும் குறையும்…

            இங்க பாருங்க…அநாவசியமா எங்க அப்பாம்மாவ இழுக்காதீங்க…எதானாலும் என்னைச் சொல்லுங்க…கேட்டுக்கிறேன்…உங்க குறைகளை  கவனிச்சு கவனிச்சு நான் சொல்ல ஆரம்பிச்சேன்னா நீங்க தாங்க மாட்டீங்க…என்னவோ எல்லாத்துலயும்  ரொம்ப கரெக்டா இருக்கிறதா நினைப்பு உங்களுக்கு…! யாருமே பர்ஃபெக்ட் இல்ல இந்த உலகத்துல…தெரிஞ்சிக்குங்க…

            …அதுக்கு அப்புறம் வருவோம். இப்ப இதச் சொல்லு…உங்க அப்பா அம்மாவோட அடையாளம்தானே நீ…இன்னொரு வீட்டுக்குப் போகுற பெண்ணை எப்படிப் பொறுப்பா வளர்க்கணும்னு ஒரு முறை இருக்கில்லையா?  நீ இங்க எப்டி இருக்கேங்கிறதைப் பொறுத்துத்தான் உங்க அப்பா அம்மாவுக்குப் பெருமை. அவுங்க பேரைச் சொல்ற மாதிரி இருக்கணும் உன் செயல்பாடுகள். அதுதானே அழகு….

            கோர்வையாக அவன் சொல்வதில் தான் லயித்துப் போகிறோமோ? எதிர்த்துப் பேசும் திறனில்லையா தனக்கு? அல்லது அவன் சொல்வது நியாயம்தானே என்கிற எண்ணம் தன் மனதில் படிந்திருக்கிறதா? பல சமயங்களில் மௌனமே அவளது மொழியாயிருந்திருக்கிறது. ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியுமா?

            அப்போ என்னை பொறுப்பா வளர்க்கலைங்கிறீங்க…பொறுப்பில்லாதவளை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம்?

            ஒரு பெண்ணோட செயல்பாடுகளைக் கணக்கிடணும்னா குறைஞ்சது ஆறு மாசமாவது அவளோட நடவடிக்கைகளைக் கவனிக்கணும்…அது சாத்தியமா? தினமும் உங்க வீட்டுக்கு வந்து குந்தி, உன்னை விடாமக் கவனிச்சு, அதுக்கப்புறம் ஓ.கே.சொல்றேன்னு சொல்ல முடியுமா? யாராச்சும் அலவ் பண்ணுவாங்களா? நடைமுறை சாத்தியமா? இப்படித்தான் பலபேர் மாட்டிக்கிட்டு முழிக்கிறான்…

            அதேதானே எங்களுக்கும்…ஆம்பளை ஒழுங்கானவனான்னு பார்க்கிறதுக்கு எங்களுக்கும் உரிமை உண்டுதானே?

            நல்லாப் பார்த்திருக்க வேண்டிதானே? நானா வேணாம்னேன்….ஒரு தரம் கோயில்ல வச்சுப் பார்த்தவுடனே சரின்னு யார் சம்மதம் சொல்லச் சொன்னாங்க?

            அந்த ஈர்ப்பு ரெண்டு பேருக்கும் பொது. அதனாலதான் அனுபவப்பட்ட பெரியவங்க வேணும், வேண்டாம்ங்கிறதை முடிவு பண்றாங்க…அவுங்க கண்களுக்குத்தான் சரி, தப்புங்கிறது தெரியும்…அதப் புரிஞ்சிக்குங்க…நீங்களும்தான் தலையாட்டினீங்க…!

சுளீர் என்று கொடுத்ததனால் வாயடைத்துப் போனானோ?

            பைக்கை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது. பதறிப்போய் ஓடினாள் நந்தினி.

            என்ன திடீர்னு கிளம்பிட்டீங்க…? குழந்தையை பஸ் ஏத்துறதுக்கு வருவீங்கல்ல…என்றாள் அவனைப் பார்த்து.

            ஆபீசே அஞ்சு கி.மீ. இருக்கு. எப்டி வர்றது…? இப்பத்தான் இது உனக்குத் தோணிச்சா? இன்னிக்கு நீயே கொண்டு விடு….-என்றான் சற்று எரிச்சலுடன். வண்டி ஸ்டார்ட் ஆகாமல் படுத்தியது.

இத சர்வீசுக்கு விடக்கூட எனக்கு நேரமில்ல…-அலுத்துக் கொண்டான்.

            மாடி வீட்டில் இருப்பவர்கள் கவனிக்கிறார்கள் என்பது தெரிந்தது. வாசலில் செல்லும் காய்கறி வண்டியைக் குரல் கொடுத்து அழைத்தார் மேலே நிற்பவர். அந்த வீட்டுப் பெண்மணியும் வந்து தலை நீட்டியது தன் சத்தத்தைக் கேட்டுத்தான் என்று இவன் நினைத்துக் கொண்டான். காலைக் காட்சி பார்க்க அவ்வளவு ஆர்வம். அவர்களுக்கு அந்தத் தொல்லை இல்லை. மகனும் மருமகளும் வெளி நாட்டில். நிம்மதியான பாடு.

            என் மொபெட்டும் ரிப்பேருங்க…நான் எப்டிக் கொண்டு விடுறது? நடந்துதான் போகணும்….இப்டி திடீர்னு கிளம்பினீங்கன்னா எப்படி? – நந்தினி அழுதுவிடுவாள் போலிருந்தது.

            கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி, கொண்டு விட்டுட்டு வா…வேறென்ன செய்றது? இல்லன்னா ஆட்டோல போ. என்னால இன்னிக்கு முடியாது. மீட்டிங் இருக்கு….- சொல்லியபோது அவன் பரபரப்பை உணர்ந்ததுபோல் வண்டி அலறியது.

            ணியைப் பார்த்தாள். எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நெஞ்சு படபடத்தது. பிரஷரும் ஷூகரும் இதனால்தான் ஏறுகிறது. எட்டரைக்கு பஸ் வரும். அதற்குள் குழந்தை விக்கியைத் தயார் செய்தாக வேண்டும். இப்பொழுதெல்லாம் அவனே குளித்துக் கொள்கிறான். எப்படிக் குளிக்கிறானோ…சோப்பு சரியாய்த் தேய்த்து, அழுந்தக் கழுவி, நீர் போகத்  துவட்டி…எதுவுமே பார்த்து நாளாகிவிட்டது. எல்லாம் அவன்தான் செய்வான். குழந்தைக்கும் பழக்கிவிட்டிருக்கிறான்.

            தேர்டு  ஸ்டான்டர்டு படிக்கிறான்…அவனா செய்துக்க வேண்டாமா? இன்னமுமா கூட நிக்கணும்…பழகட்டும் என்று விட்டு விடுவான். விக்கியின் மேல் பற்களில் கரை இருந்தது. என்ன தேய்த்தாலும் அது போவதில்லை.

            கவனிக்கலையா நீங்க? என்றாள் எரிச்சலுடன். குழந்தையின் பல்வரிசை பிறழ்வதுபோல் தோன்றி வருத்தியது அவளை.

            அதுக்கு நான் என்னடீ பண்றது? அதுவா வந்திருக்கு அப்படி? அதெல்லாம் பால் பற்கள். கீழே விழுந்து புதுசா முளைக்கும்னு டாக்டர் சொல்லியிருக்கார்…ஒண்ணும் கேவலமில்லை.  நீயா ஏதாச்சும் நினைச்சுக்குவியா…குழந்தையை யாராச்சும் கேலி பண்ணுவாங்கன்னு…? நிறையக் குழந்தைகளுக்கு இப்படித்தான். சாக்லெட் தின்னு தின்னு கரை போட்டிருக்கு…இது குழந்தைகளுக்கான இயற்கை…எல்லாம் சரியாப் போகும்…

            ஒரு நீண்ட லெக்சரே கொடுத்தான்.  அவன் செய்வதெல்லாம் சரி. சொல்வதெல்லாம் சரி. யாரும் குறை சொல்லிவிடக் கூடாது. டாக்டர்ட்ட நான்தானே ரெகுலரா அழைச்சிட்டுப் போறேன்…நீயா அலையுறே….எனக்கில்லாத அக்கறை உனக்கு வந்திடுச்சா…? சமையல் வேலையை மட்டும் பாரு….போதும்…என்பான்.

            ஒரு நாளைக்கு சமைச்சுப் பாரு…ன்னு அய்யாவத் தவிக்க விடணும்…அப்பத் தெரியும்… என்று நினைத்துக் கொள்வாள்.

            எந்தப் பேச்சு எடுத்தாலும்  மட்டம் தட்டுவதிலேயே  கொண்டு போய் முடிப்பான்.  . சுமுகமான பேச்சு என்பதே கிடையாது. இது அவளுக்குப் பழகிவிட்டது. அதனால் அவளும் அவ்வப்போது அவனைச் சீண்ட ஆரம்பித்திருந்தாள்.

தன்னைப்பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவனுடைய பெற்றோர்களைக் கூட வைத்துக் கொண்டு கும்மியடிக்கிறேனே…அது ஒன்று போதாதா? அதை உணர்கிறானா? எந்த வீட்டிலாவது இது உண்டா? எல்லாரும் தனியாய்த்தான் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும்தான் கூட்டில் அடைந்த பறவையாய்க் கிடக்கிறேன். அதை அவன் ஏன் உணர மாட்டேனென்கிறான்? உங்க அம்மா அப்பாவ விட்டுட்டு வாங்க…பிறகு பார்ப்போம்…என்று கிளம்பத் தெரியாதா? தனிக்குடித்தனம்தான்னு ஒத்தக் கால்ல நிக்கத் தெரியாதா? என்னை என்ன கேனச்சி…க்கின்னு நினைச்சிட்டானா?

ஆக்ரோஷமான சிந்தனை நந்தினியின் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதோடுதான்  பொழுதுகளும் நகர்கின்றன. மாமனார் மாமியார் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த வாரக் கடைசியில் திரும்பிவிடக் கூடும். அவர்கள் இல்லாத இந்தச் சமயத்தில் தன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. ரெண்டு நாள் லீவு போட்டு விட்டு எங்கேனும் அழைத்துக் கொண்டு செல்வோம் என்று தோன்றவில்லையே…! இந்தக் குண்டுச் சட்டிக்குள்ளேயேதான் குதிரை ஓட்டுவானா?  காசைக் கை வீசிச் செலவு பண்ணி ரெண்டு நாள் அடுப்படிப் பக்கமே போகாமல் இருந்தால்தான் என்ன? குடியா முழுகிடும்? சேமிப்பு கரைஞ்சு போகுமா? சரியான சுக்காஞ்சட்டி….!

மாதத்தோட முதல் செலவு என்ன தெரியுமா? சேமிப்பு…என்பான். மண் உண்டியல் ஒன்று வாங்கி சாமி படத்தின் முன்னால் வைத்திருக்கிறான். எவ்வளவு என்று கணக்கில்லாமல் அதில் சேருமாம். அப்படியொரு சந்தோஷம். உடைக்கையில் கோயில் காரியமாம். அப்படியாவது ஒரு பயணத் திட்டம் வைத்திருக்கிறானே?

விக்கி…என் தங்கம்…குளிச்சிட்டு வந்திட்டியா…செல்லம்….சமத்துடா நீ….கண்களில் நீர் பொங்க…டவலை எடுத்து அழுந்தத் துடைத்து விட்டாள் நந்தினி.

நான் பார்த்துக்கிறேன்ம்மா….ஸ்கூல் பேக்கெல்லாம் ரெடி பண்ணிட்டேன். டிபன் மட்டும் கொடு…வாட்டர் பாட்டில்ல நானே தண்ணி ஊத்திக்கிறேன்…என்றவாறே யூனிபாரத்தை அவன் மாட்டிக் கொண்ட வேகம்…இவளைச் சிலிர்க்க வைத்தது. ஐ.டி.கார்டு…ஐ.டி.கார்டு என்று அவன் பறந்தது இவளுக்குள் சிரிப்பை வரவழைத்தது.

தினமும் எல்லாம் தயார் நிலையில் எடுத்து வைத்து, ஒவ்வொன்றாகப் போட்டுவிட்டு இவள்தான் ரெடி பண்ணுவாள். தலையை வாரி, நெற்றியில் விபூதி இட்டு, சாமி படத்தின் முன்னால் நின்று அவன் ஸ்லோகம் சொல்லும் அழகு  அவள் கண்களில் நீரை வரவழைக்கும். குழந்தைதான் தன்னை ஆசுவாசப்படுத்தும் பிரத்யட்ச தெய்வம் என்று நினைத்துக் கொள்வாள்.

நான் ஒண்ணு செஞ்சா நீ ஒண்ணு செய்ய வேண்டாமா? எல்லாத்தையும் நானே செய்ய முடியுமா? யூனிபாரத்தை போட்டு விடுறதாவது செய்….பாரு…இன்னிக்கு மண்டே…ஒயிட் ஷூ எவ்வளவு அழுக்கா இருக்கு…அதைக் கொஞ்சம் சோப்பு போட்டு வாஷ் பண்ணி  உலர வச்சா என்ன? எல்லாம் நான்தான் பார்க்கணுமா? எதைத் தொட்டாலும் அவனின் சுடுசொற்கள். எல்லாவற்றிலும் அவன் ஞாபகங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆபீசில் இவனிடம் மாட்டிக் கொண்டு  குழுப் பணியாளர்கள் எப்படித் தவிக்கிறார்களோ? எவனும் இவனின் டார்ச்சர் தாங்காமல் கையை நீட்டி விடக் கூடாது. இப்படியெல்லாம் நினைத்து பயப்படத்தான் செய்தாள் நந்தினி.

அவன் தந்தை அவனை எதுவுமே சொல்வதில்லை. அவருண்டு, புத்தகங்கள் உண்டு என்று இருந்து விடுகிறார். அவன் அம்மாதான் ஓரிரு முறை இவனைக் கண்டித்திருக்கிறாள். அது இவள் காதில் விழுந்ததும் உண்டு. அதில் கொஞ்சம் மனசு ஆறும்.

எல்லாத்துக்கும் அவளையே சொல்றியே…நீயும்தான் செய்றது….ஒருத்தியே கிடந்து கஷ்டப்பட முடியுமா? பாதி வேலையை நீ வாங்கிக்கணும்…வீட்டுக்கு உதவியா இருக்கிறதுல தப்பு எதுவுமில்லே. …அவளுக்கு நீ செய்யாம வேறே யார் செய்வாங்க…? காலம் பூராவும் உன்னோட பயணம் பண்ணப் போறவ அவதானே? நாங்களா? இன்னைக்கோ நாளைக்கோ…எங்க கதை முடிஞ்சு போயிடும்…நாள் கணக்குதான். முதல்ல அவளைக் குறை சொல்றதை விடு…நீயும் சேர்ந்து செய்…உன் வீட்டுக்கு நீதான் செய்யணும். கணக்குப் பார்க்காதே…! கடிஞ்சு மாயாதே…! எல்லாம் சரியாகும்…

அவன் தன்னைப் பொறுத்தவரை கண்டிப்பாகத்தான் இருக்கிறான். குழந்தை விக்கியைக் கூட இவ்வளவு கண்டித்து அவள் பார்த்ததில்லை.

விஸ்வநாதன்ங்கிறது பழைய பேரு…கொஞ்சம் மாடர்னா வைக்கலாமே…என்றாள். அதைக் கூட அவன் காதில் வாங்கவில்லை. எங்க தாத்தா பெயர் அது. அப்பா அதைத்தான் வைக்கணும்னு முன்னமே சொல்லிட்டார். அதைத் தட்ட முடியாது…என்று விட்டான்.

நீங்க அடிக்கடி சொல்வீங்களே…ஏதோ டைரக்டர் பெயர்னு…ரித்விக் உறட்டக்னு…அந்த முதல் பாதி பேர் கூட நன்னாத்தான் இருக்கு….ரித்விக்….அதுக்கு என்ன அர்த்தம்னு கூகுள்ல தேடிப் பாருங்க…ஏதாச்சும் சாமி பேரா இருந்தாக் கூடப் போதுமே…வைக்கலாமே…முன்னோர்கள் பெயருக்கான சாமிக்கு இப்போ மாடர்ன் பெயர் என்னன்னு தேடி வையுங்க…அதுபோல கொஞ்சம் பொறுமையாத் தேடி, செலக்ட் பண்ணிச் …செய்றது….நம்ம குழந்தைக்கு பெயர் வைக்கிறதுல நம்ம விருப்பம் தானே முதல்.  தப்பில்லையே…! -  நிதானமாய்த்தான் சொன்னாள் நந்தினி.

 அவன் எதைக்  காதில் வாங்கினான். கேட்டால் மட்டை அடியாய் அடிப்பான். என்ன பேர்ங்கிறது முக்கியமில்ல…எப்படி வளர்க்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்…இந்த நாட்டுக்கு ஒரு நல்ல பிரஜையை உருவாக்கணும்…அதான் முக்கியம்….கூப்பிட கண்ணியமா இருக்கணும். தஸ்ஸூ புஸ்ஸூ…கர்ரு…புர்ருன்னு இருக்கக் கூடாது…தெரிஞ்சிதா? குறிப்பா “க்” குல முடியுற பெயரா இருக்கக் கூடாது. கார்த்திக்..ரித்விக்…இதெல்லாம் சுத்த உறம்பக்….நாராயணன்ங்கிறதை நாராயண் – னு சுருக்கிக்கிறான். அதுதான் ஃபேஷனாம்…லேட்டஸ்டாம்…கிறுக்குப் பசங்க….! பெயருக்குப் போய் எதுக்கு இவ்வளவு மெனக்கிடணும்…? முன்னோர்கள் இருக்கவே இருக்காங்க…குலம் தழைக்கணும்னு வாய் கிழியப் பேசறோம்…!

உங்க கணக்குப்படி சிறந்த பிரஜையாக்க மிலிட்டரிலதான் சேர்க்கணும்….என்றாள் இவள் வெடுக்கென்று. அதற்குப் பிறகு இரண்டு நாள் பேசவில்லை அவன். பேசவில்லை என்றால் அப்படி ஒரு கர்ண கடூரமாய் யாருமே  இருக்க மாட்டார்கள். ஏதோ தீண்டத்தகாதவள் போல நடந்து கொள்வான். பக்கத்திலேயே அண்டக் கூடாது என்பான். எதுவுமே அவளிடம் வாய் விட்டுக் கேட்க மாட்டான். காபியைக் கொண்டு வைத்தால், வைத்தமேனிக்கே இருக்கும். தொடமாட்டான். திடீரென்று அடுப்படிக்குள் நுழைந்து, தனக்கான டிபனைப் பண்ண ஆரம்பித்து விடுவான். தோசையை வார்த்து வார்த்து எண்ணிக்கையில்லாமல் அடுக்குவான். வீம்புக்கு, தானே இரவு அதைச் சுடப்பண்ணிச் சாப்பிடுவான்.  அவனே சட்னி செய்து கொள்வான். மணக்க மணக்க எள்ளு மிளகாய்ப்பொடி இருக்கு என்று முன்னால் தூக்கி கண்காண வைத்தால் அலட்சியமாய் ஒதுக்குவான். அவனே காபி கலந்து கொண்டு பெஸ்ட் காஃபி என்று சத்தமாய்ப் புகழ்ந்து கொள்வான்.

பண்ணிக்கட்டுமே…என்ன இப்ப…? என்று விட்டு விடுவாள். ஒரு நாள் செய்துண்டா சுருங்கியா போகப் போறாங்க…? கம்மென்று கிடப்பாள்.

நான் வார்க்கட்டுமாப்பா….என்று வந்து நிற்கும் அம்மாவைக் கூடத் தவிர்த்து விடுவான். என் தலையெழுத்து…நான் பண்ணிக்கிறேன்…உனக்கென்ன வந்தது? போய் உட்காரு…என்று அம்மாவை விரட்டுவான்.

பல நாட்கள் இப்படித்தான் கழிகின்றன. டீச்சர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இவளை, வேலையை விடு என்று விட்டான். அங்கு போய்க் கொண்டிருந்தாலாவது ஏதோ கொஞ்சம் மனம் நிம்மதியாயிருக்குமோ என்று இப்போதெல்லாம் இவளுக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டேயிருக்கிறது.

அந்தப் பத்தாயிரம் வந்து இங்க நாம ஒண்ணும் கோட்டை கட்டப் போறதில்ல…பேசாம வீட்டிலயே கிட….என்றான்.

நல்லதாப் போச்சு…இந்த மட்டுக்கும் சொன்னானே.. என்று அப்போது இவளுக்கும் சந்தோஷமாய்த்தான் இருந்தது. போகப் போகத்தான் வீடு நரகமாகியது.

தன்னிடம் தனிமையில் சந்தோஷமாய்ப் பேச வேண்டும் என்றே இவனுக்குத் தோன்றாதா? எங்கு வெளியில் சென்றாலும்  எல்லாரும் போவோம் என்கிறானே? என்றோ ஒரு நாள் வெளியில் சாப்பிட்டால் என்ன? அது ஒரு தப்பா? அநாவசியத்துக்கு எதுக்கு ரெண்டாயிரம், மூவாயிரம்? அப்புறம் மணி பத்து, பத்தரைக்கு மேல ஆயிடும். ஒரு டாக்சிக்காரனும் வரமாட்டான். அப்டியே வந்தாலும் லேட் அவர்ஸ் சார்ஜ் போடுவான்.  புக் பண்றபோது ஒண்ணு, இறங்குறபோது இன்னொன்ணுன்னு வாடகை கேட்பான்…எதுக்கு இதெல்லாம்…? நாம என்ன பணக்காரங்களா? அள்ளி விடுறதுக்கு? இஷ்டத்துக்குச் செலவு பண்ண முடியமா? எண்ணிச் சுட்டது விண்ணப்பம்…அவ்வளவுதான். விரயம் பண்ண முடியாது. வீட்டுக்கு வந்து சாப்பிடுவோம்…வயித்துக்கும் ஒண்ணும் பண்ணாது. காசும் மிச்சம்…

தனக்கான ஆசைகள் எல்லாமும் மெல்ல மெல்ல ஒடுங்கிக் கொண்டு வருகின்றனவோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது நந்தினிக்கு. ஒரு பிள்ளை இருக்கும்போதே இத்தனை சிக்கனம் பேசுகிறவன், இன்னொன்று வந்து விட்டால்? கேட்கவே வேண்டாம்…!!அவள் மனதுக்குள் அச்சம் நிலவியது எப்போதும்.

எதுக்கு இன்னொன்ணு? அதெல்லாம் வேண்டாம்…இந்த ஒருத்தன நல்லா வளர்த்து, படிக்க வச்சு, ஆளாக்கினாப் போதும்…அதுவே மாபெரும் சாதனைதான்….இன்னொன்ணுன்னா படு கஷ்டம்…அதுலயும் பொண்ணாப் பொறந்திச்சு, கேட்கவே வேண்டாம்….அதுக்கு என்னென்ன பாடெல்லாம் இருக்கு…சும்மாவா? வாழ்க்கை பூராவும் டென்ஷனாவே இருக்க முடியுமா? ஒண்ணைப் பெத்து அப்பாம்மா ஸ்தானம் கிடைச்சாச்சில்ல…அத்தோட திருப்திப் படு….என்றான்.

இல்லீங்க…அவனுக்கு ஒரு தங்கை, தம்பின்னு ஒரு சொந்தம் வேண்டாமா…? நமக்கப்புறம் அநாதையால்ல நிப்பான்…குலம் தழைக்கணும்னா ஒண்ணோட நிறுத்தக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க….

உங்கம்மா எதத்தான் சொல்லலை…? சொல்றவங்க எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிடுவாங்க…நாளைக்கு அனுபவிக்கிறது நாமதானே? அங்கென்ன ஐவேஜா வச்சிருக்காங்க…தூக்கிக் கொடுக்கிறதுக்கு? ரெண்டு சட்டியும், பானையும்தான் இருக்கு உங்க வீட்டுல…ஒரு வீடு கிடக்கு…அதென்ன பெரிய சொத்தா? அதிக பட்சம் போனா முப்பது லட்சம் தேறும்…அதுக்கும் உங்கண்ணன் சம்பந்தம்தான் வந்து நிப்பான். உனக்கா கிடைக்கப் போவுது…? அவனா பார்த்து ஏதாச்சும்  கொடுத்தா ஆச்சு…! மூணு பிள்ளைங்கள வச்சிருக்கான் . அதுகளக் கரையேத்த வேண்டாமா? எவனுக்கு மனசு வரும்? நான் அவன் இடத்துல இருந்தன்னா கொடுப்பனா? நிச்சயமா மாட்டேன். .அந்த ரீதில நினைச்சுப் பார்க்கணும்..ஒண்ணையாவது கொடுத்து நம்மள அப்பாம்மா ஆக்கினானே அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லு….இந்த ஒண்ணும் இல்லாமத் தவிக்கிறவங்க ஏராளமா இருக்காங்க உலகத்துல…புரிஞ்சிதா?

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி… - எதைச் சொன்னாலும் அது தொடர்புடைய பாட்டு ஒன்றைப் பாடி விடுவான் உடனே. அது எப்படித்தான் ஞாபகம் வருமோ?

என்னைச் சொல்றீங்க நீங்க…சினிமாவாப் பார்த்துத் தள்ளினது நீங்கதான்…இல்லன்னா டக்கு டக்குன்னு இப்டிப் பழைய பாட்டு வருமா? இன்னைக்கும் ப்ளாக் அன்ட் ஒயிட் பழைய படம்னா விடாம உட்கார்ந்துர்றீங்கல்ல…அப்போ என்னை மட்டும் குறை சொன்னா? அவுங்கவுங்களுக்குப் பிடிச்சதை அவுங்கவங்க பார்க்கிறோம்..இதிலென்ன தப்பு? – ஒவ்வொரு முறை அவனுக்குச் சரியாக பதிலடி கொடுத்து விட்டதாய்த் திருப்திப் பட்டுக் கொள்வாள் நந்தினி.

ஆனாலும் அவள் ஆசைகள் மிகவும் சுருங்கிவிட்டனதான். திருமணம் ஆன பின்னால் வாழ்க்கையின் போக்கே மாறித்தான் விட்டது. வாழ்ந்துதான் கழிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டு விட்டதோ? ஏற்றம் இறக்கம், மேடு பள்ளம் என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது நாட்கள். சம தரையில் பதவாகமாய் நடந்தோம் என்பதே  இல்லை. இப்படித்தான் மொத்த நாட்களும் கழியுமோ? காலமும் கரையுமோ?

பெண்ணாய்ப் பிறந்தவள், பிறந்த வீட்டோடு தன் எல்லா ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வந்துவிட வேண்டுமா? அதற்குப் பின் அவளுக்கு ஆசைகள் என்பதே அவன் கணவன் சார்ந்ததாய், அவன் விருப்பத்திற்குட்பட்டதாய் இருப்பதுதான் தர்மமோ?

வேகு வேகென்று நடந்தும் ஓடியும் பஸ் ஸ்டாப்பை அடைந்தாள் நந்தினி. வண்டியில் வந்தால் இது தூரமாகவே தெரியாது. இன்று கிளம்பியதும் தாமதம். வரும் வழியெல்லாம் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். பாதாளச் சாக்கடை வேலை நடக்கிறது என்றார்கள். மழை நீர் வடிகால் என்கிறார்கள். எல்லாக் கஷ்டமும் சாதாரண எளிய மக்களுக்குத்தான்.  ஸ்கூல் பஸ்ஸை விட்டு விடக் கூடாதே என்கிற பயம்.   அது போய் விட்டால்…பிறகு ஒன்றிரண்டு தெருக்களைக் கடந்து அது பிறகு வந்து நிற்கும் இன்னொரு ஸ்டாப்பைப் பிடித்தாக வேண்டும். அதுவும் தவறினால் ஆட்டோவைப் பிடித்து பள்ளியிலேயே கொண்டு நிறுத்த வேண்டியதுதான்.  நீரிலும் சகதியிலும் கால் வைத்து, தடுமாறி விழாமல் ஸ்டாப்பை அடைந்ததே பெரிய்ய்ய சாதனை. பின் பக்கம் புடவை நுனியை இழுத்து விட்டுக் கொண்டாள். சகதி அடித்திருப்பது தெரிந்தது. ரப்பர் செருப்பைப் போட்டு வந்ததில் வழுக்கிக் கீழே விழாமல் இருந்தோமே…அதுவே பெரிது என்று நினைத்துக் கொண்டாள்.

இடுப்பில் பர்ஸ் செருகி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். கல்யாணத்துக்கு முன்பிருந்தே இப்படியொரு பழக்கம் அவளுக்கு. அதென்ன இடுப்புல சொருகிறது? புதுப் பழக்கமா இருக்கு? எங்கியாவது விழுந்திச்சின்னா? எவனாவது இடுப்பைப் பிடிச்சு உருவினான்னா? சுத்த அசட்டுத்தனமால்ல இருக்கு….இனிமே என் கண் காண அங்க வைக்காதே பர்ஸை….புரிஞ்சிதா?

அவள் பர்ஸ் இப்போது கைக்கு வந்திருந்தது. நினைத்தது போல் வழக்கமான ஸ்டாப்பில் பள்ளி வாகனம் வந்து போயிருந்தது.

இப்பத்தான தாயி கிளம்பிப் போச்சு…அச்சச்சோ…விட்டுட்டியே..-அருகிலிருந்த பூக்கடைக்காரம்மாள் அங்கலாய்த்தாள்.

அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைக் கேட்ச் பண்ணுவதற்கு விக்கியோடு விடுவிடுவென்று அந்தக் குறுக்குச் சந்துகளில் நடந்து கடந்து கொண்டிருந்தாள் நந்தினி. நாய்கள் குரைத்தன. அந்தச் சத்தம் அவள் செவிகளில் ஏறவேயில்லை. குழந்தை கூடவே ஓடி வருவதைக் கண்டு அவள் மனம் இரங்கியது. ஐயோ…என் தங்கமே…!!

மாலை அரவிந்தன் வீடு வந்த போது கேட்டான்.

நாளை சனி ஞாயிறு ரெண்டு நாள்  லீவுதானே…கிளம்பு…உனக்குப் பிடிச்ச அஜீத் படம் இன்னிக்குக் கடைசியாம்…போயிட்டு வந்துடுவோம்…அப்டியே ஓட்டல்ல சாப்டுப்போம்….! அடுப்படியைப் பூட்டு…! லைட்டை அணை -சற்றும்எதிர்பாராமல் அவன் இப்படிச் சொன்னதை இவளால் இம்மியும் நம்ப முடியவில்லை.

நந்தினியின் மனம் துள்ளிக் குதித்தது. அவளால் அவன் வார்த்தைகளை அந்தக் கணத்திலும் ஏற்க முடியாமல் அவன் சொல்வது உறுதிதானா என்பதைப் போல் அவனையே கூர்ந்து நோக்கினாள். உண்மைலயேவா….? என்றாள் அடித் தொண்டையில்.

 ம்…கிளம்பு…நேரமாச்சு…டிக்கெட் புக் பண்ணிட்டேன் …இதோ பாரு…என்று அவன் மொபைல் புக்கிங்கைக் காட்டி விரைவு படுத்தினான் அவளை.                                                                                        ----------------------------------------

                                   

 

 

கருத்துகள் இல்லை:

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024

                                                                                                        ---------------------------------   ...