04 செப்டம்பர் 2024


 

சிறுகதை    


“  முடியாத கேள்விகள் ”   - பேசும் புதிய சக்தி -செப்.2024 பிரசுரம்






 

 ன்னய்யா பொண்ணு வளர்த்திருக்க நீ? – கோபத்தில், எரிச்சலில் தாங்கமாட்டாமல் கேட்டே விட்டார் திருஞானம். ஒரு கணம் அவர் உடம்பு ஆடி ஓய்ந்தது. சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம், முகம் பார்க்கும் கண்ணாடி, காலண்டர் எல்லாமும் சற்று நடுங்கி அடங்கியது போலிருந்தது. வீ்டே அதிர்ந்திருக்குமோ? என்றுகூடச் சந்தேகம் எழுந்தது. ஃபோனில் பேச எதற்கு இவ்வளவு கத்த வேண்டும் என்று அவரே நினைத்துக் கொண்டார். இன்று பொழுது இப்படி விடிந்ததே என்று வருத்தம் கொண்டது மனம்.

            எதிர்த்தரப்பில் சத்தமேயில்லை. லைனில் ஆள் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. ஒருவேளை கேட்கவில்லையோ? தொடர்பே கிடைக்கவில்லையோ? உறலோ என்ற பிறகுதானே பேசினோம்?

            அடுப்படியிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் திரிவேணி. கடுகு வெடிக்கும் சத்தம் காட்சிக்கு மிகப் பொருத்தம். என்ன பேசினோம் என்று கேட்கவில்லையோ? கேட்டிருந்தால் அருகில் வந்து நின்றிருப்பாளே?

தன்னை விட அவள்தான் வயிற்றெரிச்சலில் தாள மாட்டாமல் அலைகிறாள். நாம சரியாப் பார்க்கல…இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு கூட விட்டிருக்கலாம். அவன்பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பான். இப்போ அவன் நிம்மதியும் போச்சு….!! அவள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் இவை. அவன் காது கேட்கத்தான் சொல்லுகிறாள். அவனும் மறுப்புச் சொல்வதில்லையே?  அந்தப் பெண்ணும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை புரியவில்லையோ? அல்லது புரிந்தும் திமிரா? அதுதான் எடுத்தெறிந்து பேசுகிறதே…!இப்போது பேச வேண்டியதுதானே? நன்றாக வயிறு எரியட்டும் என்று மனதுக்குள் குதூகலிக்கிறதோ?நீங்க என்னமோ புலம்பிட்டுப் போங்க…நான் இருக்கிறபடிதான் இருப்பேன்…என்ன ஒரு திண்ணக்கம்?

இதுக்கெல்லாம் எதற்குக் கல்யாணம்? தனியே அலைய வேண்டிதானே? எவன்ட்டயாவது எக்குத் தப்பா மாட்டினா தெரியும் சேதி? இந்த மட்டும் ஒரு நல்ல எடமா அமைஞ்சிதேன்னு அடங்கிக் கிடக்கத் தெரியுதா? வீட்டுல இருக்கிற மற்றவங்க மாதிரி சாதாரணமா இருந்திட்டுப் போக வேண்டிதானே? அதென்ன…பொட்டக் கழுதைக்கு அத்தனை திமிர்? அது எங்கயாச்சும் கொண்டு விபரீதமா மாட்டில்ல விட்ரும்? ஒரு வேளை வீட்லதான் அப்டியோ? வெளில எலியோ? -கடுமையான அதிருப்தியில் மிதந்தார் திருஞானம்.

அந்தப் பெண் தன் வீட்டிற்கு மருமகளாய் வந்த நாள் முதல் யாருக்கும் மன நிம்மதியில்லை என்பதை உணர்ந்தார். அம்மா…அப்பா…என்று அன்பொழுகக் கூப்பிட்டுக் கொண்டு எத்தனை சந்தோஷமாய் இருக்கலாம்? சொல்ல முடியாமல் தவிக்கிறான் பையன் என்பது தெரிந்தது. அதை அடங்கிப் போவதாக அந்தப் பெண் தப்புக் கணக்குப் போடுகிறது. யாருக்கு யார் அடங்குவது? சகஜமாய் இருந்தால் எல்லோரும் சமம்தானே? இந்த சூட்சுமம் ஏன் அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை? சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால்தானே எதுவும் படியும்? ஊர் சுற்றவும், ஓட்டலில் திங்கவும், சினிமா போகவும், கண்ட பொருட்களை வாங்கவும், வீட்டுக்கு வந்து மணிக் கணக்கில்லாமல் தூங்கி வழியவும்…எல்லாமும் வியாதிக்குத்தான் வழி வகுக்கும். பெற்றோரே அப்படியிருந்தால், பெற்ற பெண் எப்படி உருப்படும்? இதுவா வளர்ப்பு முறை? பெத்த வயித்துல பெரண்டையத்தான் வச்சுக் கட்டிக்கணும்…!

ன் அம்மாவின் பேச்சுக்கு என்றுதான் மறுப்புச் சொல்லியிருக்கிறான் அவன்? அம்மா சொல்வது சரியா, தவறா…என்னதான் நினைக்கிறான்? யாருக்கும் தெரியாது. அவனுக்கே தெரியாதோ என்று கூடச் சந்தேகம் வந்தது திருஞானத்திற்கு. இப்படிக் குழந்தை மனம் கொண்டவனாய் இருக்கிறானே? இவன் எப்படித் தேறப் போகிறான்? ஆண் என்றால் ஒரு ஆளுமை வேண்டாமா? அது இருந்தால்தான் இந்நேரம் சொல்லித் திருத்தியிருப்பானே? பார்த்துக்கொண்டு தவதாயப்பட்டவனாய் அல்லவா அமர்ந்திருக்கிறான்?அந்தப் பொண்ணு ஏதாச்சும் பேசினால் பதிலே சொல்ல மாட்டேனென்கிறானே? தக்க பதில் கொடுத்தால்தானே அடங்கும்? அடுத்தாற்போல் வாய் வராது? அமைதியாயிருந்தால் அது சொன்னதுதான் சரி என்று ஆகிப் போகுமே? சரியானதைச் சொன்னால் சரி. விபரீதமாகவே பேசும் பெண் ஏன் மௌனிக்கிறது?  எப்படி ஒத்துக் கொள்வது? அமைதியாயிருந்தால் ஒத்துக்கொண்டதாகிவிடாதா? மஷனையா?

 எதிலுமே திருந்தின பார்வையே இல்லையே? ஏதோ திண்டுக்கும் முண்டுக்கும் பேசுவதாகத்தானே இருக்கிறது. எதைச் சொன்னாலும் அதெப்படி? இதெப்படி? என்னால முடியாது. நீங்க மட்டும் ஒழுங்கா? நா செய்ய மாட்டேன்…நீங்க பேசுறது தப்பு…நா சொல்றத கேளுங்க…அதுதான் சரி…இதுதான் சரி…உறா…உறீ…என்று திகிடு முகிடாய்த்தானே பேசுகிறது? இப்படியெல்லாம் பேசினால்தான் சமத்து என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ? அல்லது அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? எதையும் எதற்காக. ஏன். எப்படி என்று கேள்? என்று சினிமா வசனம் போல் புகட்டியிருப்பார்களோ?

 நல்லது சொன்னால் எடுத்துக் கொள்ள வேண்டாமா? இந்த மட்டும் நல்வழி காட்ட ஆள் இருக்கிறேதே என்றல்லவா நினைக்க வேண்டும்? எதைச் சொன்னாலும் எதிர்த்து எதிர்த்துப் பேசினால்? அவன் சொல்வதையும் கேட்பதில்லை. நாம் சொல்வதையும் கேட்பதில்லையே?சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இன்னொரு வீட்டிற்குப் போகும் பெண்ணை இப்படியா வளர்ப்பது? பாங்காய் எல்லாமும் சொல்லிக் கொடுத்துப் பழக்கி பக்குவமாய் அனுப்பினால்தானே பெருமை? கெட்ட பெயர் பெற்றோர்களுக்குத்தானே?

ஐ.டி. வேலைக்குப் போனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துக் கொள்வார்களோ? எதிர்த்துப் பேசுதல், எடுத்தெறிந்து பேசுதல், சட்டுச் சட்டென்று கோபப்படுதல், முகத்தை முறித்து வெடுக்கென்று வார்த்தையாடுதல், பெரியவர்களுக்கு ஒரு மரியாதையில்லை…அடக்கமான பேச்சில்லை…சுமுகமான நடப்பு இல்லை….இந்த வீட்டுக்கு என்று வந்தாயிற்று…இனி இதுதான் நம் வீடு…இவர்தான் என் கணவர்…இவர்கள்தான் என் தாய் தந்தையர்…இனி காலத்துக்கும் நான் வாழப் போகும் இடம் இதுதான் என்ற பொறுப்பான சிந்தனையே இல்லையே?

ஒவ்வொன்றுக்கும் மாமனார், மாமியாரா எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? பிடுங்கி எடுக்கிறார்கள் என்கிற கெட்ட பெயர் வராதா? தாராளமாய் வந்து அமர்ந்து கொள்ளுமே? உலகம் பெண்ணைத்தானே கருணையோடு நோக்கும்! நியாயம் எந்தப் பக்கம் என்று யோசிக்காதே? இவன்தானே அவளுக்குப் பாந்தமாய். பரிவாய், பக்குவமாய் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லித் தெரிய வைக்க வேண்டும்? இவனே அது பேசும் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு வாய் மூடி மௌனியாய் இருந்தால், வாய் அதற்கு இன்னுமல்லவா நீளும்? தேவையானதைக் கருத்தாய், அக்கறையாய், பொறுப்பாய் எடுத்துச் சொன்னால் சரி என்றுதான் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். புத்திசாலிப் பொண்ணு என்று பெருமைப் படுவார்கள். அந்த அடையாளமே இல்லையே இந்தப் பெண்ணிடம். வெறும் அரைகுறையாய் இருந்து கொண்டு என்ன ஆட்டம் போடுகிறது.

போகுது போகுது என்று பார்த்தால் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் போலிருக்கிறதே? வேண்டாம் என்று பார்த்தால் விடாது கறுப்பு என்கிற கதையாயல்லவா இருக்கிறது. நறுக்கென்று குட்டு வைத்துத்தான் ஆக வேண்டுமோ?

பெண்ணுரிமை என்கிற பெயரில் இன்று பலதும் மாறிச் சிதைந்திருக்கின்றன என்று யாருக்குத் தெரியும். அந்தந்தக் குடும்பங்களில் அனுபவிப்பவர்களுக்கல்லவா அந்த வேதனை புரியும்? குடும்பங்கள் படும் பாடுகள் அவர்களுக்குத் தெரியவா போகிறது? எதையும் அனுபவித்துப் பார்த்தால்தானே புரியும்? என்னய்யா பெரிய கொடுமை? தாள வேண்டாமா?

                உறலோ….-குரல் கேட்டு உஷாரானார்.  அந்த உறலோவென்ற குரலைச் சட்டென்று புரிந்து கொண்டார்அவர்தான் என்று.

               சார்…எதோ கூப்டீங்க போல்ருக்கே…? – குரல் தணிந்து வந்ததை உணர்ந்த திருஞானத்திற்கு இன்னும் எகிறியது. மனதுக்குள் இருக்கும் நாடகம். உண்மையான வெளிப்பாடு இல்லை.

            ஏதோ கூப்பிடல….காரணமாத்தான் கூப்டேன்…ஏன்யா…கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு அனுப்புற பொண்ணை இப்டியா தத்தியா வளர்த்து வச்சிருப்பீங்க? உங்க வீட்டுல யாருக்குமே அறிவில்லையா? ஊரச் சுத்த, சினிமாப் பார்க்க, ஓட்டலுக்குப் போக, இஷ்டத்துக்குத் திங்க,  வீட்டுக்கு வந்து பொத்துன்னு படுக்கைல விழ இது மட்டும்தான் தெரியுமா? வீட்டு வேலையெல்லாம் ஜீரோவா? இதுதான் வாழ்க்கைன்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா? அ்ட…வேலை கூடச் செய்ய வேண்டாம்யா…பணிவா, அடக்க ஒடுக்கமா இருக்கலாமில்ல…உம்ம பொண்ணுக்கு மரியாதைங்கிறதே தெரியாதோ? மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கும் போல்ருக்கே?

            சார்…கொஞ்சம் மரியாதையாப் பேசினா நல்லாயிருக்கும். நான் வேணும்னா நேர்ல வரட்டுமா?

            என்னத்தைய்யா மரியாதையாப் பேசுறது? மதிச்சு மரியாதை குடுக்குற அளவுக்கா பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க…? உங்க பொண்ணு புகுந்த வீட்டுல எப்டியிருக்குங்கிறதப் பொருத்துத்தான்யா உங்களுக்கு மரியாத….! உங்க பேரைக் காப்பாத்தற மாதிரி இருக்க வேண்டாமா? உம்ம லட்சணம் உங்க பொண்ணு மூலமாத் தெரியுது!

            அதுக்காக வாய்யா, போய்யான்னு பேசுறது நல்லாவாயிருக்கு…சம்பந்திங்க ஒருத்தருக்கொருத்தர் அப்டியெல்லாம்  ஏசிக்கிறது கேட்கறவங்களுக்கு சரியாத் தோணுமா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…..-அங்கிருந்து குரல் தணிந்தே வந்தாலும் கோபம் தணியவில்லை திருஞானத்திற்கு. இன்று ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான் என்று உக்கிரமாய் நின்றார். இத்தனை நாள் பொறுத்ததே அதிகம் என்று தோன்றியது. தினசரி பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டுப் புழுங்கிக் கொண்டிருக்க முடியுமா? மனசுக்கு ஒரு ஆறுதல் என்பதே இல்லாமல் போனதே?

            சதா வீட்டில் கலகமென்றால்? சாதாரணமாய் இருந்து தொலைக்க வேண்டிதானே? எதுக்கு மனசுல இத்தனை கோபமும், தாபமும்?

            யோசிச்சுப் பார்த்துத்தான்யா மண்ட காய்ஞ்சு போய்க் கத்துறேன்…இன்னும் என்னத்த யோசிக்கிறதுக்கு இருக்கு? ஏன்யா…உங்க பொண்ணுக்கு என்னதான் சொல்லிக் கொடுத்திருக்கீங்க…முதல்ல அதச் சொல்லுங்க…அப்டி ஏதாச்சும் இருக்கான்னு நாங்க தெரிஞ்சிக்கிறோம்…

            எதிர்த் தரப்பில் அமைதி நிலவியது. பக்கத்தில் யாரோ பேசுவது மெல்லியதாகக் கேட்டது.

            யாரு? யாரோ பேசுற சத்தம் கேட்குதே…? அருகில் வந்த திரிவேணி கவனமாய்க் கேட்டாள். பெண் குரல் போல் இருக்கவே அவளுக்கு சந்தேகம். பெண்ணின் அம்மாவோ என்று…!

            என் பொண்ணைக் குத்தம் சொல்றவங்க…நல்லாவேயிருக்க மாட்டாங்க…! வௌங்கவே மாட்டாங்க….-அந்தம்மாவுக்கு இந்த ரெண்டைத் தவிர வேறேதும் தெரியாது.

            இந்தாள் ஒரு லூசு…அவர் பொண்ணு ஒரு அரை லூசு…அந்தம்மா ஒரு தத்தி.   இதான் இவங்க ஃபேமிலி…இங்க போய்ப் பொண்ணு எடுத்த மாதிரி ஒரு முட்டாத்தனம் வேறேதுமில்ல….சபிக்காத குறையாய்க் கத்தினார் திருஞானம்.

            அவுங்கம்மாவேதான்….வேறே யாராயிருக்கும்?அது ஒரு ஜடம். அந்த வீட்டுக்கு வேறே யார்தான் வர்றாங்க? இந்தாள் குணம் தெரிஞ்சிதான் அவனவன் அத்துக்கிட்டுப் போயிட்டானே? எதுக்கெடுத்தாலும் எல்லாமும் தனக்கே தெரிஞ்சமாதிரி பேசிக்கிட்டிருந்தா? அடுத்தவன் சொல்றதைக் காது கொடுத்தே கேட்காம மறிச்சு மறிச்சுப் பேசினா? நீங்க எல்லாரும் மடையனுங்க…நா ஒருத்தன்தான் புத்திசாலி…எனக்குத் தெரியாத விஷயமே கெடையாதுன்னு கரைஞ்சா?

            அது எப்படியோ இருந்திட்டுப் போறாரு…நமக்கென்ன வந்தது? நம்ப வீட்டுல அவுங்க பொண்ணு எப்படியிருக்கணும்…அத மட்டும் பேசுங்க…மத்ததெல்லாம் அநாவசியம்….

            அது அந்தாளுக்குப் புரிஞ்சாத்தானடீ…ஏதோ தேவதையைக் கொண்டாந்து  இறக்கி விட்டிருக்கிறாப்லல்ல நினைச்சிட்டிருக்கான்…! நம்ம அதிர்ஷ்டம்னுல்ல நினைக்கிறான்.  அது ஒரு ரெண்டுங்கெட்டானாக் கெடக்குன்னு அந்தக் கிறுக்கனுக்குத் தெரியுமா? பொண்ணப் பொண்ணா வளர்த்திருந்தால்ல…? எதுவும் பாந்தமாச் சொல்லிக் கொடுக்காம…காட்டுச் செடி மாதிரி வளர விட்டிருக்கான்…அத அங்கங்க வெட்டி வெட்டி ஷேப் பண்ணியிருந்தாத்தானே ஒரு வடிவமா வந்திருக்கும்…வளர்ந்திருக்கும்…-புலம்பித் தள்ளினார் திருஞானம். கோபத்தில்தான் தனக்கு நன்றாகப் பேச வருகிறது என்று தோன்றியது அவருக்கு. போனில் பேச்சைத் தொடர்ந்தார்.

            ஏன்யா…ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்குப் போனா அங்க எப்படியிருக்கணும், என்ன மாதிரி நடந்துக்கணும், பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும். எந்த மாதிரி இயங்கணும்…இப்டி ஏதாச்சும் உங்க பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா இல்லையா?  சொல்லிக் குடுத்து வளர்த்தீங்களா இல்ல அதுபாட்டுக்குத் தன் போக்குல வளர்ந்திச்சா?  உம்ம வீட்ல என்னென்ன வேண்டாததையெல்லாம் பழக்கி விட்டிருக்கீங்களோ அதையே இங்க செய்யவா, அதுபோலவே இங்க வெறுமே வெட்டியா  வளைய வரவா அனுப்பி வச்சிருக்கீங்க…? எங்க புத்திய செருப்பால அடிக்கணும்யா…செருப்பால அடிக்கணும்…அட்டச் சோம்பேறி…ஆகாசச் சோம்பேறிய்யா உங்க பொண்ணு….கவைக்கு உதவாது போலிருக்கே…?-பொரிந்து தள்ளினார். ஆரம்பிச்சாச்சு…எங்க போய் முடியுமோ? அவருக்கே தெரியவில்லை. எப்படி வாழ்நாளெல்லாம் இந்தப்( பேயை) பெண்ணை வைத்துக் கொண்டு வாழப் போகிறான்? மயக்கம் வரும்போலிருந்தது அவருக்கு.  கட்டிலில் நிதானமாய் உட்கார்ந்து கொண்டார். எதிர் வரிசையில் கத்துவது காதில் கேட்டது.

            சார்…சார்…எதுக்கு அநாவசியமாப் பேசறீங்க…நீங்க ரொம்பக் கோபமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்…கொஞ்சம் பொறுமையா இருங்க…எல்லாமும் போகப் போகச் சரியாப் போகும்…பெரியவங்களான நாமளே பொறுமை காக்கலேன்னா எப்டி? எங்களுக்காகக் கொஞ்சம் பொறுத்துப் போகக் கூடாதா? யோசிங்க சார்…-குரல் தணிவாகவே வந்தது. லட்சணம் தெரியும்போல்தான் இருந்தது. வசமாய்த் தள்ளி விட்டுவிட்டார்களே? நாம்தான் புரிந்து கொள்ளாமல் சம்பந்தம் செய்தாயிற்று. மிகுந்த வருத்தமாய் இருந்தது திருஞானத்திற்கு. குமுறலையெல்லாம் கொட்டிக் கவிழ்த்தால்தான் ஆறும் போலிருக்கிறது.

            என்னத்தைய்யா பொறுமை காக்குறது? அதான் உம்ம பொண்ணு லட்சணம் பளீர்னு தெரியுதே…அப்புறம் எங்கேருந்து வரும் பொறுமை…? உமக்கென்ன வசதியாத் தள்ளி விட்டுட்டீரு…ஒரு பெரிய்ய்ய பொறுப்பு தீர்ந்திச்சு…நாங்கதான் எதுவும் விசாரிக்காம. நேர்ல இருந்து பார்க்காம ஏமாந்துட்டு நிக்கிறோம்…! உம்ம பொண்ணு நான் வந்தபோதெல்லாம் தூங்கிட்டே இருந்திச்சே…அப்பயே சந்தேகப்பட்டேன்யா நானு…இதென்ன பொழுது விடிஞ்சு மணி பதினொண்ணு தாண்டியாச்சே…இப்டித் தூங்கி வழியுதுன்னு…அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்…என் கண்ணை எதுவோ மறைச்சிருச்சு…அதான் விதி….வச்சி அனுபவிக்கணும்னு இருக்கு…கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொண்ணை இப்படி ஒண்ணுந்தெரியாம வளர்த்திருக்கமேன்னு உமக்கு வெட்கமாயில்லையாய்யா? அசிங்கமாயில்ல? சோம்பேறிய்யா…உங்க பொண்ணு….அட்டச் சோம்பேறி…! களிமண்ணு….!! சண்டி மாடு…!!!

            சார்…இப்டிப் பொத்தாம் பொதுவாப் பேசிட்டே போனா எப்படி? நேர்ல உட்கார்ந்து பேசுவமே…! நான் வேண்டியதைச் சொல்றேன். பொறுமையாக் கேளுங்க….எனக்கும் எங்க பொண்ணைப் பத்தி கொஞ்சமாவது தெரியுமில்ல. அதை உங்ககிட்டே சொல்றேன்….எவ்வளவோ சொல்லித்தான் கொடுத்து அனுப்பிச்சோம்…பிறவிப் புத்தி…என்ன செய்யச் சொல்றீங்க…?

            நீரே ஒத்துக்கிறீரா? யாரோட பிறவிப் புத்தி? உங்களோடதா? அதுதானே உங்க பொண்ணுக்கும் இருக்கும்? இத உட்கார்ந்து வேறே பேசணுமாக்கும்? டைம் வேஸ்ட்…எனர்ஜி வேஸ்ட்…ஏன்யா…கல்யாணம் ஆன ஒரு பொண்ணு தினசரி காலைல பதினோரு மணிக்கா படுக்கைலர்ந்து எழுந்திருக்கும்? என்னய்யா இது ஒலகத்துல இல்லாத வழக்கமாயிருக்கு….? ஊரு ஒலகமே விழிச்சிக் கெடக்கு…பரபரன்னு அத்தனை உயிரும் வெளில கௌம்பிப் பறந்திட்டிருக்கு…உம்ம பொண்ணு என்னடான்னா படுக்கைய விட்டே எழலைய்யா….இந்த அசிங்கத்த எங்க போய்ச் சொல்ல….? எனக்கு மனசே ஆறலைய்யா….? மனசே ஆறலை….கண்ண மூடிட்டுக் கல்யாணத்தப்பண்ணி கூட்டிட்டு வந்திட்ட மாதிரி இருக்குய்யா…இருக்கு…எங்க பையன் வாழ்க்கை போச்சு…! அவன் கிடந்து அவஸ்தை அனுபவிக்கிறான் இப்போ…! எல்லாக் கஷ்டமும் இப்போ அவனுக்குத்தான்…எப்பப் பார்த்தாலும் சண்டையா போட முடியும்னு தளர்ந்திட்டான்யா…! உம்ம பொண்ணால வந்த வினை இது…! ஒரு நல்ல பையனோட வாழ்க்கை போச்சுய்யா…போச்சு…!!! உம்ம பொண்ணு இந்த வீட்டுல ஒரு துரும்பை நகர்த்துறதில்ல… வாயாடாமயாச்சும் இருக்கலாமில்லே…! பெரிய மகாராணின்னு நெனப்பு போல்ருக்கு…அசடு…சரியான அப்புண்டு…!

            இந்தாள்ட்டப் போய் தான் ஏன் இத்தனை புலம்பணும்…? என்று திடீரென்று தோன்றியது திருஞானத்திற்கு. ஆத்தமாட்டாமல்  அழுது புலம்பிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தார். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அந்தப் பொண்ணை, அவர் மருமகளைப் பார்க்க நேரும்போதெல்லாம் அநியாயத்துக்குக் கோபம் வந்தது. என்னமாவது தப்புத் தண்டாவாய்ப் பேசி விடுவோமோ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். இடம் அகன்றார். சரிக்குச் சமமாய் அசட்டுப் பிசட்டு என்று பேச இவருக்கு விருப்பமில்லை. காரியமாய்  ஒரு வார்த்தை பேச அந்தப் பெண்ணுக்கும் தெரியவில்லை. அது வாயைத் திறந்தாலே எதுவும் பொருத்தமாயில்லை. பாந்தமாயில்லை. சரி…போகப் போகச் சரியாகும் என்று பார்த்தால், எகிறி எகிறிப் பேசுவதும், அநாவசியமாய் வார்த்தையை விடுவதும், பெரியவர்களை மதிக்காத போக்கும், எதைச் சொன்னாலும் தப்பர்த்தம் பண்ணிக் கொள்வதும், தூக்கியெறிஞ்சு பேசுவதும், நா எங்க வீட்டுக்குப் போறேன் என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்புவதும், சொல்லாமல் கொள்ளாமல் படியிறங்குவதும்….அப்பப்பா….அது இந்த வீட்டில் காலடி வைத்த நாள் முதலாய் நிம்மதி என்பது அறவே இல்லாமல் போனது என்பதுதான் சத்தியம்.

            தொட்டதற்கெல்லாம் என்ன அப்பன்கூட ஃபோன்? அந்தாள்தான் இந்தப் பெண்ணைக் கெடுக்கிறான். அதுதான் நிஜம்.  நீ அப்டி செய்…இப்டி செய்….என்ன சாப்பிட்ட…எங்க உட்கார்ந்த…எப்ப எழுந்திரிச்ச…எப்ப வெளிக்குப் போன…என்பது முதற்கொண்டு கேட்கிறான் அந்த திராவை. இன்னொரு வீட்டுக்கு என்று அனுப்பியாயிற்றே…பொத்திக் கொண்டு கிடப்போம் என்கிற முதிர்ச்சி வேண்டாமா? தினசரி என்ன பேச்சு மணிக்கணக்காய்? -ஆத்திரம் தீரமாட்டேனென்கிறது இவருக்கு. இப்படித் தப்புப் பண்ணிட்டமேன்னு மனசு குமுறுகிறது.

            உம்ம பொண்ணு இன்னைவரைக்கும் எங்க வீட்டுப் பொண்ணா இல்லய்யா….உம்ம பொண்ணாத்தான் இங்க வளைய வந்திட்டிருக்கு. நீர்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை பேசுறீரே? கட்டிக் கொடுத்த பொண்ணுகிட்ட என்ன தெனமும் பேச்சு? அது எங்க வீட்ல கலக்க வேண்டாமா? எங்க வீட்டுக்குப் பொருந்தின பொண்ணா மாற வேண்டாமா? கோத்திரமே மாறிப் போச்சேய்யா…அப்புறம் நொய் நொய்னு தெனமும் பேசிட்டேயிருந்தீர்னா?  அது உம்ம பொண்ணுக்கு வேணும்னா ஆனந்தமா இருக்கலாம். எங்களுக்கு நொய் நொய்தான். நீர் உம்ம பொண்ணைக் கெடுக்கிறீர்…அத முதல்ல புரிஞ்சுக்கும்…சொல்லிப்புட்டேன்….- பொளந்து கட்டினார் திருஞானம்.  இத்தனையையும் நேரில் பேச முடியுமா? முகத்துக்கு முகம் பார்த்துப் பேசி ஆகுமா? பொழிந்து தள்ள ஃபோன்தான் எவ்வளவு வசதி?

            போதும் விடுங்க….இன்னொரு நாளைக்குப் பேசிக்கலாம். ஃபோனை வைங்க…. – திரிவேணி வந்து பிடுங்கினாள். அவளுக்கு பயம். ஏதேனும் தாறுமாறாய்ச் சண்டை வந்து விடுமோவென்று. பையன் வாழ்க்கை கெட்டுப் போகுமோ என்று அஞ்சுகிறாள். அந்தப் பெண் இதையெல்லாம் எதையும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.  தன் வாழ்க்கை போய்விடுமோ என்று அதுவல்லவோ பயம் கொள்ள வேண்டும்?

            அது சித்தம் போக்கு…சிவன் போக்கு என்று இருந்தது. ஆபீஸ் இருக்கும் நாட்களில் ஏழுவரை தூங்கி, பரபரவென்று அடித்துப் பிடித்து எழுந்து குளிக்காமலே ஆபீஸ் கிளம்பியது. சரி…சாயங்காலம் வந்தாவது குளிக்கிறதா என்று பார்த்தால்…ஊகும்….ஆடு, மாடு, காக்கா, குருவியெல்லாம் தெனமும் குளிச்சிட்டா இருக்கு? என்று சொல்லும் ஏதாச்சும் கேட்டால். அத்தனை புத்திசாலி. தினமும் சூரியோதயம் முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்துப் புதுத் துணி அணிந்து, தலைசீவிப் பொட்டிட்டு…பூ வைத்து…ஊகும்…ஒரு எழவும் கிடையாது. அழுக்கு மூட்டை…சண்டி மாடு…மண் குதிரை….இன்னும் என்னதான் சொல்வது? வீட்டுக்கு வந்த மருமகளை, பையன் பெண்டாட்டியை இப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று ஆதங்கமாய்த்தான் இருக்கிறது. சொல்லாமலும் முடியவில்லை. குறைந்தபட்சம் நானும் என் பொண்டாட்டியுமாவது இப்படிப் பறிமாறிக்கொள்ளாவிட்டால் எங்களுக்கே பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயப்படுகிறோம்.

            பையனுக்கு எங்கள் நிலைமை தெரியும். வேறு வழி? என்னை என்ன பண்ணச் சொல்றே? வச்சு ஓட்டித்தான் ஆகணும்…காலப் போக்குல சரியாகாதாங்கிற நம்பிக்கைதான்…. அவன் பொறுமை யாருக்கும் வராது. அவன் குணத்துக்கு நிச்சயம் எல்லாம் சரியாகும் என்றுதான் எங்களுக்குத் தோன்றியது. காலம் எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் பதில் தருமே…! ஈஸ்வரா…அவனைக் காப்பாற்று….என்று மானசீகமாய் அழுதோம். ஆனாலும் ஆதங்கம் தீரவா செய்கிறது? அவ்வப்போது வெடிக்கிறதே…! அடக்க முடியவில்லையே…! அந்தப் பெண் என்ன திருந்தியா விட்டது? இன்னும் அதே லட்சணம்தானே? கொஞ்சமாச்சும் ஒரு மாற்றம்? ஊகும்….நாமதான் மாறணும்…இல்லன்னா மண்டையப் போடணும்…அப்பத்தான் இதுக்குத் தீர்வு…!

            எங்களுக்கும் உடம்பில் தெம்பில்லை. கோபப்படவும், வருத்தப்படவும் கூட மனுஷனுக்கு உடற்தெம்பு வேண்டும். அப்பொழுதுதான் படுக்கையில் விழாமல் நடமாடிக்கொண்டு அவ்வப்போது இப்படி வயிறெரிய முடியும். நாங்கள் நாளுக்கு நாள் நறுங்கிக் கொண்டிருந்தோம். எங்களுக்கே தெரியத்தான் செய்கிறது. காலம் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பார்த்தால் அது என்று வருவது? நாங்கள் என்று பார்ப்பது?

            சமா ஒரு கிறுக்கன் மாட்டினான்…இதுதான் சந்தர்ப்பம்னு ஒரே அமுத்தா அமுத்தி ஆளத் தள்ளி விட்டாச்சு…நல்ல எடமாவும் போச்சு…பிக்கல் பிடுங்கல் இல்ல…சொந்த வீடு…இங்க ஒண்ணு…ஊர்ல ஒண்ணு…அது போக வளமான சேமிப்பு….சொந்தத்துலர்ந்து இன்னும் ரெண்டு வீடுக வந்து சேரும்னு வேறே சொல்றாங்க…முடியுமானா நாம கூட நாளைக்கு அந்த வீடுகள்ல ஒண்ணப் பிடிச்சுப் போய் குடியிருந்துக்கலாம். வாடகை மிச்சம்…தட்சிணா….நீ அதிர்ஷ்டக்காரன்டா…கொடுத்து வச்சவன்டா…உன் பொண்ணை விட நீதான்டா அதிர்ஷ்டசாலி….-சம்பந்தி தட்சிணாமூர்த்தி நிச்சயம் இப்படியெல்லாம் நினைத்துத் தனக்குத்தானே மகிழ்ந்து கொள்வார்.அதிலொன்றும் சந்தேகமில்லைதான். அவர் பாடு கொண்டாட்டம்தான். தராதரம் அவ்வளவுதான். தரம் கெட்டவனின் சிந்தனை வேறு எப்படியிருக்கும்?

            தங்களுக்குத்தான் ஏமாற்றமாய்ப் போயிற்று. நாங்க வரதட்சிணைன்னு எதுவும் கேட்க மாட்டோம். நீங்க விருப்பப்பட்டதைச் செய்யுங்க…நீங்க உங்க பொண்ணுக்குச் செய்யப் போறீங்க…நாங்க என்ன சொல்றது…கேட்குறது…மத்தப்படி கல்யாணத்த மதிப்பா, மரியாதையா. கௌரவமா நடத்திக் கொடுங்க…அது போதும்….- இப்படி விட்டுக் கொடுத்துப் பேசியதுதான் அந்தாளுக்கு ஏத்தமாப் போச்சு போல்ருக்கு…எவர்சில்வர் பாத்திரமா செய்முறைகள அடுக்குவாங்கன்னு பார்த்தா, அத்தனையையும் பிளாஸ்டிக்குலல்ல அடுக்கிப்புட்டான்…எவனாச்சும் அப்டி செய்வானா? பிளாஸ்டிக்கையே ஒழிக்கணும்னு அரசாங்கம் சொல்லிட்டிருக்கிற இந்தக் காலத்துல, ஒழிக்க வேண்டாம்…எங்கிட்டக் கொடுங்கன்னு போய் அள்ளிட்டு வந்த மாதிரில்ல செய்துப்புட்டான்….இந்த லட்சணத்துல அட்வைஸ் வேறே…

            உங்க ஒய்ஃப்புக்கு நீங்க ஃபினான்சியல் ஃப்ரீடம் கொடுக்கணும்…இது அந்தக் காலமில்லே….ஐ.டி. பீரியட் இது….உலகமயமாக்கல்னு எல்லாமும் வளர்ந்து வளர்ந்து வானத்த எட்டிக் கிடக்கு…இப்போ பெண்களோட இயக்கம்கிறதே வேறெ லெவல்….அத நீங்கதான் புரிஞ்சிக்கணும்…..-ஏண்டா மடையா…எங்கிட்டப் பேசுடா…! என் பையனுக்கு நீ அட்வைஸ் பண்ற அளவுக்கு அவனை நான் வளர்க்கலே…! அவனுக்கு இருக்கிற பொறுப்பான சிந்தனைல பத்து பர்ஸன்ட் கூட உன்கிட்டே கிடையாது. அது புரியுமா உனக்கு? சம்பந்தியாரே…வாயை அடக்கும்…! – குமுறினார்.

            ஃபினான்சியல் ஃப்ரீடம்…மண்ணாங்கட்டி….அதான்யா உன் பொண்ணு இப்படித் திரியது…..பியூட்டி பார்லர் போயி மூவாயிரம், நாலாயிரம்னு செலவு பண்ணிட்டுத் தலையைக் குறைச்சு விரிச்சிப்போட்டுட்டு திரியுது…உதட்டுக்கு லிப்ஸ்டிக் இல்லாம அம்மா இருக்க மாட்டாக போல்ருக்கு…எந்தக் கலாச்சாரத்தய்யா வீட்டுக்குள்ள கொண்டு வந்து புகுத்துறது? அறிவு வேண்டாம்? இஷ்டத்துக்குப் டைட் பேன்ட், பனியன்னு போட்டுக்கிட்டு, பிதுக்கிட்டுத் திரியுதுங்க…ஏன்யா பின்னால வந்து ஆம்பள தட்ட மாட்டான்? நீ ஒழுங்காப் போனா அவனும் போவான்…வா…வந்து தட்டுன்னு நீயே கூப்பிட்டேன்னா…? டெம்ப்டேஷனக் கௌப்புறதே இவங்கதானே? யாராச்சும் ஒரு ஆம்பள இவங்களப் பார்த்து தெனமும் உறாய் சொல்லணும்…இளிச்சு…இளிச்சுப் பேசணும்….இவ பல்லக் காட்டுறதப் பார்த்து அவன் தவிக்கணும்…பின்னாடியே வாடை பிடிக்கிறவன் மாதிரி தொரத்தணும்…ஓட்டல்ல போயி அவன் கணக்குல கண்டதையும் திங்கணும்…அப்புறம் நெஞ்சு கரிக்குதேன்னு அப்பன் ஆத்தாட்ட வந்து பொலம்பணும்…தொண்ட சரியில்ல…வகுறு வலிக்குது…ன்னு படுத்து உருளணும்….வீடே தூங்குதேய்யா இந்த மாதிரிப் பொம்பளைங்கனால…இன்னைவரைக்கும் நீ என்ன சம்பாதிக்கிற? எவ்வளவு வாங்குற? ஏதாச்சும் சேமிக்கிறியா…? மாசங்கூடி உனக்கு என்ன செலவாகுது? ஏதாச்சும் ஒரு வார்த்தை கேட்டிருப்போமா …? மகனே உன் சமத்து, மகளே உன் சமத்து, தம்பதிகளே உங்கள் சமத்து…ன்னுதானே இருக்கோம். எங்களுக்குத்தான் எங்க பென்ஷனுக்கே செலவில்லையே…அதையும் உங்ககிட்டத்தானே கொடுத்துட்டுப் போகப் போறோம்…? வேறே எங்கயும்  தான தர்மம் பண்ண நிச்சயம் மனசு வராது. பிள்ளைகிட்டயே…இந்தா பிடின்னு கொடுக்கப் போறோம்…அதுக்காகவாச்சும் நாங்க சொல்ற நல்லதக் கேளுங்கடா..? உங்க எதிர்காலத்துக்காக எங்களோட வழி முறைகளைக் காது கொடுத்து வாங்குங்கடா…இல்லன்னா இப்ப நீங்க இருக்கிற நடைமுறைக்கு எதிர்காலத்துல பிச்சதான் எடுப்பீங்க…நிச்சயமாச் சொல்லிப்புட்டேன்….பாவிங்களா…என்னடா வாழ்க்கை வாழ்றீங்க…? நினைச்சபடியெல்லாம் வாழ்றதாடா வாழ்க்கை? கட்டுப்பாடுக் கோடுன்னு ஒண்ணு உங்க மத்தில கிடையவே கிடையாதா? வேண்டாத பொருளயெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டியது…பிறகு அதுகளெல்லாம் பழசாப்போச்சுன்னு தூக்கி எறிய வேண்டியது….சமைக்க சங்கடப்பட்டுக்கிட்டு, சோம்பேறியா வெளில ஆர்டர் பண்ணித் திங்க வேண்டியது…பிறகு வயிறு சரியில்லன்னு சுருட்டி மடக்கிப் படுத்துக்க வேண்டிது…வீட்டுச் சமையல்ங்கிறதே உங்க வாழ்க்கைல கெடையவே கெடையாதா? எல்லா நாளும் வெளிலதானா? உடம்பு என்னத்துக்குடா ஆகும்? அடி முட்டாப் பசங்களா? பொம்பள  ஆம்பள வித்தியாசமில்லாம இப்படி தூமரதண்டியாத் திரியிறீங்களேடா…வயித்தெறிச்சல் தாளலடா…தாளல…..!!!

            மனது இன்னும் ஆறமாட்டேன் என்கிறது. அந்தப் பொண்ணு அடுப்படிப் பக்கம் எட்டியே பார்ப்பதில்லை. இவள்தான் மாங்கு மாங்கு என்றும் வேகு வேகுவென்றும் இன்னும் அடுப்பு வெக்கையில் வெந்து மாய்கிறாள். இருமிக்கொண்டே கொத்தடிமையாய்க் கிடக்கிறாள்.

            நான் பண்றேம்மா…இன்னைக்கு சமையல் நான் பார்த்துக்கிறேன்…கொஞ்சம் வித்தியாசமாச் சமைப்போம்…காலைல பூரி மசால் பண்ணுவோம். மத்தியானம் வெஜிடபிள் ரைஸ் வைக்கிறேன்…வற்றல் பொரிக்கிறேன். ஏதாச்சும் ஒரு காய் பண்றேன்….-சனி, ஞாயிறாவது அப்படி வந்து நிற்கும் என்று ஆன மட்டும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் திரிவேணி. ஊகும்…அது வாயே திறக்கவில்லை. எல்லாமும் கற்பனையில்தான் இருக்கிறது.  ஒரு பேச்சுக்கேனும் காய் நறுக்கிறேம்மா நானு..என்ன காய் வைக்கப் போறீங்க…சொல்லுங்க…எடுத்து நறுக்கிறேன்…என்று ஒரு வார்த்தை இல்லை. எங்கே வந்து நின்றால் ஒட்டிக் கொள்ளுமோ…அப்படியே தொடர்ந்து விடுமோ….என்று பயப்படுகிறதோ என்னவோ…? அலுங்காமல் குலுங்காமல்…அப்டியே உடம்பை அசைத்து அசைத்து (அசைக்கவாவது செய்கிறதே…அசைக்கிறதா அல்லது அதுவாக அசைகிறதா?) தேர் மாதிரி உருண்டால் போதுமா? என்ன திமிர்? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கிறதா? அல்லது தங்கத்தாரகையா? சாதாரண அறிவு கூட இல்லாத சராசரிக்கும் கீழான ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணுக்கு என்ன இவ்வளவு நிமிர்வு? சகஜமாய் இருந்துவிட்டுப் போக வேண்டிதானே? குடும்பத்தில் நிம்மதிதானே முக்கியம்? அது இது வந்த நாள் முதல் கெட்டுப் போனதே?

            என்னதான் முடிவு? இப்படியே போய்க்கொண்டிருந்தால்…இதற்கு முடிவுதான் என்ன? பெற்றோர் செய்த பாவம் பிள்ளையின் தலையில் என்பார்களே? என்ன பாவம் செய்தேன் நான் என் பையன் இப்படி அனுபவிப்பதற்கு? எந்த விதி இந்தச் சதியைச் செய்தது?என் பையன் சதீஷூக்கு நானே இந்தச் சதியைச் செய்து விட்டேனா? புத்தி பிரண்டு விட்டதா எனக்கு?  நெஞ்சம் விம்மியது திருஞானத்திற்கு.

            அப்பப்போ இப்படி வயித்தெரிச்சலக் கொட்டினா…அதுவும் நாளடைவுல அந்தாளுக்குப் பழகிப் போயிடும். வழுக்கு மரம் மாதிரி ஏற வேண்டியது…இறங்க வேண்டியது…இதான் பொழப்பா…? முடிவேயில்லையா? காலம் கருணை செய்யாதா? -ஃபோனைக் கட் பண்ணியவர் இதுகூட இன்று பேசியிருக்க வேண்டாமோ? என்று எண்ண ஆரம்பித்தார். தன் மீதே பரிதாபம் ஏற்பட்டது அவருக்கு. உலகம் அவரைப் பார்த்து எள்ளி நகையாடிச்  சிரிப்பது போலிருந்தது.  ஒரு நல்ல  சாதுவான பையனின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோம்…என்று மனம் குமுறியது. அவன் கூடவே இருந்த அவன் பாரத்தைக் குறைப்பதே இனி மீதி வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணலானார் திருஞானம்.

            மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வாசலில் வந்து தோள்துண்டால் தரையை ரெண்டு தட்டுத் தட்டி சாலையைப் பார்த்தவாறே அமர்ந்து கொண்டார்.  ஒரு தெரு நாய் அருகில் வந்து கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்று விட்டுக் கிளம்பிச் சென்றது. நிற்க நேரமில்லாத அந்த நாயையே வைத்த கண் வாங்காமல் பரிதாபமாய்ப்  பார்த்துக் கொண்டிருந்தார் திருஞானம்.    அதைவிடக் கேவலமானதாய்த் தன் பிழைப்பு ஆகிப் போனது என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

                                                ---------------------------------

                                                ----------------------------------          

           

           

 

              

 

கருத்துகள் இல்லை:

மதுரை புத்தகக் கண்காட்சி வெளியீடு (06.09.2024 முதல் 17.09.2024) பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-17  “எதிர் நீச்சல்”  சமூக நாவல்