சிறுகதை “தவிப்பு” உயிர் எழுத்து மாத இதழ் - ஆகஸ்ட் 2024 பிரசுரம்
சூடத்தட்டைக் காண்பித்து, ஒவ்வொருவராக
விபூதி கொடுத்துக் கொண்டு வருகையில், அது சாந்தியின் கைதான் என்று பளிச்சென்று தெரிந்தது
தட்சிணாமூர்த்திக்கு. மனசு அடையாளப்படுத்திவிட்டது…! நிமிரப் போன தலையை ஒரு கணத்தில்
நிலை நிறுத்திக்கொண்டு, உள்ளங்கையில் விபூதியைப்
பொட்டாய் உதிர்த்தார்.
மீதி விபூதியை கிண்ணத்துல போடுங்கோ… தூண்ல தூவிட்டுப் போயிடாதீங்கோ…சுத்தம்
பண்ணி முடியலை. பொதுவாகச்-சொல்லியவாறே அடுத்தாற்போல் குங்குமத்தை எடுத்துக் கொண்டு
வந்து கொடுக்க ஆரம்பித்தார். முன்பெல்லாம்
விபூதி, குங்குமம், சூடத்தட்டு என்று ஒரே சமயத்தில் எடுத்து வருவார். சமீபமாகக் கை
நழுவுகிறது. மூன்றையும் தாங்கலாய்ப் பிடிப்பதில் கவனம் விட்டுப் போகிறது. மனசு ஒரு
நிலையில் இல்லையானால் அப்படித்தான்..! என்ன செய்வார் பாவம்!
எப்போதிருந்து இப்படியானது என நினைத்துப்
பார்த்துக் கொண்டபோது, அந்த நிகழ்விற்குப்
பிறகுதான் என்று தலையாட்டிக் கொண்டார். தான் பலவீனம் ஆனதே அதற்குப் பிறகுதானே? கண்களில்
நீர் துளிர்த்தது. இந்தக் கண்ணீருக்குத்தான் விலையில்லாமல் போனதே…! என்று மனசு சொல்லியது. ஏலாதவன் கண்ணீர் சொந்தங்களிடமே
செல்லுபடியாவதில்லை…! சொந்தமென்ன, பெற்ற மகளிடமே விலையில்லாமல் போனதே? யார் சிரித்தால்
என்ன? யார் அழுதால் என்ன?
குங்குமத்தை வரிசையாகக் கொடுத்து வந்தபோது தன் பெண் சாந்தியின் கை காத்திருக்கிறதா
என்பதை மனசு மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டே வந்தது. அவளுக்காகவே, சுற்றியிருக்கும்
கூட்டத்தை தான் நிமிர்ந்து பார்க்காததும், அதே சமயம் குங்குமம் வாங்காமல் போய் விட்டாளோ
என்கிற ஆதங்கமும், ஒவ்வொருவராய்க் கடந்து வந்தபோது, அந்தக் கைக்கு சற்று அதிகப் பிடியாகத்
தன்னையறியாமல் குங்குமம் விழுந்ததை அவரால் தடுக்க முடியவில்லை.
பெட்டில பேப்பர் அடுக்கியிருக்கு…காலண்டர் தாள் கிடக்கு…தேவைப்பட்டவா பிரசாதத்தைப்
பொதிஞ்சிக்கலாம்…என்றும் பொதுத் தகவலாக அறிவித்தார்.
குருக்களய்யா…சாமிக்கு வச்ச பூ கொஞ்சம்
எடுத்துக் கொடுங்க…-என்று ஒருவர் அக்கறையோடு கேட்க…இதோ வந்துட்டேன் என்று மீண்டும்
சந்நிதிக்குள்ளே போனார். கேட்டவருக்கு என்று மட்டுமல்லாமல் இன்னும் கொஞ்சம் பூவை அள்ளி
வந்தார். அப்போதும் சாந்தியின் கை நீண்ட போது மீதமிருந்த உதிரிப் பூக்களை அப்படியே
அவள் கையில் திணித்தார். பார்வை மட்டும் மேலே விழவேயில்லை. நழுவிப்போன பார்வைதானே?
அல்ல அல்ல… நழுவ விட்ட பார்வை…!
அந்த முகத்தை எதிர்நோக்க மனமில்லை. தவித்துப்
போய்விடுவார். அவரால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. பதறி நடுங்கி, கோயில் என்றும்
பாராமல் தன்னை மறந்து ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு விட்டாரானால்? ஒரு மாதிரி
ரசாபாசம் ஆகிப்போகுமே? பலரும் பலவிதமாய் நினைக்க நேரிடுமே?
அந்த முகம்தான் எவ்வளவு மாறிவிட்டது அவளுக்கு?
வேறொரு இனக்கலப்பில் உடற்கூறுகளில் கூட இப்படியா மாற்றம் ஏற்படும்? அந்தச் சிரிப்பும்,
அவளது பார்வையும் கூட சற்று வெளிறித்தான் இருக்கிறது. கண்களின் அந்த ஒளி எங்கே போய்
மறைந்தது? அதை இப்போது மீண்டும் வலிய நோக்கி வயிரெறிய வேண்டாம்…இதுவும் ஒரு காரணம்தான்
அவருக்கு. எதை எதையோ எண்ணி மறுகுகிறார் மனதுக்குள். ஆறமாட்டேனென்கிறது. பெரிய பெரிய
தத்துவங்களும், ஆன்ம விசாரங்களும் படித்தறிந்தவர் அல்ல அவர். சாதாரண கோயில் குருக்கள்.
ஆண்டவனுக்கு ஆழ்ந்த மனதோடு மந்திரங்களை ஸ்தோத்திரம் செய்து வணங்க வருபவர்களின் மனம்
குளிரக் குளிர அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற மனதார ஆசீர்வதித்து அனுப்பும் ஒரு எளிய
மனிதர். எல்லார் வேண்டுதல்களும் நிறைவேற ஆத்மார்த்தமாய் வேண்டிக் கொண்டு நின்ற அந்த
இறையன்பனின் சொந்த வேண்டுதல் நிறைவேறிற்றா? இல்லையே? வேண்டுதல் என்று தனியே ஏது? இறைத்தொண்டே
அதுதானே? ஆத்மார்த்தமான எதற்கும் தனித்த அடையாளம் இட்டுத்தான் நோக்க வேண்டுமா?
அர்ச்சனைக்குக் கொடுத்தவா யாரு…தட்டு வாங்கிக்குங்கோ…
என்று சம்பந்தப்பட்டவர்களிடம் நீட்டியபோது, சாந்தி இருக்கிறதா, போய்விட்டதா என்று அவர் கண்கள் தேடின. அவர்கள் கொடுத்த
தேங்காய் ஒரு மூடி, பழம், தட்சிணை எதுவும் அவர் கருத்தில் ஏறவில்லை. பெரும்பாலும் தட்சிணையை
மட்டும்தான் எடுத்துக் கொள்வார். இதையும் எடுத்துக்குங்க சாமி…அப்பத்தான் எங்களுக்கு
மனசு நிறையும்!…அவர்கள் இவருக்குக் கொடுக்கும் மதிப்பு மரியாதையைக் கூட இவள் எனக்குக்
கொடுக்காமல் போய்விட்டாளே…!
சமீபமாய் தினமும் தவறாமல் கோயிலுக்கு வருகிறாள். இதற்கு முன் அப்படி இல்லை…அதாவது
திருமணத்திற்கு முன்…அதென்ன முறைப்படி செய்து வைத்த திருமணமா? அவர்களாகப் போய் பண்ணிக்
கொண்டதுதானே? அதுநாள்வரை பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து, பாங்காய் வளர்த்து விட்டவர்களுக்கு
அந்தப் பாழாய்ப் போகாத பவித்ரமான கல்யாணம் என்ற ஒன்றை முறைப்படி செய்து வைக்க புத்தி இல்லாமல் போகுமா என்ன? பெற்றவர்களுக்குத்
தெரியாதா எப்படிக் கரையேற்றுவது என்று? அதனால்தான்
பாழாய்ப் போன கல்யாணமாய் அவர்களாகவே தேடிக்கொண்டு வந்து நின்று “இவன்தான் என் புருஷன்”
என்கிறார்கள். இதைத் தடித்தனம் என்று சொல்லாமல் வேறு எந்தப் பு(மு)து மொழி சொல்லி அழைப்பது?
என் பெண்ணின் செயலைக் கண்டிப்பதற்கு எனக்கு உரிமையில்லையா? வக்கற்றா போய் நிற்கிறேன்?
வக்கற்றுத்தான் போனது. அதுதான் உண்மை…! சொன்னது மீறினால் அதுதானே பொருள்?
.அப்பொழுதெல்லாம் இல்லாத தெய்வ நம்பிக்கை இப்போது கிட்டியிருக்கிறது. இது தெய்வ
நம்பிக்கையா அல்லது தன்னைப் பார்ப்பதற்கா? என்றாவது அப்பாவின் மனசு இரங்காதா என்று
எதிர்பார்க்கிறாளோ? தெய்வம் கருணை செய்யுமா?
தெய்வம் அவர்கள் இஷ்டப்படி கல்யாணத்திற்குக் கருணை செய்து விட்டதே? இது கூடாது.
உன் அப்பாம்மா உனக்குப் பாந்தமாய், பொருத்தமாய் பார்த்து வைப்பார்கள். அதுவரை பொறு…என்று
கையைப் பிடித்து நிறுத்தவில்லையே? உணர்வு ரீதியில் உஷார்படுத்தவில்லையே? நாலு காலமும்
பூஜை செய்து வழிபடுபவன் ஒருவன். பலன் அவன் வாரிசுக்கா? பலனா அல்லது முரணா?
கோவிலுக்கு வழக்கமாய் வரும் சிலருக்கும் இது தெரியும்தான். அவளையும்தானே தெரியும். எவராவது அவளிடம் ஒரு வார்த்தை பேசுகிறார்களா? பார்த்ததும்
தள்ளியில்லையோ விலகிச் செல்கிறார்கள்? அன்று பார்த்த அதே சாந்திதானே? அதே தட்சிணாமூர்த்தியின்
சீமந்த புத்திரிதானே? இன்று மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போனால் அவள் மனசு நோகாதா?
நோகட்டும் என்றுதானே பாராதது மாதிரி பாய்ந்து விலகுகிறார்கள். ஒருவேளை எனக்கு ஆதரவாய்
நிற்பதாகக் காட்டிக் கொள்கிறார்களோ? பெத்தவா பேச்சுக் கேட்காத குடிகேடி…! அந்த வார்த்தையைச்
சொல்லக் கூட மனசு கூசுகிறதுதான்….
பொண்ணு நன்னாயிருக்காளா…கல்யாணத்துக்குப் பார்த்துண்டிருக்கேளா? என்று ஒருத்தராவது
கிரமமாய்க் கேட்பார்களே…எதுவுமில்லையே?. எல்லாம் நின்று போயிற்று. காலத்தின் கோலம். நாம இருக்கிறபடி இருந்தால் எல்லாமும்
நம் கூடவே இருக்கும். கோணிக் கொண்டால் மற்றவையும் கோணத்தானே செய்யும். கோணல் மாணலாய்
இருப்பதெல்லாம் நமக்குப் பொருந்திவருமா என்கிற புத்தி முன்னாலேயே இருக்க வேண்டும்.
அப்பத்தான் பொருந்தாதவை நம்மை அண்டாது. அதை யோசிக்க விடாமல் உடம்பு தினவெடுக்கிறதோ?
அது முந்திக் கொள்கிறதோ? முந்திக் கொண்டதனால்தானே இப்படி நடந்தேறியிருக்கிறது.
எவரும் எதுவும் கேட்பதில்லை. தானுண்டு
தன் வேலையுண்டு என்று இருப்பதுதானே மனித இயல்பு. சொல்லப்போனால் தன் மகள் சாந்தியிடம்
பேருக்குக்கூட அவர்கள் பேசுவதில்லை.ரெண்டே ரெண்டு
வார்த்தை…சௌக்கியமா இருக்கியா? கேட்கலாமே…! யாருக்கும் வாய் வருவதில்லை. தானே
கேட்கவில்லை. மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரி? அதன் மூலம்
அவள் நலத்தை அறிந்து கொள்ளும் ஆவலா? அதுதான் வேண்டாம் என்று விலக்கி வைத்தாயிற்றே?
பிறகெதற்கு மனம் தவதாயப்பட வேண்டும்? ஒரே தெருவில் இருந்து கொண்டு, தினசரி கண்ணுக்கு
முன்னால் வந்து ஆட்டம் போட்டால் எப்படி? இந்த சாமர்த்தியம் வேற்று ஜாதிக்காரன் காதல்
என்று வந்து நின்ற போது எப்படிக் காணாமல் போனது? அப்போது அறிவு வேலை செய்யவில்லையா?
எதைச் சொல்லி மயக்கினான் அவன்? எதில் சுருண்டு விழுந்தாள் இவள்? அப்படியானால் என் பெண்ணை
நான் சரியாக வளர்க்கவில்லை என்றுதானே பொருள்? எங்கே நிகழ்ந்தது தவறு? முன் ஜென்ம வினையோ?
பெற்றோர் செய்த பிழைகள் யாவும் பிள்ளைகள் தலையில்…! அப்படி என்ன தவறு செய்தேன் நான்?
விவரம் தெரிந்த நாள் முதல் இறைவனிடம்தானே தண்டனிட்டிருக்கிறேன்? தன்னைக் கொடுத்த என்னை
அவன் காக்கவில்லையே?
அன்றாட வாழ்க்கையின் முறையான நியமங்களை இளம் பிராயம் முதல் கற்றுக் கொடுத்து
வளர்த்ததுதானே? பிறகு ஏன் தவறுகிறது? பருவம் வந்ததும் அதுதான் தன்னை முன்னிறுத்துமா?
மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி சுருட்டி அமிழ்த்தி விடுமா? சுய சிந்தனை…சுதந்திர
சிந்தனை…தலைமுறை இடைவெளி..! கலாச்சாரச் சீரழிவு…
இருக்குமிடத்தில், அவளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட நந்தவனத்தில் மனசும், உடம்பும்
நலமாக வளைய வருகிறாளா? என்று அறிந்து கொள்வதில் அப்படியென்ன ஆர்வம்? அதுதான் பெற்ற
பாசமா? என்னதான் விரட்டி விட்டாலும் மனசு கேட்கமாட்டேனென்கிறதே? ஐயோ…அநியாயமா இப்படி
எங்கேயோ போய் வலிய தன்னைச் சேர்த்துண்டு அவஸ்தைப் படுறாளே? பாவி…பாழாய்ப்போனவன்.. அவ
மனசைக் கெடுத்து, எங்களை விட்டுப் பிரிச்சிட்டானே? கண்ணுக்கு முன்னாடி லபக்குன்னு கொத்திண்டு
பறந்துட்டானே? நினைக்க நினைக்க அவர் மனசு ஆறமாட்டேனென்கிறது.
அவனின் பெற்றோர்களிடமும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாரே…! பையன் விருப்பம் எதுவோ
அதுதான் எங்கள் விருப்பமும்….! இப்படியா சொல்வார்கள்? பையன் தப்பு செய்தாலும் அது அவனின்
விருப்பமாயிருந்தால், அதுவே இவர்களின் விருப்பமும் ஆகுமா?
அவுங்கவுங்க அவுங்களோட பிள்ளைகளை எவ்வளவு கனவுகளோடயும் லட்சியங்களோடயும் வளர்த்திருப்பாங்க…அத்தனையையும்
பாழாக்கிட்டு இப்படி இழுத்திட்டு வர்றது தப்புப்பா…அவுங்க வயிற்றெரிச்சல் நமக்கு ஆகாது.
நம்ப பரம்பரையை அது பாதிக்கும். உன் வாரிசுகளைப்
பாதிக்கும். அவங்க கண்ணீர்விட்டு வயிறெரிஞ்சாங்கன்னா, அது நம்மளை நிம்மதியா வாழவிடாது.
நாம மன அமைதியோட அன்றாடம் சோறு திங்க முடியாது. எந்தச் சலனமுமில்லாம நிம்மதியாத் தூங்க
முடியாது. உன் பேர்ல எங்களுக்கிருக்கிற அக்கறை
மாதிரிதானே அவர் பெத்த பொண்ணுபேர்லயும் அவருக்கு அக்கறையும், கரிசனமும், பாசமும் இருக்கும்.
அதை நாம கெடுக்கக் கூடாது. …பாவம் அவுரு… ஏதோ கோவில்ல பூஜை பண்ணிக்கிட்டு வர்ற சொற்ப
வருமானத்துல ஜீவனம் பண்ணிட்டு வர்றாரு….அவர் இத்தனை வருஷம் பண்ணின கிரமமான பூஜைக்குப்
பலன் இல்லாமப் போயிடும்னு நினைக்கிறியா? அந்தப் பாவம் நமக்கு வேணாம்ப்பா…!விட்டிடு…அந்த
அம்பாளோட கோபப் பார்வை நம்மேல விழுந்ததுன்னா நம்ப குடும்பம் அழிஞ்சி போயிடும். தலைமுறை
விளங்காது. .உனக்கு நாங்க செல்வாக்கான இடத்துல வசதியா வாழ்ற மாதிரி பார்த்து முடிச்சு
வைக்கிறோம்…சொன்னாக் கேளு…எங்க பேச்சைத் தட்டாதே…!
எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், எதுவும் காதில் ஏறினமாதிரித் தெரியவில்லையே? அதற்குப்
பிறகுதானே இந்த வார்த்தை…எங்க பையன் விருப்பம் என்னவோ அதுதான் எங்க விருப்பமும்…..முதலில்
பாபமாகத் தோன்றியது பிறகு எங்ஙனம் விருப்பமாக மாறியது? தானாவது கதியற்றுப் போய் நின்று…தொலைஞ்சு
போ…என் கண் முன்னால நிக்காதே…என்று விரட்டினோம்…தடுத்து நிறுத்தும் சகல சௌகரியங்களும்,
பலமும் பட்டாளமும் இருந்த அவர்களுமா இப்படி உதறுவார்கள்? மகராசியா இருக்கட்டும்…நம்ம
குலம் தழைக்கட்டும்…என்று யாரேனும் அறிவுறுத்தியிருப்பார்களோ? நானாக ஏன் இப்படி நினைத்துக்
கொள்ள வேண்டும்? பெருமையாய் நினைத்துக் கொள்ளும் அல்ப சந்தோஷமா? அப்படியானால் போய்
நின்று கைகோர்த்து, குதூகலிக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்?
அவர்கள் உதறவில்லை. சேர்த்தல்லவா வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்? தலையில்
தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களாமே! உண்மையா? பிறகு ஏன் தனிக் குடித்தனம் வந்தார்கள்?
பையன் விருப்பத்துக்கு மாறாக ஒரு துரும்பை நகர்த்த மாட்டார்களோ?
ஏய்…அது அய்யர் வீட்டுப் பொண்ணு…உன் முரட்டுத்தனத்தை அதுகிட்டக் காட்டாதே…வாடிப்
போயிடும்…பூத்தாப்போல வச்சிக்கிடணும்…! நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமிடா அது…! இந்தப்
பரம்பரையை இனி வாழ வைக்கப்போற சாமிடா …! உன்
தலைமுறையையும், உனக்குப் பிறகு வர்ற தலைமுறையையும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நின்னுதான்
பெயர் சொல்லப் போறீங்க….நாங்கள்லாம் காணாமப் போயிடுவோம். ஆகையினால காலம் நம்ம குடும்பத்த
நிமிர்ந்து பார்க்கிற மாதிரி வாழ்ந்திட்டுப் போகணும்…
என்று இந்த வீட்டு வாசப்படி இனி நீ மிதிக்கப்படாது என்று அவளைப் பார்த்துக்
கூறினாரோ அதற்கு மறுநாளிலிருந்து கவனித்துக்
கொண்டுதான் இருக்கிறார்.
நான் இல்லாதபோது
அவள் இந்தாத்துக்கு வர்றது, போறதுங்கிற பழக்கமெல்லாம் இருக்கக் கூடாது…உங்க எல்லாருக்கும் சொல்லிப்புட்டேன்…அப்டியே அவள் வந்தாலும்
வாசப்படி மிதிக்காதேன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுங்கோ…! எனக்குத் தெரியாம வீட்டுக்குள்ள விட்டேள்னு தெரிஞ்சிது அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். உங்களுக்கு நான்
வேணுமா இல்ல அவ வேணுமான்னு முடிவு பண்ணிக்குங்கோ..அம்மா…உனக்கும் சேர்த்துதான் சொல்றேன்.
நான்தான் பொண்ணோட பாட்டின்னு இளிச்சிண்டு உன் பேத்தி வீட்டு வாசல்ல போய் மானங்கெட்டு
நிக்காதே…! அங்கே நீ என் மானத்தை வாங்குறே…அத மனசில வச்சிக்கோ. என் சொல்லை மீறினேள்
அப்புறம் இந்த தட்சிணாமூர்த்தி உங்களுக்கில்லை…ஞாபகமிருக்கட்டும்…. என்று வீட்டில் உள்ளவர்களுக்குக் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார். உத்தரவென்ன…பயப்படுத்தி வைத்திருந்தார்.
இதே தெருவுலதான் அவ இருக்காங்கிறதுக்காக அடிக்கடி வரப்பார்ப்பா…போகும்போதும்,
வரும்போதும் உள்ளே நுழையைப் பார்ப்பா…வாசல்லேர்ந்து குரல் கொடுப்பா…! ஈஈஈன்னு இளிச்சிண்டு
போய் நிக்காதீங்கோ…வாசக் கதவை எப்பயும் பூட்டியே வைங்கோ….திறந்த வீட்டுல எதுவோ நுழைஞ்ச
மாதிரி நுழைஞ்சிடப் போறா…அப்புறம் அடிச்சித்தான் விரட்டணும்….இனி நான் உசிரோட இருக்கிறவரைக்கும்
உறவு ஆகாது. அறுந்தது அறுந்ததுதான். தெரிஞ்சிதா?
அவளை யாரும் கண்கொண்டு பார்க்கப்பிடாது….!”
ஜாதி பிரஷ்டம் பண்ணினமாதிரிப் பேசினார். மனசு ஆறவே மாட்டேனென்கிறது. தளதளவென்று
கொதித்துக்கொண்டேயிருக்கிறது. கோயில் பூஜையில் கூட மனம் லயிக்கவில்லை. வாய் யந்திரத்தனமாய்
மந்திரங்களை உச்சரித்தது. அர்ச்சனைக்குக் கொடுத்தவர்களின் பெயர், நட்சத்திரம், கோத்திரம்
எல்லாம் சரியாய்த்தான் சொல்கிறோமா…சொல்கிறோமா அல்லது சொல்லாமல் தாவுகிறோமா? அட…ராமச்சந்திரா…இன்னும்
இந்தப் பாவம் வேறு வேண்டுமா? ஸ்வாமி சந்நிதியின் முன் இந்தத் தடுமாற்றம் ஆகுமா? கர்ப்பக்கிரஉறத்தின்
இருட்டில் தேடுகிறேனா என் காணாமல் போன ஆச்சாரங்களை? என் நியமங்களிலிருந்து தவறுகிறேனா?
என் தடுமாற்றம் இன்னும் நிலைக்கு வரவில்லையா?
ஈஸ்வரா…இப்படியொரு சோதனையை ஏன் கொடுத்தாய் இந்த வயதில்? உனக்கான சேவையை ஆண்டாண்டு
காலமாய்ப் போற்றிவரும் எனக்கு இதுதானா பலன்? நீ வழங்கிய பரிசு இந்த தண்டனைதானா…? உன்
பாத சேவையே என் மூச்சு என்று இருந்த எனக்கு இப்படியொரு பாதகமா நிகழ வேண்டும்?
மனசு நிலை கொள்ளாமல் வீட்டை நோக்கிச் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து கொண்டிருந்த
தட்சிணாமூர்த்திக்கு தலை சுற்றுவது போலிருந்தது.அன்று காலையிலிருந்தே அவர் நிலைமை சரியில்லைதான்…ஒரே
மனக் குழப்பம். அநியாயத் தன்னிரக்கம். பூஜை புனஸ்காரம் எக்காரணம் கொண்டும் நின்று விடக்
கூடாதே என்கிற ஆதங்கம். தன்னை விட்டால் அம்பாளையும், அய்யனையும் போற்றித் துதித்து
வழிபாடு செய்ய உதவிக்கு இன்னொரு ஆள் இல்லையே? சேவை பிறழாது நான்தானே பயணிக்கிறேன்.
தடுமாறிக் கீழே விழப்போன அவரை அருகே இரண்டு பை நிறையச் சுமையோடு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த
ஒருவர் தாங்கிப் பிடித்தார். அவரை ஓரமாக அமர வைத்து பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர்
முகத்தில் சிறிது தெளித்து, சற்றுத் தெளிய வைத்து, குடிங்க என்றவாறே நீட்டினார்.
காலையிலிருந்து ஒன்றுமே வயிற்றுக்குச் செலுத்தாத அயர்ச்சியில் அந்த நீர் அவருக்குப்
பெருத்த ஆசுவாசத்தைத் தந்தது. போன உயிரை மீட்டது போலிருந்தது. செவிக்கு உணவு இல்லாத போழ்துதானே சிறிது வயிற்றுக்கு….அது அவரது மாறாத
நியமமாயிருந்தது. ஈசன் நாமம் விடாது மனதில்
ஒலித்துக் கொண்டிருக்க, தன்னைத் தடுத்தாட்கொண்டவரைத் தலை குனிந்து கண் கலங்கலோடு கையெடுத்துக் கும்பிட்டார்.
போயிடுவீங்களா..இல்லை கூட வரட்டா…? என்றார் அவர்.
வேண்டாம்…இந்தோதானே வீடு..நானே போய்க்கிறேன்…வழக்கமான தூரம்தானே…! என்று மெல்ல
அடியெடுத்து நடக்க ஆரம்பித்தார் தட்சிணாமூர்த்தி.கைகளை நெற்றிக்கு மேல் தடுத்து நீள
நோக்கினார். வீடு அதே இடத்தில்தான் இருந்தது. இன்னும் இவ்வளவு தூரமிருக்கா? என்று அவர்
மனசு சொல்லியது.
உங்கப்பா ரோட்டுலே தலை சுற்றிக் கீழே விழப் போனார்…தெரியுமோ?-
ஐயய்யோ…அப்புறம்? – சாந்தி பதறினாள்.
.நான்தான் தாங்கிப் பிடிச்சி ஓரமா உட்கார்த்தி, தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தி
அனுப்பிச்சு வச்சேன்…கூட வரட்டான்னு கேட்டேன்…நானே போய்க்கிறேன்னுட்டார். இன்னிக்கு
நண்பகல் நிகழ்வு இது…- சொல்லிக்கொண்டே மனோகரன் சாந்தியைப் பார்த்துச் சிரித்தபோது…..
அடப்பாவமே…வெய்யில் தாங்கலை……தீயான்னா எரியறது? …அதான்…அவர் உங்களைத் தெரிஞ்சிண்டாரோ….?
என்று தொடர்ந்து ஆவலுடன் கேட்டாள் அவள்.
ஒழுங்கா வீடு போய்ச் சேர்ந்தாரான்னு கேட்க மாட்டியா? அந்தக் கேள்வியைக் காணோம்….?
அதெல்லாம் போயிடுவார்…பக்கத்துலதானே…தெருவுக்குள்ளே நுழைஞ்சிட்டார்னா அங்கங்கே
உட்கார்ந்துக்குவார். .அது கிடக்கட்டும்…நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…உங்களை அடையாளம்
கண்டுண்டாரா இல்லையா…?
என்ன இப்படிக் கேட்கிறே? என் முகத்தை
என்னைக்கு முழுசா நிமிர்ந்து பார்த்திருக்கார் அவர்…அடையாளம் தெரிஞ்சிக்கிறதுக்கு…?
இன்னைவரைக்கும் அவரை ஒரு முறை கூட நேரடியா, நேருக்கு நேர் நின்னு கண்ணுக்குக் கண் அவரை நான்
சந்திச்சதில்லையே…அப்புறம் எப்டி…? என்றான்
மனோகரன்.
பதிலுக்கு ஒரு ஆழமான விரக்தியான புன்னகைதான் மலர்ந்தது சாந்தியிடம். அந்தப்
புன்னகை எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கியது? அவள் மனசாட்சி உறுத்திற்று.
--------------------------
உஷாதீபன் (ushaadeepan@gmail.com) எஸ்.2 – இரண்டாவது தளம்,
(ப்ளாட் எண்.171,
172) மேத்தா’ஸ்
அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்), ராம் நகர்
(தெற்கு)12-வது பிரதான சாலை, --மடிப்பாக்கம், சென்னை – 600 091. (செல்-94426 84188).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக