சிறுகதை '“என் மக்கள்” உஷாதீபன் பிரசுரம் செம்மலர் செப்.2024 இதழ்
வீட்டு
வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான்
விற்றுக் கொண்டிருந்தது...இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார்
மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான்.
ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத்
தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும்.
அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய
தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.
எப்பொழுதுமே
வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக
அவர் ஒன்று செய்கிறார்...சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக்
கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு
என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு
டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக
இருக்கிறது. மனசும் இருக்கிறது.
ஈஸ்வரன்
ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார்.
என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு
முன்னூறா...என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.
அப்படியொன்றும்
அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக்
க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை
நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?
இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின்
ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது.
அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை
அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில்
விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட
அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.
குடத்திற்கு
ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு
ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த
ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து
கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச்
செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும்....சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும்
அந்த பாஷை கேட்க இதம்...! நியாயம் தலை தூக்கி நிற்கும்.
நீங்க
ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும்...தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும்...அப்புறம்
நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப
வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி...எம்புட்டு வேல கெடக்கு...
நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக...ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா...?
இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?
அந்தச்
சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும்...நமக்கென்ன...!
எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால்...அது குறையும். ரெண்டு டிரிப்
அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின்
கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர்
கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில்
குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர்
தூக்கி நிறுத்தி...அமர்க்களமாகிப் போனது.
அந்தச்
சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை
கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட
வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது
மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக்
கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில்
ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே
வந்தார். என்னா கெரகம் இது...நமக்குன்னு அமையுதே...என்று ஒரே வேதனை அவருக்கு.
சாமீ....என்னா
கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே...கேன் வாணாமா...?
என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த
வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த
மனுஷாளின் ஈடுபாடே தனி...!
ஈஸ்வரனுக்குப்
பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில்
உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட
பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும்.
அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ,
அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை
கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா...என்னா ரொம்ப
நாளாக் காணலை...என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப்
போடும் பெண்மணி. அய்யா...வாங்க...தோட்டத்துக் காயி...காலைல பறிச்சதாக்கும்...வாங்கிட்டுப்
போங்க.....என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது
கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி...மன நிறைவு...!
வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன்…சார்…தண்ணி கொடுங்க…என்று
உரிமையோடு வாங்கிக் குடிக்கும் நெருக்கம் ....வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க
வரும் சிவசாமி...அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய்...உப்பு...உப்போய்....என்று சைக்கிளில்
ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன்...தெருக் கடைசியில் தோசை மாவு
விற்கும் மரியக்கா...இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார்...என்று கேட்டு புதிதாய்த்
தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப் பிடித்த
அயர்ன்காரர் அந்தோணிசாமி...வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும்
பஞ்சாயத்துப் பேச்சி...இன்னும் எத்தனையெத்தனை பேர்...யாரை நினைப்பது...யாரை மறப்பது? என்னவோ
ஒரு ஒட்டுதல்...எதனாலோ ஒரு பிடிப்பு...இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம்.
உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும்
போலிருக்கிறதே...! பிரியத்தோடு முகம் பார்த்தலும்,பரஸ்பர நலம் விசாரிப்புகளும்…
ஒரிஜினல்
உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள்.
எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ
என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய்
இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு.
அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்...!
யார் யாரை நினைச்சு உருகப் போறாங்க...? எல்லாம் வெறும் வேஷம்…மாயை...!
அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.
பிடித்த
மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு
அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே...!
அது ஒன்று போதாதா? பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி
விட்டார்களே...! ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான் ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?
இல்லையென்றால்
அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான்.
அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத்
திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள்
அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.
மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு
வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல்
கீங்...கீங்...கீங்....என்று காது கிழிய ஏர் உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால்
சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின்
தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா
என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும்.
வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள்
மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று
லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி, ஒரு பொட்டலம்
குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான்.
நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு
பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி.....அவ்வளவுதான் நீர்ச்
சுத்திகரிப்பு முடிந்தது.
பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன்.
வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை.
ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை.
அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில்
நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா
விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி....மாற்றி மாற்றி....கல்யாணம், காட்சி, வளைகாப்பு,
ஜனனம், மரணம்....என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க....போகாமல் முடியவில்லையே?
மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே பென்ஷன் காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே...!
என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து
கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம்
இது?...! நல்ல கதையப்பா...நல்ல கதை...! வெறுத்தே போனார் ஈஸ்வரன்.....
சொர்க்கமே
என்றாலும்.....அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?
ஆள
விடு..சாமி...! என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா....என்று
பையன் சொல்ல....என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு.....அதுவே
பெரிய ஆரோக்கியமாக்கும்...என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார்.
மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன...என்னால வாழ முடியாதா?
இருந்து காட்டறேன் பார்....என்று நினைத்துக் கொண்டார். வயசாக வயசாகக் கணவன் மனைவிக்குள்
பிரியமும், பாசமும் அதிகரிக்கும் என்று பெயர். இங்கே என்னடாவென்றால் இவர் எப்படா தனியே
ஓடுவோம் என்று காத்திருந்தார். பையனிடம் அவ்வளவு ஒட்டுதல்! பார்ப்போம் அந்த நாடகத்தையும்…!!
நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம்
கேட்கவில்லை. கிட....அவ்வளவுதான்...!. நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன்
என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத
தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது
அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர்
பிராணன் போனால்தான் நிம்மதி.
இதோ....அவருக்கென்று
உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக்
கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா
தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து
நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு.
அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும். அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை...!
அவர்களின் அந்த வெள்ளை மனசு...அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக்
கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை....கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும்
அவர்களின் அன்றாடப் பொழுதுகள்....அவைதான் எத்தனை ரசனைக்குரியவை...எவ்வளவு மதிப்பிற்குரியவை...!!
அடடே...வாங்க
சாமீ....என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை.....- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற
அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு...வந்தாச்சு...இங்கயே
வந்தாச்சாக்கும்...!”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய்
நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன்.
கொண்டாங்க கேனை...முதல்ல நிரப்பிடுவோம்...என்றவாறே
எட்டி வாங்கினது ஒரு பெண்.
மகளே....!
என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார்.
கொஞ்ச
நேரம் உங்களோட உட்கார்ந்து பேசிட்டு, அப்புறம் பிடிச்சிட்டுப் போறேனே!. நீங்கல்லாம்
பிடிங்க….என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவே போய் சம்மணம் போட்டு அமர்ந்தார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த்
தொடங்கியது.
----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக