+சிறுகதை தாய் வீடு இணைய இதழ் ஆகஸ்ட் 2024 பிரசுரம்
“ஆள்மன அவசம் “
நான் தனியாய்க் கிடந்துதான் இறந்தேன். வீட்டுக்
கதவை உடைத்துத்தான் என்னை எடுத்தார்கள். அப்படித்தான் நடக்கும் என்று முன்பே நான் கணித்திருந்தேன்.
அது இத்தனை சீக்கிரம் நிகழுமென்றுதான் நினைக்கவில்லை. அந்த சிரமத்தை எதிர் வீட்டு நண்பரான
நாதனுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால் அதுதான் நடந்தது.
அதனாலேயே நான் ஊரிலிருந்து வந்தால்…எப்பக்
கிளம்பப் போறீங்க…? என்று அவர் கேட்டுக்கொண்டேயிருப்பார். எத்தனை நாள் ஸ்டே? என்று
முதலிலேயே கேட்டு விடுவார். வந்தமா…சட்டுச் சட்டுன்னு லோகல் வேலைகளை முடிச்சமா…கிளம்பினமான்னு
இருக்கணும்…அங்க போய் பேரனோடு கொஞ்சிக்கிட்டு இருப்பீங்களா…இங்க வந்து ஒத்தையாக் கிடக்கிறதா
அழகு? என்று என்றோ சொல்லி விட்டார். டிக்கெட் போட்டுட்டீங்களா? என்று அனத்தி எடுத்து
விடுவார்.
அவருக்கு எந்தவித சிரமமும் கொடுத்து விடக்
கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. அதற்காகவே அவரும் பயந்து கொண்டுதான் இருந்தார்
என்றும் எனக்குத் தோன்றியது. இல்லையென்றால் நான் வரும்போதெல்லாம் அப்படிக் கேட்பானேன்?
எனக்கும் அவருக்கும் ஒரே வயசு. ஆனால் என்னை விடச் சுறுசுறுப்பாளி. ஏதாவது வேலை செய்து
கொண்டேதான் இருப்பார். அவர் சும்மா இருந்து பார்த்ததேயில்லை. வீடு பெருக்க, மெழுக,
சுற்றுப்புறங்களைக் கூட்டிக் குப்பை அள்ள, பின்னால் இருக்கும் செடிகளுக்கு மண் அணைத்துக்
கொடுத்து தண்ணீர் இறக்க…என்று எங்கிருந்துதான் அவருக்கு வேலைகள் முளைக்குமோ…! எல்லாம்
முடிந்ததென்றே கிடையாது அவருக்கு. வீட்டு வேலை முடிந்தால் சைக்கிளில் குடத்தைக் கட்டிக்
கொண்டு நல்ல தண்ணீர் எடுக்கக் கிளம்பி விடுவார். அங்கு போய் அந்தக் காலனி மக்களோடு
நின்று நாலு கதை பேசி, ஊர் நிலவரம் பகிர்ந்து அந்தத் தண்ணீரைச் சுமந்து வருவதில் ஒரு
அலாதி திருப்தி அவருக்கு. சுறுசுறுப்பாய் இருப்பவர்கள் என்றுமே ஆரோக்யமாய் இருக்கிறார்கள்.
மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்பது நிச்சயம்.
எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார் நாதன்.
வரும் தபால்களையெல்லாம் எடுத்து பத்திரமாகத் தபால் பெட்டியில் போட்டு வைக்கிறார். பெட்டியில்
போட வேண்டும் என்றுதான் போஸ்ட்மேனுக்கும், கூரியர்காரனுக்கும் போய்ப் போய்ச் சொல்லி,
எழுதிக் கொடுத்துக் கேட்டுக் கொண்டு ஊர் வந்து
சேர்ந்தேன். ஆனால் அவர்கள் அதைப் பின்பற்றவில்லை. எங்க சார்…எல்லாம் வராண்டாவுலயே வீசிட்டுப்
போயிடுறாங்க….என்று சொல்லி விட்டு…நான் இருக்கிறவரைக்கும் எடுத்து பாக்சுக்குள்ள போட்டுடறேன்…கவலைப்
படாதீங்க…என்று கூறி, தவறாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறார் நாதன். இல்லையென்றால்
என்னுடைய மியூச்சுவல் ஃபன்ட் காசோலைகள் எத்தனையோ வீதிக்குள் பறந்து கண்காணாமல் போயிருக்கும்.
மூன்று மாதத்திற்குள் அதைக் காசாக்க வேண்டும், கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஊருக்கு
வருவதே என் வாடிக்கையாய் இருந்தது.
அவரது சேவை அளவிடற்கரியது. மாலை ஆறு மணியானால்
வாசல் லைட்டைப் போட்டு எரிய விட்டு, பத்து மணியானால் மறக்காமல் வந்து அணைத்துவிட்டு,
மாடிக்கு ஏறி ஒரு சுற்று சுற்றி, கொல்லைப் புறமெல்லாம் ஒரு நோட்டம் விட்டு விட்டு வந்து
படுத்துக் கொள்வார். ஆளில்லாத வீடுகளில் பின்புறம் கூட்டாக வந்து அமர்ந்து குடித்து
விட்டு, காலி பாட்டில்களை, கஞ்சா காகிதப் பேப்பர்களைக்
கசக்கி வீசி விட்டுப் போவது எங்கள் ஏரியாவில்
வழக்கமாய் இருந்தது. கொஞ்சம் கவனிக்காமல் போனால் பின்புறமாய் ரகசியமாய்க் கதவைத் திறந்து
வர போக என்று ஆரம்பித்து விடுவார்கள் போன்றதான நிலைமை ஓடிக் கொண்டிருந்தது.
பள்ளி வாசல்களில் காஞ்ஜா போதைப் பொருட்கள்
விற்கப்படுகின்றன. எல்லாப் பெட்டிக் கடைகளிலும் சர்வ சாதாரணமாய்க் கிடைக்கிறது. தியேட்டர்களில்
ரகசியமாய்க் கிடைக்கின்றன. ஓட்டல் வாசல்களில் ஓரமாய் நின்று விற்கப்படுகின்றன. சிறார்
உலகமும், இளைஞர் உலகமும் நாளுக்கு நாள் கெட்டுச் சீரழிந்து வருகின்றன. எதிர்காலத் தலைமுறை
என்னவாகுமோ என்று பெற்றோர்கள் கதி கலங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாய்க்
கவனித்தாக வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் தங்களிடம் சகஜமாய்ப் பேசுகிறானா, அறையில்
போய்த் தனிமையில் ஒண்டுகிறானா, ரகசியமாய் ஏதேனும் செய்கிறானா, யாருடன் பழகுகிறான்,
அவர்களெல்லாம் ஒழுக்கமான பிள்ளைகளா, எங்கெங்கு போகிறான், வருகிறான் என்று கட்டாயம்
கண்காணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலகம் கைக்கு அடங்காது போய்க்
கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தீமைகள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. எந்நேரம்
எது நடக்குமோ என்று பயந்து கிடக்கிறது உலகம். எதைநினைத்து வருந்துவது. தனிமையில் இந்த
வீட்டில் இருக்கவே நானே பயந்து கொண்டுதானே கிடக்கிறேன். என் வீட்டில் எனக்கே எப்படி
இந்தப் பயம் வந்தது. குடியிருக்கும் தெருவில் அமைதியில்லையே? என்னென்னவோ வேண்டாத சத்தங்கள்
கேட்கிறதே? கெட்ட வார்த்தைகள் காதில் விழுகின்றனவே? குடித்து விட்டு ஆட்கள் தள்ளாடிப்
போகும் சத்தம் இரவு இரண்டு மணி வரை கேட்ட வண்ணமே இருக்கிறது. பிறகு நாலு மணி வரைதான்
ஓய்வு. அமைதி. மறுபடியும் அந்நாளைய தவறுகள் ஆரம்பித்து விடுகின்றன. தனியாய் இருக்கும்
எனக்கே இரவ எவனாவது வீட்டுக்கு வந்து கதவைத் தட்டுவானோ என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கிறது.
வீட்டைப் பூட்டிப் போட பயமாய்த்தான் இருக்கிறது. ரகசியமாய், சத்தமின்றிக் கதவைத் திறந்து
உள்ளே புகுந்து கொண்டு எவனும் இது என் வீடு என்று சொந்தம் கொண்டாடி விடுவானோ என்கிற
அளவுக்கு பயப்பட வேண்டியிருக்கிறது. காலி இடம் பிடிப்பதைப் போல் கட்டிய வீட்டினைப்
பிடிக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அந்த அளவுக்குத் தீமைகளும் ஒழுக்கக் கேடுகளும்
நடக்கின்றனவே?
பக்கத்தில் ஒரு மயானம் உண்டு. அன்றாடம்
அங்கே சடலங்கள் வந்து கொண்டேயிருந்தன. எந்நேரமும்
நெருப்பு பக பகவென எரிந்து கொண்டேயிருந்தது. அதற்கு முப்புறமும் இடம் வாங்கி வீடு கட்டியவர்கள்
மயானப் பகுதி ஜன்னல்களைத் திறப்பதேயில்லை. அது அல்லாமலே அவர்கள் வீட்டுக்குள் எந்நேரமும்
பிணப் புகை போய்க் கொண்டேதான் இருந்தது. அது உடம்புக்கு நல்லது என்று வேறு சிலர் சொல்லி
வைக்க…அருகிலுள்ள சிறிய பேருந்து நிறுத்தத்தில் எந்நேரமும் அந்தப் புகையை மூக்கிற்குள்
வாங்கும் சனம் நின்று கொண்டேயிருந்தது. ஏரியாவில்
வீடுகள் வரவர, அந்த நகர்ப்பகுதி பிரபலமாக ஆக நாளாவட்டத்தில் மயானம் எடுக்கப்பட்டு விடும்
என்று சொல்லித்தான் ப்ளாட்டுகள் விற்றுத் தள்ளப்பட்டிருந்தன. இப்போது வீடுகள் நிரம்பி
வழிகின்றன.
எங்க சாதி சனத்து ஆட்களை இங்க கொண்டாந்துதான்
எரிப்போம். இந்தச் சுடுகாட்ட எடுக்க விடமாட்டோம்…என்று போராட்டத்திற்கு நின்றார்கள்
அப்பகுதிப் பழங்குடிகள். மாவட்ட ஆட்சியர், வேண்டாமே…! என்று ஒரே வார்த்தையில் முடித்துக்
கொண்டார்.
எங்கள் நலச் சங்கத்தின் ஆட்களால் செய்ய
முடியாமல் போன ஒரே காரியம் அது ஒன்றுதான். எத்தனை பஸ் போனாலும் வந்தாலும் அத்தனையும்
நிரம்பி வழியும். வசூல் மிக அதிகமென்றுணர்ந்து,
போக்குவரத்துக் கழகத்தின் வந்து போகும் பஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன.
எந்தெந்த இடத்திலிருந்தோவெல்லாம் இணைப்புக் கொடுத்து வண்டிகளை இங்கே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
வாரணாசி போல் விடாமல் பிணம் எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்க வருகிறார்களோ என்று தோன்றும்.
இரவு நேரத்தில் பெண்கள் அந்தப் பகுதியைக் கடந்து போகப் பயம் கொள்ளுவார்கள். தனித்துக் கடப்பது வேண்டாம் என்று தவிர்க்க நினைப்பார்கள்.
இன்று அறுநூறு அடிக்குக் கீழே தண்ணீர்
போய்விட்டது எங்கள் பகுதியில். அதனால் பலரும் படிப்படியாக வீடுகளை விற்றுவிட்டு நகர
ஆரம்பித்திருந்தார்கள். வாடகைக்கு வீடு கிடைக்காமல் இருந்த எங்கள் ஏரியாவில் பல வீடுகள்
சும்மாவே பூட்டிக் கிடந்தன. கேட்டால் அதை வித்தாச்சு…ஓனர் பம்பாயிலயோ, பெங்களூரிலயோ
இருக்காரு…சரியாத் தெரியாது என்று சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.
அடுத்தடுத்து சடலங்கள் வந்து இறங்க…அங்கு
நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதிக் கடைகள் சட்டுச் சட்டென்று அடைக்கப்பட்டன. தேவையில்லாமல்
கல்லெறிவதும், கண்ணாடிகள் உடைவதும் வழக்கமாய்ப் போக….முதல்ல எடத்தை மாத்தியாகணும்…என்று
பலரும் புறப்பட்டிருந்தார்கள். டூ வீலரைப் போட்டுக் கொண்டு மூன்று பேர் நான்கு பேர்
ஒரே வண்டியில் தொற்றிக் கொண்டு சர்ர்ர்ர்…..புர்ர்ர்ர்…..என்று இங்கும் அங்கும் பறந்து
அளப்பரை பண்ணுவதும்….அன்ட்ராயர் தெரியக் கைலியை உயர்த்திக் கொண்டு, நாக்கை மடித்துக்
கொண்டு… உனக்கு வேற தனியாச் சொல்லணுமா…கடையை
அடைக்கப் போறியா இல்லையா…ங்ங்கோத்தா? என்று ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்தால்….அரசாங்கம்,
போலீஸ் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
என்ற கேள்வி எல்லார் மனதிலும் தவறாமல் எழும். எந்த டெட்பாடி வந்தாலும் வாகனத்தில் செல்பவர்கள்
மரியாதையாய் இறங்கி நிற்க வேண்டும். அல்லது ரூட்டை மாற்றிக் கொண்டு பறக்க வேண்டும்.
என் வீடு அந்த மயானம், பஸ்-ஸ்டான்டிலிருந்து
உள்புறமாய் கடைசியாய் இருந்த வீதியிலிருந்தது. மற்ற எல்லாத் தெருக்களுக்கும் போகும்
லிங்க் ரோடு எங்கள் தெருதான். ஆகையினால் போக்குவரத்து சதா சர்வகாலமும் இருந்து கொண்டேயிருக்கும்.
இரவு ரெண்டு மணி வரை கூட வண்டிகள் போகும் வரும். பிறகு நாலு மணிக்குத் திரும்ப ஆரம்பித்து
விடும்.
எங்கள் தெருவின் பிரதிநிதியாக நான் அப்போது
இருந்தேன். எனக்கே தெரியாமல் அங்கு நடக்கும் ஒரு அக்கிரமம், என்ன சார் நடவடிக்கை எடுத்திருக்கீங்க…என்று
ஒருவர் சத்தமாய்க் கேட்டுக் கொண்டு வந்து நின்ற போதுதான் தெரிய வந்தது.
நீங்க நலச் சங்கத்துல மெம்பரா? என்று முதல்
கேள்வியைப் போட்டேன். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்லத் தயங்கின அந்தக் கணம்,
பரவால்ல…வர்ற மீட்டிங்க்ல மெம்பர் ஆயிடுங்க…என்று சொல்லி ஒரு பேப்பரில் அவர் கோரிக்கையை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினேன். ஆனால்
அது படு சீரியசான விஷயம். வந்த வேகத்திற்கு அவர் அதைச் சொல்லாமல் போயிருக்கக் கூடாது. மெம்பர் இல்லாட்டி என்ன சார்…கேட்கக் கூடாதா? என்று கேட்டிருக்க வேண்டும். கோபம் மனதிற்குள் புழுங்க
அவர் திரும்பிப் போனதுதான் ஆச்சர்யம். என்
தோரணையைப் பார்த்து பயந்துட்டாரோ? அப்படியும் ஒரு திருப்தி உண்டு எனக்கு.
நானும்தான் சார் கவனிச்சிட்டிருக்கேன்
ஒரு வாரமா….அங்க மாடி பா ல்கனில சிவப்பு லைட் எரியுது பார்த்தீங்களா? என்று கையைக்
காண்பித்தார் பக்கத்து வீடு மாசிலாமணி. தெருக்
கடைசியில் கண்மாய்ப் பக்கம் குடியிருக்கும் ஒரு போலீசின் ஆதரவோடு அந்த வீட்டில் பிராத்தல்
நடந்து கொண்டிருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாய்….என்னடா இது…ராத்திரி அடிக்கடி ஆட்டோ
சத்தம் கேட்குதே…என்று என் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அதைத் தீவிரமாய்
உணரும் தீட்சண்யம் என்னிடமில்லை. எவன் வந்தா என்ன, போனா நமக்கென்ன? என்கிற மனப்பான்மை.
நாமுண்டு நம்ம வேலையுண்டு என்கிற வளர்ப்பு.
நல்லவேளை…அங்கேயும் நாதன்தான் உதவினார்.
அதனால்தான் சொன்னேன் அவரது உதவி அளப்பரியது என்று. அவரது சித்தப்பா பையன் ஒருவன்…ஒருவனல்ல…ஒருவர்….சென்னையில்
டி.எஸ்.பி.யாக இருந்தார். ராவோடு ராவாக அவருக்கு ரகசியமாய் ஃ.போன் போட்டுச் சொல்ல….எங்கள்
பகுதியின் இன்சார்ஜ் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு படை வந்து அந்த வீட்டின் மொத்தக் கூட்டத்தையும்
அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டது. இந்த ஊர்லயே உங்கள நான் இனி பார்க்கக் கூடாது…என்று
சொல்லி…ஸ்டேஷனில் வைத்து நன்றாக மொத்தி, தப்பிச்சோம்
பிழைச்சோம் என்று ஓட ஓட விரட்டியடித்தார்கள். அந்த விஷயத்திலான நாதனின் பேருதவி சாகும்வரை
மறக்கக் கூடாதது.
இதனாலேயே தெருக்கோடியில் குடியிருந்த
அந்தப் போலீஸ்காரருக்கு என் மீது தீராத கோபம். பயங்கரக் கடுப்பு. எதிலடா என்னை மாட்டுவோம்
என்று அவன் காத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. ராத்திரி ஊர் உறங்கும் நேரம்
என் அறையில் லைட்டைப் போட்டுக் கொண்டு கொட்டக் கொட்ட புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன்
நான். தேவையில்லாமல் வந்து கதவைத் தட்டுவான். ஏன் லைட் எரியுதுன்னு கேட்பான். கதவைத் திறந்தால் சட்டென்று எதிர்பாராத தருணத்தில்
உள் நுழைந்து எல்லோரும் தூங்குகிறார்களா…என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் பார்ப்பான்.
எனக்கு அதற்கு அதிகாரமுண்டு என்பது போல் இருக்கும் அவன் நடவடிக்கைகள்.
அதெப்படி சார் உள்ளே விட்டீங்க? அப்டியெல்லாம்
போலீசானாலும் வரக் கூடாது சார்…ஒரு கௌரவம், மரியாதைன்னு நமக்கும் இருக்குல்ல…யாரன்னு
காண்பிங்க…பார்ப்போம்….என்றார் நாதன். என் கூடப் பிறக்காத சகோதரன் அவர். எதற்காக பிரயோஜனமில்லாத
என் மீது இத்தனை அன்பைப் பொழிகிறார் என்று நினைத்து உருகுவேன். நான் அதற்குத் தகுதியானவன்தானா
என்று கூசுவேன்.
அதையும்தான் அந்த சென்னைப் போலீசிடம்
சொல்லச் செய்தேன். எல்லாம் நாதனின் அசாத்தியக் கருணை. அந்தப் போலீஸ்காரரை ஊரை விட்டே
மாற்றி விட்டார்கள். எங்கள் வேலைதான் அது என்று அவர் அறிய மாட்டார்.
எங்கள் வள்ளுவர் நகருக்கு தார்ச் சாலைகள்
போட்டது, கம்பங்கள் நட்டு தெரு விளக்குகள்
எரிய விட்டது, சங்கம் அமைத்து வசூலித்து, குப்பை வண்டிகளுக்கு ஏற்பாடு செய்தது. அதை
இயக்கும் ஆளுக்கு சம்பளம் நிர்ணயித்தது, போக்குவரத்துக்கு
பேருந்துகள் ஏற்பாடு செய்தது, பேருந்து நிலையத்துக்கு கலெக்டரிடம் மனுக் கொடுத்து இடம்
ஒதுக்கச் செய்தது என்று நிறையக் காரியங்கள் செய்தோம் நாங்கள். சொல்லப் போனால் திருட்டு
அதிகமாய் இருந்த பகுதி அது என்று சொல்லலாம். திடீரென்று சின்னச் சின்னக் கற்களாய் வந்து
வீட்டின் மேல் தடதடவென்று விழும். எங்கிருந்து எறிகிறார்கள் என்றே தெரியாது. சனமெல்லாம்
ஒன்று கூடி வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் எப்படியோ திருடு
போயிருக்கும். யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அதக் காணல…இதக் காணல என்று கத்தும்போதுதான்
தெரிய வரும். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்களில் கூட யாரேனும் கூட்டு இருப்பார்களோ என்று
சந்தேகிக்கத் தோன்றும். தெரு விளக்குகளை எங்கள் பகுதி போல் கல்லெறிந்து உடைத்தவர்கள்
வேறு எங்கும் காண முடியாது. மாற்றி மாற்றி எத்தனை பல்புகள் மாட்டினாலும் உடைத்து விடுவார்கள்.
எப்போது வருகிறார்கள் போகிறார்கள் என்று எவர் கண்ணிலும் படாது. அத்தனை கம்பங்களும்
லைட் எரிந்து நாங்கள் என்றுமே பார்த்ததில்லை. எத்தனை தடவைகள்தான் பல்பு மாற்றுவது.
மாளவில்லை. ஒரு கட்டத்தில் இந்தக் கடைசிக்கு ஒண்ணு, அந்தக் கடைசிக்கு ஒண்ணு என்று மட்டுமே
எரியும் நிலை வந்தது. அவரவர் வீட்டு வாசல் லைட்டுகள்தான் எரியும். அதுவே போதும் என்று
விட்டுவிட்டோம்.
மும்மூன்று சென்டுகளாக நெருக்க நெருக்கமாய்
வீடுகள் கட்டப்பட்ட பகுதி அது. அதனால் சின்னச் சின்னச் சந்துகளாய்த் திரும்பித் திரும்பி
நீண்ட தெருக்களை அடைய வேண்டியிருக்கும். குறுக்குத் தெருக்கள் அதிகம் எங்கள் பகுதியில்.
ஆட்டோக்காரர்கள் வந்தால் கூட…இன்னும் எத்தனை சந்து சார் திரும்பணும் என்று அலுத்துக்
கொள்வார்கள். திரும்பி எப்படி மெயின் ரோடை அடைவது என்று முழித்து நிற்பார்கள். பஸ்-ஸ்டான்டுக்குப்
பின்னாடின்னு சொல்லி எங்கியோ கூட்டிட்டு வந்திட்டீங்களே சார் என்று அதிக வாடகைக்கு
அடி போடுவார்கள்.
உங்க ஏரியாவுல நாய்கள் ஜாஸ்தி சார்….சவாரி
வராது சார் என்று ஆட்டோவுக்குள் உட்கார்ந்து ஓட்டும் டிரைவர்களே பயந்து சாவார்கள்.
நாங்களும் மாநகராட்சியில் எவ்வளவோ சொல்லி நாய்களைக் குறைக்கப் பார்த்தோம். அவற்றை ஊசி
எறிந்து கொல்ல முடியாது. பிடித்துக் கொண்டு போவோம் பிறகு ஊருக்கு வெளியில் விட்டு விடுவோம் என்றார்கள்.
அது எப்படி பழகிய பகுதி தெரியுமோ ஆச்சர்யம்தான். நமக்கே நகரின் பல பகுதிகள் தெரியாதுதான்.
ஆனால் நாய்கள் எப்படித் தங்கள் இடங்களைக் குறி வைத்து வந்து நிற்குமோ…! நாய்களுக்குப் பயந்து இந்தத் தெரு வேணாம்…அப்படிப்
போவோம்…என்று மாற்றி மாற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
சின்னச் சின்ன குறுக்குச் சந்துகள் அதிகம்
என்பதால் அப்பகுதிக்குள் தன்னந்தனியே நடந்து வரும் பெண்களிடம் சங்கிலிப் பறிப்புகள்
நிகழும்.காரணம் தெரு ஆரம்பத்திலிருந்துதான் லைட் கம்பங்கள் இருக்கும் என்பதால் மங்கிய
சந்து வெளிச்சங்கள் போதிய பாதுகாப்பின்மையை உணர்த்திக் கொண்டேயிருந்தன. போதாக் குறைக்கு
நாய்ப் பயம் வேறு. எல்லாம் படிப்படியாய்க்
குறைந்த காலங்களும் உண்டு. ஆனால் நாய்கள் மட்டும் அப்படியே கூட்டம் கூட்டமாகத்தான்
இருக்கின்றன.
இப்போதுதான் பல வீடுகள் பூட்டிக் கிடக்கும் நிலைக்கு வந்து விட்டனவே?
அந்த வீடுகளுக்கு இந்தத் தெரு நாய்கள்தான் காவல். அவற்றிற்கு சரியான புகலிடம். சொல்லப் போனால் பையன்களுக்குக்
கல்யாணம் பண்ணி, சென்னைக்கோ, பெங்களூருக்கோ, பம்பாய்க்கோ, குடி பெயர்ந்து அவர்களோடு
போய் இருப்பவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் வீடுகளை விற்று விட்டுத்தான் ஒரேயடியாய்ப்
போய் விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். நான் ஒருவன்தான் இன்னும் சொந்த வீடை விற்பதா…என்றாவது
மீண்டும் இங்கே வந்து இருக்க வேண்டிய நிலை வந்தால்? என்று வந்து போய்க் கொண்டிருந்தேன்.
என் சாவு இங்கேதான் நிகழ வேண்டும் என்று என் மனதில் தீர்க்கமாய் ஒரு தீர்மானம் ஓடிக்
கொண்டேயிருந்தது.
நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு
அது. கல்லு மாதிரி வீடு. வெறும் ஒன்றரை லட்சத்தில் அரசு லோன் போட்டுக் கட்டினேன். சைடு
பகுதியை வாடகைக்கு விட்டு அந்தக் காசையும் எடுத்து விட்டேன். எப்டிக் கட்டினாக…இந்த
ஏரியாவுல எந்த வீடும் உங்க வீடு மாதிரி கல்லுக்குண்டாக் கட்டுனதுல்ல…. அன்னன்னிக்கு
நானும் பார்த்திருக்கனே…எங்க தாத்தாதான இதுக்கு வாட்ச்மேனா இருந்தாரு? சாகுற வரைக்கும்
தீபாவளி பொங்கல்னா அம்மா கூப்பிட்டு துணிமணியும், பணமும் கொடுப்பாகளே….எம்புட்டுப்
பெரிய மனசு அவுகளுக்குத்தான்…? இந்தக் கொய்யாவும்,
கருவேப்பிலையும், மல்லிப் பூவும் அவுக வச்ச செடிதான? எத்தனவாட்டி நா வந்து பறிச்சிருக்கேன்.
எடுத்துக்கோ…எடுத்துக்கோன்னுதான் அம்மா சொல்வாகளே தவிர ஒரு நா கூட என்னத் திட்டுனதில்லீங்கய்யா….அம்மா
மனசு அப்டியாக்கும்….தெனமும் அவுகளுக்குத்தான மொதப் பூவக் கட்டிக் கொண்டாந்து கொடுப்பேன்…அவுக வெளியூர் போனது எங்களுக்கெல்லாம்
எம்பூட்டு வருத்தம்? இந்தா வச்சிக்கோன்னு ஐயாயிரம் பணம் கொடுத்தாகளே…அந்த மனசு யாருக்கு
வரும்?
கிரகப்பிரவேசத்துக்கு நாந்தான பால் கொண்டாந்து
கொடுத்தேன்…மறந்திட்டீகளா? என்று சம்பங்கி சொன்னது இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த வீட்டை அத்தனை நம்பிக்கையாய்க் கட்டிக் கொடுத்த
அந்த இன்ஜினியர் ராகவேந்திரனுக்கு ஒரு டிரஸ்கூட நான் வைத்துக் கொடுக்கவில்லை. அந்த முறைமை கூடத் தெரியாத மடையனாய் நான் இருந்ததும்,
அதை என் மனைவி கூடநினைவு படுத்தாததும், இருந்த
பெரியவர்கள் யாரும் சொல்லித் தராததும் கடைசிவரை என் மனதை வாட்டிக் கொண்டுதான் இருந்தன.
இந்த வீடு என் அப்பா அம்மாவின் காலடிகள்
பட்ட வீடு. கை வீசிக் கால் வீசி இடைஞ்சலில்லாமல் அவர்கள் நடந்து பழகிப் புழங்கிய வீடு.
தண்ணிக் கஷ்டமில்லாமல் தாராளமாகத் துணி துவைத்து, குளித்து, நீள நீளமாகக் கொடிகளில்
உலர்த்திக் காய வைத்து எடுத்து, திருப்தியாய் மடித்து எடுத்து வச்சு, இங்க இல்லாட்ட
அங்க…அங்க இல்லாட்டா இங்க…என்று வெவ்வேறு அறைகளில் சுதந்திரமாய்ப் படுத்து உருண்டு
கண்ணயர்ந்து நிம்மதியாய் உறங்கி எழுந்து கழித்த வீடு. ரமணா…கொஞ்சம் அந்த ஏ.சி.யைப்
போடுறயாப்பா…என்று அப்பா வாய் விட்டுக் கேட்டுப் போடச் செய்து….யப்பாடி…யப்பாடி…என்ன
சொகம்…என்ன சொகம்..என்று ஆசுவாசப்பட்டு ஆசீர்வதித்த வீடு. கைக்கும், வாய்க்கும் தாராளமாய் அவர்களை இருக்கச்
செய்து மனதார வாழ்ந்து கழித்த சொர்க்கம் இந்த மண்.
அந்த வீட்டில்தான்
நான் தனியாய் இறந்து கிடந்தேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்தே
விட்டது. எதற்காக நான் வரும்போதெல்லாம் நாதன் பயந்தாரோ, எதற்காக சீக்கிரம் கிளம்புங்க
என்று என்னை விரட்டினாரோ அது நடந்தே விட்டது.
போன ஜென்மத்தில் அவருக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால்
இப்படி நடக்காது. என் சாவு இங்கேதான் நிகழ வேண்டும் என்கிற என் வேட்கையை, கடைசி ஆசையை
நான் அவரிடம் முன்பே தெரிவித்திருந்தால் அதற்கேற்றாற்போல் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்திருப்பாரோ
என்னவோ? உடன் பிறவாச் சகோதரன் என்றால் அவர்தான்.
காலையில் மணி பத்துக்கு மேலாகியும் நான்
வெளியே வராதது கண்டு அதிர்ந்து போய் வாசலுக்கு வந்து சார்…சார்…என்று கத்தியும் பதிலில்லாமல்
உள்புறமாய்க் கொக்கி போட்டிருந்த ஒரு ஜன்னலை மட்டும் எப்படியோ தட்டித் திறந்து பார்த்தவருக்கு
இந்த அதிர்ச்சி.
அதுதான் வாயும், முகமும் காட்டிக் கொடுத்து
விடுமே…இறந்து சில மணி நேரங்கள் ஆகி விட்டன என்பதற்கடையாளமாய் ஈக்கள் மொய்ப்பதைக் கண்டே
அவர் பதறிப் போயிருக்கிறார்…பாவம். நேர் எதிர்வீட்டுக்காரரின்
உதவியோடு இன்னும் ஓரிருவரோடு வந்து பார்க்கச் செய்து உறுதி செய்து கொண்டு, திண்ணைக்
கதவின் பேட்லாக்கை உடைத்து உள்ளே நுழைந்து…….
இதோ குளிர் கண்ணாடிப் பெட்டியில் நிச்சலனமாய் நான் உறங்கிக்
கொண்டிருக்கிறேன். உள்ளூரில் உள்ள சிலர்…என்
தூரத்து உறவினர்கள், என்னோடு பணியாற்றியவர்கள் என்று வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல ஆள்தான்….எனக்கு வேணாம்ங்கிறதோட
நின்னிருக்கலாம். வாங்கி ஆபீஸ் வாசல் கோயில் உண்டியல்ல போட்டாரு….நமக்காவது பிரிச்சிக்குங்கன்னு
கொடுத்திருக்கலாம்….-சரிவீசில் இருக்கும்போது நான் செய்த தவறு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
இனி பென்ஷன் குறைந்து போகும். மனைவிக்கு என்று 30% கிடைக்கும். அதை வைத்துக்
கொண்டு எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ? நிறைய மருந்து மாத்திரைகள் வாங்குவாளே…? இனி
அது பயன்படாது என்று படுக்கையில் விழாமல் இருக்கணும்…
ஐயையோ…எலெக்ட்ரிக் பில் இன்னும் கட்டலையே…நேத்துத்தானே
அட்டைல எழுதிட்டுப் போனான்…கவனிச்சுக் கட்டிடுவாங்களா?
அடடா…காஸ் தீர்ந்து போச்சேன்னு புக் பண்ணியிருக்கேனே…அவன்
வந்து நிற்பானோ…?
சில புக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கேனே…அதுக்கு
வேறே கூரியர் வரும். வாங்குவாங்களா?
எல்லாாத்துக்கும் மேலே அடுத்த மாசம் முதல்
வாரம் வாரணாசி டூர் போக டிராவல்ஸ் புக் பண்ணியிருக்கேனே….? அந்த அட்வான்ச அவன் திருப்பித்
தருவானா?
எதுக்காக இந்த வாட்டி ஊருக்கு வந்தேனோ
அந்த வேலையெல்லாம் இன்னும் முடியலையே…!
நிறைய ஃபிக்சட் டெபாசிட் இந்த மாசம் மெச்சூர்டு
ஆகியிருக்கே…ரின்யூவல் பண்ணனுமே…செய்துப்பானா?
இந்த வீட்டை பையன் பேருக்கு எழுதாமலே
செத்துப் போய்ட்டனே…ஒரு உயில் கூட எழுதலியே? லீகல் உறர்…பையன்தான்ங்கிறதால பிரச்னை
இருக்காதுதானே…? ஸாரி…ஸாரி…ஒய்ஃப் இருக்காளே…அவதானே நெக்ஸ்ட் லீகல் உறர்…அப்புறம்தானே
பையனுக்கு வரும்…! ம்ம்உறீம்….எதைக் கொண்டு வந்தோம்…கொண்டு செல்ல….
என் மனைவியின் வருகைக்காக, என் பையனின்
கடமைக்காகப் பிணமாய்க் காத்திருக்கிறேன்.
அன்புள்ள நாதன்…என்னை மன்னித்து விடுங்கள்.
உங்களை நான் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து வந்து நான் உங்களுக்குக்
கண்டிப்பாய்ச் சேவை செய்வேன். ஓம் ஷாந்தி….ஓம் ஷாந்தி…!!!
-------------------------
.
உஷாதீபன், (ushaadeepan@gmail.com) எஸ்.2–இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171,172) மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்), ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை – 600 091. (செல்-94426 84188).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக