31 ஆகஸ்ட் 2024

 

“ஆச்சரியம் என்னும் கிரகம்” - 5 சிறுகதைகள் - ஜப்பானிய மூலம்-ஷிஞ்ஜி தாஜிமா-தமிழாக்கம்-வெங்கட் சாமிநாதன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன் (வெளியீடு - சாகித்ய அகாடமி,குணா காம்ப்ளெக்ஸ், அண்ணசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18)                                                         ---------------------------------------------------                                     




   சிறார் இலக்கியப் படைப்புக்கள் என்று இன்று எத்தனையோ புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல படைப்புக்கள் குழந்தைகளுக்கு எளிமையாகக் கதை சொல்ல வேண்டும் என்கிற நோக்கில் வலியக் கதை செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன எனலாம். மிருகங்களுக்கு, வீட்டுப் பிராணிகளுக்கு என்று மனிதர்களின் பெயர்களை வைத்து உலவவிட்டு கதை பின்னினால் எளிமையானதாகத் தோன்றும் என்றும் அதன் மூலமே குழந்தைகளின் மனதில் சின்னஞ் சிறு  கதைகளை இருத்த முடியும் என்கிற எண்ணத்திலேயும் படைப்புக்களைக் காண முடிகிறது. அதுவே சிறுவர்களுக்கான இலக்கியம் என்றும் பேசப்பட்டு தொடர்ந்து படைப்புக்கள்  வலம் வந்து கொண்டிருக்கின்றன.

       ஆனால் சமூக நிகழ்வுகளை, மனிதர்களின் செயல்களை, ஆசைகளை, வஞ்சக எண்ணங்களை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கான வளர்ச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடும் மனித சமுதாயத்தை, தேய்ந்து கொண்டிருக்கும் மனித நேய உணர்வுகளை, சுயநலத்தை குழந்தைகளுக்கு நன்றாகப் புரியுமாறு கதையைப் பின்னியிருப்பதும், மிருகங்களின் நடவடிக்கைகள் மேற்கண்ட மனிதச் செயல்களைத் தோலுரித்துக் காட்டுவிதமாகவும் கதைகளை அமைத்திருப்பதும், சிறார் இலக்கியம் என்பது இவ்வகையிலேயே இருத்தல் வேண்டும் என்கிற  அவசியத்தை உணர்த்தும் விதமாக எளிமையாக திரு வெங்கட் சாமிநாதன் அவர்கள் மொழி பெயர்த்து அவசியம் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இதனை நிறுவியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

       கோன் இச்சி என்கிற நரி கென்-போன்-டான் என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி மனித உருவம் கொள்கிறது. இந்த மந்திரம் என்ன உருவத்தை அடைய அந்த நரி விரும்புகிறதோ அந்தக் குறிப்பிட்ட உருவத்தை அடைய முடியும் என்கிற நிலையில் மனித உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது.

       இப்படி மனிதனாக மாறிய பல நரிகள் இன்று இருக்கும் இடமே தெரியாமல் எங்கெங்கோ சென்று விட்டார்கள். ஆகையினால் மகனே தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், இந்த விஷப் பரீட்சை  வேண்டாம் என்று  தாய் நரி சொல்ல, கோன் இச்சி அதைக் கேட்காமல் மனித உரு எடுத்து, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கண்ட ஒரு கம்பெனிக்குள் வேலை தேடிப் போகிறது. அதற்கு வணிக அதிகாரியாக வேண்டும் என்கிற ஆவல். நிறைய சம்பாதித்து உனக்கு சாப்பிடுவதற்கு ருசியான முயல்களை வாங்கி வருவேன் என்று தாய் நரியிடம் சொல்லிவிட்டு நேர்முகத் தேர்விற்குச் சென்று வணிக வரி அதிகாரியாகச் சேர்ந்து விடுகிறது. முயல் கோழி, எலி எல்லாம் வளர்க்கத் தெரியும் எனக்கு. ஒரு மிருகப் பூங்காவைப் பொறுப்பேற்று நடத்தத் தெரிந்தவன் என்று கூறுகிறது கோன் இச்சி.

       வீடுமலை (கோன் இச்சி இருக்கும் மலை) மிருகங்கள் பற்றியெல்லாம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன்...என்று கூறி நிறுவனர் கோன் இச்சி பொறுத்தமான ஆள் என்று வேலை கொடுத்துவிடுகிறார். மாதங்கள் கழிகின்றன. வேனிற்காலம் கழிந்து, கோடை காலம் கடந்து பனிக் காலம் வருகிறது. விற்பனைக்கு நிறைய மயிர்த்தோல் ஆடைகள் வேண்டுமே என்று நிறுவனர் சொல்ல உற்பத்தியைப் பெருக்கும் வேலைகளில் கோன் இச்சி ஈடுபடுகிறான்.ஆடைகள் சேமித்து வைத்திருக்கும் பண்டகசாலைக்குச் செல்கிறான்...அங்கு அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

       அவன் தோழமைகள்...சக மிருக நண்பர்கள்...அவைகளின் பதப்படுத்தப் படுவதற்காக தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட தோல்கள்....அணில், முயல், கரடி, மரநாய், கீரி, வளைக்கரடி என்று எண்ண மிருகங்களின் கொத்துக் கொத்தான  தோல்கள் தலைகீழாக....மனம் கொதிக்கிறது. தேம்புகிறது. அழுகிறான் கோன் இச்சி. என் இனத்தையே அழிக்கும் இந்த உத்தியோகத்திலா நான் இருக்கிறேன். இதிலா இருந்து இத்தனை நாள் என் பசியைப் போக்கினேன்...இதென்ன பரிதாகம்?கடவுளே...! உனக்கு இரக்கமேயில்லையா...? இவற்றைக் கொள்ளை கொள்ளையாய் விற்றா இந்த நிறுவனர் லாபம் சம்பாதித்துக் கொழிக்கிறார்?  என்று குமுறுகிறது.

       அதே சமயம் இன்னொரு மனசு நான் மனிதன், இப்போது மிருகமில்லை...இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை...இப்படியாய் நினைத்துப் பார்ப்பதும் நியாயமில்லை என்று கூறுகிறது.

       மறுநாள் காலை ஒரு பெரிய வேட்டைக்காரக் கூட்டம் மலை நோக்கிச்  செல்கிறது. கூடச் செல்கிறான் கோன் இச்சி. துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சத்தத்திலிருந்து ஒதுங்கி விடு என்று நரியாய் இருந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது.

       நான் இப்போது மனிதன். ஒரு நிறுவனத்தின் பணியாளன். என்னை மதித்து அனுப்பியுள்ள நிறுவனருக்கு நான் செய்ய வேண்டிய கடமை இது என்று சொல்லிக் கொள்கிறர். பதுங்கும் நரிக்கூட்டங்களை, முயல் கூட்டங்களை, இன்ன பிற மிருகங்களை நோக்கி துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. ஒருநிலையில் தன்னை மறைத்துக் கொண்டு சரியான நேரத்துக்குக் காத்திருந்து, குறி பார்த்துப் பாயும் அந்த வெள்ளை உருவத்தை நோக்கித் தன் துப்பாக்கிக் குண்டை குறிப்பாகச் செலுத்துகிறது கோன் இச்சி.

       அலறி விழுகிறது அந்த வெள்ளை நரி.   ஆஉறா....இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு மிருகத்தை நம் நிறுவனம் கண்டதேயில்லை. என்ன அபாரமான திறமை உனக்கு. உன்னுடைய தொழில் பக்தி, கடமையுணர்ச்சி கண்டு நான் பெருமைப்படுகிறேன்...என்று நிறுவனர் அகமகிழ்ந்து பாராட்ட, அந்த வெள்ளித்தோல் நரி கோன்இச்சி சுட்டு வீழ்த்திய அவன் தாய் என்பதை அறியும்போது மனம் பதைத்துப் போகிறது நமக்கு.

       ஐயோ...என்ன பாவம் செய்துவிட்டேன்...எனக்கு இந்த வேலை வேண்டாம். வசதி வாய்ப்புக்கள் வேண்டாம், வருமானம் வேண்டாம்...எனக்கு என் அம்மாதான் வேண்டும்...அம்மாதான் வேண்டும் என்று கதறுகிறான் கோன் இச்சி.  மலையை நோக்கி ஓடுகிறான். யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று மறைந்து விடுகிறான். கோன்...கோன்...கோன்...என்ற ஒலி மட்டும் ஏங்கும் குரலாக அந்த மலைப்பிரசேத்தில் விடாது இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

       மனிதனாக மாறிவிட்ட ஒரு மிருகம் எப்படி இயந்திரத்தனமாக இயங்கி, தன் சுற்றங்களை அழிக்கிறது, இழக்கிறது என்கிற வேதனையாக உண்மையை இந்தச் சிறுகதையில் உணர்கிறோம் நாம். தாயை விட்டுப் பிரிந்து சென்று மனிதனாக மாறி நகர்ப்புறத்துள் புகுந்து, தன் சுற்றத்தையும், தாயையும் மறந்து, கடைசியில் தன் இனத்தின் அழிவையே தன் பணியில் காணுவதும், தானே அதற்குக் காரணமாய் அமைந்து விடுவதும், பெற்றெடுத்த தாயையே இழந்து நிற்பதும், இன்றைய ஐ.டி.. நிறுவனக் கலாச்சாரங்களோடும், வெளிநாட்டு மோகங்களோடும் பொருத்திப் பாருங்கள். கோன் இச்சி வீடுமலை என்ற தலைப்பிலான இந்தக் கதையின் உள்ளார்ந்த நோக்கமும், நியாயமும் நமக்குப் புரிபடும்.

       மனித இனம் தன்னுடைய வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் அசுரத்தனமாக இயற்கை வளங்களைச் சுரண்டுகின்றன என்பதை விளக்கும் சிறப்பான படைப்பாக ஆச்சரியம் என்னும் கிரகம் கதை விளங்குகிறது. தொகுதியின் ஐந்து கதைகளும் அன்பு கலவாத பேராசை மனித ஆத்மாவையே கொன்று விடும் என்கிற தத்துவத்தை உள்ளடக்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

       இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் இயற்கை வளங்களை எப்படியெல்லாம் சீரழித்து, வறட்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும், மனிதர்களின் பேராசைகள் எல்கையற்று விரிந்து பரந்து பற்பலவிதமாக அழிவுகளுக்கு எந்தெந்த வகையில் காரணமாய் அமைந்து விடுகிறது என்பதையும், பிற உயிரினங்களை அழித்து தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மனிதர்களின் முனைப்பும், இரக்கமற்ற தன்மையும், சுயநலத்தையும், பேராசையையும் முடிவற்ற நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருப்பதை குழந்தைகள் மட்டுமல்லாது வயது முதிர்ந்தோராகிய நம்மின் உணர்தலுக்கும் முக்கிய காரணமாய் நின்று இளைய தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி நம்மை பயப்படுத்தி விரக்தி கொள்ள வைக்கிறது.

       திரு வெங்கட்சாமிநாதன் அவர்களின் தமிழாக்கம் படிப்பதற்கு நெருடலின்றி, குழந்தைகளுக்குப் புரிவதுபோல் எளிய மொழியில் சரளமாகச் சொல்லப்பட்டிருப்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும். சாகித்ய அகாடமியின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இந்த ஆச்சரியம் என்னும் கிரஉறம் விளங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

30 ஆகஸ்ட் 2024

 

சிறுகதை     '“என் மக்கள்”                      உஷாதீபன்                 பிரசுரம் செம்மலர் செப்.2024 இதழ்       






           

       வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது...இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார் மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான். ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும். அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.

      எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார்...சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து  எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.

      ஈஸ்வரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா...என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.

      அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது  மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?

      இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.

      குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும்....சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்...! நியாயம் தலை தூக்கி நிற்கும்.

      நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும்...தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும்...அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி...எம்புட்டு வேல கெடக்கு... நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக...ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா...? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?

      அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும்...நமக்கென்ன...! எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால்...அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி...அமர்க்களமாகிப் போனது.

      அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது...நமக்குன்னு அமையுதே...என்று ஒரே வேதனை அவருக்கு.

      சாமீ....என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே...கேன் வாணாமா...? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி...!

      ஈஸ்வரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா...என்னா ரொம்ப நாளாக் காணலை...என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா...வாங்க...தோட்டத்துக் காயி...காலைல பறிச்சதாக்கும்...வாங்கிட்டுப் போங்க.....என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி...மன நிறைவு...! 

வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன்சார்…தண்ணி கொடுங்க…என்று உரிமையோடு வாங்கிக் குடிக்கும் நெருக்கம் ....வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி...அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய்...உப்பு...உப்போய்....என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன்...தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா...இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார்...என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப்  பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி...வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி...இன்னும் எத்தனையெத்தனை பேர்...யாரை நினைப்பது...யாரை மறப்பது?   என்னவோ ஒரு ஒட்டுதல்...எதனாலோ ஒரு பிடிப்பு...இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே...! பிரியத்தோடு முகம் பார்த்தலும்,பரஸ்பர  நலம் விசாரிப்புகளும்

      ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்...! யார் யாரை நினைச்சு உருகப் போறாங்க...? எல்லாம் வெறும் வேஷம்மாயை...! அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.

      பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே...! அது ஒன்று போதாதா?  பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே...! ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான்  ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?

      இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.

      மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங்...கீங்...கீங்....என்று காது கிழிய ஏர் உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி,  ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி.....அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.

       பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன். வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி....மாற்றி மாற்றி....கல்யாணம், காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம்....என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க....போகாமல் முடியவில்லையே? மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே பென்ஷன் காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே...! என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம் இது?...! நல்ல கதையப்பா...நல்ல கதை...! வெறுத்தே போனார் ஈஸ்வரன்.....

      சொர்க்கமே என்றாலும்.....அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?

      ஆள விடு..சாமி...! என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா....என்று பையன் சொல்ல....என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு.....அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும்...என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார். மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன...என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார்....என்று நினைத்துக் கொண்டார். வயசாக வயசாகக் கணவன் மனைவிக்குள் பிரியமும், பாசமும் அதிகரிக்கும் என்று பெயர். இங்கே என்னடாவென்றால் இவர் எப்படா தனியே ஓடுவோம் என்று காத்திருந்தார். பையனிடம் அவ்வளவு ஒட்டுதல்! பார்ப்போம் அந்த நாடகத்தையும்!!

       நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட....அவ்வளவுதான்...!. நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர் பிராணன் போனால்தான் நிம்மதி.

      இதோ....அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும்.  அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை...! அவர்களின் அந்த வெள்ளை மனசு...அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை....கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள்....அவைதான் எத்தனை ரசனைக்குரியவை...எவ்வளவு மதிப்பிற்குரியவை...!!

      அடடே...வாங்க சாமீ....என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை.....- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு...வந்தாச்சு...இங்கயே வந்தாச்சாக்கும்...!”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன்.

கொண்டாங்க கேனை...முதல்ல நிரப்பிடுவோம்...என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.

      மகளே....! என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார்.

      கொஞ்ச நேரம் உங்களோட உட்கார்ந்து பேசிட்டு, அப்புறம் பிடிச்சிட்டுப் போறேனே!. நீங்கல்லாம் பிடிங்க….என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவே போய் சம்மணம் போட்டு  அமர்ந்தார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியது.

                                    ----------------------------

 

05 ஆகஸ்ட் 2024

 

சிறுகதை      “தவிப்பு”            உயிர் எழுத்து மாத இதழ் - ஆகஸ்ட் 2024  பிரசுரம்   



            



             

            சூடத்தட்டைக் காண்பித்து, ஒவ்வொருவராக விபூதி கொடுத்துக் கொண்டு வருகையில், அது சாந்தியின் கைதான் என்று பளிச்சென்று தெரிந்தது தட்சிணாமூர்த்திக்கு. மனசு அடையாளப்படுத்திவிட்டது…! நிமிரப் போன தலையை ஒரு கணத்தில் நிலை நிறுத்திக்கொண்டு, உள்ளங்கையில்  விபூதியைப் பொட்டாய் உதிர்த்தார்.

            மீதி விபூதியை  கிண்ணத்துல போடுங்கோ… தூண்ல தூவிட்டுப் போயிடாதீங்கோ…சுத்தம் பண்ணி முடியலை. பொதுவாகச்-சொல்லியவாறே அடுத்தாற்போல் குங்குமத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  முன்பெல்லாம் விபூதி, குங்குமம், சூடத்தட்டு என்று ஒரே சமயத்தில் எடுத்து வருவார். சமீபமாகக் கை நழுவுகிறது. மூன்றையும் தாங்கலாய்ப் பிடிப்பதில் கவனம் விட்டுப் போகிறது. மனசு ஒரு நிலையில் இல்லையானால் அப்படித்தான்..! என்ன செய்வார் பாவம்!

            எப்போதிருந்து இப்படியானது என நினைத்துப் பார்த்துக் கொண்டபோது,  அந்த நிகழ்விற்குப் பிறகுதான் என்று தலையாட்டிக் கொண்டார். தான் பலவீனம் ஆனதே அதற்குப் பிறகுதானே? கண்களில் நீர் துளிர்த்தது. இந்தக் கண்ணீருக்குத்தான் விலையில்லாமல் போனதே…! என்று  மனசு சொல்லியது. ஏலாதவன் கண்ணீர் சொந்தங்களிடமே செல்லுபடியாவதில்லை…! சொந்தமென்ன, பெற்ற மகளிடமே விலையில்லாமல் போனதே? யார் சிரித்தால் என்ன? யார் அழுதால் என்ன?

குங்குமத்தை வரிசையாகக் கொடுத்து வந்தபோது தன் பெண் சாந்தியின் கை காத்திருக்கிறதா என்பதை மனசு மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டே வந்தது. அவளுக்காகவே, சுற்றியிருக்கும் கூட்டத்தை தான் நிமிர்ந்து பார்க்காததும், அதே சமயம் குங்குமம் வாங்காமல் போய் விட்டாளோ என்கிற ஆதங்கமும், ஒவ்வொருவராய்க் கடந்து வந்தபோது, அந்தக் கைக்கு சற்று அதிகப் பிடியாகத் தன்னையறியாமல் குங்குமம் விழுந்ததை அவரால் தடுக்க முடியவில்லை.

பெட்டில பேப்பர் அடுக்கியிருக்கு…காலண்டர் தாள் கிடக்கு…தேவைப்பட்டவா பிரசாதத்தைப் பொதிஞ்சிக்கலாம்…என்றும் பொதுத் தகவலாக அறிவித்தார்.

            குருக்களய்யா…சாமிக்கு வச்ச பூ கொஞ்சம் எடுத்துக் கொடுங்க…-என்று ஒருவர் அக்கறையோடு கேட்க…இதோ வந்துட்டேன் என்று மீண்டும் சந்நிதிக்குள்ளே போனார். கேட்டவருக்கு என்று மட்டுமல்லாமல் இன்னும் கொஞ்சம் பூவை அள்ளி வந்தார். அப்போதும் சாந்தியின் கை நீண்ட போது மீதமிருந்த உதிரிப் பூக்களை அப்படியே அவள் கையில் திணித்தார். பார்வை மட்டும் மேலே விழவேயில்லை. நழுவிப்போன பார்வைதானே? அல்ல அல்ல… நழுவ விட்ட பார்வை…!

            அந்த முகத்தை எதிர்நோக்க மனமில்லை. தவித்துப் போய்விடுவார். அவரால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. பதறி நடுங்கி, கோயில் என்றும் பாராமல் தன்னை மறந்து ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு விட்டாரானால்? ஒரு மாதிரி ரசாபாசம் ஆகிப்போகுமே? பலரும் பலவிதமாய் நினைக்க நேரிடுமே?

            அந்த முகம்தான் எவ்வளவு மாறிவிட்டது அவளுக்கு? வேறொரு இனக்கலப்பில் உடற்கூறுகளில் கூட இப்படியா மாற்றம் ஏற்படும்? அந்தச் சிரிப்பும், அவளது பார்வையும் கூட சற்று வெளிறித்தான் இருக்கிறது. கண்களின் அந்த ஒளி எங்கே போய் மறைந்தது?  அதை இப்போது மீண்டும்  வலிய நோக்கி வயிரெறிய வேண்டாம்…இதுவும் ஒரு காரணம்தான் அவருக்கு. எதை எதையோ எண்ணி மறுகுகிறார் மனதுக்குள். ஆறமாட்டேனென்கிறது. பெரிய பெரிய தத்துவங்களும், ஆன்ம விசாரங்களும் படித்தறிந்தவர் அல்ல அவர். சாதாரண கோயில் குருக்கள். ஆண்டவனுக்கு ஆழ்ந்த மனதோடு மந்திரங்களை ஸ்தோத்திரம் செய்து வணங்க வருபவர்களின் மனம் குளிரக் குளிர அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற மனதார ஆசீர்வதித்து அனுப்பும் ஒரு எளிய மனிதர். எல்லார் வேண்டுதல்களும் நிறைவேற ஆத்மார்த்தமாய் வேண்டிக் கொண்டு நின்ற அந்த இறையன்பனின் சொந்த வேண்டுதல் நிறைவேறிற்றா? இல்லையே? வேண்டுதல் என்று தனியே ஏது? இறைத்தொண்டே அதுதானே? ஆத்மார்த்தமான எதற்கும் தனித்த அடையாளம் இட்டுத்தான் நோக்க வேண்டுமா?

            அர்ச்சனைக்குக் கொடுத்தவா யாரு…தட்டு வாங்கிக்குங்கோ… என்று சம்பந்தப்பட்டவர்களிடம் நீட்டியபோது, சாந்தி இருக்கிறதா,  போய்விட்டதா என்று அவர் கண்கள் தேடின. அவர்கள் கொடுத்த தேங்காய் ஒரு மூடி, பழம், தட்சிணை எதுவும் அவர் கருத்தில் ஏறவில்லை. பெரும்பாலும் தட்சிணையை மட்டும்தான் எடுத்துக் கொள்வார். இதையும் எடுத்துக்குங்க சாமி…அப்பத்தான் எங்களுக்கு மனசு நிறையும்!…அவர்கள் இவருக்குக் கொடுக்கும் மதிப்பு மரியாதையைக் கூட இவள் எனக்குக் கொடுக்காமல் போய்விட்டாளே…!

சமீபமாய் தினமும் தவறாமல் கோயிலுக்கு வருகிறாள். இதற்கு முன் அப்படி இல்லை…அதாவது திருமணத்திற்கு முன்…அதென்ன முறைப்படி செய்து வைத்த திருமணமா? அவர்களாகப் போய் பண்ணிக் கொண்டதுதானே? அதுநாள்வரை பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து, பாங்காய் வளர்த்து விட்டவர்களுக்கு அந்தப் பாழாய்ப் போகாத பவித்ரமான கல்யாணம் என்ற ஒன்றை முறைப்படி  செய்து வைக்க புத்தி இல்லாமல் போகுமா என்ன? பெற்றவர்களுக்குத் தெரியாதா எப்படிக் கரையேற்றுவது என்று?  அதனால்தான் பாழாய்ப் போன கல்யாணமாய் அவர்களாகவே தேடிக்கொண்டு வந்து நின்று “இவன்தான் என் புருஷன்” என்கிறார்கள். இதைத் தடித்தனம் என்று சொல்லாமல் வேறு எந்தப் பு(மு)து மொழி சொல்லி அழைப்பது? என் பெண்ணின் செயலைக் கண்டிப்பதற்கு எனக்கு உரிமையில்லையா? வக்கற்றா போய் நிற்கிறேன்? வக்கற்றுத்தான் போனது. அதுதான் உண்மை…! சொன்னது மீறினால் அதுதானே பொருள்?

.அப்பொழுதெல்லாம் இல்லாத தெய்வ நம்பிக்கை இப்போது கிட்டியிருக்கிறது. இது தெய்வ நம்பிக்கையா அல்லது தன்னைப் பார்ப்பதற்கா? என்றாவது அப்பாவின் மனசு இரங்காதா என்று எதிர்பார்க்கிறாளோ? தெய்வம் கருணை செய்யுமா?  தெய்வம் அவர்கள் இஷ்டப்படி கல்யாணத்திற்குக் கருணை செய்து விட்டதே? இது கூடாது. உன் அப்பாம்மா உனக்குப் பாந்தமாய், பொருத்தமாய் பார்த்து வைப்பார்கள். அதுவரை பொறு…என்று கையைப் பிடித்து நிறுத்தவில்லையே? உணர்வு ரீதியில் உஷார்படுத்தவில்லையே? நாலு காலமும் பூஜை செய்து வழிபடுபவன் ஒருவன். பலன் அவன் வாரிசுக்கா? பலனா அல்லது முரணா?

கோவிலுக்கு வழக்கமாய் வரும் சிலருக்கும் இது தெரியும்தான். அவளையும்தானே தெரியும்.  எவராவது அவளிடம் ஒரு வார்த்தை பேசுகிறார்களா? பார்த்ததும் தள்ளியில்லையோ விலகிச் செல்கிறார்கள்? அன்று பார்த்த அதே சாந்திதானே? அதே தட்சிணாமூர்த்தியின் சீமந்த புத்திரிதானே? இன்று மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போனால் அவள் மனசு நோகாதா? நோகட்டும் என்றுதானே பாராதது மாதிரி பாய்ந்து விலகுகிறார்கள். ஒருவேளை எனக்கு ஆதரவாய் நிற்பதாகக் காட்டிக் கொள்கிறார்களோ? பெத்தவா பேச்சுக் கேட்காத குடிகேடி…! அந்த வார்த்தையைச் சொல்லக் கூட மனசு கூசுகிறதுதான்….

பொண்ணு நன்னாயிருக்காளா…கல்யாணத்துக்குப் பார்த்துண்டிருக்கேளா? என்று ஒருத்தராவது கிரமமாய்க் கேட்பார்களே…எதுவுமில்லையே?. எல்லாம் நின்று போயிற்று.  காலத்தின் கோலம். நாம இருக்கிறபடி இருந்தால் எல்லாமும் நம் கூடவே இருக்கும். கோணிக் கொண்டால் மற்றவையும் கோணத்தானே செய்யும். கோணல் மாணலாய் இருப்பதெல்லாம் நமக்குப் பொருந்திவருமா என்கிற புத்தி முன்னாலேயே இருக்க வேண்டும். அப்பத்தான் பொருந்தாதவை நம்மை அண்டாது. அதை யோசிக்க விடாமல் உடம்பு தினவெடுக்கிறதோ? அது முந்திக் கொள்கிறதோ? முந்திக் கொண்டதனால்தானே இப்படி நடந்தேறியிருக்கிறது.

எவரும்  எதுவும் கேட்பதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுதானே மனித இயல்பு. சொல்லப்போனால் தன் மகள் சாந்தியிடம் பேருக்குக்கூட அவர்கள் பேசுவதில்லை.ரெண்டே ரெண்டு  வார்த்தை…சௌக்கியமா இருக்கியா? கேட்கலாமே…! யாருக்கும் வாய் வருவதில்லை. தானே கேட்கவில்லை. மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரி? அதன் மூலம் அவள் நலத்தை அறிந்து கொள்ளும் ஆவலா? அதுதான் வேண்டாம் என்று விலக்கி வைத்தாயிற்றே? பிறகெதற்கு மனம் தவதாயப்பட வேண்டும்? ஒரே தெருவில் இருந்து கொண்டு, தினசரி கண்ணுக்கு முன்னால் வந்து ஆட்டம் போட்டால் எப்படி? இந்த சாமர்த்தியம் வேற்று ஜாதிக்காரன் காதல் என்று வந்து நின்ற போது எப்படிக் காணாமல் போனது? அப்போது அறிவு வேலை செய்யவில்லையா? எதைச் சொல்லி மயக்கினான் அவன்? எதில் சுருண்டு விழுந்தாள் இவள்? அப்படியானால் என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லை என்றுதானே பொருள்? எங்கே நிகழ்ந்தது தவறு? முன் ஜென்ம வினையோ? பெற்றோர் செய்த பிழைகள் யாவும் பிள்ளைகள் தலையில்…! அப்படி என்ன தவறு செய்தேன் நான்? விவரம் தெரிந்த நாள் முதல் இறைவனிடம்தானே தண்டனிட்டிருக்கிறேன்? தன்னைக் கொடுத்த என்னை அவன் காக்கவில்லையே?

அன்றாட வாழ்க்கையின் முறையான நியமங்களை இளம் பிராயம் முதல் கற்றுக் கொடுத்து வளர்த்ததுதானே? பிறகு ஏன் தவறுகிறது? பருவம் வந்ததும் அதுதான் தன்னை முன்னிறுத்துமா? மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி சுருட்டி அமிழ்த்தி விடுமா? சுய சிந்தனை…சுதந்திர சிந்தனை…தலைமுறை இடைவெளி..! கலாச்சாரச் சீரழிவு…

இருக்குமிடத்தில், அவளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட நந்தவனத்தில் மனசும், உடம்பும் நலமாக வளைய வருகிறாளா? என்று அறிந்து கொள்வதில் அப்படியென்ன ஆர்வம்? அதுதான் பெற்ற பாசமா? என்னதான் விரட்டி விட்டாலும் மனசு கேட்கமாட்டேனென்கிறதே? ஐயோ…அநியாயமா இப்படி எங்கேயோ போய் வலிய தன்னைச் சேர்த்துண்டு அவஸ்தைப் படுறாளே? பாவி…பாழாய்ப்போனவன்.. அவ மனசைக் கெடுத்து, எங்களை விட்டுப் பிரிச்சிட்டானே? கண்ணுக்கு முன்னாடி லபக்குன்னு கொத்திண்டு பறந்துட்டானே? நினைக்க நினைக்க அவர் மனசு ஆறமாட்டேனென்கிறது.

அவனின் பெற்றோர்களிடமும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாரே…! பையன் விருப்பம் எதுவோ அதுதான் எங்கள் விருப்பமும்….! இப்படியா சொல்வார்கள்? பையன் தப்பு செய்தாலும் அது அவனின் விருப்பமாயிருந்தால், அதுவே இவர்களின் விருப்பமும் ஆகுமா?

அவுங்கவுங்க அவுங்களோட பிள்ளைகளை எவ்வளவு கனவுகளோடயும் லட்சியங்களோடயும் வளர்த்திருப்பாங்க…அத்தனையையும் பாழாக்கிட்டு இப்படி இழுத்திட்டு வர்றது தப்புப்பா…அவுங்க வயிற்றெரிச்சல் நமக்கு ஆகாது. நம்ப பரம்பரையை அது பாதிக்கும்.  உன் வாரிசுகளைப் பாதிக்கும். அவங்க கண்ணீர்விட்டு வயிறெரிஞ்சாங்கன்னா, அது நம்மளை நிம்மதியா வாழவிடாது. நாம மன அமைதியோட அன்றாடம் சோறு திங்க முடியாது. எந்தச் சலனமுமில்லாம நிம்மதியாத் தூங்க முடியாது. உன் பேர்ல எங்களுக்கிருக்கிற  அக்கறை மாதிரிதானே அவர் பெத்த பொண்ணுபேர்லயும் அவருக்கு அக்கறையும், கரிசனமும், பாசமும் இருக்கும். அதை நாம கெடுக்கக் கூடாது. …பாவம் அவுரு… ஏதோ கோவில்ல பூஜை பண்ணிக்கிட்டு வர்ற சொற்ப வருமானத்துல ஜீவனம் பண்ணிட்டு வர்றாரு….அவர் இத்தனை வருஷம் பண்ணின கிரமமான பூஜைக்குப் பலன் இல்லாமப் போயிடும்னு நினைக்கிறியா? அந்தப் பாவம் நமக்கு வேணாம்ப்பா…!விட்டிடு…அந்த அம்பாளோட கோபப் பார்வை நம்மேல விழுந்ததுன்னா நம்ப குடும்பம் அழிஞ்சி போயிடும். தலைமுறை விளங்காது. .உனக்கு நாங்க செல்வாக்கான இடத்துல வசதியா வாழ்ற மாதிரி பார்த்து முடிச்சு வைக்கிறோம்…சொன்னாக் கேளு…எங்க பேச்சைத் தட்டாதே…!

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், எதுவும் காதில் ஏறினமாதிரித் தெரியவில்லையே? அதற்குப் பிறகுதானே இந்த வார்த்தை…எங்க பையன் விருப்பம் என்னவோ அதுதான் எங்க விருப்பமும்…..முதலில் பாபமாகத் தோன்றியது பிறகு எங்ஙனம் விருப்பமாக மாறியது? தானாவது கதியற்றுப் போய் நின்று…தொலைஞ்சு போ…என் கண் முன்னால நிக்காதே…என்று விரட்டினோம்…தடுத்து நிறுத்தும் சகல சௌகரியங்களும், பலமும் பட்டாளமும் இருந்த அவர்களுமா இப்படி உதறுவார்கள்? மகராசியா இருக்கட்டும்…நம்ம குலம் தழைக்கட்டும்…என்று யாரேனும் அறிவுறுத்தியிருப்பார்களோ? நானாக ஏன் இப்படி நினைத்துக் கொள்ள வேண்டும்? பெருமையாய் நினைத்துக் கொள்ளும் அல்ப சந்தோஷமா? அப்படியானால் போய் நின்று கைகோர்த்து, குதூகலிக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்?

அவர்கள் உதறவில்லை. சேர்த்தல்லவா வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்? தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களாமே! உண்மையா? பிறகு ஏன் தனிக் குடித்தனம் வந்தார்கள்? பையன் விருப்பத்துக்கு மாறாக ஒரு துரும்பை நகர்த்த மாட்டார்களோ?

ஏய்…அது அய்யர் வீட்டுப் பொண்ணு…உன் முரட்டுத்தனத்தை அதுகிட்டக் காட்டாதே…வாடிப் போயிடும்…பூத்தாப்போல வச்சிக்கிடணும்…! நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமிடா அது…! இந்தப் பரம்பரையை இனி வாழ வைக்கப்போற சாமிடா …!  உன் தலைமுறையையும், உனக்குப் பிறகு வர்ற தலைமுறையையும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நின்னுதான் பெயர் சொல்லப் போறீங்க….நாங்கள்லாம் காணாமப் போயிடுவோம். ஆகையினால காலம் நம்ம குடும்பத்த நிமிர்ந்து பார்க்கிற மாதிரி வாழ்ந்திட்டுப் போகணும்…

               ன்று இந்த வீட்டு வாசப்படி இனி நீ மிதிக்கப்படாது என்று அவளைப் பார்த்துக் கூறினாரோ அதற்கு மறுநாளிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நான் இல்லாதபோது அவள் இந்தாத்துக்கு வர்றது, போறதுங்கிற பழக்கமெல்லாம் இருக்கக் கூடாதுஉங்க எல்லாருக்கும் சொல்லிப்புட்டேன்அப்டியே அவள் வந்தாலும் வாசப்படி மிதிக்காதேன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுங்கோ…! எனக்குத் தெரியாம வீட்டுக்குள்ள விட்டேள்னு தெரிஞ்சிது அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் வேணுமா இல்ல அவ வேணுமான்னு முடிவு பண்ணிக்குங்கோ..அம்மா…உனக்கும் சேர்த்துதான் சொல்றேன். நான்தான் பொண்ணோட பாட்டின்னு இளிச்சிண்டு உன் பேத்தி வீட்டு வாசல்ல போய் மானங்கெட்டு நிக்காதே…! அங்கே நீ என் மானத்தை வாங்குறே…அத மனசில வச்சிக்கோ. என் சொல்லை மீறினேள் அப்புறம் இந்த தட்சிணாமூர்த்தி உங்களுக்கில்லை…ஞாபகமிருக்கட்டும்…. என்று வீட்டில் உள்ளவர்களுக்குக் கண்டிப்பான  உத்தரவு போட்டிருந்தார். உத்தரவென்ன…பயப்படுத்தி வைத்திருந்தார்.

இதே தெருவுலதான் அவ இருக்காங்கிறதுக்காக அடிக்கடி வரப்பார்ப்பா…போகும்போதும், வரும்போதும் உள்ளே நுழையைப் பார்ப்பா…வாசல்லேர்ந்து குரல் கொடுப்பா…! ஈஈஈன்னு இளிச்சிண்டு போய் நிக்காதீங்கோ…வாசக் கதவை எப்பயும் பூட்டியே வைங்கோ….திறந்த வீட்டுல எதுவோ நுழைஞ்ச மாதிரி நுழைஞ்சிடப் போறா…அப்புறம் அடிச்சித்தான் விரட்டணும்….இனி நான் உசிரோட இருக்கிறவரைக்கும் உறவு  ஆகாது. அறுந்தது அறுந்ததுதான். தெரிஞ்சிதா? அவளை யாரும் கண்கொண்டு பார்க்கப்பிடாது….!”

ஜாதி பிரஷ்டம் பண்ணினமாதிரிப் பேசினார். மனசு ஆறவே மாட்டேனென்கிறது. தளதளவென்று கொதித்துக்கொண்டேயிருக்கிறது. கோயில் பூஜையில் கூட மனம் லயிக்கவில்லை. வாய் யந்திரத்தனமாய் மந்திரங்களை உச்சரித்தது. அர்ச்சனைக்குக் கொடுத்தவர்களின் பெயர், நட்சத்திரம், கோத்திரம் எல்லாம் சரியாய்த்தான் சொல்கிறோமா…சொல்கிறோமா அல்லது சொல்லாமல் தாவுகிறோமா? அட…ராமச்சந்திரா…இன்னும் இந்தப் பாவம் வேறு வேண்டுமா? ஸ்வாமி சந்நிதியின் முன் இந்தத் தடுமாற்றம் ஆகுமா? கர்ப்பக்கிரஉறத்தின் இருட்டில் தேடுகிறேனா என் காணாமல் போன ஆச்சாரங்களை? என் நியமங்களிலிருந்து தவறுகிறேனா? என் தடுமாற்றம் இன்னும் நிலைக்கு வரவில்லையா?

ஈஸ்வரா…இப்படியொரு சோதனையை ஏன் கொடுத்தாய் இந்த வயதில்? உனக்கான சேவையை ஆண்டாண்டு காலமாய்ப் போற்றிவரும் எனக்கு இதுதானா பலன்? நீ வழங்கிய பரிசு இந்த தண்டனைதானா…? உன் பாத சேவையே என் மூச்சு என்று இருந்த எனக்கு இப்படியொரு பாதகமா நிகழ வேண்டும்?

னசு நிலை கொள்ளாமல் வீட்டை நோக்கிச் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்திக்கு தலை சுற்றுவது போலிருந்தது.அன்று காலையிலிருந்தே அவர் நிலைமை சரியில்லைதான்…ஒரே மனக் குழப்பம். அநியாயத் தன்னிரக்கம். பூஜை புனஸ்காரம் எக்காரணம் கொண்டும் நின்று விடக் கூடாதே என்கிற ஆதங்கம். தன்னை விட்டால் அம்பாளையும், அய்யனையும் போற்றித் துதித்து வழிபாடு செய்ய உதவிக்கு இன்னொரு ஆள் இல்லையே? சேவை பிறழாது நான்தானே பயணிக்கிறேன்.

  தடுமாறிக் கீழே விழப்போன அவரை அருகே  இரண்டு பை நிறையச் சுமையோடு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் தாங்கிப் பிடித்தார். அவரை ஓரமாக அமர வைத்து  பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர் முகத்தில் சிறிது தெளித்து, சற்றுத் தெளிய வைத்து,  குடிங்க என்றவாறே நீட்டினார்.

காலையிலிருந்து ஒன்றுமே வயிற்றுக்குச் செலுத்தாத அயர்ச்சியில் அந்த நீர் அவருக்குப் பெருத்த ஆசுவாசத்தைத் தந்தது. போன உயிரை மீட்டது போலிருந்தது. செவிக்கு உணவு இல்லாத  போழ்துதானே சிறிது வயிற்றுக்கு….அது அவரது மாறாத நியமமாயிருந்தது. ஈசன் நாமம்  விடாது மனதில் ஒலித்துக் கொண்டிருக்க, தன்னைத் தடுத்தாட்கொண்டவரைத் தலை குனிந்து கண் கலங்கலோடு  கையெடுத்துக் கும்பிட்டார்.

போயிடுவீங்களா..இல்லை கூட வரட்டா…? என்றார் அவர்.

வேண்டாம்…இந்தோதானே வீடு..நானே போய்க்கிறேன்…வழக்கமான தூரம்தானே…! என்று மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்தார் தட்சிணாமூர்த்தி.கைகளை நெற்றிக்கு மேல் தடுத்து நீள நோக்கினார். வீடு அதே இடத்தில்தான் இருந்தது. இன்னும் இவ்வளவு தூரமிருக்கா? என்று அவர் மனசு சொல்லியது.

ங்கப்பா ரோட்டுலே தலை சுற்றிக் கீழே விழப் போனார்…தெரியுமோ?-

ஐயய்யோ…அப்புறம்? – சாந்தி பதறினாள்.

.நான்தான் தாங்கிப் பிடிச்சி ஓரமா உட்கார்த்தி, தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தி அனுப்பிச்சு வச்சேன்…கூட வரட்டான்னு கேட்டேன்…நானே போய்க்கிறேன்னுட்டார். இன்னிக்கு நண்பகல் நிகழ்வு இது…- சொல்லிக்கொண்டே மனோகரன் சாந்தியைப் பார்த்துச் சிரித்தபோது…..

அடப்பாவமே…வெய்யில் தாங்கலை……தீயான்னா எரியறது? …அதான்…அவர் உங்களைத் தெரிஞ்சிண்டாரோ….? என்று தொடர்ந்து ஆவலுடன் கேட்டாள் அவள்.

ஒழுங்கா வீடு போய்ச் சேர்ந்தாரான்னு கேட்க மாட்டியா? அந்தக் கேள்வியைக் காணோம்….?

அதெல்லாம் போயிடுவார்…பக்கத்துலதானே…தெருவுக்குள்ளே நுழைஞ்சிட்டார்னா அங்கங்கே உட்கார்ந்துக்குவார். .அது கிடக்கட்டும்…நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…உங்களை அடையாளம் கண்டுண்டாரா இல்லையா…?

என்ன இப்படிக் கேட்கிறே?  என் முகத்தை என்னைக்கு முழுசா நிமிர்ந்து   பார்த்திருக்கார் அவர்…அடையாளம் தெரிஞ்சிக்கிறதுக்கு…? இன்னைவரைக்கும் அவரை ஒரு முறை கூட நேரடியா,  நேருக்கு நேர் நின்னு கண்ணுக்குக் கண் அவரை நான் சந்திச்சதில்லையே…அப்புறம் எப்டி…?  என்றான் மனோகரன்.

பதிலுக்கு ஒரு ஆழமான விரக்தியான புன்னகைதான் மலர்ந்தது சாந்தியிடம். அந்தப் புன்னகை எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கியது? அவள் மனசாட்சி உறுத்திற்று.

 

                                                            --------------------------

                                                                                                                                                                                                                        உஷாதீபன்  (ushaadeepan@gmail.com)                                                                   எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                                 மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                                    ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                                                    --மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

01 ஆகஸ்ட் 2024

 

+சிறுகதை            தாய் வீடு இணைய இதழ் ஆகஸ்ட் 2024 பிரசுரம் 

“ஆள்மன அவசம்  





நான் தனியாய்க் கிடந்துதான் இறந்தேன். வீட்டுக் கதவை உடைத்துத்தான் என்னை எடுத்தார்கள். அப்படித்தான் நடக்கும் என்று முன்பே நான் கணித்திருந்தேன். அது இத்தனை சீக்கிரம் நிகழுமென்றுதான் நினைக்கவில்லை. அந்த சிரமத்தை எதிர் வீட்டு நண்பரான நாதனுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால் அதுதான் நடந்தது.

            அதனாலேயே நான் ஊரிலிருந்து வந்தால்…எப்பக் கிளம்பப் போறீங்க…? என்று அவர் கேட்டுக்கொண்டேயிருப்பார். எத்தனை நாள் ஸ்டே? என்று முதலிலேயே கேட்டு விடுவார். வந்தமா…சட்டுச் சட்டுன்னு லோகல் வேலைகளை முடிச்சமா…கிளம்பினமான்னு இருக்கணும்…அங்க போய் பேரனோடு கொஞ்சிக்கிட்டு இருப்பீங்களா…இங்க வந்து ஒத்தையாக் கிடக்கிறதா அழகு? என்று என்றோ சொல்லி விட்டார். டிக்கெட் போட்டுட்டீங்களா? என்று அனத்தி எடுத்து விடுவார்.

            அவருக்கு எந்தவித சிரமமும் கொடுத்து விடக் கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. அதற்காகவே அவரும் பயந்து கொண்டுதான் இருந்தார் என்றும் எனக்குத் தோன்றியது. இல்லையென்றால் நான் வரும்போதெல்லாம் அப்படிக் கேட்பானேன்? எனக்கும் அவருக்கும் ஒரே வயசு. ஆனால் என்னை விடச் சுறுசுறுப்பாளி. ஏதாவது வேலை செய்து கொண்டேதான் இருப்பார். அவர் சும்மா இருந்து பார்த்ததேயில்லை. வீடு பெருக்க, மெழுக, சுற்றுப்புறங்களைக் கூட்டிக் குப்பை அள்ள, பின்னால் இருக்கும் செடிகளுக்கு மண் அணைத்துக் கொடுத்து தண்ணீர் இறக்க…என்று எங்கிருந்துதான் அவருக்கு வேலைகள் முளைக்குமோ…! எல்லாம் முடிந்ததென்றே கிடையாது அவருக்கு. வீட்டு வேலை முடிந்தால் சைக்கிளில் குடத்தைக் கட்டிக் கொண்டு நல்ல தண்ணீர் எடுக்கக் கிளம்பி விடுவார். அங்கு போய் அந்தக் காலனி மக்களோடு நின்று நாலு கதை பேசி, ஊர் நிலவரம் பகிர்ந்து அந்தத் தண்ணீரைச் சுமந்து வருவதில் ஒரு அலாதி திருப்தி அவருக்கு. சுறுசுறுப்பாய் இருப்பவர்கள் என்றுமே ஆரோக்யமாய் இருக்கிறார்கள். மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்பது நிச்சயம்.

            எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார் நாதன். வரும் தபால்களையெல்லாம் எடுத்து பத்திரமாகத் தபால் பெட்டியில் போட்டு வைக்கிறார். பெட்டியில் போட வேண்டும் என்றுதான் போஸ்ட்மேனுக்கும், கூரியர்காரனுக்கும் போய்ப் போய்ச் சொல்லி, எழுதிக் கொடுத்துக் கேட்டுக் கொண்டு  ஊர் வந்து சேர்ந்தேன். ஆனால் அவர்கள் அதைப் பின்பற்றவில்லை. எங்க சார்…எல்லாம் வராண்டாவுலயே வீசிட்டுப் போயிடுறாங்க….என்று சொல்லி விட்டு…நான் இருக்கிறவரைக்கும் எடுத்து பாக்சுக்குள்ள போட்டுடறேன்…கவலைப் படாதீங்க…என்று கூறி, தவறாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறார் நாதன். இல்லையென்றால் என்னுடைய மியூச்சுவல் ஃபன்ட் காசோலைகள் எத்தனையோ வீதிக்குள் பறந்து கண்காணாமல் போயிருக்கும். மூன்று மாதத்திற்குள் அதைக் காசாக்க வேண்டும், கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஊருக்கு வருவதே என் வாடிக்கையாய் இருந்தது.

            அவரது சேவை அளவிடற்கரியது. மாலை ஆறு மணியானால் வாசல் லைட்டைப் போட்டு எரிய விட்டு, பத்து மணியானால் மறக்காமல் வந்து அணைத்துவிட்டு, மாடிக்கு ஏறி ஒரு சுற்று சுற்றி, கொல்லைப் புறமெல்லாம் ஒரு நோட்டம் விட்டு விட்டு வந்து படுத்துக் கொள்வார். ஆளில்லாத வீடுகளில் பின்புறம் கூட்டாக வந்து அமர்ந்து குடித்து விட்டு, காலி பாட்டில்களை, கஞ்சா காகிதப்  பேப்பர்களைக் கசக்கி  வீசி விட்டுப் போவது எங்கள் ஏரியாவில் வழக்கமாய் இருந்தது. கொஞ்சம் கவனிக்காமல் போனால் பின்புறமாய் ரகசியமாய்க் கதவைத் திறந்து வர போக என்று ஆரம்பித்து விடுவார்கள் போன்றதான நிலைமை ஓடிக் கொண்டிருந்தது.

           பள்ளி வாசல்களில் காஞ்ஜா போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. எல்லாப் பெட்டிக் கடைகளிலும் சர்வ சாதாரணமாய்க் கிடைக்கிறது. தியேட்டர்களில் ரகசியமாய்க் கிடைக்கின்றன. ஓட்டல் வாசல்களில் ஓரமாய் நின்று விற்கப்படுகின்றன. சிறார் உலகமும், இளைஞர் உலகமும் நாளுக்கு நாள் கெட்டுச் சீரழிந்து வருகின்றன. எதிர்காலத் தலைமுறை என்னவாகுமோ என்று பெற்றோர்கள் கதி கலங்கிக் கிடக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்தாக வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் தங்களிடம் சகஜமாய்ப் பேசுகிறானா, அறையில் போய்த் தனிமையில் ஒண்டுகிறானா, ரகசியமாய் ஏதேனும் செய்கிறானா, யாருடன் பழகுகிறான், அவர்களெல்லாம் ஒழுக்கமான பிள்ளைகளா, எங்கெங்கு போகிறான், வருகிறான் என்று கட்டாயம் கண்காணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலகம் கைக்கு அடங்காது போய்க் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தீமைகள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. எந்நேரம் எது நடக்குமோ என்று பயந்து கிடக்கிறது உலகம். எதைநினைத்து வருந்துவது. தனிமையில் இந்த வீட்டில் இருக்கவே நானே பயந்து கொண்டுதானே கிடக்கிறேன். என் வீட்டில் எனக்கே எப்படி இந்தப் பயம் வந்தது. குடியிருக்கும் தெருவில் அமைதியில்லையே? என்னென்னவோ வேண்டாத சத்தங்கள் கேட்கிறதே? கெட்ட வார்த்தைகள் காதில் விழுகின்றனவே? குடித்து விட்டு ஆட்கள் தள்ளாடிப் போகும் சத்தம் இரவு இரண்டு மணி வரை கேட்ட வண்ணமே இருக்கிறது. பிறகு நாலு மணி வரைதான் ஓய்வு. அமைதி. மறுபடியும் அந்நாளைய தவறுகள் ஆரம்பித்து விடுகின்றன. தனியாய் இருக்கும் எனக்கே இரவ எவனாவது வீட்டுக்கு வந்து கதவைத் தட்டுவானோ என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கிறது. வீட்டைப் பூட்டிப் போட பயமாய்த்தான் இருக்கிறது. ரகசியமாய், சத்தமின்றிக் கதவைத் திறந்து உள்ளே புகுந்து கொண்டு எவனும் இது என் வீடு என்று சொந்தம் கொண்டாடி விடுவானோ என்கிற அளவுக்கு பயப்பட வேண்டியிருக்கிறது. காலி இடம் பிடிப்பதைப் போல் கட்டிய வீட்டினைப் பிடிக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அந்த அளவுக்குத் தீமைகளும் ஒழுக்கக் கேடுகளும் நடக்கின்றனவே?

            பக்கத்தில் ஒரு மயானம் உண்டு. அன்றாடம் அங்கே சடலங்கள் வந்து கொண்டேயிருந்தன.   எந்நேரமும் நெருப்பு பக பகவென எரிந்து கொண்டேயிருந்தது. அதற்கு முப்புறமும் இடம் வாங்கி வீடு கட்டியவர்கள் மயானப் பகுதி ஜன்னல்களைத் திறப்பதேயில்லை. அது அல்லாமலே அவர்கள் வீட்டுக்குள் எந்நேரமும் பிணப் புகை போய்க் கொண்டேதான் இருந்தது. அது உடம்புக்கு நல்லது என்று வேறு சிலர் சொல்லி வைக்க…அருகிலுள்ள சிறிய பேருந்து நிறுத்தத்தில் எந்நேரமும் அந்தப் புகையை மூக்கிற்குள் வாங்கும் சனம் நின்று கொண்டேயிருந்தது.  ஏரியாவில் வீடுகள் வரவர, அந்த நகர்ப்பகுதி பிரபலமாக ஆக நாளாவட்டத்தில் மயானம் எடுக்கப்பட்டு விடும் என்று சொல்லித்தான் ப்ளாட்டுகள் விற்றுத் தள்ளப்பட்டிருந்தன. இப்போது வீடுகள் நிரம்பி வழிகின்றன.

எங்க சாதி சனத்து ஆட்களை இங்க கொண்டாந்துதான் எரிப்போம். இந்தச் சுடுகாட்ட எடுக்க விடமாட்டோம்…என்று போராட்டத்திற்கு நின்றார்கள் அப்பகுதிப் பழங்குடிகள். மாவட்ட ஆட்சியர், வேண்டாமே…! என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

            எங்கள் நலச் சங்கத்தின் ஆட்களால் செய்ய முடியாமல் போன ஒரே காரியம் அது ஒன்றுதான். எத்தனை பஸ் போனாலும் வந்தாலும் அத்தனையும் நிரம்பி வழியும்.  வசூல் மிக அதிகமென்றுணர்ந்து, போக்குவரத்துக் கழகத்தின் வந்து போகும் பஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. எந்தெந்த இடத்திலிருந்தோவெல்லாம் இணைப்புக் கொடுத்து வண்டிகளை இங்கே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வாரணாசி போல் விடாமல் பிணம் எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்க வருகிறார்களோ என்று தோன்றும். இரவு நேரத்தில் பெண்கள் அந்தப் பகுதியைக் கடந்து போகப் பயம் கொள்ளுவார்கள்.  தனித்துக் கடப்பது  வேண்டாம் என்று தவிர்க்க நினைப்பார்கள்.

            இன்று அறுநூறு அடிக்குக் கீழே தண்ணீர் போய்விட்டது எங்கள் பகுதியில். அதனால் பலரும் படிப்படியாக வீடுகளை விற்றுவிட்டு நகர ஆரம்பித்திருந்தார்கள். வாடகைக்கு வீடு கிடைக்காமல் இருந்த எங்கள் ஏரியாவில் பல வீடுகள் சும்மாவே பூட்டிக் கிடந்தன. கேட்டால் அதை வித்தாச்சு…ஓனர் பம்பாயிலயோ, பெங்களூரிலயோ இருக்காரு…சரியாத் தெரியாது என்று சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

            அடுத்தடுத்து சடலங்கள் வந்து இறங்க…அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதிக் கடைகள் சட்டுச் சட்டென்று அடைக்கப்பட்டன. தேவையில்லாமல் கல்லெறிவதும், கண்ணாடிகள் உடைவதும் வழக்கமாய்ப் போக….முதல்ல எடத்தை மாத்தியாகணும்…என்று பலரும் புறப்பட்டிருந்தார்கள். டூ வீலரைப் போட்டுக் கொண்டு மூன்று பேர் நான்கு பேர் ஒரே வண்டியில் தொற்றிக் கொண்டு சர்ர்ர்ர்…..புர்ர்ர்ர்…..என்று இங்கும் அங்கும் பறந்து அளப்பரை பண்ணுவதும்….அன்ட்ராயர் தெரியக் கைலியை உயர்த்திக் கொண்டு, நாக்கை மடித்துக் கொண்டு…  உனக்கு வேற தனியாச் சொல்லணுமா…கடையை அடைக்கப் போறியா இல்லையா…ங்ங்கோத்தா? என்று ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்தால்….அரசாங்கம், போலீஸ்  என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறதா? என்ற கேள்வி எல்லார் மனதிலும் தவறாமல் எழும். எந்த டெட்பாடி வந்தாலும் வாகனத்தில் செல்பவர்கள் மரியாதையாய் இறங்கி நிற்க வேண்டும். அல்லது ரூட்டை மாற்றிக் கொண்டு பறக்க வேண்டும்.

            என் வீடு அந்த மயானம், பஸ்-ஸ்டான்டிலிருந்து உள்புறமாய் கடைசியாய் இருந்த வீதியிலிருந்தது. மற்ற எல்லாத் தெருக்களுக்கும் போகும் லிங்க் ரோடு எங்கள் தெருதான். ஆகையினால் போக்குவரத்து சதா சர்வகாலமும் இருந்து கொண்டேயிருக்கும். இரவு ரெண்டு மணி வரை கூட வண்டிகள் போகும் வரும். பிறகு நாலு மணிக்குத் திரும்ப ஆரம்பித்து விடும்.

            எங்கள் தெருவின் பிரதிநிதியாக நான் அப்போது இருந்தேன். எனக்கே தெரியாமல் அங்கு நடக்கும் ஒரு அக்கிரமம், என்ன சார் நடவடிக்கை எடுத்திருக்கீங்க…என்று ஒருவர் சத்தமாய்க் கேட்டுக் கொண்டு வந்து நின்ற போதுதான் தெரிய வந்தது.

            நீங்க நலச் சங்கத்துல மெம்பரா? என்று முதல் கேள்வியைப் போட்டேன். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்லத் தயங்கின அந்தக் கணம், பரவால்ல…வர்ற மீட்டிங்க்ல மெம்பர் ஆயிடுங்க…என்று சொல்லி ஒரு பேப்பரில் அவர்  கோரிக்கையை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினேன். ஆனால் அது படு சீரியசான விஷயம். வந்த வேகத்திற்கு அவர் அதைச் சொல்லாமல் போயிருக்கக் கூடாது.  மெம்பர் இல்லாட்டி என்ன சார்…கேட்கக் கூடாதா?  என்று கேட்டிருக்க வேண்டும். கோபம் மனதிற்குள் புழுங்க அவர் திரும்பிப் போனதுதான் ஆச்சர்யம்.  என் தோரணையைப் பார்த்து பயந்துட்டாரோ? அப்படியும் ஒரு திருப்தி உண்டு எனக்கு.

            நானும்தான் சார் கவனிச்சிட்டிருக்கேன் ஒரு வாரமா….அங்க மாடி பா ல்கனில சிவப்பு லைட் எரியுது பார்த்தீங்களா? என்று கையைக் காண்பித்தார் பக்கத்து வீடு மாசிலாமணி.  தெருக் கடைசியில் கண்மாய்ப் பக்கம் குடியிருக்கும் ஒரு போலீசின் ஆதரவோடு அந்த வீட்டில் பிராத்தல் நடந்து கொண்டிருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாய்….என்னடா இது…ராத்திரி அடிக்கடி ஆட்டோ சத்தம் கேட்குதே…என்று என் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அதைத் தீவிரமாய் உணரும் தீட்சண்யம் என்னிடமில்லை. எவன் வந்தா என்ன, போனா நமக்கென்ன? என்கிற மனப்பான்மை. நாமுண்டு நம்ம வேலையுண்டு என்கிற வளர்ப்பு.

            நல்லவேளை…அங்கேயும் நாதன்தான் உதவினார். அதனால்தான் சொன்னேன் அவரது உதவி அளப்பரியது என்று. அவரது சித்தப்பா பையன் ஒருவன்…ஒருவனல்ல…ஒருவர்….சென்னையில் டி.எஸ்.பி.யாக இருந்தார். ராவோடு ராவாக அவருக்கு ரகசியமாய் ஃ.போன் போட்டுச் சொல்ல….எங்கள் பகுதியின் இன்சார்ஜ் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு படை வந்து அந்த வீட்டின் மொத்தக் கூட்டத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டது. இந்த ஊர்லயே உங்கள நான் இனி பார்க்கக் கூடாது…என்று சொல்லி…ஸ்டேஷனில் வைத்து நன்றாக மொத்தி,  தப்பிச்சோம் பிழைச்சோம் என்று ஓட ஓட விரட்டியடித்தார்கள். அந்த விஷயத்திலான நாதனின் பேருதவி சாகும்வரை மறக்கக் கூடாதது.

இதனாலேயே தெருக்கோடியில் குடியிருந்த அந்தப் போலீஸ்காரருக்கு என் மீது தீராத கோபம். பயங்கரக் கடுப்பு. எதிலடா என்னை மாட்டுவோம் என்று அவன் காத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. ராத்திரி ஊர் உறங்கும் நேரம் என் அறையில் லைட்டைப் போட்டுக் கொண்டு கொட்டக் கொட்ட புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன் நான். தேவையில்லாமல் வந்து கதவைத் தட்டுவான். ஏன் லைட் எரியுதுன்னு கேட்பான்.  கதவைத் திறந்தால் சட்டென்று எதிர்பாராத தருணத்தில் உள் நுழைந்து எல்லோரும் தூங்குகிறார்களா…என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் பார்ப்பான். எனக்கு அதற்கு அதிகாரமுண்டு என்பது போல் இருக்கும் அவன் நடவடிக்கைகள்.

அதெப்படி சார் உள்ளே விட்டீங்க? அப்டியெல்லாம் போலீசானாலும் வரக் கூடாது சார்…ஒரு கௌரவம், மரியாதைன்னு நமக்கும் இருக்குல்ல…யாரன்னு காண்பிங்க…பார்ப்போம்….என்றார் நாதன். என் கூடப் பிறக்காத சகோதரன் அவர். எதற்காக பிரயோஜனமில்லாத என் மீது இத்தனை அன்பைப் பொழிகிறார் என்று நினைத்து உருகுவேன். நான் அதற்குத் தகுதியானவன்தானா என்று கூசுவேன்.

அதையும்தான் அந்த சென்னைப் போலீசிடம் சொல்லச் செய்தேன். எல்லாம் நாதனின் அசாத்தியக் கருணை. அந்தப் போலீஸ்காரரை ஊரை விட்டே மாற்றி விட்டார்கள். எங்கள் வேலைதான் அது என்று அவர் அறிய மாட்டார்.

எங்கள் வள்ளுவர் நகருக்கு தார்ச் சாலைகள் போட்டது,  கம்பங்கள் நட்டு தெரு விளக்குகள் எரிய விட்டது, சங்கம் அமைத்து வசூலித்து, குப்பை வண்டிகளுக்கு ஏற்பாடு செய்தது. அதை இயக்கும் ஆளுக்கு சம்பளம் நிர்ணயித்தது,  போக்குவரத்துக்கு பேருந்துகள் ஏற்பாடு செய்தது, பேருந்து நிலையத்துக்கு கலெக்டரிடம் மனுக் கொடுத்து இடம் ஒதுக்கச் செய்தது என்று நிறையக் காரியங்கள் செய்தோம் நாங்கள். சொல்லப் போனால் திருட்டு அதிகமாய் இருந்த பகுதி அது என்று சொல்லலாம். திடீரென்று சின்னச் சின்னக் கற்களாய் வந்து வீட்டின் மேல் தடதடவென்று விழும். எங்கிருந்து எறிகிறார்கள் என்றே தெரியாது. சனமெல்லாம் ஒன்று கூடி வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் எப்படியோ திருடு போயிருக்கும். யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அதக் காணல…இதக் காணல என்று கத்தும்போதுதான் தெரிய வரும். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்களில் கூட யாரேனும் கூட்டு இருப்பார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றும். தெரு விளக்குகளை எங்கள் பகுதி போல் கல்லெறிந்து உடைத்தவர்கள் வேறு எங்கும் காண முடியாது. மாற்றி மாற்றி எத்தனை பல்புகள் மாட்டினாலும் உடைத்து விடுவார்கள். எப்போது வருகிறார்கள் போகிறார்கள் என்று எவர் கண்ணிலும் படாது. அத்தனை கம்பங்களும் லைட் எரிந்து நாங்கள் என்றுமே பார்த்ததில்லை. எத்தனை தடவைகள்தான் பல்பு மாற்றுவது. மாளவில்லை. ஒரு கட்டத்தில் இந்தக் கடைசிக்கு ஒண்ணு, அந்தக் கடைசிக்கு ஒண்ணு என்று மட்டுமே எரியும் நிலை வந்தது. அவரவர் வீட்டு வாசல் லைட்டுகள்தான் எரியும். அதுவே போதும் என்று விட்டுவிட்டோம்.

மும்மூன்று சென்டுகளாக நெருக்க நெருக்கமாய் வீடுகள் கட்டப்பட்ட பகுதி அது. அதனால் சின்னச் சின்னச் சந்துகளாய்த் திரும்பித் திரும்பி நீண்ட தெருக்களை அடைய வேண்டியிருக்கும். குறுக்குத் தெருக்கள் அதிகம் எங்கள் பகுதியில். ஆட்டோக்காரர்கள் வந்தால் கூட…இன்னும் எத்தனை சந்து சார் திரும்பணும் என்று அலுத்துக் கொள்வார்கள். திரும்பி எப்படி மெயின் ரோடை அடைவது என்று முழித்து நிற்பார்கள். பஸ்-ஸ்டான்டுக்குப் பின்னாடின்னு சொல்லி எங்கியோ கூட்டிட்டு வந்திட்டீங்களே சார் என்று அதிக வாடகைக்கு அடி போடுவார்கள்.

உங்க ஏரியாவுல நாய்கள் ஜாஸ்தி சார்….சவாரி வராது சார் என்று ஆட்டோவுக்குள் உட்கார்ந்து ஓட்டும் டிரைவர்களே பயந்து சாவார்கள். நாங்களும் மாநகராட்சியில் எவ்வளவோ சொல்லி நாய்களைக் குறைக்கப் பார்த்தோம். அவற்றை ஊசி எறிந்து கொல்ல முடியாது. பிடித்துக் கொண்டு போவோம்   பிறகு ஊருக்கு வெளியில் விட்டு விடுவோம் என்றார்கள். அது எப்படி பழகிய பகுதி தெரியுமோ ஆச்சர்யம்தான். நமக்கே நகரின் பல பகுதிகள் தெரியாதுதான். ஆனால் நாய்கள் எப்படித் தங்கள் இடங்களைக் குறி வைத்து வந்து நிற்குமோ…!  நாய்களுக்குப் பயந்து இந்தத் தெரு வேணாம்…அப்படிப் போவோம்…என்று மாற்றி மாற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சின்னச் சின்ன குறுக்குச் சந்துகள் அதிகம் என்பதால் அப்பகுதிக்குள் தன்னந்தனியே நடந்து வரும் பெண்களிடம் சங்கிலிப் பறிப்புகள் நிகழும்.காரணம் தெரு ஆரம்பத்திலிருந்துதான் லைட் கம்பங்கள் இருக்கும் என்பதால் மங்கிய சந்து வெளிச்சங்கள் போதிய பாதுகாப்பின்மையை உணர்த்திக் கொண்டேயிருந்தன. போதாக் குறைக்கு நாய்ப் பயம் வேறு.  எல்லாம் படிப்படியாய்க் குறைந்த காலங்களும் உண்டு. ஆனால் நாய்கள் மட்டும் அப்படியே கூட்டம் கூட்டமாகத்தான் இருக்கின்றன.

இப்போதுதான்  பல வீடுகள் பூட்டிக் கிடக்கும் நிலைக்கு வந்து விட்டனவே? அந்த வீடுகளுக்கு இந்தத் தெரு நாய்கள்தான் காவல். அவற்றிற்கு  சரியான புகலிடம். சொல்லப் போனால் பையன்களுக்குக் கல்யாணம் பண்ணி, சென்னைக்கோ, பெங்களூருக்கோ, பம்பாய்க்கோ, குடி பெயர்ந்து அவர்களோடு போய் இருப்பவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் வீடுகளை விற்று விட்டுத்தான் ஒரேயடியாய்ப் போய் விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். நான் ஒருவன்தான் இன்னும் சொந்த வீடை விற்பதா…என்றாவது மீண்டும் இங்கே வந்து இருக்க வேண்டிய நிலை வந்தால்? என்று வந்து போய்க் கொண்டிருந்தேன். என் சாவு இங்கேதான் நிகழ வேண்டும் என்று என் மனதில் தீர்க்கமாய் ஒரு தீர்மானம் ஓடிக் கொண்டேயிருந்தது.

நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. கல்லு மாதிரி வீடு. வெறும் ஒன்றரை லட்சத்தில் அரசு லோன் போட்டுக் கட்டினேன். சைடு பகுதியை வாடகைக்கு விட்டு அந்தக் காசையும் எடுத்து விட்டேன். எப்டிக் கட்டினாக…இந்த ஏரியாவுல எந்த வீடும் உங்க வீடு மாதிரி கல்லுக்குண்டாக் கட்டுனதுல்ல…. அன்னன்னிக்கு நானும் பார்த்திருக்கனே…எங்க தாத்தாதான இதுக்கு வாட்ச்மேனா இருந்தாரு? சாகுற வரைக்கும் தீபாவளி பொங்கல்னா அம்மா கூப்பிட்டு துணிமணியும், பணமும் கொடுப்பாகளே….எம்புட்டுப் பெரிய மனசு அவுகளுக்குத்தான்…?  இந்தக் கொய்யாவும், கருவேப்பிலையும், மல்லிப் பூவும் அவுக வச்ச செடிதான? எத்தனவாட்டி நா வந்து பறிச்சிருக்கேன். எடுத்துக்கோ…எடுத்துக்கோன்னுதான் அம்மா சொல்வாகளே தவிர ஒரு நா கூட என்னத் திட்டுனதில்லீங்கய்யா….அம்மா மனசு அப்டியாக்கும்….தெனமும் அவுகளுக்குத்தான மொதப் பூவக் கட்டிக்  கொண்டாந்து கொடுப்பேன்…அவுக வெளியூர் போனது எங்களுக்கெல்லாம் எம்பூட்டு வருத்தம்? இந்தா வச்சிக்கோன்னு ஐயாயிரம் பணம் கொடுத்தாகளே…அந்த மனசு யாருக்கு வரும்?

கிரகப்பிரவேசத்துக்கு நாந்தான பால் கொண்டாந்து கொடுத்தேன்…மறந்திட்டீகளா? என்று சம்பங்கி சொன்னது இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.   இந்த வீட்டை அத்தனை நம்பிக்கையாய்க் கட்டிக் கொடுத்த அந்த இன்ஜினியர் ராகவேந்திரனுக்கு ஒரு டிரஸ்கூட நான் வைத்துக் கொடுக்கவில்லை.  அந்த முறைமை கூடத் தெரியாத மடையனாய் நான் இருந்ததும், அதை என் மனைவி கூடநினைவு படுத்தாததும்,  இருந்த பெரியவர்கள் யாரும் சொல்லித் தராததும் கடைசிவரை என் மனதை வாட்டிக் கொண்டுதான் இருந்தன.

இந்த வீடு என் அப்பா அம்மாவின் காலடிகள் பட்ட வீடு. கை வீசிக் கால் வீசி இடைஞ்சலில்லாமல் அவர்கள் நடந்து பழகிப் புழங்கிய வீடு. தண்ணிக் கஷ்டமில்லாமல் தாராளமாகத் துணி துவைத்து, குளித்து, நீள நீளமாகக் கொடிகளில் உலர்த்திக் காய வைத்து எடுத்து, திருப்தியாய் மடித்து எடுத்து வச்சு, இங்க இல்லாட்ட அங்க…அங்க இல்லாட்டா இங்க…என்று வெவ்வேறு அறைகளில் சுதந்திரமாய்ப் படுத்து உருண்டு கண்ணயர்ந்து நிம்மதியாய் உறங்கி எழுந்து கழித்த வீடு. ரமணா…கொஞ்சம் அந்த ஏ.சி.யைப் போடுறயாப்பா…என்று அப்பா வாய் விட்டுக் கேட்டுப் போடச் செய்து….யப்பாடி…யப்பாடி…என்ன சொகம்…என்ன சொகம்..என்று ஆசுவாசப்பட்டு ஆசீர்வதித்த வீடு.  கைக்கும், வாய்க்கும் தாராளமாய் அவர்களை இருக்கச் செய்து மனதார வாழ்ந்து கழித்த சொர்க்கம் இந்த மண்.

ந்த வீட்டில்தான்  நான் தனியாய் இறந்து கிடந்தேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்தே விட்டது. எதற்காக நான் வரும்போதெல்லாம் நாதன் பயந்தாரோ, எதற்காக சீக்கிரம் கிளம்புங்க என்று என்னை விரட்டினாரோ அது நடந்தே விட்டது.  போன ஜென்மத்தில் அவருக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி நடக்காது. என் சாவு இங்கேதான் நிகழ வேண்டும் என்கிற என் வேட்கையை, கடைசி ஆசையை நான் அவரிடம் முன்பே தெரிவித்திருந்தால் அதற்கேற்றாற்போல் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்திருப்பாரோ என்னவோ? உடன் பிறவாச் சகோதரன் என்றால் அவர்தான்.

காலையில் மணி பத்துக்கு மேலாகியும் நான் வெளியே வராதது கண்டு அதிர்ந்து போய் வாசலுக்கு வந்து சார்…சார்…என்று கத்தியும் பதிலில்லாமல் உள்புறமாய்க் கொக்கி போட்டிருந்த ஒரு ஜன்னலை மட்டும் எப்படியோ தட்டித் திறந்து பார்த்தவருக்கு இந்த அதிர்ச்சி.

அதுதான் வாயும், முகமும் காட்டிக் கொடுத்து விடுமே…இறந்து சில மணி நேரங்கள் ஆகி விட்டன என்பதற்கடையாளமாய் ஈக்கள் மொய்ப்பதைக் கண்டே அவர் பதறிப் போயிருக்கிறார்…பாவம்.  நேர் எதிர்வீட்டுக்காரரின் உதவியோடு இன்னும் ஓரிருவரோடு வந்து பார்க்கச் செய்து உறுதி செய்து கொண்டு, திண்ணைக் கதவின் பேட்லாக்கை உடைத்து உள்ளே நுழைந்து…….

இதோ குளிர்  கண்ணாடிப் பெட்டியில் நிச்சலனமாய் நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்.  உள்ளூரில் உள்ள சிலர்…என் தூரத்து உறவினர்கள், என்னோடு பணியாற்றியவர்கள் என்று வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல ஆள்தான்….எனக்கு வேணாம்ங்கிறதோட நின்னிருக்கலாம். வாங்கி ஆபீஸ் வாசல் கோயில் உண்டியல்ல போட்டாரு….நமக்காவது பிரிச்சிக்குங்கன்னு கொடுத்திருக்கலாம்….-சரிவீசில் இருக்கும்போது நான் செய்த தவறு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

இனி பென்ஷன் குறைந்து  போகும். மனைவிக்கு என்று 30% கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ? நிறைய மருந்து மாத்திரைகள் வாங்குவாளே…? இனி அது பயன்படாது என்று படுக்கையில் விழாமல் இருக்கணும்…

ஐயையோ…எலெக்ட்ரிக் பில் இன்னும் கட்டலையே…நேத்துத்தானே அட்டைல எழுதிட்டுப் போனான்…கவனிச்சுக் கட்டிடுவாங்களா?

அடடா…காஸ் தீர்ந்து போச்சேன்னு புக் பண்ணியிருக்கேனே…அவன் வந்து நிற்பானோ…?

சில புக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கேனே…அதுக்கு வேறே கூரியர் வரும். வாங்குவாங்களா?

எல்லாாத்துக்கும் மேலே அடுத்த மாசம் முதல் வாரம் வாரணாசி டூர் போக டிராவல்ஸ் புக் பண்ணியிருக்கேனே….? அந்த அட்வான்ச அவன் திருப்பித் தருவானா?

எதுக்காக இந்த வாட்டி ஊருக்கு வந்தேனோ அந்த வேலையெல்லாம் இன்னும் முடியலையே…!

நிறைய ஃபிக்சட் டெபாசிட் இந்த மாசம் மெச்சூர்டு ஆகியிருக்கே…ரின்யூவல் பண்ணனுமே…செய்துப்பானா?

இந்த வீட்டை பையன் பேருக்கு எழுதாமலே செத்துப் போய்ட்டனே…ஒரு உயில் கூட எழுதலியே? லீகல் உறர்…பையன்தான்ங்கிறதால பிரச்னை இருக்காதுதானே…? ஸாரி…ஸாரி…ஒய்ஃப் இருக்காளே…அவதானே நெக்ஸ்ட் லீகல் உறர்…அப்புறம்தானே பையனுக்கு வரும்…! ம்ம்உறீம்….எதைக் கொண்டு வந்தோம்…கொண்டு செல்ல….

என் மனைவியின் வருகைக்காக, என் பையனின் கடமைக்காகப் பிணமாய்க்  காத்திருக்கிறேன்.

அன்புள்ள நாதன்…என்னை மன்னித்து விடுங்கள். உங்களை நான் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால்  உங்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து வந்து நான் உங்களுக்குக் கண்டிப்பாய்ச் சேவை செய்வேன். ஓம் ஷாந்தி….ஓம் ஷாந்தி…!!!

                                                -------------------------

.

உஷாதீபன்,   (ushaadeepan@gmail.com)                                     எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171,172)                             மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                           ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                           மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...