சிறுகதை "தளம்“ காலாண்டிதழ் பிரசுரம் ஏப்ரல் - ஜூன் 2024
“ஒட்டுப்-பொட்டு“
-----------------------------------------
எனக்கு எங்கப்பா மேலே
ஒரு சந்தேகம் உண்டு.என்னமோ அவர்ட்ட ஒரு வித்தியாசம் இருக்குன்னு தோணுது. ஆனா அது என்னன்னுதான் என்னால கண்டு பிடிக்க முடில. கண்டு பிடிக்கிறதென்ன…துல்லியமா மனசுக்குத் தெரில.
அப்படித் தெரிஞ்சாத்தான, எனக்கு நானே உறுதி செய்துக்கிட்டாத்தானே நேரடியாக் கேட்க முடியும்,
அல்லது அம்மாட்டச் சொல்ல முடியும்? யாரையும் அவர் நிமிர்ந்து பார்க்கிறதில்லை. குனிஞ்சமேனிக்கே
பேசுறாரு. பதில் சொல்றாரு. அதான் பெரிய சந்தேகம்.
எனக்கே உறுதியில்லாம மொட்டையா அம்மாட்டச்
சொன்னா…அப்டியெல்லாம் பேசப்படாது…ன்னு அம்மா நிச்சயமா என்னைக் கண்டிப்பாங்க……ஒருத்தருக்கொருத்தர்
வைக்கிற நம்பிக்கைதான் வாழ்க்கை.!. அதை அநாவசியமா அவங்களுக்கு நடுவுல புகுந்து நான்
கெடுத்துடக் கூடாது. அதனாலதான் இவ்வளவு எச்சரிக்கையா இருக்கேன். ஏன்னா என் சந்தேகம்
அப்படி….ஒரு வேளை அம்மாவே இதை உணர்ந்து வச்சிருந்தா? நேத்து முளைச்சவன், இவனுக்கென்ன
வந்ததுன்னு நினைச்சா? அதான் ஜாக்கிரதையா இருக்கேன். அத்தோட இன்னொண்ணு…நாம்பாட்டுக்கு
அநாவசியமா சந்தேகப்பட்டதாகவும் ஆயிடக் கூடாதுதானே…அது அப்பாவுக்குச் செய்ற அவமரியாதை
ஆயிடுச்சின்னா? அவசரப்பட வேண்டாம்னு தோணுது….
எங்கம்மா ரொம்ப அழகானவங்க. அஞ்சரை அடி
உயரத்துல கச்சிதமா இருப்பாங்க…எந்தப் புடவையைக் கட்டிக்கிட்டாலும் பளிச்சினு இருப்பாங்க…முகத்துல
அப்டி ஒரு ஃபேமிலி லுக். நடு வகிடு எடுத்து வாரின தலைல வகிடு ஆரம்பிக்கிற இடத்துல வச்சிருக்கிற குங்குமப்
பொட்டு அம்மாவுக்கு அத்தனை எடுப்பா இருக்கும்.
அங்க அசல் குங்குமத்த வச்சிக்கிடுற அம்மா, நெற்றில ஸ்டிக்கர் பொட்டுதான் அழுத்திப்பாங்க…எப்பயாச்சும்
அது கீழ விழுந்திடுச்சின்னு வச்சிக்குங்க…அம்மா முகத்தைப் பார்க்கவே சங்கடமாயிருக்கும்.
சகிக்காது.
நெத்தில பொட்டு இருக்கா இல்லையான்னு கூடக்
கவனிக்க மாட்டியா? நீபாட்டுக்கு இருக்க? சகிக்கல…தாலியறுத்த மாதிரி இருக்கு. முதல்ல
பொட்ட வை….என்று ஆக்ரோஷமாக் கத்தியிருக்கேன். அந்த வார்த்த சொல்லக் கூடாதுதான். அப்பா
சொன்னாக் கூடப் பொருந்தும். பொறுத்துக்கலாம். ஆனா நா சொல்லக்கூடாது. கோபத்துல வந்திடுதே…! மன்னிச்சிக்கம்மான்னுட்டேன்.
அழுகை வந்திடுச்சு…சட்டுன்னு மனசு வருந்திடுச்சு.
அந்த முறைதான் நான் அப்படிப் பேசினது. அதுக்குப்
பிறகு எதையும் கவனிக்க ஆரம்பிச்சேன். வாய் நுனி வரை வந்ததை முழுங்கினேன். எதுவும் பேசறதில்லன்னு
முடிவுக்கு வந்தேன். அப்டித்தான் அப்பாவும் என் கவனத்துல வந்தார்.
அம்மாவோட நரைச்ச முடிக்கும் அதுக்கும்…பொட்டு
இல்லன்னா…ஏதோ துக்கத்துக்குப் போயிட்டு வந்த மாதிரியிருக்கும். எழவு விழுந்த வீட்ல
இருப்பாங்களே அதுபோல….அது என்னவோ…அம்மாவோட அந்தப் பொட்டில்லாத முகத்த என்னால பார்க்கவே
முடியறதில்ல….எல்லாப் பொம்பளைகளுக்கும் அப்டியிருக்கிறதில்ல. ஒரு சிலருக்குத்தான் அது
சகிக்காது. அதுல அம்மாவும் ஒண்ணு. பொம்பளைங்க பீரியட்ஸ் டயத்துல பொட்டில்லாமப் போறதப்
பார்த்திருக்கேன்…அதைப் புரிஞ்சிக்கிறதுக்கு அதுன்னு தெரியும். லைட்டா மஞ்சப் பொட்டு
வெளிறி வச்சிருப்பாங்க…அதான் அடையாளம். அன்னைக்குப் பார்த்து நிமிர்ந்து பேசமாட்டாங்க
பெரும்பாலும். இதெல்லாம் கூர்ந்து கவனிச்சிருந்தாத்தான் தெரியும். நான் தட்டச்சுப்
பள்ளில வேலை பார்க்கைல பொம்பளப் பிள்ளைங்க பயிற்சிக்கு வருவாங்க…டைப் அடிச்சிக்கிட்டு
இருக்கைலயே வயித்தப் பிடிச்சிட்டு உட்கார்ந்திடுவாங்க…சில பிள்ளைங்க நான் வர்றேன் சார்னு
சொல்லிட்டுக் கிளம்பிடுங்க…எனக்கா புரியாது. எதுக்கு இப்படி தூரம் தூரமா வரணும்…உடனே
எந்திரிச்சுப் போகணும்?னு கோபம் வரும்.பக்கத்துல ரெண்டு மூணு தியேட்டர் உண்டு. டவுனுக்கு
வந்து ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்திட்டு. படம் பார்க்கப் போகுதுங்களோன்னு நினைப்பேன்.
கிராமத்துப் பிள்ளைங்களுக்கு எங்க தட்டச்சுப் பள்ளில பாதி ஃபீஸ்தான். கூட்டமான கூட்டம்
எகிறிடுச்சு. நாப்பது மிஷின் வச்சிருந்தும் பத்தல. ரெயில் தடதடக்கிறமாதிரி சத்தம் இடைவிடாம
வந்திட்டேயிருக்கும். ரோட்டோட போறவங்க…நின்னு ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்துட்டுத்தான்
நகருவாங்க. எங்க பிரின்ஸிபால் ரொம்ப இரக்க குணம் படைச்சவரு. கிராமத்துப் பிள்ளைங்கள்லாம்
நல்லா படிச்சு வேலைக்குப் போகணும்னு விரும்புறவரு. அதனாலதான் அந்தக் கன்செஷன் கொடுத்தாரு…புண்ணியவான்….
லேடீ ஸ்டூடன்ஸ் டயத்துக்குள்ள கிளம்பிட்டாங்கன்னா பேசாம விட்டிடுங்க கோபால்……எதுவும்
சொல்லாதீங்க…ன்னு பிரின்ஸிபால் ஜஸ்டின் எங்கிட்ட ஒருநாள் சொன்னாரு…எதுக்கு இப்டி சொல்றாரு?
அப்புறம் ஸ்கூல் டிஸிப்ளின் என்னாகுறதுன்னு யோசிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சிதான்
எனக்குக் காரணம் புரிஞ்சிது. நா ஒரு மரமண்ட….புரிஞ்சபோது அடப் பாவமே..!ன்னு இருந்தது. போயிட்டறேன் சார்…ன்னா…பவ்யமா சரிங்கம்மான்னுடுவேன்.
அதுகளுக்கு உடம்புல என்ன வாதையோன்னு தோணி மனசு
இரக்கப்பட்டுடும்…
அந்த டயத்துல அம்மா, என் தங்கச்சிங்கல்லாம்
வயித்து வலின்னு துடிச்சதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. அதென்ன எப்பப் பார்த்தாலும்
வயித்து வலி வயித்து வலின்னுட்டு…நான் திங்கிறதத்தான நீயும் திங்கிற…உனக்கு மட்டும்
என்ன நோக்காடு…?ன்னு வீட்டுல கத்தியிருக்கேன். அம்மா அப்டி உட்கார்ந்தபோதுதான் பரிதாபம்
வந்திச்சு. அந்த டயத்துல அப்பா எது சொன்னாலும் அவரு மேலதான் என் கோபம். இந்த மனுஷன்
புரிஞ்சு கத்துறாரா…புரியாம அலர்றாரா?ன்னு நினைப்பேன்.
அதுக்குள்ளயும் உட்கார்ந்திட்டியா? இப்பத்தான
ஆன…! இருபத்தஞ்சு நாள் ஆயிப்போச்சா…இல்ல பத்துப் பதினஞ்சு நாள்லயே வந்திடுதா…? என்ன
கண்றாவியோ…? எனக்கு வேல வைக்கணும் உனக்கு…கங்கணம் கட்டிட்டிருக்கே…! நான் கொஞ்சம் சுதந்திரமா
இருந்திட்டா உனக்குப் பொறுக்காதே…? போ…போ…போய் கொல்லைல உட்காரு…அதுதான் உனக்கு சாஸ்வதமான
எடம்….- வாயில் கன்னா பின்னா என்ற வரும். எவ்வளவோ புத்தகங்களெல்லாம் படிக்கிறார். அதெல்லாம்
இவருக்கு எதுவும் சொல்லித் தருவதில்லையா என்று நினைப்பேன். இல்ல அதெல்லாம் படிச்சிட்டுத்தான்
மனசு இப்படி வக்கரிச்சுப் போய்க் கிடக்கா? என்று எண்ணுவேன்.
ஆனால் சமையல் என்று புகுந்து விட்டால்
சின்சியர் ஆகி விடுவார். ஒரு டைரியில் அம்மா சொல்லியிருப்பவற்றை எழுதி வைத்துக் கொண்டுள்ளார்.
அதன்படி செய்து செய்து பழகி விட்டார். அப்பா கைபாகம் கச்சிதமாய் இருக்கும் உப்பு, உரைப்பு,
புளிப்பு என்று சரிவிகிதம்தான். அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் சமையலை முடித்து விடுவார்தான்.
அதுக்கு முன்தான் தினமும் இந்த ஆர்ப்பாட்டம். கொஞ்சம் திட்டாமத்தான் செய்தா என்ன? தினசரி
அம்மாவுக்கான பூஜை அது.
எதுத்த வீட்டு புவனேஸ்வரி அக்கா எப்பயாச்சும் வீட்டுக்கு வரச்சே,..ஒரு மாதிரி
வாடையடிக்கும். அன்னைக்குன்னு பார்த்து எதையாச்சும் திங்குறதுக்குக் கொண்டு வந்து கொடுப்பாங்க…எனக்கு
அத வாங்கவே பிடிக்காது. அம்மாதான் வாங்கி வச்சிக்கிடுவாங்க…அன்பாக் கொண்டு வந்து தர்றத
வேண்டாம்னு சொல்லக்கூடாதுப்பா…என்பாள் அம்மா. விசேடங்களுக்கு பண்டம் மாத்திக்கிடுவாங்க…அது
அவுங்களுக்குள்ளே….இது யார் வீட்டுது…எதிர் வீடா…எனக்கு வேண்டாம்னுடுவேன் நான். அந்தப்
பொருளப் பார்த்தாலே அந்த வாடைதான் மனசுல வரும்
எனக்கு. அந்த மூணு நாளைக்கு வீட்டோட வீடா அடங்கிக் கிடக்க மாட்டாங்களா? இல்ல அதுக்கான
பாதுகாப்ப செய்துக்க மாட்டாங்களா? என்ன அநித்யம் இது…வீட்டையே நாறடிச்சிக்கிட்டு…?ன்னு
எரிச்சலா இருக்கும். இந்த நாட்கள்ல ஏன் இங்க வர்றாங்கன்னு நினைப்பேன். தலைல வச்சிருக்கிற
பூவையும் மீறி வாடை எதிரடிக்கும். இந்த மூணு நாள்ல பூவேறேயா? ன்னு தோணும். எல்லாம்
வாடையைப் போக்கத்தான். ஆபீசுக்குப் போறவங்க வச்சிக்கிறதில்லயா? சென்ட் போடுறதில்லையா?
அதப்போலத்தான்.
பொம்பளைங்களே பாவம்தான். உடல் ரீதியா
அவுங்களுக்கு நிறையக் கஷ்டங்கள் இருக்கு. இயற்கையாவே அப்படி அமைஞ்சிருக்கிறதுக்கு நாம
என்ன செய்ய முடியும்னு அலட்சியப்படுத்த முடியல. சகிக்க முடியாத விஷயங்கள்ல உள்ளார்ந்து
இருக்கிற கஷ்டங்கள உணராத மனுஷன் என்ன ஆளு? அந்தப் பொம்பளைங்க வயித்துலேர்ந்து வந்தவங்கதானே
இந்த ஆம்பளைங்க…கொஞ்சமேனும் இரக்கம் வேணாம்? என்னா அதிகாரம்?
எங்கம்மா இப்டியெல்லாம் கிடையாது. படு
சுத்தம். ரொம்ப சேஃப்டியா டிரெஸ்ஸிங் பண்ணிக்குவாங்க…அந்த மூணு நாளும் பூஜா ரூம் பக்கம்
போகமாட்டாங்க…பால்கனில நின்னமேனிக்கே சூரிய நமஸ்காரம்தான்….வழக்கம்போல அப்பாதான் சமைப்பாரு….ஏதோ
அவருக்குத் தெரிஞ்சதை வைப்பாரு.. அவர் இஷ்டத்துக்கு வச்சதுதான்…சாப்டதுதான்…ஒரு சாம்பார்,
ஒரு கறி, மோரு…இதான் அப்பாவோட சமையல். அவரே மாவு கிரைன்டர்ல அரைச்சிடுவாரு…சமயங்கள்ல
சப்பாத்தி போடுவாரு நைட் டிபனா…சப்பாத்தி வட்டமாவே இருக்காது. கோணக் கொக்கர இருக்கும்.
வயித்துக்குள்ளதான போகுது….பிச்சுப் பிச்சித்தானே திங்கறோம்…போதும் இது…என்பார்.
புவனேஸ்வரி அக்கா அசல் குங்குமத்ததான் நெத்தில பதிச்சிருப்பாங்க…மாரியாத்தா…காளியாத்தா,
பகவதி அம்மேங்கிற மாதிரி…நெத்தி பெரிசுன்னா…அதுல பாதி பொட்டுக்கா…? இப்ப பத்து ரூபாக்
காசு வருதே…அந்த சைஸ்….இவ்வளவு பெரிய வட்டமா? அதுலென்ன அப்படியொரு பெருமை? இவங்களப்
பார்த்தாலே மத்தவங்களுக்கு ஒரு பயம் வரணும்னா? போதாக் குறைக்கு வகிடு நுனில. நெத்திலயும், மூஞ்சிலயும் வழியுற வியர்வை. குங்குமம்
மூக்குல கோடா ஒழுகுதே…அதக்கூடத் துடைச்சிக்க மாட்டாங்க? என்ன அழகோ…என்ன ரசனையோ? மூணு
பையனப் பெத்தவங்க அவுங்க…ஆனா தளர்ச்சி பார்க்க முடியாது. கிண்ணுன்னு இருப்பாங்க….அம்மாதான்
பாவம்…என் ஒருத்தனப் பெத்துட்டு…டொய்ங்ங்னு போயிட்டாங்க…ஆனா லட்சணம் அந்த முகத்துல.
லட்சுமி கடாட்சம். அம்மாவத் தவிர வேறே யாருக்கும் வராது.
அம்மாவோட ஸ்டிக்கர் பொட்டு, பழக்கத்துல…அடிக்கடி
கீழே விழுந்திடுது . அடுப்படில வியர்க்க வியர்க்க வேலை செஞ்சிட்டு யப்பாடி…ன்னு வந்து உட்கார்றப்போ சேலைத் தலப்பை வச்சு மூஞ்சியையும்,
கழுத்தையும் அழுந்தத் துடைச்சி விட்டுக்கிறபோது…கவனமில்லாம .இது நடந்து போகும். பாத்ரூம்ல
குழாய் பூராவும், கண்ணாடிலன்னு பொட்டாப் பதிச்சிருக்கும். அதுல ஒண்ணை எடுத்து நெத்தில
வச்சிட்டு வருவாங்க…பழைய பொட்டு அது…நிக்காம உதிர்ந்து போகும். எத்தனவாட்டியானாலும்
அம்மாவுக்கு அந்தப் பிரக்ஞை இருக்கிறதேயில்ல. ஒரு வேளை உடம்ப மீறின அலுப்போ என்னவோ?
நம்ப வீடுதான…நம்ப பையன்தான…நம்ப வீட்டுக்காரர்தான…ங்கிற எண்ணமாக் கூட இருக்கலாம்.
ஆனா அந்தப் பொட்டில்லாத மொகத்தப் பார்க்கவே முடியறதில்லையே…?
திடீர்னு நா போயிட்டேன்னு வச்சிக்கோ…அப்புறம்
பொட்டு வச்சிக்கிறத மட்டும் விட்டுடாதே…ன்னு அப்பா அடிக்கடி சொல்றதக் கேட்டிருக்கேன்…அப்பாவுக்கே
அம்மாவோட பாழ் நெற்றி மேல அப்படியொரு வெறுப்பு…என்னைக்கும் சுமங்கலி மாதிரியே பூவோடும்
பொட்டோடும் காட்சியளிக்கணும்…புரிஞ்சிதா? நா பித்ருவாயிருந்து கவனிச்சிட்டேயிருப்பேன். தெனமும் பொட்டு பதிச்சிட்டு
என் ஃபோட்டோ முன்னாடி வந்து நின்னு எனக்கு முகத்தக் காண்பிக்கணுமாக்கும்…
போதும்…உங்க நாற வாயை வச்சிட்டு கொஞ்சம்
சும்மா இருங்க…என்பாள் அம்மா. வாயத் தொறந்தா அபத்தப் பேச்சுதான்…நல்லதாப் பேசுங்களேன்…என்று
சொல்வாள். அப்பா பேச்சு மாறவே மாறாது.
அன்னைக்கு என் ஆபீஸ்மேட் வைகுண்டம் வந்தாரே…எங்கிட்ட
என்ன சொன்னார் தெரியுமா? உங்க ஒய்ஃப்கிட்ட ஒரு ஃபேமிலி லுக் இருக்குன்னு பெருமையாச்
சொன்னார். அந்த உன்னோட முகம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அவர் கதை தனி. அதச் சொல்ல ஆரம்பிச்சா ஒரு நாளாகும்…ஒரே வீட்டுல மாடில இவரும் கீழ அந்தம்மாவும்
இருப்பாங்க…சமையல் முடிச்சு டேபிள்ல எல்லாமும் எடுத்து வச்சிருப்பாங்க…இவரு ரோபோட்
மாதிரி வந்து உட்கார்ந்து தின்னுட்டு திரும்ப மாடிக்குப் போயிடுவாரு…ஒருத்தருக்கொருத்தர்
அன்றாடம் மூஞ்சியவாவது பார்த்துக்கிறாங்களான்னு கூட எதிராளிக்குத் தெரியாது. விரிவாச்
சொல்ல ஆரம்பிச்சா நம்ம வீடு தங்கம்….! .அதனாலதான் இத மட்டும் சொன்னேன்….மறந்துடாதே….பொட்டு
உனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமாக்கும்…..என்றாவது ஒரு நாள் வெள்ளம் பெருக்கெடுத்ததுபோல்
அப்பா நிறையப் பேசி விடுவார். நல்லதும், கெட்டதும்
கலந்து கட்டி பிரளயமாய் வெடிக்கும்.
பெரும்பாலும் இதெல்லாம் அலட்டிக்கிட்டதேயில்ல. அவர்பாட்டுக்கு
இருக்கிறவர்தான். அம்மாவ அவர் நிமிர்ந்து பார்க்கிறதே அபூர்வம். பிடிக்காத மாதிரியே
வளைய வருவாரு…அவுங்க ரெண்டு பேரும் எப்போ சிநேகமா இருப்பாங்கன்னு தேட வேண்டிர்க்கும்.
தொட்டதுக்கெல்லாம் சண்டதான். அநாவசியமான பேச்சுதான். அன்னைக்கொருநாள் அவர் இப்படி அதிசயமாப் பேசிப்புட்டதுதான்
எங்களுக்கெல்லாம் பேரதிசயமாப் போச்சு.
அப்பா தன் மூஞ்சிய ரசிச்சிருக்கார்ங்கிறதும்,
அவர் ஃப்ரென்ட் வைகுண்டம் ரசிச்சு அப்படிச் சொன்னதும் அம்மாவுக்குப் பெருமை தாங்கலை.
அதுக்காக அம்மாவும் அப்பாவும் சமாதானமாயிட்டாங்கன்னு நினைச்சிடாதீங்க…
என்ன சமைச்சிருக்கே…ஒண்ணுத்துலயும் உப்பக்
காணோம்…உனக்கு உப்பு வேண்டாம்னா ஊரு உலகத்துல இருக்கிற எவனுக்கும் வேண்டாம்னு அர்த்தமா?
ஒரு ரசனையே இல்லாம சமைச்சா இப்டித்தான். எந்நேரமும் ஊர்ல இருக்கிற உங்க அம்மாவையும்,
அக்காவையும் நினைச்சிட்டேயிருக்கிறது…எப்படா அவுங்ககூடப் பேசுவோம்னு நேரம் பார்த்திட்டே
வேல செஞ்சா…எங்கேயிருந்து ருசி வரும்? ருசின்னு ஒரு பேப்பர்ல எழுதிப் பார்த்துக்க வேண்டிதான்.
படிய வாரி, கொண்டை முடிஞ்சு, அழகாப் பொட்டு
வச்சி தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி போட்டு அம்மா செய்தித்தாள் படிக்கிற அழகே தனி. அந்த இங்கிலீஷ் பேப்பர்ல அப்படி என்னதான் இருக்கோ….தலையங்கம்,
கட்டுரைகள்னு ஒண்ணு விடமாட்டாங்க…! எல்லாம் முடிஞ்சிதுன்னா, சுடுகு போட ஆரம்பிச்சிடுவாங்க.
மைன்ட எப்பயும் ஷார்ப்பா வச்சிக்கணுமாம். வேலை செய்ற போது அம்மாட்ட இருக்கிற அலுப்பும்
சலிப்பும், நியூஸ் பேப்பர் படிக்கிறபோது இருக்கவே இருக்காது. அது என்ன அதிசயமோ?
ஆனா அப்பாட்ட அந்த வேலயே கெடையாது. அவருக்குத் தமிழ்
பேப்பர்தான். அதையும் கூட ஒரு புரட்டு. தலைப்புச் செய்தியாப் பார்த்திட்டு தூக்கிப்
போட்டுடுவாரு. எங்க பார்த்தாலும் கொல, கொள்ளை, திருட்டு. கற்பழிப்பு, விபத்து, லஞ்சம்
அடிதடின்னு….இதுதான் நாட்டு நடப்பா….? அரசாங்கம் எப்டி இயங்குதுன்னு தெரிஞ்சிக்கத்தான
பேப்பரு….முக்கால்வாசிப் பேப்பர இதுவே ஆக்ரமிச்சா….? என்ன எழவோ…நாடு போற போக்கே சரியில்ல….
என்று அலுத்துக் கொள்வார். புரட்டின அந்தப் பேப்பரை அவர் தூக்கி எறியும் தன்மையில்
அது தெரியும். டி.வி. தலைப்புச் செய்திகள் கேட்டவுடன் அணைத்து விடுவார். விரிவான செய்திகளைக்
கேட்க, காட்சிகளைப் பார்க்க அவருக்குப் பொறுமை கிடையாது. இவன் சொன்னதை யே அவன் திருப்பிச்
சொல்லுவான்…இதுக்கெதுக்குப் பார்க்கணும்? என்பார்.
அப்பா தனியாத்தான் தன் ரூம்ல உட்கார்ந்திருப்பாரு.
எதாச்சும் எப்பயும் படிச்சிட்டிருக்கிறதே அவரோட வேல. கண்ட புஸ்தகமெல்லாம் வாங்கி வச்சிருப்பாரு.
அத்தனையும் படிக்கிறாரா தெரியாது. வாங்கிக் குமிச்சு, தூசி தட்டுறதும், இறக்கி ஏத்தி
திரும்ப அடுக்கிறதும் அடிக்கடி அவர் செய்ற வேல. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் புக்ஸ்
எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? என்று பெருமையாகக் கூறுவார்.
ஆத்தர்வைஸ் அடுக்கிறேன்…எப்டியோ மாறி மாறிப்
போயிடுது…-என்று அவரே சொல்லிக் கொள்வார். மண்ட மண்டையா எத்தனையோ புஸ்தகங்கள். ஆனா அப்பா
கைல வச்சிருக்கிறதப் பார்த்தா நூறு இருநூறு பக்க அளவுள்ளதா இருக்கும். அப்பாடா…முடிஞ்சிது….என்று
படித்து முடித்து, முடித்த புத்தகங்களுக்கென உள்ள வரிசையில் வச்சிடுவார். மொத்தமே இவ்வளவுதான்
படிச்சிருக்கீங்களாப்பா…ன்னா…கோபம் வந்துடும்.
திடீர் திடீர்னு நினைப்பு வர்றப்போ இங்க
இருக்கிற எல்லாப் புத்தகங்களையும்தான் அப்பப்போ உருவி எடுத்துப் புரட்டியிருக்கேன். அதுக்காக தொடவேயில்லைன்னு
அர்த்தமா? நினைச்ச நேரம், நினைச்ச புத்தகம் கைக்குக் கிடைக்கணும்னுதானடா வாங்கி வைக்கிறது?
அதெல்லாம் தனி ரசனை….உனக்குத் தெரியாது அதோட மகிமை….என்பார். அவங்கல்லாம் என் கூடவே
இருக்கிறமாதிரியாக்கும்…என்று பெருமைப்படுவார்.
அப்புறம் செவுத்தப் பார்த்து உட்கார்ந்துக்கிட்டு
என்னத்தையோ யோசிச்சிக்கிட்டேயிருப்பாரு. படிச்ச புஸ்தகத்தை அசை போடுறார் போல்ருக்குன்னு
நான் நினைச்சுக்குவேன். திடீர்னு கம்ப்யூட்டரத் திறந்து டைப் அடிக்க ஆரம்பிச்சிடுவாரு.
பக்கமானா சரசரன்னு ஓடும். அந்த நேரம் அம்மாட்ட ஒரு டீ குடுன்னு கேட்பாரு. கொதிக்கக்
கொதிக்கக் குடிக்கிறது அப்பாவோட வழக்கம். எதுக்கு இப்டி தீயை உள்ளே அனுப்புறாருன்னு
பார்க்கிறவங்களுக்குத் தோணும். சூடு இம்மி குறையக் கூடாது. குறைஞ்சா காட்டுக் கத்து
கத்துவாரு. ஒரே மூச்சுல நினைச்சதை அடிச்சு
முடிச்சி சேகரிச்சுட்டு, சட்டுன்னு கம்ப்யூட்டர ஆஃப் பண்ணிடுவாரு. அப்புறம் அடிச்சதையெல்லாம் அசை போடுவாரு. இப்டியே
ஒரு நாள் ஓடிடும். வெளில போவாரு, வருவாரு…கம்ப்யூட்டரத் திறந்து, திருத்திக்கிட்டேயிருப்பாரு….சில
சமயம் ம்க்கும்….வேண்டாம்னு தனக்குத்தானே சொல்லிக்கிட்டு, எழுதின மொத்தத்தையும் டிலீட்
பண்ணிடுவாரு…?
எதுக்கு இப்டி மாங்கு மாங்குனு உட்கார்ந்து
கையொடிய டைப் அடிக்கணும், பிறகு அழிக்கணும்? வச்சாக் குடுமி, அடிச்சா மொட்டைன்னு என்னத்துக்கு
இப்டிப் பிராணனை விடணும்? அதுக்கு எனக்காச்சும் ஏதாச்சும் உதவி பண்ணலாம்ல…? என்று அம்மா
புலம்புவாள்.
கம்ப்யூட்டர்ல உட்கார்ந்தாச்சா…போச்சு…காய்கறி
நறுக்கித் தருவீங்கன்னு பார்த்தேன். இன்னைக்கு அவ்வளவுதானா? ன்னு அம்மா குறை பட்டுக்குவாங்க….அதெல்லாம்
அப்பாவ யாரும் எதுவும் சொல்லவும் முடியாது. எதுக்கும் இழுக்கவும் முடியாது. அவருக்கா
இஷ்டம் இருந்தாத்தான். அம்மா சொல்லி அவர் சரின்னு செய்திருக்கிறதவிட, முறுக்கிட்டுப்
போனதுதான் ஜாஸ்தி. இதால ஒண்ணும் ஆகாதுன்னு அம்மா ஒருமைல அலுத்துகிறது இருக்கே…சிரிப்புத்தான்
வரும். அப்பாவும் அப்போ லேசாச் சிரிச்சிக்கத்தான் செய்வாரு. சொன்னாச் சொல்லிட்டுப்
போறா…அவளுக்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லையா என்னன்னு அப்பா இருக்கிறதாத் தோணும். அம்மா
கோபப்பட்டு அப்பா ஒதுக்கிட்டுப் போனதுதான் ஜாஸ்தி. ஒரு வேளை அதுவே அவுங்க ரெண்டு பேரையும் நெருக்கமா
வச்சிருக்கோ என்னவோ?
அவர்பாட்டுக்கு தானுண்டு, தன் டைப் வேல
உண்டு, தன் புஸ்தகங்கள் உண்டுன்னு இருக்கிற ஆள்தான். ஆனா சமீபமா அவர்ட்ட என்னவோ ஒரு
வித்தியாசம் இருக்கிறதா தோணுதே….? அதை எப்படிக் கண்டு பிடிக்கிறது?ன்னு என் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கு.
தப்புச் செய்றவன அவன் முகமே காட்டிக் கொடுத்திடும். ஒரு சிறு அசைவு போதும்…கண்ணு காமிச்சிடும்
எதையும். அப்பாவோட பளீர் கண்ணு ஏன் இப்போல்லாம் சுருங்கிக் கிடக்குது? உடல் ரீதியா
அவருக்கு என்ன பிரச்னை? என்ன நோவு? அப்படி எதுவும் இருக்குமோ? பணம், செலவுன்னு நினைச்சிக்கிட்டு
வாதையை அனுபவிச்சிக்கிட்டு, தனக்குத்தானே மனசுக்குள்ள புழுங்கிக்கிட்டுக் கிடக்கிறாரோ?
தெனமும் எங்க வீட்டு வாசல் வழியா
ஒருத்தர் போவாரு.. குனிஞ்ச தல நிமிராம…! வச்ச அடி தப்பாம….எந்தக் காரியத்துக்குன்னு
சென்றாலும் எங்க தெரு வழியாத்தான் போவாரு. தெருக்காரங்களுக்கெல்லாம் அவரத் தெரியும்.
அப்டியொரு ஒல்லியான, நாலு முழ வேட்டி கட்டின, தலை வழுக்கை ஆசாமி, தினசரி போறார், வர்றார்ங்கிற
அளவிலே அதுக்குமேலே அவரைப்பத்தித் தெரிஞ்சிக்கணும்னு யாரும் அக்கறை காட்டினதில்லை. அந்தத் தெரு வழியே
நடந்து நடந்து பாதச் சுவடுகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேர் வரிசையில் தடம் பதிச்சுக்
கிடந்திச்சு எங்க தெருவுல. அந்தச் சுவடுகள்ல அவரோட மன அழுத்தம் தெரியும். யோசனை விரியும்.
காலம் இப்டியே போயிடுச்சேங்கிற இயலாமை நிற்கும். அதிசயமா அவர் தலை திரும்புறதும், எங்கப்பாவைப்
பார்க்கிறதும், ஒரு சின்னப் புன்னகை உதட்டோரத்துல தெறிக்கிறதும் பேசா நட்பு ரெண்டு
பேருக்கும் இடைல மலர்ந்திருக்கோன்னு நினைக்க வைக்கும்.
அப்பாவே அமைதியான ஆள்தானே? தனிமையை அதிகம்
விரும்புறவர்தானே? தனிமைல தனக்குத்தானே பேசிட்டிருக்கிறவர்தானே? நாள் முழுக்க ஒரு ரூமுக்குள்ள
கதவ அடைச்சிட்டு இருன்னா அப்பாவால சர்வ சாதாரணமா இருந்திட முடியும்தான். யார்ட்டயும் பேசணும், சிரிக்கணும், விசாரிக்கணும்னு
அப்பாவுக்கு எப்பவும் எந்த விஷயமும் இருந்ததில்லதான். அபூர்வமா வீட்டுக்கு யாரும் வந்துட்டாலும்…வாங்க…உட்காருங்கன்னு
சொல்றதோட அவரோட வரவேற்பு முடிஞ்சு போயிடும். அதுக்கு மேலான உபசரிப்பெல்லாம் அம்மாதான்.
வந்தவங்களும் அந்தாளு ஒரு அப்புண்டுன்னு கேர் பண்ணாமப் புறப்பட்டுப் போயிடுவாங்க….அதப்பத்தி
அப்பாவும் அலட்டிக்க மாட்டாருன்னு வைங்க…
எனக்குத் தெரிய பொதுவா சதா புத்தகம் படிச்சிட்டிருக்கிறவங்களே
இப்படித்தான்னு சொல்லுவேன். அவுங்களுக்கு சமத்தா பேச வராது. கச்சிதமா உபசரிக்கத் தெரியாது.
யார்ட்டப் பேசினாலும் படிச்ச புத்தகத்தப் பத்திச் சொல்லலாமான்னு யோசிப்பாங்க…அல்லது
அவுங்க ஏதேனும் படிச்சதப் பத்தி சொல்வாங்களான்னு எதிர்பார்ப்பாங்க….ரெண்டும் இல்லன்னா
இது வேலைக்காகாதுன்னு ஆளக் கிளப்பிவிடப் பார்ப்பாங்க….பேச்சச் சுருக்கிட்டா ஆள் கிளம்பிடும்ல…அந்த
உத்திதான்….! அப்பாவ ஒரு முசுடுன்னு கூடச்
சொல்லலாம்தான். பார்த்தீ்ங்களா…தெருவுல போற ஒருத்தரப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எங்கப்பாவுக்குள்ள
புகுந்துட்டேன்….இவங்கள மாதிரிச் சில பேர் ஊர் உலகத்துல எப்பவும் இருக்கத்தான செய்றாங்க…
நீண்டு கிடக்குற நேர் தெருவில் நெடுகப்
போயி ஒரு காலியிட வளைவிலான பொட்டல் வெளியைக்
கடந்து பேருந்து நிலையத்தை எட்டுவாரு அந்த ஆளு. அந்தப் பொட்டல் வெளியின் தனிமையையும், சூன்யத்தையும்,
படர்ந்து, உள்வாங்கிக்கிட்டே நடப்பார் போல.
சிற்சில சமயங்களில் தன்னை யாரோ பின்தொடருவது போல் தனக்குத்தானே உணர்ந்து வேக
வேகமாய் நடக்க முனைவாரு. ஒரு பயத்தோடயே கடந்தாலும் வழிய மாத்துனதில்ல. நானே அந்த வழி
ஓரொரு சமயம் அவர் பின்னாடி போயிருக்கேன். அவர்தான் எனக்குப் பாதுகாப்பு மாதிரி. நட்ட நடுப் பொட்டல்ல, எரியிற வெயில்ல ஜடமா நிப்பார்.
எதுக்கு இங்க நிக்கிறாருன்னா கேட்க முடியும்? ஏதேனும் பித்துப் பிடிச்சிடுச்சா?ன்னு
பார்க்கிறவங்களுக்குத் தோணும். பிளாட் போட்டிருக்கிற குத்துக் கல்லுல உட்கார்ந்து கெடப்பாரு…வானத்தப்
பார்த்தமேனிக்கே வாய் என்னத்தையோ முனகிட்டே கிடக்கும். ஏதேனும் மந்திரம் சொல்வாரோ?
அல்லது பாட்டுப் படிப்பாரோ? அப்பா ரூம்ல ஏகாங்கியாக்
கிடக்கார். இவர் இந்தப் பொட்ட வெளிலன்னு… நினைச்சுக்குவேன் நான்.
அப்பல்லாம் எங்கூர்ல வீட்டுக்கு வீடு
பால் ஊத்தும் பெண்டுகளுக்கு பிரசவம் பார்க்கும் மருதாயி ஞாபகம் வரும் எனக்கு. வெத்தல,
பாக்கு, பழம் ரெண்டு ரூபாக் காசுக்குப் பிரசவம் பார்த்த புண்ணியவதி அவங்க. கடைசி வரை
அந்தம்மா வாழ்க்கை ஒத்தையா இருந்தே கழிஞ்சு போச்சு. எங்க ஊர் தெரு மக்களோட மக்களா இருந்தே
மறைஞ்சு போனாலும் எவ்வளவு அர்த்தம் பொதிஞ்ச வாழ்க்கைன்னு எனக்குத் தோணிக்கிட்டேயிருக்கும்.
அத மாதிரி எதுவும் அர்த்தம் பொருத்தமேயில்லையேன்னு
தோணும். இவரு வாழ்க்கை வீணாத்தான் கழிஞ்சிடுமோன்னு
நினைக்கிறேன். எதோ ஒரு துறைல கொஞ்ச காலம் வேல பார்த்திருப்பார் போல…அந்தப் பென்ஷன்
காசு வருது அவருக்கு. அத அவர் தங்கியிருக்கிற தன்னோட தங்கை வீட்ல கொடுத்திட்டு நாட்கள ஓட்டிக்கிட்டிருக்கார்னு கேள்விப்பட்டேன்.
நாலு தங்கச்சிக உண்டாம் அவருக்கு. ஒவ்வொருத்தர்ட்டயும் மும்மூணு மாசம் நாலு மாசம்னு
இருப்பார் போல…அங்கங்க இருக்கைல அந்தந்த மாசக் காச அவுங்ககிட்டக் கொடுத்திடுவாராம்.
அவரு தின்னு தீர்க்குறத விட பணம் அதிகமா வர்றதால யாரும் அவர எதுவும் சொல்றதில்ல. இதெல்லாம்
கேள்விப்பட்டதுதான். பராபரியாக் காதுக்கு வந்தவை.
சமயங்கள்ல தன்னோட தங்கச்சியைக் கூட்டிட்டு
அபூர்வமா அவர் நடந்து போறதப் பார்க்கலாம். அப்பயும், நேரம் காலம் பார்க்காம அந்தப்
பொட்டல் வழியாத்தான் போவாரு, வருவாரு….அத ஒரு நா சாயங்காலம் மேல இருட்டுற நேரம் கூட்டிட்டுப்
போகைல ஏதோ சலங்கச் சத்தம் கேட்குதுன்னு அது பயந்து போயி…நாலஞ்சு நாள் காய்ச்சல்ல கெடந்து
மீண்டுச்சுன்னு ஒரு கத சொன்னாங்க…ஆனாலும் இன்னைவரைக்கும் அந்த ரூட்ட அவர் மாத்துனதில்ல.
எந்தப் பிசாசு தன்னப் பிடிக்கப் போவுதுன்னு நினைச்சிட்டார் போல. அது எப்டியிருக்குன்னு
பார்ப்போம்னும் கூட நினைச்சிருக்கலாம்.
பேய் இருக்கோ இல்லையோ…பயமிருக்கு நமக்கெல்லாம்…அவருக்கு
அதுவும் இல்லன்னுதான் சொல்லணும்…
தெரு வழியாவே போங்க…அந்தப் பொட்டல் வெளில
ஏன் கடக்குறீங்க? காக்காயும், நாயும், பூனையும் அடிச்சிக்கிட்டு இருக்கிற அந்த வழி
சீண்ட்ரம் பிடிச்ச எடமாச்சே…பாம்பு பல்லி ஓடுமேங்க…ஏன் அப்டிப் போறீங்க…? ன்னு யார் யாரோ எத்தனையோ தடவை சொல்லுறத
நானே கேட்டிருக்கேன். கொக்குக்கு ஒண்ணே மதின்னு அவரு அப்டித்தான் இன்னைவரைக்கும் போயிட்டிருக்காரு…தானே
ஒரு பேய்தானேன்னு நினைச்சுக்குவாரோ என்னவோ?
எங்க காலனிக்குள்ள ஒரு காபிப்பொடிக் கடை
இருக்கு. புதுசா வந்த ஒரு காபித்தூள் ஏஜென்சியை
ஒருத்தர் எடுத்து கடை திறந்திருக்காரு. அந்த ஏரியாவே கமகமன்னு ஒரே மணம்தான்.
அங்க காபிக்கொட்டையை அரைச்சு உடனுக்குடனே சூடா
பொடிய எடை போட்டு அழகா பாக்கெட் பண்ணிக் கொடுப்பாங்க…வாங்குற
அளவுக்குத் தகுந்த மாதிரி பாயின்ட்ஸ் அறிவிச்சு, பல பரிசுப் பொருட்களும் கொடுக்கிறதா
விளம்பரப்படுத்தியிருந்தாங்க. .அங்கதான் இவரு சமீபமா வேல பார்க்கிறதா யாரோ சொன்னாங்க….அங்க
வேல பார்க்கிறார்ங்கிறதுக்காக ரூட்டை மாற்றணுமா என்ன? எப்பயும் போல போறார் வர்றார்னுதான்
எல்லாரும் நினைச்சிருந்தாங்க….நானும் கூட அப்டித்தான் அவர நினைச்சிக்கிறது. தெனமும்
நான் வண்டில போகைல வர்றைல ஒருநா தற்செயலா பார்வை பட்டுச்சு. அவரு காபிக் கொட்டை அரைச்சிக்கிட்டிருக்கிறது!.
மிஷின் சத்தம் கடுமையாயிருந்திச்சு. பழைய மெஷின் போல்ருக்கு. அந்த ஏரியாவுலயே காபிப் பொடி மணம்தான் ஆளைத் தூக்குமே….! ஆனா அவ்வளவு
பிஸியான கடைல இந்தாள எப்படிச் சேர்த்தாங்கங்கிறதுதான் எனக்கு அதிசயம். நாமதான் அவர்ட்டப்
பேசிப் பார்த்ததேயில்லையே? அவர்ட்டப் பேசின அவுங்களுக்குப் பிடிச்சிருச்சோ என்னவோ?
அப்பாவுக்கே பிடிச்சிருக்கே?
….அப்பா எப்படி அவர ஃப்ரென்ட் பிடிச்சாரு?
அதான் என் கேள்வி? வழக்கமா சாயங்காலம் நடை போயிட்டு நேரா வீடு வந்து சேர்ற ஆசாமி அங்க
நுழைஞ்சு டேரா போட்டுடறாரே இப்பல்லாம்…..! அவருக்கு வேல கிடைச்சதே பெரிசு….இவர் போயி…அதையும்
கெடுத்துடப் போறாரு….! நான் இப்டி நினைக்க
நினைக்க அப்பாவுக்கும் அந்தத் தெரு நடைக்காரருக்கும் (எனக்குத்தான் அவர் பேர் தெரியாதே…!இப்பவாச்சும்
அப்பாட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாமோ? ) அநியாயத்துக்கு ஒட்டிக்கிச்சுங்கிறதுதான் எனக்கும்
அம்மாவுக்கும் பேரதிசயம். எப்டி இப்டி பசையா ஒட்டினாங்க…?
ஆபீஸ் போனமா வந்தமான்னு இல்லாம புதுசா
இது வேறே என்ன? அந்தக் கடைல போய் உட்கார்றது… வம்பளக்கிறது….வீட்டுல பேசவே பேசாத அப்பா
அங்க மட்டும் எப்டி போய் உட்கார்ந்து அரட்டையடிக்கிறாரு? பேச்சு மும்முரத்துல காச விட்டிறப்
போறாரு அந்தாளு! வேல போயிடப் போகுது…அவருக்கென்ன பணக் கஷ்டமோ? இத்தன வருஷமா வெறும்
நடை நடந்திட்டிருந்தவரு, இப்பத்தான் ஒண்டியிருக்கிற
எடத்துக்கு இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பமேன்னு நினைக்கிறார் போல்ருக்கு…! அப்பாவோட
அவருக்கும் ஒட்டிக்கிச்சே…அதான் அதிசயம்…! வீடு கிட்ட வர்றைல மென்மையா சிரிப்பாரே…அந்தப்
புன்னகைக்கு பலம் அதிகமோ? அதுக்கு அப்பாவுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரியுமோ? ரகசியப் புன்னகையாவுல்ல இருக்கு…?
எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்திச்சு…ஆனா
இந்தக் கொரங்கு புத்தி எங்கிருந்து வந்திச்சு….அதுவும் ரெண்டு பேருக்கும்? அப்போ நா
இத்தன நாள் அப்பாவப் பத்தி புரியாம ஒண்ணை நினைச்சிட்டிருந்தேனே அது சரிதானா? என்னவோ கொஞ்சம் அப்பாட்ட வித்தியாசமாத் தோணுதேன்னு
சொன்னனே….அது இதுதானா? அவருக்காக அப்பா துணை போறாரா அல்லது இவருக்குமே நோங்கிருச்சா?
இந்த வயசுல எதுக்கு இப்படி? அந்தத் தனியா அலைஞ்சிக்கிட்டிருந்த மனுஷனுக்கு (ஆங்ங்…..
இப்பத்தான் ஞாபகம் வருது…அந்தாள் பேரு…சிகாமணி….சிகாமணி….ஞானசிகாமணி…) அம்மாட்டக் கூட
அப்பா என்னவோ சொல்லிட்டிருந்தபோது இந்தப் பேரு அடிபட்டுச்சே… அவுரு பேருக்கேத்தமாதிரி அந்தாளுக்கு இப்பத்தான்
ஞானம் வந்திருக்கு போல்ருக்கு….! இனி திரிகால
ஞானியாயிடுவாரோ? சிரிப்புத்தான் வருது…காலம்போன கடைசில…இதென்ன கண்றாவி…? –புத்தி இப்டியா
கெட்டுப் போகணும்? இந்தச் சந்தேகத்த உறுதி செய்தாகணுமே…! அப்பாவையும் சேர்த்து பலிகடா
ஆக்குறானோ இந்த ஆளு…? சரியான அமுக்குளிப் பய…..எவன் அமைதியா…அப்பாவி மாதிரி இருக்கானோ
அவனெல்லாம் நம்பக் கூடாது போலிருக்கே? அவன் மனசுலதான் எல்லாத் தப்பும் ஓடும் போலிருக்கே?
அமைதியாகித் திகைத்தேன் நான். கூர்ந்து அந்த இடத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
நான் நின்ற இடம் இருளில் மூழ்கிக் கிடக்க, எவரும் அறிவதற்கில்லை. அந்த நாள் இரவும்
அந்த இடமும் எனக்குப் புதிசு. அது அந்தப் பொட்டல் முடிந்து ஒரு மேடு தாண்டி சந்திற்குள் நுழையும் குறுகிய வீதி. வீதி கூட இல்லை…முடுக்கு…!
இரு பக்கங்களும் தள்ளித் தள்ளி மினுக்கென்று
மங்கலாக அழுது வழிந்து கொண்டிருந்த வீதிக் கம்பங்கள். வெளிச்சம் என்று ஒன்று வருகிறதா
என்ன? பல்பைச் சுற்றி கொசுக்களின் பெருங் கூட்டம் மொய்த்தது. வண்டுகளின் ரீங்காரம்.
குப்பை மேடு எதுவும் உள்ளதோ? இந்தப் பாழ்வெளியில் எதற்கு இந்தக் கட்டிடம்? பூட் பங்களா
போல்? .
அந்த வாசலில் ஆட்டோக்கள் சர்ரு…சர்ரு…. என்று வந்து நிற்பதும்,
பெண்கள் இறங்கி உள்ளே கணத்தில் ஓடி மறைந்து இருளோடு இருளாக ஒன்றுவதும் உடனே எதிர்த்
திசையில் வண்டிகள் சட்டென மறைவதும்,….அந்தப் பகுதி எதையோ உணர்த்திக் கொண்டேயிருக்கிறதே…!
அது சரி… ஏன் முன் விளக்குப் போடாமல் வருகிறார்கள்? எரியலையா அல்லது எரியவிடலையா? எங்க
சவாரியே இத வச்சித்தான் …என்பதுபோல் வருவதும்
போவதுமாய்….மின்னல் தோன்றி மறையும் லாவகம்….! யாரும் எதையும் சுற்றி முற்றி நோக்குவதேயில்லை. எல்லாமும் நிழலுருவ அசைவுகள்.
இத்தனை நாள் என் கண்ணுக்கும் கருத்துக்கும்
எட்டாத இந்த ஈசான மூலை இப்போது மட்டும் ஏன் ஈர்க்கிறது? இருளில் நன்றாய் என்னை மறைத்துக்
கொள்கிறேன். போக்குவரத்து அதிகமில்லாத அப்பகுதியில் அந்தக் கணம் மயான அமைதி. திடீரென்று
ஒரு ஐந்து நிமிஷத்திற்கு கொஞ்சம் சத்தம்…பரபரப்பு. பிறகு வழக்கமான அமைதி. இப்படியே
மாறி மாறி ஏதோ மர்மப் பிரதேசம் போல. அங்கேதான் நிற்கின்றன அந்த இரண்டு உருவங்கள். எதற்காக?
எதோ பேச்சுச் சத்தம் கேட்கிறதே…அந்தாள் அவர்களிடம் என்னவோ கேட்கிறான்?
என்னா சாரே…ஆள் வேணுமா? சைலன்டா
நின்னா எப்டி? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா…
உள்ளே போறீங்களா? அவன் கேட்டு முடிக்கவில்லை. சுற்று
முற்றும் பார்த்துவிட்டு சட்டென்று நுழைந்து விடுகிறார்அவர். அட…அப்பாவும் கூடவே போகிறாரே?
அங்க என்ன அப்படி அதிசயம்? யாராச்சும்
தெரிஞ்சவங்க வீடோ? அந்த ஆள் என்னமோ கேட்டானே?
அதுக்கு என்ன அர்த்தம்?
பைசா….இருக்கா…சாரே…?பணம்…பணம்……துட்டு….….விரலைச்
சுண்டி ராகமாய்க் கேட்கிறான் வாயில்காரன்.
அவர் கோலம் அவனை அப்படிக் கேட்க வைத்ததோ?
யாரப் பார்த்து என்ன கேட்கிற? திமிரா?
இந்தா பிடி…..-பாக்கெட்டுக்குள்ளிருந்து எடுத்து
அவன் கையில் திணிக்கிறார். வாங்க போவோம்…அப்பாவின்
கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே பாய்கிறார்.
உடம்பு நடுங்க அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். அசைவில்லை என்னிடம். மீண்டும் அந்த வாசலில் இருள். வராண்டா லைட் அணைகிறது. மீண்டும் இருள்.
அப்பா…! வேணாம்ப்பா……!! - என் வாய் என்னையறியாமல் முணுமுணுக்கிறது..என்னவோ
மனசு விபரீதமாய் உணர்கிறது. அம்மாவின் முகம்
மனக் கண்ணில் நிழலாடுகிறது.
என்னங்க….ஏன் இவ்வளவு நேரம் இன்னிக்கு? காலா காலத்துல வந்து
சாப்பிட்டுப் படுக்க மாட்டீங்களா? நாளைக்கு ஆபீஸ் கிடையாதாக்கும்…அதுதானா இப்டி?….அதுக்காக
மத்தவங்க பழியாக் கிடக்கணுமா….? நான் சாப்டாச்சு….எனக்குப் பசி பொறுக்கல….
எதுக்கு அநாவசியத்துக்குக் கத்துறே….?
அஞ்சே நிமிஷம் ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துர்றேன்….ஒரே வியர்வை நாத்தம்…யப்பாடி…என்னா
புழுக்கம்? வெக்க…வெக்க…அநியாய வெக்க…தாங்கவே முடில…உடம்பெல்லாம் தீயா எரியுது….! தட்டை
எடுத்து வச்சிப் பரிமாறு….இதோ வந்தாச்சு….. – சொல்லிக்கொண்டே பாத்ரூமை நோக்கிப் பாய்கிறார்
அப்பா. சட்டென்று எதற்கு இப்படி ஓடி ஒளிகிறார்?
தன்னை மறைத்துக் கொள்கிறார்?
வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே ஆர்ப்பாட்டம்தான்…என்ன
ஜென்மமோ…?
இந்தா,..இந்தா இந்தத் துணியெல்லாம் அழுக்குக்
கூடைல போடு…காலைல வாஷ் பண்ணனும். - அப்பா விட்டெறிந்த
வேட்டி சட்டை, உள் ட்ரவுசர், பனியன் என்று அள்ளிக் கொண்டு வந்து அம்மா கூடையில் அமிழ்த்த
….அவளின் பார்வை ஒன்றில் நிலைக்கிறது
…..என்னம்மா….என்னாச்சு….? என்றவாறே நெருங்குகிறேன்
நான்.
ஒண்ணுமில்லை..என்னவோ கறைபோல இருக்கு…அதான்
பார்த்தேன்… அடையா அழுக்கு…! பிரஷ் பண்ணி வாஷ் பண்ணனும்…….முகச் சுழிப்போடு அழுக்குத் துணிக் கூடையில் துணிகளை அமிழ்த்தினாள்
அம்மா. டிபன் ரெடி பண்ணனும். வேலை அவளை விரட்டியது. அப்படி நகர்ந்து அடுப்படியை நோக்கிப்
போனபோது…மனதில் என்னவோ தோன்ற நான் அப்பாவின் சட்டையைக் கூடையிலிருந்து எடுத்து விரித்துப் பிடித்தேன். இடப்புறப் பகுதியில்
என்னவோ சிவப்பாகக் கறைபோல் படிந்திருக்க…சட்டைப்
பை லேசாய்க் கிழிந்திருந்தது. சங்கடத்தில் நோக்க… விரலால் சுரண்டியபோது தெரிந்தது.
நக நுனியில் பிய்ந்த அது என்ன? அட…இதுவா? பழுப்பு நிற ஒட்டுப் பொட்டு….!! அம்மா வச்சிக்கிறத விட கொஞ்சம்
சின்ன சைஸில்….!! இந்தக் கலர்ப் பொட்டு அம்மாவுக்குப்
பிடிக்கவே பிடிக்காதே என்று சட்டென்று தோன்றியது எனக்கு. ஒட்டுப் - பொட்டு…மனதில் தோன்றிய…இந்த வார்த்தை உறுத்தலாக
என் மனதைச் சுண்டியது.
------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக