02 ஜூன் 2024

 படுகளம்...ஜெ...நாவல்

........................................வாசிப்பு


பேனர் வைத்தவுடன் வியாபாரம் படுத்துப் போகிறது.....
எழுத்தின் வேகத்தில் நிகழ்ந்த அவசரமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் அடுத்தடுத்த வியாபார வெற்றியை நாட்கணக்கில் சொல்ல முடியாதே...அப்படியானால் லாபப் பணத்தை சேர்த்து வட்டி கட்டியதாகச் சொல்ல வேண்டி வரும். ஒரு தவணை வட்டி கட்டும் முன் நிகழ்ந்து விடும் அவலம். ஒருவனின் திடீர் வெற்றி போட்டியாளர்களை உறுத்தும். தாங்கள் மட்டுமே நிலைக்க வேண்டும் எனும் அதிகார போதை. யார் மூலம் எது தூண்டப்பட்டு என்ன வழி நாச வேலை செய்யும் என்பது உயர் மட்ட மர்மம். வெவ்வேறு தொழில் செய்து உச்சமடைந்தவர்கள் அவரவருக்குப் பாதிக்காதபடி கூட்டுச் சதி செய்வார்கள். அந்த மாயவலை எளிய மனிதனால் கற்பனைக்குள் அடங்காது. எண்ணிப் பார்க்கும் முன் நிகழ்ந்து விடும் அபாயம் அது..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தோன்றும்.எனக்கு எங்களூர் ரஹீம் பாய் தையல்காரர் நினைவுக்கு வந்தார். இலவசமாக டியூஷன் நடத்திய கிருஷ்ணசாமி...மனிதர்களின் நாணயத்தில் நம்பிக்கை வைத்து மேலும் மேலும் கடன்தந்த பலசரக்குக் கடை நாராயணன்...அரிசிக்கடை செட்டியார்...மதிப்பு அகற்றி ஒரு வார்த்தை தாழ்ந்து பேசாது கொடுத்தபோது வாடகை வாங்கிக் கொண்ட ஜோஸ்யர் ராமண்ணா...ஒரு உண்மை ஊழியனை அடிமைபோல் எண்ணி...வயதும் பொருட்படுத்தாமல் நாலணா பேட்டாவுக்காக எதிரில் நிற்க வைத்த ஓட்டல் முதலாளி கணபதி அய்யர்...கூட்டுத் தொழிலில் நம்பிக்கை துரோகம் செய்த திக்குவாய் சங்கரய்யர்...சகோதரர்களின் ஓட்டலில் சகோதரனுக்குத் தெரியாமல் பணம் திருடிய சகோதரர்கள்...என்று என் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. வெவ்வேறு காலகட்டத்து மனிதர்களில் பலர் தெய்வத்திற்கீடாக இருந்துள்ளனர். மனிதன் அவர்களை அடைய...நெருங்க...ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது.அதுதான் நேரம்....
செந்தில்ராஜ் தன் வியாபாரத்தைப் பெருக்குவதை இன்னும் கொஞ்சம் விரிவாய்ச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. சொந்தமாய் சொந்தக்காசில்கூட எவனும் வியாபாரம் துவக்கி நடத்த முடியாதோ? அந்த மாய வட்டி வலையில் விழுந்துதான் அதிர்ஷடமிருந்தால் மீள வேண்டுமோ? என்று பயமுறுத்துகிறது. வெறும் நுகர்வோராக இருப்பதே நிம்மதி....ஒரு விளம்பர பேனருக்குள் எவ்வளவு சதி வேலைகள்? எத்தனை அரசியல்? இன்றைய சூழலே...இதுதான்....அதைத்தானே சொல்கிறார். இப்படியான விஷயத்தை எழுதவும் ஒரு தைரியம் வேண்டும்தான். காலம் அப்படி...!
வக்கீல் கிருஷ்ண கோபாலுக்கு வேலையே இல்லை.கூட அலைவதோடு சரி...நாமும் அலைகிறோம்.என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று. போர்டு வைத்து மறைத்து வியாபாரத்தைக் கெடுத்ததில் பகுதி வியாபாரிகளுக்கும் பங்கு உண்டா இல்லையா? அல்லது ஒன் டு ஒன் போட்டி மட்டும்தானா? எது பலவீனமான பகுதி என்று கண்டுபிடித்து அடிப்பதுதான் கதை. அதற்குத் துணிய...உதிரும் கொலைகள்...இரு பக்கப் பழிவாங்கல்கள். இவர்களால் வளர்த்துவிடப்படும் ரௌடிக் கும்பல். அஞ்சாமல் காசை அள்ளி வீசி கிரிமினல்களை அடிமையாக்குதல்.ஆட்டிப் படைத்தல்...அவர்களே எதிராகப் பாய்வர் எனும் விழிப்புணர்வு. ஒட்டு மொத்த சமுதாயச் சீர்கேடு.மக்களின் அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும் படு பாதகச் செயல்பாடுகள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் பணம். அது வந்து சேரும் அடாவடியான வழிமுறை.. எதை வெற்றி வெற்றி என்று ரசாயனக் கொதிப்பில் களிக்கிறார்களோ அதுவேதான் தன் தோல்வி என்ற அறியாத் தன்மை. சராசரி மனிதனின் வாழ்வில் கிடைக்கும் நிம்மதியும்.. சந்தோஷமும்...அற்ற இந்த வாழ்வு ஒரு சூன்யம்...படுகளம் இப்படிப் பலதையும் உணர்த்துக
படுகளம் நாவல் ஒரு புதிய வாசிப்பனுபவம். முற்றிலும் புதிய களத்தில் அநாயாசமாய் விளையாடியிருக்கிறார் ஜெ.. மனசு பதறிப் பதறியே தொடர்ந்து படிக்க வேண்டியிருந்தது. போதும்...என்றும் வழியில் விட முடியவில்லை. கடைசியில் நாயகன் எப்படி ஜெயிக்கிறான்..எதில் போய் இது முடியும் என்ற ஆவலே உந்தித் தள்ளியது.
எங்கள் மதுரையைத்தான் வெட்டுக்குத்துக்கு அஞ்சாத ஊர் என்பதாக ஒரு பொது அபிப்பிராயம் உண்டு. அது பொய். நெல்லைதான் இதில் முதல்...என்பதாக உணர வேண்டியிருக்கிறது. செய்திகளும் அதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் நெல்லையின் பழமையில் ஒரு பிடிப்பினைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லாத் தொழிலிலும் போட்டிகள் உண்டுதான். ஆனால் அது வெட்டுப்பழி...குத்துப்பழி...என்று விரிவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. என்ன அறியாமை இது என்றும்...என்ன அவலம் என்றும் தோன்றி .சராசரி..மக்களின் அன்றாட நிம்மதி வாழ்க்கையைக் குலைக்கும் இந்த நாசகாரச் செயல்களுக்கு என்றுதான் முடிவு...அரசாங்கம் இதையெல்லாம் என்றுமே சரி செய்ய முடியாதா...? சம்பிரதாயமாய்த்தான் இயங்க முடியுமா? என்று பலவாறு எண்ணி வேதனை கொள்ள வைக்கிறது.
நாவல் உருவேற்றிய பொதுக் கருத்து இது. எழுத்தில் புதுமை சேர்க்கும் வெறும் பயணமாகக் கருதி இதைக் கடக்க முடியவில்லை. யாரோ கொஞ்சப்பேர் அடித்துக் கொள்கிறார்கள் என்றால் அது ஏன் பொதுவெளிக்குத் தொந்தரவு செய்ய வேண்டும்? அப்போது எளிய மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்திற்குள்ளாகிறதுதானே? அதை எப்படி அனுமதிப்பது? அதை எப்படி ஒரு க்ரூப்பின் சண்டை என்று வெறும் செய்தியாகப் பார்ப்பது? சமுதாய அமைதி என்பது அரசாங்கத்தின் கவனத்தில்..கட்டுப்பாட்டில் இருப்பதுதானே? அதை நாசகாரச் சக்திகள் விட்டேற்றியாகக் குலைத்தெறிய முடியுமா? இதற்கெல்லாம் என்னதான் முடிவு? என்றுதான் முடிவு?
படிக்கும்போது இப்படியாக எனக்குத் தோன்றிய பல எண்ணங்களின் தொகுப்பு இவை.
உஷாதீபன்
May be a doodle of text that says 'படுகளம் ஜெயமோகன்'
All reactions:
Manthiramoorthi Alagu, Nagarajan Kb and 33 others

கருத்துகள் இல்லை:

  எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு